உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு
குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.

இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலைநிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்த போதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப்படுத்தின. எனவே வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக எழுப்பப்பட்டது.
‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள், 1806-ம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தொழிலாளர்கள் பத்தொன்பது, இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது.
1820 மற்றும் 30-களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பற்பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. பத்து மணி நேர வேலைநாள் என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது. பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது. இந்த தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் துவங்கின. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன் முதலாக வைத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. 1827-ல் பிலடெல்பியாவில் கட்டிடங்கட்டும் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில்தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. 1834-ல் நியுயார்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர். நாளொன்றுக்கு அவர்கள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளருக்காக வாதிடுபவன்’ (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை வெளியிட்டது. பத்துமணி நேர வேலை நாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஒரு இயக்கமாக உருவெடுத்தன். 1837-ல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்தபோதிலும் வேன் பியுரன் தலைமையிலான அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலைநாள் அறிவித்தது. எல்லோருக்கும் பத்து மணி நேர வேலை நாள் என்பதற்காக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய, உடனேயே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நாள் என்ற கோஷத்தை எழுப்பினர்.
தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850-களில் இக்கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857-ல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்தபோதிலும் நன்கு வளர்ச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கையை அடைந்தன. இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக வெகு தூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன் வைத்து 1858-ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.
எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் துவங்கியது.
1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும் இதற்கு ஒரு தலைமுறை முன்பே ‘தேசிய தொழிற்சங்கம்’ குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற் சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.
1861-62-ல் உள்நாட்டுப் போர் துவங்கியது. இதற்கு சற்று முன்பே துவங்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கம், இயந்திர தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசிய தொழிற்சங்கங்கள் அப்போது மறையத் துவங்கின. ஆனபோதிலும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் பல உள்ளூர் தேசிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் எழுச்சியும் உருவானது. இவ்வாறு பல தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து 1866, ஆகஸ்டு 20-ஆம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச. சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாற்றியமைக்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவராவார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமானவராய் கருதப்பட்ட இவர் ஒரு இளைஞர். இவர் லண்டனில் இருந்த முதலாவது இனடர் நேஷனல் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக தேசிய தொழிற்சங்கத்துக்கும் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவுக்கும் இடையே உறவை ஏற்படுத்த அவரால் முடிந்தது.

தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு 1866-ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து இந்நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனையடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்ட தீர்மானிக்கிறோம்”.
மேலும் இம்மாநாட்டில் 8 மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க சுயேச்சையான அரசியல் நடவடிக்கை வேண்டும் மற்றும் தொழிலாளர் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. தேசிய தொழிற்சங்க போராட்டங்களினால் எட்டு மணி நேர குழுக்கள் ஏற்பட்டன. மேலும் இச்சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் பல மாநில அரசுகள் அரசு வேலைகளில் எட்டு மணி நேர வேலை நாளை அமுல்படுத்தின. 1868-ல் அமெரிக்க காங்கிரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றியது. போஸ்டனைச் சேர்ந்த இயந்திர தொழிலாளியான ‘ஐராஸ் டூவர்டு’ என்பவர்தான் இந்த எட்டு மணி நேர இயக்கத்தின் எழுச்சியூட்டும் தலைவராக விளங்கினார். ஆரம்பத்தில் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் பழமையானதாக இருந்தன. இவை எல்லா நேரங்களிலும் சரியாக இருந்தன என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் அடிப்படியில் இந்த இயக்கம் பாட்டாளி வர்க்கத்தின் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருந்தது. மேலும் திருத்தல்வாத தலைவர்கள், முதலாளித்துவ அரசியல்வாதிகள் இந்த இயக்கத்தில் ஊடுருவாமல் இருந்திருப்பார்களேயானால் இந்த இயக்கம் போர்க்குணமிக்க தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப கட்டமாக இருந்திருக்கும். இவ்வாறு நான்கு தலைமுறைகளுக்குப் பின் தேசிய தோழிற்சங்கமானது முதலாளித்துவ அடிமைத்தனத்திற்கெதிராகவும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்காகவும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டது.
சில்விஸ் தொடர்ந்து லண்டனிலுள்ள இன்டர்நேஷனலோடு தொடர்பு கொண்டிருந்தார். இவரைத் தலைவராகக் கொண்ட 1967-ல் நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாடு சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்தது. 1869-ல் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவின் அழைப்பிற்கிணங்க பேஸிலில் நடைபெற்ற இண்டர்நேஷனல் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்ப முடிவு செயதது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாநாட்டிற்குச் சற்று முன்பு சில்விஸ் மரணமடைந்தார். எனவே சிக்காகோவிலிருந்து வெளிவந்த ‘வொர்க்கிங்மென்ஸ் அட்வகேட்’ பத்திரிகையின் ஆசிரியரான ஏ.சி.காமெரான் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.
மாநாட்டில் பொதுக்குழு அந்த நம்பிக்கையூட்டும் இளம் அமெரிக்க தொழிலாளர் தலைவனுக்கு ஒரு விஷேச தீர்மானத்தில் அஞ்சலி செலுத்தியது. ”பாட்டாளி வர்க்க ராணுவத்தின் தளபதியாக பத்தாண்டு காலம் மாபெரும் திறமையோடு பணியாற்றிய சில்விஸ், எல்லோருடைய கவனமும் திரும்பும் வகையில் செயல்பட்டவர். ஆம் அந்த சில்விஸ்தான் இறந்து விட்டான்” என்றது அஞ்சலி தீர்மானம். சில்விஸின் மறைவு தேசிய தொழிற்சங்கத்தின் அழிவுக்கு ஒரு காரணமாகி பின்னால் அது மறையவும் காரணமாயிற்று.
எட்டு மணி நேர இயக்கம் குறித்து மார்க்ஸ்
1866-ம் ஆண்டு எட்டு மணி நேர வேலை நாள் என்ற முடிவை தேசிய தொழிற்சங்கம் எடுத்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடிய இன்டர்நேஷனலின் காங்கிரசும் இதே கோரிக்கையைப் பின்வருமாறு முழங்கியது.

”வேலை நாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது…. வேலை நாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு முன் மொழிகிறது.” தேசிய தொழிற்சங்கத்தின் இந்த எட்டுமணி நேர இயக்கத்தைக் குறித்து மார்க்ஸ் 1867-ல் வெளியான மூலதனம் புத்தகத்தில் ‘வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார். கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார். ”அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக் கொள்ள முடியாது. ஆனால் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஒரு இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.”
இருவார வித்தியாசத்தில் நடைபெற்ற பால்டிமோர் தொழிலாளர் மாநாடும், ஜெனிவா இன்டர்நேஷ்னல் காங்கிரசும் ஒரே சமயத்தில் எட்டு மணி நேர வேலை நாளை முன் மொழிந்தன என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு அட்லாண்டிக்கின் இருபுறமும் உற்பத்தி முறை நிலைமையால் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சி ஒரே விதமான இயக்கத்தை அதாவது எட்டு மணி நேர வேலை நாளுக்கான இயக்கத்தை உருவாக்கியது.
ஜெனிவா காங்கிரஸ் முடிவு எவ்வாறு அமெரிக்க முடிவோடு ஒத்துப் போகிறது என்பதை தீர்மானத்தின் பின்வரும் பகுதி காட்டுகிறது. ”வட அமெரிக்க ஐக்கிய நாட்டு தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கையாக இந்த அளவு இருப்பதால், இந்த காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை உலகத்தின் அனைத்து தொழிலாளர்களுக்குமான பொது மேடையில் முன் வைக்கிறது.”
அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் இந்த செல்வாக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற காரணங்களுக்காக இன்னும் வேகமாக சர்வதேச காங்கிரசில் செலுத்தப்பட்டது.
அமெரிக்காவில் மே தினம் பிறந்தது
முதல் இன்டர்நேஷனல் 1872-ல் தன் தலைமையகத்தை லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு மாற்றியது. அது அப்போது சர்வதேச ஸ்தாபனமாக விளங்கவில்லை. பின் 1876-ல் இது அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது. பின் இது மாற்றியமைக்கப்பட்டு இரண்டாவது இன்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 1889-ல் பாரிஸில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் மே முதல் நாள் என்பது உலகத் தொழிலாளர்கள் தங்கள் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கீழ் மிக முக்கிய அரசியல் கோரிக்கையாக 8 மணி நேர வேலைநாளுக்கு போர்க்குரல் கொடுக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1884, அக்டோபர் 7-ம் நாள் சிக்காகோவில் அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பின் மாநாடு முடிவுக்கு அடிகோலாக விளங்கியது. அம்மாநாட்டில் அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

”1886 மே முதல் நாள் முதல் சட்டபூர்வமான வேலைநாள் என்பது எட்டு மணி நேரம்தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானிக்கிறது. எனவே எல்லா தொழிலாளர் அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்பிற்குரிய இடத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தீர்மானத்திற்கு ஏற்ப தங்கள் சங்க விதிகளை அமைத்துக் கொள்ளுமாறு இம்மாநாடு பரிந்துரைக்கிறது.”
எட்டு மணி நேர வேலை நேரத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி கூட்டமைப்பு தீர்மானத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50,000-க்கு உட்பட்டது. தங்கள் உறுப்பினர்கள் வேலை செய்யும் கடை, ஆலை, சுரங்கங்களில் போராடி இன்னும் அதிகமான தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும் என்பதை அது அறிந்திருந்தது. அப்போதுதான் எட்டு மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதை அறிவிக்க முடியும் என்பதையும் உணர்ந்திருந்தது. 1886, மே முதல் நாள் 8 மணி நேர வேலைக்காக போராடும் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டே “தீர்மானத்திற்கேற்ப சங்க விதிகள் அமைய வேண்டும்” என அறிவித்திருந்தது. வேலை நிறுத்தத்தின் போது வெகு நாட்கள் வெளியே தங்க நேரிடலாம். அப்போது சங்கத்தின் உதவி தேவைப்படும். மேலும் இவ்வேலை நிறுத்தம் தேசிய அளவில் நடைபெறுவதாலும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் கலந்து கொள்வதாலும் அவர்கள் விதிப்படி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகிறது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த கூட்டமைப்பானது தற்போது உள்ள அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை போலவே சுயேச்சையாக கூட்டமைப்பு முறையில் ஏற்பட்டது. எனவே கூட்டமைப்பில் இணைந்த தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்தால்தான் தேசிய மாநாட்டின் முடிவுகள் அவைகளைக் கட்டுப்படுத்தும்.
மே தின வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள்
1877-ல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். இப்போராட்டம் தொழிலாளர் இயக்கம் முழுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் முதல் மாபெரும் தேசிய அளவிலான வெகுஜன இயக்கமாக விளங்கியது. அரசு மற்றும் முதலாளிகளின் கூட்டுச் சதி காரணமாக இவ்வியக்கம் தோற்கடிக்கப்பட்டது.
இப்போராட்டங்களின் விளைவாக அமெரிக்க தொழிலாளி வர்க்கம் தன் வர்க்க நிலைப்பாடு குறித்து மேலும் தெளிவை அடைந்தது. அதன் போர்குணமும் ஒழுக்கநெறியும் மேலும் செழுமையடைந்தன. இப்போராட்டங்கள் பென்சில்வேனியா சுரங்க அதிபர்களுக்கு ஒரு வகையான பதிலடியாக அமைந்தன.
ஏனெனில் இரண்டாண்டுகளுக்கு முன்புதான் 1875-ம் ஆண்டு சுரங்க தொழிலாளர் சங்கங்களை அழிக்கும் பொருட்டு தீவிர போர்க்குணமுள்ள பத்து தொழிலாளர்களை சுரங்க அதிபர்கள் தூக்குமரத்திலேற்றினார்கள்.
அமெரிக்க தொழிற்துறை மற்றும் உள்நாட்டு சந்தை 1880-90-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் தீவிர வளர்ச்சியடைந்தது. ஆனபோதிலும் 1884-85-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு மந்த நிலை நிலவியது. இந்நிலை 1873-ல் ஏற்பட்ட நெருக்கடியின் தொடர்ச்சியாகும். அப்போது வேலையில்லா திண்டாட்டமும் மக்கள் துன்பமும் பெருகியது. இது குறைவான வேலை நாளுக்கான இயக்கத்திற்கு உந்துதல் சக்தியை தந்தது.
கூட்டமைப்பு அப்போதுதான் உருவானது. நைட்ஸ் ஆப் லேபர் என்ற தொழிலாளர் ஸ்தாபனம் அதற்கு முன்பே இருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து வந்தது. எட்டு மணி நேர வேலை என்ற கோஷத்தின் கீழ் இவ்விரு அமைப்புகளுக்கும் வெளியே உள்ள தொழிலாளர்களை திரட்ட முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்தது. 8 மணி நேர வேலை நாள் இயக்கத்துக்கு ஆதரவு தருமாறு ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தை கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது. அனைத்து தொழிலாளர்களும் பொதுவாக ஒரு நடவடிக்கையில் இறங்கினால்தான் தனக்கு சார்பான பலனை பெற முடியும் என்று கூட்டமைப்பு உண்ரந்திருந்தது.

1885-ல் கூட்டமைப்பு மாநாடு அடுத்த ஆண்டு மே முதல் நாள் வேலை நிறுத்தம் செய்வது பற்றி மீண்டும் எடுத்துரைத்தது. பல தேசிய சங்கங்கள் போராட்டத்துக்கான தயாரிப்புகளில் இறங்கின. குறிப்பாக மரவேலை மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் தயாரிப்புகளில் இறங்கினார். இந்த போராட்டத்தின் காரணமாக அப்போதிருந்த தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது. கூட்டமைப்பைக் காட்டிலும் பிரபலமாக விளங்கிய ‘நைட்ஸ் ஆப் லேபரி’ன் உறுப்பினர் எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 70 லட்சத்திற்கு உயர்ந்தது. அதே நேரத்தில் 8 மணி நேர இயக்கத்தையும் அதற்கான நாளையும் நிர்ணயித்த கூட்டமைப்பின் மதிப்பும் உயர்ந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பெருமளவு உயர்ந்தது. வேலை நிறுத்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க ‘நைட்ஸ் ஆப் லேபர்’ அமைப்பின் தலைமை, குறிப்பாக, டெரன்ஸ் பெளடர்லி என்பவன் நாச வேலைகளில் இறங்கினான். தன்னுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென ரகசியமாக அறிவுறுத்தினான். இந்த விஷயம் வெளியானதும் கூட்டமைப்பின் புகழ் மேலும் உயர்ந்தது. இரு ஸ்தாபன ஊழியர்களும் போராட்டத் தயாரிப்புகளில் உற்சாகத்தோடு இறங்கினர். எட்டு மணி நேர வேலை நாள் குழுக்களும் சங்கங்களும் பல நகரங்களில் எழுந்தன. தொழிலாளர் இயக்கம் முழுவதும் போர்க்குணத்தின் தன்மை மேலிட்டது. திரட்டப்படாத தொழிலாளர்களையும் இது பற்றிக் கொண்டது. அமெரிக்க தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய நாள் அப்போது விடிந்து கொண்டிருந்தது.
தொழிலாளர்களின் அப்போதைய மனநிலையை அறிய சிறந்த வழி அவர்களின் போராட்ட அளவையும், ஆழத்தையும் ஆராய்வதே ஆகும். அப்போது நிகழ்ந்த பல வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்களின் போராட்ட குணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கின. முந்திய ஆண்டைக் காட்டிலும் 1886 மே முதல் நாளுக்கான வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கையும் ஏற்கனவே பெருகியது. 1881-84-ல் நிகழ்ந்த வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 500. வேலை நிறுத்ததில் பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,50,000. ஆனால் 1885-ல் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 700 ஆகவும், பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆகவும் உயர்ந்தது. 1886-ல் நடைபெற்றது. கிட்டத்தட்ட 1,572 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். 1885-ல் 2,467-ஆக இருந்த பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 1886-ல் 11,562-ஆக உயர்ந்ததிலிருந்து வேலை நிறுத்தங்கள் பரவிய வேகத்தை தெரிந்து கொள்ளலாம். ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தின் நாசவேலை இருந்த போதிலும் 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள் என கணக்கிடப்படுகிறது.
இவ்வேலை நிறுத்தத்தின் மையமாக விளங்கியது சிக்காகோ நகரமாகும். இங்கு தான் வேலை நிறுத்த இயக்கம் மிகப் பரவலாக பரவி இருந்தது. மேலும் பல நகரங்களில் மே முதல் நாள் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. நியூயார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயின்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டிட்ராய்ட் ஆகிய நகரங்களில் வேலை நிறுத்தங்கள் சிறப்பாக நடைபெற்றன. உதிரி மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அப்போது அதிக அளவிலிருந்தது. இவர்களும் இப்போராட்டத்தால் கவரப்பட்டது இவ்வியக்கத்தின் சிறப்பம்சமாகும். ஒரு புரட்சிகரமான உணர்வு நாடு முழுவதும் நிலவியிருந்தது. முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இதை சமூகப் போர் என்றார்கள். மூலதனத்தின் மீதான வெறுப்பு என்றார்கள். அப்போது கீழ்மட்ட ஊழியர்களிடையே நிலவியிருந்த அற்புதமான உற்சாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். மே முதல் தின வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களில் பாதிப்பேர் வெற்றிகண்டதாக சொல்லப்படுகிறது. மற்ற இடங்களிலும் 8 மணி நேர வேலை நாளை அடைய முடியாவிட்டாலும் ஏற்கனவே இருந்த வேலை நேரத்தில் கணிசமான அளவு குறைக்கப்பட்டது.
சிக்காகோ வேலை நிறுத்தமும் ‘ஹே’ சந்தையும்
சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து போதுமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு போராட்ட இயக்கமாக விளங்கியது. தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை விருத்தி செய்யும் பொருட்டு எந்த நேரத்திலும் தொழிலாளர்களை போராட்டத்தில் இறங்க வைப்பதாயும், அவர்கள் போராட்ட உணர்வைக் கூர்மைப்படுத்துவதாகவும் அவ்வியக்கம் விளங்கியது.
போர்குணமுள்ள தொழிலாளர் குழுக்களால் சிக்காகோவின் வேலை நிறுத்தம் பெருமளவுக்கு பிரகாசித்தது. வேலை நிறுத்ததிற்கு வெகுமுன்பே அதற்கான தயாரிப்புகளைச் செய்ய 8 மணி நேர சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த 8 மணி நேர சங்கம் என்பது கூட்டமைப்பு, ‘நைட்ஸ் ஆப் லேபர்’ சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி (அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் முதல் அரசியல் சோஷலிஸ்ட் கட்சி) போன்ற ஸ்தாபனங்களில் இணைந்துள்ள தொழிற்சங்கங்களைக் கொண்ட ஒரு ஐக்கிய முன்னணி ஸ்தாபனமாக விளங்கியது. இந்த 8 மணி நேர சங்கத்துக்கு இடதுசாரி தொழிற்சங்கங்களைக் கொண்ட மத்திய தொழிற்சங்கமும் முழு ஆதரவு அளித்தது. மே முதல் தினத்துக்கு முந்திய நாளான ஞாயிற்றுக் கிழமையன்று மத்திய தொழிற் சங்கம் ஏற்பாடு செய்த தொழிலாளர்களைத் திரட்டும் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 25,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது. எட்டு மணி நேர வேலை நாள் கோரிக்கையின் முக்கியத்துவமும், வேலை நிறுத்தத்தின் பரந்த மற்றும் தீவிரத்தன்மையும் இந்த இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவத்தைத் தந்தது. அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த முக்கியத்துவம் மேலும் தீவிரமானது. 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.

அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கி விடலாம் என கண்டார்கள். மே 3, 4 தேதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ‘வைக்கோல் சந்தை (ஹே சந்தை) விவகாரம்’ என்றழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு வழி வகுத்தன. மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. போலீசு மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிக்கும் போது கூட்டம் தள்ளிவைக்கப்பட இருந்தது. கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதும்தான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன. நாடெங்கிலுமுள்ள முதலாளிகளுக்கு ஆதரவு தந்தனர்.
1886 ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் தொடர்ந்தது. இதன் மூலம் வேலை நிறுத்த இயக்கத்தின் போது இழந்த தங்கள் பழைய நிலையை மீண்டும் அடைய அந்த முதலாளிகள் தீர்மானித்தனர்.
சிக்காகோ தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு 1888-ல் செயின்டி லூயிஸில் கூட்டமைப்பு கூடியது. (தற்போது அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது). அப்போது 8 மணி நேர இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க தீர்மானித்தது. இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு வர்க்க அரசியல் பிரச்சினையை அடிப்படையாக வைத்து, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்திய மே முதல் நாளையே மீண்டும் 8 மணி நேர இயக்கத்தை துவக்குவதற்கான நாளாக அறிவித்தார்கள். 1889-ம் ஆண்டு சாமுவேல் கோம்பர்ஸ் தலைமையில் நடந்த அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு வேலை நிறுத்த இயக்கத்தை முறைப்படுத்துவதில் வெற்றிகண்டது. வலுவான முறையில் தயாரிப்புகளோடு விளங்கிய மரவேலைத் தொழிலாளர் சங்கம் முதலில் வேலை நிறுத்தத்தில் இறங்குவது என்றும் அது வெற்றி பெற்ற பின் மற்ற சங்கங்கள் இறங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மே தினம் உலக தினமாக மாறியது
சாமுவேல் கோம்பர்ஸ் அவர்கள் தனது சுயசரிதையில் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு எங்ஙனம் மே தினம் ஒரு உலகத் தொழிலாளர் விடுமுறை தினமாக மாறுவதற்கு வழி செய்தது என்பது குறித்து கூறுகிறார். எட்டு மணி நேர இயக்கத்துக்கான தயாரிப்புகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. நாங்கள் தொடர்ந்து எங்கள் நோக்கத்தை பரவலாக்குவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தோம். பாரிஸில் சர்வதேச தொழிலாளர் காங்கிரசுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்து. இந்த காங்கிரசின் மூலம் உலகளாவிய ஆதரவைப் பெறுவதின் மூலம் எங்கள் இயக்கம் பயனடைய முடியும் என்று நான் நினைத்தேன்.”கோம்பர்ஸ் தனது சந்தர்ப்பவாதத்தையும், சீர்திருத்த வாதத்தையும் ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளார். பின்னர் அது அவரின் வர்க்க சமரசக் கொள்கையில் முழுமையாக வெளிப்பட்டது. முன்பு தீவிரமாக எதிர்த்து போராடிய சோஷலிஸ்டு தொழிலாளர்களின் ஆதரவை பெறுவதற்கும் அவர் தயாராய் இருந்தார்.
1889-ம் ஆண்டு 14-ம் நாள் பாஸ்டில் வீழ்ச்சியின் நூற்றாண்டு விழா பாரிஸில் நடந்தது. இதற்கான உலகெங்கிலுமிருந்து சோஷலிச இயக்க தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மாபெரும் ஆசான்களான மார்க்ஸும், எங்கெல்சும் உருவாக்கிய அகிலத்தை போன்ற ஒன்றை உருவாக்கவே அவர்கள் அங்கு கூடினர். பின்னர் அதுவே இரண்டாவது அகிலம் என்று அழைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அமெரிக்க பிரதிநிதிகளிடமிருந்து 8 மணி நேர இயக்கப் போராட்டத்தைப் பற்றியும், சமீபத்தில் அதற்கு புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டது பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதன் விளைவாக பாரிஸ் மாநாடு கீழ்க் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.

‘’எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.’’
1890-ம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் மரவேலைத் தொழிலாளர்களும் கட்டிட வேலை தொழிலாளர்களும் சோஷலிஸ்ட்டான பீட்டர் மெக்கியூரி தலைமையில் 8 மணி நேர வேலை நாளுக்காக பொது வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ஜெர்மனியில் சோஷலிஸ்டுகளுக்கு எதிராக பல விசேஷ சட்டங்கள் இருந்த போதிலும் பல தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடினார்கள். அதேபோல் மற்ற ஐரோப்பிய தலைநகரங்களிலும் அதிகாரவர்க்கத்தின் எச்சரிக்கையையும் ஒழுங்கு முறையையும் மீறி தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடினர். அமெரிக்காவில் சிக்காகோவிலும், நியூயாக்கிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாய் இருந்தது. ஆயிரக்கணக்கானவர் தெருக்களில் 8 மணி நேர கோரிக்கையை வலியுறுத்தி அணிவகுத்தனர். முடிவில் முக்கிய மையங்களில் திறந்த வெளிக் கூட்டங்கள் நடைபெற்றன.
1891-ல் அகிலத்தின் அடுத்த மாநாடு பிரான்ஸில் நடந்தது. மே முதல் நாளின் உண்மையான நோக்கம் 8 மணி நேர வேலை நாள் என்பதை மீண்டும் எடுத்துரைத்தது. பொதுவான வேலை நிலைமைகளை சீர் செய்ய வேண்டும் நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காகவும் அத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றது. மாற்றியமைக்கப்பட்ட தீர்மானம் குறிப்பாக 8 மணி நேர வேலை நாள் மே தின ஆர்ப்பாட்டத்தின் வர்க்கத் தன்மையை வலியுறுத்துவதாக இருந்தது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வேலை நிறுத்தம் நடைபெற வேண்டும் என்று தீர்மானம் சொன்னது. அதே நேரத்தில் மே தின ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தவும் ஸ்தூலப்படுத்தவும் அகிலம் முயற்சி எடுத்தது. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைமையொ ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளோடு சேர்ந்து கொண்டு, மே முதல் நாள் வேலை நிறுத்தத்தை ஏற்க மறுத்து அதை அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வாக்களித்தது. இதன் மூலம் அது தன் சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டியது.
உலக மே தினம் குறித்து எங்கெல்ஸ்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஜெர்மன் நான்காவது பதிப்புக்கு 1890, மே 1 -ம் தேதி எங்கெல்ஸ் முகவுரை எழுதுகிறார். அதில் உலக பாட்டாளி வர்க்க ஸ்தலங்களை விமர்சிக்கும் போது முதலாவது உலக மே தினம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். ‘’நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. அது முதன் முறையாக ஒரே கொடியின் கீழ் ஒரு படையாக 8 மணி நேர வேலை நாள் சட்டமாக வேண்டும் என்ற ஒரே உடனடியான நோக்கத்திற்காகத் திரண்டிருக்கிறது. நாம் பார்க்கக் கூடிய இந்த அற்புதமான காட்சி உலகெங்கிலுமுள்ள முதலாளிகளையும் நிலப்பிரபுக்களையும் எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளிகளும் இணைந்து விட்டனர் என்ற உண்மையை உணரச் செய்யும். மார்க்ஸ் மட்டும் இந்த காட்சியைப் பார்ப்பதற்கு என்னுடன் இன்று உயிரோடிருந்தால்…’’

உலகம் முழுவதும் இப்போராட்டம் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது. இது உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வையும் சிந்தனையையும் ஆழமாகத் தொட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
1893 அகிலத்தின் மாநாடு ஜுரிச்சில் நடைபெற்றது. அதில் எங்கெல்ஸ் கலந்துக் கொண்டார். அப்போது நிறைவேற்றப்பட்ட மே முதல் நாள் தீர்மானத்தில் சேர்க்கப்பட்ட சேர்க்கை தொழிலாளர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
‘’உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மே தின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலைநாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்’’.
மே தினத்தை போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்த தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். இதற்காக மே தினத்தை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை தள்ளி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஞாயிற்றுக் கிழமை ஏற்கனவே விடுமுறை நாள். எனவே அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம். சீர்திருத்த தலைவர்களுக்கு மே தினம் பார்க்கில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும். ஜூரிச் மாநாடு மே தினம் முதலாளித்துவச் சுரண்டல், அடிமைத்தனம் வர்க்க வேறுபாடுகள் ஆகியவற்றை அழித்தொழிப்பதற்காக போராடும் நாள் என்று தீர்மானித்தது. இந்த தீர்மானம் இந்த தலைவர்களை ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. ஏனெனில் அகிலத்தின் முடிவுகள் தாங்களை கட்டுப்படுத்தும் என்பதையே அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. சர்வதேச சோஷலிச மாநாடு என்பது அவர்களை பொறுத்தவரை போருக்கு முன்பு ஐரோப்பிய தலைநகரங்களில் நடந்த பல்வேறு மாநாடுகளைப் போல சர்வதேச நட்பு மற்றும் நல்லெண்ணத்திற்கான ஒரு கூட்டமாகவே இருந்தது. பாட்டாளி வர்க்க நடவடிக்கைகளை அவர்கள் முறியடிக்கவும் அலட்சியப்படுத்தவும் எல்லா வேலைகளையும் செய்தார்கள். தங்களுக்கு ஒத்துவராத மாநாட்டுத் தீர்மானங்களைக் கிடப்பிலே போட்டார்கள். இருபதாண்டுகளுக்குப் பின் இந்த சீர்திருத்தவாத தலைவர்களின் சோஷலிஸமும் சர்வதேசியமும் நிர்வாணமாக்கப்பட்டு அம்பலப்படுத்தப் பட்டது. 1914-ல் இந்த சர்வதேச மேடை சீர்குலைந்தது. காரணம் இது தோன்றிய நாளிலிருந்தே இதன் அழிவு சக்தியாக தவறான பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய சீர்திருத்தவாத தலைவர்கள் இதனுள்ளே இருந்து வந்தார்கள்.
1900-ம் ஆண்டு நடைபெற்ற அகிலத்தின் பாரிஸ் மாநாட்டில், முந்திய மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில், மே முதல் நாள் வேலை நிறுத்தம் மே தின ஆர்ப்பாட்டத்தை மேலும் பயனுள்ளதாக்கும் என்ற வாக்கியமும் சேர்க்கப்பட்டது. அடுத்து வந்த மே தின ஆர்ப்பாட்டங்கள் மேலும் பலத்தோடு திகழ்ந்தன. ஆர்ப்பாட்டத்திலும் வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தது. உலகெங்கிலுமுள்ள ஆளும் பிற்போக்கு சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கையாக வரக்கூடிய மே தினங்கள் ஒரு சிவப்பு தினமாக மாறியது.
மே தினம் குறித்து லெனின்
மே தினத்தை ஒரு ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஷ்ய தொழிலாளர்களுக்கு லெனின் தன்னுடைய ஆரம்பகால ரஷ்ய புரட்சி இயக்க நடவடிக்கையின் போதே அறியச் செய்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்ட சங்கம் ரஷ்யாவில் இருந்த ஒரு மார்க்சிய அரசியல் குழு. இந்த சங்கத்துக்காக 1896-ம் ஆண்டு லெனின் சிறையில் இருந்த போது மே தின துண்டு பிரசுரம் ஒன்றை எழுதினார். அந்த பிரசுரம் சிறையிலிருந்து கடத்தப்பட்டு 200 பிரதிகள் எடுக்கப்பட்டு 40 தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. அந்தப் பிரசுரம் மிகவும் சுருக்கமாக, லெனினுக்கே உரிய நேரிடையான மற்றும் எளிமையான முறையில் சாதாரண தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது. “பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளின் நலனுக்காக எங்ஙனம் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், தங்களின் நிலையில் முன்னேற்றத்தை கோருபவர்கள் எவ்வாறு அரசாங்கத்தால் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் சொல்லிய பிறகு மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து லெனின் எழுதுகிறார்.
‘’பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே வலுவான சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தங்களின் பல உரிமைகளை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏப்ரல் 19 (மே 1 ரஷ்ய நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாட்காட்டியை விட 13 நாட்கள் பிந்தியது) அன்று பொது வேலை நிறுத்த நாளாக அனுஷ்டித்தார்கள். காற்று வசதியற்ற தங்கள் தொழிற்சாலைகளை விட்டு, விரிந்த பதாகைகளுடன் தொழிலாளர்கள் தெருவிலே இறங்கினர். முதலாளிகளுக்கும் அவர்களின் வளர்ந்து வரும் சக்திக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இசைக்கு ஏற்ப நகரங்களின் முக்கிய வீதிகள் வழியே அணிவகுத்து சென்றனர். மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒன்று கூடினார்கள். அங்கே அவர்கள் முதலாளிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு தாங்கள் பெற்ற வெற்றிகளையும், வருங்கால போராட்டத்திற்கான திட்டங்களை குறித்தும் பேசினார்கள். இந்த வேலை நிறுத்தத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அன்று வராததற்காக அபராதம் விதிக்கக்கூடிய துணிவு அவர்களின் முதலாளிகளுக்கு இல்லை. அந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் தங்களின் முக்கிய கோரிக்கையான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர பொழுது போக்கு என்பதை நினைவுப்படுத்தவும் தவறவில்லை. இதைத்தான் மற்ற நாட்டு தொழிலாளர்களும் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’
ரஷ்ய புரட்சி இயக்கம் மே தினத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொண்டது. 1900-ம் ஆண்டு நவம்பரில் புதிப்பிக்கப்பட்ட ‘கார்கோவில் மே தினம்’ என்ற பிரசுரத்தில் முன்னுரையில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார். ‘’இன்னும் ஆறு மாதத்தில் ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் புதிய நூற்றாண்டின் முதலாண்டு மே நாளை கொண்டாடுவார்கள். எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் மே தினத்தை சிறப்பாக, விரிவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய இதுதான் நேரம். மே தின நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபன கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும், ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும்தான் முக்கியமானது. இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதியாக சந்தர்ப்பமும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.”
மே தின ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆறுமாதங்கள் முன்னமேயே கவனத்தை இழுத்திருக்கிறாரென்றால், அதை லெனின் எவ்வளவு முக்கியமாய் கருதியிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. லெனினுக்கு மே தினம் என்பது “ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்கமுடியாத போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்”.
மே தின விழாக்கள் எங்ஙனம் ஒரு மாபெரும் அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறும் என்று பேசுகையில், 1900-ம் ஆண்டு கார்கோவ் மே தின விழா எப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறியது என்ற கேள்விக்கு லெனின் பின்வருமாறு பதிலளிக்கிறார். “வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட பெருந்திரளான தொழிலாளர்கள், தெருக்களிலே நடந்த மாபெரும் வெகு ஜனக்கூட்டங்கள், செங்கொடிகளின் பதாகை, கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள், அவற்றின் புரட்சித்தன்மை, எட்டு மணி நேர வேலைநாள், அரசியல் விடுதலை இவைகள்தான்”.
கார்கோவ் கட்சித் தலைவர்கள் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையோடு சாதாரண, வெறும் பொருளாதார கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டதை லெனின் சினந்து கொண்டார். காரணம் மே தினத்தின் அரசியல் தன்மை எந்த விதத்திலும் மங்கக் கூடாது என்று விரும்பினார். அவர் இந்த முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.
“8 மணி நேர வேலைதான் இந்த முதல் கோரிக்கையானது உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன் வைத்ததிலுருந்து கார்கோவின் வளர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் சர்வதேச சோசலிஸ தொழிலாளர் இயக்கத்தோடு தங்கள் ஐக்கியத்தை உணருகிறார்கள் என்பது தெரிகிறது.
குறிப்பாக இந்த ஒரு காரணத்திற்காகவே, இது போன்ற ஒரு கோரிக்கையை, மேஸ்திரி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், பத்து ஸென்ட் ஊதிய உயர்வு வேண்டும் போன்ற சாதாரண கோரிக்கைகளுடன் சேர்த்துது வைக்கக் கூடாது. எட்டு மணி நேர வேலை நாள், பாட்டாளி வர்க்க முழுமைக்குமான ஒரு கோரிக்கையாகும். அது சமர்ப்பிக்கப்படுவது தனிப்பட்ட முதலாளிகளிடத்தில் அல்ல. உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரர்களான முதலாளித்துவ வர்க்கத்திடம் தற்போதைய அரசியல், பொருளாதார அமைப்பின் பிரதிநிதியாக இருந்து சமர்ப்பிக்கப்படுவதாகும்.
மே தின அரசியல் முழக்கங்கள்
உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்களுக்கு மே தினம் ஒரு ஈர்க்கும் முனையாக மாறியது. மே தின ஆர்ப்பாட்டங்களின் போது 8 மணி நேர வேலை நாள் என்ற பிரதான கோரிக்கையோடு மற்ற முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். உலகத்தொழிலாளர் ஒற்றுமை; எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓட்டுரிமை; ஏகாதிபத்திய போர் மற்றும் காலனி ஆதிக்க எதிர்ப்பு; தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை; அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனம் கட்டும் உரிமை; போன்றவை அந்தக் கோரிக்கைகளில் சிலவாகும்.

1904-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் மாநாட்டில்தான் பழைய அகிலம் மே தினத்தைப் பற்றி கடைசியாக பேசியது. ஆர்ப்பாட்டத்தின் போது முழங்கப்படும் பல்வேறு கோரிக்கைகளை விமர்சனம் செய்த பின்பு ஒரு முக்கியமான உண்மை கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இன்னும் சில நாடுகளில் மே தினம் மே முதல் நாளுக்கு பதிலாக ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது என்பதுதான் அந்த உண்மை. அந்த தீர்மானம் பின்வருமாறு முடிகிறது.
“ஆம்ஸ்டர்டாமில் நடைபெறும் இந்த சர்வதேச சோசலிஸ்டு மாநாடு அமைத்து சமூக ஜனநாயக ஸ்தாபனங்களையும், எல்லா நாடுகளிலுமுள்ள தொழிற்சங்கங்களையும் மே முதல் நாள் அன்று எட்டு மணி நேர வேலைநாளை சட்டமாக்கவும், பாட்டாளி வர்க்க கோரிக்கைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும் முழுமையான சக்தியோடு போராடுமாறு கேட்டுக் கொள்கிறது.
மே முதல் நாள் ஆர்ப்பாட்டத்திற்கு வேலை நிறுத்தமே சிறந்த வழியாகும். எனவே மாநாடு எல்லா பாட்டாளிவர்க்க ஸ்தாபனங்களுக்கும், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொழிலாளர்களை பாதிக்காத வண்ணம் மே முதல் நாள் வேலை நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதை கட்டளையாக சொல்கிறது.
1912 ஏப்ரல் சைபீரியாவில் வேலை நிறுத்தம் செய்த தங்க வயல் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது பாட்டாளி வர்க்க வெகுஜன புரட்சிகர நடவடிக்கை என்பது மீண்டும் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டு மே தினத்தின் போது ஆயிரக்கணக்கான ரஷ்ய தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வீதிக்கு இறங்கி ஜாராட்சிக்கு எதிராக சவால் விட்டனர். 1905 நிகழ்ந்த புரட்சியின் தோல்விக்குப் பின் நடந்த இந்த மே தினம் பற்றி லெனின் பின்வருமாறு எழுதுகிறார்.
“ரஷ்யாவெங்கும் நடந்த மாபெரும் மே தின வேலை நிறுத்தங்களும், அதையொட்டிய பெருந்திரளான தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டமும், புரட்சிகர பிரகடனங்களும், பேச்சுகளும் ரஷ்யா மீண்டும் வளந்து வரும் ஒரு புதிய புரட்சிகர சூழ்நிலைக்கு சென்று விட்டதை தெளிவாக காட்டுகிறது”.
முதல் உலகப்போரின் போது மே தினம்
போரின் போது சமூக ஜனநாயக கட்சித் தலைவர்கள் செய்த துரோகம் 1915-ம் ஆண்டு மே தினத்தின் போது வெளிப்படையாக தெரிந்தது. இது 1914 ஆகஸ்டில் ஏகாதிபத்திய அரசாங்கங்களோடு அவர்கள் செய்து கொண்ட சமரசத்தின் தத்துவார்த்த வளர்ச்சியாகும். ஜெர்மன் ஜனநாகயகவாதிகளோ தொழிலாளிகளை வேலை செய்யுமாறு கூறினார்கள். பிரெஞ்சு சோஷலிஸ்டுகளோ ஒரு பிரத்தியேக அறிக்கையில் அதிகார வர்க்கத்திடம் மே தினம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்கள். போர் நிகழ்ந்த மற்ற நாடுகளிலும் பெரும்பாலான சோஷலிஸ்டுகளிடையே இதே நிலைதான் காணப்பட்டது. ரஷ்யாவில் போல்ஷ்விக்குகளும், மற்ற நாடுகளில் சிறுபான்மையாய் இருந்த புரட்சி சக்திகளுமே சோஷலிசத்திற்கும், சர்வதேசியத்திற்கும் உண்மையாக இருந்தனர். லெனின், ல்கஸம்பர்க், லீப்ஹனெட் ஆகியோர் குருட்டுத்தனமான சமூக வெறிக்கு எதிராக குரல் கொடுத்தனர். 1916, மே தினத்தன்று நடந்த சிறு திரளான தொழிலாளர் ஊர்வலமும், தெருவில் நிகழ்ந்த வெளிப்படையான சிறு சண்டைகளும் போர் நிகழும் நாடுகளில் தொழிலாளர்கள் துரோகத் தலைவர்களின் விஷப்பிடியிலிருந்து தானாகவே வெளியேறி வருகின்றனர் என்பதை காட்டுவதாய் இருந்தது. லெனினும் மற்ற எல்லா புரட்சிவாதிகளும் சந்தர்ப்பவாதத்ததின் அழிவு (இரண்டாம் அகிலத்தின் அழிவு: ஆர்) தொழிலாளர் இயக்கத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பினர். துரோகிகளிடமிருந்து மீள்வதற்கும் புதிய அகிலத்துக்கான லெனினுடைய அழைப்பிற்கும் ஏற்ற நேரமாக அது இருந்தது.
ஜிம்மர்வால்டு (1915), கிந்தால் (1916) ஆகிய இடங்களில் நடந்த சோஷலிச மாநாடுகள், லெனினுடைய முழக்கமான ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம் என்பதற்கு ஆதரவாக சர்வதேச புரட்சிகர கட்சிகள் மற்றும் சிறு சக்திகள் திரளுவதற்கு வழிவகுத்தன. 1916 மே தினத்தன்று கார்ல் லீப் ஹ்னெட்டும் மற்ற அவரது சோஷலிச இயக்க ஆதரவாளர்களும் சேர்ந்து பெர்லினில் போலிஸின் தடையுத்தரவையும் கட்சியின் அதிகாரபூர்வ தலைமையையும் மீறி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி தொழிலாளி வர்க்கம் உயிருள்ள சக்தி என்பதை நிரூபித்தனர்.
1917-ம் ஆண்டு அமெரிக்காவில் போர் பிரகடனப்படுத்தப்பட்ட போது அதனால் மே தினம் நிறுத்தப்படவில்லை. அப்போது ஏப்ரலில் நடந்த செயின்ட் லூயிஸ் அவசர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யுத்த எதிர்ப்பு தீர்மானத்தை முழுமூச்சுடன் எடுத்துக் கொண்டு மே தினத்தை அதற்காக பயன்படுத்தினர். பின்னர் 1919 மே முதல் நாள் கிலிவலேண்டில் சார்லஸ் ரத்தன்பர்க் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடும் படியான போர்க்குணத்தோடு இருந்தது. இவர் உள்ளூர் சோஷலிஸ்டு கட்சி ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

அப்போது பொது சதுக்க வீதியிலே 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணிவகுத்து சென்றனர். பின்னர் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர் அத்தோடு சேர்ந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தை போலிஸ் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியது. அதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். இன்னொரு தொழிலாளி கடுமையாக காயப்படுத்தப்பட்டார்.
1917-ம் ஆண்டு மே தினமும், ஜுலை மாதத்து நாட்களும் இறுதியாக அக்டோபர் மாதத்து நாட்களும் ரஷ்யப் புரட்சிக்கு படிப்படியாக ஒரு நினைவைக் கொடுத்தது. மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிய ரஷ்ய புரட்சியானது, மே தினத்திற்கு புதிய உத்வேகத்தையும் முக்கியத்துவத்தையும் தந்தது. 1890-ம் ஆண்டு மே தினத்தின் போது நியூயார்க் யூனியன் சதுக்கத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பின்வருமாறு முழங்கினர். “8 மணி நேர வேலை நாளுக்காக போராடும் இதே நேரத்தில் தமது இறுதி லட்சியமான இந்த கூலி (முதலாளித்துவ) அமைப்பை தகர்த்தெறிவதிலிருந்து விலக மாட்டோம்”. இந்த முழக்கம் முதன் முறையாக உலகின் ஆறில் ஒரு பகுதியில் பாட்டாளி வர்க்க சக்தியின் வெற்றியாக நினைவாக்கப்பட்டது.
இந்த லட்சியத்தை அடைந்ததிலே முதலானவர்கள் என்பதை ரஷ்ய தொழிலாளர்கள் நிரூபித்துக் காட்டினர். ஆனால் 1917-ம் ஆண்டின் போது, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்கள், தாங்கள் 1890-ல் முழங்கிய குறிக்கோளிலிருந்து வெகுதூரத்தில் இருந்தார்கள். அவர்களின் முக்கிய நோக்கம் முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதும், அமெரிக்க ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு சுலபமான வழிவகுப்பதுமாக இருந்தது. உலகத் தொழிலாளர் ஒற்றுமை, முதலாளித்துவ அமைப்பிலிருந்து விடுதலை போன்ற பிரகடனங்களை முழங்கிய மே தினத்திற்கு புதிய சக்தியை வழங்கிய ரஷ்ய புரட்சியினால் அமெரிக்க தொழிலாளர்கள் உத்வேகம் பெறுவதை அந்த தலைவர்கள் விரும்பவில்லை.
1923ம் ஆண்டு மே தினத்தின் போது ‘தொழிலாளி’ என்ற வார பத்திரிகையின் ஆசிரியர் சார்லஸ் ரத்தன்பர்க் பின் வருமாறு எழுதுகிறார். “மே தினம் உலகெங்கிலுமுள்ள முதலாளிகளின் உள்ளத்திலே அச்சத்தையும், தொழிலாளிகளின் உள்ளத்திலே நம்பிக்கையும் உருவாக்கும் தினம். வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அமெரிக்காவில் கம்யூனிஸ இயக்கம் பலமாக இருக்கும். மாபெரும் சாதனைகளுக்கான பாதை தெரிவாக இருக்கிறது. அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் எதிர்காலம் என்பது கம்யூனிஸத்திற்கே உரியதாய் இருக்கும்”.
அதே ‘தொழிலாளி’ பத்திரிகையில் ஒரு தலைமுறைக்கு முன் 1907-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் நாள் மே தினம் குறித்து யூகின் டெப்ஸ் என்பவர் பின்வருமாறு எழுதுகிறார். “இந்த தினம்தான் முதலாவதும், ஒன்றேயுமான உலகத் தொழிலாளர் தினம். இந்த நாள் புரட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தொழிலாளி வர்க்கத்துக்குரிய நாளாகும்”
மே தினத்தின் வளர்ந்து வரும் போர்க்குண பாரம்பரியத்தை எதிர்க்கும் வகையில், செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை மே தினத்துக்கு பதிலான தொழிலாளர் தினமாக கொண்டாடுவதாக அமெரிக்க கூட்டமைப்பின் தலைவர்கள் ஊக்குவித்தனர். இந்த தினம் முதன் முதலில் 1885-ல் உள்ளூர் அளவில் கொண்டாட்டங்களை முறியடிக்கும் வகையில் நடத்தப்பட்டது.
இதே போன்று மே தினத்துக்கு எதிராக, ஹூவர் நிர்வாகம் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்போடு சேர்ந்து மே முதல் நாளை குழந்தைகள் நல தினமாக அறிவித்தது. குழந்தைகள் நாளில் திடீரென்று பிறந்த இந்த அக்கறையின் உண்மையை நாம் 1928-ம் ஆண்டு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டில் நிர்வாகக்குழு சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த அறிக்கை பின்வருமாறு சொல்கிறது.
“கம்யூனிஸ்டுகள் மே முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இனிமேல் மே முதல் நாளை, அமெரிக்க மக்கள், குழந்தைகளை தினமாக கொண்டாடும்படி அழைக்க வேண்டும் என்று தலைவரைக் கேட்டுக் கொள்கிறது. ஆண்டு முழுவதும் குழந்தைகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதுதான் மிகுந்த பயனுள்ள நோக்கமாகும். அதே நேரத்தில் இனி மே தினம் கம்யூனிஸ்டு தினமாகவோ அல்லது வேலை நிறுத்த தினமாகவோ அறியப்படமாட்டாது.”
1929-ல் ஏற்பட்ட நெருக்கடி
முதல் உலகப் போருக்குப் பத்தாண்டுக்குப் பின்னும் லட்சோபலட்ச மக்கள் முதலாளித்துவ அழிவுப் பாதையில் சிக்கியிருந்தார்கள். அனுபவங்களிலிருந்து பாடம் பெற மறுத்த பிற்போக்கு தொழிற்சங்கத் தலைவர்களோ இந்த மக்களைத் திரட்டுவதற்கு பதிலாக முதலாளித்துவத்தின் கீழ் நிரந்தர செழுமை என்ற மாயையை பரப்புவதில் தீவிரமாய் இருந்தார்கள். 1929 இறுதியில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. அப்போது சொத்துடையவர்களும், ஏகபோகவாதிகளும் எல்லா சுமையையும் தொழிலாளர்கள் தலையின் மீது சுமத்தப் பார்த்தார்கள். அப்போது தொழிலாளர்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருந்தது வேலை நிறுத்தமும், வேலையில்லாதவர்களின் வெகுஜனப் போராட்டமுமேயாகும். கம்யூனிஸ்டுகள் இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கினர். இதனால் அமெரிக்கத் தொழிலாளர்கள் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்களின் ஜனநாயக உரிமைகள் விரிவுப்படுத்தப்பட்டன. என்றுமில்லாத அளவுக்கு அமெரிக்க தொழிலாளர் வரலாற்றில் 1930-களில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்த முடிந்தது. 1935-ம் ஆண்டு சி.ஐ.ஓ. துவக்கப்பட்டது. பெரும் தொழிற்சாலைகள் வேகமாக ஸ்தாபனப்படுத்தப் பட்டன. இவையெல்லாம் அமெரிக்க முக்கியத்துவத்தை தந்தது. அமெரிக்க தொழிலாளர்களின் இந்த எழுச்சியால் நீக்ரோ மக்களின் சம உரிமைக்கான போராட்டம் நடத்துவதற்கான காலம் ஏதுவானது. அதன் காரணமாக அமெரிக்க ஜனநாயக முன்னணி மேலும் வலுவடைய முடிந்தது.
ஏகாதிபத்திய யுத்தம், புரட்சி முன்னெப்போதும் இருந்திராத பொருளாதார நெருக்கடி இவைகள் பதினைந்து ஆண்டுகளுக்குள் முதலாளித்துவத்தை ஆட்டங்காண வைத்தன. இதனால் அது பெரும் நெருக்கடிக்குள்ளானது. முதல் உலகப் போருக்கு காரணமாய் இருந்த ஏகாதிபத்திய போட்டிகள் இப்போது இன்னும் தீவிரமாயின. மேலும் உலகின் ஆறில் ஒரு பகுதியில் முதலாளித்துவம் துடைத்தெறியப்பட்டதும், காலனி நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களின் அதிகரிப்பும், வளர்ந்து விட்ட முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஜனநாயக உரிமைக்காகவும் தீவிரமாக போராடியதும் இந்த பொதுவான முதலாளித்துவ நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது. இதனால் தங்கள் அரசியல் பொருளாதார வாழ்வை காத்துக் கொள்ளவும் தவிர்க்க முடியாத வரலாற்று வளர்ச்சியினை தடுத்து நிறுத்தவும் வேறு வழியின்றி முதலாளிகளும் ஏகபோக வாதிகளும், பாசிச பயங்கர சர்வாதிகாரம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார்கள். தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனி, மற்ற நாடுகளில் தொழிலாளர் மற்றும் முற்போக்கு சக்திகளிடையே இருந்த பலவீனம் மற்றும் ஒற்றுமையின்மையாலும், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்த நாடுகளில் இருந்த பாசிச சக்திகளை ஊக்குவித்தாலும், இந்த நாடுகளில் பாசிசம் வெற்றி பெற ஏதுவாகிறது. நூற்றாண்டு காலமாய் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமையை அழிப்பதற்கு உலகம் முழுவதுமான ஏகபோக மூலதனத்தின் முயற்சியை இது காட்டுவதோடு, இரண்டாவது உலகப் போருக்கான பாதையையும் இது தெளிவாக்குகிறது.
பாசிசத்திற்கு எதிரான யுத்தம்
1933-லிருந்து 1939 வரை ஜெர்மன் பாசிசம் உலகெங்குமுள்ள பிற்போக்குத்தனத்தின் முன்னோடியாய் திகழ்ந்தது. சோஷலிச நாடுகளுக்கு எதிராக ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் நாஜி ஜெர்மனியை ஆதரித்தன. ஜெர்மனி பாசிசமோ உலகம் முழுவதையும் தன் கீழ் கொண்டு வர எண்ணியது. இதன் காரணமாக இரண்டாம் உலக யுத்தத்துக்கான தயாரிப்புகள் முறைப்படி செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஜப்பானிய ஏகபோகவாதிகளும் தங்கள் சொந்த நலனுக்காக இந்த சதியில் கை கோர்ந்து நின்றனர். இந்த யுத்தம் அதன் சொந்தத் தன்மை காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராக திருப்பப்பட்டது. இச்சூழ்நிலையில் மனித குல முன்னேற்றத்தின் விதி மற்ற இடங்களில் உள்ள விவசாய மற்றும் ஒடுக்கப்பட்ட காலனி மக்களோடு இணைகின்ற தொழிலாளர்களின் கையிலேதான் உள்ளது என்பது மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. ஏகபோக முதலாளிகள் வளர்ந்து வரும் அழிவு சக்தியை தடுக்கும் பொருட்டு ஜனநாயக மற்றும் தேசிய சக்திகளை திரட்டுவது என்பது இவர்களின் முயற்சி, ஒற்றுமை, எதிர்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருந்தது. எனவே முப்பதுகள் முழுவதும் நடந்த மே தினம், புதிய உலக அழிவை தடுக்கும் பொருட்டு, பாசிச ஆக்ரமிப்புக்கு எதிராக, உலக மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பதாக இருந்தது.

உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும். ஆனால் பாசிசத்தால் ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தை பாதுகாக்க உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மையான ஜனநாயக சக்திகளை திரட்டும், போராடக்கூடிய உழைக்கும் வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை.
சுதந்திரம் ஜனநாயகம், வளர்ச்சி இவற்றிற்காக இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் இருந்தது. இந்தப் போராட்டத்தின் முன்னணியில் சோவியத் யூனியன், மற்ற நாடுகளின் உழைக்கும் மக்கள் இருந்ததை உலகெங்கிலுமுள்ள ஜனநாயக சக்திகள் கண்டனர். யுத்தத்தின் போது வேலை நிறுத்தம் மூலமும், பாசிச படையை அழிப்பதற்கான ஆயுதங்களை தயாரிப்பதன் மூலமும் எல்லா இடங்களிலும் உழைக்கும் வர்க்கம் மே தினத்தை அனுஷ்டித்தது. 1945-ல் யுத்தம் முடிவுற்றபோது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விடுதலையும், வெற்றியும் அடைந்த ஐரோப்பிய நாடுகளில் மே தினங்களின் போது திரண்டதை எல்லா நாடுகளும் கண்டன. அந்த ஆர்ப்பாட்டங்களின் போது, பாசிசத்தின் மிச்ச சொச்சங்களை வேரோடு அழிக்க தொடர்ந்து போராடுவது என்றும், பாசிச ஆயுதத்தை மீண்டும் கையிலெடுக்காத வண்ணம் ஏகபோகத்தை அழித்தொழிக்க மற்ற முற்போக்கு சக்திகளோடு தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை பூரணமாக்குவது என்றும், ஜனநாயகத்தை பாதுகாத்து விரிவுபடுத்தவும், மக்கள் சக்தியை ஆட்சியாக்கவும், நிலையான அமைதியை உருவாக்கவும், சுரண்டலும் ஒழுங்கு முறையும் அற்ற சோஷலிச உலகை நிர்மாணிக்க பாதை வகுக்கவும் தொழிலாளி வர்க்கம் உறுதி பூண்டது.
மனித குலத்தின் அமைதி மற்றும் மகிழ்வான எதிர்காலத்திற்காக போராடுவதன் மூலமும் எல்லா நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்கம், சர்வதேச ஐக்கியம் மற்றும் தோழமையுணர்வு அடிப்படையில் மே தினத்தன்று உலக மக்களை வணக்கம் செய்கிறது.
– அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க் எழுதிய மே தின வரலாறு (தமிழில் எம். சிவகுமார்)
நன்றி: சவுத் விஷன் பதிப்பகம், சென்னை.
அதிகாரத்தை கையில் எடு ! அநீதிகளுக்கு முடிவு கட்டு !
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
ஓட்டுப் போட்டு விட்டோம். புதிய ஆட்சி வரப்போகிறது. ஏதாவது நல்லது நடக்கப்போகிறது என நீங்கள் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால், மோடியோ, லேடியோ அல்லது வேறு எந்த கேடியோ யாருடைய ஆட்சி அமைந்தாலும் நம்முடைய பிரச்சினைகள் தீரப்போவதில்லை; மாறாக, தீவிரமடையத்தான் போகின்றன.
ஆட்சி மாறலாம், அவலங்கள் மாறாது!
யார் ஆட்சிக்கு வந்தாலும் கல்வி தனியார்மயம் ஒழியாது;
கல்விக்கட்டணங்கள் உயரும்;
மருத்துவச்செலவு அதிகரிக்கும்;
விலைவாசி இன்னும் உயரும்;
டாஸ்மாக் சாராயக்கடைகளால் தாலியறுக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்;
பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்மயமாகும்;
மின்வெட்டு நீடிக்கும்;
அப்படியே மின்வெட்டு நீக்கப்பட்டாலும் மின்கட்டணம் மூன்று, நான்கு மடங்கு உயரும்; மீதேன் எடுப்பு;
ஜிண்டால் இரும்புத்தாது எடுப்பு திட்டங்கள், ஆபத்தான அணு உலைகள் தொடரும்;
தாதுமணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை வரைமுறையற்று நடக்கும்;
இதனால் எல்லா இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டு நிலம், நீர், வான்வெளி என அனைத்தும் நஞ்சாகி பாழாகும்;
காடுகள் அழிக்கப்படும்;
குடிதண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும்.
விவசாயிகள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள், சிறு, குறு தொழிலதிபர்கள், மீனவர்கள், வணிகர்கள் ஆகியோரின் வாழ்வாதார உடைமைகள் பறிக்கப்பட்டு ஏதுமற்றவர்களாக விசிறியடிக்கப்படுவதும் அதிகமாகும். மிச்சமீதி இருகின்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் பறிக்கப்பட்டு, நிரந்தரத் தொழிலாளர்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டு ஒப்பந்த தினக்கூலித் தொழிலாளர்களாக எல்லோரும் மாற்றப்படுவார்கள். 12 மணி நேர சிப்ட் முறையில் இன்னும் கடுமையாக ஒட்டச் சுரண்டப்படுவார்கள். வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிக்கும். ஏழை – பணக்காரன் ஏற்றத்தாழ்வுகளும் மாநிலங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிக்கும்.
பட்டப் பகலில் கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதை கலாச்சாரம், நுகர்வுவெறி கலாச்சாரம், ஆபாச சீரழிவுகள், வக்கிரங்கள், போலீசின் அராஜகம் பெருகும். இலஞ்சம், ஊழல் அதிகரிக்கும். தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் சிவில், ஜனநாயக உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு ஒரு பாசிச காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டு எல்லா பிரிவு மக்களின் நியாயமான போராட்டங்களும் ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்படும். சாதி, மதவெறியர்களின் கட்சிகளும் சங்கங்களும் போலீசு துணையோடு வெறியாட்டம் போடும்.
மேற்சொன்ன எல்லாக் கொடுமைகளும் சுரண்டல்களும் ஏற்பட்டதற்கு அடிப்படை 1990-களின் தொடக்கத்திலிருந்து புகுத்தப்பட்டு வரும் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகள் தான். அன்றிலிருந்து இன்று வரை எல்லா மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் (எந்தக் கட்சி அல்லது கூட்டணி ஆண்ட போதும்) இந்த கொள்கைகளையே போட்டி போட்டுக் கொண்டு அமுல்படுத்தி வந்துள்ளன. இந்த தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கூட்டணியாவது அல்லது கட்சியாவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளை அமுல்படுத்த மாட்டோம் எனச் சொல்லவில்லை. மாறாக, அவற்றை தீவிரமாக அமுல்படுத்தி வளர்ச்சி, வேலைவாய்ப்பை பெருக்கி நமது வாழ்க்கையை உண்னதமாக்கப் போவதாகத் தான் சவடால் அடிக்கின்றன. எனவே தான், தனியார்மய-தாராளமய- உலகமயக் கொள்கைகளால் ஏற்கெனவே உருவான கொடுமைகளும் சீரழிவுகளும் தீவிரமாகும் என்று அடித்துச்சொல்கிறோம்.
பகட்டாகிறது வாழ்க்கை! படுகுழியில் பண்பாடு!
தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளால் பல்வேறு வசதிகள் வந்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றன, முதலாளித்துவ ஊடகங்கள். செல்போனும், இன்டெர்நெட்டும், அடுக்கு மாடிக்கட்டிடங்களும் வசதிகளின் அடையாளமாம்! இந்த வசதிகள் வந்த அதே வழியில் தான் விவசாயிகள் தற்கொலையும், வேலை பறிப்பும், கிட்னி விற்பனையும் வந்திருக்கின்றன. அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான பாலியன் வன்முறைகளும், கிரிமினல் குற்றங்களும், போதைப் பழக்கங்களும், பல்வேறு புதிய நோய்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இதுமட்டுமின்றி, மனித மாண்புகளையும், இயற்கையை நேசித்து பாதுகாக்கும் உயரிய பண்புகளையும் காவு கொடுத்து தான் இந்த ‘வசதிகளை’ பெற்றிருக்கிறோம்!
நீர், நிலம், கடல், வான்வெளி மட்டுமின்றி தாய்ப்பாலையும் நஞ்சாக்கியிருப்பது இந்த உலகமயமாக்கல் கொள்கை தான். நிதிப்பற்றாக்குறையை குறைப்பது என்கிற பெயரில் மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்களை வெட்டியதும், தொழில் வளத்தை அதிகரிப்பது என்கிற பெயரில் 2005 முதல் 2013 வரை 8 ஆண்டுகளில் 31,11,000 கோடி ரூபாய்களை முதலாளிகளுக்கு சலுகையாக வாரி இறைத்ததும் உலகமயக் கொள்கை தான். 3.5 லட்சம் விவசாயிகளின் சாம்பலிலிருந்து தான் இந்த வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.
பாராளுமன்றம் ஒரு டம்மி! ஆணையங்கள் போடுது கும்மி!
இந்த ஆட்சி அமைப்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு (எம்.பி, எம்.எல்.ஏ) சட்டமியற்றும் அதிகாரம் மட்டுமே உள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரமோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நிரந்தரமாக இருக்கும் அதிகாரிகள், போலீசு, இராணுவம், நீதிபதிகள் ஆகியோரிடம் உள்ளது. இவர்கள் தான் நமக்கு எதிரிகளாகவும் நமக்கு மேலே நின்று அதிகாரம் செலுத்தும் – அடக்கி ஒடுக்கும் வன்முறைக் கருவிகளாகவும் உள்ளனர். இவர்கள் யாரும் எம்.எல்.ஏக்களுக்கும், எம்.பி.களுக்கும் அமைச்சர்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிரந்தரமாக இவர்களின் சர்வாதிகாரமே நடக்கிறது. டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் கூட, எவ்வித பிரச்சினையும் இன்றி ஆட்சி நடப்பதே இதற்கு எடுத்துக்காட்டு!
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியின் தலைமை அதைச் சுற்றியுள்ள ஒரு சிறிய கோடீஸ்வர-கிரிமினல்-சாதிவெறி-மதவெறி கும்பல் தான் பன்னாட்டு கம்பெனிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் கொள்ளைக்கு வசதியாக எல்லாகொள்கை முடிவுகளையும் எடுக்கின்றது. இதற்கேற்ப முதலாளிகளிடமிருந்து சன்மானங்களையும் காண்ட்ராக்ட்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.
சட்டத்தை இயற்ற மட்டுமே அதிகாரத்தைக் கொண்டுள்ள பாராளுமன்ற அமைப்பை மேலும் டம்மியாக்கி வருகிறது மறுகாலனியாக்கக் கொள்கைகள். தனியார்மயத்தின் விளைவாக மிண்கட்டணம், பெட்ரோல் விலை, சாலைகள் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளை ஆட்சி செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்டு ஆணையங்கள், தீர்ப்பாயங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. பன்னாட்டு கம்பெனிகள், அம்பானி, அதானி போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் பிரதிநிதிகள் தான் இந்த ஆணையங்கள், தீர்ப்பாயங்களை நடத்துபவர்கள். இந்த ஆணையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ கிடையாது. அவை எடுக்கும் முடிவுகளை எதிர்த்து உயர் நீதி மன்றத்திற்கோ, உச்சநீதி மன்றத்திற்கோ போவதற்கும் உரிமை இல்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுடன் அரசு போட்டுக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளும் உரிமை கூட மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடையாது.
பாராளுமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் மேலே சூப்பர் அதிகார அமைப்புகளாகவே இந்த ஆணையங்களும் தீர்ப்பாயங்களும் செயல்படுகின்றன.
எல்லாக் கட்சி ஆட்சிகளிலும் இதுதான் நிலைமை. இதை தான் குஜராத் மாடல் என்று, மோடி ஏதோ தான் கண்டுபிடித்தது போல சொல்கிறார். மக்களின் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு வாரி இறைப்பதில் மற்ற முதல்வர்களை விட முன்னணியில் இருக்கிறார் என்பதே மோடியின் ‘சாதனை’.
நீதித்துறையும் மறுகாலனியாக்கத்துக்கு பக்க மேளம் வாசித்து, நாட்டு வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடவும், தொழிலாளர் நலங்களை காவுகொடுத்திடவும் தீர்ப்புகளை எழுதுகிறது. அதே நேரத்தில் பார்ப்பன பயங்கரவாதத்தின் முதுகை வருடிக் கொடுத்து வருகிறது. சிதம்பரம் கோவிலை தீட்சிதர்களுக்கு கட்டமொய்யாக எழுதியது முதல் அயோத்தி தீர்ப்பு வரை இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் பார்ப்பன ஜெயாவுக்காக சட்டத்தின் சந்துபொந்துகளில் எல்லாம் நுழைந்து நீதியை வளைத்து வருகிறது உச்சநீதி மன்றம்.
மொத்தத்தில், இந்த பன்னாட்டு கம்பெனிகள்-பார்ப்பன சர்வாதிகாரத்தை நம் மீது செலுத்திக்கொண்டே, ஜனநாயகத்தின் பெயரால் எல்லா மக்கள் விரோதச் செயல்களையும் திட்டங்களையும் திணிக்கின்றனர். அதை எதிர்த்தால் தடியையும் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தி நம்மை ஒடுக்குகின்றனர். ‘வாக்குரிமை’ ஒன்றை மட்டும் நம்மிடம் கொடுத்துவிட்டு ‘ஜனநாயகம்’ நம் கைகளில் இருப்பதாக மாய்மாலம் செய்கின்றனர்.
அதிகாரத்தை கையில் எடு! அநீதிகளுக்கு முடிவு கட்டு!
இனியும் இந்த மாய்மாலத்திற்கு மசியாமல் உண்மையான ஜனநாயகத்தை, மாற்று அதிகாரத்தை நாம் கையில் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
- பன்னாட்டுக் கம்பெனிகள், அம்பானி-டாடா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவோம்.
- பகற்கொள்ளையடித்த ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களைப் பறித்தெடுத்து அரசுடைமையாக்குவோம்.
- கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத் துறைகளிலும் தனியார்மயத்தை ஒழித்து பொதுவுடைமையாக்குவோம்.
- வளர்ச்சி எனும் பெயரில் நீர், நிலம், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலைச் சூறையாடி நஞ்சாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்.
- தரகு அதிகார வர்க்க முதலாளிகள், நில முதலைகள், கல்வி, மருத்துவ, ரியல் எஸ்டேட், தண்ணீர்க் கொள்ளையர் கூட்டத்தின் சொத்துரிமை, வாக்குரிமையை பறிப்போம்.
- உழைப்போருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும் மக்கள் அதிகாரத்தை படைப்போம்.
- அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறைகளின் அதிகாரத்தை பறித்தெடுப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டு வருவோம்.
- சட்டம் இயற்றவும், அதை அமுல்படுத்தவும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளுக்கே. தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வாக்களித்த மக்களுக்கே.
- போராட்டங்கள், எழுச்சிகள் மூலம் அவற்றை உண்மையான மக்கள் ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளாக வளர்த்தெடுப்போம்.
ஓட்டுக்கட்சிகள், நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் செயல்பாடுகள் எல்லாம் ஆளும் வர்க்கங்களே, அவர்களின் சித்தாந்தவாதிகளே சொன்ன விழுமியங்கள், நடத்தை விதிகள், விதிமுறைகள், ஒழுக்கங்கள், தார்மீக நெறிகள் ஆகியவைகள் எல்லாம் இந்த கட்சிகள் அமைச்சர்களாலேயே தூக்கியெறியப்பட்டு, பித்தலாட்டங்களும், ஏமாற்றுகளும் கொண்டதாக மாறிவிட்டன. அவற்றை சரி செய்ய முடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ளோம் என்று அவர்களே புலம்புகின்றனர். அரசின் பிற அங்கங்களான போலீசு, அதிகார வர்க்கம், இராணுவம், நீதித்துறையும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறை, விளையாட்டு, பண்பாடு, குடும்ப உறவுகள், மதம், மனித உறவுகள் அனைத்தும் இதே போல் சீரழிந்து, கேவலப்பட்டு, திவாலாகி, தோல்வியடைந்துவிட்டன என ஒப்பாரி வைக்கின்றனர். இவ்வாறு இந்தக் கட்டமைப்பு காலாவதியாகிவிட்டது என அவர்களே ஒப்புகொண்ட பின், இன்னும் தயக்கம் எதற்கு?
வாருங்கள், இதைத் தட்டித் தகர்த்தெறிவோம்! நமக்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்.
மே நாளில் சூளுரைப்போம்!
- பன்னாட்டு கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்!
- உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
மே நாள் தமிழகமெங்கும் பேரணி ஆர்ப்பாட்டம்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு
கார்போரண்டம் யூனிவர்சல் – மே நாளில் புஜதொமு சாதனை !
ஓசூர் தொழிலாளர் வரலாற்றில் மற்றுமோர் திருப்புமுனை
கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைப்பு விழா!

——————————————————————
அன்பார்ந்த தோழர்களே!
ஒசூர் சிப்காட் 1-ல் கார்போரண்டம் யூனிவர்சல் தொழிற்சாலை 1981-ல் தொடங்கப்பட்டது. இவ்வாலை தமிழகத்தின் முன்னணி குழும நிறுவனங்களின் ஒன்றாகவும் ஆண்டுக்கு 40,000 கோடியில் வர்த்தகம் செய்தும் வருகின்ற ஏறக்குறைய 30,000 தொழிலாளர்களைக் கொண்ட முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இவ்வாலையில் சாணைக்கற்கள் (இரும்புகளை கிரைண்-டிங் செய்யும் சாணைகற்கள்) உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆரம்பத்தில் சில 10 தொழிலாளர்களைக் கொண்டு மாதம் 30 இலட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்த இவ்வாலையில் தற்போது மாதம் 10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. 1998-ல் 200 நிரந்தரத் தொழிலாளர்கள் இவ்வாலையில் பணி புரிந்தனர். தற்போது இவ்வாலை 144 நிரந்தரத் தொழிலாளர்களையும் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களையும் 90 பயிற்சி தொழிலாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது. இவர்கள் மட்டுமல்ல, சி.சி.எஸ்.டி. என்ற பெயரில் மாணவர்களையும் சட்டவிரோதமாக உற்பத்தியில் ஈடுபடுத்தி வருகிறது.
முருகப்பா நிறுவனத்தின் முதலாளித்துவ பயங்கரவாத நடவடிக்கைகள்!
பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் இவ்வாலையில் உற்பத்தி நிலைமை அடிப்படையில் 500-க்கும் அதிகமான நிரந்தரத் தொழிலாளர்களை கொண்டிருக்க வேண்டும். ஆனால், இன்று நிலைமையோ அவ்வாறில்லை. இது மட்டுமல்ல, ஆலைக்குள் தொழிலாளர்களை புகைப்படம் எடுப்பது, வீடியோ கேமரா முன்பாக நின்றுதான் டீ குடிக்க வேண்டும் என்று கூறி டீ குடிக்கும் நேரத்தைக் கூட குறைத்து தொழிலாளர்களைக் கைதிகள் போல் நடத்துவது போன்ற பலவேறு அடக்குமுறைகளை செலுத்தி நவீனக் கொத்தடிமைகளின் கூடாரமாக கார்போராண்டம் யூனிவர்சல் ஆலை நிலவுகிறது.
இவ்வாலையில் செய்யப்படும் சாணைக் கற்கள் உற்பத்தியானது உயர்ந்த ஒருவகை மணலும் ஒருவகை வேதியியல் பசையும் கலந்து உருவாக்கப்படுவது. இதில் மிகவும் ஆபத்தான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்துகின்றன. இதனால் தொழிலாளர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி துன்பப்படும் நிலையில், தொழிலாளர்கள் மீது பலவேறு சட்டவிரோத தாக்குதல்களையும் தொடுத்து வருகிறது.
ரவுடித்தனம், பண்ணையார்த்தனம், குரூர புத்தி – இவற்றின் மொத்த உருவம் கார்போரண்டம் ஆலை நிர்வாகம்!

இவ்வாலை தொடங்கப்பட்ட காலத்தில், சங்கம் கட்டி போராடுவதற்கு வாய்ப்பில்லாமல் தொடர்ந்து நிர்வாகத்தின் பேச்சை நம்பி உழைத்து வந்தோம். அப்போது 30, 40 ரூபாய்தான் ஊதிய உயர்வாக இவ்வாலை கொடுத்தது. இதனை எதிர்த்துக் கேட்க முடியாமல் வாய் மூடியிருந்த தொழிலாளர்களை அமைப்பாக்கி, 1982-ல் இவ்வாலையில் சங்கம் தொடங்கப்பட்டது. ஆனால், அடக்குமுறையோ, சுரண்டலோ முடிவுக்கு வரவில்லை. இதனால், 1994-ல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி ஆலை நிர்வாகத்திற்கு எதிராக தீவிரமான போராட்டங்களில் இறங்கினோம். நிர்வாகமோ நயவஞ்சமாக செயல்பட்டு 1996-ல் சங்கத்தை இரண்டாக உடைத்தது. இதன் மூலம் தொழிலாளர்கள் மீது கேள்விக்கிடமற்ற அடக்குமுறைகளை செலுத்தத் தொடங்கியது. இதன் பின்னர், புதிய நிரந்தரத் தொழிலாளர்கள் நியமனம் என்பதே இல்லை. இருக்கும் தொழிலாளர்களை வீதியில் வீசியெறியும் வேலைகளைத் தொடங்கியது.
இன்றுவரை இவ்வாலையில் ஊதிய உயர்வு கோரிக்கையானது உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்ட வரலாறில்லை. தற்போது கூட 18 மாதங்கள் 35 சுற்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. இறுதியில் நொந்து, நோகடித்து, மனம் வெதும்ப வைத்து, ஏதாவது ஒரு நெருக்கடிக்குத் தள்ளி, அற்ப தொகையைத்தான் ஊதிய உயர்வாகக் கொடுத்துள்ளது.
இது மட்டுமல்ல, சட்டவிரோத தனது நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள தொடர்ந்து தொழிலாளர்களையும் சங்கத்தையும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளது. தற்போதும் இந்த நிலை நீடிக்கிறது. குறிப்பாக, சட்டபூர்வமான தொழிற்தகராறு சட்டம் பிரிவு – 12 (3) கீழான ஒப்பந்ததை போடுவதில்லை. கட்டைப் பஞ்சாயத்து செய்துதான் ஒப்பந்தங்களைப் போட்டு வருகிறது.
தொடரும் அடக்குமுறைகளும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீதான தாக்குதலும்!
நியாயம் கேட்கும் தன்மானமுள்ள தொழிலாளர்களை தொடர்ந்து பழி வாங்குவதே எங்களது ஆலை முக்கியமான நடவடிக்கையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, 2008-ம் ஆண்டு ஆலைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதை எதிர்த்து சங்கத்தின் சார்பில் உயர்நீதி மன்றத்தில் சட்டபூர்வமாக மனுதாக்கல் செய்தோம். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறைப்படுத்தும் மற்றும் ஒழிப்புக் குழுவிடம் ஆலையை ஆய்வு செய்யும் படி ஆணையிட்டது. சில ஆண்டு களுக்குப் பின்னர் தற்போதுதான் இந்த ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டது. அரசு மிகவும் மெத்தனமாகத்தான் செயல்பட் டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த மெத்தனமான நடவடிக்கையைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் சங்க நிர்வாகிகளை ஒழித்துக் கட்டும் வேலையில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டது.
அதன் பின்னர் தொடர்ச்சியாக, உறுதியாகப் போராடி வருகின்ற நமது சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் உட்பட நான்கு சங்க நிர்வாகிகள் பொய்யான காரணங்களைக் காட்டி இடைநீக்கம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் ஆகியோரை வடமாநிலங்கள் மற்றும் தொலைதூர மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் மொத்த சங்கத்தையே செயல்பட முடியாமல் தடுத்துள்ளது. சட்டபூர்வமாக சங்கம் வைக்கும் உரிமை இருந்தும், சங்கமாக செயல்படும் நமது முயற்சியைத் தடுத்துள்ளது. இதுமட்டுமல்ல, தொழிற்தகராறு நிலுவையில் இருக்கும் போது இடைநீக்கம், இடமாற்றம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டவிரோதம் என தெரிந்தும் இதனை செய்துள்ளது.
இதுதான் ஆலை நிர்வாகம் நடத்திவரும் 35 சுற்று பேச்சுவார்த்தையின் இலட்சணம்!
கார்போரண்டத்தின் கோரப் பசிக்கு இரண்டு தொழிலாளர்கள் பலி!
ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக உறுதியாக போராடும் தொழிலாளர்கள் மீது தொடுக்கும் அடக்குமுறைகளுக்கு அளவே இல்லை. குறிப்பாக, ஆலையில் ஆபத்து நிறைந்த பகுதியில் சுழற்சி முறையில் செய்து வந்த வேலையை மாற்றியமைத்து சங்கத்தில் உறுதியாக செயல்படும் தொழிலாளர்களை மட்டும் தொடர்ந்து அங்கு வேலைக்கு வைப்பது, ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்குவது என்ற நடவடிக்கையை இவ்வாலை நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது. மனித உரிமை மீறல்களையும் செய்கிறது. தொழிலாளர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளக் கூடாது என ஆலைக்குள்ளேயே 144 தடையுத்தரவு போட்டுவைத்துள்ளது. இதனை மீறும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களது தன்மான உணர்வை நசுக்கி வருகிறது. ஆலையின் மேற்கண்ட நடவடிக்கைகளால், தொழிலாளர்கள் பலரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இவ்வாலையில் இத்தாக்குதலுக்கு இரண்டு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
2011ம் ஆண்டு இவ்வாலையில் பணி புரிந்த தொழிலாளி இராஜேந்திரன் மீது அற்பக் காரணங்களைக் கூறி விளக்கம் கோரும் கடிதத்தைக் கொடுத்தது. இதற்கு முன்பு இதே போல அற்ப சொற்ப காரணங்களுக்காக விளக்கம் கோருவது எனத் தொடங்கிய ஆலை நிர்வாகம், ஏற்கனவே 22 தொழிலாளர்களை இடைநீக்கம், டிரான்ஸ்ஃபர், வேலைநீக்கம் செய்து பழிவாங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் தனக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதை உணர்ந்த இராஜேந்திரன், மன உளைச்சலுக்கு ஆளாகி ஆலைக்குள்ளேயே மரணமடைந்தார். இவரது மரணம் ஆலைக்கு வெளியே நடந்ததுபோல போலி ஆவணங்களை தயாரித்து ஆலையில் நடக்கும் அடக்கு முறைகளை மூடி மறைத்தது. தொழிலாளி இராஜேந்திரனின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் இவ்வாலை அதிகாரிகளே.
2009-ம் ஆண்டு, ஊதிய உயர்வு உரிய காலத்தில் கிடைக்காமல் தொழிலாளி மூர்த்தியின் குடும்பத்தினர் வாடிய நிலையில், அவரை தொடர்ந்து கடினமான உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கின்ற வேலையில் ஈடுபடுத்தியதை அடுத்து, முகத்துக்கு நேரே புகைப்படம் எடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியது ஆலை நிர்வாகம். இதனால், ஆலைக்குள்ளேயே மாரடைப்பு ஏற்பட்டு தொழிலாளி மூர்த்தி மரணமடைந்தார். இந்த மரணத்தையும் ஆலைக்கு வெளியே நடந்தது போல மாற்றி பிரச்சனையை மூடிமறைத்தது.
எங்களது தற்போதைய கோரிக்கைகள்!
நீண்டகாலமாக முடிக்கப்படாமல் இருக்கும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும். எங்களது சங்க நிர்வாகிகள் மீதான அனைத்து அடக்கு முறைகளையும் வாபஸ் பெற வேண்டும். நமது சங்கத்தினர் மீதும் தொழிலாளர்கள் மீது செலுத்திவரும் அற்பத்தனமான நடவடிக்கைகளை (கேமரா முன்னால் நின்று டீ குடிக்க வேண்டும் என்பது, தொழிலாளியைப் படம்பிடிப்பது, சுழற்சிமுறையை ரத்து செய்து நமது சங்க உறுப்பினர்களை மட்டும் வேலை வாங்குவது…) உடனடியாக ஆலை நிர்வாகம் நிறுத்த வேண்டும். தொழிலாளர்களைப் பிளவுப்படுத்தி குளிர்காயும் போக்கை ஆலை நிர்வாகம் கைவிட வேண்டும்.
உறுதியான போராட்டத்தின் அடுத்தக் கட்டம்… பு.ஜ.தொ.மு.வுடன் இணைப்பு!
இன்று பல ‘பெரிய’ தலைவர்கள் தலைமை தாங்கும் சங்கங்கள் கூட சட்டபூர்வமாக நடத்தாமல் கட்டைபஞ்சாயத்து முறையில்தான் சங்கம் நடத்தி வருகின்றனர். ஆலை நிர்வாகத்துடன் சமரசம், தொழிலாளர்களைக் காட்டிக் கொடுப்பது, ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு துணைபோவது என்ற நிலைமை இன்று நிலவுகிறது. ஒசூரிலும் இதைக் காண்கிறோம்.
நமது கார்போரண்டம் யூனிவர்சல் தொழிலாளர்களின் தொழிலாளர்கள் சங்கம் (டி.ஆர்.பி.119) என்பது இந்த 32 ஆண்டுகளாக ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடி வந்துள்ளது. தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எதிர்த்து சட்டபூர்வமாக நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. இதனால், எங்களது சங்க நிர்வாகிகள் பலர் இடைநீக்கம், இடமாற்றம், வேலைநீக்கம் போன்ற அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். நமது சங்கம் உறுதியாக செயல்பட்டு வருகிறது. சட்டமும் நீதியும் முதலாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த 32 ஆண்டுகால அனுபவமாக உணர்ந்துள்ளோம்.
ஆலைக்குள் நிர்வாகத்துடன் சட்டபூர்வமாக தாங்கள் நடத்திய போராட்டங்கள் எதுவும் ஆலை நிர்வாகத்தை அசைக்கவில்லை என்பது மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீது ஆலை நிர்வாகம் தொடுக்கும் அடக்குமுறைகளும் அதிகரித்துள்ளது. பத்திரிக்கையில் பேட்டி கொடுத்தார் என்பதற்காக எங்களது சங்க நிர்வாகி வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை வைத்து பாருங்கள். அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து தொழிலாளர் துறையில் வழக்கு, வாய்தா, ஆலை அதிகாரிகள் வர மறுப்பு, தொழிலாளர் துறை அதிகாரிகளும் ஆலை அதிகாரிகளும் கொஞ்சுவது, குலாவுது, தூ! தூ! மானங்கெட்ட பொழப்பு என்று மனம் வெதும்புகிறது. ஆகையால், இனியும் இந்த சட்டத்தை மட்டும் நம்பிப் பயனில்லை என்ற நிலையில்தான் வீதியில் இறங்கிப் போராட முடிவு செய்துள்ளோம்.
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உறுதியாக, இடையறாது, தன்னலம் கருதாது, வர்க்க உணர்வுடன், நாட்டுப்பற்றுடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போராடி வருகிறது. ஒசூர் தொழிலாளர்களுக்காக பல முன்னுதாரணமிக்கப் போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆகையால், எங்களையும் இணைத்துக் கொண்டு போராடுவதுதான் தீர்வு என்பதை உணர்ந்து பு.ஜ.தொ.மு.வில் எமது சங்கத்தை இணைத்துள்ளோம்.
எங்களைப் போல ஒசூரில் உள்ள பிற ஆலை தொழிலாளர் சங்கங்களும், தொழிலாளர்களும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்கவும் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் பு.ஜ.தொ.மு.வில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்! பு.ஜ.தொ.மு. தலைமையில் நாங்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுங்கள்!
நிகழ்ச்சி நிரல்
நாள் : 01.05.2014, வியாழக் கிழமை,
நேரம் : காலை 11 மணி
இடம் : கார்போரண்டம் யுனிவர்சல் ஆலை வாயில் முன்பு.
தலைமை:
தோழர் மதிவாணன், தலைவர்,
கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்
வரவேற்புரை:
தோழர் காளியண்ணன், செயலாளர்
கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்
கொடியேற்றி சிறப்புரையாற்றுபவர்:
தோழர் பரசுராமன், மாவட்டத்தலைவர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
வாழ்த்துரை வழங்குபவர்கள்:
தோழர் சங்கர், மாவட்ட செயலாளர்,
பு.ஜ.தொ.மு
தோழர் செந்தில்குமார், தலைவர்,
பு.ஜ.தொ.மு கமாஸ்வெக்ட்ரா கிளைச் சங்கம்
தோழர் வேல்முருகன், செயலாளர்,
பு.ஜ.தொ.மு வெக் இந்தியா கிளைச் சங்கம்
தோழர் கோபால்,
ஹரிதா ரப்பர்
தோழர் இ.கோ.வெங்கடேசன்,
அசோக்லேலாண்டு
தோழர் சிவலிங்கம், இணைச் செயலாளர்,
கார்போரண்டம் ஐ.சி. எம்ப்ளாயிஸ் யூனியன்
நன்றியுரை :
தோழர் சுந்தரேசன் இணைச் செயலாளர்,
கா.யூ.தொ.தொ. சங்கம்.
இவண்
கார்போரண்டம் யுனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் (பதிவு எண்-110 DRP)
இணைப்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (பதிவு எண்-24 KRI)
(கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்)
தஞ்சை மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம் – மே தின அறைகூவல்
40 ஆண்டுகளாக காவிரி நீர் சிக்கலைத் தீர்க்காமல் டெல்டா மாவட்ட விவசாயிகளையும் மக்களையும் வஞ்சித்து வந்த ஓட்டுக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் தற்போது இம் மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நிலத்தடி நீரை நம்பி நடக்கும் கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் ஒழித்துக் கட்ட முனைகின்றன.
சுமார் 667 சதுர கி.மீ பரப்பளவில் விரிந்து பரவியுள்ள நிலக்கரி வளத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கில் அதன் முதல் கட்டமாக அதற்கு மேல் படிந்துள்ள மீத்தேன் வாயுவை எடுக்கவும் வணிக நோக்கில் மின் திட்டங்களை இயக்கவும் ஒப்பந்தம் போட்டு அனுமதித்துள்ளது அரசு. லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலத்தைப் பறித்து அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து நாடோடிகளாக விரட்டியடிக்கும் இந்த திட்டம் குறித்து பாதிப்புக்குள்ளாகவுள்ள மக்களிடம் கருத்து கூட கேட்காமல், அவர்களின் விருப்பம் மற்றும் முடிவுக்கு எதிராக இந்த திட்டத்தை மக்கள் மீது திணித்துள்ளன அதிகார வர்க்கமும் ஆட்சிக்கு வந்த கட்சிகளும்.
தற்போது நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைத்து ஓட்டுக் கட்சிகளுமே இந்த திட்டத்தை எதிர்ப்பதாக நாடகமாடினாலும் ஓட்டுப் பொறுக்கிய பின் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள் என்பதை மக்கள் புரிந்தே வைத்துள்ளனர்.
மறுபுறம், திருவாரூர் மாவட்ட ஆட்சியரோ கிராமசபைகள் இத்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் போடுவதைக் கூட சகித்துக்கொள்ள முடியாமல் வாய்வழி மிரட்டல் விடுத்துள்ளார். கார்ப்பரேட் கம்பெனிகளின் தாசனாக செயல்பட்டுள்ளார்.
மக்களுக்கு துளியும் பொறுப்பாக நடந்து கொள்ளாத இந்த அதிகார வர்க்கத்தின் ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் உண்மையான ஜனநாயகத்துக்கான, மாற்று மக்கள் அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் அதற்கான போர்க்குணமிக்க போராட்ட முறைகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் மக்களிடம் உணர்த்தும் வகையில் இந்த போராட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
இந்த பிரச்சாரத்தை கொண்டு சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் மற்றும் இளைஞர்களின் ஊக்கமான பங்கேற்பை காண முடிந்த்து.
அந்த வகையில் கிழக்கிந்திய கம்பெனியை விரட்டிய மக்கள் இந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தையும் விரட்டியடிப்பார்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.
மக்களுக்கு சொந்தமான கனிச்செல்வங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்கானதாக மாற்றும் அரசின் தனியாரமய-தாராளமள-உலகமய கொள்கைக்கு எதிரான நியாயமான மக்கள் போராட்டம் வெல்லும்.
நடக்கவுள்ள முற்றுகைப் போராட்டம் இந்த வெற்றியை முன்னறிவிக்கும்.
இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை மாவட்டங்களிலிருந்து கலந்து கொள்கின்றனர். நாட்டுப் பற்று கொண்ட உழைக்கும் மக்கள் அனைவரையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அறைகூவி அழைக்கிறோம்.
மே நாளில் கொள்ளைக்கார GEECL ( கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட்) அலுவல முற்றுகைப் போராட்டம்!
காலை 10.30 மணிக்கு தஞ்சை இரயிலடியிலிருந்து பேரணி.
தலைமை:
தோழர். மாரிமுத்து, வட்டார அமைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி,
பட்டுக்கோட்டை வட்டம்.
சிறப்புரை
தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
மே 1, மீத்தேன் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கான முழக்கங்கள்:
- டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம்!
உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
- கொள்ளைக்கார GEECL நிறுவனத்தை விரட்டியடிப்போம்!
- கார்ப்பரேட் கொள்ளையை சட்டப்பூர்வமாக்கும் தனியார்மயத்தை ஒழித்துக்கட்டுவோம்!
- மக்களைக் கொல்லும் முதலாளித்துவம் ஒழிக! உழைப்போரைக் காக்கும் கம்யூனிசம் வெல்க!
- உண்மையான ஜனநாயக மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்!
- சாதி மதத் தடைகளைத் தகர்த்தெறிவோம்! தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!
- பிழைப்புவாத ஓட்டுக்கட்சிகளை, தொழிற்சங்கங்களை உதறியெறிவோம்!
- மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள்வோம்!
செய்தியாளர் சந்திப்பு, பத்திரிகை செய்திகள்
இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி மாவட்டங்கள்.
உலகின் ஒவ்வொரு அழகும் யாரிடம் மயங்கும் ?
வர்க்கத்தனைய மன நீட்டம் ! மே நாள் வெல்லட்டும் !
துலங்கும் ஆயிரம் சொல்லெடுத்தாலும்
தொழிலாளி என்பதைப் போல்
விளங்கும் பொருள் தருவன வேறில்லை!
சொல்லணி, பொருளணி
ஏகதேச உருவக அணி… இன்னும்
எத்தனை அணியிருந்தாலும்
உழைக்கும் வர்க்கமே உன் முன்னணிபோல்
உலகை கவிதையாக்கும் ஓர் அணியில்லை!
உரிமைகள் மறந்ததால்
பெருமைகள் மறந்தாய்,
தொழிலாளியே! புவி ஆளத்தான்
நீயே பிறந்தாய்…
கல்லாய் கிடந்த உலகம்
சிலையாய் மிளிர்ந்தது உன்னால்,
புல்லாய் கிடந்த பூமி
நெல்லாய் நிறைந்தது உன்னால்.
இயந்திரங்கள் புது உலகு படைத்தன
உனது இயக்கு விசையால்,
இயற்கைக்கும் சிறகு முளைத்தன
உன் உழைப்பு தசையால்.
நதிகளில் கலந்த
உன் உதிரம்
அணைக்கட்டுகளாய் இறுகின.
ஆழ்கடல் துடித்த உனது இதயம்
முத்துக்களாய் சிதறின.
மலைகளில் உரிந்த
உன் நரம்புகள்
தேயிலை இலைகளில் பரவின.
அலைகளில் தெறித்த
வியர்வைகள்
மீன்களின் செவுள்களில் சிவந்தன.
நெடிதுயிர்ந்த மலைகளின் புதுவழி
உன் கண்களில் அடங்கின!
விரிந்த கானகத்தின் விளை பயன்
உனது கைகளில் தொடங்கின.
உலகின் ஒவ்வொரு அழகும்
உழைப்பாளியே உன்னிடம் மயங்கின!
முதலில்
நாம் ஏதோ என்ற
எண்ணம் தகர்,
தாரணிக்கே நீதான் நிகர்!
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின்
நிறங்கள்
உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன.
சில்லிடும் காற்றின் இனிமை
உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன.
இயற்கையின் உதடுகள்
விரும்பும் இன்சொல்
தொழிலாளி!
இருப்பும் பெருமையும்
இப்படியிருக்க,
நம்மை ஏறி மிதிப்பதா முதலாளி?
தொழிலாளி தயவில்தான்
முதலாளி – தோழா
இதைத் தெரிந்தவன்தான் அறிவாளி!
முதலாளிக்கேது மூலதனம்
எல்லாமே
நம் உழைப்பு கொடுத்த சீதனம்,
சிப்ட்டு, சிப்ட்டாய்
நீ சிந்திய ரத்தம்தான்
கட்டு கட்டாய்
அவன் கைகளில் நோட்டு!
ஓராயிரம் கோடி மூலதனம்
முதலாளியிடமிருந்தால் என்ன?
உழைப்பாளர் கை படாவிட்டால்
அது அனாதைப் பிணம்!
ஒரே நாள்
உலகின் தொழிலாளர்
உழைப்பை மறுத்தால்
பங்கு சந்தை நாறிப் போகும்,
ஒரு வாரம்
துப்புரவு தொழிலாளி
தொழிலை மறுத்தால்
ஊரே நாறிப் போகும்!
தொழிலாளிதான் உலகின் தேவை!
முதலாளி
அவன் வளர்க்கும் நாய்க்கே சுமை.
எப்பேற்பட்ட இயக்கம் நீ
தொழிலாளியே!
அதிகாலை முதல் அந்திசாயும் வரை
சுரண்டிய முதலாளித்துவத்தை
பதினெட்டாம் நூற்றாண்டிலேயே
பணியவைத்த மே நாளின் மேன்மை நீ!
பிலடெல்பியா, நியூயார்க், சிகாகோ
என அமெரிக்க முதலாளித்துவத்தின்
ஆணவத்தை
நடுத்தெருவில் மிதித்தவன் நீ,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு
ஜெர்மன்… எங்கும்
முதலாளித்துவத்தின் மென்னியைப் பிடித்து
“எட்டு மணிநேர வேலையை”
வென்றெடுத்தவன் நீ,
அமெரிக்க ஹே சந்தையில் எரிந்து…
அய்ரோப்பிய வீதிகளில் சிதைந்து…
இந்திய ஆலைகளில் புகைந்து…
தமிழகத் தெருக்களில் அதிர்ந்து…
தொழிலாளி வர்க்க உரிமைகளை
பெற்றுத்தந்த பரம்பரையின்
நீட்சியடா நீ!
இதைப் பற்றிக்கொள்ள
பலமிழந்து பரிதவிப்பதோ நீ?
வர்க்க உணர்வுதான்
தொழிலாளியை வாழவைக்கும்,
போராட்ட உணர்வுதான்
துயரத்திலிருந்து மீள வைக்கும்.
கட்டிடத் தொழிலாளி
கம்பளித் தொழிலாளி
ரொட்டி தயாரிப்பு தொழிலாளி
அனைவரும் ஒன்று சேர்ந்ததால்
அன்று மே நாள் சிலிர்த்தது!
நீ ஹீண்டாய் தொழிலாளி
நான் நோக்கியா தொழிலாளி
நீ காண்ட்ராக்ட் தொழிலாளி
நான் கம்பெனித் தொழிலாளி
என பிரிந்து நிற்பதால்
சா நாள் வதைக்குது இன்று.
கட்டிடத் தொழிலாளி கையில்
திமிசு,
கணிணித் தொழிலாளி கையில்
மவுசு,
இதிலென்ன நான் பெரிசு, நீ பெரிசு
எம்.என்.சி. பவுசு,
கரணையோ, கணிணியோ
உழைப்பின் சுரணை ஒன்றானால்
முதலாளித்துவம் காட்டுமா ரவுசு?
மூலதனத்தின் மீது
வெறுப்பை உமிழ்ந்தான்
முன்னோடித் தொழிலாளி,
வளர்ச்சி என்று வாயைப் பிளந்தவன்
இதோ நோக்கியா வாசலிலேயே காலி!
மூடநம்பிக்கையினும் மோசமானது
முதலாளித்துவ நம்பிக்கை!
மூலதனம் நம்மை வாழவிடாது,
வேலை, கம்பெனி எதுவானால் என்ன
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றுபடு!
சொந்த இனமாயினும்
சுரண்டும் முதலாளி பகைவனே,
எந்த இனமாயினும்
உழைக்கும் வர்க்கம் தோழனே!
பிளவுபடுத்தும் சாதிகளை
தூர ஓட்டு!
இனி பேச்சுக்கே இடமில்லை
உழைக்கும் வர்க்க அதிகாரத்தை
நிலை நாட்டு!
எல்லா பொருளையும் படைத்தவன் நீ
தொழிலாளியே!
எல்லோர்க்கும் பொருளை படைத்தவன் நீ
உனக்கான சிந்தனையை உருவாக்கு
வர்க்க உணர்வை கருவாக்கு!
இனி உழைப்பவர் வைத்ததே சட்டம்!
உழைப்பவர் உரைப்பதே நீதி!
உழைப்பவர் ஆளவே சகலமும்!
இதை மறுப்பவர்க்கெதிராய் கலகம்!
இதுதான் இனிவரும் உலகம்!
தோழா! பரம்பரை வர்க்க உணர்வை
பற்றிக் கொண்டு போராடு!
பன்னாட்டு கம்பெனி, பார்ப்பன சர்வாதிகாரத்தை
வெட்டி எறி வேரோடு!
இயற்கையே எதிர்பார்க்கும்
இனிய இயங்கியல் நீ,
உலகின் அழகிய விடியலனைத்தும்
உழைப்பாளியே!
உன் முகத்தில் விழிக்க துடிக்கின்றன…
உலகின் மெல்லிய பூக்களனைத்தும்
உனது படைப்பின் உணர்ச்சியை கேட்கின்றன…
மேலான உன் உழைப்பின்
பொது நலன் பார்த்தே
மேகங்கள் மார்பு சுரக்கின்றன…
மேதினி மாற்றும்
உன் போர்க்குணம் பார்க்கவே
காற்றின் இமைகள் திறக்கின்றன!
துரை. சண்முகம்
பாஜக ஆசி பெறும் பாபா ராம்தேவின் பார்ப்பனத் திமிர்
ஊடகங்களால் உருவாக்கப்பட்ட மோடி ‘அலை’ உண்மையில் காவி சாக்கடையின் கழிவு அலை என்பதை காலம் நிருபித்து வருகிறது. வட இந்தியாவுக்கே அதிகம் உள்ள பார்ப்பனிய நிலவுடமை கொடூரத்தின் விஷ நாக்குகள் பாஜக புண்ணியத்தில் தினவெடுத்து ஆடுகின்றன. அதிலும் முற்றும் துறந்ததாக மறைத்துக் கொள்ளும் சாமியார்கள் இதை நிர்வாணமாக ஒத்துக் கொள்கிறார்கள்.

அதன்படி பாபா ராம்தேவ் தனது கோணல் வாயைத் திறந்திருக்கிறார். “ராகுல் காந்தி தலித்துகளின் வீடுகளுக்கு இன்பச் சுற்றுலாவுக்கும் தேனிலவு கொண்டாடவும் தான் செல்கிறார். ஒருவேளை அவர் தலித் பெண் யாரையாவது கல்யாணம் செய்து கொண்டிருந்தால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்து பிரதமராக கூட ஆகியிருக்கலாம்” – மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் பாபா ராம்தேவ் கடந்த 25-ம் தேதி லக்னோவில் பேசும் போது இப்படி திமிராக பேசியுள்ளார்.
தேனிலவு எனும் வார்த்தையும், படிமங்களும் ஒரு சாமியார் பயலின் சிந்தனையில் எப்படி வர முடியும்? சாயி பாபா, ஜெயேந்திரன், நித்தி, ஆஸ்ரம் பாபு, போன்ற பாஜக ஆசி பெறும் பொறுக்கிகளே நாடறிந்த சாமியார்களாக வலம் வரும் போது ராம்தேவ் மட்டும் அமைதி காக்க முடியாதல்லவா?
அடுத்து சாதிய ‘கௌரவத்திற்கு’ குந்தகம் விளையும் வண்ணம் நடக்கும் தனது சொந்த சாதி உறவினர்களை, ஆதிக்க சாதி வெறியர்கள் இப்படித்தான் தலித்துக்களோடு சேர்த்து கேலி செய்வார்கள். தலித்துக்களின் சாதிகளைச் சொல்லி “என்ன அவன் மாதிரி உடையணிகிறாய், அந்த பெண்கள் மாதிரி அழகில்லாமல் இருக்கிறாய், உன் குழந்தை சேரிக் குழந்தை மாதிரியே இருக்கிறது” என்று தினுசு தினுசாக திமிரைக் காண்பிப்பார்கள். எனவே ராகுல் காந்தியை இளக்காரமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக பார்ப்பனியத்தின் அதே ஆதிக்க சாதி திமிரை இதிலும் கக்கியிருக்கிறார், ராம்தேவ்.
ஆக இது வாய்தவறியோ இல்லை உளறிக் கொட்டிய வார்த்தைகளோ அல்ல. தெளிவான பார்ப்பன கொழுப்பு. அதுவும் கேள்வி கூட கேட்கமுடியாது எனும் வட இந்திய பாலைவனத்தில் உறைந்திருக்கும் நூற்றாண்டுகள் கடந்த கொழுப்பு.

ராம்தேவின் கருத்து வெளியானதைத் தொடர்ந்து நாடெங்கும் தலித் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பல்வேறு பகுதிகளில் ராம்தேவுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் துவங்கின. வெவ்வேறு அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நீதிமன்றங்களில் ராம்தேவுக்கு எதிராக வழக்குகள் தொடுத்து வருகின்றன. தனது சகல நம்பிக்கைகளும் தகர்ந்து போய் தோல்வி மனப்பான்மையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மூன்றாம் அணிக்கு ஆதரவு அளிப்பது குறித்து புலம்பலை ஆரம்பித்திருந்த காங்கிரசு கட்சி, வந்த வாய்ப்பை தவற விடவில்லை. உடனடியாக உத்திரபிரதேச தேர்தல் ஆணையத்திடம் ராம்தேவுக்கு எதிரான புகாரை தட்டி விட்டிருக்கிறது. இதன் மூலம் இழந்து விட்ட தலித் வாக்கு வங்கியை கொஞ்சமாவது மீட்கலாம் என்ற நப்பாசையும் காரணம்.
தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்குத் தடை என்கிற அளவில் விவகாரம் இருந்த வரை அமைதியாக இருந்த ராம்தேவ், அதைத் தொடர்ந்து தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவானதையும், ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தல் கமிஷனர் அம்மாநிலத்தில் ராம்தேவ் யோகா முகாம் நடத்த தடை செய்து உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்தும் தனது திமிரை மறைப்பதற்கு முயன்று வருகிறார்.
ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் இப்படி இயல்பான திமிரில் பேசி மாட்டிக் கொள்ளும் போது கையாளும் அதே உத்தியான “எனது பேச்சு தவறாக திரிக்கப்பட்டு விட்டது” என்பதையே ராம்தேவும் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அது தவறில்லை, இயல்பான பார்ப்பன வன்மம் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
இவ்வாறாக ஊரே அல்லோலகலப் பட்டுக் கொண்டிருக்கும் போது பாரதிய ஜனதா மட்டும் இதெல்லாம் ஒரு மேட்டரா என்பதாக கண்டு கொள்ளாமல் இருந்தது. பிறகு தலித் மக்களின் எதிரி எனும் உண்மை அதிகம் பேசப்படுமோ என்று பயந்த பாரதிய ஜனதா, இந்த சம்பவம் பற்றி கட்சியின் இசுலாமிய முகமூடியான ஷா நவாஸ் ஹுசைனை வைத்து வெளியிட்டது. அதாகப்பட்டது ராம்தேவ் ஒரு சாமியார் என்பதால் ஹனிமூன் (தேனிலவு) என்கிற ஆங்கில வார்த்தையை அவர் பயன்படுத்தியதை, அந்த சூழலுக்குப் பொருத்தி தான் அர்த்தம் கொள்ள வேண்டுமாம். கட்சிகளிடையேயான உறவை தேனிலவு என்று சொல்லும் அர்த்தத்தில் கூட அவர் சொல்லியிருக்கலாம் என்று இந்த நாடும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டுமாம்.
சொல்லப்பட்ட இடம், சூழல், பின்னணியிலேயே ஆதிக்க சாதித் திமிர் தெளிவாக இருக்கும் போது இது பொதுவாகச் சொல்லப்பட்ட உவமை என்று அதுவும் பாய் ஒருவரை நரித்தனமாக பேச வைத்து வெளியிட்டிருக்கிறது பாரதிய ஜனதா. அதோடு நில்லாமல், பாரதிய ஜனதாவில் தலித் அடையாளத்தோடு செயல்பட்டு வரும் உதித் ராஜ் என்கிற விபீஷணத் தலைவர் ஒருவரை விட்டு ராம்தேவ் சொல்லியதில் தவறு ஏதும் இல்லை என்றும் அறிவிக்கச் செய்திருக்கிறது.

இஸ்மாயில் என்கிற முசுலீம் பெயரைப் பச்சை குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றே கோட்சேயின் அந்தச் செயலுக்கு பின் இருந்த அதே உத்திதான் இங்கும் தொழிற்படுகிறது. பார்ப்பனிய ஆதிக்க சாதி வன்மத்தின், தலித் விரோத கருத்துக்களை தலித்துகளாகவும் இசுலாமியர்களாகவும் அறியப்படும் தனது கட்சியின் முகமூடிகளைக் கொண்டே வெளியிடச் செய்துள்ளது பாரதிய ஜனதா. இதுவரை ராம்தேவின் பொறுக்கித்தனமான பேச்சுக்கு கேடி மோடியோ, இல்லை பாஜக தலைமையோ கண்டிக்கவில்லை என்பது எதிர்பார்த்ததுதான்.
பொதுவாக ஓட்டுக் கட்சிகள் எதிர்பார்க்கும் தலித் மக்களின் ஓட்டு வங்கியை விட பார்ப்பன ஆதிக்கம்தான் பெரிது என்று இந்துமதவெறியர்கள் கருதுகிறார்கள். முக்கியமாக வட இந்தியாவில் தலித்துக்களை விட ஆதிக்க சாதிகள்தான் இந்துமதவெறியர்களின் அரசியல் அடிப்படையாக இருக்கிறார்கள். அவர்களை விட்டுக் கொடுக்க முடியாது எனுமளவிலும் இந்த தலித் விரோதம் காவிக் கூட்டத்திற்கு தேவையாகத்தான் இருக்கிறது.
’தலித் மக்கள் மலம் அள்ளுவதை ஆத்ம சுத்தியோடு செய்தால் ஆன்ம விடுதலை பெறமுடியும்’ என்று பீயள்ளுவதை கர்மயோகமாக, ஒடுக்கப்பட்ட மக்களின் தலையில் கட்டிய மோடியின் சொந்தக் கருத்தும், தலித்துகளைப் பற்றி எத்தகையதாக இருக்கும் என்பதை தனியே விவரிக்கத் தேவையில்லை.
அவ்வகையில் பார்ப்பன இந்துமதவெறி பாசிசக் கும்பல் தலித்துகளுக்கு விரோதமானவை என்பதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை – ஏனெனில், இந்துத்துவத்தின் ஆன்மாவான பார்ப்பனியம் தன் இயல்பிலேயே தலித்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் மட்டுமின்றி தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளும் அனைத்து உழைக்கும் மக்களுக்குமே எதிரானது தான்.
ராம்தேவிடம் வெளிப்பட்ட கருத்துக்கள் என்பது தனிப்பட்ட ஒரு சாமியாரின் திமிரில் இருந்து எழுந்தது அல்ல. தமிழை நீச பாஷை என்று சிதம்பரம் கோயிலில் பூணூலை உருவிக் காட்டும் தீட்சிதனிடமும், கருவறைக்குள் நுழைந்தால் தீட்டு என்று சூத்திரர்களையும் கோயிலுக்குள் நுழைந்தாலே தீட்டு என்று பஞ்சமர்களையும் விலக்கி நிறுத்தியிருக்கும் பார்ப்பன இந்துத்துவத்தின் இயக்கு சக்தியே இந்த தீண்டாமை தான்.
தேர்தல் முடிவடையாத நிலையிலேயே கூட இந்தளவுக்கு பார்ப்பன மேலாதிக்கத் திமிரை வெளிப்படுத்த முடிகிறது என்றால், இவர்கள் வெற்றி பெற்றால் பார்ப்பனியத்தின் வன்கொடுமை, உழைக்கும் மக்கள் மீது எவ்வாறெல்லாம் ஏவிவிடப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ளவதோடு அந்த பாசிச ஒடுக்குமுறையை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும்.
ராம்தேவை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து தண்டிக்குமாறு போராடுவதோடு இந்துத்துவ பாசிஸ்டுகளை அரசியல் ரீதியில் முறியடிப்பதே இதற்கான ஒரே தீர்வு.
– தமிழரசன்
மே நாளில் தமிழகமெங்கும் போராட்டங்கள்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் எங்கும் நடத்தும்
மே நாள் போராட்டங்கள்
- பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்!
- உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
என்ற முழக்கத்தை முன்வைத்து
1. சென்னை – வேலூர் – திருவள்ளூர் – காஞ்சிபுரம் மாவட்டங்கள்
இடம் : பூந்தமல்லி
நேரம் : மாலை 4 மணி
நிகழ்வு : பேரணி – ஆர்ப்பாட்டம்
[பிரசுரத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]
2. புதுச்சேரி
3. தஞ்சை, சீர்காழி, திருச்சி
- உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
- டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் மீத்தேன் எடுப்பு திட்டத்தை முறியடிப்போம்!
என்ற முழக்கத்தை முன்வைத்து பேரணி முற்றுகை.
4. கடலூர் – விழுப்புரம் – திருவெண்ணெய் நல்லூர்
- கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாட வரும் ஜிண்டாலை அடித்து விரட்டுவோம்!
என்ற முழக்கத்தை முன்வைத்து பேரணி, முற்றுகை.
5. ஓசூர்
நேரம் : மாலை
நிகழ்வு : பேரணி – ஆர்ப்பாட்டம்.
6. கோவை – உடுமலை- ஈரோடு – பள்ளிப்பாளையம்- காங்கேயம்- கரூர்-நாமக்கல்
- உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
- விசைத்தறி, கைத்தறி உள்பட சிறு தொழில், சிறு வணிகர்களை விழுங்க வரும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை விரட்டியடிப்போம்!
என்ற முழக்கத்தை முன்வைத்து பேரணி – ஆர்ப்பாட்டம்.
இடம் : பல்லடம்
நேரம் : மாலை
7. கோத்தகிரி
நேரம் : மாலை
நிகழ்வு : ஆர்ப்பாட்டம்.
8. மதுரை – கோவில்பட்டி – விளாத்திகுளம் – சிவகங்கை – ராஜபாளையம்
இடம் : ராஜபாளையம்
நேரம் : மாலை
நிகழ்வு : பேரணி – ஆர்ப்பாட்டம்
9. உசிலை – கம்பம்
- உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
- விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டியடிக்கும் மறுகாலனியாக்கத்தை விரட்டியடிப்போம்!
என்ற முழக்கத்தை முன்வைத்தும் நியூட்ரினோ ஆய்வை எதிர்த்தும் பேரணி – ஆர்ப்பாட்டம்.
இடம் : தேவாரம்
நேரம் : மாலை
10. பென்னாகரம் – கந்திலி
இடம் : பென்னாகரம்
நேரம் : மாலை
நிகழ்வு : பேரணி – ஆர்ப்பாட்டம்
தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
டி.வி.எஸ் ஸ்தாபகர் தின விழா தொழிலாளர் வர்க்கத்துக்கே அவமானம்
ஓசூர் டி.வி.எஸ் ஆலையில் ஸ்தாபகர் தின விழா என்பது தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலை மறைக்கும் சதி!
ஓசூர்-டி.வி.எஸ் ஆலையில் ஸ்தாபகர் விழாவில் கலந்து கொள்வது தொழிலாளர் வர்க்கத்துக்கே அவமானம்!புறக்கணிப்போம்!
நாடளவில் உழைக்கும் மக்கள் மீது வகைவகையான அடக்குமுறைகள் செலுத்தப்படுகின்றன. தொழிற்துறையை பொருத்த வரை பல இடங்களில் பயிற்சி தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, தற்காலிகத் தொழிலாளி என்ற பல பெயர்களில் நிரந்தரத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு விட்டது. தொழிலாளர்கள் பலரும் நிரந்தர வேலையை எதிர்ப்பார்ப்பதைவிட குறைந்த பட்சம் உயிர் வாழ்வதற்காகவாவது வேலை வேண்டும் என்ற உணர்வே மேலோங்கியுள்ளது. டிப்ளமோ, இஞ்ஜினியரிங், ஐடிஐ போன்ற படிப்புகளை முடித்துவிட்டு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி ஒசூர் நகர வீதிகளில் அலைவதைப் பார்த்தாலே இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

இதனைத் தாண்டி ஆலைக்குள் உற்பத்தி நிலைமை, சுகாதாரம், பாதுகாப்பு, உற்பத்தி இலக்கு போன்ற எவற்றையும் தொழிலாளர்கள் தங்களின் உரிமை என்று அறிந்து கொள்ளவில்லை. இதனால், முதலாளிகள், எச்.ஆர். அதிகாரிகள், சூப்பர்வைசர்கள் வைப்பதுதான் சட்டம் என்ற முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்து கோர தாண்டவமாடுகிறது. ‘இம் என்றால் வனவாசம் ஏன் என்றால் சிறைவாசம்’ என்ற அளவில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை அடிமை நிலைக்குத் தாழ்ந்து விட்டது.
இந்நிலையில்தான் மேற்கண்ட முழக்கங்களைக் கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சுவரொட்டிகளை கண்ட தொழிலாளர்கள் தங்களின் செல்போன்களில் எல்லாம் படம் எடுத்துக்கொண்டு நண்பர்களிடம் பகிர்ந்தும் தங்களுக்குள்ளும் விவாதித்துக்கொள்கின்றனர்.
குறிப்பாக, பெரிய பெரிய கார்ப்பரேட் (லேலாண்டு)ஆலைகளில் கெம்பா என்ற பெயரில் கருங்காலிகளை உருவாக்கி அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு மட்டும் தனிச் சலுகைகள் வழங்குவது, டூரிஸ்ட் என்று வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்வது, தொழிலாளர்களின் ஒற்றுமை உணர்வை குலைத்து போராட்ட உணர்வை சீர்குலைப்பது என்ற யுத்தியை கையாள்கிறது என்றால்…., டி.வி.எஸ் ஆலையில் தொடரும் தொழிலாளர்கள் மீதான உழைப்பு சுரண்டலை மறைக்கவும்,கட்டற்ற அடக்குமுறைகளை அரங்கேற்றவும் நடத்துவதுதான் ஸ்தாபகர் தினவிழா. இந்த விழாவில் தொழிலாளியின் மனைவி மக்களுடன் செல்வதற்கு அனுமதி கொடுக்கின்றனர். ஆலையில் கோயில் திருவிழா போல அத்தனை பொருட்களும் அங்கு இருக்கும். ஆலை முழுவதும் ஜிகு ஜிகு வென லைட் செட்டிங்கை பார்க்கும் போது குடும்ப பெண்களுக்கு ஒரே பிரமிப்பூட்டும் வகையில் உணவு வகைகள் என்று ஆலைக்குள் சென்று வெளியே வந்தால் சொர்க்கத்தை பார்த்து வந்தது போல இதைப் பற்றியே ஆண்டு முழுவதும் பேசுவார்கள்.
ஆலையின் அடக்குமுறைக்கு எதிராக கேள்வி கேட்டால் நிர்வாகத்தை விட தொழிலாளியின் மனைவிமார்களே மன்னிப்பு கேட்டு வேலைக்கு போக சொல்வார்கள். தொழிற்சாலையில் உள்ள தொழிற்சங்கமோ தொழிலாளர்களின் உரிமையை விட நிர்வாகத்தின் குரலைத்தான் பேசுவார்கள்.
இவ்வாலையில் பத்து ஆண்டுகள் வேலை செய்தாலும் காண்ட்ராக்ட்டு தான். ஆனால் 480 நாட்கள் வேலை செய்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது சட்டம். இதனை மயிரளவிற்கு கூட மதிப்பதில்லை டி.வி.எஸ் நிர்வாகம். சட்ட விரோதமாக செயல்படும் போக்கை கண்டித்தாலோ பணிநீக்கம், அடியாட்களை வைத்து மிரட்டுவது போன்ற கேவலமான வேலைகளை செய்வதில் முதலிடம் தான் டி.வி.எஸ் ஆலை.
டி.வி.எஸ் ஆலையின் குழும நிறுவனமான ஹரிதா ரப்பர் ஆலையை சென்ற ஆண்டு மும்பையை சேர்ந்த மெகா ரப்பர் என்ற ஆலைக்கு தொழிலாளர்களின் விருப்பத்தை கேட்காமல் விற்றுவிட்டது. இதனை எதிர்த்து பணி தொடர்ச்சியுடன் வேலை கேட்ட 12 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. அவர்கள் பல கட்சிகளை பார்த்தும் தொழிலாளர்களின் நியாயத்தை உணராமல் டி.வி.எஸ்ஸை எதிர்த்து ஏதும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டனர். பிறகு புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு-வில் தங்களை இணைத்து கொண்டு அச்சங்கத்தின் வழி காட்டலின் படி நீதிமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் போராடி வருகின்றனர்.

அந்த வகையில் மேற்கண்ட முழக்கங்களை வடித்து நகரம் முழுவதும் போஸ்டர் போட்டு ஒட்டப்பட்டது. போஸ்டரை பார்த்த, படித்த இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் போராட்டத்தை ஒட்டு மொத்த தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டமாக வளர்த்தெடுப்போம். தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம்!
இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தர்மபுரி-கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு 9788011784, ஓசூர்.
ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் திரைக்கதை – ஆவணப்படம்
நாட்டு அதிபர் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும், அரச படைகள் ஆயுதமற்ற அப்பாவி மக்களை கொன்று குவிப்பதாகவும் கடற்படை துணைத்தளபதி ஊடகங்களில் அறிவிக்கிறார்; எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சி ஒளிபரப்பப்படுகிறது.
அதையடுத்து அதிபர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகளும், ‘மக்களும்’ போராட்டத்தில் குதிக்கின்றனர், இராணுவமும், அதிபர் பதவி விலக காலக்கெடு விதிக்கிறது. அடுத்த சில மணி நேரங்களில் அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்படுகிறார்; கைது செய்யப்படுகிறார். வழக்கமான காட்சிகள்தான் என்றாலும் காட்சிகளின் பின்னே உள்ள உண்மை அவ்வாறில்லை.

அரபு வசந்தத்திலும் அதையடுத்த லிபியா, சிரியா, தற்போது உக்ரைன் என பல்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டு அரசுகளுக்கு எதிராக மக்கள் எழுச்சிகள் நடந்து வரும் சூழலில் இதையொத்த காட்சிகளை நாம் காணுற்றிருக்கிறோம். இப்போராட்டங்களில் சில மக்கள் விரோத அரசுகளை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், 2002-ம் ஆண்டு வெனிசுலாவில் நிகழ்த்தப்பட்ட ‘மக்கள் எழுச்சிகள்’ அதிபரை பதவியிலிருந்து தூக்கியெறிவதுடன் முடிவுக்கு வரவில்லை. மாறாக, உண்மையான மக்கள் எழுச்சி அப்போது தான் ஆரம்பித்தது. தூக்கியெறியப்பட்ட அதிபர் சாவேஸ் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் பதவிக்கு வருகிறார்.
சாவேஸ் பதவி விலக்கப்பட்ட அந்நிகழ்வு, பின்னணியிலிருந்து திட்டமிட்ட முறையில் திரைக்கதை எழுதி இயக்கப்பட்டதை அம்பலப்படுத்துகிறது ‘ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் கூறுகள்’ என்ற ஆவணப்படம்.
2000-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சாவேஸ் அதிபர் பதவிக்கு வந்ததும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி தொகையை உயர்த்தி அதை மக்கள் நலனுக்கு திருப்பி விட்டார். அன்னிய கூட்டுப்பங்கு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில் பன்னாட்டு தனியார் கம்பெனிகளின் கட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக சட்டமியற்றினார்.
2001-ல் சாவேஸ், 49 மக்கள் நல சட்டங்களை நிறைவேற்றினார். பெரும் பண்ணையார்களிடம் உபரியாக இருந்த நிலங்களை பெற்று நிலமற்றோருக்கு விநியோகிப்பதற்கான நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சீர்திருத்தங்களை தடையின்றி நிறைவேற்ற அரசுக்கு முழு அதிகாரமளிக்கும் சட்டதிருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார். எதிர்க்கட்சிகள் சாவேஸ் ஜனநாயகத்துக்கு விரோதமாக அதிகாரத்தை தம்மிடம் குவித்து சர்வாதிகாரியாக மாறிவருவதாக குற்றம் சுமத்தி போராட்டங்களில் ஈடுபட்டன.
சாவேஸ் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனையும், அப்போதைய லிபிய அதிபர் கடாபியையும் சந்தித்து பேசினார்.
15 நாடுகளில் சுற்றுப்பயணம் முடித்து திரும்பிய சாவேசை ஹிட்லர், முசோலினிக்கு நிகரான முட்டாள் சர்வாதிகாரியெனவும், பதவிப் பித்தராகவும், புகழ்விரும்பி, பைத்தியம் எனவும் அமெரிக்க நியூஸ் வீக் பத்திரிகை கட்டுரை வெளியிட்டது.

வெனிசுலாவில் நிலவும் ‘சர்வாதிகார அரசை அகற்றி ஜனநாயக அரசை நிறுவும் போராட்டங்களை’ அமெரிக்கா ஆரம்பித்து வைப்பதற்கு மேற்சொன்ன காரணங்களே போதுமானதாக இருந்தன.
பிப்ரவரி 2002-ல் விமானப்படையின் கர்னல் பேடரோ விசென்டே சோடோ தலைமையில் ராணுவத்தின் ஒரு பிரிவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. சாவேஸ் இராணுவத்தை சிவில் வேலைகளில் ஈடுபடுத்தி நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விட்டதாகவும், மக்களின் நம்பிக்கையை அவர் இழந்து விட்டதாகவும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையெனில் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் ராணுவ உயரதிகாரிகள் பேட்டியளிக்கின்றனர்.
ஏப்ரல் 6-ம் தேதி பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட, முறைகேடுகளில் ஈடுபட்ட 19 அதிகாரிகளை வேலை நீக்கம் செய்து உத்தரவிடுகிறார் சாவேஸ். இதை எதிர்த்து எண்ணெய் நிறுவனத்தின் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டில் எண்ணெய் உற்பத்தி முடக்கப்படுகிறது.
ஏப்ரல் 9 அன்று அறிவிக்கப்பட்ட பொது வேலைநிறுத்தம் குறைந்த அளவு ஆதரவையே பெற்ற போதிலும் எண்ணெய் நிறுவன ஊழியர் போராட்டத்துக்கு ஆதரவாக நாடுதழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது வலதுசாரி தொழிற்சங்க கூட்டமைப்பு.

முன்னரே திட்டமிட்டபடி போராட்டங்களை ஆதரித்து எல்லா எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதிக்கின்றன. நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க பகுதிகளில் நடக்கும் போராட்டங்கள் மற்ற ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பரவவுமில்லை, பாதிக்கவுமில்லை.
மறுபுறம், சாவேஸ் ஆதரவாளர்கள் அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அனைத்து ஊடகங்களும் அரசு ஆதரவு போராட்ட செய்திகளையும், அரசுத்தரப்பு விளக்கங்களையும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்ததுடன் நாடு முழுவதும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மட்டுமே நடப்பதைப் போலொரு பொய்யான பிம்பத்தை கட்டியெழுப்பின. அரசு சர்வாதிகாரத்தன்மையுடன் ஊடகங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாக குற்றம் சுமத்தி தொடர் பிரச்சாரம் செய்தன.
ஏப்ரல் 11 அன்று போராட்டக்காரர்கள், எண்ணெய் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக செல்கிறார்கள். அவர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட திருப்பி விடப்படுகின்றனர். இது தன்னெழுச்சியாக நடந்த நிகழ்வல்ல. போராட்ட தலைவர்களால் முன்னரே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் சாவேஸ் ஆதரவாளர்கள் அதிபர் மாளிகையின் அருகில் கூட ஆரம்பிக்கின்றனர். சாவேஸ் தொலைக்காட்சியில் தோன்றி போராட்டங்களை திரும்பிப் பெறுமாறும் அமைதி காக்குமாறும் நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறார். தொலைக்காட்சியில் சாவேஸ் பேசிக் கொண்டிருக்கும் காட்சித்திரை பாதியாக்கப்பட்டு மறுபாதியில் போராட்டக்காரர்களின் மீதான தாக்குதல், உயிரிழந்தோர், காயமுற்றோரின் காட்சிகள் காட்டப்படுகின்றன. சாவேஸின் ஆதரவாளர்களும், போலீசாரும் போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கியால் சுடுவது போலுள்ள காட்சி, அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன.

ஆனால், சாவேஸ் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் தான் மோதல் நடந்ததாக நேரடி சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கியால் சுட்டது போலீசோ, அரசபடையினரோ அல்லது சாவேஸ் ஆதரவாளர்களோ அல்ல. ஏகாதிபத்திய சதிகாரர்கள் பணிக்கமர்த்திய மறைந்திருந்து சுடுபவர்கள் (snipers) தான் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். தங்களது சதிக்கு தார்மீக ஆதரவை பெறுவதற்கும், ஆட்சிகவிழ்ப்புக்கு நியாயம் கற்பிப்பதற்கும் அப்பாவி மக்களை கொன்றிருக்கின்றனர்.
துப்பாக்கிச்சூடு நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே போராட்டக்குழு தலைவர்களும், வலதுசாரி தொழிற்சங்க தலைவர்களும் போராட்டக் களத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்கள் வெளியேறியவுடன் மறைந்திருந்து சுடுபவர்கள் அப்பாவி மக்களை படுகொலை செய்திருக்கின்றனர்.
ஜனநாயகத்தின் தூண்களான ஊடகங்கள் திட்டமிட்டு மிக கவனமாக எடிட் செய்து ஆட்சி கவிழ்ப்பு திரைக்கதைக்கு தேவையானவற்றை செய்திகளாக தயாரித்திருக்கின்றன.
சி.என்.என் செய்தியாளர் ஒட்டோ நியுஸ்டல்ட்டுக்கு, போராட்டத்தில் வன்முறை ஏற்படும் என்றும் சிலர் உயிரிழக்கலாமென்றும் ராணுவத்தின் உயர்அதிகாரிகள் சிலர் சாவேசை பதவிவிலக கோருவார்கள் என்றும் முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. துப்பாக்கிச் சூட்டை கண்டித்த ராணுவ தளபதிகளின் பேட்டி துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு பலமணிநேரம் முன்னதாகவே ஒளிப்பதிவு செய்யப்பட்டதையும் அவர் அம்பலப்படுத்துகிறார்.
குறிப்பாக சாவேஸ் அப்பாவி மக்களை கொல்வதாக கூறும் கடற்படை துணைதளபதி பெரேசின் அறிக்கை துப்பாக்கி சூடு நடப்பதற்கு பல மணிநேரத்திற்கு முன் ஒளிப்பதிவு செய்யப்பட்டது தான்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருமாறு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளார் சாவேஸ். ஆனால் ராணுவம் சாவேஸ் அரசின் கட்டளைகளுக்கு பணிய மறுக்கிறது. சுமார் 20 மேல்நிலை அதிகாரிகள், “சாவேஸ் பதவி விலக வேண்டும்” என தொலைக்காட்சியில் பேட்டியளிக்கின்றனர்.
இதையடுத்து, ராணுவம் அதிபர் மாளிகைக்குள் நுழைகிறது. சாவேஸ் கைது செய்யப்படுகிறார். சாவேஸ் பதவி விலகிவிட்டதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. வெனிசுலா வர்த்தக சங்க தலைவரான பேட்ரோ கர்மோனா தற்காலிக அதிபராக நியமனம் செய்து கொண்டார். இவ்வாறாக ‘மக்கள்’ போராட்டத்தால் அதிபர் தூக்கியெறியப்பட்டார்.
பதவிக்கு வந்தவுடன் முதல் வேலையாக உச்சநீதிமன்றம் மற்றும் மற்ற ஜனநாயக அமைப்புகளை கலைத்து உத்தரவிடுகிறார் கர்மோனா. சாவேசின் அமைச்சர்கள், அவரது ஆதரவாளர்கள் அனைவரும் புதிய அரசின் தாக்குதலுக்கு இலக்காகினர். சிலர் கைது செய்யப்பட்டனர். சிலர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். ஜனநாயகத்தின் பெயரால் பாசிசம் தலைவிரித்தாடுகிறது. அதாவது ஜனநாயகம் என்பதே ஏகாதிபத்தியங்கள் மற்றும் பெருநிலவுடைமையாளர்களின் சர்வாதிகாரம் தான் என்று அம்பலமானது.

இதன் பின் பதவியிறக்கப்பட்ட தங்கள் அதிபருக்கு ஆதரவாக நாடெங்கிலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் வீதிக்கு வந்தனர். இராணுவமும் பிளவுபட்டது. அதை பற்றி செய்திகளை வெளியிடாமல், திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த ஊடகங்கள், நாடு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின.
சாவேஸ், தான் பதவி விலகவில்லை என்றும், சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கும் தகவலை ராணுவத்தில் தனது ஆதரவாளர்கள் மூலம் வெளியிடுகிறார். மக்கள் அதிபர் மாளிகையை சுற்றி வளைத்து சதிகாரர்களை சிறை வைத்தனர். ராணுவத்தில் சாவேஸின் ஆதரவுப்பிரிவு அப்போது உதவிக்கு வருகிறது. அது அதிபர் மாளிகையை சுற்றி வளைத்து சதிகாரர்களை கைது செய்ததுடன், சாவேசை மீண்டும் அதிபராக்கியது.
மறுபுறம் கொலம்பியாவை தவிர வேறு எந்த தென்னமெரிக்க நாடும் “இப்புரட்சிகர நடவடிக்கைகளை” ஆதரிக்காததால், ஆட்சிக் கவிழ்ப்பில் பழம் தின்று கொட்டை போட்ட அமெரிக்காவின் சி.ஐ.ஏ முகத்தில் கரியை பூசிக்கொண்டது.
சி.ஐ.ஏ மற்றும் ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை போன்ற அமெரிக்க அரசின் அமைப்புகள் இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னால் இருந்து இயக்கி நிதியளித்த உண்மை அம்பலமாகியது. இன்றும் அமெரிக்காவின் ஆண்டு பட்ஜெட்டில் அமெரிக்க – வெனிசுலா வெளியுறவு பிரச்சனைக்கான நிதியாக 5 மில்லியன் டாலர்க்கும் மேல் அதிகாரபூர்வமாகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வெனிசுலாவில் 1989-ல் உலக வங்கி, ஐ.எம்.எஃபின் நிர்ப்பந்த்தத்தால் தீவிரப்படுத்தப்பட்ட தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அந்நாட்டையும் மக்களையும் சூறையாடி ஓட்டாண்டிகளாக்கியது. வேலையிழந்து வாழ்விழந்த மக்கள் நாடோடிகளாக நகரங்களை நோக்கி விரட்டப்பட்டனர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் வறுமையும் தீவிரமாகியது. விலைவாசி விண்ணை முட்டியது. மானியங்கள் வெட்டப்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டன. மக்கள் இத்தனியார்மய, தாராளமயத் தாக்குதல்களுக்கு எதிராக தன்னெழுச்சியாகத் திரண்டு போராடினர்.
இந்தப் பின்னணியில் 1992-ல் நாட்டுப் பற்றும், சோசலிச நாட்டமும் கொண்ட ஆயுதக் குழுவொன்றை இராணுவத்திற்குள் உருவாக்கியிருந்த சாவேஸ் அமெரிக்க கைக்கூலி அரசை நீக்க முயன்று தோற்றார். கைது செய்யப்பட்ட சாவேசும் அவரது ஆதரவாளர்களும் இரண்டாண்டுகள் சிறை தண்டனையை பெற்றனர்.
1998-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாவேசுக்கு ஓட்டுக் கட்சிகளின் ஊழல், ஒடுக்குமுறை ஆட்சிகளாலும், தனியார்மய தாராளமய தாக்குதலாலும் வெறுப்புற்றிருந்த உழைக்கும் மக்கள் ஏறத்தாழ 56% வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.
ஆட்சிக்கு வந்த சாவேஸ், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும், அதிபரையும் திரும்பி அழைக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை 88% மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றினார். எதிர்க்கட்சிகள் இதை பலமாக எதிர்த்தன.
2000-ம் ஆண்டு தமது அரசை கலைத்துவிட்டு புதிய அரசியலமைப்பு சட்டத்தின் படி தேர்தலை நடத்தினார். அத்தேர்தலிலும், உழைக்கும் மக்கள் சாவெசுக்கு ஏறத்தாழ 59% வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.
2002-ல் வெனிசுலா அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி முற்றிலுமாக முறியடிக்கப்படவில்லை. மக்கள் போராட்டங்களால் ஆளும் வர்க்க, எதிர்கட்சிகள் தற்காலிகமாக பின்வாங்கிக் கொண்டு சாவேஸ் அரசுக்கு அடுத்தடுத்து பல நெருக்குதல்களை கொடுத்து வந்தன.

ஒட்டு மொத்த முதாளித்துவ அமைப்பும், மக்கள் நலத்திட்ட சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கத்திய நாடுகளிலேயே காலாவதியாகிவிட்ட நிலையில் சாவேஸ் தேர்தலின் மூலம் நிலவும் முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடவும், மக்கள் நல சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் பிரச்சனைகளை தீர்த்துவிட முடியுமென நம்பினார். அதையே 21-ம் நூற்றாண்டின் சோசலிசம் என்றார்.
ஆனால், ஆளும் வர்க்க அரசமைப்பையே ஜனநாயக அமைப்பாக சாவேசும் அவரது ஆதரவாளர்களும் கருதிக் கொண்டிருக்க, ஆளும் வர்க்கங்கள் அதற்கு முரணாக, அவர்களின் ஜனநாயக கட்டமைப்பின் விதிமுறைகளை மதிக்காமல் அவ்வமைப்பை தூக்கியெறியும் சதியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்ற ஆண்டு சாவேசின் மறைவுக்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் அவரின் உற்ற தோழரான நிகலோஸ் மாதுரா வெற்றி பெற்று அதிபரானார். அவர் எதிர்க்கட்சி வேட்பாளரை விட 1.5% வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றதால் அவருடைய தரப்பு பலவீனமாக இருப்பதாக கணித்த ஆளும்வர்க்க எதிர்க்கட்சிகள் மீண்டும் புரட்சியை நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன.
முதலாளிகளும், ஆளும் வர்க்கங்களும், திட்டமிட்ட முறையில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளன. மேலும், ஆளும் வர்க்கங்கள் அரசியல் ரீதியாக வீழ்த்தப்படாததால், சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சீரடையவில்லை. இவற்றின் காரணமாக பணவீக்கம் விண்ணை தொட்டுள்ளது. சமூக ஒழுங்கு சீரழிந்து குற்றங்களும், வன்முறைகளும் மலிந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் முன்னாள் மிஸ். வெனிசுலா அழகியும் அவரது கணவரும், சில வழிப்பறி கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டனர். பிப்ரவரி மாதம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இவ்வன்முறைகளுக்கு எதிராக சில மாணவர்களும், மக்களில் ஒரு பிரிவினரும் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சிகள் மாதுரா அரசு செயலிழந்து விட்டதாகவும், அதிபர் பதவி விலக வேண்டுமென்றும் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
இரண்டு மாதங்களுக்கும் மேல் வெனிசுலாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கு இவ்வாண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர்கள் முதல், பாப் பாடகர் மடோனா உள்ளிட்ட பலரும் ஆதரவளித்துள்ளனர். ஆனால் வழமை போலவே, உயர் நடுத்தர வர்க்க பகுதிகளில் நடக்கும் போராட்டங்கள் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பரவவுமில்லை, பாதிக்கவுமில்லை.
புரட்சிகர வர்க்கங்களின் மக்கள் ஜனநாயக குடியரசை நிறுவாமல், ஏகாதிபத்தியங்கள், முதலாளிகளின் கூட்டுச்சதியை முறியடிக்க முடியாது. இது தான் பாரிஸ் கம்யூன் முதல் வெனிசுலா வரையிலான இப்போராட்டங்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடமாகும்.
எனினும் அமெரிக்காவின் சிஐஏவும், ஊடகங்களும் ஒரு ஏழை நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு என்ன சதிகளையெல்லாம் அரங்கேற்றுகின்றன என்பதை இந்த ஆவணப்படம் விளக்குகிறது. ஜனநாயகத்தின் மெக்கா என்று ‘நம்பப்படும்’ அமெரிக்காதான் உண்மையில் ஜனநாயகத்தை கொல்லும் நரகம் என்பதை அறிய வேண்டுமா, இந்த படத்தை பாருங்கள்!
– மார்ட்டின்
வச்சா குடுமி போனால் மழை !
கொண்டைகள் கூட்டம்
குளத்தினில் பார்த்து
கெண்டைகள் நடுங்கின.
பூணூல் பாம்புகள் புடைசூழ
தண்ணீர் பாம்புகள் பயந்தன.
கலவர சத்தம் கேட்டு
மேலே வந்த தவளைகள்
வேதநிலவரத்தால் மிரண்டுபோய்
தண்ணீர்க்கடியில் தப்பின.
பார்ப்பன பாசியில்
வழுக்கி விழுந்தது
படித்துறைப் பாசி.
கறவை மாட்டுக்கு
பொட்டுத் தண்ணீரில்லை,
பார்ப்பன தொந்திக்கும்
கருங்கல் நந்திக்கும்
‘செட்டு’ தண்ணீர்.
முழுநிர்வாணமாய்
கொள்ளிக்கட்டை பிடித்தால்
மழைவரும் எனும் நம்பிக்கை
மடத்தனம், அசிங்கம் என்றால்,
அரைநிர்வாணத்தோடு
அர்ச்சகர்களை குளத்தில் இறக்கிவிடும்
வருண ஜபம் மட்டும் சுவிங்கமா?
சூத்திர சம்புகன் நம்பிக்கை
சவம்!
பார்ப்பன அம்பிகளின் நம்பிக்கைக்கு
ஜபம்!
எப்படியோ!
வருண ஜபத்தின் புண்ணியத்தால்
யாகம், கும்பம், கலச ஆவாகனம்
புண்ணியாவாஜனம், சிறப்பு பூஜை
என பார்ப்பனக் காட்டில் மழை!
பூணூல் அறிக்கைக்கு பல கோடி,
படித்த பையன் கேட்கிறான்
வானிலை மையம், வானிலை அறிக்கை
நாட்டுக்கு எதுக்கு டாடி?
மழை வாரா காரணத்தை
மறைக்கும் மறைகளின் பயங்கரம்
அரசும், பார்ப்பனியமும்!
காட்டு மரக் கொள்ளை
ஆற்று மணல் கொள்ளை
இயற்கையைச் சீரழிக்கும்
கனிமவளக் கொள்ளையென
பருவகாலத்தை சீரழித்த பங்காளிகளோடு
வருண ஜபத்தில் தப்பிக்கிறார்கள் கயவர்கள்.
மழைக்கொலை செய்த பாவிகளே
வருண ஜபம் செய்வதைப் பார்த்து
காறித்துப்புகிறது சூரியன்!
புத்திவராத தேசத்தில்
மழைவந்து என்ன ஆகப் போகிறது?
என்று தோலை உரிக்கிறது கோடை!
– துரை.சண்முகம்
மேலும் படிக்க
தேர்தல் புறக்கணிப்பை முறியடிக்க துணை இராணுவம் !
அவசரமாய் நடந்து முடிந்தது தேர்தல். ஆனால், அவசியமாய் பேசவேண்டியது எதுவும் பேசப்படவில்லை. ஆயினும், அதைப் பற்றிய அக்கறை எதுவுமின்றி ஜனநாயகத்தின் கழுத்தை நெருக்கிப் பிடித்து அதைக் கட்டிக் காத்த பெருங்கடமையை முடித்து விட்டதாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் தேர்தல் துறை.

புதுச்சேரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துவிட வேண்டும் என்பதற்காக, எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்தும், அந்த அனுமதி மறுப்பை எழுத்துப் பூர்வமாக தர மறுத்தும் என்னென்ன வித்தைகளோ செய்து பார்த்தது. ஆனால், மக்களோ அவர்களது ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டனர்.
நாம் இந்த அனுமதிக்காக சென்றிருந்த போது, தேர்தல் துறையால் புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்ட நோட்டோவைப் பற்றி மக்களீடம் பிரச்சாரம் செய்வதற்காக அனுமதி கேட்டு வந்த சில மனித உரிமை அமைப்பினர், அரசு சாரா தொண்டு நிறுவன அமைப்புகளிடம், ” நாங்க எதுக்கு இருக்கிறோம். நாங்களே தேவைப்படும் அளவுக்குப் பிரச்சாரம் செய்கிறோம். நீங்க என்ன புதுசா? அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். நீங்க எதாவது புதுசாப் பண்ணி குட்டையக் கொழப்பாதீங்க. உங்களுக்கு அனுமதி கிடையாது.” என்ற தேர்தல் அதிகாரியிடம், “என்ன சார், அரசாங்கம் அறிவித்ததைத் தானே பிரச்சாரம் செய்யப் போறோம்.” என்ற அந்த அமைப்பினர் பதில் கூறியவுடன், “எதுவா இருந்தாலும் நாங்க முடிவு பண்றது தான்.” என்று தாங்கள் சொல்லும் ஜனநாயகத்தைப் பட்டென்று போட்டுடைத்தார்.
ஏற்கனவே இந்த 100 சதவீத வாக்குப்பதிவிற்கு புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் பகுதி மக்கள் ஆப்பு அறைந்து விட்டனர். ஏனெனில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமியால் இப்பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. பெருவாரியான வீடுகள் சேதமடைந்தது. ஆனால், இன்று வரை அம்மக்களுக்கான புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட வில்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி பல முறை முறையிட்டபோதும் அரசோ, அரசியல் கட்சிகளோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த அம்மக்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவு செய்து அறிவித்திருந்தனர்.
இதனால் தங்களது 100 சதவீத வாக்குப் பதிவுக்கு தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பகுதியில் துணை ராணுவப் படைகளைக் குவித்திருந்தது தேர்தல் துறை. இது ஏதோ இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அப்பகுதி மக்கள், தேர்தல் புறக்கணிப்பை வெற்றிகரமாக நடத்தினர். இப்பகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை 5,000-த்திற்கும் மேல் இருந்தாலும் 500-க்கும் குறைவான வாக்குகளே பதிவாகியது.
ஆனால், தேர்தலை புறக்கணிக்கக்கூடாது என மிரட்டும் விதமாகத் தான் இந்த துணை ராணுவப் படைக் குவிப்பு என்பதை நிரூபிக்க, தேர்தல் நாளன்று நடந்த கீழ்க்கண்ட சம்பவமே சாட்சி.

இதே, புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செயின்ட் பால் பேட் என்ற பகுதியில் ஏற்கனவே பல முறை பல்வேறு விசயங்களையொட்டி நாம் பிரச்சாரம் செய்துள்ளோம். அதனால், நமது அரசியலைப் புரிந்து கொண்டு கருத்துக்களை ஏற்று அப்பகுதி மக்கள் வரவேற்பு அளிப்பார்கள். அதனடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்த போலி ஜனநாயகத் தேர்தல் பாதையை அம்பலப்படுத்தி தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தி பிரசுரங்களை விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது. நாம் சொல்கின்ற விசயங்களில் உள்ள உண்மைகளை அனுபவத்தில் உணர்ந்த அப்பகுதி மக்களில் பெரும்பாலோர் வாக்குச் சாவடி பக்கமே போகவில்லை என்பதை அங்கு பதிவான வாக்குகளின் எண்ணிக்கையே நிரூபித்துவிட்டது. அந்தப் பகுதி வாக்குச் சாவடிக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மொத்தம் 1872. இதில் பதிவான மொத்த வாக்குகள் 170 மட்டுமே.
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையில் இந்த 170 வாக்குகளும் பதிவாகி விட்டன. அதன் பின் அப்பகுதி மக்கள் யாருமே ஓட்டுப் போட போகவில்லை. இதைக் கவனித்த அப்பகுதி ஓட்டுக்கட்சிகள், அந்த மக்களிடம் கெஞ்ச ஆரம்பித்தனர். அங்குள்ள நமது ஆதரவாளர் ஒருவர் தான் மக்களை ஓட்டுப் போட தடுப்பதாக நினைத்து அவரிடம் சென்று, “நீங்க ஓட்டுப் போடச் சொல்லுங்க. நீங்க சொன்னாப் போடுவாங்க” என கெஞ்ச ஆரம்பித்தனர். உடனே அவர், “இது மக்களின் விருப்பம். இதில் நான் ஒன்றும் சொல்லக் கூடாது. மேலும், யாரையும் தூண்டவோ, நிர்ப்பந்திக்கவோ கூடாதுன்னு தேர்தல் துறையே சொல்லியிருக்கு. அதனால மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நிர்ப்பந்திப்பது தவறு.” என்று சொன்னவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் மக்களிடமே சென்று கெஞ்ச ஆரம்பித்தனர். மக்கள் வெயில் குறைந்தவுடன் வருவதாகவும், மதிய உணவை முடித்து வருவதாகவும் சொல்லி காலம் கடத்தினர்.
இப்படியெல்லாம் கெஞ்சினால் மக்கள் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்த தேர்தல் அதிகாரி, தனது தலைமை அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கவே சற்று நேரத்திற்கெல்லாம் சுமார் 50 துணை ராணுவப்படை வீரர்களை இறக்கியது தேர்தல் துறை. துப்பாக்கி முனையில் ஜனநாயகம் காக்கும் கேவலம் அரங்கேற ஆரம்பித்தது. இது வரை நாம் இந்த அரசியலமைப்பு, அதிகார அமைப்பு பற்றி மக்களிடம் சொன்ன விசயங்கள் தங்கள் கண் முன்னாலேயே நடப்பதைப் பார்க்க ஆரம்பித்தனர் மக்கள்.
இந்த அரசு மக்களுக்கு சேவை செய்வதற்கான கருவி அல்ல; அது மக்களை ஒடுக்கும் கருவி என்ற அரசியல் உண்மையை எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைத்ததற்கு ஒருவகையில் நாம் தேர்தல் துறைக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலளர் முன்னணி – புதுச்சேரி
ஜிண்டாலை முறியடிப்போம் – திருவண்ணாமலை மே நாள் முற்றுகை !
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு.

என்று இயற்கையின் மகத்துவத்தையும், நாட்டிற்கு உறுப்பாக மலையும், மழையும், ஆறுகளும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர். இந்த பூமி பந்து தோன்றிய காலத்தில் முதலாவதாக உருவெடுத்த, பழமையான நமது நாட்டின் கிழக்கு, மேற்குதொடர்ச்சி மலைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழித்து வாழ்ந்துள்ள காடுகள், உயிர்காக்கும் அற்புத மூலிகைகள், அளவிடற்கரிய கனிம வளங்களையும், இயற்கையோடு இணைந்து வாழும் பறவைகளையும், விலங்குகளையும், மலைகளையும் காத்துவரும் உழைக்கும் மக்களையும் தனது லாப வெறிக்காக பெயர்த்தெடுத்து வீசியெறிய புறப்பட்டுள்ளனர் பன்னாட்டு- உள்நாட்டு முதலாளிகள்.
இந்த மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையை பாக்சைட் கனிம வள கொள்ளைக்காகவும், ஜவ்வாது மலையை சந்தன கட்டை, செம்மரக்கட்டை கொள்ளைகளுக்காகவும் சூறையாடியதை போல தற்போது கவுத்தி வேடியப்பன் மலைகளை தகர்த்து, அதன் அடியில் புதைந்து கிடக்கும் 935 மில்லியன் டன் இரும்பு தாதுகளை கொள்ளையடிக்க வெறியுடன் கிளம்பியுள்ளது ஜின்டால் என்ற பன்னாட்டு நிறுவனம்.
அன்று ஈஸ்ட் இன்டியா! இன்று ஜின்டால்!
சுதந்திரம் வாங்கியதாக கூறப்பட்ட காலத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளின் கனிம வளங்களை சூறையாடிய முதலாளிகள் இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் ஒன்றுக்கொன்று தொடர்ச்சி இல்லாமல் மேற்கு வங்காளம் முதல் நீலகிரி வரை நீண்டு பரவியுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளில் கிடைக்கும் தரம் வாய்ந்த பாக்சைட், இரும்பு தாது, சுண்ணாம்பு கற்களை கொள்ளையடிக்க கிளம்பியுள்ளனர்.
2005-ம் ஆண்டு போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி, கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாட வந்த போது போர்க் குணத்துடன் ஒன்றுபட்டு தொடர்ந்து போராடி விரட்டியடித்தோம். ஆனால், அந்த கொலைகார ஜிண்டால் உச்சநீதிமன்றத்தின் ஆசியுடன் மீண்டும் நமது மண்ணிற்குள் நுழைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 680 மாவட்டங்களில் 238 -வது இடத்தில் கிடக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த திட்டத்தையும் போடாத மத்திய, மாநில அரசுகள் ஒரு முதலாளியின் லாப வேட்டைக்காக நமது மலைகளை தாரை வார்த்து கொடுத்துள்ளனர்.
நமது மாவட்டத்தை சுற்றிப் பாயும் செய்யாறும், துரிஞ்சலாறும் இப்போதே வறண்டு மணலாறாகத்தான் காட்சியளிக்கிறது. இந்த லட்சணத்தில் ஜிண்டாலின் இரும்புக் கொள்ளைக்காக 2 இலட்சம் மரங்களை வெட்டப் போகிறார்களாம். கம்பெனியை இயக்க அன்றாடம் தேவையான 560 கனமீட்டர் தண்ணீரை இயற்கை கொடையான சாத்தனூர் அணையிலிருந்தும், கவுத்தி-வேடியப்பன் மலைகள் தேக்கி வைத்திருக்கும் ஊற்று நீரிலிருந்தும் உறிஞ்சி கொள்ளப் போகிறார்களாம். கடினமான பாறை தன்மை கொண்ட மலைகளை 6,000 அடி துளை போட்டு தகர்க்க போகிறார்களாம். 600 லட்சம் டன் இரும்பை சூறையாடிவிட்டு மனித குலத்திற்கே கேடு விளைவிக்கும் 24 லட்சம் டன் கழிவுகளை மலைக்கு அடியிலேயே கொட்டப் போகிறார்களாம்.
இந்த பாதிப்புகளை மக்களின் மீது சுமத்தி வளர்ச்சித் திட்டம் என்ற போர்வையில் கொள்ளையிடுவதற்கு கவுத்தி-வேடியப்பன் மலைகளில் பரந்து கிடக்கும் 1,500 ஏக்கர் இரும்பு படுகையை கொண்ட நிலப்பரப்பை குறிவைத்துள்ளனர். தற்போதைக்கு 900 ஏக்கர், 20 ஏக்கர் என்று கூறிக் கொண்டாலும் மொத்தத்தையும் கொள்ளையிடுவதே கார்ப்பரேட் முதலாளிகளின் நோக்கம்.
ஜிண்டாலின் இரும்பு கொள்ளைக்காக கவுத்தி – வேடியப்பன் மலைகளை சுற்றி வாழும் 51 கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களையும், மலைக்காடுகளில் உள்ள 30 வகையான அரிய வகை மூலிகைகளையும் , பறவைகள் சரணாலயத்தையும், பலிகொடுத்து அவர்களின் சாம்பல் மேட்டிலிருந்து கிடைக்கும் இரும்பை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் போகிறார்கள். இந்த படுபாதக செயல்களின் மூலம் கிடைக்கும் இரும்பு நமக்கு ஒரு பைசாவிற்கு கூட பலனை தராது. ஆனால் ஏற்கனவே அலுமினிய உற்பத்தில் கொழித்து திரியும் ஜிண்டாலின் பாக்கெட்டிற்கு கோடிக்கணக்கான டாலர்களை கொட்டப் போகிறது.
களம்பூர் பொன்னி உள்ளிட்ட பெயர் பெற்ற ரக நெல்லையும், வட மாவட்டத்தில் நெற்களஞ்சியமாக திகழ்ந்து நெல் உற்பத்தி செய்து கொடுத்தும் மணிலா கரும்பையும், பலவகை நவதானிய பயிர்களையும் விளைவிப்பதற்கு, இடதுபுறமாக 35 கிமீ பாய்ந்து 41 ஏரிகளை நிரப்பி 24,000 ஏக்கர் பாசனத்தையும், வலதுபுறமாக 28.6 கி.மீட்டர் பாய்ந்து 49 ஏரிகளை நிரப்பி 21,000 ஏக்கர் பாசனத்தையும் கொடுத்து லட்சக் கணக்கான விவசாயிகளை வாழவைத்த சாத்தனூர் அணை வரண்டு பாலைவனமாக போகிறது. அதுமட்டுமின்றி கவுத்தி-வேடியப்பன் மலைகளில் உற்பத்தியாகும் துறிஞ்சலாறும், செய்யாறும் ஒழியப் போகிறது. அன்றாடம் நூற்றுக்கணக்கான டம்பர் லாரி மூலம் இரும்புத்தாதுக்களை கொண்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மலைகளை தகர்க்கும் வெடிகளால் ஏற்படும் அதிர்வுகள் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கும், நகர மக்களுக்கும் பாதிப்பு என்று நாசத்தை விளைவிக்க போகின்றனர். இந்த பாதிப்புகள் அனைத்தும் உழைக்கும் மக்களுக்குத்தான்.
இந்த பாதிப்புகளை எதிர்த்து கவுத்தி-வேடியப்பன் இரட்டை மலைகளை சுற்றியுள்ள 20 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் இதை உணர்ந்துள்ள மக்கள் நமது பிரச்சாரத்தை வரவேற்று வருகின்றனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு உணவு, தங்குமிடம் அனைத்தையும் தனது உறவினர்களுக்கு செய்து தருவதை போல செய்தனர்.
ஜிண்டாலின் கனிம வள கொள்ளையை தடுக்க தேர்தல் பாதை உதவாது. இந்த போலி ஜனநாயக தேர்தலை புறக்கணித்து புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரளும் படி பிரச்சாரம் நட்த்தினோம். அதன் தொடர்சியாக உண்மையான ஜனநாயகத்தை படைக்கவும், அதற்கு மாற்று அதிகாரம் கொண்ட அமைப்புகளை கட்டி எழுப்புவோம் என்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களைத் திரட்டி மே தினத்தை போராட்ட தினமாக்கியுள்ளோம்.
மே தினப் பேரணி, முற்றுகை
- உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம் !
- கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாட வரும் ஜிண்டாலை அடித்து விரட்டுவோம்!
பேரணி துவங்கும் இடம் : திருவள்ளுவர் சிலை
நேரம் : காலை 10 மணி, 01.05.2014
முற்றுகை : மாவட்ட வனத்துறை அலுவலகம், திருவண்ணாமலை
[பிரசுரத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
திருவண்ணாமலை-விழுப்புரம்-கடலூர் மாவட்டங்கள்






















