Monday, July 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 712

மாலேகான் குற்றப்பத்திரிகையில் இந்து பயங்கரவாதிகள் !

6

டந்த வாரம் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு பேர் மீதும் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மகாராஷ்ட்ரா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் இந்த நான்கு மதவெறியர்களின் குண்டு வைப்புச் சதிச்செயல்களும் அவர்களின் தொடர்புகளும் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் பிரக்யாசிங் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை.

மாலேகான் குண்டுவெடிப்பு இடம்.
மாலேகான் குண்டு வெடிப்புகள் 2006 : படா கப்ரிஸ்தான் மசூதிக்கு வெளியில்.

2006-ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை மதியம். மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் இஸ்லாமியர்கள் திரளாக வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் சரியாக தொழுகை முடிகின்ற நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது ஒரு குண்டு. சிதறித் தெரித்த சில்லுகளுடன் மேலே எழும்பிய புகைப்படலம் களைவதற்குள் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. அதை அடுத்து அருகில் இருந்த சந்தைப் பகுதியில் ஒரு குண்டு, என்று அடுத்தடுத்து தொடர்ச்சியாக நான்கு குண்டுகள் வெடித்துச் சிதறின. பிய்த்தெறியப்பட்ட சதைத் துணுக்குகளால் அந்த இடமே இரத்தகளரியானது. இந்த தாக்குதலில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.

இது மாலேகானில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல். இதற்கு அடுத்த பயங்கரவாத தாக்குதல் 2008 ஆம் ஆண்டின் ரம்ஜான் மாதத்தில் நடத்தப்பட்டது. டிபன் பாக்ஸ்களில் அடைக்கப்பட்ட வெடிகுண்டுகள் மாலேகானில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் வெள்ளிக்கிழமை தான், மதிய தொழுகை முடியும் நேரத்தில் தான் இந்த குண்டுகளும் வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் மொத்தம் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக கடமையில் இறங்கிய காவல்துறை இதற்கு முஸ்லீம் பயங்கரவாதிகள் தான் காரணம் என்று வெற்றிலையில் மை போட்டு பார்த்ததைப் போல அடித்துக் கூறியது. இவர்கள் தான் குண்டு வைத்தனர் இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட சிமி அமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி ஒன்பது அப்பாவி முஸ்லீம்களை கைது செய்து சிறையில் தள்ளினர். ஆனால் அவர்கள் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் 2012 இல் விடுவிக்கப்பட்டனர். அதாவது, தவறே செய்யாமல் பயங்கரவாதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள்
பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள்.

இந்தியாவின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் உடனே இந்து பொதுப்புத்தியில் தாடி, குல்லா வைத்த முஸ்லீம் முகங்கள் தான் தோன்றும். அந்த அளவுக்கு இசுலாமியர்களைப் பற்றிய இந்து பெரும்பாண்மையின் கண்ணோட்டம் ஆர்.எஸ்.எஸ் காவிக் கண்ணோட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த கண்ணோட்டத்தை வடிவமைப்பதிலும், இஸ்லாமியர்களைப் பற்றிய பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் ஜனநாயகத் தூண்கள் என்று தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்ளும் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. குண்டு வெடிப்புகள் நடக்கும் போதெல்லாம் அநீதியான முறையிலும் ஒருதலை பட்சமாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான பொதுக்கருத்தையும் வெறுப்பையும் அதிகரிக்கும் கருத்துக் கருவிகளாகவே இந்த ஜனநாயகத் தூண்கள் செயல்படுகின்றன.

பயம், பீதி, பதட்டம் என்று உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க இத்தகைய தருணங்களில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தம் பங்கிற்கு தமது சொந்த கற்பனைகளையும், பொய்களையும் எவ்வித தயக்கமும் இன்றி வாசகர்களிடம் அள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளுக்கு போட்டியாக முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்குகின்றன. வெளியில் ஜனநாயக வேடமும் மூளைக்குள் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் புத்தியையும் வைத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை தீவிரவாதம், பயங்கரவாதம் என்று ஊளையிடும் இந்த அகிம்சாவாதிகள் எல்லாம் இந்து தீவிரவாதிகள், இந்து பயங்கரவாதிகளின் குண்டுவைப்புகளை பற்றி வாய் திறப்பதே இல்லை.

மாலேகான் தாக்குதலுக்கு முன்பும் இதே பாணியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2003-ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், பார்பானி நகரில் உள்ள ரஹ்மத் நகர் மகமதியா மசூதியில் ஒரு தாக்குதலும், 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், புர்ணா நகரின் சித்தார்த் நகரில் உள்ள மிராஜ் உல் உலூரம் மதறாசா மற்றும் மசூதியிலும் இதே போன்ற வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் ஜால்னா நகரில் உள்ள காதிரியா மசூதியிலும் குண்டுகள் வெடித்தன. 2006-ம் ஆண்டு ஐதராபாத் மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளும் இதே பாணியில் வெள்ளிக்கிழமை, மதிய நேரங்களில் தான் நடத்தப்பட்டன.

அசிமானந்தா சொருகிய ஆப்பு

ஆனால், அடுத்த குண்டு மசூதியில் வெடிக்கவில்லை. ஒரு வீட்டிற்குள் வெடித்தது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்ட்ரா மாநிலம் தரோடாவைச் சேர்ந்த ராஜ்கோண்ட்வர் என்பவரது வீட்டிற்குள் இருந்து வெடித்துச் சிதறியது. பயங்கரவாத தாக்குதல்களுக்காக தயாரித்துக் கொண்டிருந்த போதே அந்த குண்டுகள் வெடித்துச் சிதறிவிட்டன. இந்த வெடி விபத்தில் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த இருவர் அதே இடத்தில் இறந்தனர், ஐந்து பேர் படுகாயத்துடன் கைது செய்யப்பட்டனர். இந்த குண்டுகள் ஒளரங்காபாத் மசூதியை தாக்குவதற்காக தயாரிக்கப்பட்டவை என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. அப்போது தான் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வைப்பு சதி வேலைகள் ஓரளவுக்கு வெளியே தெரிந்தன. இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம் தேசபக்த ஒப்பாரியும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி விதம்விதமான திரைக்கதைகளையும் எழுதுகின்ற பத்திரிகைகள் எல்லாம் அப்போது கேடுகெட்ட முறையில் உண்மைகளை மூடி மறைக்கவே முயற்சித்தன.

அதன் பிறகு குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். மாலேகானில் நடத்தப்பட்ட இரண்டாவது குண்டு வெடிப்பு தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் பெண் சாமியார் பிரக்யா சிங்கும், இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் மேஜர் ஜெனரல் தகுதியில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்கள் தான் இந்து பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு பயிற்சியளித்துள்ளனர். இவர்களைத் தவிர மற்றொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் கைது செய்யப்பட்டார். அவர் லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு குண்டு வைப்புகளுக்கு இந்திய இராணுவத்திலிருந்து வெடி மருந்துகளை கொண்டுவந்து கொடுத்த தேசபக்தர் இவர் தான். இந்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவைப்புகளில் எல்லாம் இவனுடைய பங்கு மிகவும் முக்கியமானது.

பிரக்யா உள்ளிட்டோரின் கைதைத் தொடர்ந்து அதே ஆண்டில் உ.பி மாநிலம் கான்பூரில் வைத்து தயானந்த் பாண்டே என்கிற சாமியார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் 2010-ம் ஆண்டு அசிமானந்தா என்கிற ஆர்.எஸ்.எஸ் சின் முழு நேர ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது தான் இந்த வழக்கில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இவர் தான் குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகளைப் பற்றிய பல உண்மைகளை முதன்முதலில் வாக்குமூலமாக அளித்தவர். அவருடைய வாக்குமூலத்தில் தனக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் மக்கா மஸ்ஜித் குண்டு வைப்பில் மட்டுமல்ல, 2006 இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்பு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். அசிமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ்க்கு சொருகப்பட்ட கூர்மையான ஆப்பாக அமைந்தது.

வாயை திறப்பதற்குள் மூச்சை நிறுத்திய ஆர்.எஸ்.எஸ்

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு

இந்துமதவெறிக் கும்பல் மசூதிகளை அடுத்து இரயில்களுக்கும் குண்டு வைக்கத் திட்டமிட்டது. அந்த திட்டத்தின் முதல் முயற்சியாக, 2007 ஆம் ஆண்டு டெல்லிக்கும் லாகூருக்கும் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவன் சுனில் ஜோஷி என்கிற ஆர்.எஸ்.எஸ்சின் முழுநேர ஊழியன். மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா உள்ளிட்ட அனைத்து குண்டுவெடிப்புகளிலும் மிகப்பெரியதொரு வலைப்பின்னல் செயல்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல்கள் அனைத்திலும் பிரக்யாசிங், ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், அசிமானந்தா, சுனில் ஜோஷி போன்ற கீழ்மட்ட தலைகளில் இருந்து பல உயர்மட்ட தலைகள் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதை சுனில் ஜோஷியின் கொலை அம்பலப்படுத்தியது.

குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்துமதவெறியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதாலும், ஏற்கெனவே கைதானவர்கள் பல உண்மைகளை கக்கிக்கொண்டிருந்ததாலும், சம்ஜவ்தா குண்டு வெடிப்பில் முக்கிய மூளையாக செயல்பட்ட சுனில் ஜோஷி கைது செய்யப்பட்டால் அவனும் வாக்குமூலத்தில் பல உண்மைகளை கக்கக்கூடும் என்கிற அபாயம் இருந்தது. அவனுக்கு இந்த சதிச் செயலின் மொத்த வலைப்பின்னலும் தெரிந்திருந்தது, யார், யார் பெரிய தலைகள், அவர்களின் பங்கு என்ன என்பது பற்றி எல்லாம் அவனுக்குத் தெரியும். எனவே அவன் கைதானால் பல முக்கிய தலைகளே உருளும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் இந்து பயங்கரவாதிகளே சுனில் ஜோஷியை 2007-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் தேவாசில் வைத்து போட்டுத் தள்ளிவிட்டனர். அசிமானந்தா இதையும் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் சுனில் ஜோஷியை கொன்றது பிரக்யாசிங் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தான் என்கிற உண்மையும் தெரியவந்தது. இந்த கொலைக்காகவும் பிரக்யா சிங் மீது ஒரு வழக்கு போடப்பட்டது.

நீதிமன்றத்தின் காவிப்பாசம்

பிரக்யா தாக்கூர்
போலீஸ் காவலில் பிரக்யா தாக்கூர்

குண்டுவெடிப்பு வழக்குகளில் இந்துத்துவ பயங்கரவாதிகள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். இரண்டாவதாக நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பங்காற்றிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முத்தலிக் என்பவன் 2011 ஆம் ஆண்டில் இறுதியாக கைது செய்யப்பட்டான். இவனையும் சேர்த்து இதுவரை பனிரெண்டு இந்துத்துவ பயங்கரவாதிகள் பல்வேறு குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே என்கிற இரண்டு பேர் இதுவரை பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இவர்களின் வனவாச வாழ்வு முடிந்து வெளியே வருவதோடு அடுத்த முறை பிரதமர் வேட்பாளர்களாகவும் கூட நிறுத்தப்படலாம். சும்மாவா, தியாகம் அல்லவா செய்திருக்கிறார்கள்.

மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பிரக்யாசிங் உள்ளிட்ட பதினோரு பேர் மீதும் ”மகாராஷ்ட்ரா திட்டமிட்ட குற்றத்தடுப்புச் சட்டத்தின்” கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டம் ஒரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாகும். இது கடுமையான சட்டப் பிரிவுகளை கொண்டது. இந்த குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை நாசிக் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்பாவி இஸ்லாமியர்களை பிடித்து ஆண்டுக்கணக்கில் உள்ளே தள்ளுவதில் மகிழ்ச்சி கொள்ளும் நீதி மன்றம், பிரக்யா சிங் உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகளை இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தது தவறு என்று கூறியதோடு அதை ரத்து செய்து, சாதாரண கோர்ட்டில் நடக்கும் சாதாரண வழக்கைப் போல இந்த வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை (அயோக்கியத்தனத்தை) கேட்டதும் பிரக்யாசிங்கின் தந்தைக்கு தலைகால் புரியவில்லை, தனது குடும்பத்தோடு நண்பர்கள் உறவினர்களுக்கு எல்லாம் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.

வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு குழுவிடம் மாற்றம்

இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்புப் படை விசாரித்து வந்தது. அது தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமியும், வேறு சில இஸ்லாமிய அமைப்புகளும் தான் இந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று கூறி ஒன்பது அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து உள்ளே தள்ளியதோடு வழக்கையும் அத்துடன் ஊத்தி மூடப்பார்த்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு இந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய அனைத்துக் குண்டுவெடிப்பு வழக்குகளையும் தீவிரவாத தடுப்புப் படையிடமிருந்து தேசிய புலனாய்வு குழுவிடம் 2011-ம் ஆண்டு ஒப்படைத்தது.

ராஜேஷ் தவாடே, குல்கர்னி
குண்டு வைப்பில் ஈடுபட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த ராஜேஷ் தவாடேயும் குல்கர்னியும்.

தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கிய பிறகு தான் ஓரளவுக்காவது உண்மைகள் வெளிவரத் துவங்கின. எனினும் வலதுசாரி கண்ணோட்டமுள்ள இந்திய ஊடகங்கள் முடிந்த அளவுக்கு தமக்கு விருப்பமற்ற இந்த உண்மைகளை மூடி மறைக்கவே பார்த்தன. மாலேகான் குண்டு வெடிப்புக்கு இந்து அமைப்புகள் தான் காரணம் என்பதை தேசிய புலனாய்வுக் குழு ஆதாரங்கள், சாட்சிகளுடன் தனது அதிகாரபூர்வமான முதல் அறிவிப்பை 28.12.2012 அன்று வெளியிட்டது. அதன் பிறகு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டிருந்த இந்து தீவிரவாதிகள் மீதான பிடி இறுக்கமடைந்தது.

இந்நிலையில் இம்மாதம் 23-ம் தேதி இவ்வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மாலேகான் குண்டுவைப்பில் லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பை தெளிவுபடுத்தும் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அமித் சவுகான் ஆகியோருக்கு எதிரான விசாரணை நடந்துவருவதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்ஜி மற்றும் டாங்கேயின் தலைக்கு ரூ.10 லட்சம்மும், அமித் சவுகானின் தலைக்கு ஐந்து லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் முக்கிய குற்றவாளிகளான புரோஹித், அசிமானந்தா, ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் பெயர்கள் இக்குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. ஒரு வேளை இவர்களை தப்பிக்க வைப்பதற்குத்தான் இந்தக் குற்றப்பத்திரிகையா என்றும் தெரியவில்லை. இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, துணை குற்றப்பத்திரிகை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நீதி நீதி மன்றத்தில் கிடைக்குமா ?

நாளையே மோடி ஆதரவாளர்களின் விருப்பப்படி பாசிச மோடி பிரதமரானால், இந்த குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பயங்கரவாதிகளும் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எந்த குற்றமும் செய்யாத அப்சல் குரு போன்ற அப்பாவிகளின் உயிரை குடித்து தனது வெறியை தீர்த்துக்கொண்ட பாசிச நீதிமன்றங்கள் செயல்படும் இந்தியாவில் இந்துமதவெறியர்களுக்கு எதிராக வழக்கும் விசாரணையும் நடப்பதே பெரிய விஷயம் தான். அந்த வகையில் தேசிய புலனாய்வுக் குழு இந்துவெறியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே நேரத்தில் விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டாலும், குற்றப்பத்திரிகை குற்றவாளிகளை சரியாக அடையாளம் காட்டினாலும் இந்திய நீதிமன்றங்கள் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீதியை வழங்கிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. நீதிமன்றங்களை மட்டுமே நம்பி இராமல் அதற்கு வெளியில் கட்டியமைக்கப்படும் மக்கள் போராட்டங்களால் தான் இந்த பயங்கரவாதிகளை தண்டிக்க முடியும்.

– வையவன்

புதிய ஜனநாயகம் – ஜூன் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

2

புதிய ஜனநாயகம் - ஜூன் 2013
புதிய ஜனநாயகம் ஜூன் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு !
போஸ்கோ நிறுவனத்துக்காக சட்டவிரோத நில அபகரிப்பையும் போராடும் மக்கள்மீது போலீசு தாக்குதலையும் ஒடிசா அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

2. அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் :
தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதலை முறியடிப்போம் !

3. அரசு பயங்கரவாதத்துக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி !
சத்தீஸ்கரில் கார்ப்பரேட் கொள்ளையும் அரசு பயங்கரவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக இத்தகைய சிவப்புப் பயங்கரவாதம் மேலும் மூர்க்கமாகத் தொடரவே செய்யும்.

4. பா.ம.க.வின் சாதிவெறி: இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம்
பா.ம.க. ரவுடிகள் நடத்திய வன்முறை, அச்சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்படோருக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிரானது எனக் காட்டி விட்டது.

5. மின்சாரம் தனியார்மயமானதே மின்கட்டண உயர்வுக்கான காரணம்
மின்கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தனியார்மயத்துக்கு எதிரான பிரச்சாரமாக மாறியது.

6. இந்திய-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி!
ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்காக நாட்டை மேலும் அடிமையாக்கும் சதியை மூர்க்கமாகவும் இரகசியமாகவும் செய்து வருகிறது ஆளும் கும்பல்.

8. அனைவருக்கும் கல்வி மாநாடு : அரசுப் பள்ளிகளின் அழிவைத் தடுக்கும் போராட்டம் !

8. அஸ்கர் அலி எஞ்சினியர்: இந்து, முஸ்லிம் மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர்!

9. எதிர்கொள்வோம் !
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.

10. பிரதமர் பதவிக்கு மோடி : அருகதை என்ன ?
கிரிமினல்கள் தேர்தலில் நிற்பதைத் தடை செய்ய வேண்டுமெனக் கோரப்படும் நிலையில், காவிக்கிரிமினல் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கான தகுதி வாய்ந்த நபராக முன்னிறுத்தப்படுவது அவமானகரமானது.

11. வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !
ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமல்ல, அவர்களின் உயிரும் ஏகாதிபத்தியங்களுக்கு மலிவானதாகிவிட்டது.

12. மணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு
மணிப்பூரை ஆக்கிரமித்திருக்கிறது இந்திய இராணுவம். அங்கே கடந்த ஐந்தாண்டுகளில் 1,500 பேர் இந்திய இராணுவத்தால் போலி மோதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

13. உச்ச நீதிமன்றத்தின் சந்தர்ப்பவாதம் !
பொதுச் சொத்துக்களைத் தரகு முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதில் நடக்கும் ஊழல்கள் குறித்துத் தீர்ப்பு அளிப்பதில் உச்ச நீதிமன்றம் இரட்டைவேடம் போடுகிறது.

14. சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா.
காலாவதியான அணு உலைகளைத் தலையில் கட்டுவதைப் போலவே, சூரிய மின்சக்தியிலும் பின்தங்கிய தொழில்நுட்பத்தை நம் மீது திணிக்கிறது அமெரிக்கா.

15. கொலைகாரர்களால் ஆளப்படும் நாடு!
சீக்கியப் படுகொலையை நடத்திய குற்றவாளிகள் போலீசு, சி.பி.ஐ., நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளாலும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

16. நெற்களஞ்சியத்தைக் கவ்வ வரும் பேரபாயம்! பேரழிவு !!

புதிய ஜனநாயகம் ஜூன் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதுச்சேரி ஊழல் அதிகாரிகளை தண்டித்த தொழிலாளர்கள் !

0

தொழிலாளர்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படும் தொழிற்சாலை ஆய்வாளர்களை அடையாளம் காண்போம்!

இந்தியாவில் தொழிலாளர் நலனுக்காக என்று கூறிக்கொண்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதற்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது தொழிலாளர் நலத் துறை. இதில் புதுச்சேரியும் விதிவிலக்கு அல்ல என்பதினை நிரூபித்துள்ளது புதுச்சேரி தொழிலாளர் துறை. இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்சாலை ஆய்வாளர்களோ, தாங்கள் முதலாளிகளின் எடுபிடிகள் தான் என்பதினை நிருபித்து வருகின்றனர். சுமார் 14 வருடங்களாக தொழிற்சாலை ஆய்வாளராக செயல்பட்டு வரும் தாண்டவமூர்த்தியும் அவரது கூட்டாளியான துணை தொழிற்சாலை ஆய்வாளர் முரளியும் முதலாளிகளின் எச்சில் காசிற்காக தொழிலாளர் வாழ்க்கையில் “தாண்டவம்” ஆடிவருகின்றனர்.

புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் வேப்லர்ஸ் என்கின்ற மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக திருமதி லட்சுமி என்கின்ற தொழிலாளி 4 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். 4 வருடங்களாக இவரது உழைப்பினை சுரண்டிய முதலாளி தொழிலாளரது அடிப்படை உரிமைகளான ESIC, PF கூட பிடித்தம் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி பணி நிரந்தரமும் செய்யாமல் ஏமாற்றி வந்தார். இந்நிலையில் மார்ச் மாதம் 22-ஆம் தேதி பணி செய்து கொண்டிருக்கும் போது அவரது சேலை இயந்திரத்தில் மாட்டி தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது கால் எலும்பும் தாடை எலும்பும் முறிந்து மயக்கமானார். அவரை தூக்கிச் சென்று புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, ரோட்டில் அடிபட்டு கிடந்ததாகவும், மனிதாபிமானத்தோடு மருத்துவமனையில் சேர்த்து விட வந்ததாகவும், அவர் யார் என்றே தெரியாது எனவும், மருத்துவமனையில் பதிவு செய்துவிட்டு சென்றுவிட்டது நிர்வாகம்.

மறுநாள் கண்விழித்த பிறகே அவருக்கு முதலாளியின் திருட்டுத்தனம் புரிந்தது. அதன்பிறகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை நாடினார். புஜதொமு இதனை தொழிலாளர் துறையில் முறையிட்டதின் அடிப்படையில், தொழிற்சாலையை ஆய்வு செய்த தொழிற்சாலை ஆய்வாளரான முரளி திருமதி லட்சுமி தொழிற்சாலையில் பணி புரியவே இல்லை என்று பொய்யான அறிக்கை அளித்தார். இவரது அறிக்கை பொய் என்பதால், ஆய்வாளரை நேரில் சென்று பார்த்து திருமதி லட்சுமி பணி புரிந்தது உண்மை என்றும், அவர் எழுந்து நடக்கவே இரண்டு ஆண்டு ஆகும் என்பதால் அதுவரை சம்பளம் தர வேண்டும் என கோரியபோது முதலாளியை விட அதிகமாக கோபப்பட்டு இது ESI அலுவலகத்தில் பேச வேண்டிய விஷயம் என்றும், அவர் பணி புரியவே இல்லை என்றும் கூறி பாதிக்கப்பட்ட நபரின் பிரதிநிதியை கேவலமாக பேசி அனுப்பியுள்ளார் முதலாளிகளின் ஏவல் நாயான தொழிற்சாலை ஆய்வாளர் முரளி.

ESIC-யில் பதிவே செய்யாத போது ESIC-யில் பேச வேண்டுமென கூறுவது ஏமாற்றுவேலை என்பதால் புஜதொமு சார்பாக பல கட்ட போராட்டம் செய்யப்பட்டதின் அடிப்படையில் தொழிலாளர் ஆணையரால் தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு திருமதி லட்சுமி பணி புரிந்தது உண்மை என்பதையும், பணியில் இருக்கும் பொழுதுதான் அடிபட்டது என்கின்ற உண்மையும் வெளிக்கொணரப்பட்டது. அதுமட்டுமின்றி 4 வருடமாக வழங்கப்படாத உரிமையான ESIC, PF-னை நிர்வாகம் ஒட்டுமொத்தமாக கட்டியது மட்டுமின்றி குணமாகி வரும் வரை மாதா மாதம் சம்பளம் தருவதாகவும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

இரண்டாவதாக, புதுச்சேரி வட மங்கலத்தில் இயங்கி வரும் HUL தொழிற்சாலையில் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது பேச்சுவார்த்தை முறிவு ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நிர்வாகம் ஒரு தொகையினை அறிவித்து, அதனை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டியது. ஏற்க மறுத்த தொழிலாளிகளை கைகூலிகளை ஏவி விட்டு அடித்தது. இதில் முக்கியமாக மாயகிருஷ்ணன் என்கின்ற தொழிலாளியின் கழுத்தை நான்கு கைகூலிகளை கொண்டு நெரித்தனர். அவரது கழுத்தினை நெரிக்கும் பொழுது மேற்பார்வையாளர்கள் 5 பேர் சுற்றி நின்று கை தட்டி அடிப்பவர்களை ஊக்குவித்தனர். அடிப்பட்ட தொழிலாளி இரத்த வாந்தி எடுத்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறையிலும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையோ விசாரித்து, அடித்தவர்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் கட்ட பஞ்சாயத்து செய்து அடித்தது தவறு என்று மட்டுமே எழுதி வாங்கினார்கள். ஆனால் தொழிற்சாலை ஆய்வாளர் தாண்டவமூர்த்தியோ அதற்கும் ஒருபடி மேலே போய் ஆய்வு என்ற பெயரில் நேராக மேலாளர் அறைக்கு மட்டும் சென்று பார்த்துவிட்டு தொழிலாளர்களை மிரட்டுகின்ற மற்றும் அடிக்கின்ற சம்பவம் நடக்கவே இல்லை என்றும் தொழிற்சாலை சுமுகமாக ஓடுகிறது என்றும் அறிக்கை அளித்தார்.

தொழிற்சாலை ஆய்வாளர் தொழிற்சாலையை ஆய்வே செய்யவில்லை என்றும், மேலாளர் அறைக்கு மட்டும் சென்று வந்துவிட்டார். எனவே மறு ஆய்வு செய்யவேண்டுமென கடிதம் தரப்பட்டு மறு ஆய்வு தொழிலாளர் துணை ஆணையர் தலைமையில் நடந்தது. அப்போது நடந்த ஆய்வின் போது நிர்வாகம் கைக்கூலிகளை ஏவி தொழிலாளர்களை அடித்தது உண்மை என நிரூபிக்கப்பட்டது. நிர்வாகத்தின் மீது நடவடிக்கையாக தொழிலாளர் துறை சார்பாக ”காரணம் கோரும் அறிவிப்பு” (Show Cause) அளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, புதுவை தவளகுப்பத்தில் இயங்கிவரும் தேஜாஸ் நெட்வொர்க் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். வழக்கு புதுவை நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நிர்வாகம், பணி நிரந்தரம் கேட்ட தொழிலாளிகளை தொழிற்சாலை உள்ளே விடாமல் பணி மறுப்பு செய்து விட்டு இயந்திரங்களையும், மூலப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு பெங்களுர் செல்ல முற்பட்டது. இதனை தொழிலாளர் துறையில் முறையிட்ட போது தொழிற்சாலை ஆய்வாளர் தாண்டவமூர்த்தி தொழிற்சாலையை ஆய்வு செய்து விட்டு நிர்வாகம் எந்தப் பொருளையும் எடுத்து செல்லவில்லை என்றும், யாரையும் பணி மறுப்பு செய்யவில்லை என்றும் பித்தலாட்ட அறிக்கை அளித்தார். பணி மறுப்பு செய்யப்பட்டதினை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் (ரிட்மனு) வழக்கு தொடரப்பட்டு தொழிலாளருக்கு பணி வழங்க வேண்டுமென்று உயர்நீதி மன்றம் உத்தரவிடப்பட்ட நிலையிலும், உற்பத்தி மூலப்பொருட்களையும், இயந்திரங்களையும் எடுத்து செல்லும் போது காவல்துறைக்கும், தொழிலாளர்களுக்கும் தள்ளு முல்லு ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் உள்ள நிலையிலும், தொழிற்சாலை ஆய்வாளர் தாண்டவ மூர்த்தி அப்படியோர் சம்பவமே நடைபெறவில்லை என பொய்யான அறிக்கை அளித்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கு துரோகம் செய்கின்ற வகையில் செயல்படும் தொழிற்சாலை ஆய்வாளர்களான தாண்டவமூர்த்தி, முரளி இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யவேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து 23.05.2013 அன்று தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தினை புஜதொமு தலைமையில் முற்றுகையிடுவதென தீர்மானிக்கப்பட்டு 200 சுவரொட்டிககள் அச்சிடப்பட்டு பரவலாக பிரச்சாரம் செய்து அன்று மாலை 3.00 மணியளவில் முற்றுகையிடப்பட்டது.

முற்றுகையின் போது பெரும்பாலான தோழர்கள் சிவப்பு சட்டை, கொடியுடன் முழக்கமிட்டுக்கொண்டே தொழிலாளர் துறை அலுவலக கண்ணாடி கதவினை தள்ளிக்கொண்டு இரண்டாவது மாடியில் உள்ள தொழிற்சாலை ஆய்வாளர் அறையினை முற்றுகையிட்டனர். தொழிலாளர்கள் வருவதினை தெரிந்துகொண்ட தாண்டவமூர்த்தி – முரளி இருவரும் கழிவறையில் போய் ஒளிந்து கொண்டு கதவினை மூடிக்கொண்டனர். அந்த அலுவலகம் மூன்று மாடி கட்டிடம் என்பதால் முழக்கத்தினை கேட்டு அனைத்து அலுவலக ஊழியர்களும் முற்றுகையிட்ட இடத்திற்கு வந்து விட்டனர். வந்தவர்களில் சிலர் அமைப்பு பெயரை பார்த்துவிட்டு ”இவர்களா? இவர்கள் மிகவும் நேர்மையானவர்கள், எந்த பிரச்சனையாக இருந்தாலும் உறுதியாக நின்று போராடுபவர்கள். சுமார் 20 கம்பணி தொழிலாளர்களாவது இருப்பார்கள் என்றும், இதுவரை இவர்கள் வெளியே வாசலில் இருந்துதான் போராட்டம் செய்வார்கள், இப்போது உள்ளேயே வந்து போராட்டம் நடத்துகிறார்கள், நாளைக்கு நாம் ஏதாவது தவறு செய்தால் நமக்கும் இதுதான் நிலைமைதான், பார்த்துக் கொள்ளுங்கள்” என்றும் பேசிக்கொண்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்த அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் யாரும் இந்த இருவருக்கு உதவியாக வரவில்லை. அலுவலகத்தினை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள் இவனுகளுக்கு இதுதான் சரியான பாடம் என கூறினார்கள்.

தோழர்கள் தொடர்சியாக முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் தொழிலாளர் துணை ஆணையர் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி 5 பேர் தொழிலாளர் ஆணையரை சந்தித்து பேசுமாறு கூறினார்கள். அதன்படி மாநிலத்தலைவர், அலுவலக செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் என நான்கு பேர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் போது தொழிலாளர் ஆணையர் தாண்டவமூர்த்தி – முரளி மீது நீங்கள் மூன்று பிரச்சனையில் மட்டுமே புகார் அளித்துள்ளீர்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்று தவறு செய்து வருகின்றனர் என்று தனக்கு புகார் வந்துள்ளதாகவும், அதற்குள் நீங்கள் முற்றுகையிட்டுவிட்டீர்கள் என்றும், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். காவல்துறை துணை ஆய்வாளரோ ஆணையர் கூறியதினை கேட்டுவிட்டு இப்படிப்பட்ட கேவலமானவர்களை முற்றுகையிட்டது தவறு இல்லை. எனவே இது தொடர்பாக உங்கள் மீது வழக்கு போடப் போவதில்லை, கைதும் செய்யப் போவதில்லை என்றும் ஒவ்வொரு அலுவலகத்திலும் இதுபோன்ற திருடர்கள் இருந்துவிடுகிறார்கள் என கூறிவிட்டு சென்றார். தொழிலாளர் ஆணையர் அளித்த உறுதியின் அடிப்படையில் தோழர்கள் கலைந்து சென்றனர்.

மறுநாள் தொழிற்சாலை ஆய்வாளர் தாண்டவ மூர்த்தியின் மகன் நமது தோழர் ஒருவரை தொடர்புகொண்டு எனது அப்பாவிற்கு 36 வருட சர்விஸ் இதனை ஒரு நிமிடத்தில் அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என கூறினார். உடனே தோழர் தொழிலாளர் வயிற்றில் அடித்து பொய்யான அறிக்கை கொடுத்தது சரியா? என கேட்டபோது இதற்கு பதில் அளிக்காமல் உங்களால் முடிந்ததை நீங்கள் செய்துவிட்டீர்கள் என்னால் முடிந்ததினை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறி சென்றுவிட்டார்.

இந்த முற்றுகையின் மூலம் தொழிலாளர் நலத்துறையில் உள்ளவர்களுக்கு தவறு செய்தால் முற்றுகையிடப்பட்டு அசிங்கப்படுத்தப்படுவோம் என்ற பயம் உருவாகியுள்ளது.


[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

பிரா, ஜட்டி பொம்மைகளுக்கு இந்து ஞான மரபில் இடமில்லை !

25

1000 ஆண்டுகளாக சுல்தான்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என்று அன்னியர்கள் ஆட்சியில் பாழ்பட்டு, சீர் கெட்டு, தன் பாரம்பரிய பெருமையை எல்லாம் இழந்து நிற்கும் பாரத தேசத்தின் பொற்காலத்தை மீட்டுத் தர அவதாரம் எடுத்திருக்கும் கட்சி பாரதீய ஜனதா கட்சி. தொலைக்காட்சி விவாதங்களில் மல்லுக் கட்டுவதிலும் சரி, அமெரிக்காவில் பிறந்த குழம்பி நிற்கும் தேசிகளை (American Born Confused Desi) பேஸ்புக்கில் குழு அமைத்து கொக்கி போட்டு பிடிப்பதிலும் சரி, வாஜ்பாயி தலைமையில் ஆட்சி புரிந்ததிலும் சரி, இப்போது குஜராத்திலும், சத்தீஸ்கரிலும், கொஞ்ச காலம் முன் வரை கர்நாடகாவிலும் செய்யும் ஆட்சிகளிலும் சரி அந்த பொற்கால மீட்சி போராட்டத்திலிருந்து அவர்கள் கண்களை எடுப்பதே இல்லை.

கவனத்தை ஒரு முகமாக குவித்து புறாவின் கழுத்தை மட்டும் பார்த்து இலக்கை வீழ்த்திய அர்ச்சுனன் போல சங்க, பரிவார வானரங்களின் பேச்சு, மூச்சு, உயிர் வாழ்வு அனைத்துமே பாரதத்தை ஒரு அபவுட் டர்ன் அடிக்க வைத்து அந்த பொற்காலத்துக்கு திரும்ப அழைத்துச் செல்வதை நோக்கிதான் இருக்கிறது.

1990-களில் சிவசேனாவின் முக்கிய தலைவர்களின் ஒருவரான பிரமோத் நவால்கர் மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் காதலர்கள் நெருக்கமாக இருப்பதை எதிர்த்து இயக்கம் நடத்தி இந்து மரபை நிலை நாட்டியதும், இன்றைக்கும் மும்பை கடற்கரைகளில் போலீஸ் காதலர்களை கண் கொத்தி பாம்பாக கண்காணிப்பதும், 2005-ம் ஆண்டு சிவசேனாவின் அமைச்சர் ஆர் ஆர் பட்டீல் மும்பையில் செயல்படும் இரவு விடுதிகளை தடை செய்ததும் இந்த யுகாந்திர தரும யுத்தத்தின் பகுதிகள்தான்.

துணிக்கடை பொம்மைஅப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த ஒரு இந்துத்துவர்தான் மும்பை மாநகராட்சியில் இப்போது வார்டு உறுப்பினராக இருக்கும் திருமதி தவாடே. இந்தியா என்று மிலேச்சர்களால் பெயர் சூட்டப்பட்ட இந்த நாட்டில் பாரத நாரிகள் துன்புறுத்தப்படுவதைக் குறித்து பல நாட்கள் கடுமையாக சிந்தித்தார். பாரதத்தில் நடந்திராத பெண்கள் மீதான வன்முறைகள் இந்தியாவில் நடப்பது ஏன் என்று விளங்காமல் இன்னும் கடுமையாக தியானம் செய்து யோசித்தார். ஒரு நாள் அவருக்குள் இந்து ஞானமரபின் உள்ளொளி வழி காட்டியது.

மும்பையில் பெண்களுக்கான உள்ளாடைகளை விற்கும் கடைகளுக்கு வெளியே விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் ஆளுயர பிளாஸ்டிக் பெண் பொம்மைகள்தான் பிரச்சனைக்கு காரணம் என்பதை உணர்ந்தார். பெண்களின் உள்ளாடைகளை அணிவித்து நிறுத்தப்பட்டிருக்கும் அந்த பொம்மைகள் பெண்களை சங்கடப்படுத்துகின்றன. ஆண்களிடத்தில் காம, வக்கிர உணர்வுகளை தூண்டுகின்றன என்பதை கண்டு பிடித்தார்.

கூடவே, பொற்கால பாரதத்தில் இத்தகைய பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும், இந்த கிறித்தவ ஐரோப்பாதான் இத்தகைய இழிவுகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்திருக்கின்றது என்பதையும் புரிந்து கொண்டார். இந்த பொம்மைகளுக்கு தினமும் உடை மாற்றும் ஆண் ஊழியர்களின் மனதில் காம, குரோத எண்ணங்கள் புகுந்து கொள்கின்றன என்பதையும் தனது உள்ளுணர்வால் தெரிந்து கொண்டார்.

ஒவ்வொரு முறையும் அவரது தொகுதியில் உள்ள நடுத்தர வர்க்க குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த கடைகளை கடந்து செல்லும் போது, இந்த பொம்மைகளை பார்க்கும் போது அவர் கடும் அதிர்ச்சியடைகிறார். பாரத நாரிகளின் நலனுக்காக, பாரத பண்பாட்டின் மீட்சிக்காக இந்த பொம்மைகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

யாரிடம் அந்த கோரிக்கையை வைக்கிறார்? மாநகராட்சியின் தலைவர் சுனில் பிரபுவிடம். அவர் இன்னொரு இந்துத்துவர். பாரதீய ஜனதா இந்துத்துவத்தை விட தீவிரமான, மராத்தி பெருமை கலந்து செய்யப்பட்ட சிவசேனா கட்சியின் இந்துத்துவர். மராத்தி மனுஷ்களின் மனதில் நஞ்சை ஊட்டும் இந்த பொம்மைகளை ஒழித்துக் கட்ட வேண்டியதில் அடங்கியிருக்கும் உள்ளொளியை அவரும் பெற்று விட்டார். அந்தத் தீர்மானத்தை உடனடியாக மாநகராட்சியின் 227 உறுப்பினர் சபையில் வாக்களிப்புக்கு விடுகிறார். மாநகராட்சி ஆணையர் உடனடியாக இது போன்ற நாகரீகமற்ற பொம்மைகள் பற்றிய ஒரு கொள்கையை வகுக்க வேண்டும் என்று நகராட்சி தீர்மானம் நிறைவேற்றுகிறது.

துணிக்கடை பொம்மைகள்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நடத்த தூண்டும் வகையில் பெண் பொம்மைகள் இருக்கிறது என்று மாநகராட்சி அதிகாரி கருதினால் அதை நீக்கும்படி கடைக்காரருக்கு உத்தரவிடும் அதிகாரத்தை அவருக்கு வழங்க வேண்டும் என்று இந்த தீர்மானம் கோருகிறது.

இந்த இந்துத்துவ ஞான ஒளியை இன்னும் சில இடங்களில் பாய்ச்சி பார்க்கலாம். முதலில் பெண்களுக்கான உள்ளாடைகள் உற்பத்தியாகும் தொழிற்சாலைகளை என்ன செய்வது என்ற கேள்வி வருகிறது. இந்துத்துவாவின் இரும்பு மனிதர் நரேந்திர மோடி தலைமையில் 2014-ல் மத்தியில் ஆட்சியைப் பிடித்தவுடன், கும்பமேளாவுக்கு வரும் திகம்பர நாகா சாமியார்கள், சட்டை அணியாத சாதுக்கள் எல்லாம் சேர்ந்து சாதுக்களின் மகா சம்மேளனம் நடத்தி ஒரு முடிவு எடுப்பார்கள். அதை நாடாளுமன்றத்தின் முன் வைத்து அரசு சட்டமாக நிறைவேற்றும்.

அதன்படி பெண்களுக்கான உள்ளாடைகள் செய்யும் தொழிற்சாலைகளில் பெண்கள் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும். நாயுடு ஹால், ஜாக்கி முதலான அனைத்து உள்ளாடை பிராண்ட் நிறுவனங்களும் பெண் முதலாளிகளுக்கு விற்கப்பட வேண்டும். அந்த நிறுவனங்களில் பங்கு வாங்குவதற்கு ஆண் முதலாளிகள் அனுமதிக்கப்படக் கூடாது. பெண்களின் உள்ளாடை நிறுவன லாபத்தை கணக்கு போடும் போதோ, பங்குகளை வாங்கி விற்கும் போதோ ஒரு ஆண் முதலாளியின் மனதில் காம குரோதங்கள் தோன்றாது என்று என்ன நிச்சயம்? முதலாளி மட்டுமல்ல உள்ளாடைகளை தயாரிக்கும் தொழிலாளிகளும் பெண்களாய் மட்டும் இருக்க வேண்டும்.

உள்ளாடைகள் விற்கும் கடைகளிலும் பெண்கள் மட்டும்தான் வேலைக்கு வைக்கப்பட வேண்டும். பெண்களுக்கான உள்ளாடைகளுக்கென்றே அல்லி ராஜ்யம் போல ஒரு தனி பகுதி ஒவ்வொரு நகரிலும் ஏற்படுத்தப்படும். அவற்றுக்கு வெளியே பெண் காவலர்கள் நிறுத்தப்படுவார்கள். அதற்குள் போவதற்கு ஆண்களுக்கு கண்டிப்பாக அனுமதி இருக்காது.

உள்ளாடைகளுக்கு நிகரான விளையாட்டு ஆடைகளை அணிந்து கொண்டு பெண்கள் ஓடி, குதித்து, நீந்தி விளையாடுவதை பார்க்கும் ஆண் மனங்களில் என்ன எண்ணங்கள் தோன்றி விடும் என்ற நிச்சயம் இல்லாத நிலையில் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பது தடை செய்யப்படும். இன்னும் சில படிகள் தொலைநோக்குடன் யோசித்தால், பெண்கள் அனைவரும் தலை முதல் கால் வரை மறைக்கும்படியாக கருப்பு உடையை அணிந்து கண்கள் மட்டும் தெரியும்படிதான் வெளியில் வர வேண்டும். அதுவும் ஆண் உறவினர்கள் (அப்பா அல்லது கணவன்) துணையுடன்தான் வெளியில் வர வேண்டும் என்று சட்டம் போடப்படும்.

இஸ்லாமிய ஞான ஒளியில் செயல்படும் சவுதி அரேபியாவில், இத்தகைய சட்டங்களில் பல ஏற்கனவே அமலில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கும்பமேளாவில் குதித்து, குட்டிகரணம் போட்டு மக்களுக்கு அருள் பாலிக்கும் திகம்பர (நிர்வாண) நாகா சாமியார்களும், சாதுக்களும், பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சவுதி அரேபியாவுக்கு நல்லிணக்க அரசு முறை சுற்றுலா போய் பெண்களை எப்படி பாதுகாக்கலாம் என்று வகாபிகளிடம் பாடம் படித்துக் கொண்டு வருவார்கள்.

அடுத்து இந்துத்துவ மரபினால் கோயில்களிலும், அஜந்தா, எல்லோரா ஓவியங்களிலும் நிர்வாணமாக தீட்டப்பட்டுள்ள பெண் சிலைகளையும் ஓவியங்களையும் எப்படி ஆண்கள் கண்ணில் படாமல் பாதுகாப்பது என்ற பிரச்சனையை தீர்க்க வேண்டியிருக்கும். அத்தகைய கோயில் மண்டபங்களையும் குகைகளையும் கணக்கெடுத்து, அவற்றுக்கு பெண் புரவலர்களை நியமித்து ஜெயேந்திரர், நித்தியானந்தர், மதுரை ஆதீனம், பிரேமானந்தர் முதலான சாது, சன்யாசி மரபினரை தவிர மற்றவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி மறுக்கப்படும்.

சஞ்சய் ஜோஷி என்ற பாரதீய ஜனதா கட்சி தலைவர் பங்கு பெறும் காம யோகக் காட்சிகள் அடங்கிய சிடி வெளியாகி சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியதையும், கர்நாடகா சட்டசபையில் பாலியல் படங்களை தமது கையடக்க கணினியில் பார்வையிட்டு யோகப் பயிற்சி செய்து கொண்டிருந்த இந்துத்துவர்களை மையமாக வைத்து திம்மி ஊடகங்கள் போட்ட குத்தாட்டத்தையும் இந்துத்துவ அரசு கவலையோடு பரிசீலிக்கும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ண மரபில் வந்த இந்துத்துவ அரசியல் தலைவர்கள், சட்ட சபை உறுப்பினர்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள் போன்றவர்களின் யோக லீலைகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து பொதுவில் அம்பலப்படுத்தி காசு பார்க்கும் ஊடகங்களை தடுத்து நிறுத்துவதற்காக கடும் நடவடிக்கைகளை எடுக்கப்படும். ரகசிய கேமரா, ஜூம் கேமரா போன்றவை தடை செய்யப்படும் அல்லது அவற்றின் விற்பனையும் பயன்பாடும் ஒழுங்குபடுத்தப்படும். சிடிக்களில் பதியப்படும் படங்களும் வீடியோக்களும் இந்துத்துவ காம யோக காட்சிகளை கொண்டிருக்கின்றனவா என்பதை பரிசீலித்து ஒப்புதல் அளிப்பதற்கு சுப்பிரமணியம் சாமி, சோ தலைமையில் ஒரு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்படும்.

இதுவரை கற்பனை குதிரை தடங்கலின்றி ஓடினாலும், பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் பலர் தமது குடும்ப உறுப்பினராலேயே கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எனும் போது அதைத் தடுப்பதற்கு இந்துத்துவ அரசு எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கும் என்ற இடத்துக்கு வந்ததும் திகிலாகிப் போய் நின்று விட்டது.

– செழியன்

மேலும் படிக்க

நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு !

4

டந்த வெள்ளியன்று (மே 31, 2013) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்வதந்திர குமார் என்ற அத்தீர்ப்பாயத் தலைவர் தனது தீர்ப்பில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், சுற்றுப்புறச் சூழலையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மார்ச் 23-ல் கசிந்த வாயு உண்மையிலேயே ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தான் வந்ததா அல்லது அருகிலுள்ள பிற 64 ஆலைகளில் ஏதாவது ஒன்றிலிருந்து வெளியானதா என்பதை கண்டறிந்து உண்மையை நிரூபிக்க தமிழக அரசு தவறி விட்டது என்றும், ஆலையில் வேலை செய்பவர்கள் அல்லது அருகில் வசிப்பவர்கள் யாரும் பாதிக்கப்படாத நிலையில் 8 கிமீ தொலைவில் உள்ள கிராமத்தில் கந்தக டை ஆக்சைடு பரவியதாக சொல்வது அறிவியல்பூர்வமாக ஏற்புடையதாக இல்லை என்றும் கூறியிருக்கிறார் நீதிபதி. ஆலைக்கு அருகில் குடியிருப்புகள் இல்லை, ஆலை ஊழியர்களை நச்சுவாயு பாதிப்பிலிருந்து பாதுகாத்திட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்பவற்றை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

பசுமைத் தீர்ப்பாயம் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்காக 2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால் அவர்கள் ‘நாட்டின் வளர்ச்சியை’ப் பற்றி மட்டுமே, அதாவது முதலாளிகளின் நலனைப் பற்றியே தான் மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். எப்படி கல்வி பெறும் உரிமைச் சட்டம் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளதோ, உணவு பாதுகாப்புச் சட்டம் எப்படி பொது விநியோகத் துறையை இழுத்து மூடுவதற்காக உருவாக்கப்பட்டதோ அதே போல பசுமைத் தீர்ப்பாயம் என்பது கார்ப்பரேட்டுகள் சுற்றுசூழலை பாழாக்குவதற்கு ஏதுவாக செயல்படுகிறது.

மார்ச் 23-ம் தேதி ஆலையிலிருந்து வெளியான அதிகப்படியான நச்சு வாயுக்களால் தூத்துக்குடி மாநகரமே அல்லோகலப்பட்டது. பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே 82 முறை ஸ்டெர்லைட்டிலிருந்து இப்படி வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர். பொது மக்கள் ஊர்வலம் போனார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள். மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதைத் தொடர்ந்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நால்வர் குழுவொன்றை அமைத்து வாயுக் கசிவு பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரியது. அந்த அறிக்கையின் அடிப்படையில் விஷ வாயு கசிவு நடந்து ஏழு நாட்களுக்குப் பிறகு, மார்ச் 30 அன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலை செயல்படுவதற்கு தடைவிதித்தது. அப்போது, மக்கள் போராட்டத்தை மதித்து ஜெயா ஸ்டெர்லைட்டை தடைசெய்து விட்டதாக நல்லக்கண்ணு உள்ளிட்ட பலரும் ஜெயலலிதாவுக்கு மேஜை தட்டினார்கள்.

இப்போது ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்வதாக பம்மாத்து செய்யும் ஜெயலலிதா அரசு செப்டம்பர் 2012-ல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஆலை சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தவில்லை என்று கூறியுள்ளது. அதனை ஆதாரமாகக் காட்டி வாதாடிதான் தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடமிருந்து ஸ்டெர்லைட் பெற்றுள்ளது. ஆலையின் வழக்கறிஞர் தூத்துக்குடி நகர சுற்றுப்புற சூழல் மேம்பாட்டுக்காக தாங்கள் இதுவரை ரூ 500 கோடி செலவிட்டிருப்பதாகவும் இன்னும் ரூ 150 கோடி ரெடியாக வைத்திருப்பதாகவும் தீர்ப்பாயத்தில் கூறினார். தீர்ப்பாயம் இதனை கணக்கில் எடுத்துக் கொண்டு, அதாவது வல்லுறவு செய்தவன் தானே முன் வந்து திருமணம் செய்துகொள்வான் என்கிற பாணியிலான கட்டப்பஞ்சாயத்தை செய்து வைத்திருக்கிறது.

நச்சு வாயு கசிந்து 10 நாட்களுக்குள் ஏப்ரல் 2-ம் தேதி உச்சநீதி மன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்திரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் 2010-ம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்திருந்தது. தேசிய கடல்சார் பூங்காவான மன்னார் வளைகுடா பகுதி என்பது முக்கியமாக பவளப் பாறைகள் மற்றும் அரிய கடல் வாழ் உயிரினங்களின் வசிப்பிடம். இப்படி அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து 25 கிமீ தூரத்திற்குள் எந்த ஆலையும் அமையக் கூடாது என்பது விதி. ஆனால் ஸ்டெர்லைட் இயங்கும் சிப்காட் பகுதி கடலில் இருந்து 14 கிமீ தூரத்தில்தான் இருக்கிறது. 1986-ல் மன்னார் வளைகுடாவை தேசிய கடல்சார் பூங்காவாக அறிவித்த தமிழக அரசின் முடிவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என்று கூறி மேற்சொன்ன விதிமீறலை உச்சநீதி மன்றம் நியாயப்படுத்தியது. ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்புகள், அனுமதியில்லாமல் ஆலையினை விஸ்தரித்த அதன் நடவடிக்கைகள், அனுமதியே இல்லாமல் பல ஆண்டுகள் ஆலையை நடத்தியது ஆகியவற்றுக்கு தண்டனையாக ரூ.100 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம். ஆலையை மூடுவது பொது நலனுக்கு உகந்ததல்ல என்றும் உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

ஸ்டெர்லைட் நிறுவனம் 2011-12 இல் விற்பனை மூலம் ஈட்டிய தொகையான ரூ 19,051 கோடியில் 5,000 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 15,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு தந்த சம்பளம் வெறும் 92 கோடிதான் (0.48%). இந்நிறுவனம் மூலமாக வேதாந்தா ஆண்டுக்கு ரூ 939 கோடி நிகர லாபமாக எடுக்கிறது. போட்ட முதலோ ரூ 336 கோடி ரூபாய்தான். 4 ஆண்டுகளுக்கு ஸ்டெர்லைட் கட்டாமல் ஏமாற்றிய சுங்கவரி மட்டும் ரூ 738 கோடி. தாமிரத்தை ஏற்றுமதி செய்யாமலே ஏற்றுமதி செய்ததாக கணக்கு காட்டி பெற்ற மானியத் தொகை மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் ரூ 750 கோடி. இப்படி சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்து விட்ட ஸ்டெர்லைட்டுக்கு ரூ 100 கோடி மட்டும் அபராதம் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் வர்க்க சார்பு.

தனது தீர்ப்பு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்திரவிட்ட முடிவை கட்டுப்படுத்தாது என்று மட்டும் உச்சநீதி மன்றம் பம்மாத்து செய்தது. இதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்திரவுக்கெதிராக ஸ்டெர்லைட் தாக்கல் செய்திருந்த மனு சென்னையிலுள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் இருந்து டெல்லியிலுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு மர்மமான முறையில் மாற்றப்பட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு தற்போது வெளியாகி, ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க வழிசெய்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் ஒருவர், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஒருவர், இரண்டு ஐஐடி பேராசிரியர்கள் ஆகியோர்களைக் கொண்ட நால்வர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வெளியேறும் வாயுக்கசிவின் அளவு, ஆலையிலுள்ள எந்திரங்களின் தன்மை ஆகியவற்றை மாதமொன்றுக்கு மூன்று முறை ஆய்வு செய்து ஜூலை 7 க்குள் தீர்ப்பாயத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் இறுதித்தீர்ப்பு ஜூலை 10 அன்று வழங்கப்படுமாம்.

மராட்டிய மாநிலம் ரத்தினகிரியிலிருந்து விவசாயிகளின் போராட்டத்தால் விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட்டை அன்றைய ஜெயா அரசு தமிழ்நாட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. இன்று மக்களைப் பாதுகாக்க ஸ்டெர்லைட்டை மூடினார் என்று விதந்தோதப்படும் இதே ஜெயலலிதா தான் 30.10.94 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டி, அப்பகுதி மக்களின் வாழ்வாதரத்தின் மீதான தாக்குதலை ஆரம்பித்து வைத்தார்.

ஸ்டெர்லைட் போராட்டம்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்

தென் மாவட்டங்களில் உள்ள சாதிகளுக்கிடையேயான கூர்மையான வேறுபாடுகளைப் பயன்படுத்தி குறிப்பாக நாடார்-மீனவர்கள் பிளவைப் பயன்படுத்திக் கொண்டு, எதிர்ப்புகளை முடக்கி, காங்கிரசு-கருணாநிதி ஆசியுடன் 1997-ல் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் தனது உற்பத்தியைத் துவங்கியது.

ஆலையைச் சுற்றி 250 மீ அளவுக்கு பசுமை வளையம் அமைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனையை இன்றுவரை ஸ்டெர்லைட் பின்பற்றவில்லை. மீனவர்களின் வாழ்வாதரத்தை பூண்டோடு அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளில் பாதரசம், காட்மியம், அமோனியா, ஆர்சனிக் என பல வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கழிவுகள் இருக்கிறது. ஒரு டன் தாமிரத்தை சுத்திகரித்தால் மூன்று டன் கழிவுகள் வெளியேறும். கழிவுகளைக் கொட்டுவதால் அருகிலுள்ள கிராமங்களில் நிலத்தோடு சேர்ந்து நிலத்தடி நீரும் கடுமையாக மாசடைந்துள்ளது. இங்கு இதுவரை நடந்துள்ள ஆலை விபத்துக்களில் 13 பேர் இறந்துள்ளனர். இவர்களில் வட இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் பலர். சுமார் 139 பேர் படுகாயமடைந்துள்ளனர். அருகிலுள்ள தெற்கு வீரபாண்டியாபுரம், காயலூரணி போன்ற கிராமங்களில் ஏற்கெனவே செய்துவந்த பருத்தி விவசாயம் அடியோடு நிறுத்தப்பட்டதுடன், நிலத்தடி நீர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் புற்றுநோய், சிறுநீரக கோளாறு போன்ற நோய்கள் வருவது கடந்த பத்தாண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.

காலம் நிறைய அனுபவங்களை மக்களுக்கு விட்டுச் செல்கிறது. பல சமயங்களில் கற்றுத் தருகின்ற ஆசிரியனாகவும் விளங்குகிறது. முன்னர் ஸ்டெர்லைட் வரவை ஆதரித்த நாடார்கள் மார்ச் 23 அன்று தங்களது காய்கறி சந்தையில் துணியால் மூக்கைப் பொத்தியபடி வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆலையைத் திறக்க உச்சநீதி மன்றம் ஆணையிட்ட ஏப்ரல் 3-ம் தேதி அன்று அதைக் கொண்டாடும் நோக்கில் பட்டாசு வெடிக்க வந்த நிறுவன ஊழியர்களை பழைய பேருந்து நிலையத்தின் முன் விரட்டியடித்திருக்கிறார்கள் தூத்துக்குடி நகர மக்கள்.

1992-ல் இந்தியாவில் தாமிர உற்பத்தி தனியாருக்கு திறந்துவிடப்பட்ட பிறகு நாட்டின் உற்பத்தி ஆண்டுக்கு 62,000 டன்னில் இருந்து 9 லட்சம் டன்னை தாண்டி உள்ளது. உள்நாட்டுத் தேவையோ 6 லட்சம் டன் மட்டும்தான். ஸ்டெர்லைட் தயாரிக்கும் 4 லட்சம் டன் தாமிரத்தில் பெரும்பாலும் ஏற்றுமதிக்கானதுதான் என்பதால் அது வந்துதான் உள்நாட்டுத் தேவை என்பது நிறைய வேண்டுமென்பதில்லை.

அனில் அகர்வால்
அனில் அகர்வால்

ஆசிய தாமிர சந்தையை வேதாந்தா கைப்பற்றுமா இல்லையா என்பதுதான் முதலாளித்துவ சந்தையில் நடக்கும் விவாதங்களின் சாரம். உலகம் முழுக்க ஏற்றுமதியாகும் சீன மின்சாதனப் பொருட்களின் உற்பத்திக்கு ஆண்டுக்கு 90 லட்சம் டன் தாமிரம் தேவைப்படுகிறது. ஸ்டெர்லைட் சுத்திகரிக்கும் தாமிரத்தில் பாதிக்கும் மேல் சீனாவுக்கு செல்கிறது. பிர்லாவின் ஹிண்டால்கோ தாமிர சுத்திகரிப்பு நிறுவனமும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுத்தல் பிரச்சினை காரணமாக நீண்டகாலமாக மூடப்பட்டிருப்பதால் ஆசிய சந்தையைப் பிடிப்பதில் வேதாந்தாவுக்கும், சாங்காய் முதலாளிகளுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் அனில் அகர்வாலின் லாப வேட்டைக்கு இந்திய உச்சநீதி மன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஏவல் வேலை செய்திருக்கின்றன.

அனில் அகர்வால் தூத்துக்குடி ஆலையின் உற்பத்தியை 4 லட்சம் டன்னில் இருந்து 8 லட்சம் டன் ஆக உயர்த்த அரசிடம் மனுப்போட்டு காத்திருக்கிறான். மக்கள் போராட்டங்கள், ஆலைக்கு தடை கோரும் வழக்குகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகள் என எதுவும் அவனைப் பொறுத்தவரை ஒரு பொருட்டாக இருப்பதில்லை. இந்தியாவில் எல்லா ஓட்டுக் கட்சிகளுக்கும் பல்வேறு பெயர்களில் பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கியிருக்கிறான் அனில் அகர்வால். அப்படி கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரசு மற்றும் பிஜேபி க்கு வேதாந்தா கொடுத்த நன்கொடை மட்டும் ரூ. 28 கோடி. இப்போது விடாப்பிடியாக போராடும் வைகோ வின் அன்றைய கட்சிப் பிரமுகர்கள் பலரும் கூட முன்னர் வேதாந்தாவிடம் காசு வாங்கியவர்கள்தான்.

ஆஸ்திரேலியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தாமிர தாதுக்களை இந்த ஆலையில் சுத்திகரிக்கிறார்கள். இது திட்டமிட்ட முறையில் ஏழை மற்றும் வளரும் நாடுகள் மீது மட்டுமே திணிக்கப்படுகிறது. ஏற்றுமதி செய்த ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதி இன்னும் மக்கள் சென்றடையாத பகுதியாக இருந்தபோதும் அங்கெல்லாம் துவங்காமல் அந்த சுத்திகரிப்பு தூத்துக்குடிக்கு கப்பலேறியதற்கு பெயர் தான் உலகமயம். நீதிமன்றங்களும், பசுமைத் தீர்ப்பாயங்களும் வேதாந்தாவின் லாப வேட்டையினால் இயக்கப்படும் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியும், நாட்டின் பொருளாதார ‘வளர்ச்சி’யும் முக்கியம் அல்லவா என்று நம்மைப் பார்த்து கேட்கின்றன. அற்ற குளத்தில் அருநீர் பறவை போல தூத்துக்குடியை சுடுகாடாக மாற்றி விட்டு வேதாந்தா இன்னொரு ஊருக்கு பறந்து விடுவான். நாம் விழித்துக் கொள்ளத் தவறினால் எப்போதும் இனி விழிக்க இயலாது.

– வசந்தன்.

பாட்டில் தேசம் !

7

பாட்டில் தண்ணீர்வாருங்கள் ! ஒரு குடும்பத்தை சந்திப்போம். கணவன், மனைவி, இரண்டு பதின்ம வயதுக் குழந்தைகள் என்ற முத்திரை குடும்பம்.

வீட்டுக்குள் குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறது என்ற வசதி உலகில் சுமார் 50% மக்களுக்கு இன்னும் போய்ச் சேராத நிலைமை. இவர்கள் வீட்டில் அந்தக் கவலை எல்லாம் இல்லை. சமையலறை, கழிவறை, குளியலறை, முகம் கழுவும் வாஷ் பேசின், தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்ற என்று எல்லா இடங்களிலும், எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது.

ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (எதிர் சவ்வூடு பரவல்) முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மாடியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பப்பட்டு, குடி தண்ணீர்க் குழாய்களில் வருகிறது. குடிக்க, சமைக்க, குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ அதையே பயன்படுத்திக் கொள்கிறார்கள். சுத்திகரிக்கப்படாத தண்ணீரில் குளித்தால் ஒத்துக் கொள்வது இல்லை.

சமையலறையிலும், குளியலறையிலும் சுடு தண்ணீர்க் குழாய், குளிர்ந்த தண்ணீர்க் குழாய் என்று இருபுறமும் இருக்கும். தேவைக்கேற்ற சூட்டில் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவசரமாக இருந்தால் ஷவரில் குளித்து விட்டுப் போய் விடுவார்கள். மாலை வேளையில் அலுப்புத் தீர முழுகிக் குளிப்பதற்காக குளியல் தொட்டி(பாத் டப்)யில் நீரை நிரப்பி, அதில் அழுந்திக் குளித்து புத்துணர்ச்சி பெற்றுக் கொள்வார்கள்.

துணி துவைப்பதற்கான எந்திரத்தில் தினமும் ஒரு சுமை துணி துவைக்கப்படும். 4 பேரின் இரவு உடை, ஜிம் உடை, அலுவலக உடை, மாலை உடை என்று குறைந்த பட்சம் ஆளுக்கு 4 செட் துணிகளைத் தினமும் துவைக்க வேண்டும். கூடவே, படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், தலை துவட்டும் துண்டுகள், கை துடைக்கும் துண்டுகள் என்று சில நாட்களில் இரண்டு லோடு கூட எந்திரத்தில் போட வேண்டி வரும்.

ஃபிளஷ் டாய்லெட்டில் ஒவ்வொரு முறையும் சுமார் 20 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. (இதற்கு சுத்திகரிக்கப்படாத தண்ணீரைத்தான் இணைத்திருக்கிறர்கள்). கூடவே 5,400 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இரண்டு தள வீட்டின் அறைகளையும், ஹால்களையும், வெளி வராந்தாக்களையும், துடைப்பதற்கும், கழுவுவதற்கும், தோட்டத்தில் மரம், செடிகளுக்கு நீர் ஊற்றுவதற்கும் சுத்திகரிக்கப்படாத தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள்.

வேலை செய்ய வருபவர்களைச் சேர்க்காமல் இந்த 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு மட்டும் தினமும் 2600 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும், சுமார் 1400 லிட்டர் சுத்திகரிக்கப்படாத தண்ணீரும் செலவாகிறது. மொத்தம் 4000 லிட்டர் அல்லது 200 குடம் தண்ணீர்.

எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது? 450 அடி ஆழத்திற்கு ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டி அதிலிருந்து மோட்டர் வைத்து நிலத்தடி நீரை மேற்தொட்டிக்கு ஏற்றிக் கொள்கிறார்கள். இது போக 10,000 லிட்டர் தனியார் டேங்கர் லாரி ஒன்றை வரவழைத்து நல்ல தண்ணீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதற்கு வாரத்துக்கு ரூ 2000 வரை செலவழிக்கிறார்கள். அந்தத் தண்ணீரை ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் சுத்திகரிப்பதற்கு வேறு தனியாக செலவாகிறது. தண்ணீருக்காக மாதத்துக்கு ரூ 15,000 செலவழிக்கிறார்கள்.

வார இறுதியைக் கழிப்பதற்கு கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டிற்கு போகிறார்கள். அந்த ரிசார்ட்டில் சேவை ஐந்து நட்சத்திர தரத்தில் இருக்கும். படுக்கைகளில் வெள்ளை நிற விரிப்புகள், 2 குளியல் டவல்கள், 2 கை டவல்கள், பாத் டப் என்று ஒவ்வொருவருக்கும் வீட்டில் பயன்படுவதை விடச் சிறிது அதிகம் தான் தண்ணீர் செலவாகும். கூடவே, அவர்களது குடிலுடன் இணைந்த நீச்சல் குளத்தில் 50,000 லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு அவ்வப்போது வெளியேற்றப்படுகிறது.

இது ஒரு வாழ்க்கை.

05-water-1னால், இவர்கள் வாழும் சென்னை மாநகரில் தற்போது கடும் தண்ணீர் பற்றாக்குறை. தொழிற்சாலைகள், ஐ.டி. பூங்காக்கள், மல்டி பிளெக்சுகள், உல்லாசப் பூங்காக்கள், வணிக நிறுவனங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகள், சொகுசு மருத்துவமனைகள் என்று வெகுவாக வளர்ந்து விட்ட சென்னையின் மக்கள் தொகை 70 லட்சத்தைத் தொட்டு விட்டிருக்கிறது. ஒரு மனிதர் சுத்தமாக, ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 150 லிட்டர் தண்ணீர் (7 குடம்) தேவை. அந்த அடிப்படையில் சென்னையின் ஒரு நாள் தண்ணீர் தேவை 147 கோடி லிட்டர்கள். ஆனால் ஏரிகளிலிருந்து எடுக்கப்படும் நீர், நகருக்கு வெளியிலிருந்து கொண்டு வரப்படும் நிலத்தடி நீர், நடைமுறையில் செயல்படாத தெலுங்கு கங்கை திட்டம் என்று எல்லாம் சேர்ந்து ஒரு நாளைக்கு 60 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே சென்னை குடிநீர் வாரியத்தால் விநியோகிக்கப்படுகிறது. கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் போது 30 கோடி லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

இத்தோடு, நிலத்தடி நீரையும் சேர்த்து ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு கிடைக்கும் சராசரி நீரின் அளவு 107 லிட்டர் மட்டுமே. இது இந்தியாவின் வேறு எந்த நகரத்தை விடவும் குறைவு. இதுவும் மழை அளவைப் பொறுத்து ஆண்டுக்கு ஆண்டு மாறுபடுகிறது. பற்றாக்குறை ஆண்டுகளில் நபருக்கு 50 லிட்டர் என்ற அளவில்தான் தண்ணீர் கிடைக்கிறது. இந்த சராசரியில் ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 லிட்டர் வரை பயன்படுத்தும் மேட்டுக்குடியினரும் உண்டு, ஒரு நாளைக்கு 30 லிட்டர் தண்ணீர் மட்டும் பயன்படுத்தும் சேரிகளில் வசிக்கும் 3.5 லட்சம் மக்களும் உண்டு. பெரும்பான்மை மக்கள் கொஞ்சம் அதிகமாக 80 லிட்டர் வரை பயன்படுத்துகிறார்கள்.

ஒரு சராசரி உழைக்கும் வர்க்கக் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் தண்ணீர் (10 குடம்) கிடைத்தாலே பெரிது. வாரத்துக்கு ஒரு முறை தெம்பில்லாமல் வந்து பாயும் சென்னைக் குடிநீர் வாரிய குழாய் தண்ணீர், அதுவும் வந்து எட்டாத பகுதிகளுக்கு வாரத்துக்கு ஒரு முறை மெட்ரோ டேங்கரில் வரும் தண்ணீர் என்று மக்கள் ஓடி ஓடி சேகரித்துக் கொள்கிறார்கள்.

சென்னை மெட்ரோ லாரிதேனாம்பேட்டையில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் வள்ளுவர் கோட்டம் அருகில் இருக்கும் சென்னைக் குடிநீர் வாரியத்தின் லாரிகளுக்கான நீர்பிடிப்பு நிலையத்திற்குப் போய் அங்கு சிதறும் தண்ணீரைப் பிடித்து வருகிறார்கள். சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் நிலைமை இப்படித்தான்.

குடிக்க, சமைக்க 4 குடம், பாத்திரம் கழுவ 2 குடம், 4 பேர் குளிக்க 4 குடம், துணி துவைக்க 4 குடம், கழிவறைக்கு 2 குடம் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு நாளைக்கு 20 குடம் தேவைப்படுகிறது. இதற்கு மேல் வாசல் கழுவுவது,வீடு துடைப்பது/கழுவுவது, பெட்ஷீட்டுகளைத் துவைப்பது என்பதெல்லாம் வெயில் காலம் தாண்டி தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன. தண்ணீர் கொண்டு வருவதற்காக தினமும் காலையில் 2 மணி நேரம் அலைகிறார்கள். இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் கொண்டு வருவதற்காக பெட்ரோலுக்கு மாதம் ரூ 600, 700 செலவழிக்கிறார்கள்.

இது அதே சென்னையின் இன்னொரு வாழ்க்கை.

சென்னை வேகமாக வளர்ந்திருக்கிறது. விவசாயம் அழிந்ததால், விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக்கி விற்கப்பட்டதால் நகருக்கு இடம் பெயர்ந்த சிறு நில உடமையாளர்கள், விவசாயக் கூலிகள், தொழிற்சாலைகளுக்கு நிலத்தை பறி கொடுத்து விட்டு வந்தவர்கள், சென்னையைச் சுற்றிப் புதிதாக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், புதிய வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் வட மாநிலத் தொழிலாளர்கள் என்று சென்னையின் மக்கள் தொகை ஊதிப் பெருத்துக் கொண்டே போகிறது.

ஆனால், சென்னையில் ஒரு ஆண்டுக்குப் பெய்யும் மழை சராசரியாக ஒரு நாளைக்கு 55 கோடி லிட்டர்கள் அளவில்தான் நல்ல நீரைத் தருகிறது. பூண்டி-செம்பரம்பாக்கம்-செங்குன்றம் ஏரிகளில் தேக்கி வைத்தோ, மழை நீர் சேமிப்பு மூலம் நிலத்தடி நீரை உயர்த்தியோ, அல்லது கடலில் சேர்ந்த நீரை ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் மூலம் சுத்தப்படுத்தியோ எடுக்க முடிவது இவ்வளவுதான். இந்தத் தண்ணீரை வைத்து 15 லட்சம் மக்கள், அவர்களது வாழ்க்கையை ஒட்டிய வணிக நிறுவனங்கள், அவர்கள் வேலை செய்வதற்கான தொழிற்சாலைகள் மட்டுமே சென்னையில் செயல்பட முடியும். ஆனால், இப்போது இருக்கும் சென்னை வாசிகளின் எண்ணிக்கை 70 லட்சம்.

05-water-2பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரித் தொகுப்பிலிருந்து ஒரு நாளைக்கு 20 கோடி லிட்டர்கள் தண்ணீர் வரை சென்னையின் தேவைக்கு கிடைக்கிறது. தெலுங்கு கங்கைத் திட்டம் மூலம் ஆந்திராவில் கண்டலேறுவிலிருந்து கிருஷ்ணா ஆற்று நீரை சென்னைக்குக் கொண்டு வரும் திட்டத்தை வகுத்தார்கள். அதன்படி ஒரு நாளைக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு வர வேண்டும். ஆனால், ஆந்திராவின் தேவைகள் போக அதில் சிறு பகுதி கூட சென்னையின் தேவைக்கு கிடைப்பதில்லை. கூடுதலாக, சென்னையிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வீராணம் ஏரியிலிருந்து ஒரு நாளைக்கு 18 கோடி லிட்டர், போரூர் — ரெட்டேரியிலிருந்து 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இதற்கு மேல், வட சென்னையின் மணலி பகுதியில் உள்ள விவசாய கிராமங்களிலும், தென் கடற்கரை கிராமங்களிலும், பாலாறு படுகையிலும் ராட்சஸ ஆழ்குழாய் கிணறுகளை ஏற்படுத்தி சென்னை குடிநீர் வாரியம் 24 மணி நேரமும் நிலத்தடி நீரை இறைத்துக் கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக நாளொன்றுக்கு 6,000 டேங்கர் (6 கோடி லிட்டர்) தண்ணீர் வட சென்னையின் கிணறுகளிலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. பாலாற்றுப் படுகையிலிருந்து நாளொன்றுக்கு 4 கோடி லிட்டர் தண்ணீர் இறைக்கப்படுகிறது.

இவை தவிர தனியார் அடுக்கக கட்டிடங்கள், பங்களாக்களில் குழாய் கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு 24 கோடி லிட்டர் நிலத்தடி நீர் இறைக்கப்படுகிறது. இப்படியாக முட்டி மோதி, நகரை உயிருடன் வைத்திருப்பதற்காகத் திரட்டப்படும் தண்ணீரில் பெரும்பகுதி, மறுபடியும் நிரப்ப முடியாத நிலத்தடி நீர்.

த்தகைய கடும் பற்றாக்குறை நிலவும் சூழலில், தண்ணீர் யாருக்கு எவ்வளவு போய்ச் சேர வேண்டும் என்று எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

தண்ணீர் மனித உரிமைதனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் கீழ் காசு இருப்பவன் தான் ராஜா என்பதால் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நட்சத்திர விடுதிகள், பணக்காரர்களின் பங்களாக்கள், மேட்டுக்குடியினரின் அடுக்ககங்கள் தமக்குத் தேவையான முழு அளவுத் தண்ணீரையும் வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு சென்னைக் குடிநீர் வாரியம் முதல் தனியார் டேங்கர்கள் வரை, நிலத்தடி நீர் இறைப்பதற்காக பம்புகள் வரை அடிபணிந்து சேவை செய்ய அணிவகுத்து வருகின்றன.

பாட்டில்களிலும், பாக்கெட்களிலும் தண்ணீர் அடைத்து விற்கும் பணியை நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் செய்து வருகின்றன. விவசாய நிலங்களைக் கைப்பற்றி அவற்றில் குழாய்களை இறக்கி, தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை இறைத்து பாட்டில்களில் அடைத்து, லாரிகளில் கொண்டு சென்று விற்கின்றனர்.

பாக்கெட்களிலும், பிளாஸ்டிக் பாட்டில்களிலும் விற்கும் 450 தண்ணீர் விற்பனை நிறுவனங்கள் செயல்படுகின்றன. தினமும் சுமார் 50 லட்சம் அளவில் 250 மி.லி. பாக்கெட்களும், சுமார் 3.5 லட்சம் அளவில் 20-லிட்டர் கேன் தண்ணீரும் சென்னையில் விற்பனை ஆவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1 லிட்டர் பாட்டில்கள், 10,000 லிட்டர் டேங்கர்கள் இவற்றையும் சேர்த்து சென்னையின் தண்ணீர் சந்தையின் மொத்த மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ 500 கோடி முதல் ரூ 700 கோடி வரை. இவற்றில் பல நிறுவனங்களின் தண்ணீர் மாசு பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், யாரும் தண்டிக்கப் படவுமில்லை. தண்ணீர் வியாபாரம் தடைபடவும் இல்லை.

எங்கிருந்து வருகிறது தண்ணீர் ?

விவசாய விளைநிலங்களாக இருந்த பூந்தமல்லி-ஆவடி சாலையின் இருமருங்கிலும் உள்ள நிலங்கள் இரக்கமின்றி சுரண்டப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 30-35 டேங்கர் லாரிகளில் இங்குள்ள நிலத்தடி நீர் நிரப்பப்பட்டு ஒவ்வொரு டேங்கர் தண்ணீரும் ரூ 1000 விலைக்கு நகருக்குள் விற்கப்படுகின்றன. பெசன்ட் நகரிலும், பல்லடுக்கக வளாகங்களிலும் நூற்றுக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் நாள் முழுவதும் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன.சென்னையின் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து நீரை உறிஞ்சிக் கொண்டு, நாளொன்றுக்கு சுமார் 13,000 டாங்கர் லாரிகள் சென்னைக்குள் வருகின்றன.

1987-ம் ஆண்டு இயற்றப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதி நிலத்தடி நீர் (ஒழுங்குமுறை) சட்டத்தின்படி சென்னையை சுற்றியுள்ள 302 கிராமங்களில் நிலத்தடி நீரை வணிக நோக்கத்துக்காக எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனியார் டேங்கர்கள் மட்டுமின்றி அரசு சார்ந்த வாரியங்களும் இந்தத் தடையை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால், இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத்தூர் கிராமத்தில் போலோ, அக்வா என்ற இரண்டு தனியார் தண்ணீர் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, நிலத்தடி நீரை உறிஞ்சி, சுத்தப்படுத்தி விற்கின்றன.

05-water-4தனியார் நிறுவனங்களும், சென்னை குடிநீர் வாரியமும், பல்லடுக்கக வளாகங்களும் போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சியதில் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் 80% குறைந்திருக்கிறது. வளசரவாக்கம், கே கே நகர், அண்ணா நகர், இராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் இரும்புச் சத்து அதிகமாகி மஞ்சள் நிறமாக தண்ணீர் வருகிறது. மந்தைவெளி, அண்ணா நகர், இந்திரா நகர், வேளச்சேரி, தரமணி பகுதிகளில் உப்புத்தன்மை அதிகரித்திருக்கிறது. பெசன்ட் நகர் பகுதியில் கடல் நீர் உள் புகுந்திருக்கிறது. பொதுவாகவே நகரின் நிலத்தடி நீரில் கார்பனேட், நைட்ரேட் உப்புக்களின் அளவு அதிகமாகி, குடிக்க லாயக்கில்லாமல் போயிருக்கின்றது.

சென்னை குடிநீர் வாரியம் நிலத்தடி நீரை எடுப்பதற்காக ஏற்படுத்திய ராட்சச ஆழ்குழாய் கிணறுகளில் பல வறண்டு கைவிடப்பட்டிருக்கின்றன. 1969-ல் தாமரைப்பாக்கம், பஞ்செட்டி, மீஞ்சுர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் நாளொன்றுக்கு 12.5 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டன. ஆனால், 2005-ம் ஆண்டு முதல் அந்தக் கிணறுகளிலிருந்து 55 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. அதே போல ஒரு நாளைக்கு 5.5 கோடி லிட்டர் எடுக்க திட்டமிடப்பட்ட பூண்டி, கண்ணிகைபேர், கொரட்டேலி ஆறு போன்ற நீராதாரப் பகுதிகளிலிருந்து 2005-ம் ஆண்டு முதல் 71 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.

சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியூர் கிராமத்திலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படுகிறது. இந்த கிராமத்தில் 804 ஏக்கர் பரப்பளவிலான ஒரு குளம் இருந்தாலும், நிலத்தடி நீரை நம்பியே நெல், நிலக்கடலை விவசாயம் நடந்து வந்தது. 1990-க்குப் பிறகு நீர் மட்டம் குறைந்ததால் 60-க்கும் மேற்பட்ட கிணறுகள் பாழடைந்து போயிருக்கின்றன. 1980-ல் 50 முதல் 80 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட 280 கிணறுகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு வந்தது. இப்போது 130 முதல் 160 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட 220 கிணறுகள் செயல்படுகின்றன. கிராமத்தின் விவசாயம் முழுமையாக செயலிழந்து போனதோடு மட்டுமின்றி கிராமத்துக்குத் தேவையான குடிநீர் கூட கிடைப்பதில்லை;

பாலாற்றுப் படுகையில் உள்ள பழைய சீவரம் கிராமத்தில் 1980-ல் 24 முதல் 27 அடி ஆழத்திலான 71 கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. 2004-ம் ஆண்டில் 60 முதல் 100 அடி ஆழப்படுத்தப்பட்ட 150 கிணறுகள் இருந்தன. அவற்றில் 20 கிணறுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் நிலையில் உள்ளன. 1985-ல் பெருமளவில் நடைபெற்று வந்த விவசாயம், 2004 வாக்கில் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது

தண்ணீர் ஏற்றுமதி !

இந்தச் சூழலில் ஒவ்வொரு நாளும் சென்னை துறைமுகத்திலிருந்து பல கோடி லிட்டர் தண்ணீர் ஏற்றுமதி ஆகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம், 1990-களுக்குப் பிறகு சென்னையில் ஏற்படுத்தப்பட்ட ஹூயுண்டாய், நிஸ்சான், பிஎம்டபிள்யூ, டைம்லர், ஃபோர்டு ஆகிய கார் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 750 கார்களை ஏற்றுமதி செய்கின்றன. 1.1 டன் எடை உடைய ஒரு காரின் உற்பத்தியோடு தொடர்புடைய அனைத்து மனித, தொழில், வணிக நடவடிக்கைகளும் 3.5 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்கின்றன. அந்தக் காரை இறக்குமதி செய்யும் நாடு 3.5 லட்சம் லிட்டரை சேமித்துக் கொள்கிறது. அந்த வகையில் சென்னையில் 25% உற்பத்தி நடவடிக்கைகள் நடப்பதாக வைத்துக் கொண்டால் சென்னை ஒரு நாளைக்கு 6.5 கோடி லிட்டர் தண்ணீரை ஏற்றுமதி செய்கிறது.

பொழுதுபோக்கு பூங்கா
குடிநீருக்கு தட்டுப்பாடு ! பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு இல்லை கட்டுப்பாடு !!

ஒரு ஆண்டுக்கு உற்பத்தியாகும் சுமார் 7 லட்சம் மொத்தக் கார்களை எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 16 கோடி லிட்டர் தண்ணீரை குடிக்கும் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு சென்னையிலும், இந்தியாவின் பிற நகரங்களிலும், உலகின் பிற நாடுகளிலும் வசிக்கும் மேட்டுக்குடியினரின் சொகுசுக்காக விற்பனை செய்யப்படுகின்றன. அதற்காக, சென்னை நகரும் நகரில் வாழும் உழைக்கும் மக்களும் கொடுக்கும் விலையை யாரும் கணக்குப் போடுவதில்லை. திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கான சாயப்பட்டறைகளால் நாசமாக்கப்பட்ட ஆறுகள், விளைநிலங்கள், நிலத்தடி நீர் உள்ளிட்ட ஏற்றுமதி சார்ந்த தொழில்களால் நாசமாகும் நீர்வளத்தை இதே போல கணக்கிட்டுக் கொள்ளலாம்.

சென்னையில் உள்ள சொகுசு விடுதிகளில் 4,656 அறைகள் படுக்கைகள் உள்ளன. ஒரு நட்சத்திர விடுதியின் அறைக்கு சுமார் 1,500 முதல் 2,000 லிட்டர் தண்ணீர் செலவு ஆவதாக கூறுகின்றனர் (ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் லிட்டர்). சென்னையில் உள்ள 3 கோல்ப் விளையாட்டு மைதானங்களைப் பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 60 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் செலவிடப்படுகிறது. தனியார் நீச்சல் குளங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். இவற்றுக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் மாற்றப்பட்டாலே நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகும். சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் செயல்படும் விளையாட்டுப் பூங்காக்களின் தண்ணீர் விளையாட்டுக்களுக்காக தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளின் லாபத்துக்காக, ஆனால் மக்களின் நன்மைக்காக என்று சொல்லி புதிய புதிய தொழிற்சாலைகள், அமெரிக்காவுக்கு தொண்டு செய்யும் தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள், தனியார் தொழில்முறைக் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் என்று சென்னையை வளர்த்துக் கொண்டே போக திட்டமிடுகிறது ஆளும் வர்க்கம். அந்த வளர்ச்சியின் அழுத்தத்தையும், பற்றாக்குறையையும் சுமப்பது, சுமக்கப் போவது உழைக்கும் ஏழை மக்கள்தான்.

சென்னை ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இதனை எல்லா நகரங்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். சொல்லப்போனால் நகரங்களைக் காட்டிலும் கொடிய தண்ணீர்ப் பஞ்சத்தை இந்தியாவின் கிராமங்கள்தான் அனுபவித்து வருகின்றன. உலகிலேயே மிக அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்திய அரசு நீர்ப்பாசன மராமத்தைப் புறக்கணித்த காரணத்தினால், நாட்டின் 60% விவசாயம் நிலத்தடி நீரை நம்பியிருக்கின்றது. கிராமப்புற, நகர்ப்புற குடிநீர் திட்டங்களில் 80% நிலத்தடி நீரைத்தான் நம்பி இருக்கின்றன. பருவங்கள் பொய்க்கின்றன. நிலத்தடி நீரூற்றுகள் வற்றுகின்றன. தண்ணீர் மென்மேலும் அரிய பொருளாக மாறி வருகின்றது.

அரிய பொருட்களை யார் சொந்தம் கொண்டாட முடியும் ?

05-water-5பணமிருப்பவர்கள்தான். சென்னை நகர குடிநீர் விநியோகம் குறித்த விவரங்கள் இதைத்தான் காட்டுகின்றன. மனித சமூகத்திற்கு மட்டுமின்றி, உயிரினங்கள் அனைத்திற்குமே பொதுவான தண்ணீரை ஒரு விற்பனைச் சரக்காக நம் பண்பாடு கருதியதில்லை. இந்திய அரசியல் சட்டத்தின்படி, நிலத்தின் மேல் உள்ள நீர் அரசு சொத்து. நிலத்தடி நீர், நிலத்தின் உரிமையாளருடையது. நிலத்தடி நீர் தனக்கு சொந்தம் என்ற போதிலும் விவசாயியோ, வேறு யாருமோ தம் தேவைக்கு மேல் அதனை எடுத்ததுமில்லை, விற்றதுமில்லை.

மறுகாலனியாக்க கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பின்னர்தான், தண்ணீர் கொள்ளை முதல் மணற்கொள்ளை வரையிலான அனைத்தும் தலைவிரித்தாடத் தொடங்கின. நீர் நிலைகளையும் நிலத்தடி நீர்வளத்தையும் உறிஞ்சி சூறையாடிய முதலாளித்துவ மாஃபியாக்கள், இப்போது நிலத்தடி நீரை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று கோருகிறார்கள். நிலத்தடி நீரைப் பாதுகாப்பது என்ற பெயரில் நிலத்தடி நீர்வளம் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, அதனை முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதற்காகவே ஒரு ஆணையத்தை உருவாக்க இருக்கிறது மன்மோகன் அரசு.

கோல்ஃப் மைதானம்
கால்ஃப் மைதானத்தை பராமரிக்கும் நீரைக் கொண்டு ஒரு ஊருக்கே குடிநீர் அளிக்க முடியும் !

தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணயம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போல இது தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம். அந்த ஆணையங்கள் தொலைபேசிக் கட்டணம், மின்கட்டணத்தை நிர்ணயிப்பது போல இது தண்ணீரின் விலையை நிர்ணயம் செய்யும். இப்படித் தண்ணீருக்கு விலை வைப்பதன் மூலம்தான் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியுமாம். ஒவ்வொரு மாநிலமும் தண்ணீரை எப்படி சேமிப்பது என்று சொல்லித்தருவதற்காக 15 சர்வதேச ஆலோசனை நிறுவனங்களை ஆசிய வளர்ச்சி வங்கி சிபாரிசு செய்திருக்கிறது.

முன்மாதிரியாக, குஜராத்தின் மோடி அரசு ஒரு சட்டம் கொண்டுவந்திருக்கிறது. அம்மாநிலத்தில் 45 மீட்டர் ஆழத்துக்கு மேல் கிணறு தோண்டினாலோ, குழாய் இறக்கினாலோ அரசின் அனுமதி பெற வேண்டும். விவசாயிகள், தாங்கள் பாசனத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரை எப்படி எடுத்தோம் என்று அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும். தவறினால் ரூ 10,000 அபராதம், ஆறு மாதம் சிறை.

தண்ணீர் சிக்கனத்துக்கான தேசிய கழகம் ஒன்றை அமைக்கவிருப்பதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நீச்சல் குளங்கள், கோல்ப் மைதானங்கள், தண்ணீர் விளையாட்டுகள் போன்றவற்றுக்கும் அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படுமோ என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடும்.

இந்த சிக்கனக் கழகத்தை உடனே வரவேற்று முதலில் அறிக்கை விட்டிருப்பது யார் தெரியுமா? பெப்சி நிறுவனம்.

இது பாட்டில் தேசம்தான் – இரண்டு அர்த்தங்களிலும், சந்தேகமே வேண்டாம்.

– செழியன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________

பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி !

102

திருச்சி பகுதி புதிய ஜனநாயகம் விற்பனைக் குழு சார்பில் 26-5-2013 அன்று காலை 10 மணி அளவில் சத்திரம் பேருந்து நிலையம், SRC ரோடு, சிந்தாமணி காலை காய்கறி மார்க்கெட் எதிரில் அமைந்துள்ள சுருதி திருமணமஹாலில் தோழர் சேகர் தலைமையில் வாசகர் வட்டம் கூட்டம் நடை பெற்றது. 100-க்கும் மேலான வாசகர்கள் கலந்து கொண்டனர்.

வாசகர் வட்ட கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய தோழர் சேகர் பேசுகையில் இன்றைய பத்திரிக்கை உலகில் 2 வகையான பத்திரிக்கைகள் வெளிவருகின்றன, அதில் ஒரு வகை முதலாளிகள் நலனுக்காக வெளிவருகின்றன. அவர்களின் விளம்பரத்தை நம்பியே பெரும்பாலான பத்திரிக்கைகள் வெளிவருகின்றன. மற்றொன்று போலீசு தரும் பொய் செய்திகளை வெளியிட்டு பிழைப்பு நடத்துகின்றன. அதையும் மீறி மக்கள் பிரச்சினைகளை எழுதினாலும் அதற்கு காரணமானவர்கள் யார் என்பது பற்றியோ, அதற்கான தீர்வு பற்றியோ எழுதுவதில்லை. உதாரணத்திற்கு தக்காளி ரூ 45-க்கும், சின்ன வெங்காயம் ரூ 80-க்கும், இஞ்சி ரூ.250 க்கும் விற்பனை செய்வதை பற்றி எழுதுகிறார்கள். அதற்கு, இந்த அரசு விவசாயத்தை தனியார்மயமாக்கி, விவசாயத்தையே ஒழிக்கும் வேலை செய்வதை பற்றியும், உற்பத்தியான பொருள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் உலகம் முழுவதும் செய்யப்படுகிறது என்பதையும், உலக அளவில் தேவையில்லாத பொருள்தான் நமது நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற நிலை உள்ளது என்பதையும், விவசாய உற்பத்தி பொருள், விலை குறைய வேண்டும் என்றால், அரசு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், விவசாயத்தை தனியார்மயமாக்கும் கொள்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.

இதே போல தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை கல்விக் கட்டணம் என்ற பெயரில் உறிஞ்சுகிறார்கள். இந்த நிலையில் கல்வித் துறை அதிகாரிகளும், இந்த சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி பணத்தை சுருட்டுகிறார்கள் என பத்திரிக்கைகள் எழுதுகின்றன. ஆனால் இதற்கு காரணம் கல்வி தனியார் மயமானது தான் என்பதையும், கல்வி அரசு மயமாகும் போதுதான், கல்வி கொள்ளையை தடுத்து நிறுத்த முடியும் என்பதையும் எழுதுவதில்லை. கல்வி முதலாளிகளை, அரசாங்கத்தை பகைத்துக் கொண்டால் தமது வருமானம் குறையும் என்று அஞ்சி அவர்கள் உண்மையை எழுதுவதில்லை.

புதிய ஜனநாயகம், அரசு பின்பற்றும் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகள் தான் கல்விக் கொள்ளை, விலைவாசி உயர்வுகளுக்கு காரணமென்றும், இந்த அரசை எதிர்த்து போராடுவதன் மூலமே மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் உண்மையை எழுதுகிறது. புதிய ஜனநாயகம் மக்கள் பத்திரிக்கையாக உள்ளது, புதிய ஜனநாயகம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று தனது உரையை முடிவு செய்தார்.

வாசகர் வட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர், புதிய ஜனநாயகத்தில் ஆபாசமுமில்லை, விளம்பரமும் இல்லை, செய்தி ஆவணமாகவே இருக்கிறது என்றார். 1983-ல் ஈழப்போராளிகளைப் பற்றி புதிய ஜனநாயகத்தில் வந்த கட்டுரையின் நிலைப்பாடு இன்றைக்கும் மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. அந்த வகையில் நமது பத்திரிக்கை உலகில் முடிசூடா மன்னனாக விளங்குகிறது என்றும் கூறினார்.

மற்றொரு வாசகர் நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், ஒருமுறை புதிய ஜனநாயகம் ஒன்று வாங்கி படித்ததாகவும், அதில் ஜெயலலிதாவின் உருவத்தை பற்றி வித்தியாசமாக வரைந்து வெளியிட்டதை பார்த்து ஆச்சர்யப்பட்டதாகவும், இந்த அளவு தைரியமானவர்கள் யார் என்று சந்தேகப்பட்டதாகவும், பின்னர் தோழர்கள் அறிமுகமானதும் தொடர்ந்து பத்திரிக்கை படித்து வருவதாகவும், INTUC, AITUC உட்பட பல சங்கத்திலிருந்தாகவும் பின்னர் அவற்றை விட்டு விலகிவிட்டதாகவும் கூறினார்.

வேறு ஒரு வாசகர், திருச்சி சித்தார் வெசல்ஸ் நிறுவனத்தில் இளைஞர் ஒருவர் முதலாளியின் லாப வெறியால் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதை கண்டித்து தீக்குளித்து இறந்து போன செய்தியை CITU காரர்களும் தனது பத்திரிக்கையில் போட்டிருந்தனர். புதிய ஜனநாயகத்திலும் இச்செய்தி வெளிவந்தது. அதை படித்த CITU தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத்தை காட்டி, CITU -காரர்களை நோக்கி, ‘ நீயும் எழுதியுள்ளாய்’ ஆனால் புதிய ஜனநாயகத்தில் வந்த உண்மை செய்தியை பாருங்கள் என கோபம் கொப்பளிக்க வெகுண்டு எழுந்து தொழிலாளர்கள் பற்றி பேசியதாக கூறினார்.

தருமபுரி கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அம்பலப்படுத்தி கட்டுரை வந்திருந்தது. அதைப்படித்த அக்கட்சியின் தொண்டர் ஒருவர் இவ்வளவு விசயம் தெரிந்த பின்னர் இந்த கட்சியில் இருக்க விரும்பவில்லை என விலகிக் கொண்டார் என ஒரு வாசகர் கூறினார். இப்படி பலரும் புதிய ஜனநாயகத்தின் அனுபவத்தை விளக்கி பேசினார்கள்.

வாசகர் வட்டத்தின் முடிவில் இந்தியா VS பாகிஸ்தான், இந்தியா VS சீனா பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலர் தோழர்.காளியப்பன் சிறப்புரை நிகழ்த்தினார்.

தோழர் காளியப்பன்

கடந்த ஜனவரி மாதத்தில் வடமேற்கு எல்லையில் இரு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு அதில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டதாக வந்த தகவல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ், பாஜக தலைவர்களும் பிறரும் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆத்திரமுற்றனர். இக்குற்றச்சாட்டு குறித்து சர்வதேச விசாரணை நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் கருத்தை பிரதமர் நிராகரித்தார். துண்டிக்கப்பட்ட இராணுவ வீரரின் தலையை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இந்திய இராணுவம் பத்து பாகிஸ்தான் இராணுவத்தினரின் தலைகளையாவது கொய்து வரவேண்டும் என்று ஆவேசத்துடன் முழங்கினார் பாஜகவின் சுஷ்மா சுவராஜ். அதுபோலவே மே 13-ம் தேதி சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்துவிட்டதாக எழுந்த புகார் மீதும் இதே பாணியில் கூச்சலிட்டனர் ஓட்டுக்கட்சிகள். இந்திய எல்லைக்குள் நுழையவில்லை என்ற சீன இராணுவத்தின் கருத்து சரியே என்று ஓர் இந்திய அதிகாரி சொன்னதை யாரும் காதில் வாங்கவில்லை.

china-india-warகடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலிய மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 94% இந்தியர்கள் பாகிஸ்தானையும், 84% இந்தியர்கள் சீனாவையும் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக கருதுவதாகக் கண்டறியப்பட்டது. பாகிஸ்தான் இந்தியாவின் பகை நாடு, முஸ்லீம்கள் எதிரிகள், சீனா இந்தியாவை ஆக்கிரமித்த நாடு, இப்போதும் ஆக்கிரமிப்பு நோக்கத்தில் செயல்படும் நாடு என்ற கருத்து மிக வலுவாக பிரச்சாரம் செய்யப்பட்டு சாதாரண இந்தியர்கள் வரை அவர்களது இரத்தத்தில் கலந்து பகையுணர்ச்சியாக வளர்ந்துள்ளது. 1947-ல் பிரிட்டிஷ் அரசு மத ரீதியில் இந்தியாவைப் பிரித்தது, பின்னர் காஷ்மீரின் ஒருபகுதியை ஆக்கிரமித்தது, 1962-ல் இந்திய சீனப்போர் ஆகிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே பாகிஸ்தானையும் சீனாவையும் பகை நாடுகளாக்கருதும் மனோநிலையை ஆர் எஸ் எஸ், பாஜகவும் பிறரும் தொடர்ச்சியாக வளர்த்து வருகின்றனர்.

ஈழப்பிரச்சனையில்கூட சீனாவும் பாகிஸ்தானும் ராஜபக்சேவை ஆதரிப்பதால் இந்தியாவின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க தனி ஈழத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும், இதுவே சிறந்த இராஜதந்திரம் என்று நெடுமாறன், வைகோ உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் பேசுவதன் மூலம் தனி ஈழத்திற்கான நியாயத்தை விட பாகிஸ்தான், சீனா எதிர்ப்பையே தமிழக மக்கள் மத்தியில் அழுத்தமாக பிரச்சாரம் செய்கிறார்கள். பாகிஸ்தான் எதிர்ப்புக்கு இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய விரிவாக்க நோக்கம் முக்கியக் காரணம். ஆனால் அன்றைய சீன எதிர்ப்பிற்கும், போருக்கும் முக்கியக் காரணம் கம்யூனிசக்கொள்கை பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதே.

india-pakistan-warமுஸ்லீம்கள் இந்தியாவை மதரீதியில் துண்டாடி விட்டார்கள் என்பதாகவே ஆர் எஸ் எஸ் பாஜக கும்பல் இன்றும் பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மை யாதெனில் அன்று வளர்ந்து வந்த முஸ்லீம் தரகு முதலாளிகளான இஸ்பானி, சர் ரபியுதீன் ஆதம்ஜி, சர் அப்துல்லா ஆரூண் போன்றவர்கள் தங்கள் சுரண்டல் நலனுக்காக ஜின்னா தலைமையில் பிரிவினை கோரிக்கையை முன்வைத்தனர் என்பதேயாகும். பிர்லா போன்ற இந்துத் தரகு முதலாளிகள் சிலரும் கூட பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தனர். 1947 அதிகார மாற்றத்திற்கு முன்னிருந்தே இந்திய இந்துத்தரகு முதலாளிகள் அகண்ட பாரதக் கனவைத்தாண்டி இந்துமாக்கடல் பகுதியையும், பசிபிக்கடல் பகுதியையும் ஆக்கிரமிக்கும் வெறியிலேயே இருந்தனர். 1945–ல் இந்தியாவைக் கண்டறிதல் என்ற நூலில் நேரு வெளிப்படையாகவே எழுதினார். ‘ உலகின் குவிமையமாக இப்போது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி உள்ளது. எதிர்காலத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதி குவிமையமாக மாறக்கூடும். இந்தியா பசிபிக் பெருங்கடல் பகுதி அரசாக இல்லாத போதிலும் தவிர்க்க இயலாதவாறு அங்கு இந்தியா முக்கிய செல்வாக்கு செலுத்தும். இந்தியப்பெருங்கடல் பகுதியிலும், தென்கிழக்கு ஆசியா முதல் மத்தியக் கிழக்குப் பகுதி வரை பொருளாதார அரசியல் நடவடிக்கைகளின் மையமாக இந்தியா வளரும். இதன் விளைவாக சிறு சிறு தேசிய அரசுகள் இல்லாமல் போய்விடும். அவை கலாச்சார சுயாட்சிப் பகுதியாக நீடிக்கலாமே தவிர சுயேச்சையான அரசியல் அதிகாரம் கொண்ட அரசுகளாக நீடிக்க முடியாது’ என்றார் நேரு.

இந்திய தரகுமுதலாளிகளுக்கு இருந்த விரிவாக்க நோக்கம் பாகிஸ்தான் தரகு முதலாளிகளுக்கும் இருந்தது. இவ்விரு சுரண்டல் கூட்டத்தின் ஆக்கிரமிப்பு வெறிதான் காஷ்மீரை பங்கு போடும் போராக மாறி இன்று வரை இரு நாட்டு மக்கள் மத்தியிலும் பகையுணர்வை வளர்க்கும் அடிப்படையாக நீடிக்கிறது. இந்தியத் தரகு முதலாளிகளின் மேலாதிக்க வெறிதான் 1971-ல் பங்களாதேஷ் பிரிவினை, 1974-ல் இராணுவ நடவடிக்கை மூலம் சிக்கிம் இணைப்பு எனத்தொடர்ந்தது. இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்றதும், கொலைகாரன் ராஜபக்சேவுக்கு துணை போவதும் இதற்குத்தான். அண்டை நாடுகள் மீதான சுரண்டலையும், ஆதிக்கத்தையும் மூடி மறைக்கவும், நியாயப்படுத்தவும்தான் மூச்சுவிடாமல் வல்லரசுக் கூச்சலிட்டு போலி தேசிய வெறியை மக்கள் மத்தியில் கிளப்புகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக இருந்த பிற்போக்கு சியாங்கேஷேக் ஆட்சி வீழ்த்தப்பட்டு 1949-ல் மாபெரும் மக்கள் சீனக்குடியரசு உருவானது. சிதைந்துபோன உள்நாட்டுப்பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதிலேயே முழு கவனம் செலுத்திய சீன அரசு மிகக்குறுகிய காலத்திலேயே மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது. எல்லா வகையான சுரண்டலும், சமூகக்கேடுகளும் அகற்றப்பட்டன. ‘சீன மக்களின் நேர்மை எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதது. சீன மக்களின் கண்ணியம், அமைதி, மனித இயல்பின் அடிப்படைப் பண்புகள் இவை சீன தேசியத்தன்மை மட்டுமல்ல; புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்களுமாகும். சோசலிசம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இதோ ஒரு சாட்சி சீனா’ என 1957-ல் சீனாவுக்குப்பயணம் செய்த அறிஞர் டி.டி கோசம்பி சீனப்புரட்சி பற்றிய கட்டுரையில் எழுதினார்.

china-india-nathulaசீனப்புரட்சியின் சாதனைகள் உலகம் முழுவதுமுள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு மாபெரும் ஊக்கத்தையளித்தது. அதே நேரத்தில் ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளான அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளை அச்சுறுத்தியது. கம்யூனிஸ்ட்டுகளை ஒழிப்பதற்கு சர்வாதிகாரிகளுக்கு உதவுவது என்பதை அமெரிக்கா தனது கொள்கையாகவே பிரகடனம் செய்தது. எனவே சீனாவை எப்போதும் போர்ச்சூழலில் இருத்துவதற்கு அமெரிக்கா ஏராளமான சதிவேலைகளை அரங்கேற்றத்தொடங்கியது. உதட்டில் சோசலிசத்தை உச்சரித்த நேரு செயலில் அமெரிக்காவின் கைப்பாவையாக சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தியாவில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவது, கம்யூனிஸ்டுக்கட்சியை தடை செய்வது என கம்யூனிஸ்டு எதிர்ப்பை தீவிரப்படுத்தினார். எல்லைப் பிரச்சனையை காரணம் காட்டி வடமேற்கு, வடகிழக்கு எல்லையில் சீனாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார் நேரு. எல்லைப் பிரச்சனையை பேச்சு வார்த்தையில் தீர்த்துக் கொள்ள சீனப்பிரதமர் சூயென்லாய் எடுத்த முன்முயற்சிகளை நேரு நிராகரித்தார். ஆனால் இதே கால கட்டத்தில் பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மியான்மர் (அன்று பர்மா) ஆகிய எல்லா அண்டை நாடுகளுடனும் எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தையில் சுமுகமாக தீர்த்துக்கொண்டது சீனா. 1962 அக்டோபர், நவம்பரில் நடந்த போரில் இந்தியா அவமானகரமாகத் தோற்றது. உலகமே வியக்கும் வண்னம் சீனா ஒருதரப்பாகப் போர்நிறுத்தம் அறிவித்து எல்லையிலிருந்து பனிரெண்டு மைல் பின்வாங்கிச்சென்றது.

கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை இறுதிவரை மூர்க்கமாக நடத்திய பிரிட்டிஷ் எழுத்தாளர் பெர்னாட்ஷா ‘வெற்றிபெற்று முன்னேறிய இராணுவம், தானே போரை நிறுத்திய வேறொரு உதாரணத்தை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. சீனர்கள் நியாயமாகவும், தன்னடக்கமாகவும் நடந்து கொண்டனர். நான் வியப்புக்குள்ளாதைப் போலவே உலகமும் வியப்புக்குள்ளானது. ஏனெனில் போர் தவிர்க்கப்பட வேண்டும் என்ற தெளிவான வலுவான நோக்கத்திற்காக தாம் கஷ்டப்பட்டு தியாகம் செய்து பெற்ற வெற்றியை தியாகம் செய்யும் உன்னத நடவடிக்கையினை சீனர்கள் மேற்கொண்டனர்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். அன்று குடியரசுத்தலைவராக இருந்த இராதாகிருஷ்ணன் நேருவின் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். ‘சீனாவுடனான உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டுவிட்டது. எல்லைப்பிரச்சனை தொடர்பாக சூயென்லாய் முன்வைத்த யோசனைதான் இரு நாடுகளுக்கும் நல்லது ’ என இந்தியாவின் முதல் வெளியுறவுச் செயலாளராக இருந்த கேபிஎஸ் மேனன் குறிப்பிட்டார். இப்படி வம்படியாக இந்தியாதான் சீனா மீது போர் தொடுத்தது என்பதை ஏராளமான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் நக்சல்பாரிப் புரட்சியாளர் பேராசிரியர் சுனிதிகுமார் கோஷ்.

சீனப்போர் முடிந்தபிறகு காங்கிரஸ் நாடாளுமன்றக்குழுக்கூட்டத்தில் பேசிய நேரு ‘சீனாவுடனான பிரச்சனை வெறும் பிரதேசம் தொடர்பான பிரச்சனை என்பதற்கு அப்பால் கூடுதலான விஷயங்கள் உள்ளன’ என்றார். அந்தக்கூடுதலான விஷயங்கள் என்ன என்பதை இந்திராகாந்தி வெளிப்படையாக உடைத்தார். ‘சீனப்பிரச்சனை பிரதேசத்திற்கானது அல்ல, ஆனால் சித்தாந்த ரீதியிலானது, அரசியல் ரீதியானது’ என்றார் இந்திரா. எனவே கம்யூனிசத்தை ஒழிக்கவும், சீனாவை முடக்கவும் ஏகாதிபத்திய முதலாளிகளின் கைக்கூலியாக நின்று நடத்தியதுதான் நேருவின் சீனப்போர். இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டுத்தான் சீனாவை எதிரியாகச் சித்தரித்தனர்.

china-india-armyமாவோ மறைவிற்கு பின் 1980-களில் டெங் கும்பல் முதலாளித்துவப் பாதையைப் புகுத்தியது. இன்று முற்று முழுதான முதலாளித்துவ நாடாக சீனா சீரழிந்த நிலையில் எந்தத் தரகு முதலாளிகளுக்காக சீனாவை எதிரி என்று பிரச்சாரம் செய்தார்களோ அதே சீனாவில் இன்று டாடா, டிவிஎஸ் என சுமார் அறுபது முதலாளிகள் மூலதனமிட்டு தொழில் நடத்துகின்றனர். அண்மையில் இந்தியா வந்த சீனப்பிரதமர் லீ கெகியாங் அடுத்த மூன்று ஆண்டுகளில் முன்னூறு சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவிருப்பதாகவும், இந்திய சீன வர்த்தகம் 55 இலட்சம் கோடியாக உயரும் எனவும் கூறியிருக்கிறார். தூரத்தில் இருக்கும் உறவுக்காரரை விட அண்டை வீட்டுக்காரனே அதிகம் உதவுவான் என்று சீனப்பழமொழியை எடுத்துக் காட்டியிருக்கிறார். இன்று இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளி சீனாதான். அதே போல பாகிஸ்தான் பரமவிரோதி என்று கூப்பாடு போடப்படும் நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியும், அங்கிருந்து இறக்குமதியும் அதிகரித்திருக்கின்றன. உதாரணத்திற்கு கச்சா பருத்தி ஏற்றுமதி மட்டும் கடந்த ஆண்டில் 313% உயர்ந்திருக்கிறது. அதேபோல பாகிஸ்தான் பங்குச்சந்தையில் இந்திய முதலீடும் உயர்ந்திருக்கிறது.

முதலாளிகளைப் பொறுத்தவரை பாகிஸ்தானும், சீனாவும் நெருக்கமான கூட்டாளி நாடுகள்தான். மூலதனத்திற்கும், சுரண்டலுக்கும் கம்யூனிசம்தான் எதிரி. எனவே தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை மூடிமறைக்கவும், விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை, கடும் ஏற்றத்தாழ்வு, கார்ப்பரேட் முதலாளிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டல் இவற்றிலிருந்து மக்களை திசைதிருப்பவும், தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கவும் சீனாவையும், பாகிஸ்தானையும் எதிரியாகச் சித்தரித்து தேசிய வெறியையும், போர் வெறியையும் ஆளும் வர்க்கமும் அதன் ஊது குழல்களான ஊடகங்களும் மூச்சுவிடாமல் பிரச்சாரம் செய்கின்றன. இந்த உண்மைகளையும், ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சி மோசடிகளையும் அம்பலப்படுத்தி பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையை உயிர்மூச்சாகக் கொண்டு வெளிவரும் நமது புதிய ஜனநாயகம் இதழைப் போர் ஆயுதமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியது நமது இன்றைய கடமை.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி :
பு.ஜ முகவர்,  திருச்சி

மனுஷ்யபுத்திரனின் ஊழல் தமிழ் உணர்வு !

18

முதலில் சீனிவாச புராணம் – ஒரு மர்மக் கதை கட்டுரையை படித்து விடுங்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.

க்கீரன் வார இதழில், எதிர்க்குரல் என்ற தொடரை கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதி வருகிறார். மே 29-31 தேதியிட்ட இதழில் ‘சூதாட்டமும் சகுனிகளும்’ என்ற தலைப்பில் ஐபிஎல் சூதாட்டப் பிரச்சினைகளை, ஸ்ரீசாந்திலிருந்து  குருநாத் மெய்யப்பன் வரை தொகுத்து எழுதியிருக்கிறார்.

அதில்

“குருநாத் மெய்யப்பன் சினிமாவையும் கிரிக்கெட்டையும் எப்படி அழகாக இணைத்தார் என்பது ஒரு சுவாரசியமான, கிளுகிளுப்பான கதை. பிரபல வீரர்களுடன் பிரபல நடிகைகள் நட்பு கொள்வதற்கான அற்புதமான சீதோஷ்ண நிலை சென்னையில் அமைந்தது”,

என்ற வரிகள் முக்கியமானது. நக்கீரனும் அதைத்தான் கொட்டை எழுத்தில் மேற்கொள் காண்பித்து வடிவமைத்திருந்தது.

இதனால் படிப்பவர்களுக்கு இந்த சமூக அமைப்பு, ஊழல் மீது கோபம் வருகிறதோ இல்லையோ  கிளுகிளுப்பு நிச்சயம் வர வேண்டும் என்று நினைத்திருப்பார் போலும். கழுதைக்கு வாக்கப்பட்டால் அம்மா என்று கத்த முடியாது. போகட்டும், இங்கே நாம் பேச வந்தது அவரது திடீர் தமிழ் உணர்வு குறித்து.

இந்த சூதாட்ட வலைப் பின்னலில் சென்னை அணியும், சீனிவாசனும் மட்டும் ஏன் குறி வைத்து தாக்கப்பட வேண்டும் என்பது அவரது  கேள்வி. சரத்பவாரும், லலித் மோடியும் தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்கு முயல்கிறார்கள் என்கிறார் மனுஷ்யபுத்திரன். கிரிக்கெட்டின் மையமாக முன்பு மும்பை இருந்தது, தற்போது அது சென்னைக்கு மாறியிருப்பதற்கு சீனிவாசன்தான் காரணமாம். இவ்வாறு தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு இந்திய கிரிக்கெட் அதிகாரம் உருவாவது குறித்து வட இந்திய கிரிக்கெட் அரசியல் சக்திகள் மிகுந்த எரிச்சல் அடைந்தனவாம். இப்படித்தான் கேரளாவின் ஸ்ரீசாந்த் பலியிடப்பட்டு அடுத்து சென்னை அணியும், சீனிவாசனும் குறிவைக்கப்படுகிறார்களாம்.

அருண் ஜேட்லி, ராஜீவ் சுக்லா போன்ற ‘வட இந்தியர்’களெல்லாம் ஆரம்பத்தில் ‘தமிழர்’ சீனிவாசனை ஆதரித்ததற்கும், சரத்பவாரும், லலித் மோடியும் சீனிவாசனை இப்போது எதிர்ப்பதற்கும்  தனிப்பட்ட உறவோ, தமிழர் மீதான நேசிப்போ  காரணம் அல்ல. இதுவும் முதலாளிகளுக்கிடையே நடக்கும் அணிச் சண்டை. குறிப்பிட்ட அணி போனால் மற்ற அணி பலம் பெறும். அந்த கணக்குதான் இவர்களை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ வைக்கிறது. இதிலெல்லாம் தமிழ் உணர்வுக்கு ஒரு வெங்காயமும் கிடையாது.

manushya-puthiran

திராவிட இயக்கம் சொன்ன “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற முழக்கத்தை, காங்கிரசோடு சேர்ந்து கிண்டல் செய்த சிறுபத்திரிகை உலகைச் சேர்ந்த எழுத்தாளரான மனுஷ்ய புத்திரன் இன்று அதே முழக்கத்தை ஏற்றுக் கொண்டிருப்பது பரிணாம வளர்ச்சியெல்லாம் இல்லை. தரகு முதலாளித்துவ கட்சியாக மாறி விட்ட திமுகவே அந்த முழக்கத்தை மறந்தும் பேசுவதில்லை. தனது பிரபலத்தை தக்க வைப்பதற்கு இத்தகைய உணர்ச்சி சார்ந்த அடையாளங்கள் சுலபமானது என்பதால் அவர் தெரிந்தே இந்த சந்தர்ப்பவாதத்தை மேற்கொள்கிறார். ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் போராட்டமெல்லாம் மெய் உலகத்திலும், இணையத்திலும் சூடுபிடித்துள்ள நிலையில் அவரது சிறுபத்திரிகை திராவிட இயக்க எதிர்ப்பு மரபு அவசியம் கருதி ஒளிந்து கொள்கிறது.

மனுஷ்யபுத்திரனது பார்வையை சுப்ரமணியம் சுவாமியும்  கூறியிருக்கிறார். இதன் பின்னே சீனிவாசனது ‘நண்பர்’ அருண் ஜேட்லி எனும் உண்மை இருக்கிறது, கூடவே சீனிவாசனது பூணூல் அழுக்கடைவது இவருக்கும் அழுக்காவது போல அலைக்கழித்திருக்கலாம். அதனால்தான் சுப்ரமணியம் சுவாமியும் ‘வட இந்திய ஊடகங்களின் சதி’யை எதிர்த்திருக்கிறார். ஆனால், ஈழம் குறித்து வட இந்திய ஊடகங்கள் காட்டிய வெறுப்பையும் பாரா முகத்தையும் இதே சு.சாமி ஆதரித்திருக்கிறார். எனவே, மாமா சாமியிடம் இருக்கும் தமிழ் உணர்வும் கவிஞரை போன்ற ஒரு சந்தர்ப்பவாத உணர்வுதான்.

இந்தியா சிமெண்ட்சின் சீனிவாசன் பிறப்பால் தமிழரென்றாலும் வாழ்க்கையால் ஒரு தரகு முதலாளி. அவரைப் போன்றவர்களுக்கு இன உணர்வோ, மொழி உணர்வோ ஏன் மத உணர்வு கூட பெருமளவுக்கு இருக்காது. ஏனெனில் அவர்களின் வர்த்தக உணர்வுக்கு இவை எதிரானவை. இதனால்தான், கலாநிதி மாறன் தன்னுடைய ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு ஒரு சங்ககரா எனும் சிங்கள வீரரை தலைவராக்கினார். ஆனால், மேற்கண்ட மத, மொழி, இன உணர்வுகளை தேவை கருதி பயன்படுத்திக் கொள்வார்கள். அதுதான் கவிஞர் மற்றும் சில தமிழ் ஊடகங்களும்  சீனிவாசனை இப்போது தமிழராக காட்டும் காட்சிப் பிழைக்கு காரணம்.

தரகு முதலாளிகளின் வர்த்தகம் முழு இந்தியாவையும் கவ்வியிருப்பதால் அவர்கள் ஒரு தேசிய இனத்தோடு சுருங்கிக் கொள்ள முடியாது. இவர்களது மூலதனம் எந்தெந்த நிறுவனங்களில் மறைந்திருக்கிறது என்று பார்த்தால் அது பல மாநிலங்களின் தொழில்களுக்கும் இட்டுச் செல்லும். அதே போல இவர்களது தொழில்களிலும் தமிழ்நாட்டைத் தாண்டிய பல்வேறு மூலதனங்கள் இருக்கும்.

சான்றாக, இந்தியா சிமெண்ட்சில் இருக்கும் முப்பது சதவீத பங்குகள் பன்னாட்டு நிதி நிறுவனங்களுடையவை. இதனால் சீனிவாசன் தமிழ்ப் படையுடன் லண்டன், நியூயார்க் சென்று புலிக்கொடி நாட்டினார் என்று பொருளல்ல. தரகு முதலாளிகள் என்பவர்களே ஏகாதிபத்தியங்கள், பன்னாட்டு நிறுவனங்களது ஏஜெண்டுகள் என்பதால் இவர்கள் அவர்களுக்கு கப்பம் கட்டுவதும் இவர்களுடைய தொழில், மூலதனம், வர்த்தகம், இலாபம் அனைத்திலும் அவர்களுடைய பிடியும் கட்டுப்பாடும் இருக்கவே செய்யும்.

அடுத்து இந்தியா சிமெண்ட்சின் வர்த்தகம் இந்தியா முழுவதிலும் இருக்கிறது. மறைந்த ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டியுடன் சேர்ந்து ஆந்திரத்தில் பெரும் ஊழல் நடத்தியவர் இந்த சீனிவாசன். இதெல்லாம் உள்ளூரில் மட்டும் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் ஒரு தமிழனால் சாத்தியமாவது அல்ல.

csk

அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கியிருக்கும் சீனிவாசன் அதில் எந்த இடத்திலும் தமிழ் அடையாளத்தையோ, குறியீட்டையோ கொடுக்கவில்லை. அணித்தலைவர் தோனியிலிருந்து, நட்சத்திர ஆட்டக்காரர்களான சுரேஷ் ரெய்னா, ஹூஸ்ஸி, பிராவோ வரையிலான வீரர்கள் அனைவரும் வெளி மாநில மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள். கோச் பிளெம்மிங்கிலிருந்து, அணிக்கு புரவலர்களான 7 அப், ரீபோக், ஹெர்குலிஸ், உஷா, கல்ஃப் முதல் அதிகார பூர்வ ஆப்பிள் புரவலரான வாஷிங்டன் ஆப்பிள் வரை இங்கே சிஎஸ்கே அணிக்கு மம்மு கொடுப்பது அனைத்தும் தமிழ் முதலாளிகள் அல்ல.

இது நாள் வரை அணி பொறுப்பில் இருந்த குருநாத் மெய்யப்பனும் அக்மார்க் ‘தமிழர்’ கிடையாது. வெள்ளைப் பணியாரத்திற்கு புகழ் பெற்ற ‘செட்டி நாட்டை’ச் சேர்ந்த இந்த மைனர் வாங்கியிருக்கும் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசுப் படகு ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்கப்பட்டது. இதில் எங்கே இருக்கிறது வெள்ளைத் தமிழ் பணியாரம்?

srinivasan-cement

ஆகவே சீனிவாசன் தமிழர் என்பதால் வட இந்திய ஆதிக்க சக்திகள் அவரை ராஜினாமா செய்யச் சொல்கின்றன என்பது முழுப்பொய். அது உண்மை எனில் ஆரம்பத்தில் லலித் மோடி தவிர சுக்லா, அருண் ஜேட்லி, சரத் பவார் அனைவரும் சீனிவாசனை ஆதரித்ததற்கு என்ன காரணம்? இன்று வட இந்திய ஆதிக்கம் செய்பவர்கள், சீனிவாசனை விதிமுறைப்படி நீக்குவதற்கு பதில் ராஜினாமா செய்யச் சொல்லி கெஞ்சுவது ஏன்?

மேலும் சீனிவாசனுக்கு எதிராக முழுவீச்சுடன் இறங்கியிருக்கும் ஏசி முத்தையாவை தெலுங்கர் என்றா வரையறுப்பீர்கள் மனுஷ்யபுத்திரன்? இவரும் ஒரு அக்மார்க் தமிழ் செட்டியாரல்லவா! பிறகு ஹிந்து பேப்பர், தினமணி என்று ஏராளம் ‘தமிழ்’ நாட்டு சக்திகள் கூட சீனிவாசனை நீங்கச் சொல்லி மன்றாடுகின்றனவே, ஏன்? அதே போல சிஎஸ்கே மீடியா பார்ட்னரான தினத்தந்தியும், தந்தி டிவியும் இவரது ஊழல் குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்கு தமிழ் உணர்வா காரணம்!

அதே போல திமுக பிரமுகர்களும் குறிப்பாக அழகிரி மகன் தயாநிதியும் கூட சீனிவாசன் அருமையான மனிதர் என்று நற்பத்திரம் வழங்கியிருக்கிறார். திமுக ஆட்சியின் போது இந்தியா சிமெண்ட்சுக்கும் கலைஞர் குடும்பத்திற்கும் ஏகப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள்  நடைபெற்றிருக்கின்றன. அதன்றி இங்கே தமிழ் உணர்வுக்கு என்ன வேலை?

நடைபெறுவது முதலாளிகளுக்கிடையே நடக்கும் பங்குச் சண்டை. அதில் நடக்கும் போட்டியின் காரணமாகவே இந்த ஐபிஎல்லில் மங்காத்தா விளையாடிய சிலர் பிடிபட்டிருக்கின்றனர், பலர் பிடிபடவில்லை. ஸ்ரீசாந்த் மலையாளி என்பதற்காக பிடிபட்டார் என்றால் அவருடன் கூட பிடிபட்ட அங்கித் பட்டேலும், ரமேஷ் சந்தோலியாவும் தென்னிந்தியர்களா என்ன? மும்பை சூதாடிகள், தில்லி சூதாடிகள் கூட்டத்தில் மருந்துக்கு கூட தமிழ் இல்லையே? சென்னை சூதாடிகளிலும் கூட வட இந்திய கிரிமினல்களும் இருக்கிறார்கள். எனவே, இந்த பாரத ஒற்றுமையை தமிழர் உணர்வுக்கு வந்த இழுக்காக நினைப்பது மடமை மட்டுமல்ல பிரச்சினையை திசை திருப்பும் குற்றமும் ஆகும்.

புதிய தலைமுறை விவாதம் ஒன்றில் வெங்கடேசன் என்பவர் ஐபிஎல் என்பதே சூதாட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று என்று வெளுத்து வாங்கும் போது, கிழக்கு பதிப்பகம் பத்ரி கூட பயந்தவாறு அத்தகைய சில கருத்துக்களை ஏற்றுக் கொண்டு பேசும் போது, மனுஷ்யபுத்திரன் மட்டும் முடிந்த அளவில் உளறினார்.

“அதாவது பெட்டிங் வேறு, பிக்சிங் வேறு, பிக்சிங் செய்வதால் பெட்டிங் கட்டுபவர்கள்தான் ஏமாற்றப்படுகிறார்கள், பெட்டிங் என்பது யார் வெற்றி பெறுவார் என்று ஆய்வு செய்து கட்டும் அறிவு, அதனால் அது உலகநாடுகளில் லீகல், இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும், பெட்டிங் என்பது மற்ற நாடுகளில் பல துறைகளில் உண்டு” என்றெல்லாம் பேசினார்.

ஒரு அணி விளையாடி வெற்றி பெறுவதை, விளையாட்டு உணர்வுடன் பார்ப்பதும், சூதாட்டம் கட்டி பார்ப்பதும் எப்படி ஒன்றாகும்? உழைப்பு இல்லாமல் இப்படி சூதாடி பணம் சேர்ப்பதும், இழப்பதும் லீகலோ இல்லையோ நிச்சயம் மோசடியில்லையா? லாட்டரி சீட்டையே இன்னும் கவர்ச்சியாக கொண்டு வரும் இத்தகைய சூதாட்டங்களை ஒட்டு மொத்தமாக தடை செய்வதை விடுத்து, அதை அனுமதிக்க வேண்டும் என்ற அளவுக்குத்தான் கவிமனம் சிந்திக்கிறது.

செய்திகளை நேர்த்தியாகவோ, விசயங்களுடனோ கொடுப்பதற்கு அறிவோ, ஆட்களோ இல்லாத தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் இத்தகைய கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டுகளை அமர்த்திக் கொள்கின்றன. மேலும் எல்லா பிரச்சினைகளுக்கான தீர்வையும் தனியொருவனாக தீர்க்க வேண்டிய சூப்பர் மேனாக இருக்க வேண்டியிருப்பதால், கவிமனம் போதையடிக்காமலேயே உளறுகிறது.

சன் டிவி பொறுக்கி ராஜாவை எதிர்த்து போராடும் அகிலாவிற்கு ஆதரவு தெரிவிக்காமல் கள்ள மௌனம் சாதிக்கும் மனுஷ்ய புத்திரன், அந்த மௌனத்திற்கு சம்பளமாய் சன் டிவி கச்சேரிகளுக்கு செல்கிறார். அதே போல, சீனிவாசனை ஆதரிக்க வேண்டும் என்ற தந்தி டிவியின் பாட்டுக்கும் வாயசைக்கிறார். இப்படி கூலிக்கு மாரடிக்கும் இத்தகைய எழுத்தாளர்கள்தான் சாதாரண மக்களின் குரலை எதிரொலிக்கிறார்களாம்.

ஆகவே, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் கூட நமக்கு புரியவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை. ஆனால், கருத்து கந்தசாமியாய் அவதாரம் எடுத்து கவிஞர் கூறும் அல்லது கூற மறுக்கும் கருத்துக்களின் அயோக்கியத்தனங்களை புரிந்து கொள்வது அவசியம் !

புதுவையில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்!

7

தனியார் மயம், தாராள மயத்தின் கொடூரத்தை மக்கள் மீது திணிக்கும் புதுச்சேரி அரசின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டுவோம்!
ஒரே ஆண்டில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மின்துறை அலுவலகம் முற்றுகை!

ந்தியாவிலேயே முதன்முறையாக புதுவையில் 87,000 வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பாக டாக்ஸ்போர்ஸ் என்ற நிறுவனம் அறிவித்திருந்தது. இதனையொட்டி புதுவையில் படிப்படியாக, சிறிது சிறிதாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் புதுவையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கடந்த மாதம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது.

மேலும் புதுவையில் பெருமுதலாளிகளின் நகைக் கடைகளும் துணிக் கடைகளும் புற்றீசல் போல புதுவையை ஆக்கிரமிக்கத் தொடங்கின. பன்னாட்டு கம்பெனிகளின் வரிகளற்ற சொர்க்கம் என்று புகழப்படும் புதுச்சேரியில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கி வருகிறது புதுச்சேரி அரசு.

இதற்கு மாறாக சுழற்சி முறையில் மின் வெட்டு என்ற முறையில் தினசரி ஒன்றிரண்டு மணி நேரம் மின் தடை செய்து மக்களை வாட்டி வதைக்கிறது. இவற்றைக் கண்டித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் புஜதொமு அதன் ஒரு பகுதியாக மின் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 30-5-2013 மதியம் 2 மணிக்கு நடத்துவதாக அறிவித்திருந்தது.

திட்டமிட்டபடி முற்றுகை போராட்டத்திற்கு 2 மணி முதல் தொழிலாளிகள் மின்துறை அலுவலகத்தின் அருகில் வரத்துவங்கினர். அதே போல், போலீசும் 2 மணி முதல் மின்துறை அலுவலகத்திற்கு வரத் தொடங்கியது. மின்துறை அலுவலகத்தின் பாதுகாவலர்களிடம் சென்று மக்கள் யார் உள்ளே, வெளியே சென்றாலும் கண்காணித்து அனுப்பும்படி உத்தரவிட்டு கொண்டிருந்தது. அதன்படி யார் உள்ளே சென்றாலும் சோதித்த பின்பே அலுவலகத்திற்குள் அனுப்பினர்.

முற்றுகை போராட்டத்தை அறிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டியில் உள்ள தொலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு போராட்டம் நடக்குமா? நடக்காதா என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு கான்ஸ்டபிள் அருகில் இருந்த எஸ்.ஐ.யிடம் “இவர்கள் தீவிரவாதிகள் அய்யா, ஏற்கனெவே தொழிலாளர் அலுவலகத்திற்குள் உள்ளேயே சென்று அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இவர்கள் ஜனநாயக விரோதிகள், தீவிரவாதிகள்” என்று கூறிக்கொண்டு இருந்தார்.

அந்த எஸ்.ஐ. “சுவரொட்டியில் அரிவாள்சுத்தி படம் போடப்பட்டுள்ளதே இவர்கள் கம்யூனிஸ்டுகள் தானே, தீவிரவாதி என்கிறாயே” என்று கேட்டார்.

கான்ஸ்டபிள் “ஆமாம் சார் இவர்கள் தீவிர கம்யூனிஸ்டுகள்” என்று கூறிக் கொண்டிருந்தார். இதனால் பீதியடைந்த எஸ்.ஐ. கேட்ட அடிப்படையில் போலீசு குவிக்கப்பட்டது.

தோழர்கள் அனைவரும் வந்தவுடன், “இவர்கள் வெறும் முழக்கம் போட்டு விட்டு சென்று விடுபவர்கள்  அல்ல. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அவ்விடத்திற்கு புதிதாக வந்த மற்றொரு எஸ்.ஐ. சொன்னார்.

தோழர்கள் ஒன்று திரண்டு மின் கட்டணத்தை உயர்த்திய புதுவை அரசையும் அதற்கு அடிப்படையான தனியார் மயம், தாராள மயம் உலக மயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை எதிர்த்து முழக்கமிட்டபடியே அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். உடனே போலீசு தோழர்களை மறித்தது. தோழர்கள் போலீசின் தடையை மீறி தள்ளிக் கொண்டு முழக்கமிட்டபடியே முன்னேறி சென்றனர். தோழர்கள் முழக்கமிட்டுக் கொண்டு முற்றுகை நடத்திக் கொண்டிருந்த போது, “இத்தோடு முடித்துக்கொள்ளுங்கள், மின்துறை அலுவலகத்தின் வாயிற்கதவை மறிக்காதீர்கள்” என்று கெஞ்சி மன்றாடினர்.

தோழர்கள் மின்துறை அலுவலகத்தின் வாயிற்கதவில் ஏறி நின்று கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து முழக்கமிட்டுக் கொண்டிருந்ததை கேட்ட மின்துறை ஊழியர்கள் வேலைகளை நிறுத்திவிட்டு கேட்டின் அருகே வந்து குவிந்தனர். மற்றொரு புறம் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வாகனங்களை நிறுத்திவிட்டு குவியத் தொடங்கினர். அரைமணி நேரம் முழக்கமிட்டுக் கொண்டிருந்த தோழர்களை போலீசு கைது செய்யத் தொடங்கியது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி உடனடியாக கைதாக மறுத்து தரையில் படுத்தும், தங்களுக்குள் கட்டிப் பிடித்துக் கொண்டும், கைகளை சங்கிலிபோல் கோர்த்துக் கொண்டும் நடத்திய போராட்டத்தை மின்துறை ஊழியர்களும் பொதுமக்களும் மிகுந்த அக்கறையுடன் கவனித்தனர். போலீசால் தோழர்களிடம் இருந்த கொடிகளைக் கூட எவ்வளவு போராடியும் பறிக்க முடியவில்லை. ஒவ்வொரு தோழரும் போர்க் குணத்துடன் கைதை எதிர்த்து போராடத் தொடங்கினர்.  கைதாகாமல் போராடுவதைப் பார்த்தவுடன் போலீசு தனது எண்ணிக்கையை அதிகப்படுத்தி போராடியவர்களை பீதியுறுத்த முயற்சித்தது.

இறுதியில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் வந்து தீவிரவாதிகளை பிடிப்பது போல போக்கு காட்டியது. தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு மேல் நடந்த இழுபறி தள்ளு முள்ளினால் ஒரு கட்டத்தில் கீழ்நிலை காவலர்கள் சோர்ந்து போயினர்.

அதைப் பார்த்த மேலதிகாரி ஒருவன், “என்னய்யா வேடிக்கை பார்க்கிறீர்கள் அலக்கா தூக்கி வேனில் ஏத்துங்க” என்று கத்திக் கொண்டு ஓடிவந்தான். போலீசு தோழர்களை ஒவ்வொருவராக இழுத்துச் சென்றும் தூக்கிக் கொண்டும் வேனில் ஏற்றினர். கடைசி தோழர் கைதாகும் வரை உறுதியாக நின்று போராடினார்கள்.

போலீசு கும்பலின் மூர்க்கத்தனமான கைது நடவடிக்கைக்கு எந்தத் தோழரும் உடனடியாக பணிந்து போகவில்லை. கடும் இழுபறி, தள்ளுமுள்ளு இவற்றுக்குப் பிறகே போலீசு தோழர்களை வேனில் ஏற்ற முடிந்தது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் “இவர்கள் என்ன அவர்கள் குடும்பத்திற்கா போராடுகிறார்கள், எல்லார் குடும்பத்திற்காகவும் தானே போராடுகிறார்கள். அவர்களை ஏன் நாயை ஏற்றுவது போல கைது செய்து ஏற்றுகிறீர்கள்” என் காவல் துறையிடம் கேட்டார்.

அதற்கு காவல்துறை “இதில் நீங்கள் தலையிடாமல் செல்லுங்கள்” எனக் கூறி பொதுமக்களின் கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தது. ஆனால் மக்களோ இப்படி மக்களுக்காக போராடுபவர்களை இழுத்து சென்று வேனில் ஏற்றியதை சகிக்காத முடியாமல் இவர்களை ஸ்டேசனில் வைத்து அடிக்க முயற்சிப்பார்கள், அதை சென்று தடுக்க வேண்டும் என்ற உணர்வுடன் போலீசு வேனை பின் தொடர்ந்து காவல் நிலையம் வரை சென்றனர்.

போலீசில் கீழ்நிலை ஊழியர்கள் “எனது ஆயுசுக்கும் இது போல  போராட்டத்தை பார்த்ததே இல்லை” என்றும் ஒரு சிலர் “நீங்கள் மட்டும் கத்தி என்ன ஆகப்போகிறது என்று கேட்டால் உனக்கும் சேர்த்துதான் போராடுகிறோம் என்று என்வாயை அடைக்கிறீர்கள்” என்றும் தோழர்களிடம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

ஒருவழியாக வேனில் ஏற்றி, காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தனித்தனியாக அடையாளங்களை பதிவு செய்தும் மெமோவில் கையெழுத்து பெற்றும் மிரட்டிப் பார்த்தனர். தோழ்ர்களோ துப்பாக்கிச் சூடு நடந்தாலும் எங்களை அடக்க முடியாது என்று காவல் நிலையத்திலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போலீசு தள்ளு முள்ளு, தடியடி இவற்றில் காயமடைந்த பவர் சோப் கம்பெனியில் பணிபுரியும் அருண் என்ற தொழிலாளி நெஞ்சு வலியால் துடித்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போலீசு, “தயவு செய்து அட்மிசன் ஆகாதீங்க. உங்கள் அனைவரையும் விடுதலை செய்து விடுகிறோம்” என்று பேரம் பேசியது.

“எங்களை கைது செய்து சிறையிலடை உனது வழக்கை எதிர்கொள்ள தயார்” என்று தோழர்கள் எதிர்த்து நின்றனர்.

அதற்குள் அனைத்து உள்ளூர் தொலைகாட்சி சேனல்களில், “மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி ஒருவர் மருத்துவமனையில் அனுமதி” என படத்துடன் செய்தியும் ஒளிபரபப்பட்டது. ஒருபுறம் தடியடி என்ற செய்தி பரவியதாலும் மறுபுறம் சிறைக்குச் செல்ல தோழர்கள் தயாராக நின்றதாலும் பீதியடைந்த காவல் துறை இறுதியில் என்ன செய்வது என்று விழி பிதுங்கியபடி 7 மணிக்கு தோழர்களை விடுவித்தது.

விடுவிக்கப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்ட இடத்தில் உள்ள தங்களது இரு சக்கர வாகனங்களை எடுக்கச் சென்ற போது இரண்டுபேர் தோழர்களிடம் வந்து இது போன்ற ஒரு போராட்டத்தினை இதுவரை பார்த்ததில்லை என்றும் இதற்கு முன் மின் கட்டணம் ரூபாய் 160/- கட்டினேன், தற்போது ரூபாய் 370/- வருகிறது, இது அநியாய பகல் கொள்ளை, இதற்கு எதிராக போராடியது சரி என்றும் பாராட்டிச்சென்றனர்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

கிரிக்கெட் : சீனிவாச புராணம் – ஒரு மர்மக் கதை !

23

ஐபிஎல் : முதலாளிகளின் மங்காத்தா – 2

பிஎல் மங்காத்தாவில் விளையாடும் முதலாளிகளின் ஆட்டம் இப்போது இன்னும் சூடு பிடித்திருக்கிறது. இதிலும் ஃபிக்சிங் உண்டு, விக்கெட்டுகள் சரிவது உண்டு. இப்போது ஆட்டம் கண்டிருக்கும் விக்கெட் சென்னை ஐபிஎல் அணியின் முதலாளி சீனிவாசனுடையது.

ஏ சி முத்தையா
ஏ சி முத்தையா

கிரிக்கெட் தொழிலைப் பொறுத்த வரை சீனிவாசன் வீழ்த்திய முதல் விக்கெட் ஸ்பிக் முதலாளி ஏ சி முத்தையா. உர மான்யம் மூலமாக மக்கள் வரிப்பணத்தை ஆட்டையை போட்டுக் கொண்டே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் இருந்தவர் ஏ சி முத்தையா. அவரது தயவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் சீனிவாசன். அந்த கால கட்டத்தில் தினமும் ஏ சி முத்தையாவின் வீட்டுக்கு காரில் போய் அவரை சந்தித்து பேசி விளையாட்டுத் தொழிலில் தனது நுழைவுக்கு ஆதரவு கேட்பாராம் சீனிவாசன்.

சீனிவாசன் கிரிக்கெட் சங்கத்தில் நுழைவதை 146 உறுப்பினர்களில் 118 பேர் எதிர்த்ததாகவும் முத்தையா அவருக்கு உறுதியாக உதவியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு உள்ளே நுழைந்த சீனிவாசன் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டத்தில் முத்தையாவை வீழ்த்தி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை கைப்பற்றியதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் காலடி எடுத்து வைத்தார். இவையெல்லாம் தெருவோர கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் போடும் சண்டை அல்ல. அமுத சுரபி போல அள்ளித்தரும் கிரிக்கெட் எனும் மாபெரும் வர்த்தகத்தை கைப்பற்றும் சாம்ராஜ்ஜியப் போர்!

ஜக்மோகன் டால்மியா
ஜக்மோகன் டால்மியா (இப்போதைய முதமைச்சர் மம்தா பானர்ஜியுடன்)

சீனிவாசன் பங்கேற்ற அடுத்த காய் நகர்த்தல் வங்காள கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியாவை வீழ்த்துவதற்கானது. 1980-களுக்குப் பிறகான மறுகாலனியாக்க சூழலில் ரியல் எஸ்டேட் குடும்பத் தொழிலை விட வளர்ந்து வந்த கிரிக்கெட் தொழில் லாபகரமானது என்று முடிவு செய்து 20 ஆண்டுகளுக்கு மேல் இந்திய/உலக கிரிக்கெட் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர் ஜக்மோகன் டால்மியா. டால்மியா பதவி விலகும் வரை அல்லது விலக்கப்படும் வரை பெரும் ஊழல்கள் செய்தவர். அந்தக் குற்றச்சாட்டுகள் வழக்குகளாக மாறியதும் உண்டு. அத்தகையவரது தயவில் வாரியத்தின் நிதிக் குழு தலைவர் பதவியை பிடித்தார் சீனிவாசன்.

2005 முதல் 2010 வரை நேரடியாகவும், பினாமி மூலமாகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கட்டுப்படுத்திய சரத் பவார் மத்திய ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசின் விவசாய அமைச்சராகவும் இருந்தார். மத்திய அரசின் மக்கள் விரோத விவசாய கொள்கைகளால் மராட்டிய நீர்ப்பாசன ஊழலில் ஆயிரக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் கொள்ளை போனது; அந்தக் கொள்ளையில் சரத் பவாரின் உறவினராக அஜித் பவாரும் ஏனைய பினாமிகளும் பங்கேற்றனர். கூடவே, மாராட்டிய மாநில சர்க்கரை ஆலைகளும் பவாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அந்த வகையில் அவர் மிகப்பெரும் தரகு முதலாளி.

இவர் விவசாய அமைச்சராக இருக்கும் போதுதான் அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த கால கட்டத்தில் சரத்பவார் முழு நேர கிரிக்கெட் நிர்வாகியாக தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார்.

சரத் பவார்
சரத் பவார்

அவர் 2004-ம் ஆண்டு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது டால்மியாவின் பினாமியிடம் தோல்வியடைந்தார். அடுத்த ஆண்டே தமிழ்நாட்டின் சீனிவாசன், அப்போது ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக இருந்த லலித் மோடி உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் டால்மியாவை மண்ணைக் கவ்வ வைத்து கிரிக்கெட் வாரியத்தை கைப்பற்றினார் சரத்பவார். அதைத் தொடர்ந்து டால்மியா மீது மோசடி, பண கையாடல் வழக்குகள் போடப்பட்டு அவர் கல்கத்தா கிரிக்கெட் சங்க பதவியிலிருந்தும் நீக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். டால்மியா மீது மும்பை போலீசில் புகார் கொடுத்தவர் சீனிவாசன்.

சரத் பவார் தலைவர் ஆனதும் சீனிவாசன் வாரியத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். சீனிவாசன் 2008-ல் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியை குத்தகைக்கு எடுத்தார். “வாரிய நிர்வாகிகள் எந்த கிரிக்கெட் போட்டியிலும் வணிக ஆதாயம் ஈட்டக் கூடாது” என்ற விதி திருத்தப்பட்டு ஐபிஎல் மற்றும் பிற டி-20 போட்டிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. எந்த சட்டமும், விதிகளும் முதலாளிகளின் நலன் பொருட்டே அவதரிக்க மட்டுமல்ல, திருத்தவும் படும். அதன் மூலம் வெளிப்படையாக பலன் அடைந்தவர் சீனிவாசன். இந்தியா சிமென்ட்ஸ் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் சொந்தக்காரராக இருந்த அதே நேரத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொருளாளர், செயலாளர், தலைவர் என்று அடுத்தடுத்து பதவி வகித்தார்.

இரு பதவிகளையும் ஒரே முதலாளி வைத்திருப்பதால் ஏற்படும் பொருளாதார நல முரண்பாட்டை எதிர்த்து அவரது ஆரம்ப எதிரி ஸ்பிக் ஏ சி முத்தையா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சமாளிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் விவகாரங்களை தனது மருமகன் குருநாத் மெய்யப்பனிடம் விட்டிருந்தார் சீனிவாசன். உச்ச நீதிமன்ற அமர்வின் 2 நீதிபதிகள் எதிரெதிரான தீர்ப்புகளை அளித்தனர். விரிவான அமர்வு ஒன்றின் விசாரணைக்காக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அது ஒரு புறமிருக்க இந்திய கிரிக்கெட் தொழிலில் தனது பிடியை வலிமையாக்கிக் கொண்டார் சீனிவாசன்.

லலித் மோடி
லலித் மோடி

இந்தியா சிமென்ட்சில் வெறும் 0.14 சதவீதம் பங்குகளை மட்டும் வைத்திருக்கும் அவர் பல்வேறு உறவினர்கள், அறக்கட்டளைகள் என்று பினாமி மூலமாக சுமார் 28 சதவீதம் பங்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவற்றின் மூலம் கம்பெனியை 100 சதவீதம் கட்டுப்படுத்துகிறார். மூலதனமும், பங்குகளும், உரிமையும் எப்படி கண்ணுக்குத் தெரியாமல் இணைக்கப்பட்டிருக்கின்றதோ அதே போன்ற மங்காத்தா விளையாட்டைத்தான் கிரிக்கெட்டிலும் நடத்துகிறார், சீனிவாசன். கோடிக்கணக்கான மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்குவதன் மூலம் இப்போதைய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் ஆட்டக்காரர்கள், மாநில கிரிக்கெட் சங்கங்கள் அனைவரின் விசுவாசத்தையும் வாங்கியிருந்தார். கிரிக்கெட் வர்த்தகத்திற்கு விலை போகாதவர்கள் என்று எவருமில்லை.

ஐபிஎல்லை உருவாக்கி நிர்வகித்த, சரத் பவாரின் ஆதரவு பெற்ற லலித் மோடியை அவரது மோசடி, முறைகேடுகளை பயன்படுத்திக் கொண்டு 2010-ம் ஆண்டு நாட்டை விட்டே ஓடிப் போக வைத்தார், சீனிவாசன். அவர் மீது சென்னை போலீசில் மோசடி புகார் கொடுத்தவரும் சீனிவாசன்தான். இதெல்லாம் பிசிசிஐ எனும் நிறுவனத்தின் ஆதாயங்களை அடைய சண்டை போட்ட முதலாளிகளின் குடுமிபிடிச் சண்டையின் விளைவுகள். அதனால் ஏதோ சீனிவாசன் தர்ம நியாயங்களுக்கு கட்டுப்பட்டு ஊழல்களை அம்பலப்படுத்தினார் என்று புரிந்துகொள்ளக் கூடாது.

அது உண்மைதான் என்பது மருமகன் குருநாத் மெய்யப்பன் மூலம் நடத்தப்பட்ட ஐபிஎல் சூதாட்டங்களின் மூலம் சீனிவாசன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதன் மூலம் தெரிய வருகிறது.

சீனிவாசன்
சீனிவாசன்

தமிழ் திரையுலகின் தாதாக்களான ஏவிஎம் குடும்பத்தைச் சேர்ந்த குருநாத் மெய்யப்பன், சீனிவாசனின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ‘சிமென்ட் தொழிலில் மற்ற முதலாளிகளுடன் கூட்டணி வைத்து விலையை உயர்த்தி, ஆண்டுக்கு ரூ 4,200 கோடி விற்பனையில் சுமார் ரூ 100 கோடி லாபம் பார்க்க முடிகிறது. இதுவே சென்னை சூப்பர் கிங்ஸை சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு மாதத்திலேயே அவ்வளவு லாபம் சம்பாதித்து விடலாம், எல்லாம் என்னிடம் விட்டுடுங்க’ என்று குருநாத் மாமனாரிடம் சொல்லியிருக்கலாம்.

மாமனார் கிரிக்கெட் வாரியத்தை கட்டுக்குள் வைத்திருக்க, மருமகன் சென்னை ஐபிஎல் அணி விவகாரங்களை பார்த்துக் கொள்ள சென்னை அணியின் பிராண்ட் மதிப்பு வாங்கிய போது இருந்த ரூ 500 கோடியை விட சில மடங்காவது தாண்டியிருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட மகேந்திர சிங் தோனியை இந்திய அணி தலைமை பொறுப்பிலிருந்து நீக்குவதாக தேர்வுக் குழு முடிவு செய்த போது வாரியத்தின் தலைவர் என்ற முறையில் சீனிவாசன் அதைத் தடுத்திருக்கிறார். தோனியின் கட்டுப்பாட்டில் இந்திய அணி இருப்பது வரை சென்னை சூப்பர் கிங்ஸின் பிராண்ட் மதிப்பு உயரும். அதைப் பாதுகாக்க வேண்டியதுதான் சீனிவாசனின் முதல் கடமை. அதைத் தவறாமல் செய்திருக்கிறார். மேலும் தோனி தற்போது இந்தியா சிமெண்ட்சின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக பந்தயம் வைத்து சூதாடியதற்காக குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்ட செய்தி வந்ததும் பங்குச் சந்தையில் இந்தியா சிமென்ட்சின் பங்கு விலை 20% சரிந்து ரூ 87.40-லிருந்து ரூ 71.65 ஆக இறங்கியது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் ரூ 500 கோடி வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ரூ 500 கோடி பிராண்ட் மதிப்புடைய சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற வால்தான், ரூ 2,000 கோடி சந்தை மதிப்புடைய இந்தியா சிமென்ட்ஸ் என்ற நாயை ஆட்டுகிறது என்றால் ஐபிஎல் அணியின் சொத்து மதிப்பை புரிந்து கொள்ளலாம்.

குருநாத் மெய்யப்பனின் தவறுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று, ‘பெரிய மனது’ வைத்து, ஐபிஎல்லின், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாண்பை மக்கள் முன்பு காப்பாற்றுவதற்கு சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளும் மற்ற அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். வாரியத்தின் விதிகளின்படி சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டார்கள்.

அருண் ஜேட்லி
அருண் ஜேட்லி

ஐபிஎல் போட்டி தொடர்பான சூதாட்ட கும்பலில் ஒருவராக குருநாத் கைது செய்யப்பட்டதும், அதுவரை அணியின் உரிமையாளராக முன் நிறுத்தப்பட்டு வந்த அவர், ஒரு சாதாரண கிரிக்கெட் ஆர்வலர்தான், சும்மா டீம் கூட சுத்திக் கிட்டு இருப்பார் என்று சீனிவாசன் நிறுவ முயன்றதை இவர்கள் யாரும் தட்டிக் கேட்கவில்லை. ஒரே நாளில் குருநாத்தின் டுவிட்டர் புரொஃபைல் மாற்றப்பட்டதையும், பொது வெளியில் இருக்கும் டுவிட்டர் விபரங்களுக்கே இந்த கதி என்றால் சீனிவாசன் & கம்பெனி கையில் இருக்கும் இந்தியா சிமென்ட்சிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலும் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய விபரங்கள் என்னவாகியிருக்கும் என்பதையும் கிரிக்கெட் முதலாளிகள் யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

ஐபிஎல் ஆணையராக பதவி வகிக்கும் காங்கிரஸ் அமைச்சர் ராஜீவ் சுக்லாவும், கிரிக்கெட் வாரிய துணைத் தலைவராக இருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் ராஜ்ய சபா துணைத் தலைவர் அருண் ஜேட்லியும், குருநாத் மெய்யப்பன் விவகாரத்தை விசாரிக்கப் போகும் குழுவை அமைப்பதில் சீனிவாசன் தலையிட்டு விடக் கூடாது என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்களாம். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், தொலைக்காட்சி நிலையங்களிலும், பத்திரிகைகளிலும் ஊழலுக்கு எதிராக வீரமாக முழக்கமிடும் அருண் ஜேட்லி கிரிக்கெட் மோசடிகள் வெளியில் வந்து நாறுவது வரை அவற்றை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்றால் ஊழல் எதிர்ப்பு இந்துத்துவ அரசியலின் நேர்மையை புரிந்து கொள்ளலாம்.

அவரது ஐபிஎல் அணிக்கு சொந்தமான தோனியை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதை தடுத்தது போல அவரது மருமகன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு குழு அமைப்பதில் வாரியத் தலைவர் என்ற முறையில் சீனிவாசன் தலையிட்டிருந்தால் வாரிய விதிகளோ, சக முதலாளிகளோ எதுவும் செய்திருக்கப் போவதில்லை, செய்திருக்கவும் முடியாது.

கிரிக்கெட் வாரிய பதவிகள் வகிக்கும் போதே ஐபிஎல் அணி முதலாளியாகவும் இருந்த சீனிவாசனை 3 ஐபிஎல் அணிகளில் பினாமிகள் மூலம் பங்குகள் வைத்திருந்த லலித் மோடியோ, புனே அணியில் பினாமி பங்குகள் வைத்திருப்பதாக சொல்லப்படும் சரத்பவாரோ விமர்சிப்பார்களா, என்ன?

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

குருநாத் மெய்யப்பன் சிக்கலில் மாட்டியதும், சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று மே 24-ம் தேதியே சரத்பவார் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி பி திரிபாதி அவசரக் குடுக்கையாக கூறினார். அதை உடனடியாக வாபஸ் வாங்கிய சரத்பவார், ஒரு வாரத்துக்குப் பிறகு, காலம் கனிந்து விட்டது என்று உணர்ந்து அதே கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். “நான் வாரியத் தலைவராக இருந்திருந்தால் இத்தகைய முறைகேடுகள் நடந்திருக்காது” என்று இப்போது அவர் சொல்கிறார். “கிரிக்கெட்டை காதலிக்கும் லட்சக்கணக்கான பேர் கோபமாக உள்ளனர். அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டால் அது இந்த நாட்டில் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்” என்று முதலைக் கண்ணீர் விடுகிறார் சரத்பவார்.

சரத்பவார் வழிகாட்டியதும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகமும் களத்தில் குதித்திருக்கிறது. “கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை முடிவது வரை அதன் தலைவர் தார்மீக அறங்களின்படி பதவி விலக வேண்டும்” என்று ஒரு பிட்டை போட்டிருக்கிறது.

உறுதியான நிர்வாகம், ஊழலற்ற அரசியல் என்று இந்துத்துவா அம்பிகளால் விதந்தோதப்படும் நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கும் குஜராத் மாநில கிரிக்கெட் சங்கமோ ‘அவரே எந்த தவறும் செய்யாததால்’ சீனிவாசனை உறுதியாக ஆதரிப்பதாக சொல்கிறது. தான் பிரதமர் ஆவதற்கு உதவும் என்றால் கர்நாடகாவின் எடியூரப்பாவையும் ஆதரிப்பவர்தான் மோடி.

ஐபிஎல் சூதாட்டம் பற்றி விசாரித்து உண்மைகளை கண்டறிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்திருக்கும் மூன்று நபர் குழு உண்மையில் எதையும் கண்டறியவோ, சரி செய்யவோ போவதில்லை என்பதை சீனிவாசனே கூறி விட்டார். “நாங்கள் ஒரு தனியார் அமைப்பு, அரசு இல்லை. எங்களுக்கு விசாரணை செய்யும் அதிகாரங்கள் இல்லை” என்று அவர் ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சூதாட்ட தரகர்கள், சூதாடும் வீரர்கள் யாரையும் கண்காணிக்கவோ, தகவல் தொடர்புகளை ஒட்டுக் கேட்கவோ, தவறு செய்பவர்களை கைது செய்யவோ அதிகாரம் இல்லாத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல் முறைகேடுகளை எப்படி ஒழுங்குபடுத்தும் என்று கேட்டவர் இந்த சீனிவாசன். ஒரு முறைகேடே முறைகேடுகளை ஒழுங்குபடுத்த முடியுமா என்ன?

சுருக்கமாகச் சொன்னால், இப்போது அம்பலமாகியிருக்கும் சீனிவாசன், குருநாத் மெய்யப்பன் உள்ளிட்ட சூதாடிகளின் திருவிளையாடல்கள் அனைத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளாலும் அவரது சக முதலாளிகளாலும் அனுமதிக்கப்படுபவை. அதனால்தானோ என்னவோ சூதாட்ட கிங்குக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2013-ல் களத்தில் “நெறிமுறை தவறாமல் நேர்மையாக விளையாடிய அணி (fair play)” என்ற பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட் வாரிய விதிகளின்படி சூதாடி முதலாளிகளை நீக்க முடியாது; ஊழல்களை சரி செய்ய முடியாது; கிரிக்கெட் விளையாட்டின் ஆரோக்கியத்தை மீட்க முடியாது எனும் போது சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டியது பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான். ஆனால், மேட்ச் பிக்சிங்குக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதாக சொல்லும் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசு தலையிடாது என்று முதலாளிகளுக்கு உறுதி அளித்திருக்கிறார். அதன் மூலம் சீசன்களின் போதும், சீசன்களுக்கு இடையேயேயும் முதலாளிகளின் மங்காத்தா தொடர்வதற்கு உத்தரவாதம் வழங்கியிருக்கிறார்.

ஐபிஎல் மோசடிகளையும் ஊழல்களையும் வெறுமனே கிரிக்கெட் எனும் ஒரு விளையாட்டு வர்த்தகமாக ஆனதின் பிரச்சினைகள் என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளக்கூடாது. இது உண்மையில் பல ஆயிரம் கோடிகள் புழங்கும் கிரிக்கெட் எனும் சாம்ராஜ்ஜியத்தில் முதலாளிகள் எப்படி தொழில் செய்கிறார்கள், சட்டம், விதிமுறை, நெறிமுறை அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு தங்களது கொள்ளைக்கேற்ப தொழிலை எப்படி வடிவமைக்கிறார்கள், ஆளும் வர்க்கங்களின் அரசியல்வாதிகள், முதலாளிகள், அதிகாரிகள், ஊடகங்கள் அனைத்தும் இதில் எப்படி சங்கமத்திருக்கிறார்கள் என்பதை நமக்கு காட்டுகிறது.

முதலாளித்துவம் என்றால் என்ன அதன் கோரம் என்ன என்பதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு பிசிசியும் அதன் தலைவர் சீனிவாசனும் எடுத்துக்காட்டுகள். ஐபிஎல்லை தடை செய்து, பிசிசிஐ நாட்டுடமையாக்கி, அதன் சொத்துக்களை மக்களுடைமையாக்குவது தவிர இந்த கொள்ளையர்களை துரத்துவதற்கு வேறு வழியில்லை.

(தொடரும்)
____________________
– அப்துல்
____________________

கல்வி உரிமை கேட்டு கடலூரில் மாநாடு : உரைகள் – படங்கள் !

1

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்டக்கிளையின் சார்பில் மூன்றாவது ஆண்டாக அனைவருக்கும் தரமான இலவச கல்வியை அரசே வழங்க போராடுவோம் என்ற முழக்கத்தை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பத்தில் 25-5-13 அன்று மாலை 6-00 மணிக்கு தொடங்கி இரவு 10-00 மணி வரை திறந்த வெளி மாநாடு நடைபெற்றது.

பேரணி மற்றும்  மாநாட்டுக்கு இறுதி நேரத்தில் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது. மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களின் விடாப்பிடியான போராட்டத்திற்குப் பின் மாநாட்டிற்கு மட்டும் அனுமதி பெறப்பட்டது.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழுவின் நாடகம் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தின் பின்னணியை தோலுரித்து காட்டும் வகையில் சிறுவர்கள் நாடகம் மக்களை பெரிதும் கவர்ந்தது. தொலைக்காட்சி வருவதற்கு முன்னும் பின்னும் நடக்கும் நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையிலும் நாடகம் நடத்தப்பட்டது. திரண்டிருந்த அனைவரும் எழுந்து நின்று முழக்கமிட மாநாடு தொடங்கியது.

கடலூர் மாநாடு

தமிழக அரசே தமிழக அரசே
அமல்படுத்து அமல்படுத்து
அனைவருக்கும் தரமான
இலவச கல்வியினை அமல்படுத்து

தாய்ப்பால் குடிப்பது
குழந்தையின் உரிமை
கல்வி கற்பது மாணவன் உரிமை

அனுமதியோம் அனுமதியோம்
காசுள்ளவனுக்கு ஒரு கல்வி
ஏழைகளுக்கு ஒரு கல்வி
தனியார்மய கல்வியை அனுமதியோம்

தமிழக அரசே தமிழக அரசே
அரசுடமையாக்கு அரசுடமையாக்கு
அனைத்து தனியார் பள்ளிகளையும்
அரசுடமையாக்கு அரசுடமையாக்கு

வெல்லட்டும் வெல்லட்டும்
அனைவருக்கும் தரமான
இலவச கல்வி உரிமைக்கான
மக்கள் போராட்டம்
வெல்லட்டும் . . .

வெங்கடேசன்
பெற்றோர் சங்கத் தலைவர் வை வெங்கடேசன்

தலைமையுரையாற்றிய மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வை.வெங்கடேசன் 2011 விருத்தாசலத்திலும் 2012 சிதம்பரத்திலும் நடந்து இன்று கடலூரில் இந்த மாநாடு நடக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் பல சாதனைகளை நமது சங்கம் சாதித்துள்ளது. இங்கு திரண்டு இருக்கும் மக்களே அதற்கு சாட்சி. தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இலவசக் கல்வி என அரசு கூறுகிறது. நாம் 100 சதவீதம் இலவசக் கல்வி கேட்கிறோம். கடலூர் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளிக் கூடத்தில் கூட 100 சதவீத தேர்ச்சி இல்லை. பல பள்ளிகள் 22 %முதல் 35 வரைதான்  தேர்ச்சி வீதம் பெற்றுள்ளன.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 31 சதவீத தேர்ச்சியை கண்டித்து தேர்ச்சி குறைவதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி காட்டுகின்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்று அந்த புகைப்படத்தை அனைத்து பத்திரிக்கைகளும் பிரசுரிக்கின்றன. ஆனால் ஆலடி என்ற அரசு மேல்நிலைப்பள்ளியில் 86 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்று பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி ஆனால் எந்த பத்திரிக்கையிலும் வரவில்லை. கல்வித் துறை அதிகாரிகள் யாரும் மாவட்ட ஆட்சியருடன் மாணவர்களை அழைத்து பாராட்டவில்லை, ஏன்? அரசு பள்ளிகளை தமிழக அரசு நடத்தும் லட்சணம் இதுதான். பெற்றோர்கள் முறையாக அரசு பள்ளிகளை கண்காணிக்க வேண்டும். வீதியில் இறங்கி கல்வி உரிமைக்காக போராட வேண்டும் என பேசினார்.

செந்தில்
வழக்கறிஞர் செந்தில்

வரவேற்புரை ஆற்றிய மனித உரிமை பாதுகாப்பு மைய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் பள்ளிகளை நடத்த வேண்டிய அரசு சாராயக்கடைகளை திறம்பட நடத்துவதில்தான் கவனம் செலுத்துகிறது. தேர்ச்சி விகிதம் அரசு பள்ளிகளில் குறைந்ததற்காக நாங்கள் முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர், ஆதரித்தனர், கலந்து கொண்டனர். மே மாதம் வெயில் என பாராமல் இவ்வளவு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த மாநாட்டில் கல்வி உரிமைக்காக போராட கலந்து கொண்டதை வரவேற்கிறேன். தொடர்ந்து போராடுவதன் மூலம் நாம் கோரிக்கையை வெல்ல முடியும். அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை அரசே கொடுக்கும்வரை நமது போராட்டம் ஓயாது என பேசினார்.

மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் திரு.வி.வி.சுவாமிநாதன் அவர்கள்

மாநாட்டின் துவக்கத்தில் ராணுவ தலைமையகம் உத்திரவுபோடுவது போல் அரசுக்கு கோரிக்கைகளை முழக்கங்களாக உத்திரவிட்டீர்கள், இது சரிதான். மக்கள்தான் எஜமானர்கள். தனியார் பள்ளிகளின் கவர்ச்சி விளம்பரங்கள் தரமானவை என மக்கள் மத்தியில் எடுபடுகின்றது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மத்திய அரசு செயலாளராக உயர் பதவியில் தமிழர்கள் பலர் இருந்தனர். அரசு பள்ளியில் தமிழில் படித்தவர்கள்தான் பிரிட்டன் நடத்திய தேர்வில் ஐ.சி.எஸ் பட்டம் பெற்றவர்கள். தனியார் பள்ளிதான் அறிவை வளர்க்கும் என்பது மோசடி. 1970-களில் ரயில்வே, ஏர்வேஸ், வங்கிகள் என அனைத்தும் தேசியமயமாக்கபட்டது. ஆனால் இன்று கல்வி, மருத்துவம், குடிநீர் என அனைத்தும் தனியாருக்கு விடப்பட்டுள்ளது.

வி வி சுவாமிநாதன்
முன்னாள் அமைச்சர் வி வி சுவாமிநாதன்

வெட்ட வெளியில் அமர்ந்து நாம் பேசி கொண்டிருக்கிறோம். இது சட்டமன்றத்தில் பேசி விவாதிக்க வேண்டியது. இதை எந்த சட்டமன்ற உறுப்பிராவது எழுப்பினாரா? இல்லை. அவர்கள் எல்லாம் காண்ட்ராக்டர்களாக, முதலாளிகளாக மாறியுள்ளனர். தேர்தல் செலவுகளை பள்ளி முதலாளிகள்தான் கவனிக்கின்றனர். கமிசன் பிரச்சினையை கவனிக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. தனியார் கல்வியை அரசு ஒழிக்குமா? ஒழிக்காது. ஏனெனில் கல்வி அதிபர்களாக அமைச்சர் முதல் எம்.எல்.ஏ, பி.ஏ. வரை உள்ளனர். கல்வி முதலாளிகளால் மாவட்டம், வட்டம் வரை கட்சி பாகுபாடின்றி கவனிக்கபடுகின்றனர். போராடிதான் ஒழிக்க வேண்டும்.

இந்த போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும், வெற்றி பெற்றிருக்கிறது. 2011-ல் ஆரம்பித்த பெற்றோர் சங்கம் தொடர்ந்து போராடியதன் விளைவாகதான் 17 கல்வி மாவட்டங்களாக இருந்தது இன்று 27 மாவட்டங்களாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் 100 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்கு உங்கள் போராட்டம் முக்கிய காரணம். மறுபுறம் ஆனால் அரசு பள்ளிகளில் தரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு பொறுப்பேற்று கல்விதுறை அமைச்சரோ, அதிகாரிகளோ, தலைமை ஆசிரியரோ ராஜினாமா செய்வதில்லையே!

அடுத்து மாநாட்டின் தீர்மானங்களை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சிதம்பரம் கிளை செயலாளர் கலையரசன் வாசித்தார். அனைவரும் ஏக மனதாக கரவொலி எழுப்பி ஆதரித்து நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுத் தீர்மானங்கள்…

  1. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில்,உயர் கல்வியில் முன்னுரிமை வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக வலியுறுத்துகிறது.
  2. மழலையர் பள்ளி முதல் +2 வரையிலான பள்ளிக்கல்வி முழுவதும் அரசு பொறுப்பில் அனைவருக்கும் தரமாக வழங்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி முறை, ஒரே தேர்வு முறை கொண்ட மாணவர்கள் சமத்துவத்திற்கான பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி முறையை அமல்படுத்த உரிய சட்டம் இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் மத்திய மாநில அரசுகளை நிர்ப்பந்தித்து போராட வேண்டும் என பொது மக்களை ஒருமனதாக இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  3. அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் பாடம் அமல்படுத்தப்பட்ட பிறகு தனியார் பள்ளிகள் மெட்ரிக் என்ற பெயரை பயன்படுத்துவதை தமிழக அரசு தடை செய்து உத்திரவு பிறப்பிக்க வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.

    கலையரசன்
    பெற்றோர் சங்க சிதம்பரம் கிளைச் செயலாளர் கலையரசன்
  4. அரசு பள்ளிகளில் பாடம் நடத்துவது, ஆசிரியர்கள் பிற தொழில்களில் ஈடுபடுவது ஆகியவற்றை கண்காணிக்க மக்கள் கமிட்டியை மாவட்டம் தோறும் அமைக்க தமிழக அரசை ஒருமனதாக இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  5. மாணவர்களுக்காகத்தான் பள்ளிகள், பள்ளிகளுக்காக மாணவர்கள் இல்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொண்டு பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக நமது பிள்ளைகளை மாற்றும் கல்வி வணிகமயத்திற்கு, தனியார் பள்ளிகளின் லாப நோக்கிலான மதிப்பெண் தேர்வுமுறைக்கு பலியாகாமல், சிந்திக்கும் ஆற்றலை, தன்னம்பிக்கையை உருவாக்கும் தாய்மொழிக்கல்வியில் பயில, அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என பெற்றோர்களை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.
  6. அரசியலமைப்பு சட்டம் சரத்து 21 ஏ படி 14 வயது குழந்தைகள் வரை அனைவருக்கும் இலவசக்கல்வி வழங்குவது வாழ்வுரிமையின் ஒரு அங்கம் என 2002 –ல் சட்டம் இயற்றிய பிறகு நீதியரசர் சிங்காரவேலு கமிட்டி மூலம் தமிழக அரசு தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஏற்ற மாதிரி பலவிதமான கட்டணங்களை நிர்ணயிப்பதுடன் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை ஏற்றி கொண்டே போவதற்கு எதிராக பொது மக்கள் போராட வேண்டும். தமிழக அரசு 14 வயதுவரை தனியார்பள்ளிகளில் கட்டணம் வசூல் செய்வதை தடைசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.
  7. மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்து கட்டணக்கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளி முதலாளிகள், முதல்வர்களை கிரிமினல் சட்டத்தில் கைது செய்ய காவல்துறைக்கு உரிய உத்திரவிட தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.
  8. தாய் மொழிக்கல்விக்கு எதிராக அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை அமல்படுத்தும் தமிழக அரசின் முடிவை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக தமிழக அரசு ஆங்கிலவழி கல்வி அறிவிப்பை கைவிட வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக வலியுறுத்துகிறது.
  9. அனைவருக்கும் இலவச கல்வி என்பதை உறுதி செய்ய அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாட்டின் மூலம் ஒருமனதாக வலியுறுத்துகிறோம்.
  10. கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அனைத்தையும் தனியாருக்கு விற்கும் அரசின் தனியார்மயக் கொள்கையை மீறி உரிய கட்டமைப்பு இல்லாத சூழலில் அரசு பள்ளியில் அடித்தட்டு மாணவர்களுக்காக அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி அதிக மாணவர்களை தேர்ச்சியடைய வைக்க போராடும் அரசு பள்ளி ஆசிரியர்களை இம்மாநாடு மனதார பாராட்டுகிறது. அத்தகைய ஆசிரியர்களுக்கு அனைத்துவித ஒத்துழைப்புகளையும் ஆதரவுகளையும் பெற்றோர்களும் நமது சங்கத்தினரும் தர வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.
  11. 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏப்ரல் 30 வரை பள்ளி வகுப்புகள் நடத்தபடுகிறது. கடுமையான வெயிலில் இளம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அவதிப்படுகிறார்கள். இவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை மார்ச் மாத இறுதியில் வகுப்புகளை மூட வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
ராமகிருஷ்ணன்
சிதம்பரம் கிளைத் தலைவர் ராமகிருஷ்ணன்

மாநாட்டை வாழ்த்தி பேசிய சிதம்பரம் கிளை தலைவர் ராமகிருஷ்ணன்:

தனியார் பள்ளிகள் அரசு உத்திரவை மதிக்காமல் பெற்றோர்களிடம் கட்டணக் கொள்ளை அடித்ததை சிதம்பரத்தில் நமது சங்கம் போராடி முறியடித்தது. கடந்த ஆண்டு நமது சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு கட்டணத்தை பெற்ற சிதம்பரம் காமராஜ் பள்ளி நிர்வாகம் இந்த ஆண்டு அனைத்து பெற்றோர்களும் அரசு கட்டணத்தை மட்டும் கட்டுங்கள் என அறிவிப்பு பலகையில் ஒட்டியுள்ளது. இதே போன்று அனைத்து தனியார் பள்ளிகளும் அமல் படுத்த நாம் சளையாமல் போராடவேண்டும். போராடும் என முடித்தார்.

 

வனராசு
முன்னாள் அரசு வழக்கறிஞர் வனராசு

 

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞர் வனராசு அவர்கள் :

மனித உரிமை பாதுகாப்புமைய வழக்கறிஞர்களின் முயற்சியில் உருவானதுதான் இந்த பெற்றோர் சங்கம். கல்வி உரிமைக்கான இந்த போராட்டம். தனியார் பள்ளிகளிடம் ஏன் அரசாங்கம் 25 இலவச ஒதுக்கீடு கேட்டு கெஞ்ச வேண்டும்? தனியார்பள்ளிகளை அரசுடமையாக்கினாலே போதும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இம்மாநாட்டின் கோரிக்கை வெற்றி பெறும் என வாழ்த்தி பேசினார்.

 

சக்கரவர்த்தி
கொள்ளிடம் அமைப்பாளர் சக்கரவர்த்தி

நாகை மாவட்டம் கொள்ளிட அமைப்பாளர் சக்கரவர்த்தியின் வாழ்த்துரை: குழந்தைகளை பெற்றவுடன் மூன்றாண்டுகள் மகிழ்ச்சியாக இருக்கும் பெற்றோர்கள் பள்ளி சேர்த்தவுடன் துன்பத்திற்குள்ளாவோம். எல்.கே.ஜி கட்டணம் 4000, 8000,16000 என உயர்ந்து கொண்டே போகிறது. பள்ளி நிர்வாகம் வாங்கும் பணத்திற்கு உரிய வசதிகளை செய்து தருவதில்லை. கொள்ளைதான் அடிக்கிறார்கள். 100 பெறுமான உள்ள சீருடை 600 ரூபாய்க்கு விற்கிறார்கள். நம் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதைவிட அரசு பள்ளிகளில் சேர்த்து அங்குள்ள குறைகளை சுட்டிகாட்டி முடிந்த அளவு நாமும் உதவிகள் செய்தால் அரசு பள்ளிகள் வளர்ச்சி பெறும். நாமும் பயனடையமுடியும். பள்ளி இறுதி தேர்வுகளை கேமிரா வைத்து கண்காணித்தால் பல தனியார்பள்ளிகளின் தரம் என்ன? உண்மை நிலை என்ன என தெரியவரும் என முடித்தார்.

கோ பாக்கியராஜ்
ஆதிவாசிகள், ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் சங்கம் – கோ பாக்கியராஜ்

கோ.பாக்கியராஜ், மாநில தலைவர், ஆதிவாசிகள் ஆதிதிராவிட நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் தனது வாழ்த்துரையில்

மூன்றாவது ஆண்டாக மாநாடு நடத்தி வருகிறீர்கள். ஏதோ கூட்டம் கூடினோம் கலைந்தோம் என இல்லாமல் தெருத்தெருவாக கல்வி உரிமைக்காக பிரச்சாரம் செய்கீறீர்கள் பள்ளிகளுக்கு முன் போராடுகிறீர்கள். அப்படிபட்ட உங்களை பாராட்ட வேண்டியது எமது கடமை. அரசு பள்ளிகள்தான் சமூக நோக்குடைய, தாய்மொழி பற்றுள்ள, பிறரை நேசிக்கக்கூடிய, அறிவாற்றலுடைய மாணவர்களை உருவாக்குகிறது. தனியார் மெட்ரிக் பள்ளிகள் மார்க் எடுக்கும் இயந்திரமாக மட்டுமே நமது மாணவர்களை உருவாக்குகிறது.

இன்றும் பல அரசு பள்ளிகள் தரமான கல்வியை கொடுத்து வருகின்றன. 100 சதவீத தேர்ச்சி, அதிக மதிப்பெண் என கிராமத்து மாணவர்கள் சாதிக்கிறார்கள். 1000 மேல் மதிப்பெண் எடுக்கிறார்கள் இதனை கல்வித்துறை அதிகாரிகள் விளம்பரப் படுத்துவதில்லை, மூடி மறைக்கின்றார்கள். இவர்கள் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுவதாக கூறினார்.

 

செந்தில்
சிதம்பரம் வழக்கறிஞர் செந்தில்

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின்  துணைச் செயலர் சிதம்பரம் வழக்கறிஞர் செந்தில் மாநாட்டு பிரச்சாரத்தின் போது பலரும் கேட்டனர். அனைவருக்கும் தரமான இலவச கல்வி சாத்திமானதா? நடைமுறையில் சாத்தியம்தான். சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் தாழ்த்தப்பட்ட ஒருவர் தமிழ்பாட முடியுமா? என 10 ஆண்டுகளுக்கு முன் எங்களிடம் கேட்டார்கள். இன்று முடித்து காட்டியுள்ளோம். தொடர்ந்த போராட்டம் சாத்தியமாக்கியது. அதுபோல் இதையும் சாத்தியமாக்குவோம். நமது குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்து பணம் பறிக்கும் மாபியா கும்பல்களாக வளர்ந்துள்ளன தனியார் பள்ளிகள். அதனை தடுக்க வேண்டிய அரசோ அவர்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறது.

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளிக்கு எதிரான போராட்டத்தின் போது அரசு நிர்ணயித்த கட்டத்தை வசூலிக்க கோரி ஆண்கள் பெண்கள் என இரவு முழுவதும் போராடினோம். அரசு கட்டணத்தை மட்டும் வாங்கி கொள்ளுங்கள் என்று தாளாளரிடம் சிதம்பரம் ஏ.எஸ்.பி. இரவு 11 மணி வரை மன்றாடுகிறார். மாவட்ட ஆட்சி தலைவர் எங்களிடம் இரண்டு நாள் பொறுத்து கொள்ளுங்கள் என தவணை கேட்கிறார். விடாப்பிடியாக நாங்கள் போராடிதான் பள்ளி நிர்வாகத்தினை பணிய வைத்தோம். சிதம்பரம் முழுவதும் “அரசு உத்திரவை மயிரளவும் மதிக்காத தாளாளரை குண்டர்சட்டத்தில் கைது செய்” போஸ்டர் ஒட்டினோம், ஆர்ப்பாட்டம் நடத்தினோம். வரும் ஜுன் மாதத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை அடித்தால் பெற்றோர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவுக்கு போராட வேண்டும். பேரணிக்கு தடை விதித்து அமைதியை நிலை நாட்டும் காவல்துறை பள்ளி முதலாளியை கைது செய்யட்டும். எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் உரிமைக்கான எமது போராட்டம் ஓயாது என பேசினார்.

குடிக்கச் சொல்லும் அரசுக்கு படிப்பு சொல்லித்தர முடியாதா?
இமையம், எழுத்தாளர், விருத்தாச்சலம்

இந்திய கல்வி முறையே ஆங்கிலேயர்கள் தங்களது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய கல்விமுறைதான்….

இந்திய சாதிய படிநிலை போன்ற கல்வி நிறுவனங்களும் சிபிஎஸ்சி, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேஷன், அரசு உதவி பொறும் பள்ளிகள், அரசு பள்ளிகள் என ஏற்றத்தாழ்வாக பிரிக்கப்பட்டுள்ளன….கல்வித்துறை சீர்கெட்டு போனால், சமூக நோக்குடைய கல்வி இல்லாமல் போனால் ஒட்டுமொத்த சமூகமே சீர்கெட்டு போய்விடும்….

இமையம்
எழுத்தாளர் இமையம்

இன்று நிலவும் கல்வித்துறை சீர்கேடுகளுக்கு மூன்று குற்றவாளிகள் உள்ளனர். அரசு நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தான் அக்குற்றவாளிகள்.

தமிழகம் முழுவதும் கல்வித்துறை குறித்த புள்ளிவிவரங்கள் காட்டுவதென்ன? இலட்சக்கணக்கான அரசு பள்ளி ஆசிரியர்கள், ஆயிரக்கணக்கான அதிகாரிகள் என மிகப்பெரிய கல்வித்துறையே உள்ளது. ஆனால் இவர்கள் சாதிப்பது என்ன… தரமற்ற அரசு பள்ளிகளை நடத்துவது தானே…..எந்த கல்வித்துறை அதிகாரிகளாவது பள்ளிகளை முறையாக ஆய்வு செய்து குறைபாடுகளை கண்டறிந்து இன்னென்ன நிவர்த்தி செய்தோம் எனக் கூற முடியுமா….

பள்ளிகளை நடத்துவதில், பாடம் எடுப்பதில் குறைகண்டோம், அதற்காக இத்தனை ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுத்தோம் என பட்டியலிட முடியுமா.. அப்படி நடவடிக்கை இல்லையென்றால் இலட்சக்கணக்கான அரசு பள்ளி ஆசிரியர்கள் தவறுகள் ஏதும் செய்யாமல் வேலை செய்கிறார்கள் என்பது தானே அர்த்தம்! மாவட்ட கல்வி துறை அதிகாரி, இயக்குனர் துணை இயக்குனர் எத்தனை முறை எந்த பள்ளியை ஆய்வு செய்தார் தணிக்கை செய்தார் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி ஏதும் நடப்பதில்லை. சாராயக் கடையினை நடத்துவதில் அக்கறை காட்டும் அரசு பள்ளிகளை நடத்துவதற்கு ஏன் முன்வருவதில்லை. இதனை வருமானமற்ற முதலீடாக, செலவாக அரசு பார்க்கின்றது. சாராயக் கடைகள் போல் அரசு பள்ளிகள் வருமானம் ஈட்டி தருவதில்லையே..

ஆசிரியர்கள் 40,000 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள் மனசாட்சிபடி வேலை பார்க்கிறார்களா? காலையில் நடைபயிற்சி போன களைப்பில் பள்ளியில் போய் தூங்குவதுதான் நடக்கிறது. மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு ரூ. 67,000 சம்பளம். ஒரு வருடத்தில் எத்தனை வகுப்புகள் மாணவர்களுக்கு எடுத்திருப்பார். தன் பிள்ளையை கொண்டு போய் லட்சக்கணக்கில் பணம் கட்டி நாமக்கல் பள்ளி கூடத்தில் சேர்க்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதற்குதானே அவ்வளவு சம்பளம். தன் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களை நம்பி வந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை… இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? நன்கு படிக்கும் 90 சதவீத மார்க் எடுத்த மாணவன் வாத்தியார் வேலைக்கு வருவதில்லை. அரசு கல்லூரியில் படித்து அஞ்சல் வழியில் பி.எட்.படித்து வரும் சராசரி மாணவன் தான் ஆசிரியர் வேலைக்கு வருகிறார்கள். கல்வித் தரம் உயராமல் இருப்பதற்கு இது ஒரு காரணம். பள்ளிக்கே செல்லாத, பாடம் நடத்தாத ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது, மாவட்ட கல்விதுறை அதிகாரியின் ஒப்புதல் இல்லாமலே மந்திரியை பிடித்து விருது வாங்கி விடுகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைப்பதில்லை. தனியார் பள்ளியில்தான் படிக்க வைக்கின்றனர்.

போலி மருத்துவர் போல போலி ஆசிரியர்தான் தனியார் பள்ளியில் பாடம் நடத்துகிறார்கள். பெற்றோர்கள் இதை பற்றி கவலைபடுவதில்லை. 4,000 சம்பளம் வாங்கும் அனுபவம் இல்லாத முறையான பயிற்சி படிப்பு இல்லாமல் பாடம் எடுக்கும் தனியார் பள்ளி எப்படி தரமானதாக இருக்க முடியும் என்பதை பெற்றோர்கள் உணருவதில்லை?. நடக்க முடியாத தன் குழந்தையை பல கி.மீ.பயணம் செய்து படிக்க அனுப்பும் பெற்றோர்கள் குற்றவாளிகள்தானே, தன் குழந்தையின் மனநிலை, உடல்நிலை பற்றி அக்கறையில்லாமல் செயல்படுவத்தை நாம் கண்டிக்க வேண்டாமா? அங்கீகாரம் இல்லாத பள்ளியில் கூட தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் சேர்க்கின்றனர்.

பெற்றோர்களை ஆட்டிப்படைக்கும் ஆங்கில மோகத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது…அரசு பள்ளியைவிட தனியார் பள்ளிதான் சிறந்தது என்ற மாயைக்குள் பெற்றோர்கள் சிக்கி கொண்டு விட்டனர். அரசும் தாய்மொழி வழி கல்வியை புறக்கணிக்கிறது. உலகத்திலேயே இல்லாத கேவலம் தமிழகத்தில் தான் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன் 5-வது வகுப்பு வரையாவது தாய்மொழி வழி கல்வியை கட்டாயமாக்கக் கோரி 100 தமிழறிஞர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர்….தமிழிலே பேசுவது குற்றம் எனக்கூறும் தனியார் பள்ளிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

கல்வி கட்டணக் கொள்ளைக்குத் துணை போகும் மக்கள் விரோத கமிட்டி உத்தரவுகள் தீர்ப்புகளுக்கு எதிராகப் போராடுவோம்
வழக்கறிஞர். மா.பாரி, உயர்நீதிமன்றம், சென்னை.

கல்வி கற்றுக்கொடுப்பது சமூக பொறுப்புள்ள ஒரு மனிதனை உருவாக்கவா? அல்லது பணம் சம்பாதிக்கும் இயந்திரத்தினை உருவாக்கவா? பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய விஷயமாக இது உள்ளது.

மா பாரி
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மா பாரி

பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக தனியார் பள்ளிகளில் உங்களது பிள்ளை படித்து வெளியே வந்தால் அப்பிள்ளை எப்படி குடும்பத்தில் ஆசாபாசத்துடன் இருக்கும். பிராய்லர் கோழிகள் போன்று பிள்ளைகளை வளர்க்க சிந்திக்காதீர்கள். பயனற்ற பிள்ளைகளை சமூகத்திற்கு உருவாக்காதீர்கள்.

பெரும்பாலான நீதிபதிகள் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் என இவற்றிற்குச் சாதகமாகவே தீர்ப்புகளை வழங்குகின்றனர். முதலில் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கி வந்தனர். இப்போது பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளனர். நீதிபதிகள் ஒன்றும் நீதியை வழங்கக்கூடிய கடவுள் அல்ல. அவர்களும் சம்பளம் பெற்று சேவை செய்யக்கூடியவர்கள்தான். அவர்களும் மற்ற அரசு ஊழியர்கள் போன்றே தனியாருக்கு சேவை செய்கிறார்கள்.

எந்தவொரு நபரும் கல்வி உரிமைத் தொடர்பாக தனி நபராக நீதிமன்றங்களை நாடி வெற்றி பெறலாம் என்று எண்ணினால் அதுதான் ஆகப்பெரிய மூடநம்பிக்கை.

இதுபோன்று அமைப்பாகத் திரண்டு போராடினால் மட்டுந்தான் இதற்கு தீர்வு உண்டு.

காசு உள்ளவனுக்கே கல்வி என்ற நவீன மனுதர்ம தனியார் மயத்தை ஒழிப்போம்
தோழர் த.கணேசன், மாநில அமைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை.

சூத்திரனுக்கு கல்வியில்லை – இதுதான் பார்ப்பனியத்தின் மனுநீதியாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு ஏற்பட்ட கல்வித் துறை மாற்றங்கள் அரசியல் சாசனம் வழங்கிய இடஒதுக்கீடு போன்றவற்றின் மூலமாக படித்து முன்னேறிவிடலாம் என எண்ணிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கனவினை தகர்க்க பார்ப்பன இராஜாஜி கொண்டுவந்ததுதான் குலக்கல்வித் திட்டம்.

கணேசன்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் த கணேசன்

அத்தருணத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் பேசச் சென்ற இராஜாஜி என்ன தெரியுமா பேசினார்? ”சலவைத் தொழில் செய்வோருக்கெல்லாம் எதற்குப் பள்ளிக் கூடம். எல்லாரும் படிக்க வந்துவிட்டால் மற்ற வேலைகளையெல்லாம் யார் பாக்கரது. துணிய நல்லா வெளுக்கறது எப்படின்னு கத்துக்கங்க..”

ஆட்சிக் கட்டிலில் ஏறிய உடனேயே சமச்சீர் பாடத்திட்டத்திற்கு முடிவு கட்ட துடித்தார் ஜெயலலிதா. அதனைப் போராடித்தான் முறியடித்தோம்.

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஊடகங்கள் மிக முக்கியமாக கவனம் செலுத்துகின்றன. இந்த ஊரில் இந்தப் பள்ளி சிறந்தது என புள்ளி விவரங்களை வெளியிடுகிறார்கள். கல்வி மலர் என்ற பெயரில் கல்வி முதலாளிகளின் கொள்ளைக்கு ஆள் பிடித்துத் தருகின்றனர். ஊர் ஊருக்கு கல்வி கண்காட்சி மாதந்தோரும் நடத்தப்படுகின்றது. இப்படி சுண்டி இழுக்கப்படும் பெற்றோர்கள் விட்டில் பூச்சிகளைப் போன்று தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

தனியார் மயக் கல்வியின் கொடூரம் எது தெரியுமா? காசு இல்லாதவனையும் தனியார் பள்ளிகளை நோக்கி இழுத்துச் சென்று சிக்க வைக்கும் இந்த நிலைமையே.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் கல்வி முதலாளிகளையெல்லாம் தர்மவான்களாக, வள்ளல்களாக காட்டுகின்ற நடவடிக்கையே இது. ஏசி வகுப்பில் வசதி வாய்ப்புக்களுடன் தன் பிள்ளை படிப்பதைப் பார்க்கும் ஏழைப் பெற்றோர்கள் கல்வி முதலாளிகளை வாயார வாழ்த்தாமல் என்ன செய்வார்கள். கல்விக்கொள்ளைக்கு எதிராக பேச வேண்டிய மக்களை கல்வி முதலாளிகளைப் போற்ற வைக்கும் அபாயம்தான் இது.

இந்தியாவில் தனியார் மய கல்விக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1986ல் தேசிய கல்விக் கொள்கை மூலம் துவங்கிய அரசின் சதித்திட்டம் பல்வேறு ஆய்வுக் குழுக்கள் மூலம் வளர்ச்சியடைந்துள்ளது. வாஜ்பாய் அரசாங்கத்தின் போது கல்வித்துறை நிபுநர்கள் வழங்கிய அனைவருக்கும் இலவச கல்விக்கான 14,000 கோடி நிதி ஒதுக்கீட்டுப் பரிந்துரை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு. பிர்லா -அம்பானி குழு வழங்கிய “கல்விக்கு காசு நிர்ணயிக்கும்“ பரிந்துரைதான் ஏற்கப்பட்டது.

சேவைத் துறையின் கீழ் கல்வி வழங்குதல் கொண்டுவரப்பட்டு காட்ஸ் ஒப்பந்தத்தின் மூலம் கல்வி விற்பனைச் சரக்காக மாற்றப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசு மக்களுக்கு இலவச கல்வியை வழங்குமா?

அலை அலையான மக்கள் போராட்டமே கல்வி உரிமையை நடைமுறையில் சாத்தியமாக்க வழிவகைச் செய்யும்.

நிறைவுரை
வழக்குரைஞர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்

கல்வி உரிமைக்காக மூன்றாமாண்டாக மாநாட்டினை நடத்திக்கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் இலவச கல்வி வழங்கு! என நாம் ஏன் கேட்க வேண்டும். உரிமையை நாமே எடுத்து கொள்வோம். பயனாளிகளும் நாம் தான் பாதிப்படைவது நாம்தான். காடு, மலை, கழனி, கட்டிடம் எல்லாம் உருவாக்கியது நாம்தான். பராமரிப்பதும் நாம். சுனாமி வந்தால் அழிவதும் நாம்தான். ஆட்சியாளர்களா பாதிக்கப்படுகிறார்கள்?. இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் அனைவருக்கும் இலவச கல்வி வழங்க வேண்டும் எனக் கூறுகின்றதே. பின் என்ன பிரச்சினை? நாம் உரிமையை நிலைநாட்ட களத்தில் இறங்கிப் போராட வேண்டும். தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என தமிழக அரசை கேட்கிறோம். அரசு என்ன செய்வது….? நாமே அமல்படுத்துவோம். இனி 8ம் வகுப்பு வரை எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் செலுத்த மாட்டோம் என போராட வேண்டும். சட்டம் இருக்கிறது. நீதிமன்றம் அமல்படுத்துகிறதா? பஞ்சாயத்துதான் செய்கிறது.

ராஜூ
மனித உரிமை பாதுகாப்பு மையம் – மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி ராஜூ

5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் பாடம் நடத்த வேண்டும் என அரசாணை இருக்கிறது. தனியார் பள்ளி முதலாளிகள் தடைபெற்றுள்ளனர். சமச்சீர் கல்வியை எதிர்த்து, தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஒழுங்கு முறை சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை தனியார் பள்ளி முதலாளிகள் செல்கின்றனர். இவர்கள் பின்னே நாம் செல்ல முடியுமா?. தனியார் பள்ளிகள் வளர வளர.., நர்சரி பள்ளிகள் வளர வளர.., அரசு பள்ளிகள் அழிகிறது என்று அர்த்தம். நாம் கண் கூடாக பார்க்க முடியும். தனியார் முதலாளி ஒரு துறையில் வளருகிறான் என்றால் அரசு துறை அழிந்து போகிறது என அர்த்தம். தனியார் பள்ளிகள் ஏ.சி வகுப்புகள் பேருந்து மாட மாளிகைள், கவர்ச்சியான விளம்பரம் என்பதை மட்டும் பார்க்காதீர்கள். அதனால் அழிந்தவரும் அரசு பள்ளிகளை பாருங்கள். ஏர்டெல், ரிலையன்ஸ், ஏர்செல், வோடபோன் வளருகிறது என்றால் பி.எஸ்.என்.எல் அழிகிறது என்று அர்த்தம். கண்கூடாக பார்க்க முடியும். தனியார் மருத்துவமனைகள் பெருகி கொண்டே போகிறது….வளர்கிறது….என்றால் அரசு மருத்துவமனைகள் அழிகிறது என்று அர்த்தம். இதை பார்க்க வேண்டும். இதற்கு அரசு துணை போகிறது. உடந்தையாக இருக்கிறது.

அப்பல்லோ தரமான மருத்துவ வசதியை கொடுக்கிறது, நமக்கு கிடைக்குமா?. எஸ்.ஆர்.எம்., ஜேப்பியார் தரமான கல்வியை கொடுப்பதாக வைத்து கொள்வோம் நமக்கு கிட்டுமா……? எல்லாவற்றையும் காசு இருந்தால்தான் பெறமுடியும் என்ற நிலையினை தனியார்மயம் உருவாக்கியுள்ளது. கல்வி உரிமையை மட்டும் அது அழிக்கவில்லை, மக்களின் வாழ்வுரிமையையே அது ஒழித்துக்கட்டுகின்றது. இன்று அனைவருக்கும் தரமான கல்வி வேண்டும் என கேட்கிறோம். ஆனால் சுதந்திரம் பெற்றதிலிருந்து எத்தனை முறை குழு போடப்பட்டு கல்வியாளர்கள் அறிக்கை கொடுத்துள்ளார்கள்…? அதை பாராளுமன்றமும் அங்கீகரித்து ஏற்று கொண்டதே? இன்று வரை ஏன் அமல்படுத்தவில்லை. என்ன தடை?

இயற்கையாக கிடைக்கும் அலைக்கற்றைக்கு நாம் காசு கொடுக்கிறோம் இதோ வந்துட்டேன்… என பேசினால் 50 பைசா போச்சு, எங்க இருக்கே…. என்ன ஆச்சு….? என்றால் 1 ரூ போச்சு. இயற்கையாக கிடைக்கும் குடிநீருக்கு… காசு கொடுக்கிறோம். தனியார் மினரல் வாட்டர் கம்பெனி வளருகிறது… என்றால் நகராட்சி குடிநீர் மாசுபட போகிறது என்று பொருள். வாழ்வுரிமையை காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்பதை எப்படி ஏற்க முடியும்? பேண்ட் சட்டை போட வேண்டும் என்று ஒரு போராட்டமா? ஆனால் அப்படிதான் இலவச கல்வி உரிமைக்காக போராடுகிறோம்.

பணம் சம்பாதிக்க கல்வி என்றால் 15 ஏக்கர் நிலம் வைத்து சாகுபடி செய்யும் விவசாயி பணம் சம்பாதிக்கவில்லையா?. கள்ளசாராயம் ஓட்டியவன் , கட்டபஞ்சாயத்து அரசியல்வாதிதான் கல்லூரி வைத்திருக்கிறார்கள். அதில் சம்பளத்துக்கு கொத்தடிமையாக வேலை பார்ப்பவன் பிஎச்டி, டாக்டர் பட்டம் வாங்கியவன். உன் கொள்கைப்படி படித்தவன் தானே கல்லூரி வைத்திருக்க வேண்டும். ஒருமனிதனுக்கு மானம், வீரம், அன்பு, இசை, இலக்கியம், படைப்பாற்றல் என்பதை வளர்ப்பதாக கல்வி அமைய வேண்டும்.

குழந்தை கற்றுக் கொண்டே இருக்கிறது. அதை முறைப்படுத்த வேண்டியதுதான் பெற்றோர்கள் கடமை. ஆனால் ஈமு கோழி வளருங்கள் பல ஆயிரம் கிடைக்கும், சிட்பண்டில் போடுங்கள் பலமடங்கு பணம் உயரும், காந்த படுக்கை வாங்க உறுப்பினர்களை சேருங்கள். மாதந்தோறும் வீடு தேடி பணம் வரும், ஒரு லட்சம் எங்களிடம் கொடுங்கள் மாத பத்தாயிரம் உங்களுக்கு அனுப்புகிறோம். என்கிற விளம்பரங்களை மக்கள் எப்படி கொடுப்பாய் என கேள்வி கேட்பதில்லை. அதுபோல் தனியார் பள்ளிகளின் விளம்பரத்தை பார்த்து மக்கள் ஏமாற்றமடைகின்றனர். லாபத்தை மட்டுமே வைத்து உயிர் வாழும் முதலாளி எப்படி தரத்தை கொடுக்க முடியும். லாபத்திற்காக எத்தகைய படுபாதக செயலையும் செய்யும் முதலாளித்துவம் தன் லாப வெறிக்காக ஆறுகளை கொல்லும் காடுகளை கொல்லும் மலைகளை கொள்ளும், மக்களையும் கொல்லும். இத்தகைய தனியார்மயக் கல்வி எப்படி தரமானதாக இருக்கமுடியும்? இந்த ஆண்டு எல்.கே.ஜிக்கு 15 ஆயிரம் என்றால் அடுத்த ஆண்டு 20,000 என ஏறிக் கொண்டே போகும். எப்படி நாம் பணம் கட்டி படிக்க முடியும்.

அரசு பள்ளிகள் வீழ்ச்சியடைவதை நொடித்து போவதை அரசு பார்த்து கொண்டிருக்கிறது. ஆதரிக்கிறது. பெரும்பான்மையான அரசு பள்ளிகளில், நகராட்சி பள்ளிகளில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் குடிக்கும் இடமாக, மலஜல கழிக்கும் இடமாக இருக்கிறது. கோட்டாட்சியர் அல்லது காவல்நிலையத்தில் இது நிகழ அரசு அனுமதிக்குமா? தலைமை ஆசிரியர் என்ன செய்கிறார். அரசு அதிகாரிகள் அந்த பள்ளியில் உள்ள பெயரளவு பெற்றோர் சங்க நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள்.

குடிநீர், கல்வி, மருத்துவம் அனைத்திலும் அரசு தனியார் மயக்கொள்கையை அமல்படுத்துகிறது. கார் பிசினஸ் செய்வதில் காட்டிலும் 122 கோடி மக்கள் பயன்படுத்தும் குடிநீர் கல்வி மருத்துவம் பிசினஸ் அதிக உத்திரவாத லாபம். ஐசியுவில் படுக்க வைத்தால் எந்த ஏழையிடமும் பணத்தை கறக்க முடியும். குழந்தை ஆசைப்படுகிறது கடன் வாங்கியாவது எல்.கே.ஜி படிக்க சேர்ப்போம். சேர்க்கமுடியாத பெற்றோர்கள் குற்ற உணர்விற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். ஒருவர் சம்பாதித்து குடும்பம் நடத்திய காலம் போய் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சம்பாதித்து வாழ வேண்டிய நிலை.

மாவட்டம் முழுவதும் ஒரு மாத காலம் தெருத்தெருவாக மக்களை சந்தித்து இலவச கல்வி உரிமைக்காக இவ்வளவு பெற்றோர்களை திரட்டியிருக்கிறோம். அரசியல் கட்சிகளுக்கு சாத்தியப்படாத விசயம் நமக்கு மட்டும் எப்படி சாத்தியபட்டது. அயராத நமது உழைப்பு. தொடர்ந்த போராட்டம். இலவச கல்வி உரிமைக்காக கூடிய நீங்கள் உங்களை ஒரு போராளியாக கருதி அடுத்த ஆண்டு 5000 பேரை திரட்டினால் பெரிய மைதானத்தில் இந்த மாநாட்டை நடத்தலாம். காவல்துறையிடம் நாம் அனுமதி கேட்டு காத்திருக்க வேண்டியதில்லை. மக்கள் அலை அலையாக தொடர்ந்து போராடினால் அரசு என்ன செய்யமுடியும்?. இந்த மாநாடு ஆண்டு விழாபோல் முடிந்துபோக கூடாது. வரும் கல்வி ஆண்டில் நாம் தொடர்ந்து கல்வி உரிமைக்காக பாராட வேண்டும். உரிமைக்காக போராடி பாருங்கள். சாதாரண கோழை மனிதன்கூட வீரனாகலாம். சுயமரியாதைகாரனாக இருக்க முடியும். போராடுவதற்கு பெரிய தலைவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களுக்காக போராடும்போது உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். நம்பிக்கை பெறமுடியும்.

தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளை, அரசு பள்ளி என பேசுகிறோம். மாணவர்களை பற்றி பேசுவதில்லை. அவர்களை பேசவைப்பதில்லை. கற்கும் இடம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தண்டனையாக இருக்க கூடாது.

விருத்தாச்சலத்தில் தனியார் பள்ளி விடுதியில் கொடுமைக்குள்ளான மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் தன் சித்தப்பாவிடம் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? “சொந்த ஊரிலேயே என்னை ஜெயிலில் வைத்துவிட்டீர்களே!“ என்பதுதான். விருத்தாச்சலத்தைச் சேர்ந்த அம்மாணவன் சிறந்த கல்வி பெறுவதற்காக அவ்வூரிலேயே பள்ளி விடுதியில் தங்க வைக்கப்பட்டு படிக்க வைக்கப்பட்டான். வகுப்பறையே… விடுதி, உணவருந்தும் இடம்.

சமீபத்தில் வந்த “பரதேசி“ படத்தில் பஞ்சம் பிழைப்பதற்காக தேயிலை எஸ்டேட்டுகளுக்கு கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அங்கே அடிமைகளாக தப்பிக்க வழியின்றி தங்களது வாழ்வினை முடித்துக்கொண்டனரே அது போன்று படித்து முடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு லட்சம் சம்பளம் என்று அறிவுக் கூலிகளாகத் தான் நம் பிள்ளைகள் அனுப்பபடுகிறார்கள்.

பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் விளம்பரத்தை பார்த்து ஏமாந்து அப்பாவிகளாக இருக்கிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் கேளுங்கள் கல்வி வரலாறுபற்றி. 1950 அமுலுக்கு வந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் 10 ஆண்டுகளில் 14 வயது வரை அனைவருக்கும் இலவச கல்வி கொடுக்க வேண்டும் என சொல்லப்பட்டது. 1997 உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் ஒன்றும் செய்யவில்லை. இந்த தீர்ப்பையும் 2002 தான் சட்டமாக்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கல்வி என்பதை புறக்கணித்து 2009 –ல் 25 சதவீதம் தனியார் பள்ளியில் இலவச கல்வி என்று சட்டம் போட்டார்களே…….. ஏன்? என்று கேளுங்கள்.

அரசாங்கம் அரசுத்துறையை நொடிக்கச் செய்யத்தான், தனியார் காப்பீடு…, தனியார்கல்வி 25 சதவீதம்…, மேல் படிப்புகளுக்கு கல்விக்கடன், இத்தகைய பணங்களை அரசுத் துறையில் முதலீடு செய்தால் பல தலைமுறை கல்வி கற்கும், மருத்துவம் பார்க்கும். மத்திய மாநில அரசுகள் நேராக முதலாளிகளிடம் தூக்கி கொடுப்பது அரசு துறையை வீழ்ச்சியடைய வைக்கும் தனியார்மயக்கொள்கை. மக்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே இதை நாம் வீழ்த்த முடியும்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்திலும், மனித உரிமை பாதுகாப்பு மையத்திலும் உங்களை உறுப்பினராக இணைத்து கொள்ளுங்கள், போராடுவோம். அடுத்த ஆண்டு மாவட்ட முழுவதும் தாலுக்கா அளவில் இது போன்று பெருந்திரள் மாநாடு நடைபெற வேண்டும். பெரும் திரள் மக்களை இலவச கல்வி உரிமைக்கான போராட்டத்தில் அணிதிரட்ட வேண்டும்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
கடலூர்.

மருத்துவ வசதி கேட்டு தடையை மீறி போராட்டம் !

2

புலிகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி விவசாயிகள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம் !

தரும்புரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் புலிகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தக் கோரி விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக போலீசு அனுமதி மறுத்ததை அடுத்து தடையை மீறி 25.5.2013 அன்று சனிக்கிழமை காலை 11 மணி அளவில் புலிகரை பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசே!

  • புலிக்கரை அரசு சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்து !
  • புலிக்கரை அரசு மருத்துவ நிலையத்திற்கு மகப்பேறு மருத்துவர் உட்பட நான்கு மருத்துவர்களை நியமி !
  • இரத்தப் பரிசோதகர், மருந்தாளுனரை நியமி! போதிய மருந்து, மாத்திரை, படுக்கைகள் போன்ற மருத்துவ வசதிகளை அதிகமாக்கு !

உழைக்கும் மக்களே !

  • மருத்துவம் நமது பிறப்புரிமை ! மருத்துவம் வழங்குவது அரசின் கடமை ! இதைப் பெற வீதியில் இறங்கி போராடுவோம் !

1970-களில் கொண்டு வரப்பட்ட ‘பசுமைப் புரட்சி’ என்ற திட்டத்தின் மூலம் இந்திய விவசாயிகள் மீது உரம், பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள்,  மருந்துகள் ஆகியவை திணிக்கப்பட்டன. அதன் விளைவாக உணவுப் பொருட்களில் மருந்துகள் கலந்து நோய்கள் அதிகரித்து விட்டன. உரங்கள், ரசாயன மருந்துகள் பயன்படுத்தாமல் விவசாயம் செய்ய முடியாத நிர்ப்பந்தத்திற்கு விவசாயிகளை அரசும், உர முதலாளிகளும் தள்ளியுள்ளனர். அதனால் நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

நோய்களின் எண்ணிக்கை, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்றவாறு அரசு மருத்துமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையும், செவிலியர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்படவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக் குறையால் நாடு முழுக்க உள்ள அரசு மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது ஏதோ தானாக நடப்பதில்லை. இதுதான் அரசு மக்களுக்கு சேவை செய்வதன் யோக்கியதை. அரசு பள்ளிக் கல்லூரிகளில் கட்டிடம் உள்ளது. ஆனால் போதிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இல்லை. ரேசன் கடைகள் உள்ளன. ஆனால் அரிசி, சீமெண்ணை, பருப்புகள் கிடையாது என்று ரேசன் கடையை இழுத்து மூடி வருகிறது அரசு. மின்வாரியம் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு மின்வெட்டு. குடிநீர் வாரியம் உள்ளது. ஆனால், மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு. அனைத்து சேவை துறைகளிலும் இதுதான் நிலைமை.

“காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை, காசு இல்லாதவனுக்கு குடிநீர் இல்லை, காசு இல்லாதவனுக்கு உணவுமில்லை, மருத்துவமும் இல்லை. மக்களுக்கு சேவை செய்வது அரசின் பொறுப்பும் இல்லை” இதுதான் அரசின் புதிய பொருளாராதர் கொள்கை. அதாவது மக்களை கொள்ளையடிக்க அனைத்தும் தனியார் மயம். நூற்றுக்கணக்கான தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் தண்ணீர் நிறுவனங்கள் அனைத்துமே தனியாரிடம் விடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உலகிலேயே வறுமையில் முதலிடத்தில் உள்ள நமது நாட்டில்தான் நடக்கின்றன. இதுதான் சுதந்திரம் பெற்று விட்டதாக மக்களை 66 ஆண்டுகளாக ஏமாற்றி வரும் ஆட்சியாளர்களின் ‘சாதனை’. பன்னாட்டு முதலாளிகள் கூட்டு சேர்ந்து நம்மை கொள்ளையடிக்க செய்த தந்திரம்தான் 1947 ஆகஸ்ட் 15 போலி சுதந்திரம். எனவே சாதி, மதம், மொழி கடந்து ஓட்டுப் பொறுக்கி எட்டப்பர்களை புறக்கணித்து ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே நாம் உயிர் வாழ முடியும். ஒன்றுபட்டு வாழ்வுரிமைக்காக போராட வேண்டும்.

ருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் புலிகரை என்ற கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு தினசரி 300-க்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இது மட்டுமல்ல, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே, புலிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் அதிகமான பிரசவங்கள் நடைபெற்று முதலிடத்திள் உள்ளது. இப்படிப்பட்ட மருத்துவமனைக்கு ஒரு மருத்துவர்தான் உள்ளார். அதுவும் பகலில் மட்டும்தான். செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மூன்று மருத்துவர்கள் இருக்க வேண்டும். இச்சுகாதார நிலையத்திற்கு 30 படுக்கைகள் இருக்க வேண்டும். ஆனால், எதுவும் இல்லை. ஒரு மகப்பேறு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு செவிலியர் மட்டுமே உள்ளார். மேலும் மருந்தாளுனர் இல்லை, இரத்தப் பரிசோதகர் இல்லை. ஓபி சீட்டு கொடுக்க ஆளில்லை. விஷக்கடிக்கு மருந்து இல்லை. எதுவும் இல்லை, கட்டிடம் மட்டும் உள்ளது.

இதை கண்டித்து புலிகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தக் கோரி போராட விவசாயிகள் விடுதலை முன்னணி முடிவு செய்தது. தோழர்கள் பிரசுரம் அச்சிட்டு புலிக்கரை கிராம சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். சுவரொட்டிகள் அச்சிட்டு கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தனர்.

மே 22-ம் தேதி ஆர்ப்பாட்டத்தை நடத்த 18-ம் தேதியே ஒலிபெருக்கி அனுமதிக்க விண்ணப்பித்தனர். 20-ம் தேதி வரை அனுமதி பற்றி எந்த தகவலையும் போலீசு தெரிவிக்கவில்லை. அனுமதி கொடுத்தாலும் திடீரென ஆயிரக்கணக்கில் பணம் திரட்டி நடத்த இயலாது என்பதால் 20-ம் தேதி அன்று போலீசிடம் 24-ம் தேதிக்கு ஆர்ப்பாட்டத்திற்கு ஒலிபெருக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டனர். 23-ம் தேதி மதியம் ‘ஆர்ப்பாட்டத்திற்கு ஒலிபெருக்கி அனுமதி கிடையாது, அரை மணி நேரம்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தனர். இதற்கு தோழர்கள் உடன்படாததால் டிஎஸ்பியை சந்தித்தனர். டிஎஸ்பி ஒலிபெருக்கி வைத்துக் கொள்ளுங்கள், ஒலி அளவை குறைத்து வைத்து நடத்துங்கள் என்று கூறினார். 24-ம் தேதி போலி கம்யூனிஸ்ட் கட்சியின் நாடு தழுவிய ‘அடையாள’ மறியல் போராட்டம் நடக்கவிருப்பதால் 25-ம் தேதிக்கு அனுமதி தருமாறு கூறினார்.

அதனை போலீசிடன் மீண்டும் கூறிய போது, “40 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள், ஒலிபெருக்கி அனுமதி இல்லை. மீறிவைத்தால் சீல் பண்ணி விடுவோம்” என்று அதிகாரத் திமிரில் பேசினர்.

ஒரு வாரம் இழுத்தடித்து, இழுத்தடித்து அனுமதி தராமல் நிபந்தனைகள் போடுவதைக் கண்டு தோழர்கள் கொதிப்படைந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் “நல்ல கோரிக்கையை கையில் எடுத்திருக்கீங்க, ஆர்ப்பாட்டம் செய்யுங்க, நாங்களும் வருகின்றோம்” என்று கூறி நிதியும் கொடுத்து உதவி செய்தனர். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்த்தனர். 25-ம் தேதி திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்த தோழர்களை அணிதிரட்டினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு ஒலிபெருக்கி அனுமதிக்காததாலும், 40 நிமிடம்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தாலும், அதற்கு உடன்பட்டு அனுமதிக்கு சென்ற தோழர் கையெழுத்து போடவில்லை. அதனை காரணம் காட்டி 24-ம் தேதி இரவு 10 மணிக்கு போன் செய்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேன்சல் என்று கூறினர். அனுமதி மறுக்கப்பட்டாலும் ஆர்ப்பாட்டத்த நடத்த வேண்டும் என்று முடிவு செய்து 25-ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபெருக்கி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போலீசு அனுமதி மறுக்கப்பட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் இராமலிங்கம் தலைமை தாங்கினார். விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டக் குழு உறுப்பினர் தோழர் கோபிநாத், வட்டச் செயலாளர் தோழர் சிவா ஆகியோர் உரையாற்றினார்கள். அவர்கள் தங்கள் உரைகளில் கூறியதாவது :

  • கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகளிடம் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், ரசாயன மருந்துகள் திணிக்கப்பட்டுள்ளன. ஆனால் உணவுப் பொருட்களில் ரசாயன மருந்துகள் கலந்து மக்களுக்கு நோய்கள் அதிகரித்துள்ளன.
  • நோய்கள் அதிகரித்துள்ளதை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் ஏற்றவாறு அரசு மருத்துவமனைகளின் தரம் இல்லை.
  • புலிகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்தான் தருமபுரி மாவட்டத்திலேயே அதிகமான பிரசவங்கள் நடைபெறுகின்றன ஆரம்ப சுகாதார நிலையமாக இருக்கின்றது.
  • அதற்கு தகுந்தாற் போலவும், புற நோயாளிகளின் வருகைக்கு ஏற்ற வகையிலும் புலிக்கரை மருத்துவமனையை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும்.
  • 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகவும், 24 மணி நேரம் மருத்துவர் பணியாற்றுமாறும் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
  • பெண் மகப்பேறு மருத்துவர்களை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றுமாறு நியமிக்க வேண்டும்.
  • கூடுதலான மருத்துவர்கள், செவிலியர்கள்,  சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். 24 மணி நேரமும் இரத்தப் பரிசோதனை, மருந்தாளுனர் பணியாற்றுமாறு நியமனம் செய்ய வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புலிகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தக் கோரியும் கூடுதலான மருத்துவர்கள் – செவிலியர்கள் – சுகாதாரப் பணியாளர்களை நியமிக்கக் கோரியும் முழக்கமிட்டனர்.

விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டக்குழு உறுப்பினர் தோழர் மாரியப்பன் நன்றியுரை கூறினார்.

அனுமதி மறுக்கப்பட்ட பின்பும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று தகவல் கிடைத்தும் ஒரு போலீசு கூட வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. “அனுமதி கொடுக்கா விட்டாலும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள் என்றால் அது பெரிய விஷயம்தான். அதனை நாம் பாராட்ட வேண்டும்” என்று பலர் கூறினர். இந்த ஆர்ப்பாட்டம்  புலிக்கரை பகுதியில் பெரும் வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் :
செய்தியாளர்
புதிய ஜனநாயகம், தருமபுரி

வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !

0

ங்கதேசத்தின் ஆயத்த ஆடை உற்பத்தியில் ஈடுபடும் ஆலைகள் தற்போது தொழிலாளர்களின் போராட்டக் களமாக மாறியிருக்கின்றன.

ரேஷ்மா
17 நாட்களுக்கு பிறகு இடிந்து விழுந்த ராணா பிளாசாவிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி ரேஷ்மா.

சென்ற மாதம் வங்கதேசம் தாக்காவின் சாவர் புறநகர் பகுதியில், ராணா பிளாசா என்ற கட்டிடம் இடிந்து விழுந்து 1,127 தொழிலாளர்கள் உயிருடன் புதைந்து இறந்தனர். தங்கள் சக தொழிலாளர்களின் உயிரற்ற உடல்கள் நூற்றுக்கணக்கில் தோண்டியெடுக்கப்பட்டது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

உழைப்பையும் உயிரையும் சுரண்டும் தொழிற்சாலைகளிடமிருந்து தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக, கொலைகார ராணா பிளாசா கட்டிட முதலாளிக்கு மரணதண்டனை வழங்கவும், தமது அரசியல் உரிமைகளுக்காகவும் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் உழைக்கும் வர்க்கமாக இணைந்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

தாக்காவின் அஷுலியா என்ற தொழில்துறை பகுதியில் உள்ள 300-க்கும் அதிகமான ஆலைகள், 3 வாரகாலமாக மூடப்பட்டுள்ளன. இந்நிலை தொடர்ந்தால் மேற்கத்திய வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை ரத்து செய்வது அல்லது வேறு இடங்களுக்கு உற்பத்தியை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும் என்று உணர்ந்த அரசாங்கம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக பரிந்துரைகள் வழங்க குழு ஒன்றை நியமிக்க போவதாக அறிவித்தது. அந்தக் குழுவின் அறிக்கை வரும் வரை தொழிலாளர்கள் போராடாமல் காத்திருக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது. தொழிற்சங்கங்கள் அமைப்பதை தடை செய்யும் தொழிலாளர் சட்டங்களில் பெயரளவுக்கு சில மாற்றங்களை செய்து தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை வழங்குவதாக தொழிலாளர்களை அமைதிப்படுத்த முயற்சிக்கிறது.

இன்னொரு பக்கம், இந்த கொடூரமான விபத்தைத் தொடர்ந்து இத்தனை காலமாக மூடி மறைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களின் அவலநிலை சர்வதேச ஊடகங்களில் வெளிவரத் துவங்கியதைத் தொடர்ந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு பதில் சொல்லும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க அவர்களது நலன் விரும்பிகளான தன்னார்வ குழுக்கள் உடனடியாக உதவ முன்வந்தன. சுவிட்சர்லாந்தை சேர்ந்த யு.என்.ஐ. உள்ளிட்ட சர்வதேச தன்னார்வ குழுக்கள், ஆடை விற்பனையில் கோலாச்சும் பன்னாட்டு நிறுவங்களான கேரஃபோர், பெனட்டன், மார்க்ஸ & ஸ்பென்சர், கால்வின் கிளைன் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி “தீப்பிடித்தல் மற்றும் கட்டிட பாதுகாப்பு”க்கான மாதிரி ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளனர்.

பங்களாதேஷ் தொழிலாளர்கள்
ஊதிய உயர்வு கோரி போராடும் தொழிலாளர்கள்.

ஒரு தொழிற்சாலையின் மொத்த உற்பத்தியில் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தின் உற்பத்தி சதவீதத்தை பொறுத்து தொழிற்சாலைகளை மூன்று வகைகளாக பிரித்து பன்னாட்டு நிறுவனங்களின் பொறுப்பை வரையறுக்கிறது இந்த ஒப்பந்தம். 30% வரை உற்பத்தி இருந்தால் பாதுகாப்பு ஆய்வுகள், தீவிபத்து பாதுகாப்பு ஒத்திகைகள், மாற்று நடவடிக்கைகளுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். 65% வரை உற்பத்தி இருந்தால், ஆய்வுகள் மாற்று நடவடிக்கைகள் வழங்கப்பட வேண்டும். 10% மட்டும் உற்பத்தி இருந்தால ஆய்வுகளுக்கு மட்டும் வழிகாட்டல் வழங்கினால் போதும். விபத்துக்குப் பின் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், உற்பத்தி முடக்கத்தால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள், பாதுகாப்பற்ற தொழிற்சாலைக்கு வேலை செய்ய மறுக்க தொழிலாளர்களுக்கு உரிமை இவற்றை வலியுறுத்துகிறது இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்காத தொழிற்சாலைகளுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்வதில்லை என்று மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதாவது, பன்னாட்டு முதலாளிகள் மனமுவந்து, தமது வங்க தேச தரகு முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்து வங்க தேச தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவ வேண்டும். கொலையாளியின் கையிலேயே கொலைகள் நடப்பதை தடுப்பதற்கான பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்.

இந்த கண்துடைப்பு, ஏமாற்று ஒப்பந்தத்தில் கூட வட அமெரிக்காவை சேர்ந்த மேசிஸ், சியர்ஸ் எசன்ஷியல்ஸ், ஜேசி பென்னி, த நார்த் பேஸ், டார்கெட், கோல்ஸ், காடோ ஃபேஷன்ஸ், ஓஸ் கோஷ், நார்ட்ஸ்ட்ரோம், அமெரிக்கன் ஈகிள் அவுட்ஃபிட்டர்ஸ், த சில்ட்ரன்ஸ் பிளேஸ், ஃபுட் லாக்கர் ஆகியவை உள்ளிட்ட 14 ராண்டுகள் கையெழுத்திட மறுத்து விட்டனர். வங்கதேசத்தில் 279 ஆலைகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வால்மார்ட் தானே பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்தப் போவதாக சொல்லியிருக்கிறது. இத்தகைய ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டால், எதிர்காலத்தில் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரிடும் என்று கேப் என்ற பிராண்டு சொல்லி விட்டது.

தெரு நாடகம்.
2012-ல் நடந்த தஸ்றீன் தொழிற்சாலை தீவிபத்துக்கு நிவாரணம் கோரி நடத்தப்படும் தெரு நாடகம்.

தொழிலாளர்களுக்கு உயிர் வாழ போதுமான கூலி கொடுக்காமல் கொடூரமாக சுரண்டியும், பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய வைத்து கொலை செய்தும் கொள்ளை இலாபம் ஈட்டும் இந்நிறுவனங்கள் தமது செயல்களின் விளைவுகளுக்கு எந்த பொறுப்பையும் எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. தமது ‘சுதந்திர’ வர்த்தகத்துக்கு முட்டுக்கட்டை போடும் எந்த தொந்தரவையும் சகிக்க முடியாமல் இன்னும் ‘சுதந்திரம்’ நிலவும் ஆப்பிரிக்காவின் பின்தங்கிய நாடுகளில் தமது உற்பத்தியை மாற்றி கொள்ளையை தொடரும் வேலையை ஆரம்பித்திருக்கின்றன. வால் டிஸ்னி நிறுவனம் வங்கதேசத்தில் தனது ஆடை உற்பத்தியை நிறுத்தி விட்டு ஏப்ரல் 2014 முதல் ஈக்வேடார், வெனிசுலா, பெலாருஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நகர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. ஹென்னஸ் & மவுரிட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலர் கார்ல் ஜோஹன் பேர்ச்சொன் உற்பத்தியை மத்திய மற்றும் தென் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளுக்கு மாற்ற திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டு பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்களுடன் பிணைத்துக் கொண்ட வங்க தேச ஆளும் வர்க்கமோ தனது நலன்களை பாதுகாத்துக் கொள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாள் வேலை செய்கிறது. ஒட்டச் சுரண்டப்படும் சொந்த நாட்டு மக்களை மேலும் வதைக்க அது தயங்கவே இல்லை.

2008, 2009 ஆண்டுகளில் ஊதிய உயர்வு கேட்டு நடந்த நூற்றுக்கும் அதிகமான போராட்டங்ளை போலீசை ஏவி ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை அடித்து நொறுக்கியது, 6 பேரை சுட்டுக்கொன்றது. 2010-ம் ஆண்டு கொலைமிரட்டலுக்கு ஆளாக்கப்பட்ட தொழிற்சங்க அமைப்பாளர் அமினுல் இஸ்லாம், போலீஸாரால் சித்தரவதை செய்யப்பட்டார். 2012-ல் ‘மர்மான முறையில்’ கொல்லப்பட்டார். அரசாங்கம், கொலையாளியை இன்று வரை வெளியே தேடிக்கொண்டு இருக்கின்றது.

சாவர் விபத்திற்கு பின் தொழிலாளர் நலனில் அக்கறை உள்ளது போல் ஊளையிட்ட வங்கதேச அரசின் சாயம் சீக்கிரமே வெளுத்துவிட்டது, வழக்கம் போலவே தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்க போலீஸை ஏவி, பல தொழிலாளிகளை படு காயப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் தொழிற்சங்க உரிமை, தொழிலாளர் நலக்குழு போன்ற பசப்பு வார்த்தைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தன்னார்வ குழுக்களும் முன் வைக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தங்களை பாதுகாக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துள்ள வங்கதேச தொழிலாளர்கள் அவற்றை ஏற்கத் தயாராகவும் இல்லை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதாகவும் இல்லை.

இன்று வங்கதேசத்தில் கிளர்ந்து எரியும் இந்த போராட்டத் தீ உலகெங்கும் பற்றிப் பரவ வேண்டும். ஏழை நாடுகளில் சுரண்டப்படுகின்ற தொழிலாளர்கள் அனைவரும் ஐக்கியப்பட்டு போராட வேண்டும். உலகமயமாக்கத்தின் மூலம் உலகெங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டை உருவாக்கியுள்ள நச்சுச் சூழலை தொழிலாளிகளின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம்தான் முறியடிக்க முடியும்.

– ஜென்னி

மேலும் படிக்க

 

ஜெயமோகன் : கட்அவுட்டை முந்தும் கீ போர்டு !

68

ஜெயமோகன்

சீமைச்சாராயத்திற்கும், அரவிந்த ‘சாமியின்’ ஆரோவில் ஆன்மீக மணத்திற்கும் புகழ் பெற்ற பாண்டிச்சேரியில் இருந்து நமது விசாரணையைத் துவங்க வேண்டியிருக்கிறது.

மலையாள சினிமா வேலையின் பொருட்டு பலநாட்களாக கேரளத்தில் இருக்கும் ஜெயமோகன் திருவனந்தபுரத்தில் விமானம் பிடித்து சென்னை வந்து, காரில் புதுச்சேரி செல்கிறார். அங்கே அவரது ‘வாசகர்’ சுனில் கிருஷ்ணனது திருமணம். அதில் பங்கேற்க எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் மற்றும் ஜெயமோகனது அபிமானிகள் ஒரு 25 பேரும் வருகின்றனர். ஜமா களை கட்டுகிறது.

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுவோம். ஜெயமோகனது ஊட்டி குருகுல கோடைக்கால முகாமிற்கு வருவதற்கே ஏகப்பட்ட கண்டிஷன்கள் உண்டு. அந்த நிபந்தனைகளை ஏற்றுச் செல்ல விரும்பும் அப்பிராணிகளின் நிலை குறித்து வினவிலும் விரிவாக எழுதியிருக்கிறோம். அது போல ஜெயமோகனது உள்வட்டத்தில் பங்கேற்றால்தான், நான்ஸ்டாப்பாக அவர் பேசும் (எல்லாம் ஏற்கனவே எழுதியவைதான்) கீறோபதேசத்தை (கீறோபதேசம் – கீறல் விழுந்த ரிக்கார்டு பிளேயர்) கேட்கும் பாக்கியம் உண்டு. சரி அண்ணனது உள்வட்டத்தில் பங்கேற்க என்ன தகுதி வேண்டும்?

ஒன்று அவர் எழுதிய ஏதாவதொன்றை படித்திருக்க வேண்டும். பிறகு அப்படி படித்ததை உள்ளொளி, தரிசனம், ஏகப்பட்ட திறப்பிற்கு காரணம் என்று எழுதியோ, பேசியோ அண்ணனது காதடியிலோ இல்லை கண்ணடியிலோ சமர்ப்பிக்க வேண்டும். அப்புறம் அண்ணன் அவற்றை இழுத்து இன்னும் கொஞ்சம் பேசி தீட்சை அளிப்பார். பிறகென்ன, அவரது வீட்டு நாயை கொஞ்சும் பாக்கியத்திலிருந்து அருகர் பாதையை அளந்து போகும் மகா பாக்கியம் வரை கண்டிப்பாக கிடைக்கும். ஆனாலும் கண்டிஷன்ஸ் அப்ளை உண்டு. அது, அன்னாரது கிச்சன் கேபினட்டில் நீடிக்க வேண்டுமென்றால் சாகும் வரை காதுகளையும், மூளையின் பதிவு நரம்புகளையும் பட்டா போட்டு எழுதிக்கொடுத்து விடவேண்டும். பொறுக்கமாட்டாமல், “போதும் தல ரொம்ப போரடிக்கிறது” மாதிரி ஏதாவது பேசிவிட்டால் விஷ்ணுபுரம் குருகுலத்திலிருந்து மெமோ இல்லாமலேயே நீங்கள் நீக்கப்படுவீர்கள்.

ஏன் வினவு, ஜிங்குச்சாதான் அண்ணனுக்கு பிடித்த இசை என்று ஒருவரியில் முடிப்பதை விட்டு இழுக்கிறீர்களே என்று கோபப்படாதீர்கள், இனி விசயத்திற்கு வருவோம்.

பாண்டிச்சேரி திருமண நாயகனான சுனில் கிருஷ்ணன் லேசுப்பட்ட ஆளல்ல. ‘அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் கவரப்பட்டு பிறகு அதற்கென்று ஒரு இணைய தளம் ஆரம்பித்து இன்று அதை காந்தியின் பெயரில், தமிழில் ஒரு முக்கிய இணைய தளமாக மாற்றி காந்தி குறித்த வார்த்தைகளை சலிப்பில்லாமல் ஏற்றி வருபவர். காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக பணிபுரிபவர்’. குடும்பமே ஆயுர்வேத பரம்பரைதானாம்.

அண்ணா ஹசாரேவை பார்க்க வரும் நகரத்து அம்பிகளை நம்பி அவரது மகாராஷ்டிரா ராலேகான்சித்தி கிராமத்தில் நாலைந்து டீக்கடை போட்டவர்களே திவாலான நிலையில் சுனிலின் விடாப்பிடியான போக்கு ஆச்சரியமானதுதான். அதுவும் அரவிந்த் கேஜ்ரிவாலை பார்ப்பேன், பார்க்க மாட்டேன், அவரது கட்சிக்கு வாக்கு கேட்பேன், கேட்கமாட்டேன் என்று காமடி கைப்புள்ளையாக டீம் அண்ணா பலூன் புஸ்ஸாகி விட்ட நிலையில் அவரையும், காந்தியையும் உலக அளவில் 18 இலட்சமாவது இணைய தள பிரபலத்துடன் நடத்துவது போற்றுதலுக்குரியது.

சுனில் திருமணம் குறித்த ஜெயமோகன் பதிவைப் படித்த போது சட்டென்று தோன்றியது, திருமணத்தின் புகைப்படங்களைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம். ஒரு ஆயுர்வேத மருத்துவர், காந்தியவாதி, ஜெமோவின் சீடர் எப்படி தோற்றமளிப்பார் என்று ஒரு எதிர்பார்ப்பு. ஆள் பாதியென்றால் ஆடை பாதியல்லவா! மடிசாரா, கச்சமா, வேட்டியா, காந்தி குல்லாயா, குர்தாவா, பைஜமாவா என்றெல்லாம் யூகித்தவாறு சுனிலைப் பார்த்தால்… ஐயோ என்ன கொடுமை இது, கிறித்தவ ஐரோப்பிய மையவாத காலனியாதிக்கத்தின் கொடையான சூட்டு, கோட்டு, டை, ஷூ (புகைப்படத்தில் ஷு இல்லையே என்று கேட்காதீர்கள், சூட்டு போட்டுவிட்டு ஹவாய் செருப்பு போடமாட்டார்கள் என்று நம்புவோம்) சகிதம் காட்சியளிக்கிறார்.

இவ்வளவுதானா காந்திய, ஆயுர்வேத, ஜெயமோகன, பாரத அபிமானம் என்று வெறுத்துப் போனது. சரி சரி, தலயே மங்காத்தாவில் “இன்னும் எவ்வளவு நாளைக்கு நல்லவனாகவே நடிப்பது” என்று வில்லனாக பொளந்து கட்டும் போது காந்தியெல்லாம் எம்மாத்திரம் என்று சமாதானம் செய்தபடி இந்த திருமணத்தின் சிறப்பு என்ன என்று கண்டுபிடிக்க முனைந்தேன்.

ரொம்ப நுண்ணுணர்வோடு, சலித்துப் பார்த்தாலும் இரண்டு சங்கதிகள்தான் கிடைத்தன. ஒன்று சுனிலுக்கு மணப்பெண்ணை பிடித்திருந்ததால் மகிழ்ச்சியுடன் காட்சியளித்தார். இரண்டு, தேங்காய் போட்ட தாம்பூலப்பையில் ஜெயமோகனது நூல் ஒன்றையும் அன்பளிப்பாக அனைவருக்கும் வழங்கியிருக்கிறார். பிறகு, இலவசமாக நூல் கொடுத்தால் படிப்பார்களா, பரணில் வைப்பார்களா என்றெல்லாம் ஜெயமோகனது தத்துவ விசாரணைகள்.

தீவிர கம்யூனிஸ்ட் எனும் காட்டானாக விதிக்கப்பட்டதனாலோ என்னவோ சாதி மறுப்புத் திருமணமா, வரதட்சணை இல்லையா, தாலி இல்லையா, சடங்கு சம்பிரதாயங்கள் இல்லையா அல்லது குறைச்சலா, எளிய முறையில் திருமணம் நடந்ததா என்று முன்முடிவுடன் தேடிப்பார்த்தால் எதுவும் எழுதப்படவில்லை. ஜெமோவைப் பொறுத்தவரை அவருடைய நூல் கொடுக்கப்பட்டதே மாபெரும் புரட்சிகர நடவடிக்கை. ஜெயமோகன் எந்த விசயத்தை பார்த்தாலும், கேட்டாலும், கலந்து கொண்டாலும் அதில் தனக்கு என்ன இடம் என்று மட்டும் பார்ப்பார் போலும். இந்தப் பார்வைதான் இனி வர இருக்கும் பிரச்சினைக்கு ஒரு முன்னோட்டம்.

என்ன பிரச்சினை? திருமணம் முடிந்த பிறகு புதுச்சேரியில் ஒரு நண்பரை சந்திக்க எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் சகிதம் சென்றிருக்கிறார் அண்ணன் ஜெயமோகன். அந்த நண்பர் யார்? ஜெயமோகன் ஸ்டைலில் சொன்னால் வாசிப்பு, ஓவியம், இசை என்று நுண்ணுணர்வு மிக்கவர். இந்த நுண் இல்லாத பன்னுகளுக்கெல்லாம் அண்ணனது நட்பு வட்டத்தில் அனுமதி இல்லை என்பதை ஏற்கனவே பார்த்து விட்டோம்.

அந்த நுண்ணுணர்வு மிக்க நண்பரின் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு எழுபது வயது பெரியவர், புதுச்சேரியில் எழுந்தருளியிருக்கும் படைப்பாளிகளை சந்திக்க வேண்டும் என்று கேட்டு விரும்பி வந்திருக்கிறார். ஜெயமோகன் சொல்லியிருக்கும் விசயங்களின் படி பார்த்தால் அந்த பெரியவர் ஏதோ சில திமுக கூட்டங்களுக்கு, அதுவும் அண்ணாத்துரை காலத்தில் சென்று கேட்டவர், சில பல நூல்கள், சேதிகள் அறிந்தவர். முக்கியமாக தான் கற்றவற்றை கொட்டுவதற்கு மைக்கோ, ஆம்பிளிஃபயரோ, ஸ்பீக்கரோ குறைந்த பட்சம் ஃபேஸ்புக்கில் கணக்கோ கொண்டவரல்ல. எழுத்தாளர்கள் என்றதும் அவர்களிடம் தனது திறமையை பறைசாற்ற விரும்பியிருக்கிறார்.

ஜெயமோகன் புரிந்து கொண்ட விதப்படி சொன்னால் இந்தப் பெரியவர் சரக்கே இல்லாமல் பேசி பிளேடு போடக்கூடிய ஒரு மொக்கை. (டிஸ்கி: இதை எல்லாம் ஜெயமோகன் சொன்ன ஒருதரப்பான விவரங்கள் அடிப்படையில் மட்டும் பேசுகிறோம். உண்மையில் அந்த பெரியவர் தரப்பு வாதம் என்ன என்று கேட்டுப் பெறும் வாய்ப்பு நமக்கில்லை. அதனால் அந்தப் பெரியவர் மன்னிக்க வேண்டும். முக்கியமாக, இங்கு விவாதப் பொருள் அவர் அல்ல.)

இத்தகைய பிளேடு மொக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறார்கள் என்று பொதுவில் சொல்லலாம். எனினும் யார் மொக்கை, எது மொண்ணைத்தனம் என்ற அளவு கோல் வர்க்கத்திற்கேற்ப மாறுபடும். அண்ணன் ஜெயமோகனோ, இல்லை அண்ணன் அதியமானோ, ஏன் தம்பி வினவு கூட சமயத்தில் சிலருக்கு மொக்கையாகத் தோன்றலாம். இங்கே நாம் அது குறித்து ஆராயவில்லை.

அந்த பெரியவர் முதலில் நாஞ்சில் நாடனிடம் பிளேடு போடுகிறார். பொறுக்கமாட்டாமல் நாஞ்சில் முடித்துக் கொண்டு வெளியேறுகிறார். அப்போது உள்ளே வரும் ஜெயமோகன், அடக்கப்பட்ட கோபத்தை தணிப்பதற்காக தீர்த்தம் சாப்பிடப் போகும் நாஞ்சிலின் துயரார்ந்த முகத்தைப் பார்த்து சினம் கொள்கிறார். பெரியவர் வெற்றிகரமான தனது பிளேடை ஜெயமோகனிடமும் போடுகிறார். காஞ்சிக்கு என்ன அர்த்தம், தூங்குதலா, தொங்குதலா, வட்ட எழுத்து, பிராமி எழுத்து என்று ஏதேதோ கேட்கிறார். ஆரம்பத்தில் சட்டு பட்டென்று சரியான பதில் சொல்லும் ஜெயமோகன் இறுதியில் இது சரிப்பட்டு வராது என்று அறம் பாடுகிறார்.

எழுபது வயசிலும் மூளையை காலிசட்டியாக வைத்திருக்கும் முட்டாளே என்று வசைபாடி, எழுத்தாளர்களெல்லாம் எவ்வளவு படித்து எழுதியவர்கள் என்று வகுப்பெடுத்துவிட்டு, என்னையோ, நாஞ்சிலையோ ஒரு வரியாவது படித்திருக்கிறாயா என்று சீறிவிட்டு கற்றாய்ந்த சான்றோரை மதிக்கத் தெரியாத முண்டமே என்று விரட்டுகிறார்.

பிளேடுகளை எதிர் கொள்வது ஒரு கலை. ஒரு எளிய கிண்டல் மூலமோ, திசைதிருப்பல் மூலமோ அவர்களை சீண்டிவிட்டு நிறுத்தலாம். இல்லையென்றால் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தப்பிக்கலாம். அதற்கெல்லாம் உலகோடு ஒட்ட ஒழுகும் யதார்த்தவாதியாக இருக்க வேண்டும். ஆனால் எப்போதும் டைட்டாகவே இருக்கும் ஜெயமோகன் இத்தகைய பிளேடுகளோடு உரசும்போது எளிதில் தீப்பற்றிக் கொள்கிறார். போகட்டும்.

இங்கே ஒரு மொக்கையிடம் ஜெயமோகன் கோபம் கொண்டது கூட பிரச்சினை இல்லை. அது ஒரு குறையுமில்லை. ஆனால் இந்த சம்பவத்தை விரிவாக எழுதியிருக்கும் ஜெயமோகன் தனக்கு அந்தப் பெரியவரால் நேர்ந்திருக்கும் அபகீர்த்தியின் பொருட்டு முழு தமிழகத்திற்கும் சாபம் விடுகிறார். எழுத்தாளனை மதிக்கத் தெரியாத, முட்டாள்தனம் நிரம்பி வழியும், அறிவை தெரிந்து கொள்ள விரும்பாத என்று உண்டு இல்லையென பிய்த்து விடுகிறார். இவர்கள்தான் தமிழ் இணையத்தையும் நிறைக்கிறார்கள் என்றும் சேர்க்கிறார். இங்குதான் நமக்கு ஒரு கேள்வி வருகிறது. பெரியவரது பிளேடாவது கொஞ்சம் எரிச்சலைத்தான் தருகிறது. ஜெயமோகனதுவோ உடலையே அறுத்து இரத்தம் வரவழைக்கிறது. எனில் எது ஆபத்தான பிளேடு?

ஏற்கனவே ஒரு முறை கேரளம் சென்ற ஜெயமோகன் ஒரு ஓட்டலுக்குச் சென்று அலட்சியமாக “எந்தா வேண்டே” என்று கேட்ட ஒரு பரிசாரகரை வைத்து முழு கேரளத்தின் அடிமைத்தனம், தாழ்வு மனப்பான்மை, அதற்கு காரணமான இடது சாரி வரலாறு, தொழிற்சங்க ஆதிக்கம் என்று பெரும் தத்துவ ஆய்வு செய்து படுத்தி எடுத்திருக்கிறார். அது குறித்து வினவில் வந்த கட்டுரையை படித்துப் பாருங்கள். இப்போதும அதுவே மீண்டும் நடக்கிறது. ஒரு மொக்கையிடம் கோபப்படும் ஜெயமோகன் முழு தமிழ்நாடும் மொக்கையே என்று சாபம் விடுகிறார். அதுவும், தான் ஒரு எழுத்தாளன் என்பதை வெள்ளைக்காரர்கள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் மதிக்கிறார்கள், தமிழ்நாட்டில் அது சாத்தியமே இல்லை என்று தீர்ப்பளிக்கிறார்.

தனது அப்பாவின் சர்வாதிகாரத்தை வைத்து உலக சர்வாதிகாரிகளை ‘ஆய்வு’ செய்த சுந்தர ராமசாமியின் மாணவர் வேறு எப்படி பேசுவார்? எனில் ஜெயமோகனது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பாமரர்கள் அவருக்கு ஏதாவது குறைகளை அறிந்தோ அறியாமலோ செய்து விட்டால் அதன் விளைவுகளை முழு சமூகமும், மக்களும் சுமக்க வேண்டியிருக்கும். நாகர்கோவில் நகரசுத்தி தொழிலாளி என்றாவது ஒருநாள் ஜெமோவின் பார்வதிபுரத்து வீட்டின் குப்பையை எடுக்க மறந்துவிட்டார் என்றால் இந்த உலகை குப்பைக் கூளமாக்கி வரும் மனித குலத்தின் அழுக்கு சாரம் குறித்து ஒரு தத்துவவிசாரம் புகழ்பெற்ற அந்த கீபோர்டில் உதிப்பது உறுதி. குப்பை எடுக்குற அண்ணே, பாத்து குப்பையை எடுத்து நம்ம மக்களோட மானத்தை காப்பாத்துங்கண்ணே!

இனி நமது குறுக்கு விசாரணையை தொடங்குவோம்.

அந்த மொக்கை பெரியவரை அறிமுகப்படுத்திய ஜெமோவின் நுண்ணுணர்வு மிக்க புதுச்சேரி நண்பரை விசாரிப்போம். இவ்வளவு நுண்மாண் புலத்து அறிவார்ந்த நண்பர், எழுத்தாளர்கள் அந்த பிளேடு பெரியவரை சந்திக்க ஏன் அனுமதிக்கிறார்? உலகம் போற்றும் உத்தம எழுத்தாளரை கடித்துக் குதறும் அந்த அற்பத்தை அற்பமென்று ஏன் மதிப்பிடத் தெரியவில்லை? இதற்கு ஜெயமோகன் கூறும் சமாதானம், “இத்தகையோரில் பெரும்பாலானவர்கள் ஒருவகை அப்பாவிகளாக, பிறர் தங்கள் மீது ஏறி அமர்ந்து காதைக் கடிக்க அனுமதிப்பவர்களாகவே இருப்பார்கள். அவரும் அப்படித்தான்.” சரி இதுதான் உண்மையென்றால் ஜெயமோகனும் கூட அந்த அப்பாவியின் காதை ஏறிக்கடித்துதானே இமேஜை திணித்திருக்க வேண்டும்?

அல்லது, இவ்வளவு நாட்கள் அந்த நண்பர் ஜெமோவை வாசித்து எதையும் பெறவில்லை என்றாவது கூறவேண்டும். ஒரு மனிதன் நல்லதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெறும்போது அவன் ஏன் கெட்டதை கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்வி வருகிறதல்லவா? அந்த கெட்டதை மதிப்பிடும் அளவுக்குக் கூட அந்த நல்லது லாயக்கில்லை என்றால் அந்த நல்லதின் யோக்கியதை என்ன? நியாயமாக, அந்த மொக்கையிடம் இந்த எழுத்தாளர்களை தவிக்க விட்ட குற்றத்திற்காக அந்த நண்பரை விஷ்ணுபுரம் சிஐடி அரங்கசாமியை விட்டு விசாரித்து, குறைந்த பட்சம் மெமோவாவது கொடுத்திருக்க வேண்டுமே? சாரமாகச் சொன்னால் அந்த நண்பர் ஜெயமோகனையும் ரசிக்கிறார், அந்த பெரியவரையும் ரசிக்கிறார். இதையே “நான் பாலகுமாரனையும் ரசிப்பேன், ரமணி சந்திரனையும் ரசிப்பேன், ஜெயமோகனையும் ரசிப்பேன்” என்று ஒரே போடாக நம்ம ராம்ஜி யாஹூ போட்டதும் பின்னூட்டப் பெட்டி ஒரே புண்ணூட்டப் பெட்டியாகவிட்டது என்று அழுது கொண்டு அண்ணன் ஜெயமோகன் மறுமொழி ஜனநாயகத்தையே தூக்கவில்லையா?

ஆகவே அந்தப் பெரியவர் மொக்கை இல்லை என்று ஜெயமோகனது நுண்ணுணர்வு மிக்க நண்பரே கூறிவிட்டார். எனவே அந்த பெரியவரையும், தமிழர்களையும் கடித்துக் குதறுவதற்குப் பதில் நண்பரை திருத்தும் வேலையை பார்ப்பது சாலச்சிறந்தது. இப்படியெல்லாம் திருத்தப் புகுந்தால் விரைவிலேயே விஷ்ணுபுரம் வட்டம் என்பது ஜெயமோகானந்தா எனும் மூலவர் மட்டும் அனாதையாக அம்போவென உலாவரும் இடமாவது உறுதி.

அந்தப் பெரியவர் தன்னை சிறுமைப்படுத்தியதற்கு கூட ஜெயமோகன் கோபப்படவில்லையாம். முக்கியமாக நாஞ்சில் நாடனை வறுத்தெடுத்ததுதான் அவரது ஆத்திரத்தை அடக்கமாட்டாமல் பொங்க வைத்ததாம். அப்படி என்ன நடந்தது? அந்தப் பெரியவர் தலித்துக்களை பற்றி இழிவாக பேசினாராம். இது பொறுக்காமல் நாஞ்சில் நாடன் சிலவற்றை கடுமையாக பேசினாராம். இறுதியில் பெரியவர் “நீ என்ன சாதி” என்று நாஞ்சிலைக் கேட்க “அதைச் சொல்லும் உசிதமில்லை” என்று மறுத்து விட்டாராம். பிறகுதான் தீர்த்தம் அடித்து சினத்தை குறைக்க வெளியேறியிருக்கிறார்.

இங்கே ஒரு முற்போக்கு சென்டிமெண்ட் தந்திரம் உள்ளது. அதாவது தனது கோபம் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் அநீதியை எதிர்த்து எழும்பியிருக்கிறது என்று காட்டுகிறார் அண்ணன் ஜெமோ. பரவாயில்லை இந்துத்துவவாதிகள் இத்தனை ஆண்டுகள் கழித்து இத்தகைய நேயத்தை காட்டுகிறார்களே என்று மகிழ்ச்சி அடையாதீர்கள். கருவாடு எந்த காலத்திலும் மீனாகாது (உபயம் : காளிமுத்து), இதிலும் நிறைய உள்குத்து அடங்கியிருக்கிறது. முதலில் நாஞ்சில் நாடன் தனது நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் எனும் சாதியையோ அது தரும் சலுகைகளையோ துறந்தவர் அல்ல. இந்த சாதி பார்ப்பனியத்தின் கொடிய வழக்கங்களை இன்றும் பின்பற்றும் ஒரு ‘உயர்’ சாதி. இப்படி இருக்கையில் அந்தப் பெரியவர் கேட்கையில் சாதியை சொல்லாமல் விட்டது ஒன்றும் சாதி மறுப்புக் கொள்கையின் பாற்பட்டதல்ல.

முக்கியமாக தனது மகள் 600க்கு 596 (கட் ஆஃப்பா தெரியவில்லை) எடுத்தும், தான் பிறந்த சாதி காரணமாக அவளுக்கு மருத்துவர் படிப்பு கிடைக்கவில்லை என்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார் நாஞ்சில் நாடன். பிறகு கவிஞர் அப்துல் ரகுமானைப் பார்த்து எழுத்தாளர் கோட்டாவில் (திமுக செல்வாக்கு) எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி கவிஞர் அப்துல் ரகுமான் ஒரு ஆண்மையுள்ள கவிஞர் என்ற வேறு முதுகு சொறிந்திருக்கிறார். இதை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் அவரது தளத்தில் பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக அந்தக் கூட்டத்திற்கு போகாமல் இருந்திருந்தாலாவது நாஞ்சில் நாடனைப் பற்றிய மதிப்பு குறையாமல் இருந்திருக்கும் என்று வருத்தப்படுகிறார் கவிதா. நமது எழுத்தாளர்களுக்கும் அவர்களது புகழுக்கும் கவிதாவைப் போன்றவர்கள் பெருந்தன்மையுடன் அளித்து வரும் சலுகையைப் பாருங்கள்!

போகட்டும், நாஞ்சில்நாடன் சொல்லியிருக்கும் இந்த ‘உயர்’ சாதியில் பிறந்ததால் எங்களுக்கு ஒன்றுமே இல்லை எனும் ஒப்பாரி உண்மையில் தாழ்த்தப்பட்ட மற்றும் சூத்திர மக்கள் மீதான சாதி ஆதிக்க வன்மமாகும். நாஞ்சில்நாடன் மகளுக்கு மருத்துவர் சீட்டுதான் கிடைக்கவில்லை. அதுவும் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து கிடைத்து விடுகிறது. ஆனால் சேலம் கட்டியநாயக்கன்பட்டியிலுள்ள தாழ்த்தப்பட்ட சிறுமி தனத்திற்கு பள்ளியில் குடிநீரே கிடைக்கவில்லை. ஆதிக்க சாதியினர் குடிக்கும் பானையில் மொண்டு குடித்தாள் என்று ஆசிரியரால் தாக்கப்பட்டு கண் போகும் நிலையில் இருந்தாள் தனம். அந்த நேரம் அந்த கிராமத்திற்கு சென்று செய்தி சேகரித்திருக்கிறேன். இன்று தனம் ஏதோ விவசாய வேலை செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்கிறாள். நாஞ்சில் நாடன் மகள் டாக்டராகி மருத்துவம் பார்க்கிறாள். தாழ்த்தப்பட்ட மக்கள் பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் விரட்டப்படுகிறார்கள். நாஞ்சில் நாட்டு வேளாளர்கள், மருத்துவம் மறுக்கப்பட்டால் கணினி படித்து அமெரிக்கா சென்றுவிடுகிறார்கள். இதுதான் உண்மை.

ஆக தாழ்த்தப்பட்ட மக்களை இட ஒதுக்கீட்டின் பெயரில் இழிவுபடுத்தியது அந்த பெரியவர் மட்டுமல்ல, நாஞ்சில் நாடனும் கூடத்தான். இப்பேற்பட்ட மனிதன் மீது ஜெயமோகன் கொண்டிருக்கும் அபிமானத்தின் தரம் என்ன என்பது இப்போதாவது புரிகிறதல்லவா? சாதி மத பிற்போக்குத் தனங்களோடுதான் இவர்கள் வாழ்கிறார்கள்.

ஏதோ நாஞ்சில் நாடன் மட்டும்தான் பார்க்கவேண்டியவர்களை பார்த்து முதுகு சொறியவேண்டியவர்களை சொறிந்து காரியம் சாதித்துக் கொள்கிறவர் என்று நினைத்துவிடாதீர்கள். அநேக சிறுபத்திரிகை எழுத்தாளர்களும் அப்படித்தான். ஜெயமோகனது மலேசியா, ஆஸ்திரேலியா பயணங்களுக்கு புரவலர்கள் யார் அவர்களது பின்னணி என்ன என்று பார்த்தாலும் அது நிரூபணமாகிறது.

முள்ளிவாய்க்கால் போர் நடந்து கொண்டிருக்கும் போது ஈழத்தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட நாட்களில் ஆஸ்திரேலியா சென்று அந்த நாட்டைப் பற்றி உருகி மருகி தொடரே எழுதியிருக்கிறார் ஜெயமோகன். அவரை வரவேற்று உபசரித்த டாக்டர் நோயல் நடேசன் எனும் ஈழத்தமிழர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர், போருக்கு பிந்தைய வன்னி முகாம்களைப் பார்த்து விட்டு அவை உலகத்தரத்தில் இருப்பதாக பாராட்டியவர் என்று இனியொரு தளத்தில் அசோக் யோகன் என்பவர் எழுதியிருக்கிறார்.

ஜெயமோகன் அளவுப்படி ஒருவர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளராக இருப்பது குற்றமில்லை, அவர் விஷ்ணுபுரத்தை படித்திருக்கிறாரா என்பதுதான் முக்கியமானது. மலேசியாவில் ஒருவர் ஊழல் செய்திருக்கிறாரா என்பது பிரச்சினையல்ல, அவர் அறம் கதைகளை கொண்டாடுகிறாரா என்பதுதான் அளவுகோல். எனில் ஜெயமோகனது அறம் எது, அதன் தரம் என்ன என்பதை வாசகரே முடிவு செய்து கொள்ளலாம்.

இதே பெரியவரை பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்தித்திருந்தால் அறைந்திருப்பேன் என்று எழுதும் ஜெயமோகன் இன்று நிறையவே பக்குவம் அடைந்துவிட்டதாக கூறுகிறார்.

இறுதியாக “அவரது அசட்டுத்தனத்தை ஒருபோதும் அவர் புரிந்து கொள்ள மாட்டார். அறிவுத்துறை என்று ஒன்று உண்டு, அதில் எதையாவது அறிவதனூடாகவே நுழைய முடியும் என்ற எளிய உண்மையை ஒரு சராசரித் தமிழனுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவனுடைய அசட்டுத் தன்னம்பிக்கை அவனை கவசமாக நின்று காக்கும். அதற்குள் நின்றபடி அவன் எவரைப்பற்றியும் கருத்து சொல்வான். எவரையும் கிண்டலடிப்பான். ஆலோசனைகளும் மாற்றுக்கருத்துக்களும் தெரிவிப்பான். இணையத்தில் இந்த ஆசாமியைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் உலவிக்கொண்டிருக்கிறார்கள்…. ஒரு வெள்ளையரிடம், ஈழத்தமிழரிடம் , மலையாளியிடம், கன்னடனிடம் என்னை எழுத்தாளன் என அறிமுகம் செய்து கொள்ள எனக்கு தயக்கமில்லை. ஆனால் ஒருபோதும் தமிழகத் தமிழரிடம் அப்படி என்னை முன்வைக்கும் தைரியம் வருவதில்லை. ஏனென்றால் எழுத்தாளன் என்றால் என்ன, அவனிடம் எதைப்பேசலாம், எதைப் பேசக்கூடாதென்று அவர்கள் அனைவருக்கும் தெரியும். நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம்மிடம் மிக ஆழமான உளவியல் கோளாறு ஏதோ உள்ளது. அறிவுக்கு எதிரான ஒரு நரம்பு இறுக்கமா அது?” என்று முடிக்கிறார்.

jeyamohan-ooty

மேற்கண்ட தத்துவ முத்துக்கள் எதுவும் புதியவை அல்ல. காலஞ்சென்ற சுந்தரராமசாமியிலிருந்து, “நானெல்லாம் ஷிட்னி ஷெல்டனோடு காபி சாப்பிட வேண்டிய ஆள், ஃபூக்கோ, தெரிதாவோடு ரெமிமார்ட்டின் அருந்த வேண்டிய ஆள், இங்கே வேறுவழியின்றி தமிழ் சுண்டக்கஞ்சியை குடிக்கிறேன்” என்று புலம்பும் சாருநிவேதிதா வரை அனேக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் கூறிவரும் அரதப்பழசான கருத்து. புலவனை மதிக்கத்தெரியாத மன்னன், ஊர், மக்கள் என்று இந்த அறிவு மற்றும் கோமாளித்தனமான மேட்டிமைத்தனம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவும் உண்டு. ஓரளவு ஜனநாயகத்திற்கு பழக்கப்பட்ட மேற்குலகில் இத்தகைய அசட்டுத்தனங்கள் தற்போது குறைந்திருக்கலாம். அடிமைகள் அதிகம் வாழும் நம்மைப்போன்ற ஏழை நாடுகளில் அதுவும் அறிவை சாதிரீதியாக பிரித்து வைத்திருக்கும் பார்ப்பனியத்தின் மண்ணில் இந்த அறிவுப் பணக்காரர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

லீனா மணிமேகலையின் கவிதை குறித்து எழுதப்பட்ட வினவு கட்டுரைக்கு நள்ளிரவில் அழைத்து ஒருமையில் திட்டிய கவிஞர் செல்மா பிரியதர்ஷன் திரும்பத் திரும்பக் கேட்ட கேள்வி, “உனக்கு கவிதை, இலக்கியம் குறித்து என்ன தெரியும்? லீனா மணிமேகலையின் கவிதை குறித்து விமரிசிக்க நீ யார்?”

இதையே சினிமா குறித்து உனக்கு என்ன தெரியும், ஓவியம் குறித்து என்ன தெரியும் என்று பலமுறை வேறு வேறு தருணங்களில் கேட்டிருக்கிறேன். இவை குறித்து நாம் ஏதும் விமரிசித்தால் அந்த விமரிசனத்திற்கு பதில் தராமல் கேள்வி கேட்பவனது தரம் என்ன என்று கேட்கிறார்கள் இந்த அறிவாளிகள். ஒரு படைப்பு குறித்து வரும் விமர்சனங்களை பரிசீலிக்கும் ஜனநாயகம் இவர்களிடம் இல்லை. மாறாக, விமர்சனம் எழுதுபவனின் தரம் என்ன, அவனுக்கு என்ன உரிமை உள்ளது என்று மறுக்கும் பாசிசத்தையே முன் வைக்கிறார்கள். இதற்கு அந்த காலத்து பார்ப்பனீயம் முதல் இந்தக் காலத்து சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் வரை விதிவிலக்கல்ல.

உண்மையில், இந்தத் தமிழ் எழுத்தாளர்கள் எதிர்பார்ப்பது அவர்களது நூல்களைப்படித்து விட்டு மானே, தேனே என்று ஜால்ரா போடுவதை மட்டும். மீறினால் பாய்ந்து குதறி எடுத்துவிடுகிறார்கள்.

அந்தப் பெரியவர், குறிப்பிட்ட துறை சார்ந்து முழுமையாக வாசிக்காமல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு ஆட்டம் போடுகிறார் என்று ஜெயமோகன் கோபப்படுகிறாரே அதே போல மற்ற துறை சார்ந்தவர்களுக்கும் ஜெயமோகன் மீது வரலாம் இல்லையா?

ஏன் இந்த வரலாம்? இதோ ஆதாரம். காரல் மார்க்ஸ் ஒரு காட்டுமிராண்டி, மனைவியையும், மகளையும் வெறி கொண்டு அடிப்பவர், இதனாலேயே அவரை காட்டுமிராண்டியெனும் பொருள் கொண்ட மூர் என்ற வார்த்தையால் அழைப்பார்கள் என்று ஜெயமோகன் ஒரு முறை எழுதியிருந்தார். முதலில் இது ஜெயமோகனது சொந்த சரக்கு அல்ல. மார்க்சியத்தை பற்றி பில்லியன் கணக்கில் இருக்கும் மேற்குலக அவதூறுகளை, அதுவும் அரவிந்தன் நீலகண்டன் போன்ற அற்பங்கள் எடுத்துக் கொடுத்ததை காப்பி பேஸ்ட் செய்கிறார். சொந்த முறையில் தெரிந்து கொண்டு எழுதும் எவரும் இத்தகைய அசட்டுத்தனங்களை செய்வதில்லை.

ஐரோப்பாவில் குறிப்பாக ஸ்பெயினில் சில நூற்றாண்டுகள் இசுலாமியரது ஆட்சி நடக்கிறது. அங்கே கற்றறிந்த சான்றோர்களை மூர் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இப்படித்தான் ஐரோப்பிய இலக்கிய வட்டாரங்களின் அறிஞர்களை குறிக்கும் சொல்லாக மூர் நுழைகிறது. அதன்படி கார்ல் மார்க்ஸ் நட்பு வட்டாரத்தில் அவரை மூர் என்று செல்லமாக அழைப்பார்கள். இப்படித்தான் மார்க்சின் மகள்கள் மட்டுமில்லை, எங்கெல்சும் கூட மூர் என்று அன்போடு அழைத்து பல கடிதங்களில் எழுதியிருக்கிறார்.

இதுதான் ஜெயமோகனது ஆய்வுத் திறம் என்றால், அந்த புதுச்சேரி பெரியவர் மட்டும் என்ன பாவம் செய்தார்?

வேறு எதனையும் விட உண்மையான கம்யூனிச அறிவே தனது (மேட்டிமைத்தனமான) ஆன்மாவை குறி வைத்து அடிக்கிறது என்பதால் ஜெயமோகன் மார்க்சியம் குறித்து மிக மிக வெறுப்புணர்வை சேர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வெறுப்புதான் இத்தகைய அற்பத்தனங்களை எழுத வைக்கிறது; அறிவால் எதிர்கொள்ள முடியாத போது இத்தகைய பூச்சாண்டிகளை வைத்து சமாதானம் அடைகிறது. கம்யூனிசம் குறித்த ஜெயமோகனது உளறல்கள் இந்த ரகம். எனினும் இதற்காக நாங்கள் அவரை என்றைக்காவது அடித்திருக்கிறோமா, இல்லை டேய் முட்டாளே ஒரு புக்கு ஒழுங்கா படிச்சிருப்பியாடா, எடத்தை காலிபண்ணு என்றுதான் வசைபாடியிருக்கிறோமா? இல்லையே. சகித்துக் கொண்டு மரியாதையாகத்தானே எழுதுகிறோம்?

அதே போல அரசியல், மார்க்சியம் தவிர பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள் கூட ஜெயமோகனைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம். இதில் ஜெயமோகனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று பார்த்தால் அங்கே நார்சிசம் ஒளிந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது.

காரல் மார்க்ஸை மூர் என்று காட்டுமிராண்டித்தனமாக அழைத்து சுயஇன்பம் காணும் ஜெயமோகன், கைலாயம் சென்ற மூப்பனாரை மிகவும் நுட்பமான ரசனை உடையவர், அரசியல்வாதிகளில் ஒரு மாணிக்கம் என்றெல்லாம் சிவசங்கரி ரேஞ்சுக்கு வெண்பாவே பாடியிருக்கிறார். உண்மையில் மூப்பனாரின் ரசனை அல்லது பொறுக்கித்தனத்தின் யோக்கியதையை கோடம்பாக்கத்திலும், அவரது பண்ணையார்தனத்தை தஞ்சாவூரிலும் விசாரித்துப் பார்த்தால் தெரியவரும். எனினும் நம்மைப் போன்ற பாமரர்கள் மூப்பனார் குறித்து கொண்டிருக்கும் அறிவை விட ஜெயமோகனது மேம்பட்டது என்று ஒத்துக் கொள்ள வேண்டுமாம்.

உண்மையில் அறிவு தொடர்பாக மற்றவர்களிடம் பேசுவதும், அல்லது புரிய வைப்பது, ரசிக்க வைப்பது, கற்றுக் கொடுக்க வைப்பதும், இவையெல்லாம் கூட வர்க்க கண்ணோட்டத்திற்கேற்ப மாறுபடுகிறது. சிறு பத்திரிகை எழுத்தாளர்களும், கம்யூனிஸ்டுகளும் இதில் பாரிய அளவில் முரண்படுகிறார்கள்.

“மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு கற்பிக்கவும் செய்ய வேண்டும்” என்றார் மாவோ. காரணம் கம்யூனிஸ்டுகளின் சமூகம் குறித்த அறிவு நடைமுறையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதால் அது வெற்றியடைய வேண்டுமென்றால் மக்களால் ஏற்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் அதை மீளாய்வு செய்து கொள்ளும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. இதுதான் கற்பது, கற்பிப்பது என்று செயல்படுகிறது.

ஒரு சிறுபத்திரிகையாளனோ தனது அறிவு ரசிக்கப்பட வேண்டும் என்று மட்டும் விரும்புகிறான். மற்றவர்களை எப்படி ரசிக்க வைக்க முடியும், அதற்கான திறமை எது என தேடிப்பிடித்து கற்கிறான். பிறகு தன்னை ரசிப்பது எப்படி என்று பாடமும் எடுக்கிறான். அப்படியும் வரவேற்பு இல்லையென்றால் இந்த நாட்டின் ரசனை சரியில்லை, மட்டரகமான சமூகம், என்று இறுதியில் கோபம் கொள்கிறான். ஒருவேளை தன்னை ரசிப்பவன் பாபு பஜ்ரங்கி (குஜராத் இந்துமதவெறியன்) போன்ற பச்சைக் கொலைகாரனாகவோ, இல்லை பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற சுரண்டல் முதலாளியாகவோ இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்களது சமூகக் குற்றத்தை கண்டு கொள்ளாமல் விடுகிறான். அவர்கள் காசில் சுற்றுலாவும் போகிறான். விருதும் வாங்கிக் கொள்கிறான். இதுதான் காலம் தோறும் புலவர் மரபினர் செய்து வரும் பிழைப்பு வாதம்.

ஒரு நாட்டின் தரம் அதாவது மக்களின் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டம் தற்போது பின்னடைவு கண்டிருக்கிறது என்பதற்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்? ஈழத்தின் போராட்டம் குறித்தோ அதன் பின்னடைவு குறித்தோ ஒருவர் கதை எழுதலாம். ஆனால், அப்படி கதை எழுதுவதின் ஊடாக ஈழப் போராட்டம் வளர்ந்து விடாது. அல்லது ஈழத் தமிழரின் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. அரசியல், சமூகப் போராட்டங்களின் தரம், மக்கள் எந்த அரசியலின் கீழ் எந்த அளவு அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. சரி, அரசியலுக்கு இது பொருந்துமென்றால் பண்பாடு குறித்த அறிவுக்கு எழுத்தாளர்கள் தேவைதானே என்று கேட்கலாம்.

இல்லை, இங்கேயும் அது நிபந்தனை அல்ல என்கிறோம். தமிழகத்தில் சுந்தர ராமசாமியோ இல்லை நாஞ்சில் நாடனோ இல்லை ஜெயமோகனே கூட பிறக்கவில்லை என்றால் இங்கே ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. அவர்கள் இல்லை என்பதால் இங்கே இப்போது மக்கள் செய்து கொண்டிருப்பதெல்லாம் ஒன்றும் மாறிவிடாது. இல்லை என்றால் இத்தகைய எழுத்தாளர்கள் தமிழக பண்பாட்டுச் சூழலில் என்ன மாற்றத்தை எங்கே யாரால் என்னவிதமாக மாற்றினார்கள் என்று விளக்க வேண்டும். மாறாக, நாங்கள் இல்லை என்றால் மக்கள் காய்ந்து போய் கதறுவார்கள் என்று உளறக்கூடாது. நாங்கள்தான் தாம்பூலப் பையில் இலவசமாக புக் போடும் பழக்கத்தை கொண்டு வந்தோம் என்று கூட சொல்ல முடியாது. இவையெல்லாம் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றோ சாதித்தவை. குறிப்பாக தற்போதைய புரட்சிகர திருமணங்களில் பரிசுப் பொருட்கள் என்பதே புத்தகங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலை வந்து விட்டது.

பண்பாட்டு அறிவு என்பது சமூகம் கூட்டுத்துவமாக இருந்தால் மட்டுமே இருப்பும், முன்னேற்றமும் சாத்தியம் என்பதை பண்படுத்தும் நோக்கில் வளரும், விரியும் தன்மை கொண்டது. அது அரசியல், பொருளாதார போராட்டங்களிலிருந்தே வலிமை பெறுகிறது. பண்பாடு என்பது ஓய்வுநேரத்தில் ஒயினை பருகியவாறு கம்ப ராமாயணத்தையோ இல்லை விஷ்ணுபுராணத்தையோ இல்லை ஜீனத் அமனையோ ரசிப்பது அல்ல. இவையெல்லாம், துண்டிக்கப்பட்ட இயக்க நிலையிலிருந்து கற்பித்துக் கொண்ட மயக்கங்களை வைத்து, சுய இன்பம் அடையும் மூளையின் மூடுண்ட நிலை. அந்த நிலையிலிருந்து, திட்டமிடப்பட்ட படி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு தரும் புதிரின் அளவுக்குத்தான் ரசிக்க முடியும். பிறகு அந்த புதிர் உடைபடும் போது ரசனை மாறிவிடும்.

அல்லது ஒரு நூல் அல்லது கதை அல்லது கவிதையை வைத்து பண்பாட்டின் வேர் வளருவதில்லை. சரியாகச் சொன்னால் அப்படி வளரும் வேரைத்தான் ஒரு இலக்கியம் பிரதிபலிக்குமே அன்றி தன்னளவில் அவற்றிற்கு அப்படி ஒரு சக்தி கிடையாது.

இன்னும் எளிமையாகச் சொன்னால் தமிழ்நாட்டில் சாதி வெறி, மதவெறி, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், வர்க்க சுரண்டல், இவற்றினை எதிர்த்து நாம் எப்படி மாறியிருக்கிறோம் அல்லது மாறவில்லை என்பதுதான் நமது பண்பாடு குறித்த தரமே அன்றி தமிழகம் எழுத்தாளர்களை மதிக்கவில்லை என்பதல்ல. அதனால்தான் மார்க்சியமோ அல்லது பெரியார், அம்பேத்காரோ ஒரு சில தனி மூளைகள் தவம் செய்து சூப்பர் பவரால் தோற்றுவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட வரலாற்றுக் காலம் தோற்றுவிக்கும் சமூக உந்து நிலையிலிருந்து அவர்கள் தவிர்க்க முடியாமல் பிறக்கிறார்கள். அனைத்திற்கும் அடிநாதமான அரசியல் வாழ்க்கையின் விதியே இதுதான் எனும் போது அதன் செல்வாக்கில் இருக்கும் இலக்கியம் மட்டும் விதிவிலக்கல்ல.

இதனால் இலக்கியம் இன்னபிற அறிவுத்துறைகளை குறைத்து மதிப்பிடுவதாக பொருள் இல்லை. அல்லது அனைவரும் இவற்றை புறந்தள்ளி வாழவேண்டும் என்றும் பொருள் அல்ல. அறிவு சார்ந்து கிடைக்கும் எதனையும் படிக்க வேண்டும், அப்படி படிக்க முடியாத படி முதலாளித்துவத்தின் பாப்கார்ன் தலைமுறையாக நாம் மாற்றப்படுகிறோம் என்பதே நாங்கள் கொண்டிருக்கும் அக்கறை. ஆனால் ஒரு நாட்டுமக்களது அரசியல் போராட்டத்தின் வீச்சோடுதான் இத்தகைய அறிவு வாசிப்பு வளருவதோ, பலனளிப்பதோ இருக்குமே அன்றி வாசிப்பே முதல் நிபந்தனை அல்ல.

முகநூலில் பலரும் ஜெயமோகனது அகங்காரத்தை அழகாகவும், நுட்பமாகவும் கண்டித்திருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போல ஒரு சமூகத்தில் டீ மாஸ்டர், நகர சுத்தித் தொழிலாளி, தச்சுத் தொழிலாளி போல எழுத்தாளனும் ஒரு அங்கம். அங்கங்களில் உயர்வு தாழ்வு காண்பது பார்ப்பனியம் மட்டுமே உருவாக்கியிருக்கும் வர்ண பேதம். சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் இன்னமும் அப்படித்தான் பார்ப்பனியத்தின் செல்வாக்கில்தான் கட்டுண்டு கிடக்கிறார்கள். அதனால்தான் ஜெயமோகனது சூப்பர் ஈகோ எழுத்தாளர் நிலையை எளியவர்கள் மறுக்கும்போது இந்துத்துவ வெறியர்களான ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் களத்திற்கு வருகின்றனர்.

இப்படி இணையம் முழுவதும் நமது செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்பதே ஜெயமோகனது ஆத்திரத்திற்கு காரணம். இப்படி பலரும் கேள்வி கேட்பது, விமரிசிப்பது எல்லாம் அடிமைத்தனம் விதிக்கப்பட்டிருக்கும் நமது சமூகத்தில் ஜனநாயகம் வளர வழிவகுக்கும் என்ற எளிய பாடம் கூட அவருக்குத் தெரியவில்லை. இதனால் இணையத்திலோ இல்லை சமூகத்திலோ மொக்கைகள் இல்லை என்று கூறவில்லை. ஆனால் படிப்பு, ஆர்வம், அரசியல் அனைத்தும் அனைவரிடமும் இப்படி மொக்கையாகத்தான் ஆரம்பிக்கின்றன என்பதால் இதெல்லாம் வாழ்க்கையில் கடந்து போகும் ஒரு நிலை. சமூகத்தை மாற்ற விரும்பவர்கள் இதை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

மொக்கைகள் கூட பரவாயில்லை. ஜெயமோகனது எழுத்தை படித்து விட்டு வாழ்க்கைப் பிரச்சினை குறித்து கிரிமினல்கள் அருளுரை கேட்டால் கூட அவர் மறுப்பதில்லை. திமுகவிலோ, இல்லை அதிமுகவிலோ முப்பது வயது வரை தீவிரமாக செயல்பட்ட ஒருவர் அதைத் துறந்து ஆன்மீகம், ஜோசியம் என்று மாறி, பிறகு தொழில் செய்து சம்பாதித்து குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு தற்போது புதிய தலைமுறை – எஸ்ஆர்எம் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியில் மாநிலப் பொறுப்பில் இருந்து கொண்டு மாத ஊதியத்துடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்.

இதையெல்லாம் குறிப்பிட்டு விட்டு வாழ்க்கையில் நான் எதை இழந்தேன் என்ற குழப்பம் அவருக்கு வருகிறது. இதனால் தன்னை அருச்சுனனாகவும் ஜெமோவை கிருஷ்ணாகவும் நினைத்து கீதை கேட்கிறார். ஜெமோவும் வாழ்க்கையென்றால் இப்படித்தான், இங்கே ஒற்றைப்படையான நோக்கம் கொண்டு ஒருவர் வாழ்ந்து விளைவை தேட முடியாது, அது இது என்று அடித்து விடுகிறார். ஜெயமோகன் என்ன கூறினார் என்பது பிரச்சினையில்லை. ஒரு கிரிமினலை எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் முக்கியமானது.

திமுக, அதிமுக போன்ற ஆளும் வர்க்க கட்சிகளில் குறிப்பிட்ட பொறுப்புகளில் இருக்கும் ஒருவன் நிச்சயம் பிழைப்புவாதியாகத்தான் இருப்பான். அதனால்தான் நடுத்தர வர்க்கத்தின் ஆயுட்கால சேமிப்பை பிடுங்கிக் கொண்டு கல்லூரியும், கட்சியும் நடத்தும் பச்சமுத்துவின் கட்சியில் வெட்கம் கெட்டு இருக்கிறான். இடையில் ஜோசியம் எனும் உலக மகா ஃபிராடு தொழிலிலும் ஈடுபடுகிறான். இத்தகைய அப்பட்டமான சந்தர்ப்பவாதிக்கு வந்திருக்கும் குழப்பம் என்னவாக இருக்கும்? மற்றவனெல்லாம் மாளிகை, இனோவா, ரியல் எஸ்டேட் என்று பிச்சு உதறும் போது எனக்கு ஏன் அவை கிடைக்கவில்லை என்பதுதான்.

ஆயுசு முழுக்க உழைத்துப் பிழைக்கும் மக்கள் வாழும் நாட்டில் இத்தகைய ஒட்டுண்ணிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். ஆனால், அந்த கிரிமினலை அரவணைத்து உச்சி முகர்ந்து ஆறுதல் சொல்கிறார் ஜெயமோகன். இதுதான் ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் உருவாக்கியிருக்கும் அறிவார்ந்த சமூகத்தின் லட்சணம்.

எங்களைப் போன்ற ‘பாமர’ கம்யூனிஸ்டுகள் சேர்ந்து இயங்கும் சமூகமும், மனிதர்களும் எப்படி இருப்பார்கள்?

மே 19 அன்று எங்களுக்கு வந்த மின்னஞ்சலை பெயரை தவிர்த்து இங்கே தருகிறோம்.

“வினவு தோழர்களுக்கு வணக்கம்,

கடந்த மூன்று வருடங்களாக தங்களின் தளத்தை படித்து வருகிறேன். பிற்போக்கான நிலையில் இருந்த என் சிந்தனையை மாற்றி அமைத்ததில் தங்களின் தளத்திற்க்கு பெரும் பங்கு உண்டு. அரசியல் தளத்தில் மட்டுமல்லாது பண்பாட்டு தளத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிந்தனை மாற்றம் ஏட்டுச்சுரைக்காயாய் இல்லாமல், பெளதீக மாற்றமும் பெற்றது. ஆம், வரும் ______(தேதியில்) எனக்கு திருமணம். சாதி சடங்குகள் எதுவுமின்றி எளிமையான முறையில், தங்கள் அமைப்புத் தோழர் ஒருவரின் மகளுடன் திருமணம் நடைபெறவிருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன் எனக்கு இம்மாதிரியான திருமணம் நடைபெறும் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் சிரித்திருப்பேன். இன்று இத்திருமணம் என் வாழ்வில் நடைபெறவிருப்பதிற்கு தங்களின் தளத்திற்ககும் ஒரு மிகமுக்கிய பங்குண்டு. இத்துடன் திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன். என் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு வினவு தோழர்களை அன்புடன் அழைக்கிறேன்.”

கட்டுரையை முடித்துக் கொள்கிறோம்.
______________________________________________________
பின்குறிப்பு : தலைப்புக்கு என்ன பொருள்? கட்அவுட் என்பது ஜெயலலிதாவையும் கீபோர்ட் என்பது ஜெயமோகனையும் குறிக்கின்றது. தற்போதைய நிலவரப்படி கட்அவுட்டை கீபோர்டு முந்தியிருக்கிறது. ஏன், எப்படி என்பதை ‘அறிவார்ந்த’ வாசகர்களே புரிந்து கொள்ளலாம்.

சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !

22

சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ள அறிக்கை பல்வேறு ஊடகங்களில் மிக மிக சுருக்கப்பட்டு ஓரிரு வரிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. இங்கே அதன் முழுமையான அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். இதன் மூலம் தாக்குதலின் பின்னணியை அவர்கள் தரப்பிலிருந்து விரிவாக அறிந்து கொள்ள முடியும். இந்த அறிக்கையின் ஆங்கில மூலம் BANNIEDTOUGHT.NET என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

– வினவு

__________________________________

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு

பாசிச சல்வா ஜூடும் தலைவர் மகேந்திர கர்மாவை அழித்தொழித்தல்: பஸ்தார் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதத் தன்மையற்ற கொடுமைகள், கொடூரமான கொலைகள், முடிவற்ற பயங்கரவாதத்துக்கான நியாயமான எதிர்வினை!

உயர் மட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீதான தாக்குதல் : பல மாநில அரசுகளுடன் கூட்டு அமைத்துக் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடத்தி வரும் பாசிச பச்சை வேட்டைக்கு தவிர்க்க முடியாத பதிலடி!

க்கள் விடுதலை கொரில்லா படை மே 25, 2013 அன்று காங்கிரஸ் பேரணி ஒன்றைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது பெரும் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஒடுக்கப்பட்ட பஸ்தர் மக்களின் எதிரியான மகேந்திர கர்மா, காங்கிரஸ் மாநில கிளையில் தலைவர் நந்த குமார் படேல் உள்ளிட்டு குறைந்தது 27 காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் காவல் துறையினர் கொல்லப்பட்டனர். வரப் போகும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அவர்களது ‘பரிவர்த்தன் யாத்ரா’ (மாற்றத்துக்கான யாத்திரை) இயக்கத்தின் ஒரு பகுதியாக பஸ்தர் பகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பயணம் செய்த போது இந்த தாக்குதல் நடந்தது.

அரசு படைகள்
தாக்குதல் நடந்த இடத்தில் அரசு படைகள்

இந்த தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சரும், பழம்பெரும் காங்கிரஸ் தலைவருமான வித்யா சரண் சுக்லா உட்பட குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். கொடுங்கோலன், கொலைகாரன், பாலியல் வன்முறை குற்றவாளி, கொள்ளைக்காரன் என்று மக்களால் பழிக்கப்பட்ட, ஊழல் வாதி என்று தூற்றப்பட்ட மகேந்திர கர்மா நாய் போல கொல்லப்பட்டது பஸ்தர் பகுதி முழுவதும் திருவிழா போன்ற கொண்டாட்டத்தை உருவாக்கியிருக்கிறது. முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் நந்த் குமார் பட்டேலும் மக்களை ஒடுக்கும் வரலாறு உடையவர். அவரது பதவி காலத்தில்தான் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) முதன் முதலில் பஸ்தர் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த முன்னாள் மத்திய அமைச்சர் வி சி சுக்லா மக்களின் எதிரி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் ஏகாதிபத்தியங்கள், தரகு முதலாளிகள், அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் பண்ணையார்களின் விசுவாசமிக்க ஊழியராக பணி புரிந்தார். மக்களைச் சுரண்டும் அரசின் திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் அவர். இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் மகேந்திர கர்மாவையும் சில எதிர் புரட்சி காங்கிரஸ் தலைவர்களையும் ஒழித்துக் கட்டுவதாகும்.

இருப்பினும், இந்த பெரும் தாக்குதலில் நமது கொரில்லா படைகளுக்கும் போலீஸ் படைகளுக்கும் இடையே நடந்த 2 மணி நேர துப்பாக்கிச் சண்டையில் மாட்டிக் கொண்டு நமது எதிரிகள் இல்லாத சில அப்பாவி மக்களும் கீழ் மட்ட காங்கிரஸ் தொண்டர்களும் கொல்லப்படவும் காயமடைவும் நேர்ந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு இதற்காக வருந்துவதோடு, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது துயரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு இந்த தாக்குதலுக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. இந்த துணிச்சலான தாக்குதலை முன்நின்று நடத்திய மக்கள் விடுதலை கொரில்லா படைத் தளபதிகளுக்கும், இந்த வெற்றியில் பங்களித்த செம்படை வீரர்களுக்கும், இந்த தாக்குதலுக்கு முனைப்பான ஆதரவு அளித்து பங்கேற்ற மக்களுக்கும், பஸ்தார் பகுதியின் அனைத்து புரட்சிகர மக்களுக்கும் எமது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களுக்கு எதிராக வன்முறை, கொடுமைகள், படுகொலைகள் இவற்றை நிகழ்த்தும் பாசிஸ்டுகள் ஒரு போதும் மன்னிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் தவிர்க்க முடியாமல் மக்களால் தண்டிக்கப்படுவார்கள் என்ற வரலாற்று உண்மையை இந்த தாக்குதல் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

பழங்குடித் தலைவர் என்று சொல்லப்படும் மகேந்திர கர்மா ஒரு நிலப்பிரபுத்துவ பெரும் நிலவுடமை குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாத்த மாசா கர்மாவும், அப்பா போட்டா மாஞ்ஜியும் அவர்களது காலத்தில் மக்களை கொடுமைப்படுத்துவதில் புகழ் பெற்று விளங்கியதோடு அப்போதைய காலனிய ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்குரிய ஏஜென்டுகளாகவும் செயல்பட்டார்கள். அவரது குடும்பத்தின் மொத்த வரலாறும் பழங்குடி மக்களை மனிதத் தன்மையற்று சுரண்டுவதும் ஒடுக்குவதுமாக இருந்தது.

1975-ம் ஆண்டு அவர் சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அகில இந்திய மாணவர் முன்னணி உறுப்பினராக மகேந்திர கர்மாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது. முதலில் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் சட்ட மன்ற உறுப்பினராக 1978-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981-ல் சிபிஐ அவரை வேட்பாளராக நியமிக்காததால் காங்கிரசில் சேர்ந்தார். 1996-ல் அவர் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற மாதவ ராவ் சிந்தியா குழுவுடன் சேர்ந்து இந்திய நாடாளுமன்றத்துக்கு சுயேச்சை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

1996-ம் ஆண்டு ஆறாவது பட்டியலை அமல்படுத்த கோரி பஸ்தரில் ஒரு பெரும் இயக்கம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) அதற்கு முக்கியத் தலைமை வகித்தாலும், நமது கட்சிதான் – அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் யுத்தம்) – அந்த இயக்கத்தில் முனைப்புடன் செயல்பட்டு மக்களை பெருமளவில் ஒன்று திரட்டியது. ஆனால் மகேந்திர கர்மா அந்த இயக்கத்துக்கு எதிராக தீவிர எதிர்நிலை எடுத்தார். பஸ்தருக்கு குடிபெயர்ந்து வந்து பெருமளவு சொத்து சேர்த்து விட்ட சுயநலமிக்க நகர்ப்புற வர்த்தகர்களின் பிரதிநிதியாக தன்னை நிரூபித்துக் கொண்டார். அப்போதுதான் பழங்குடி மக்களுக்கு எதிரான, தரகு முதலாளிகளுக்கு ஆதரவான அவரது இயல்பு மக்களிடம் அம்பலப்பட்டது. 1980-களிலிருந்தே பஸ்தர் பகுதியில் பெருநிறுவனங்களுடனும், முதலாளித்துவ வர்க்கத்துடனும் உறவுகளை அவர் உறுதிப் படுத்தி வந்திருக்கிறார்.

1999-ல் ‘மாலிக் மக்பூஜா’ என்ற மிகப்பெரிய ஊழலில் கர்மாவின் பெயர் அம்பலப்படுத்தப்பட்டது. 1992-96 கால கட்டத்தில் மரக் கடத்தல்காரர்களுடன் கூட்டு சேர்ந்து பழங்குடி மக்களை ஏமாற்றியும் வருவாய்த் துறை அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து சதி செய்தும் மகேந்திர கர்மா பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததை லோக்ஆயுக்தா அறிக்கை வெளிப்படுத்தியது. மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடப்பட்டாலும், வழக்கம் போல குற்றவாளிகளுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடவில்லை.

மகேந்திர கர்மா ஒன்றுபட்ட மத்திய பிரதேசத்தில் சிறைத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் சத்தீஸ்கர் மாநிலம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு அஜித் ஜோகி அமைச்சரவையில் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரானார். அந்த சமயத்தில் ரோமல்ட்/என்எம்டிசி சார்பில் திட்டமிடப்பட்ட இரும்பு உருக்காலை அமைப்பதற்காக நகர்னார் பகுதியில் கட்டாய நிலப் பறிப்பு நடந்தது. உள்ளூர் மக்கள் தமது நிலத்தை விட்டுக் கொடுக்க மறுக்க, மகேந்திர கர்மா மக்களுக்கு எதிராக முதலாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். கொடுமையான போலீஸ் படையின் உதவியுடன் மக்களை ஒடுக்கி வன்முறை மூலம் நிலங்களை பிடுங்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். நகர்னாரில் தமது நிலங்களை இழந்த மக்களுக்கு அரசாங்கம் உறுதியளித்தது போல நிவாரணமும் வேலை வாய்ப்புகளும் இன்று வரை அளிக்கப்படவில்லை. அவர்கள் சிதறி பிரிந்து போகும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள்.

ஆரம்பத்திலிருந்தே மகேந்திர கர்மா புரட்சிகர இயக்கத்தின் திறம்பட்ட எதிரியாக நின்றார். அதற்கான காரணம் தெளிவானது. வழக்கமான பண்ணையார் குடும்பத்தில் பிறந்து, பெரு நிறுவனங்களுக்கும் சுரண்டல் வர்க்கங்களுக்கும் ஏஜென்டாக வளர்ந்தவர் அவர். புரட்சிகர இயக்கத்துக்கு எதிரான முதல் ஜன் ஜாக்ரண் (விழிப்புணர்வு) இயக்கம் 1990-91ல் ஆரம்பிக்கப்பட்டது. திரிபுவாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) அந்த எதிர்ப் புரட்சி நடவடிக்கைகளில் பங்கேற்றது. கர்மாவும் அவரது பண்ணையார் குடும்ப உறவினர்கள் பலரும் அதில் தீவிரமாக பங்கேற்றனர். இரண்டாவது ஜன் ஜாக்ரண் இயக்கம் 1997-98ல் மகேந்திர கர்மாவே தலைமையேற்று தொடங்கப்பட்டது.

இது மகேந்திர கர்மாவின் சொந்த கிராமம் பராஸ்பாலிலும் அதன் சுற்றுப் புற கிராமங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு பைரம்கர், குட்ரூ பகுதிகள் வரை பரவியது. நூற்றுக் கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். பெரும் எண்ணிக்கையிலான கொள்ளை அடித்தல், வீடுகளுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் நடந்தன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். இருப்பினும், நமது கட்சியின் தலைமையிலும் மக்கள் திரள் அமைப்புகளின் கீழும் ஒன்று திரண்ட மக்கள் இந்த எதிர் புரட்சி தாக்குதலை உறுதியாக எதிர்த்து நின்றனர். மிகக் குறுகிய காலத்தில் அந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.

பின்னர் புரட்சிகர இயக்கம் மேலும் உறுதிப்பட்டது. நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டங்கள் பல பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டன. மக்கள் திரள் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மகேந்திர கர்மாவின் சகோதரரான போதியா பட்டேல் போன்ற பண்ணையார்களும் அவரது நெருங்கிய உறவினர்களும் கொல்லப்பட்டனர். பல கிராமங்களில் நிலப்பிரபுத்துவ சக்திகளும் பிற்போக்கு மேட்டுக்குடியினரும் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு மக்களின் புரட்சிகர அதிகார அமைப்புகளை உருவாக்கும் நடைமுறைகள் ஆரம்பமாயின. ஏழை, நிலமற்ற விவசாயிகளுக்கு பண்ணையார்களின் நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன; பண்ணையார்களுக்கு மக்களை அபராதங்கள் கொடுக்க வைக்கும் பழக்கங்களும் நிறுத்தப்பட்டன. இவை மகேந்திர கர்மா போன்ற நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு கடுப்பேற்றின. முற்போக்கு மாற்றங்களான, பெண்களை கட்டாயமாக மணமுடித்துக் கொடுப்பது, பலதார மணம் ஆகியவற்றை தடுப்பதை அவர்கள் எதிர்த்தனர்.

சல்வா ஜூடும்
சல்வா ஜூடும் கொடூரங்கள்

அதே நேரத்தில் பஸ்தர் பகுதியில் இயற்களை வளங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளை ஆரம்பித்திருந்த பெருநிறுவன குழுமங்களான டாட்டாக்களும் எஸ்ஸார்களும் புரட்சிகர இயக்கத்தை ஒரு தடையாக கருதினர். எனவே, அவர்கள் எதிர்புரட்சி சக்திகளா மகேந்திர கர்மா போன்றவர்களுடன் இயல்பாகவே கூட்டு சேர்ந்தனர். அவர்களது விருப்பம் போல கொள்ளையடிப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காக அவனுக்கு கோடிக்கணக்கில் நிதி அளித்தனர். அதே நேரத்தில் உண்மையான புரட்சிகர அமைப்புகளின் இணைப்பின் மூலம் நாடு தழுவிய ஒருங்கிணைந்த கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உருவானதை தொடர்ந்து சுரண்டும் ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்தியங்களின் வழிகாட்டலின்படி புரட்சிகர இயக்கத்தை நசுக்கி விடுவதற்கு அவர்களது எதிர் புரட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.

அவ்வாறாக, பஸ்தர் பகுதியில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் ரகசிய உடன்பாட்டுடன் ‘சல்வா ஜூடும்’ என்ற பெயரில் ஒரு கொடும் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. சோயம் மூக்கா, ராம்புவன் குஷ்வாஹா, அஜய் சிங், விக்ரம் மாண்டவி, கன்னு பட்டேல், மதுக்கர் ராவ், கோட்டா சின்னா போன்ற மகேந்திர கர்மாவின் அடியாட்களும் உறவினர்களும் சல்வா ஜூடுமின் முக்கிய தலைவர்களாக உருவெடுத்தனர்.

சல்வா ஜூடும் பஸ்தர் மக்களின் வாழ்க்கை மீது ஏற்படுத்திய அழிவுகள் மற்றும் கொடுமைகளின் கடுமையுடன் ஒப்பிடும்படியான வரலாற்று உதாரணங்களை எதுவும் சொல்ல முடியாது. அந்த கூலிப் படை ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை கொடூரமாக கொலை செய்தது; 640 கிராமங்களை எரித்து சாம்பலாக்கியது; ஆயிரக்கணக்கான வீடுகளை கொள்ளையடித்தது; கோழிகளையும், ஆடுகளையும், பன்றிகளையும் அடித்து தின்றது அல்லது எடுத்துச் சென்றது; 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களை அவர்களது கிராமங்களிலிருந்து துரத்தியடித்தது; 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை அரசு நடத்திய ‘நிவாரண’ முகாம்களுக்கு இழுத்துச் சென்றது. அவ்வாறாக சல்வா ஜூடும் மக்களால் வெறுக்கப்படுவதாக மாறியது. நூற்றுக்கணக்கான பெண்கள் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குப் பின் கொலை செய்யப்பட்டனர். பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர்.

சல்வா ஜூடும், போலீஸ் மற்றும் துணை இராணுவப் படைகள் – குறிப்பாக நாகா மற்றும் மிசோ படைப் பிரிவுகள் – இவற்றைச் சேர்ந்த ரௌடிகள் மக்கள் மீது நடத்திய கொடுமைகளும் அழிவுகளும் அனைத்து வரம்புகளையும் கடந்தன. பல இடங்களில் மக்கள் கொடூரமாக துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆறுகளில் எறியப்பட்டனர். சேரலி, கோத்ரபால், மன்கேலி, கர்ரேமார்கா, மோஸ்லா, முண்டேர், பதேடா, பரால்னார், பூம்பாத், ககன்பள்ளி உட்பட பல கிராமங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கான பழங்குடி இளைஞர்கள் சிறப்புக் காவல் அதிகாரிகளாக அமர்த்தப்பட்டு ஈவு இரக்கமற்ற கிரிமினல்களாக மாற்றப்பட்டனர். கூட்டங்கள், பேரணிகள் நடத்தும் முகாந்திரத்தோடு பல கிராமங்களின் மீதான தாக்குதல்களை மகேந்திர கர்மா தானே முன்னின்று நடத்தினார்.

மகேந்திர கர்மாவின் நேரடி கட்டளையின் பேரில் பல பெண்கள் முரடர்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். கிராமங்களை எரிப்பது, மக்களை சித்திரவதை செய்து கொல்வது ஆகிய பல சம்பவங்களில் அவர் நேரடியாக ஈடுபட்டிருந்தார். எனவே, பஸ்தார் மக்களை பொறுத்த வரை மகேந்திர கர்மா மனிதத் தன்மையற்ற கொலைகாரனாகவும், பாலியல் குற்றவாளியாகவும், கொள்ளைக்காரனாகவும், பெரு முதலாளிகளின் விசுவாசமான ஏஜென்டாகவும் மனதில் பதிந்திருந்தான். பஸ்தரின் மொத்த மக்கள் திரளும், அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நமது கட்சியையும் மக்கள் விடுதலை கொரில்ல படையையும் கேட்டு வந்தனர். அவர்களில் பலர் தாமாகவே அந்த பணிக்கு தமது நேரடி ஆதரவை தர முன் வந்தனர். சில முயற்சிகளும் செய்யப்பட்டன, ஆனால் சில சிறு தவறுகளாலும் பிற காரணங்களாலும் அவன் தப்பி விட முடிந்தது.

இந்த நடவடிக்கை மூலம் சல்வா ஜூடும் ரௌடிகளாலும் அரசு படைகளாலும் கொடுமையாக கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களுக்காக நாம் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறோம். கொடும் வன்முறைக்கும், அவமானத்துக்கும், பாலியல் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்ட நூற்றுக் கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் சார்பிலும் நாம் இந்த பழி தீர்த்தலை செய்திருக்கிறோம். தமது வீடுகளையும், கால்நடைகளையும், கோழிகளையும் ஆடுகளையும், உடைகளையும், தானியங்களையும், பயிர்களையும், வீட்டு பொருட்களையும் அனைத்தையும் இழந்து மனிதர் வாழ முடியாத கேவலமான நிலையில் வாழ கட்டாயப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பஸ்தார் மக்களுக்கும் நாம் பழி தீர்த்திருக்கிறோம்.

மன்மோகன் சிங்இந்த தாக்குதலுக்குப் பின் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங் போன்றவர்கள் இந்த தாக்குதலை ஜனநாயகத்தின் மீதும் ஜனநாயக மாண்புகளின் மீதுமான தாக்குதலாக சித்தரித்திருக்கின்றனர். சுரண்டும் வர்க்கங்களின் வளர்ப்பு நாய்களுக்கு ஜனநாயகத்தின் பெயரை எடுப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்க வேண்டியிருக்கிறது. மே 17-ம் தேதி பிஜப்பூர் மாவட்டத்தின் ஏட்ஸ்மேட்டா கிராமத்தில் 3 அப்பாவி குழந்தைகள் உட்பட எட்டு பேர் போலீஸ் மற்றும் துணை இராணுவப் படைகளால் கொல்லப்பட்ட போது இந்த தலைவர்களில் யாரும் ஏன் ‘ஜனநாயகத்தை’ பற்றி நினைக்க முயற்சிக்கவில்லை?

ஜனவரி 20-க்கும் 23-க்கும் இடையே பீஜப்பூர் மாவட்டத்தின் தோடி தும்னார், பிடியா கிராமங்களில் உங்கள் படைகள் தாக்கி 20 வீடுகளையும் மக்களால் நடத்தப்பட்ட பள்ளிக் கூடத்தையும் எரித்துப் போட்ட போது உங்கள் ‘ஜனநாயகம்’ அங்கு செழித்ததா? சரியாக 11 மாதங்களுக்கு முன், ஜூன் 28 2012 அன்று இரவு சார்கின்குடா கிராமத்தில் 17 பழங்குடி மக்கள் கொல்லப்பட்டு 13 பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அந்த சம்பவங்கள் உங்கள் ‘ஜனநாயக மாண்புகளின்’ ஒரு பகுதியா? உங்கள் ‘ஜனநாயகம்’ மகேந்திர கர்மா போன்ற கூட்டுக் கொலை குற்றவாளிகளுக்கும் நந்த குமார் பட்டேல் போன்ற ஆளும் வர்க்க ஏஜென்டுகளுக்கும் மட்டும்தான் பொருந்துமா? பஸ்தரின் ஏழை பழங்குடி மக்கள், முதியவர்களும், குழந்தைகளும், பெண்களும் உங்கள் ‘ஜனநாயகத்தின்’ கீழ் வருகிறார்களா, இல்லையா? பழங்குடிகளின் படுகொலைகள் உங்கள் ‘ஜனநாயகத்தின்’ ஒரு பகுதியா? இந்த தாக்குதலுக்கு எதிராக உரக்க கூக்குரலிடும் யாருக்காவது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியுமா?

2007-ன் இறுதியில், மக்களின் எதிர் போராட்டங்களின் மூலம் சல்வா ஜூடும் தோற்கடிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணியின் பச்சை வேட்டை நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வழிகாட்டலும், உதவியும், ஆதரவும் வழங்குவதோடு மட்டுமில்லாமல் தமது சிறப்பு படைகளை இந்தியாவில் ஈடுபடுத்தி நேரடியாக எதிர் கிளர்ச்சி நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர். மாவோயிஸ்ட் தலைவர்களை கொல்வதற்கு அவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். மத்திய அரசு இப்போது நடந்து கொண்டிருக்கும் ‘மக்கள் மீதான போர்’ தொடர்பாக இதுவரை 50 ஆயிரம் துணை இராணுவப் படைகளை சத்தீஸ்கருக்கு அனுப்பியிருக்கிறது. இதன் விளைவாக படுகொலைகளும், அழிவுகளும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன.

ரமண் சிங்
சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமண்சிங்

2009-க்குப் பிறகு மத்திய, மாநில ஆயுத படைகளால் 400 பழங்குடி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2011-ன் மத்தியிலிருந்து ‘பயிற்சிக் கல்லூரிகள்’ அமைப்பதாக சொல்லி பஸ்தர் பகுதியில் இராணுவத் தளங்கள் அமைக்கப்படுகின்றன. முன்னாள், மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சர்களான சிதம்பரம், ஷிண்டே, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சத்தீஸ்கர் அரசுக்கு முழு ஆதரவையும் ஆர்வத்துடன் அளிக்கின்றனர். புரட்சிகர இயக்கத்தை நசுக்குவதில் ரமண் சிங் அரசின் செயல்பாட்டின் மீது முழு திருப்தி தெரிவித்திருக்கின்றனர். மத்திய அரசின் உதவிக்கு ரமண் சிங் ஒவ்வொரு வாய்ப்பிலும் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.

எனவே, புரட்சிகர இயக்கத்தை நசுக்குவதை பொறுத்த வரை சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. மக்கள் போராட்டங்களாலும், தேர்தல் ஆதாயங்களுக்காகவும் மட்டும்தான் சில உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் சர்கின்குடா, ஏட்ஸ்மெட்டா படுகொலைகளின் போது கண்டனங்களை தெரிவிக்கின்றனர். அவர்களது எதிர்ப்பு மோசடியானது, சந்தர்ப்பவாதத்தை தவிர வேறு ஒன்றுமில்லை. காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி இரண்டுமே கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான கொள்கைகளையும் அடக்குமுறை கொள்கைகளையும் செயல்படுத்துவதில் ஒரே மாதிரியானவை.

சத்தீஸ்கர் எல்லைக்கு அப்பால் ஆந்திர பிரதேசத்திலிருந்து பழுப்புவேட்டைநாய் படைகள் அடிக்கடி வந்து, 2008-ல் காஞ்சாலிலும், சமீபத்தில் மே 26, 2013-ல் புவ்வார்தியிலும் நடத்திய படுகொலைகள் காங்கிரஸ் கட்சி செயல்படுத்தி வரும் அடக்குமுறை கொள்கைகளின் பகுதியும் மொத்தமுமாகும். அதனால்தான் நாங்கள் காங்கிரசின் மேல் மட்ட தலைவர்களை குறி வைத்தோம்.

இன்று, சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமண் சிங், உள்துறை அமைச்சர் நன்கிரம் கன்வர், அமைச்சர்கள் ராம்விசார் நேதர், கேதார் காஷ்யப், விக்ரம் உசெண்டி, ஆளுனர் ஷேகர் தத், மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பட்டீல், டிஜிபி ராம் நிவாஸ், ஏடிஜி முகேஷ் குப்தா மற்றும் பிற மூத்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் தண்டகாரண்யாவின் புரட்சிகர இயக்கத்தை நசுக்குவதில் கண்மூடித்தனமாக உறுதி பூண்டுள்ளார்கள். தாங்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்ற பெரு மாயையில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள். Z பிளஸ் பாதுகாப்பும், குண்டு துளைக்காத வாகனங்களும் அவனை எப்போதும் காத்திருக்கும் என்று மகேந்திர கர்மாவும் மாயையை வைத்திருந்தான்.

உலக வரலாற்றில் ஹிட்லரும் முசோலினியும் கூட யாரும் அவர்களை தோற்கடிக்க முடியாது என்ற இதே கர்வத்தில் இருந்தனர். நமது நாட்டின் தற்கால வரலாற்றில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற பாசிஸ்டுகளும் இதே போன்ற தவறான கருத்துக்களுக்கு பலியானார்கள். ஆனால், மக்கள் ஒடுக்கப்பட முடியாதவர்கள். மக்கள்தான் வரலாற்றை படைக்கிறார்கள். இறுதியில், ஒரு சில சுரண்டல்காரர்களும் அவர்களின் வளர்ப்பு நாய்களும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் எறியப்படுவார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளையும், பச்சை வேட்டையை உடனே நிறுத்த வேண்டும்; தண்டகாரண்யாவிலிருந்து அனைத்து விதமான துணை இராணுவப் படைகளை திரும்பப் பெற வேண்டும்; ‘பயிற்சி’ என்ற பெயரில் இராணுவத்தை அனுப்பும் சதித் திட்டத்தை கைவிட வேண்டும்; விமானப் படையின் தலையீட்டை நிறுத்த வேண்டும்; சிறையில் வாடும் புரட்சிகர சக்திகளையும், சாதாரண பழங்குடி மக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; UAPA, CSPSA, MACOCA, AFSPA போன்ற கொடூர சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; நாட்டின் இயற்களை வளங்களை கொள்ளை அடிக்கும் நோக்கத்தோடு கார்ப்பரேட் குழுமங்களோடு போட்டுக் கொண்ட அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறது.

(குட்சா உசெண்டி)
மக்கள் தொடர்பாளர்,
தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
_________________________________________________
தமிழாக்கம் : செழியன்
_________________________________________________