ரஜினி அரசியல் – லிங்கா வர்த்தகம் – காமடி வீடியோ
லிங்கா பாடல் விழாவில் அமீர், சேரன், வைரமுத்து மற்றும் பலர் ரஜினியை அரசியலுக்கு அழைத்தது உண்மையா?
இந்த நாடகம் புதிதல்ல…
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! ரஜினி படம் வரும் பின்னே,
பிரமோஷனுக்காகரஜினி அரசியல் அக்கப்போர் வரும் முன்னே!
இதோ உண்மை…………………
ரிலீசுக்கு முன்னேயே லிங்கா வசூலித்த தொகை 200 கோடி!
படத்தை வாங்க ஈரோஸ் நிறுவனம் செலுத்திய தொகை 120 கோடி!
தெலுங்கு, தமிழ் சேட்டிலைட் ரைட்ஸ் 55-முதல் 60 கோடி!
தமிழ் தியேட்டர் ரைட்ஸ் 60-65 கோடி! தெலுங்கு தியேட்டர் ரைட்ஸ் 30-35 கோடி!
தமிழ் ஓவர்சீஸ் ரைட்ஸ் 30 கோடி! இன்னும் கேரள, கர்நாடக ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ்…..
இத்தனை கோடி குவியும் போது அரசியலில் ரஜினி என்று அளப்பது
லிங்கா விளம்பரத்திற்கா?
தமிழனின் துயர் துடைக்கவா?
Supper Star Rajini in
சில்லறைக்கு சினிமா அக்கப்போருக்கு அரசியல் – வீடியோ!
துருக்கி அரசை அச்சுறுத்தும் இணைய போராளிகள்
கடந்த சில மாதங்களாகவே கட்டணம் செலுத்த முடியாமல் பல ஆயிரங்களாக உயர்ந்து விட்ட மின்கட்டண பாக்கித் தொகை ஒரு பக்கம் அச்சுறுத்த, எப்போது வேண்டுமானாலும் மின்சாரத் துறை உங்கள் இணைப்பை துண்டித்து விடும் அபாயத்தின் மீது நீங்கள் அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். கையில் சல்லிக் காசு இல்லை. இந்த நிலையில் மின்சாரத் துறை இணையதளத்தில் உங்களது நிலுவைத் தொகை பூஜ்ஜியம் என்று காட்டினால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?
உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்கள் பகுதியில் உங்களைப் போலவே மின்சார கட்டணத்தை கட்ட வாய்ப்பில்லாத ஆயிரக்கணக்கானோருக்கும் இதே போன்ற குருட்டு அதிர்ஷ்டம் அடித்தால்?
மேலே விவரித்ததைக் கேட்க இன்பமான கற்பனை போல் இருக்கிறதல்லவா. ஆனால், இந்த இன்பம் சமீபத்தில் துருக்கி மக்களுக்கு வாய்த்திருக்கிறது.
துருக்கியைச் சேர்ந்த இணைய ஹேக்கிங் குழு ரெட் ஹேக் (REDHACK). அரசின் கண்களில் மண்ணைத் தூவி இரகசியமாக செயல்படும் இவர்கள் தம்மை கருத்துரிமைக்கு ஆதரவாகவும், இணைய தணிக்கைக்கு எதிராகவும் செயல்படும் மார்க்சிய லெனினிய ஹேக்கர் குழுவாகவும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். சமீபத்தில் இந்தக் குழுவினர் துருக்கி மின்வாரியத் துறையின் இணையதளத்தை தாக்கி அதன் மத்திய கணினியில் இருந்து கட்டண பாக்கி வைத்திருப்போர் பற்றிய விவரங்களையும் அழித்துள்ளனர்.
இவ்வாறு நீக்கப்பட்ட மின்சார கட்டண நிலுவைத் தொகையின் உத்தேச மதிப்பு 1.5 ட்ரில்லியன் லிரா (65,000 கோடி அமெரிக்க டாலர்) என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டண பாக்கி விவரங்கள் அழிக்கப்படாத பிற மக்கள் பலனடையும் வண்ணம் மின்வாரிய மத்திய கணினியின் (Server) கடவுச் சொல்லையும் வெளியிட்டுள்ளனர் ரெட் ஹேக் குழுவினர். துருக்கி அரசு அதிகாரிகள் “விவரங்கள் போச்சு ஆனா போகலை” என்று அனத்திக் கொண்டிருக்க, மக்கள் எதிர்பாராத இன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பு (65,000 கோடி அமெரிக்க டாலர் = சுமார் ரூ 40 லட்சம் கோடி) குறித்து குழப்பம் நிலவுகிறது. மதிப்பு 15 லட்சம் துருக்கி லிரா மட்டுமே என்றும், தரவுகள் அனைத்துக்கும் பேக்-அப் இருப்பதால் இழப்பு எதுவும் இல்லை என்றும் துருக்கி அரசு கூறியிருக்கிறது. ஆனால், ரெட் ஹேக் குழுவினரின் இந்த நடவடிக்கை ஒரு பெரிய பிரச்சார வெற்றியாக கருதப்படுகிறது.

1997-ம் ஆண்டு துவங்கப்பட்ட ரெட் ஹேக் இணைய ஹேக்கர் குழுமம் 2005-ம் ஆண்டிலிருந்து தீவிரமாக இயங்கி வருகிறது. இக்குழுமத்தில் 12 பேர்கள் வரை இருப்பதாகவும் அவர்களைத் தீவீரவாத செயல்களுக்காக தேடி வருவதாகவும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ரெட் ஹேக் குழுவினரால் எந்த நேரத்தில் எந்த மாதிரியெல்லாம் அவமானம் ஏற்படுமோ என்ற பீதியில் திணறிக் கொண்டிருக்கிறது அந்நாட்டு அரசாங்கம். ரெட் ஹேக் குழுவினரோ அரசின் குண்டாந்தடிகள் தம்மைத் தேடியலைவதைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி யானையின் காதில் புகுந்த செவ்வெறும்பைப் போல் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.
2005-ம் ஆண்டு இஸ்தான்புல் போக்குவரத்துக் காவல் துறையின் இணையதளத்தை தாக்கிய ரெட் ஹேக் குழுமம், ஆயிரக்கணக்கானோரின் அபராத நிலுவைத் தொகை குறித்த விபரங்களை அழித்துள்ளனர். அன்று துவங்கிய ரெட் ஹேக் குழுவினரின் சாகசப் பயணத்தில் துருக்கியின் பல்வேறு அரசு துறைகளின் இணையப் பக்கங்களும் பாசிச அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுடைய இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு பிப்ரவரி மாதம் துருக்கி தொலை தொடர்புத் துறையின் இணையதளத்தைத் தாக்கியழித்த ரெட் ஹேக், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தினரின் தனிப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்தியது. இது போல் எண்ணற்ற இணைய தாக்குதல்களை செய்துள்ள ரெட் ஹேக், அரசின் பல்வேறு துறைகளின் இரகசிய ஆவணங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அவற்றில் நடந்த ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளது.
வெறும் 12 நபர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட ’சிவப்பின்’ குடைச்சலைப் பொறுத்துக் கொள்ள முடியாத துருக்கி அரசு 2012-ம் ஆண்டு ரெட் ஹேக் குழுமத்தை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. துருக்கி அரச வழக்கறிஞர் ரெட் ஹேக் குழுமத்தின் செயல்பாடுகளை துருக்கியின் குற்றவியல் சட்ட நடைமுறைப்படி விசாரித்து தீர்ப்பளிப்பதென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் தலா 24 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆனால், மிளகாய்ப் பொடியைக் காவிச் சுழன்றடிக்கும் சூறைக்காற்றைக் கைது செய்யும் கலையை உலகத்து அதிகார வர்க்கம் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை. துருக்கி அரசு அந்தப் பண்ணிரண்டு ’மாயாவிகளைத்’ தேடி பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் போதே ரெட் ஹேக் அரசின் கண்களில் கடப்பாறையை சொருகிக் கொண்டிருக்கிறது. ரெட் ஹேக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இது வரை 25 தனிநபர்களைக் கைது செய்துள்ள துருக்கி காவல் துறை அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் பலரும் குற்றம் நிரூபிக்கப்படாமல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் எங்கெல்லாம் வர்க்க ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் அதை எதிர்த்த வர்க்கப் போராட்டம் முடிவுறாமல் நடந்து கொண்டே இருக்கும் என்ற எதார்த்த உண்மையை மார்க்சியம் உரைக்கிறது. கம்யூனிஸ்டுகள் இந்தச் சமூக சூழல் பெற்றெடுத்த எதிர்காலத்தின் குழந்தைகள், எனவே தான் கம்யூனிஸ்டுகள் பின்னடைவுகளைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். புரட்சியாளர்கள் மீண்டெழுவதை முதலாளித்துவ கொடுங்கோன்மை மீண்டும் மீண்டும் உறுதி செய்யும் அதே நேரம் அவர்களின் தாக்குதல் இலக்கையும் இனங்காட்டுகிறார்கள்.
விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் சிறுஉடைமையாளர்கள் உள்ளிட்ட பரந்துபட்ட மக்களை முதலாளித்துவ அதிகாரத் திமிர் எந்தெந்த முனையில் எந்தெந்த கோணத்தில் எந்தெந்த தளத்தில் தாக்குகிறதோ அதே களங்களில் மக்கள் எதிர்தாக்குதல் தொடுக்கிறார்கள். நவீன தொழில்நுட்பங்களும், இணைய வலைப் பின்னல்கள் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்களும் மக்களை ஒடுக்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறது அதிகார வர்க்கம். மக்களோ எதிரிகளின் ஆயுதத்தைப் பறித்து அதைக் கொண்டே எதிர்தாக்குதல் தொடுக்கிறார்கள்.
ரெட் ஹேக் குழுமத்தின் செயல்பாடுகள் வெகுஜனப் பங்கேற்பில்லாத ‘ராபின் ஹூட்’ வகைப்பட்ட தனிநபர் சாகசங்கள் என்றாலும், அரசும் அரசின் அடக்குமுறை நிறுவனங்களும் வீழ்த்தப்படவே முடியாதது என்ற மாயைத் தகர்க்கின்றன. எதிரே நிற்பது ஊளைச்சதைப் பிண்டமென்பதையும், வீழக் காத்திருக்கும் கோலியாத்து தான் என்பதையும் மக்கள் உணரத் துவங்கும் போது இந்தப் பன்னிருவரின் செயலை கோடிக்கணக்கான மக்களும் கையிலெடுப்பார்கள். அப்போது முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கு எதிரான தாக்குதல் மெய்நிகர் உலகத்தில் அல்ல, மெய் உலகில் நிகழும்.
– தமிழரசன்
மேலும் படிக்க
ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை?
ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை?
பிரச்சார இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் பெண்களே,
டாஸ்மாக் புண்ணியத்தில் தமிழ்நாடே தள்ளாடுகிறது. ஆண்களோ குடல்வெந்து சாகிறார்கள். பெண்களோ குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளைக் காப்பாற்றவும் வழியில்லாமல் தினம், தினம் நொந்து சாகிறார்கள். இன்னொரு பக்கம் 3 வயது குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறாள் – பொள்ளாச்சியில் கத்தி முனையில் மிரட்டி 12 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டாள். கரூரில் வேலைக்கு சென்று திரும்பிய 17 வயது இளம் பெண்ணை குதறிக் கொல்கிறார்கள். தமிழகமே சீரழிந்து கொண்டிருக்கிறது.
10,15 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊருக்கு வெளியே முள்ளுத்தோப்பில் பதுங்கிப் பதுங்கி சாராயம் விற்றார்கள். குடிப்பவர்களும் யாராவது பார்த்து விடுவார்களோ என பயந்துகொண்டே தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டே போய்க் குடித்தார்கள். ஆனால் இன்றோ 12, 15 வயதிலேயே குடிக்கிறார்கள். பட்டப் பகலில் பஸ் ஸ்டாண்டில் நின்று பெருமையாக மடக் மடக்கெனக் குடிக்கிறார்கள். இதெல்லாம் தப்பில்லையா என்றால், “நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைக்கிறோம், வலி தெரியாம இருக்கக் குடிக்கிறோம்” என குடிமகன்கள் நியாயம் பேசுகிறார்கள். 12,15 வயது பள்ளிகூடப் பையனெல்லாம் குவாட்டரை ராவாக அடிக்கிறானே, அவனுமா கஷ்டப்பட்டு உழைக்கிறான்?
“விக்கிற அரசாங்கமே வெக்கமில்லாம ஊருக்குள்ள விக்குது. காசு குடுத்து குடிக்கிற நாங்க ஏன் வெக்கப்படணும்?” என்பதே குடிமகன் கேள்வி. என்றைக்கு அரசு டாஸ்மாக் மூலம் சரக்கை விற்க ஆரம்பித்ததோ அன்றையில் இருந்தே மறைந்து மறைந்து குடிப்பதெல்லாம் மறைந்து விட்டது. ட்ரீட் என்ற பெயரில் குடிப்பதையே ஒரு ஃபேஷனாக்கி விட்டனர்.
ஒரு பக்கத்தில் குடித்துக் குடித்துக் குடல்வெந்து அரசு மருத்துவமனையில் கிடந்தே செத்துப்போகும் கணவன்மார்கள்- 2,3 குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கும் தாய்மார்கள், இன்னொரு பக்கத்தில், குடிபோதையில் தனது மகளிடமே தவறாக நடக்க முயன்ற தகப்பனை அடித்துக்கொன்ற தாய், குடிவெறியில் 13 வயது சிறுமி புனிதாவைப் பலாத்காரம் செய்து கொன்ற காமுகன்.”குடிச்சா பொண்டாட்டிக்கும் ,பொண்ணுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது?” எனக் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் இதற்கு குடிபோதை மட்டுமா காரணம்? இல்லை, குடிபோதையோடு மோசமான காமவெறியும்தான்.
குடிக்கு டாஸ்மாக் போல, காமவெறியைத் தூண்டுவதற்கு ஆபாச இணைய தளங்களும், மெமரி கார்டுகளும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குகின்றன. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோர் குடிப்பது மட்டுமின்றி, ஆபாசசெக்ஸ் படங்களையும் பார்ப்பவர்கள்தான். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற ஆய்வுக்காக சென்ற நமது தோழர்களிடம், 15 வயது சிறுவன் சொன்ன தகவல் இது “நான் ஒரே நாள்ல 250 பிட்டு படம் டவுன்லோடு பண்ணியிருக்கேன். யாராலயும் முடியாது” என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறான். இப்படி சிறிய வயதில் நாள் முழுக்க ஆபாசப் படத்தைப் பார்ப்பவனுக்கு அனுபவிக்க வேண்டும் என்ற வெறிதான் வரும். இதைத்தான் எதிர்க்க முடியாத பிஞ்சு குழந்தைகளிடம் தீர்த்துக் கொள்கிறார்கள். இப்போது சொல்லுங்கள், டாஸ்மாக்கின் போதைவெறியும், செக்ஸ் படத்தின் காமவெறியும் தலைக்கேறியவனுக்கு தாய்க்கும்- தாரத்திற்கும் – மகளுக்கும் வித்தியாசம் தெரியுமா?
இதற்கு யார் காரணம்?
சாராயக் கடைகளைத் திறந்து வைத்து சரக்கை விற்று மக்களின் பணத்தைப் பறித்து கொண்டதோடு உடலையும் மனதையும் நாசமாக்கியது அரசுதானே. மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டிய பொங்கல், தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் கூட 200 கோடி, 300 கோடி என “டார்கெட்” வைத்துக் கொள்ளையடிப்பது அரசுதானே?
இதே அரசுதானே செக்ஸ் பட இணைய தளங்களையும் அனுமதிக்கிறது. அரசு எப்படி எல்லாவற்றையும் தடுக்க முடியும்? என்று கேட்கலாம். ஆனால் 2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இணையதளம் மூலமாக யாரும் இலவசமாகப் பார்த்து விடாமல் தடுக்க, 20 இணைய தளங்களை செயல்படவிடாமல் தடுத்தது அரசு. டி.வி நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக இதை செய்ய முடியுமென்றால், மக்களின் நன்மைக்காக செக்ஸ் பட இணைய தளங்களை தடுக்க முடியாதா?
10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பாடம் நடத்த அரசுப் பள்ளிகளில் வாத்தியார் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. அவசரத்துக்குப் போகக் கக்கூஸ் கூட இல்லை. இதெல்லாம் கொடுக்காத அரசு எதற்காக இலவச லேப்டாப் கொடுக்கிறது? வாத்தியாரே இல்லாமல் பையன் அதை எப்படி கற்றுக் கொள்வான்? வேண்டுமானால், 5 ரூபாய்க்கு இண்டர்நெட் கார்டு வாங்கி லேப்டாப்பில் போட்டு எதைப் பார்க்கக் கூடாதோ அதைப் பார்க்கத் தொடங்கிக் கடைசியில் காஞ்சிபுரம் மாணவன் போல சீரழிவில் ‘சாதனையாளனாக’ மாறிவிடுகிறான். இப்படி மக்களை, மாணவர்களைக் கெடுத்து சீரழித்து, அதிலும் பணம் பார்க்கும் அயோக்கிய பேர்வழிகளான முதலாளிகள்தானே; இவர்களுக்கு அடியாள் வேலை செய்யும் அரசுதானே காரணம். உண்மை இப்படி இருக்கும் போது அரசு எப்படி மக்களுக்காக இருக்க முடியும்?
சாராய போதையும், ஆபாச படங்களும் மனிதனை இயல்பு நிலையில் வைத்திருப்பதில்லை. எந்த நேரமும் சீரழிந்த சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன. தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன. எந்த அநியாயத்தையும் கண்டும் கோபம் கொள்ளாத மழுங்கிய நிலைக்குத் தள்ளுகின்றன. படிக்கும் படிப்பு முதல் குடிக்கும் தண்ணீர் வரை காசாகி விட்டதைக் கண்டோ, உரிமைகள் பறிக்கப் படுவதைக் கண்டோ, வெளிநாட்டுக் கம்பெனிகள் நம் நாட்டைக் கொள்ளையடிப்பது கண்டோ கோபமோ, ஆவேசமோ கொள்ளாமல் தடுக்கின்றன. இதைத்தான் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளும், நமது ஆட்சியாளர்களும் விரும்புகிறார்கள்.
இதை நாம் சகித்துக் கொள்ள முடியுமா? சூடு, சொரணை இல்லாத சதைப் பிண்டங்களாக நமது பிள்ளைகளும், சகோதரர்களும் மாறுவதை அனுமதிக்க முடியுமா? இளம் வயதிலேயே பாலியல் குற்றவாளியாக நமது மகன் மாறுவதை அனுமதிக்க முடியுமா? 3 வயது, 4 வயது குழந்தைகளுடன் நமது சகோதரிகள் தாலியறுப்பதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? முடியாது என்றால் என்ன செய்வது?
தீர்வு தான் என்ன?
அரசாங்கம் என்ன செய்யும்? குடிப்பவர்கள், ஆபாசப் படம் பார்ப்பவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு என்று வசனம் பேசுவது நியாயமா? சிகரெட் கம்பெனிகளை அனுமதித்துவிட்டு புகைபிடிப்பதைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்? இந்தியக் குற்றவியல் சட்டமே என்ன சொல்கிறது? தப்பு செய்யத் தூண்டுபவன்தான் முதல் குற்றவாளி, அப்படி என்றால் அந்த சட்டம் அரசுக்குப் பொருந்தாதா? விற்பவனை உதைத்தால் குடிப்பவன் அடங்குவான் என்று அயோக்கியத் தனத்தைத் தோலுரிப்பதோடு, மக்களுக்கு உதவாத இந்த அரசை அப்புறப்படுத்துவோம். இதற்கு மக்களுக்கான அதிகார கமிட்டிகளைக் கட்டியமைப்போம். மக்களைக் கொல்லும் சாராயத்தையும், மக்களைச் சிதைக்கும் ஆபாசச் சீரழிவுகளையும் ஒழித்துக்கட்டுவோம்.
உழைக்கும் பெண்களே!
- குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடவேண்டும்.
லட்சக்கணக்கான மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்.
எதிர்கால சந்ததிகள் குடிவெறிக்கு பலியாவதை தடுக்க வேண்டும்.
- வீதிக்கு வீதி குடிநீர் குழாய்கள் இல்லை!
குடிகெடுக்கும் சாராயக் கடைகளுக்கோ பஞ்சம் இல்லை!
அறிவைப் புகட்டும் கல்வி தனியார்மயம்!
புத்தியைக் கெடுக்கும் சாராயம் அரசுமயம்!
- ஆட்சியைப் பிடிப்பதில் ‘ஜெ’வும் ‘கருணா’வும் பங்காளிகள்!
ஊத்திக்கொடுத்து உருவிக்கொள்ளும் நம் உழைப்புப் பணத்தை சாராயக் கம்பெனி முதலாளிகளுக்கும் இலவசங்களுக்கும் படையல் வைப்பதில் கூட்டாளிகள்!
- குடிகெடுக்கும் மக்கள் விரோத பாசிச ‘ஜெ’ அரசை முறியடிப்போம்!
தமிழகம் முழுவதும் சாராயக் கடைகளை இழுத்து மூட போராடுவோம்!
பெண்கள் விடுதலை முன்னணி
41, பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல்,
சென்னை-95
![]() |
![]() |
![]() |
![]() |
|
![]() |
![]() |
தொடர்பு எண் : 98416584457
புதிய ஜனநாயகம் படியுங்கள் புதிய கலாச்சாரம்
பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!
குற்றவாளி ஜெயாவிற்கு விரைவு பிணை : பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பெற்ற ஜெயா-சசி கும்பலுக்குக் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் பிணை அளித்திருப்பதைப் போன்ற சித்திரத்தை ஊடகங்கள் உருவாக்கியுள்ளன. “டிசம்பர் 18-க்குள் மேல்முறையீட்டு வழக்கிற்கான ஆவணங்களை கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துவிட வேண்டும்; மேல்முறையீட்டு வழக்கைத் தாமதம் செயக்கூடாது; நீதிமன்றங்களை விமர்சிக்கக்கூடாது” என உச்சநீதி மன்ற அமர்வு விசாரணையின்போக்கில் குறிப்பிட்டவற்றையெல்லாம் – நீதிமன்றத் தீர்ப்பில் இவை குறித்து ஒருவார்த்தைகூட கிடையாது – கடும் நிபந்தனைகளாகச் சித்தரிப்பதன் வாயிலாக ஊடகங்கள் உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பிற்கு ஒரு ஒளிவட்டம் போடுகின்றன.

வெளித்தோற்றத்திற்கு நிபந்தனைகளைப் போலத் தெரியும் இவையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக ஜெயாவிற்கு காட்டப்பட்டுள்ள சலுகைகள். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே மிகவும் சலுகை பெற்ற கிரிமினல் குற்றவாளிகள் ஜெயா-சசி கும்பல்தான் என்பதை உச்சநீதி மன்றம் அக்கும்பலுக்கு அளித்திருக்கும் பிணை உத்தரவு மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது.
மாட்டுத் தீவன வழக்கில் தண்டிக்கப் பெற்று, சிறைக்கு அனுப்பப்பட்ட லாலுவிற்கு இரண்டரை மாதங்கள் கழித்துதான் உச்சநீதி மன்றம் பிணை வழங்கியது. ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டிக்கப் பெற்ற சௌதாலாவிற்கும் இரண்டு மாதங்கள் கழித்துதான், அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பிணை வழங்கியது, டெல்லி உயர்நீதி மன்றம். 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கனிமொழிக்கும், ஆ.ராசாவிற்கும் ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகுதான் பிணை வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் சிறைக்குச் சென்ற 21 நாட்களிலிலேயே ஜெயா-சசி கும்பலுக்குப் பிணையும் வழங்கி தண்டனையையும் நிறுத்தி வைத்து வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு அசாதாரணமானதுதான்.
நெறிமுறைகளை மீறிய விசாரணை
வழக்குரைஞர்கள் தமது உறவினர்கள் நீதிபதிகளாகப் பணியாற்றும் நீதிமன்றங்களில் வாதாடக் கூடாது என இந்திய பார் கவுன்சில் நடத்தை நெறிமுறையை வகுத்து வைத்திருக்கிறது. இந்திய உயர்நீதி மன்ற நீதிபதிகளின் உறவினர்கள் யாரும் அந்த நீதிபதிகள் பணிபுரியும் உயர்நீதி மன்றங்களில் வழக்குரைஞராகப் பணிபுரியக்கூடாது என்று உச்சநீதி மன்றமும் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், உச்சநீதி மன்ற மூத்த வழக்குரைஞரான பாலி நாரிமன், தனது மகன் ரோஹிண்டன் நாரிமன் உச்சநீதி மன்ற நீதிபதியாகப் பணியாற்றிவரும் நிலையில், இந்த நடத்தை நெறிமுறைகளுக்கு முரணாக, இப்பிணை வழக்கில் ஜெயாவின் சார்பாக வாதாடியிருக்கிறார். உச்சநீதி மன்றமும் பார் கவுன்சிலின் நடத்தை நெறிமுறைகளையும், தனது அறிவுறுத்தல்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு பாலி நாரிமன் ஜெயாவின் சார்பாக வாதாடும் முறைகேட்டை அனுமதித்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி இந்நடத்தை நெறிமுறைகளைக் குறிப்பிட்டு ஜெயாவின் பிணை மனு சார்பாக பாலி நாரிமன் ஆஜராவதை அனுமதிக்கக் கூடாதென உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தத்துவிற்கு எழுதியிருந்த கடிதமும் கண்டு கொள்ளப்படாமல் ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது. இம்முறைகேடு தொடர்பாக பாலி நாரிமன் மீது இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறியிருக்கிறார், சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி சந்துரு.
இம்முறைகேடு ஒருபுறமிருக்க, வழக்குரைஞர்கள் எந்தவொரு வழக்கிலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வாதியின் சார்பாகவும் பிரதிவாதியின் சார்பாகவும் ஆஜராகக் கூடாது என்ற நெறிமுறையும் இப்பிணை வழக்கு விசாரணையில் மீறப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் இதற்கு முன்பாக தமிழக அரசின் சார்பாகவும், அன்பழகனின் சார்பாகவும் வாதாடியிருக்கும் பாலி நாரிமன், பார் கவுன்சிலின் இந்த நெறிமுறையையும் மதிக்காமல், தற்பொழுது ஜெயாவின் சார்பாக வாதாடியிருக்கிறார். இப்படி சொல்லிக் கொள்ளப்படும் நீதிமன்ற அறம், மரபுகள், நெறிமுறைகள் ஆகியவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டுத்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு மன்றம் ஜெயாவின் பிணை மனு விசாரணையை நடத்தி முடித்திருக்கிறது.
உச்சநீதி மன்றத்தின் கட்டப் பஞ்சாயத்து
கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் ஜெயாவின் பிணை வழக்கில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, “பத்தாண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழக்குரைஞரின் தரப்பைக் கேட்காமலேயே பிணை வழங்குவதற்கு கிரிமினல் சட்டத்தில் இடமிருப்பதாக” வாதிட்டார். உச்சநீதி மன்றத்தில் ஜெயாவிற்காக ஆஜரான பாலி நாரிமனின் வாதமும் இதே அடிப்படையைத்தான் கொண்டிருந்தது. “வரையறுக்கப்பட்ட காலத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குப் பிணை தரவில்லையென்றால், அது அவர்களுடைய மேல்முறையீட்டு உரிமையையே மறுப்பதாகும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை” என வாதிட்டார், பாலி நாரிமன்.
கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா இந்த வாதங்களை தனது தீர்ப்பில் சட்டப்படி ஆணித்தரமாக மறுத்திருக்கிறார். “தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து, பிணை வழங்குவதை அவர்களின் முற்றுரிமையாகக் கருத முடியாது; வழக்கு விசாரணை நடந்த காலத்தில் பிணையில் இருந்த குற்றவாளிகள் சட்டப்படி நடந்து கொண்டார்கள் என்பதனாலேயே, தண்டனை வழங்கப்பட்ட பிறகு அவர்களுக்குப் பிணை வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. இரண்டு நிலைகளும் வெவ்வேறானாவை.”

“தண்டிக்கப்பட்ட குற்றவாளி கணிசமான காலம் சிறையில் இருந்துவிட்டார். அவரது மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வருவதற்குக் காலதாமதமாகும் என்ற நிலையில் பிணை வழங்க முடியும். அதாவது, ஒருவேளை மேல்முறையீட்டில் அவர் விடுவிக்கப்படும் பட்சத்தில் அநியாயமாக முழு தண்டனையும் அனுபவித்ததாகிவிடும் என்ற அடிப்படையில் பிணை தரப்படுகிறது. அப்படிபட்ட நிலை இந்தக் குற்றவாளிகளுக்கு (ஜெயா-சசி கும்பல்) இல்லை. மேலும், ஊழல் வழக்குகளைப் பொருத்தவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மேல்முறையீட்டில் விடுவிக்கப்படும் வரை அவர்களைக் குற்றமிழைத்தவராகத்தான் பார்க்க வேண்டும் என உச்சநீதி மன்றத் தீர்ப்பு கூறுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளை மனித உரிமை மீறலாகவும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதாகவும் பார்க்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்பு கூறுகிறது” என்றவாறு பல்வேறு சட்ட நுணுக்கங்களையும், உச்ச நீதிமன்ற, கர்நாடக உயர்நீதி மன்ற, சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்புகளையும் முன்வைத்துதான் ஜெயா-சசி கும்பலுக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் இடைநீக்கம் செய்ய முடியாது, பிணையும் வழங்க முடியாது எனத் தீர்ப்பளித்தார், அந்நீதிபதி.
ஜெயா-சசி கும்பலின் பிணை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, அக்குற்றவாளிகளுக்கு எதிராக உத்தரவிட்ட கர்நாடகா உயர்நீதி மன்றத் தீர்ப்புக்குத் தக்க பதில் அளித்து தனது தீர்ப்பை அளித்திருக்க வேண்டும். அதுதான் நீதியானதும் நேர்மையானதும் ஆகும். ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வோ கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகராவின் வாதங்கள் எதற்கும் பதில் அளிக்காமல், என்ன காரணத்திற்காக ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்குகிறோம் என்பதைக்கூடக் குறிப்பிடாமல், தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இரண்டு பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும் உச்சநீதி மன்றத் தீர்ப்பின் முதல் பக்கத்தில் எந்தெந்த குற்றவாளிகளுக்கு எந்தெந்த வழக்குரைஞர்கள் ஆஜரானார்கள் என்ற விவரமும், இரண்டாவது பக்கத்தில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் இரண்டு ஜாமீன்தாரர்களின் உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்டு பிணை வழங்க வேண்டும் என்ற உத்தரவு மட்டுமே உள்ளது. அதாவது, உச்சநீதி மன்றம் அளித்திருப்பது தீர்ப்பல்ல; அது கட்டப் பஞ்சாயத்து. மரத்தடிக்குப் பதிலாக உச்சநீதி மன்றக் கட்டிடம், சொம்புக்குப் பதிலாக சுத்தியல் என்பதுதான் வேறுபாடு.
“வரையறுக்கப்பட்ட காலத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குப் பிணை தரவில்லையென்றால், அது அவர்களுடைய மேல்முறையீட்டு உரிமையையே மறுப்பதாகும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை” என வாதிடுகிறார்களே, இந்தச் சட்டபூர்வ உரிமை எத்துணை ஏழைக் கைதிகளுக்கு, அநியாயமாகத் தண்டிக்கப்பட்ட அப்பாவிகளுக்குக் கிடைத்திருக்கிறது என விரல்விட்டுச் சொல்ல முடியுமா?

போலீசின் கையாளாகச் செயல்பட்டுவரும் கீழமை நீதிமன்றங்களால் தண்டிக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம்கள், தம் மீது சுமத்தப்பட்ட பொய்வழக்குகள் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செயப்படும் காலம் வரை, பிணையில்கூட வெளியே வரமுடியாமல் ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் எனச் சிறையில் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டதற்கும், அதனால் அவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னமாகிப் போனதற்கும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
அம்முசுலீம்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தீவிரவாதம் தொடர்புடையவை எனத் ‘தேசபக்தர்கள்’ எதிர்வாதம் புரியலாம். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை, வளர்ச்சியைச் சீரழிக்கும் அபாயகரமான குற்றமென்று ஊழலை வரையறுத்துவிட்டு, அக்குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப் பெற்ற குற்றவாளிகளை, குறிப்பாக ஜெயா போன்ற செல்வாக்குமிக்கவர்களைச் சலுகை பெற்றவர்களாக நடத்துவது எந்தவிதத்தில் நியாயமானதாகவும் நீதியானதாகவும் இருக்க முடியும்?
உச்சநீதி மன்றத்தின் பார்ப்பன பாசம்
“தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது; அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்” என்பதையெல்லாம் குறிப்பிட்டு, சுப்பிரமணிய சுவாமி ஜெயாவிற்குப் பிணை வழங்கப்படுவதை எதிர்த்தபொழுது, “அவரது (ஜெயாவின்) கட்சிக்காரர்கள் கட்டுப்பாடின்றி நடந்து கொள்வதற்கு, அவர் என்ன செய முடியும்? அவர்தான் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?” என ஜெயாவின் வக்கீலாக மாறி வாதிட்டார், தலைமை நீதிபதி தத்து. இன்னொருபுறம் ஜெயாவின் வழக்குரைஞர் பாலி நாரிமனிடம், “உங்களது கட்சிக்காரரை போராட்டங்களை நிறுத்தச் சொல்லியும் நீதிமன்றங்களை விமர்சிக்கக் கூடாது என அறிவுறுத்தியும் அறிக்கைவிடச் சொல்லுங்கள்” என்ற வேண்டுகோளையும் வைத்தார்கள் ‘மானங்கெட்ட’ நீதிபதிகள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழக அரசின் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு எதிராக பார்ப்பன-பாசிசக் கும்பல் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை, விடுமுறை நாளில் வீட்டில் உட்கார்ந்தபடியே விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், “தி.மு.க. அரசைக் கலைக்க உத்தரவிடவும் தயங்க மாட்டோம்” என வெளிப்படையாகவே மிரட்டினார்கள். ‘சூத்திரன்’ தலைமையிலான அரசை மிரட்டிய உச்சநீதி மன்றம், வன்முறையை நிறுத்துமாறு பாப்பாத்தி ஜெயாவிடம் – அப்பார்ப்பனத்தி ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற கூச்சம்கூட இல்லாமல் கெஞ்சுகிறது, வேண்டுகோள் வைக்கிறது.

“இந்த வழக்கு 18 ஆண்டுகள் எப்படியெல்லாம் இழுத்தடிக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும். அதேபோல் கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீடும் இழுத்தடிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” எனத் தலைமை நீதிபதி தத்து கேட்ட கேள்விக்கு, “இதற்கு முன்பு இருந்த நிலை வேறு. இனி அப்படி வழக்கில் தாமதம் ஏற்படாது என்பதற்கு நான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செகிறேன். நீதிமன்றம் என்ன நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்கத் தயார்” எனப் பதில் அளித்தார், ஜெயாவின் வழக்குரைஞர் பாலி நாரிமன்.
ஜெயாவிற்கு எதிராக தலைமை நீதிபதி நெற்றிக் கண்ணையே திறந்துவிட்டது போல இந்தக் கேள்விக்குப் பொழிப்புரை எழுதுகின்றன ஊடகங்கள். ஆனால், இந்தத் தீர்ப்பின் நரித்தனமே இந்தக் கேள்வியில்தான் அடங்கியிருக்கிறது. தண்டிக்கப்பட்ட குற்றவாளி பிணை கோரி தாக்கல் செய்த வழக்கில் மேல்முறையீட்டு வழக்கை எப்பொழுது முடிப்பீர்கள் என்று கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஜெயா, தனது நலனில் இருந்துதான் சொத்துக் குவிப்பு வழக்கை கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இழுத்தடித்து வந்தார். இப்பொழுது தண்டிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிப்பது, அதில் தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற எல்லாவிதமான வழிகளிலும் முயலுவதுதான் தனது நலனுக்கு ஏற்றது என்பது அவருக்கு நன்கு தெரியும். அதனால்தான் இனி அப்படி வழக்கில் தாமதம் ஏற்படாது என்ற உறுதியை அவரது வழக்குரைஞர் அளித்தார். ஜெயாவின் இந்த அவசரத் தேவையை விரைந்து முடித்துக் கொடுக்கும் புரோக்கராகத்தான் நீதிபதி தத்து மேலே கண்ட கேள்வியை எழுப்பியிருக்கிறாரே தவிர, அதில் கண்டிப்போ, கண்டனமோ எதுவும் கிடையாது.
கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஆறு வார கால அவகாசம் கேட்ட ஜெயாவிற்கு எட்டு வார கால அவகாசம் அளித்தும், அம்மேல்முறையீட்டு மனுவை மூன்றே மாத காலத்தில் விசாரித்து முடிக்குமாறு கர்நாடகா உயர்நீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்வோம் என்றும் தமது தீர்ப்பில் தன்னிச்சையாக சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து. விசாரணை நீதிமன்றங்கள் ஊழல் வழக்குகளை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்றுதான் காலக்கெடு நிர்ணயிக்கப்படிருக்கிறதேயொழிய, அவ்வழக்குகளின் மேல்முறையீட்டிற்கு எவ்விதக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஜெயா-சசி கும்பலின் மேல்முறையீட்டு வழக்கை மூன்று மாதங்களில் முடித்துத் தருவதற்கு உச்சநீதி மன்றம் புரோக்கரைப் போல முன்வந்திருப்பது ஜெயாவிற்காகப் புகுத்தப்பட்ட சிறப்புச் சலுகையாகும். ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு தற்போது பிணையில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுவிற்கோ, அரியானா முன்னாள் முதல்வர் சௌதாலாவிற்கோ காட்டப்படாத சலுகைகள் ஜெயாவிற்கு அளிக்கப்படுகிறதென்றால், இந்தத் தீர்ப்பு அவாள் பிரம்மஸ்ரீக்கள் என்ற அடிப்படையிலோ அல்லது ஜெயாவின் கனமான கவனிப்பு காரணமாகவோதான் வழங்கப்பட்டுள்ளதாகக் கருத முடியும்.
உச்சநீதி மன்றம்: ஜெயாவின் தலையாட்டி பொம்மை!

ஜெயா – சசி கும்பலுக்குச் சட்டத்திற்கு மேலான சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பதை மூடிமறைத்து, ஏதோ நிபந்தனைகள் நிறைந்த, கடுமையான தீர்ப்பை அளித்திருப்பதைப்போலக் காட்டிக் கொள்வதற்காகவே, “டிசம்பர் 18-க்குள் மேல்முறையீட்டுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்துவிட வேண்டும்; வழக்கை இழுத்தடிப்பதற்கு எந்தவிதமான முயற்சியும் செயக்கூடாது; மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஒருநாள் தாமதமானால்கூட நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என தத்து தலைமையிலான அமர்வு மன்றம் தமது தீர்ப்பில் உதார் விட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உதார்கள் ஒருபுறம் சுயமுரண்பாடு கொண்டதென்றால், இன்னொருபுறம் நகைப்புக்குரியதாகும்.
ஜெயா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றியபொழுது, அவ்வழக்கைத் தினந்தோறும் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், தனது உத்தரவை தானே மதித்து நடந்துகொள்ளவில்லை. குறிப்பாக, சொத்துக்குவிப்பு வழக்கையும் இலண்டன் ஹோட்டல் தொடர்பான வழக்கையும் பிரிக்கக்கூடாதென கோரி ஜெயா கும்பல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பை விசாரணை முடிந்த கையோடு வழங்காமல், நான்கு ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்து வழக்கு விசாரணையை முடக்கி வைத்தது உச்சநீதி மன்றம்.
உச்சநீதி மன்ற நீதிபதிகளாக இருந்த பி.எஸ்.சௌஹான், பாப்டே ஆகிய இருவரும் இவ்வழக்கில் ஜெயா கும்பலின் விசுவாசிகளாகவே நடந்துகொண்டதற்கு அவர்கள் அளித்த தீர்ப்புகளே சான்றுகளாக உள்ளன. “பவானி சிங்தான் அரசு வழக்குரைஞராகத் தொடர வேண்டும்; நீதிபதி பாலகிருஷ்ணா, அவரது பணி ஓவுக்குப் பிறகும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகத் தொடரும் வண்ணம் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்” என ஜெயா கும்பல் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில், ஜெயா-சசி கும்பல் எதைக் கோரினார்களோ அதையே இவ்விரு நீதிபதிகளும் தீர்ப்பாக அளித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த சமயத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு வந்துவிடக் கூடாதென சதித் திட்டம் தீட்டிய ஜெயா-சசி கும்பல், அதற்காக அரசு வழக்குரைஞர் பவானி சிங்கைத் தூண்டிவிட்டு, அவரது உடல் நிலையைக் காரணமாக முன்வைத்து வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும் மனுவொன்றை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய வைத்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சௌஹான், செல்லமேஸ்வர் அமர்வு ஜெயாவிற்குச் சாதகமாகத் தேர்தல் முடியும் வரை – ஏப்ரல் 28 வரை வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து தீர்ப்பளித்தது. இப்பொழுது தத்து தலைமையிலான அமர்வு மன்றம் அளித்திருக்கும் தீர்ப்போ, நீதிபதி சௌஹான் ஓவு பெற்று சென்றுவிட்ட குறையைத் தீர்த்து வைப்பது போல அமைந்துவிட்டது.
வருமான வரி மோசடி வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி ஜெயா-சசி கும்பல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவைத்திருந்த உச்சநீதி மன்றம், கடந்த மார்ச் மாதத்தில் திடீரென முழித்துக்கொண்டு அம்மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, இந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அதற்கு அடுத்த மாதமே நாடாளுமன்றத் தேர்தலைக் காரணமாக முன்வைத்து இந்த வழக்கு விசாரணையை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி ஜெயா மனு தாக்கல் செய்தார். உச்சநீதி மன்றமும் ஜெயா கும்பல் தேர்தல்கள் முடிந்து பதவி பேரங்களை நடத்துவதற்கு வசதியாக மேலும் மூன்று மாத கால அவகாசம் அளிப்பதாக உத்தரவிட்டது.
ஆனாலும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கு விசாரணை கடந்த ஏழு மாதங்களில் ஒரு அங்குலம்கூட நகரவில்லை. அந்நீதிமன்ற நீதிபதி தெட்சிணாமூர்த்தி, ஜெயாவும் சசியும் நேரில் ஆஜராகுமாறு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்ட மறுநிமிடமே அந்நீதிமன்றத்திலிருந்து அதிரடியாக மாற்றப்பட்டார். எனினும், மாற்றப்பட்ட அன்று மாலையே மீண்டும் அதே நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு பதவியேற்றவுடனேயே, வருமான வரித் துறையிடம் சமரச மனுவொன்றை அளித்தது, ஜெயா-சசி கும்பல். இந்தச் சமரச மனுவைக் காரணமாகக் காட்டியே வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணையைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் சதித்தனங்களை நடத்தி வருகிறது, அக்கும்பல்.
ஜெயா 1991-96-ம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்தபொழுது, 1992-ம் ஆண்டில் தனக்கு வெளிநாட்டில் இருந்து 2 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர் பரிசாக வந்ததாகக் கணக்கு காட்டினார். இது முறைகேடாக வந்த பணம் எனக் குற்றஞ்சாட்டி சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 2011-ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்து, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சி.பி.ஐ. உச்சநீதி மன்றத்தில் கடந்த 2012 பிப்ரவரியில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை கடந்த 2014 மார்ச்சில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஜெயா உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு இதுநாள்வரை பதில் அளிக்காமல் வழக்கையே முடக்கி வைத்திருக்கிறார், ஜெயா.
– திப்பு
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________
காசில்லாக் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறையா ?
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 குழந்தைகளும் சேலம் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 7 குழந்தைகளும் என்ற 18 குழந்தைகள் கடந்த 5 நாட்களில் இறந்துள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து குழந்தைகள் சாவது குறித்து எவ்வித அக்கறையுமில்லாமல் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் வக்கிரமான முறையில் பதில் அளித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் 18-11-2014 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அரசு திட்டமிட்டு அரசு மருத்துவமனைகளை புறக்கணித்து தனியார் மருத்துவக் கொள்ளையர்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழி வகுக்கிறது என்ற அளவில் தனியார்மயமே இந்த படுகொலைகளுக்கு காரணம் என முடிவு செய்து பிரசுரம் அச்சிட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். மேலும் சுவரொட்டி அச்சிட்டு பெண்ணாகரம், தருமபுரி சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டினர்.
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களிலும், குழந்தைகள் தினம் கொண்டாடினர். ஆனால், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 16 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துள்ளன.
இதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியாமல் கல்லூரி தலைவர், மருத்துவக் கல்வி இயக்குனர் போன்றோர் சிறிதும் மனிதாபிமானமின்றி பல்வேறு பொய்யான காரணங்களை வக்கிரமான முறையில் கூறி வருகின்றனர். ஏதுமறியாத பச்சிளங்குழந்தைகள் மற்றும் பெற்றோர் மீதே பழிபோடுகின்றனர்.
எடை குறைவு என்பது பச்சையான பொய். போதிய எடையுள்ள குழந்தைகளும் இறந்துள்ளனர். 900 கிராம் எடையிருந்த குழந்தைகளைக் கூட இதற்கு முன்னர் காப்பாற்றியுள்ளனர். மற்றும் சீசன் டெத், சத்துக்குறைபாடு, மூச்சுத் திணறல் என்ற ஏராளமான பொய்யைச் சொல்லி சமாளித்து விடலாம் என்ற கருத்துடனே இருக்கின்றனர்.
இவையாவும் கடைந்தெடுத்த பொய்யே! கிராமப்புற சுகாதார மையங்கள் செவிலியர்களை வைத்து கண்காணிக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகிறது. 30 குழந்தைகளுக்கு இரண்டே செவிலியர்களை அமர்த்தியுள்ளது இந்த அரசு.
இவ்வாறு இருக்கும் போது மருத்துவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ள இவ்வாறு பொய்யை வாய்கூசாமல் பேசி வருகின்றனர். வழக்கமான மரணத்தையே ஊதிப் பெரிதாக்கி வருகின்றனர் என்றும் 100 குழந்தை பிறந்தால் 10 பேர் இறக்கத்தான் செய்வார்கள் என்றும் மருத்துவமனை ஊழியர்கள் சாதாரணமாக பேசுவதை, எத்தனை பெரிய மனித படுகொலையை மிக சாதாரண முறையில் பேசுவதை எப்படி ஏற்பது. தனது கையாலாகத்தனத்தை எளிதாக மறைக்க அரசு இதையே கூறி தப்பித்துக் கொள்கிறது.
“அடப்பாவி, நான் அப்போவே சொன்னேன், கெவுருமெண்டு ஆஸ்பத்திரி வேண்டாமுன்னு. நீ கேட்டியா, இப்ப என் குழந்தையே கொன்னுட்டாங்களே” முதல் குழந்தையை இழந்த தாய் ஒருத்தி கதறிக் கதறி கணவனை பார்த்து அழுத அழுகுரலில்தான் இதன் உண்மை அடங்கியிருக்கிறது.
தருமபுரியில் குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை நாளும் அதிகரித்து வந்தது. குறிப்பாக, வசதியற்ற ஏழை எளிய மக்களுக்கு ஒரே நம்பிக்கை மிகுந்த குழந்தை பெற்றெடுக்கும் இடமாக இருந்த ஆஸ்பத்திரி மீது நம்பிக்கை இழக்க வைத்து தனியார் மருத்துவமனையை நோக்கி நெட்டித் தள்ள வைத்துள்ளனர் இந்த கொலைகார பாவிகள். இதுதான் தனியார்மயத்தை ஆதரிக்க செய்யும் சதியான வழி. எனவே, தனியார்மயத்தை ஆதரிப்பவர்களும், அமுல்படுத்தும் அரசும்தான் கொலைக்குற்றவாளிகள்.
இறந்து போன குழந்தைக்கான நீதியை யார் வழங்குவது? இறந்த குழந்தையை போஸ்ட்மார்ட்டம் செய்து விடுவார்கள் என்று பச்சைக் குழந்தையை அப்படியே எடுத்துச் சென்று புதைப்பதையே விரும்பும் பெற்றோர்கள், ஆஸ்பத்திரியில் செய்யும் மிரட்டல் வேலைகளை நம்பி அப்படியே எடுத்து சென்று விடுகின்றனர்.
கொத்துக் கொத்தாக குழந்தை இறப்பு என்பதை இந்த அரசு இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றி எந்த உயர் அதிகாரியோ, நம்மிடம் ஓட்டுவாங்கிச் சென்ற அரசியல் தலைவர்களோ யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. என்ன, ஏது என்று விசாரித்துக் கூடப் பார்க்கவில்லை. அடுத்த முறை ஓட்டு வாங்கத் துடிக்கும் சில அரசியல் தலைவர்களைத் தவிர யாரும் இதனை கவனிக்கவில்லை.
நமது மாவட்டத்தினை முதல் மாவட்டமாக ஆக்கத் துடிக்கும் அரசியல் தலைவர்கள் கூட குழந்தை என்ன பின்னணி என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள் போல. ஏனெனில் எல்லா ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் தனியாரை ஆதரிக்கும் தீவிர ஆதரவாளர்களே! தனியார்மயத்தை ஆதரித்து தீவிரமாக அமுல்படுத்தி வருகின்றனர். இதனை யாரும் தட்டிக் கேட்டு விடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
இதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியா போன்ற ஏழை நாடுகளில் பரிசோதிக்க மத்திய, மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளன பன்னாட்டு மருந்து கம்பெனிகள். இதற்கு இந்தியா சிறந்த இடமாக இருக்கிறது என்ற பில்கேட்ஸ் அறக்கட்டளை நடத்தும் அமெரிக்க முதலாளி பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.
இதனால், நமது நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சாவதும், ஆயிரக்கணக்கானவர்களுக்கு பக்க விளைவுகளால் பாதிக்கப்படு நடைபிணமாக்கப்படுவதும் வாடிக்கையாளியுள்ளது. எனவே, தற்போது நமது மாவட்டத்தில் நடந்துள்ள குழந்தைகள் கொத்தான மரணம் என்பது இயற்கையான காரணம் அல்ல, படுகொலைதான்.
இன்று நம்மை அழுத்திக் கொண்டிருக்கும் இந்த நாசகார கொள்கையான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி நமது சந்ததியரையும், நமது வாழ்வையும், வளங்களையும் ஒழித்து முன்னேற்றம் காணத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களையும், தரகு முதலாளிகளையும் அவர்களை தாங்கிப் பிடிக்கும் இந்த அரசையும் தூக்கியெறியாமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வில்லை என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது. எனவே, மக்களை நேசிக்கும் புரட்சிக அமைப்புகளின் பின்னால் அணிதிரண்டு போராட வாருங்கள்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அராஜக போக்கை கண்டிக்கும் வகையில் அந்த மருத்துவமனை முன்பு 19-11-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர் தோழர்கள். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடத்திக் கொள்ள கூறியது நிர்வாகம்.
தோழர்கள் தடையை மீறி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் தொடர் படுகொலைகள் பற்றியும் தோழர்களின் கைது குறித்தும் அடுத்த கட்ட பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
ஆசைஆசையாய் பெற்ற குழந்தை
கண்ணெதிரே கதறி
கொத்துக் கொத்தாய் மடிவது
என்று அரசு மொத்தமாய் கொல்வதற்கா
பத்துமாதம் காத்திருந்தோம்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையா
இல்லை கொன்று புதைக்கும் சுடுகாடா?
வெட்கக் கேடு நேருவின் பிறந்த நாளாம்,
குழந்தைகள் தினம் கொண்டாடுவது வெட்கக் கேடு
குழந்தை மரணம் நிகழும் இந்த நாட்டில்
குழந்தைகள் தின கொண்டாட்டம் வெட்கக் கேடு.
காசில்லா ஏழை மக்கள்
பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு
கருவறைதான் கல்லறையா? – இல்லை
கருவறை விட்டு வெளியே வந்தால்
மருத்துவமனைதான் கல்லறையா?
வல்லரசு கனவெல்லாம்
பல்லிளிக்குது, பல்லிளிக்குது
தூய்மை இந்தியா திட்டமெல்லாம்
துர்நாற்றம் வீசுது
தனியார் மருத்துவக் கொள்ளைக்காக
பிள்ளைக்கறி தின்னும் அரசுகளை
கீழே தள்ளிப் புதைக்காமல்
வாழ்க்கையில்லை
அவமானம் அவமானம்
பத்து மாதம் சுமந்து பெற்ற
பச்சிளம் குழந்தைக்கு பாடை கட்டும்
கொலைகார அரசுகளை
சகித்துக் கொள்வது அவமானம்
துடைப்பம் தூக்கி போஸ் கொடுக்கும்
சவுண்டு ஸ்பீக்கர் மோடியே
16 குழந்தைகள் மரணத்திற்கு
யாரை துடைப்பத்தால் அடிப்பது?
இது தர்ம ஆசுப்பத்திரியா – இல்லை
எமதர்மனின் பாசக்கயிறா
தரம்கெட்ட அரசுகளே
குழந்தைகளை கொல்வதற்கா
அரசு மருத்துவமனை
நட்ட ஈடு வழங்கு, நட்ட ஈடு வழங்கு
பிறந்த குழந்தைகள் இறந்ததற்கு
பொறுப்பேற்று நட்ட ஈடு வழங்கு
முறியடிப்போம்! முறியடிப்போம்.
தனியார் மருத்துவக் கொள்ளைக்கு
வழிவகுக்கும் சதித் திட்டத்தை
முறியடிப்போம், முறியடிப்போம்.
- தனியார் மருத்துவமனைக்கு சேவை செய்யவே தருமபுரி மருத்துவமனையில் குழந்தைகள் 16 பேர் படுகொலை. நீதி விசாரணை நடத்திடு!
- கொத்துக் கொத்தாய் குழந்தைகள் இறப்புக்கு பொய்யான, சப்பையான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றாதே!
- பன்னாட்டு மருந்து கம்பெனிகளையும், தனியார்மயத்தை ஊக்குவிக்கும் மக்கள் விரோத அரசினையும் தூக்கி எறிவோம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி மாவட்டம்
அரசையும் அமைச்சரையும் பணிய வைத்த புமாஇமு போராட்டம்
சென்னை இராயபுரம் விடுதி மாணவிகளுக்கு நியாயம் கேட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் நடந்த மாணவர் போராட்டத்திற்கு வெற்றி!
- இராயபுரம் அரசு ஆதிதிராவிட மாணவியர் விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு மாணவிகள் படுகாயம்!
- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போராட்டத்தால் பணிந்தது ஆதி-திராவிட நலத்துறை
சேரிகளாக புறக்கணிக்கப்படும் அரசு ஆதிதிராவிடர் விடுதிகள்
பெரும்பான்மை உழைக்கும் மக்களை சூத்திரர் என்றும் பஞ்சமர், சண்டாளர் என்றும் இழித்துரைத்து அவர்களை கல்வி கற்கவிடாமல், கல்வியின் நறுமணத்தைக் கூட நுகரவிடாமல் தடுத்து ஊருக்கு வெளியே குடிக்க தண்ணீர் இல்லாமல், பிழைக்க நிலம் இல்லாமல், ஏன்? செத்தால் புதைக்க சுடுகாடு கூட இல்லாமல் ஒதுக்கி வைத்து அவர்களை அடக்கி ஒடுக்கியது பார்ப்பனீயம். இன்று நான் ஒரு பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக்கொண்ட ஜெயா தலைமையிலான அதிமுக அரசு தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை புறக்கணிக்கப்பட்ட சேரிகளாகவே நடத்துகிறது. “எங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை” என்று முறையிடும் மாணவர்களிடம் “கவர்மெண்டு ஆஸ்டல்னா அப்படித்தான் இருக்கும், ரொம்ப துள்ளாதீங்க….. அப்பறம் படிப்பும் போயிடும்” என்று சாதி ஆதிக்க மனோபாவத்துடன் கலெக்டர் அலுவலக உயர் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மாணவிகள்.
‘சூத்திரனுக்கு எதுக்கடா கல்வி’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்து வந்த பார்ப்பனீய மனுநீதியின் தொடர்ச்சியாக இன்றும் கூட உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்கின்ற அரசுக் கல்லூரிகளும், அவர்களுக்கான விடுதிகளும் இந்த அரசால் சேரிகளைப் போன்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மாணவிகளின் உயிரை பறிக்கத் துடிக்கும் அரசின் அலட்சியம்
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என்று சென்னையில் உள்ள 6 விடுதிகளில் ஒன்று, ராயபுரம் மாணவிகள் விடுதி. சென்னையில் உள்ள 10-க்கும்மேற்பட்ட அரசுக்கல்லூரிகளில் பயிலும் தலித் மாணவிகளின் ஒரே புகலிடம் இந்த விடுதிதான். சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ள இவ்விடுதி பார்ப்பதற்கு அகதிகள் முகாம் போன்றே உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித பராமரிப்பும் இன்றி பாழடைந்த கட்டிடங்கள் மட்டுமே விடுதியாக இயங்குகிறது.
வயது வந்த மாணவிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை இவர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கல்லூரிக்கு செல்லும் போது வீடுகளில் இருந்து வரும் சக நண்பர்களான மாணவிகளை பார்த்து அவர்களைப் போல் நாம் இருக்க முடியவில்லையே என்ற இந்த ஏக்கத்தை எருமை மாட்டுத்தோல்களைக் கொண்ட அதிகாரிகளால் உணர முடியாது. திடகாத்திரமான உடல் அமைப்புடன் இந்த விடுதிக்கு வந்த கிராமத்து ஏழை மாணவிகளின் ஆரோக்கியத்தை விடுதி உணவும், சூழலும் பறித்துக்கொண்டது என்றால், மிச்சம் இருக்கும் உயிரையும் பறிக்கப் பார்க்கிறது அரசின் அலட்சியம்.
மூன்று நாட்களுக்கு முன்பு ராயபுரத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மாணவிகள் தங்கியுள்ள விடுதியில் அறையில் மேற்கூரை இடிந்து விழுந்து கலைவாணி, விநாயகசெல்வி எனும் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அறைக்கு ஒட்டுப்போடும் நாடகத்தை அரங்கேற்றியது அரசு.
ஆனால், மாணவிகளின் கோரிக்கை உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் என்பது. “ஏற்கனவே வேப்பேரியில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள விடுதிக்கு மாற்ற வேண்டும்” என்கிறார்கள் மாணவிகள். அந்த விடுதியை திறக்க மறுக்கிறது அரசு. காரணம் ’அம்மா’ முதல்வராக இருந்தபோது கட்டிய அந்த விடுதியை அவர் கையால் திறக்க திட்டமிடப்பட்டதாம். தற்போது பதவி இழந்ததால் திறக்கும் திட்டமில்லையாம். மீண்டும் ’அம்மா’ பதவிக்கு வந்தால்தான் இந்த மாணவிகளுக்கு விடிவுகாலம் பிறக்குமாம். எவ்வளவு வக்கிரம் இது. இந்த வக்கிரத்திற்கு கொடுக்கப்பட்ட பலிதான் இரண்டு மாணவிகள் படுகாயம்.
தமிழகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்து வருகின்ற பல ஆயிரம் உழைக்கும் மக்கள் வீட்டு மாணவர்களின் புகலிடம் அரசுக் கல்லூரிகளும், அரசு விடுதிகளும்தான். ஆனால் அவை அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாமல், கழிவறை இல்லாமல், குளியல் அறை இல்லாமல், சரியான உணவு இல்லாமல், மோசமான முறையில் தான் உள்ளன. அரசுக்கு இதெல்லாம் தெரியும்.
ஆனால், “இவனுக்கெல்லாம் படிப்பா ?” என்று ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் படிப்பதைப் பார்த்து சாதி வெறியன் கொக்கரிப்பது போலவே நம்மைப் போன்ற உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளையும், அவர்களுக்கான விடுதிகளையும் இந்த அரசு பார்க்கிறது. அதனால் தான் போதிய நிதி ஒதுக்குவதில்லை. அது மட்டுமல்ல, மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகையையும் தராமல் இழுத்தடிக்கிறது.
‘பஞ்சப்பராரிகளுக்கு, எதற்கு கக்கூசு’ என்று தான் நம்மை ஒதுக்குகிறது அரசு. ஐ.ஐ.டி விடுதிகளையும் மத்திய பல்கலைக் கழக விடுதிகளையும், நன்றாகப் பராமரிக்கும் அரசு உழைக்கும் மக்கள் வீட்டுப் பிள்ளைகள் தங்கி படிக்கும் விடுதிகளை கண்டுகொள்வதில்லை.
நரகமயமான விடுதி வாழ்க்கை
இப்படி எந்த அடிப்படை வசதியும் இல்லை என்றாலும் எப்படியாவது படித்து உழைத்து முன்னேறி விடலாம் என்ற லட்சியத்துடன் தான் பல்லாயிரம் மாணவர்கள் இந்த விடுதிகளை நோக்கி வருகின்றனர். கழிப்பறை இல்லை, குடிநீர் இல்லை, குளிக்க அறை இல்லை, படுக்கும் அறையில் இடமில்லை என எப்பேர்பட்ட இடர்பாடு வந்தாலும் இந்த நெருப்புக் கடலில் நீந்தி, அதிலேயே வாழ்ந்து எப்படியும், மூன்றாண்டு, அல்லது இரண்டாண்டு படிப்பை முடித்துவிடலாம் என்று மாணவர்கள் போராடுகின்றனர். அதனால், இவற்றை சகித்துக் கொள்கின்றனர்.
பல விடுதி மாணவர்கள் ஒருவேளை நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக பல கனவான்களின் திருமணங்களிலும், விசேசங்களிலும் சமையல் மற்றும் பந்தி பரிமாறல், பாத்திரம் கழுவும் வேலைக்கு போகிறார்கள். தங்களைப் பராமரித்துக் கொள்ள ஊரில் இருந்து பணம் எதிர்பார்த்து பெற்றோருக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக மாணவர்கள் பகுதி நேர வேலைக்குச் செல்கிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் விடுதி மாணவர்களை காவல் தடிகள் குற்றவாளிகளாகவும், பொறுக்கிகளாகவும் சித்தரித்து அவர்களை சந்தேகக் கேசு போட்டு துன்புறுத்துகிறார்கள். கல்லூரியில் மாணவர்கள் பகுதிநேர வேலைக்கும் போகக் கூடாது என்று சொல்கிறார்கள். இப்படி பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் விடுதி மாணவர்கள் வாழ்கிறார்கள். மாணவர்களுக்கு இந்த நிலை என்றால் மாணவிகளின் நிலை சொல்லி மாளாது.
மாணவர்கள் தங்கள் பராமரிப்பிற்காக பகுதி நேர வேலைக்கு செல்ல முடியும். கேட்டரிங் வேலை செய்து ஒரு வேளை நல்ல சோறு சாப்பிட முடியும். ஆனால் மாணவிகளுக்கு இந்த வாய்ப்புகள் கூட குறைவு. அதையும் தாண்டி வேறு வழியே இல்லை எனும் போது, சூப்பர்மார்க்கெடுகளிலும், பேன்சிஸ்டோர்களிலும் அற்பக் கூலிக்கு வேலைக்குச் செல்வது என்று உள்ளது. அங்கும் கூட பாதுகாப்பான சூழல் இல்லை. வேலியில்லா பயிராகவே இவர்களைப் பார்க்கிறது சமூகம். அப்படி வேலைக்குச் சென்றாலும், அதனை வீட்டிற்கு தெரிவிப்பது கிடையாது. ஊருக்குப் போய் வரும் போது பிள்ளைகளுக்கு வழிச்செலவுக்கு 200 ரூபாய் கூட கொடுத்தனுப்ப முடியாத ஏழைப் பெற்றோர்கள் எப்படி இவர்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்ப முடியும்? இப்படி துன்பகரமான சூழலில் தான் பல ஆயிரம் முதல் தலைமுறை மாணவ மாணவியர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்கிறார்கள். இப்படி இவர்களின் பிறவிப் பெருங்கடல் நெருப்பால் ஆனதாகத் தான் உள்ளது.
ஆனால் அவர்கள் நரக வாழ்க்கை வாழும் இதே நகரங்களில் தான் எந்த நேரமும் கேட்டதெல்லாம் கிடைக்கும் வசதியுடன் தனியார் விடுதிகளைப் பார்க்க முடிகிறது. பல ஆயிரம் ரூபாய் வாடகையாகத் தந்து அப்பார்ட்மெண்ட்களில் தங்கி மாதச் செலவுகளுக்கு வீடுகளில் பணம் வாங்கும் மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவுக்கு வழங்கும் பெற்றோரும் படிக்கிற பிள்ளைகளுக்கு எதற்கு கஷ்டம் என்று காரணம் சொல்லுகின்றனர். பள்ளியில் படிக்கும் போதே பிள்ளைகளை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக மாற்றி எப்படியாவது அரசு ஐ.ஐ.டியிலும், மத்தியப் பல்கலைக் கழகங்களிலும், மருத்துவப் படிப்பிலும் சீட்டு வாங்கிவிடவேண்டும் என்று போராடுகின்றனர். இடஒதுக்கீடு திறமை இல்லாதவர்கள் எல்லாம் கொண்டு வருகிறது என அங்கலாய்க்கின்றனர்.
ஆதிக்க சாதிக் காரன் குடிநீர் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்றும் சொல்லிவிட்டு தாழ்த்தப்பட்டவர்கள் அழுக்கானவர்கள் குளிக்கமாட்டார்கள் என்று கூறுவது போல அரசுக் கல்லூரியின் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களை இவர்கள் பார்க்கிறார்கள். பட்டப்படிப்பு முடிந்தாலும் தன்வீட்டுப் பெண்களை வேலைக்கு அனுப்பக்கூடாது என நினைக்கும் இவர்கள் எப்படி இந்த விடுதி மாணவிகளின் வாழ்நிலையை உணர்வார்கள்.
மனுகொடுத்து மன்றாடிய விடுதி மாணவர்கள் – எட்டிக்கூட பார்க்காத அதிகாரிகளின் அலட்சியம்
இப்படி இந்த மாணவர்கள் படுகின்ற துன்பங்கள் இந்த அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இல்லை.
அதிகாரிகளுக்கு அனைத்துப் பிரச்சனைகளும் தெரிந்து தான் இருக்கிறது. ஆனாலும் இவர்களின் எருமைத் தோலுக்கு எதுவும் உறைப்பதில்லை. மாணவர்கள் மனு கொடுத்தால் சரிசரி என்று தட்டிவிட்டுச் செல்லுகின்றனர். படுக்கை அறை முதல் கக்கூசு வரை ஏ.சி. போட்டு குளுகுளு என்று இருப்பவர்களுக்கு எப்படி மாணவர்களின் துன்பம் உறைக்கும்? உறைக்காது. மாணவர்களைப் போன்று அவர்கள் பலர் பார்க்கும் வகையில் குளித்தால் தெரியும் இந்த அவமானம். குளுகுளு அறையில் நீர்த்தொட்டியில் குளிப்பவர்களுக்கு இது அலட்சியமாகத் தான் தெரியும்.
அதிகாரிகளைக் கண்காணிக்கும் இந்த அரசுக்குத் தெரியாதா? அனைத்தும் தெரியும். ஆனால் இந்த அரசிற்கு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்குத் தரவும், கல்வி நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. அதையும் தாண்டி சிந்தித்தால் ஜெயி(ல்)லலிதா வின் விடுதலை பற்றியோ தான் யோசிக்க முடிகிறது. இது போன்ற வேலைகளில் இவர்கள் அரசு விடுதி மாணவர்களைப் பற்றி சிந்திக்க ஏது நேரம்?
போராட்டம் ஒன்றே விடிவெள்ளி
ஆம்! மாணவர்களின் போராட்டங்கள் ஒன்றே தீர்வு, அதுவும் அதிகாரிகளுக்கு உறைக்கும் வகையிலான போராட்டம் மட்டுமே தீர்வு. அது போன்ற போராட்டங்களை எந்த ஓட்டுக் கட்சியும் நடத்தமுடியாது. அவர்களுக்கு அந்த தகுதியும், யோக்கியதையும் இல்லை. எங்களைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் தான் செய்ய முடியும். ஆம் அந்த விதத்தில் தான் எங்களுடைய அமைப்பின் சார்பாக மாணவர்களை அணிதிரட்டி சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து முழக்கமிட்ட படியே சென்று கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திடீர் என ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, பாழாய்போன தேர்வின் காரணமாக பல நூறு மாணவர்களை அணிதிரட்ட முடியாமல் போகக் கூடிய துரதிஷ்டமான நிலை இருந்த போதிலும் நூறு மாணவர்களை வைத்து எமது அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டமும் அதில் போடப்பட்ட முழக்கங்களும் எருமைத் தோல் படைத்த அதிகாரிகளுக்கு உறைக்கும் வகையில் இருந்தது.
எமது அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் கண்டன உரையாற்றினார். அதன்பின்னர் அந்த மேன்மக்கள் உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளான எங்களை சந்திக்க ஒத்துக் கொண்டனர். பல அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருந்த இடத்தில் எமது தோழர்கள், “ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து விடுதிகளையும் சீரமைத்துக் கொடுக்க வேண்டும். உடனடியாக இராயபுரம் விடுதியை சீரமைக்க வேண்டும்” என்றதும் சொன்னதற்கு சரி என்று சொன்னார்.
ஆனால், “இதுபோன்ற பதில்களை பலமுறை நாங்கள் கேட்டு விட்டோம்”, என இராயபுரம் ஆண்கள் விடுதியின் பிரதிநிதி சொன்னதும் பு.மா.இ.மு தோழர்கள் “இந்த இடத்திலேயே நாள் உட்பட்டு தெளிவான பதிலை சொல்லுங்கள்” என்று நெருக்குதல் தந்த பிறகு இன்னும் 15 நாட்களுக்குள் செய்து விடுவதாக உறுதி அளித்தனர். அந்த அடிப்படையில் வெளியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் காத்திருந்த மாணவர்களிடம் தகவல் சொல்லப்பட்டது. விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
அதன் பின்னர் காயமடைந்த மாணவர்களுக்கு ஆர்ப்பாட்டத்தகவலை சொல்லச் சென்றோம். விடுதியில் உணவு இடைவேளை என்பதால் மாணவிகள் அனைவரும் அவரவர் அறைகளில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அந்த விடுதியின் காப்பாளர் நம்மை பார்த்து பயமடைந்தார்; பேசுவதற்குத் தயங்கினார்.
அவரிடம் நாம் நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் பற்றியும், ஆட்சியரை சந்தித்தது பற்றியும் விளக்கினோம். “காப்பாளர் என்ற முறையில் நீங்கள் மாணவிகளுக்குத் தான் பொறுப்பு, ஆனால் கட்டிடத்தை பராமரிக்காததற்கு காரணம் இந்த அரசு தான். எனவே எங்களுக்கு நீங்கள் தனிப்பட்ட எதிரி இல்லை. ஆனால், நம் அனைவருக்குமே இந்த அரசும் அது அமுல் படுத்திவரும் தனியார்மய, தாராளமயக் கொள்கைதான் எதிரி” என்றதும்,
அவராகவே “ஆமாம், விடுதியில் சுத்தம் செய்யும் வேலைக்குக் கூட நிரந்தர ஆட்கள் இல்லை. அதற்குக் கூட தனியார் நிறுவனம் தான் காண்ட்ராக்ட் விடுகிறது. இதனையாரும் பேசுவதில்லை” என்று அவரது ஆதங்கத்தைக் கொட்டினார். “இதுபோன்ற விபத்து ஏற்படும் என்பதால் உடனே இவற்றை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என பலமுறை சொல்லியுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று நீங்கள் போராட்டம் நடத்தியுள்ளீர்கள் என்பதற்கு நன்றி” என்று கூறினார்.
பின்னர் போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்த ஆண்கள் விடுதி மாணவர்களிடம் இந்தப் போராட்டத்தை தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விளக்கிவிட்டு காயமடைந்த மாணவிகளைச் சந்திக்க மாணவியர் விடுதிவழியாகச் சென்றோம். விடுதியினை ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் பார்வையிட்டு சென்றார் என்று தகவல் கிடைத்தது.
மருத்துவமனையிலும் எமது பெண் தோழர்கள் இரண்டு நாட்களாக காயமடைந்த மாணவிகளுடன் துணையாக இருந்து வருகின்றனர். மருத்துவமனைவளாகத்தில் இவர்களைப் பார்ப்பதற்காக 25-க்கும் மேற்பட்ட தோழர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். அப்போது மாணவிகள் காயமடைந்து இரண்டு நாட்கள் ஆன பிறகு அமைச்சர் பார்வையிட வந்தார். உடன் அவருடைய அல்லக்கைகளும், காவல் துறையும், மின் தூக்கியில் சென்று மாணவிகளைப் பார்த்தனர். அதுவரை எமது தோழர்களை காத்திருக்கச் செய்தனர். ஆனாலும் “அவரை நம்பி ஓட்டுப் போட்ட மக்களை அவர் மதிக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த மக்களை மதிக்க வேண்டும்” என்று எமது தோழர்களும் மாணவர்களும் அமைதியாக, பொறுமையாக இருந்தனர்.
அதன் பிறகு வந்த அமைச்சர், ஜெயாவின் தரிசனத்துக்காக பெங்களூரு நீதிமன்றத்தின் வாசலில், கை கட்டி மெய்மறந்து காத்திருந்த அமைச்சர் அங்கு நின்றிருந்த எமது தோழர்களை கண்டு கொள்ளாமல் செல்ல முயன்றார். “நாங்கள் தான் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியிணர். இவர்தான் எங்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்” என்று கூறியதும் சரிப்பா என்று ஓட்டம் பிடிக்கப் பார்த்தார்.
“எங்களை பார்த்து ஏன் பதில் பேசாமல் இப்படி செல்கிறீர்கள்” என்றதும், போலீசு, “அமைச்சரை நீங்கள் ஏதாவது செய்துவிடுவீர்கள் என்று தான் பேசாமல் செல்கிறோம்” என்றார். அப்போது தான் இவர்கள் தங்கள் நிழலைக் கூட பார்த்து பயப்படும் அளவிற்கு வீரமானவர்கள், எப்படி நம்மைப் போன்ற புரட்சிகர அமைப்பினைச் சந்தித்தால், நிற்பார்கள் என்பது நினைவுக்கு வந்தது.
அதன் பின்னர் காயமடைந்த மாணவிகளைச் சந்தித்து நமது ஆர்ப்பாட்டச் செய்திகளைத் தெரிவித்தோம். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்கவும், போராடியுள்ளோம் என்று சொன்னதும், அந்த மாணவியின் தாய் “இந்த ஊரில் எங்களுக்காக நீங்கள் வந்துள்ளீர்கள், மிக்க நன்றி” எனக் கூறினார்.
“இது எங்களுடையகடமை மாணவர் உரிமை எங்கு பாதித்தாலும் எமது பு.மா.இ.மு – அங்கு அவர்களுக்காக நிற்கும்” என்று கூறினோம்.
“நீங்கள் எல்லாம் போராடியதன் விளைவுதான் இன்று அமைச்சரே நேரில் வந்து எங்கள் பிள்ளைகளைப் பார்த்தது மட்டுமில்லாமல் தரமான மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று உறுதிஅளித்துவிட்டு சென்றுள்ளார்” என்று அவர் கூறினார்.
ஒரு மாணவி தனக்கு அடிபட்டதை அவரது பெற்றோரிடம் கூட சொல்லவில்லை. அவரது அம்மாவிற்கு வலிப்பு நோய் இருப்பதால், அதிர்ச்சியான வற்றை சொல்லக்கூடாது. எனவே, அவரது சக தோழியும், தோழர்களும் தான் இவருக்கு துணையாக இருந்துள்ளனர்.
மற்றொரு மாணவியின் பெற்றோர், “இது போன்று தான் எங்களிடம் இவர்கள் படும் கஷ்டங்களை பற்றி சொல்வதே இல்லை. சொன்னால் கல்லூரிக்கு அனுப்பாமல் இருந்து விடுவோமோ என்று பயப்படுகின்றனர், வேறு இடத்தில் தங்க வைக்க சென்னையில் சொந்தக்காரர்கள் யாரும் இல்லை. வெளியில் தங்க வைக்கும் அளவுக்கும் எங்களுக்கு வசதியில்லை. ஊருக்கு வந்து போகக் கூட 100 அல்லது 200 ரூபாய் தான் கொடுக்க முடிகிறது, ஒரு நல்லது கெட்டது என்றால் கூட நல்ல சாப்பாடு போட முடிவதில்லை. இது தான் எங்கள் நிலை” என்று அந்தத் தாய் உடைந்து பேசினார். “கை, காலில் அடிபட்டிருந்தால் கூட சரியாகிவிடும் என்று விட்டுவிடலாம், கழுத்திலே பலமான அடி என்று சொல்கிறார்கள் அது தான் எங்களுக்கு பயமாக உள்ளது” என்று கண்ணீர் சிந்தினார்.
“தரமான மருத்துவ வசதி அளிப்பதாக அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வரை உங்களுக்குத் துணையாக இருப்போம்” என்றோம். “இந்தப் போராட்டம் மட்டும் இல்லையென்றால், இந்த அளவிற்குக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்” என்றார் அந்தத் தாய்.
நாங்கள் வரும்வரை காத்திருந்த விடுதிக் காப்பாளர், எமது தோழர்களைச் சந்தித்து “நீங்கள் என்னைச் சந்தித்துச் சென்ற 10 வது நிமிடம் அமைச்சரும் அதிகாரிகளும் வந்தார்கள். எப்போது பார்வையிடுவது என்றாலும் 5 – 10 நிமிடம் தான் நடக்கும், ஆனால் இன்று ½ மணி நேரம் அமைச்சரும், அதிகாரிகளும் பார்வையிட்டனர். கட்டிடம் மேற்கூரை இடிந்த இடத்தில் பூச்சுவேலைகளைப் பார்வையிட்டவர்கள் கொடியில் ஏன் துணிகள் காய்கின்றன. என்ன இது எனச் சத்தம் போடுகின்றனர். குப்பைத் தொட்டியே தராத இவர்கள் குப்பையாக இருக்கிறது என்று குறை சொல்லுகிறார்கள். மாணவர்களைப் பராமரிக்க போதிய காப்பாளர்களை அரசு நியமிப்பதில்லை. இப்போது கூட பார்வையிடச் சென்ற அமைச்சர், படுத்திருந்த மாணவியிடம் என்ன ஆச்சு என்றதற்கு , சளி பிடித்துள்ளது என்று அந்த மாணவி பதில் அளித்ததும், என்ன கவனிக்கிறீர்கள் என்று சத்தம் போட்டுவிட்டுச் சென்றார். ஆனால் நான் இரண்டு நாட்களாக இந்த மாணவிகளுடனேயே தான் இருந்து வருகிறேன். இதையெல்லாம் இந்த அமைச்சரும், அதிகாரிகளும் கண் திறந்து பார்ப்பதில்லை” என்று அவரது ஆதங்கத்தைக் கொட்டினார்.
“இறுதியாக இந்த விடுதி வேப்பேரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விடுதிக்கு இடமாற்றம் இன்னும் 2, 3 நாட்களில் செய்யப்படும் என்று உறுதி அளித்துவிட்டுச் சென்றார்” எனக் கூறினார்.
இந்த அரசே இப்படித்தான் செயல்படுகிறது, பிரச்சனை என்று வராதவரை அதைப்பற்றி ஒன்றும் கண்டு கொள்வது கிடையாது. பிரச்சனை ஏற்பட்டால் உடனே கீழ்நிலை அதிகாரிகளைத் தண்டிப்பது என்று செய்து தற்காலிக கண் துடைப்பு நாடகங்களை நடத்துகிறது. இராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், “நான் தினமும் இந்த வழியாகத் தான் போகிறேன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே” என்று நைச்சியமாக பேசுகிறார். ஏன் இவர் தினமும் வீட்டுக்கு போகும் வழிதானே, இவரது தொகுதிக்குட்பட்ட விடுதிதானே, ஒரு நாள் இவர் எட்டிப் பார்த்து இருக்கலாமே!
நமது போராட்டங்கள் தான் போயஸ் தோட்டத்து காவலர்களையும் எருமைத் தோல் அதிகாரிகளையும் மக்களைச் சந்திக்க அழைத்து வந்திருக்கிறது. ஆம் எண்ணிக்கை என்பதை விடவும் போராட்டத்தின் தலைமை யாரிடம் இருக்கிறது, புரட்சிகர அமைப்புகளிடமா? அல்லது ஓட்டுப் பொறுக்கி அமைப்புகளிடமா? என்பது தான் கேள்வி. மருத்துவமனையில் அமைச்சர் பயந்து போகக்காரணம் எண்ணிக்கை இல்லை. நமது அரசியல் பின்புலமே வலிமை.
இதை ஒரு தற்காலிக வெற்றியாகத் தான் பார்க்கிறோம். அனைத்து அரசுவிடுதிகளையும் சீரமைக்கும் வரையிலும் அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்கும் வரையில் எமது போராட்டங்கள் தொடரும்.
மாணவர்களே! இளைஞர்களே! உழைக்கும் மக்களே! புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள்வீர்!
தாழ்த்தப்பட்ட விடுதி மாணவர்களே!
- பாழடைந்துள்ள தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை உடனடியாக சீரமைப்பு செய்ய மாணவர் கமிட்டிகளை கட்டியமைப்போம்!
- வீதியில் இறங்கி போராடுவோம்!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்தி பேரணி, ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675
அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?
சென்ற வார தினகரன் நாளிதழின் இலவச இணைப்பான வசந்தத்தில் தமிழக ஆர்.எஸ்.எஸ்சின் ஒரே ”அறிவுஜீவி”யான அரவிந்தன் நீலகண்டனைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது (காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல). அக்கட்டுரையின் குரல் என்னவோ அவரது மனைவி ஃபன்ஷியா தானியலுடையதுதான் என்றாலும் அது அரவிந்தின் பெருமையையே பேசுவதால் அதனை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஒரு தீவிர இந்துத்துவவாதி, 14 வயதில் ஷாகா பயிற்சிக்குப் போனவரான அரவிந்தன் தனது ப்ரொட்டஸ்டண்ட் கிருஸ்தவ மனைவிக்கு முழுமையான மத சுதந்திரம் வழங்கியிருப்பதாக சொல்லி இதுதான் உண்மையான மதநல்லிணக்க வாழ்க்கைக்கு இலக்கணம் என்று அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்.
சங்கப்பரிவாரத்தைப் பற்றிய எந்த அறிவுமில்லாத ஒருவன் இக்கட்டுரையின் மூலம் அரவிந்தன் நீலகண்டனைப் பற்றி புரிந்துகொள்ளப் போவதில்லை, அது அவனுக்கு அனாவசியம். ஆனால் அவர் வழியே ஆர்.எஸ்.எஸ்சை புரிந்துகொள்வான் என்பதுதான் மிகவும் அபாயகரமானது. மேலோட்டமான பார்வையில் தினத்தந்தி குடும்பமலர் பாணியிலான அந்த கட்டுரையில் என்ன பிரச்சினை என்று சிலருக்குத் தோன்றலாம். ஆயினும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பத்திதான் நமக்கு எச்சரிக்கை சமிஞ்சையை கொடுக்கிறது.
அரவிந்தனின் மத நம்பிக்கைகையை ஃபன்ஷியா மதிக்கிறார், பன்ஷியாவின் மத நம்பிக்கையை அரவிந்தன் மதிக்கிறார் என விளக்கும் அக்கட்டுரை அதன் பிறகு கீழ்கண்டவாறு நீள்கிறது.
இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றாலே மதவெறியர்கள்… பிற மதத்தை இழிவுபடுத்துபவர்கள் என்ற கருத்து பொதுத்தளத்தில் உருவாகியிருக்கும் சூழலில். மதவெறியர்கள் வேறு,… அவர்கள் எல்லா மத்த்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷக்கிருமிகள். காதலை எதிர்ப்பதும் இவர்கள்தான். சமூகத்தை சீரழிப்பதும் இவர்களேதான். இவர்களுக்கும் உண்மையாகவே தங்கள் மதத்தை நேசிப்பவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என தங்கள் வாழ்க்கை மூலம் நிரூபித்து வருகிறார்கள்.
இங்குதான் இக்கட்டுரையின் முக்கியமான பிரச்சாரம் இருக்கிறது. இந்துத்துவாவாதிகள் மதவெறியர்கள் இல்லையா? பிறமதத்தை இழிவுபடுத்துவதுதானே இவர்களது தலையாய பணி? சொல்லப்போனால் அந்த இழிவு படுத்தல் பல நூறு சிறுபான்மை மக்களை கொல்லும் ஒரு வரலாற்று நடைமுறை. ஆனால் தவறுதலாக பொதுத்தளத்தில் இப்படியான கருத்துகள் உருவாகிவிட்டதாக எழுதுவதன் உள்நோக்கம் என்ன?
இந்து மதத்தில் வேண்டுமானால் மதவெறியர்கள், மதநல்லிணக்க வாதிகள் இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். (அதுவே உண்மையில் பிரச்சினைதான். ஏனெனில் இந்துமத்தின் ஆன்மாவே சாதி என்பதால் அங்கே சமத்துவத்தின் வாசனைக்கு கூட வழியில்லை.) ஆனால் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் ஒருவர் நல்லவர் என்றால் எவ்வளவு அயோக்கியத்தனம். ஆக சங்கபரிவாரம் எனும் பயங்கரவாதிகளை அரவிந்தன் நீலகண்டனது காதல் மனைவியின் முகத்தை வைத்து நல்லவர்கள் என்று காட்டுகிறார்கள் தினகரனது இலவச இதழ் தயாரிப்பாளர்கள்.
இக்கட்டுரை மூன்று கோணங்களில் புரிந்துகொள்ளப்படுவதற்கான வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்குகிறது. அரவிந்தன் நீலகண்டன் ஒரு மதநல்லிணக்கவாதி, அவரது மனைவி ஃபன்ஷியா ஒரு மதநல்லிணக்கவாதி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஒரு மதசகிப்புத்தன்மையுள்ள இயக்கம். காவி பயங்கரவாதிகள் இதனை ஒரு ஆதாரமாக பொதுவெளியில் வைக்கும் வாய்ப்பு 100 சதவிகிதம் உண்டு. ஆகவே அரவிந்தினனின் காதல் வாழ்வை நாம் விவாதத்துக்கு உட்படுத்தவேண்டிய தேவை தவிர்க்க இயலாததாகிறது.
ஆர்.எஸ்.எஸ் பார்வையில் இந்தக் காதல் அவர்களது மதவெறி கொள்கைக்கு முரணானது அல்ல. காரணம் குஜராத் கலவரத்தை கண்டிக்காத ஒரு கிருஸ்தவ இந்தியனும், பாபர் மசூதி இடிப்பை கண்டுகொள்ளாத ஒரு இசுலாமிய இந்தியனும் அவர்களுக்கு ஏற்புடையவர்களே. கோல்வால்கரது விதிகளின்படி இவர்களை இந்துக்களாகவே கூட ஏற்றுக்கொள்ள முடியும். அதாவது அல்லாவையோ, ஏசுவையோ தொழுவது பிரச்சினையில்லை. ஆனால் அந்த தொழுகைக்காரர்கள் இந்த நாட்டின் பண்பாட்டை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சரி, அந்த பண்பாடுதான் என்ன?
ராமன் இந்த நாட்டின் தேசிய புருஷன், சதி மாதாவை போற்றுதல், பசுவை வெட்டி உண்ணாமல் தொட்டு வணங்குதல், ஜகத்குருவை அங்கீகரித்தல், என்று இந்த பண்பாடு ஆரம்பித்து காத தூரம் பல நூறு விதிமுறைகளோடு விரிந்து கிடக்கிறது. இதன்படி காளி, துர்கை என்று வரும் வந்தே மாதரத்தை கூட ஒரு முசுலீம் பாடித்தான் ஆக வேண்டும்.
ஒருவேளை அரவிந்தன் வீட்டுப்பெண் ஒருவர் இந்த இந்து ராஷ்ட்டிர காவாலித்தன்ங்களை எதிர்த்தால் அவர்தான் ஆர்.எஸ்.எஸ்சின் எதிரியாவாரே தவிர ஆர்.எஸ்.எஸ்காரரை ஏற்றுக்கொள்ளும் ஃபன்ஷியா அவர்களுக்கு எதிரியல்ல. இந்த அடிப்படையில்தான் முக்தர் அப்பாஸ் நக்வி பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார். கீதையை ஆராதித்து காவி தீவிரவாதத்தை கண்டுகொள்ளாத அப்துல் கலாமை இவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆகவே அரவிந்தனின் கல்யாணத்தில் ஆர்.எஸ்.எஸ் முரண்பட அவசியமேயில்லை.
இணையத்தை பாவிப்பவர்களால் அரவிந்தனையும் ஆர்.எஸ்.எஸ்சையும் தனித்தனியே பார்க்க முடியாது என்பதால் மேற்சொன்னவை அவருக்கும் பொருந்தும். இருப்பினும் வேறு சில அம்சங்களும் நம் பரிசீலனைக்கு உகந்தவையே. உயர் மத்தியதர வகுப்பினரின் பார்வையில் வர்க்கமும் சாதியும்தான் முதலில் வரும். அனேகமாக எல்லா மதங்களிலும் பெண் இரண்டாம்பட்சமே, அவர்கள் தங்கள் சாதி பட்டப்பெயரைகூட திருமணத்துக்குப் பிறகு சுமக்கமுடியாது.
ஆணின் சாதியே அடுத்த தலைமுறைக்கு அடையாளமாகும் என்பதால் தனக்கு நிகரான சாதி மற்றும் வர்கப் பின்னணியுள்ள ஒரு வேற்றுமதப் பெண்ணை ஆண் மணப்பதற்கு உரிய ‘நெகிழ்வு’த்தன்மையை இந்து மதம் கொண்டிருக்கிறது. ஐயர், ஐயங்காரையோ, ரெட்டி நாயுடுவையோ, முதலியார் கொங்கு கவுண்டரையோ, குமரி மாவட்ட வேளாளர் குமரி மாவட்ட பணக்கார நாடாரையோ மணந்து கொள்வதில் பார்ப்பனியத்திற்கு பிரச்சினையே இல்லை.
குமரி மாவட்டத்தில் நாடார் சாதி மக்கள் இந்து, கிறிஸ்தவ மதங்களில் இருந்தாலும் திருமண சம்மந்தம் சர்வ சகஜம். இருப்பினும் மண்டைக்காடு கலவரத்திற்கு பிறகு இதையே பிரச்சினைக்குரிய ஒன்றாக மாற்றிவிட்டார்கள் சங்கபரிவார இயக்கத்தினர். எனினும நாடார் தலித் திருமணமோ, மீனவர் நாடார் திருமணமோ, நாஞ்சில் நாட்டு வேளாளர், ஆசாரி திருமணோ இங்கு எப்போதுமே சாத்தியமில்லை.
இந்த பின்னணியில் பார்க்கையில் அரவிந்தனின் திருமணம் இரண்டு பேராசிரியர் குடும்பங்களுக்கிடையேயான இரு கம்ப்யூட்டர் பட்டதாரிகளின் திருமணம் அவ்வளவே. அரவிந்தனின் மனைவியின் செயல்பாட்டிலும் முற்போக்கு அம்சமென்று ஏதுமில்லை. அவரது கணவரின் மதவெறிப் படைப்புக்கள் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அவர் கொடுத்த பைபிள் படிப்பு சுதந்திரத்தை கிடைத்தற்கரிய பேறாக கொண்டாடும் டிபிகல் இந்து கலாச்சாரப் பெண்ணாகவே அவர் காட்சியளிக்கிறார். மேலதிகமாக இந்தியாவில் சிறுபான்மை மக்களை வேட்டையாடும் ஒரு கூட்டத்தின் உறுப்பினரை மானே தேனே என்று வியந்து போற்றுமளவுதான் அவரது சமூக உணர்வு தரந்தாழ்ந்து இருக்கிறது.
ஆகவே இத்தம்பதிகள் உதாரண மனிதர்களாவது அவர்களது சமூகப் பாத்திரத்தின் மூலம்தான் சாத்தியம். வீட்டுக்குள் அனுசரித்துப்போகும் இயல்பில் மெச்சிக்கொள்ள ஏதுமில்லை. கோயிலில் ஆடு கோழி வெட்டக்கூடாது என சட்டமியற்றிய ஜெயலலிதா தன் வீட்டு நாய்களுக்கு தினசரி எட்டுகிலோ ஆட்டுக்கறி வாங்கியதாக குன்ஹாவின் தீர்ப்பு சொல்கிறது. நாய்க்கு கறி போட்டதை வைத்து ஜெயாவை மதிப்பிடுவது சரியாக இருக்குமா?
அரைகோடி யூதர்களை கொன்றொழித்த ஹிட்லர் தனது காதலியை மதிக்கும் விசயத்தில் ஒரு குறையும் வைத்தவரல்ல. ஈவாவின் பார்வையில் ஹிட்லர் மகத்தான மனிதராகவே இருப்பார். அதைவைத்து மட்டும் அவரை உதாரண மனிதராக காட்ட முடியுமா? இல்லை மஹிந்த ராஜபக்சே கூட தனது மனைவியை ஒய்யாரமாக நடத்துகிறார், கருணைக் கடலே என ஆராதிக்கத்தான் முடியுமா?
அப்பாவிகளை சுட்டுத்தள்ளும் ராணுவத்தினர் முதல் அடித்துக்கொல்லும் போலீஸ்காரர்கள் வரை எல்லா குற்றவாளிகளும் தமது குடும்பத்தினர் பால் அன்பு கொண்டேராகவே இருக்கிறார்கள். இது குறித்து ஹாலிவுட் படமான பாடி ஆஃப் லைஸ்-ல் வரும் சிஐஏ அதிகாரியின் வாழ்க்கையை சொல்லலாம். வினவில் வெளிவந்த இந்த பட விமரிசனத்தை வாசகர்கள் படித்து அறியலாம். இந்த கோணத்தில் பார்த்தால் உலகின் ஆகப்பெரிய கிரிமினல் கூட உதாரண மனிதனாகிவிடக் கூடும்.
ஆர்.எஸ்.எஸ்சின் செயல்பாடுகள்தான் நாடெங்கும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று லட்சக்கணக்கிலான மக்களை அகதிகளாக்கியது, இன்றுவரை அது தொடர்கிறது. இந்த இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளர் மனைவி பைபிள் படிக்க அனுமதிக்கிறார் என்பதை பரிகாரமாக கருதுவதே அநீதி. இதனை எப்படி உதாரண வாழ்வாக கருதுவது? வேசிக்கும் விலைமகளுக்கும் வித்தியாசம் தேட இயலுமாயின் இந்துத்துவவாதிக்கும் மதவெறியனுக்குமான வித்தியாசத்தை நாம் தேட முடியும்.
ஆனால் இரண்டும் வேறு வேறுதான் என சத்தியம் செய்கிறது தினகரன். அதற்கான உதாரணமாக அரவிந்தன் நீலகண்டன் காட்டப்படுகிறார். அந்த தம்பதிகள் வாழ்க்கை இந்தியர்கள் அனைவருக்குமான பாடம் என்கிறது தினகரன் ஞாயிறு இணைப்பின் (9/11/2014) அட்டைப்பட வாக்கியம். இந்த உதாரண புருஷரின் மத நல்லிணக்கத்தை தெரிந்துகொள்ளலாமென ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் நடத்தும் தமிழ்ஹிந்து இணையதளத்தை பார்த்தால் மாற்று மதத்தவர் மீதான அரவிந்தரின் அன்பு கரைபுரண்டோடுகிறது. அதில் அரை ஸ்பூன் மட்டும் கீழே…
இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து பிரிட்டிஷாரை எதிர்த்தனர். இந்துக்கள் இந்தியாவின் விடுதலைக்காக எதிர்த்தார்கள். இஸ்லாமியர்கள் துருக்கியில் கிலாபத்தை மீண்டும் நிறுவுவதற்காக எதிர்த்தார்கள்.
அன்புள்ள மதச்சிறுபான்மை சோதரரே நீங்கள் பத்திரமாக கிளைகளில் அமர்ந்திருக்கும் இப்பெருமரத்தின் வேர்களை அந்நிய பண உதவியுடனான மதமாற்றம் எனும் கோடாலியால் வெட்டாமல் இருங்கள்… உங்கள் வருங்கால சந்ததிகளுக்காகவேனும்….
இந்த வக்கிர மனநிலை ஓர் இறையியலாகவே ஆபிரகாமிய மதங்களின் மூலம் அந்த மத மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது. (அரவிந்தனின் கட்டுரைகளில் இருந்த மிகச்சில உதாரணங்கள்)
இருந்தாலும் ஒரு இந்துத்துவவாதி தனது மனைவிக்கு இத்தகைய மத சுதந்திரத்தை வழங்கியிருப்பது பாராட்டத்தக்க அம்சம்தானே எனும் கேள்வி எழக்கூடும். ஆனால் இது பாராட்டுக்குரிய அம்சமல்ல. அரவிந்தன் வீட்டில் மனைவியின் மத உரிமையை மதிக்கிறார், அவருக்கு அசைவ உணவு வாங்கித் தருகிறார், அவர் பைபிள் படிப்பதை அனுமதிக்கிறார் என மேலோட்டமாக படிக்காமல் சற்று நின்று நிதானித்து பாருங்கள்.
அரவிந்தன் நீலகண்டனது சாதி என்ன, நமக்குத் தெரியவில்லை. அவரது குடும்பம் ஆச்சரமான சைவ உணவு தீவிரவாதிகள் என்பதால் நிச்சயம் சைவ உணவை புண்ணியமாகக் கொண்ட ஏதோ ஒரு “உயர்” சாதி என்று தெரிகிறது. இத்தகைய சாதிக்காரர்கள் அசைவ உணவு சாப்பிடும் மருமகளை எப்படி நடத்துவார்கள் என்பதை நாவலாக எழுதுமளவு எழுத்தாளர் நாஞ்சின் நாடனால் சொல்ல முடியும். நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் எனும் ஆதிக்க சாதியினர் அங்கே எப்படி தலித்துக்களை நடத்துவார்கள், தமது சாதிப்பெருமையை எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை.
இந்த பின்னணியில் சைவ உணவு சாதிக்கரரான அரவிந்தன் நீலகண்டன் தனது காதல் மனைவிக்கு அசைவ உணவு வேண்டுமென்றால் வெளியே ஓட்டல்களில் வாங்கித் தருவாராம். ஒரு உண்மையான ஜனநாயகவாதி என்றால் தனது மனைவியின் உணவுப் பழக்கத்தை மதித்து வீட்டிலேயே சமைப்பதை வலியுறுத்த வேண்டும். இதில் அனுமதி என்று வந்தாலே அது ஆணாதிக்கப் பிச்சை என்பது வேறு விசயம். ஆனால் இங்கே அது கூட இல்லை.
ஒரு வேளை நீலகண்டனது பெற்றோர் அதை விரும்பாவிட்டால் அவர்களுக்கு ஜனநாயகம் குறித்து வகுப்பு எடுத்து வலியுறுத்த வேண்டும். மறுத்தால் அவர்களையோ இல்லை தானோ வீட்டை விட்டு வெளியற்றவோ, வெளியோரவோ செய்ய வேண்டும். இதெல்லாம் செய்யாமல் நீலகண்டன் அவர்கள் வீட்டில் தனக்கு பிடித்த தயிர் சாதத்தை நக்குவாராம். காதல் மனைவிக்கு மட்டும் ஓட்டலுக்கு சென்று எலும்பு கடிக்க ஏற்பாடு செய்வாராம்.
இவ்வளவிற்கும் அவரது மனைவி வீட்டில் இவருக்கென்று சைவ உணவு சமைத்து கொடுப்பார்களாம். ஆக அங்கேயும் இவர் சமத்துவமாக நடந்து கொள்ளவில்லை. இருந்திருந்தால் பீஃப் பிரியாணியில் பீசை வைத்து விட்டு சோற்றையாவது உண்டிருக்க வேண்டும், குறைந்த பட்சம். மாறாக நீலகண்டனது மாமியார் இவருக்கென்றே வெஜிடெபிள் பிரியாணி சமைத்துக் கொடுப்பாராம்.
ஒரு வேளை இந்த ஓட்டல் சமத்துவமே போதுமென்று புல்லரிப்பவர்கள் சற்று யோசித்து பாருங்கள்.
அவர் உயிரைகொடுத்து ஆதரிக்கும் இயக்கம் இசுலாமியர்களை கொன்று குவிக்கிறது, பாதிரியாரை குழந்தைகளோடு எரிக்கிறது, கன்னியாஸ்திரிகளை வன்புணர்ச்சி செய்கிறது, பிள்ளையார் ஊர்வலத்தில் குடிகாரர்களை வைத்து மசூதிகளுக்கருகே ரவுடித்தனம் செய்கிறது. வீட்டு காம்பவுண்டுக்குள் மத நல்லிணக்க முகமும்(அதுவும் ஓட்டல் நல்லிணக்கம்) வெளியே வந்தால் நல்லிணக்கம் எனும் கருத்தின் மீதே வெறுப்பு கொள்ளும் முகமும் ஒருவருக்கு இருக்குமாயின்… அவரது நிஜமான முகம் எது? ஒன்று நிஜமெனின் இன்னொன்று நடிப்பென்றாகிறது. கணவர் பாத்திரம் பொய்யானதா அல்லது காக்கி டவுசர் பொய்யா?
இதை இருதுருவ மனநிலை பிறழ்வு என சொல்லி கரிசனம் காட்டவும் முடியாது. பைபோலார் வந்தவர்கள் சிலகாலம் ஒருவிதமாகவும் அடுத்த சில நாட்கள் அதற்கு நேரெதிரான இயல்புடனும் இருப்பார்கள். அங்கே காலம்தான் மனநிலையை மாற்றுமேயன்றி காம்பவுண்ட் சுவரல்ல. அவர் புரிதலின்றி வானரப்படையில் இருக்கிறார் என்றும் சொல்ல முடியாது. அவர் எழுதிய கட்டுரைகளில் இருக்கும் வன்மத்தை விடுங்கள்… வினவில் மனோஜ் குமார் எனும் தலித் இளைஞரிடம் பிடிபட்டார் அல்லவா, அப்போது தனது பார்ப்பன ஜிக்களை விட்டுக் கொடுக்காமல் எப்படியெல்லாம் பேசியிருக்கிறார் என்று பாருங்கள்.

மனைவிக்கு ஓட்டல் கறி சாப்பிடும் உரிமை கொடுக்கும் நபர் மாட்டுக்கறி சாப்பிடும் மக்களின் உரிமை மீது வன்மத்தை கக்கும் இயக்கத்தில் மனதாரா இயங்குவது உண்மைதானே? இன்னொரு மதத்துப் பெண்ணை காதலித்து வீட்டை எதிர்த்து கைப்பிடிக்கும் உரிமையை பயன்படுத்திய நபர், முஸ்லீம்கள் இந்துப் பெண்களை காதலித்தால் லவ் ஜிகாத் என கொச்சைப்படுத்தி அதனை தீவிரவாதமாக சித்தரிக்கும் அசிங்கத்தை எப்படி செய்கிறார்? மனைவியோடு கிருஸ்துமஸ் கொண்டாடும் மனிதர் எப்படி கிருஸ்துவர்கள் எல்லோரும் வக்கிரம் பிடித்தவர்கள் என எழுதுகிறார்?
இதற்கான பதில் இந்துத்துவாவின் வரலாற்றிலேயே இருக்கிறது. தங்கள் மேலாதிக்கத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் மராட்டிய சித்பவன பார்ப்பனர்களுக்கு இருந்தது. இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வைக்க வேண்டிய தேவை ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. இந்த இரண்டு தேவைகளுக்குமான கள்ள உறவிற்கு பிறந்த குழந்தைதான் ஆர்.எஸ்.எஸ். அந்தமான் சிறையில் இருந்து தன்னை விடுவிக்கச் சொல்லி வெள்ளையனின் காலில் விழுந்தவர் சாவர்க்கர். அவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்திய இளைஞர்களை சேரும்படி வலியுறுத்தியவர்.
ஆனால் இதே சாவர்க்கர் ஒருகாலத்தில் மொகலாய அரசின் பிறைக்கொடியை தேசியக்கொடி (எரிமலை எனும் அவர் எழுதிய நூல்) என்று சொன்ன வரலாறும் இருக்கிறது. தனக்கு ஆதாயம் கிடைக்குமாயின் கழுதையைக் கூட அப்பா என்றைழைக்கும் இக்கும்பல் ஆதாயமில்லாவிட்டால் அப்பாவைக்கூட கழுதை என்று சொல்லும். எனினும் இந்த முரண்பாடுகள் பார்ப்பனியத்தின் நலனுக்காக செய்யப்படும் சாமர்த்தியமே அன்றி ஒரு போதும் கொள்கை சமரசம் என்று பார்க்க கூடாது. அல்லது காலந்தோறும் பார்ப்பனியம்.
பெண்களை தெய்வமாக வணங்குவதாக சொல்லிக்கொள்ளும் இந்த கலாச்சாரக் காவலர்கள்தான் ஒருகாலத்தில் தம் சொந்த சாதி கைம்பெண்களை மொட்டையடித்து மூளியாக்கி அழகுபார்த்தவர்கள் (மொட்டையடித்தால் அழகு போய்விடும், பிறகு எப்படி இன்னொரு துணையை தேடுவாள் எனும் அறிவார்ந்த இந்து ஞானத்தின் கண்டுபிடிப்பு). இவர்கள் முஸ்லீம்களை இந்துக்களின் எதிரிகள் என வெறித்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்ட காலகட்டத்தில் காசியில் மட்டும் சுமார் 5 லட்சம் இந்து விதவைகள் அநாதைகளாக விடப்பட்டிருந்தார்கள். சாப்பாட்டுக்கு வழியின்றி அதில் பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இன்றைக்கும் உ.பி பிருந்தாவன் நகரில் கைவிடப்பட்டு அநாதையாக திரியும் இந்து விதவைகள் எண்ணிக்கை நாற்பதாயிரம்.
இத்தகைய இயக்கத்தின் பிரதான் பண்டிட் ஒருவர் இரட்டைவேடம் பூணுவதில் வியப்படைய எதுமில்லை. ஆர்.எஸ்.எஸ் சின் ரத்த வேட்கைக்கும் அரவிந்தனின் அடிப்படைவாதத்துக்கோ அவரது வீட்டுக்குள் இருப்பதாக??? சொல்லப்படும் மத நல்லிணக்கம் பரிகாரமாகிவிடாது.
நாடறிந்த இந்து வெறியனான சுப்ரமணியசாமியின் மகள் சுகாசினி ஹெய்தர் மணந்திருப்பது ஒரு மேட்டுக்குடி முசுலீமைத்தான். இந்த சம்மந்தம் சு சாமியின் மதவெறியை கொஞ்சம்கூட மாற்றிவிடவில்லை. அனேகமாக தினகரனின் அடுத்த உதாரண புருஷர் சூச்சூஸ்வாமியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
குஜராத் கலவரத்தின்போது கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதிகளின் விவரங்களை கையில் வைத்துக்கொண்டு அதில் கவனமாக இந்து அல்லாதவர்களை மட்டும் தனியே கொலை செய்த இந்துத்துவ வெறியர்களின் செயலை நாமும் மறந்துவிட முடியாது. அரவிந்தின் நலன்விரும்பிகளும் மறந்துவிடக்கூடாது.
உண்மையான மதநல்லிணக்கவாதிகள் நம் அருகே ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். பள்ளி காலத்தில் ஒரு பிராமண நண்பன் வீட்டுக்கு சென்றபோது தரப்பட்ட காபியை அன்னாத்தி குடிக்கச்சொன்னார் நண்பனது அப்பா. அப்போது அவனது அம்மா இடைமறித்து நீ வாய் வச்சே குடிடா என்று சொல்லிவிட்டு குடித்து முடிக்கும் வரை அருகில் நின்றார். அவருக்கு மத நல்லிணக்கம் எனும் வார்த்தைகூட அப்போது தெரிந்திருக்காது. ஆனாலும் தன் வீட்டில் தனது ஆச்சாரத்தைக் காட்டிலும் விருந்தாளியின் சுயமரியாதை முக்கியம் என கருதிய அவரது இயல்பில் இருக்கிறது மத நல்லிணக்கம்.
கோவையில் நடந்த கலவரத்தின்போது முஸ்லீம்களின் கடைகள் சூறையாடப்பட்டன. அப்போது உச்சகட்ட இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம் கோவையெங்கும் செய்யப்பட்டிருந்தது. கோட்டைமேட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்படுவதாகக்கூட வதந்திகள் பரப்பப்பட்டன. ஆகவே அந்த சூறையாடலில் சாதாரண மக்களும் தயக்கமின்றி பங்கேற்றார்கள். அப்போதும் அதில் பங்கேற்காத, பங்கேற்கச்சென்ற அண்டைவீட்டு நபர்களை தடுத்த இந்து ஒருவரை நான் கோவையில் சந்தித்திருக்கிறேன். பொழப்பு கொடுத்த ஊர்ல எப்படிங்க திருட முடியும் எனும் ஒற்றைக் கேள்வியை அதற்கான காரணமாக முன்வைத்தார் அவர். அந்த எளிய மனிதனின் அற உணர்வை மத உணர்வால் வெல்ல முடியவில்லை.
இப்படியான எளிய மனிதர்களிடத்திலும் மிக அரிதாக ஹேமந்த் கர்கரே போன்ற அதிகாரிகளிடத்திலும் மத நல்லிணக்கம் இருக்கிறது. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ள நாம் எது மதவாதம் என்பதையும் யாரெல்லாம் மதத்தீவிரவாதி என்பதையும் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். வெறுமனே தினகரனை படித்தால், அல்லது தினகரனது இலவச இதழ் தயாரிப்பாளர்கள் சொல்வது போல படித்தால் அரவிந்தன் நீலகண்டன் மட்டுமல்ல அவரது ஆசானான ஹிட்லர் கூட நமக்கு காந்தியாகத்தான் தெரிவார்.
கண்ணிருப்பவர்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். கோபம் கொள்ளுங்கள்!
– இசையவன்.
மக்கள் தொகையை குறைக்க பெண்களைக் கொல் !
சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு சுகாதார நலத்துறை சார்பாக பிலாஸ்பூர் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி நடத்தப்பட்ட கருத்தடை முகாமில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 83 பெண்களில் 13 பேர் மரணமடைந்துள்ளனர்; சுமார் 50 பேர் கவலைக்கிடமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆர்.கே குப்தா என்ற அரசு மருத்துவரின் தலைமையில் நடந்த இந்த கருத்தடை முகாமில், ஐந்து மணி நேரத்திற்குள் 83 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், தமது முதல் கட்ட விசாரணையில் அறுவை சிகிச்சைகள் நடந்த கட்டிடம் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததையும் குறைந்தபட்ச சுகாதார வசதிகள் கூட இல்லாமல் இருந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள, “ஒரு மருத்துவர் ஒரு நாளில் முப்பது கருத்தடை அறுவை சிகிச்சைகள் வரை செய்யலாம்” என்ற அளவைத் தாண்டி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருப்பதும் மரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தமது முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் முடிவு செய்துள்ளனர். மேல் கட்ட விசாரணைகளைத் துவங்கியுள்ள காவல் துறை, தனது ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் மருத்துவர் குப்தாவை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மருத்துவர் தனது பணிக்காலத்தில் சுமார் ஐம்பதாயிரம் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்தவர் என்பதும், அவரது இந்த ‘சாதனைக்காக’ கடந்த குடியரசு தினத்தன்று மாநில பாரதிய ஜனதா அரசால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட குப்தா தனது தரப்பாக, தான் மேற்கொண்ட அறுவை சிகிச்சை முறையில் தவறுகள் ஏதும் இல்லையென்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் வழங்கப்பட்ட மருந்துகள் தரமற்றவை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும், அரசு சுகாதாரப் பணியாளர்கள் மூலமும் அறுவை சிகிச்சை முகாமுக்காக பெண்கள் திரட்டப்பட்டு அழைத்து வரப்பட்ட நிலையில் ஒரு மருத்துவர் என்ற முறையில் தான் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதே முறையென்றும், அதிக எண்ணிக்கையில் நடந்த அறுவை சிகிச்சைகளினாலோ தரமற்ற மருந்துகளினாலோ மரணங்கள் நிகழ்ந்திருந்தால் அதற்குத் தான் மட்டும் பொறுப்பல்ல என்றும் மாவட்ட நிர்வாகமும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

விநாயகனுக்கே ’பிளாஸ்டிக் சர்ஜரி’(!?) மூலம் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு நவீன விஞ்ஞானத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முன்னேறி விட்ட ’இந்துத்துவ’ இந்தியாவில் கருத்தடை அறுவை சிகிச்சைகளில் நடந்த தோல்வி சங்கபரிவாரத்தின் முகத்தில் சாணியைக் கரைத்து ஊற்றியுள்ளது. அதிலும் 2003 – 2012 காலகட்டத்தில் மட்டும் கருத்தடை அறுவை சிகிச்சையின் விளைவாக சுமார் 1500 பெண்கள் மரணித்துள்ளனர் என்கிறது அரசு கணக்கெடுப்பு ஒன்று.
2010-11ல் இருந்து 2013-14 காலட்டம் வரை மட்டும் 14,901 கருத்தடை அறுவை சிகிச்சைகள் தோல்வியுற்று அதில் 363 பெண்கள் இறந்துள்ளனர். வழக்கமாக இந்தச் சாவுகளை கண்டும் காணாமலும் கடந்து செல்லும் வட இந்திய ஆங்கில ஊடகங்கள் இந்த முறை வேறு டி.ஆர்.பி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கையிலெடுத்து நான்கைந்து நாட்கள் சாமியாடி விட்டு ஓய்ந்தன.
அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளைக் கூட நிறைவேற்ற வக்கற்று பெண்களை மரணத்தில் தள்ளும் ஒரு நாட்டிற்கு செவ்வாய் கிரக சுற்றுலா ஒரு கேடா என்று நாம் கேட்டால், ”ஒரே கிளிஷேவா பேசாதீங்க பாஸ்” என்று அதியமான், பத்ரி வகையறாக்கள் உள்ளிட்ட முதலாளித்துவ சொம்பு தூக்கிகள் ’ஜகா’ வாங்கக் கூடும். என்றாலும் “எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை யாருக்கும் கேக் கிடையாது” என்று ஆசான் லெனின் சொன்னதன் பொருளை நாங்கள் மட்டுமல்ல அரசின் புறக்கணிப்பால் சாவுக்கு வாக்கப்பட்ட சாதாரண மக்களும் கூட இந்த தருணத்தில் சரியாகவே புரிந்து கொள்வர்.

இது ஒரு புறமிருக்க, இத்தனை மரணங்கள் விளைந்த பின்னும் மத்திய அரசு தனது கருத்தடை திட்டங்களில் பிடிவாதமாக ஊன்றி நிற்கிறது. மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டு வர பெண்களின் உயிரைக் காவு வாங்கும் நடைமுறையைத் தவிர்த்து வேறு மாற்றுத் திட்டங்கள் குறித்து சிந்திக்கவில்லை. நாடெங்கும் அதிகாரப்பூர்வ சமூக நலப் பணியாளர்களை ( Accredited Social Health Activists – ASHA) நியமித்து பெண்களுக்கான கருத்தடை திட்டங்களை வெறி கொண்ட வேகத்தில் முன்னெடுத்து வருகிறது.
ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தவிர இதற்கென்றே இயங்கும் என்.ஜி.ஓ குழுக்களிடமும் கருத்தடை பிரச்சாரத்தையும், கருத்தடை முகாம்களுக்குப் பெண்களை இழுத்து வரும் பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கருத்தடை அறுவை சிகிச்சைக்கும் 1,500 ரூபாய் மருத்துவமனைக்கு வழங்கும் அரசு 30 கருத்தடை அறுவை சிகிச்சைகளுக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் கூடுதல் போனசாக 500 ரூபாய் அறிவித்துள்ளது. தவிர பெண்களை அழைத்து வரும் என்.ஜி.ஓ பணியாளருக்கு ஒரு ‘உருப்படிக்கு’ 150 ரூபாயும் மருத்துவருக்கு 75 ரூபாயும் சன்மானமாக நிர்ணயித்துள்ளது. அறுவை மேற்கொள்ளும் பெண்களுக்கு 600 ரூபாய் ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளது.
இது தவிர அரசு மருத்துவமனைகளுக்கும் ஆஷா பணியாளர்களுக்கும் தனித்தனியே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலக்கை அடைய முடியாத ஆஷா பணியாளர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்வது, சம்பளத்தை வெட்டுவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது அரசு. இவ்வாறு தனது கீழ்மட்ட உறுப்புகளை கசக்கிப் பிழிந்து நிறைவேற்றப்படும் ’இலக்குகள்’ எதார்த்தத்தில் அப்பாவிப் பெண்களின் மரணத்தில் முடிகிறது.

என்றாலும் இந்திய அரசு தனது மக்களின் கருவறுப்பதில் போதிய வேகத்தைக் காட்டவில்லை என்பதே ஏகாதிபத்திய நாடுகளின் மனக்குறை. இதற்காகவே மெலிந்தா பில் கேட்ஸ் அறக்கட்டளை, பிரிட்டிஷ் எய்டு போன்ற ஏகாதிபத்திய அறக்கட்டளைகள் நேரடியாக களமிறங்கியுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓ வலைப் பின்னல்கள் மற்றும் கீழ்மட்ட அரசு நிர்வாக அலகுகள் வரை ஊடுருவியுள்ள இந்த அறக்கட்டளைகள், கருத்தடை செய்வது குறித்தும் அதில் இலக்கை எட்டுவது குறித்தும் இந்தியாவுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் நடக்கும் பல்வேறு என்.ஜி.ஓ பணிகளுக்கு சுமார் 100 கோடி டாலர் (சுமார் ரூ 6,000 கோடி) நிதியை இறக்கியுள்ள மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை அதில் கணிசமான தொகையை கருத்தடை திட்டங்களுக்கென்று ஒதுக்கியுள்ளது. பிரிட்டிஷ் எய்டு தனது பங்காக சுமார் 16.6 கோடி யூரோ (சுமார் ரூ 1,250 கோடி) நிதியை கருத்தடைத் திட்டங்களுக்காகவே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் கருத்தடை அறுவை சிகிச்சைகளால் நிகழும் மரணங்கள் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் ஒரு பெரும் சூறாவளியைக் கிளப்பியது.
ஆங்கிலேயர்களின் வரிப்பணம் இந்திய அரசால் கட்டாய கருத்தடை செய்ய பயன்படுத்தப்படுவதாக இங்கிலாந்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இந்தாண்டின் துவக்கத்தில் குற்றம் சுமத்தி விவகாரத்தை அந்நாட்டு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றன. தாம் கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகளையோ கருத்தடை முகாம்களையோ ஆதரிக்கவில்லை என்றும், இதற்காக இங்கிலாந்தின் வரிப்பணம் செலவிடப்படுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அரசுத் தரப்பில் விளக்கங்களாக முன்வைக்கப்பட்டது.

என்றாலும், கருத்தடை திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வரும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ஒரிசா, சத்தீர்கர், பீகார், உ.பி, குஜராத், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இத்திட்டத்தின் நடைமுறை செயல்பாடு வேறுவிதமாகவே உள்ளது. 600 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும் என்று ஆசை காட்டியும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என்பதை மறைத்தும், பொதுவான மருத்துவ பரிசோதனைதான் என்று ஏமாற்றியும் பெண்களை அழைத்து வரும் ஆஷா பணியாளர்களும், என்.ஜி.ஓக்களும் படிப்பறிவற்ற ஏழைப் பெண்களைக் கருத்தடை முகாம்கள் என்று அழைக்கப்படும் மரண முகாம்களில் தள்ளி விடுகின்றனர்.
ஏன் இந்த வெறித்தனமான வேகம்?
நாடு எதிர்கொள்ளும் மொத்த பிரச்சினைக்கும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது தான் காரணம் என்கிற முதலாளித்துவ கண்ணோட்டமே முதலில் தவறு. நாட்டின் வளங்களை மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு அதிக மக்கள் தொகை ஒரு காரணமன்று – மாறாக, வளங்களின் வினியோகம் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனிநபர்களான முதலாளிகளின் கட்டுபாட்டில் இருப்பதும் அவர்களி லாப வெறியுமே மாபெரும் தடையாக நிற்கிறது.
மக்கள் தொகை அதிகரிப்பு என்பது சாதாரண மக்களைப் பொருத்தளவில் அவர்கள் சந்திக்கும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சிகளின் பட்டியலில் இல்லை. ஆனால், முதலாளித்துவ சமூகத்திற்கும் அதன் கட்டுமானத்தைக் காத்து முதலாளிகளின் நலன்களை உத்திரவாதப்படும் ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் இந்தியா போன்ற அல்லக்கை நாடுகளின் பிரதான கவலையாக மக்கள் தொகை அதிகரிப்பு இருக்கிறது. எனவேதான் வறுமை ஒழிப்பு, கல்விக்கான உத்திரவாதம், வேலைக்கான உத்திரவாதம், விலைவாசி உயர்வு, அடிப்படை சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட மக்கள் தொகையைக் குறைப்பதற்கான முக்கியத்துவத்தை பிரதானப்படுத்துகிறார்கள்.
ஏன் அவர்கள் மக்கள் தொகை அதிகரிப்பதைப் பற்றிக் கவலை கொள்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்சிலில் ஹென்றி கிஸ்ஸிங்கரால் 1974-ம் ஆண்டு முன்மொழியப்பட்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜெரால்டு ஃபோர்டால் 1975-ம் ஆண்டு அரசின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட NSSM 200 என்ற ஆய்வறிக்கையையும், அதன் பரிந்துரைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.
”தேசிய பாதுகாப்பு ஆய்வறிக்கை 200: உலகளாவிய மக்கள் தொகை வளர்ச்சியால் அமெரிக்க பாதுகாப்புக்கும் எல்லை தாண்டிய நலன்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் (NSSM200)” என்ற பெயரில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
மேற்படி அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கியமான பகுதிகளின் சாராம்சத்தை கீழே பார்க்கலாம் –
”அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வளர்ச்சியடையாத நாடுகளில் இருந்து அதிகளவில் தாதுப் பொருட்கள் தேவைப்படும். எனவே இந்நாடுகளின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளின் ஸ்திரத்தன்மை முக்கியமானதாகும்.
இந்நாடுகளின் அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் காரணமாகவோ, வன்முறை மற்றும் குடிமைச்சமூக போராட்டங்களின் காரணமாகவோ மூலப் பொருட்களின் விநியோகம் தடைபடலாம். மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சினை மட்டுமே இதற்குக் காரணம் இல்லையென்றாலும் பிரதான முக்கியத்துவம் வாய்ந்தது.
வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள இளைஞர்கள் நிலையற்றவர்களாகவும், தீவிரத்தன்மை கொண்டவர்களாகவும் தனிமைப்பட்டவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த இளைஞர்களை ‘நிறுவனங்களுக்கு’ எதிராகவோ ‘ஏகாதிபத்தியங்களுக்கு’ எதிராகவோ அல்லது பிற ‘அந்நிய தலையீடுகளுக்கு’ எதிராகவோ திசைதிருப்புவது எளிது. இதன் காரணமாக இந்நாடுகளில் இருந்து வளங்களையும் மூலாதாரங்களை அமெரிக்க பொருளாதார நலன்களுக்காக பெறுவது தடைபடக் கூடும்.

எனவே இந்நாடுகளின் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அமெரிக்காவின் நலன்களுக்கு முக்கியமானது. இதில் முக்கியமானது என்னவென்றால், அந்நாடுகளின் மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்பதற்கான நமது நடவடிக்கைகள் அவர்களது கவனத்தை ஈர்த்து நமது நோக்கங்களை அறிவிக்கும் விதமாக இருக்கக் கூடாது.”
இக்கட்டுரையின் இணைப்பில் உள்ள சுட்டியின் மூலம் அமெரிக்காவின் திட்ட அறிக்கையை முழுவதுமாக தரவிறக்கம் செய்து வாசிக்குமாறு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.
இந்தியாவில் கருத்தடை திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வரும் மாநிலங்களில் வடகிழக்கு மாநிலங்களும் மத்திய இந்தியாவின் மாநிலங்களும் குஜராத்தின் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுமே முன்னணியில் நிற்கின்றன. கருத்தடை அறுவை சிகிச்சைகளின் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையிலும் இந்தப் பகுதிகளே முன்னணி வகிக்கின்றன.
ஆக, நடந்து கொண்டிருப்பது ஒரு இனப்படுகொலை. காங்கிரசு ஆட்சியின் போது பன்னாட்டுக் கம்பெனிகள் மத்திய இந்தியாவின் வளங்களை சூறையாடிச் செல்ல தடையாக இருந்த பழங்குடி மக்களின் மேலும் மாவோயிஸ்டு புரட்சியாளர்களின் மீதும் பச்சை வேட்டைப் படுகொலைகள் என்ற உள்நாட்டு போரைத் தொடுத்திருந்த அதே வேளையில் பன்னாட்டு அறக்கட்டளைகளும் என்.ஜி.ஓ கைக்கூலிகளும் அதற்கு இணையாக சத்தமின்றி ஒரு இனப்படுகொலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் முன்னணியில் நின்றது பாரதிய ஜனதா ஆட்சி புரிந்த சத்தீஸ்கரும் குஜராத்தும் தான்.
முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் தமது பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பெண்களின் கருப்பை வரையிலும் தமது விஷக் கரங்களை நீட்டத் தயங்காதவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளனர்.

ஏகாதிபத்தியங்கள் தமது நேரடி நலன்களுக்காக இனக்கொலையில் இறங்கி நிற்கும் அதே நேரம், அதற்கான மருந்துகளில் கூட ஊழல் புரிந்து ஏகாதிபத்தியங்களின் நோக்கத்தை சுலபமாக்குகிறது இந்திய ஆளும் வர்க்கம். சத்தீஸ்கரில் கருத்தடை முகாமில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளில் எலி விஷம் கலந்துள்ளதை போலீசு விசாரணை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மருந்துகள் உள்ளூர் பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான உப்புமா கம்பெனி ஒன்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்பட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
கேட்கவே நெஞ்சம் பதறும் இந்தச் சம்பவங்களை இந்திய ஆங்கில ஊடகங்கள் தமது டி.ஆர்.பியை உயர்த்திக் கொள்ளும் வகையில் பின்னணி இசைக் கோர்வையுடன் மலினமான திரில்லர் கதை போல் விவரித்துச் செல்கின்றன. டைம்ஸ் நௌ தொலைக்காட்சி மருத்துவர் குப்தாவுக்கு “மரண மருத்துவர்” (Dr. Death) என்ற பட்டப் பெயர் அளித்துள்ளது. மற்றொரு வட இந்திய ஆங்கில ஊடகம் “பிலாஸ்பூரின் கசாப்புக்காரர்” (Butcher or Bilaspur) என்ற பட்டப் பெயரை அளித்துள்ளது.
மொத்த விவகாரத்தையும் மருத்துவர் குப்தாவின் தலையில் கட்டி ஒருசில நாட்கள் டி.ஆர்.பியை தேற்றிக் கொண்டபின் ஒட்டுமொத்தமாக ஊற்றி மூடிவிடும் திசையில் காய் நகர்த்துகின்றன ஜனநாயகத்தின் நான்காவது கழிப்பறையான முதலாளித்துவ ஊடகங்கள்.
”முதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும்” என்கிற முழக்கத்தை எமது அமைப்புகளின் போஸ்டர்களில் நீங்கள் படித்திருக்கக்கூடும். அந்த முழக்கத்தின் முதல் பகுதியை அவர்கள் நாளும் நாளும் நிரூபித்து வருகிறார்கள். முதலாளித்துவத்தின் வெற்றிச் சரித்திரத்தில் சத்தீஸ்கரில் மரணித்துப் போன 13 பெண்களின் பெயர்களும் இடம் பெற்று விட்டது. முதலாளித்துவ நிதிமூலதனக் கொடுங்கோன்மையை வீழ்த்தி எமது முழக்கத்தின் பிந்தைய பகுதியை நிகழ்த்திக் காட்டுவது மட்டுமே பரந்துபட்ட மக்களின் வாழ்க்கையை உத்திரவாதப்படுத்தும்.
– தமிழரசன்.
மேலும் படிக்க
- 11 women die after sterilisation surgeries in Chhattisgarh
- UK aid helps to fund forced sterilisation of India’s poor
- Built-in violence
- Sterilising Women To Death
- The Kissinger Report
- Death Toll Rises: Did Bill Gates & UK Pay For Sterilizations in India?
- Sterilsation deaths in Chattisgarh
- Rat poison chemical found in antibiotics
திருச்சியில் மோடியின் ‘தூய்மை’ இந்தியா திட்டம்
திருச்சியில் நரேந்திர மோடியின் ‘ தூய்மை ‘ இந்தியா திட்டத்திற்க்காக BJP கட்சியின் தொண்டர்கள் நகர் சுத்தி தொழிலாளர்களின் விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையை (02.11.14) கணக்கிட்டு ‘சுத்தம் செய்ய’ உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெருவிற்கு வந்தனர். வந்த 25 பேரில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மினிஸ்டர் சட்டையும் பார்த்த சாரதி வேட்டியும் உடுத்தியிருந்தனர். மற்றவர்கள் பேண்ட் சட்டையுடனும் தெருவிற்குள் நுழைந்தனர். அவர்கள் தெருவிற்குள் நுழைவதற்கு முன்பே அவர்கள் மேல் அடித்திருந்த “சென்ட்” தெருவிற்குள் நுழைந்தது.

புத்தம் புதிய விளக்குமாறு குச்சி (கை வலிக்காமல் இருக்க விளக்குமாறு குச்சியிலும் துணி சுற்றப்பட்டிருந்தது ) சட்டி, பையுடன் நவீன கேமிரா என ஆயுதங்களுடனும், நெற்றியில் செந்தூரமும், சந்தனமும் மணமணக்க தெருவைக் கூட்ட தயாரானார்கள். இவர்களைப் மக்கள் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர்.
சற்றும் எதிர்பாராத பாஜக காரர்களை பார்த்து மக்கள் கலை இலக்கியக் கழக தோழர். சீனிவாசன், “தெருவைக் கூட்ட தினமும் வருவீர்களா” என்று கேட்டதுமே உளற ஆரம்பித்தனர்.

“ம்… வருகிறோம்” என்றனர்.
“நாட்டை குப்பையாக்குவது யார் தெரியுமா?” என்று கேட்டதற்கு
“நாம்தான்” என்றனர்.
நமது தோழர், “நாம் என்று சொல்லாதீர்கள்; மோடி என்று சொல்லுங்கள், இல்லை என்றால் மோடியைப் பார்த்தே கேளுங்கள்” என்றார்.
உடனே அவர்கள் அனைவரும் கோரசாக பேச ஆரம்பித்து விட்டனர். சிலபேர் “ஏய், அவர் ம.க.இ.க காரர்” என்றதும் சற்று சுதாரித்துக் கொண்டனர்.
என்றாலும் நமது தோழர் அவர்களை விடுவதாக இல்லை.
“குஜராத்தில் பழைய குப்பையை உடைத்து அந்த துறைமுகத்தையே அசுத்தம் செய்ய வைத்தது யார்? தூய்மை இந்தியா பேசும் உங்க மோடி., போபாலில் விஷ வாயுவால் 23 ஆயிரம் பேர் இறந்து போனார்கள். 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பிறக்கும் குழந்தைகள் ஊனமாகத்தான் பிறக்கிறது. காரணம் இன்னும் அந்த ரசாயனக் கழிவுகள் அகற்றப்படவில்லை. அங்கு போங்க – துடப்பக்கட்டையோடு” என்றார்.
இத்தகைய எதிர்ப்பை எதிர்பார்க்காத பாஜக காரங்க, “இது தனி மனித ஒழுக்கம் பற்றிய பிரச்சினை. ஒவ்வொரும் மாறவேண்டும் என்று நாங்க சொல்லுகிறோம்” என்றனர்.
“தனிமனித ஒழுக்கம் என்று மக்கள் மீது பழி போடாதீங்க; காத்தையும், மண்ணையும் கெடுத்தது நீங்கள்தானே” என்று சத்தமாக பேசியதும் அக்கம் பக்கம் இருந்த மக்கள் அருகில் வந்து கூட ஆரம்பித்து விட்டனர். சரி வேறு இடத்திற்கு போகலாம் வாருங்கள் என்று கூட்டமாக கிளம்பிவிட்டார்கள் அடுத்த சூட்டிங்கிற்கு.
செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை.
தருமபுரி குழந்தைகள் மரித்தது எப்படி ?
கதிருக்கும் ஆக்சிஜன் இல்லை
எங்கள்
கருவுக்கும் ஆக்சிஜன் இல்லை
ஏழைகள் என்றால்
எதுவுமே இல்லையோ!
அந்தப் பொம்மையைக்
கட்டிப்பிடித்துதான்
எங்கள் பிள்ளைகள் தூங்கும்
என்று பெருமை பேசும்
தாய்மைகள் நிரம்பிய உலகில்தான்,
தாயின்
பால்மண அணைப்பைப் பார்க்காமலே
பொம்மைகளாய் விறைத்துப் போயின
தருமபுரி குழந்தைகள்!
புடைக்கத் தின்ன வழியின்றி
சிசுவால் மட்டுமே
நிரம்பிய வயிறு
இழப்பின் வலியை
எப்படித் தாங்கும்?
கிருமித் தொற்றாம்…
மஞ்சள் காமாலையாம்…
கொடுத்து வைத்தது அவ்வளவுதான்
என்ன சொல்ல்வது விதி! – என
முடித்து வைக்கப் பார்க்கிறார்கள்
எஞ்சியிருக்கும் கேள்விகளை.
அரசைவிட
ஒரு ஆபத்தான கிருமி உண்டா?
குற்றத்தின் தசைப்பிண்டங்களை
கூட்டிக் கொண்டு அலைய
முன்னெச்செரிக்கை மருந்துகள்…
முதல்தர பிராணவாயு உருளைகள்…
உடனடி உபகரணங்கள், வாகனங்கள்
அடுத்த குற்றப்பிழைப்பிற்கு
ஒரு நொடி கூட தாமதிக்காமல் புறப்பட
உயர்தர ஹெலிகாப்டர்கள்…
ஓராயிரம் காவலர்கள்…
என மயிர்கூச்செரியும் நிர்வாகம்.
விவசாயி, தொழிலாளர்கள்
உயிர்காப்புக்கு
பேருக்கு இன்க்குபேட்டர்கள்,
குழந்தைகள் நூறுக்கு
இரண்டே செவிலியர்கள்,
பிராணவாயு உருளை மாற்ற
பெற்றோர்களே ஊழியர்கள்,
யாருக்கு அரசு?
இது விதியா? ஆளும்வர்க்க சதியா?
பத்துமாத சிறை உதைத்து
ரத்தவலை தானறுத்து
மொத்தவலி தானுடைத்து
உள்ளே இருந்த குழந்தை
போராடியதால்
உயிரோடு வெளியே வந்தது!
வெளியேஇருப்பவர்களின்
போராட்டமின்மையால்
குழந்தைகள் பிணமானது.
போராட்டமில்லாத இடத்தில்தான்
சோகம் பிறக்கிறது!
போராட வேண்டிய இடத்தில்
போராட வேண்டிய நேரத்தில்
போராடாததால் இந்தச் சாவு.
பிறக்காமலே கொல்ல
குடும்பக் கட்டுப்பாடு!
பிறந்தால் கொல்ல
சத்துணவு தட்டுப்பாடு!
போதிய உபகரணங்கள் இல்லை,
போதிய மருந்துகள் இல்லை,
எல்லாவற்றிற்கும் மேல்
போதிய ஊழியர்களே இல்லை.
மக்கள்தான் போராட வேண்டுமா?
மருத்துவர்கள் போராட மாட்டார்களா?
விவசாயிகளின் சமூக அறிவும்
கருக்கரிவாளும்
சமூகத்திற்கே
போராடுகையில்
மருத்துவர்களின் அறிவும்
அறுவை சிகிச்சை கத்தியும்
தன் சம்பளத்தை மட்டும்
அறுத்து எடுப்பது
அருவருப்பாய் இல்லையா?
கொத்தாய் குழந்தைகள்
செத்தது எப்படி?
– எடை குறைபாடு
ஏன் குறைபாடு?
– தாய்க்கு சத்தில்லை
ஏன் இல்லை?
கருத்தரிக்க முடியாதபடி
உருத்தெரிக்க
மிகைக் கொழுப்பு
மிகுந்திருக்கும் நாட்டில்,
உழைப்பவருக்கு
உயிர் அணு காக்கவும்
சத்தில்லாத வாழ்க்கைத் தரம்
யாரால்?
கிருமி தொற்று ஏன்?
சுகாதரமில்லை
தண்ணீருக்கே வைத்தியம் பார்த்து
தனிப் பராமரிப்புடன்
நாய்களை குளிப்பாட்டும் நாட்டில்,
பொதுக்குழாயில்
சாக்கடையை கலந்தது யார் குற்றம்?
பிணத்தை அறுத்தால்
உண்மை வெளியே வராது
அரசை அறுத்துப் பார்த்தால்
அனைத்துக் குற்றத்திற்குமான
கிருமி தெரியவரும்!
இனி காசிருப்பவனுக்கே
கருவறை!
காசில்லாதவனுக்கு
கருவறையே கல்லறை!
தனியார்மயத் தொற்றே
அரசின் நடைமுறை!
எல்லாப் பக்கங்களிலிருந்தும்
முதலாளித்துவத்திற்கு மூச்சுக் கொடுக்கும்
அரசியல் ‘ஆக்சிஜனை’
பிடுங்கி எறியாமல்
இனி உழைப்பவர்கள்
சுவாசிக்கவும் முடியாது!
• துரை.சண்முகம்
சாகித்ய அகாடமி புகழ் ஆயிஷா நடராஜனின் உண்மை முகம்
ஆயிஷா எனும் கதை, பள்ளி ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடந்தேறும் உளவியலை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுவர் இலக்கியம். இந்த கதை எழுதிய இரா நடராஜனுக்கு 14.11.2014 அன்று பால சாகித்ய அகாடமி பரிசு (சிறுவர் இலக்கிய பரிசு) பெங்களூருவில் வழங்கப்பட்டிருக்கிறது.
கடலூரில் ஆயிஷா இரா.நடராஜன் எழுதிய “டார்வின் ஸ்கூல”; மற்றும் “இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்” ஆகிய நூல்களின் வெளியிட்டு விழா பாரதி புத்தகாலயத்தின் சார்பில் கடலூர் டவுன் ஹாலில் கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பால்கி ஒருங்கிணைப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சியைப் பற்றி விவரிப்பதற்கு முன்பாக பெற்றோர்களின் இரத்தத்தை உறிஞ்சும் கிருஷ்ணசாமி பள்ளி நிர்வாகத்தின் முதல்வராக வீற்றிருக்கும் (பள்ளி முதலாளியின் கல்லா நிரப்ப அரும்பாடுபடும்) திருவாளர் ஆயிஷா இரா. நடராஜன் எனும் சிந்தனையாளரின் படைப்புகளையும், அவரது நடைமுறைகளைப் பற்றியும் பேச வேண்டும்.
அறிவியல் மேதமையும், உளவியல் ஆளுமையும், தற்புகழ்ச்சி போதையும், மாணவர், ஆசிரியர் மீது அதிகார அடக்குமுறையும் ஏவும் உளவியல் அறிஞர் இரா.நடராஜன் எனும் சிந்தனையாளரின் படைப்புகளையும், அவரின் நடைமுறைகளைப் பற்றியும் விவாதிப்பதற்கு முன்பாக அவர் முதல்வராக இருக்கும் பள்ளியைப் பற்றி சுருக்கமாக இங்கே சொல்ல வேண்டியுள்ளது.
கடலூரில் ஒருகாலத்தில் சிறுநீரகத் திருட்டில் புகழ்பெற்ற டாக்டர். ராஜேந்திரன் என்பவர் கடந்த 1990-ல் ஒருசாதாரண கட்டிடத்தில் மெட்ரிக்குலேசன் பள்ளியைத் துவங்கினார். பின் மெல்ல மெல்ல நாளொரு மேனியும, பொழுதொரு வண்ணமாக பெற்றோர்களின் தாலியறுத்து 1997-ல் பாலிடெக்னிக் கல்லூரி, 2001-ல் பொறியியல் கல்லூரி, 2007-ம் ஆண்டு அறிவியல் கலைக்கல்லூரி என மிகப்பெரிய அளவில் கால்பரப்பி விரிந்துள்ளது கிருஷ்ணசாமி நினைவு கல்வி நிறுவனங்கள். கடலூரில் உள்ள தனியார் பள்ளிகளில் பள்ளி ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் கொடூரமான முறையில் கொள்ளை அடிப்பது, கிருஷ்ணசாமி பள்ளிதான் என்பதை கடலூர் மக்கள் நன்கு அறிவார்கள். நீதிபதி சிங்காரவேலர் குறிப்பிட்டுள்ள கட்டண விதிமுறைக்கெல்லாம் சவால் விடும் அளவிற்கு கொள்ளை அடித்து வருகின்றனர் இந்த கயவர்கள்.
மேலும் இங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய் சம்பளம் என்றால் 8,000 அல்லது 7,000 மட்டுமே கையில் கொடுப்பார்கள். பள்ளிக் கட்டணம் என்ற பெயரில் 12,000 ரூபாய் வாங்கி கொண்டு ரூ 4000, ரூ 6000 என ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுப்பார்கள். அதற்கு முறையான ரசீது ஏதும் கிடையாது. இவை அனைத்தும் திருவாளர் நடராசன் அவர்களுக்கு தெரிந்தே நடப்பது தான. இவர்களின் தவறை யாரும் கேட்க முடியாது. அப்படி கேட்கும் பெற்றோர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள். இப்பள்ளியின் மாணவர்களில் பணம் கட்டியவர்கள், கட்டாதவர்கள் என இருவகையில் தரம் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.
இப்படிப்பட்ட புகழுக்கெல்லாம் காரணமான இப்பள்ளியின் முறையாக அடிக்கட்டுமான வசதியின்மைக் காரணம் கடந்த 2011 முதல் பதிவு செய்யப்படாத பள்ளிகளின் பட்டியலில் வந்துவிட்டது. கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சுமார் 122 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 22 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் பள்ளியின் பொன்விழாவிற்கு கடந்த வாரம் 01.11.14 அன்று தமிழக ஆளுநர் ரோசையாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்தனர். இதற்காக கடலூர் நகரம் முழுவதும் பெரிய அளவில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் என மாவட்ட நிர்வாகத்தையே தனது பள்ளிக்கான வேலைகளில் ஈடுபடுத்தி வந்த நிலையில், சமூக ஆர்வலர் ராஜ்மோகன் என்பவர் “அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு ஆளுநர் வரலாமா?” என கேள்வி எழுப்பி மனு ஒன்றை ஆட்சியரிடம் கொடுத்தார்.
இதுவே தி இந்து நாளிதழிலும் செய்தியாக வெளிவரவே அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் உளவுத்துறை மூலம் செய்தி சேகரித்து உள்துறை செயலாளருக்கு அனுப்பியதின் விளைவாக ஆளுநர் வருகை ரத்து செய்யப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரிகளை அழைத்து கடுமையாக கண்டித்தார் கலெக்டர். ஆளுநர் வருகை ரத்து செய்யப்படவே புராணப் புரட்டு புகழ் ஆன்மீக முரசு திருமிகு சுகிசிவம் வரவைக்கப்பட்டார். ஊடகங்களிலும், மேடைகளிலும் நேரம், காலம், உள்ளிட்டு, சதாசர்வகாலமும் இராமாயணம், மகாபாரதம், கிருஷ்ண உபதேசம் போன்றவற்றையே பாரத மக்களுக்கு அருள்பாலிக்கும் இந்த சுகிசிவம், கரன்சி சிவமான கிட்டினி திருடனிடம் பஞ்சம் பிழைப்பது ஏன் என்பது கரன்சி கடவுளான லட்சுமிக்கே வெளிச்சம் என்பது தனிக்கதை, நாம் மீண்டும் மேட்டருக்கு வருவோம்.
கடலூரின் பள்ளிகளிலும் 3 மாதத்திற்கு ஒருமுறை தான் டேம் பீஸ் வாங்குவார்கள். ஆனால் இங்கோ எப்போது சொல்வார்கள் என்றே தெரியாது. திடீர் திடீர் என்று பணம் கேட்டு மிரட்டுவார்கள். கட்டியே தீரவேண்டும் இல்லையேல் தேர்வு எழுத விடமாட்டார்கள். அதுமட்டுமல்ல “படிக்க பணம் கட்ட முடியலன்னா ஏன்யா வரிங்க” என்று அருவருப்புடன் பேசுவார்கள்.
மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் முதல்வர் பதவியில் அதிகாரம் செலுத்தும் நம்ம கல்வி உரிமைப்போராளி, குழந்தைகள் உரிமைப்போராளி, உளவியல் வேந்தன், அறிவியல் ஆசான் தற்புகழ்ச்சி பேரொளி ‘ஆயிஷா’ நடராசனுக்கு தெரியாதது அல்ல, எல்லாம் தெரியும், தெரிந்தேதான் செய்கிறார்.
- கல்வித்துறையின் எந்த விதிமுறைகளையும் மதிக்காமல் எல்லாவற்றையும் கரன்சி துறை கட்டுப்படுத்தி மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, ஆளுமை, விளையாட்டுத் திடல் என்று எதையும் கவனிக்காமல் பில்டப் காட்டி பணம் பறிக்கும் பகல் கொள்ளையாளிகளுக்கு தூணாய் துணைநின்று துரும்பாய் உழைத்து வழிநடத்துபவர் தான் இந்த ‘ஆயிஷா’ நடராசன்.
- கல்விக் கட்டண உயர்வை பெற்றோர்கள் யாராவது தட்டிக் கேட்டால் பிள்ளைகளை வெளியில் நிற்க விடுவார், இந்த மாணவப் போராளி முதல்வர்.
- பார்க் இல்லை என்று அதிகாரி கேட்க அடுத்தவன் இடத்தை ஆக்கிரமித்து பார்க் கட்டி, ராதிகாவை வரவழைத்து திறக்க ரூட் போட்டு கொடுத்ததே இந்த நடராசன் தான.
- பொதுப் போக்குவரத்துக்கான ரோட்டை தனது பள்ளிக்காக ஆக்கிரமிக்க ஆலோசனை சொன்னதும் இந்த நடராசன்தான்.
- சமீபத்தில் ஆளுநர் வருகைக்காக பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.100, கல்லூரி மாணவர்கள் அதற்கு மேலும் தனியாக பணம் கட்ட வேண்டும் என ஆலோசனை தந்து சில லட்சம் செலவு செய்து பல லட்சம் மக்கள் பணத்தை ஆட்டையை போட ஐடியா தந்ததும் இந்த நடராசன் தான்.
- “என்ன சார் முற்போக்கா பல புத்தகம் எழுதி இருக்கீங்க. ஆயிஷா புத்தகமும், ஆவணப்படமும் இன்னமும் உங்களப்பத்தி நல்லவிதமா பேசுது, உங்கள ஸ்கூல்ல பாத்தா இப்படி இருக்கீங்களே” என்று கேட்டால், “அதுவேற, இதுவேற. அங்க நான் அப்படித்தான், இங்கு நான் இப்படிதான் செய்வேன; ரூல்ஸ்படிதான் கேட்கணும்” என்று பேசகிறார் இந்த கல்வி உளவியலாளர்.
பெரும்பாலும் இவரின் போலி முகத்தை நம்பி, பின்னர் உண்மை முகத்தை காணும் பல பெற்றோரும், ஆசிரியர்களும் “உண்மையில் இவர் ஒரு பசுந்தோல் போர்த்திய புலி சார்” என்றே சொல்கின்றனர். “கத்தியில்லாம, தடி, பிளேடு என ஆயுதம் இல்லாமல் டை கட்டிகிட்டு எப்படி வழிபறி பண்ணணும்ங்கிற கலையை இவங்க ஒரு பல்கலைக்கழகமே நடத்தலாம் சார்” என்றும் போட்டு உடைக்கிறார்கள்.
முற்போக்கு, பிற்போக்கு வைத்து முதல்வர் வேலை பார்க்கும் இந்த மேதமைமிக்க நடராசனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு கடலூர் கவிஞர் பால்கி தலைமை தாங்கி, “நடராசன் எழுத்துலகின் புது அவதாரம், படைப்புகளின் பன்முகத் தன்மையை ஒருங்கே பெற்றவரை வளர்த்தெடுக்கவே இந்நிகழ்ச்சி” என்று சொறிந்தார். சொறிந்த சொறியில் நடராசன் மிதக்கும்போது அடுத்து வந்த கடலூர் குடியிருப்போர் சங்கத்தலைவரும், சிபிஎம் கட்சியின் மா.வ.க. உறுப்பினருமான மருது, “இரா.நடராசன் ஒரு கல்வித்துறை அறிவாளி, கடலூரின் சொத்து இவரை நாம் அடையாளப்படுத்தியே தீரவேண்டும்” என்றார்.
இதன் பிறகு நடராசனின் நண்பரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவருமான பேரா.மணி பேசும்போது, “எங்கள் சிந்தனை, சொல் என அனைத்தையும் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல உதவியது சி.பி.எம் கட்சி. இது உழைக்கும் மக்களின் கட்சி இவர்கள் நடத்தும் பாரதி புத்தகாலயத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள ‘ஆயிஷா நடராசனின்’ படைப்புகள் உண்மையில் சமூகத்திற்கு தேவையான விஷயத்தை சொல்கின்றன. என்னைப் பொறுத்தவரை இவர் சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் போது, நாம் இவரைப் பற்றியும் இவரின் படைப்புகளைப் பற்றியும், இவரின் நவீன சிந்தனையைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யலாம்னு ஆசை” என ஏற்கனவே சொறிந்த அறிப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒருமுறை இவரும் சொறிந்தார்.
அடுத்துபேசிய சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், “ஆயிஷா நடராசனைப் பொறுத்தவரை அவரை எனக்கு 2000-ம் ஆண்டு முதல் நல்ல அறிமுகம். அவர் புத்தகத்தைப் படித்துவிட்டு பலமுறை அவரை கைபேசியில் பாராட்டியுள்ளேன். இப்போது நேரில் பாராட்டும் வாய்ப்பு கிட்டியுள்ளது” என்று துவங்கி “நடராசனின் சிறப்பு என்னவென்றால் தமிழில் இதுவரை தேடித்தேடி கிடைக்காத பல அறிவியல் விஷயங்களை நமக்கு கண்டுபிடித்து தந்துள்ளார்.” என்று புகழ் மாலை சூட்டினார்.
“2012-ல் பத்தோடு பதினொன்றாக இருந்த ஆயிஷா நடராசனின் நூல்கள் இன்று முன்னணியில் உள்ளது. 2005-ல் பாரதி புத்தகாலயத்தில் உறுப்பினராக இருந்தவர் என்று புத்தகம் பேசுது நூலின் முதன்மை ஆசிரியராக உள்ளார்” என்று பேசினார். இப்படி சிலாகித்து உச்சத்தில் பேசும்போது, சாய்ந்து உட்கார்ந்து இருந்த நடராசன் புகழ்ச்சி தாங்காமல் நாற்காலியின் உச்சத்திற்கு வந்து விட்டார் ஒரு கட்டத்தில் புகழின் அரிப்பு தாங்காமல் எழுந்து நின்றே விட்டார்.
இதோடு நின்று விடவில்லை ஜி.ஆர். கொஞ்சம் சமூகப்பிரச்சனைப் பற்றி பேசணுமில்லையா அதனால் அரசுப்பள்ளியின் பக்கம் தனது பேச்சை திருப்பினார். “கோவை காரமடை ஒன்றியப் பள்ளி 1930-ல் துவங்கப்பட்டது. 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்த பள்ளியில் இப்போ 67 பேர்தான் உள்ளனர். பள்ளியின் அடிப்படை வசதிக்காக அரசு நிதி ஒதுக்கவில்லை, பின் ஆசிரியர்கள் ரூ 50,000 சொந்த பணத்தில் செலவு செய்தபோது ஊர்மக்கள் 3 லட்சம் வசூலித்து தந்தார்கள், இதைக்கேள்விப்பட்ட ஆட்சியர் 3 லட்சம் தந்தார்.
மேலும் நெடுவயல் எனும் கிராமத்தில் பள்ளியை சீரமைக்க கருப்பையா அண்ணன் ஆண்டுதோறும் வசூல்செய்து சீர்படுத்தினார். இப்படி நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்று கொடுப்பதற்கு நடராசனிடம் நிறையவே உள்ளது” என்று முடித்தார்.
“ஆயிஷா வந்த காலத்தில் அதை வாங்க யாரும் இல்ல, இப்ப பாரதி புத்தகாலயம் மூலமாவும் நான் அடையாளம் கண்டுபிடிப்பதற்கு என்னை பலரும் நாடி வருகிறார்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார் நடராஜன்.
இப்படி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை தொகுப்பாக பார்க்கும்போது அரசுப்பள்ளியின் அவலம் குறித்து மேடையில் பேசிய யாரும் அவர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கவில்லை. மாணவர்களின் படிப்பறிவை பற்றி பேசியவர்கள் யாரும் மாணவர்களைப் பணயமாக்கி கொள்ளையடிக்கும், உழைக்கும் மக்களின் இரத்தம் குடிக்கும் தனியார்மயத்தால் உருவாக்கப்பட்ட தனியார் பள்ளி, கல்லூரிகளின் அராஜகத்தைப் பற்றியோ, ரவுடித் தனத்தைப் பற்றியோ துளியளவும் விமர்சிக்கவில்லை.
நாடு முழுவதும் அரங்கேறிவரும் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்ளையால் மனிதகுலம் இதுவரையில் அனுபவித்த கல்வி, மருத்துவம், தண்ணீர், மின்சாரம், சுகாதாரம் அனைத்தையும் ஏப்பம்விட்டு, காடுகள், மணல்கள், கடல், மலைகள், கனிம வளங்களையும் ஏப்பம் விட்டு மனிதகுலத்திற்கே அழிவை ஏற்படுத்தும் எதிரியை அடையாளம் காட்டாமல் மிக எச்சரிக்கையுடன் வாசகர்களையும், பார்வையாளர்களையும் மடைமாற்றம் செய்யும் வேலைதான் நடராசனின் படைப்புகள், அறிவு உள்ளிட்ட மனிதகுல வளம் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விருந்தாக்கும் வேலையைதான் இதுபோன்ற அறிவியல் எழுத்தாளர்களின் படைப்பு உள்ளது. எதிரியை அடையாளம் காட்டாத இவர்களின் அறிவியல் நிச்சயம் முதலாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.
ஜி.ராமகிருஷ்ணன் தனது பேச்சில் எந்த இடத்திலும் தரங்கெட்டு வரும் அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கு காரணம் தனியார்மயம் தான், தனியார் பள்ளிகளின் கொள்ளை லாபவெறிதான் என்று ஒரு இடத்தில் கூட பேசவில்லை. அரசு மக்கள் நலத்திட்டத்தில் வேலைகளில் இருந்து விலகி முதலாளிகளின் சேவகர்களாக மாறி ஒருமக்கள் விரோத நிறுவனமாக செயல்படுவதையோ அல்லது கார்ப்பரேட் முதலாளியாக நாட்டை சூறையாடுவதையோ யார்? என அடையாளம் காட்டாமல் குள்ள நரித்தனமாக பதுங்கும் இவர்கள் தான் மக்களை விழிப்படையச் செய்யபோகிறார்களாம். நல்ல வேடிக்கை, இந்த நேரத்தில் ஒரு பட்டுக்கோட்டை பாடல் நினைவுக்கு வருகிறது.
“‘மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?”
“நாம் சேர்கின்ற செல்வங்கள் பண்ணையாரிடம் போய் சேர்வதனால் வந்த தொல்லையடி…….”
என்ற வரியை வேறு இடத்தில் போய் சேர்வதனால் வந்த தொல்லையடி என்று மாற்றினார்கள் சினிமாக்காரர்கள்.
“நாயும் வயிற்றை வளர்க்கும், வயிற்றுச்சோற்றை பெரிதென்று சொல்வீரோ”
என்றார் பாரதிதாசன்
இந்த வரிகளில் இருந்து சொந்த வாழ்க்கை வேறு, பொது வாழ்க்கை வேறு என்று பேசும் நடராசன் போன்றவர்களின் நோக்கத்தையும், புரிந்துகொண்டு உண்மையில் இப்படி பணத்துக்காகவும், பெயர், புகழுக்காகவும, பேனா பிடிக்கும் ‘நான் அவன் இல்லை. அவன் நான் இல்லை’ என்று இரட்டை வேடம் போடும் இவர்களை மக்களிடம் அடையாளம் காட்ட வேண்டும. இவர்கள் உண்மையில் மக்களின் எதிரிகள் என்கிறார் பாரதிதாசன்.
பின்குறிப்பு
இந்நிகழ்ச்சி நடத்த அன்று நவ 7 ரசியப் புரட்சி நாள். ஏதுமற்ற ஏழைப் பாட்டாளி வர்க்கம். கொடுங்கோல் ஜார் அரசனையும் முதலாளித்துவ அடிவருடி அரசையும் தூக்கியெறிந்து உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய இத் திருவிழாவை பற்றி இந்த சிபிஎம் ‘போராளிகள்’ ஒருவரி கூடபேசவில்லை. சரிதானே! தனியார் பள்ளி கொள்ளையர்களை காப்பாற்றுவதை பகிரங்கமாக செய்யும் ஆயிஷா நடராஜன் போன்றோரை தூக்கி சுமக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள் ரசிய புரட்சி பற்றி பேசினால்தானே பிரச்சினை!
– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர்.
மோடி அலை என்ற வெங்காயம் !
அரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்:மோடி அலை என்ற வெங்காயம்!
மகாராஷ்டிராவில் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்தவந்த காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சியும், அரியானாவில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்துவந்த காங்கிரசு ஆட்சியும் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளதைக் காட்டி மீண்டும் மோடி அலை சுழன்றடிப்பதாகப் பார்ப்பன ஊடகங்கள் குதூகலிக்கின்றன. அரியானாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள அதேசமயம், மகாராஷ்டிராவில் அதிக இடங்களைக் கைப்பற்றி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஆட்சியை பா.ஜ.க. அமைத்துள்ளது. இதைக் காட்டி நாடாளுமன்றத் தேர்தலின் போது வீசிய மோடி அலையானது இப்போது சுனாமியாகச் சுழன்றடித்துள்ளது என்றும், அமித் ஷாவை பா.ஜ.க. தலைவராக்கியதன் மூலம் தான் நினைத்ததை மோடி சாதித்துவருகிறார் என்றும், அமித்ஷாவின் சாணக்கியத்தனத்தை இச்சட்டமன்றத் தேர்தல்கள் நிரூபித்துக் காட்டிவிட்டன என்றும் ஆளும் வர்க்க ஊடகங்கள் துதிபாடுகின்றன.

மகாராஷ்டிராவில் கடந்த 2009-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசுக் கட்சியும் கூட்டணி சேர்ந்து 37 சதவீத வாக்குகளைப் பெற்றன. இம்முறை இவ்விரு கட்சிகளும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டதால் கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட இவ்விரு கட்சிகள் பெற்ற வாக்குகள் ஏறத்தாழ 3 சதவீதம் குறைந்துள்ளது. இந்த 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூடுதலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த 3 சதவீத வாக்கு வித்தியாசமும்கூட, அதிகாரத்திலிருந்த காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசின் கூட்டணி ஆட்சியில் நடந்த லவாசா மற்றும் ஆதர்ஷ் ஊழல் கொள்ளைகள் அம்பலப்பட்டு நாறியதாலும், தொடர்ந்து 15 ஆண்டுகளாக நீடித்த இக்கூட்டணி ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியாலும் பா.ஜ.க.வுக்கு எதிர்மறையில் கிடைத்த வாக்குகளேயன்றி, மோடி முன்வைக்கும் வளர்ச்சிப் பாதையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அளித்த வாக்குகள் அல்ல. மோடி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் முதலான முக்கிய தலைவர்கள் மூன்று மாதங்களாக முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரம்மாண்ட பேரணிகளை நடத்தியபோதிலும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தைத் தான் ஏற்படுத்த முடிந்துள்ளதேயன்றி, மற்றபடி மோடி அலையுமில்லை, சுனாமியுமில்லை.
அரியானாவின் 90 தொகுதிகளில், 47 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அம்மாநிலத்தில் முதன் முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும், அரியானாவில் கடந்த மே மாதத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 34.7 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.க, இப்போது அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் 33.2 சதவீதம்தான் பெற்றுள்ளது. மோடியின் வளர்ச்சிப்பாதை என்று ஊதிப் பெருக்கப்பட்ட பலூன் காற்றுப் போன நிலையிலும் அரியானாவில் இந்த வெற்றியை பா.ஜ.க.வால் எப்படி சாதிக்க முடிந்தது?

அரியானாவில் ஜாட் சாதியத் தலைவரும் லோக்தளக் கட்சியின் தலைவருமான சவுதாலா, ஆசிரியர் நியமன ஊழலில் சிக்கி அம்பலப்பட்டதாலும், காங்கிரசு தலைவியான சோனியாவின் மருமகன் ராபர்ட் வதோராவுக்கு ஆதரவாக டி.எல்.எஃப். என்ற கட்டுமான நிறுவனத்துக்கு நிலம் கையளித்ததில் நடந்த ஊழல் முறைகேடுகள் அம்பலப்பட்டுள்ளதாலும், இவ்விரு கட்சிகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டது. மறுபுறம், ஏறத்தாழ 27 சதவீதமாக உள்ள ஜாட் சாதியினர் தொடர்ந்து அரியானா அரசியலில் செல்வாக்கு செலுத்தி வந்த நிலையில், பிராமணர்கள், குஜ்ஜார், காம்போஜ், சீக்கியர், ஜாட், பனியா, யாதவா, ராஜபுத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முதலான சாதிகளை ஈர்த்து, அந்தந்த வட்டாரத்துக்கேற்ப மெகா சாதிக் கூட்டணி கட்டிக்கொண்டு மேற்படி சாதிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு விலைபேசியும் பதவி வாக்குறுதிகள் கொடுத்தும் ஓட்டுப் பொறுக்கியது.
காங்கிரசுக்கு ஆதரவாக இருந்துவந்த தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியினரின் வாக்குகளை ஈர்க்க, டெல்லியில் வால்மீகி சாதியினர் நிறைந்துள்ள பகுதியில், கையில் துடப்பத்தை ஏந்தி தெருவைக் கூட்டுவதாக நிழற்படத்துக்குக் காட்சியளிக்கும் நாடகத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரால் மோடி நடத்தினார். குறிப்பாக கன்ஷிராமால் தொடங்கப்பட்ட பிற்பட்ட- சிறுபான்மையின அரசு ஊழியர் சங்கத்தை உடைத்து, அதன் முக்கிய தலைவர்களை பா.ஜ.க.வுக்கு இழுத்துக் கொண்டும், சீக்கியர்களில் ஒரு பிரிவினரைத் தன்பக்கம் வளைத்துப் போட்டுக் கொண்டும் தனக்குச் சாதகமான சாதிய முனைவாக்கத்தைக் கட்டிக் கொண்டு, மோடி-அமித் ஷா கும்பல் இந்த வெற்றியைச் சாதித்துள்ளது. படுகேவலமான இச்சாதிய முனைவாக்கத்தைத்தான் அமித் ஷாவின் சாணக்கியத்தனம் என்றும் மோடி அலை என்றும் பார்ப்பன ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன.
அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததும் மோடி, சுஷ்மா கோஷ்டிகளுக்கிடையே முதல்வர் பதவிக்கும் அமைச்சர்கள் பதவிக்குமான நாய்சண்டை முற்றி சந்தி சிரித்தது. பேரங்கள் – சமரசங்களுக்குப் பிறகு, “பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு பெண்கள்தான் காரணம், இந்தியாவின் பாரம்பரியமிக்க ‘காப்’ பஞ்சாயத்துகளின் தீர்ப்புகள் நியாயமானவை” என்றெல்லாம் பேசிவரும் அப்பட்டமான இந்துத்துவ வெறிபிடித்த பிற்போக்குத் தலைவரும் மோடியின் விசுவாசியுமான மனோகர்லால் கட்டார் இப்போது முதல்வராக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.க., தேர்தலுக்குப்பின் சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளது. பேரங்கள் படியாமல் முறுக்கிக் கொண்டிருந்த சிவசேனாவுக்கு அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அமைச்சர் பதவி வழங்கவும், துணை முதல்வர் பதவி வழங்கவும் பா.ஜ.க. ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து இக்கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளன. இங்கேயும் மோடி, நிதின் கட்காரி கோஷ்டிகளுக்கிடையே முதல்வர் பதவிக்கும் அமைச்சர்கள் பதவிக்குமான நாய்ச்சண்டை தொடர்ந்ததால், யார் முதல்வர் என்று தீர்மானிக்க முடியாமல் இழுபறி நீடித்து, தற்போது மோடியின் விசுவாசியும், ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரைச் சேர்ந்த சித்பவன பார்ப்பனருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் இவ்விரு மாநிலங்களிலும் இதர கோஷ்டிகள் ஓரங்கட்டப்பட்டு, மோடி-அமித்ஷா கும்பலின் விசுவாசிகளே முதல்வர்களாகவும் முக்கிய அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மறுகாலனியாக்கத்தின் கீழ் விவசாயமும் விவசாயிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதற்கும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்குமுறைகள் தொடர்வதற்குமான அடையாளக் குறியீடாக உள்ள மாநிலங்கள்தான் மகாராஷ்டிராவும், அரியானாவும். பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள மகாராஷ்டிராவின் தீராத அவலமாக விவசாயிகள் தற்கொலைச் சாவுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2001 முதல் இதுவரை 11,029 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த தீபாவளியன்று கடன் சுமை தாளாமல் 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளதையும் சேர்த்து நடப்பு 2014-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 906 பேர் மாண்டு போயுள்ளனர்.
பன்னாட்டு நிறுவனங்களின் மனங்கவர்ந்த மாநிலமான அரியானாவில் அமைந்துள்ள குர்கான் தொழிற்பேட்டையானது, முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் தலைமையகமாகத் திகழ்கிறது. மறுகாலனியாக்கத்தின் கீழ் தொழிலாளர்களின் உரிமை பறிப்பும், கொடூரமான சுரண்டலும் முதலாளித்துவ பயங்கரவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள முதன்மை மாநிலம்தான் அரியானா என்பதை மாருதி மற்றும் ஹோண்டா தொழிலாளர்களின் மீதான அடக்குமுறையும், அதற்கெதிரான தொழிலாளர்களின் போராட்டமும் நிரூபித்துக் காட்டியது. ஆனாலும் மறுகாலனியாக்கத்தின் குறியீடாக உள்ள இவ்விரு மாநிலங்களில் அவலத்திலும் அடக்குமுறையிலும் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த ஓட்டுக் கட்சியும் எந்தத் திட்டத்தையும் இத்தேர்தலில் முன்வைக்கவில்லை.

இவ்விரு மாநிலங்களிலும் மறுகாலனியச் சூறையாடலையும் இந்துவெறி பாசிசத் தாக்குதலையும் மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இந்துவெறி பாசிச கும்பல் அதிகாரத்துக்கு வந்திருப்பதும், மோடியின் விசுவாச பார்ப்பன பாசிசத் தளபதிகளாக உள்ள கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளே முதல்வராக்கப்பட்டிருப்பதும் பேரபாயமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஓட்டுக்கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரமும் அமைய வேண்டுமென்றும், இதற்கேற்ப தேர்தல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு சாம்பிராணி புகையை எழுப்பிக் கொண்டிருக்கிறது, மார்க்சிஸ்ட் கட்சி.
– குமார்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________




































