Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 687

ஆதார் : மாட்டுக்குச் சூடு ! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!

3

தார் அட்டை இல்லை என்ற காரணத்தினால், யாருக்கும் அரசின் சலுகைகளை மறுக்கக் கூடாது. சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்க்கு ஆதார் அட்டை வழங்கப்படக் கூடாது” என ஆதாருக்கு எதிரான வழக்கில் செப்.23 அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். இவ்வுத்தரவை மீளாய்வு செய்ய வேண்டுமென மைய அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்த போதிலும், இறுதி விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டுமென்ற அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது.

ஆதார் அட்டை வழங்கும் சோனியா காந்தி
ஆதார் அட்டை வழங்கும் சோனியா காந்தி : தமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை அறியாத மக்கள்

ஆதார் அட்டைக்கு எதிரான முதல் ரிட் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவால் டிசம்பர், 2011-இல் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிராக யு.ஐ.டி.ஏ.ஐ. (Unique Identification Authority of India) பதில் மனுவும் தாக்கல் செது விட்டது. 2012-இல் மும்பை உயர் நீதிமன்றத்தில் விக்ரம் கிருஷ்ணா என்பவரும் ஆதாருக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இறுதியாக டிசம்பர் 2012-இல் ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியான புட்டசாமி, நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு  மனுவைத் தாக்கல் செதார். இதனையொட்டி எல்லா வழக்குகளும் உச்ச நீதிமன்ற விசாரணையில் இணைக்கப்பட்டு விட்டன.

அரசுக்கு எதிரான தற்போதைய இடைக்கால உத்தரவுக்கும் ஒரு பின்புலம் இருக்கிறது. ”நீதிபதியே ஆனாலும், ஆதார் அட்டை இல்லாதவனுக்குச் சம்பளம் கிடையாது” என்று மகாராட்டிர அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் ‘ஜனநாயக உணர்வை’ உடனே உசுப்பி விட்டது.  இடைக்கால உத்தரவில் சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரம் இடம்பெறக் காரணம், புட்டசாமி தாக்கல் செய்த மனுவாகும். பா.ஜ.க. வின் கண்ணோட்டத்திலானதும், ஆதார் அட்டையின் பாசிசத் தன்மை குறித்த மையமான பிரச்சினையையே திசைதிருப்பக் கூடியதுமான இவ்விசயத்தை தனது மனுவில் அவர்தான் எழுப்பியிருக்கிறார்.

வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது என்ற பெயரில், முஸ்லிம் மக்கள் அனைவரையும் சந்தேகத்திற்கிடமான சட்டவிரோதக் குடியேறிகளாகச் சித்தரிக்கும் பா.ஜ.க., கார்கில் போரைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் “பல்நோக்கு தேசிய அடையாள அட்டை” வழங்கும் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தது. அதற்குப் பின்னால் தற்போது காங்கிரசு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆதார் அட்டை, தேச எல்லைகளைத் தகர்ப்பதையும், தேசிய இறையாண்மை என்பதை முடிவுக்குக் கொண்டு வருவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இது தலைகீழ் மாற்றமல்ல, ஆதார் பற்றி நமக்கு அளிக்கப்பட்டு வருவதுதான் தலைகீழ் தோற்றம். குற்றவாளிகளின் பெயர், முகவரியை மட்டுமின்றி, அங்கமச்ச அடையாளங்கள் மற்றும் புகைப்படத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளும் போலீசைப் போல, ஒவ்வொரு குடிமகனின் புகைப்படம், இரு கைரேகைகள், கை அமைப்பு, விழிப்பாவை, முக அமைப்பு, குரல் போன்ற தனித்துவம் வாந்த அடையாளங்களை அளந்து (Bio-metric) பதிவு செய்து, அவற்றைக் கணினியால் அடையாளம் காணத்தக்க தரவுகளாக மாற்றித் தொகுத்து வைப்பதே ஆதார் திட்டத்தின் பணி. ஆதார் என்பது உங்கள் கையில் அளிக்கப்பட்டிருக்கும் அட்டை அல்ல. சங்கேத எண்களில் விண்ணில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உங்களுடைய அடையாளம்.

ஆனால், இத்திட்டத்தின் நோக்கமாக காங்கிரசு அரசு கூறுவது என்ன? போலி ரேசன் அட்டைகள் காரணமாக உணவு, எரிவாயு மானியச் செலவுகள் அதிகரிப்பதைத் தடுப்பதும், மக்கள் நலத் திட்டங்களில் இடைத் தரகர்கள் கமிசன் அடிப்பதைத் தடுத்து, முழுத் தொகையையும் மக்களுக்குச் சேர்ப்பதும்தான் இந்த ஆதார் திட்டத்தின் நோக்கம் என்கிறது அரசு. ஆனால், ”உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற இந்தத் திட்டத்தின் நோக்கமே, உணவு தானியங்கள், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ளுமாறு கூறி, அதற்கான அரசு மானியத்தை வங்கிகள் மூலம் வழங்குவதும், அதனை ஆதார் அட்டை மூலம் பெற்றுக் கொள்ளச் செய்வதும்தான். ரேசன் கடைகளை மூடிவிட்டு, பொருட்களின் விலையைச் சந்தையே தீர்மானித்துக் கொள்ளும்படி விட்டுவிட வேண்டும் என்பதே உலக வங்கியின் வழிகாட்டுதல். அதனை அமல்படுத்துவதற்கான முதல் படியாகத்தான் ”உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதை ஏற்கெனவே பல கட்டுரைகளில் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

ஒரு குடிமகனின் அடையாளத்திற்கான நிரூபணமாக ரேசன் அட்டை, வங்கிக் கணக்கு, கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற சுமார் 15 ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்போது, பயோமெட்ரிக் அட்டைக்கான அவசியத்தை அரசால் நிறுவ இயலவில்லை. இதனால்தான், ”ஆதார் அட்டை என்பது கட்டாயமல்ல” என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, மறுபுறம் ”எரிவாயு இணைப்பு முதல் வங்கிக் கணக்கு வரையிலான அனைத்துக்கும் ஆதார் தேவை” என்று அந்தந்தச் சேவையை வழங்கும் நிறுவனங்களைக் கூற வைத்து கீழிருந்து சதித்தனமாக இதனைத் திணிக்கிறது. ”ஆதார் இல்லாதவர்களுக்கு உரிமைகளைப் பெறுவதற்கான உரிமை இல்லை” என்று நவ. 23, 2012 அன்று நடந்த தார்குண்டே நினைவு சொற்பொழிவில் வெளிப்படையாகவே அறிவித்தார், ஆதார் ஆணையத்தின் தலைவர் நந்தன் நிலேகனி.

படித்தவர்களும் பாமரர்களே
ஆதார் குறித்த மயக்கம் : படித்தவர்களும் பாமரர்களே

தனியார்மய-தாராளமயக் கொள்கைகளால் உடைமைகள் ஏதுமற்றவர்களாக்கப்பட்டு, நகர்ப்புறத்துக்குப் புலம் பெயருகின்ற கிராமப்புற ஏழைகளுக்கும், வீடற்றவர்களுக்கும், உதிரித் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் அதிகாரமாகவும், அடையாளமற்ற மக்களின் அடையாளமாகவும் ஆதார் அட்டையைச் சந்தைப்படுத்துகிறது அரசு. பத்து ரூபாய் அரசு சலுகையைப் பெறுவதற்கு பன்னிரெண்டு அதிகாரிகளின் கையெழுத்துக்காக அலைய வேண்டியிருப்பதாலும், போலீசிடமும் அதிகார வர்க்கத்திடமும் தாங்கள் யாரென்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு அடிக்கடி ஆளாக்கப்படுவதாலும், இத்தகைய தொல்லைகளிலிருந்தெல்லாம் தங்களை விடுவிக்கும் வரப்பிரசாதமாக ஆதார் அட்டையைச் சாதாரண மக்கள் கருதுகிறார்கள்.

நம்மைக் கண்காணிப்பதையும், ஒடுக்குவதையும் ஆதார் மிகவும் எளிதாக்கி விடும் என்ற அபாயத்தை பலர் உணர்வதில்லை. தாங்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதால் அஞ்சத் தேவையில்லை என்று பாமரத்தனமாக கருதுகின்றனர். போலீசாரால் ஒரு பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு விட்டாலோ, ஒரு ஆலையில் நிர்வாகத்துக்கு எதிராகப் போராடி பணிநீக்கம் செய்யப்பட்டாலோ, அந்த விவரங்களை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஒரு நபரை எப்போது வேண்டுமானாலும் துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்குமான சாத்தியத்தை ஆதார் அட்டை கொண்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் உலக வங்கி நடத்திய கருத்தரங்கில் பேசிய நந்தன் நிலேகனி, 19-ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்க கண்டத்திற்கு பிழைக்க வந்த ஐரோப்பியர்களை, கனடாவின் எல்லிஸ் தீவைச் சேர்ந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் கையாண்ட முறையை நினைவுபடுத்தினார். குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் ஐரோப்பியர்கள் விதவிதமான மொழிகளில் தம் பெயர்களைக் கூறினர். அவையனைத்தையும் ரத்து செய்து விட்டு, ஒவ்வொருவருக்கும் அதிகாரிகளே ஒரு பெயரை சூட்டி, இனி இந்த நாட்டில் இதுதான் உன் பெயர் என்று அறிவித்தார்கள். ”ஆதார் என்பது உலகின் பிரம்மாண்டமான பெயர் சூட்டும் விழா – இது 21-ஆம் நூற்றாண்டின் எல்லிஸ் தீவு” என்றார் நிலேகனி.

உங்கள் உண்மையான பெயர், பெற்றோரின் பெயர், இனம், மொழி, மதம், ஊர், தொழில், கல்வித்தகுதி ஆகியவை ஒருபுறமிருக்க, ஒரு மனிதன் என்ற முறையில் உங்களது உடலின் தனித்துவமான அடையாளங்களை மட்டும் (விழிப்பாவை, ரேகை இன்னபிற) பதிவு செய்து கொண்டு, இவ்வடையாளங்களைக் கொண்ட உடலுக்குரிய சங்கேத எண் கணினியில் பதிவு செய்யப்படும். இதன் பின்னர் நீங்கள் சோதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ”குறிப்பிட்ட பயோ மெட்ரிக் அளவீடுகளுக்குரிய உடலமைப்பைக் கொண்ட மனிதன் நான்தான்” என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையதாகி விடும். ”உங்களுடைய விழிப்பாவை மற்றும் ரேகைகளில் காலப்போக்கில் மாற்றம் ஏற்படுமாதலால், குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் பயோ மெட்ரிக் அடையாளங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்” என்றும் யு.ஐ.டி.ஏ.ஐ. (Unique Identification Authority of India) கூறுகிறது.

ஆதார் சுரண்டல்மாட்டுக்கு சூடு வைப்பதைக் காட்டிலும் மோசமாக, மனிதர்க்கு இலக்கமிடும் இந்த முறையை, ”ஒற்றை தேசிய அடையாளம்” என்று கூறி வரவேற்றிருக்கிறார் தேசியப் புலனாவு வலைப்பின்னலின் (National Intelligence Grid) தலைவர் ரகுராமன். ”நாட்கிரிட்” என்பது உள்நாட்டு பாதுகாப்பு அபாயத்தைக் கையாள்வதற்கென்று தனியே உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு உளவுத்தகவல் வலைப்பின்னல். குடிமக்கள் அனைவருடைய தொலைபேசி, இணைய சேவை, ரயில்-விமான போக்குவரத்து விவரங்கள், வங்கிக் கணக்குகள், கடன் அட்டைகள், வீடு-நிலப் பத்திரங்கள், ஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இதில் இணைக்கப்படவிருக்கின்றன. இதனுடன் ஆதார் எப்போது வேண்டுமானாலும் இணைக்கப்படக் கூடும்.

ஆதார் அட்டை என்பதன் நோக்கம் மக்களை உளவு பார்ப்பது மட்டுமோ, அரசு பிரச்சாரம் செய்வதைப் போல குக்கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு அரசின் உதவித்தொகையைக் கொண்டு சேர்ப்பதோ அல்ல. கிராமப்புற மக்கள் வைத்திருக்கும் சேமிப்புப் பணத்தையும், நகைகளையும் வங்கிகளை நோக்கி ஈர்ப்பது, கிராமப்புறங்களில் இன்னமும் நீடிக்கும் உள்ளூர் அளவிலான பொருளாதாரத்தை அழித்து, தேசிய நுகர்வுச் சந்தையுடனும், வங்கிக் கடன் சந்தையுடனும் கிராமப்புற மக்களை இணைப்பது – என்ற நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாகனமாக ஆதார் அட்டை இறக்கப்பட்டிருக்கிறது.

கிராமப்புற வங்கிக் கிளைகளால் வருமானமில்லை என்று அவற்றை மூடி, விவசாயக்  கடன்களை நிறுத்தி கிராமப்புறத்தைப் புறக்கணித்த வங்கிகளின் பார்வை, ஆதார் அட்டைக்குப் பின் கிராமப்புறத்தை நோக்கித் திரும்பியிருக்கிறது. கிராமப்புற மக்கள் தமது சேமிப்பில் 42%-ஐப் பணமாக வைத்துள்ளனர் என்கிறது அரசின் ஆய்வு.  இன்னமும் வங்கிச் சேவையுடன் இணைக்கப்படாமல் இருக்கும் நாட்டின் 60% கிராமப்புற மக்களை உடனே வங்கிச் சேவையுடன் இணைத்து அவர்கள் ”சட்டி-பானைகளில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புகளை வங்கிக்குக் கொண்டுவர வேண்டும்” என்று கூறியிருக்கிறார் ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம் ராஜன்.

”ஒருவர் வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கு ஆதார் அட்டையே போதுமானது” என்று ரிசர்வ் வங்கி அறிவித்து விட்டது. ஒரு ஆண்டிற்குள் ஆதார் அட்டை அடிப்படையிலான 10 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார் நிலேகனி. கிராமங்களில் ஒரு கிளை கூட இல்லாத ஆக்சிஸ் வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகள், ”ஆதார் அட்டையைக் காட்டினால் யார் வேண்டுமானாலும் எங்கள் வங்கியில் கணக்கைத் தொடங்கலாம்” என்று கூவிக்கூவி அழைக்கின்றன.

இந்த வங்கிகள் கிராமங்களில் தனது கிளைகளைத் திறக்காமல், வணிக முகவர்கள் (Business correspondents) எனப்படுவோரை நியமித்து, அவர்களிடம் அட்டைகளை ”ஸ்வைப்” செய்வதற்கான கருவிகளையும் குறிப்பிட்ட அளவு பணத்தையும் அளித்து, அவர்களையே நடமாடும் வங்கிகளாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் சுமார் 70,000 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள், அஞ்சலகங்கள் போன்ற அமைப்புகளையும் வணிக முகவர்களாகப் பயன்படுத்தி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் எல்லா  கிராமங்களையும் வங்கி வலைப்பின்னலுடன் இணைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

தப்பிப் பிழைத்திருக்கும் சுயசார்புப் பொருளாதாரத்தை அழிப்பதுடன், நிதிச் சந்தையுடன் இணைத்துக் கொள்வது (Financial inclusion) என்ற பெயரில் மக்களின் கொஞ்ச நஞ்ச சேமிப்பையும், கழுத்துச் சங்கிலியையும் பறிப்பதற்கு சர்வதேச நிதிமூலதனம் கட்டவிழ்த்துவிட இருக்கும் தீவட்டிக் கொள்ளையின் தொடக்கமாகவே இது இருக்கும்.

ஆதார் என்பது 14 வளர்முக நாடுகளில் மின்னணுவியல் நிர்வாகத்தைப் (e-transform initiative) புகுத்துவது என்ற உலக வங்கித் திட்டத்தின் அடிப்படையிலானது. இந்திய மக்களிடம் ஆதாருக்கான தரவுகளைத் திரட்டுபவர்கள் யார்?

நாஜி ஜெர்மனியில் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை ”பஞ்ச் கார்டு” முறையிலான கணினியில் பதிவு செய்து இட்லர் அரசிடம் ஒப்படைத்து, யூத இனப்படுகொலைக்கு வழியமைத்துக் கொடுத்த ஐ.பி.எம். என்ற அமெரிக்க கணினி நிறுவனம், அமெரிக்க இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புள்ள எல்.1 சர்வீசஸ் என்ற நிறுவனம், முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரிகளை நிர்வாகிகளாகக் கொண்டிருக்கும் அசென்ச்சர் நிறுவனம் போன்ற நிறுவனங்களின் மூலம்தான் பயோமெட்ரிக் தரவுகள் மக்களிடமிருந்து திரட்டப்படுகின்றன. இவற்றை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடும்.

ஆதார் ஆக்கிரமிப்புஅது மட்டுமின்றி, ஆதார், நாட்கிரிட், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம், ”இ.பேமென்ட் சிஸ்டம்” போன்ற பலவும் உலக வங்கியின் மின்னணுவியல் நிர்வாகத்துடனும், நேட்டோவின் கொள்கைகளுடனும் இணைக்கப்பட்டிருக்கின்றன. பெருமளவில் மக்கள் கொந்தளிப்புகளைச் சந்தித்து வரும் கிரீஸ், எகிப்து மற்றும் அமெரிக்க வெறுப்பில் குமுறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் குடிமக்கள் அடையாள அட்டை விவரங்கள், அமெரிக்க அரசிடம் கையளிக்கப்பட்டிருப்பதை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போது, ஆதார் என்பது அமெரிக்கக் கண்காணிப்புக்கு இந்தியக் குடிமக்களை ஒப்புக் கொடுக்கின்ற இந்திய அரசின் நடவடிக்கையாகும் என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆதார் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய நிலேகனியிடம், ”2050 வாக்கில் தேசிய அரசுகள் தட்டித் தகர்க்கப்பட்டு, ஒரு உலக அமைப்பு உருவாகிவிடும் என்று கருதுகிறீர்களா?” ”ஒருவேளை ஆப்பிரிக்காவில் ஆதார் அட்டை போன்ற ஒன்றை உருவாக்கித் தருமாறு உங்களிடம் கேட்டால், ஆப்பிரிக்கர்களுக்கென்று புதிய சங்கேத எண்களை உங்களால் உருவாக்கித் தர முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார் உலக வங்கித் தலைவர்.

”100 கோடிப் பேருக்கு செய்ய முடிவதை 700 கோடிப் பேருக்கும் ஏன் செய்ய முடியாது? உலகின் மக்கட்தொகை முழுவதையும் ஆதாருக்குள் கொண்டு வருவதற்குத் தொழில்நுட்பம் ஒரு தடையல்ல” என்று பதிலளித்தார் நிலேகனி.

”அப்படியானால் தேசிய இறையாண்மை என்பதை முற்றிலுமாகப் பிளந்தெறியவிருக்கின்ற ஆப்புதான் ஆதார் என்று எடுத்துக் கொள்ளலாமா?” என்று உற்சாகமாக அடுத்த கேள்வியைக் கேட்டார் உலக வங்கியின் தலைவர்.

நாட்டின் இறையாண்மையைப் பிளத்தல் என்ற சோற்றொடர் நிலேகனியிடம் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ”அது எந்த அளவுக்கு நாம் (அரசு நிர்வாகத்தை) மையப்படுத்தப் போகிறோம் என்பதைப் பொருத்தது” என்று அவருக்குப் பதிலளித்ததன் மூலம் நாடுகளின் இறையாண்மை அழிக்கப்படுவதற்குத் தான் காத்திருப்பதை வெளிப்படுத்தினார் நிலேகனி.

இந்தியாவின் பாதி மக்கட்தொகைக்கு ஆதார் வழங்கப்பட்டுவிட்டது. அதாவது, இறையாண்மையின் மீது இறங்கிய ஆப்பு, அதனைப் பாதியளவுக்குப் பிளந்துவிட்டது. ”மீதியையும் பிளப்பது அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதே” என்று வாதிடுவதற்கு அட்டர்னி ஜெனரல் ஆஜராகிறார். ”இறையாண்மையைப் பிளந்தெறியும் அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்டு” என்று நிலைநாட்டும் பொருட்டு ஆதார் மசோதா நாடாளுமன்றத்தில் காத்திருக்கிறது.

ஆப்பை அசைக்கும் அதிகாரம் பெற்ற நீதிமன்றமோ, இறையாண்மையின் மீது அமர்ந்திருக்கிறது.

-சூரியன்
_____________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
_____________________________

நகரத் தெருக்கள் : சீமான்களுக்கா, சாமானியர்களுக்கா ?

0

சைக்கிளில் சென்று வீடுகளுக்குப் பால் – செய்தித்தாள் விநியோகிப்பவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஷாவை வைத்துப் பிழைப்பவர்களுக்கும் இனி கொல்கத்தா நகரின் சாலைகளைப் பயன்படுத்த முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. சைக்கிள்கள், கைவண்டிகள், டிரை சைக்கிள் போன்ற மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாகவும், இவ்வாகனங்களால் கொல்கத்தாவின் சாலைப் போக்குவரத்து வேகம் தேசிய சராசரியை விடக் குறைந்து விட்டதாகவும் காரணங்களை அடுக்கி, அந்நகரத்தின் 174 சாலைகளில் சைக்கிள் உள்ளிட்ட சாமானிய மக்களின் வாகனங்களுக்குத் திமிர்த்தனமாகத்  தடை விதித்துள்ளது மம்தா அரசு. தடையை மீறினால் ரூ.110 அபராதம் அல்லது சைக்கிள் பறிமுதல் – என எச்சரிக்கும் போலீசு, ”சைக்கிள்களில்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள்” எனப் பீதியூட்டி, அரசின் இம்முடிவை வக்கிரமாக நியாயப்படுத்துகிறது.

கொல்கத்தா ஆர்ப்பாட்டம்
கொல்கத்தா நகரின் சாலைகளில் மிதிவண்டி மற்றும் ரிக்ஷா உள்ளிட்ட சாமானிய மக்களின் வாகனங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்.

இத்தடையுத்தரவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பால்காரர்கள், செய்தித்தாள் போடுபவர்கள், தனியார் அஞ்சல்(கூரியர்) ஊழியர்கள், நடைவண்டி வியாபாரிகள், ரிக்ஷா வண்டி ஓட்டுபவர்கள், தொழிற்சாலை ஊழியர்கள்  உள்ளிட்ட அனைவரும் தன்னிச்சையாக வெகுண்டெழுந்து வீதியில் இறங்கி சைக்கிள் சக்கரங்களைத் தலைக்கு மேல் ஏந்தியபடி ‘சைக்கிள் சத்தியாகிரக’ப் போராட்டத்தை நடத்தினர். திமிர் பிடித்த மம்தா அரசோ, போராடிய மக்களின் மீது போலீசைக் கொண்டு தடியடித் தாக்குதலை நடத்தி தனது கோரமுகத்தை மீண்டும் காட்டியது.

சாமானிய, நடுத்தர வர்க்கத்தினர் நிறைந்த கொல்கத்தா நகரம் குறுகலான தெருக்களைக் கொண்டதாகும். இதர பெருநகரங்களை ஒப்பிடும்போது, கொல்கத்தாவில்தான் சைக்கிள்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொல்கத்தாவின் குறுகலான தெருக்களில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும் கார்களால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதேயன்றி, சைக்கிளால் போக்குவரத்து தடைபட்டுத் தாமதமாகிறது என்கிற வாதமே அபத்தமானது.

இலண்டனைப் போல கொல்கத்தாவை மாற்றுவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த மம்தா, கொல்கத்தாவின் சாலைகளிலிருந்து சாமானியர்களை விரட்டியடித்து விட்டு, அந்நகரை கார்களில் பறக்கும் மேட்டுக்குடியினருக்கானதாக மாற்றிவிடத் துடிக்கிறார். தனியார்மய – தாராளமயமாக்கலைத் தொடர்ந்து  இதர மாநிலங்களின் ஆட்சியாளர்கள் நகரை அழகுபடுத்துவது எனும் பெயரால் குடிசைகளை அப்புறப்படுத்தி சாமானியர்களைத் துரத்துவதும், கொல்கத்தாவில் சைக்கிள்களில் பயணிக்கும் உழைக்கும் மக்களைச் சாலைகளிலிருந்து அகற்றுவதும் வேறுவேறல்ல.

அனுமதிக்கப்படாத இடங்களில் கார்களை நிறுத்துவோரை மென்மையாகக் கையாள்வதும், அதே இடங்களில் சைக்கிளையோ ஆட்டோவையோ நிறுத்துவோர் மீது பாய்ந்து குதறுவதும் நாடெங்கும் போலீசின் பொது விதியாகவே உள்ளது. குடிசை மாற்று வாரிய வீடுகளின் வாடகையை விட மிகவும் குறைவான வாடகையைத்தான் கார்கள் நிறுத்துமிடங்களுக்கு அரசு வசூலிக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளிலும் சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளிலும் தொடர்வண்டி, பேருந்து போன்றவற்றுக்கு அரசு முக்கியத்துவம் தருகின்றபோது இங்கோ, பொதுப்போக்குவரத்தைப் படிப்படியாகக் குறைக்கும் அரசு, இருசக்கர வாகனங்கள் வாங்குவோருக்குக் கடனுதவியும் கார்களுக்குக் குறைவான சாலை வரியையும் விதித்து திட்டமிட்டே கார்-மோட்டார் சைக்கிள் கம்பெனி முதலாளிகளின் நலனுக்காகச் செயல்படுகிறது.

நகரங்களை மாற்றியமைக்கும் அரசு, அங்கே மாடுகளை வைத்துப் பிழைப்போர் இருக்கக் கூடாது, சைக்கிள் ஓட்டிப் பிழைப்போர் இருக்கக் கூடாது – எனப் பல கூடாதுகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்து உழைக்கும் மக்களை நகரங்களிலிருந்தே விரட்டியடித்து வருகிறது. சாமானியர்களை அற்பமாகவும் தேவையற்றவர்களாகவும் கருதும் கண்ணோட்டத்திலிருந்து பிறக்கும் இந்த வக்கிரமான உத்தரவுகள் ஒவ்வொன்றும்  உழைக்கும் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதால், இத்தடைகளுக்கு எதிராகவும் இவற்றுக்குக் காரணமான தனியார்மய-தாராளமயத்துக்கு எதிராகவும் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சைக்கிள்களுக்கு சாலைகளில் தடை கொண்டுவர முயன்றபோது, உழைக்கும் மக்கள் அதை எதிர்த்துப் போராடி அரசைப் பணியவைத்த வீர வரலாறு நம்முன்னே உள்ளது.

-அன்பு
______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013

______________________________

நீயா நானா கோபிநாத் : இளைஞர்களை மொக்கையாக்கும் 2-ம் அப்துல்கலாம்..!

82

ஸ்டார் விஜய் டிவியில் “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமான கோபிநாத், “என் தேசம் என் மக்கள்” என்ற புதிய நிகழ்ச்சி மூலம் விலைவாசி உயர்வு முதல் கல்விக் கட்டண உயர்வு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளை அலசுவது என்ற பெயரில் இப்பிரச்சனைகளிற்கு அடிப்படை காரணங்களை அறியாமலோ மறைத்தோ விவாதத்தை நகர்த்தி இறுதியில் ஆகாசவாணி டைப் உபதேசங்களை அள்ளிவிடுகிறார்.

கோபிநாத்
கோபிநாத்

இத்தகைய கோபிநாத், “யூனிவர்செல் கடையில செல் வாங்குங்க, இந்த பிராண்ட் வேஷ்டி வாங்குங்க” என விளம்பரங்களில் நடிப்பது மூலம் மக்கள் தலையில் பொருட்களை திணிக்கும் சராசரி சினிமா, தொலைக்காட்சி ‘பிரபலங்கள்’ போலத்தான் என நினைத்துக் கொண்டு இருந்தேன்.

ஆனால் அவருடைய நிகழ்ச்சி வீடியோக்களை இணையத்தில் பார்த்த போது தான் அருகிலேயே ‘நீயா நானா புகழ் கோபிநாத் உரைகள்’ என பல பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுகி சிவம் போல ஆன்மீகத் தமிழில் அப்துல் கலாம் போல அட்வைசு மழையில் ஆற்றிய சொற்பொழிவுகள் பலவற்றை பார்க்க முடிந்தது.

சரி என்ன சொல்கிறார் என அவற்றில் சிலவற்றை பார்த்த போது பொருளாதாரம் முதல் சாதி, மதப் பிரச்சனை என மாணவர்கள் கவலைப்படும்படி ஒன்றும் இல்லை, ’பயம் வேண்டாம், பயம் வேண்டாம்’ என விசுவாசக் கூட்டம் நடத்தி வருவதை கண்டு அதிர்ந்தே போய் விட்டேன். கோமாளி அப்துல கலாமாவது, “நாடு வல்லரசு ஆக கனவு காணுங்கள் இளைஞர்களே” என்றார். ஆனால் நம்ம 2-ம் கலாம் கோபிநாத் அவர்களோ “கனவே (ஆணியே) காண வேண்டாம். ஆல்ரெடி நாடு வல்லரசாக தான் இருக்கிறது” என ஒரே போடாக போடுவதை பார்க்கும் போது என்ன கொடுமை சரவணா என கத்தணும் போலத் தோன்றியது.

பேச்சாளர் கோபிநாத்
அட்வைசு குண்டு மழை வீசும் சொற்பொழிவாளர் கோபிநாத்

வல்லரசு ‘ஸ்பெஷலிஸ்ட்’ அப்துல் கலாமே செல்ப் எடுக்காமல் தள்ளாடி வரும் போது கோபிநாத் மட்டும் எப்படி இன்றைய இளைஞர்களை மொக்கைகளாக்க முடியும். முடியாது என்பதை சில கல்லூரிகளில் சொற்பொழிவு முடிந்த பின் மாணவர்கள் எழுந்து கோபிநாத்தின் முகத்தில் அறைவது போல யதார்த்தமான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்ததையும் வேட்டி கட்டியஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் பேசுவது போல பேண்டு போட்ட கோபிநாத் சந்தர்ப்பவாதமாக சமாளிப்பதை பார்க்க முடிந்தது.

பழனியில் 2011 அன்று சுப்ரமணிய பொறியியல் கல்லூரியில் கோபிநாத் கலந்து கொண்டு பேசியவற்றை பார்க்கலாம்.

கோபிநாத் உரை இந்த இணைப்பில் உள்ளது.

********************

“50 ஆண்டுகளாக இந்தியா செப்பனிடப்பட்டு, சரி செய்யப்பட்டு இன்று நம் கையில் கொடுக்கப்பட்டு இருக்கு, நம் எல்லோர் கையிலும் செல்போன். உலகிலேயே செல்போன் அதிகம் பயன்படுத்துவது இந்தியன், ஆனால் அதனை தயாரிப்பதில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்லை. அதன் சேவைகளை வழங்குவதிலும் சொல்லும்படியான ஒரு இந்திய நிறுவனம் கூட இல்லை. நம்மையே தயாரிக்க வைத்து நம்மிடமே விற்பனை செய்கிறான். நாம் பயன்படுத்தும் அனைத்தும் வெளிநாட்டு பொருட்கள். பேசுகிறவன் தமிழன் , பேசுகின்ற மைக் மேட் இன் இந்தியா கிடையாது.

உலகின் மிகப் பெரிய ஆயுதம் அன்பும், அறிவும் தான். சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தி என்ற கோவணம் மட்டும் கட்டிய தனி மனிதனுக்கு பின்னால் ஒட்டு மொத்த இந்தியாவும் சென்றதற்கு காரணம், காந்தி இந்த தேசத்தின் மீது, மக்கள் மீது வைத்திருந்த அன்புக்கு பிரதிபலனாகத்தான். அதனால் ஆயுதம் எதையும் செய்யாது. அன்பு மட்டுமே நிலைத்திருக்கும்.

நமது சூழ்நிலைக்கு பொருந்தாத பீட்சாவை விக்கிறான். நம்ம இட்லியை ஏன் அவன் நாடுகளில் மார்க்கெட் பண்ண முடியவில்லை. வேம்பு- மஞ்சள் என அனைத்துக்கும் நமக்கு காப்புரிமை இல்லை என எவனோ ஒருத்தன் விலை பேசுகிறான், அதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு நல்ல வேலை – வரதட்சணை வாங்கிக் கொண்டு ஒரு கல்யாணம்– ஊருக்கு வெளியே சொந்த வீடு – குழந்தை – அப்புறம் சாவு என நாம் இருக்கிறோம்.… இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?” –

பேச்சாளர் கோபிநாத்
பேச்சாளர் கோபிநாத்

இவையெல்லாம் 2-ம் அப்துல் கலாம் ஆதங்கப்பட்ட சில கருத்து முத்துக்கள். அத்தனையும் கோர்க்க முயலும் போதே புட்டுக்கொள்ளும் டப்பா முத்துக்கள்!

50 ஆண்டுகளில் செப்பனிடப்பட்டு, சரி செய்யப்பட்டு விட்ட நாடு என கோபி சொல்லுவது கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட, கனிம வளங்களை கொள்ளையிட ஆயுதப் படைகளாலும் சல்வாஜூடும் போன்ற அரசின் கூலிப்படைகளாலும் பல லட்சம் பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டு ஒரு மிகப் பெரிய மக்கள் மீதான போரை நடத்தும் இந்திய நாட்டை!

காந்தி குறித்தும் அன்பு குறித்தும் வகுப்பு எடுக்கும் கோபிநாத் காஷ்மீரிலும், கூடங்குளத்திலும், தண்டகாரண்யாவிலும் யாருக்காக இந்திய அரசு அன்புடன் ஆயுதம் ஏந்தி போர் புரிகிறது என்பதை கூறவில்லை. அரசு மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கலாம். ஆனால் அதை எதிர் கொள்ள உழைக்கும் மக்கள் ஆயுதம் எடுக்கக் கூடாது என்று அன்று காந்தி சொன்ன அதே வார்த்தைகளைத் தான் இன்று கோபிநாத் கூறுகிறார். காந்தி செத்த பின்னரும் மக்களுக்கு எதிராக அவர் விட்டுச் சென்ற அகிம்சையின் துரோகம் தொடர்கிறது. ஹிம்சையைக் கூட மக்கள் தமது சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டு பின்னர் எதிர்க்கத் துவங்குகிறார்கள். ஆனால் அஹிம்சைவாதிகளின் காயடிப்பைத்தான் அத்தனை சீக்கிரம் மக்கள் உணர்வதில்லை.

மஞ்சள், வேம்பு காப்புரிமை பறி போவதாக பதறும் கோபிநாத்துக்கு ஒரு இந்திய நிறுவனம் செல்போன் தயாரிப்பதுதான் முன்னேற்றத்துக்கான வழியாக தெரிகிறது. ஆனால் நம் நாட்டு வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் ஆட்சியாளர்களை குறித்து அவருக்கு எந்த குறையும் இல்லை. பாரதத் தாய் விற்கப்படும் அவலத்தை விட அவள் அணிந்து கொள்ளும் ஆபரணங்கள் குறித்துத்தான் இந்த கோட்டு சூட்டு கோபிநாத் கவலைப்படுகிறார்.

செல்போன் சேவையினை வெளிநாட்டு கம்பெனிகள் தான் வழங்க வேண்டும் என்ற கொள்கையின் காரணமாக பொதுத் துறை நிறுவனமாக VSNL-யை டாடாவுக்கு விற்றதையும், தொலைத்தொடர்பு துறையில் 74% அந்நிய முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டு அதுவும் போதாது என அதனை 100% ஆக்க வேண்டும் என தினந்தோறும் வேலை செய்து பி.எஸ்.என்.எல்-ஐ முழுவதுமாக அழித்த அரசின் சதி குறித்து கோபிநாத் என்ன சொல்கிறார்? தினமணியில் நடுப்பக்க கட்டுரை படிக்கும் ஒருவருக்கு தெரியக்கூடிய விஷயம் இந்தியாவின் சிறந்த ‘மீடியாபர்சன்’ என டாக்டர் பட்டம் வாங்கிய கோபிநாத்-க்கு தெரியாதா?

புதிய தலைமுறையில் வந்த பி.எஸ்.என்.எல்-ஐ அரசே அழித்த கதை இதோ

”நமக்கு என்ன கஷ்டம். உலகத்திலேயே நமது நாட்டில் தான் சீரான வெப்பநிலை, அறிவு, இயற்கை வளம் என அனைத்தும் இருக்கிறது. 3 வேளை சோற்றுக்கே இன்னும் எத்தனை நாளைக்கு பயந்து கொண்டு இருக்கப் போகிறீர்கள்? உலகத்துக்கே சோறு போடுவது எப்போது. நாம காப்பாத்தலைனா இந்த உலகத்தை யார் காப்பாற்ற முடியும்? இங்க உட்கார்ந்து இருக்கும் மாணவர்களை நான் எம்.எல்.ஏ, கவுன்சிலராக பார்க்கலை, இங்க இருப்பவர்களில் ஒருத்தர்தான் நாளை ஐ.நாவில் பேசப் போகிறார், பிரிட்டிஷ் அரண்மனையில் இந்திய ஜனநாயகத்தைப் பேசப் போகிறார். நமக்கு அந்த பெருமிதமும் – ஆணவமும் வேண்டும்.

இந்த வயதிலும் நம்ம தலைவர்கள் ஜீ 8 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டேன் என்பது எந்த துணிச்சலில், பல ஒப்பந்தங்களில் கையெழுத்து போட முடியாது என கூறுவது எந்த துணிச்சலில். எல்லாம் உங்கள் மீதான் நம்பிக்கையில்தான்..

இந்தியாவில் படிப்பது என்பது 1980-ல் குடும்பத்தைக் காப்பாற்ற, 1990-ல் கிராமத்தைக் காப்பாற்ற, 2000 ஆரம்பத்தில் தேசத்தைக் காப்பாற்ற, ஆனால் இன்று இந்த உலகத்தைக் காப்பாற்ற. இதை நான் சொல்லவில்லை, பிரிக் ரிப்போர்ட் சொல்லுது. அடுத்த 7 ஆண்டுகளில் உலகில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமென்று.”

– ஸ்ஸ்ஃஃஃ செப்பா, இப்பவே கண்ணைக் கட்டுதே என்று அயர்ந்து விடாதீர்கள். இவையும் நமது 2-ம் கலாம் அள்ளி வீசிய அட்வைசு குண்டுகள்.

வார்டு கவுன்சிலராக மாறி ஒரு தெருவை மாற்றுவதற்கு பதில் ஐநா செயலர் ஆனால் ஒரே நாளில் உலகை மாற்றி விடலாம் என்று இவர் யோசித்திருப்பார் போலும்! காசா, பணமா? கனவைக் கூட கொஞ்சம் ரிச்சாகத்தான் காணுவார் போலும். ஐநாவின் யோக்கியதையை ஈரானிடமோ, இல்லை ஈராக்கிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளும் பணிவோ, பக்குவமோ இத்தகைய அமெரிக்க அடிமைகளுக்கு இருப்பதில்லை.

மூன்றில் ஒருவர் இரவு உணவு இல்லாமல் படுக்கப் போகும் இந்திய நாட்டு இளைஞர்கள் தான் உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்கிறார் கோபிநாத். நாட்டின் 77% மக்களின் தினசரி வருமானம் 20 ரூ என அரசின் புள்ளி விவரமே கூறும் நிலையில் இவர் போகச் சொல்வது யாரைக் காப்பாற்ற?

காட் ஒப்பந்தம் முதல் அணு சக்தி ஒப்பந்தம் வரை போட்டு நாட்டின் இயற்கை வளங்களையும், மக்கள் உயிரையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு நித்தம் நித்தம் காவு கொடுத்து வரும் இந்திய ஓட்டுப்பொறுக்கி அரசியல் தலைவர்களின் சாதனைகள் போபால், விதர்பா, கூடங்குளம், ஈழம் என தொடர்வதை பார்க்கலாம். இதற்கெல்லாம் ஆதாரம் தேவையில்லை.

வால்மார்ட்டை ஏன் திணிக்கிறான், என்.எல்.சி-யை ஏன் விக்கிறான் என தினசரி பேப்பர் படிப்பவனுக்கு கூட இந்த ஆட்சியாளர்கள் குறித்த மாயை அகன்று வரும் நிலையில், கோபிநாத்துக்கு தெரியவில்லை என்றால், ஒன்று அவர் ரொம்ப நாளாக தூங்கிக் கொண்டு இருக்கிறார் அல்லது அவர் ஒரு அடி முட்டாள் என்று தான் அர்த்தம். ஆனால் அப்துல் கலாம் டைப் அறிவாளிகள் காமடியனா, இல்லை வில்லன்களா என்று பிரித்தறிவு கடினம். வில்லத்தனத்திற்கான காமடியன்கள் என்று வேண்டுமானால் அறுதியிடலாம்.

இந்தியாவில் படிப்பது என்பது சுதந்திரத்துக்கு முன்னர் ஆங்கிலேயனுக்கு தேவையான மூளையினை உற்பத்தி செய்யக் கூடிய மெக்காலே கல்வி என்றால் தனியார்மயம், உலகமயம் என்ற நாசகார கொள்கையினை மன்மோகன் சிங் 1991 புகுத்திய பின்னர் அது பன்னாட்டு கம்பெனிகளின் தேவைக்கான மூளையினை உற்பத்தி செய்யக்கூடிய நவீன மெக்காலே கல்வியாக இருக்கிறது. இதை கோபிநாத்- நடத்தும் நிகழ்ச்சிகளிலேயே மாணவர்கள் சொல்லி கதறி அழுகின்றனர். “மாநில அரசு மின்சார உற்பத்தியில் ஈடுபட முடியாது, ஏன்னா மன்மோகன் சிங் கொண்டு வந்த உலகமயக் கொள்கை அப்படி” என ஆவடி குமார் போன்ற அதிமுக அடிமைகள் பேசும் அளவுக்கு உலகமயக் கொள்கைகள் புளுத்து நாறும் நாட்டில், 3 வேளை சோத்துக்கு கூட இந்த படிப்பு ஆகிறது இல்லை என சிறார்களை வேலைக்கு அனுப்பும் நாட்டில் இருந்து கொண்டு தேச நலனுக்கான தலைவர்கள், உலகத்தையே காப்பாற்றும் படிப்பு என கோபிநாத் புரூடா விடுவது ஏனோ..?

”கேம்பஸ் இண்டர்வியூ கலந்து கொண்டு வேலை வாங்கினால் மட்டும் போதாது, 3 ஆண்டுகளில் ஒரு கம்பெனியை ஆரம்பித்து முதலாளியாக மாறணும். இன்றைக்கு முதலாளியாக மாறுவதற்கு முக்கியம் முதலீடு அல்ல, வாடிக்கையாளர்கள் தான். உலகத்திலேயே மிக அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கும் நாடு இந்தியா, சீனாவில் கூட இல்லை. எனது அம்மாவை அழைத்துப் போக ஹெலிகாப்டர் வேண்டும் என கேட்கும் திமிர் வேணும் நமக்கு..”

என்று அறம் பாடுகிறார் கோபிநாத்.

நம் நாட்டில் இளைஞர்கள் அதிகம், அறிவு அதிகம் அதனால் உலகத்தை மாற்றுவோம் என்ற கோபிநாத் இப்ப என்னடா என்றால் இந்தியாவில் தான் வாடிக்கையாளர்கள் அதிகம் அதனால் முதலாளியாக மாறு என பாடம் எடுக்கிறார். வால்மார்ட் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வரை நமது நாட்டை நுகர்வோர் தேசமாகத்தான் பார்க்கும் உண்மையினை மறைத்து வெளிநாட்டு கம்பெனிக்காரன் நம் அறிவைப் பார்த்து மிரள்கிறான் என்று பொய் சொன்ன கோபிநாத் நம் நாட்டு மக்களை வெறும் நுகர்வோராக பாரு என உண்மையை போட்டு உடைக்கிறார். சரி எல்லாரும் முதலாளிகளானால் தொழிலாளிகள் யார் என்று கேட்டால் தொழிலாளிகளும், ஏழைகளும், ஏனைய சாமானியரும் கோபிநாத்தின் கருணைப் பார்வையில் இடம் பெறும் தகுதி கொண்டவர்கள் இல்லை என்பதே பதில்.

”நான் சினிமா பற்றி எண்டர்டெய்ன்மெண்ட் ஆக பேசி கைதட்டல் வாங்கியிருக்கலாம், ஆனால் பஸ்-ல் புஸ்பக் சீட்டை தள்ளத் தெரியாமல் கூச்சப்பட்டு கொண்டு இருந்த என்னை இந்தக் கூட்டம் தான் இந்த இடத்துக்கு வந்து விட்டுருக்கு. அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். எனது அடுத்த தலைமுறைக்கு விசுவாசமாக இருக்கனும்….

அரசியலுக்கு போகலாமா? வேணாமா ? என்று சிலர் கேட்கிறார்கள். நீங்க அரசியலுக்கு போங்க.. போகாமல் கூட இருக்க… ஆனா முதலில் ஓட்டுப் போடுங்க. தேசத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்கு உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே உத்தி இது. அதை செய்யாமல் ஊழல் செய்றாங்க, வடை திங்கிறாங்க.. என்பதும் அரசியல் ஒரு சாக்கடை என்பதும் தவறு. அதனால் ஓட்டு என்பது நான் ஜனநாயகவாதி என்பதற்கான அடையாளம்.”

இது கோபிநாத் இறுதியாக வீசிய கருத்துக் குண்டுகள்.

மக்களாகவே இந்த அரசியல் அமைப்பை புரிந்து கொண்டு தேர்தலை புறக்கணிக்கும் எத்தனித்தில் இருந்தாலும் இத்தகைய அப்துல் கலாம்கள் முதல் ஆனந்த விகடன்கள் வரை உடனே ஓட்டுப் போடு இல்லையென்றால் நீ விசம் கக்கி சாவாய் என்று சாபம் போட்டு மிரட்டுகிறார்கள். கேட்டால் இதுதான் ஜனநாயகமாம்! இந்த ஜனநாயகத்தின் யோக்கியதையை காஷ்மீரிலும், ஐரோம் ஷர்மிளாவிடமும் கேட்டால் பளிச்சென்று விளக்கிவிடுவார்கள். ஆனால் கோபிநாத் மருந்துக்கும் கூட இத்தகைய ஒடுக்கப்படும் இந்தியாவோடு அறிமுகம் கொண்டவரல்ல. ஒடுக்கும் முதலாளிகளின் இந்தியாவின் தூதர் அவர்.

உரையினை முடித்துகொண்ட பின் கோபிநாத்திடம் சில மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதில் ஒரு கேள்வி.

“வறுமை, லஞ்சம், வன்முறை போன்றவற்றில் இந்திய இளைஞனின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது?”  என்பது. அதற்கு கோபிநாத் சொன்ன பதில்

“முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்க பாஸ், உலகிலேயே அமைதியான நாடு இந்தியா, எல்லோருக்கும் வேலை வாங்கித் தருவது அரசாங்கத்தின் வேலை இல்லை, இது கார்ப்பரேட் உலகம், இதில் போட்டி போட்டு நீங்க தான் வேலை தேடணும். மற்றபடி ஊழல் & லஞ்சம் பற்றி நோ கமெண்ட்ஸ்”

என முடித்து கொண்டார். பாசிஸ்டுகளின் இராணுவம் புல்லட் ஃபுரூப் போட்டுக்கொள்வது போல பாசிஸ்டுகளின் உபதேசியார்கள் போட்டுக்கொள்ளும் கருத்து புல்லட் ஃபூரூப்தான் இந்த நோ கமெண்ட்ஸ்!

ஆனால் நமது கமெண்டசை நாம் நிறுத்த வேண்டியதில்லை.

“சினிமா பற்றி பேசி கைதட்டல் வாங்க முடியும், ஆனால் மக்களுக்கு விசுவாசமாக இருக்கனும்” எனும் கோபிநாத் அவர்களே, நாட்டில நடக்கிற எந்த விஷயத்திற்காவது இதுவரை மக்களுக்காக குரல் கொடுத்து உள்ளீர்களா..?

பெரிய மீடியாபர்சன் என்ற டாக்டர் பட்டம் வாங்கினதாக சொல்லும் நீங்கள் உங்கள் கண் எதிரே கூடங்குளம் மக்கள் மீதான அரசின் அடக்குமுறை ஆகட்டும், ஈழத்தில் போரை முன்னின்று நடத்திய இந்திய அரசாலும், சிங்கள இனவெறியர்களாலும் மக்கள் கொத்து கொத்தாக செத்தபோதும், அதனை தடுப்பதாக சொல்லி கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட ஓட்டுக்கட்சி தலைவர்கள் நாடகமாடிய போதும் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராகவும் ஈழத்தமிழ் மக்களுக்காகவும் வீதியில் இறங்கி மாணவர்கள், வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம் ஆகட்டும், சமச்சீர் புத்தகங்களை கொடுக்க மறுத்த ஜெயா அரசுக்கு எதிரான போராட்டம் ஆகட்டும்…. என எந்த மக்கள் போராட்டத்திற்காவது ஆதரவு கொடுத்து உள்ளீர்களா?

ஏன் உங்களை போன்று சன் டிவியில் வேலை செய்த அகிலா என்ற பெண்-க்கு பாலியல் தொல்லை கொடுத்த அதன் மேலாளர் ராஜாவுக்கும் அவனுக்கு ஆதராவாக நின்ற சன் டிவி ஓனருக்கும் எதிராக போராட்டம் வலுத்த போது ஒரு சிறு குரலையாவது பதிவு செய்து இருக்கிறீர்களா..? இல்லையே.

உலகத்தை மாற்ற முதலாளியாக மாறு என்று சொன்ன நீங்கள் இறுதியில் தேசத்தை காப்பாற்ற நம்மிடம் இருக்கும் ஒரே உத்தி ஓட்டுரிமை என ஓட்டுரிமைக்கு ஒளிவட்டம் போடுவது ஏன்?

அருந்ததி ராய், சாய்நாத் போன்ற பல பத்திரிக்கையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்தியாவின் வல்லரசு கனவையும், மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மகிமையையும் மறுக்க முடியாமல் அம்பலப்படுத்தி எழுதிவிட்ட பின்னரும் விசுவாசம், ஓட்டுப்போட்டாத்தான் ஜனநாயகவாதி என 1-ம் வகுப்பு பையனிடம் வித்தை காட்டுவது போல பேசுவது ஏன் கோபிநாத்.?

நாட்டை எப்படி காப்பாற்றணும் என போராட வர வேண்டியவர்களிடம் உலகத்தை காப்பாற்ற வாடா என ’இண்டிபெண்டன்ஸ் டே‘ படம் காட்டுவதுதான் கோபிநாத்தின் உத்தி. காப்பிரைட் அப்துல் கலாமுடையது.

மொத்தத்தில் கோபிநாத் அவர்களுக்கு நான் சொல்ல வருவது, விசுவாசம், சின்சியர் மேன் நான், என மாணவர்களை, இளைஞர்களை மொக்கையாக்காமல் பவர் ஸ்டாருடன் ஒரு நாள், ரிகார்டு டான்ஸ் விஜய் டிவி அவார்ட்ஸ் போன்ற நிறைய மொக்கை நிகழ்ச்சிகளை தயார் செய்து காம்பெயர் மட்டும் செய்தால் அதுவே இன்றைய மாணவ இளைஞர்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நல்லதாக இருக்கும்.

-தோழர் இலக்கியன், புமாஇமு

அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !

5

சிமெண்ட்டுகள் பெயர்ந்து சிதிலமடைந்த கட்டிடங்கள்; துருத்திக் கொண்டிருக்கும் துருப் பிடித்த கம்பிகள்; மேற்பூச்சு பெயர்ந்து விழுந்த பல்லிளிக்கும் மேற்கூரைகள்; பிடிமானமின்றி அந்தரத்தில் தொங்கும் ஜன்னல்கள்; பாசி படர்ந்து கருமையாகி போன நீரில்லா “நீர்த்தொட்டிகள்’; பல ஆண்டுகளாக சொட்டு நீரைக் கூட பார்த்திராத குடிநீர்க் குழாய்கள்; மலமும் சிறுநீரும் குட்டையாய் தேங்கிக் கிடக்கும் திறந்த வெளி செப்டிக் டேங்குகளாய் கழிவறைகள்; சுற்றுச்சுவரோ, மேற்கூரையோ தேவைப்படாத திறந்தவெளி குளியலறைகள்…

திகில்படக் கதையொன்றில் வரும் பங்களா பற்றிய விவரிப்புகள் அல்ல; தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகளின் அவலங்கள் இவை. விடுதி என்பதற்குரிய எந்த வித அடிப்படை வசதிகளுமற்ற வதை முகாம்களாக தமிழகமெங்கும் படர்ந்திருக்கும் 1300 ஆதி திராவிடர் நல விடுதிகளில் 97,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சொல்லொண்ணா துயரில் உழல்கின்றனர்.

இன்று, நேற்றல்ல; கால் நூற்றாண்டு அவலம் இது :

அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு

இன்று, நேற்றல்ல; கால் நூற்றாண்டு காலமாய் எவ்வித மாற்றமுமின்றி தொடரும் அருவெறுக்கத்தக்க அவலம் இது. விஞ்சிப்போனால், ஐநூறுக்கும் குறைவான விடுதிகள் புதிய கட்டிடங்களை பார்த்திருக்கலாம். இன்னும் சில விடுதிகளின் சுற்றுச் சுவர்கள் சுண்ணாம்புக் கலவைகளால் நிறம் மாற்றப்பட்டிருக்கலாம். இவற்றைத் தாண்டி வேறெந்த மாற்றத்தையோ, முன்னற்றத்தையோ கண்டிராத அரசின் சவலைப் பிள்ளைகளாக, திட்டமிட்டே ஒதுக்கிவைக்கப்பட்ட நவீன சேரிகளாக புறந்தள்ளப்பட்டிருக்கின்றன, அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள்.

ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் தங்கிப்பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணமாக 650 ரூபாயும், கல்லூரி மாணவர்களுக்கு 750.00 ரூபாயும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கிறது, ஆதி திராவிடர் நலத்துறையின் கையேடு. அரசு ஒதுக்கும் இத்தொகையில் சமையலர் தொடங்கி, விடுதிக்காப்பாளர், துறை அதிகாரிகள் வரையில் விகிதாச்சார அடிப்படையில் இவர்கள் “ஒதுக்கி’க் கொண்டது போக, மிஞ்சும் அற்பத்தொகையில்தான் மாணவர்களுக்கு கால்வயிற்றுக் கஞ்சி வார்க்கப்படுகிறது.

நேரம் தாறும், கிழமைதோறும் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு வகைகளென விடுதி சுவற்றில் தொங்கும் அரசின் அறிவிப்புப் பலகையோ, சரவண பவன் மெனுப் பட்டியலோடு போட்டி போடுகிறது. புழுத்துப்போன அரிசியின் நாற்றமோ அவித்துப் போட்ட பின்பும் விடாமல் விரட்டுகிறது, விடுதி மாணவர்களை. சாம்பாருக்கும், ரசத்திற்குமான வேறுபாட்டை மிதக்கும் காய்களைக் கொண்டே பிரித்தறிய முடியும். கழனித் தண்ணீரைப் போல சற்று கலங்கலாக இருந்தால் அது மோர் என்று பொருள் கொள்ள வேண்டும். இளைத்துப் போன முட்டைகள்; உருளைக்கிழங்கில் புதைந்து போன இறைச்சித் துண்டுகள்; என வெந்ததைத் தின்று விதியெனப் புலம்பி காலந்தள்ளுகின்றனர், விடுதி மாணவர்கள்.

எம்.சி.ராஜா விடுதி மாணவர்களின் போராட்டம்.
எம்.சி.ராஜா விடுதி மாணவர்களின் போராட்டம்.

பெரும்பாலான விடுதிகளில் என்றல்ல, உறுதிபட அடித்துக் கூறலாம் அனைத்து விடுதிகளிலும விடுதிக் காப்பாளர்கள் ஒரு நாளும் இரவு தங்குவதே இல்லையென்று! ஆண்டுக்கொருமுறை விடுதி சேர்க்கையின் பொழுது, ஆளுக்கொரு நூறோ இருநூறோ இலஞ்சப்பணம் வாங்குவதும்; ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கணக்கிட்டு சமையலரிடம் ஒப்படைப்பதும்; விருந்தினரைப் போல சட்டையின் மடிப்புக் கலையாமல் விடுதியை பார்வையிட்டு செல்வதும்தான் விடுதிக் காப்பாளர்களின் அலுவல் என்பதுதான் எழுதப்படாத விதியாக இருக்கிறது.

பழம் தின்று கொட்டை போட்டவர்கள் விடுதிக் காப்பாளர்கள். பத்து ரூபாய் செலவு செய்து விட்டு நூறு ரூபாய்க்கு பில் எழுதி பணம் பண்ணும் “யோக்கிய’ சிகாமணிகள் இவர்கள். விடுதிக் காப்பாளர்களிடம் பேசிப் பாருங்கள் “என் கை காசு போட்டு செலவு பண்ணிருக்கேன் சார். இன்னும் பில் சேங்சன் ஆகவில்லை” என்று புலம்புவார்கள். ஏதோ, இவர்களது மொத்த சம்பளப் பணத்தில்தான் விடுதி மாணவர்களின் பசியாற்றுவதைப் போல நம்மிடம டீ ஆத்துவார்கள்.

கதவில்லா கழிவறைகள்.
பயன்படுத்தவியலாத, கதவில்லா கழிவறைகள்.

விடுதிக் காப்பாளர்கள் இல்லாத நேரங்களிலெல்லாம், சமையலர்கள்தான் விடுதிக் காப்பாளர் எல்லாமும். பாத்திரம் கழுவுவதும், காய்கறி நறுக்குவதும், சமையல் வேலையில் எடுபிடி வேலைகளை மேற்கொள்வதும் விடுதி மாணவர்கள்தான்.

இங்கு மட்டுமல்ல; தமிழகமெங்கும் தொடரும் அவலம் :

சமீபத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதி மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தூத்துக்குடி கடற்கரையையொட்டி அமைந்துள்ள அவ்விடுதிக் கட்டிடங்களை உப்புக்காற்று அரித்து தின்றிருந்தது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பயிலும் அந்த விடுதியில் ஒரு கழிவறை கூட உருப்படியாக இல்லை. கடற்கரைதான் அவர்களின் திறந்தவெளிக் கழிவறை. அதைவிடக் கொடுமை, விடுதியில் குடிக்க சொட்டுத் தண்ணீரில்லை. உணவு பரிமாறும் நேரங்களில் மட்டும்தான் சமையலறை திறக்கப்படும். மாணவர்கள் தமக்குத் தேவையான தண்ணீரைப் பாட்டில்களில் (மட்டும்தான்) பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பாட்டில் நீர் தீர்ந்து விட்டால், கடை வீதிக்குச் சென்று கடைகளில் தண்ணீர் கேட்டு தாகம் தீர்த்துக் கொள்ள வேண்டும். “நைட்ல தாகம் எடுக்கவோ… ஒன்னுக்குப் போகவோ கூடாதுன்னு நினைச்சிட்டே படுத்துப்போம்” என்றான் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன்.

மேற்கூரை பெயர்ந்து விழும் விடுதி கட்டிடம்.
மேற்கூரை பெயர்ந்து விழும் அவலநிலையில் விடுதி கட்டிடம்.

“ஒரு சில மாவட்டத்தில் அதுவும் ஒரு சில விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதற்காக, தமிழகத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் அனைத்தையும் குறை சொல்ல முடியுமா?” என்ற கேள்வி இங்கே எழுவது இயல்பானதுதான்.

அழுகிய தக்காளி காய்கறிகளையும், புழுத்து நாறும் சோற்றையும் சாலையில் கொட்டி, தமிழகத்தின் பல பகுதிகளில் இவ்விடுதி மாணவர்கள் தன்னெழுச்சியாகவும், மாணவர் அமைப்புகளின் தலைமையில் அணி திரண்டு போராடியதையும், இப்பாராட்ட செய்திகளின் மூலம் அவ்விடுதிகளின் அவலத்தையும் நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்கிறோம்தான்!

  • தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது சிதிலமடைந்த மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயமுற்றதைக் கண்டித்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நடைபெற்ற திருச்சி மன்னார்புரம் அண்ணா ஸ்டேடியம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதி மாணவர்களின் போராட்டம் (23.09.2009);
  • விடுதியின் சீர்கேட்டை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடத்திய எம்.சி.ராஜா விடுதி மாணவர்கள் (21.11.2011);
  • மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழிகாட்டுதலில் திருச்சி காட்டூர் ஆ.தி.ந.மகளிர் விடுதி மாணவிகளின் போராட்டம் (2012);
  • ம.க.இ.க. வழிகாட்டுதலில், வேலூர் ஆ.தி.ந. முதுகலை மாணவர் விடுதி மாணவர்கள் நடத்திய போராட்டம் (2012);
  • கடலூரில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் நிலவும் அவலங்களையும் முறைகேடுகளையும் கண்டித்து அம்மாணவர்களை அணிதிரட்டி பு.மா.இ.மு. நடத்திய பாராட்டம் (19.09.2013);
  • சேலம் ஆ.தி.ந. கல்லூரி விடுதி மாணவர்களின் போராட்டம் (2013)
எம்.சி.ராஜா விடுதி
எம்.சி.ராஜா விடுதி

ஆகியவற்றை நினைவுக்கு தெரிந்த உதாரணங்களாகச் சொல்லலாம். பத்திரிக்கைகளில் பெட்டி செய்தியாகக் கூட இடம் பெறாமல் போன மாணவர்களின் போராட்டங்கள் தனிக்கணக்கு.

இவையெல்லாம் உணர்த்துவது, தமிழகம் முழுவதிலும் உள்ள விடுதிகள் அடிப்படை வசதிகளற்ற அவல நிலையில் உள்ளது என்பதை மட்டுமல்ல, ஆண்டுக் கணக்கில் இவ்விடுதி மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும் தீர்க்கப்படாமல இருக்கிறது என்பதையும்தான்!

சந்தேகமென்றால், உங்கள் மாவட்டத்தில் இயங்கும் ஏதேனும் ஒரு அரசு ஆதி திராவிடர் நல விடுதிக்கு சென்றுதான் பாருங்களன். விடுதியின் சுற்றுச் சூழலையும், அச்சுகாதாரக் கேட்டுக்கு மத்தியிலும் காலம் தள்ளும் மாணவர்களையும் சந்தித்துப் பேசிப் பாருங்கள், உண்மை விளங்கும்.

அவலத்தில் காசு பார்க்கும் அல்லக்கைகளும் அதிகார வர்க்கமும் :

விடுதி சமையலர் தொடங்கி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் வரையில், அடிமுதல் நுனி வரை வேர்விட்டிருக்கிறது, இலஞ்சமும் முறைகேடுகளும்.

எம்.சி.ராஜா விடுதியில் ‘அழையா விருந்தாளி’
எம்.சி.ராஜா விடுதியில் ‘அழையா விருந்தாளி’

விடுதி மாணவர்களுக்கான சேர்க்கையிலேயே தொடங்கி விடுகிறது இலஞ்சமும் அதிகார முறைகேடுகளும். விடுதி செயல்படும் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்களும், கல்விக் குழு உறுப்பினர்களும், தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருப்பதால் இங்க சகட்டு மேனிக்கு இலஞ்சம் புகுந்து விளையாடுகிறது. திருச்சி கண்டோண்மெண்ட் மகளிர் விடுதிக்கு, காண்டிராக்ட் முறையில் காய்கறி சப்ளை செய்யும் ஆளும் கட்சி பிரமுகர்தான், அவ்விடுதியின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார் என்பதிலிருந்த இந்த எளிய “உண்மை’ விளங்கும். பேருந்து நிலையக் கழிப்பறையை காண்டிராக்ட் எடுப்பதைப் போல, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையென ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில்தான், அவர்களின் கண்ணசைவில்தான் பயனாளிகளின் தேர்வு நடைபெறுகிறது.

ஆளும் கட்சி அமைச்சரின் பெயரை சொல்லிக் கொண்டும், எம்.எல்.ஏ.வின் சிபாரிசுக் கடிதத்தை வைத்துக் கொண்டும் இவர்களது அல்லக்கைகள் பண்ணும் அலப்பறைகளுக்கு அளவில்லை. விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பத்தோடு 5,000 முதல் 8,000 வரையில் காந்தி காகிதத்தையும் சேர்த்து இவர்களிடம் கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு சீட் கன்பார்ம். இல்லை, “நான் இலஞ்சம் கொடுக்க மாட்டேன், விடுதியில் சேருவதற்கான எல்லா தகுதிகளும் எனக்கு இருக்கிறது? நான் ஏன் தேவையில்லாமல் இலஞ்சம் கொடுக்க வேண்டுமென்று” கொள்கை குன்றாக நீங்கள் இருப்பீர்களேயானால், உங்களுக்கு இடம் கிடைத்த மாதிரிதான்!

ஆதாரம் வேணுமா ?

அதிலும் குறிப்பாக, கல்லூரி விடுதி மாணவர் சேர்க்கையில் இலஞ்சம் கொடுக்காமல் நீங்கள் ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கிறது, திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரது அனுபவம்.

திருச்சி நகரில் பத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் பயிலும் ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்கள் தங்கிப்பயில ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கென அண்ணா ஸ்டேடியம் அருகில் ஒரு விடுதியும், முதுகலை மாணவர்களுக்கென ராஜாகாலனி அருகில் ஒரு விடுதியும்தான் உள்ளது. மகளிருக்கோ கண்டான்மெண்ட் பகுதியில் இயங்கி வரும் ஒரே ஒரு விடுதிதான் இருக்கிறது.

அவலநிலையில் விடுதியின் முகப்பு.
அவலநிலையில் விடுதியின் முகப்பு.

ஆண்டொன்றிற்கு 60 இடங்களுக்கு மேல் இவர்கள் மாணவர்களைத் தேர்வு செய்வதில்லை. கிராமப்புறங்களிலிருந்து தினமும் பேருந்துப் பயணம் மேற்கொண்டு கல்லூரிக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்களாடு ஒப்பிடும் பொழுது, இந்த எண்ணிக்கை யானைப் பசிக்கு சோளப்பொரி கதைதான். இந்த 60 இடங்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் முட்டி மோதுகின்றனர். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, மாணவர் சேர்க்கைக்கு ஆயிரக்கணக்கில் இலஞ்சம் வாங்குகின்றனர். இது ஒரு புறமிருக்க, அரசு விடுதியில் இடம் கிடைக்காத மாணவர்களைக் குறி வைத்து பல தனியார் மாணவ, மாணவியர் விடுதிகள் கல்லா கட்டி வருவது தனிக்கதை.

திருச்சி மாவட்டத்திலிருந்து 50 கி.மீ தொலைவிலிலுள்ள கிராமப்புறத்திலிருந்து திருச்சி நகரில் இயங்கும் அரசு உதவி பெறும் கல்லூரியொன்றில் பயிலும் மாணவி அவர். கல்லூரி மாணவியருக்கான ஆ.தி.நலத்துறையைச் சேர்ந்த கண்டான்மெண்ட் மகளிர் விடுதியில் சேருவதற்கு விண்ணப்பிக்கிறார்.

மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட புகார்
மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட புகார்

பள்ளி இறுதித் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண், பெற்றோரின் ஆண்டு வருமானம், பயண தூரம், அவரது சாதி, அனைத்தும் விதிகளுக்குட்பட்டுதான் இருக்கிறது. ஆனாலும், விடுதி மாணவியரின் தேர்வுப் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. பேருந்து பயணத்தின் பொழுது, அறிமுகமான அவரது தோழியோ, “8000 காசு கொடுத்தேன். எம்.எல்.ஏ. பரிந்துரை கடிதம் வாங்கிக் கொடுத்தேன். எனக்கு செலக்சன் ஆயிருச்சி” என வெள்ளந்தியாக உண்மையைப் போட்டுடைத்திருக்கிறார்.

மாணவியர்களிடமிருந்து, எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன? தகுதியுள்ள எத்தனை பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டன? என்பதெல்லாம் பரம இரகசியம். எம்.எல்.ஏ., பரிந்துரை கடிதங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களுக்கு இங்கே மதிப்பு இல்லை. இவ்வாறுதான் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டுமென்று, அரசாணை ஆயிரம் விதிமுறைகளை வகுத்து சொல்லட்டும்; அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. துட்டு இருக்கா? எம்.எல்.ஏ. ரெக்கமென்டசன் இருக்கா? ரெண்டுதான் இங்க முக்கியம்.

60 மாணவர்களுக்கும் தலா 5000 என்று கணக்கிட்டால் கூட, ஆண்டொன்றுக்கு மூன்று இலட்சம் ரூபாய் இலஞ்சம் கைமாறுகிறது. அமைச்சர்களின் அல்லக்கைகளான இந்த அடிப்பொடிகளுக்கு ஆண்டுக்கொருமுறை இது கூட கிடைக்கவில்லையென்றால், எதற்கு கட்சிப்பதவி, கவுன்சிலர் பதவி என்பது அவர்களது உள்ளக்கிடக்கை.

ஆதி திராவிடர் நலத்துறையா? ஆளும் கட்சியின் கூலிப்படையா?

முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட புகார்
முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட புகார்

“கண்டோன்மெண்ட் கல்லூரி மாணவியர் விடுதி மாணவியர் சேர்க்கையில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாமே? தேர்வுக்குழு உறுப்பினர்கள் இலஞ்சப்பணம் பெற்றுக்கொண்டு பயனாளிகளை தேர்வு செய்துள்ளதாக பேசப்படுகிறதே?” என்ற கேள்விக்கு, ஆதி திராவிடர் நல அலுவலர் முருகையனிடமிருந்து இதுவரை நேரடியாகப் பதிலில்லை. அவரது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட பொழுது, மருத்துவ முகாம் ஒன்றில் இருப்பதாக தெரிவித்த அவர் பின்னர் தொடர்பு கொள்வதாகக் கூறினார். தொடர்ச்சியாக நாமும் அவரை தொலைபேசியில் அழைத்த பொழுதெல்லாம் அழைப்பை ஏற்கத்தான் அவர் தயாரில்லை. ஆதி திராவிடர் நலத்துறையின் தனி வட்டாட்சியர் இரவிச்சந்திரனோ பட்டும் படாமல் பேசுகிறார். “”வெல்பேர் ஆபிசர்ட்ட பேசினேன். செலக்சன் சரியாத்தான் நடந்துருக்குன்னு சொல்லிட்டாரு…” என்றார். இடைமறித்து “அவர் சொல்வது இருக்கட்டும்; நீங்க என்ன சார் சொல்றீங்க” என்ற ளேள்விக்கு… “எனக்கு மேலே ஆபிசர் இருக்கிறப்ப.. நான் கருத்து சொல்லக் கூடாது சார்” என்பது அவரது பதில். “என்ன சார் நீங்கதான் ஸ்ட்ரெய்ட் பார்வர்டு ஆபிசர்னு டிபார்ட்மென்ட்ல பேசிக்கிறாங்க… நீங்களே இப்படி சொல்லலாமா?” என்ற கேள்விக்கு “அதுதான் சார் இங்க பிரச்சினையே” என்கிறார் அவர்.

இதே பிரச்சினையை ஆதி திராவிடர் நலத்துறையின் நலக்குழு உறுப்பினரான கலைச்செழியனிடம் கொண்டு சென்றோம். “எதையும் ஆதாரத்தோடதான் தம்பி நாம டீல் பண்ணணும்; எடுத்தேன் கவிழ்த்தேனு பண்ணிடக் கூடாது… ஆய்வு பண்ணுவோம். நீங்க சொல்ற மாதிரி இருந்ததுனா நடவடிக்கை எடுக்கலாம்” என்றார் அவர். அவரும் நீ…ண்ட ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வுகளின் முடிவில்.. “டிபார்ட்மெண்ட்ல பேசிட்டேன்.. மேலிடம் சம்பந்தப்பட்டதா இருக்கு தம்பி.. அவங்க (சிட்டிங் எம்.எல்.ஏ. பரஞ்சோதி; அ.தி.மு.க. கொறடா மனோகரன் வகையறாக்கள்!) டிக் பண்ணி தர்றதை செலக்சன் லிஸ்ட் ல கொண்டு வர்ராம் எங்களால என்ன பண்ண முடியும்னு கேட்கிறாங்க” இது அவரது பதில். அட இதுக்கு எதுக்கு சார் ஆய்வு எல்லாம்.

ஆதி திராவிடர் நலத்துறை அலுவலரும், தனி வட்டாட்சியரும், நலக்குழு உறுப்பினரும் இலஞ்சம் வாங்கினார்கள் என்பதல்ல நமது குற்றச்சாட்டு. தேர்வுக்குழு உறுப்பினர்கள் இலஞ்சப்பணத்தைப் பெற்றுக்கொண்டு, அரசு விதிகளை புறந்தள்ளிவிட்டு தமது விருப்பப்படிதான் பயனாளிகளைத் தேர்வு செய்துள்ளனர் என்ற புகார் மீது அவர்கள் காட்டும் அலட்சியம்தான் இங்கே கவனிக்கத்தக்கது. “நான் யார்கிட்டேயும் கை நீட்டி காசு வாங்கல.. நமக்கென்ன வம்பு” என ஒதுங்கிப் போவதை என்ன வென்று சொல்வது?

இதே புகாரை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். 29.08.2013 இல் இணைய வழி கோரிக்கை பிரிவில் அளித்த புகாருக்கு “மனு பரிசீலனையில் இருக்கிறது” என்ற ஒற்றை வரி பதிலுக்கு மேல் மரியாதை இல்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட இதே புகாரை, “அரசு விதிமுறையின் படிதான் தேர்வு நடைபெற்றுள்ளது” எனப் பதிலளித்து பத்தே நாளில் மூடி விட்டார்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியும் இம்முறைகேடு தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுவரை பதில்தான் வந்து சேரவில்லை.

சரி, நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க?

அட, சொல்றதுக்கெல்லாம் இனி ஒண்ணும இல்லீங்க. செய்யறதுக்குத்தான் கடமைகள் நிறைய இருக்கு. இப்போ நாம பேசிகிட்டிருக்கிற இந்த ஆதி திராவிடர் விடுதிகள் எல்லாம் சந்திர மண்டலத்திலயா இருக்கு? தமிழகத்துலதான இருக்கு? இந்த விடுதிகளின் அவலம் பற்றி அதிகாரிகள் யாருக்கும தெரியாதா என்ன? அதிகாரிகளுக்குத் தெரியாமல்தான் விடுதி காப்பாளர்கள் மட்டத்திலேயேதான் நாம் பட்டியலிடும் இலஞ்ச முறைகேடுகளும் நிர்வாக சீர்கேடுகளும் நடைபெறுகின்றனவா என்ன?

கொடநாட்டிலும், கோபாலபுரத்திலும் போராட்டம் நடத்தாதது ஒன்றுதான் பாக்கி என்ற அளவிற்கு, ஆண்டுக்கொரு முறை தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறும் இவ்விடுதி மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் பலவும் விடுதிகளின் அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ள போதிலும், அவை தீர்க்கப்படவில்லையே, என்ன காரணம்?

ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் அமைப்பாக அணி திரள்வதும்; அடையாளப் போராட்டங்களும் அதனைத் தொடர்ந்த அதிகார வர்க்கத்தின் கண்துடைப்பு நடவடிக்கைகளையும் கண்டு மயங்காமல்; தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதும்தான் இன்றைய தேவை என்பதை, இவையெல்லாம் உணர்த்தவில்லையா?

“தரமான உணவுகள் வழங்கப்படுகின்றன” எனக் கூசாமல் பேசும் கனவான்களை விடுதிக்கு அழைத்து “‘விருந்து’ கொடுப்போம்! “கழிவறை கட்டித் தா!” எனக் கேட்டு ஓய்ந்தாயிற்று, ஆ.தி.நலத்துறை அலுவலக முற்றத்தில் அவற்றை “இறக்கி’ வைப்போம்!

போராட்ட முறைகளில் மட்டுமல்ல; போராடும் சங்கத்திலும் மாற்றம் வரட்டும். அது, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியாக இருக்கட்டும்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

– இளங்கதிர்

ஓசூர்: தொழிலாளர் நல அலுவலரா, முதலாளி நல அலுவலரா ?

0

கமாஸ் வெக்ட்ரா ஆலை நிர்வாகத்தின் சட்டவிரோத செயலுக்கு துணை போகின்ற தொழிலாளர் நல அலுவலர் லக்சுமிநாரயணனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

னரக வாகனங்களைத் தயாரித்து வரும் பன்னாட்டு நிறுவனமான கமாஸ் வெக்ட்ரா ஆலை ஓசூரில் இயங்கி வருகிறது. இவ்வாலைத் தொழிலாளர்கள் அனைவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளைச் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சங்கம் அமைப்பது என்பது மிகப் பெரிய சவாலாக உள்ள சூழ்நிலையில் கடுமையாகப் போராடி ஓசூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் போராதரவுடன் சங்கத்தை அங்கீகரிக்க வைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒப்பந்தமும் போடப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தை தலைநிமிர வைத்த வரலாற்று சம்பவம் ஏற்கனவே ஓசூர் மக்கள் அனைவரும் அறிந்ததே.

hosur-lo-1தற்போது, கடந்த காலத்தில் போடப்பட்ட சட்டபூர்வமான 12(3) ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் அனைவரும் மதித்து பின்பற்றி வருகின்றனர். ஆனால், நிர்வாகமோ அந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் அலட்சியப்படுத்தி சங்க நிர்வாகிகள், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதும், வெளி மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்வதும், மேலும் ஒப்பந்த சரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார பலன்களை தராமல் ஏமாற்றியும் வருகிறது. அது மட்டுமின்றி ஒப்பந்தத்தில் நிர்வாகம் ஏற்றுக் கொண்ட உற்பத்திக்கு மேல் உற்பத்தி போடச் சொல்லி தொழிலாளர்களை மிரட்டி வருகிறது ஆலை நிர்வாகம். தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்டு சங்கம் சார்பாக புகார் கடிதம் 2K வழக்குகள், பிரிவு 29-ன்கீழ் ஒப்பந்தமீறல் நடவடிக்கை மேற்கொள்ள தொழிலாளர் நல அலுவலரிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது.

ஆனால், தொழிலாளர் நல அலுவலர் திரு. லக்சுமிநாரயணன் அவர்கள் இவை எதற்கும் சிறிதளவும் இதுரையிலும் செவி சாய்க்கவில்லை. மாறாக, நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். மக்களின் வரிப் பணத்திலிருந்து சம்பளம் பெறும் தொழிலாளர் நல அலுவலர் சட்டபூர்வமான அவரது கடமையை நிறைவேற்ற மறுத்து சட்டவிரோத கிரிமினல் ஆலை நிர்வாகத்திற்கு துணை செல்லும் போக்கை மக்களிடையே அம்பலப்படுத்தும் முகமாக 11.11.2013 காலை 11.30 மணியளவில் கையில் செங்கொடிகளை உயர்த்திப் பிடித்து முழக்கமிட்டபடி தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கமாஸ் வெக்ட்ரா ஆலைத் தொழிற்சங்கத்தின் தலைவர் தோழர்.செந்தில் தலைமை தாங்கினார். டி.வி.எஸ் அரிதா ரப்பர் நிறுவனத்தினால் வேலை நீக்கம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளி திரு. கோபால கிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். இவரது பிரச்சினையிலும் கூட தொழிற்தாவா எழுப்பி நீதி கேட்டுப் போராடி வந்துள்ளார். 45 நாட்களில் சட்டப்படி முடிக்கப்பட வேண்டிய பிரச்சினையை முடிக்காமல் டி.வி.எஸ் நிர்வாகத்திற்கு சார்பாக இழுத்தடித்து இழுத்தடித்து மனஉளச்சலுக்கு உள்ளாக்கி வருகிறார் என அம்பலப்படுத்தி கண்டன உரையாற்றிப் பேசினார்.

புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் மாவட்டத்தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். இறுதியாக, கமாஸ் வெக்ட்ரா ஆலையின் தொழிலாளி தோழர் மதன் நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் கூடி நின்று ஆதரித்துச் சென்றனர். நூற்றுக்கணக்கில் சுவரொட்டியும், ஆயிரக்கணக்கில் துண்டறிக்கையும் வெளியிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரச்சாரத்தை கண்ணுற்ற தொழிலாளர்கள் இப்படித்தான் போராட்டம் செய்யவேண்டும் என கருத்து தெரிவித்து தங்களது ஆதரவைப் பதிவுசெய்துச் சென்றனர்.

———————————————————————————————-

பிரச்சாரத்தின்போது விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் :

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே!

hosur-lo-noticeஓசூரில் கனரக வாகனம் லாரி உற்பத்தி செய்யும் கமாஸ் வெக்ட்ரா எனும் பன்னாட்டு கம்பெனி இயங்கி வருகிறது. ஊதிய உயர்வு கோரி கோரிக்கை எழுப்பி கடந்த 2010-ல் 6 மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஆலையின் போர்டு ஆப் டைரக்டர்களின் ஒப்புதல் பெற்று கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலர் முன்பு சட்டபூர்வமான முத்தரப்புப் பேச்சு வார்த்தையின்மூலமாக 12 (3) ஒப்பந்தம் போடப்பட்டது. ஏறக்குறைய இந்த ஒப்பந்தத்தின் பலனாய் கடந்த மூன்றரை ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட லாரிகளை 560 கோடிக்கு விற்று ரூபாய் 168 கோடி சம்பாதித்துள்ளது நிர்வாகம்.

இதற்கு அடிப்படையாக வேர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி இளந்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ரூ.7,000, போனஸ் ரூ.8,400,பரிசுப் பொருள் ரூ 5,000 உள்ளிட்ட பொருளாதார பலன்களை தராமல் ஏமாற்றி வருகிறது நிர்வாகம். அது மட்டுமின்றி ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டுள்ள இரண்டு லாரிகளுக்கு பதிலாக மூன்று லாரிகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தினந்தோறும் மிரட்டி வருகிறது நிர்வாகம். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்பாகவே போடப்பட்ட ஒப்பந்தப்படி நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டுமென தொழிற்சங்கம் கோரியது.

அதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தை கழிவறை காகிதமாய் கருதி தொழிற்சங்கத்தை உடைக்கவும், நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டவும் கண்மூடித்தனமாக தாக்குதலில், கமாஸ் வெக்ட்ரா நிர்வாக அதிகாரிகள் ராஜு , ஆறுமுகம்(எச். ஆர்.ஜி.எம்) ஜேக்கப் லியாண்டர் (ஐ.ஆர்.ஏ.ஜி.எம்) ஈடுபட்டு வருகின்றனர். 13 தொழிலாளர்கள் சஸ்பெண்ட், 5 தொழிலாளர்கள் வட மாநிலங்களுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இதில் 5 தொழிலாளர்களுக்கு இன்றளவும் விசாரணை என்ற பெயரில் வேலை தராமல் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். உச்சகட்டமாக இரண்டு சங்க நிர்வாகிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். ஆக ஆலை நிர்வாகமும், அதிகாரிகளும் சொகுசாக இருக்கின்றனர். தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் 12 (3) ஒப்பந்தப்படி நடக்காமலும் சம்பள உயர்வு தராமலும், சஸ்பெண்ட், வேலைநீக்கம் செய்து தொழிலாளர்களை கொலைப்பட்டினிப் போட்டு தாக்கும் கமாஸ் வெக்ட்ரா நிர்வாகத்தின் மீது தொழில் தகராறு சட்டம் பிரிவு29-ன் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் தொழிலாளர் நல அலுவலர் திரு. லக்சுமி நாரயணன். ஆலை முதலாளியும், அதிகாரிகளும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதும், தொழிலாளர்களின் மீது சட்ட விரோதமாக தாக்குவார்கள் என்பதும் உலகறிந்த உண்மையாகும். இதிலிருந்து மீட்கத்தான் தொழிலாளர் நலத்துறை உள்ளது. ஆக சட்டபூர்வ உரிமைகளை பாதுகாத்து தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய தொழிலாளர் அலுவலர் லக்சுமிநாரயணன் யாரிடமோ தொலைபேசியில் ஆலோசனை நடத்தி விட்டு வழக்கு நடத்தாமல் வாய்தா போட்டு தொழிலாளர் உரிமைகளுக்கு சமாதி கட்டுகிறார்.

hosur-lo-2சட்டபூர்வ உரிமைகளை பாதுகாக்க கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலகத்தை நாடும் டி.வி.எஸ் ஹரிதா ரப்பர், கார்போரண்டம், மீல் ஆட்டோ, உள்ளிட்ட பல ஆலைத் தொழிலாளர்களின் கழுத்தையும் நெறிக்கிறார் லக்சுமிநாராயணன். சட்டத்தை மதிக்காத முதலாளிகளும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் திட்டமிட்டு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக செயல்படுகின்றனர். ஆக நம் முன்னால் இரண்டு வழிகள்தான் உள்ளது. ஒன்று ஏ.பி.எல், உமாமகேஷ்வரி, இண்டிகார்ப் தொழிலாளர்களைப்போல் தற்கொலை செய்து கொள்வதா? மற்றொன்று, தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட மரபுப்படி உரிமைகளைக் காக்க போராடுவதா? முதலாளிகளின் அடக்குமுறை, தொழிலாளர் நல அலுவலர் லக்சுமிநாரயணன் போன்றோரின் துரோகத்தைக் கண்டு நாம் சாகமுடியாது. நமது மரபுப்படி தொழிலாளர்களை ஒன்று திரட்டுவோம். போராடுவோம். அந்தவகையில் போராடும் கமாஸ்வெக்ட்ரா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவுத் தாரீர்!

தொழிலாளர் நலத்துறையே!

ஐ.டி ஆக்ட் 12(3) ஒப்பந்தத்தை மதிக்காத கமாஸ்வெக்ட்ரா நிர்வாகத்தின்மீது பிரிவு 29-ன்கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்திரவுப்போடு !

கிரிமினல் முதலாளிகள் அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் கிருஷ்ணகிரி தொழிலாளர் நல அலுவலர் லக்சுமிநாரயணன்மீது நடவடிக்கை எடு.

தொழிலாளர்களே!

வர்க்கமாய் அணிதிரள்வோம்!

உரிமைப் பறிப்பு, அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்!!

முதலாளித்துவப் பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!!!

————————————————————————————————————————–
தொடர்புக்கு :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, செல்-9788011784.
————————————————————————————————————————

சி.பி.எம் : சமூக விரோதக் கழிசடைகளின் புகலிடம் !

1

திரிபுரா மாநிலத்தில் அரசுப் பணிகளுக்கான அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரராகத் தொழில் செய்து வருகிறார் சி.பி.எம். கட்சியின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினரான சமர் ஆச்சார்ஜி. திரிபுராவின் தலைநகர் அகர்தலா உள்ளிட்ட மூன்று நகராட்சிகளில் ஏழை மக்களுக்காக 2,400 கழிப்பறைகளைக் கட்டித்தர அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரசிடமிருந்து ஒப்பந்தப் பணிகளை எடுத்துள்ளார். இதன் மூலம் ரூ. 2.5 கோடி வரை சம்பாதித்துள்ள அவர், கடந்த அக்டோபர் 10-ஆம் தேதியன்று தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20 லட்சத்தை ரொக்கப் பணமாக எடுத்து வந்து மெத்தை மீது விரித்து, அதன் மீது படுத்துக் கொண்டு சில நோட்டுக் கட்டுகளை தன் மீது பரப்பிக் கொண்டு, அக்காட்சியைத் தனது செல்பேசி கேமரா மூலம் பதிவு செய்து தனது நண்பர்களுக்கு பெருமிதத்துடன் அனுப்பியுள்ளார். இது தனது வாழ்நாள் கனவு என்றும், இப்போதுதான் அது நிறைவேறியுள்ளது என்றும், கட்சியின் பிற தலைவர்களைப் போல பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டு சம்பாதித்த சொத்துக்களை மறைத்து ஏழையைப் போல நடிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.  இந்த வீடியோவை அவரது நண்பர் ஒருவர் உள்ளூர் தொலைக்காட்சிக்குக் கொடுக்க, அது நாடெங்கும் இப்போது ஒளிபரப்பாகி, ஊழல் பெருச்சாளிகளான காங்கிரசுக்காரர்களே காறித்துப்புமளவுக்கு சி.பி.எம். கட்சியின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது.

சமர் ஆச்சார்ஜி
பணக் கட்டுகளை மெத்தை மீது விரித்து படுத்துப் புரளும் போலி கம்யூனிஸ்டு சமர் ஆச்சார்ஜி.

இது பற்றி சமர் ஆச்சார்ஜியிடம் விளக்கம் கேட்டு, அது ஏற்புடையதாக இல்லாததால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து கடந்த அக்டோபர் 19 அன்று நீக்கி விட்டோம் என்கிறது, சி.பி.எம். கட்சியின் திரிபுரா மாநிலக் குழு. அரசு ஒப்பந்ததாரர் எப்படிக் கட்சி உறுப்பினராக இருக்க முடியும் என்பதையோ, இப்படி ஊழல் செய்து முறைகேடாகச் சம்பாதித்ததையோ சி.பி.எம். கட்சி ஒரு குற்றமாகக் கருதவில்லை. பணத்தில் படுத்துப் புரண்டு அதை வீடியோ எடுத்து வெளிச்சம் போட்டுக் காட்டியதுதான் அக்கட்சிக்குப் பெரிய குற்றமாகி விட்டது.

புரட்சி சவடால் அடிக்கும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியே அல்ல. அது, பிழைப்புவாதிகள், ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல் குண்டர்களின் கட்சிதான். திரிபுராவில் மட்டுமின்றி, திருவாரூர் மாவட்ட சி.பி.எம். கட்சியினரும் இதை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, நிலவுடமை ஆதிக்கத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களில் உறுதிமிக்கப் போராளியாகத் திகழ்ந்தவர்தான், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திலுள்ள திட்டாணி முட்டம் கிராமத்தைச் சேர்ந்த தோழர் சின்னப்பா. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதோடு, பண்ணையடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளைத் திரட்டி சவுக்கடி, சாணிப்பால் கொடூரங்களுக்கு எதிராகப் போராடிய முன்னுதாரணமிக்க கம்யூனிஸ்டாக அவர் திகழ்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட பின்னர் சி.பி.எம். கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், மாவட்டம் முழுவதும் சைக்கிளிலேயே பயணித்து விவசாயிகள் சங்கத்தைக் கட்டியமைக்கவும், திட்டாணி முட்டம் கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருந்த புறம்போக்கு நிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குடிசைகள் கட்டிக் கொடுக்கவும் அரும்பாடுபட்டார்.

தோழர் சின்னப்பா
திட்டாணி முட்டம் கிராமத்தில் புரட்சிகர-ஜனநாயக சக்திகளால் நிறுவப்பட்டுள்ள தோழர் சின்னப்பா அவர்களின் நினைவுக் கல்வெட்டு (வலதுபுறம்) தோழர் சின்னப்பா.

இத்தகைய தியாகச் செம்மலாகத் திகழ்ந்த சின்னப்பா, தான் கட்டி வளர்த்த சி.பி.எம். கட்சியினரே ஊர்ச்சொத்தைக் கொள்ளையடிப்பதையும், பொது நிதியை பொய்க்கணக்கு காட்டி ஏய்ப்பதையும், அப்பாவிக் கூலித் தொழிலாளிகளைச் சாதியக் கட்டுமானப்படி ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதையும் ஒரு மூத்த கம்யூனிஸ்டு என்கிற முறையில் எதிர்த்தார். இதனால் பிழைப்புவாத சி.பி.எம். கட்சித் தலைமையின் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.

திட்டாணி முட்டம் கிராமத்தில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி கலைச்செல்வி யின் கணவரும் சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவருமான டி.முருகையன், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் சாலை அமைப்பது என்ற பெயரில் சின்னப்பாவின் விளைநிலத்தை ஆக்கிரமித்து, அவர் வளர்த்த மரங்களை வெட்டிச் சாய்த்தார். இதை எதிர்த்து நியாயம் கேட்ட சின்னப்பா மற்றும் அவருக்கு ஆதரவாக நின்றவர்களை கிராமக் கமிட்டி கூட்டத்தில் ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர், சி.பி.எம். தலைவர்கள். 2011-இல் சின்னப்பாவை சி.பி.எம். கட்சிக் குண்டர்கள் கொடூரமாகத் தாக்கியதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்து ஆறு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகி விட்ட அவர், கடந்த 5.10.2013-இல் மரணமடைந்தார்.

இப்பகுதியில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் என்ற முறையில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் உள்ளிட்டு அனைத்து புரட்சிகர  ஜனநாயக சக்திகளும் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். சாதிக் கட்டுப்பாடு போட்டு அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கக் கூடாது என சி.பி.எம். கட்சித் தலைமை தடுத்தபோது, ”எங்களை உருவாக்கிய தலைவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கூடாதெனத் தடை போட நீங்கள் யார்?” என்று வர்க்க உணர்வுள்ள சில சி.பி.எம். ஊழியர்கள் ஆவேசப்பட்டுக் கடைத்தெருவிலிருந்த சி.பி.எம். கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு இறுதி ஊர்வல நிகழ்ச்சியில்  பங்கேற்றனர்.

மறைந்த இத்தியாகத் தோழருக்கு வி.வி.மு, பு.மா.இ.மு.வினரும், கிராமக் கமிட்டி மற்றும் மாதர் சங்கத் தோழர்களும் இணைந்து கடைத்தெரு அருகே இதர கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைந்துள்ள இடத்தில் நினைவுக் கல்வெட்டு அமைக்கத் தீர்மானித்தனர். இதற்கான கட்டுமானப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, அதைத் தடுக்க போலீசு, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சி.பி.எம். கட்சியின் பிழைப்புவாதத் தலைவர்கள் முயற்சித்தனர். புரட்சிகர அமைப்புகளின் உறுதியான நடவடிக்கையால் அது முடியாமல் போகவே, 18-ஆம் தேதியன்று நள்ளிரவில் 50,60 பேர் கொண்ட சி.பி.எம். குண்டர் படையினர் குடிபோதையில் அரிவாள், கம்பு, உருட்டுக்கட்டை, கடப்பாரையுடன்  கல்வெட்டை உடைக்க வந்தனர்.

இதையறிந்ததும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டுத் தோழர்கள் திரண்டு கல்வெட்டைக் காத்து நின்று, தோழர் சின்னப்பாவின் புகழையும், நக்சல்பாரி புரட்சிகர முழக்கங்களையும் எழுப்பினர். இதைக் கேட்டு கிராம மக்கள் திரளத் தொடங்கியதும், ஆயுதங்களை வீசியெறிந்து விட்டு குண்டர்கள் தப்பியோடினர். பின்னர் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் இழுத்தடிப்புகளை முறியடித்து, திட்டமிட்டபடி 20.10.2013 அன்று தோழர் சின்னப்பா அவர்களின் நினைவுக் கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும், அவரது இல்லத்தில் படத்திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பல்வேறு கட்சியின் பிரமுகர்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வட்டார வி.வி.மு. செயலாளர் தோழர் மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் ஆசாத், ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் ஆகியோர் தோழர் சின்னப்பாவின் போராட்ட வாழ்வையும் கம்யூனிச நேர்மையையும் விளக்கி, கிரிமினல் கும்பலாகச் சீரழிந்து விட்ட சி.பி.எம். கட்சியின் துரோகத்தையும் பித்தலாட்டைத்தையும் மக்களிடம் அம்பபடுத்தி, நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வதே தோழர் சின்னப்பாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் என உரையாற்றினர்.

– பு.ஜ.செய்தியாளர், திருவாரூர்.
_____________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013

_____________________________________

சென்ற வார உலகம் – படங்கள்

1
மாட்ரிட் போராட்டம்
ஆட்குறைப்பு மற்றும் சம்பள வெட்டை எதிர்த்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் போராடும் துப்புரவுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரமாக தொடர்கிறது (நவம்பர் 13, 2013).
மார்சேல் போராட்டம்
தெற்கு பிரான்சில் உள்ள மார்சேல் நகரத்தில் கல்வித் துறை மாற்றங்களை எதிர்த்த தேசிய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள், உதவியாளர்கள், மற்றும் பெற்றோர் நடத்திய போராட்டம்.  (நவம்பர் 14, 2013)
அமேசான் காடுகள் அழிப்பு
ஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28% அதிகரித்திருப்பதாக பிரேசில்அறிவித்திருக்கிறது.
பிரேசில் அனானிமஸ்
பிரேசில், சாவ் பாலோ நகரில் நடந்த கய் ஃபாக்ஸ் ஆர்ப்பாட்டம். ஊழல் அரசுகளுக்கும், கார்ப்பொரேட்டுகளுக்கும் எதிரான பேரணிகள் உலகெங்கும் 450 நகரங்களில் நடந்தன (நவம்பர் 7, 2013).
வாஷிங்டன் அனானிமஸ்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அணிவகுத்துச் செல்லும் அனானிமஸ் இயக்க போராட்டக்காரர்கள் (நவம்பர் 7, 2013).
ரஷ்ய ஒருமைப்பாடு தினம்
ரஷ்ய ஒருமைப்பாடு தினத்தில் சோவியத் தலைவர் ஸ்டாலின் படத்தை ஏந்திச் செல்லும் மக்கள் (நவம்பர் 4, 2013).
காஷ்மீர் முகர்ரம்
பண்டிகை ஊர்வலத்தில் பங்கேற்ற காஷ்மீர் முஸ்லீம்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் கலைக்கும் போலீஸ் (நவம்பர் 14, 2013)
ஈராக் குண்டு வெடிப்புகள்
ஈராக் தலைநகர் நஜாபில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு இறுதி அஞ்சலி. ஈராக் முழுவதும் முகர்ரம் ஊர்வலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 44 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

 

இரண்டாம் உலகப் போர் நினைவுநாள்
1941 இராணுவ அணிவகுப்பின் 72-வது ஆண்டு விழா மாஸ்கோவில் நடைபெற்றது. 1917 புரட்சி தினமான அதே நாளில் மாஸ்கோவில் வெற்றி பேரணி நடத்தப் போவதாக கொக்கரித்த ஹிட்லரின் மாஸ்கோ மீதான தாக்குதலை முறியடித்தது செம்படை (நவம்பர் 7, 2013)

படங்கள் : நன்றி ரஷ்யா டுடே

யாசர் அராஃபத் விசம் வைத்து கொல்லப்பட்டார் – அல்ஜசீரா வீடியோ

6

ரசியல் எதிரிகளை கொலை செய்வது, மக்கள் மீது குண்டு வீசுவது, குழந்தைகளுக்கு மருந்துகள் மறுப்பது போன்ற பயங்கரவாத செயல்களில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நாடுகள் அமெரிக்காவும், அதன் கூட்டாளி இஸ்ரேலும். அதன் சமீபத்திய சான்றாக பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராஃபத் 2004-ம் ஆண்டு கதிரியக்க நச்சின் மூலம் படுகொலை செய்யப்பட்டிருப்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

யாசர் அராஃபத்
யாசர் அராஃபத்

பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 1948-ம் ஆண்டு உருவாக்கிய யூதர்களுக்கான இஸ்ரேல் நாடு தொடர்ந்து தனது ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி, லட்சக் கணக்கான பாலஸ்தீன மக்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக, சிறைக் கைதிகளாக நடத்தி வருகிறது. 35 ஆண்டுகளாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் அதற்கு பின்பலமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடிய பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவரான யாசர் அராஃபத் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் சின்னமாக இருந்தவர்.

பாலஸ்தீன விடுதலை அமைப்புதான் மதசார்பற்ற அமைப்பாகவும் இருந்தது. அதை உடைப்பதெற்கென்றே மதவாத அமைப்புகளை பாலஸ்தீனில் கொண்டுவருவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் முயன்றன. வெற்றியும் பெற்றன. மேலும் கடைசி ஆண்டுகளில் யாசர் அராஃபத்தும், பிஎல்ஓ அமைப்பும் எதிரிகளுடன் சமரசமும் செய்து கொண்டன. அது அடக்குமுறையை எதிர் கொள்ள முடியாத அவலத்தாலும், உறுதியான அரசியல் இல்லாமையாலும் நடந்தேறின. அந்த இடத்தை ஹமாஸ் போன்ற மதவாத அமைப்புகள் பிடித்துக் கொண்டன. எனினும் யாசர் அராஃபத்தை கொன்றே ஆக வேண்டும் என்பதில் இசுரேல் பின்வாங்கவில்லை.

2004-ம் ஆண்டு பாலஸ்தீனிய பகுதியான ரமலானில் இருந்த யாசர் அராஃபத்தின் குடியிருப்பை ஆயுதப் படைகளால் சூழ்ந்து, அவரை சிறைப் படுத்தி, உணவு, தண்ணீரைக் கூட கட்டுப்படுத்தி வந்தது இஸ்ரேல். ஆரோக்கியமாக இருந்த அராஃபத் அந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி திடீரென கடும் நோய்வாய்ப்பட்டார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாரிசில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் நவம்பர் 11-ம் தேதி தனது 75-வது வயதில் உயிரிழந்தார். ஒரு மாதத்துக்குள் உடல் சுருங்கி, தோல் கறுத்து, கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார்.

யாசர் அராஃபத் - இறுதி மரியாதை
பொலோனியம் ஏற்படுத்தும் நோய்க் கூறுகள் காணப்பட்டன.

அராஃபத்தைக் கொன்றது இஸ்ரேல்தான் என்று பாலஸ்தீன மக்கள் உறுதியாக நம்பினர். ஆனால், அராஃபத்திற்கு பிறகு பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவரான முகமது அப்பாஸ், பிரேத பரிசோதனை கூட செய்யாமல் உடலை புதைக்க ஏற்பாடு செய்தார். அராஃபத்துக்கு சிகிச்சை அளித்த பிரெஞ்சு மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரது நோய் தொடர்பாக எந்தத் தகவல்களையும் வெளியிட மறுத்து விட்டனர். அவை ராணுவ ரகசியங்கள் என வகைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

2012-ம் ஆண்டு, அல்ஜசீரா தொலைக்காட்சி அவரது மனைவி சுகா அராஃபத்திடம் கொடுக்கப்பட்டிருந்த அராஃபத்தின் உடைகள், பல் தேய்க்கும் பிரஷ் இவற்றைப் பெற்று சுவிட்சர்லாந்தில் உள்ள லசானே பல்கலைக் கழகத்துக்கு சோதனைக்கு அனுப்பியது. அவற்றில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம், வேர்வை, உமிழ்நீர், சிறுநீர் போன்று திரவங்களின் படிமங்களை சோதனை செய்து அவற்றில் நஞ்சுக்களின் தடயம் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. வழக்கமான நஞ்சுகள் எதுவும் கிடைக்காமல் போகவே அரிதான நஞ்சுகளுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவற்றில் பொலோனியம் 210 என்ற தனிமம் இயற்கையாக இருப்பதை விட 10 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. உதாரணமாக, அவரது பல் தேய்க்கும் பிரஷ்ஷில் 54 மில்லிபெக்குரலும், அவரது உள்ளாடையில் இருந்த சிறுநீர் படிமங்களில் 180 மில்லி பெக்குரலும் பொலோனியம்-210 இருந்தது. இது இயற்கையாக வந்திருக்க முடியாது என்று லசானே பல்கலைக் கழக  கதிர்வீச்சு இயற்பியல் கழகத்தின் இயக்குநர் டாக்டர் பிரான்சுவா பொகுத் தெரிவித்தார். ஒப்பீட்டுக்காக சோதிக்கப்பட்ட சாதாரண மனிதர் ஒருவரின் உள்ளாடையில் பொலோனியம் 6.7 மில்லி பெக்குரல்தான் இருந்தது.

யாசர் அராஃபத்
யாசர் அராஃபத்

பொலோனியம் என்பது 1898-ம் ஆண்டு மேரி கியூரியால் கண்டறியப்பட்ட கதிர்வீச்சு தனிமம் ஆகும். சில ஆண்டுகளுக்குப் பிறகு பொலோனியம்-210 ஆல் பாதிக்கப்பட்ட மேரி கியூரியின் மகள் ஐரீன், உயிரிழந்தார். இஸ்ரேலின் அணுஉலை திட்டத்தில் பணி புரியும் இரண்டு ஊழியர்கள் பொலோனிய நச்சினால் கொல்லப்பட்டதாக பதிவாகியிருக்கிறது. 2006-ம் ஆண்டு முன்னாள் ரஷ்ய உளவாளி, அலெக்சாண்டர் லித்வினென்கோ பொலோனியம்-210 நச்சுப்படுதலின் மூலம் லண்டனில் உயிரிழந்தார். அராஃபத்தைப் போலவே கடும் வயிற்றுப் போக்கு, எடை இழப்பு, வாந்தி இவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் லித்வினென்கோ.

இவற்றைத் தவிர பொலோனியம் 210 நச்சால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதிலும் 5-ஐ தாண்டாது. ஏனெனில் இது யாருக்கும் கிடைத்து விடக்கூடிய பொருள் அல்ல. வல்லரசு நாடுகளைத் தாண்டி யாரும் இவற்றை கைக்கொள்வது கடினம். எனவே, பொலோனியம் நச்சினால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்க் கூறுகள் பற்றிய தரவுகள் பெருமளவு கிடைப்பதில்லை. இருப்பினும், விலங்குகளில் செய்யப்பட்ட சோதனைகளில் அராஃபத்துக்கு ஏற்பட்ட நோய்க்  கூறுகள் காணப்பட்டன.

அராஃபத்தின் உடைகளில் படிந்திருந்த பொலோனியத்தின் அளவு இயற்கையானது இல்லை, அணுஉலைகளில் தயாரிக்கப்பட்ட பொலோனியம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தடவியல் நிபுணர்கள் கூறினர். புதைக்கப்பட்ட அராஃபத்தின் உடலைத் தோண்டி எலும்புகளை ஆய்வு செய்து அவற்றில் பொலோனியம் இருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம் என்று அராஃபத்தின் மனைவி கோரிக்கை விடுத்தார். கூடவே, அராஃபத் உயிரிழந்த பிரான்சில் ஒரு குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

பொலோனியம் 210-ன் அரை வாழ்வுக் காலம் 138 நாட்கள். அதாவது கதிர் வீச்சின் மூலம் ஆல்பா துகள்களை வெளியிட்டு 138 நாட்களில் எடையில் பாதியை இழக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பத்தில் இருந்த அளவு பெருமளவு குறைந்திருக்கும்.

சுகா அராஃபத்
சுகா அராஃபத்

அராஃபத்தின் உடலை பரிசோதனைக்கு வெளியில் எடுப்பதற்கு ஆரம்பத்தில் முட்டுக்கட்டை போட்ட பாலஸ்தீன விடுதலை அமைப்பு, பின்னர் அதற்கான ஏற்பாடுகளை செய்தது; சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் நிபுணர்களோடு, ரஷ்யா குழு ஒன்றையும் அழைத்தது.  கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட அராஃபத்தின் எலும்பு மாதிரிகள் சுவிட்சர்லாந்து ஆய்வகத்திலும், ரஷ்யாவிலும் பிரான்சிலும் பரிசோதனை செய்யப்பட்டன.

ரஷ்ய ஆய்வகத்தின் சோதனை முடிவுகளை ரகசியமாக பெற்ற அல்ஜசீரா, சோதனைகள் செய்வதில் அரசியல் தலையீடு இருந்ததையும், அறிக்கையில் தரப்பட்டிருக்கும் பொலோனியம் அளவு சாதாரண மனிதர்களிடம் இருக்கும் அளவு கூட இல்லை என்று அறிக்கை சொல்வதையும் சுட்டிக் காட்டி, ரஷ்ய அரசியல் தலைமை உண்மை வெளியாவதை விரும்பவில்லை என்று நிரூபித்திருக்கிறது. இருப்பினும் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் சோதனையிலிருந்து உறுதியாக முடிவு சொல்ல இயலாது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுகளிலிருந்து, பிரிட்டனைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் டேவிட் பார்க்ளே பொலோனியம் நச்சினால் அராஃபத் கொல்லப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கிறார். அராஃபத்தின் இறுதி மாதங்களில் அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை என்பதையும், பிரெஞ்சு மருத்துவமனையில் பல வகைப்பட்ட நோய்களுக்கான சோதனைகளில் ஆட்கொல்லி நோய்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதும் அணு உலையிலிருந்து பெறப்பட்ட பொலோனியம் 210 கொடுக்கப்பட்டது மூலம் அராஃபத் கொல்லப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன.

ஆட்கொல்லி விஷமாக புகழ்பெற்ற சயனைடை விட 10 லட்சம் மடங்கு குறைவான அளவு பொலோனியமே ஒருவரை கொல்வதற்கு போதுமானதாக இருக்கும் என்கிறார் டேவிட் பார்க்ளே. இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் பொலோனியம் உற்பத்தியாகும் அணு உலைகள் உள்ளன என்பதையும், இறுதிக் காலத்தில் அராஃபத் இஸ்ரேல் படைகளால் சூழப்பட்டிருந்தார் என்பதையும் வைத்துப் பார்க்கும் போது, தனது நோக்கங்களுக்கு இடையூறாக இருந்த அராஃபத்தை தீர்த்துக் கொட்டுவதற்கான இஸ்ரேலின் சதிதான் இந்த படுகொலை என்பது நிரூபணமாகிறது.

அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் நடத்தப்பட்ட இஸ்ரேலுடனான ‘சமாதான’ பேச்சு வார்த்தையில், அராஃபத் இஸ்ரேலின் நிலப்பறிப்பு கோரிக்கைகளுக்கு அடி பணிய மறுத்ததும், பாலஸ்தீன விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கைவிட மறுத்ததும் இஸ்ரேலின் திட்டங்களுக்கு முட்டுக் கட்டையாக இருந்தன. பாலஸ்தீன மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்ற தலைவராக இருந்த அராஃபத் வெளிப்படையாகக் கொல்லப்பட்டால், பெரும் மக்கள் எழுச்சி வெடிக்கும் என்று பயந்த இஸ்ரேல் நய வஞ்சகமாக அவரை கொலை செய்திருக்கிறது. அவரை கொலை செய்வதில்  உள்வட்டத்தைச் சேர்ந்த துரோகிகளின் பங்களிப்பும் இருந்திருக்கலாம் என்று அல்ஜசீரா குற்றம் சாட்டுகிறது.

அராஃபத்தின் மரணத்துக்குப் பிறகான ஆண்டுகளில் ஆயுதப் போராட்டத்தை நிராகரிக்கும் முகமது அப்பாஸ் தலைமையிலான பதா கட்சியின் நிர்வாகத்தின் கீழ் மேற்கு கடற்கரை பகுதி, ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்வைக்கும் ஹமாஸ் தலைமையில் காசா பகுதி என்று பாலஸ்தீன விடுதலை இயக்கம் பிளவுபட்டிருக்கிறது. இஸ்ரேல் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும், இன சுத்திகரிப்பையும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

Al Jazeera Investigates – What Killed Arafat?

Al Jazeera Investigates – Killing Arafat

மேலும் படிக்க

தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்

0

னியார் முதலாளிகளுக்கு  2004-2009 ஆம் ஆண்டுகளில் நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்ததில் நடந்துள்ள முறைகேடுகளால் அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு  இழப்பு ஏற்பட்டுள்ளது என்று 2012-இல் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் கூறிய பிறகு, இம்முறைகேடுகள் பற்றி உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மையப் புலனாவுத் துறை (சி.பி.ஐ.)  விசாரித்து வருகிறது.

மன்மோகன் சிங் - பி.சி.பராக்
மன்மோகன் சிங் – பி.சி.பராக்

நிலக்கரி ஊழல் தொடர்பான கோப்புகள் காணவில்லை என்பதை எதிர்த்தும், இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங்கைப் பதவி விலகக் கோரியும் கடந்த ஒரு மாத காலமாக நாடாளுமன்றத்தைக் கிட்டத்தட்ட முடக்கி வைத்து எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் தலபிரா நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டை ஆதித்ய பிர்லா குழுமத்தின் நிறுவனமான ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ் முறைகேடாகப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் நிலக்கரித் துறை செயலாளர் பி.சி. பரேக் மீதும், ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது ஹிண்டால்கோ நிறுவன அதிகாரிகள் மீதும் முதல் தகவல் அறிக்கையைப்  பதிவு செதுள்ளது, சி.பி.ஐ.

சி.பி.ஐ.யின் விசாரணையை எதிர்நோக்கியுள்ள நிலக்கரித் துறையின் முன்னாள் செயலரான பி.சி. பரேக், ”நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; அவ்வாறு முறைகேடு அல்லது சதி நடந்திருப்பதாக சி.பி.ஐ. கருதினால், இறுதி முடிவு எடுத்தவர் என்கிற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டு இதில் தொடர்புடைய அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

”நிலக்கரி மாஃபியாக்கள் அரசாங்கத்துக்கு வெளியில் இல்லை; அவர்கள் நிலக்கரி அமைச்சகத்திலேயே இருக்கின்றனர், என்னைப் பதவியிலிருந்து விரட்டியடிக்க முயற்சித்தனர்” என்று  அமைச்சரவைச் செயலாளர் சதுர்வேதிக்கு 2005-இல் பி.சி. பரேக் எழுதிய கடிதமும் இப்போது பரபரப்பாக வெளியாகியிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நிலக்கரி வயல்களின் உரிமங்களை ஒதுக்கீடு செய்து முறைகேடுகளும் ஊழலும் நடந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தின் தலபிரா நிலக்கரி வயல் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடு உள்ளிட்டு, வெறும் 14 முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

பரேக் இப்போது என்ன சோல்கிறாரோ, அதையேதான் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சிக்கவைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீண்ட நாட்களாகச் சொல்கிறார். ”அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. அது ஒரு கொள்கை முடிவு. அலைக்கற்றை ஒதுக்கீடு செயப்பட்ட சமயத்தில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, மைய அரசின் சோலிசிட்டர் ஜெனரலாக இருந்த கூலம் வாகன்வாதி ஆகியோருடன் ஒதுக்கீடு தொடர்பாகக் கலந்து ஆலோசித்துதான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. இம்முடிவுகள் அனைத்தும் பிரதமர் மன்மோகனுக்குத் தெரிவிக்கப்பட்டு அவரின் ஒப்புதலோடுதான் நடைமுறைப்படுத்தப்பட்டன” என  ஆதாரங்களுடன் ராசா விளக்கமளித்தார்.

பரேக் மன்மோகனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருப்பதைக் காட்டித் துள்ளிக் குதிக்கும் பா.ஜ.க.விற்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். மன்மோகனின் மீது வழக்குப் போட வேண்டும் என  பரேக்  கோரியிருப்பதைப் போல, குஜராத் அரசின் முன்னாள் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜ.ஜி. வன்சாரா ”பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை” எனத் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் அக்கடிதத்தில், ”2002 முதல் 2006 வரையிலான காலத்தில் நடந்துள்ள மோதல் படுகொலைகள் அனைத்தும் மோடி அரசிற்குத் தெரிந்து, அதன் வழிகாட்டுதலோடுதான் நடந்தன. மோதல் கொலைகளை நடத்திய போலீசார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது நியாயமென்றால், இக்கொலைகளை வழிநடத்தி ஊக்குவித்த இந்த அரசாங்கம் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலையாகும்” எனக் கூறியிருக்கிறார்.

மன்மோகனின் கரங்களில் படிந்திருப்பது ஊழல் கறை என்றால், பா.ஜ.க.வின் கரங்களில் இருப்பதோ இரத்தக் கறை. அதே சமயம் இந்த இரண்டு யோக்கியவான்களும் நிலக்கரி ஊழலில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள தரகு முதலாளி பிர்லாவிற்கு வக்காலத்து வாங்குவதில் ஈருடல் ஓர் உயிரென நடந்து கொள்கின்றனர்.

தனியார்மயமாக்கலுக்குப் பின்னர் கடந்த இருபது ஆண்டுகளில் பங்குச்சந்தை மோசடி தொடங்கி அலைக்கற்றை ஊழல், கோதாவரி எண்ணெய் வயல் ஊழல், ஆதர்ஷ், ஏர் இந்தியா ஊழல், இப்போதைய நிலக்கரி வயல் ஊழல் வரை நூற்றுக்கணக்கான ஊழல்கள் நடந்துள்ளன. தனியார்மயம் என்பதே பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழங்கப்படும் உரிமம்தான். ஊழல் இல்லாத  தனியார்மயம் கிடையாது.  இருப்பினும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஒரே அரசியல் கட்டமைப்புக்குள் இருப்பதால், ஊழல் அம்பலமாகும்போது தமது அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப இதில் ஒரு சில விவகாரங்களைச் சட்டவிரோதமானதென்று காட்டிச் சூடேற்றுவதும், ஆட்சியதிகாரத்திலுள்ள ஒரு சிலரின் தவறுகள் என்பதாக மட்டுமே இந்த விவகாரத்தைக் குறுக்கிச் சுருக்குவதும், தேர்ந்தெடுத்த ஒரு சில வழக்குகளை மட்டும் முதன்மைப்படுத்தி கவனத்தைத் திசைதிருப்புவதும்தான் நடக்கிறது.

-தலையங்கம்
_____________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
_____________________________

நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 2

0

1. புதுச்சேரியில் நவம்பர்- 7 ரசிய புரட்சி தின கொண்டாட்டம்!

னிதகுல வரலாற்றில் சிலர் சுகபோகமாக வாழ்வதற்கு ஏக பெரும்பான்மையினரின் உழைப்பைத் திருடியும், அபகரித்தும், அடக்குமுறை செலுத்தியும், அதிகாரம் செலுத்திய ”அடிமை சமுதாயம்” முதற் கொண்டு, உலகத்தின் கடைசி துரும்பில் இருந்து தாயின் கருப்பை வரை விலை பேசி மனித மாண்பு , பாசம், உணர்வு, நேர்மை என அனைத்தையும் அடித்து நொறுக்கும் இன்றைய முதலாளித்துவ சமுதாயம் வரையில், சுரண்டும் வர்க்கங்களே அதிகார பொறுப்பில் இருந்ததை முதன் முதலில் தகர்த்து அடிமைப்பட்டு கிடந்த மக்களை ஆட்சி அதிகார பீடத்தில் அமர வைத்த நாள் ரசிய புரட்சி தினம்.

இந்நாளை கொண்டாடுவதும், நமது நாட்டிலும் அப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டுவதற்கான பணியை விரைவாக செய்யவும் இந்நாளை கடைப்பிடித்து வருகிறோம். புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் பு.ஜ.தொ.மு இணை செயலாளர் தோழர். அனந்தகுமார் தலைமையேற்றார். மாணவர்- இளைஞர்களுக்கு சமூக அக்கறை கண்ணோட்டத்தில் கவிதை, பாடல், ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.  போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பு.ஜ.தொ.மு செ.கு உறுப்பினர் மூத்த தோழர். கருப்பையா பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.

இதைத் தொடர்ந்து பு.ஜ.தொ.மு மாநில அலுவலகச் செயலாளர் தோழர். லோகநாதன்,  “மறுகாலனியாக்க சுழலில் நாட்டின் வளங்கள், தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் உயிர்கள் பலியாக்கப்படுகிறது. இதை எதிர் கொள்வதற்கு புரட்சியே தீர்வு” என்று விளக்கினார்.

இறுதியாக பேசிய பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர். கலை, “புரட்சிக்கு முந்தைய ரசிய நிலைமைகளையும், புரட்சிக்கு பிந்தைய நிலமைகளையும் விளக்கி பேசி, ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மை, நிலச்சுவன்தார்கள் மற்றும் முதலாளித்துவம் உழைக்கும் மக்கள் மீது செலுத்திய சுரண்டல், அடக்குமுறைகள் ஆகியவற்றுக்கு முடிவு கட்டியதை போல இந்திய நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கும் நிலப்பிரபுக்கள், அதிகார வர்க்க தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியம் போறோர்களை விரட்டியடித்து, நாட்டையும் மக்களையும் விடுதலை செய்ய வேண்டிய கடமை நமக்குத்தான் இருக்கிறது. மதவாதிகளுக்கோ, சாதியவாதிகளுக்கோ, இனவாதிகளுக்கோ, பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கோ அந்த தகுதி கிடையாது! ஏனேன்றால் இவர்கள் முதலாளித்துவ அரசியல் கழிசடைகள். உழைக்கு வர்க்க மக்களின் விரோதிகள். பிற்போக்குவாதிகளின் கைக்கூலிகள். இவர்களை புறக்கணித்து சமுதாயத்தை மாற்றியமைக்கும் புரட்சி பாதையில் அணிதிரள வேண்டும்.

புரட்சி எப்போது நடத்துவது? மாற்றம் எப்போதைக்கு வருவது? என்ற பரவலான விரக்தி, மன சோர்வு, அவநம்பிக்கையை தூக்கியெறிய வேண்டும்.

புதுச்சேரியில் 60, 70 வருடம் பாரம்பரியம் என்று சொல்லிக் கொள்ளுகிற கட்சிகள், தொழிற் சங்கங்கள் யாராலும் சாதிக்க முடியாதவைகளை எல்லாம் நாம் 6- ஆண்டுகளில் சாதித்து இருக்கிறோம்! தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டி இருக்கிறோம். மக்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறோம். முதலாளிகள் நம்மை கண்டு அஞ்சுகிறார்கள், அரசு அதிகாரிகளை மக்களுக்காக வேலை செய்ய வைக்கிறோம், இது உங்களுக்கு தெரிந்தவைகள்தான். எப்படி நடந்தது? நம்மிடம் எம்.எல்.ஏ வோ, மந்திரியோ, அரசின் அதிகார பொறுப்புகளோ, ராணுவ பலமோ ஏதும் இல்லை, ஆனாலும் மக்களின் கோரிக்கைகளை நம்மால் நிறைவேற்ற முடிக்கிறது என்றால் அதற்கு காரணம் நம்மிடமுள்ள மகத்தான பாட்டாளி வர்க்க அரசியல். இதை அடிப்படையாகக் கொண்ட மக்கள் சர்வாதிகார மக்கள் திரள் வழி போராட்டம்; இதன் மூலம் இந்த அரசை நிர்ப்பந்தித்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்.

ஒரு மாநிலத்தின் வெவ்வேறு பகுதியில் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைத்து இயங்கும் பு.ஜ.தொ.மு என்கிற ஒரு மக்கள் கமிட்டியால் இவ்வளவு சாதிக்க முடிகிறது என்றால். கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் மக்கள் சர்வாதிகார கமிட்டிகளை கட்டினால் என்ன நடக்கும் என்பதை யோசித்து பாருங்கள்? அரசை நிர்ப்பந்தித்த நிலை மாறி, அரசை கைப்பற்றும் நிலைவரும்.  இதுதான் புரட்சி. இதற்கான வேலைகளில் நாம் உறுதியாக நிற்க, இந்த புரட்சி தினத்தில் உறுதி ஏற்போம்”

என்று பேசினார்.

இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டு, சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண் :
பு.ஜ.தொ.மு- புதுச்சேரி

2. கும்மிடிப்பூண்டியில் 96-வது நவம்பர் புரட்சி நாள் விழா

96-வது நவம்பர் புரட்சி தின விழா கும்முடிப்பூண்டி பகுதியில் SMV மஹாலில் நடத்தப்பட்டது. தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர். விகந்தர் தலைமை உரையாற்றினார்.

தனது தலைமை உரையில், ரஷ்ய புரட்சி நாளை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டிய அவசியமென்ன என்று தொடங்கி, இது தொழிலாளி வர்க்கம் அரசாள வந்த நாள், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டிய நாள் என்றும் அத்தகைய பயங்கரவாதத்தை நாமும் நாள்தோறும் சந்தித்து வருகிறோம் அதை முறியடிக்க வேண்டியுள்ளது என்று தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

இணைப்பு சங்கத் தொழிலாளிகள் இருவரின் முற்போக்கு கவிதைகள் அனைவரையும் ஈர்த்தது. முதன் முறையாக தங்களின் கவிதைக்கு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் திகைத்து நின்றனர் தோழர்கள். சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில், புரட்சிகர பாடல்களும், பாரதிதாசன் கவிதையும், திருக்குறளும் அச்சமின்றி மேடையில் வாசித்து காட்டி பார்வையாளர்களை அசத்தினர் சிறுவர்கள்.

பிரச்சாரக்குழுவின் ”ஆதார்” நாடகம், மின்சார அட்டை, பால் அட்டை, மருத்துவ அட்டை, என அனைத்து அட்டைகளையும் கொடுத்து சுரண்டும், ஆளும் வர்க்கத்தை ஒழித்து கட்ட பு.ஜ.தொ.மு உறுப்பினர் அட்டையை வாங்க வேண்டும் என்று வலியுருத்திய நாடகம் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

அடுத்ததாக எழுச்சியுரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சோவியத் ரஷ்யா எத்தகையதொரு முன்னேற்றத்தை கண்டது, தொழிலாளர்களின் ஆட்சியதிகாரத்தில், மாணவர்களுக்கு கட்டாய இலவச கல்வியும், அனைவருக்கும் வேலையும், அளித்து ஒரு மகத்தான சாதனையை செய்தது ரஷ்ய பாட்டாளி வர்க்கம். நம் நாட்டிலுள்ள முதலாளித்துவ கொடுங்கோன்மையையும் வேரறுத்து ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்த வெண்டியது நம் அனைவரின் முன்னுள்ள கடமையாகும் என்றுரைத்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட பிரச்சார குழு இந்து மத பயங்கரவாதத்தை திரை கிழித்தும், ரஷ்ய புரட்சி நாளை உயர்த்திப் பிடித்தும் பாடல்களை பாடினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கும், புதிய முயற்சி செய்த தோழர்களுக்கும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு பரிசு கோப்பைகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

250-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளிகள் தம் குடும்பத்துடன் கலந்து கொண்ட இந்த விழா, தொழிலாளிகளிடமும், அவர்தம் குடும்பத்தினரிடமும் உற்சாகத்தை தந்துள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மணலி பகுதி செயலாளர், தோழர். சொ.செல்வகுமார் நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்.- 9445389536

3. நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி – பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை

96-ம்  நவம்பர் புரட்சி தினத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, மனித உரிமைப் பாதுபாப்பு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னையில் நவம்பர் 7 அன்று நடத்திய இந்நிகழ்ச்சிக்கு ம.க.இ.க. தோழர் வாசு வரவேற்புரை ஆற்றினார். சென்னை ம.க.இ.க. செயலர் தோழர் வெங்கடேசன் தலைமையில் தியாகிகளுக்கு வீர வணக்கத்துடன் கூட்டம் துவங்கியது. தனது தலைமை உரையில், நவ-7 புரட்சியின் அனுபவங்களை படிப்பினையாக எடுத்துக் கொண்டு இந்தியாவில் நாம் நடத்த வேண்டிய புரட்சியின் அவசியம் பற்றி கூறினார்.

அதைத் தொடர்ந்து பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத சமூக சூழலை, வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதனை வசனம் இல்லாமல் உடல்மொழியின் மூலம் நாடகமாக நிகழ்த்திக் காட்டினர் பெ.வி.மு. தோழர்கள்.

அதே போல் ம.உ.பா.மைய தோழர்கள் நடத்திய நாடகத்தில் பள்ளிகளில் தனியார் கட்டணக் கொள்ளைக்கு நீதிமன்றமே துணை நிற்பதை அம்பலப்படுத்திக் காட்டினர். வழக்கறிஞர்களே சட்டம் அனைவருக்கும் சமம் அல்ல என்பதை நடித்துக் காட்டியது வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக கனல் மணக்கும் பூக்களாய் கவிதை பாடிய பெ.வி.மு. தோழர் செல்வி ”பெட்டிப் பாம்பல்ல பெண்ணே பெரும் புயல் நீ” என்கிற தலைப்பிலும், ”புதிய சமூகத்தையே கவிதையாய்ப் படைப்போம்” என்கிற தலைப்பில் இளம் தோழர் கவியும், ம.க.இ.க. தோழர் வாசு ”உள்ளத்தை உடலை உயிரைச் சுருக்காதே, புரட்சிக்கும் குறைவாக எதையும் ஏற்காதே” என்கிற தலைப்பிலும்,  ” புரட்சித் தீ இனிக்கும்” என்கிற தலைப்பில் தோழர் வெங்கடேசனும் கவிதை வாசித்தனர். தோழர்களின் கன்னி முயற்சிக்கு அரங்கமே கரவொலியால் வாழ்த்துக் கூறியது.

”சின்னப் பிள்ளைகளில் இப்படி ஒரு துடிப்பா?” இளந்தோழர்களின் போராட்ட அனுபவம் பற்றி பேட்டி கண்டனர். “அப்பொழுது சமச்சீர் கல்வி வேணுன்னு சரியான விசயத்துக்கு போராடினாக் கூட போலீஸ் நம்மளத்தான் அடிக்கிறார்கள். இவங்க நமக்கானவங்க இல்லன்னு அப்பத்தான் புரிஞ்சது. அவங்களுக்கு நாம ஏன் பயப்படணும்” என்று சொல்லி பார்வையாளர்களுக்கும் தைரியமூட்டினர்.

நிகழ்ச்சியின் இடை இடையே பெ.வி.மு., ம.க.இ.க. தோழர்கள் பாடல்கள் பாடினர். ”பாட்டாளியின் ரத்தம் படிந்து சிவந்திருக்குது எம் கொடி, நெஞ்சில் உறுதி கொண்டு நாங்கள் முன்னேறிச் செல்கிறோம்” என்கிற பாடல் வரிகளுடன் கலை நிகழ்ச்சிகள் முடிந்தன.

அடுத்ததாக உரையாற்றிய பெ.வி.மு. தோழர் அமிர்தா “புரட்சியில் பெண்கள்” என்கிற தலைப்பில் பெண்களின் பங்கு இல்லாமல் எந்த போராட்டமும்,  புரட்சியும் வெற்றி  பெற்றதில்லை என்பதை எடுத்துரைத்தார்.

இறுதியாக சிறப்புரை ஆற்றிய தோழர் துரை.சண்முகம் ”ரசியப் புரட்சி வேண்டும் தொடர்ச்சி ” என்கிற தலைப்பில் பேச்சை துவங்கினார்.  “நவ-7 புரட்சி வீரம், தியாகம் பெருமைக்கு மட்டுமல்ல அழகியலுக்கும் நவ-7 தான். அழகாக தீட்டிய ரசிய புரட்சியை ரசிக்க வேண்டும். சோசலித்தில் எப்படி உயர்வாக மனிதர்கள் வாழ்ந்தனர்” என்பதை சில சம்பவங்களாக தொகுத்து பேசினார்.

“பத்திரிக்கைகளில் நவ-7 புரட்சி தினத்தை வெளியிடாதது பற்றி கூறி, இதை நாம்தான் உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்றும் கூறினார்.

“இந்தியாவில் ஒரு புரட்சியை நடத்துவதற்கு நாம் தயாராக வேண்டும்.  ரசியாவிலும் போல்ஷ்விக்குகள் சிறிய அளவில் இருந்துதான் பின் புரட்சியை நடத்திக் காட்டினர், அப்படி நாமும் சாதிக்க முடியும். உழைக்கும் மக்களோடு உறவு கொள்ளாமல் புரட்சியோடு எப்படி உறவு  கொள்ள முடியும். செயல்படுவோம், புரட்சியை சாதிப்போம்” என்கிற நம்பிக்கையை விதைத்து தனது உரையை முடித்தார்.

இறுதியாக ம.உ.பா.மை தோழர் சரவணன் நன்றி உரை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் 300 பேர் கலந்து கொண்டனர். வந்திருந்தவர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. ”புரட்சி  மகிழ்ச்சி” என்பதை வெளிப்படுத்தி கூட்டம் நிறைவுற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை

4. கோவில்பட்டியில் நவம்பர் 7 – ரசிய சோசலிச புரட்சி தெருமுனைக் கூட்டம்.

கோவில்பட்டி அருகே முருக்கலான் குளம் கிராமத்தில் விவசாயிகள் முன்னணியின் சார்பில் ரசிய சோசலிச புரட்சி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த பகுதியில் செயல்படும் சிபிஎம், சிபிஐ கட்சியினர் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு முறை கூட நவம்பர் 7 விழா கொண்டாடியது இல்லை என்ற சூழலில் விவசாயிகள் விடுதலை முன்னணியின் சார்பில் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் பகுதி தலைமை தோழர் சக்தி, ரசிய புரட்சியை பற்றியும், சிபிஎம்,சிபிஐ நிலைப்பாடு பற்றியும், ஈழப் போராட்டம் பற்றியும் பேசினார். தோழர்கள் கருப்பசாமி, இன்னாசிராஜ் ஆகியோர் உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆயுதமேந்திய புரட்சிதான் தீர்வு என்று உரையாற்றினார்கள்.

இறுதியாக புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. கூட்டத்தின் இறுதியில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கோவில்பட்டி

காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்கு – தஞ்சை, திருச்சி, ஓசூர் ஆர்ப்பாட்டம்

0

1. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கு –தஞ்சையில் ம.க.இ.க ஆர்பாட்டம்.

  • காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்று
  • அம்மாநாட்டில் இந்தியாவே பங்கேற்காதே

எனும் கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் அருகே மக்கள் கலை இலக்கியக்கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் சார்பில் 14.11.2013 அன்று மாலை 5.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தஞ்சை மாவட்ட ம.க.இ.க தோழர்.அருள் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட பு.மா.இ.மு தோழர்.ஆசாத், பட்டுக்கோட்டை வட்டார வி.வி.மு தோழர்.மாரிமுத்து மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் தோழர்.சதீஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ம.க.இ.க மாநில இணைச்செயலாளர் தோழர்.காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் காமன்வெல்த் அமைப்பின் வரலாறு குறித்து விளக்கப்பட்டது. இந்திய இலங்கைக்கான உறவு முதலாளிகள் நலனுக்கான வர்த்தக உறவே என்பதும் அந்த முதலாளிகளின் லாபத்தை பாதுகாக்கவே மன்மோகன் அரசு தமிழர்கள் எதிர்ப்பையும் மீறி இலங்கையுடனான உறவை பேணுகிறது எனும் உண்மை ஆதாரங்களோடு பதிவு செய்யப்பட்டது. காமன்வெல்த் மாநாட்டை இந்தியா ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதும், முள்ளிவாய்க்கால் முற்றத்து இடிப்பின் பின்னிருக்கும் அரசியலும், ஈழத்தமிழருக்கு சரியான நியாயத்தைப் பெற்றுத்தர போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதே வழி என்பதும் கூடியிருந்த திரளான மக்கள் மத்தியில் விரிவாக விளக்கப்பட்டது.

  • இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
  • காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது.
  • காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை

2.  திருச்சியில் ஆர்ப்பாட்டம்

  • இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
  • காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது.
  • காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்.
  • இனப்படுகொலை செய்த ராஜபக்சே தனது கொலை முகத்தை மறைத்து விட்டு காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தி இலங்கையின் இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் பன்னாட்டு முதலாளிகளுக்கு படையல் வைத்து அங்கீகாரம் பெறுவதன் மூலம் நீர்த்துப் போகச் செய்யும் சதியே!
  • ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தூக்கிலிட வேண்டும்!
  • பங்காளியான இந்திய அரசும் குற்றவாளி கூண்டில்  நிறுத்தப்பட வேண்டும்!

என்கிற தலைப்பில் 14.11.2013 அன்று காலை 10.30 மணியளவில் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்டச் செயலர் தோழர் செழியன் அவர்கள் தலைமையேற்றார்.

காவல் துறை தடையை மீறியதாகக் கூறி, குழந்தைகள், பெண்கள் 13 பேர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

3. தடையை மீறி ஓசூரில் ஆர்ப்பாட்டம்

  • இந்திய அரசே, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதே!
  • காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே!
  • காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்று!

என்ற முழக்கங்களை முன்வைத்து தமிழகம் தழுவிய வகையில் 14-11-2013 அன்று புரட்சிகர அமைப்புகளான ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., வி.வி.மு. மற்றும் பெ.வி.மு. சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக ஒசூரில் ஆர்ப்பாட்டம் நடத்த பு.ஜ.தொ.மு. சார்பாக போலீசு அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போலீசு சட்டம் 32ஐக் காரணம் காட்டி முதல் நாள் இரவு அனுமதி மறுத்தது போலீசு. இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்து காலை 11 மணியளவில் நகராட்சி அலுவலகம் முன்பு பு.ஜ.தொ.மு., வி.வி.மு. தோழர்கள் குவிந்தனர். தோழர்கள் வருவதற்கு முன்னமே மக்களுக்கு ஆர்ப்பாட்டம் நடக்க இருப்பதை தெரிவிக்கும் முகமாக போலீசு குவிந்திருந்தது. பேருந்து நிலையம், நகராட்சிக்கு வருகின்ற மக்கள் மத்தியில் இது பரப்பரப்பை ஏற்படுத்தியது.

திடீரென தோழர்கள் கூடி மக்களை கவரும் வகையில் செங்கொடிகளுடன் முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.பரசுராமன் தலைமை தாங்கினார். பாகலூர் பகுதி தோழர்.ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.சின்னசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தோழர்கள் பேசும் போது, “இனபடுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என நாம் கோரி வருகின்ற சூழலில், அங்கே காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது என்பது இராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தை சகித்துக் கொள்வது அவமானம். காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதன் மூலம் தங்களது வர்த்தக சந்தையை விரிவுப்படுத்தவும் அதற்கான வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் ஏகாதிபத்தியங்களுக்கும் இந்திய அரசுக்கும் இது உதவுகிறது என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். ஆகையால், இந்திய அரசை எதிர்த்து போராட்டத்தில் இறங்குவது அவசியமானது. இவற்றைக் கணக்கில் கொண்டு இராஜபக்சேவுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும் போராடுகின்ற உழைக்கும் மக்கள் இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதைக் கண்டிக்க வேண்டும். மேலும், காமன் வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும். காமன்வெல்த் இலங்கையில் நடத்துவதை கைவிட வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற மக்கள் அணிதிரண்டு போராட முன்வர வேண்டும்” என்று பேசினர்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்பதை வைத்து நாடகமாடுவதை அம்பலப்படுத்தினர். தோழர்கள் பேசும் போது, தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டுவிட்டு போலீசைவிட்டு கருத்து சுதந்திரத்தை மறுக்கும் ஜெயா அரசின் பாசிச போக்கைக் கண்டித்து பேசினர். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் வெற்றுத் தீர்மானங்களை அம்பலப்படுத்தி பேசினர். இதுபோன்ற தீர்மானங்களை நம்பி இருப்பதை கைவிட்டு உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். நூற்றுக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டம் இறுதிவரை கண்டு ஆதரவு அளித்தனர்.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி காலை முதல் பிரச்சாரம் செய்யப்பட்டது. தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் மத்தியில் துண்டு பிரசுர வினியோகம் செய்யப்பட்டது. திரளான தொழிலாளர்கள் ஆர்வமுடன் துண்டு பிரசுரங்களை பெற்று சென்றனர். தொழிலாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 97880 11784
ஒசூர்.

அமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா !

5

மெரிக்க அரசின் உளவுத் துறைகளில் ஒன்றான தேசியப் பாதுகாப்பு நிறுவனம், ”ப்ரிஸம்’’ என்ற உளவு இயக்கத்தின் மூலமாக அனைத்து உலக நாடுகளின் முக்கிய இணையம் மற்றும் தொலைத்தொடர்புத் தகவல் பரிமாற்றங்களை வேவு பார்ப்பதை கடந்த ஜூன் மாதத்தில் ஸ்நோடென் அம்பலப்படுத்தினார். முதற்கட்டமாக அவர், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இணையத்திலும் தொலைபேசியிலும் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை அமெரிக்கா பிரதியெடுத்துள்ளதை ஆதாரங்களோடு வெளியிட்டார். தற்போது இரண்டாம் கட்டமாக, இந்தியா, பிரேசில் போன்ற ஏழை நாடுகளையும் அமெரிக்கா உளவு பார்ப்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஜெர்மன் ஹாம்பர்க் நகர் ஆர்ப்பாட்டம்
ஜெர்மனி, இந்தியா, பிரேசில் உள்ளிட்டு பல்வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் பொதுமக்களின் இணைய தளங்களை அமெரிக்கா ரகசியமாக வேவு பார்த்து வருவதைக் கண்டித்து ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகரில் நடந்த ஆர்ப்பாட்டம்.

கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் இந்த ஒற்றறியும் வேலைகளை ஸ்நோடென் அம்பலப்படுத்திய போது, தீவிரவாதிகளைக் கண்காணிப்பதற்காகத்தான் அவ்வாறு செய்ததாகக் கூறி, அதனை நியாயப்படுத்தியது அமெரிக்கா. ஆனால், தற்போது அதன் விசுவாசமான  ‘நட்பு’ நாடுகளான இந்தியா, பிரேசில் போன்றவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்துள்ளது. இத்தகைய ஒற்று வேலைகளின் மூலமாகத் திரட்டப்பட்ட தகவல்களின் அளவுகளில், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உள்ள கணினிகளில் சேமிக்கப்பட்டுள்ள எல்லா தகவல்களையும் அமெரிக்கா பிரதியெடுத்துள்ளது. தூதரக அதிகாரிகளின் மின்னஞ்சல்களைக் கண்காணித்ததுடன், கணினியைக் கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் வேவு பார்த்துள்ளது. இதே போன்று வாஷிங்டன் நகரில் உள்ள ஐ.நா.வுக்கான இந்திய அலுவலகத்தையும், மற்றுமொரு தூதரக அலுவலகத்தில் இயங்கி வந்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஐ.எஸ்.ஆர்.ஓ. (ISRO) வையும் வேவு பார்த்துள்ளது. இந்தியக் குடிமக்கள் தொலைபேசி மூலமாக யாருடன் பேசுகிறார்கள், இணையம் மூலமாக என்னென்ன தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் எனவும் கண்காணித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவின் இணைய மற்றும் தொலைத்தொடர்புத் தகவல் பரிமாற்றங்களிலிருந்து கிட்டத்தட்ட 6.3 பில்லியன் தகவல்கள் அளவிற்கு அமெரிக்கா பிரதியெடுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்வுகள் தொடங்கி, அணுசக்தி மற்றும் விண்வெளித்துறையின் செயல்பாடுகள் வரையிலான அனைத்துத் தகவல்களும் இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது.

இந்தியாவைப் போன்றே பிரேசில் நாட்டின் தூதரகங்களையும் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களையும் கண்காணித்ததுடன், அந்நாட்டு அதிபரது மின்னஞ்சல் முகவரியுடன் யாரெல்லாம் தொடர்பிலுள்ளனர் போன்ற தகவல்களையும் அமெரிக்கா களவாடியுள்ளது. பிரேசில் நாட்டின் எண்ணெய் வயல்களையும், பொதுத்துறை எண்ணெ நிறுவனமான ”பெட்ரோபாஸ்” நிறுவனத்தையும் அமெரிக்கா கண்காணித்ததுடன், இணையம் மூலமாக அந்நிறுவனம் பரிமாறிக் கொண்ட அனைத்துத் தகவல்களையும், அந்நிறுவனத்தின் கணினிகளில் சேமிக்கப்பட்ட அனைத்து கோப்புகளையும் பிரதியெடுத்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் எண்ணெ வளத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் தற்போது அமெரிக்காவின் கையில் உள்ளது.

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடுவதென்பது அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. ஆனால் இன்று அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்ட சூழலில், நாடுகளின் இறையாண்மை என்பது கேலிப் பொருளாகி விட்டது. இந்தியா, பிரேசில் போன்ற ஏழை நாடுகள் மட்டுமல்ல; அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஏற்கும் ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளைக் கூட அமெரிக்கா உளவு பார்த்துள்ளது. இதற்கெதிராக பிரான்சும் ஜெர்மனியும் பிரேசிலும் கண்டனம் தெரிவித்துள்ளன.07-internet-usa-02

ஆனால் இந்திய ஆட்சியாளர்களோ, இத்தகைய வாயளவிலான முணுமுணுப்பு கூட இல்லாமல், உலகளாவிய உளவு பார்க்கும் வலைப்பின்னலில் அமெரிக்காவின் கூட்டாளியாகவே செயல்படுகின்றனர். அமெரிக்காவின் கண்காணிப்புத் திட்டத்துக்கு உதவும் வகையில், அமெரிக்க அரசுடன் இந்தியாவின் வி.எஸ்.என்.எல். நிறுவனம் (டாடா தொலைத்தொடர்பு நிறுவனம்) 2005 ஏப்ரலிலும், ரிலையன்ஸ் நிறுவனம் 2007 நவம்பரிலும் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்க அரசு கோரினால், தங்களது வலைப்பின்னல் மூலம் சேகரிக்கப்படும் அனைத்துத் தகவல்களையும் அமெரிக்காவுக்கு இந்நிறுவனங்கள் அளிக்கும் வகையில் ஒப்பந்த விதிகள் போடப்பட்டுள்ளன.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் மறுகாலனியாதிக்கம், எல்லா ஏழை நாடுகளது பெயரளவிலான இறையாண்மையையும் ஒழித்து அவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே துடிக்கிறது அமெரிக்கா.

இதற்காக அந்நாடுகளின் இயற்கை வளத்தைச் சூறையாடும் நோக்கில் தகவல்களைத் திருடுவதுடன், ஆட்சியாளர்கள் முதல் குடிமக்கள் வரை யாராக இருந்தாலும், தான் கண்காணிக்க விரும்பும் அனைவரையும் எவ்விதத் தடையும் இன்றி உளவு பார்க்கிறது. இந்தியாவின் இயற்கை மூலவளங்கள் உள்ளிட்டு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளையும் கொள்ளை அடிக்கவும், வர்த்தக நலன்களையொட்டி ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டா போட்டியில் இந்தியாவின் மீதான தனது இரும்புப் பிடியைத் தக்கவைத்துக் கொள்ளவும், தனது அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் அமெரிக்க வல்லரசு இத்தகைய உளவு பார்க்கும் நடவடிக்கைகளைச் செய்து வருகிறது.

இது ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடும் அத்துமீறல் மட்டுமல்ல; வெறும் உளவு பார்க்கும் நடவடிக்கையும் அல்ல. இது அனைத்து நாடுகளின் தகவல்களையும் நடவடிக்கைகளையும் தனது விரல் நுனியில் வைத்துக்கொண்டு உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தின் ஒரு அங்கம். இந்த நோக்கத்திலிருந்தே மெய் உலகிலும் (real) மெய்நிகர் உலகிலும் (virtual) அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்துகிறது.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்த்த போராட்டம் என்பது அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஆப்கான், இராக் போன்ற நாடுகளுக்கு மட்டும் உரியதோ, அமெரிக்காவின் உடனடி இராணுவ அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் சிரியா, இரான், வட கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டும் உரியதோ அல்ல. ஒவ்வொரு நாட்டின் அரசும் அந்த நாட்டின் குடிமகனும் நேரடியாக அமெரிக்காவின் கண்காணிப்புக்கு உள்ளாகி வரும் சூழலில், அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது நமது அன்றாட வாழ்வின் அடிப்படைஉரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டமாகவே மாறிவிட்டிருக்கிறது.

-கதிர்
____________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
____________________________________

காமன்வெல்த் மாநாடும் கருணாநிதியின் சரணடைவும்

8

ரும் நவம்பர் 15 முதல் 17 வரை இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது எனக் கோரி தமிழகம் முழுக்க பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும், மாணவர்களும், வணிகர் சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். 12-ம் தேதி மதிமுக, வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட்ட 21 அமைப்புகள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் நடவடிக்கைகள் அவரை சந்தர்ப்பவாதமாக ஆதரிக்கும் பிரிவினரிடையே கூட அதிருப்தியை உருவாக்கியுள்ளன. தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு செருப்பாக உழைக்கிறார் கருணாநிதி என்ற அவரது அரசியல் எதிரிகளின் குற்றச்சாட்டு உண்மைதான் என்பது நிரூபணமாகியுள்ளது.

கருணாநிதி
கருணாநிதி

அக்டோபர் 18 அன்று பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், ”இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளது மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது” என்று வலியுறுத்தியிருந்தார். தொடர்ந்து அக்டோபர் 22-ம் தேதி கருணாநிதி வெளியிட்டிருந்த அறிக்கையில் ”அடுத்து வரும் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

அக்டோபர் 24-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தில், ”பெயரளவுக்கு கூட இந்தியா சார்பில் யாரும் இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்றுவதற்கு இந்தியா பிற நாடுகளிடம் கோரிக்கை வைத்து போராட வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.

அப்போது ”இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது. மீறி மாநாட்டுக்கு பிரதமர் சென்றால் அதன் விளைவுகளை காங்கிரசு கட்சி அனுபவிக்க நேரிடும்” என்று மத்தியில் ஆட்சியிலுள்ள காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் கருணாநிதி.

அதன் பிறகு ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட பொது வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக கூறி மதிமுக, அதிமுக தவிர்த்த பிற எல்லா கட்சிகளிடமும் ஆதரவு கோரி கடிதம் எழுதினார் கருணாநிதி. பாஜகவினருக்கும் கூட ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கிடையில் நவம்பர் 2 அன்று ப.சிதம்பரம் சென்னை கோபாலபுரத்திற்கு சென்று கருணாநிதியை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் ”காமன்வெல்த் மாநாடு பற்றிய கருணாநிதியின் கோரிக்கை, தமிழக மக்களின் உணர்வுகள், நாட்டு மக்களின் நலனை கணக்கில் கொண்டே முடிவு செய்வோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.

வம்சம்
“தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு செருப்பாக உழைக்கிறார் கருணாநிதி”

ஆனால் மத்திய அரசு தரப்பில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்பதையும், இப்படி கலந்து கொள்வதை தமிழகத்தில் உள்ள தேசியக் கட்சிகளான பாஜக, மார்க்சிஸ்டுகள் போன்றோர் கண்டிக்கவில்லை என்பதையும் அச்சந்திப்பில் கருணாநிதிக்கு சுட்டிக் காட்டி புரிய வைக்கவே ப.சிதம்பரம் காங்கிரசு தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தாராம். இதற்கிடையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என காங்கிரசின் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கூட சொல்ல ஆரம்பித்து விட்டார். இல்லாவிடில் இங்கு ஓட்டுச்சீட்டு அரசியலில் காலம் தள்ள முடியாது என்பதால் இப்போது தமிழக பாஜகவும் தனது அகில இந்திய தலைமைக்கு இதனை சுட்டிக் காட்டி ”காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க மத்திய அரசை வலியுறுத்துங்கள்” எனக் கோரியது.

எல்லாம் பேசி வைத்து நடத்தப்படும் நாடகம்தான். இத்தகைய வெற்றுச் சவடால் பேச்சுக்களை வைத்தே தமிழகத்தில் வாக்குகளை அள்ளி விடலாம் என்ற நிலைமை உண்மையில் தமிழக மக்களுக்குத்தான் அவமானம்.

இதற்கிடையில் நவம்பர் 6-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்த சிபிஐ துணை கண்காணிப்பாளர் எஸ்.கே. சின்ஹா ”2009ல் நடைபெற்ற கலைஞர் டிவி இயக்குநர்கள் கூட்டத்தில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை” என கனிமொழிக்கு சாதகமாக சாட்சியம் அளித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சிக்கு தனியார் நிறுவனங்கள் சிலவற்றில் இருந்து வந்த ரூ.200 கோடி பணப் பறிமாற்றம் குறித்து கனிமொழிக்கு எதுவும் தெரியாது என்பதை நிரூபிக்கும் விதமாக அவரது சாட்சியம் சிபிஐ தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது.

காங்கிரசின் இக்காய் நகர்த்தலை தொடர்ந்து, ”காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார், ஆனால் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார்” என மத்திய அரசின் சார்பில் செய்திகள் வெளியாயின. இதுபற்றி கேட்டதற்கு கருணாநிதி ”நமது கோரிக்கைக்கு மதிப்பளித்து பிரதமர் கலந்து கொள்ளாமல் இருப்பது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. ஆனால் குர்ஷித் பங்கேற்பது விவாதத்திற்குரியது” என்று கழுவிய மீனில் நழுவிய மீனாக சமாளித்து, தான் ஒரு பச்சையான சந்தர்ப்பவாதி தான் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

ஏற்கெனவே  உண்ணாவிரதம் அறிவித்து நான்கு மணி நேரத்தில், போர் நின்று விட்டதாக கூறி 2009-ல் ஈழப்போரின் உச்சகட்டத்தில் போராட்டத்தை கைவிட்ட கருணாநிதியை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

தா பாண்டியன்
தா பாண்டியன்

தற்போதைய காமன்வெல்த் மாநாட்டில் கனடா மற்றும் மொரிசியஸ் சார்பாக யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிகிறது. கடந்த பத்து காமன்வெல்த் மாநாடுகளில் இந்தியா சார்பில் பிரதமர்கள் பங்கேற்றது 5-ல் மட்டும்தான். மற்ற மாநாடுகளில் துணை ஜனாதிபதி, அமைச்சர்கள் என யாராவது ஒப்புக்கு கலந்து கொள்வார்கள். எனவே மன்மோகனது முடிவு கருணாநிதியின் கோரிக்கைக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இன்ன காரணத்துக்காக தாம் கலந்துகொள்ளவில்லை என ராஜபட்சேவுக்கு மன்மோகன் எழுதிய கடிதத்தில் குறிப்பிடாத போதும், ”அரசியில் நிர்ப்பந்தம் காரணமாக இந்த முடிவை இந்திய பிரதமர் எடுத்துள்ளதாக தெரிகிறது” என உடைத்துக் காட்டியவர் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் என்பதையும் கவனிக்க வேண்டும்.

மன்மோகன் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லவில்லை என்பதை சுட்டிக்காட்டி சிபிஐ கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா விமர்சனம் செய்துள்ளார். கலைஞருக்கு ஏற்காடு இடைத்தேர்தலும், கனிமொழி விடுதலையும் முன்னால் வந்து நிற்பதால் தைரியமாக மத்திய அரசை விமர்சனம் செய்ய இயலவில்லை. ஆனால் ‘எங்களுக்கும் போராடத் தெரியும், நேரம் வரும் போது போராடுவோம்’ என்று செய்தியாளர்களிடம் தனது கோபத்தை காட்டவும் அவர் தவறுவதில்லை. திமுக கூட்டணியில், குறிப்பாக டெசோ இயக்கத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், வீரமணி போன்றவர்கள் கூட சல்மான் குர்ஷித் இம்மாநாட்டில் கலந்து கொள்வதை எதிர்க்கத் துவங்கியுள்ளனர். இல்லையென்றால் அவர்களும் கூட இங்கே பிழைப்பு நடத்துவது கடினம். மற்றபடி இதெல்லாம் சுயமரியாதை நடவடிக்கை இல்லை என்பதை அனைவரும் அறிவர்.

பாமக வின் ராமதாசு மாநாட்டில் இந்திய அரசின் பங்கேற்பை மிகப் பெரிய துரோகம் என்கிறார். இதுவே பாமக மந்திரிகள் மத்திய அரசில் இருந்தால் இதே நாக்கு வேறு மாதிரி பேசும். தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறனோ ”கலைஞரின் கூற்று தமிழக மக்களிடையே எழுந்து வரும் எதிர்ப்பை திசை திருப்பும் வேலை” என்று கூறுகிறார். நெடுமாறன் ஒரு ஜெயா அடிமை என்பதால் அதை கவனிப்பார் யாருமில்லை.

சிபிஐ-ன் தா. பாண்டியனோ இதனை கருணாநிதியின் தொடரும் சறுக்கல்கள் என்கிறார். ”சொத்துக்களை பாதுகாக்க காங்கிரசுடன் உறவைத் தொடரும் கருணாநிதிக்கு இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லை” என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார். ராஜீவ் கொலைக்குப் பிறகு இவரது அக்கறை ஈழத் தமிழரை ஒடுக்குவதில் ஓங்கி நின்றதும் வரலாறுதான். எப்படியாவது அதிமுக கூட்டணியில் ஒரு அரை சீட்டாவது வாங்கி விடவேண்டும் என்பதைத் தாண்டி தாபாவின் பேச்சுக்கு வேறு  அழுத்தம் இல்லை.

விமர்சனம் செய்பவர்களின் அரசியல் சந்தர்ப்பவசமானது தான் என்ற போதிலும் அதுவே கருணாநிதியின் சந்தர்ப்பவாதங்களை நியாயப்படுத்தி விட முடியாது. தனது ஆட்சியையும், பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கருணாநிதி அஞ்ச மாட்டார் என்பதுதான் அவரது தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலமாக தெரிய வருகிறது. மூவர் தூக்கை ரத்து செய்ய வேண்டாம் என ஆளுநருக்கு 2000-ல் முதல்வராக இருக்கும் போது கடிதம் எழுதியவர், மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த பார்வதியம்மாளை விமான நிலையத்திலேயே காக்க வைத்து திருப்பி அனுப்பியவர் கருணாநிதி என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை.

ஜெயா-கருணா
ஜெயலலிதாவும், கருணாநிதியும் வேறு வேறல்ல.

நளினியை விடுவிக்க கோரிக்கை எழுந்த போது சிறைச்சாலையில் செல்பேசியை ‘கைப்பற்றும்’ தனது நடவடிக்கையை துவக்கி வைத்தவர் கருணாநிதி. எப்படியாவது பார்ப்பன சோ, இந்து, சு.சாமி கும்பலிடம் நல்ல பெயர் வாங்க முயற்சித்தவரும் இவர்தான். இருந்தும் பார்ப்பனக் கும்பல் அன்றும் இன்றும் இவரை துரத்துவதில் குறியாக இருக்கிறது.

நேற்று காலை (12-11-2013) அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் இலங்கை தமிழர்களுக்கு நலன் பயக்கும் வகையில் வலுவானதாக இருக்கும்பட்சத்தில் திமுக அதனை ஆதரிக்கும் என்றும், எல்லா கட்சிகளும் இணைந்து ஒரு மனதாக அதனை நிறைவேற்றி நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

சல்மான் குர்ஷித் இம்மாநாட்டில் கலந்து கொள்வது என்பது இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு அம்சம் என்பதால் சட்டசபை தீர்மானங்களால் எந்த பயனும் இல்லை என்பது ஒருபுறமிருக்க, இப்போது முடிவான பிறகு நிறைவேற்றப்படும் தீர்மானம் ஒரு லாவணி மட்டுமே எனத் தெளிவாக தெரிந்த பிறகும் ஈழத்தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஒரு மாயை. இது கருணாநிதிக்கு நன்கு தெரியும் தான். சட்டசபை தீர்மானங்கள் மூலம் மக்கள் மத்தியில் அப்படி ஒரு மாயையை உருவாக்குவதில் ஜெயாவும், கருணாநிதியும் வேறுவேறு அல்ல.

நேற்று சட்டமன்ற தீர்மானத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவும், ஆயுத உதவி மற்றும் பயிற்சி கொடுத்ததற்கு பரிகாரமாக காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசை ஜெயா அம்பலப்படுத்தியது போல தோன்றினாலும், இத்தீர்மானத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு கிடையாது என்பது ஜெயாவுக்கும் நன்கு தெரியும். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஈழ ஆதரவு சவடால்களை அடிப்பது ஒரளவு வாக்கு வங்கியை பெறுவதற்கு உதவும் என்பதைத் தாண்டி இந்த தீர்மானத்திற்கு வேறு மதிப்பில்லை என்பதை அந்த தீர்மானமே அறிந்த உண்மை.

கருணாநிதிக்கு இதெல்லாம் பேசத் தெரியாத விசயமல்ல. 2ஜி ஊழல் வழக்கிற்காக காங்கிரசு அவரை மிரட்டுகிறது. நில அபகரிப்பு வழக்குகளுக்காக மாநில அரசு அவரது கட்சியின் மாவட்ட செயலர் முதல் வட்டச் செயலர் வரை விரட்டுகிறது. இடைத்தேர்தல்களில் டெபாசிட் வாங்குவதே பெரும்பாடாக இருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக சீட் வாங்கினால்தான் மத்திய அரசிடம் பேரம் பேசி வாரிசுகளை காப்பாற்ற முடியும், கட்சியையும் காப்பாற்ற முடியும் என்பதுதான் கருணாநிதியின் நிலைமை.

எனவே ஈழப்பிரச்சினையில் அவர் வீராவேசமாக பேசுவது காய்வதற்குள் மண்டியிடுவது காத்து நிற்கிறது. ஆனாலும் இதில் அவர் மட்டும் தனியாக இல்லை, ஏனைய ஓட்டுக் கட்சிகளும் கம்பெனி கொடுக்கின்றன என்பதுதான் கருணாநிதிக்கு உள்ள ஒரே ஆறுதல்.

–    வசந்தன்.

காமன்வெல்த் மாநாடும் மன்மோகன் சிங்கின் நாடகமும்

3

“காமன்வெல்த் மாநாட்டில் நான் கலந்து கொள்ள மாட்டேன், ஆனால் இந்தியா கலந்து கொள்ளும்” என்று முடிவு செய்திருக்கிறார் மன்மோகன் சிங். இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான அதிகாரிகள் குழு மாநாட்டில் கலந்து கொள்ளும்.

மன்மோகன் சிங்
இரட்டை முகம் காட்டும் மன்மோகன் சிங்.

“பல்வேறு காரணங்களால் தான் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொள்வார்” என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ‘சுருக்கமான’ கடிதம் எழுதியிருக்கிறார் மன்மோகன். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகளை மனதில் வைத்துதான் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள் சொல்வதாக செய்தித் தாள்களில் கிசுகிசு செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் நடந்த காமன்வெல்த் அரசாங்க தலைவர்களின் 11 மாநாடுகளில் பிரதமர் கலந்து கொள்ளாதது இது 6-வது முறையாக இருக்கும் என்பதும் சுட்டிக்  காட்டப்படுகிறது. பிரதமர் கலந்து கொள்ளாமல் வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வது வழக்கமான நிகழ்வுதான் என்று இலங்கையை சமாதானப்படுத்துகிறார்கள். ‘இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாததால் காமன்வெல்த் அரசாங்க  தலைவர்கள் மாநாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் எல் எல் பெரீஸ் கூறியிருக்கிறார்.

உண்மை நிலவரம் இப்படி இருக்க, பிரதமர். மாநாட்டில் கலந்து கொள்ளாதது மூலம் இலங்கை அரசுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக எதிர் கிசு கிசுவும் பரப்பப்படுகிறது. இந்தியப் பிரதமர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசவில்லை என்பது நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக பேசப்படுகிறது. மத்திய அமைச்சர் நாராயணசாமி, இந்த முடிவு தமிழக மக்களிடையே ஆதரவை பெறும் என்று கூறியிருக்கிறார்.

இப்படி இரண்டு முகம் காட்டுவது காமன்வெல்த் நாடுகளின் பல தலைவர்களுக்கு தேவைப்படுகிறது.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்து இந்த நிகழ்வை புறக்கணிக்கப் போவதாக கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்திருக்கிறார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட், நியூசிலாந்து பிரதமர் டேவிட் கீ ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

“தான் மாநாட்டில் கலந்து கொள்வது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டு வரும் இலங்கை அரசை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளப் படக் கூடாது” என்றும் “தம்முடன் வரவிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் முர்ரே மெக்கல்லி இலங்கையின் வடக்கு பகுதிகளை சுற்றிப் பார்த்து நிலைமையை நேரில் ஆய்வு செய்யப் போவதாகவும்” நியூசிலாந்து பிரதமர் டேவிட் கே தெரிவித்திருக்கிறார்.

ஜேம்ஸ் பேக்கர்
சூதாட்ட விடுதி அமைக்க வரும் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பேக்கர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பில்லியனர் முதலாளி ஜேம்ஸ் பேக்கர் காமன்வெல்த் பிசினஸ் மன்றத்தில் பேசவுள்ளார். 45 கோடி டாலர் செலவில் (சுமார் ரூ 2,700 கோடி) ஒரு ஐந்து நட்சத்திர தங்கும் மற்றும் சூதாட்ட விடுதியை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக அக்டோபர் மாதம் ஜேம்ஸ் பேக்கர் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்துக்கு முதலீட்டு ஒப்புதலும், வரிச் சலுகைகளும் வழங்குவதைக் குறித்து இலங்கை நாடாளுமன்றமும் முதலீட்டு வாரியமும் பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில் அவர் தான் அமைக்க விரும்பும் ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிக்கு ஒப்புதல் பெறுவதற்காக இலங்கை அரசு அதிகாரிகளை சந்திக்கவிருக்கிறார்.

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று சீக்கிய தீவிரவாத அமைப்பான தல் கால்சா இங்கிலாந்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறது. இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று டேவிட் காமரூன் சொல்லியிருப்பது போல 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் விசாரண்டை நடத்துவதற்கு இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என்றும் கன்வர் பால் சிங் இங்கிலாந்து பிரதமரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

53 முன்னாள் காலனிய நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பெருமைகளை நினைவுபடுத்திக் கொள்வதற்காக இங்கிலாந்து ஏற்படுத்திய கூட்டமைப்பு. இதில் உறுப்பினராக இருப்பதற்கு உறுப்பினர் கட்டணம் செலுத்துவதை தவிர கூடுதலாக எந்த பொறுப்பும் இல்லை என்பதால் ஒரு பன்னாட்டு கிளப்பின் பகுதியாக சேர்வது போல பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகள் பல இதில் உறுப்பினராக உள்ளன. 2009-ம் ஆண்டில் 9 காமன்வெல்த் நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி பெரும்பான்மை மக்கள் காமன்வெல்த் பற்றியோ, அதன் செயல்பாடுகளைப் பற்றியோ அறிந்திருக்கவில்லை. கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் வரை காமன்வெல்த்தை விட்டு தமது நாடு விலகினால் கவலையில்லை என்று சொல்லியிருக்கின்றனர்.

வங்க தேசத்தை காமன்வெல்த் அங்கீகரித்ததை எதிர்த்து பாகிஸ்தான் 1972-ம் ஆண்டு வெளியேறி 1989-ல் மீண்டும் சேர்ந்தது. 1999-ல் ஜெனரல் பர்வேஸ் முஷாராப் நடத்திய இராணுவ ஆட்சி பிடிப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது. அது 2004-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு முஷாரப் அவசர நிலை பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை பாகிஸ்தான் காமன்வெல்த் அமைப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டது.

நைஜீரியா 1995-ம் ஆண்டிலும், 1999-லும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது. ஜிம்பாப்வேவில் நடந்த நில வினியோக இயக்கத்தைத் தொடர்ந்து, வெள்ளை இன பண்ணையார்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாக அந்நாட்டை காமன்வெல்த் அமைப்பு 2002-ம் ஆண்டு இடைக்கால நீக்கம் செய்த்து. தொடர்ந்து, ஜிம்பாப்வே 2003-ம் ஆண்டு தானாகவே அமைப்பிலிருந்து முழுமையாக விலகிக் கொள்ள முடிவு செய்தது.

பிஜி தீவுகள் 2001-ம் ஆண்டு ஜூன் மாத ஆட்சி கவிழ்ப்பை அடுத்து 2001 டிசம்பர் வரையிலும் ஒரு முறையும், இன்னும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து 2006-ம் ஆண்டிலும் நீக்கி வைக்கப்பட்டது. 2010-ல் தேசிய தேர்தல் நடத்த வேண்டும் என்ற கெடுவை மீறியதால், பிஜி முழுமையாக காமன்வெல்த்திலிருந்து நீக்கப்பட்டது. காமன்வெல்த் மாநாடுகள், விளையாட்டுப் போட்டிகள், தொழில் நுட்ப உதவி திட்டங்கள் போன்றவற்றிலிருந்து அது விலக்கி வைக்கப்பட்டிருக்கும் என்று காமன்வெல்த் செயலர் கமலேஷ் ஷர்மா கூறியிருக்கிறார்.

பாலா கார்ட்டூன்இந்நிலையில் காமன்வெல்த்  மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு ராஜபக்சேவின் இலங்கை அரசு காட்டும் தீவிரம் பிரிட்டனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் புரிந்த இலங்கை அரசின் தலைமையில் மாநாடு நடப்பதை ஒட்டி காமன்வெல்த் அமைப்பு உலக நாடுகள் மத்தியிலும், உலகச் செய்திகளிலும் பேசப்படுவதாக மாறியிருக்கிறது.

இலங்கையைப் பொறுத்த வரை 1976-ம் ஆண்டு கொழும்பில் நடந்த அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு பிறகு, பன்னாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் எந்த நிகழ்வும் அந்நாட்டில் இது வரை நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்களின் மாநாட்டை கொழும்பில் நடத்தி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இருப்பதன் மூலம் இலங்கையில் இயல்பு நிலை திரும்பி விட்டது என்ற தனது பிரச்சாரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சிக்கிறார் ராஜபக்சே.

“இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது” என்ற கோரிக்கையை “இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது” என்று சுருக்கியிருக்கிறது மன்மோகன் அரசு. ‘இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்’ என்பதை தமிழக தலைவர்களின் கருத்து மட்டுமே என்று கூறி பாஜகவும் காங்கிரஸ் அரசுடன் முழுமையாக உடன்படுகிறது. “குறுகிய அரசியல் ஆதாயங்களுக்கு மேலாக தேசிய நலன்களை வைத்து பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்” என்று பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியிருக்கிறார்.

இந்தியாவில் ஆட்சிகள் மாறினாலும், வெளியுறவுக்  கொள்கையைப் பொறுத்த வரை அனைத்து தரப்புகளும் ஒரே நிலைப்பாட்டை எடுக்கின்றன என்பதை காங்கிரஸ், பாஜக இன்னொரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கின்றன. அதாவது உள்நாட்டில் தேர்தல்களில் போட்டி போடுவதற்காக வெவ்வேறு குரல்களில் பேசினாலும், வெளிநாடுகளுடனான உறவு குறித்து ஒரே நிலைப்பாடு எடுப்பது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று ஜெயா அரசாங்கம் நிறைவேற்றிருக்கும் தீர்மானம் எப்படி ஒரு ஏமாற்றோ அது போல மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை என்பதும் ஒரு நாடகம்தான்.

மேலும் படிக்க

முதலாளித்துவத்தை தூக்கி எறி – உலகெங்கிலும் போராட்டம் !

4

வம்பர் 5-ம் தேதி இணையத்தில் புகழ்பெற்ற அனானிகளின் குழு விடுத்திருந்த அழைப்பை ஏற்று, உலகம் முழுவதிலும் 400-க்கும் அதிகமான நகரங்களில் ஆயிரகணக்கான மக்கள் பங்கெடுத்த முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான பேரணி உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அழுகிப் போய்விட்ட முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன் போராட பல்வேறு நாட்டு மக்கள் வீதிக்கு வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டியது விடயம் தான்.

வாஷிங்டன்
வாஷிங்டனில் பேரணி

இணையத்தில் இயங்கும் மிக பிரபல குழுவான அனானிகளின் குழு, உலக மக்களுக்கு ஒரு அழைப்பை விடுத்தது. நவம்பர் ஐந்தாம் தேதி,  ஊழலில் அழுகிப் போய் இருக்கும் அரசுகளுக்கு எதிராக பத்து லட்சம் முகமூடிகளின் பேரணி (Millions Mask March ) ஒன்றை நடத்துமாறு கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும், பல்வேறு நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேரணியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்கள்.

இளைஞர்கள், அறிவுத் துறையினர், உழைக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை சுமந்தபடி குடும்பத்துடன் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா என்று நாடுகளின் பட்டியல் நீண்டது. 400-க்கும் அதிகமான நகரங்களில் இந்த பேரணிகள் நடந்ததாக கார்டியன் செய்திகள் கூறுகின்றன. முதலாளித்துவ எதிர்ப்பு, மக்களை வேவு பார்க்கும் என்எஸ்ஏ எதிர்ப்பு, பொருளாதார சிக்கன நடவடிக்கை மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி வெட்டு எதிர்ப்பு, கதிரியக்க பயிர் எதிர்ப்பு, இயற்கை வள சுரண்டல் எதிர்ப்பு என்பவை பேரணியில் மக்கள் மத்தியில் பொதுவான கோரிக்கைகளாக இருந்தன.

“இந்த அழுகி போய் விட்ட அமைப்பிற்கு மாற்று வேண்டும்”

“மக்களின் வரிப் பணத்தை கொள்ளயடித்து விட்டு, மக்களுக்கு கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தண்ணீர் கொடுக்காத இந்த அமைப்பு வேண்டாம்”

“இந்த பேரணியின் எதிரிகள்-  மக்களுக்கு நீதியை மறுக்கும் பணக்கார வங்கிகள் மற்றும் கார்ப்பரேட்டுகள், இருவரும் இணைந்து உருவாக்கும் ஊழல்மிகுந்த அரசியல்வாதிகள்”

என்ற முழக்கங்களுடன் தங்கள் எதிரி கார்ப்பரேட்டுகள், தங்களுக்கு தேவை ஒரு புதிய அமைப்பு என்பதில் மக்கள் தெளிவுடன் இருந்தனர். அதை சரியான முழக்கங்களாக மாற்றவும் செய்தனர்.

வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை முன்பு.

“மக்களுக்கான சட்டத்தை வங்கிகள் எழுத வேண்டாம்” என்று முதலாளித்துவ அமைப்பை சாடியது ஒரு முழக்கம், “என் தலைமுறை இந்த அமைப்பை மாற்றும்” என நம்பிக்கை தந்தது இன்னொரு முழக்கம். லண்டனில் பேரணி பக்கிங்காம் அரண்மனை முற்றுகை இட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும் போலிஸ் தடியடி உலகம் முழுவதிலும் பொதுவாக இருந்தது. லண்டனில் நடைபெற்ற பேரணியில் “ஓட்டுப் போடாதே புரட்சி செய்” என்று அறை கூவல் விடுத்த நகைச்சுவை நடிகரும், பத்திரிகையாளருமான ரஸ்ஸல் பிரான்ட் முகமூடி அணிந்து பங்கேற்றார்.

வாஷிங்டன் நகரில் பேரணி வெள்ளை மாளிகை நோக்கி சென்றது, “அதிபர் ஒபாமா, வெளியே வந்து மக்களுக்கு பதில் சொல்” என்று முழக்கமிட்டனர். நியூயார்க் நகர வால் வீதிகளில் போராட்டம் தொடர்ந்தது.

பேரணியில் பங்கெடுத்தவர்கள் பெரும்பாலும் கய் பாக்ஸின் (Guy Fawkes) முகமூடியை அணிந்திருந்தனர். பேரணி நடந்த நவம்பர் 5-ம் தேதி ‘கய் பாக்ஸ்’ தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொத்த பேரணிக்கு ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது. ஆனால் அந்த வரலாறே இந்த பேரணிகளின் அராஜகவாதத்தையும் காட்டிக் கொடுக்கிறது.

1605-ம் ஆண்டு, நவம்பர் 5-ம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு ரகசியக் குழுவை சேர்ந்த கய் பாக்ஸ் எனும் நபரை வெடி பொருட்களுடன் காவல் துறையினர் கைது செய்தனர். இங்கிலாந்தை அப்பொழுது ஆண்டு வந்த முதலாம் ஜேம்ஸ் மன்னன் புராடஸ்டன்ட் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவன். பெரும்பான்மை புராடஸ்டன்ட் மத்தியில் சிறுபான்மை கத்தோலிக்கர்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இந்த மதச் சண்டையின் விளைவாக சில கத்தோலிக்க ஆர்வலர்கள் ஒரு சிறு குழுவை ஏற்படுத்தினார்கள். அதில் முன்னாள் ராணுவ வீரரான கய் பாக்ஸ் இணைந்தார்.

சாகச நடவடிக்கையின் மேல் ஈடுபாடு கொண்டிருந்த அந்த குழுவினர், வெடி பொருட்களை சேகரித்து பாரளுமன்றத்தை தகர்க்க திட்டமிட்டனர், அதன் மூலம் மன்னரைக் கொல்வது, நாட்டில் கலகம் செய்வது, கத்தோலிக்கத் தலைமையை ஏற்படுத்துவது என்பது திட்டம். அவர்கள் அரசு அதிகாரிகளுக்கும், பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதம் எழுதினார்கள். கடிதத்தில் தங்களை அனானிகள் என்று அழைத்துக் கொண்டனர்.

லண்டன்
லண்டன் நாடாளுமன்ற அவைகளுக்கு வெளியில்.

கடிதங்கள் கவனம் பெற்றன, காவலர்கள் உஷார்படுத்தப்பட்டனர். நகரம் முழுவதும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் கீழ் பாதாள அறையில் வெடி பொருட்களுடன் இருந்த கய் பாக்ஸ் காவலர்களிடம் சிக்கினார். கடும் துன்புறுத்தலுக்கு பின் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கய் பாக்ஸின் உடல் நான்காக பிளக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு எச்சரிக்கைக்காக அரண்மனையின் நான்கு பகுதிகளில் வைக்கப்பட்டது.

மன்னர் காப்பாற்றப்பட்டதை தொடர்ந்து நவம்பர் 5-ம் தேதி  நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன, வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை குறிக்கும் வண்ணம் வாண வேடிக்கைகள் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக இருந்தன. நவம்பர் 5-ம் தேதி இன்று வரை இங்கிலாந்து மக்களால் விமரிசையாக வாண வேடிக்கைகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், பெரும்பாலான இங்கிலாந்து மக்கள் கய் பாக்ஸின் அரசு எதிர்ப்பை மிக முக்கியமானதாகவும், அவரை சாகச நாயகனாகவும், அரசு எதிர்ப்பின் சின்னமாகவும் பார்க்கத் தொடங்கினர். விளைவு கய் பாக்ஸ் முகமூடி, அனானி குழு அரசு எதிர்ப்பின் சின்னமாக பார்க்கப்பட்டது. இதை மையமாக வைத்து ஆலன் மூர் எனும் எழுத்தாளார் “வி ஃபார் வென்டெட்டா” எனும் சாகச நாயகனை மையப்படுத்திய நாவல் ஒன்றை எழுதினார். இது டேவிட் லாயிட் என்பவரின் கை வண்ணத்தில் காமிக்ஸ் புத்த்கமாக வந்து சக்கை போடு போட்டது. இங்கிலாந்தை பாசிஸ்ட் ஒருவர் ஆட்சி செய்ய, அவரை எதிர்த்து வீழ்த்தும் சாகச நாயகன் வென்டெட்டா, கய் பாக்ஸ் முகமூடி அணிந்திருப்பான். அனானியாக (முகமற்றவனாக) அரசை எதிர்க்கும் பல சாகசங்களை செய்வான். இந்த சாகச நாயகனின் கதை இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக விற்பனை ஆனாது. படமாகவும் வந்தது. வென்டெட்டா அனைத்து வித அதிகாரங்களையும் எதிர்க்கும் அராஜகவாதி.

விக்கிலீக்ஸின் வருகை, இணையத்தில் ஹேக்கர்களாக வலம் வந்த சிலரின் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது, அரசு எதிர்ப்பு, வெளிப்படையான அரசு, கருத்து சுதந்திரம், என்ற அடிப்படைகளை கொண்ட அனானிகள் குழு  உருவானது. கய் பாக்ஸின் முகமூடியை சின்னமாகக் கொண்ட, யார் என்று தெரியாத நபர்கள் அனானிகள் குழுவினர், அரசின் தளங்களை ஹேக் செய்வது, முடக்குவது என்ற சாகச நடவடிக்கைகள் மூலம் அறியப்பட்டனர். சாகசவாதமே இவர்களின் வடிவம்.

மெக்சிகோ சிட்டி
மெக்சிகோ சிட்டி

பொதுவான, கொள்கை, அமைப்பு, தலைமை ஏதுமில்லாத ஆனால் தங்களாக ஒருங்கிணைத்துக் கொள்ளும் அரஜாகவாதிகள், இந்த அனானி குழுவினர். சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்ட கய் பாக்ஸ் இவர்களின் ஆதர்சம். அவரின் முகம் இவர்களின் முகமுடி. இவர்கள் கோரிக்கையாக விடுத்தது தான் இந்த பேரணி.

இந்த பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் நிலவி வரும் முதலாளித்துவ அமைப்பை அம்பலப்படுத்தியதும், அது அழுகிப் போய் முடை நாற்றம் வீசுவதை அவர்கள் உணர்ந்திருப்பதும், இதற்கு மாற்று கோருவதும் வரவேற்கப்பட வேண்டியது தான். இவர்களின் முழக்கங்கள் வர்க்க போராட்டத்தை சரியாக கணித்து முன் வைக்கின்றன, இவர்கள் மார்க்சியம் பயின்றவர்கள் அல்லர், ஆனால் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் இந்த அமைப்பை புரிந்து கொண்டவர்கள். பல்வேறு நாட்டினர் குறிப்பாக முதலாளித்துவ நாட்டினரும், ஏகாதிபத்திய நாட்டினரும், மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்தவர்களும் பேரணியில் வர்க்கப் போராட்ட முழக்கமிட்டது மகிழ்ச்சியான விடயம் தான்.

ஆனால் முழக்கங்கள் அனைத்தையும் தீர்மானித்து விடுமா? இவ்வளவு தெளிவான மக்கள் கூட்டமும் அரசியல் அறிவும், முதலாளித்துவத்தை வீழ்த்த தயாராக இருக்கும் நிலைமையில் வெறும் சாகச வாதம் என்ன பலன் தரும்? இந்த முழு உணர்ச்சியும் காயடிக்கப்பட்டு விடும் என்பதுதான் இதன் எதிர்காலமாக இருக்கும்.

கய் பாக்ஸ்
கய் பாக்ஸ்

முதலாளித்துவம் அழுகிப் போய் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் இதே வேளையில் தான் அது இன்னும் பாசிசமாக மாறி வருகிறது. அமெரிக்க உளவுத் துறையின் கண்காணிப்பு திட்டமான பிரிசம் முதல் இந்திய அரசின் ஆதார் அடையாள அட்டை திட்டம் வரை ஆளும் அரசுகள் மக்களை கண்காணித்து ஒடுக்க பிரம்மாண்டமான தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர். சீரான பொருளாதார ஆதிக்க அமைப்புகள்,  ஒழுங்கமைத்து வைக்கப்பட்டிருக்கும் ராணுவம், மக்கள் மத்தியில் வேவு பார்க்க வேவு படை, மக்கள் உணர்வை சீரழிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்றிருக்கும் போது  அதை ஒழித்துக் கட்டுவது என்பதும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கோட்பாடால் தான் முடியும்.

திட்டமிட்ட, மிக பிரம்மாண்டமான பாசிச கட்டமைப்பை வீழ்த்த அராஜகவாதம்,  சாகசவாதம் போதாது. அது மேலும் நம்மை காட்டிக் கொடுக்கவும், போராட்டத்தை அழிக்கவுமே உதவும். அதனால் அரசு இன்னும் உறுதி பெறும்.

எதிரிக்கு நிகரான ஒழுங்கமைக்கப்பட்ட, சீரான கோட்பாடு, போர் தந்திரம், செயல் தந்திரம் கொண்ட, மக்களை திரட்டி அரசியல்படுத்தும் ஆற்றல் கொண்ட, இழப்பதற்கு இனி எதுவும் இல்லை விலங்குகளைத் தவிர என்ற உணர்வு கொண்ட பாட்டாளி முன்னணிப் படையின்  தலைமை தான் இதற்கு ஒரே தீர்வு. இந்த பேரணியில் பங்கேற்ற மக்கள் அடுத்த கட்டமாக  அதை நோக்கி நகர வேண்டும், நகருவார்கள்.

நவம்பர் 7 புரட்சி தினத்தை ஒட்டி நடந்த இந்தப் பேரணி ஒரு சிறப்பான முயற்சி, அரஜாகவாதத்தை முறியடித்து இது உண்மையான பாட்டளி வர்க்க புரட்சியாக பல நாடுகளில் வளர வேண்டிய நிலை உள்ளது. வளர்ந்தே தீரும்.

மேலும் படிக்க
‘The Corrupt Fear Us!’ Massive Anonymous ‘Million Mask March’ as it happened (PHOTOS, VIDEOS)