Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 711

அமெரிக்க இரும்புத்திரையை அம்பலப்படுத்தும் ஸ்னோடன் !

8

திரு எட்வர்ட் ஜோசப் ஸ்னோடன். அமெரிக்கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். விரைவில் அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார். பின் லாடனை விட மோசமான தீவிரவாதியாகவும், அமெரிக்க மக்களின் உயிர் பறிக்கும் அரக்கனாகவோ அல்லது பெண் பித்தர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் குற்றம் சாட்டப்படலாம்.

ஸ்னோடன்
எட்வர்ட் ஜோசப் ஸ்னோடன்

ஏன் என்றால் அவர் செய்த செயல் அப்படிப்பட்டது! அமெரிக்கா தன் சொந்த நாட்டு மக்களையே வேவு பார்த்தை வீதியில் போட்டு உடைத்தவர்; அமெரிக்க அரசு கைபிசைந்து கொண்டு மக்கள் முன் தலை குனிந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தியவர். சென்ற வாரம், அமெரிக்க அரசு ”தேசிய பாதுகாப்பு” என்னும் பெயரில் அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு செய்யப்படும் தொலைபேசி, செல்பேசி உரையாடல்களை வேவு பார்த்தது, பலரின் மின்னஞசல்களையும், பிற ஆவணங்களையும் இணைய சேவை நிறுவனங்களில் இருந்து எடுத்து சேமித்தது ஆகியவற்றை நிரூபிக்கும் ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகின.

அமெரிக்க மற்றும் உலக மக்கள் தினமும் தொலைபேசி, செல்பேசிகளில் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் முதல் அவர்களது இணையத் தகவல் பரிமாற்றங்கள் என சகலத்தையும் வேவு பார்த்துள்ளனர் அமெரிக்க உளவுத் துறையினர். இதற்காக தனிபிரிவுகளை ஏற்படுத்தி பல மில்லியன் டாலர்களை செலவு செய்து இந்த வேலைகளை செய்துள்ளனர்

ஸ்னோடன் 2003-ம் ஆண்டு ஈராக்கில் ‘ஜனநாயகத்தை நிலைநாட்டும் கடமையில் பங்கேற்கும்’ கனவுகளுடன் சிறப்பு ராணுவப் படைகளுக்கான பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார். ஆனால், சீக்கிரமே அவர் ராணுவத்தின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டார். “பயிற்சியாளர்களில் பெரும்பகுதியினர் மக்களுக்கு உதவும் நோக்கம் கொண்டவர்கள் இல்லை, ஈராக் மக்களை கொல்வதைப் பற்றி மட்டும்தான் பேசினார்கள்” என்கிறார் அவர். பயிற்சி காலத்தில் ஒரு விபத்தில் கால்கள் முறிந்ததால் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் இருக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் ரகசிய அலுவலகத்தில் பாதுகாவலராக சேர்ந்திருக்கிறார். பின்னர் அமெரிக்க உளவுத் துறையின் தகவல் தொழில் நுட்ப பாதுகாப்பு துறையின் கீழ் ஜெனீவாவில் பணி புரிந்திருக்கிறார்.

அவரை முதலில் சுவிஸ் வங்கிகளை வேவு பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் கணினி உதவியுடன் பல்வேறு ஆவணங்கள், உரையாடல்களை சேகரித்துக் கொடுக்கும் வேலை செய்துள்ளார். இது சரிதான், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் முதல் பல்வேறு சமூக விரோதிகளை தான் நம் கண்காணிக்கிறோம் என்று பெருமிதம் கொண்டார். ஆனால் மெல்ல அவர் சேகரிக்கும் தகவல்களும் ஆவணங்களும் சாதாரண அமெரிக்க குடிமக்களின் உரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல் தகவல்கள் என தெரிய வந்தபோது அதிர்ச்சியடைந்தார்; குற்றவுணர்வு கொண்டார். இதனால் அமெரிக்க அதிபரை குற்றவாளி என நினைத்தார். புஷ் நிர்வாகம் செய்யும் தவறுகள் தான் இவை, அடுத்து சில மாதங்களில் எப்படியும் புஷ் மாறி வேறு ஒரு அதிபர் வரும் போது தவறுகள் சரிசெய்யப்படும் என சமாதானம் செய்து கொண்டார்.

2009-ம் ஆண்டு ஜப்பானில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் ஒரு ஒப்பந்த ஊழியராக சேர்ந்தார். ஒபாமா அதிபர் ஆன ஆரம்ப நாட்களில் இந்த வேலைகள் தொடர்ந்தாலும் இத்தகைய கொள்கைகள் மெல்ல மாற்றப்படும் என காத்திருந்தார். ஆனால் ஒபாமா பதவி காலத்தில் இந்த தகவல்கள் சேகரிப்பு விஸ்தரிக்கப்பட்டது. முன்பு குறுகிய அளவில் இருந்த வேவு பார்க்கும் வேலை அமெரிக்க மக்கள் மீது முழுவதுமே திரும்பியது. அதிபர் மாற்றம் ஒன்றுமே செய்யவில்லை, எத்தனை அதிபர் மாறினாலும் அமெரிக்க நிர்வாகம் மக்களுக்கு எதிரானது என்பதை கண்டுணர்ந்தார்.

‘அப்பாவி மக்களை வேவு பார்ப்பது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது; அரசு நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும்; அமெரிக்க நிர்வாகம் வெளிப்படையானது; இங்கு மக்களுக்கு கருத்து சுதந்திரம் பொங்கி வழிகிறது’ என அமெரிக்க அரசின் சகல முழக்கங்களும் பொய்யானவை என்பது ஸ்னோடனை கடும் குற்றணர்வு அடைய செய்தது.

கடைசியாக ஹவாயில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் பூஸ் அலன் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியராக வேலை செய்திருக்கிறார். அமெரிக்க அரசின் ‘பெரிய அண்ணன் கண்காணிப்பு’ அடக்குமுறையை மக்களுக்கு எப்படி தெரியப்படுத்தலாம் என யோசிக்கிறார். அமெரிக்காவில் மக்கள் மீதான நிறுவனங்களின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுபவர்கள் விசில் ப்ளோவர்ஸ் என அழைக்கப்படும் அம்பலப்படுத்துபவர்கள். இவர்கள் மக்களுக்கு தெரியாமல் அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் செய்யும் ஊழல்களை, தமக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை பொருட்படுத்தாமல், மக்களுக்கு அம்பலபடுத்துகிறவர்கள். ஒபாமா ஆட்சியில் இந்த அம்பலப்படுத்துபவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்; அழிக்கப்பட்டனர்.

அதனால் ஸ்னோடன் அமெரிக்காவின் மிக முக்கிய உளவுநிறுவனமான சிஐஏ-வின் கீழ் இயங்கும் தனிப்பிரிவின் பல ஆயிரம் ஆவணங்களை வெளியில் கொண்டு வருவதன் பின் உள்ள ஆபத்தை நன்கு உணர்ந்திருந்தார். தான் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க நேரிடலாம் என்பதை புரிந்து கொண்டிருந்தார். ஆனால், ஸ்னோடனுக்கு விக்கிலீக்ஸ் ஆதர்சமாக இருந்தது. அமெரிக்க ராணுவம் ஈராக்கில் செய்யும் அட்டூழியங்களை விக்கிலீக்ஸ் உதவியுடன் வெளிகொண்டு வந்த ப்ராட்லி மேனிங் என்பவரின் செய்கை அவருக்கு வழிகாட்டியது. ப்ராட்லி மேனிங் அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்டு அல்கைதாவிற்க்கு உதவியதாக ஒரு பொய் வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மரண தண்டனை வழங்கக் கூடிய வழக்கு அது.

ஸ்னோடன் அமெரிக்க அரசு மக்களை வேவு பார்ப்பது தொடர்பான தகவல்களை சேமித்தார். ஆயிரக்கணக்கான உரையாடல்கள் பதிவுகளையும் ஆவணங்களையும் தனது அறைக்கு கொண்டு வந்தார். தான் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என இரண்டு வாரம் விடுப்பெடுத்துக் கொண்டார். தகவல்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஹாங்காங் சென்று அங்கிருந்தபடி தகவல்களை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தினார்.

முதலில் தன் பெயரை அவர் வெளியிடவில்லை, அமெரிக்க அரசு உலகம் முழுவதிலும் மக்களை வேவு பார்க்கும் வேலையை செய்வதை ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டன. பரபரப்பு பற்றிக்கொண்டது. அமெரிக்காவின் உளவுத்துறையும் உள்துறையும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் அவமானப்பட்டு நின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா, இப்படி வேவு பார்ப்பது தேசிய பாதுகாப்பிற்கு தேவையானது என்று சப்பைக்கட்டு கட்டினார்.

ஒரு வாரத்திற்கு பிறகு இந்த ஆவணங்களை வெளிக்கொண்டு வந்தது யார் என்ற கேள்விக்கு விடை தரும் விதமாக ஸ்னோடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவர் மிக தெளிவாகவே இருக்கிறார் அவரின் கருத்தும் மிக தெளிவாகவே இருக்கிறது, ”நான் யாரையும் புண்படுத்தவோ, நாட்டை காட்டிகொடுக்கவோ இந்த வேலையை செய்யவில்லை, நான் கவனமாக ஆவணங்களை பரிசோதித்து யாருக்கும் ஆபத்து ஏற்படுத்தாத தகவல்களையும் ஆவணங்களையும் மட்டுமே வெளியிட்டுள்ளேன். ஆனால் என்னுடைய நோக்கம் அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்” என்கிறார்.

ஆனால், மக்களை பாதுகாப்பதற்காக மக்களை வேவு பார்க்கிறோம் என்கிறது அமெரிக்க அரசு.

தொடர்ச்சியாக பல கொலைகளையும், திட்டமிட்ட நம்பிக்கை துரோகங்களையும் செய்யும் கிரிமினல் ஒரு கட்டத்தில் யாரையுமே நம்பாமல் அனைவரையும் சந்தேகப்பட்டு மனநோயாளி போல் தன்னை காப்பாற்றி கொள்ள அலைவது இயல்பு தான். மூன்றாம் உலக நாடுகளில் தனக்கு வேண்டாத அதிபர்களை தீர்த்துக் கட்டுவது, வெளியுறவுத் துறை அதிகாரிகளை அவர்கள் இருக்கும் நாடுகளில் வேவு பார்க்கச் செய்வது, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்களை சீர்குலைவு செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்வது, ஆட்சிக் கவிழ்ப்பு, சதி, அழிவு என சகல கிரிமினல் வேலைகளை செய்து வரும் சிஐஏ-வும் அமெரிக்க அரசும், இன்று யாரை நம்புவது என தெரியாமல் அனைவரையுமே சந்தேகப்படுவது இயல்பு தான். ஆனால் மக்கள் ஒரு ரவுடியின் மனநோயை ஆதரிக்க முடியுமா?

சோஷலிச நாடுகள் வெளிப்படையாக தம் வர்க்க சார்பை அறிவிக்கின்றன; ”எந்த ஒரு அரசும் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான எந்திரம்தான்; சோஷலிச அரசு என்பது பெரும்பான்மையினரான உழைக்கும் வர்க்க மக்கள், சிறுபான்மையினரான சுரண்டல் வர்க்கங்களை ஒடுக்குவது” என வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆட்சி நடத்துகின்றன. சோவியத் அரசு, பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சுரண்டல் வர்க்கங்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படும் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது.

சோவியத் யூனியனின் இந்த கொள்கையை மக்கள் முன் திரித்துக் கூறி ‘சோவியத் யூனியனில் கருத்து சுதந்திரம் இல்லை, வெளிப்படையான நிர்வாகம் இல்லை, கம்யூனிஸமே தனிமனித சுதந்திரத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது, ஆனால் அமெரிக்கா மாதிரியான முதலாளித்துவ அரசுகளோ தனி மனித சுதந்திரத்தை பேணி பாதுகாக்கின்றன. கருத்து சுதந்திரத்திற்கு முழு ஆதரவு தருகின்றன, வெளிப்படையான நிர்வாகம் நடத்துகின்றன’ என தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து வந்தன மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள்.

ஆனால், ஜனநாயகம் என்று சொல்லப்படும் முதலாளித்துவ அமைப்பில் அரசு மேலும் மேலும் உளவு பார்க்கும் வேலையை அதிகரித்து வருகிறது. தமது நலன்களை பாதுகாப்பதற்காக, தாம் போலியாக முன் வைக்கும் கருத்துரிமை, தனி மனித சுதந்திரம் போன்றவற்றை வெளிப்படையாக பலி கொடுக்கின்றன முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள். ஸ்னோடன் போன்ற நேர்மையான குடிமக்கள் இந்த போலித்தனத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் போது தேள் கொட்டிய திருடன் போல விழிக்கிறது அமெரிக்க அரசு.

– ஆதவன்
___________________

மேலும் படிக்க

பிரதமர் பதவிக்கு மோடி : அருகதை என்ன ?

79

ரேந்திர மோடி என்ற பெயரைக் கேட்டவுடனேயே இந்திய மக்கள் பெரும்பாலோருக்கு நினைவுக்கு வருவது 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பெருந்திரள் முசுலீம் படுகொலைதான். எத்தனை சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் வந்து மோடியைக் குற்றமற்றவர் என அறிக்கை அளித்தாலும், அப்படுகொலையின் சூத்திரதாரி, தளபதி மோடிதான் என்ற உண்மையை, அவரது கரங்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலீம்களின் இரத்தக் கறை படிந்திருப்பதைப் பொதுமக்களின் மனதிலிருந்து, அவர்களின் நியாய உணர்ச்சியிலிருந்து துடைத்தெறிந்துவிட முடியாது. குஜராத் படுகொலைகளுக்காக நரேந்திர மோடி தண்டிக்கப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட முசுலீம்களும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் போராடிவரும் வேளையில், அக்கிரிமினல் பேர்வழியைப் பிரதமர் நாற்காலியில் அமர்த்த வேண்டுமென்ற பிரச்சாரம் பத்திரிகைகளில், இணைய தளங்களில் தீவிரமடைந்திருக்கிறது.

விவசாயி குடும்பம்
குஜராத் ‘வளர்ச்சி’யின் கோரம் : விவசாயம் பொய்த்துப் போனதால், வங்கிக் கடனைக் கட்ட முடியாத அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட ஜாம்நகர் மாவட்டம் – கிச்டாட் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அனிருத் சிங் ஜடேஜாவின் குடும்பம் (இடது) மற்றும் விரம்டாட் கிராம விவசாயி தேவயார் ஹதபாய் அஹிரின் குடும்பம் (கோப்புப் படம்)

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை துக்ளக் சோ, அ.தி.மு.க. தலைவி ஜெயா உள்ளிட்ட ஒரு சிறு பார்ப்பன-பாசிச கும்பல் மட்டும்தான் நரேந்திர மோடிக்கு நெருக்கமானதாக இருந்து வந்தது. அந்த அளவிற்கு இந்திய அரசியல் அரங்கில் ஒதுக்கப்பட்டவராக இருந்த மோடியோடு இன்று இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் தேசியப் பத்திரிகைகளில் ஒரு பிரிவு மிகவும் வெளிப்படையாகக் கைகோர்த்துக் கொண்டு, அவரைப் பிரதமர் பதவிக்கான தகுதி வாய்ந்த நபராக முன்னிறுத்துகின்றனர். 1930-களில் ஜெர்மன் முதலாளி வர்க்கம் அடால்ஃப் இட்லரை அந்நாட்டின் அதிபராக்க ஆதரவளித்துத் தீவிரமாகப் பிரச்சாரம் நடத்தியதைப் போன்று, இன்று இந்தியத் தரகு முதலாளி வர்க்கமும் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழுள்ள பத்திரிகைகள், செய்தி சேனல்களும் மோடியின் பிரச்சாரப் பீரங்கியாகச் செயல்பட்டு வருகின்றனர்.

“இந்தியப் பொருளாதாரம் சரிந்து கிடக்கும் நிலையிலும், குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் தள்ளிச் செல்லும் வித்தையை மோடி நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்; அம்மாநிலத்தில் ஊழலற்ற நல்ல நிர்வாகத்தை அவர் நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட திறமையை மூலதனமாகக் கொண்ட தலைவர் ஒருவர்தான் பிரச்சினைகள் நிறைந்த இன்றைய இந்தியாவை நிர்வகிக்க முடியும்” எனக் கூறி மோடியை முன்னிறுத்துகிறது, இக்கும்பல். சொல்லிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சி குஜராத் மாநிலத்தில் நுழைந்துள்ள மூலதனத்தின் அளவையும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளையும் அடிப்படையாக வைத்துதான் கணக்கிடப்படுகிறதேயொழிய, அம்மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை வைத்து மதிப்பிடப்படவில்லை.

அம்மாநிலத்தின் சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் இன்றும்கூடப் பொதுமக்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்றுதான் குடிதண்ணீரை எடுத்து வருகிறார்கள். மோடியின் ஆட்சியில் சாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவசாய வளர்ச்சி, சாதாரண விவசாயிகளின் வருமானத்தைப் பதம் பார்த்து விட்டது. பாதுகாப்பற்ற தினக்கூலி வேலை வாய்ப்புகள் பெருகிய அளவிற்கு, நிரந்தர வேலை வாய்ப்புகள் அம்மாநிலத்தில் உருவாக்கப்படவில்லை. பொது சுகாதாரம், குழந்தை இறப்பு விகிதம், ஆண்-பெண் பாலின விகிதம், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட மனிதவள மேம்பாடு தொடர்புடைய இனங்களில் மோடியின் குஜராத் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை மோடியால் கூட மறுக்க முடியவில்லை.

நிர்மா
நிர்மா நிறுவனத்தின் சிமெண்ட் ஆலை மற்றும் சுரங்கத்திற்காகத் தமது நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்துக் கொண்ட மோடி அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் மாஹூ பகுதி விவசாயிகள் (கோப்புப் படம்)

மேற்கு வங்கம்- சிங்கூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளால் அடித்துத் துரத்தப்பட்ட டாடாவை வரவேற்று, தனது மாநிலத்தில் நானோ கார் தொழிற்சாலையை அமைக்க விவசாய நிலங்களை அபகரித்துக் கொடுத்தவர் மோடி. சலவைத் தூள் தயாரிக்கும் நிர்மா நிறுவனம் மாஹூ பகுதியில் அமைத்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் 15,000 வெங்காய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்துவிட்டு, வெறும் 416 பேருக்கு தினக்கூலி வேலை வாய்ப்பைத்தான் உருவாக்கிக் கொடுத்தது. அதானி குழுமம் முந்த்ரா பகுதியில் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் 56 மீனவ கிராமங்களையும் 126 குடியிருப்புப் பகுதிகளையும் அடியோடு அழித்தது. மாருதி நிர்வாகத்தின் கொடூர அடக்குமுறைகளுக்கு எதிராக குர்கான் தொழிலாளர்கள் வீரமிக்க போராட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, மாருதி தனது புதிய கார் தொழிற்சாலையை அமைக்கத் தேர்ந்தெடுத்த இடம் மோடியின் குஜராத்.

மோடி குஜராத்தில் உருவாக்கியிருக்கும் வளர்ச்சி ரிலையன்ஸ், எல் அண்ட் டி., எஸ்ஸார், அதானி போன்ற சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுக்கு எதிராகவும் இருப்பதை இவை போன்ற பல உதாரணங்களைக் கொண்டு எடுத்துக் காட்டலாம். தனியார்மயம்-தாராளமயத்தின் கீழ் எட்டப்படும் வளர்ச்சி இதற்கு மாறாக, பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் ஒரு போதும் இருக்கப் போவதில்லை; இருக்கவும் முடியாது. எனவே, ஆர்.எஸ்.எஸ். அம்பிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் வியந்தோதும் குஜராத்தின் வளர்ச்சி என்பது அடிப்படையிலேயே மக்கள் நலனுக்கு எதிரானது.

குஜராத்தின் கட்ச் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள முந்த்ரா பகுதியில் 7,500 கோடி ரூபாய் மதிப்புமிக்க 5 கோடி சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை, மோடி தனக்கு மிகவும் நெருக்கமான அதானி குழுமத்திற்கு வெறும் 160 கோடி ரூபாய்க்கு வாரிக் கொடுத்திருக்கிறார். தொழில் தொடங்கப் போவதாகக் கூறி இந்த நிலத்தைப் பெற்ற அதானி குழுமம், அந்த நிலத்தின் பெரும்பகுதியை பிளாட்டு போட்டு விற்றதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை இலாபமாகச் சுருட்டிக் கொண்டது.

மோடியின் ஆட்சியில் இது போன்று பல நில பேர மோசடிகள் நடந்திருப்பதையும்; எஸ்ஸார், எல் அண்ட் டி., ஃபோர்டு இந்தியா, ரிலையன்ஸ் உள்ளிட்டுப் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த நிலக் கொள்ளையின் மூலம் கொழுத்த இலாபமடைந்திருப்பதையும் இந்தியத் தணிக்கைத் துறை அறிக்கையாகவே அளித்திருக்கிறது. இந்த நிலக்கொள்ளை ஒருபுறமிருக்க, மோடி அரசு ரிலையன்ஸ், எஸ்ஸார், அதானி, ஏ.பி.எல்., டொரண்ட் பவர் ஜெனரேஷன் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிய சட்ட விரோத சலுகைகளால் அரசிற்கு 580 கோடி ரூபாய் நட்டமேற்பட்டிருப்பதாகவும்; 2009-10 மற்றும் 2010-11 ஆகிய இரு நிதி ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காட்டப்பட்டுள்ள சட்ட விரோத சலுகைகளால் மாநில அரசிற்கு 17,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

மன்மோகன் சிங் அரசும் மோடி அரசும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதைத்தான் குஜராத்தில் நடந்துள்ள இந்த கார்ப்பரேட் பகற்கொள்ளைகள் எடுத்துக் காட்டுகின்றன. இதில் மோடி தனிப்பட்ட விதத்தில் எந்தவிதமான ஆதாயமும் அடையவில்லையே என வாதாடுவது அபத்தமானது மட்டுமல்ல, அயோக்கியத்தனமானதும் கூட.

தண்ணீர்
ஒரு குடம் தண்ணீருக்காகக் காத்திருக்கும் பாடன் கிராம மக்கள்.

மன்மோகன் சிங்கிற்கும் மோடிக்கும் இடையே பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்திலும் நடைமுறையிலும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது என்றாலும், ஊழலற்ற நல்ல நிர்வாகத்தைத் தர வேண்டும் என்ற நோக்கில்தான் தரகு முதலாளிகள் மற்றும் பத்திரிகைகள்/செய்தி சேனல்களின் ஒரு பிரிவு நரேந்திர மோடியை ஆதரிப்பதாகக் கூறுவது அபத்தமானது. ஏனென்றால், மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் அனைத்திலும் பங்குதாரர்களாக இருந்து, மிகப்பெரும் இலாபத்தைச் சுருட்டிக் கொண்டவர்கள் இந்த கார்ப்பரேட் கும்பல்கள்தான். எனவே, அவர்களின் பிரச்சினை ஊழல்ல.

தனியார்மய-தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மக்கள் விரோதப் போக்கும் அதன் மோசடிகளும் ஆளுங்கட்சிகளை வெகுவிரைவிலேயே மக்களின் வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளாக்கிவிடுவதால், ஆளும் வர்க்கங்களுக்கும் அவர்களின் அறிவுசார்ந்த பிரதிநிதிகளுக்கும் வேறொரு கட்சியை, அதன் தலைவனை ஆளுங்கட்சிக்கு மாற்றாக, கவர்ச்சிகரமான முறையில் மக்கள் முன் நிறுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. இப்படி அடுத்த மாற்றாக முன்னிறுத்தப்படும் ஓட்டுக்கட்சித் தலைவர் ஆளும் வர்க்கங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்வதோடு, அதனின் சித்தாந்தத்தை வரித்துக் கொண்டவராகவும் இருப்பது பழம் நழுவிப் பாலில் விழுவதைப் போன்றது.

அந்த வகையில் நரேந்திர மோடி இந்திய ஆளும் கும்பலுக்கு லாட்டரி பரிசு போலக் கிடைத்திருக்கிறார். நரேந்திர மோடி பார்ப்பன-பாசிச சித்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் வார்க்கப்பட்டவர் என்பது ஒரு புறமிருக்க, அவர் காலாவதியாகிப் போன அரசு முதலாளித்துவக் கொள்கைகளை அடியோடு வெறுப்பவர். அரசும், தனியாரும் இணைந்து செயல்படுவதன் மூலம்தான், அதாவது அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலம், ரோடு, துறைமுகம், தண்ணீர், கனிமவளங்கள் போன்ற பொதுச் சொத்துக்களைத் தரகு முதலாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுப்பதன் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும்; இத்தகைய வளர்ச்சியின் மூலம்தான் வறுமையை, ஏழ்மையை ஒழிக்க முடியுமே தவிர, சமூக நலத் திட்டங்களின் மூலம் ஒழிக்க முடியாது என்ற புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள மோடி, அதனைத் தனது மாநிலத்தில் கடந்த பத்தாண்டுகளாக மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.

அரசுப் பதவிகளில் உட்கார்ந்துள்ள மற்ற தலைவர்கள் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கைவிடாத பொழுது, மோடி அவற்றை வாக்குவங்கி அரசியல் என வெளிப்படையாகச் சாடி வருகிறார். குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது கிடையாது; குப்பை அள்ளுவது கூட அங்கு இலவசமாக நடைபெறவில்லை என்பதெல்லாம் தனியார்மயத்தின்பால் அவருக்குள்ள வெறித்தனமான மோகத்தைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

இந்தியா டுடே
பிரதமர் பதவிக்கான தகுதி வாய்ந்த நபர் குறித்து தான் நடத்திய கருத்துக் கணிப்பில் மோடி முதலிடத்தில் இருப்பதைக் குதூகலத்தோடு அறிவிக்கும் இந்தியா டுடே இதழின் முகப்பு அட்டை.

ஓட்டுப் போட்டுத் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மாறாக, முதலீட்டாளர்களுக்குத் தேவையான சலுகைகளையும் வசதிகளையும் செய்து கொடுப்பதுதான் அரசின் வேலை; இதற்கேற்ப அரசு நிர்வாகம் செம்மைப்படுத்த வேண்டும் என அறிவிக்கிறார், மோடி. அதாவது, மூலதனம் கூலித் தொழிலாளர்களையும், இயற்கை வளங்களையும் பொதுச் சோத்துக்களையும் சூறையாடுவதற்கு அரசு எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் இதன் பொருள். மேற்கு வங்கத்திலிருந்து துரத்தப்பட்ட டாடாவிற்கு இரண்டே நாளில் நானோ கார் தொழிற்சாலையை அமைக்க அனுமதி கொடுத்ததை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளும், படித்த நடுத்தர வர்க்கமும் அரசு நிர்வாகம் ஒரு கார்ப்பரேட் கம்பெனியைப் போல நடத்தப்பட வேண்டும் என்று கூறிவருவது இதைத்தான்.

இப்படிபட்ட சிந்தனைப் போக்கும் நடைமுறையும் கொண்ட மோடியை இந்தியாவின் பிரதமர் பதவியில் உட்கார வைத்தால், அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொருளாதாரச் சீர்திருத்த திட்டங்களை உடனடியாகவே நடைமுறைப்படுத்தி விடுவார். தனது கட்சிக்குள் இருந்த தனது எதிர்ப்பாளர்களை வீழ்த்தியதைப் போல, சீர்திருத்தங்களைச் சுயநலம் காரணமாக எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகளை மட்டுமல்ல, பழங்குடி இன மக்களின், மாவோயிஸ்டுகளின் எதிர்ப்புகளையும் ஒடுக்கி வனங்களை, அவற்றுக்கு அடியிலுள்ள இயற்கை வளங்களைத் தமது கரங்களுக்கு மாற்றி பட்டா போட்டுக் கொடுத்து விடுவார் எனக் கருதுகிறது, கார்ப்பரேட் முதலாளி வர்க்கம்.

இந்திய போலி ஜனநாயகத்தின் மீது இன்னும் நம்பிக்கை கொண்டுள்ள பலரும் இந்து மதவெறி பாசிஸ்டான நரேந்திர மோடியைப் பிரதமராக்கினால், குஜராத் போல நாடு முழுவதும் மத ரீதியான பிளவுகள் ஏற்பட்டுவிடும் என எச்சரிப்பதையெல்லாம் கார்ப்பரேட் கும்பல் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், மறுகாலனியாக்கச் சூழலில் மக்களிடையே வர்க்க ஒற்றுமை ஏற்பட்டுவிடாதபடி, மதரீதியான பிளவுகள் உருவாவது அவர்களுக்குச் சாதகமானதுதானே!

மறுகாலனியாக்க கொள்கைகளின் அமலாக்கம் தோற்றுவித்து வரும் விலைவாசி உயர்வு, வேலையிழப்புகள், சிறு தொழில்களின் அழிவு போன்றவற்றால் கொந்தளிப்பு மிக்க ஒரு சூழலை நாடு எதிர்கொள்ளவிருக்கிறது. போராட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்குமிடையிலும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தை உத்திரவாதப்படுத்தக் கூடிய உறுதி நரேந்திர மோடி எனும் பாசிஸ்டுக்கே உள்ளது என்று இந்திய ஆளும் வர்க்கம் நம்புகிறது.

இப்படித்தான் நல்லவரு, வல்லவரு என்று போற்றித் துதிபாடி மன்மோகன் சிங் என்ற கல்லுளிமங்கனைப் பதவியில் அமர்த்தியது ஆளும் வர்க்கம். கல்லுளி மங்கனுக்கு அடுத்தபடியாக ஒரு காவிக்கிரிமினல்.

__________________________________

பெட்டிச் செய்தி – 1

விவசாயிகளை நசுக்கும் கருப்புச் சட்டம் : மோடி அரசின் வக்கிரம் !

விவசாயிகள் தமது நிலத்தில் 45 மீட்டர் ஆழத்திற்கு மேல் கிணறு தோண்டினாலோ, குழாய் இறக்கினாலோ அரசின் அனுமதி பெற வேண்டும்; விவசாயிகள் பாசனத்துக்குப் பயன்படுத்தும் தண்ணீரை எப்படி எடுத்தோம் என அரசுக்குக் கணக்கு காட்ட வேண்டும். தவறினால், 10,000 ரூபாய் அபராதமும் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் அளிக்க வகை செய்யும் கருப்புச் சட்டமொன்றை நிறைவேற்றியிருக்கிறது, மோடி அரசு.

நிலத்தடி நீரைப் பாதுகாப்பது என்ற பெயரில் நிலத்தடி நீர்வளம் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, அதனை முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதற்காகவே ஒரு ஆணையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது, மன்மோகன் சிங் அரசு. அவர் எள் என்றவுடன் எண்ணெயாகிச் சட்டத்தைக் கொண்டு வந்து விட்டார், மோடி.

வறட்சி மிக்க மாநிலமான குஜராத்தில் நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டுமென்றால், நிலத்தடி நீரைப் புட்டிகளில் அடைத்து விற்கும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கம்பெனிகள், கோல்ப் மைதானங்கள், தண்ணீர் விளையாட்டு கேளிக்கை பூங்காக்களை நடத்தும் முதலாளிகள் மீது பாயும்படிதான் சட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மோடியோ பொதுமக்களின் தண்ணீர்த் தேவையில் கைவைக்கிறார். அதனால்தான் மோடியைப் பிரதமராக்கிவிடத் தரகு முதலாளிகள் துடிக்கிறார்கள்.

_____________________________

பெட்டிச் செய்தி – 2

நரேந்திர மோடி – கெட்டிக்கார புளுகன் !

குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆந்திரா மாநிலக் கடற்கரைப் பகுதியையொட்டி அமைந்துள்ள கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்பு கொண்ட இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடித்திருக்கிறது; இதன் மதிப்பு 5,000 கோடி அமெரிக்க டாலர்கள் (இன்றைய மதிப்பின் படி 2,50,000 கோடி ரூபாய்) ஆகும்” என கடந்த 2005 ஜூனில் பத்திரிகையாளர்களையெல்லாம் அழைத்து டாம்பீகமாக அறிவித்தார், மோடி. இதனையடுத்து குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷனை, தேசங்கடந்த தொழிற்கழகத்தினைப் போன்று மாற்றும் மோடிவித்தை தொடங்கப்பட்டது.

கிருஷ்ணா-கோதாவரி கண்டுபிடிப்பை ஆய்வு செய்து வந்த மைய அரசின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், “குஜராத் அரசு சோல்வது போல அந்த வயலில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்பு கொண்ட இயற்கை எரிவாயு காணப்படவில்லை. அங்கு இருப்பது வெறும் 2 இலட்சம் கோடி கன அடி இயற்கை எரிவாயுதான்” என்றஉண்மையை கடந்த 2012-ஆம் ஆண்டு போட்டு உடைத்தது.

மோடியின் இந்த அண்டப்புளுகைவிடக் கவனம் கொள்ளத்தக்கது அந்த நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல்கள்தான். மோடி அரசு அக்கார்ப்பரேஷன் குத்தகைக்கு எடுத்துள்ள எண்ணெய் வயல்களின் பங்குகளை பார்படோஸ் நாட்டில் ஒரு அனாமதேய முகவரியில் இயங்கிவரும் ஜியோ குளோபல் என்ற லெட்டர் பேட் நிறுவனத்திற்கு மிகவும் மலிவான விலையில் விற்றிருக்கிறது. இந்த விற்பனையால் அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு வெறும் 64 டாலரிலிருந்து (ரூ.3,200/-) 10,000 கோடி ரூபாயாக அதிகரித்து விட்டதென அம்பலப்படுத்தி இருக்கிறார், அர்விந்த் கெஜ்ரிவால். அலைக்கற்றை ஊழலோடு கூட ஒப்பிட்டுப் பேச முடியாத பிரம்மாண்ட ஊழல் இது.

மோடியை வளர்ச்சியின் நாயகனாக அரிதாரம் பூசிக் காட்டுவதற்காகவே “துடிப்புமிக்க குஜராத்” என்ற பெயரில் முதலீட்டாளர்கள் பங்கு பெறும் கருத்தரங்குகளை குஜராத் அரசு நடத்திவருகிறது. 2003-2011 காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட ஐந்து கருத்தரங்குகளின் மூலம் 87,600 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான அந்நிய நேரடி முதலீடை குஜராத் ஈர்த்திருப்பதாகத் தம்பட்டம் அடித்துவருகிறது, மோடி அரசு. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி 2000-2011 காலக்கட்டத்தில் குஜராத் மாநிலத்தில் நுழைந்துள்ள மொத்த அந்நிய நேரடி முதலீடு வெறும் 720 கோடி அமெரிக்க டாலர்கள்தான்என்றும், அந்நிய நேரடி முதலீடை ஈர்ப்பதில் குஜராத் அரசு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைவிடப் பின்தங்கி இருப்பதாகவும் அறிக்கை அளித்திருக்கிறது.

கோயபல்ஸ் பாணியில் நாக்கூசாமல் பொய்களை விற்பதுதான் மோடியின் நிர்வாகத் திறமை போலும்!

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

நினைவுகூர்தல் !

4

தோழர் சீனிவாசன்(மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் மாநில பொருளாளராக பணியாற்றி மறைந்த தோழர் சீனிவாசனது முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில் ம.க.இ.க. மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இங்கே வெளியிடுகிறோம்).

நினைவுகளை பின்னோக்கி ஓட்டிப் பார்க்கும் போது சம்பவங்கள் வரிசையாக நமக்கு நினைவுக்கு வருவதில்லை. நினைவு ஒரு நறுமணம் போன்றது. ஒரு மனிதனுடைய சாரமாக எது நிற்கிறதோ அதை நம்முடைய இதயம் பதிவு செய்துகொள்கிறது. தோழர் காளியப்பன் சொன்னதைப் போல ஒரு மகிழ்ச்சியான மனிதர் தோழர் சீனிவாசன். புரட்சிகர அரசியல் பணிகளை செய்வதில் அசாதாரணமான ஒரு ஈடுபாட்டையும் மகிழ்ச்சியையும் அவரிடம் யாரும் காணத் தவற முடியாது.

மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரிப்பது உழைப்பு. உழைப்பு என்ற மனிதனுடைய சிறப்பியல்பை மனிதனுக்குரியதாக இல்லாமல் செய்வதுதான் முதலாளித்துவ சமூகம். பல பேரை பார்க்கிறோம். வேலைக்கு போய் வருகிறார்கள். அது தொழிலாளியாக இருக்கட்டும், ஒரு எழுத்தராக இருக்கட்டும் உழைக்கின்ற அந்த காலத்தை நரக வேதனையாக உணர்கிறார்கள். வாழ்க்கை என்று அவர்கள் எதைக் கருதுகிறார்கள்? சாப்பிடுவதை, குடிப்பதை, உறங்குவதை, இன்பம் துய்ப்பதைத்தான் வாழ்வென்று கருதுகிறார்கள். இந்த வாழ்க்கையை வாழ்வதற்க்காக பொருள் ஈட்ட வேண்டி இருக்கிறது. அதற்கு தவிர்க்கவியலாமல் வேண்டா வெறுப்பாக உழைப்பில் ஈடுபடுகிறார்கள்.

இதை மார்க்ஸ் எப்படி சொல்கிறார்? மனிதனுக்கு உரிய உழைப்பை, மனிதனிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டு, எது விலங்குக்கு உரியதோ அதை, அதாவது உண்பது உறங்குவது போன்றவற்றை மனிதனுக்கு உரியதாக மாற்றி வைத்திருக்கிறது முதலாளித்துவம் என்பார். உழைப்பை துன்பமாக, தன்னிடமிருந்து அந்நியமாக்கப்பட்டதாக, தனக்கு எதிரானதாக மாற்றி இருக்கின்ற இந்த முதலாளித்துவ சமூகத்திலிருந்து மக்களை விடுவித்து, உழைப்பை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குவது எப்படி, மனித இயல்பாக மக்களுக்கு அதை மீட்டுத் தருவது எப்படி என்பது தான் நம்முடைய பணி.

சீனிவாசன் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தார். குடும்ப பராமரிப்பிற்காக எட்டு மணி, நேரம் பத்து மணி நேரம் அங்கே குப்பை கொட்டுவதை, அந்த வேண்டா வெறுப்பான உழைப்பை அவர் விரும்பவில்லை. விருப்ப ஓய்வு என்று அழைக்கப்பட்டாலும், ஓய்வு எடுப்பதற்காக அவர் விலகவில்லை. முன்னிலும் அதிகமாக உழைப்பதற்காகத் தான் வெளியே வந்தார். இது மகிழ்ச்சியை தருகின்ற உழைப்பு என்று அவர் விரும்பி எற்றுக் கொண்டிருந்ததனால் தன்னுடைய கடைசி நாள் வரையிலே, இந்த அமைப்பு பணிகளில் ஈடுபட்டார்; அதை தன்னுடைய சொந்தப் பணியாக விருப்பப்பூர்வமாக செய்கின்ற பணியாக அவர் கருதினார்

06-speech-2தோழர் சீனிவாசனுடைய நினைவு நாளும், கார்ல் மார்க்சினுடைய பிறந்த நாளும் ஒரே தேதியாக அமைந்திருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு. பல விபரீதமான தற்செயல் நிகழ்வுகள் சமூகத்தில நடக்குது. மே தினம் நடிகர் அஜித்தின் பிறந்த நாள். லெனின் என்றும் ஸ்டாலின் என்றும் பெயர் வைக்கப்பட்டவர்கள் கோழையாக, பொறுக்கிகளாக இருப்பதை பார்க்கிறோம். எனவே தற்செயல் நிகழ்வுகள் அல்ல, ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பது தான் அவர்களுடய பிறப்பைப் பற்றியும் இறப்பைப் பற்றியும் அவர்களுடைய நினைவைப் பற்றியும் நம்மை பேச வைக்கிறது. அதனால்தான் தோழர் சீனிவாசனை நாம் நினைவு கூர்கிறோம்.

ஆங்கிலத்தில் ஒரு வழக்குண்டு. “ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறுகின்ற இந்த உலகம், மறுநாள் தன் சோற்றில் ஒரு கவளத்தைக் கூட குறைத்துக் கொள்வது இல்லை” என்று. இது ஒரு உண்மை. மரணம் இல்லாத வாழ்வை யாரும் எதிர்பார்த்து இங்கே இல்லை.

இன்று வாழ்நாள் நீண்டு விட்டது. இன்னும் 50 ஆண்டுகளில் மனிதனின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டித்து விட முடியும் என்கிறார்கள். இன்றே பலர் நீண்ட நாள் உயிர் வாழ்கிறார்கள். வாழ்கிறார்கள் என்பதை விட உயிரோடு இருக்கிறார்கள் என்று சொல்லலாம். உயிரோடு இருத்தல் என்ற அளவிலே இந்த வாழ்க்கையை நீட்டித்து தருகிறேன் என்கிறது மருத்துவ அறிவியல். முதலாளித்துவ பொருளாதாரம் என்ன சொல்கிறது ?

பொருளாதாரம், தேவை இல்லாதவர்கள் அதிகமாகி விட்டார்கள் அவர்கள் எல்லாம் விடை பெற்றுக் கொண்டால் நல்லது என்று சொல்கிறது. கீரிசில், ஸ்பெயினில் தொழிலாளர்களுடைய ஓய்வூதியம் வெட்டப்பட்டுவிட்டது. ஒரு வீட்டில் முதியவர்களுக்கு சோறு போடவில்லை என்றால் அது ஒரு அறம் கொன்ற செயல், ஒரு நாட்டில் முதியவர் ஓய்வூதியத்தை வெட்டு என்று சர்வதேசிய நாணய நிதியம் சொன்னால், அது நல்ல பொருளாதாரக் கொள்கை எனப்படுகிறது. ஆக வாழ்வது என்பது உயிரோடு இருத்தல் என்பதாக சுருக்கப்பட்டு, அப்படி உயிரோடிருப்பவர்களில் எவ்வளவு பேர் உயிரோடிருக்கலாம் என்பதை உலக முதலாளி வர்க்கம் முடிவு செய்கின்ற ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்.

இருப்பினும் எல்லோருக்குமே தாம் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் தான் திருமணத்தையாவது அமர்க்களமாக நடத்தி அங்கீகாரம் பெற விழைகிறார்கள். ரெளடி, பொறுக்கியா இருந்தாலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுகிறார்கள். சமூகத்தின் அங்கீகாரம் என்பது கேட்டுப் பெறுவது அல்ல, விலை கொடுத்து வாங்குவதும் அல்ல.

நம்முடைய சட்டமன்றத்தில் மந்திரிகள், ‘எதுக்கும் லாயக்கு இல்லாத என்னை அமைச்சராக்கிய அம்மா’ன்னு தான் ஆரம்பிக்கிறாங்க. தகுதியற்ற நபர்களை அமைச்சராக்கியதாக சொல்வதை ஜெயலலிதா ஒரு விமரிசனமாக பார்ப்பதில்லை. புகழுரையாகத்தான் எடுத்துக்கிறாங்க. ஏனென்றால் அவங்களை பொருத்தவரைக்கும் நாமெல்லாம் சாலையின் இடது புறம் போகிறோம் என்றால் அது கூட அம்மாவின் உத்தரவுக்கிணங்கத்தான். கருணாநிதி இதில் கரை கண்டவர். யாராவது மேடையில அவரைப் புகழ்ந்து பேசினால், புதுசா எதாவது சொல்கிறார்களான்னு கவனிப்பார். ஒரு வேளை புகழத் தவறினால், புதுசா இப்படி அயிட்டம் இருக்குன்னு அவரே எடுத்து கொடுத்து புகழச் சொல்லுவார். செத்த பிறகு புகழ்ந்தால் கேட்காது இல்லையா, அதனால உயிரோடு இருக்கும் போதே ஆள் வைத்து புகழ்ந்து கொள்கிறார்கள்.

சுந்தர ராமசாமி என்றொரு இலக்கியவாதியின் கவிதை இருக்கிறது. “நான் விடை பெற்றுக்கொண்டுவிட்ட செய்தி உன்னை வந்து எட்டியதும், நண்பா பதறாதே, ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் அதில் எதுவும் இல்லை” என்று தொடங்குகிறது கவிதை. ரொம்ப தன்னடக்கமா இருக்குது இல்லையா ? அடுத்த வரி “இரங்கல் கூட்டம் போட ஆள் பிடிக்க அலையாதே, நம்முடைய கலாச்சாரத் தூண்களின் தடித்தனங்களை எண்ணி மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே” அப்புறம் டிஜிட்டல் பானர் வைக்காதே, போஸ்டர் அடிக்காதே என்று போகிறது.

இருக்கும் போதே தன்னுடைய மரணத்தை அவர் நினைச்சு பார்க்கிறாரு. பல பேரு நினைக்கிறது தான் இது. இருந்தாலும், கவிதை தன்னடக்கம் போல தொடங்கி அங்கீகாரத்துக்கான வேட்கை ரொம்ப அருவெருப்பாக வெளியே வருகிறது.

காரல் மார்க்ஸ்
காரல் மார்க்ஸ்

தோழர்கள் மறைந்த பிறகு அவர்களுடைய சிறப்பை நாம கூட்டம் போட்டு பேசுறோம். அவர்கள் இருக்கும் போது, அதை நாம் பேசுவதில்லை. வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், நாம் சீனிவாசனையோ வேறு எந்த தோழரையோ பற்றியோ பேசும்போது ஒரு சமூக உணர்வுள்ள மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டார் என்பதற்காக நாம் பாராட்டுகிறோம். சமூகத்தில் பலர் அப்படி நடந்து கொள்ளவில்லை என்பதானால் இது தனியாக தெரிகிறது.

நமது தோழர்களுடைய புரட்சிகர திருமணங்களில் கூட, நாங்க காசு வாங்கிறது இல்லை, தாலி கட்டுறது இல்லை. பெண்ணை அடிமையாக கருதுவது இல்லை என்று, நாகரீகமாக நடந்து கொள்வதையே ஒரு அசாதாரணமான விசயம் போல விதந்து கூற வேண்டிய சூழல்! மற்றபடி இதையெல்லாம் நாம் பாராட்டிக் கொண்டிருப்பதில்லை.

கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல சிறந்த அறிவியலாளர்களாக இருக்கட்டும். அல்லது எழுத்தாளர்களாக இருக்கட்டும் மனித சமூகத்திற்கு எதையேனும் பங்களிக்க வேண்டும் என்று கருதுகின்ற யாரும் தன்னுடைய மறைவிற்கு பின் அங்கீகாரம் இருக்குமா என்று கவலைப்படுவதில்லை. மாறாக, மறைவதற்கு முன் எதை செய்து முடிக்க வேண்டும் என்பது குறித்தே பெரிதும் கவலைப்படுகிறார்கள்.

மார்க்சினுடைய நண்பர் என்ன நீண்ட நாட்களாக நான் எழுதிய கடிதத்திற்கு உங்களிடமிருந்து பதிலே இல்லைன்னு கேட்டு எழுதுகிறார். இதற்கு மார்க்ஸ் பதில் எழுதுகிறார், “உங்கள் கடிதத்திற்கு ஏன் பதில் எழுத வில்லை, ஏனென்றால் நான் மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு இருந்ததனால் தான். ஒவ்வொரு கணப்பொழுதையும் என்னுடைய புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு நான் பயன்படுத்த வேண்டி இருந்தது”. இத்தகையதொரு மனிதன் அங்கீகாரம் தேடுவது பற்றி சிந்திக்கவே முடியாது

மார்க்ஸ் மறைந்த பிறகு, அவருடைய அடக்கம் செய்யப்பட்டபோது உரையாற்றிய எங்கெல்ஸ், மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்தி விட்டார் என்று அவர் கூறுவார். அப்போ மற்றவர்கள் எல்லாம் சிந்திக்கவில்லையா எல்லோரும் அவரவர் கோணத்தில் சிந்திக்கிறார்கள். மரணம் நெருங்கும்போது தன்னுடைய கடந்த காலத்தை எல்லோரும் மிக வேகமாக திரும்பிப்பார்க்கிறார்கள்.

06-speech-4

பழைய கம்யூனிஸ்ட் இயக்கத்தினர், பழைய திராவிடர் கழகத்தினரில், “கட்சி கட்சின்னு வாழ்கையையே வேஸ்ட் பண்ணிட்டேன் சார், குடும்பத்தை கவனிக்காம விட்டுட்டேன். அவனவன் பொழச்சுகிட்டான்” என்று பேசக்கூடிய நபர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி கணக்கு கூட்டிப் பார்க்கும்போது பல பேர், துன்பங்கள் வரும் தருணங்களில், மரணம் நெருங்கும் தருணத்தில், இடையூறுகள் வரும்போது தடுமாறி விடுகிறார்கள்.

நம்முடைய தோழர்களில் இளைஞர்களாக இருப்பவர்களுக்கு, புரட்சி, அரசியல், போராட்டம், அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கெல்லாம் போகாதீர்கள் என்பதற்கு தந்தையோ, முதியோர்களோ சொல்லுகின்ற அறிவுரை என்ன? “நான் சொல்வது இப்பத் தெரியாது. அப்புறம் தெரியும்”. இளமையில் செய்கின்ற ஒரு முடிவு முதுமையிலே தவறு என்று தோன்றுவதற்கு என்ன காரணம?

இந்த தடுமாற்றம் ஏற்படுகிறவர்கள் எல்லாம் தவறானவர்களா ? அப்படி சொல்ல முடியாது. தடுமாற்றத்தை போராட்டமாக மாற்றுகிறோமா இல்லையா என்பதுதான் கேள்வி. இந்த சமூகத்தில் வாழ்கின்ற வரையில் இந்த தடுமாற்றத்தை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இப்பொழுது இந்த பள்ளியினுடைய அரங்கத்துக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறோம், வெளியே போனால் பாண்டி பஜார், உஸ்மான் ரோடு ரங்கநாதன் தெரு, போத்தீஸ், ஜாய் ஆலுக்காஸ் எல்லாம் வரிசையா இருக்கிறது. அங்கே பணத்தை கொடுத்து ரசீது போட்டு மகிழ்ச்சியை வாங்கலாம் என்று லட்சக்கணக்கான பேர் போய் கொண்டிருகிறார்கள். நாம் இங்கே அமர்ந்திருக்கிறோம்

அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? நாம் உஸ்மான் ரோட்டுக்கு போகமாட்டோமா, ரங்கநாதன் தெருவுக்கு போகமட்டோமா, சரவணா ஸ்டோருக்கு போமாட்டோமா? போவோம். இந்த வாழ்க்கை இருக்கிறது, இந்த வாழ்க்கைக்கு வெளியே நம்மை ஆசைக்காட்டி இழுக்கின்ற அந்த வாழ்க்கையும் இருக்கிறது.

மே தினத்தன்று பார்த்தால் பேரணி, தோழர்கள், அவர்களுடைய ஆவேச முழக்கங்கள். அல்லது தடியடி, கைது, சிறை இவற்றையெல்லாம் எதிர் கொள்ளுகின்ற தருணங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் முடிவுக்கு வருகின்றன, அதற்கு பிறகு வழக்கமான வாழ்க்கை தொடங்குகிறது. அந்த வழக்கமான வாழ்க்கை தொடங்கும் போதெல்லாம் தடுமாற்றம் வருகிறது. இந்த தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றவும், விமர்சிக்கவும், மாற்றி அமைக்கவும், நெறிப்படுத்தவும் நமக்கு அமைப்பு இருக்கிறது.

பகத்சிங்
பகத்சிங்

தடுமாற்றம் என்பது எல்லா மனிதர்களுக்கும் உண்டு, தேவகுமாரனுக்கும் உண்டு, சிலுவையில் அறையப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும்போதே தேவன் நம்மை காப்பாற்றப் போவதில்லையென்று ஏசுவுக்குத் தெரிகிறது. அந்த தருணத்தில் ஏற்படும் தடுமாற்றத்தை சித்தரிக்கிறது ஒரு இலக்கியம் – தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் ஜீசஸ் கிரைஸ்ட். திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

சிலுவையில் அறையப்பட்ட ஏசு, தன்னை தேவன் காப்பாற்றி விட்டதாகவும், காதலியை மணம் புரிந்து கொண்டு பிள்ளை குட்டிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் ஒரு அரை மயக்க நிலையில், கனவு காண்கிறார். கனவில் அவரது சீடர்களே அவரை ஏசுகிறார்கள். தனது வீழ்ச்சியை எண்ணித் துணுக்குற்ற ஏசு திடுக்கிட்டு விழிக்கிறார். தான் கண்டது கனவு என்று அறிந்து மகிழ்கிறார். அந்த மகிழ்ச்சியுடனேயே சிலுவையில் உயிர் துறக்கிறார். ஏசுவின் மனதில் ஏற்படும் இந்த தடுமாற்றத்தை சாத்தானாக அந்த இலக்கியம் சித்தரிக்கிறது,

தடுமாற்றம் இல்லாதவர்கள் இல்லை. அந்த தடுமாற்றத்தின் போது எத்தகைய போராட்டத்தை கைக்கொள்கிறோம், அந்த போராட்டத்தில் தொடர்ந்து நிற்கிறோமா என்பது தான் மற்றவர்களையும் நம்மையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. “இருபது வயதுகளில் கம்யூனிஸ்டாக இல்லாதவனும் முட்டாள், நாற்பது வயதுக்கு மேல் கம்யூனிஸ்டாக இருப்பவனும் முட்டாள்” என்று ஒரு வழக்குமொழி சொல்வார்கள்.

புரட்சி என்பதே ஒரு இனிமையான இளம்பருவக் கோளாறு என்பதுதான் இதன் பொருள். கொஞ்ச காலம் நான் ம.க.இ.க வில் இருந்தேன் என்று சொல்லிக்கொள்ளலாம். வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டவர் என்பதுதான் சீனிவாசன் போன்ற தோழர்களுடைய சிறப்பு. தோழர்கள் குறிப்பிட்டதைப் போல, எதிரிகள் தாக்குவதை தமது பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதினார்.

இந்தப் பக்குவம் வாய்க்கப்பெற்றவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. மரணம் என்று ஒன்று தனியாக இல்லை. யார் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுகிறார்களோ, அநேகமாக அவர்கள்தான் மரணத்தைக் கண்டும் அஞ்சுகிறார்கள். மக்கள் நலனுக்காக மகிழ்ச்சியாக நிறைவாக முரணில்லாமல் உழைப்பவர்களுக்கு மரணம் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதில்லை.

நவம்பர் புரட்சி தொடர்பான கதைகளைப் பற்றி தோழர்கள் படித்திருக்க கூடும். போல்ஷ்விக் கட்சியின் மத்தியக்குழு ஸ்மோல்னி இன்ஸ்டிடியூட் என்கிற இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நாட்களில் லெனின் தலைமறைவாக இருப்பார். போல்ஷ்விக் கட்சிக்கு சோவியத்துகளில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆயுதந்தாங்கிய எழுச்சியை தொடங்குவதா வேண்டாமா என்று ஒரு தடுமாற்றம் மத்தியக் குழு உறுப்பினர்களுக்கே இருக்கும். லெனினோ ஆயுத எழுச்சியை உடனே தொடங்க வேண்டும் என்ற வலியுறுத்தி மத்தியக் குழுவுக்கு கடிதம் அனுப்பிக் கொண்டே இருப்பார். இருப்பினும் மத்தியக் குழு பெரும்பான்மை அவர் கருத்தை ஏற்றுக்கொள்ளாது.

06-speech-6

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்பு மிக்கது. உடனே நான் மத்தியக் குழுவை நேரில் சந்தித்து விவாதித்தாக வேண்டும் என்று புறப்படுவார் லெனின். அவருடைய பாதுகாப்புக்கு பொறுப்பான தோழர் அதனை ஆட்சேபிப்பார். அதனை லெனின் நிராகரித்து வெளிக்கிளம்புவார். காரணம் புரட்சி எழுச்சியை உடனே தொடங்கவில்லை என்றால், இந்த வரலாற்றுத் தருணத்தை தவறவிட்டால், இன்னும் சில பத்தாண்டுகளுக்கு புரட்சி தள்ளி போய் விடும். அந்த இழப்பை ஒப்பிடும் போது என்னுடைய உயிர் பெரிது அல்ல. பாதுகாப்பு பணயம் வைக்கத் தக்கதே என்று அறிவு பூர்வமாக யோசித்து எடுக்கின்ற முடிவு அது. சாகச நடவடிக்கை அல்ல.

உலகிலேயே போற்றத்தக்க ஒரு முன்னுதாரணம் பகத்சிங். தூக்கு மேடையேறியதுதான் பகத்சிங்கின் சிறப்பு என்று பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம், அந்த முடிவின் பின்புலத்தில் அவருடைய குழுவில் நடைபெற்ற விவாதங்கள் ரொம்ப முக்கியமானவை. அவருடைய குழுவினர் மத்தியிலேயே அரசியல் ரீதியில் முன்னேறியவரும், அமைப்புத் துறையில் ஆற்றல் மிக்கவரும், தொலைநோக்கோடு சிந்திக்கக்கூடியவரும் சிறந்த கிளர்ச்சியாளனும் பகத்சிங் தான்.

மற்ற தோழர்கள் சொல்கிறார்கள், “நாடாளுமன்றத்தில் குண்டு வீசும் நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட வேண்டாம் நாங்கள் போகிறோம், நீங்கள் போகக்கூடாது, நீங்கள் சாகும் நிலைமை ஏற்படக் கூடாது. நீங்க கட்சிக்கு தேவை. அந்த வேலையை நாங்கள் செய்கிறோம்” என்று வாதாடுகிறார்கள்.

பகத்சிங் சொல்கிறார், “இது ஒரு அரசியல் நடவடிக்கை. நாம் யாரையும் கொல்லப் போவதில்லை. இது வெறும் வெடிச் சத்தத்தையும் புகையையும் உருவாக்கப் போகின்ற ஒரு குண்டு. இதில் கைதாகி நீதிமன்றத்தை, அந்த மேடையை நம்முடைய அரசியல் கிளர்ச்சிக்கு, புரட்சி பிரச்சாரத்திற்கு, தேச விடுதலைக்கு பயன்படுத்த வேண்டும். நீங்கள் சொல்வது போல அதற்கான ஆற்றல்கள் வாய்க்கப் பெற்றவனாக நான் தான் இருக்கிறேன், அதனால் நான் இதை செய்வதன் மூலம் தான் இந்த நோக்கம் நிறைவேறும். இது மரணதண்டனைக்கு வழிவகுக்கும் என்பது எனக்குத் தெரியும், எனினும் அது செய்யப்பட வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன். நான் இறப்பதன் மூலம் தான், இந்த அரசியல் கிளர்ச்சி பிரச்சாரத்தின் மூலம் தான், நம்முடைய புரட்சிகர அரசியல் என்பது இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் செல்லும்” என்று விளக்குகிறார்.

ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன்

இதைவிட ஒரு அற்புதமான முறையில், தன்னை புறநிலையாக்கி பார்க்கின்ற, தான் உயிர் கொடுக்க வேண்டும் என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கிக்கூறி நிலைநாட்டுகின்ற ஒரு அதிசயத்தை எந்த இலக்கியத்திலும் பார்க்க முடியாது. இங்கே மரணம் என்பது ஒரு வாழ்க்கையாக இருக்கிறது. உயிர்த்துடிப்புள்ள நடவடிக்கையாக இருக்கிறது. பகத்சிங் சாவதற்கு முடிவெடுத்து விட்டார் என்று அதை நாம் இதைச் சொல்ல முடியுமா?

அது ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கை. தூக்கில் தொங்குவது என்று முடிவு எடுத்துவிட்டாரே என்று எண்ணி நாம் வருந்தலாம், ஆனால் பகத்சிங்கைப் பொருத்தவரை, அங்கே மரணம் என்பது மேடைபேச்சைப் போன்றது. ஒரு கிளர்ச்சி நடவடிக்கை போன்றது. இந்த நடவடிக்கைக்கு தானே பொருத்தமானவர் என்று அவர் கருதுகிறார். மரணத்தைப் பற்றிய புரட்சியாளர்களின் பார்வை, நாம் கொள்ளவேண்டிய பார்வை இது,

நீங்கள் நினைத்துப்பாருங்கள். இந்த மாதிரியான சூழல்களில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களோ, அவர் கூட இருந்த தோழர்களோ எவ்வளவு விவாதித்திருப்பார்கள். சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட எவ்வளவு விவாதங்கள் நடந்திருக்கும். இந்த முடிவு சரியென்றும் தவறென்றும் பல கருத்துப் போராட்டங்கள் நடைபெற்று இருக்கும். மற்ற தோழர்கள் பகத் சிங்கோடு உடன்படாமல் அவரை இழப்பது குறித்து துயருற்று இருக்கலாம். இந்த துயரங்கள் எல்லாம் இணைந்ததும் கலந்ததும்தான் ஒரு புரட்சிகர வாழ்க்கை.

அர்ப்பணிப்புணர்வுடன் இயங்குகின்ற எல்லாத் தோழர்களுடைய குடும்பங்களும் துண்பத்தை எதிர்கொண்டு தான் ஆகனும். பின்னால் நினைவு கூறும் போதோ அல்லது பொதுவாகப் போற்றி பேசும் போதோ அது ஒரு சாதனை போலத் தெரியலாம். ஆனால் அனுபவிக்கின்ற தருணங்களில் அது மிகவும் துயரமானது.

மார்க்ஸ் தன் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். “தானும் தன் குழந்தைகளும் செத்துவிட்டால் நல்லது என்று என் மனைவி தினமும் சொல்கிறாள், உண்மையில் நான் அவளை குறை சொல்ல முடியாது” என்று எழுதுகிறார். அவருடைய ரெண்டு குழந்தைகளை பட்டினிக்கும், நோய்க்கும் பறிகொடுக்கிறார் மார்க்ஸ். கடன்காரர்களுக்கு அஞ்சி ஒளிகிறார். அவருடைய மார்பிலும், முதுகிலும் ஏறி விளையாடிய குழந்தைகள், அந்தக் குழந்தைகளை சாகக் கொடுக்கிறார். இப்ப நாம் பார்க்கின்ற மாதிரி கட்சி, ஒரு அமைப்பு, பெருந்திரளான தோழர்கள், நம்பிக்கை இதெல்லாம் இருந்த காலம் அல்ல அது.

நாம் இன்றைக்கு பின்பற்றுகின்ற இந்த கோட்பாட்டை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதை அவரே சரி பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் தன்னுடைய குழந்தைகளை அவர் பறி கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்போது வரக்கூடிய தடுமாற்றத்தை யோசித்துப் பாருங்கள்.

குழந்தைகள் பட்டினியால் சாவது ஒரு நிஜம், நோய்க்கு மருத்துவம் இல்லாமல் அவர்கள் துடிப்பது ஒரு நிஜம். அவர் எழுதிக்கொண்டிருப்பது ஒரு கனவு, கம்யூனிசம் என்ற ஒரு பெருங்கனவு. இது அறிவியலா, இது நிரூபிக்கப்படுமா, தொழிலாளி வர்க்கம் இதை நிறைவேற்றுமா என்பதை எல்லாம் களத்திலே சோதித்து பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த சோதனையிலும் அவர் இருக்கிறார்.

06-speech-8-leninமனித குலத்தின் விடுதலைக்கான ஒரு கோட்பாட்டை உருவாக்குவதில், மனித குலத்தின் மீது எந்தளவு பற்று இருந்தால், அறிவியலின் மீது எந்த அளவு நம்பிக்கை இருந்தால், தான் கொண்ட கொள்கையில் எவ்வளவு பற்றுறுதி இருந்தால் தன் பிள்ளைகளை சாகக் கொடுத்து, அந்தத் துன்பத்தை அனுபவித்த வண்ணம் ஆய்வில் ஈடுபட முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.

மூட்டை தூக்கலாம், உடல் உழைப்பு செய்யலாம் ஆனால் சிந்திக்க வேண்டும், சிந்தித்து சமூகத்தை ஆராய்ந்து எழுத வேண்டும். சுற்றிலும் கதறல், பட்டினி, இது அவருடைய வீட்டின் சூழல். இதைப் பற்றி வேறொரு இடத்தில் மார்க்ஸ் எழுதுகிறார். “மெதுவாக எரிகின்ற நெருப்பில் வாட்டப்படுதல், அதில் தலையும் இதயமும் காயமடைகின்றன. மேலும் பொன்னான நேரமும் வீணாகிறது. முடிவடைய வேண்டும்”

– இது தான் அவர் எழுதியிருப்பது. எது முடிவடைய வேண்டும். அனுபவித்து வந்த துன்பமா, வாழ்க்கையா ? பெரும் துயரில் தோய்ந்த வரிகள் இவை. மெதுவாக எரியும் நெருப்பில் இதயம் வாட்டப்படுதல் என்றால் குழந்தைகள், மனைவி அவர்களுடைய துன்பம் ஏற்படுத்துகின்ற துயர், வலி. தலை வாட்டப்படுதல் என்று எழுதுகிறார். அவருடைய சிந்தனையை அது பாதிக்கிறது. அவரால் முடியவில்லை.

முடிவடைய வேண்டும் என்கிறார். இந்த கொடுந்துயரத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் தோழர்களே, அந்த துயரத்தை நாம் அனுபவித்திருக்க வேண்டும், இல்லாதவரை இதை புரிந்துகொள்ளவே முடியாது. இந்த துயரத்தை யாரெல்லாம் அனுபவிக்கவில்லையோ, இந்த போராட்டத்தில் யாரெல்லாம் ஈடுபடவில்லையோ அவர்கள் யாரும் இந்த தியாகத்தின் மகத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது. இந்த துயரத்தின் வலியை புரிந்து கொள்ள முடியாது.

ஆகவே, “தோழர் போராடினார், உறுதியாக இருந்தார், மகிழ்ச்சியாக இருந்தார்” என்பதெல்லாம் பொதுவாக நமக்கு தெரிகின்ற சொற்கள். அதற்குப் பின்னால் ஒரு மனிதன் தன்னுடைய பலவீனங்களுக்கு எதிராக, தன்னுடைய குறைகளுக்கு எதிராக நடத்திய ஒரு போராட்டம் இருக்கிறது. அது அளித்த துயரம் இருக்கிறது. தோழர்களுடைய மேன்மைகள் எனப்படுபவையெல்லாம் தமது பலவீனங்களுக்கு எதிராக, தவறுகளுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்தின் ஊடாகத் தான் சாதிக்கப்படுகின்றன.

06-speech-9-berlinபகத்சிங். தூக்குதண்டனை விதிக்கப்பட்ட கைதியாக சிறையில் இருக்கும்போது எழுதுகிறார். “ஒருவேளை எண்பது வயது வரை நான் உயிர் வாழ்ந்து செயல்பட்டிருந்தால் என்னுடைய பலவீனங்களை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு இந்த உலகத்திற்கு கிட்டியிருக்கும். ஆனால் இருபத்தியோரு வயதிலேயே நான் தூக்குமேடை ஏறுவதால் பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதனாக என்னை பலரும் கருதிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்று எழுதுகிறார். எவ்வளவு நேர்மையான ஒரு சுயபரிசீலனை என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஆய்ந்தவிந்து அடங்கிய சான்றோர் என்றெல்லாம் சொல்றோமே அவர்களுக்குக் கூட இருபத்தியோரு வயது இளைஞனுடைய இந்த சான்றாண்மை வருமா?

“நான், எனது பங்களிப்பு அதை எல்லோரும் அங்கீகரிப்பார்களா, கூட்டம் போடுவார்களா, போஸ்டர் ஒட்டுவார்களா” என்று சிந்திக்கின்ற அற்பத்தனத்தால் நிறைந்திருப்பவர்கள் தங்களை அறிஞர்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். பல நேரங்களில் இந்த தனிநபர் வாதமும், அற்பத்தனமும்தான் அறிவாளிகளுடைய அங்கலட்சணம் என்று கூட பல பேர் நினைத்துக் கொள்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, அறிவு ஜீவியாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் பலருக்கு, அறிவு வருவதற்கு முன்னால் இந்த அற்பத்தனம் கைவந்துவிடுகிறது.

கம்யூனிஸ்டுகள் எல்லாம் தனித்தன்மை இல்லாத மந்தைகள். போஸ்டர் ஒட்றவனுக்கும், கோஷம் போடுபவனுக்கும் என்ன தனித்தன்மை ? ஆயிரம் பேரில் அவனும் ஒருத்தன். ஆனால் ஒரு இலக்கியவாதி, ஒரு பேச்சாளன் அப்படி இல்லையே என்று கருதிக்கொள்கிறார்கள்.

06-speech-10நினைவு கூறத்தக்க சிறந்த தோழர்களை அசாதாரணமானவர்களாக நாம் சித்தரிப்பதும் கருதிக்கொள்வதும் தவறு. ஏசு நம் பாவங்களுக்காக சிலுவை சுமந்தார், அவர் மாதிரி நம்மால் முடியுமா என்று தப்பித்துக் கொள்வதற்காக நாம் நினைவு கூரவில்லை. அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம், எவ்வளவு முன்னேறுகிறோம் என்பதற்குத்தான் இந்த நினைவு கூர்தல்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடத் திவ்வுலகு” என்ற திருக்குறள் உங்களுக்கு தெரிந்திருக்கும். நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பது இந்த உலகின் பெருமை என்று சொல்கிறார் வள்ளுவர். அது மட்டுமல்ல நேற்று இருந்த மனிதன் இன்று இல்லை. அவனை விட இன்று இருக்கும் மனிதன் மேம்பட்டவனாக ஆகிறான், வளர்கிறான்.

நேற்று இருந்த கருத்து, நேற்று இருந்த புரிதல் இன்று மேம்படுகிறது. சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் மருத்துவ அறிவியலோ. வானவியலோ, வேதியியலோ எந்த அறிவியல் துறையை எடுத்துக்கொண்டாலும் அது இந்த உலகத்தைப் பற்றி பெற்றிருந்த புரிதல் இந்த நூற்றாண்டில் பெருமளவுக்கு மேம்பட்டிருக்கிறது. அது மொத்த அறிவியலின் முன்னேற்றமாகிறது,

06-speech-11-revolutionமனித விழுமியங்களில் கூட, அரசியலில் கூட இந்த முன்னேற்றத்தை நாம் வரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது, முன்னேற்றத்தை. இதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சோசலிசம் என்பது மனிதகுலம் கண்டடைந்த ஒரு மேன்மையான சமூக அமைப்பு. அதனை எட்டுவதற்காக மனிதகுலம் போராடித்தான் தீரவேண்டும். ஒரு தோழரின் மரணமாகட்டும், சோசலிசத்தின் பின்னடைவாகட்டும், ஒரு வகையில் அனைத்துமே முன்னேறிச் செல்வதற்கான படிக்கட்டுதான்.

சுந்தரராமசாமி கவிதையை படித்த பிறகு வேறொரு சந்தர்ப்பதிலே ஐன்ஸ்டினுடைய ஒரு கூற்றைப் படிக்க நேர்ந்தது. அவர் மரணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். “நம்முடைய இளம் தலைமுறைக்குள்ளும் மக்களுக்குள்ளும் நாம் வாழ முடியும் என்றால் நம்முடைய மரணம் என்பது ஒரு முடிவு அல்ல. ஏனென்றால் அவர்கள் தான் நாம்”. இதைவிட அவர் சொல்லியிருக்கும் அடுத்த வரி ரொம்ப முக்கியமானது. “நமது உடல்கள் எனப்படுபவை வாழ்க்கை எனும் மரத்திலிருந்து வாடி வீழ்ந்த இலைகள் மட்டுமே”.

உயிர் (Life) என்பது, வாழ்வு என்பது ஒரு மிகப்பெரிய மரம். நான் அந்த மரத்தினுடைய பிரிக்கவொண்ணாத ஒரு இலை. அது ஒரு குறிப்பிட்ட கட்டத்திலே பழுத்து உதிர்ந்து விடுகிறது. இந்த முழுமையில் இதனை அவர் பார்க்கச் சொல்லுகிறார். பழுத்து உதிர்ந்த அந்த இலையின் தனிப்பட்ட அனுபவங்களை அந்த மரம் பெற்றுக்கொள்கிறது. அப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்திலே அவர் அந்த விளக்கத்தை சொல்லுகிறார்.

அதாவது ஒரு மனிதன் தன்னை இந்த சமுதாயம் என்ற மரத்திலிருந்து உயிராற்றலையும், அறிவையும் பருகுகின்ற ஒரு இலையாக தன்னைக் கருதிக் கொள்ள வேண்டும் ஒரு மனிதன். அப்படி கருதிக்கொண்டால் நம்முடைய வாழ்க்கை என்பதும், நம்முடைய மரணம் என்பதும் மீண்டும் இந்த சமூகத்திற்குப் பயன்படுவதாக அமையும்.

சமூகம் என்பது பகத்சிங்கை போன்று, மார்க்சை போன்று, தோழர்களைப் போன்று பல பேரால் பட்டை தீட்டப்படுகிறது. எல்லா தலைசிறந்த குணங்களையும் ஒரே மனிதன் பெற்றுவிடுவதில்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பியல்பு. அதை நாம் பரிசீலனையோடு கற்றுக்கொள்வதுதான் ஒரு நினைவு நாள் கூட்டத்தினுடைய பொருளாக இருக்க முடியும்.

06-speech-12ஒரு தனிப்பட்ட தோழருக்கு தனிப்பட்ட நடைபெறுகின்ற நினைவேந்தல் கூட்டத்துக்கு மட்டுமல்ல, எல்லா நினைவு நாட்களுக்கும் இது பொருந்தும். மே நாள் நடத்தினோம். மேதின தியாகிகள் சிகாகோ சதுக்கத்தில் சுடப்பட்டு இறக்கும் போது எண்ணியிருப்பார்களா, இப்படி சென்னையில 2013-ல் நம்முடைய பெயரால், ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கோரி ஒரு போராட்டம் நடக்கும் என்று. ஆனால் அந்த மேதின தியாகிகளுடைய கோரிக்கையின் சர்வதேசத் தன்மை காரணமாக, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு அதை பிரயோகிக்கின்றோம்

நினைவுகளை பகிர்ந்து கொள்ளுதல் என்கிற அர்த்தத்தில் நினைவு கூர்தல் என்பது வெகுவிரைவில் முடிந்துவிடுகிறது. வாழ்ந்து முடிந்த வாழ்க்கையின் சாரம் என்ன, அதன் சிறப்பியல்புகள் என்ன, சரி தவறுகள் என்ன என்பதை நாம் நினைவு கூற வேண்டியிருக்கிறது.

முன்னர் ஒரு முறை ஒரு வடமாநிலத்தில் ஒரு மாநாட்டுக்கு சென்றிருந்த போது, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. கொல்லப்பட்ட ஒவ்வொரு தோழருடைய பெயராக குறிப்பிட்டு வீரவணக்கம் செலுத்துகிறார்கள். “ஒரு வேளை நாமும் இது போல சாக நேர்ந்தால், ஒன்றிரண்டு வருஷத்துக்கு நம்ம பேரச்சொல்லி முழக்கம் போடுவாங்க, அப்புறம் மொத்தமா தியாகிகளுக்கு வீரவணக்கம்னு போட்டு விடுவார்கள்” என்றார் அருகில் நின்ற ஒரு தோழர். நீங்க எதிர்பார்ப்பது போலவே அவர் இப்போது அமைப்பில் இல்லை. இப்படி சிந்திப்பவர் இருக்கவும் இயலாது.

என்ன விதமான அங்கீகாரத்தை எதிர்பார்த்து நாம் பணியாற்றுகிறோம். அமைப்பிலும், புரட்சியிலும், சமூகத்திலும் அங்கீகரிக்கப்படாத உழைப்பு, அங்கீகரிக்கப்படாத தியாகம் என்பதுதான் அதிகம். எத்தனை ஆயிரம் தோழர்கள் மடிந்திருக்கிறார்கள். மாவோயிஸ்ட் அமைப்பாக இருக்கட்டும், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்க இயக்கங்களாக இருக்கட்டும் எத்தனை ஆயிரம் தோழர்கள் மடிந்திருக்கிறார்கள், யாருடைய முகம் தெரியும் நமக்கு? யாருடைய நினைவு தெரியும் நமக்கு? அவர்கள் எல்லோரும் அங்கீகாரம் இல்லாமல் உழைப்பவர்கள்தான்.

கூட்டுத்துவத்தில் நிறைவு கொள்வதுதான் தொழிலாளி வர்க்கத்தின் சிறப்பியல்பு. ஒரு போராட்டத்தை நடத்தி முடிப்பதில், அதற்கு துண்டறிக்கை எழுதியவர் தொடங்கி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர், சுவரொட்டி ஒட்டியவர், பேருந்தில் பிரச்சாரம் செய்தவர் என எல்லா தோழர்களுக்கும் அவரவர்க்குரிய பங்கு இருக்கிறது. ஆற்றலில் வேறுபாடு இருக்கலாம் உழைப்பின் அளவில் வேறுபாடு இருக்கலாம். கூட்டுத்துவ உழைப்பு தான் இதை சாதிக்கிறது.

தொழிலாளிகள் வேலை செய்யக்கூடிய இடங்களையே நீங்கள் பாருங்கள், யார் ஒருவரும் தன்னுடைய சாதனை என்று தனியாக கூறிக் கொள்ள அவர்களுக்குத் தோன்றுவது இல்லை. இதை ஒரு போர்க்களத்தில் நீங்கள் பார்க்கலாம். அல்லது சோசலிச நிர்மாணம் குறித்த பதிவுகளில் பார்க்கலாம்.

அமைப்பு என்ற இந்த கூட்டுத்துவத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும், ஒவ்வொரு தோழருக்கும் உள்ள சிறப்பியல்பை, பங்களிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும். அந்த சிறப்பியல்பை நாம் ஒவ்வொருவரும் நம்முடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இந்த நினைவு கூறலின் பொருள் என்று கருதுகிறேன்.

வாழ்ந்து வாடி உதிர்ந்த இலைகளின் மரபணுக்கள் முளைத்து வருகின்ற புதிய தளிர்களில் இருக்கின்றன. தோழர் சீனிவாசனோ, தோழர் ரங்கனாதனோ (திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் செயல்பட்டு மறைந்த முதிய தோழர்) புரட்சிக்காக, அமைப்புக்காக, மக்களுக்காக வாழ்ந்து, போராடி, உழைத்து மறைந்த தோழர்கள் தங்களுடைய தடத்தை தங்களுடைய செயல்பாடுகளில், தாங்கள் பழகிய தோழர்களில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்களின் பதிவுகள் நம்மீதும் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றன. அவற்றை கவனமாக போற்றி பாதுகாத்து தன்வயப்படுத்திக் கொள்வோம். வேறு எந்த வகையிலும் இந்த நினைவு கூர்தலை நாம் பொருள் உள்ளதாக ஆக்க இயலாது.

– மருதையன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________

திவ்யா – இளவரசனைப் பிரித்த பாமக சாதி வெறியர்கள் !

240

‘தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு வன்னியர் பெண்களை திட்டம் போட்டே மயக்கி விடுகிறார்கள். வன்னியர்களின் சொத்துக்களை கைப்பற்ற இப்படி சதி செய்கிறார்கள். திருமணம் செய்து சில மாதங்களில் பெண்ணை கொடுமைப்படுத்தி துரத்தி விடுகிறார்கள். பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அப்படி ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நாடகக் காதல்களை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்.’

என்று தமிழ் நாடு முழுவதும் ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களை கூட்டி இயக்கம் நடத்தினார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். நாடகக் காதல் மூலம் பெண்களையும், சமூகத்தையும் சீரழிக்கும் இளைஞர்களை தடுப்பதற்காக வன்னிய சங்கத்தின் மூலம் மாமல்லபுரத்தில் சித்திரை நிலவு கூட்டம் நடத்தினார்.

தற்போது இளவரசன், திவ்யா ‘பிரிவை’ வைத்து ராமதாஸ் தலைமையிலான சாதி வெறியர்கள் கும்மாளம் போடுகிறார்கள்.

தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாயில் உள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்ற தாழ்த்தப்பட சாதி இளைஞரும், செல்லன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதி பெண்ணும் காதலித்தனர். திவ்யாவின் அப்பா நாகராஜனும், இளவரசனின் அப்பா இளங்கோவும் நண்பர்கள் என்ற முறையில் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நர்சிங் படித்துக் கொண்டிருந்த திவ்யா, இளவரசனின் குடும்பப் பின்னணியை நன்கு தெரிந்தே அவர் மீது காதல் கொண்டிருக்கிறார்.

இளவரசன், திவ்யா
இளவரசன், திவ்யா (படம் : நன்றி விகடன்)

திவ்யாவின் வீட்டுக்குத் தெரியாமல் அவரை ஏமாற்றி இளவரசன் அழைத்துக் கொண்டு ஓடி விடவில்லை. காதல் பற்றி தெரிந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் மகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

“இந்த வயசுல காதல் வர்றது சகஜம் தான். ஆனா இந்த ஊருக்கு அது ஒத்து வராதது . நான் ஏத்துக்கிட்டாலும் இந்த சமுதாயம் ஏத்துக்காது. சென்னை மாதிரி வெளியூரைச் சேர்ந்த தலித் பையனா இருந்தாக்கூட எனக்கு பிரச்னை இல்லை. நானே கல்யாணம் பண்ணி வைப்பேன். ஆனா நம்ம பக்கத்து ஊர் தலித் பையனை நீ கல்யாணம் பண்ணினேனா எனக்கு ஊர்ல மரியாதை இருக்காது. அதனால இந்த காதல் வேணாம்” என்று அறிவு கூறியிருக்கிறார்.

திவ்யாவின் தந்தை நாகராஜனுக்கு பெரும்பான்மை வன்னியர் உழைக்கும் மக்களைப் போலவே தனது மகளின் காதலை அங்கீகரிப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், ஊரில் நிலவிய ஆதிக்க சாதி சமூகச் சூழல்தான் அவரை தயங்க வைத்திருக்கிறது. ஆனால், திவ்யா தனது காதலை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. நாகராஜூக்கு காதலை பிரிக்க விருப்பம் இல்லை என்றாலும், வன்னியர் சாதி வெறியை தூண்டி விட்டு அரசியல் செய்பவர்களுக்கு பயந்து திவ்யாவுக்கு வேறு திருமணம் செய்து கொடுக்க அவசர ஏற்பாடு செய்திருக்கிறார். திவ்யா வேறு வழியில்லாமல் இளவரசனுக்கு போன் செய்து தன்னை அழைத்துச் சென்று விடும்படி அழுதிருக்கிறார். அதைத் தொடர்ந்து இளவரசனும், திவ்யாவும் திருப்பதிக்குப் போய் திருமணம் செய்து கொண்டனர்.

இது வரை, பாமக சாதி வெறியர்கள் சொல்வது போல இளவரசன் சதித் திட்டம் தீட்டும் தந்திரசாலியாகவோ, திவ்யா உலகம் தெரியாமல் ஏமாந்து விட்டதாகவோ எதுவும் இல்லை.

தான் திருமணம் செய்து வைக்க முடியா விட்டாலும் தன் மகள் அவளுக்கு விருப்பமான வாழ்வைத் தேடிக் கொண்டதில் நாகராஜூக்கு மறுப்பு எதுவும் இருந்திருக்கவில்லை. திவ்யாவின் அம்மா திவ்யாவுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். ஆனால், ஊரில் உள்ள சாதி வெறி அரசியல்வாதிகளால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. சம்பந்தமில்லாத ஆட்கள் எல்லாம் வந்து நாகராஜ் வீட்டு முன்னாடி நின்னு அசிங்கமாக திட்டி விட்டுப் போவார்களாம்.

தாக்கப்பட்ட வீடுகள்
தாக்கப்பட்ட வீடுகள் (படம் : நன்றி தி ஹிந்து)

இந்த கட்டத்தில் நாகராஜ் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவரது உடலை திவ்யாவின் அம்மா, நாகராஜின் மனைவி தேன்மொழியிடமிருந்து பறித்துக் கொண்டு போய் அதை வைத்து நத்தம் காலனியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வீடுகளை அடித்து உடைத்து, தீ வைத்துக் கொளுத்தினர் சாதி வெறி பிடித்த பாமக கட்சியினர். திவ்யா-இளவரசன் தம்பதியினரின் வாழ்க்கை, நாகராஜனின் உயிர், அவரது குடும்பத்தின் அமைதி அனைத்தையும் குலைத்தாவது தமது அரசியலை வளர்த்துக் கொள்வதில் குறியாக இருந்திருக்கின்றனர் சாதி வெறியர்கள்.

அடுத்தவர்களின் சொத்துக்களை அழிப்பதும், வாழ்க்கையை குலைப்பதும் வன்னிய சாதி வெறி பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியினர்தான் என்பதையும் அவர்கள் நிரூபித்தார்கள்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஆதிக்க சாதி சங்கத் தலைவர்களை சந்தித்து, தமிழகம் தழுவிய ஆதிக்க சாதி கூட்டணியை உருவாக்க முயற்சித்து வந்தார் ராமதாஸ். தமிழக அரசு அதை வேடிக்கை பார்த்து வந்தது. கடலூர், இராமநாதபுரம் உள்ளிட்ட சில ஆட்சியர்கள் மூலம் தடுப்பாணை பிறப்பித்து ராமதாசை எதிர்ப்பது போல தமிழக அரசு பாவ்லா காட்டி வந்தது. அதையும் நீதிமன்றங்கள் மூலம் உடைத்து வெள்ளை வேட்டி உடுத்திய ரவுடியாக உலா வந்தார் ராமதாஸ்.

ராமதாசும் அவரது கட்சியும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்யும் அந்த கட்சியின் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் அனைவரையும் கைது செய்ய மறுத்த தமிழ்நாடு அரசின் கையாலாகத்தனம் அவர்களது கிரிமினல் நடவடிக்கைகளை மேலும் மேலும் செய்ய சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுத்தது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினரை மிரட்டுவது, அடிப்பது, கொலை செய்வது என்று பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்தன.

இந்தச் சூழலில், திவ்யாவுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்த, ஓரிரு முறை திவ்யா-இளவரசன் வீட்டிற்கு போயிருக்கிற திவ்யாவின் தாயார் தேன்மொழியின் பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தது. கடந்த மார்ச் 27-ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே என் பாஷா, பி தேவதாஸ் ஆகியோரிடம் திவ்யா, “நான் விரும்பித்தான் இளவரசனுடன் சென்றேன். என்னை யாரும் துன்புறுத்தவில்லை” என்று கூறினார். அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி திவ்யா இளவரசனுடன் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்தக் கட்டத்திலும், திவ்யா-இளவரசன் தம்பதியினரை பிரிக்க முயற்சி செய்தது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சாதி வெறியர்கள்தான். இளவரசனும் திவ்யாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

கடந்த 4-ம் தேதி திவ்யாவின் பெரியம்மா திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உங்க அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம். உன் நெனைப்பாகத்தான் புலம்பிக்கிட்டு இருக்கா. நீ வந்து பார்த்துட்டுப் போ” என்று கூறியுள்ளார். தந்தையின் அகால மரணத்தாலும், தாய், தம்பி ஆகியோரை பிரிந்திருந்ததாலும் பாதிக்கப்பட்டிருந்த திவ்யா தன் தாயை பார்க்க போயிருக்கிறார். திரும்பி வரவில்லை.

திவ்யா
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெளியில் வழக்கறிஞர்கள் சூழ திவ்யா (படம் : நன்றி தி ஹிந்து)

திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற இளவரசனிடம் திவ்யாவின் தாயார் தேன்மொழி, “எங்களைத் தேடி எங்க பொண்ணு வந்துட்டா. இனி நீ அவள தொந்தரவு பண்ணாத.. சுமுகமா பேசித் தீர்த்துக்கலாம். உனக்கு என்ன வேணுமோ நாங்க செஞ்சு தர்றோம்” என்று கூறியிருக்கிறார்.

காதலர்களை பிரிப்பது வன்னிய சாதி வெறியர்களின் சதித்திட்டம்தான் என்பது தெளிவாகிறது. அப்படியாவது சாதிப் ‘பெருமையை’ மீட்பதற்கு திட்டம் போடும் காட்டுமிராண்டிகள்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் சாதி வெறியர்கள்.

இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் இளவரசனும் அவரது பெற்றோரும் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார், பெண் மாயம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பிறகு 6-ம் தேதி தேன்மொழி தாக்கல் செய்திருந்த இன்னொரு ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யா தேன்மொழியுடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

“நான் செய்த தவறால் என் தந்தையை இழந்து விட்டேன். இனிமேலும் எதையும் இழக்கத் தயாரில்லை. தற்போது கொஞ்சம் காலம் தாயுடன் கழிக்கவே விரும்புகிறேன்” என்று நீதிபதிகளிடம் கூறியிருக்கிறார் திவ்யா. திவ்யாவுடன் பேசுவதற்கு இளவரசன் முயற்சித்த போது அதை பாமக வக்கீல்கள் தடுத்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து இளவரசன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, “இளவரசனுடன் சிறிது நேரம் பேசுவதற்கு திவ்யாவை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டதை நீதிபதிகள் தாமாகவே மறுத்திருக்கின்றனர். “திவ்யாவை அழைத்துப் பேசினோம். யாருடன் வசித்தார்? எங்கிருந்து யார் அழைத்து வந்தார்? என்பதையெல்லாம் கேட்டோம். திவ்யா தனது தாயாருடன் செல்வதற்குத்தான் விரும்புகிறார். தாயாருடன் செல்லப்போகிறேன் என்றும், மனக்குழப்பமாக இருக்கிறது” என்றும் தெரிவித்ததாக கூறினர்.

திவ்யா கடத்தப்பட்டிருக்கிறார் என்று பதிவு செய்யப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டும் என்ற வாதத்தையும் “திவ்யாவிடம் அதுபற்றியும் விசாரித்தோம். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தானாகவே தாயாரிடம் சென்றதாகவும் தெரிவித்தார்.” என்று கூறி நீதிபதிகள் நிராகரித்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றம் பின்வருமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது:

“இந்த வழக்கு விசாரணைக்காக திவ்யா தனது தாயாருடன் (மனுதாரர்) ஆஜரானார். இளவரசனும் ஆஜராகி இருந்தார். திவ்யாவிடம் பேசியபோது, சமீபத்தில் நடந்த சம்பவங்களால் தனது மனம் மிகவும் குழம்பிப்போய் உள்ளது என்று பதில் அளித்தார். எனவே, தகுந்த முடிவு எடுப்பதற்கு முன்பு தனது தாயாருடன் தங்க விரும்புவதாக திவ்யா கூறினார். மேலும், இளவரசனுடன் இப்போது பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தாயாருக்கு உடல்நலன் சரியில்லை என்று தகவல் கிடைத்ததால் அவரை பார்ப்பதற்காக தனது சொந்த விருப்பத்தின்பேரில் சென்றதாகவும் திவ்யா கூறி உள்ளார்.

இளவரசன்
உயர்நீதிமன்றத்துக்கு வெளியே இளவரசன் (படம் : நன்றி தி ஹிந்து)

திவ்யா இப்படி வாக்குமூலம் கொடுத்துள்ளதை அடுத்து, அவர் தனது தாயாருடன் தங்கிக்கொள்ளலாம். திவ்யாவும், இளவரசனும் தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் சம்பந்தப்பட்ட போலீசிடம் கேட்கலாம். அவர்கள் பாதுகாப்பு கேட்டால், அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். விசாரணை ஜூலை 1–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது”.

“திவ்யா விரும்பினார், அதனால் அவரது தாயுடன் தங்கிக் கொள்ளலாம்” என்பதுடன் நீதிமன்றம் தனது பொறுப்பை முடித்துக் கொண்டிருக்கிறது. திவ்யா-இளவரசன் காதலைத் தொடர்ந்து நடந்த அரசியல்/சமூக நிகழ்வுகளையோ, அவர்கள் பிரிவதில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இருக்கும் அரசியல் ஆதாயங்களைப் பற்றியோ அவர்கள் கணக்கில் எடுக்க வில்லை. ஏனென்றால் சட்டம் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

காதலை பிரிப்பது, அடுத்தவரின் சொத்துக்களை அழிப்பது, தலித் மக்கள் மீது துவேசத்தை கிளப்புவது என்று அனைத்து சமூக விரோதச் செயல்களுக்கும் முதல் பொறுப்பாளிகள் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி அரசியல் செய்ய முயற்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான்.

திவ்யா-இளவரசனுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அடிப்படை ஜனநாயக உரிமையை அவர்கள் சுதந்திரமாக அனுமதிப்பதற்கான சூழலோ, சட்டங்களோ நம் நாட்டில் இல்லை என்பதுதான் நிதர்சனம். சட்டங்களும் அரசமைப்பும் சாதி வெறிக் கட்சிகள் தமது நோக்கங்களுக்காக தனி நபர்களின், குடும்பங்களின், ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்க்கையையே அழித்து வெறியாட்டம் போடுவதை தடுத்து நிறுத்தப் போவதில்லை என்பதோடு அவற்றை பாதுகாத்து நிற்கின்றன என்பதை திவ்யாவுக்கு நிகழ்ந்திருக்கும் இந்த வன்கொடுமை நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

பாமக சாதிவெறியர்களுக்கு பயந்தும் பணிந்தும் திவ்யா தனது காதலை துறக்கச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். அந்த நிர்ப்பந்தத்தை முறியடித்து அவர் இளவரசனோடு சேர்ந்து வாழ்வதே உண்மையில் வன்னிய, தலித் மக்களுக்கு செய்யப்படும் உதவியாகும். திவ்யா அப்படி தைரியம் கொள்ளும் சூழ்நிலையை குறிப்பாக பாமக வன்னிய சாதிவெறியர்களை தனிமைப்படுத்தும் நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்.

– செழியன்

விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம் !

3

ரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்கும் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ விவசாயிகளை வாழ்நாள் முழுவதும் தனக்கு அடிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறது என்பதையும், அதற்கு அரசின் சட்டங்களும், நீதி மன்றங்களும் உறுதுணையாக நிற்கின்றன என்பதையும் விளக்கும் ஒரு வழக்கு அமெரிக்காவில் நடந்துள்ளது.

வெர்னான் போமேன் என்ற அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிக்கும், மான்சாண்டோவிற்கும் இடையிலான வழக்கில் அமெரிக்க உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த வழக்கு நவீனயுகத்தின் டேவிட் – கோலியாத் வழக்கு என்று வெர்னான் போமேனின் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டது.

பயிர்கள் களைக் கொல்லிகளால் பாதிப்படைவதிலிருந்து தடுப்பதற்காக பாக்டீரியாவின் (Agrobacterium tumefaciens) மரபணுவை உட்செலுத்தி மரபணு மாற்றம் செய்யப்பட்ட “ரவுண்ட்அப் ரெடி (Roundup Ready)” விதைகளை மான்சாண்டோ தயாரித்துள்ளது. மான்சாண்டோ இவ்வகை பயிர் விதைகளுக்கு ‘வடிவுரிமை’ வாங்கிவைத்துள்ளது. மான்சாண்டோவின் விதையை வாங்கும் விவசாயி ஆர்ஆர்-விதையை பயன்படுத்தி உண்டாகும் பயிரிலிருந்து அடுத்த முறை சாகுபடி செய்வதற்காக விதையை சேமித்து வைக்கக்கூடாது, ஒவ்வொரு முறையும் மான்சாண்டோவிடமே விதை வாங்க வேண்டும், என்ற சரத்து அடங்கிய காப்புரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

போமேன்
இண்டியானா விவசாயி வெர்னான் போமேன்

போமேன் 1999-ம் ஆண்டு முதல் மான்சாண்டோவின் தயாரிப்பான ‘ரவுண்ட்அப் ரெடி’ சோயா பீன்ஸ்-ஐ பயிரிட்டு வருகிறார். போமேன் தனது வயலில் வசந்த கால சாகுபடிக்கு மான்சாண்டோவிடமிருந்து வாங்கிய ’ஆர்ஆர் சோயாவை’ பயிரிட்டு, அறுவடைக்கு பின்னர் நிலத்தில் கோதுமை பயிரிட்டுள்ளார். அதன் பின் வருடத்தின் கடைசியில் குளிர்கால சாகுபடிக்கும் சோயாவையே பயிரிட்டுள்ளார். இந்த குளிர்கால சாகுபடியானது மகசூல் குறைவாக அளிக்கக் கூடியதாதலால் அவர் விலை குறைவான விதையை நாடியிருக்கிறார். உள்ளூரில் அவரிடமும் மற்ற விவசாயிகளிடமும் தானியங்களை கொள்முதல் செய்யும் தானிய கிடங்கியில் சோயா விதை வாங்கி அதை பயிரிட்டுள்ளார்.

இதை அறிந்த மான்சாண்டோ, போமேன் தனது வடிவுரிமை ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதாவது தன் விதையை ஒரு முறை பயன்படுத்தி விட்டால் அந்த விவசாயி வாழ்நாள் முழுவதும் தன்னிடமிருந்துதான் விதைகளை வாங்க வேண்டும் என்பது மான்சாண்டோவின் நியாயம். இவ்வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் போமேன், மான்சாண்டோ நிறுவனத்திற்கு 84,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ 45 லட்சம்) அபராதம் கட்டவேண்டும் என்று தீர்ப்பளித்தது. போமென் இத்தீர்ப்பை எதிர்த்து மாநில நீதிமன்றத்தில் (Federal court) மேல்முறையீடு செய்ததில் அங்கும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கை போமேன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை போய் ஒரு எளிய விவசாயி வாதிட முடிவது அமெரிக்க ஜனநாயகத்தின் மாண்பை காட்டுகிறது என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், அந்த ஜனநாயகத்தின் சட்டங்கள் யாருக்குத் துணை நிற்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

போமேன் தான் காப்புரிமை ஒப்பந்தத்தை மீறவில்லை என்றும் அறுவடை செய்த தானியத்திலிருந்து விதைக்காக சேமித்து வைக்கவில்லை என்றும், உள்ளூர் தானிய கிடங்கியில் விலை கொடுத்து வாங்கிய பொருளை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த தனக்கு முழு உரிமை இருப்பதாக வாதிட்டார். நமது விதைகளை பாதுகாப்போம் (SOS), உணவு பாதுகாப்பு மையம் (CFS)  போன்ற சமூக நல அமைப்புகளும் ஆர்வலர்களும் போமேனுக்கு ஆதரவளித்தனர். மான்சாண்டாவுக்கோ மைக்ரோ சாப்ட் உள்ளிட்ட பன்னாட்டு கம்பெனிகளும், தொழில் கூட்டமைப்புகளும் ஆதரவளித்தன.

எலினா ககன்
உச்சநீதிமன்ற நீதிபதி எலினா ககன்

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமோ போமேன் உள்ளூர் தானிய கிடங்கியிலிருந்து வாங்கிய சோயா விதைகளில் ஆர்ஆர் மரபணுக்கள் இருக்கலாம் என்று தெரிந்தே தான் வாங்கியிருக்கிறார் என்றும், இதன் மூலம் மான்சாண்டோவிற்கு தெரிந்தே நஷ்டம் ஏற்படுத்தியதுடன், அதன் வடிவுரிமையை மீறியிருக்கிறார் என்றும் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றம்  கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்பை உறுதி செய்து அபராதம் கட்டவேண்டும் என போமேனுக்கு உத்தரவிட்டதன் மூலம் அமெரிக்க சொர்க்கத்தில் ஜனநாயகம் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான ஜனநாயகமே என்று உறுதிசெய்துள்ளது.

இதைப் போல் அமெரிக்காவின் 27 மாநிலங்களில் 410 விவசாயிகள் மற்றும் 56 சிறு வணிக நிறுவனங்களுக்கு எதிராக 142-க்கும் மேற்பட்ட காப்புரிமை மீறல் வழக்குகளை மான்சாண்டோ தொடுத்துள்ளதாக உணவு பாதுகாப்பு மையம் தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. இதில் மான்சாண்டோவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் மாசடைந்த (contaminated) அண்டை வயல் விவசாயிகளும் அடக்கம்.

அதாவது நீங்கள் உங்கள் வயலில் சாதாரண விதைகளை பயிரிட்டுள்ளீர்கள், உங்கள் பக்கத்து வயலின் விவசாயி மான்சாண்டோவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். காற்று, மற்றும் அயல் மகரந்த சேர்க்கையின் காரணமாக உங்கள் பயிர் மான்சாண்டோவின் மரபணுக்களால் மாசடைந்தால் நீங்கள் மான்சாண்டோவின் மீது வழக்கு தொடர முடியாது, மாறாக நீங்கள் காப்புரிமையை மீறியதாக மான்சாண்டோ வழக்கு தொடரும். ஏனெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையாக நடக்கும் மறுஉற்பத்தி முறைக்கு உங்களிடம் வடிவுரிமை இல்லை. ஆனால், அதன் விளைவுகளை கட்டுப்படுத்தும் உரிமையை மான்சாண்டோவிடம் சட்டங்கள் வழங்கியிருக்கின்றன.

உற்பத்தியும் மறு உற்பத்தியும் இயற்கையிலேயே நிகழ்பவை. அவை மனித சமூக வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கின்றன. மனித சமூகம் நாகரீகமடைந்ததில் பயிர்களை மறு உற்பத்தி செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டதும், அதை சார்ந்து விவசாயம் வளர்ந்ததும் முக்கிய பங்கு வகித்தன. பாரம்பரியமாக கோடிக்கணக்கான விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வரும் பயிர்களை மறு உற்பத்தி செய்யும் முறைக்கு இதுநாள் வரை யாரும் உரிமை கோரவுமில்லை, கோரவும் முடியாது.

அமெரிக்க உச்சநீதி மன்றம்
அமெரிக்க உச்சநீதி மன்றத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களிடம் பேசும் வெர்னான் போமேன்.

மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வடிவுரிமை என்ற பெயரால், உற்பத்திச் சங்கிலியை கட்டுப்படுத்தி விவசாயிகளின் பாரம்பரிய மறு உற்பத்தி உரிமையை மறுப்பதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றன. மனித குலம் அனைத்திற்கும் சொந்தமான அறிவை, வளத்தை கட்டுப்படுத்தி சட்ட நுணுக்கங்களால் பித்தலாட்டம் செய்கின்றன.

“பன்னாட்டு நிறுவனங்கள் எந்த விதையையும் செயற்கையாக உருவாக்கவில்லை. நிலவி வரும் வடிவுரிமை முறைமைகள் பொதுக் களத்தில் உள்ள, வாழ்வுக்கு இன்றியமையாத வளங்களை தனியார் நிறுவனங்கள் உரிமை கொண்டாட வகை செய்வதன் மூலம் மனித குலத்திற்கு கேடு விளைவிக்கின்றன” என்று நமது விதைகளை பாதுகாப்போம் அமைப்பைச் சேர்ந்த டெப்பி பார்க்கர் கூறியிருக்கிறார்.

கூடவே உற்பத்தியை தமது கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மான்சாண்டோ செய்யும் தகிடுதத்தங்கள் மக்கள் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பவை. கடந்த ஆண்டு செய்யப்பட்ட சோதனையில் ஆர்ஆர் வகை சோளம் (NK603) கொடுக்கப்பட்ட எலிகளுக்கு புற்று நோய் கட்டிகள் வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க வாந்தியை அப்படியே நகலெடுக்கும் இந்தியாவிலும் இதே மான்சாண்டோ தான் பி.டி. பருத்தியை கொண்டுவந்து லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாக இருந்து வருவதுடன், விவசாயச் சந்தையில் பி.டி. கத்திரிக்காயை அறிமுகப்படுத்த காத்திருக்கிறது. பி.டி.கத்திரிக்காயை அறிமுகப்படுத்த முனைப்புடன் செயல்பட்ட மன்மோகன் – ஜெய்ராம் ரமேஷ் கும்பல் நாடு முழுவதும் நடந்த போராட்டங்களால் அதை சிறிது காலத்திற்கு தள்ளி வைத்திருப்பதுடன், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் ஓராண்டு சிறை, லட்சக்கணக்கில் அபராதம் என சட்டமியற்றி மான்சாண்டோவுக்கு அடியாள் வேலையை செய்துள்ளது.

மான்சாண்டோவுக்கு எதிராக கடந்த மே 25 அன்று உலகம் முழுவதும் 36 நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்ற பேரணி, போராட்டங்கள் நடைபெற்றன. மக்கள் அணிதிரண்டு போராட்டங்களின் மூலம் இந்த கோலியாத்துகளின் அதிகார அமைப்புகளையும் நீதிமன்றங்களையும் நிர்ப்பந்திக்க வேண்டும். அப்படியும் நீதி கிடைக்கவில்லையெனில் கோலியாத்துகளின் தலைகளை –அரசு அமைப்புகளை- வெட்டி எறிவதைத் தவிர வேறு வழியில்லை.

மேலும் படிக்க

கிரிக்கெட்: ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க முடியாது !

1

ஐபிஎல் : முதலாளிகளின் மங்காத்தா – 4

ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வயது 85. முதல் 60 ஆண்டுகளாக பார்க்காத ஊழல்களும், சூதாட்டங்களும், சதித் திட்டங்களும், மர்மங்களும் கடந்த 25 ஆண்டுகளில் வாரியத்துக்குள் எப்படி புகுந்தன?

கடந்த 30 ஆண்டுகளில் மூன்று பெரும் தலைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஜக்மோகன் டால்மியா அணி, மகாராஷ்டிரா சங்கத் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் அணி, இப்போது ஆதிக்கம் செலுத்தும் சென்னை கிரிக்கெட் சங்கத் தலைவரும் இந்திய சிமென்ட்ஸ் முதலாளியுமான என் சீனிவாசன் ஆகியோர் அவர்கள்.

இந்திய கிரிக்கெட்டை பணம் கொட்டும் மரமாக மாற்றி, இந்திய கிரிக்கெட் வாரியத்தை உலகத்திலேயே பணக்கார விளையாட்டு அமைப்பாக மாற்றிய பெருமை இந்த முதலாளிகளைச் சேரும் என்று விளையாட்டு மற்றும் வர்த்தக அறிஞர்கள் பாராட்டுகிறார்கள்.

உண்மைதான்.

இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ 3,308 கோடி. 2011-12ம் ஆண்டில் ரூ 1,168 கோடி வருமானத்தில் நிகர லாபம் ரூ 385 கோடி. கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்சின் பங்குச் சந்தை மதிப்பு ரூ 2,200 கோடிதான் என்பதையும் இந்தியா சிமென்ட்சின் ஆண்டு லாபம் ரூ 100 கோடி மட்டுமே என்பதையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

ஐபிஎல் வந்ததால்தான் ஊழல் வந்தது, அதற்கு முன்பு ஒரு நாள் ஆட்டம் இருந்த போது சூதாட்டமும், ஏமாற்றலும் இவ்வளவு பெரிதாக இல்லை, டெஸ்ட் போட்டிகளின் காலத்திலோ எல்லாமே வெள்ளையும் சொள்ளையும்தான் என்று மலரும் நினைவுகளில் புலம்பும் அம்பிகளும், முன்னாள் ஆட்டக்காரர்களும் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது, ஆனால் அது முழு உண்மை அல்ல.

pepsi-mainஐபிஎல் போட்டிகளுக்கு பெயரிடும் உரிமையை பெப்ஸி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ரூ 395 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. கோக்கோ கோலா நிறுவனத்துடன் அது பகிர்ந்து கொள்ளும் ரூ 6,000 கோடி மதிப்பிலான இந்திய குளிர்பானங்கள் சந்தை அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு டி-20 கிரிக்கெட் உருவாவதற்கு முன்பு இந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த இந்திய சந்தை மதிப்பு ரூ 0.

2008 முதல் 2012-வரை ஐபிஎல் போட்டிகளுக்கு பெயர் சூட்டும் உரிமையை ரூ 250 கோடி கட்டி வாங்கியிருந்த டிஎல்எஃப், டில்லியில் மட்டும் செயல்பட்டு வந்து 1990-களுக்குப் பிறகான புதிய இந்தியாவில் வேகமாக வளர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம். அதன் சொத்துக்களின் இப்போதைய மொத்த மதிப்பு சுமார் ரூ 30,000 கோடி.

இந்திய கிரிக்கெட் அணியுடன் தன் பெயரை இணைத்துக் கொண்டிருக்கும் சஹாரா இந்தியா புதிய தாராளமய கொள்கைகளின் கீழ் நிதி நிறுவனம் நடத்தி மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் நிறுவனம். மக்களிடம் திரட்டிய ரூ 17,700 கோடி பணத்தை திரும்பிக் கொடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2011-ம் ஆண்டு சஹாராவின் மொத்த வருமானம் ரூ 73,000 கோடியாம்.

விளம்பரதாரர்களில் முக்கியமான ஜூஜூ புகழ் வோடஃபோன் 2007-ம் ஆண்டு சுமார் ரூ 45,000 கோடி விலை கொடுத்து ஹட்சிசன் நிறுவனத்திடமிருந்து 1990-களில் உருவாக்கப்பட்ட செல்போன் சேவை நிறுவனத்தை வாங்கியது. இந்திய சந்தையில் அதன் 14 கோடி வாடிக்கையாளர்கள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஆண்டு வருமானம் ஈட்டுகிறது.

மற்ற புரவலர்களான யெஸ் பேங்க், ரெயின் டிராப்ஸ் பாஸ்மதி, நோய்டா பன்னாட்டு பல்கலைக் கழகம், அமிட்டி பல்கலைக் கழகம், லிவ்-இன்-ஜீன்ஸ், ஷெல்ட்ராக்ஸ், சன்ஸ்கார் ஸ்கூல், சாம்சங், பானசோனிக், கார்பன் மொபைல்ஸ், டாடா போட்டான், காட்பரீஸ், மெக்டொனால்ட்ஸ், ஸ்டார் இந்தியா, பெர்கர் பெயின்ட்ஸ், ஏர்டெல், ரோஸ் பள்ளத்தாக்கு குழுமம் போன்றவர்களின் சேவைகளும் 1990-களுக்குப் பிறகு இந்தியாவில் உதித்தவைதான்.

இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வுச் சந்தையை இலக்காக செயல்படும் இந்த நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு மேடையாக விளங்கிய ஒரு நாள் கிரிக்கெட் வளர்ந்து, டி-20 கிரிக்கெட்டாக மலர்ந்திருக்கிறது. ஐபிஎல் 2013 போட்டிகளுக்கான ஒளிபரப்பின் போது 10 செகண்டுகளுக்கான விளம்பரக் கட்டணம் ரூ 4 – 4.5 லட்சமாக உயர்ந்திருந்தது. பிக் பாஸ், கோடீஸ்வரன் போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விளம்பர கட்டணம் 10 செகண்டுகளுக்கு ரூ 1-1.25 லட்சம் வரைதான் என்பதிலிருந்து ஐபிஎல் போட்டிகளின் போது விளம்பரப்படுத்துவதன் மதிப்பை புரிந்து கொள்ளலாம்.

India-Cements-Gurunath-Meiyappanஆட்டக்காரர்களின் உடையின் முன் மார்பு, வலது மேல் மார்பு, பயன்படுத்தும் கையின் புஜம், பயன்படுத்தாத கையின் புஜம், சட்டையின் பின்பக்கம், தொப்பியில், தலைகவசத்தின் முன், பின் பக்கம், கால் பகுதிகள் என்று தனித்தனியாக கட்டணம் நிர்ணயித்து விளம்பரம் செய்ய இடம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர் ஐபிஎல் முதலாளிகள். விளையாட்டு வீரர்கள் நடமாடும் விளம்பரத் தட்டிகளாக ஓடி விளையாடுகின்றனர்.

தோனி வாலா சிமென்ட் என்று வட இந்தியாவின் சிறு நகரங்களில் கூட இந்தியா சிமென்ட்ஸ் தனது சந்தையை விரிவுபடுத்த முடிகிறது. இதே போன்று இந்தியாவின் எரிசக்தி துறையில் கொள்ளை அடிக்கும் ரிலையன்ஸ், சாராய வியாபாரி விஜய் மல்லையா போன்றவர்கள் கிரிக்கெட் என்ற புனிதத்துடன் தம்மை இணைத்துக் கொண்டு தமது தொழிலை மக்களிடம் விற்க ஐபிஎல் உதவுகிறது.

இந்த புனித குளியலுக்கும், அதன் மூலம் சந்தை விரிவாக்கங்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் கிரிக்கெட்டுக்கு முதலாளிகள் தாம் சந்தையில் மக்களிடமிருந்து அடிக்கும் லாப வேட்டையில் ஒரு பகுதியை விளம்பர கட்டணங்களாக கிள்ளித் தருகிறார்கள். அதை தொலைக்காட்சி நிறுவனங்கள், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஐபிஎல் அணி முதலாளிகள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இன்னாள், முன்னாள் வீரர்களுக்கு சில சில்லறை காசுகளை வீசி எறிந்து அவர்களது விசுவாசத்தை உறுதி கொள்கிறார்கள்.

எனவே ஐபிஎல் பண வெள்ளத்தையும் ஊழலையும் உருவாக்கியது என்பதை விட பண வெள்ளமும் ஊழலும் ஐபிஎல்லை உருவாக்கின என்பதே சரி. அதை விட குறைந்த மட்டத்திலான ஊழல் ஒரு நாள் கிரிக்கெட்டையும், வேறு தளத்திலான சுரண்டல் டெஸ்ட் கிரிக்கெட்டையும் இந்தியாவிற்கு கொண்டு வந்தன என்பதுதான் வரலாறு.

இப்படி முதலாளிகள் இடையே பெருகி ஓடும் பண வெள்ளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சில துளிகள் மட்டுமே தெறிக்கின்றன. தாமும் சில குவளைகள் மொண்டு குடிப்பதற்கு கிரிக்கெட் வீரர்களுக்கு வழி காட்டுபவர்கள் சூதாட்டத் தரகர்கள். திரைமறைவு உலக வர்த்தகத்தில் புழங்கும் பணப் பரிமாற்றங்களுக்கு அவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த சூதாட்ட விபரங்கள் அவ்வப்போது கசிந்து ஊழலாக வெளிவருகின்றன. மேலும் ஐபிஎல்லின் சட்டபூர்வ வருமான மதிப்பை விட ஐபிஎல்லின் திரை மறைவு சூதாட்ட வர்த்தகம் விஞ்சிவிடும் என்கிறார்கள். எனவே இந்த வருமானத்தை முதலாளிகள் இழக்க விரும்பமாட்டார்கள். அதற்காக அவர்களுக்குள் நடக்கும் போட்டியே இத்தகைய ஊழல் செய்திகளை கொஞ்சம் வெளியே கொண்டு வருகின்றன.

அத்தகைய ஊழல்கள் கிரிக்கெட்டின் பிராண்ட் மதிப்பை குறைத்து விடாமல் இருக்க சர்வதேச கிரிக்கெட் குழு ஊழல் தடுப்பு குழு, வீரர்களுக்கு எச்சரிக்கை என்று ரசிகர்களின் மற்றும் விளம்பரதார நிறுவனங்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறது.

ஆனால் ஐபிஎல் 2013 தொடர்பான சூதாட்டங்களில் ஈடுபட்ட வீரர்கள், அணிகள் பற்றி விசாரணையின் முடிவில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத பல் இல்லாத அமைப்பாகவே இருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அது வழங்கக் கூடிய அதிகபட்ச தண்டனை, வாரியம் நடத்தும் போட்டிகளில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது வாழ்நாள் முழுவதற்கும் ஒதுக்கி வைக்கப்படுதல், வாரியத்தின் பதவிகள் கிடைக்காமல் செய்வது இவ்வளவுதான்.

காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சந்திலா ஆகிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் மீதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் மீதும், சூதாடுதல், ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், குதிரை பந்தயம் முதலான திறமையின் அடிப்படையில் நடக்கும் விளையாட்டுக்களில் பந்தயம் வைப்பது சட்ட பூர்வமானது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறதாம். சரியாக விளையாடாமல், நிறைய ரன் கொடுத்து அல்லது சீக்கிரம் அவுட் ஆகி, காசு கொடுத்து விளையாடச் சொன்ன அணி முதலாளியை ஏமாற்றினார் என்று குற்றம் சாட்டினால் ஒருவர் வேண்டுமென்றே அவுட் ஆனாரா, அல்லது ஆட்டத்தின் போக்கில் அவுட் ஆனாரா என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது என்ற நிலையில் அதையும் ஒரு போதும் நிரூபிக்க முடியாது.

அதனால், இப்போது ஸ்ரீசாந்த் மீது தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மகாராஷ்டிரா நிறுவனமயமாக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தின் (MCOCA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாவூத் இப்ராஹிமே இந்தியாவில் இல்லாத நிலையில், இவ்வளவு நாட்களும் அவரை கைது செய்ய முடியாமல் திக்குமுக்காடும் போது இந்த குற்றச்சாட்டையும் நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுப்பது நடக்காத ஒன்று.

தற்போதைய சட்டங்கள் சூதாட்டத்தை தடுக்க்காது என்பதற்காக புதிய சட்டம் கொண்டு வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். அந்த சட்டம் வந்த பிறகு அது எப்படி ஊழலை தடுப்பதற்கு பல் இல்லாததாக இருக்கும் என்பது தெரிய வரும்.

Indian-Supreme-Courtஇப்போதைக்கு ஐபிஎல் வீரர்களும் சரி, அவர்கள் மூலம் சூதாடிய சூதாட்டத் தரகர்களும் சரி, அணி முதலாளிகளும் சரி கிரிக்கெட் வாரிய சட்டப்படியோ, இந்திய குற்றவியல் சட்டப்படியோ தண்டிக்கப்பட முடியாது என்பதுதான் உண்மை. ஐபிஎல் பற்றிய பரபரப்பை இன்னும் சில நாட்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதை மட்டுமே இந்த கைது, வழக்கு, ஊடக பரபரப்புகள் சாதிக்கும்.

2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி வயல் ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுக்கள் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என்று நூற்றுக்கணக்கான ஊழல்களில் ஊடக வெளிச்சமும், பரபரப்புகளும் என்ன சாதித்தனவோ அதையே கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய பரபரப்புகளும் சாதிக்க முடியும்.

மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல் குறித்த மக்கள் பார்வையினை மறக்கச் செய்வதற்கு இந்த ஐபிஎல் ஊழல் காங்கிரசு அரசுக்கு கிடைத்திருக்கிறது. ஊடகங்களும் கிரிக்கெட்டின் பிரபலத்தை வைத்து கல்லா கட்ட நினைப்பதால் திடுக்கிடும் செய்திகளாக ஊழலை வெளியிடுகின்றன. உண்மையில் இதில் யார் தண்டிக்கப்படுவார் என்று கேட்டால் யாரிடமும் விடையில்லை.

2G வழக்கில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கியது குற்றம் இல்லை, அது அரசின் கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அப்படி ஒதுக்கீடு செய்வதன் மூலம் ஆ ராசா ஆதாயம் அடைந்தார் என்பதை நிரூபித்தால்தான் குற்றம் நிரூபணமாகும்.

தென்னை மரத்தில் தேங்காய் திருட தென்னை மரத்தில் ஏறியவன் பிடிபட்டவுடன், ‘அதான் தேங்காய் பறிக்காமலேயே இறங்கிட்டேனே’ என்று சொல்வது போல முறைகேடாக நிலக்கரி வயல் ஒதுக்கீடு பெற்ற எந்த நிறுவனமும் நிலக்கரியை தோண்ட ஆரம்பிக்கவில்லை என்பதால் திருட நினைத்தவர்களும், அவர்களுக்கு கதவை திறந்து விட்ட மன்மோகன் சிங்கும் சரி குற்றவாளிகள் இல்லை என்று ப சிதம்பரமே கூறி விட்டார்.

எனவே முதலாளிகளும், அரசியல்வாதிகளும் கூட்டாக சேர்ந்து நடத்தும் இந்த கொள்ளைகளை இன்றைய சட்டங்களோ அரசமைப்போ தண்டித்து விடப் போவதில்லை என்பது நிதர்சனம்.

மங்காத்தா விளையாட்டில், ‘ஏமாற்றுகிறார்கள்’ என்று பார்வையாளர்கள் கூப்பாடு போடுவதை ஆட்டக்காரர்கள் பொருட்படுத்தவா போகிறார்கள்! இல்லை பார்வையாளர்கள்தான் இந்த ஆட்டம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று தெரிந்தாலும் இரசிக்காமல் போய்விடுவார்களா? இதுதான் கிரிக்கெட் விளையாட்டில் கொள்ளையடிக்கும் ஊழல் முதலாளிகளின் பலம்.

ஒட்டு மொத்த அமைப்புமே ஐபிஎல் ஊழலை தோற்றுவிக்கச் செய்யும் சாத்தியங்களை கொண்டிருக்கும்போது அதே அமைப்பில் இருந்து கொண்டு ஊழலை ஒழிக்க முடியாது. கிரிக்கெட்டையும் காப்பாற்ற முடியாது.

– முற்றும்
____________________
– அப்துல்
____________________

விதை நெல் !

19

“வித்தவர லாபம்னு நெனைக்கிறவனும், வெதை நெல்ல வேகவச்சு தின்னவனும் வெளங்க மாட்டான்னு சொல்லுவாங்க. தலையே போனாலும் வெதை நெல்லுல மட்டும் கை வைக்கக் கூடாது அதுதான் நம்ம உசுரு. நம்ம பாட்டன், முப்பாட்டனெல்லாம் நம்மள மட்டும் விட்டுட்டு போகல. வழி வழியா நம்ம வெள்ளாம செய்ற நெல்லுலதான் வெதை நெல்லு வச்சுக்கனுங்கற பழக்கத்தையும் விட்டுட்டு போயிருக்காங்க.” அப்புடின்னு எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவாரு. வெதை நெல்லுக்கு அப்படி ஒரு தன்மானமும், பாரம்பரியமும் உண்டு.

கிராமத்துல ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டா அவளுக்கு பொட்டு வச்சு, பூ வச்சு, சடங்கு செஞ்சு, ஓல குடிசையில ஒக்கார வச்சு அவளுக்கு மொதல்ல தருவது கீரை விதை போட்ட பாலும், பழமும். அந்த வெதை மாதிரி இந்த பொண்ணும் பெத்துப் பெருவனும்னு சொல்லுவாங்க.

kalanjiyamவாழையடி வாழையா தன் குலம் தலைக்கணுங்கற சந்தோசத்துல, ஒரு பிள்ளைத்தாச்சியோட கருவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அத பாதுகாத்து கண்ணும் கருத்துமா பாத்துக்குறானோ, அந்த அளவு முக்கியத்துவம் இந்த வெதை நெல்லுக்கு கொடுப்பாங்க விவசாயி. வெதை நெல்ல உருவாக்க, அத பாதுகாக்க அவன் எப்படி எல்லாம் பாடுபட்டான்னு பாருங்க.

சித்திரையில நல்ல நாள் பாத்து நல்லேறு கட்டி, வயல்ல வேலைய தொடங்குவாங்க. வைகாசியில கோடை மழை ஒரு நாள் பெஞ்சா வயல நல்லா வரவு ஓட்டு ஓட்டிப் போடுவாங்க (சும்மா சாகுபடி இல்லாம உழுது போடறது) மண்னு காஞ்சு போய் அதுல உள்ள புல்லு கொஞ்சம் செத்து போகும்.

ஆவணி மாதம் நடவு வேலை ஆரம்பிக்கும். பயிர் வளர ஆரம்பிச்ச ரெண்டு மாசத்துக்கு பிறகு, எந்த வயல்ல பயிர் செழிப்பா வருதுன்னு பாத்து, வெதை நெல்லுக்காக அந்த பயிருக்கு மட்டும் செல்வாக்கு செலுத்தி கவனிப்பாங்க. அதுக்கு மட்டும் ஒரு மொறைக்கு நாலுமுறை களையெடுப்பாங்க. ரசாயன ஒரம் எதுவும் போட மாட்டாங்க. பயிரு வளர்ந்து அங்கொன்னும் இங்கொன்னுமா கதுரு வர ஆரம்பிக்கும்.

என்னதான் நம்ம பாத்து பாத்து களையெடுத்தாலும் மொதல்ல குதுரவாளி வந்து தலையெ நீட்டிட்டு நிக்கும். அதப் புடுங்கி போட்டா? வேற இனத்து கலப்பு நெல்லு வந்து நானும் வந்துருக்கேன்ல இப்ப என்னா பண்ணுவேன்னு கேக்கும். கலப்பு நெல்லு கலந்துராம ஒரே ரகமா பாத்துக்கணுங்க. பச்சப்புள்ளைய பாத்துக்கற கணக்கா கண்ணும் கருத்துமா பாத்துக்கணுங்க.

கார்த்திகை, தை மாதத்துல அறுவடை நாளும் வந்துரும். கதுரறுத்து அடிக்கும் போது, கருக்கா கலந்துரும்னு (பதரு நெல்) ரெண்டு கோட்டுக்கு (கையால கதிர் அடிக்கும் முறையை கோட்டு என்பார்கள்) மேல அடிக்க மாட்டாங்க. வேற ரக நெல்லு அடிக்கிற களத்துலயும் வெதை நெல்லு அடிக்க மாட்டாங்க. முதல் போக வெள்ளாமையில வெளஞ்ச நெல்லத்தான், வெதை நெல்லாப் பயன்படுத்துவாங்க.

கருக்கா இல்லாம தூத்தி, கல்லு மண்ணு இல்லாம, சுத்தம் செஞ்சு, ஒண்ணுக்கு நாலு தடவ காய வச்சு, பூச்சியடிக்காம வேப்பந்தளையெல்லாம் போட்டு, ஒரு தடவக்கி நாலுதடவ காய வச்சு, பானையிலயோ, குதிர்லயோ, பத்தாயத்துலயோ, அவரவர் தேவைக்கு ரெடி பண்ணி, அடுத்த போக வெள்ளாமைக்கு வெதை நெல்லு வச்சுருப்பாங்க.

paddyசிவராத்திரி அன்னைக்குதான் மொத மொதலா சேமிப்பு பாத்திரத்துல போட்டு வைப்பாங்க. சிவன் பாதுகாப்பார்ன்னு நம்பிக்கை. அப்புடி வச்சுருக்குற வெதை நெல்ல மாசத்துல ஒரு தடவ அம்மாவாசை அண்னைக்கு பாத்துதான் காய வப்பாங்க. அப்பதான் பூச்சி புடிக்காதுன்னு நம்புவாங்க. இப்படி பக்குவப்படுத்தி வச்சுருக்குற வெதை நெல்லதான், விதையா பயன்படுத்துவாங்க.

விதையா பயன்படுத்துறதுக்கு முன்னாடி சோதன செஞ்சு பாப்பாங்க. ஒரு கைப்பிடி வெதை நெல்ல அள்ளி ஊறவச்சு, ஒரு துணியில முடிச்சுவச்சு ரெண்டு நாள் களிச்சு தொறந்து பாத்தா மொளச்சுருக்கும். இது நல்ல வெதைதான் என்ற முடிவுக்கு வந்துருவாங்க.

இந்த வெதை நெல்லு உற்பத்தி மாதிரியேதான் மத்த எள்ளு, உளுந்து, கடல, பயிறு, கம்புன்னு எல்லா விதமான வெதைகளையும் தன் நெலத்துல வெளஞ்ச வெள்ளாமையில இருந்துதான் உற்பத்தி பண்ணினாங்க விவசாயிங்க. வெதை நெல்ல காசுக்கு வாங்கினா கௌரவ கொறச்சலா நெனப்பாங்க கிராமத்துல. வெதை நெல்லு இல்லாதவங்ககிட்ட சாப்பாட்டு நெல்ல வாங்கிட்டு, வெதை நெல்ல கொடுப்பாங்க.

இப்ப வெதை நெல்லு வச்சுக்குற பழக்கமே இல்லாம போச்சு. நாம செய்யற வெள்ளாமையிலேயே நமக்கான வெதைய எடுத்துக்குற எண்ணமே விவசாயிடம் இல்ல. எல்லா விதையையும் வெல கொடுத்துத்தான் வாங்கறாங்க.

கதிரருக்கும் எந்திரம் வந்த பிறகு கையினால அறுக்குற பழக்கம் கொறைய ஆரம்பிச்சிருச்சு. பணக்காரங்க அவங்க வயலுக்கு எந்திரம் கொண்டுவந்தா பக்கத்து வயக்காரனும் அறுவடை செய்யனும். கொஞ்ச நெலத்துக்கெல்லாம் எந்திரம் கொண்டு வர வரமாட்டாங்க. ஆள் பற்றாக்குறையின் காரணமாகவும் பாலும் பச்சையுமா அறுக்க வேண்டிய நெலம வந்துச்சு. முழுசா தேறி வெளையாத நெல்லு மொளைப்பு தெறனில்லாம போச்சு. வெதை நெல்லு வைக்கிற பழக்கம் கொஞ்ச கொஞ்சமா நம்ம விட்டு போச்சு.

விதை உற்பத்தி கையேடு
நிறுவனங்களுக்கு விதை உற்பத்தி கையேடு

இதை பயன்படுத்திக்கிட்டு வேளாண்மை துறை உதவியோடும், விவசாய பண்ணை மூலமாகவும் வெளிச் சந்தை வெதை நெல்லு உள்ள வர ஆரம்பித்தது. அரசே அதை சந்தைப்படுத்தி மொதலாளிகளுக்கு லாபத்தை ஈட்டித்தரும் எண்ணத்தோடு விளம்பரம் செய்தது. “எந்த நெல்லு மொளைக்கும் திறன் இருக்குங்கறதையும், எந்த ரக நெல்லை போட்டா நல்லா வெளச்சல் வருங்கறதையும் பரிசோதனை மூலமா கண்டுபிடிச்சு நாங்க சொல்றோம். உங்க வெதை நெல்ல எடுத்துக்கிட்டு எங்க ஆபீசுக்கு வாங்க” என்று வேளாண்மை துறையே ஊருக்கு ஊர் குறும்படம் போட்டு சொல்ல ஆரம்பிச்சாங்க.

ஆபீசரு சொன்னாதான் அது நல்ல நெல்லுங்கற எண்ணம் எல்லாரிடமும் பரவலா தோன்ற ஆரம்பித்தது. முதல் கட்டமா வெதை நெல்ல மானியமாக கொடுத்தாங்க. பிறகு மானியம் போயி அவங்க சொல்ற ஒரத்த வாங்கினா வெதை நெல்லு மானியம்னாங்க. இப்ப வெதையும், ஒரமும், அதிக தொகையானாலும, போட்டே ஆக வேண்டிய கட்டாயமாச்சு. ஊருக்குள்ள உள்ள பணக்கார விவசாயிங்க மானியத்துக்கு ஆசப்பட்டு ஆபீசு வெதை நெல்ல பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. ஊருல பாதிக்கு மேல பணக்காரங்க வயலா இருக்கும் போது. அவங்க ஆபீசரு சொல்ற நெல்ல நடும்போது நாம மட்டும் தனியா வேற நெல்ல நடமுடியாது.

பசுமைப் புரட்சிங்குற பேருல புது விதை, ஊரம், பூச்சி மருந்துன்னு விவசாயிக்கு செலவுதான் அதிகமாச்சு. இலாபமும் இல்லை. மண்ணும் மருந்த குடிச்சு குடிச்சு சக்தியை இழந்துகிட்டு வருது. விளையிற அரிசியும் மக்களோட உடல்நலத்தை பதம் பாக்காம விடுறதில்ல.

காலப் போக்குல வெதை நெல்லு வைக்கிற பழக்கமே இல்லாம போச்சு. வெதை நெல்ல வைக்கிறது பாரம்பர்யமா நெனச்சது போயி ஆபீசு நெல்லு வாங்கறது கௌரவமா மாறி போச்சு. விவசாயி வீட்டுல எங்கன தடிக்கி விழுந்தாலும் நெல்லா இருக்கும். இப்பல்லாம் வீட்ல ஒரு பிடி நெல்லுகூட வைக்கிறதுல்ல.

ஒரு விவசாயி வீட்டுல நெல்லுதான் எல்லாத்துக்குமான கஜானாவா இருக்கும். எப்பையும் நெல்லு வீட்டுல இருந்துகிட்டேதான் இருக்கும். கையில காசு இல்லாதப் போது தேவைக்கு ஏற்றவாறு கொஞ்ச நெல்ல கடைக்கு போடுவாங்க. இன்னைக்குக் கொழம்புக்கு காய் இல்லையா ஒரு மரக்கா நெல்ல போட்டுட்டு கொழம்பு காச்ச ஏதாவது வாங்கிட்டு வா அப்டின்னுவாங்க. பிச்ச எடுக்க வர்ரவங்க முதல் கொண்டு, துக்கம் சொல்லி வர்ரவங்க வரை எல்லாத்துக்கும் நெல்லுதான் கொடுப்பாங்க.

வாழையடி வாழையா தளச்சு நிக்கணுன்னு பாதுகாத்து வந்த வெதை நெல்லு இப்ப மண்ணோட சேந்து மலடா போச்சே!

– வேணி

துருக்கியை உலுக்கிய மக்கள் போராட்டம் !

2

“அரசு அனைத்து இடங்களிலும் வணிக வளாகங்களாக கட்ட முனைகிறது. நானும் என் குடும்பமும் சில்லறை வியாபாரம் செய்பவர்கள், நாங்கள் எப்படி வாழ்வது?” என கேட்கிறார் ஒருவர்.

“இந்த நாட்டில் ஏழைகள் ஏழையாகிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் பிரதமரோ பணக்காரர் ஆகிக் கொண்டே இருக்கிறார், போராட்டம் தான் ஒரே வழி” என்கிறார் ஒரு தொழிலாளி.

கடந்த வெள்ளிக்கிழமை துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள சென்டர் பார்க்கை வணிக வளாகமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சிலர் பூங்கா ஆக்கிரமிப்பு போராட்டத்தை துவங்கினார்கள். பின்னர் இது பூங்காவை மட்டுமல்ல நாட்டையே முதலாளிகளிடமிருந்து மீட்கும் போராட்டமாக வளர்ந்தது. இந்தப் போராட்டம் அமெரிக்காவில் நடந்த வால் வீதி ஆக்கிரமிப்பு போராட்டத்தை ஒத்திருந்தது. பூங்காவை ஆக்கிரமித்து அங்கே போராட்டக்காரர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள் முதலாளிகளை எதிர்த்ததாலேயே போராட்டம் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது. பிபிசி மாதிரியான ஊடகங்கள் இதை ஒரு சூழலியல் போராட்டமாக செய்திகள் வெளியிட்டன.

மக்கள் இஸ்தான்புல்லில் உள்ள டக்சிம் சதுக்கத்தில் குவிந்து அரசுக்கெதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினர். கூட்டத்தை கலைக்க அரசு போலீஸ் மூலம் பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகள், தண்ணீர் லாரிகளை கொண்டு போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

Turkey 2ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யும் நிலையில் இணையமும் மட்டுறுத்தப்படும் நிலையில் போலீஸின் கடும் வன்முறை மூலம் இந்த போராட்டம் ஒடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் போலீசின் தாக்குதல், அரசின் அடக்குமுறை இன்னும் நிறைய மக்களை வீதிக்கு அழைத்து வந்தது. தலைநகரில் உள்ள டக்சிம் சதுக்கம், துருக்கியில் ஜனநாயகத்தை விரும்பும் மக்களின் போராட்டக் களமாகியது. போராட்டக்காரர்கள் தங்களை தாக்க வரும் போலீஸ்காரர்களை திருப்பித் தாக்கி அவர்களின் கவசம் போன்றவற்றை எடுத்து வந்து விடுகிறார்கள்.

ஆம், போராட்டம் டக்சிம் சதுக்கத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு நாடு முழுவதும் பரவியது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மக்கள் போராட்டம் செய்தால் அவர்களை ஒடுக்க பல்வேறு ரசயான பொருட்களையும், போராட்டங்களை ஒடுக்கும் இதர கருவிகளையும் அமெரிக்கா தான் டன் கணக்கில் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவிடமிருந்து துருக்கி டன் கணக்கில் கண்ணீர் புகை குன்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் இதர கருவிகளையும் வாங்கியது அம்பலமாகியுள்ளது.

துருக்கியில் ஒடுக்கப்படும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் கலந்து கொண்டனர். குர்து தேசிய இனமக்கள், இடது சாரி எதிர்க் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், மாணவர்கள், சிறு வியாபாரிகள் பெரும் எண்ணிக்கையில் போரட்டங்களில் பங்கெடுக்க துவங்கியுள்ளனர். செவ்வாய்க் கிழமை முதல் துருக்கியின் மிகப் பெரிய தொழிலாளர்கள் யூனியனும் போராட்டத்தில் பங்கேற்கும் என அறிவித்துள்ளது.

“நான் முதல் நாள் வந்தேன், போலீஸார் தாக்கினார்கள், அதனால் போராட வேண்டும் என்ற என் எண்ணம் உறுதியானது” என்கிறார் டக்சிம் சதுக்கத்தில் உள்ள மாணவர் ஒருவர். போலீஸின் அடக்கு முறையை மக்கள் ஆண்கள், பெண்கள் என பாகுபாடு இல்லாமல் எதிர்த்து நிற்கின்றனர். போலீஸின் அடக்கு முறையையும் மீறி போராட்டக்காரர்கள் டக்சிம் சதுக்கத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

turkey-protestsடக்சிம் சதுக்கம் ஒரு கம்யூனை போல் காட்சியளிக்கிறது, ஒரு பக்கம் பொது வாசிப்பகம் ஏற்படுத்தப்பட்டு அங்கு புத்தகங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யும் நிலையில் போராட்ட விபரங்களை இணையத்தின் மூலம் பரப்புவதையும் கூட்டாக செய்கின்றனர். தாமாக முன் வந்து அனைவரிடமும் “உங்களுக்கு டீ வேண்டுமா” என்று கேட்டு ஒருவர் டீ கொடுக்கிறார். ராமுவா என்கிற ஆசிரியர் தம் மாணவர்களுடன் வந்து அங்கேயே பாடம் சொல்லிக் கொடுக்கிறார். ஸ்டார்பக்ஸ் காபி ஷாப் மக்களால் கதவடைக்கப்பட்டு இலவச உணவு பரிமாறப்படுகிறது.

ரோப்பாவில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் துருக்கி காயப்பட்டிருகிறது, ஐரோப்பா எங்கும் நிலவி வரும் மக்கள் நலத் திட்டங்களின் வெட்டு துருக்கியிலும் தொடர்கிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்க, துருக்கியிலும் மக்கள் நேரடியாக முதலாளிகளுக்கு எதிராக போராடுகின்றனர்.

துருக்கியில் ஆளும் ஏகே கட்சியின் தலைவரும், பிரதமருமான எர்டோகன் இந்தியாவின் நரேந்திர மோடி போன்று ஒரு வலதுசாரி அடிப்படைவாதி. மூன்றுமுறை தேர்தலில் வென்று பிரதமரானவர். பத்து ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருக்கும் அவருக்கு இது மூன்றாவது பதவிக் காலம். தேர்தல் எல்லாம் நடக்கும் ஜனநாயக நாடு தான் துருக்கி என தப்புக்கணக்கு போடக் கூடாது. ஜனநாயக முறை தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் முதலாளிகளின் நலன்களுக்காக செயல்படுவதை போலத் தான் துருக்கியிலும், பிரதமர் பன்னாட்டு முதலாளிகளுக்கும் அமெரிக்க நலன்களுக்காகவும்தான் செயல்படுகிறார்.

Turkey-Protestஅவர் பதவியேற்றதும் இசுலாமிய சட்டத்தை துருக்கியில் கொண்டுவருவார் என பலர் பயந்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக எர்டோகன் முதலாளிகளுக்கு நாட்டை திறந்துவிட்டார், ஐரோப்பிய யூனியனுடன் நட்பு பாராட்டி சிரியாவுக்கு அனுப்பப்படும் நேட்டோ படைகளில் துருக்கி ராணுவ வீரர்களை சேர்த்தார். துருக்கியில் ஒடுக்கப்படும் குர்து தேசிய இன மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்தார். கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், தனி நபர் சுதந்திரம் என சகலமும் கானல் நீராகியது. சுமார் 100 பத்திரிகையாளர்கள் கைது செய்யபட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். இணைய தளங்கள் மட்டுறுத்தப்பட்டன, தீவிர கண்காணிப்பின் கீழ் மக்கள் கொண்டு வரப்பட்டனர். போலீசுக்கு விண்ணளவு அதிகாரம் வழங்கபட்டது.

துருக்கியில் பல நகரங்களில் உள்ள பூங்காக்கள் தனியாருக்கு விற்கப்பட்டு அங்கெல்லாம் வணிக வளாகங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. துருக்கியின் அழுகிய உடலின் மீது வண்ண வாசனை திரவியங்களை தெளித்துக் கொண்டிருந்தார் எர்டோகன். தாங்க முடியாத பொருளாதார நெருக்கடியும் எரடோகனின் மக்கள் விரோத கொள்கைகளும் மக்களை போராட்டக் களத்திற்கு கொண்டு வந்தன.

போராட்டச் செய்திகளை பதிவு செய்யும் பன்னாட்டு ஊடகங்கள் முதலில் பூங்காவை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்படும் சுற்றுச்சூழல் போராட்டமாக சித்தரித்தன. பின்பு ஒரு பிரதமர் எர்டோகனை எதிர்த்த போராட்டமாக செய்திகள் வெளியிட்டன. மக்கள் முதலாளிகளையும், தனியார் நிறுவனங்களையும் எதிர்ப்பதை திட்டமிட்டே மறைக்கின்றன.

ஆப்பிரிக்காவிற்கு ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணத்தில் உள்ள பிரதமர் எர்டோகன் போரட்டக்காரர்களை கலவரக்காரர்கள், அடிப்படைவாதிகள், திருடர்கள், என்றும், போராட்டங்கள் எதிர்க்கட்சியினரின் சதி என்றும் பல்வேறு வார்த்தைகளில் திட்டுகிறார். துருக்கியின் இறையாண்மை காப்பாற்றப்படும் என்கிறார். சமூக வலைத்தளங்கள் ஒரு சாபம் என்றார். செவ்வாயன்று துணைப் பிரதமர், போராட்டக்காரர்களை தவறாக கையாண்டு விட்டதாகவும், அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் சொன்னார். ஆனால் போலீசின் கடும் தாக்குதல் தொடர்ந்தபடியே தான் உள்ளது.

turkey-protests-3அரசு குர்து தேசிய இனமக்களை போராட்டங்களிலிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்கிறது. ஒடுக்கப்பட்ட தேசிய இனமான குர்துக்கள் துருக்கியிலிருந்து தனி நாடு கோரி போராடுபவர்கள். நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருந்த குர்து இனக் கட்சிகளுடனான அமைதி பேச்சு வார்த்தையை அரசு உடனடியாக துவங்கியுள்ளது. இதனால் குர்து இன மக்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக அரசை ஆதரிக்க வேண்டுமா அல்லது இந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமா என குழப்பம் கொண்டுள்ளனர்.

மக்கள் எழுச்சியில் தன்னார்வ நிறுவனங்களும் புகுந்து விட்டன. உண்மையான மக்கள் எழுச்சியை மழுங்கடிக்கவே முதலாளிகள் பெற்று போட்ட கள்ளப் பிள்ளைகள் தான் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அனார்கிஸ்ட் குழுக்களும். அவற்றின் மூலம் ஏதாவது ஒரு வடிவில் தமது ஆட்சியை தொடர்வதை ஆளும் வர்க்கம் உறுதி செய்து கொள்கிறது.

எர்டோகன் எனும் பொம்மை மாறிவிடுவதால் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடப் போவதில்லை. நாட்டைச் சுரண்டும் பன்னாட்டு முதலாளிகளை விரட்ட வேண்டும் என்றால் அதை முதலாளிகளின் ஊழியர்களான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அனார்கிஸ்டுகளின் உதவியுடன் சாதிக்க முடியுமா?

போராட்டத்தை வழி நடத்தவும் எதிரியை வீழ்த்தவும், தெளிவான திட்டம் கொண்ட ஒரு கம்யுனிஸ்ட் கட்சியினால் தான் இது சாத்தியம். இல்லையென்றால் மக்களின் எழுச்சி அதிபர் மாற்றம் என்று புதிய ஏகாதிபத்திய கைக்கூலி அரசின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதாக, விழலுக்கு இறைத்த நீராக வீணாகிப் போகும். எகிப்து மக்கள் எழுச்சியின் இன்றைய நிலை, துனிசிய மக்கள் எழுச்சியின் இன்றைய நிலை, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரட்டங்களின் இன்றைய நிலை இவற்றுடன் ஒப்பிட்டு பார்த்து துருக்கி மக்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

குர்து இன மக்களின் வாழ்க்கைக்கும், உரிமைகளுக்கும் உழைக்கும் மக்களின் ஜனநாயக அரசுதான் தீர்வளிக்க முடியும். அந்த அடிப்படையில் குர்து இனமக்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும்.

முதலாளித்துவத்துக்கு எதிரான போர் பல தளங்களிலும், பல வடிவங்களிலும் வலுப்பெற்று வருகின்றது. போராட்டங்களை திசை திருப்பவும், மழுங்கடிக்கவும் ஆளும் வர்க்கங்கள் உறுதியான திட்டத்துடன் செயல்படுகின்றன. உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து, பெரு முதலாளிகளுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் சேவை செய்யும் இன்றைய பொருளாதார அமைப்பை தூக்கி எறிந்து பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகத்தை நிறுவுவதுதான் உலகம் எதிர் கொண்டுள்ள நெருக்கடிக்கான ஒரே தீர்வு.

– ஆதவன்

காலிக்குடங்களில் நிரம்பி வழிகின்றன பழங்கதைகள் !

1

08-lossகாலிக்குடங்களில்
நிரம்பி வழிகின்றன
பழங்கதைகள்…

சிறுமீன் உலவும்
ஆற்றின் கரையோரம்
செவுள்கள் உமிழும்
குமிழிகள் விலக்கி,
சில்லிடும் காற்றில்
மேல்நீர் துலக்கி
ஒரு கை அள்ளிப் பருகி,
குடத்தின் வாயில்
ஆற்றை அடக்கித் தூக்கிடும்
பெண் இழுத்திடும் மூச்சில்
நெத்திலி சிதறி ஓடும்.

கருவறையிலும்
தெரு வரையிலும்
நீர்க்குடம் சுமப்பது
நீங்காத பெண்கள்,
காலந்தோறும்
தண்ணீர்க்குடம் சுமந்தே
காய்த்தனர் இடுப்பெலும்பு.

நல்ல தண்ணீருக்காக
பெண்கள் பட்ட பாட்டை
நன்றியுடன் நினைப்பது போல்
தானூறும் நீர்நிலைகள்.
ஆறு கரையொதுக்கும்
நினைவலைகள்.

வண்ணார் அடித்துத் துவைக்கும்
ஆற்றுக்கல்லில் எழும் ஓசை
அக்கரையில் எதிரொலித்து
மேகம் வெளுக்கும்.
அழுக்குத் துணிகளின் அலறல்களில்
ஊரின் சாயம் போகும்.

குடிக்கும் நீரை
முத்தமிட்டுக் கொஞ்சுதல் போல்
பசுவின் வாய்
தண்ணீர் தழுவும்.

ஓடும் நீர் மடியுரச
பாலொடு சேர்த்து
பல்லுணர்ச்சி சுரக்கும்.
நீர்த் திவலைகள் மேல்
மென்கால் உரசி நின்று
நாரைகள் முகம் நனைக்கும்.

கரையோரம் காதலாய்க்
கவிழ்ந்த புன்னை
தன் நிழலாலும்
நீர் பருகும்.

அடிசுடும் நாளிலும்
கோடெனத் திரியும்
ஆற்றின் தெளிநீரில்
களைத்த சூரியன் இளைப்பாறும்.

முழுமுகம் பார்க்க
முயற்சித்து முயற்சித்து,
பொடிமணல் அகழ்ந்து
பெண்கள் தோண்டிய ஊற்றில்
நிலவு ஊறித் திளைக்கும்.

தண்ணீரைத் தாராளமாய்ப்
பங்கிட்டுக் கொண்ட
இயற்கையின் மெய்ப்பொருள் தொலைந்து
தலைமுறைத் தாகம் தீர்த்த
எங்கள் ஆறு
இப்போது வேலிக்கருவை முள்ளில்
செத்துக் கிடக்குது.

காரணமறியா அதன் தலை மேல்
நாடு வல்லரசாகும் திட்டத்தின் கீழ்
வனப்போடு போடப்பட்ட பாலத்தில்
அதோ… கேன்…. கேனாய்…
பெப்சி, அஃவாபினா வண்டி ஓடுது!

– துரை. சண்முகம்.
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________

அடிமைத்தனத்திலிருந்து ஐபிஎல் வரை பிசிசிஐ வரலாறு !

1

ஐபிஎல் : முதலாளிகளின் மங்காத்தா – 3

ந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டின் 300 ஆண்டு வரலாறு இந்தியாவின் ஆளும் வர்க்கங்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் ஆசியாவுடனான இங்கிலாந்தின் வர்த்தகத்திற்கு ஏகபோக உரிமையை பெற்று இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகர்கள் கிரிக்கெட்டையும் தம்முடன் கொண்டு வந்தனர். 1721-ம் ஆண்டு கட்ச் கடற்கரையில் (பரோடா சமஸ்தானம்) வந்து இறங்கிய ஆங்கிலேய மாலுமிகள் இந்திய மண்ணில் முதன் முதலாக கிரிக்கெட் விளையாடினர். அடுத்த 3 நூற்றாண்டுகள் இந்திய மக்களின் வாழ்வாதாரங்களை கொடூரமாக அழித்து தமது வர்த்தக சுரண்டலை நடத்துவதற்கு முன்பான போர் நடனமாக வேண்டுமானால் அதை வைத்துக் கொள்ளலாம்.

காலனிய சுரண்டல்
காலனிய சுரண்டலுடன் கொஞ்சம் கிரிக்கெட்டும்.

18-ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக விரிவாக்கமும், அது நடத்திய போர்களும் இந்தியா முழுவதும் நிலப்பரப்புகளை பொசுக்கி எரித்தன. இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்விக்கும் விளைநிலமாகவும், அவற்றின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தையாகவும் அடித்து, வளைத்து இந்திய மக்களை கடுமையாக சுரண்டிய ஆங்கில இராணுவ அதிகாரிகள் அணிக்கும், ஐரோப்பிய வர்த்தகர்கள் அணிக்கும் இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி 1751-ம் ஆண்டு நடந்தது. 1848-ல் காலனிய ஆட்சியாளர்களுடன் வர்த்தகம் செய்த பார்சி வணிகர்கள் பார்சி கிரிக்கெட் அணியை உருவாக்கினார்கள். (19-ம் நூற்றாண்டில் சீனாவுக்கு அபின் ஏற்றுமதி செய்து வந்த டாடா குடும்பத்தினர் பார்சி இனத்தவர்தான்).

பார்சி வர்த்தகர்களைத் தொடர்ந்து காலனிய ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாகி விட்டிருந்த இந்திய சமஸ்தானங்களின் மகாராஜாக்களும், ஆங்கிலக் கல்வி பயின்று ஆங்கிலேயருக்கு தொண்டூழியம் செய்த அதிகார வர்க்க இந்தியர்களும் தமது எஜமானர்களின் விளையாட்டத்தில் ஆர்வம் காட்டினர். அவர்களது சார்பில் 1907-ல் இந்துக்களின் அணியும், 1912-ல் முஸ்லீம்களின் அணியும் ஏற்படுத்தப்பட்டன. நவநகர் இளவரசர் ரஞ்சித் சிங், அவரது மருமகன் துலீப் சிங், பாட்டியாலா மகாராஜா, விழியநகரத்தின் மகாராஜகுமார், லிம்டியின் இளவரசர் கியான்சிங்ஜி, போர்பந்தர் மகாராஜா போன்றவர்களும், கர்னல் சி கே நாயுடு போன்ற இராணுவ அதிகாரிகளும் கிரிக்கெட் மூலம் தமது எஜமானர்களான ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அபிமானத்தை வென்று மக்களை சுரண்டுவதற்கான தமது அதிகாரங்களை உறுதி செய்து கொண்டார்கள். 1930-களில் ஆங்கிலோ இந்திய மற்றும் கிருத்துவ இந்தியர்களின் அணியும் ஆட்டத்தில் சேர்ந்து கொண்டது.

ஏகாதிபத்தியத்தின் விசுவாச ஊழியர்கள்
ஏகாதிபத்தியத்தின் விசுவாச அடிமைகள்.

லண்டனிலிருந்து செயல்பட்ட ஏகாதிபத்திய கிரிக்கெட் குழுமத்தில் (அப்போதைய ஐசிசி) சேருவதற்கு அகில இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பு வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்து, பஞ்சாப், பாட்டியாலா, ஐக்கிய மாகாணம், ராஜ்புதனா, ஆள்வார், போபால், பரோடா, கத்தியவார், மத்திய இந்தியா பகுதிகளிலிருந்து பிரதிநிதிகள் ஒன்று கூடி 1928-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஏற்படுத்தினர்.

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவில் காங்கிரசிடமும், பாகிஸ்தானில் முஸ்லீம் லீகிடமும் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறிய பிறகும் தொடர்ந்த பல நிர்வாக, அரசியல் அமைப்புகள், சட்ட திட்டங்களை போல ஆங்கிலேய அதிகாரிகளாலும், ஆங்கிலேய இராணுவத்தாலும், இந்திய மகாராஜாக்களாலும் உருவாக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டை நிர்வாகித்து வருகிறது.

மாநில/பிராந்திய கிரிக்கெட் சங்கங்கள் கொடுக்கும் சந்தா தொகை மூலம் தனது நிர்வாக செலவுகளையும், இந்திய தேசிய அணிக்கான செலவுகளையும் வாரியம் பார்த்துக் கொண்டது. டெஸ்ட் போட்டிகள் நடக்கும் போது மைதானத்தில் டிக்கெட் விற்பனை மூலம் மாநில சங்கங்களுக்கு வருமானம் கிடைத்தது. கிரிக்கெட் வீரர்களுக்கு ரயில்வே, காவல் துறை, துணை இராணுவப் படை, அரசுத் துறை நிறுவனங்களில் வேலை கொடுக்கப்பட்டது.

இந்தியாவில் அப்போது நிலவிய பொருளாதாரச் சூழலில், தனியார் முதலாளிகள் அரசு உரிமங்கள் பெறுவதிலும், கான்டிராக்டுகள் எடுப்பதிலும் கவனம் செலுத்தினர். கௌரவ பதவியான கிரிக்கெட் வாரியத் தலைவர் பொறுப்பை முன்னாள் ஆட்டக்காரர்கள், செல்வாக்கு மங்கி வரும் மகாராஜாக்கள், வயதான தொழிலதிபர்கள், ஓய்வு நேரம் இருக்கும் அரசியல்வாதிகள் ஒரு பொழுதுபோக்காக ஏற்று நடத்தி வந்தார்கள்.

விளக்கொளியில் ஒரு நாள் கிரிக்கெட்
விளக்கொளியில் ஒரு நாள் கிரிக்கெட் – தொலைக்காட்சிக்காக படைக்கப்பட்டது.

1970-களில் ஒரு நாள் கிரிக்கெட் பிரபலமடைய ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவில் கேரி பேக்கர் என்ற ஊடக தொழிலதிபர் அதிகார பூர்வ கிரிக்கெட் வாரியங்களை புறக்கணித்து, உலகெங்கிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களை வரவழைத்து உலகப் போட்டித் தொடர் என்ற பெயரில் வண்ண உடைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு, விளக்கொளியில் ஆட்டம் என்று ஒரு கொண்டாட்ட நிகழ்வை நடத்திக் காட்டி கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தும் வலிமையை நிரூபித்துக் காட்டினார்.

1980-களில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொழில்நுட்பம் வளர்ந்து இந்தியா முழுவதும் பரவலானது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை முக்கியமான, கவர்ச்சியான சந்தையாக திறந்து விடப்படும் பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. கிரிக்கெட், தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான விளையாட்டாக கச்சிதமாக பொருந்தியது. பங்களிப்பை விட பார்த்து மகிழ்வதற்கான வடிவத்தில், கோடிக்கணக்கான நுகர்வோரை ஒரே நேரத்தில் சென்றடைவதற்கான ஆதர்ச மேடையாக உருவெடுத்தது. இந்தியாவில் கிரிக்கெட் பெருவெடிப்பு நிகழ்வதற்கான அனைத்து நிபந்தனைகளும் நிறைவேறிக் கொண்டிருந்தன.

வங்காளத்தைச் சேர்ந்த டால்மியா தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா 1979-ல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலடி எடுத்து வைத்தார். அவர் பொருளாளராக பொறுப்பேற்ற 1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் உலகக் கோப்பை (8 நாடுகள்தான் விளையாடினாலும் அது உலகக் கோப்பைதான்)யில் இந்தியா வெற்றி பெற்றது. 1987-ல் உலகக் கோப்பை போட்டியை இந்தியா-பாகிஸ்தானில் கூட்டாக நடத்தும் உரிமையை வென்றது இந்திய கிரிக்கெட் வாரியம். அந்த போட்டிகளுக்கான புரவலர் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் தலைமை பூசாரியான அம்பானியின் ரிலையன்ஸ்.

கிரிக்கெட் கொண்டாட்டம்
கிரிக்கெட் கொண்டாட்டம்

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமடைய ஆரம்பித்தது. திறமையான, இளம் கிரிக்கெட் வீரர்கள் தேசிய ஹீரோக்களாக உருவாக்கப்பட்டனர். அவர்களை தத்து எடுத்துக் கொண்ட பெருநிறுவனங்கள் அவர்களது பெயரை தொழில்முறையில் வளர்த்தெடுத்து ரசிகர்களின் மனதில் வழிபடும் விக்கிரகங்களாக பதிய வைத்தன. 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடந்த போது மும்பையில் சச்சின் டெண்டுல்கர், கர்நாடகாவில் ராகுல் டிராவிட், கொல்கத்தாவில் சவுரவ் கங்குலி போன்ற விக்கிரக வீரர்கள் அந்தந்த நகரத்துக்கு ஏலம் இல்லாமல் ஒதுக்கப்பட்டார்கள். மற்ற வீரர்களுக்கான அதிகபட்ச ஏலத் தொகையை விட 15 சதவீதம் அதிக பணம் அவர்களுக்கு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகள் தேச வெறி, போர் வெறியுடன் கலந்து கிரிக்கெட் போட்டிகளை ஒரு மத வழிபாட்டுக்கு நிகராக வளர்ப்பதற்கு உதவின.

இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்த பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர ஆதரவில் இந்திய கிரிக்கெட்டுக்கு பல பாட்டில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டது. அதன் மூலம் வளர்த்துக் கொண்ட புஜ (பண) பலத்தைக் கொண்டு 1996-ம் ஆண்டு அது வரை ஆங்கில முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த பன்னாட்டு கிரிக்கெட் கழகத்தின் (இப்போதைய ஐசிசி) தலைமையையும் ஜக்மோகன் டால்மியா கைப்பற்றினார். இமய மலையில் புலிக்கொடியை நாட்டிய சோழனை போல லண்டனில் இந்திய முதலாளிகளின் கொடியை நாட்டினார் டால்மியா. ஆனாலும், அவர் குறுகிய நாட்டு விசுவாச உணர்வுகளால் கட்டுப்பட்டிருக்கவில்லை.

ஐசிசியின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சேம்பியன்ஸ் கோப்பை என்ற புதிய போட்டித் தொடரை பன்னாட்டு கிரிக்கெட் கழகத்தின் சொத்தாக உருவாக்கினார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தேசிய கிரிக்கெட் வாரியங்களிடமிருந்து கைப்பற்றி ஐசிசியின் பொறுப்பில் ஒப்படைத்தார். இதன் மூலம் இந்த போட்டிகளின் புரவலராக நீண்ட கால ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் வசதியை முதலாளிகளுக்கு ஏற்படுத்தினார்.

விளம்பரத் துறையில் ஐபிஎல், அல்லது இந்திய கிரிக்கெட் அல்லது ஒரு டெஸ்ட் போட்டித் தொடரை பிராப்பர்ட்டி அல்லது சொத்து என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது இந்த சொத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விட்டு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது அதன் மதிப்பை தீர்மானிக்கிறது. கிரிக்கெட் வீரர்களை பிராண்டாக முன் நிறுத்துவது, திரைப்பட நடிகர்களை இணைத்துக் கொள்வது, புதுப் புது வடிவங்களை புகுத்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அந்த சொத்தின் மதிப்பை அதிகரித்துக் கொண்டே போக வேண்டும். சூதாட்டம், பந்தயம் கட்டுதல், வேண்டுமென்றே மந்தமாக ஆடுதல் போன்றவை, இந்திய அணி அடிக்கடி தோற்றுப் போவது போன்றவை சந்தையில் சொத்தின் மதிப்பை குறைத்து விடும்.

சீனிவாசன்
என் சீனிவாசன்

பெருகி ஓடும் பண வெள்ளத்தில் தாமும் சில குவளைகள் மொண்டு குடிப்பதற்கு சில கிரிக்கெட் வீரர்களுக்கு வழி காட்டினார்கள் சூதாட்டத் தரகர்கள். அத்தகைய ஊழல் கிரிக்கெட்டின் பிராண்ட் மதிப்பை குறைத்து விடாமல் இருக்க சர்வதேச கிரிக்கெட் குழு ஊழல் தடுப்பு குழு, வீரர்களுக்கு எச்சரிக்கை என்று ரசிகர்களின் மற்றும் விளம்பரதார நிறுவனங்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறது.

ஒரு நாள் போட்டி விதிகளில் பார்வையாளர் ஆர்வத்தையும், பரபரப்பையும் பராமரிக்கும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரபலமான தொலைக்காட்சி பார்வை நேரத்துக்கு ஏற்றபடி ஆட்ட நேரங்கள் திட்டமிடப்பட்டன. இந்திய அணியின் வெற்றி தோல்வியை சார்ந்திராமல் உத்தரவாதமான விளம்பர வாய்ப்புகள், இன்னும் அதிகமான விளம்பர வாய்ப்புகள், இந்தியச் சந்தையில் இன்னும் அதிகமான விரிவாக்கத்திற்கு முயலும் வர்த்தக முதலாளிகளுக்கு தேவைப்பட்டது. அதற்கு ஏற்றபடி கிரிக்கெட் என்ற சொத்தை (பிராப்பர்ட்டியை) மாற்றி அமைத்தால் இன்னும் அதிக விளம்பர வருமானம் கிரிக்கெட் வாரியத்துக்கு வரவிருந்தது.

அதிகரித்து வந்த கிரிக்கெட்டின் வணிக முக்கியத்துவம் கிரிக்கெட் வாரியத்தை கைப்பற்றுவதற்கு முதலாளிகளுக்கிடையே கடும் போட்டியை உருவாக்கியது. ஸ்பிக் நிறுவனத்தின் ஏ சி முத்தையா, மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலை, விவசாய முதலாளியும் அரசியல்வாதியுமான சரத்பவார், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் முதலான பல இந்திய முதலாளிகள் போட்டியில் குதித்தனர்.

2005-ம் ஆண்டில் ஜக்மோகன் டால்மியாவின் பினாமியை தோற்கடித்து வாரியத் தலைவர் பதவியை சரத்பவார் கைப்பற்றியிருந்தார். 2007-ம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட டி-20 போட்டி வடிவத்தில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு ஒரு திரைப்படம் போல 3 மணி நேர விளையாட்டு, பெண்களின் கவர்ச்சி ஆட்டம், விளையாட்டு வீரர்களின் ஆடைகள் என்று விளம்பர சாத்தியங்களை பல மடங்கு திறந்து விட்ட இந்தியன் பிரீமியர் லீக் லலித் மோடியால் உருவாக்கப்பட்டது.

இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்து வந்த பாதை.

1975-ல் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 30 பிராந்திய/மாநில சங்கங்களின் கூட்டமைப்பாக செயல்படுகிறது. அந்த உறுப்பினர் சங்கங்கள் வாக்களித்து செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். தலைவர் பதவியில் ஒருவர் அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டும்தான் இருக்க முடியும் என்ற விதி உள்ளது. அதற்கு பிறகு தமது சார்பில் பினாமி ஒருவரை நியமித்து கட்டுப்பாட்டை உறுதி செய்து கொள்வதுதான் வழி.

ராஜீவ் சுக்லா
ஐபிஎல் ஆணையர் காங்கிரசின் ராஜீவ் சுக்லா

நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வாரியம் நடத்தும் போட்டிகளில் எந்த வர்த்தக நலன்களும் வைத்திருக்கக் கூடாது என்ற விதி ஐபிஎல் போட்டிகளுக்காக மாற்றப்பட்டு, ஐபிஎல், டி-20 போட்டிகளில் அத்தகைய வர்த்தக நலன்கள் இருக்கலாம் என்று மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியா சிமென்ட்ஸ் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சொந்தமாக வைத்துக் கொண்டே, கிரிக்கெட் வாரிய பதவியையும் வகித்த சீனிவாசனுக்கு மட்டுமின்றி, பல ஐபிஎல் அணிகளில் பினாமி முதலீடு செய்திருந்த நிர்வாகிகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை கொடுத்தது.

வாரியத்தின் இப்போதைய/முன்னாள் உறுப்பினர்களில் காங்கிரஸ் (மத்திய பிரதேசத்தின் ஜ்யோதிராதித்ய சிந்தியா, உத்தர பிரதேசத்தின் ராஜீவ் சுக்லா), பாரதீய ஜனதா (குஜராத்தின் நரேந்திர மோடி, ராஜ்ய சபை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி), சமூக நீதிக் கட்சியினர் (பீகாரின் லல்லு பிரசாத் யாதவ், மும்பையில் சரத்பவார், உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி) என்று அரசியல் அரங்கில் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் தலைவர்கள் உள்ளனர். இவர்கள், கிரிக்கெட் வாரிய ஊழல், மோசடி, ஒழுங்கின்மை பற்றி கூட்டு மௌனம் சாதிக்கிறார்கள்; முறைகேடுகளையும், ஊழல்களையும், கிரிமினல் குற்றங்களையும் வாரிய உறுப்பினர்களுக்கிடையேயே பேசி தீர்த்துக் கொள்கிறார்கள்.

கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு ரூ 25 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை ஆண்டு ஒப்பந்தத் தொகையாக வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ 25,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்திய அணிக்குள்ளும், ஐபிஎல் அணிகளுக்குள்ளும், வாரியத்திலும், அணி முதலாளிகள் மத்தியிலும் என்ன நடந்தாலும் மவுனம் சாதிப்பதை அவை உறுதி செய்கின்றன.

கிரிக்கெட் வர்ணனையாளர்களாக இருக்கும் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு தலா ரூ 3.6 கோடி ரூபாய் சம்பளத்தில் வாரியத்தின் நற்பெயரை காப்பதற்கான ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு விசுவாசமாக அவர்கள் நடந்து கொள்கிறார்க்ள. உதாரணமாக, ஐபிஎல் சூதாட்டம் பற்றிய விபரங்கள் வெளியானதும், கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதரவாக முதலில் வாதாடி களத்தில் நின்றவர் சுனில் கவாஸ்கர். மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அவரவர் பங்கு பணம் ஆண்டுதோறும் தவறாமல் அனுப்பப்பட்டு விடுகிறது.

இத்தகைய கட்டமைப்பின் மூலம் எந்த தரப்பிலிருந்தும் தவறுகளை தட்டிக் கேட்க முடியாதபடி மவுனம் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது.

2013 ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பனும் அதில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

அருண் ஜேட்லி
கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் பாரதீய ஜனதாவின் அருண் ஜேட்லி

தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியா சிமென்ட்ஸ் மூலமாக சென்னை ஐபிஎல் அணியை வைத்திருக்கும் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், சூதாட்டத் தரகர்களுடன் சேர்ந்து அணியின் உள் விவகாரங்களை கசிய விட்டு, தானும் சூதாடினார் என்ற குற்றச்சாட்டை முன்னிட்டு தான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை சீனிவாசன் நிராகரித்தார்.

சீனிவாசன் பதவி விலகுவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் வாரியத்தின் பொருளாளர் அஜய் ஷிர்கேயும், செயலாளர் சஞ்சய் ஜக்தாலேவும் ஏற்கனவே பதவி விலகல் கடிதங்களை கொடுத்திருந்தனர். ஐபிஎல் ஆணையர் பதவியில் இருந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லாவும் ராஜினாமா செய்திருந்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான விசாரணை நடந்து முடியும் வரை வாரியத்தின் தலைவர் என் சீனிவாசன் பதவியிலிருந்து ஒதுங்கி இருப்பதாக முடிவு செய்ய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவது வரை வாரியத்தின் தினசரி நடவடிக்கைகளை தற்காலிகக் குழு ஒன்று கவனித்துக் கொள்ளும் என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

1997 உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய போது நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2006-ம் ஆண்டு கிரிக்கெட் வாரியத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜக்மோகன் டால்மியா தற்காலிக நிர்வாகக் குழுவின் தலைவராக இருப்பார். கிரிக்கெட்டில் ஊழலை நீக்கி சுத்தப்படுத்தப் போவதாக டால்மியா கூறியிருக்கிறார்.

சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று வாரியத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஐ கே பிந்த்ரா மட்டும் குரல் எழுப்பினாராம். இந்த அவசர செயற்குழு கூட்டமே சட்ட விரோதமானது, மூன்று நாட்கள் முன்னறிவிப்புடன் நடத்தவில்லை என்ற வாதத்தையும் அவர் முன் வைத்திருக்கிறார். டெல்லியிலிருந்து தொலை தொடர்பு மூலம் கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த அருண் ஜேட்லி, கூட்ட முடிவுகளை முறையான செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சமாதானம் கூறியிருக்கிறார்.

சீனிவாசன் தான் விரும்பியபடி பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சிலுடன் பேரம் பேசும் பொறுப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளாரா என்பதைப் பற்றியும் அவருக்கு சங்கடம் விளைவிக்கும் நோக்கத்தோடு, இக்கட்டான நேரத்தில் பதவி விலகிய வாரியத்தின் செயலாளர் சஞ்சய் ஜக்தாலேவும் பொருளாளர் அஜய் ஷிர்கேவும் மீண்டும் சேர்க்கப்படக் கூடாது என்ற அவரது நிபந்தனையை பற்றியும் வாரியம் எதையும் குறிப்பிடவில்லை.

ஆனால், இன்றைய ஆளும் வர்க்கமான முதலாளிகளின் மங்காத்தா இன்னும் மேம்பட்ட வடிவில், இன்னும் அதிக கொண்டாட்டங்களுடன், இன்னும் அதிகமான பணம் புரளும்படி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

மங்காத்தா
மங்காத்தாடா !

கிரிக்கெட் மேட்ச் நடத்தப்படும் போது தொலைக்காட்சியில் பார்ப்பது, ஆர்வம் அதிகமானவர்கள் உள்ளூரில் நடக்கும் போட்டிகளுக்கு டிக்கெட் எடுத்து போய்ப் பார்ப்பது, செய்தித் தாள்களில் கிரிக்கெட் தகவல்களை படிப்பது, நண்பர்களுடன் விவாதிப்பது, ஆர்வமும் திறமையும் உடையவர்கள் ஏதாவது ஒரு வடிவில் மாலை நேரங்களில் அல்லது வார இறுதிகளில் தெரு கிரிக்கெட் விளையாடுவது. இதுதான் கிரிக்கெட்டுடன் ஒரு சராசரி ரசிகனின் உறவாக இருக்கிறது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்தலில் ஓட்டு போடுவது, சட்ட சபை தேர்தலில் ஒரு முறை, நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முறை, உள்ளாட்சி தேர்தலில் ஒரு முறை என்று அவ்வப்போது தரப்படும் வாய்ப்புகளைப் பொறுத்து வாக்களிப்பது, ஒரு சிலர் சில கட்சிகளுக்காக வேலை செய்வது இதுதான் இன்றைய அரசுடன், ஆட்சியுடன் ஒரு சராசரி குடிமகனின் உறவு.

மற்றபடி கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, நாட்டின் ஆட்சி விவகாரங்களாயிருந்தாலும் சரி தினசரி நடைமுறைகளையும், சட்டங்களையும், பொருளாதார திட்டங்களையும் ஆளும் வர்க்கத்தினர் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்கின்றனர். அப்படி தீர்க்க முடியாமல் அம்பலப்பட்டு விடும் நேரங்களில் ஓரிருவரை பொதுமக்கள் முன் பலி கொடுத்து விட்டு தமது ஆட்சியை தொடர்ந்து நடத்துகின்றனர்.

இதுதான் கிரிக்கெட் மங்காத்தாவின் இன்னொரு முகம்.

(தொடரும்)
____________________
– அப்துல்
____________________

ஷாஜி : ஆடம்பரக் கார்களின் வக்கிரக் கொலைகள் !

21

மே 22, இரவு. நள்ளிரவு நிசப்தத்தில் மூழ்கியிருந்த சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை கோரமான சாலை விபத்தொன்று எழுப்பிய மரண ஓலத்தால் அதிர்ந்தது.

மெர்சிடிஸ் பென்ஸ்
ஷாஜியின் கொலைகார மெர்சிடிஸ்

பேய் வேகத்தில் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார், எழும்பூர் அரசு மருத்துவமனை திருப்பத்தில், போலீஸ் ரோந்து வாகனத்துடன் மோதி, பேருந்து நிலை மேடையின் மேலேறி, அங்கே உறங்கிக்கொண்டிருந்த நபர்களோடு சேர்த்து ஐவரை இடித்துத் தேய்த்து அருகில் நின்றிருந்த ஆட்டோவில் மோதி நின்றது.

60 வருடங்களாக மருத்துவமனை வாயிலில் இரவு உடை மற்றும் துண்டுகளை விற்றுவரும் சந்திரா என்பவரின் மூன்று பேரக் குழந்தைகளும் அன்று இரவு பேருந்து நிலைமேடையில் தூங்கிக் கொண்டு இருந்தனர். கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வந்த கார் அவர்களை நசுக்கியது.

அதில் 13 வயதான முனிராஜ், இடுப்பு எலும்பு முறிவு மற்றும் வயிறு பகுதியில் ஏற்பட்ட படுங்காயங்களினால் அவதிப்பட்டு, சிகிச்சை பலனின்றி மே 24 அன்று இறந்துவிட்டான். வாசு (8) இடுப்பு பகுதியில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சுபா (10)வின் மண்டை எலும்பு உடைந்து, அதை நான்கு மணிநேர அறுவை சிகிச்சை மூலம் தைத்து இருக்கிறார்கள். மேலும் வலது கை நான்கு இடங்களில் முறிந்து, வலது முழங்கை நசுங்கி, இடது தோளில் உள்ள ஒரு எலும்பும் முறிந்த நிலையில், மிக ஆபத்தான நிலையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறாள்.

பேருந்து நிலைமேடையில் விளம்பரப் பலகைகளை பொறுத்திக்கொண்டிருந்த முஹம்மத், மணி என்ற இருவரும் மோதி கீழே தள்ளப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.

குடிபோதையில் காரை ஓட்டிய ஷாஜி புருஷோத்தமன் தான் இவ்விபத்திற்கு காரணம். ஹால்ஸ் ரோடில் இருக்கும் அடுக்கு மாடி வீட்டில், மூன்று நண்பர்களுடன் பார்ட்டியில் குடித்து, கூத்தடித்துக் கொண்டு இருந்த ஷாஜி, கடற்கரைக்கு சென்று மேலும் கேளிக்கையில் களிக்க, பாந்தியன் சாலை வழியாக காரில் நண்பர்களுடன் பயணித்தார்.

வாசு
காயமடைந்த வாசு

விபத்து நடப்பதற்கு முன்பே, ஹால்ஸ் ரோடில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர், குடிபோதையில் கார் ஓட்டிவந்த ஷாஜி மற்றும் காரில் இருந்த அன்வர், அணில் மற்றும் ‘குதிரை’ குமார் ஆகியோரை எச்சரித்ததோடு விட்டு விட்டார், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளைவு, அப்பாவி மனிதர்கள் மீது தன் காரை ஏற்றி முடமாக்கியும், கொன்றுமிருக்கிறார் ஷாஜி.

விபத்து நடந்ததை நேரடியாக பார்த்த ராஜேஷ் என்பவர் டி-6 அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில், கார் ஓட்டுனர் ஆரஞ்சு நிறத்தில் டி.ஷர்ட்டும், காதணியும் அணிந்து இருந்ததார் என்றும். விபத்து நடந்தவுடன் காரிலிருந்த இரண்டு நபர்கள் தலை தெறிக்க ஒடி தப்பித்து விட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். கார் ஓட்டுனரையும் அதிலிருந்த மற்றொரு நபரையும் கையும் களவுமாக பிடித்து, தப்பவிடாமல், அடித்து போலீஸிடம் ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளார்.

குற்றவாளியான ஷாஜியையும், உடனிருந்த குமாரையும் அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீஸார் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அவர்கள் மது குடித்திருந்தார்கள் என்பதையும் உறுதி செய்துள்ளனர். நேரடி சாட்சிகள் மற்றும் மருத்துவ சான்றுகள் கையிலிருந்தும், பணபலமும் அதிகார ஆளுமையும் கொண்ட ஷாஜியின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாத போலீஸ், அங்கிருந்து அவரை அனுப்பிவைத்தனர். மேலும் ஷாஜிக்கு பதிலாக காரை ஓட்டிவந்தது குமார் என்று முதல் தகவலறிக்கையை (FIR) பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

போலீசு தலைமையில் காவல் நிலையத்திலேயே நட்ந்த இந்த ஆள் மாறாட்டம், ஊடகங்களினால் நாறடிக்கபட்டவுடன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை மட்டும் தற்காலிக பணிநீக்கம் செய்தார். மேலும் முதல் தகவல் அறிக்கையில் முதன்மை குற்றவாளியாக பதிவாகியிருந்த ‘குதிரை’ குமாரை இரண்டாம் குற்றவாளியாக மாற்றி, ஷாஜியை முதன்மை குற்றவாளியாக மாற்றியுள்ளார்.

முனிராஜின் அகால மரணத்திற்கு பின் ஷாஜி மற்றும் அவரின் தந்தை தரப்பில் உயர்நீதிமன்றத்தில், முன்பிணை மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தான் கொலை வழக்கில் சிக்கியுள்ளதை உணர்ந்த ‘குதிரை’ குமார், அதிலிருந்து விடுபட தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றவியல் தொடர் விசாரணை மன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

பொய் முகவரி
குதிரை குமாரின் பொய் முகவரி – விசாரணை

கைதாகியிருக்கும் குமார் விபத்தன்று கார் ஒட்டவில்லை என்பது ஆதாரங்களுடன் வெளி வரத் துவங்கியுள்ளது. குமாரை புருஷோத்தமன் குடும்பத்தார், கார் ஓட்டுனராக வேலையில் அமர்த்தியதற்கான அதாரங்கள் எங்கும் இல்லை. நெல்லூர் நாய்டுபேட்டில் புருஷோத்தமன் குடும்பத்தினருக்கு சொந்தமான குதிரைகளை பராமரிக்கும் வேலையை தான் ‘குதிரை’ குமார் செய்து வந்துள்ளார். அவ்வப்போது பராமரிப்பு செலவுக்கான பணத்தை பெற அவர் சென்னைக்கு வருவதுண்டு. மேலும் குமார் போலீஸிடம், தான் 9/2, திருப்பூர் குமரன் வீதி, வியாசர்பாடி என்ற இடத்தில் வசித்து வந்ததாக கொடுத்திருந்த முகவரியில், அங்கு அப்படிப்பட்ட நபர் வசிக்கவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.

இறுதியாக, குமாரின் வாகன ஓட்டும் திறனைக் கணிக்க அரசு தரப்பு சோதனையாளர்கள் மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் கார் பொறியாளர்கள் முன்னிலையில் விபத்துக்குள்ளான மெர்சிடஸ் பென்ஸ் கார் மாடலை ஓட்ட வைத்துள்ளனர். 10 நிமிடத்திற்கு மேல் ஓட்டுனர் சீட்டில் அமர்ந்திருந்தும் அவரால் வண்டியே ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாமல் இருந்துள்ளது. மெர்சிடஸ் பென்ஸ் கார் பொறியாளர்கள் ‘குதிரை’ குமார் காரை விபத்தன்று ஓட்டியிருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமான சான்றிதழை போலீஸிடம் வழங்கியுள்ளனர்.

ஷாஜியின் எழும்பூர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் நடந்த விசாரணையில், ஷாஜியை பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளன. மது அருந்தும் பழக்கம் உள்ள ஷாஜி, குடித்திருந்தாலும் தானேதான் வண்டி ஒட்டவேண்டும் என்று வலியுறுத்துவாராம். ஹாரிஸ் ரோட்டில் உள்ள அலுவலகத்திற்கு இரவு வேளையில் நண்பர்களுடன் வந்து குடித்துவிட்டு, மீண்டும் வண்டி ஓட்டிக் கொண்டு போகும் வழக்கமும் உண்டு என்றும் கூறியுள்ளனர்.

ஷாஜிதான் குற்றவாளி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தும், அதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பினும், தலை மறைவாகியுள்ள ஷாஜியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸார் கூறி வருகின்றனர். தனிப்படை அமைத்து கேரளா, மும்பாய், பெங்களூர், அஹமதாபாத் மற்றும் கோயம்புத்தூரில் தேடுதல் வேட்டையை நடத்துவதாக தெரிவிக்கின்றனர். மலேசியாவில் பதுங்கியிருக்கும் வாய்ப்பு உள்ளதென்றும் கூறியுள்ளனர்.

யார் இந்த ஷாஜி புருஷோத்தமன்?

சாராய முதலாளியும் EMPEE குழுமத்தின் தலைவருமான எம்.என்.புருஷோத்தமனின் மகன்தான் ஷாஜி. ஷாஜியின் சகோதரியை மணந்து கொண்டு அவருக்கு மச்சானாகியிருக்கிறார் இந்திய வெளிஉறவுத்துறை அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணன். குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசான ஷாஜி, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்து வளந்தவர். EMPEE டிஸ்ட்டலரிஸ் மற்றும் EMPEE குழுமத்தின் சில நிறுவனங்களில் இயக்குனராகவும் இருந்தவர்.

ஷாஜி புருஷோத்தமன்
ஷாஜி புருஷோத்தமன்

1970 களில் எம்.என்.புருஷோத்தமனால் உருவாக்கப்பட்ட EMPEE குழுமம் சென்னையில் நட்சத்திர விடுதிகள், மதுபானங்கள், சர்க்கரை, இரசாயன மருந்துகள், மின்சார உற்பத்தி மற்றும் சொத்து நிர்வாக துறைகளில் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டித்தரும், தென்னிந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

பணத்திலேயே புரண்டு வளர்ந்த ஷாஜி, தன் வர்க்கத்திற்கே உரிய திமிருடன், சட்டத்தை கால் தூசாக மதித்து, நள்ளிரவில் முழு போதையில் கார் ஓட்டுவதை வழக்கமாக கொண்டு இருந்திருக்கிறார். ஏதோ எதேச்சையாக இந்த சம்பவத்தின் மூலம் சிக்கியுள்ளார். பணம், அதிகாரம், அரசியல் செல்வாக்கு என்று எல்லாம் ஒன்றிணைந்து இருக்கும் பின்னனியை கொண்ட அவருக்கு இதிலிருந்து தப்பிப்பது என்பது மிகவும் சாதாரண விசயமாகும்.

ரோந்து பணியில் ஈடுப்படும் போக்குவரத்து போலீஸ் வாகனம் தவறான வழியில் வந்ததால் தான் விபத்து நடந்தது என்று ஷாஜி தன் தரப்பு நியாயத்தை முன் பிணை மனுவில் குறிப்பிட்டு இருப்பதாலும், ஊடகங்களினால் விபத்தின் உண்மையான தகவல்கள் வெளியே வர துவங்கியதாலும்தான், இவ்வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஷாஜியின் முன்பிணை மனு மறுக்கப்பட வேண்டும் என்று குறுக்கீட்டு மனுவை சமர்ப்பித்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (சென்னைக் கிளை) வழக்கின் விளைவாக ஷாஜியின் முன்பிணை மனு இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஷாஜி, இதுவரை இரண்டு சம்மன்கள் அனுப்பப்பட்டும் விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இவ்வழக்கில் விசாரணை நடத்திவந்த மூத்த போலீஸ் அதிகாரியின் பணியிடமாற்றம், கோடீஸ்வர ஷாஜியை காப்பாற்றும் பின்னணி வேலைகள் ஜரூராக நடந்துக்கொண்டு இருப்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. போக்குவரத்து விசாரணைப் பிரிவின் போலீஸ் துணை கமிஷனர் சரவணன் விசாரித்து வந்த வழக்கு தற்போது போலீஸ் துணை கமிஷனர் செல்வமூர்த்தியிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

போலீஸ் துணை கமிஷனர் சரவணன் சென்னையிலிருந்து நாகை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறைக்கு, வழக்கு நடந்துக்கொண்டிருக்கும் போதே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு வழங்கும் பொருட்டு அவர் விடுமுறை எடுத்துள்ளார் என்றும், அவர் வெகு நாட்களாக கேட்டு வந்த இடமாற்றம் இப்போது கிடைத்துள்ளது என்று சப்பைக்கட்டு கட்டுகின்றது போலீஸ். சற்று நியாயமாக, வளைந்துக்கொடுக்காமல் சரவணன் இருந்ததால் தான் அவருக்கு இந்நிலை என்கின்றன ஊடகங்கள். ஷாஜி போன்ற சீமான்களை உற்று நோக்கினால் காவல்துறைக்குக் கூட இதுதான் கதி.

பெங்களூர் ஆடி கார்
பெங்களூரின் கொலைகார ஆடி கார்.

செப்டம்பர் 28, 2002 அன்று இரவில் நடிகர் சல்மான் கான் போதையுடன் ஓட்டிவந்த டொயோட்டா கார் நடைமேடையில் உறங்கிக்கொண்டிருந்த 5 உழைக்கும் மக்களின் மீது ஏறி ஒருவரை சம்பவ இடத்திலேயே கொன்றது. 11 ஆண்டுகளாகியும் இன்று வரை அவர் தண்டிக்கப்படாமல் உலகம் முழுவதும் சுதந்திரமாக ‘கலைச்சேவை’ செய்து கொண்டுத்தான் இருக்கிறார்.

டிசம்பர் 2007 இல், அசல் கேம்கா என்ற பணக்கார வியாபாரியின் மகன் சென்னை, புது ஆவடி ரோடில் மெர்சிடஸ் பென்ஸ் காரை ஓட்டி சென்று, பிளாட்பாரத்தில் உறங்கிக்கொண்டிருந்த 11 மனிதர்கள் மீது ஏற்றி இருவரை கொன்றார். இளையோர் நீதிமன்றத்தில் சரணடைந்த அவருக்கு வெறும் 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளி தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது.

எழும்பூர் சம்பவம் நடந்த ஒரே வாரத்திற்குள், கடந்த ஜூன் 2 அன்று பெங்களூரை சேர்ந்த வியாபாரி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் லோகேஷ் ரெட்டியின் மகனான ராஜேஷ் ரெட்டி (21) புத்தம்புதிய ஆடி காரினை குடிபோதையில் ஓட்டிச் சென்று எம்.ஜி ரோடில் ஆட்டோ ஒன்றில் மீது மோதி ஒருவரை கொன்று, மேலும் இருவரை பலத்த காயங்களுக்கு ஆளாக்கியுள்ளார். கிறிஸ்ட் பல்கலைக்கழக பட்டதாரியான ராஜேஷ் பிரிட்டனிற்கு சென்று மேல் படிப்பு படிக்க திட்டமிட்டு இருந்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன் வாங்கப்பட்ட காரை, ராஜேஷ் 150 கிமி வேகத்தில் ஓட்டிய போது இவ்விபத்து நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு வேகமாக காரில் பறந்துள்ளார் மனிதாபிமானமற்ற அந்த மைனர். அங்கேயும் ஆள்மாறாட்ட வேலை நடந்தது, ஆனால் சம்பவ இடத்தில் இல்லாத ஒரு டிரைவரை சரணடையச் செய்ததால், அம்பலப்பட்டு வேறு வழியில்லாமல் ராஜேஷை கைது செய்து வைத்திருக்கிறது போலீசு.

உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 304 AA (அலட்சியத்தினால் ஏற்பட்ட மரணம்) பிரிவின்படி கொடுக்கப்படும் 3 ஆண்டு சிறை தண்டனை குடிகார ஓட்டுனருக்கு மிகவும் சலுகை காட்டும் தண்டனை என்றும், குடிபோதையில் வண்டி ஓட்டினால் விபத்துக்கள் நேரிடும் என்று தெரிந்தும் அவர்கள் நிகழ்த்தும் இவ்விபத்துகளுக்கு 304-IIII (மரணம் விளைவிக்கும் குற்றம்) சட்டப் பிரிவின்படி 10 ஆண்டுகளாவது சிறைத் தண்டனை வழங்கவேண்டும் என்று எடுத்துக் கூறியுள்ளது.

சட்ட வல்லுனர்கள் ஆய்வுப்படி, இத்தகைய பணக்கார குடிக்கார ஓட்டுனர்களினால் ஏற்படும் அபாயமான விபத்துகளுக்கு, தண்டனை வழங்கப்படும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்றும், பெரும்பாலும் நீதிமன்றத்திற்கு வெளியே (அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மென்ட்) பணத்தின் மூலம் தீர்க்கப்படுகின்றன என்றும் தெரிய வந்துள்ளது.

சாதாரண மக்களிடம் குண்டாந்தடியைக் கொண்டு ‘சட்டம்- ஒழுங்கை’ நிலை நாட்டும் காவல்துறையும் நீதித்துறையும், இந்த மைனர் குஞ்சுகள் கொலையே செய்தாலும் அவர்கள் காலடியில் கேள்விக்குறியென வளைந்து நிற்பதைத்தவிர வேறெதுவும் செய்யாது, செய்யவும் முடியாது. இதுதான் இன்றைய இந்தியா!

– ஜென்னி

படங்கள் – நன்றி : தி ஹிந்து நாளிதழ்

மேலும் படிக்க

இங்கிலாந்து ‘அம்மா’ உணவகத்தில் 5 இலட்சம் ஏழைகள் !

8

ங்கிலாந்தில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல், இலவச அன்னதான சாலைகளை நாடும் மக்களின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகின் ஏழாவது பணக்கார நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இங்கிலாந்தின் கருப்பு பக்கம் இந்த அப்பாவி ஏழை மக்கள்.

அன்னதான சாலை
ட்ரஸ்ல் அறக்கட்டளையின் அன்னதான சாலை

நம் நாட்டின் கஞ்சித் தொட்டிகளை ஒத்தவை தான் இந்த அன்னதான சாலைகளும். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சர்ச் கூட்டமைப்புகள் இவற்றை நடத்துகின்றன. அன்னதான சாலைகளை நடத்தும் இங்கிலாந்தின் மிகப் பெரிய அறக்கட்டளையான ட்ரஸல் நடத்தும் அன்னதான சாலைகளை நாடியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சுமார் 3.5 லட்சம். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டு எண்ணிக்கையான 1.3 லட்சத்தை விட 170 சதவீதம் அதிகம். மற்ற அமைப்புகளின் அன்னதான சாலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆக்ஸ்பாம் என்ற அமைப்பு மொத்த எண்ணிக்கையை 5 லட்சம் என்று மதிப்பிடுகிறது.

ட்ரஸ்ல் அறகட்டளை, 2011-12-ல் ஏழைகள் அதிகமாக வசிக்கும் லண்டன் பகுதிகளில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று அன்னதான சாலைகளை தொடங்குவது வழக்கமாக இருந்தது. இன்று ட்ரஸல் அறக்கட்டளை மட்டும் 30,000 தன்னார்வத் தொண்டு செய்யும் ஊழியர்களின் உதவியுடன் 350 அன்னதான சாலைகளை நடத்தி வருகிறது. வாரத்திற்கு மூன்று புதிய இடங்களில் அன்னதான சாலைகள் திறக்கப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக முக்கியமான நாடும், ஒரு காலத்தில் “சூரியன் அஸ்தமிக்காத நாடு” என்று பல காலனி நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் சுரண்டி வந்த நாடுமான இங்கிலாந்து இன்று கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இங்கிலாந்தில் ஏழைகளின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருவதும், ஏழைக்கும் பணக்காரனுக்குமான ஏற்றத்தாழ்வு விண்ணுக்கும் மண்ணுக்குமாக மாறி இருப்பதும் முதலாளித்துவ ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடும் விலைவாசி உயர்வு, விலைவாசி உயர்விற்கு ஏற்றபடி சம்பளம் உயராதது, வேலை இழப்பு, வேலையில்லா திண்டாட்டம், மக்கள் நல சலுகைகள்-ஓய்வூதியம் போன்றவை கிடைப்பதற்கு தாமதமாதல், மக்கள் நலத் திட்டங்களில் வெட்டு என இவற்றுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் சர்ச் ஆக்ஷன் ஆன் பாவர்ட்டி என்ற அமைப்பின் தகவல் தொடர்பாளர் லியாம் ப்ருசல்.

பணக்காரர்களை ஒப்பிடும் போது ஏழைகளுக்கு கிடைக்கும் உணவுப் பொருட்களின் விலை 69 சதவீதம் உயர்வாக உள்ளது, மக்கள் உணவு வங்கியை நாட உணவுப் பொருட்களின் கடும் விலை உயர்வு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், இங்கிலாந்தில் சுமார் 40 லட்சம் பேர் வரை ஆரோக்கியமான, சமச்சீரான, சத்தான உணவை உட்கொள்வதில்லை என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவல். இதுதான் முதலாளித்துவத்தின் பிறப்பிடமும், தலைமையகமுமான இங்கிலாந்து தனது மக்களுக்கு சாதித்திருப்பது.

poverty-uk-food-banksலியாம் ப்ருசல், ”இங்கிலாந்தில் நிலவி வரும் கடும் பொருளாதார ஏற்றத் தாழ்வின் குறியீடாகவே இப்பொழுது அதிகரித்து வரும் அன்னதான சாலைகள் மற்றும் ஏழைகளின் எண்ணிக்கையை பார்க்க வேண்டும். இது இந்த சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது” என்கிறார்.

மக்கள் நலத் திட்டங்களுக்கும் சலுகைகளுக்கும் கடுமையான வெட்டு விழுந்திருப்பதும் அதை எதிர்த்து வீதிகளில் மக்கள் கலவரங்களில் ஈடுபட்டதும் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள். அந்த கலவரங்கள் அரசு அமைப்புகளால் ஒடுக்கப்பட்டன. லண்டன் கலவரங்களை பற்றி வினவில் வந்த கட்டுரை.

இங்கிலாந்தில் வேகமாக வளரும் இந்த அன்னதான சாலைகளை முறியடிக்கும் நோக்கத்தில்தான் தமிழ்நாட்டின் அம்மா உணவகங்கள் மாநகராட்சிகளின் வார்டிற்கு வார்ட் திறக்கப்படுகின்றன என்று சொல்லலாம். இங்கிலாந்தின் அன்னதான சாலைகளுக்கும், தமிழ்நாட்டின் அம்மா உணவகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. உணவிற்கு போராடும் ஏழை மக்களின் எண்ணிக்கை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் உலகின் பல நாடுகளிலும் பெருகிக் கொண்டே போகிறது.

  1. அமெரிக்க மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் இலவச உணவை நம்பி இருப்பவர்கள்.
  2. ஸ்பெயினில் குப்பையில் உணவை தேடும் மக்கள்
  3. அமெரிக்காவில் உணவு இல்லாமல் அவதிப்படும் குடும்பங்களின் அவல நிலை.
  4. அமெரிக்காவில் பட்டினி போடப்படும் பள்ளிக் குழந்தைகள்.
  5. கல்விக்காக கற்பை விற்கும் இங்கிலாந்து மாணவிகள்.
  6. தமிழகத்தில் அதிகரித்துவரும் அம்மா உணவகங்கள்.

உலகமயம், தனியார்மயம், தாராளமயம் கொள்கைகள் உலகிற்கு அள்ளிக் கொடுத்த பரிசு தான் இந்த அவலம். ‘சோவியத் யூனியனில் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கியூவில் நிற்க வேண்டும், பல கோடி மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர்’ என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்து, வண்ண வண்ண பொய்களை கட்டவிழ்த்து விட்டன முதலாளித்துவ நாடுகள். சீனாவிலும் ரஷ்யாவிலும், இயற்கையாக இறந்தவர்களின் எண்ணிக்கையை எல்லாம் பஞ்சத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையாக காட்டபட்டு மக்கள் மத்தியில் சோஷலிச பொருளாதாரத்தின் மீதான அவதூறுகள் பரப்பப்பட்டன. 1991-ல் சமூக ஏகாதிபத்தியமான சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு மக்களை கம்யூனிச அபாயத்தில் இருந்து மீட்டு விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்ட முதலாளித்துவத்தின் லட்சணம் 20 ஆண்டுகளில் பல்லிளித்திருக்கிறது.

உணவுக்கு வேலை
சாப்பாட்டுக்கு வேலை செய்யத் தயார் !

இன்று உலகமே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதில் முன்னாள், இந்நாள் வல்லரசுகள், பல முதலாளித்துவ நாடுகளும் அடக்கம். இந்த பொருளாதார நிகழ்வுகளுக்கு விதவிதமான பெயர்களை வைத்து, தலையை பிய்த்துக்கொண்டு பல வண்ண வியாக்கியானங்களை சொல்லிகொண்டிருக்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள்.

வளர்ந்த நாடுகளின் முதலாளித்துவ அரசுகள், முதலாளிகளுக்கும் வங்கிகளுக்கும் நிதி உதவி அளிப்பதற்காக, மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச சலுகைகளை கூட ஒழித்துக் கட்டி வருகின்றன. மக்களுக்கு உணவு, தண்ணீர், கல்வி போன்றவற்றை வழங்க வேண்டிய அரசு அதில் இருந்து விலகி பணம் இருப்பவர்கள் வாழட்டும், இல்லாதவர்கள் சாகட்டும் என முதலாளிகளுக்கு அடிபணிந்து கிடப்பதுதான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அறமாக முன் வைக்கப்படுகிறது.

ஆக்ஸ்ஃபேம், சர்ச் அக்ஷ்ன் ஆன் பாவர்ட்டி ஆகிய அமைப்புகள் இந்த பிரச்சனையை எப்படி எதிர்க்கொள்ளலாம் அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளன. பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது, வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்றவை. இதனால் தேவையான பணம் அரசுக்கு பெருகி மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்தலாம் என்கின்றன அவை.

ஆனால், உலகமயம், தனியார்மயம் தாராள மயம் போன்றவை ஏற்படுத்தியிருக்கும் இந்த பிரச்ச்னைகளை மேற்சொன்ன வரி விதிப்பு முறை மூலம் தீர்த்துவிட மூடியாது. லாபத்தை ருசித்த முதலாளிகள் மீண்டும் மீண்டும் லாபத்திற்காக தமக்கான ஆதரவு அரசை ஏற்படுத்திக்கொள்வார்கள். ஒரு நாட்டில் தமக்கு சாதகமான சூழல் மாறி விட்டால், உடனேயே தமது மூலதனத்துடன் இன்னொரு நாட்டுக்கு நகர்ந்து விடுவார்கள். முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் எந்த ஒரு அரசும் மேலே சொன்ன பரிந்துரைகளை ஏற்று நிறைவேற்றப் போவதில்லை.

இன்று உலகத்தை பீடித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கான ஒரே தீர்வு, முதலாளிகளின் லாப வேட்டையின் அடிப்படியில் இயங்கும் இந்த பொருளாதார அமைப்பையும், அதற்கு முட்டுக் கொடுக்கும் அரசு அமைப்புகளையும் ஒழித்துக் கட்டி மக்கள் நலனை முன்வைக்கும் சோஷலிச பொருளாதாரத்திற்கான அரசை உருவாக்க வேண்டும். அப்படி சோசலிச முகாம் உருவாகாத வரை மேற்குலக மக்களுக்கு விடுதலை இல்லை.

மேலும் படிக்க

காட்டுப்பள்ளி எல்&டி நிர்வாகத்தின் அடக்குமுறை !

2

காட்டுப்பள்ளி எல்&டி நிர்வாகத்தின் அடக்குமுறை ! பணி நிரந்தரம் கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு வேலூர் சிறை !!

சென்னை மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல்&டி கப்பல் கட்டும் தளத்தில் கடந்த 29.05.2013 அன்று பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 150 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு பொய் வழக்கு போடப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காட்டுப்பள்ளி என்ற குப்பத்தை சேர்ந்த மக்களின் நிலங்களை பிடுங்கிக்கொண்டு அங்கு நிறுவப்படும் தொழிற்சாலையில் பணி வழங்குவதாக வாக்குறுதிகளை வீசி தமிழக அரசின் உதவியுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் எல்&டி நிறுவனம், கப்பல் கட்டும் தளம், துறைமுகம், மற்றும் பேக்ரிகேஷன் யுனிட் ஆகியவற்றை அமைத்தது. நிலத்தை பிடுங்கிய மீனர்களுக்கு மாற்று இடம் மட்டும் தந்து மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைத்து சுரண்டி வருகிறது எல்&டி நிறுவனம்.

காட்டுப்பள்ளி கிராமத்தில் எல்&டி நிறுவனம் துறைமுகம் அமைத்ததினால் பழவேற்காட்டை சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் கடலில் மீன் பிடிக்க முடியாததோடு மீன் வளமும் குறைந்துள்ளது. துறைமுகத்தினால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களுக்கு வேலை தருவதாக அரசின் முன்னிலையில் எல்&டி நிறுவனம் ஒப்புக் கொண்டது.

1,750 மீனவர்களுக்கு வேலை தருவதாக வாக்களித்தபடி இன்று வரை ஒருவரையும் பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்து தோட்ட வேலைகள், துப்புரவு பணிகளை கொடுத்து மீனவ தொழிலாளர்களை ஏமாற்றி வந்தது எல்&டி நிறுவனம். இது தாசில்தார், கலெக்டர் என அரசு துறையின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்பும் எதையும் மதிக்காமல் தன் விருப்பம் போல் இயங்கி வந்தது எல்&டி நிறுவனம். கடந்த வருட(2012) இறுதியில், இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என மீனவ கிராம மக்கள் முற்பட்ட போது அனைத்து சோதனை சாவடிகளிலும் மீனவர்களை தடுத்துள்ளார் பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பொன்.ராஜா. இந்நிறுவனத்தில் ஒப்பந்தங்களின் மூலம் மட்டுமே மாதம் ரூ 45 லட்சம் வரை எம்.எல்.ஏ-வுக்கு தரப்படுகிறது. இதனால்தான் எல்&டி நிறுவனத்திற்கு ஆதரவாக எம்.எல்.ஏ பொன்.ராஜா செயல்படுகிறார் என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 28.05.2013 அன்று 3 மாத பயிற்சி காலம் முடித்து பணிக்குச் சென்ற 13 தொழிலாளர்களை தோட்ட வேலை செய்யும் படி நிர்வாகம் பணித்துள்ளது. அரசாணைப்படி தங்களுக்கு வேலை தராததோடு மட்டுமின்றி தோட்ட வேலை செய்யச் சொல்லும் நிர்வாகத்தை 13 தொழிலாளர்களும் கண்டித்துள்ளனர். இதனால், ஏற்கனவே கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மீனவ தொழிலாளிகளை தோட்ட வேலை செய்யுமாறு கூறி விட்டு, இந்த 13 தொழிலாளிகளை கப்பல் கட்டும் பணி செய்யுமாறு நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த மீனவத்தொழிலாளர்கள் 250 பேரையும் ஒருங்கிணைத்து எல்&டி நிறுவனத்தின் கீழ் நேரடி பணி நிரந்தரம், எல்&டி நிறுவனத்தின் முத்திரையிட்ட அடையாள அட்டை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளுக்கு செவி மடுக்காத எல்&டி நிர்வாக உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளது. பேசித் தீர்த்துக்கொள்ளலாம், தொழிலாளர் பிரதிநிதிகளாக நான்கு பேர் மட்டும் உள்ளே வாருங்கள், பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றெல்லாம் டி.எஸ்.பியும், போலீசு அதிகாரிகளும் பேசிய பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல், ‘உள்ள வந்தா நீ என்ன பேசுவனு எங்களுக்கு தெரியும், எதுவா இருந்தாலும் இங்கியே எங்க எல்லார் முன்னாடியும் பேசு’ என முகத்திலறைந்து போராட்டத்தினை தொடர்ந்தனர் தொழிலாளிகள். காலையில் தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் இரவு வரை தொடர்ந்தது. மறுநாள் காலையிலும் தொடர்ந்தது போராட்டம். இப்படியே விட்டால் போராட்டம் தீவிரமாகி அடுத்த யூனிட்களிலும் பற்றிக் கொள்ளும் என்பதை உணர்ந்த போலீஸ் தொழிலாளர்களை கைது செய்து மீஞ்சூரில் மண்டபத்தில் அடைத்தது. தகவல் அறிந்ததும் மீனவ மக்கள் மண்டபத்துக்கு விரைந்தனர். துளியும் தாமதிக்காத காவல் துறை ‘சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும், ஜனநாயகத்தை காக்கவும் துரிதமாக செயல்பட்டு தொழிலாளர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் இடமில்லை என்று பொய் சொல்லி அனைவரையும் வேலூர் சிறையில் அடைத்ததன் மூலம் எல்&டி முதலாளிக்கு சேவை செய்து நெஞ்சம் குளிர்ந்தது.

சிறையில் உள்ள தொழிலாளர்களுக்கு தனியாக வழக்கறிஞர் வைக்க வேண்டாமெனவும், திங்கட்கிழமை (03.05.2013) நீதிமன்றம் இயங்கத் தொடங்கியவுடன் வியாழக் கிழமைக்குள் (06.05.2013) தானே பிணையில் எடுத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளதால், எம்.எல்.ஏ பொன் ராஜாவிடம் இப்பிரச்சனையை விட்டுள்ளனர் மீனவ மக்கள்.

தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளிகளிடமும் மீனவர்களிடமும் தகவல் திரட்டி எல்.&டி நிர்வாகத்தையும், எல்&டி முதலாளிக்கு துணை போகும் தமிழக அரசையும் கண்டித்து சுவரொட்டி ஒட்டினர். சுவரொட்டி ஒட்டும் போது மீனவ மக்கள் நம்மை ஆதரித்தனர் முக்கிய இடங்களில் ஒட்டுமாறு வழிகாட்டியதோடு, போஸ்டர் ஒட்டிய தோழர்களுக்கு குளிர்பானம் வாங்கித் தந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். சம்பவத்திற்க்கு பின், போலீசு பாதுகாப்புடன் எல்&டி கப்பல் கட்டும் தளத்தில், எந்த தடங்கலுமின்றி தொழிலாளர்களின் கைகளினால் கப்பல் கட்டப்பட்டுகொண்டிருக்கிறது.

அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், முதலாளித்துவமெனும் கப்பலை மூழ்கடிக்கவும் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டி பு.ஜ.தொ.மு அமைப்பை கட்டிக்கொண்டிருக்கிறது.

final

தகவல் : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மணலி

ஹெர்பாலைஃப் : குண்டு – ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி !

21

சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடந்த துரத்தல் அது. நான் தினசரி காலையில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். பூங்காவின் நுழைவாயில் அருகே அந்தப் பெண்ணையும் டிப்டாப் இளைஞரையும் பார்க்க முடியும். வெள்ளைக் கோடுகளும் நீலக் கோடுகளும் போட்ட ஒரு சிறிய நிழற்குடையை பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். அதன் கீழே ஒரு எடை பார்க்கும் கருவி இருக்கும். கையில் ஒரு சிறிய கருவியை வைத்திருப்பார்கள். முகத்தில் மாறாத புன்னகை.

“சார் வாங்க சார், இலவசமா உடல் எடை பாருங்க, உங்க கொழுப்பு அளவு என்னானு சொல்றோம் சார். இலவசம் தான் வாங்க சார்” தேனில் சர்க்கரையைக் கலந்தது போன்ற இனிமை.

எனக்கு இவர்களது தோற்றமும் அணுமுறையுமே கொஞ்சம் மனக்கிலேசத்தை உண்டாக்கியது. பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் படித்த காலத்தில் இது போன்ற டிப்டாப் பெந்தேகொஸ்தே ஆசாமி ஒருவரிடம் ‘நற்செய்தி’ கேட்கச் சென்று கிடைத்த அனுபவம் வேறு அச்சுறுத்தியது. அன்று காதில் ரத்தம் வழிய ஓடிவந்த எனக்கு தொடர்ந்து பத்து நாட்களாக ஆவி, சாத்தான், இயேசு, பரமண்டலம், நரகம், கொதிக்கும் வென்னீர், உருகும் எலும்பு, சாவு என்று ஒரே கெட்ட சொப்பனமாக வந்து கொண்டிருந்தது. வீட்டில் பயந்து போய் தாயத்து மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்றனர். அதற்கடுத்த பத்து நாட்கள் எனது கனவுக்குள் முண்டக்கண் மாரியும், சுடுகாட்டு மாடனும், ஒண்டி முனியும், பிடாரியும் ஊடுருவி கும்மியடித்தனர். அந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆயுளுக்கும் மறக்கவே முடியாது.

04-herbalife-1என்றாலும் தொடர்ந்த இவர்களின் நச்சரிப்புத் தாளாமல், என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்று முடிவு செய்தேன். எடையையும் உயரத்தையும் அளந்தவர்கள், ஒரு சிறு கருவியை என்னிடம் கொடுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார்கள்.

“ஐயையோ சார்…..” எப்போதும் சிரிப்பைக் காட்டும் அப்பெண்ணின் முகத்தில் அதிர்ச்சி. அந்த இளைஞரின் முகமும் இருண்டது.

“ஐயையோ என்னாங்க எதுனா கேன்சாரா…?” சமீப நாட்களாக சளிக் காய்ச்சல் வருவது போல் எல்லோருக்கும் கேன்சர் வரப்போவதாக பத்திரிகைகளில் பீதியைக் கிளப்பி வருகிறார்களே.

“உங்க உடம்பில் நிறைய கொழுப்பு சேர்ந்திருக்கு சார். இப்படியே விட்டீங்கன்னா கொலஸ்ட்ரால் கூடும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும், சர்க்கரை நோய் வரலாம், அப்புறம் மாரடைப்பு வரும். எடை அதிகமா இருக்கிறதாலே ஆர்த்ரிடிஸ் வரும், முதுகு வலி, மூட்டு வலி, கழுத்தெலும்பு தேய்மானம், தோள்பட்டை வலி… கேன்சரே கூட வந்தாலும் வரலாம் சார்.”

அணுகுண்டுகளாக வீசிக் கொண்டிருந்த வரை அவசரமாக இடைமறித்தேன்.

“இல்லங்க, இப்ப நான் நல்லாத்தானே இருக்கேன். நீங்க என்னென்னவோ சொல்றீங்களே?”

“சார் உங்க பிரச்சினை என்னன்னு உங்களுக்கு எப்படி சார் தெரியும்? அதனாலே தான் சொல்றேன் ஒரு இலவச பரிசோதனை செய்துக்கங்க. நாளைக்குக் காலைல ஏழு மணிக்கு சாப்பிடாம வெறும் வயிறோட இந்த முகவரிக்கு வாங்க. ஆரோக்கியமா வாழ்றது எப்படின்னு இலவச ஆலோசனைகள் கிடைக்கும். நோயற்ற வாழ்வு தானே சார் குறைவற்ற செல்வம்?”

மார்க் ஹியூக்ஸ்
ஹெர்பாலைஃப் நிறுவனர் மார்க் ஹியூக்ஸ் ! மோசடி தொழில், மர்ம மரணம் !

பேசிக் கொண்டே கையில் முகவரி அட்டையைத் திணித்தார். அதில் “Turning Point” என்கிற பெயரும் தொடர்பு எண்ணும் அளிக்கப்பட்டிருந்தது. நாள் முழுவதும் குழப்பம். இணையத்தில் டர்னிங் பாயின்ட் என்று தேடியதில் உருப்படியான தகவல்கள் ஏதும் தேறவில்லை. மற்ற எல்லாவற்றையும் விட “ஹார்ட் அட்டாக்’ என்பது மட்டும் கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருந்ததால், “சரி, போய் என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே” என்கிற முடிவுக்கு வந்தேன்.

மறுநாள் காலை. திருப்பதியில் மொட்டையைத் தேடுவது போல் தேடியலைந்து அந்த முகவரியைக் கண்டு பிடித்தேன். அந்த சந்து முக்கில் இருந்ததே மொத்தம் பத்து கட்டிடங்கள் தான். எனினும், யாருக்குமே “டர்னிங் பாயின்ட்’ என்கிற பெயரே தெரியவில்லை. இவர்களும் பெயர்ப் பலகை ஏதும் வைத்திருக்கவில்லை. கடைசியில் பார்த்தால், அவர்களது அலுவலக வாசலிலேயே பதினைந்து நிமிடங்களாய் நின்று கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் விசாரித்திருக்கிறேன்.

உள்ளே அந்தப் பெண் இருந்தார். தனது பெயரை மாலா என்று அறிமுகம் செய்து கொண்டார்.

அது இரட்டைப் படுக்கையறை வசதி கொண்ட வீடு. வரவேற்பறையில் வண்ண வண்ணப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மனித உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் பாகங்களை விளக்கும் பெரிய போஸ்டர் மற்றும் இயற்கை உணவின் நன்மைகளை விவரிக்கும் போஸ்டர்களோடு சாய்னா நெஹ்வால், விராட் கோலி போன்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்வின் திருப்புமுனையே “டர்னிங் பாயின்ட்’ தான் என்று சொல்லிச் சிரிக்கும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

வரவேற்பறையில் என்னோடு சேர்த்து மொத்தம் எட்டு பேர் இருந்தனர். என்னைத் தவிர மற்றவர்கள் நடுத்தர வயதினர். அவர்கள் முகங்களில் மரண பீதி. அதில் வயதானவராகத் தெரிந்தவரிடம் இளைஞர் ஒருவர் தீவிரமாக எதையோ விளக்கிக் கொண்டிருந்தார்,

“சார் இந்தப் பொடியை சரியா மூன்று ஸ்பூன் எடுத்து இந்த டப்பாவுல போடுங்க. கொதிச்ச தண்ணீரை சரியா ஆறு நிமிஷம் ஆறவிட்டபின் உள்ளே ஊற்றுங்க. சரியா 100 மில்லி ஊற்றணும். ஊற்றின பின், இதோ இப்படி பிடிச்சிக்கங்க. அப்டியே கரகரகரன்னு குலுக்கணும். சரியா 60 செக்கண்ட் குலுக்கணும். வாட்ச் பார்த்துக்கிட்டே குலுக்குங்க. மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் ஒரே மூச்சில் குடிக்கணும். குடிச்சதும் அப்டியே ஆடாம அசையாம அஞ்சி நிமிசம் ஒக்காந்துடணும். சரியா பைவ் மினிட்ஸ்.” வேதியல் பரிசோதனைக் கூடத்திற்குள் நுழைந்து விட்டதைப் போலிருந்தது.

சிறிது நேரத்தில் மாலா தன்னோடு ஒரு இளைஞரை அழைத்து வந்தார். “சார், இவர் பேர் பிலால். இவரு உங்களுக்கு சொல்லுவார்’ என்றவாறே எதிரே அமர்ந்தனர். அந்த இளைஞர் பேசத் துவங்கினார்.

“சார், இந்த ப்ராடக்ட் பயன்படுத்தும் முன் எனக்கு உடல் பருமன் பிரச்சினை இருந்தது. அது போக, சைனஸ், வீசிங், அல்சர் கூட இருந்தது.. இப்ப ஒரு வருசமாச்சி… எல்லாம் சரி ஆய்டிச்சி” என்று துவங்கியவர், ‘பிராடக்ட்’ என்று அழைக்கப்பட்ட கந்தாயம் பற்றி பலவாறாக சொல்லிக் கொண்டேயிருந்தார். “மேரு மலையை மத்தாக கொண்டு வாசுகியைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த தங்கக்குடமொன்றில் இருந்து எடுத்த பொருள்” என்னும் அளவுக்கு அவரால் விதந்தோதப்பட்ட ‘பிராடக்ட்’ இன்னும் என் கண்களுக்கு தரிசனம் கொடுக்கவில்லை என்பதை மாலாவுக்கு நினைவூட்டினேன்.

04-herbalife-3“அவசரப்படாதீங்க அதை உள்ளே இருக்கிற ஆலோசகர் காட்டுவார்” என்று பூடகமாகவே பதில் சொன்னார்..

“ஆலோசகரா…. அதுக்கு காசு கட்ட வேண்டுமோ” என் கவலை எனக்கு.

“சீச்சீ அதெல்லாம் இலவசம் தான்” – ‘சீய்ய்ய்… அற்பனே’ என்கிற தொனியில் பதில் வந்து விழுந்தது.

தொடர்ந்து அவரே உள்ளறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கே ‘கன்சல்டன்ட்’ எனப்பட்டவர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கையிலிருந்த கோப்பை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“சார், அது உங்க ரிப்போர்ட் தான். இவரு தான் கன்சல்டன்ட் குமார்” காதருகே பிலாலின் குரல் கிசுகிசுத்தது. ‘இங்கே என்னா சத்தம்….’ என்பதைப் போல் குமார் தலையை உயர்த்தி முறைத்தார். “ஹி..ஹி..ஹி.. சாரி சார்” பிலால் பவ்யமாக மன்னிப்புக் கேட்டு விட்டு அகன்றார்.

குளிரூட்டப்பட்ட அந்த அறையில் ஆழ்ந்த யோசனையில் குமாரும், ஆழ்ந்த குழப்பத்தில் நானும் மட்டும் இருந்தோம். ஐந்து நிமிடங்கள் பேச்சற்ற மெளனத்தில் கழிந்தது. எனது ‘ரிப்போர்ட்’ என்று சொல்லப்பட்ட கோப்பை அவர் பல கோணங்களில் உற்றுப் பார்த்தார். இடையிடையே தன் முன்னிருந்த மடிக்கணினியில் எதையோ சரிபார்த்துக் கொண்டார். சரியாக முன்னூற்றி இரண்டாவது செகண்டில்,

“கொஞ்சம் சிக்கல் தான்” தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் என்னிடம் சொன்னார்.

“என்ன சொல்றீங்க சார்” எனது இதயத் துடிப்பை என்னாலேயே கேட்க முடிந்தது.

04-herbalife-4“உங்க BMI 29. அதாவது இப்ப நீங்க ஓபிஸ். ஒபிஸிட்டின்றது வெறுமனே பருமன் என்று மட்டும் புரிஞ்சிக்கக் கூடாது. இப்பல்லாம் பாருங்க சின்ன வயசுலயே கேன்சர் வருது, ஹார்ட் அட்டாக் வருது, இன்னும் சிலர் பார்த்தீங்கன்னா என்ன காரணம்னு தெரியாமலே கூட செத்துப் போயிடறாங்க. எதனாலேன்னு யாருக்காவது தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாதுங்க”

“கரெக்ட். யாருக்கும் தெரியாது. ஆனால், எதனாலேன்னு எங்களுக்குத் தெரியும். அதைச் சொல்லித் தரத் தான் உங்கள இங்கே வரவழைச்சிருக்கோம்” அவர் பேசிக் கொண்டிருந்த போது பிலால் கண்ணாடிக் கோப்பையில் ப்ரெளன் நிற திரவம் ஒன்றை எடுத்து வந்தார். “முதல்ல இதைக் குடிங்க”.

எடுத்து வாயில் வைத்தேன். கழு நீரின் சுவையா, கஷாயத்தின் சுவையா என்று பிரித்தறிய முடியாத ஒரு சுவை உச்சி மண்டை வரை ஊடுருவித் தாக்கியது. எனது முகச் சுளிப்பைக் கண்டவர், “ஊட்டச்சத்து பானம் தான், பயப்பட ஒன்னுமில்லை” என்று ஊக்கப்படுத்தினார். மனதை திடப்படுத்திக் கொண்டு ஒரே வீச்சில் குடித்தேன்.

“வெரிகுட், இப்ப நீங்க குடிச்சீங்களே இது அமேசான் காடுகள்ல மட்டுமே கிடைக்க கூடிய மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட விசேஷமான பானம்” என்றவர் தொடர்ந்தார், “இன்றைக்கு நாம் சாப்பிடுவதெல்லாம் சரிவிகிதமான போஷாக்கு உணவு கிடையாது. அதே மாதிரி எதுல பார்த்தாலும் பூச்சிக் கொல்லி மருந்தப் போட்டு தயாரிக்கிறான். உடம்புக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காததோடு பலவகையான நச்சுக்களும் உடம்பில் சேர்ந்து கொண்டே போகிறது. இதனால பலவிதமான நோய்கள் உடம்பில் உருவாவதோடு உடல் எடையும் கண்டபடி அதிகரிச்சிட்டே போகுது. இதுல, எங்களோட திட்டம் என்னான்னா, முதல்ல Cleansing regime (தூய்மைப்படுத்தும் செயல்திட்டம்). முதல் வாரத்துக்கு உங்களோட காலை உணவுக்கு பதிலாக இந்த பானத்தை மட்டும் குடிக்கணும்”

எனக்கு பிலால் கொடுத்த பானத்தைக் குடித்ததில் இருந்தே கொஞ்சம் போதையாகவும் தள்ளாட்டமாகவும் இருந்தது. “சார், முதல்ல உங்க கம்பெனி பேர் என்னாங்க?”

04-herbalife-5“ஹெர்பாலைஃப் (Herbalife). சரி உங்களுக்கு கார்டு போட்டு விடலாமா? முதல் தவணையா ஐந்தாயிரம் ரூபாய் கட்டி விடுங்க” அட்டை ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு எதிர்பார்ப்போடு என்னைப் பார்த்தார். லேசான தள்ளாட்டமும் தடுமாற்றமுமாக இருந்தாலும் உடனடியாக ஓடிப் போய் விடவேண்டும் என்று தோன்றியது.

“கார்டு போட வேண்டாம். நான் வீட்டில் கேட்டு விட்டு வருகிறேன்” என்றேன்.

“ம்ம்ம்.. நீங்க நம்பலைன்னு தெரியுது. எங்களோட ரிசல்ட்ஸ் உத்திரவாதமானது. வேணும்னா ஏற்கனவே இதால பயனடைஞ்சவங்களை கேட்டுப் பாருங்களேன்” என்று என்னிடம் சொன்னவர், “மாலா, பிலால் இங்க வாங்க” என்று வெளியே பார்த்து குரல் கொடுத்தார். எந்த விளக்கத்துக்கும் அப்போதைக்கு நான் தயாராக இல்லை.

“இல்லைங்க. நான் கொஞ்சம் விசாரித்து விட்டு சொல்கிறேன்” என்றவாறே கிளம்பினேன். இதற்குள் மாலாவும், பிலாலும் ஏதோ விளக்குவதற்காக வர, கிட்டத்தட்ட தப்பித்து ஓட வேண்டியதாகி விட்டது.

முன்பு இணையத்தில் ‘Turning Point’ என்று தேடியதில் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இப்போது அவர்கள் நிறுவனத்தின் உண்மையான பெயரான Herbalife என்பதை இணையத்தில் தேடியதும் தகவல்களாக வந்து குவியத் துவங்கின. இதோ ஒரு மோசடியின் வரலாறைக் கேளுங்கள்.

ஹெர்பாலைஃப், 1980-ம் வருடம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் துவங்கப்பட்டது. தனது தாய் ஜோன்னா உடற் பருமனால் அவதிக்குள்ளானதை சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்ததாகவும், இதற்கு ஒரு தீர்வு கண்டு பிடித்தே ஆகவேண்டும் என்கிற லட்சிய வெறியில் தான் எடைக் குறைப்புக்கான ஊட்டச்சத்து பானத்தை தாம் கண்டு பிடித்ததாகவும் ஹெர்பாலைஃபின் நிறுவனர் மார்க் ஹூயுக்ஸ் சொல்லிக் கொண்டார். உடல் எடை குறைவு மாத்திரமின்றி, பொதுவான உடல் நலனுக்கும் தனது தயாரிப்புகள் உகந்தவை என்று சந்தைப்படுத்தினார்.

ஒரு பக்கம் அமெரிக்க நடுத்தர வர்க்கத்தினரிடையே பொதுவாக காணப்பட்ட உடற்பருமன் பிரச்சினை மார்க்கின் நிறுவனத்தை வெகு சீக்கிரத்தில் பிரபலப்படுத்தியது. இன்னொரு பக்கம் மார்க் தனது பொருட்களை சந்தைப்படுத்த வழக்கமான வழிமுறைகளைக் கையாளவில்லை. நேரடிச் சந்தைப்படுத்தும் முறை என்று சொல்லப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையைக் கையாள்கிறார். ரஷ்யர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெயராலேயே அழைக்கப்படும் பொன்ஸி திட்டம் அல்லது பிரமிட் மார்க்கெட்டிங் முறை தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்று அழைக்கப்படுகிறது.

இந்த முறையின் கீழ், ஒரு நிறுவனத்தின் பொருட்களை நாம் வாங்க வேண்டுமென்றால் அதில் கட்டணம் கட்டி உறுப்பினராகச் சேர வேண்டும். உறுப்பினராகச் சேர்வோர் தமக்குக் கீழே சிலரைச் சேர்க்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குக் கீழ் சிலரைச் சேர்க்க வேண்டும். இப்படி இந்த முக்கோண இணைப்பு வளர்ந்து கொண்டே போகும். இந்த முக்கோண அமைப்பில் ஒருவருக்குக் கீழ் நான்கு அல்லது ஐந்து வரிசைகளில் நபர்கள் சேர்ந்த பின், முதலாமவருக்கு கமிஷன் கிடைக்கத் துவங்கும். அதாவது, கீழே சேர்பவர்கள் கட்டும் கட்டணத்திலிருந்து ஒரு பெரும் பகுதி நிறுவனத்திற்கும், ஒரு சிறிய பகுதி வரிசையின் மேலே இருப்பவர்களுக்கும் சேரும்.

எம்.எல்.எம் நிறுவனங்கள் சொல்வது போல் இந்த பிரமிட் வளர்ச்சி தொடர்ந்து சாத்தியப்படாது என்பதே உண்மை. ஏனெனில், ஒருவர் தனக்குக் கீழ் நான்கு பேர்களைச் சேர்க்கிறார் என்றால், பதினேழாவது வரிசை வரும் போது இந்த முக்கோணத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகை ஆயிரம் கோடியைத் தொட்டிருக்கும். இது இன்றைய உலக மக்கள் தொகையை விட அதிகம். எம்.எல்.எம் நிறுவனம் ஒன்றின் கணக்குகளை ஆராய்ந்ததில் அந்நிறுவனத்தில் இணைந்துள்ளவர்களில் 99.7 சதவீதம் பேருக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

எம்.எல்.எம் பாணியிலான பிரமிட் வணிக முறையோடு மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் சேர்த்து தனது ஊட்டச்சத்து பானங்களை சந்தைப் படுத்திய ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்). இந்நிறுவனத்தின் தயாரிப்பான பார்முலா 1 என்கிற பானம் வருடாந்திரம் சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்புக்கு விற்பனையாகிறது. நேரடி விற்பனை என்கிற வழிமுறையில் ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யாமல் தனிநபர்களிடம் விளம்பரங்கள் செய்ததன் மூலம் மட்டுமே ஹெர்பாலைஃப் நிறுவனம் அமெரிக்காவில் நைக் நிறுவனத்திற்கு இணையாக மக்களிடம் அறிமுகம் பெற்றுள்ளது.

இவ்வாறு விளம்பரங்கள் செய்யப்படும் ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் பல்வேறு ஊட்டச்சத்து பானங்களில் தடைசெய்யப்பட்ட நச்சு மூலப் பொருட்களான கூக்குவா, கோம்ப்ரி மற்றும் காராஸ்கா உள்ளிட்டவை கலந்துள்ளன. தொடர்ச்சியாக இந்த பானங்களை உட்கொள்வோருக்கு கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்டு பல்வேறு நாடுகளில் ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் பானங்களை உட்கொண்டவர்களுக்கு ஈரல் பாதிப்பு ஏற்பட்டது மருத்துவப் பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.

ஹெர்பாலைஃப் நிறுவனம் சந்தைப்படுத்தும் பானங்கள் மற்றும் பிற பொருட்களை உணவுப் பொருட்களாக கணக்குக் காட்டுவதன் மூலம், பல்வேறு நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு வாரியங்களின் பிடியில் இருந்து நழுவிக் கொள்வது, உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்டுள்ள இரசாயனப் பொருட்களின் பட்டியலில் இல்லாத வேதிப் பொருட்கள் இருந்தாலும் அவற்றுக்கான சோதனைகளில் இருந்து தப்புவது, இன்னும் சட்ட நடைமுறைகளில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட முறைகளிலேயே தொடர்ந்து சந்தையில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது.

தற்போது பல்வேறு நாடுகளில் ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் ஊட்டச்சத்து பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது பிராண்டுகளில் ஏதேனும் ஒன்று தடை செய்யப்பட்டால் அதையே வேறு பெயரில் உடனடியாக சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம் அரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவுகினறது அந்நிறுவனம். இந்தியாவில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விற்பனை செய்ய ஏற்கனவே இருக்கும் சட்ட நடைமுறைகள் எண்ணற்ற ஓட்டைகளோடு இருக்கும் நிலையில், மக்கள் இது போன்ற மோசடி நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருப்பதோடு இவர்களைச் சந்திக்க நேரும் போது எதிர்த்துப் போராடவும் முன்வர வேண்டும்.

மாறி வரும் வேகமான வாழ்க்கைச் சூழலில் அதிகரித்து வரும் நோய்கள், இந்நோய்கள் குறித்து மக்களின் பயம், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் இருக்கும் ஆர்வம் என்று சாமானிய மக்களுக்கு இருக்கும் அச்சங்களையும் எதிர்பார்ப்புகளையும் தனது லாபவெறிக்கு பயன்படுத்திக் கொண்டே இது போன்ற நிறுவனங்கள் வளர்கின்றன..

உலகமயமாக்கல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமானது, நடுத்தர வர்க்கத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரோக்கியம், நீண்ட ஆயுள் என்ற பெயரில் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். சில்லறைப் பிரச்சினைகளுக்கும் அஞ்சுகிறார்கள். இந்த இடைவெளிக்குள் மோசடியான வணிக நடைமுறைகளைப் பின்பற்றி நுழைகின்றன ஹெர்பாலைஃப் போன்ற நிறுவனங்கள். உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும், உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பதற்கும் முறையான உடற்பயிற்சியும், ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபடுவதும், உடல் உழைப்பில் ஈடுபடுவதும், சரிவிகித உணவுத் திட்டங்களைப் பின்பற்றுவதுமே சரியான வழி. இதற்கு வேறு குறுக்குவழிகளைத் தேடினால், ஹெர்பாலைஃப் போன்ற மோசடி கும்பலின் வலையில் தான் விழ வேண்டியிருக்கும்.

– மாடசாமி

பின்குறிப்பு :

ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மோசடியான வணிக நடைமுறை மட்டுமே காரணமல்ல. அதன் நிறுவனரான மார்க்கைச் சுற்றி கவனமாக பின்னப்பட்டிருந்த வழிபாட்டுக்குரிய ஆளுமை (personality cult) குறித்த பிம்பங்களும் இதில் முக்கிய பங்காற்றியது. ஆரோக்கியமாக வாழ்வது குறித்தும் இயற்கை உணவுகள் உட்கொள்வது குறித்தும் அவர் நடத்திய கருத்தரங்கங்களும் உரைகளும் பிரபலமானவை. மார்க் தனது 44-வது வயதில் அதீதமாக போதைப் பொருள் உட்கொண்டதாலும் குடிப்பழக்கத்தினாலும் இறந்து போனார்.
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________

மாலேகான் குற்றப்பத்திரிகையில் இந்து பயங்கரவாதிகள் !

6

டந்த வாரம் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு பேர் மீதும் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மகாராஷ்ட்ரா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் இந்த நான்கு மதவெறியர்களின் குண்டு வைப்புச் சதிச்செயல்களும் அவர்களின் தொடர்புகளும் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் பிரக்யாசிங் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை.

மாலேகான் குண்டுவெடிப்பு இடம்.
மாலேகான் குண்டு வெடிப்புகள் 2006 : படா கப்ரிஸ்தான் மசூதிக்கு வெளியில்.

2006-ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை மதியம். மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் இஸ்லாமியர்கள் திரளாக வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் சரியாக தொழுகை முடிகின்ற நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது ஒரு குண்டு. சிதறித் தெரித்த சில்லுகளுடன் மேலே எழும்பிய புகைப்படலம் களைவதற்குள் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. அதை அடுத்து அருகில் இருந்த சந்தைப் பகுதியில் ஒரு குண்டு, என்று அடுத்தடுத்து தொடர்ச்சியாக நான்கு குண்டுகள் வெடித்துச் சிதறின. பிய்த்தெறியப்பட்ட சதைத் துணுக்குகளால் அந்த இடமே இரத்தகளரியானது. இந்த தாக்குதலில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.

இது மாலேகானில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல். இதற்கு அடுத்த பயங்கரவாத தாக்குதல் 2008 ஆம் ஆண்டின் ரம்ஜான் மாதத்தில் நடத்தப்பட்டது. டிபன் பாக்ஸ்களில் அடைக்கப்பட்ட வெடிகுண்டுகள் மாலேகானில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் வெள்ளிக்கிழமை தான், மதிய தொழுகை முடியும் நேரத்தில் தான் இந்த குண்டுகளும் வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் மொத்தம் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக கடமையில் இறங்கிய காவல்துறை இதற்கு முஸ்லீம் பயங்கரவாதிகள் தான் காரணம் என்று வெற்றிலையில் மை போட்டு பார்த்ததைப் போல அடித்துக் கூறியது. இவர்கள் தான் குண்டு வைத்தனர் இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட சிமி அமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி ஒன்பது அப்பாவி முஸ்லீம்களை கைது செய்து சிறையில் தள்ளினர். ஆனால் அவர்கள் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் 2012 இல் விடுவிக்கப்பட்டனர். அதாவது, தவறே செய்யாமல் பயங்கரவாதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள்
பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள்.

இந்தியாவின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் உடனே இந்து பொதுப்புத்தியில் தாடி, குல்லா வைத்த முஸ்லீம் முகங்கள் தான் தோன்றும். அந்த அளவுக்கு இசுலாமியர்களைப் பற்றிய இந்து பெரும்பாண்மையின் கண்ணோட்டம் ஆர்.எஸ்.எஸ் காவிக் கண்ணோட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த கண்ணோட்டத்தை வடிவமைப்பதிலும், இஸ்லாமியர்களைப் பற்றிய பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் ஜனநாயகத் தூண்கள் என்று தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்ளும் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. குண்டு வெடிப்புகள் நடக்கும் போதெல்லாம் அநீதியான முறையிலும் ஒருதலை பட்சமாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான பொதுக்கருத்தையும் வெறுப்பையும் அதிகரிக்கும் கருத்துக் கருவிகளாகவே இந்த ஜனநாயகத் தூண்கள் செயல்படுகின்றன.

பயம், பீதி, பதட்டம் என்று உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க இத்தகைய தருணங்களில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தம் பங்கிற்கு தமது சொந்த கற்பனைகளையும், பொய்களையும் எவ்வித தயக்கமும் இன்றி வாசகர்களிடம் அள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளுக்கு போட்டியாக முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்குகின்றன. வெளியில் ஜனநாயக வேடமும் மூளைக்குள் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் புத்தியையும் வைத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை தீவிரவாதம், பயங்கரவாதம் என்று ஊளையிடும் இந்த அகிம்சாவாதிகள் எல்லாம் இந்து தீவிரவாதிகள், இந்து பயங்கரவாதிகளின் குண்டுவைப்புகளை பற்றி வாய் திறப்பதே இல்லை.

மாலேகான் தாக்குதலுக்கு முன்பும் இதே பாணியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2003-ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், பார்பானி நகரில் உள்ள ரஹ்மத் நகர் மகமதியா மசூதியில் ஒரு தாக்குதலும், 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், புர்ணா நகரின் சித்தார்த் நகரில் உள்ள மிராஜ் உல் உலூரம் மதறாசா மற்றும் மசூதியிலும் இதே போன்ற வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் ஜால்னா நகரில் உள்ள காதிரியா மசூதியிலும் குண்டுகள் வெடித்தன. 2006-ம் ஆண்டு ஐதராபாத் மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளும் இதே பாணியில் வெள்ளிக்கிழமை, மதிய நேரங்களில் தான் நடத்தப்பட்டன.

அசிமானந்தா சொருகிய ஆப்பு

ஆனால், அடுத்த குண்டு மசூதியில் வெடிக்கவில்லை. ஒரு வீட்டிற்குள் வெடித்தது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்ட்ரா மாநிலம் தரோடாவைச் சேர்ந்த ராஜ்கோண்ட்வர் என்பவரது வீட்டிற்குள் இருந்து வெடித்துச் சிதறியது. பயங்கரவாத தாக்குதல்களுக்காக தயாரித்துக் கொண்டிருந்த போதே அந்த குண்டுகள் வெடித்துச் சிதறிவிட்டன. இந்த வெடி விபத்தில் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த இருவர் அதே இடத்தில் இறந்தனர், ஐந்து பேர் படுகாயத்துடன் கைது செய்யப்பட்டனர். இந்த குண்டுகள் ஒளரங்காபாத் மசூதியை தாக்குவதற்காக தயாரிக்கப்பட்டவை என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. அப்போது தான் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வைப்பு சதி வேலைகள் ஓரளவுக்கு வெளியே தெரிந்தன. இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம் தேசபக்த ஒப்பாரியும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி விதம்விதமான திரைக்கதைகளையும் எழுதுகின்ற பத்திரிகைகள் எல்லாம் அப்போது கேடுகெட்ட முறையில் உண்மைகளை மூடி மறைக்கவே முயற்சித்தன.

அதன் பிறகு குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். மாலேகானில் நடத்தப்பட்ட இரண்டாவது குண்டு வெடிப்பு தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் பெண் சாமியார் பிரக்யா சிங்கும், இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் மேஜர் ஜெனரல் தகுதியில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்கள் தான் இந்து பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு பயிற்சியளித்துள்ளனர். இவர்களைத் தவிர மற்றொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் கைது செய்யப்பட்டார். அவர் லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு குண்டு வைப்புகளுக்கு இந்திய இராணுவத்திலிருந்து வெடி மருந்துகளை கொண்டுவந்து கொடுத்த தேசபக்தர் இவர் தான். இந்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவைப்புகளில் எல்லாம் இவனுடைய பங்கு மிகவும் முக்கியமானது.

பிரக்யா உள்ளிட்டோரின் கைதைத் தொடர்ந்து அதே ஆண்டில் உ.பி மாநிலம் கான்பூரில் வைத்து தயானந்த் பாண்டே என்கிற சாமியார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் 2010-ம் ஆண்டு அசிமானந்தா என்கிற ஆர்.எஸ்.எஸ் சின் முழு நேர ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது தான் இந்த வழக்கில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இவர் தான் குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகளைப் பற்றிய பல உண்மைகளை முதன்முதலில் வாக்குமூலமாக அளித்தவர். அவருடைய வாக்குமூலத்தில் தனக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் மக்கா மஸ்ஜித் குண்டு வைப்பில் மட்டுமல்ல, 2006 இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்பு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். அசிமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ்க்கு சொருகப்பட்ட கூர்மையான ஆப்பாக அமைந்தது.

வாயை திறப்பதற்குள் மூச்சை நிறுத்திய ஆர்.எஸ்.எஸ்

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு

இந்துமதவெறிக் கும்பல் மசூதிகளை அடுத்து இரயில்களுக்கும் குண்டு வைக்கத் திட்டமிட்டது. அந்த திட்டத்தின் முதல் முயற்சியாக, 2007 ஆம் ஆண்டு டெல்லிக்கும் லாகூருக்கும் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவன் சுனில் ஜோஷி என்கிற ஆர்.எஸ்.எஸ்சின் முழுநேர ஊழியன். மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா உள்ளிட்ட அனைத்து குண்டுவெடிப்புகளிலும் மிகப்பெரியதொரு வலைப்பின்னல் செயல்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல்கள் அனைத்திலும் பிரக்யாசிங், ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், அசிமானந்தா, சுனில் ஜோஷி போன்ற கீழ்மட்ட தலைகளில் இருந்து பல உயர்மட்ட தலைகள் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதை சுனில் ஜோஷியின் கொலை அம்பலப்படுத்தியது.

குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்துமதவெறியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதாலும், ஏற்கெனவே கைதானவர்கள் பல உண்மைகளை கக்கிக்கொண்டிருந்ததாலும், சம்ஜவ்தா குண்டு வெடிப்பில் முக்கிய மூளையாக செயல்பட்ட சுனில் ஜோஷி கைது செய்யப்பட்டால் அவனும் வாக்குமூலத்தில் பல உண்மைகளை கக்கக்கூடும் என்கிற அபாயம் இருந்தது. அவனுக்கு இந்த சதிச் செயலின் மொத்த வலைப்பின்னலும் தெரிந்திருந்தது, யார், யார் பெரிய தலைகள், அவர்களின் பங்கு என்ன என்பது பற்றி எல்லாம் அவனுக்குத் தெரியும். எனவே அவன் கைதானால் பல முக்கிய தலைகளே உருளும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் இந்து பயங்கரவாதிகளே சுனில் ஜோஷியை 2007-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் தேவாசில் வைத்து போட்டுத் தள்ளிவிட்டனர். அசிமானந்தா இதையும் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் சுனில் ஜோஷியை கொன்றது பிரக்யாசிங் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தான் என்கிற உண்மையும் தெரியவந்தது. இந்த கொலைக்காகவும் பிரக்யா சிங் மீது ஒரு வழக்கு போடப்பட்டது.

நீதிமன்றத்தின் காவிப்பாசம்

பிரக்யா தாக்கூர்
போலீஸ் காவலில் பிரக்யா தாக்கூர்

குண்டுவெடிப்பு வழக்குகளில் இந்துத்துவ பயங்கரவாதிகள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். இரண்டாவதாக நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பங்காற்றிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முத்தலிக் என்பவன் 2011 ஆம் ஆண்டில் இறுதியாக கைது செய்யப்பட்டான். இவனையும் சேர்த்து இதுவரை பனிரெண்டு இந்துத்துவ பயங்கரவாதிகள் பல்வேறு குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே என்கிற இரண்டு பேர் இதுவரை பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இவர்களின் வனவாச வாழ்வு முடிந்து வெளியே வருவதோடு அடுத்த முறை பிரதமர் வேட்பாளர்களாகவும் கூட நிறுத்தப்படலாம். சும்மாவா, தியாகம் அல்லவா செய்திருக்கிறார்கள்.

மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பிரக்யாசிங் உள்ளிட்ட பதினோரு பேர் மீதும் ”மகாராஷ்ட்ரா திட்டமிட்ட குற்றத்தடுப்புச் சட்டத்தின்” கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டம் ஒரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாகும். இது கடுமையான சட்டப் பிரிவுகளை கொண்டது. இந்த குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை நாசிக் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்பாவி இஸ்லாமியர்களை பிடித்து ஆண்டுக்கணக்கில் உள்ளே தள்ளுவதில் மகிழ்ச்சி கொள்ளும் நீதி மன்றம், பிரக்யா சிங் உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகளை இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தது தவறு என்று கூறியதோடு அதை ரத்து செய்து, சாதாரண கோர்ட்டில் நடக்கும் சாதாரண வழக்கைப் போல இந்த வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை (அயோக்கியத்தனத்தை) கேட்டதும் பிரக்யாசிங்கின் தந்தைக்கு தலைகால் புரியவில்லை, தனது குடும்பத்தோடு நண்பர்கள் உறவினர்களுக்கு எல்லாம் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.

வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு குழுவிடம் மாற்றம்

இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்புப் படை விசாரித்து வந்தது. அது தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமியும், வேறு சில இஸ்லாமிய அமைப்புகளும் தான் இந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று கூறி ஒன்பது அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து உள்ளே தள்ளியதோடு வழக்கையும் அத்துடன் ஊத்தி மூடப்பார்த்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு இந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய அனைத்துக் குண்டுவெடிப்பு வழக்குகளையும் தீவிரவாத தடுப்புப் படையிடமிருந்து தேசிய புலனாய்வு குழுவிடம் 2011-ம் ஆண்டு ஒப்படைத்தது.

ராஜேஷ் தவாடே, குல்கர்னி
குண்டு வைப்பில் ஈடுபட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த ராஜேஷ் தவாடேயும் குல்கர்னியும்.

தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கிய பிறகு தான் ஓரளவுக்காவது உண்மைகள் வெளிவரத் துவங்கின. எனினும் வலதுசாரி கண்ணோட்டமுள்ள இந்திய ஊடகங்கள் முடிந்த அளவுக்கு தமக்கு விருப்பமற்ற இந்த உண்மைகளை மூடி மறைக்கவே பார்த்தன. மாலேகான் குண்டு வெடிப்புக்கு இந்து அமைப்புகள் தான் காரணம் என்பதை தேசிய புலனாய்வுக் குழு ஆதாரங்கள், சாட்சிகளுடன் தனது அதிகாரபூர்வமான முதல் அறிவிப்பை 28.12.2012 அன்று வெளியிட்டது. அதன் பிறகு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டிருந்த இந்து தீவிரவாதிகள் மீதான பிடி இறுக்கமடைந்தது.

இந்நிலையில் இம்மாதம் 23-ம் தேதி இவ்வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மாலேகான் குண்டுவைப்பில் லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பை தெளிவுபடுத்தும் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அமித் சவுகான் ஆகியோருக்கு எதிரான விசாரணை நடந்துவருவதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்ஜி மற்றும் டாங்கேயின் தலைக்கு ரூ.10 லட்சம்மும், அமித் சவுகானின் தலைக்கு ஐந்து லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் முக்கிய குற்றவாளிகளான புரோஹித், அசிமானந்தா, ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் பெயர்கள் இக்குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. ஒரு வேளை இவர்களை தப்பிக்க வைப்பதற்குத்தான் இந்தக் குற்றப்பத்திரிகையா என்றும் தெரியவில்லை. இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, துணை குற்றப்பத்திரிகை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நீதி நீதி மன்றத்தில் கிடைக்குமா ?

நாளையே மோடி ஆதரவாளர்களின் விருப்பப்படி பாசிச மோடி பிரதமரானால், இந்த குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பயங்கரவாதிகளும் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எந்த குற்றமும் செய்யாத அப்சல் குரு போன்ற அப்பாவிகளின் உயிரை குடித்து தனது வெறியை தீர்த்துக்கொண்ட பாசிச நீதிமன்றங்கள் செயல்படும் இந்தியாவில் இந்துமதவெறியர்களுக்கு எதிராக வழக்கும் விசாரணையும் நடப்பதே பெரிய விஷயம் தான். அந்த வகையில் தேசிய புலனாய்வுக் குழு இந்துவெறியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே நேரத்தில் விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டாலும், குற்றப்பத்திரிகை குற்றவாளிகளை சரியாக அடையாளம் காட்டினாலும் இந்திய நீதிமன்றங்கள் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீதியை வழங்கிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. நீதிமன்றங்களை மட்டுமே நம்பி இராமல் அதற்கு வெளியில் கட்டியமைக்கப்படும் மக்கள் போராட்டங்களால் தான் இந்த பயங்கரவாதிகளை தண்டிக்க முடியும்.

– வையவன்