Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 710

விஜய் : பிறந்தநாள் கொண்டாட முடியாத வீரம் !

18

வுன்சிலரோ, கல்லூரி மாணவரோ, இலக்கிய குருஜியோ டீக்கடை சந்து முதல் டிவிட்டர் சந்து வரை பிறந்த நாளுக்கு பிளக்ஸ் வைப்பதில் உலக சாதனை படைத்திருக்கும் தமிழ் நாட்டில் நடிகர் விஜய் மட்டும் ஏன் பிறந்தேன் எனும் சோகத்தில் இருக்கிறார்.

வரும் ஜூன் 22 அவரது 39-வது பிறந்த நாளாம். இதற்காக தமிழகம், இல்லையில்லை தென்னிந்திய அளவில் ரசிகர்களை திரட்டி ஜூன் 8-ம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் இருக்கும் ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்டமாக பிறந்த நாள் கொண்டாட இருந்தார் விஜய். அந்த விழாவில் 3,900 பேருக்கு ஒரு கோடியில் நலத்திட்ட உதவி, 39,000 பேருக்கு பந்தல், விருந்து என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.

'சுற்றுச் சூழல் காவலர்' விஜய்
‘சுற்றுச் சூழல் காவலர்’ விஜய்

இதில் ஏன் எல்லாம் 39 வருகிறது என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை.அழகிரியோ இல்லை அம்மாவோ பிறந்த நாளன்று அவர்களது வயதுக்கேற்ற எண்ணிக்கையில்தான் ஏழைகளை தேர்ந்தெடுத்து உதவி செய்வார்கள். கூடுதலாக வருபவர்கள் அடுத்த ஆண்டு காத்திருக்க வேண்டும். தலைவர்கள், நட்சத்திரங்கள் கொண்டாடும் பிறந்த நாளில் பலனைடைவதற்கும் ஏழைகள் நட்சத்திர ஏழைகளாக இருக்க வேண்டும்.

அது கிடக்கட்டும். ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, ஜூன் 7-மாலை மளிகைச் சாமான்கள் முதல் தண்ணீர் பாட்டில்கள் வரை ஜெயின் கல்லூரியில் வந்து இறங்க, ஒரு செய்தி இடியென தாக்குகிறது. அது அடுத்த நாள் விழாவுக்கு போலிஸ் பாதுகாப்பு இல்லை, எனவே விழாவை ரத்து செய்யுங்கள் என்று ஜெயின் கல்லூரி நிர்வாகம் கறாராகக் கூறி விட்டது. போலீசிடம் கேட்டால் அன்றைய தினம் சிஎம் கலந்து கொள்ளும் அதிமுக பொதுக்குழு கூட்டம் இருக்கிறது, பாதுகாப்பு தரமுடியாது என்று கைவிரித்து விட்டது.

அம்மா ஆட்சியில் ஊர் கூட்டி பொது இடத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு அவரது அனுமதி இருந்தால் மட்டுமே சாத்தியம். அதனால்தான் கருணாநிதி கூட அறிவாலயத்தில் அடைந்து கொண்டுதான் கொண்டாடுகிறாரே அன்றி அண்ணா சாலையில் அல்ல. கூகிள் பிளஸ்ஸில் பிறந்த நாள் கொண்டாடும் அம்பிகள் அதையே கூவம் நதி சங்கமிக்கும் மெரினாக் கடற்கரையில் கொண்டாட முடியுமா என்ன?

அந்தபடிக்கு விஜய் பிறந்த நாள் ரத்து என்பது அம்மாவின் கண் அசைப்பில் மட்டுமே நடந்திருக்க முடியும். 3,900 ஏழைகளுக்கு தலா ரூ. 2564 மற்றும் பத்து காசு கொடுத்து, ஒட்டு மொத்தமாக ஒரு கோடி ரூபாய் நலத்திட்டம் வழங்கும் மாபெரும் தான நிகழ்ச்சிக்கு அம்மா ஏன் எரிச்சல் அடைய வேண்டும்?

கிராபிக்ஸ் மற்றும் டிடிஎஸ் உதவியுடன் வில்லன்களை பந்தாடும் நாயகர்கள் நிஜத்தில் அரசியல் குறித்தோ, மக்கள் குறித்தோ உளறினால் நமக்கும் பிடிக்காது, ஜெயலலிதாவுக்கும் பிடிக்காது. டாடா பை பை நடிப்பிற்கே பத்து டேக் வாங்கும் இந்த சிகாமணிகள் அரசியலில் வந்து அது செய்வேன், இது செய்வேன் என்று பீலா விடும் போது அவர்களை அற்பப் புழுக்கள் போல ஜெயா பார்க்கிறார். அதன் பலனைத்தான் இன்று விஜயகாந்த் அனுபவிக்கிறார்.

7 விக்கெட் அவுட்டாகி அடுத்த இன்னிங்சில் ஆல்அவுட்டாவதற்கு காத்திருக்கும் கேப்டன் எப்படியெல்லாம் முழங்கியிருக்கிறார்? உள்ளாட்சி தேர்தலில் கெட் அவுட் சொல்லப்பட்டு இன்று அரசியலை விட்டே ஒதுங்கலாமா, ஓடலாமா எனுமளவு துக்கத்தில் புரண்டு கொண்டிருக்கும் விஜயகாந்த் வாழும் நாட்டில் அடுத்த என்ட்ரியாக விஜய் வந்தால் அம்மா ஏன் பொங்கி எழ மாட்டார்?

ஏற்கனவே குருவி உள்ளிட்ட படங்களில் திமுகவிற்கு சலுகை காட்டியது, 2009-ம் ஆண்டு புதுதில்லியில் ராகுல் காந்தியை சந்தித்தது, அதே ஆண்டில் விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்தது, அந்த இயக்கம் ஆரம்பித்த கையோடு “தவறு எங்கு நடந்தாலும் இயக்கம் மூலம் தட்டிக் கேட்பேன்” என்று முண்டா தட்டியது, இதெல்லாம் அம்மா வெறுப்படைய போதுமானதில்லையா?

பிறகுதான் டாடி எஸ்.ஏ சந்திரசேகருக்கு பொறி தட்டி உடனே அதாவது சென்ற சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி ஓட்டலில் அம்மாவை சந்தித்து விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படும் என்று அறிவித்தார். ஆயினும் தம்பி விஜயை பிளாக் லிஸ்டிலிருந்து அம்மா எடுக்கவில்லை.

பலத்தைக் காட்ட விரும்பிய விஜய்
பலத்தைக் காட்ட விரும்பிய விஜய்

தற்போது இந்த 39-வது பிறந்தநாள் விழாவை வைத்து கூட்டம் கூட்டி தனது பலத்தை அதிமுக மற்றும் காங்கிரசிற்கு காட்டப்போகிறார் விஜய் என்று உளவு போலிசு அறிக்கை கொடுத்தும் அம்மா மனதறிந்து இடத்தைக் கொடுத்த ஜெயின் மடத்தைக் காலி செய் என்று விஜயை விரட்டி விட்டார். இவ்வளவிற்கும் இந்த கல்லூரி சேட்டுகளும், விஜய் நடித்த சில படங்களை தயாரித்த சேட்டுகளும் நண்பர்களாம். ஆளும் கட்சிகளை அண்டிப் பிழைக்கும் சேட்டுகளிடம் படம்தான் நடிக்கலாம், இடத்தை கேட்ககூடாது என்று இப்போது விஜய் & கோவிற்கு புரிந்திருக்கும்.

அம்மாவை மீறி கொண்டாட வேண்டுமென்றால் அதற்கு ஒரே பாதுகாப்பான இடம் அறிவாலயம்தான். ஆனால் அதிமுகவிலாவது அம்மாவிடம் மட்டும்தான் விழ வேண்டும், அறிவாலயம் என்றால் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ஆதித்யன் என்று ஏகப்பட்ட மூலவர்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை அவர்களையெல்லாம் சமாளித்தாலும் பிறகு அம்மா நெற்றிக்கண் திறந்தால் இரண்டு ஆண்டுகள் நடிக்க முடியாமல் வீட்டில் அடைந்து கிடந்த வடிவேலு கதையாகிவிடும். ஆக அதுவும் முடியாது.

இந்த விழா ரத்தானது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விஜய், “இந்த நிகழ்ச்சி அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் போடும் கூட்டம்னு சிலர் கிளம்பிவிட்டுட்டாங்க. அதை உண்மைன்னு நம்பி கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துட்டாங்க. காவல் துறையும் அப்படி நினைச்சுதான் அனுமதியை மறுத்துட்டாங்க போல இருக்கு. என்னோட தொழில் நடிக்கிறது. ஒரு படம் முடிச்சிட்டு அடுத்த படத்துக்கு இடையில ரெஸ்ட் இல்லாம ஓடிட்டு இருக்கேன். இப்போ அரசியலைப் பத்திப் பேசக்கூட எனக்கு நேரம் இல்லைங்கண்ணா” என்கிறார்.

ஒரு வேளை இந்த விழா அனுமதிக்கப்பட்டிருந்தால் வருங்கால முதல்வர் விஜய் வாழ்க என்ற முழக்கத்தை மேடையில் இருந்து ரசித்திருப்பார். அனுமதி ரத்தானதும் அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்கிறார். நமது ஹீரோக்கள்தான் எவ்வளவு பெரிய வீரர்கள் பாருங்கள்! தவறுகளை தட்டிக் கேட்பேன் என்று சவால் விட்ட விஜய் கடந்த மூன்று ஆண்டுகளாக சிலபல படங்களில் நடித்திருக்கிறாரே அன்றி எந்த தவறுகளையும் தட்டிக் கேட்கவில்லை. நான்கு அயர்ன் பாக்ஸ், ரெண்டு மூன்று சக்கர சைக்கிளைக் கொடுத்து விட்டு தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை சல்லிசாக பெற்றுவிடலாம் என்று இவர்கள் நம்புமளவுக்கு தமிழர்கள் இடம் கொடுத்திருக்கிறார்களே, அதுதான் பிரச்சினை!

3,900 பேருக்கு 2500 ரூபாயை தானம் செய்து விட்டு வருங்கால முதல்வர் என்று கூச்சல் போடும் இந்த பிழைப்புவாதிகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி எவ்வளவோ தேவலாம், இல்லையா?

கரியை ஏப்பம் விட்ட காங்கிரஸ் பெருச்சாளிகள் !

4

நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையின் சமீபத்திய முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பவர்கள்

• முன்னாள் ஹரியானா அமைச்சர் மற்றும் தொழிலதிபர் காலம் சென்ற ஓ பி ஜிண்டாலின் மகனும் குருட்சேத்திரா தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நவீன் ஜிண்டால்

• தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த, 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, 250-க்கும் மேற்பட்ட படங்களில் வசனகர்த்தா, பாடலாசிரியராக பணி புரிந்தவரும் முன்னாள் மத்திய நிலக்கரி அமைச்சருமான தாசரி நாராயண ராவ்

• முன்னாள் நிலக்கரித் துறை செயலரும் இப்போது மத்திய போட்டி ஆணையத்தின் தலைவருமான எச் சி குப்தா

நவீன் ஜிண்டால்
நவீன் ஜிண்டால்

ஜார்கண்ட் மாநிலத்தின் அமர்கொண்டா முர்காதாங்கல் நிலக்கரி வயல் ஒதுக்கீடு தொடர்பாக நவீன் ஜிண்டால் மீதும், தாசரி நாராயண ராவ் மீதும் மத்திய புலனாய்வுத் துறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2004 முதல் 2008 வரை மத்திய நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த தாசரி நாராயண ராவின் பதவிக் காலத்தில் 154 நிலக்கரி வயல் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடுகளில் அதிக ஆதாயம் அடைந்தவை நவீன் ஜிண்டாலின் கம்பெனிகள். ஜார்கண்ட் நிலக்கரி வயல் ஒதுக்கீடை பெற்ற ஒரு ஆண்டுக்குள், தாசரி நாராயண ராவின் சவுபாக்யா மீடியா நிறுவனத்தில் ரூ 2.25 கோடி முதலீடு செய்துள்ளார் நவீன் ஜிண்டால்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தர்தாவுக்கு சொந்தமான ஏஎம்ஆர் அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனத்துக்கு நிலக்கரி வயல் ஒதுக்கீடு செய்தது தொடர்பாகவும் தாசரி நாராயண ராவ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு முறைகேடுகள் வெளிவர ஆரம்பித்ததிலிருந்து நவீன் ஜிண்டால் குடும்பத்தின் சொத்து மதிப்பு 58 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. சிபிஐ முதல் தகவல் அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டவுடன் எச் சி குப்தா மத்திய போட்டி ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். சோனியா காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் தாசரி நாராயண ராவோ குற்றச்சாட்டுகளை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு தனது புதிய படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

1990-களில் நரசிம்மராவும் மன்மோகன் சிங்கும் ஆரம்பித்து வைத்த தனியார் மய, தாராள மய கொள்கைகள் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், வர்த்தக நிறுவனங்களை கிரிமினல்கள் ஆக்குவதில் வெற்றி பெற்றிருக்கின்றன.

உலகிலேயே 5-வது பெரிய நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ள இந்தியாவின் எரிசக்தி தேவைகள் பெருமளவு நிலக்கரியை சார்ந்துள்ளன. நிலக்கரியை வெட்டி எடுப்பதற்குத் தேவையான முதலீடுகளை பொதுத்துறைதான் செய்ய முடியும் என்ற சூழலில், இந்தியாவின் நிலக்கரி வளங்கள் 1973-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டன. இந்தியாவில் இரும்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தமக்குத் தேவையான நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்ற கொள்கை இருந்தது.

1980-களில் உலகெங்கிலும் பரப்பப்பட்டு இந்தியாவையும் மூழ்கடித்த தனியார் மயமாக்க அலை அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்களை பட்டினி போட்டு நோஞ்சான்களாக்கி அவற்றை உள் நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விடும் கொள்கைகளை ஆரம்பித்து வைத்தது.

நிலக்கரி வயல்1993-ல் சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் தமக்குச் சொந்தமாக நிலக்கரி வயல் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கொள்கை மாற்றப்பட்டது. தனியார் முதலாளிகளுக்கு அந்த கஷ்டம் எதற்கு என்று கசிந்துருகிய மன்மோகன் சிங் 2006-ம் ஆண்டு முதல் ‘இரும்பு ஆலை, மின் உற்பத்தி நிலையம், சிமென்ட் தொழிற்சாலை போன்றவற்றுக்கு நிலக்கரி விற்கப் போகிறோம்’ என்று சொல்லும் தனியார் நிறுவனங்களுக்கும் நிலக்கரி வயல்களை ஒதுக்க தீர்மானித்தார்.

நிலக்கரி படிமங்கள் பல கோடி ஆண்டுகளாக பூமியின் அடியில் புதையுண்ட மரங்களின் கரிமப் பகுதி அழுத்தத்தாலும் வெப்பத்தாலும் இறுகி உருவானவை. தொழிற் புரட்சிக்குப் பிறகு எரிசக்திக்காக நிலக்கரியை பயன்படுத்துவது அதிகமானது. மின்சாரம் வேண்டும், அதை உருவாக்க நிலக்கரி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மின்சாரம் யாருக்காக உற்பத்தி செய்யப்பட வேண்டும், நிலக்கரி வெட்டி வழங்குவதில் யாருக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதில்தான் சிக்கல்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி  காற்று, குடிநீர் போல மின்சாரம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாகுபாடின்றி மின்சார சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள். ‘காசு உள்ளவன் வீடு முழுவதும் கழிப்பறை வரை குளிரூட்டிக் கொண்டு, கடும் கோடையிலும் அபிராமி மாலில் ஐஸ் இல்லத்தில் விளையாட மின்சாரம் வழங்கப்பட வேண்டும், காசு இல்லாதவன் ஒரு நாளைக்கு 8 மணி நேர மின்வெட்டில் மூழ்க வேண்டும்’ என்பதல்ல பொருளாதார வளர்ச்சி. சமூகத்தில் அனைவருக்கும் அடிப்படை தேவைக்கான மின்சாரம் நியாயமான விலையில் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பொருளாதார வளர்ச்சி.

தாசரி நாராயண ராவ்
தாசரி நாராயண ராவ்

ஆனால், மின்சாரத்தை நுகர்வதற்கு காசு உள்ளவர்களுக்குத்தான் உரிமை என்பது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அறம். தனியார் மயம் தாராள மயமாக்கலுக்குப் பிறகு அந்த அறத்தை செயல்படுத்துவதற்காக மின் கட்டணம் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருவதோடு எதிர்காலத்திலும் தொடர்ந்து உயர்த்துவதற்கான ஒழுங்குமுறை ஆணையங்களை ஏற்படுத்தப்பட்டுளன. லாபத்தின் அடிப்படையில் மின்சாரம் வினியோகிக்கப்படும் போது லாபத்தின் அடிப்படையில் மின் உற்பத்தியும் தேவையாகிறது. மின்சார உற்பத்தி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதன் நீட்சியாக லாபத்தின் அடிப்படையில் நிலக்கரி வளங்களை பயன்படுத்துவதும் அனுமதிக்கப்படுகிறது.

ஆனால், நாட்டின் நிலக்கரி வளங்கள் மக்கள் அனைவருக்கும் சொந்தமானவை. அவற்றை நமது எரிசக்தி தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் அல்லது, அவற்றை வெளிநாடுகளுக்கு விற்று வரும் காசில் வேறு தேவைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். உலகில் மொத்தம் 94,800 கோடி டன் நிலக்கரி படிமங்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு சுமார் 700 கோடி டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கின் படி பார்த்தால் உலகின் நிலக்கரி கையிருப்பு சுமார் 150 ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்தியாவில் சுமார் 6,000 கோடி டன் நிலக்கரி படிமங்கள் உள்ளன. ஒரு ஆண்டுக்கு சுமார் 60 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. கூடுதல் தேவையான சுமார் 5 கோடி முதல் 10 கோடி டன் நிலக்கரி இறக்குமதி ஆகிறது.

தனியார் நிறுவனங்களுக்கு லாப வேட்டைக்காக நிலக்கரி வயல் உரிமங்கள் வழங்கப்படும் போது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக நிலக்கரியை தோண்டி, சந்தையில் வெகு வேகமாக நிலக்கரி நுகரப்படும் சூழல்களை உருவாக்கி (விளம்பரங்கள், தேவை உருவாக்க நடவடிக்கைகள்), அதிக விலைக்கு எரிசக்தி வளங்களை விற்று, அதிகபட்ச லாபம் ஈட்டுவதுதான் தனியார் நிறுவனங்களின் தொழில் அறம். லஞ்சம் கொடுத்தோ, ஆள் பிடித்தோ, தெரிந்தவர்கள் மூலமோ, பெருமளவிலான நிலக்கரி வயல்களை தமக்கு ஒதுக்கிக் கொள்வது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய வணிக நடவடிக்கை.

அதைத் திறமையாக செய்தவர் தனது நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல் ஒதுக்கீடுகளை பெற்றுக் கொண்ட நவீன் ஜிண்டால், அதற்கு வசதி செய்து கொடுத்தவர் அப்போதைய நிலக்கரி அமைச்சர் தாசரி நாராயண ராவ், அதற்கு அறிவுரை வழங்கியவர் அப்போதைய நிலக்கரி அமைச்சக செயலர் குப்தா. நாட்டின் பிரதமரும், அமைச்சரவையும் வகுத்தளித்த கொள்கையை நடைமுறைப்படுத்தியதற்காக இந்த கர்மவீரர்கள் தண்டிக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவர்களை எல்லாம் கிரிமினல்கள் ஆக்கிய மன்மோகன் சிங் இன்றும் பிரதமராக நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

– அப்துல்

மேலும் படிக்க

அஸ்கர் அலி எஞ்சினியர் : மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர் !

14
அஸ்கர் அலி எஞ்சினியர்
அஸ்கர் அலி எஞ்சினியர் : துயரம் நிறைந்த இழப்பு.

அஸ்கர் அலி எஞ்சினியர் : இந்து – முஸ்லீம் மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர் !

தீவிர மதவெறி எதிர்ப்பு செயல் வீரரும், ஆய்வாளரும், உறுதிமிக்க இசுலாமிய சீர்திருத்தவாதியுமான அஸ்கர் அலி எஞ்சினியர் மே 14, 2013 அன்று தனது 73-வது வயதில் இயற்கை எய்தினார்.

1980-களில் தீவிரம் பெற்ற பார்ப்பன இந்து மதவெறியையும் அதற்கு எதிர்வினையாக வலுப்பெற்ற இசுலாமிய மதவெறியையும் எதிர்த்துப் போராடிய அறிவுத் துறையினரில் எஞ்சினியர் மிகவும் முக்கியமானவர். இந்து மதவெறியை மட்டுமின்றி, இசுலாமிய மதவெறி, கடுங்கோட்பாட்டுவாதத்தை எதிர்ப்பதற்கும் அவரது எழுத்துகள் பெரிதும் பயன்பட்டன.

ஷியா இசுலாமின் ஒரு உட்பிரிவான தாவூதி போஹ்ரா சமூகத்தில் பிறந்தவர் அஸ்கர் அலி எஞ்சினியர். சையத்னா என்ற தலைமை மதகுருவின் சர்வாதிகாரத்திற்கு பெயர் போனது இந்த உட்பிரிவு. சையத்னா மொகியுத்தீன் என்ற தலைமை மதகுருவை வணங்க மறுத்து, தன் இளம் வயதிலேயே கலகத்தைத் தொடங்கியவர் அஸ்கர். 70-களில் சையத்னாவின் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதியதைத் தொடர்ந்து இவர் சமூக நீக்கம் செய்யப்பட்டு, சொந்த தாயைக் கூடப் பார்க்க முடியாமல் தடுக்கப்பட்டார். ஆறு முறை அஸ்கரின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் சையத்னாவின் கூலிப்படையினர். அவருடைய வீடும் அலுவலகமும் சூறையாடப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது. ஆனால், அஸ்கர் அலி எஞ்சினியர் இறுதிவரை பணியவில்லை..

அஸ்கர் இறை நம்பிக்கையாளர். நாத்திகக் கோட்பாடு என்ற காரணத்தினால் மார்க்சியத்தை ஒதுக்கியதாகவும், பின்னர் மார்க்சியம் தன்னை வென்றெடுத்துவிட்டதாகவும் அவர் சொல்வாரென்று குறிப்பிடுகின்றனர் அவரது நண்பர்கள். “ஒடுக்கப்பட்டோரின் ஏக்கப் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம்” என்ற கோணத்தில் மதத்தின் பாத்திரத்தை முதன்மைப்படுத்தி மதிப்பிட்ட அஸ்கர், மத நிறுவனங்களின் பிடியிலிருந்து மதத்தை விடுவிக்க வேண்டுமெனக் கருதினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவான இசுலாமை, பிரபுக்குலத்தினர் தம் வர்க்க நலனுக்கேற்ப வளைத்ததையும், பெண்ணுரிமையைப் பறித்ததையும், துணைக்கண்டத்தில் அஷ்ரப், அஜ்லப் என்ற மேல்சாதி – கீழ்சாதி பிரிவினை பேணப்பட்டதையும் அவர் அம்பலப்படுத்துகிறார். காலனியாதிக்க எதிர்ப்பிலும் கூட, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழை முசுலீம்களும் உலமாக்களும்தான் முன் நின்றனரேயன்றி, மேட்டுக்குடி முஸ்லிம்கள் அல்ல என்பதையும் தனது ஆய்வுகளில் ஆதாரபூர்வமாக அவர் விளக்குகிறார்.

1980-களில் ஷா பானு வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி அந்த மூதாட்டிக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட்டதை எதிர்த்தும், முஸ்லிம் பெண்களின் மணவிலக்கு வழக்குகள் ஷரியத்தின்படி மட்டுமே தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் இசுலாமிய மதவாதிகள் எழுப்பிய கோரிக்கையை எதிர்ப்பதில் அஸ்கர் முன்னணியில் நின்றார். இந்தப் போராட்டம் இந்து மதவெறி சக்திகளை வளர்த்து விடுவதற்குத்தான் உதவும் என்று சாடினார்.

இந்து மதவெறியின் எதிர்விளைவாகத்தான் இசுலாமிய கடுங்கோட்பாட்டுவாதமும், தீவிரவாதமும் வலுப்பெற்றன என்ற போதிலும், சிறுபான்மை மதவெறியை அவர் மென்மையாக அணுகவில்லை. மதவெறியினால் ஏற்படும் பாதிப்புகளை, இந்து-முஸ்லிம் என்ற சட்டகத்திற்கு அப்பாற்பட்டு, உழைக்கும் வர்க்கத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ற கோணத்திலேயே அவர் முதன்மையாக அணுகினார்.

“பதிலடி தரவேண்டும் என்று சில முஸ்லிம் இளைஞர்கள் கருதுவது நியாயமாகவே தெரிகிறது” என்று பிவாண்டி கலவரத்தைப் பார்த்த பின்னர் அஸ்கரிடம் தான் கூறியதாகவும், அதை அவர் கடுமையாக மறுத்ததாகவும் நினைவு கூர்கிறார், பத்திரிகையாளர் ஜோதி புன்வானி. 1993-இல் மும்பையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்த அச்சுறுத்தும் சூழலில், மும்பையின் குடிசைப் பகுதிகள் முழுவதிலும் அவர் முன்நின்று நடத்திய நல்லிணக்க பேரணியில் அஸ்கர் ஆற்றிய உரைகள் வர்க்க ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகின்றன.

மதக் கலவரங்கள் தொடர்பான அஸ்கரின் ஆய்வுகள் முன்மாதிரியானவை. ஜபல்பூர் கலவரத்தில் தொடங்கி வட இந்தியாவில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட கலவரங்களை அவர் நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு பிரச்சினையிலும் என்ன விதமான வர்க்க முரண்பாடுகள் அல்லது சமூக பொருளாதாரக் காரணிகள் எப்படி மத முரண்பாடுகளாகத் திரிக்கப்பட்டன என்பதை அவர் நிறுவுகிறார்.

“நாலு பெண்டாட்டி, முஸ்லிம் வாக்கு வங்கி, மதமாற்றம்” என்பன போன்ற இந்துத்துவ சக்திகள் பரப்பிய இசுலாமிய எதிர்ப்பு புனைவுகளுக்கும் அரை உண்மைகளுக்கும் சராசரி இந்துக்கள் எனப்படுவோர் பலியாகியிருந்த சூழலில், அவற்றை முறியடிப்பதற்கு நமக்கு ஆதாரங்கள் தேவைப்பட்டன. அவற்றை அரும்பாடுபட்டுத் திரட்டி நம் கையில் ஆயுதமாக வழங்கியவர்களில் முக்கியமானவர் அஸ்கர்.

இந்தியாவின் வரலாற்றையே இந்து-முஸ்லிம் மோதலின் வரலாறாகத் திரித்துக் காட்டும் சதியை இந்துத்துவ சக்திகள் மிகத் தீவிரமாக அரங்கேற்றி வந்த காலத்தில், ஆதாரபூர்வமாக அவற்றை மறுக்கும் எழுத்துகள் அஸ்கரிடமிருந்து வந்தன. மன்னர்களை அவர்களுடைய வர்க்க நலன்தான் இயக்கியதேயன்றி, மதமல்ல என்பதை அவர் வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவினார். மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உழைக்கும் வர்க்கத்திடம் நிலவி வந்த ஒற்றுமையின் சான்றாக, சுஃபி மற்றும் வட இந்திய பக்தி இயக்க மரபுகளிடையே காணப்படும் ஒற்றுமையை அவர் வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டினார்.

இசுலாமிய சீர்திருத்தவாதியாக இருந்தபோதிலும், எப்போதும் அவர் மதச்சார்பற்றவர்களுடன்தான் இணைந்து நின்றார். இறந்த பின்னரும் முற்போக்காளர்கள் துயிலும் இடுகாட்டில் தன்னைப் புதைக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். “கொள்கையைக் கடைப்பிடிப்பதில் பாறை போன்ற உறுதியைக் கொண்டவர்” என்று தனது தந்தையை நினைவு கூர்கிறார் அவரது மகன் இர்பான் எஞ்சினியர்.

எனினும், மதவெறியை எதிர்த்த போராட்டத்திற்கே தனது வாழ்நாளை அர்ப்பணித்த அந்த மனிதர், குஜராத் படுகொலை பற்றிய செய்திகளை மட்டும் கேட்க விரும்பவில்லை என்று கூறுகிறார் அவரது நண்பர் ஜாகிர் ஜன்முகமது. “அதில் அவருக்கு அக்கறையில்லை என்பதல்ல; எல்லா மனிதர்களுமே அடிப்படையில் நல்லவர்கள்தான் என்பது அஸ்கர் கொண்டிருந்த நம்பிக்கை. அவருடைய அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்தில் இருந்தன குஜராத்திலிருந்து வந்த செய்திகள்” என்று குறிப்பிடுகிறார் ஜன்முகமது

மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்பன போன்ற அரூபமான நம்பிக்கைகள் தகர்வது தவிர்க்கவியலாததுதான். இருப்பினும், “பழகிய அண்டை வீட்டாரே கொலை செய்வது, வீடு புகுந்து சூறையாடுவது, கடைகளை அபகரித்துக் கொண்டு அகதிகளாகத் துரத்தியடிப்பது, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவைக் கொல்வது” போன்ற குஜராத் இனப்படுகொலையின் கொடூரங்களைக் கேட்டு அஸ்கரின் நல்லெண்ணமிக்க இதயம் நடுங்கியிருக்கக் கூடும்.

தனது ஆதாரமான நம்பிக்கை நழுவியதால் அவரை அழுத்தியிருக்கக் கூடிய துயரத்தின் சுமை, பொருள் முதல்வாதிகளாகிய நம் மீதும் இறங்குகிறது. அவரது மறைவு தோற்றுவிக்கும் துயரத்தைக் காட்டிலும் இது கனமானது.

– சூரியன்
_____________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
_____________________________________________________________________

சென்னையின் பெருமை ஐசிஎஃப்பை விழுங்கும் தனியார்மயம் !

2

ட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் ரயில் போக்குவரத்து துறைக்கு, ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியையும் தனியாருக்கு தாரைவார்க்கும் வேலைகள் வேகமடையத் துவங்கி விட்டன.

ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, பெரம்பூர்
ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்), பெரம்பூர்

கடந்த பிப்ரவரி 13 அன்று, ஐ.சி.எப் (சென்னை) மற்றும் ஆர்.எப்.சி (கபூர்தலா) தொழிற்சாலைகளின் பொது மேலாளர்களுக்கு, ரயில்வே வாரியம் அனுப்பிய கடிதத்தில், தனியார் நிறுவனங்களின் மூலம் தயாரிக்கவிருக்கும் பல்வேறு வகையான ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் வரைபடங்களை அந்நிறுவனங்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஐ.சி.எப்-க்கு சொந்தமான தொழில்நுட்ப களஞ்சியங்களான ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் மீதான தன்னுரிமைகள், ஐந்து ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்படப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் 610 கோடி ரூபாய் செலவில் 400 ரயில் பெட்டிகளை தயாரிக்கப் போவதாக ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் இயங்கும் மூன்று தனியார் நிறுவனங்களான தீத்தகர் வேகன்ஸ் – 99 குளிரூட்டப்பட்ட மின்சார வண்டிகள், பெஸ்கோ – 8 மின்சார வண்டிகள், ஜெசப் – 59 குளிரூட்டப்பட்ட மின்சார வண்டிகள் தயாரிக்க உள்ளன. பெங்களூரில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் – 72 குளிரூட்டபட்ட மின்சார வண்டிகளையும் 160 மின்சார வண்டிகளையும் தயாரிக்கப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கு முன், ஜெர்மன் உற்பத்தியாளர்களிடமிருந்து ஐ.சி.எப் மற்றும் ஆர்.சி.எப் நிறுவனங்கள், 160 கோடி ரூபாய் செலவழித்து எல்எச்பி டிசைன் எனப்படும் ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் வரைபடங்களை வாங்கியுள்ளன. இப்போது இவற்றின் மதிப்பு 1500 கோடி ரூபாயாகும்.

தனியார் நிறுவனங்களுடனான ரயில்வே வாரியத்தின் உடன்படிக்கையின்படி வரைபடங்களை அச்சிடுவதற்கான செலவு, முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம் என்பதைத் தாண்டி வேறு எந்தவிதமான கூடுதல் வருமானமும் இல்லாமல், தனியார் முதலாளிகளுக்கு இந்த ஆவணங்களை இலவசமாக வாரி வழங்கவுள்ளது.

இதை எதிர்க்கும் ஐசிஎப் ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த ஆனந்தராஜ், “1500 கோடி ரூபாய் மதிப்புடைய ஐ.சி.எப்’ன் அறிவுசார் உடமைகளின் உரிமைகளை இலவசமாக தனியார் நிறுவனங்களுக்கு வாரிவழங்குவது, ஐ.சி.எப் நிறுவனம் மட்டுமல்ல தேச நலனுக்கே எதிரானது” என்று தெரிவித்திருக்கிறார்.

ரயில் பெட்டி தொழிற்சாலை, கபூர்தலா
ரயில் பெட்டி தொழிற்சாலை (ஆர்சிஎப்), கபூர்தலா

கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள், ரயில்வே வாரியத்தின் திட்டத்தின் பின்புலத்தில் சந்தேகத்திற்குரிய நோக்கங்கள் இருக்கின்றன என்றும் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஸ்டீல் மூலப்பொருட்கள், சக்கர தொகுப்புகள், மின்கலன்கள் மற்றும் மின் இழுக்கை(Traction) சாதனங்களை, ரயில்வே துறை வழங்கவதாக ஒப்பந்த அறிக்கையில் இருக்கும் பட்சத்தில், அரசாங்கத்திற்கு இதனால் பெரும் நஷ்டமே என்றும் கூறுகின்றனர்.

வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலையை கொடுத்து வாங்குவதற்கு முக்கியமான காரணம் செலவுகளை குறைப்பதுதான். ஆனால் ரயில்வே துறை அமலாக்கவிருக்கும் இத்திட்டத்தின்படி, ஐ.சி.எப்-ன் மூலம் ஆகக்கூடிய உற்பத்தி செலவுகளை விட, 120 – 160 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாக செலவழியும் என்று தெரிவிக்கிறார் ஐ.சி.எப்-ன் மேற்பார்வையாளர்.

கூடுதலாக செலவழியவிருக்கும் இப்பணத்தின் ஒரு பகுதியை கொண்டே, சென்னை, கபூர்தலா மற்றும் ரேபரேலியில் இருக்கும் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் உற்பத்தியின் அளவை பல மடங்கு உயர்த்தமுடியும் என்றும் அவர் கூறுகிறார்.

ரயில் பெட்டிகளின் உற்பத்தியில் பற்றாக்குறை காரணமாக ரயில்வே வாரியம் இம்முடிவினை எடுக்கவில்லை, ஐ.சி.எப் மற்றும் ஆர்.சி.எப் ஆகிய இரண்டு தொழிற்சாலைகள் இணைத்து செயல்பட்டால், குறைந்த செலவில் கூடுதலாக 400-க்கும் அதிகமான ரயில் பெட்டிகளை தயாரிக்கும் அளவிற்கு திறம்படைத்தவை.

சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலை, இந்திய ரயில்வேக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கும் முதன்மையான உற்பத்தி பிரிவாகும். இத்தொழிற்சாலை 1955-ல் அமைக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் சுமார் 13,000 தொழிலாளிகள் பணிப்புரிகின்றனர். உள்கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் இயந்திரங்கள் நவீனமயமாக்கல் மூலம் வருடத்திற்கு 1,700 க்கும் அதிகமான, பல விதமான தேவைகளுக்கான ரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. மேலும் தாய்லாந்து, பர்மா, தாய்வான், சாம்பியா, பிலிப்பைனஸ், டான்சானியா, உகாண்டா, வியட்நாம், நைஜீரியா, மொசாம்பிக், வங்கதேசம், அங்கோலா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் இங்கு தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தனியார் உற்பத்திச் செலவு
பொதுத் துறை நிறுவனங்களை விட தனியார் உற்பத்திக்கு அதிக செலவு (படம் : நன்றி தி ஹிந்து)

தனது 50 ஆண்டுக்கால அனுபவத்தில் 45,000 ரயில் பெட்டிகளுக்கு மேல் உருவாக்கியிருக்கும் ஐ.சி.எப். நிறுவனம், இதுவரை தனது வருடாந்திர இலக்கினை தவற விட்டதில்லை

ஐ.சி.எப் தொழிற்சாலையைப்போல, இந்திய ரயில்வேயினால் நிறுவப்பட்ட இரண்டாவது ரயில் பெட்டி தொழிற்சாலை ஆர்.சி.எப் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபூர்தலாவில் இயக்கப்படுகிறது.

1986-இல் துவங்கப்பட்ட இத்தொழிற்சாலை, 16,000 பயணிகள் பெட்டிகள், 51 க்கும் அதிகமான தானியங்கி உந்திச் செல்லும் பயணிகளின் ரயில்களை தயாரித்துள்ளது. இந்திய ரயில்வே வாரியத்தின் 35% ரயில் பெட்டிகள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.

2500 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உத்திரபிரதேசத்தின் ரேபரேலியில், 2012 ஆம் ஆண்டு சோனியா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வருடத்திற்கு 2500 ரயில் பெட்டிகள் தயாரிக்கும் அளவிற்கு இத்தொழிற்சாலையின் திறனை உயர்த்தப்போவதாக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

பாலக்காட்டில், காஞ்சிகோடு ரயில்வே பெட்டி தொழிற்சாலை அமைக்கும் திட்டமும், ஐ.சி.எப்-யை விரிவாக்கம் செய்ய இரண்டாவது தொழிற்சாலையை அமைக்க 250 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ள திட்டமும் இன்னமும் பரிசீலனையில் உள்ளன.

இப்படிப்பட்ட விரிவான உட்கட்டமைப்பு வசதிகளும், அனுபவமிக்க தொழிலாளர்களும் இருக்கும் போது ரயில் பெட்டி உற்பத்தியை தனியார்வசம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் துளியும் இல்லை. ஆனால் நாட்டு நலனை விட முதலாளிகளின் நலனே முக்கியமாகிப்போன உலகமய சூழலின் விகிதங்களோ தலைகீழாக மாறியிருக்கின்றன.

2011-ம் ஆண்டு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் ரயில்வே அமைச்சராக இருந்தபோதே இந்த தனியார்மயமாக்க திட்டத்தின் தயாரிப்புகள் துவங்கின. 2011-12 வரை சுற்றுக்கு விடப்பட்டிருந்த டெண்டர்கள், பிப்ரவரி 2013-ல் இறுதி செய்யப்பட்டன.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, மேற்குவங்க அரசாங்கத்தினாலே தகுதியற்றவை என்று ஒதுக்கப்பட்ட மூன்று தனியார் நிறுவனங்கள்தான் ஒப்பந்த உற்பத்தியில் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏதுமில்லாமல் தான் இந்த மூன்று தனியார் தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன. இந்நிலையில் ஒப்பந்தத்தில் குறிப்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிப்பை எண்ணிக்கையிலும், நல்ல தரத்திலும் மூன்று மாத காலத்திற்குள் செய்துமுடிப்பது என்பது கேள்விக்குறியே.

மேற்கு வங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்) ரயில்வே துறையில் செய்து வந்த ஆதிக்கத்திற்கும், அத்துறையை தன் கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் நடத்திய நாடகங்களுக்கும், இம்மூன்று மேற்குவங்க நிறுவனங்கள் ரயில்பெட்டி தயாரிப்பில் திடீரென நுழைந்தற்குமான உறவு தற்செயலானதன்று.

ஒவ்வொரு ஆண்டும், உற்பத்தியில் சாதனைகள் செய்துவரும் ஐ.சி.எப். நிறுவனம் 2012 – 2013 ஆண்டிலும் கூட, தன்னுடைய இலக்கையும் தாண்டி 1,620 ரயில் பெட்டிகள் தயாரித்து அடுத்த சாதனைக்கு தயாராக உள்ளது. ஏனைய பொதுத்துறை நிறுவனங்களை சொத்துக்களோடு மலிவாக தனியார்வசம் ஒப்படைத்து அழித்தது போல ரயில் பெட்டி தயாரிக்கும் துறையையும் அழிப்பதற்கான தயாரிப்புகள் ஆரம்பித்திருக்கின்றன. ரயில்வே துறையையே தனியார்வசம் ஒப்படைக்க இது ஒரு வெள்ளோட்டமே.

ரயில்வே வாரியத்தின் இவ்வறிக்கையின் விளைவாக, ஐ.சி.எப் ஊழியர்கள் மத்தியில் கிளர்ந்தெழுந்த அதிருப்தி, கருவிகளை கையில் எடுக்காத வேலை நிறுத்தமாக மார்ச் 6 அன்று வெளிப்பட்டது. 12 பேரைக்கொண்ட கூட்டு நடவடிக்கை குழுவின் செயற்குழு தலைமையில், 12,000 ஊழியர்களின் பங்கேற்ற இப்போராட்டம் சில மணி நேரம் நடந்தது அதன்பிறகு ஐ.சி.எப். இன் அறிவுசார் உடமைகள் மற்றும் ஊழியர்களின் நலன்கள் கண்டிப்பாக பாதுகாக்கப்படும் என்று நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தின் பெயரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

எனினும், மீண்டும் ரயில்வே வாரியம் தனியாரை ஊக்குவிக்க ஆர்வம் காட்ட துவங்கிவிட்டது. அவர்களுடன் ஒப்பந்தம் போட்டபின் அதிலிருந்து பின் வாங்க முடியாது என்று கூறி வருகிறது.

ரயில்வே வாரிய தலைவர் நியமன ஊழல்
ரயில்வே வாரிய தலைவர் நியமன ஊழலில் – அமைச்சர் பவன் குமார் பன்சல், அவரது உறவினர்.

கடந்த மே மாதம் 4 ஆம் தேதி அன்று, இது தொடர்பான பேச்சுவார்த்தையை ரயில்வே போர்டின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் நடத்தினர். ஆலோசனைகளின் மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என்று முறையில் நடந்த சந்திப்பு அதிகாரிகளுக்கு தோல்வியைத்தான் தந்தது.

ஊழியர்கள் போராட்டப் பாதையை மீண்டும் தேர்ந்தெடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூட்டு நடவடிக்கை குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ”எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, ரயில்வே வாரியம் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கேட்டிருப்பதால் தான், நாங்கள் போராட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளோம்” என்று ஐ.சி.எப் ஊழியர் குழுவின் உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.

போராடும் ஐ.சி.எப் மற்றும் ஆர்.சி.எப் ஊழியர்களை கட்டுப்படுத்த கண்துடைப்பு நடவடிக்கையாக இவ்வொப்பந்தங்களை மத்திய புலனாய்வு துறையிடம் (சிபிஐ) ஆய்வு செய்ய வலியுறுத்தியதோடு அப்போதைய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பனசலிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி அவரின் பதிலையும் பதிவு செய்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பியிருக்கிறார் ராஜ்ய சபை உறுப்பினர் ரங்கராஜன். ஆனால் அமைச்சர் பவன் குமாரே மச்சானை வைத்து கோடிகளில் ஊழல் செய்யும் பெருச்சாளி என்பது தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

இந்நிலையில் ஒப்பந்தங்களைப் பற்றி முன்பே அறிந்திருந்தும், எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்த ரயில்வே நிலைக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு ரயில்வே போர்டின் ஒப்பந்தத்தை இப்போது ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் தங்கள் தரப்பு நியாயத்தை தனியார்மயத்தை தாயுள்ளத்துடன் நாட்டு மக்களின் மீது இறக்கிவரும் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோரிடமும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயாவிடமும் தங்கள் கோரிக்கையை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், புரட்சிகர தொழிற்சங்கங்கள் தலைமையில் மக்களோடும் ஏனைய தொழிலாளர்களோடும் இணைந்து போராடுவதே இந்தத் தனியார்மயப் பேயை விரட்ட ஒரே வழி!
__________________________________
– ஜென்னி

__________________________________

மேலும் படிக்க

 

கண்காணிக்கப்படுவதால் உங்களுக்கு என்ன இழப்பு ?

16

ன் உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் அமெரிக்க அரசின் ஒட்டுக் கேட்பு மற்றும் இணைய கண்காணிப்பு சதித்திட்டத்தை 29 வயது இளைஞர் எட்வர்டு ஜோசப் ஸ்னோடன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஒட்டுக் கேட்பு திட்டத்தில் ஏதோ அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள பல நாட்டு மக்களும் சிக்கியிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் கண்காணிப்பு வலையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. கார்டியன் பத்திரிகை தகவல் படி ஒரு மாதத்தில் மட்டும் இந்திய மக்களுடைய 6.3 பில்லியன் இணைய தகவல்கள் அமெரிக்க அரசால் சேகரிக்கப்பட்டுள்ளன. தனது நாட்டு மக்களுடைய ஜனநாயக உரிமை இப்படி மலிவாக கொல்லப்படுகிறதே என்ற கவலை கூட இந்திய அரசுக்கு இல்லை. அமெரிக்காவின் இந்த உளவு வேலைகள் பொதுவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், விரிவான தகவல்கள் வந்ததும் விசாரிக்கிறோம் எனவும் இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலேயே நாட்டின் இறையாண்மையை மலிவாக கொடுத்தவர்கள் மக்களது உரிமை பறிபோவதற்கா குரல் கொடுப்பார்கள்?

வெளிப்படைத் தன்மை
ஜனாதிபதி வெளிப்படைத்தன்மை அதிகமாகும் என்று சொன்னது, இதைத்தான் போலிருக்கிறது!

ஒருவருடைய செல்பேசி மற்றும் மின்னஞ்சல், கடவுச் சொல், கடன் அட்டை உள்ளிட்ட அனைத்து இணைய பயன்பாடுகளது தகவல்களை சேகரிப்பதால், அல்லது நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு குடிமகனது துல்லியமான டைரிக்குறிப்பை அரசு பதிவு செய்வதால் என்ன பிரச்சினை ஏற்படும்?

அமெரிக்க அரசோ இல்லை இந்திய அரசோ தீவிரவாதிகளது தாக்குதல்களை முறியடிக்க வேண்டுமானால் இத்தகைய கண்காணிப்பு தேவைதானே என்று பலர் இயல்பாகவே நியாயப்படுத்தலாம். ஸ்னோடனின் அம்பலப்படுத்தல் வந்த பிறகு அமெரிக்க மக்களிடையே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 26% மக்கள் அரசின் கண்காணிப்பை ஆதரித்தும், 59% மக்கள் எதிர்த்தும் தெரிவித்திருக்கின்றனர். மற்றொரு கருத்துக் கணிப்பில் 56% மக்கள் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (என் எஸ் ஏவின்) கண்காணிப்பை அங்கீகரித்திருக்கின்றனர்.

இந்தியாவிலும் கூட இத்தகைய கண்காணிப்பு தேவையா என்று கேட்டால் மோடியை ஆதரிக்கும் ‘இந்து’ நடுத்தர வர்க்கம் தேவைதான் என்று சட்டென்று கூறிவிடும். இவர்களைப் பொறுத்தவரை முசுலீம்கள் அனைவரும் கண்காணிக்கப்படவேண்டியவர்கள், தங்களைப் போன்ற பாரத தேசத்தை நேசிக்க கூடியவர்களை கண்காணிப்பதால் எந்த இழப்பும் இல்லை என்று நியாயப்படுத்துவார்கள். இதையே நாட்டின் பாதுகாப்புக்கு இத்தகைய தனிநபர் அந்தரங்கங்களை விட்டுக்கொடுக்கும் தியாகம் தேவை என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கூறியிருக்கிறார்.

தனி நபரை விட தேசம் பெரிது, தனி நபரது அந்தரங்கம் பறிபோவதை விட தேசத்தின் பாதுகாப்பு காக்கப்பட வேண்டியது எனவும் இதைப் புரிந்து கொள்ளலாம். தங்களுக்கு ஜனநாயகம், மற்றவர்களுக்கு சர்வாதிகாரம் என இந்தியாவிற்கு ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள்தான் தேவை என்றும் இவர்கள் வாதிடுவார்கள். இந்த வாதங்களைப் போல இத்தகைய கண்காணிப்பு ‘தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை’ மட்டும்தான் குறிவைக்கின்றதா?

தீவிரவாதிகளை பிடிப்பது என்ற பெயரில் இந்தக் கண்காணிப்பு தனது தோற்றத்தை நியாயப்படுத்திக் கொள்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் எந்த வகையான, ஏன் ஜனநாயக ரீதியான அரசு எதிர்ப்பு கூட இடம்பெறக்கூடாது என்பதே இந்த கண்காணிப்பின் இறுதி நோக்கம். 21-ம் நூற்றாண்டில் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளின் அரசுகள் மென்மேலும் பாசிசமயமாகி வரும் காலத்தில்தான் அமெரிக்காவின் இந்த கண்காணிப்பு அடக்குமுறை அமலுக்கு வந்திருக்கிறது என்பதை சேர்த்துப் பார்க்க வேண்டும்.

மேற்கத்திய நாடுகளுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை விட பொருளாதார நெருக்கடி தோற்றுவிக்கும் முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டங்கள்தான் அபாயகரமாக தோன்றுகின்றன. குண்டு வைக்கும் ஒன்றிரண்டு பயங்கரவாதிகளை பிடித்து அழிப்பது சுலபம். ஆனால் நாடு முழுக்க திரண்டு வரும் மக்கள், முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்தும் போது அரசுகளுக்கு சமாளிப்பது பிரச்சினையாகிறது.

தனிநபர் சுதந்திரம், அந்தரங்க உரிமை என்று மட்டும் இந்தக் கண்காணிப்பை எதிர்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஒரு குடிமகனது பாலியல் உரிமைகள் கூட கண்காணிப்படுகிறது என்று செக்ஸ் ஸ்பெசலிஸ்ட்டுகளான சில பின் நவீனத்துவ அறிஞர்கள் கவலைப்படலாம். அநேக ‘ஆண்கள்’ கூட இதை ஒத்துக் கொள்ளலாம். அதாவது ஒருவர் 2,3 பெண்களை காதலிப்பது, போர்னோ படங்களை பார்ப்பது, கள்ள உறவுக்கு முயற்சி செய்வது எல்லாம் அமெரிக்காரன் பார்க்கிறானே, நாளை பின்னே இதை நமது மனைவியிடமோ, குடும்பத்தினரிடமோ போட்டுக் கொடுத்து விட்டால் என்ன ஆவது என்று அவர்கள் கவலைப்படலாம். இவர்களைப் பொறுத்தவரை அந்தரங்க உரிமை பறிபோவது என்பது இதுதான்.

ஆனால் இத்தகைய ‘உரிமை’களை அமெரிக்காவோ, இந்திய அரசோ தடுக்கப் போவதில்லை என்பதோடு உற்சாகப்படுத்தவும் செய்யும். 70களில் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது பண்பாட்டு ரீதியாக வியட்நாம் இளைஞர்களை சீரழிப்பதற்கு நீலப்பட கேசட்டுகள், மஞ்சள் இலக்கியங்களை டன் கணக்கில் இறக்கியது. இதே வேலையை வடகிழக்கு மாநிலங்களில் இந்திய அரசும் செய்திருக்கிறது. போர்னோவின் மெக்காவான அமெரிக்கா ஒரு போதும் இத்தகைய பாலியல் ‘உரிமைகளை’ தடை செய்யாது என்பதோடு அது வளருவதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்யும்.

சினிமா, செக்ஸ், மொக்கை போன்ற விசயங்கள் இணையத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்துவது பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதாயம். பிறகு எதற்காக கண்காணிக்கிறார்கள்?

மூச்சை நிறுத்தும் பாதுகாப்பு
மக்களின் மூச்சை நிறுத்தும் பாதுகாப்பு போர்வை

ஏற்கனவே சொன்னது போல முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பு நெருக்கடிகள் மேற்கு உள்ளிட்டு உலகம் முழுவதும் மக்களை சொல்லணாத் துயரத்தில் ஆழ்த்தும்போது இயல்பாக வரும் எதிர்ப்புணர்வை காயடிப்பதுதான் அவர்களது நோக்கம். இதற்கு பழைய பாணியிலான சிறை, கைது, தண்டனை போன்ற மரபார்ந்த முறைகளை விட இந்த கண்காணிப்பு சிறந்த முறையில் பலனளிக்கும்.

அரசை எதிர்ப்பவரை சிறையன்றி வேறு எந்த விதத்தில் ஒடுக்க முடியும் என்றொரு கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். அதற்குப் பதில் உங்களது சமூக பொருளாதார வாழ்க்கையை முடக்குவது என்பதே. அதற்கு தொழில் நுட்பப் புரட்சி வழங்கியிருக்கும் இந்த “பிக் டேட்டா” கண்காணிப்பு முறை எண்ணிறந்த முறையில் உதவி செய்யும்.

சமீபத்திய இலண்டன் கலவரம் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் குற்றம் சுமத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கருப்பின இளைஞர்கள் சில பல மாதங்கள் சிறை வாழ்க்கைக்குப் பிறகு வெளியே வந்தாலும் அவர்களுக்கு எங்கேயும், எப்போதும் வேலை கிடைக்காது. வாழ்நாள் முழுக்க வேலையற்ற உதிரிகளாக அல்லது ஊதியம் குறைந்த கடுமுழைப்பு வேலைகள் மட்டும்தான் அவர்கள் செய்ய முடியும். லண்டன் போலிசார் இவர்களைப் பற்றிய அடையாளங்கள் படங்களோடு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அனுப்பிய பிறகு முடிந்தது அவர்களது வாழ்க்கை.

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக மாணவர்களிடம் போராட்டம் பரவிய நேரத்தில் க்யூ பிரிவு போலிசார் அளித்த அறிக்கைய நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதாவது போராட்டத்தில் முன்னணியாக இருக்கும் மாணவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து அதை போலீஸ் டேட்டா பேசில் பதிவு செய்து பின்னர் எந்தப் போராட்டம் வந்தாலும் அவர்களை பின் தொடர்வது, அவர்களைப் பற்றிய விவரங்களையும் நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்வது என்று போலிசார் கூறியிருந்தனர். அதன் பொருள் அந்த மாணவர்கள் தமது அரசியல் உணர்வை துறக்க வேண்டும் அல்லது சொந்த வாழ்க்கை நலன்களை துறக்க வேண்டும்.

ஆகவே ஒருவருக்கு வேலை கிடைக்காமல் செய்து விட்டால் அதை விட என்ன பெரிய தண்டனை இருக்கப் போகிறது? அமெரிக்கா ‘சாதனை’ படைத்திருக்கும் இந்த இணைய, செல்பேசி கண்காணிப்பு அனைவரையும் 24 மணிநேரமும் பின் தொடரும் உளவாளி என்பதால் இது விரைவிலேயே மற்ற நாட்டு அரசுகளாலும் ஏற்கப்பட்டு அமல்படுத்தப்படும் சாத்தியங்கள் நிறையவே இருக்கிறது. அப்படி நடந்தால் எப்படி இருக்கும்?

கோடிக்கணக்கான மக்களது பில்லியன் கணக்கிலான தகவல்களை சேகரித்து பயன்படுத்துவது சாத்தியமா என்று தோன்றலாம். இதெல்லாம் ஆள் போட்டு செய்ய வேண்டிய வேலையில்லை. ஒரு திறமையான மென்பொருள் அரசுக்கும், போலீசுக்கும் தேவையான விவரங்களையும், நபர்களையும் சடுதியில் தந்து விடும்.

ஈழத்தமிழருக்கான மாணவர் போராட்டத்தை ஆதரித்தும், பங்கேற்றும், லைக் செய்தும், ஷேர் செய்தும் முகநூல், டிவிட்டரில் இயங்கியவர்கள் யார், புலிகள், பிரபாகரன், ஈழம், இலங்கை, தனி ஈழம் போன்ற குறிச்சொற்களை யார் அதிகம் பாவிக்கிறார்கள் என்பதை வைத்தும் ஒரு மாணவர் ஈழப் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் எந்த தரவரிசையில் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். பிறகு நாளையே ராஜபக்சே போயஸ் தோட்டம் வந்து ஜெயாவுடன் தேநீர் விருந்தில் பங்கேற்கும் போது இந்த மாணவர்களை முன்னெச்செரிக்கையாக கைது செய்வதில் பிரச்சினை இல்லை.

police-intelligence

15 வயது முதல் செல்பேசி, இணையம் பயன்படுத்தும் மாணவர் ஒருவர் 25 வயதில் வேலைக்கு போகும் போது இந்த பிக் டேட்டாவின் உதவியுடன் அவர் இந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தார் என்று கண்டுபிடிக்க முடியும். அவரது அரசியல் ஆர்வம் போராடும் அளவுக்கு இல்லை என்று அந்த விவரங்கள் சொல்லும் பட்சத்தில் அவருக்கு எச்சரிக்கையுடன் வேலை கிடைக்கலாம். இதே போல ஹூண்டாய் தொழிற்சாலையில் வேலைக்கு போகும் ஒரு தொழிலாளி அவர் மாணவராக இருந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை வைத்து அவரது வர்க்க உணர்வு ஆபத்திற்குரியதா என்று ஹெச் ஆர் கங்காணிகள் முடிவு செய்வார்கள்.

தற்போதே ஐ.டி துறை மனிதவளத்துறை கங்காணிகள் ஒரு ஊழியர் புதிதாகவோ இல்லை வேறு நிறுவனத்திலிருந்து வரும் போது அவர்களுடைய புகைப்படம் மற்றும் பெயரை வைத்து முகநூலில் ஆய்வு செய்கிறார்கள். அலுவலகத்தில் இருந்து இவர்கள் இணையத்தில் என்ன பார்க்கிறார்கள் எனவும் மதிப்பீடு செய்கிறார்கள். பிக் டேட்டா என்பது இதனுடைய முழுமையான தகவல் வங்கி. அதை வைத்து ஒரு தனிநபருடைய ‘ஜாதக’த்தையே எழுத மட்டுமல்ல, தீர்மானிக்கவும் முடியும்.

இணையத்தில் மாவோயிஸ்டுகள் போராட்டத்தை ஒருவர் தொடர்ந்து கருத்தளவில் ஆதரித்தார் என்பதை வைத்து அவருக்கு கடன் கிடையாது என்று வங்கி மேலாளர்கள் முடிவு செய்யலாம். ஈழ அகதிகளுக்கு ஒருவர் நன்கொடை கொடுத்தார் என்பதை வைத்து அவரது வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்படலாம். பையன் கம்யூனிஸ்டு என்பதால் அப்பா ஆர்.எஸ்.எஸ் ஆக இருந்தாலும் அவரது ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படலாம். மகஇக போராட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்ற ஒரு காரணத்திற்காகவே ஒருவருக்கு அரசு நலத்திட்டங்கள் மறுக்கப்படலாம்.

நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து, மாவோயிஸ்டுகள் போராட்டத்தை ஆதரித்தார் என்பதற்காக ஒருவரது பாஸ்போர்ட் முடக்கப்படலாம். பாலச்சந்திரன் படத்தை கூகிள் பிளசில் ஷேர் செய்தார் என்பதற்காக ஒரு ஐடி ஊழியரின் ஊதிய உயர்வு நிறுத்தப்படலாம். வினவில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு கட்டுரைகள் அனைத்தையும் படித்திருக்கிறார் என்பதற்காக ஒருவரை தனது நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கா தடை செய்யலாம்.

இப்படி எண்ணிறந்த முறையில் அடக்குமுறைகள் வரும். இவை எதிலும் கைது, சிறை இல்லை என்பதையும் குறிப்பிட்ட நபர்களது சமூக வாழ்க்கையை ஆதரவு இன்றி முடக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்க.

இது வேகமாக வேகமாக பரவும் பட்சத்தில் அரசியல் உணர்வும், ஈடுபாடும், பங்கேற்பதும் கூட மாபெரும் பயங்கரவாதச் செயல்கள் போல பாவிக்கப்படும். அப்படி ஒரு சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்! மாணவர்கள், தொழிலாளிகள், பெண்கள் என அனைத்துப் பிரிவினரும் போராடாமல், அடிமைத்தனத்தோடு மட்டும் வாழவேண்டும் என்றால் அந்த உலகம் எவ்வளவு கொடூரமாக இருக்கும்?

ஏகாதிபத்தியங்கள் தொழில்நுட்ப புரட்சியின் உதவியினால் உருவாக்கியிருக்கும் இந்த பிக் டேட்டா கண்காணிப்பு இப்படி சிறையில்லாமலே ஒருவரை சிறையில் அடைப்பது போன்ற வாய்ப்புகளை வழங்குகிறது. நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றி விடாமல் குடிமக்களை முடக்கி விடுவதுதான் இத்தகைய கண்காணிப்புகளின் நோக்கமும் கூட.

ஆக ஒரு மனிதனின் தனிநபர் – அந்தரங்க உரிமைகளில் அரசியல் உரிமையே தலையாயதும், முதன்மையானதும் ஆகும். அந்த உரிமையை தடை செய்வதற்காக நமது சமூக பொருளாதார உரிமைகளில் கை வைப்பதற்கு இந்த கண்காணிப்பு பயன்படுகிறது. ஒரு மனிதனின் பொருளாதார வாழ்வை முடக்குவதாக மிரட்டினால் எத்தனை பெரியவரும் சடுதியில் சோர்ந்து சரணடைந்து விடுவார்கள். இதுவே ஒரு சமூகத்தின் யதார்த்தமாக மாறும் போது வரலாற்றின் பக்கங்களில் புதையுண்டிருக்கும் அடிமைகளது வாழ்க்கை மீண்டு வரும். மாட்ரிக்ஸ் திரைப்படத்தில் மெஷின்கள் உலகைக் கட்டுப்படுத்துவது போல இங்கு ஏகாதிபத்தியங்களும், முதலாளிகளும் கட்டுப்படுத்துவார்கள்.

ஆகவே இந்த கண்காணிப்பு சதித்திட்டத்தை நாம் எண்ணிறந்த முறையில் எதிர்க்க வேண்டும். இந்த விழிப்புணர்வு உலக அளவில் வளர்ந்து இணைய, செல்பேசி நிறுவனங்களுக்கும், அரசுகளுக்கும் நிர்ப்பந்தம் கொடுக்கும் அளவிலும், தொழில் நுட்ப முறையில் இந்தக் கண்காணிப்பு முறைகளை தகர்க்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை பரவலாக்கும் முறைகளிலும் வளர வேண்டும்.

(ஒரு அரசு தனது சொந்த குடிமக்களை கண்காணிக்காமல் ஆள முடியாதா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார். அதற்கான பதிலை அடுத்த பதிவில் வெளியிடுகிறோம்.)

கொலைகாரர்களால் ஆளப்படும் நாடு !

2

1984-இல் நடந்த சீக்கியப் படுகொலை தொடர்பான வழக்கொன்றில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்த காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமார், அவ்வழக்கு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் – கொலைக்குற்றம் மற்றும் கலவரம் – விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 29 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வரும், நீதிக்காகக் காத்திருக்கும் சீக்கியர்களிடம் இந்த அநீதியான தீர்ப்பு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எந்தவொரு வார்த்தையாலும் விவரித்துவிட முடியாது.

1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று காலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய மதத்தைச் சேர்ந்த இரண்டு மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்துத் தொடங்கிய சீக்கியப் படுகொலை நவம்பர் 3-ஆம் தேதி வரை தொடர்ந்து நடந்தது. இப்படுகொலையின் குவிமையமாக தலைநகர் டெல்லி இருந்தது. அங்கு மட்டும் ஏறத்தாழ 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

டெல்லி வன்முறை
காங்கிரசு காலிகள் டெல்லியில் அப்பாவி சீக்கிய மக்களைத் தாக்கிப் படுகொலை செய்யும் கோரக் காட்சி (கோப்புப் படம்).

டெல்லியில் நடந்த சீக்கியப் படுகொலையை அப்பொழுது செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த ஹெச்.கே.எல்.பகத், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜகதீஷ் டைட்லர், டெல்லி மாநகர கவுன்சிலராக இருந்த சஜ்ஜன் குமார் ஆகியோர்தான் தலைமையேற்று நடத்தினர். டெல்லி போலீசு இப்படுகொலையை நடத்திய காங்கிரசு கும்பலின் பங்காளியாக நடந்து கொண்டது. இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட ராஜீவ் காந்தி, “ஒரு ஆலமரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்” எனக் கூறி, காங்கிரசு கும்பல் நடத்திய படுகொலையைப் பச்சையாக நியாயப்படுத்தினார்.

டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை, பாலியல் வல்லுறவுகள், கலவரம், தீவைப்பு தொடர்பாக 740 வழக்குகள் தொடரப்பட்டதில், 324 வழக்குகள் விசாரணை எதுவுமின்று ஊத்தி மூடப்பட்டு விட்டன. நீதிமன்ற விசாரணை வரை சென்ற 403 வழக்குகளுள் 335 வழக்குகளில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செயப்பட்டு விட்டனர். 13 வழக்குகள் என்ன நிலைமையில் உள்ளன என்ற விவரம் யாருக்குமே தெரியவில்லை. மீதி வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின்பொழுது இப்படுகொலையை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நானாவதி கமிசன், ஹெச்.கே.எல்.பகத், சஜ்ஜ்ன் குமார், ஜகதீஷ் டைட்லர் ஆகியோரைக் குற்றவாளிகளாக அறிவித்தது. மைய அரசு நியமித்த கமிசனால் அம்மூவரும் குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்ட பிறகும், காங்கிரசுக் கட்சி கொஞ்சம்கூடக் குற்ற உணர்வின்றி, ஜகதீஷ் டைட்லருக்கும் சஜ்ஜன் குமாருக்கும் 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட சீட்டுக் கொடுத்தது. காங்கிரசின் இந்த மமதைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட சீக்கியர்களின் போராட்டம் வலுப்பெற்றதையடுத்து, சஜ்ஜன் குமாருக்கு வழங்கப்பட்ட சீட்டுத் திரும்பப் பெறப்பட்டு, அத்தொகுதியில் அவரது தம்பி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஜகதீஷ் டைட்லரோ, அத்தேர்தலில் வென்று, அமைச்சராகி, அதன் பின்னர் வேறு வழியின்றிப் பதவியிலிருந்து விலகினார்.

14-sikhs-3
டெல்லி சீக்கியப் படுகொலையின் தளபதிகள் : சஜ்ஜன் குமார் (இடது) மற்றும் ஜகதீஷ் டைட்லர்

சீக்கியப் படுகொலை நடந்து முடிந்து 20 ஆண்டுகள் கழிந்த பிறகு – 2005-இல்தான் இவர்கள் இருவரின் மீதும் வழக்குப் பதிவு செயப்பட்டது. அதற்கு முன்புவரை, அவர்களது பெயர் எந்தவொரு குற்றப் பத்திரிக்கையிலும், வழக்கிலும் சேர்க்கப்படாமல் பார்த்துக் கொண்டது டெல்லி போலீசு. ஹெச்.கே.எல்.பகத் நோய்வாய்ப்பட்டிருந்ததைக் காரணமாகக் காட்டி, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்தது, காங்கிரசு கூட்டணி அரசு. வழக்கு, விசாரணை போன்ற எதையும் சந்திக்காமலேயே செத்துத் தொலைந்தான், பகத்.

ஜகதீஷ் டைட்லருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரேயொரு வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ., அவருக்கு எதிரான சாட்சியங்கள் நம்பத்தக்கதாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த வழக்கை 2007-இல் நீதிமன்ற அனுமதியோடு கைகழுவியது. பின்னர் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அதே காரணத்தைக் கூறி, 2009-இல் நீதிமன்ற அனுமதியோடு அந்த வழக்கு மறுமுறையும் சி.பி.ஐ.யால் கைவிடப்பட்டது. சி.பி.ஐ.-இன் இந்த முடிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்து வந்த டெல்லி குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கடந்த ஏப்ரல் மாத மத்தியில் உத்தரவிட்டுள்ளது. சஜ்ஜன் குமாருக்கு எதிராக நடந்துவரும் மூன்று வழக்குகளில் ஒன்றில், அவருக்கு எதிரான சாட்சியங்கள் நம்பத்தக்கதாக இல்லை என நீதிமன்றமே கூறி, அவரை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் விடுதலை செய்துவிட்டது.

ஜெக்திஷ் கவுர்
சஜ்ஜன் குமாரைத் தண்டிக்கக் கோரி, கடந்த 29 ஆண்டுகளாகப் போராடி வரும் ஜெக்திஷ் கவுர்.

இவ்வழக்குகள் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை, நீதிமன்றத் தீர்ப்புகள் இவையிரண்டுமே முரண்பாடுகளின் மூட்டையாகவும், அரசியல் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளைத் தப்பவைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நடத்தப்பட்டிருப்பதும் பச்சையாகத் தெரிகின்றன. புல் பங்கஷ் என்ற குருத்வாராவில் மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில், அக்கொலைகளைத் தூண்டிவிட்டு நடத்தியதாக ஜகதீஷ் டைட்லர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. “இப்படுகொலை நடந்த சமயத்தில் ஜகதீஷ் டைட்லர் அந்த குருத்வாரா இருக்கும் பகுதியிலேயே இல்லை; அப்பொழுது அவர் தீன்மூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் உடலருகே ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார். இதற்கு தூர்தர்ஷனின் ஒளிப்பதிவுகள் ஆதாரமாக உள்ளன” என்று கூறி, டைட்லரை உத்தமனாகக் காட்டி வருகிறது, சி.பி.ஐ.

படுகொலை நடந்த குருத்வாராவிற்கும் தீன்மூர்த்தி பவனுக்கும் இடையே உள்ள தூரத்தை வெறும் 15 நிமிடத்தில் கடக்கலாம் என்ற சாட்சியங்களின் தரப்பு வாதத்தை, சி.பி.ஐ. ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், இப்படுகொலை தொடர்பாக சாட்சியம் அளிக்க முன்வந்த நான்கு சாட்சியங்களின் வாக்குமூலங்களைப் பதிவு செயாமலேயே, அவை நம்பத்தகுந்த சாட்சியங்கள் இல்லை என இட்டுக்கட்டிக் கூறி, இந்த வழக்கை நீதிமன்ற அனுமதியோடு மூடியது, சி.பி.ஐ. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மாஜிஸ்டிரேட் கோர்ட் அளித்த உத்தரவை ரத்து செய்து, அந்த நான்கு சாட்சியங்களை விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம், இவ்விசாரணையை மீண்டும் சி.பி.ஐ.யிடமே ஒப்படைத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவு அடிப்படையிலேயே நாணயமற்றது; குற்றவாளி டைட்லரைத் தப்பவைக்கும் உள்நோக்கத்தோடு வழங்கப்பட்டிருக்கும் இன்னொரு வாய்ப்பாகும்.

ராஜ் நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் உள்ளிட்டு ஆறு பேர் மீது கொலை, கலவரம், தீவைப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. தனது கணவர், மகன், மூன்று கொழுந்தன்களைப் பறிகொடுத்த ஜெகதிஷ் கவுர் இப்படுகொலைகளை நேரில் பார்த்த சாட்சி மட்டுமல்ல, இப்படுகொலை நடந்த சமயத்தில் சஜ்ஜன் குமார் அப்பகுதியில் இருந்தார் என்றும், சீக்கியர்களைக் கொல்லுமாறு தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார் என்றும் சாட்சியம் அளித்தார். படுகொலை நடந்து 29 ஆண்டுகள் கழிந்த பிறகும், அவர் அளித்துள்ள சாட்சியத்தில் எவ்விதமான தடுமாற்றமும் காணப்படவில்லை. சஜ்ஜன் குமார் தவிர்த்த மற்ற ஐந்து பேரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்பதற்கு ஜெகதிஷ் கவுர் அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், அவர் சஜ்ஜன் குமாருக்கு எதிராக அளித்த சாட்சியத்தை மட்டும் நம்பத்தக்கதாக இல்லை என ஒதுக்கித் தள்ளிவிட்டு, சஜ்ஜன் குமாரை விடுதலை செய்துவிட்டது.

“சீக்கியப் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய ரங்கநாத் மிஸ்ரா கமிசனிடம் ஜெக்திஷ் கவுர் சாட்சியம் அளித்தபொழுது, அவர் சஜ்ஜன் குமார் பெயரைக் குறிப்பிடவில்லை. அதற்கு முரணாக அவர் இந்த விசாரணையின் பொழுது சஜ்ஜன் குமார் பெயரைக் குறிப்பிடுவது சந்தேகத்திற்குரியது” என இரக்கமற்ற முறையில் தீர்ப்பளித்திருக்கிறது, நீதிமன்றம். சஜ்ஜன் குமார் ஏவிவிட்ட அடியாட்களால் ஜெகதிஷ் கவுர் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தார்; தனது உயிரைக் காத்துக் கொள்ளும்பொருட்டே மிஸ்ரா கமிசனிடம் அவர் சஜ்ஜன் குமார் பெயரைக் குறிப்பிடவில்லை என்ற உண்மையை நீதிமன்றம் நாணயமற்ற முறையில் புறக்கணித்திருக்கிறது.

சீக்கியர்கள் போராட்டம்
சஜ்ஜன் குமார் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரசு தலைவி சோனியா காந்தியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராடும் சீக்கியர்கள்.

சீக்கியப் படுகொலை நடந்து முடிந்த இந்த 29 ஆண்டுகளில், பெரும்பாலான ஆண்டுகள் டெல்லியையும் மைய அரசையும் காங்கிரசு கும்பல்தான் ஆண்டு வந்திருப்பதால், சஜ்ஜன் குமார், டைட்லர் போன்ற குற்றவாளிகள் ஜெகதிஷ் கவுர் போன்ற சாட்சியங்களை மிரட்டிப் பணிய வைப்பதையும், விலைக்கு வாங்கிக் கலைப்பதையும் எளிதாகச் செய்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய டெல்லி குருத்வாரா தலைமை பீடமோ, காங்கிரசோடு கைகோர்த்துக் கொண்டு சாட்சிகளைக் கலைக்கும் துரோகத்தனத்தைக் கூச்சநாச்சமின்றி செய்துவந்தது. சீக்கியர்களின் பாதுகாவலன் என மார்தட்டிக் கொள்ளும் அகாலி தளக் கட்சியோ, இப்படுகொலையில் பாதிக்கப்பட்டது தமது ஓட்டு வங்கிக்குப் பயன்படாத டெல்லியைச் சேர்ந்த சீக்கியர்கள் என்பதால், பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு ஆதரவாக அறிக்கை விட்டதைத் தாண்டி உருப்படியாக எதையும் செய்ய முன்வரவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் அரசியல் செல்வாக்கு மிகுந்த குற்றவாளிகளை எதிர்த்துத் தனியாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். டைட்லருக்கு எதிராகச் சாட்சியம் அளித்த ஜஸ்பீர் சிங், சுரிந்தர் சிங் போன்றோர் தமது உயிரைக் காத்துக் கொள்ள இந்தியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். சி.பி.ஐ.-யும், நீதிமன்றங்களும் சாட்சியங்களின் இந்தக் கையறு நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் செல்வாக்கு மிகுந்த குற்றவாளிகளைத் தப்பவைக்கும் அயோக்கியத்தனத்தைச் சட்டப்படியே செய்துவருகின்றனர்.

குஜராத் முசுலீம் படுகொலையை நடத்திய நரேந்திர மோடிக்கும், சீக்கியப் படுகொலையை நடத்திய நேரு-காந்தி குடும்பத்திற்கும் இடையே எள்ளளவும் வேறுபாடு கிடையாது. சஜ்ஜன் குமார் விடுதலை செயப்பட்ட நாளன்று, “இந்த நாடு கொலைகாரர்களால் ஆளப்படுகிறது; அவர்களிடம் நாங்கள் நீதிக்காகக் காத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என சீக்கியர் ஒருவர் தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார். இந்திய ஜனநாயகத்தின், மதச்சார்பின்மையின், நீதி பரிபாலணத்தின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டும் சத்தியமான வார்த்தைகள் அல்லவா அவை!

– குப்பன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

மரக்காணம் ‘கலவரம்’ விரிவான அறிக்கை !

17

(இது மரக்காணத்தில் நடைபெற்ற சாதிவெறித் தாக்குதல் பற்றி மக்கள் கலை இலக்கியம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் நேரில் சென்று திரட்டிய அறிக்கை.)

இராமதாசு – காடுவெட்டி குரு தலைமையிலான வன்னிய சாதி வெறியர்கள் மரக்காணம் காலனி தலித் மக்கள் மீது நடத்திய சாதிவெறியாட்டம்

25.04.2013 அன்று வன்னிய சாதி வெறியனும் பா.ம.க நிறுவனரும் ஆன இராமதாசு வன்னியர் சங்கம் எனும் வானர சேனையின் தலைவருமான காடுவெட்டி குரு ஆகியோரின் தலைமையில் நடந்த சித்திரை முழு நிலவு கொண்டாட்டமும் அதை ஒட்டி வன்னிய சாதி வெறியர்களின் மரக்காணம் சாதி வெறியாட்டம் பற்றி 29.04.2013 அன்று எமது தோழர்கள் நேரில் சென்று திரட்டிய விவரங்கள் அடிப்படையிலான அறிக்கை.

சம்பவம் நடந்தேறிய விதம்

சித்திரை முழுநிலவுக் கொண்டாட்டம்

கடந்த சில வருடங்களாக ராமதாசால் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டு வருகிற சித்திரை முழு நிலவுக் கொண்டாட்டங்கள் வன்னிய ஆதிக்கச் சாதி வெறியைத் தூண்டுபவையாக இருப்பது அனைவரும் அறிந்ததே. 2002 ல் மரக்காணம் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் வன்னியர் சாதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்படுகிறார். பல காலங்களாக அக்கொலைக்குப் பழி தீர்க்க இப்பகுதியில் திட்டமிட்டே சாதிக் கலவரத்தை ஏற்படுத்த ராமதாஸ் வகையறாக்கள் முயன்றுள்ளனர்.

marakanam-12011-ல் நடந்த இக்கொண்டாட்டத்தில் கலவரத்தை தூண்டிவிட முயன்ற பொழுது அப்பாதைகளில் இருந்த தலித்துகள், இஸ்லாமியர்கள் மற்றும் மீனவ மக்களின் கடும் எதிர்வினையால் இவர்கள் எண்ணம் ஈடேறாமல் போனது. மீண்டும் 2012-ல் பெரிய அளவில் கலவரங்கள் நடக்கவில்லையென்றபோதிலும் அக்கூட்டத்தில் பேசிய காடு வெட்டி குருவின் வன்மம் நிறந்த பேச்சால்தான் தருமபுரி, அதைத் தொடர்ந்த சாதிக் கலவரங்கள் நடந்தேறின.

இவ்வருடம் இக்கொண்டாட்டத்தில் சாதி வெறியோடு பாண்டிச்சேரி சரக்கின் போதை வெறியையும் ஏற்றிக்கொண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் மரக்காணம் சாதிவெறியாட்டம்.

சம்பவம் நடந்த அன்று இந்த கொண்டாட்டத்திற்காக தமிழகம் முழுவதும் இருந்து வந்த சாதி வெறிக்கும்பல்கள், வண்டிகளின் மேற்கூரைகளில் ஏறிக்கொண்டும், கைலிகளை இடுப்புவரை ஏற்றி கட்டிக் கொண்டும், ஆபாசமான முறையில் கை, கால், உடல் அசைவுகளைச் செய்து காட்டிக் கொண்டும் ஆபாசமாக கூச்சலிட்டுக்கொண்டும் வந்திருக்கின்றனர். மஞ்சள் பனியன்களை அணிந்துகொண்டும் நெற்றியில் ரிப்பன்களைக் கட்டிக் கொண்டுமிருந்தவர்களைப் பார்க்கும் பொழுது விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் போது இந்து முன்னணியினரைப் போலவும், பாபர் மசூதி இடிப்பு கர சேவகர்களைப் போலவும், குஜராத் கலவரத்தின் மத வெறியர்களைப் போலவும் வெறிக்கூச்சலிட்டு கொண்டுச் சென்றுள்ளனர். இது பீதியூட்டுவதாக இருந்ததென மக்கள் தெரிவித்தனர்.

இவர்களின் சித்திரைக் கொண்டாட்டத்திற்காக தென்னாற்காடு மாவட்டம் கடலூர் வழியாக, மாமல்லபுரத்தை நோக்கி மதியம் 1.30 மணியளவில், ஈசி ஆர் ஒயின் ஷாப், காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி போன்ற இடங்களிலிருந்து பெட்டி பெட்டியாக சாராயத்தை வாங்கிக் கொண்டு பல நூறு வேன்களில் வந்த வன்னியர்கள் சாலையின் இரு மருங்கிலும் திறந்திருந்த கடைகளை நொறுக்கியும், சில இடங்களில் வன்னியர் கடைகளைக் கூட சூறையாடிக் கொண்டும் சாரைசாரையாக மரக்காணத்தை நோக்கி விரைந்தனர்.

இவர்களின் அட்டூழியங்களை முன் கூட்டியே அறிந்திருந்ததால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்த பெரும்பாலான கடைகளும் உணவகங்களும் மூடியிருந்தன. மீறி திறந்திருந்த கடைகளிலும் ஓட்டல்களிலும் கூட அடாவடித்தனமாக பொருட்களை எடுத்துக்கொண்டும், சாப்பிட்டு பணம் தராமலும் இருந்துள்ளனர். பணம் கேட்டவர்களை அடித்தும் மிரட்டியும் தங்கள் ’வீரத்தை’ நிரூபித்துள்ளனர். புதுவையின் இடையில் உள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தில் உள்ள இஸ்லாமியச் சமூகத்தினரின் கடைகள் மற்றும் உணவகங்களிலும் அட்டூழியம் செய்துள்ளனர். அங்கிருந்த மதரசாவில் இருந்து வந்த இஸ்லாமியப் பெண்களின் முன் கைலியை அவிழ்த்துக் காட்டியுள்ளனர். பொறுமையின் எல்லை வரை சென்ற இஸ்லாமிய மக்களோடு அப்பகுதி தலித்துகளும், மீனவர்களும், வன்னியர்களும் சேர்ந்து அவர்களை அடித்து விரட்டியுள்ளனர். கோட்டக்குப்பத்தை தாண்டி பொம்மியாபளையம், பிள்ளைச்சாவடி, கூனிமேடு போன்ற பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.

அனுமந்தையில் பெரும்பான்மையாக வன்னியர்கள் இருப்பதால் வந்திருந்த பல நூறு வேன்களுக்கும் அங்குள்ள வன்னியர்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வேன்களில் வந்தவர்கள் ஓய்வெடுக்கவும், அங்குள்ள வன்னியர்கள் சில யோசனைகள் சொல்லுமிடமாகவும் அனுமந்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிருந்தவர்கள் கொடுத்த யோசனைப்படிதான் கழிக்குப்பத்திலும், மரக்காணம் காலனியிலும் வீடுகள் கொளுத்தப்பட்டதாக கூனிமேடு மக்கள் கூறினர்.

ஈசிஆர், மரக்காணத்தில் பல பெட்டிக்கடைகளையும் சில கறிக்கடைகளையும் கொளுத்தியுள்ளனர். மரக்காணத்தில் ரோட்டில் இருசக்கர வாகனங்களில் வந்த பெண்களை அசிங்கமாக பேசிக் கேலி செய்து, துப்பட்டாவை இழுத்தும் கலாட்டா செய்தனர். அதையடுத்து குடிவெறியில் காலி பீர் பாட்டில்களை அங்குள்ள கடைகளில் வீசியடித்தனர். கவுண்டர் ஊர்த்தெரு முடிந்து காலனி தொடங்குவதற்கு சில நூறு மீட்டர் தூரத்திலேயே – காலனிக்குள் நுழையும் சந்தினருகிலேயே இந்த வன்னிய வெறிக்கும்பல், எஸ்பி தலைமையிலான வெறும் 15 போலிசாரால் மேற்கொண்டு போகவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாத இந்த கொலைவெறிக்கும்பல் வாகனங்களை கவுண்டர் ஊர்ப்பகுதியின் முன்னிருக்கும் முந்திரித்தோப்பிற்குள் நிறுத்திவிட்டு, அங்கே குவிந்துள்ளனர்.

இவ்விடத்தில்தான் அவர்களின் சதித்திட்டம் கச்சிதமாகச் செருகப்பட்டிருக்கிறது. சிறிது நேரத்திலேயே ஒர் பள்ளிச்சிறுமியின் தாவணியை உருவி அப்பெண்ணை இழுத்ததும், பார்த்துக் கொண்டு நின்ற காலனியைச் சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது ரமேஷ் என்ற இளைஞரை காலனிக்கு செல்லும் தார்ச்சாலையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தடுக்க திராணியற்ற மற்றவர்கள் காலனிக்குள் வந்து உறவினர்களிடம் விவரம் கூறியதும், ஊர்மக்கள் அவரைக் காப்பாற்ற பதறியடித்துக் கொண்டுச் சென்றனர். முந்திரி காட்டிற்கும் – காலனி ரோட்டிற்கும், ஈசிஆர் ரோட்டிற்கும் – காலனிக்கும் இடையே சில 100 ஏக்கரில் மத்திய அரசின் வனத்துறையினரால் ஆளுயர தைல மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்நேரத்தில் மஞ்சள் பனியன் உடுத்தி தலையில் காவி ரிப்பனும் கையில் பெட்ரோல் பாம், வீச்சரிவாள், கற்கள், கத்தி, பீர் பாட்டிலுடன், இவ்வனப்பகுதி வழியாக உள்ளே நுழைந்த சமூக விரோதக் கும்பல் முதலில் பெண்களை நோக்கி கெட்டவார்த்தைகளைப் பேசி உறவுக்கு அழைத்து, ஜட்டியை கழற்றி தலையில் போட்டு நிர்வாண வெறியாட்டம் ஆடியுள்ளனர். ஆண்களை ”பறப் பொட்டப் பயலுகளா வாங்கடா” – என்று கேவலப்படுத்தியுள்ளனர். பயந்த பெண்கள் வீட்டிற்குள் இருந்த குழந்தைகளை ஒரு கையிலும் உயிரை இன்னொரு கையிலும் பிடித்துக் கொண்டே கடற்கரையை நோக்கி ஓடியுள்ளனர். அதற்குள் காலனிக்குள் நுழைந்தது கொலைவெறிக்கும்பல். பெட்ரோல் பாம்கள் வெடிக்கும் சத்தம் கேட்டு ஓடிக் கொண்டிருந்த தலித் மக்கள் திரும்பிப் பார்த்த போது அவர்கள் குடிசைகள் நிமிடங்களுக்குள் எரிந்து சாம்பலாகி விட்டன. பொருட்கள் வெடித்து சிதறின. காய்த்துக் குலுங்கிய மரங்கள் கரிக்கட்டைகளாயின.

தன் அண்ணன் மகன்களின் குழந்தைகளையும் பெண்களையும் தாக்குதலிலிருந்தது தடுக்கச் சென்ற கலைவாணன் என்பவரையும் ஏகாம்பரம், அல்லிமுத்து ஆகியோரையும் பிடித்து தலையில் அரிவாளால் கொத்தி, நாக்கை அறுத்து கோரதாண்டவமாடியது. அதன் பின்னரே, அதுவரை கையில் துப்பாக்கியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எஸ்பி மூன்று பேரை முட்டிக்கு கீழ் சுட்டு இக்கொலைவெறிக்கும்பலை விரட்டியடித்துள்ளார். கலைவாணன் முதலானோர் தங்கள் உயிரை பணயம் வைத்து தடுக்கவில்லையென்றால், அக்காலனியிலுள்ள அத்தனை குடிசைகளையும் எரித்து சாம்பலாக்கியிருப்பர். எரிக்கப்பட்ட முதல் வீடு கவுண்டர் குடியிருப்பின் எல்லையிலிருக்கும் முதல் காலனி வீடு. அதற்கு அடுத்திருக்கும் ஒரு மாட்டுத்தொழுவம், வைக்கோல் போர், ஏழு குடிசைகள், ஒரு கோயில், ஒரு பெட்டிக்கடை, போன்றவையும், பல மாமரங்களும், பனை மரங்களும், தென்னை மரங்களும், பலா மரங்களும் பெட்ரோல் பாம் வீசி சாம்பலாக்கப்பட்டன. கலைவாணனின் குடிசைக்கு தீ வைத்ததை உடனே தண்ணீரூற்றி அணைத்ததால் அக்குடிசை காப்பாற்றப்பட்டது.

marakanam-map

தாக்கப்பட்ட காலனிப்பகுதி ஈசிஆர் ரோட்டிலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் உள்ளே இருக்கிறது. ஈசிஆர் ரோட்டிற்கும் காலனிக்கும் இடையே மத்திய வனத்துறையால் தைல மரக் கன்றுகள் வைக்கப்பட்டுள்ளதால் ரோட்டிலிருந்து பார்த்தால் உள்ளே வீடுகள் இருப்பதற்கான அறிகுறிகளே தெரியாது. அப்படியிருக்கையில் எங்கு கவுண்டர் குடியிருப்பு முடிந்து காலனி எல்லை தொடங்குகிறது என்பதை அசலூரிலிருந்து ரோடு வழியாகச் செல்லும் எவருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. ஆனால் இத்தாக்குதல் காலனியின் பின்பகுதிவழியாக நடத்தியிருப்பது இதை ஒரு திட்டமிட்ட கொலைவெறித்தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துகிறது (பார்க்க படம்). ஏனென்றால், மரக்காணம் காலனி மக்கள் ஏற்கனவே 2002-லும் 2011-லும் இச்சாதிவெறிக்கும்பலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். அப்படி இருக்கையில் எஸ்பி தலைமையிலான வெறும் 15 போலீசார் பல நூற்றுக்கணக்கான வாகனங்களை காலனி வாசலிலேயே தடுத்து நிறுத்தி இந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்துள்ளனர் என்றே சொல்லலாம். இத்தாக்குதலை திட்டமிட்டு கொடுத்தது மரக்காணம் பாமக ஒன்றியக் கவுன்சிலரான வன்னியர் சாதியைச் சேர்ந்த சேதுவும் தாக்கிய கொலைவெறிக்கும்பலை பத்திரமாக வழியனுப்பியது அதிமுகவை சேர்ந்த வன்னியரான ரவிவர்மாவும் என்று காலனி மக்கள் கூறினர். இவை ஆளும் அதிமுகவிற்கும் காவல்துறைக்கும் தலித் மக்கள் மீதான இந்த திட்டமிட்ட தாக்குதலில் உள்ள பங்கை பறைசாற்றுகிறது.

மரக்காணம் காலனியில் ராமதாசு – காடுவெட்டிக் கும்பல் நடத்திய இவ்வெறியாட்டத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகளால் அம்மக்கள் சொல்லெணாத் துயரத்தை அடைந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு நேர்ந்ததை பீதியுடன் சொல்வதை கீழே அப்படியே தருகிறோம்.

ஆனந்த் (40)

2.30 லிருந்து 3.00 மணியிருக்கும், போலீசு மெயின் ரோட்டில மறிச்சதும் கூட்டம் கூடியிருச்சு. வேனில வந்தவங்க எல்லாம் முந்திரித்தோட்டம் பக்கத்தில குமிய ஆரம்பிச்சிட்டாங்க. அப்பிடியே உள்ள புகுந்து வந்திட்டாங்க. ஆனா எல்லார் கவனமும் ரோட்டுமேல இருந்ததால யாரும் இங்க நடந்தத கவனிக்கல்ல. பீர் பாட்டில், ஜல்லி கல், பெட்ரோல் பாம்ப், வீச்சரிவாள், கத்தி எல்லாத்தையும் வச்சிருந்தாங்க. முழுக்க திட்டமிட்டு வந்தால் மட்டுமே அப்பிடி எடுத்து வந்திருக்க முடியும். முந்நூறு பேருக்கு மேல காடு வழியா வந்தாங்க. பலா மரத்தை பெட்ரோல் பாம்ப் போட்டு கொளுத்திட்டாங்க (முழுக்க காய்த்து குலுங்கும் அம்மரம் காய்களோடு கருகி நிற்கிறது, கொத்துகொத்தாக பலாக்காய்கள் வெம்மையால் வெடித்து பால் வடிந்து வாடி நிற்கிறது). சினை மாடு ஒன்று தீயில் கருகி இறந்தது. போலீசும் அதிகாரிகளும் பார்வையிட்டுவிட்டு மட்டும் சென்றுள்ளனர். ஆனால் இனிமேலும் இதுபோன்று நிகழாது என்பதற்கு யாரும் உத்தரவாதம் கொடுக்கவில்லை.

இந்த ஊரில பெரும்பாலனவங்க உப்பளத்தொழிலாளிகள். பெண்களும் ஆண்களும் உப்பளத்தில் தான் வேலை செய்கின்றனர். காலையில 6 மணியிலியிருந்து 2 மணி வரைக்கும் வேலை. வருடத்தில் ஆறு மாதம் தான் வேலை. மீதிநாள் வேலையில்லை. இங்க வேற தொழிலும் இல்ல. விவசாய நிலங்கள் பிளாட் போட்டு வித்ததால விவசாயக் கூலிவேலையும் இல்ல. அதனால மீனவர்களுக்கு கொடுக்கற மாதிரி ஏதாவது நிவாரணம் இப்பகுதி மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் தொடர்ச்சியா கேட்டுகிட்டிருக்கோம். இந்த சம்பவம் நடந்த அன்றைக்கு பெரும்பாலானவங்க வேலைக்கு போயிருந்தாங்க. வீட்டிலிருந்த பெண்களும் குழந்தைகளும் வயசானவங்களும் பயந்து உயிர கையிலப்புடிச்சுகிட்டு கடற்கரையை நோக்கி ஓடிட்டாங்க. எதிர்த்து நிற்க இளவட்டங்கள் யாருமில்ல.

தேவி (35)

எங்க வீடு தான் சேரியின் எல்லையில இருக்கு. அதுக்கு அப்புறம் கவுண்டர்களோட வீடு ஆரம்பிக்குது. எங்க வீடு தான் முதலில தாக்கப்பட்டது. பெட்ரோல் பாம் போட்டதில மாட்டுக்கொட்டாயும், வைக்கோல் போரும் வீடும் எரிஞ்சுது. நல்ல வேளையாக மாடுகள் வெளியே மேயவிடப்பட்டதால அவற்றிற்கு ஒண்ணும் ஆகல. காய்ச்ச மாமரம் 2 எரிஞ்சுது (ஏராளமான மாங்காய்கள் கரிந்து கீழே விழுந்து கிடக்கிறது). ஒரு பலா, 4 தென்னை மரங்களும் முழுதாக எரிந்தது. வீடு எரிந்து 5 நிமிடத்தில் சம்பலாயிற்று. உயிர கையில புடிச்சிட்டு ஓடினோம். பொருட்களெல்லாம் வெடிக்கிற சவுண்ட் கேட்டிச்சு. எதுவுமே எடுக்கல. பெட்ரோல் பாம் போட்டதால தான் இவ்வளவு வேகமா எரிஞ்சுது.

(தேவி வீட்டின் எதிர்புறம் முன்னாள் இராணுவத்தில் இருந்தவரின் மாடி வீடும் பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். வீட்டின் உட்பகுதியில் கண்ணாடிசில்லும், உடைந்த பீர்பாட்டிலும் இறைந்து கிடக்கின்றன.)

அங்காளம்மாள் (53) (உப்பளத்தொழிலாளி, விதவை)

மக (அனுஷியா (23)) திருமணம் மே மாசம் 27 ஆம் தேதி. கல்யாணத்துக்கு சேத்து வச்ச காசு 3 லட்சமும் 15 பவுன் நகையையும் வீட்டஒடச்சு திருடிட்டாங்க. கூட்டமா சத்தம் போட்டிட்டே திபு திபுன்னு வந்தாங்க. திருடினப்புறம் பெட்ரோல் பாம் போட்டு வீட்டக் கொளுத்திட்டாங்க. மாடு வெந்து செத்துபோச்சு. ஒருபொருளும் எடுக்க முடியல. கல்யாணத்துக்கு சேத்து வச்ச துணியெல்லாம் எரிஞ்சுது. உயிருக்கு பயந்து ஓடிட்டோம். ஒரு மகன் கல்யாணமாகி தனியா இருக்கான். போன பொருள் திரும்பி வருமா? நீங்கெல்லாம் டீவிலயும் பேப்பரிலயும் எழுதுவீங்க? யாரும் ஹெல்ப் பண்ண மாட்டாங்க. கலியாணம் நடத்துறதுன்னா சும்மாவா? போனது போனது தான்.

அனுஷியா (23) (மணப்பெண்)

மாப்பிள வீட்டிலேருந்து இதுவரைக்கும் யாரும் வரல. போலீசு எங்க பசங்களையும் அரஸ்ட் பண்ணப்போறதா சொல்றாங்க. அதுக்கு பயந்து தான் வரல.

(இவர்களின் எதிர்வீடான சீனிவாசனின் ஓட்டுவீடு பீர்பாட்டிலாலும் ஜல்லியாலும் தாக்கப்பட்டுள்ளது. ஓடு உடைந்து வீட்டினுள் பீர்பாட்டில் சில்லும் ஓட்டு சில்லும், ஜல்லியும் இறைந்துள்ளது. தாக்குதல் ஆரம்பித்ததும், குழந்தைகள் அனைவரும் வீட்டைவிட்டு ஓடி விட்டனர். எனவே உயிர்சேதம் இல்லை.)

marakanam-4

வேலு மனைவி முள்ளியம்மாள் (28)

எனக்கு 4 புள்ளைங்க இருக்குதுங்க, என் வீட்டுக்காரருக்கு ஆக்ஸிடண்ட் ஆனதால வேலைக்கு போகாம வீட்டுலதான் இருக்காரு, நான் தான் கூலி வேலை செஞ்சு குடும்பத்தை காப்பாத்திட்டு இருக்கிறேன். சம்பவம் நடந்த அன்னைக்கு வேலைக்குப் போய்ட்டு வந்துட்டு காலையில சாப்புடலயே இப்பயாவது கொஞ்சம் கஞ்சிக்குடிக்கலாமுன்னு வந்தப்ப தான் ஐயோ அவனுங்க வரானுக வரானுகன்னு எல்லாரும் கத்தினாங்க வெளில எட்டிப் பார்த்தா ஒரு நூறடி தூரத்துல அவனுங்க கத்தி, கபடா அது இதுன்னு எல்லாத்தையும் தூக்கினு ஓடி வந்துகினு இருந்தானுங்க, ஜட்டிய தலைல போட்டுகிட்டு, கைலிய தூக்கி வாங்கடி, வாங்கடி, கத்தியவுட்டு கிழிச்சுடுறேன் வாங்கடின்னு அசிங்க அசிங்கமா கத்திகிட்டே ஓடி வந்தானுங்க. போலீசெல்லாம் நின்னாங்க. எங்க ஆட்கள் போனா கம்ப வச்ச (போலீசு) விரட்டியடிச்சாங்க. ஆனா அவனுகள ஒண்ணும் சொல்லாம வேடிக்க பாத்தாங்க. ஐயோ நம்ம புள்ளைங்களுக்கு எதாவது ஆயிடுமோன்னு எல்லாத்தையும் வாரி தூக்கிகிட்டு, முடியாத எம் புருஷனையும் இழுத்துகிட்டு அப்படியே பீச்சாங்கரை பக்கமா ஓடிட்டு இருந்தோம், கொஞ்ச நேரத்துல பெருசா வெடி வெடிக்கிற மாதிர சத்தம் வருதேனு பாத்தா என் வீடு பக்கத்து வீடுன்னு எல்லா எடமும் பெட்ரோல் குண்டால எரிய ஆரம்பிச்சுது, கொஞ்ச நேரத்துல கண்ண மூடி கண்ண தொறக்கறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சு. என் ஊட்டுகாரோட சைக்கிளு, ரேஷன் கார்டு, எங்க எல்லாரோட சர்டிபிகேட், எம் புருஷனுக்கு ஆக்ஸிடண்ட ஆனப்ப கொடுத்த ரெண்டு லச்சம், 5 சவரன் நகை எல்லாமே சாம்பலாயிடுச்சு, ரெண்டு நாளா வெளியில தான் பயந்து பயந்து படுத்துனு இருக்கிறோம். மாத்து உடை இல்ல, எதுவுமே இல்லங்க. மறுநாள் கலெக்டர் வந்து பாத்தாங்க. எல்லாம் வராங்க பேசுறாங்க. ”நல்லது நடக்கும் என்கிறாங்க”. தட்டு, பாய், பிளாஸ்டிக் குடம் குடுத்தாங்க. ஆனா நஷ்டஈடு குடுப்போம்னு எதுவும் சொல்லல.

பதினோரு வருசமாச்சு கலவரம் நடந்து. எம்பொண்ணு அப்பொ 3 மாசம். ஆனா அதுக்கப்பறம் அவங்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. மகாநாடு அன்னைக்கு தான்னு தெரியவே தெரியாது எங்களுக்கு. இவங்க மகாநாட்டுக்கு போகப் போறாங்கண்ணு தெரிஞ்சிரிந்தா எங்க ஆட்களெல்லாம் வேலைக்கு போகாம வீட்டில இருந்திருப்பாங்க. அவங்க கத்தி கம்பெல்லாம் கொண்டுவந்தாங்க. பத்து தடி கிட்ட இந்தா எடுத்து போட்டிருக்கோம். திட்டமிட்டு தான் வந்திருக்காங்க. இந்த மூணு வீட்டில நாங்க ஒரு பொருள் எடுக்கல. கட்டுன துணியோட ஓடிப் போயிட்டோம். இந்த பச்சப்புள்ளைக்கு ஒரு ஜட்டிகூட இல்ல. என் ரெண்டு புள்ளைங்களுமே பயந்து ஓடிட்டாங்க. நைட்டு புல்லா தேடியும் அடுத்த நாளைக்கு காலையில தான் கிடச்சாங்க (பதினோரு வயது பொண்ணும் ஐந்து வயது பையனும்). ஆலம்பாட்டில போய் இருந்தாங்க. புள்ளைங்க பயந்துகிட்டு ஸ்கூல் போக மாட்டேங்கிறாங்க. இன்னைக்கு தான் கடைசி நாள். எங்களோட சாதின்னா அவ்ளோ கேவலம். இவங்களப் போய் நாங்க கொடுமப்படுத்துறோமா? நாங்க உழைக்கிறோம்; சம்பாதிக்கிறோம்; சாப்பிடுறோம்; நாங்க எப்பிடியோ காலத்த ஓட்டுறோம். எங்களுக்கு உக்கார இடமில்லாம ஆக்கிட்டாங்க பாருங்க. நாங்க இன்னைக்கு நடுத்தெருவுல உக்காந்துக்கிட்டிருக்கிறோம்.

அவ்ளோ மரமும் போயிடுச்சு. ஒரு மரம் வச்சு வளர்த்த எவ்வளோ நாளாகும். செஞ்வங்க செஞ்சிட்டு போயிட்டாங்க. மழ பெஞ்சா கூட இதெல்லாம் வருமோ வராதோ?

இத்தின வருசமா போறாங்க. ரோட்டுமேலெயே அலப்பற பண்ணிட்டு போறாங்க. ஆனா இப்பொ தானே உள்ள வந்திருக்காங்க. அப்பொ இவங்க (உள்ளூர் வன்னியர்கள், கவுண்டர், கிராமணி போன்றவர்களை இங்கே குறிப்பிடுகின்றனர்) ஆதரவு குடுக்காமலா வந்திருப்பாங்க. உள்ள காலனி இருக்குன்னு எப்பிடி தெரியும். காலனிக்கு அந்தப்பக்கம் பிரச்சன கிடையாது. கிராமணி, கவுண்டர் புல்லா அங்க இருக்காங்க. இதுவரைக்கும் எங்களுக்கும் அவங்களுக்கும் பிரச்சன கிடையாது. நாங்க ஊருக்குள்ள போவோம் வருவோம். கிராமணி தான் கடை வச்சிருக்காங்க, அங்க தான் பொருளெல்லாம் வாங்குவோம். ஆனா இந்த பிரச்சனைக்கப்புறம் நாங்க போய் பொருள் கேட்ட தர மாட்டேங்கிறாங்க. நேத்தைக்கு கூட தக்காளி வெங்காயம் வாங்க போனப்பொ இல்லைன்ண்ட்டாங்க. ஆனா எங்க கண்ணு முன்னாடியே சாக்கில வெங்காயம் இருந்தது. அப்புறம் வெயிலில போய் 2 கி.மீ அந்தாண்ட மகராச கோயில் பக்கம் போய் வாங்கி வந்தாங்க. இம்மாம் நாளும் குடுத்துக் கிட்டு இருந்தவங்க இப்பொ குடுக்கமாட்டேன்றாங்க.

முருகன் (37) மனைவி நதினா (34)

S. P. வண்டிய பா. ம. க வினர் அடிச்சு நொறுக்குகிறாங்க. போலீசு அத வேடிக்கை பார்த்துக்கொண்டு நிக்குது, ஆனா எங்களை தற்காத்துக் கொள்ள நாங்கள் எதிர் தாக்குதல் செய்யும் போது மட்டும் தடுக்குறாங்க அடிக்குறாங்க. தினமும் வேலைக்கு போனால் தான் எங்களுக்கு சாப்பாடு, ஆனா இந்த கலவரத்தினால யாரும் வேலைக்கு போகல. போலீசு வேற எங்கள கைது பண்ண ராத்திரி நேரத்தில வராங்க. போலீசு துரத்துவதினால் இரவு நேரங்களில் ஆம்புளைங்க ஊரவிட்டு வெளியே போயிடறாங்க. 5 புள்ளைங்களை வெச்சுக்கிட்டு பொம்புள நான் எப்படி தனியா இருக்கமுடியும்? ரொம்ப பயமா இருக்கு. ஒரு நாளைக்கு வேலைக்கு போகலேனா, எங்களுக்கு சாப்பாடு இல்ல. அவசரத்திற்கு அம்மா தான் பணம் கொடுத்தாங்க, அவங்க பெட்டிக் கடையையும், கோயிலையும் கொளுத்திட்டு போய்ட்டானுங்க. பொருளெல்லாம் எரிஞ்சு போச்சு. மாத்திக்க ஒரு துணி கூட இல்ல. 4 நாளா ஒரே துணியத் தான் குழந்தைக போட்டிருக்காங்க. எங்களுக்கு பத்து பவுன் நக இருந்துது, பெரிய பொண்ணுக்கு சடங்கு பண்ண ஒரு லட்சம் பணம் கடனா வாங்கி வெச்சிருந்தோம், முக்கியமா பசங்களோட சர்டிபிகேட், அவங்களுக்கு அடுத்த வருஷம் தேவையான யூனிஃபாம், ஷூ, பை, புத்தகம் எல்லாம் எரிஞ்சி போச்சு. பொதுவா நாங்க எல்லாத்தயும் இழந்து நிக்கிறோம். இப்போதைக்கு எம் பசங்களப் படிக்க வெக்க ஏதாவது உதவி செஞ்சீங்கனா நல்லா இருக்கும்.

marakanam-11

கலைவாணன் (45)

அரசு பேருந்து ஓட்டுநராக இருந்தேன். ரண்டு கண்ணும் இப்பொ தான் ஆப்ரேஷன் பண்ணியிருக்கு. அண்ணன் மருமகளையும் குடும்பத்தையும் தாக்குவதைத் தடுக்க போனபோது ஏழு பேரு சுத்தி வளைச்சு அருவாவால தலையில கொத்தி நாக்க அறுத்திட்டாங்க. தலையில 35 தையல்களும் நாக்கில் 7 தையல்களும் போட்டிருக்காங்க. ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணாமல் வீட்டிற்கு அனுப்பினாங்க. மருத்துவச் செலவிற்கு அரசாங்கம் பணம் எதுவும் கொடுக்காததால என்னுடைய சொந்த பணத்தைத்தான் செலவு செய்தேன்.

சாதிவெறிக்கும்பலால் தாக்கப்பட்டு இறந்த சேட்டு

குடிசை வீடுகளை எரித்து நாசமாக்கிய இக்கும்பல், மக்களைத் தாக்க அவர்களை துரத்திக் கொண்டு வந்தனர். இத்தாக்குதலால் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, இதில் சேட்டு என்பவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சேட்டு இரண்டு நாள் கழித்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

அனுமந்தை

வன்னியர்கள் அதிகமாகவும் ஆதிக்கமாகவும் வாழும் அனுமந்தையில் 30 சேரிக் குடும்பங்கள் உள்ளன. சித்திரைத் திருவிழாவிற்கு போன வழியில் காலனிகளை தாக்கிய வன்னியர்கள் வந்த வாகனங்கள் இங்குதான் நிறுத்தப்பட்டு. வாகனங்களில் வந்தவர்கள் இளைப்பாற வசதி செய்துகொடுக்கப்பட்டது. மீனவர்களாலும் இஸ்லாமியர்களாலும் பதிலடி கொடுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட வன்னியர்களை இவ்வூர் வன்னியர்கள் தான் மாற்று வழியில் பத்திரமாக அனுப்பிவைத்துள்ளனர். இங்கு சென்று ஒரு வன்னியரிடம் விசாரித்த போது ”காலனிமக்கள் மஞ்ச சட்டை போட்டுக் கொண்டு வந்து வன்னியர்களைத் தாக்கிய”தாகக் குற்றஞ்சாட்டினார்.

கூனிமேடு

கூனிமேடு பேருந்து நிருத்தத்தில் உள்ள சில கடைகளில் இச்சம்பவம் பற்றி கேட்டபொழுது பெரும்பாலானவர்கள் பேச விரும்பாதவர்கள் போலக் காணப்பட்டனர். பட்டும் படாமலும் பேசினர். காலனிப்பக்கம் போனபொழுது கூட அங்கிருந்தவர்கள் இதுகுறித்துப் பேச அச்சமுற்றவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் காலனியின் மற்றொரு இடத்தில் இருந்த சில இளைஞர்களிடம் பேசியபொழுது அவர்களிடம் கோபக்கனல் தெரிந்தது. அவர்களின் மொழியில் முக்கியமான சிலவற்றை மட்டும் கொடுக்கிறோம்.

“பிரச்சினை நடந்த அன்னைக்கு இந்தப் பக்கம் ரோட்டு முழுக்க, இங்கருந்து அனுமந்த வரைக்கும் சுமாரா ஆயிரத்துக்கும் அதிகமா வண்டி போச்சு. மது ஒழிப்ப பத்தி பேச ஒரு சதவீதம் கூட தகுதி இல்லாத ஆளு ராமதாசு, வண்டியில போன அவன் சாதிக்காரனுங்க எல்லாம் 100 சதவீதம் குடிச்சிட்டுதான் போனானுங்க. ரோட்டுபக்கம் இருந்த முஸ்லீம், மீனவங்கன்னு எல்லாரையும் அசிங்கசிங்கமா பேசிக்கிட்டு இருந்திருக்கானுங்க, ஒரு கட்டத்துல எல்லாரையும் அடிக்கற அளவுக்கு போய்ட்டானுங்க, அங்க இருந்த முஸ்லீம், மீனவங்க திருப்பி தாக்க ஆரம்பிச்சாங்க, அப்புறம் ஓடி வந்து எங்களையும் உதவிக்கு கூப்பிட்டாங்க, நாங்க யாரும் பயந்துக்கிட்டு போகல, நாங்க மட்டும் அன்னைக்கு போயிருந்தா பெரிய கலவரமாயிருக்கும் அவனுங்க சேரிக்குள்ள வந்து எல்லாரையும் வெட்டி போட்டுட்டு போயிருப்பானுங்க. மரக்காணத்திலயே 15 போலிசதான் போட்டுருந்தாங்க, இங்கயும் வெறும் மூனு போலிசுதான் இருந்துச்சு. உயிரே போகுதுன்னு சொன்னாக்கூட மூனு போலிச வெச்சுகிட்டு ஒன்னும் பண்ணியிருந்திருக்க முடியாது. அதான் வருஷா வருஷம் இவனுங்க வரும்போது பிரச்சின நடக்குதுல்ல, அத தெரிஞ்சாவது கொஞ்சம் அதிகமா போலிச போட்டிருக்கலாம். போலிசு மொதக்கொண்டு எல்லாரும் பிளான் பண்ணிதான் இது நடந்த மாதிரி இருக்கு.

அவுங்க பிளானே ஈ.சி.ஆர் பக்கத்துல இருக்குற தலித் மக்கள எதாவது செய்யனுங்கிறதாதான் இருந்திருக்கு. ரோட்டுல போனப்ப கூட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியோட கொடிய பாத்துட்டு இங்க காலனி எங்க இருக்குன்னு கேட்டுட்டே போயிருக்கானுங்க. காலனி கொஞ்சம் உள்ள இருந்ததால, எங்க உள்ள போய் மாட்டிக்குவோமோன்னு இங்க வராம வெளியிலயே அடிச்சுட்டு போயிருக்கானுங்க. இதுல என்ன ஒரு கூத்துன்னா பிள்ளைச்சாவடி, பொம்மியாப்பாளையம் பகுதியில அவனுங்க சமுதாயத்து மக்களையே தாக்கிருக்கானுங்க. அப்புறம் அந்தப்பகுதியில இருந்த வன்னியர்களே வந்து நாலஞ்சு வண்டிய ஒடச்சுப்போட்டு, ரோட்டுல மரத்த வெட்டி, மறியல் செஞ்சு, வந்தவங்கள மெரட்டி அனுப்பியிருக்காங்க.

கடந்த முப்பது நாப்பது வருஷமா நாங்க எல்லாம் அண்ணன் தம்பியாதான் பழகினு இருக்கிறோம். ஏதாவது பிரச்சன வந்தாக்கூட நாங்களே பேசி முடிச்சிக்குவோம். ஆனா இப்பல்லாம் நாங்க ரோட்டுக்கு வந்தாலே அவனுங்க ஒரு மாதிரியா பாக்குறானுங்க. அவனுங்களே பாக்கலனா கூட நாங்க ஒருமாதிரியா பாக்கவேண்டிய சூழ்நிலை இருக்குது. நான் அன்ணா தி.மு.க காரந்தான், பிரச்சினை நடந்தப்ப கூட இத பத்தி இந்த தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அரிதாஸ் கிட்ட சொன்னோம், பிரச்சினை நடந்த மரக்காணம் பகுதிக்கு கூட வந்து பாக்கல, எதுவும் செய்யல. திருமாவளவன் மட்டும் வந்து பாத்துட்டு கட்சிகாரங்க கிட்ட இருந்து கொஞ்சம் நிதி வாங்கி கொடுத்துட்டு, எல்லாரையும் பதிலுக்கு திருப்பி அடிக்காதிங்க, எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. இது அவரோட பெருந்தன்மையைத்தான் காட்டுது. இன்னைக்கி கூட முதலமைச்சர் எல்லாருக்கும் நிதி வழங்கறதா அறிவிச்சிருக்காங்க, இதுல பாதிக்கப்பட்டவங்களுக்கும், பிரச்சினை பண்ணவங்களுக்கும் ஒரே நிதிதான் குடுக்கப் போறாங்களாம். இத யாரு கிட்ட போயி சொல்றது? காலனில அ.தி.மு.க, தி.மு.க, அப்புறம் வி.சி.கன்னு மூனு கட்சிதான் இருக்குது. அம்மா பா.ம.க கூட கூட்டணி வக்கிறதுக்காகத்தான் இப்படி சமாதானமா போராங்கன்னு சொல்றாங்க. அப்படி மட்டும் நடந்துச்சுன்னா நாங்களும் பறயனுக்காகத்தான், வி.சி.கவுக்குதான் ஒழைப்போம், ஓட்டுப்போடுவோம்.

பிரச்சன பண்ணவங்க போயிட்டானுங்க ஆனா போலிசு அடாவடிதான் தாங்க முடியல. இப்ப கூட தெனமும் போலிசு வந்து ஆம்பிளைங்கள கைது செய்யறதுக்கு தேடிட்டு இருக்கிறதா சொல்றாங்க. வன்னியங்கள கொஞ்சம் பேரக் கைது பண்ணதால பதிலுக்கு எங்களையும் கைது பண்ணனுமாம். நாங்க எல்லாரும் பயந்து, பதுங்கிட்டு தான் இருக்கோம். நேத்து ராத்திரி கூட இப்படி எங்கள்ல கொஞ்சம் பேரு பயந்து காட்டுபக்கம் தலதெறிக்க ஓடி கை, கால ஒடச்சிகிட்டோம். எத்தன நாள் இப்படி போகும்னு தெரியல. எல்லாம் பண்ணவங்க ஊர்த்தெருவுல நிம்மதியா இருக்காங்க ஒன்னும் பன்ணாத நாங்க தலமறைவா ஒளிஞ்சி வாழறோம்.”

இந்துக் கோயிலை சாம்பலாக்கிய வன்னிய சாதிவெறி

marakanam-13

கடந்த சித்திரா பவுர்ணமி மாநாட்டில் ராமதாஸ் பேசும் போது “இவங்கெல்லாம் (தலித்துகள்) காதல் நாடகம் ஏன் நடத்துகிறார்களென்றால் சாதியை ஒழிப்பதற்காகவாம். சாதிய எப்படி ஒழிப்பீங்க என்று கேட்டால் இந்து மதத்தை ஒழிப்பேன்றாங்க” என்று RSS ன் பினாமியாக தலித்துக்கள் மீதும் சாதி ஒழிப்பு அரசியல் மீதும் விஷத்தைக் கக்கிய ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் இந்து மதத்தை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இவர் இப்படி பேசுவதற்கு சில மணிநேரத்திற்கு முன் தான் போதையினாலும் சாதியினாலும் வெறியூட்டப்பட்ட ராமதாஸின் அடிப்பொடிகள் மரக்காணம் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது செல்வியம்மாள் (56) என்ற பெண்மணி பூசை செய்து வந்த அங்காளபரமேஸ்வரி கோயிலில் சாமிக்கு போடப்பட்டிருந்த ஏழு பவுன் நகையையும் 36,000 ரூபாய் பணத்தையும் திருடி விட்டு அக்கோவிலின் மீது பெட்ரோல் பாம் வீசி எரித்துள்ளனர். அங்கிருந்த பாத்திரங்களும் பூஜைசாமன்களும் வெடித்துள்ளது. மூலஸ்தானத்திலிருக்கும் அங்காளபாமேஸ்வரி பாதி எரிந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்னர் தான் இங்கு திருவிழா விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. இக்கோவிலிலிருந்து கிடைக்கும் வருமானம் அதையொட்டி இருந்த பெட்டிக் கடை வருமானத்தையும் வைத்து தனது மகளுக்கு அவ்வப்போது உதவி வந்தார் செல்வியம்மாள். இந்து மதக்காவலன் ராமதாஸ் தூண்டிய சா’தீ’ அங்காளபாமேஸ்வரி அம்மனை எரித்துச் சாம்பலாகியதுடன் அவளை நம்பி வாழ்ந்த ஆறு ஜீவன்களையும் பட்டினி போட்டுள்ளது. இந்துமதத்தை அழிப்பது சிங்கங்களா? சிறுத்தைகளா?

பேண்டவன விட்டுட்டு பீயை வெட்டும் போலீசுக்கும்பல்!

மரக்காணம் பகுதியில் மட்டுமன்றி ஈசிஆர் முழுக்க சாலையின் இருமருங்கிலும் பல்வேறு அட்டுழியங்களை நடத்தி சென்றுள்ள சாதிவெறிக்கும்பல் மீது குறிப்பிட்டளவு எந்த நடவடிக்கையும் போலிஸ் இதுவரை எடுக்கவில்லை. ஆனால் சம்பவம் நடந்த அன்றிலிருந்து இன்றுவரை மரக்காணம் காலனி மக்களை தினமும் இரவு கைது செய்வதாக கூறி போலீசே புரளியை உலவ விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள ஆண்கள் – குறிப்பாக இளைஞர்கள் இரவு நேரத்தில் வீடுகளில் தங்க பயப்படுகின்றனர். மரக்காணம் காலனிப் பகுதியில் மட்டுமன்றி கூனிமேடு கழிக்குப்பம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தலித் இளைஞர்களும் கைதுக்கு பயந்து இரவில் சிறு அரவம் கேட்டால் கூட கண்மண் தெரியாமல் ஓடி ஒளிவதை பார்க்க முடிந்தது. தென்மாவட்டத் சாதி மோதல்கள் நடந்த போது போலீஸ் ஆதிக்க சாதியினரை விட்டுவிட்டு படித்த தலித் இளைஞர்கள் மீது – குறிப்பாக வேலைக்கு தேர்வாகி நின்ற இளைஞர்கள் மேல் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவர்கள் எதிர்காலத்தையே சீரழித்ததை இங்கே ஒப்புநோக்க வேண்டும். தாக்குதலுக்கு உள்ளான தலித்துகளையே கைது செய்வதும் மிரட்டுவதும் ஆனால் தாக்கிய சாதிவெறியர்களை கண்டுங்காணாமல் இருப்பதும் போலீசின் ஆதிக்கசாதி சார்பை பறைசாற்றுகிறது.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன் மரக்காணம் பகுதியில் வெறும் பதினைந்து போலீசாரும் கூனிமேட்டில் மூன்று போலீசாருமே பாதுகாப்புக்கு நின்றுள்ளனர். ஆனால் தாக்குதலுக்குபின் இப்பகுதிகளில் ஊடுருவியுள்ள கியூ பிரிவு போலீசாரும், உளவுத்துறையும் போலீசும் உண்மையறிய இம்மக்களை சந்திக்க வரும் பல்வேறு அமைப்பினரையும், உதவ முன்வரும் தனி நபர்களையும் அடையாளம் காண்பதிலும் அவர்களை விசாரணை செய்வதிலும் அவர்களின் சுய விவரங்களை திரட்டி ஆவணப்படுத்துவதிலுமே முனைப்புடன் செயல்படுகின்றனர். போலீசின் உள்ளூர் கைக்கூலிகளாலேயே (இன்ஃபோர்மர்களாலேயே) பெரும்பான்மையான உண்மையறியும் குழுக்கள் ’வழிநடத்தப்படுவதையும்’ பார்க்க முடிந்தது. இதனால் ஒரே வகைப்பட்ட தகவல்களையே (Stereo type) பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக இத்தகைய நபர்கள் வலிந்து வந்து முந்திரிக் கொட்டைத் தனமாகப் பேசுவதையும் பார்க்க முடிந்தது.

ஈசிஆருக்கும் காலனிக்கும் இடையே உள்ள வனத்துறையின் தைல மரக்காடு தான் மரக்காணம் தாக்குதலை இவ்வளவு வெற்றிகரமாக நடத்த சாதிவெறியர்களுக்கு உதவியுள்ளது. ஆனால் சம்பவம் நடந்த அடுத்த நாளே வனத்துறை அதிகாரிகள் தைலமரங்களை கணக்கெடுத்துள்ளனர் (பெட்ரோல் பாம்ப் வீசப்பட்டு சாம்பலாக்கப்பட்ட தென்னை, பலா, மா, பனை போன்ற மரங்கள் எந்த கணக்கிலும் சேர்க்கப்படவில்லை). தலித்துகளை தாக்குவதற்கு வெறிக்கும்பலுக்கு தோதாக இருந்த இக்காட்டை தலித்துகள் அழித்துவிடுவார்கள் என்று வனத்துறை நினைக்கிறார்கள். அதனால் இந்த மரங்களில் கைவைத்தால் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவதாக தலித் மக்களை மிரட்டியுள்ளனர். தலித்துகள் ஒன்றுபட்டு நின்று எதிர்த்த பின்னரே பின்வாங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அதிகமான பாதிப்புக்குள்ளான முருகன் – நதினா குடும்பம் இந்த தைலக் காட்டின் எல்லையில் உள்ளது. 12 வயதிற்கு கீழுள்ள நான்கு பெண்குழந்தைகளுடனும் ஒரு கைக்குழந்தையுடனும் பீதியில் வாழும் நதினா மீண்டும் தாங்கள் இந்த தைலக்காட்டின் வழியாக இரவில் தாக்கப்படலாம் என்று பயப்படுகிறார். இருக்கும் ஒரே ஆண்துணையான நதினாவின் கணவர் முருகனோ கைதிற்கு பயந்து இரவில் தன் மனைவி மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கமுடியாமல் தலைமறைவாகிறார். இவர்களின் மூன்று வயது மகள் ஜனனியும் வயதிற்கு வந்த 12 வயது மகளும் இரவானால் சாம்பலாகிய வீட்டில் அருகில் வரவே பயப்படுகின்றனர். தாக்குதலின் பீதியிலிருந்து ஜனனி என்ற மழலை இன்னும் விடுபடவே இல்லை. தாக்கிய சாதிவெறியர்கள் சுதந்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் நிவாரணங்கேட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டிருகிறார்கள்; தாக்கப்பட்ட தலித்துகளோ உளவுத்துறை, கியூ பிராஞ்ச், போலீஸ், வனத்துறைக்காவலர்கள் என சட்டத்தின் அனைத்து பாதுகாவலர்களாலும் பயமுறுத்தபட்டு பீதியில் தைலமரக்காட்டின் அசைவுகளை வெறித்துப் பார்த்து சாம்பலான குடிசைகளின் அருகில் இரவை கழிக்கின்றனர்.

தாக்குதலின் பின்புலம்

தமிழகத்தில் தனது அரசியல் எதிர்காலமே சூன்யமாகப் போகிறது என்பதை உணர்ந்த ராமதாஸ், இழந்த தனது செல்வாக்கை மீட்டெடுக்க சாதி வெறி என்கிற ஆயுதத்தை தர்மபுரியில் எடுத்ததை நாம் அறிவோம். தர்மபுரி வன்னிய சாதிவெறி அட்டூழியத்திற்குப் பிறகான இதன் புதிய பரிணாமம் தலித் அல்லாதவர்களின் ஒருங்கிணைப்பு என்பதில் முடிந்துள்ளது. இதன் மூலம் அனைத்து சாதி இந்துக்களையும் தனது தலைமையில் திரட்டி தமிழகத்தை சாதிவெறியர்களின் கூடாரமாக்கி ஓட்டுப்பொறுக்கலாம் என்பதே இத்தாக்குதலின் உள்நோக்கமாக இருந்துள்ளது. அதன் ஒரு முன்னோட்டமாகவே மரக்காணத்தில் நிகழ்ந்த இக்கலவரத்தைப் பார்க்க முடிகிறது. கலவரம் நடந்த பகுதி ஓப்பீட்டளவில் குறைவாக இருந்தபோதும், தர்மபுரியில் தலித்துக்கள் மீது நடந்த திட்டமிட்ட தாக்குதல் போலவே இங்கும் நடந்தேறியுள்ளது. அங்கு தேர்ந்தெடுத்த யுக்திகளையே இங்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஈ.சி ஆரில் மரக்காணம் சம்பவம் மட்டுமே தலித்துகள் மீதான திட்டமிட்ட தாக்குதலாக உள்ளது. ஆனால் கோட்டைகுப்பம், பொம்மியாபாளையம், பிள்ளையார்குப்பம், கூனிமேடு, அனுமந்தை, கழிக்குப்பம் போன்ற இடங்களில் போதை வெறியிலும் சாதிவெறியில் மிதந்த இக்கும்பல் தலித்துகள், மீனவர்கள், இஸ்லாமியர்கள், வன்னியர்கள் முதலான எல்லா தரப்பினரையுமே தாக்கியுள்ளனர்; கடைகளை சேதிப்படுத்தியுள்ளனர்; பெண்களிடம் முறைகேடாக நடந்துள்ளனர்; ஆபாசமாக பேசி கேவலப்படுத்தியுள்ளனர். பொறுமையிழந்த மீனவர்களும் இஸ்லமியர்களும் திருப்பி தாக்குதலில் ஈடுபட்ட பின்னர் மட்டுமே இந்த சமூகவிரோதக்கும்பல் பின்வாங்கி ஓடியுள்ளது. பொம்மியாபாளையம், பிள்ளையார்குப்பம் போன்ற இடங்களில் தன் சொந்த சாதியான வன்னியர்களிடமும் இதே முறையில் நடந்ததால், இவர்களை பல மணிநேரம் அப்பகுதி வன்னியர்கள் தாக்கி துரத்தியடித்துள்ளனர். தங்கள் பகுதி வழியாக மேற்கொண்டு செல்ல விடாமல் வேன் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இச்சம்பவங்களை தொகுப்பாகப் பார்த்தால், மாநாட்டிற்கு சென்ற இச் சமூக விரோதக் கும்பலுக்கு சாதிவெறி மதவெறி போதைவெறி மட்டுமன்றி கும்பலாகச் சேர்ந்தால் வரைமுறையற்ற கண்மண்தெரியாத அளவு வன்முறையில் ஈடுபடலாம் என்ற லும்பன்களின் கும்பல் வன்முறை (Mob violence) மனோபாவம் தான் வெளிப்பட்டுள்ளது. இத்தகைய கும்பல் வன்முறையின் விளைவான கட்டுக்கடங்காத வெறியாட்டம் தலித்துகள் மட்டுமன்றி பெண்கள், இஸ்லாமியர்கள், பிற சாதிகளுக்கும், அவர்களின் சொந்த சாதிக்கும், ஏன், ஒட்டுமொத்த சமூகத்திற்குமே எதிரானது. எனவே வெறியூட்டப்பட்ட இத்தகைய கும்பல்கள் ஒன்றுசேரும் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்படுவதை எதிர்காலத்தில் தடுக்கவில்லையென்றால், இது சாதி வெறியர்களின் தற்போதைய இலக்கான தலித்துகளுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்குமே ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள்
____________________________________

வீனஸ் பள்ளி கொள்ளைக்கு எதிராக சிதம்பரத்தில் போராட்டம் !

0

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவி முதலிடம் பெற்றுள்ளார். அதற்காக ‘வரலாற்று சாதனையாளர் வீனஸ் குமார்’ என சிதம்பரம் நகரமெங்கும் முதலாளிக்கு ஆதரவாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். அதே போல் அரசு கட்டணத்தை மட்டுமே செலுத்துவோம் என திரண்ட பெற்றோர்களை 10-6-13 அன்று பள்ளி துவங்கிய முதல் நாளே அனைத்து கட்சி பிரமுகர்களையும் அவர்களது அடியாட்களுடன் திரட்டி பள்ளிக்கு வரவழைத்து மிரட்டிய சாதனையையும் வீனஸ் குமார் செய்திருக்கிறார்.

மாநிலத்தில் முதலிடம் என்பதை காரணமாக வைத்து இந்த ஆண்டு பலமடங்கு கட்டணத்தை உயர்த்தினார். கட்ட இயலாத பெற்றோர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே கட்டுவேன் என போராட ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை சார்ந்தவர்கள். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சிதம்பரம் உதவி ஆட்சியர், அனைவரிடமும் புகார் அனுப்பினர். எவ்வளவு கட்டணம் என்பதை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். பல ஆயிரம் பணத்திற்கு துண்டு சீட்டை ரசீதாக கொடுப்பதை ஏற்க முடியாது. நாங்கள் டி.டியாக எடுத்து பதிவுத் தபாலில் அனுப்புகிறோம் என அதிகாரிகளிடம் சங்க நிர்வாகிகள் வாதாடினார்கள்.

பள்ளிக் கட்டண போஸ்டர்
பள்ளிக் கட்டண போஸ்டர்

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 7-6-13 அன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடை பெற்றது. வீனஸ் பள்ளி முதலாளி குமார், முதல்வர் மகேஷ் ஆகியோர் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டனர். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பச்சையப்பன் பள்ளி முதலாளி காரில் வந்தார். உதவி ஆட்சியர் அவர்களிடம் “வீனஸ் பள்ளி முதல்வர் அரசு கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறார். ரசீதும் தருகிறார்கள். புத்தகமும் தருகிறார், கட்டண உத்திரவு, அறிவிப்பு பலகையில் ஒட்டப் பட்டிருக்கிறது” என சாட்சியம் அளித்தார். “பெற்றோர்கள்தான் வீண் பிரச்சினை செய்கிறார்கள்” என்றும் கூறினார்.

பெற்றோர் சங்க நிர்வாகிகள் அவரின் கூற்றை மறுத்தனர். “சரி நாங்கள் டி.டி எடுத்து அனுப்புகிறோம் வாங்கச் சொல்லுங்கள்” என பேசினர், உதவி ஆட்சியரும் அதை ஆமோதித்தார். ஆனால் பள்ளி முதலாளி “என்னிடம் பேங்குக்கு போக ஆள் வசதியில்லை அதோடு கலெக்சன் சார்ஜ் வரும், டி.டி.வாங்க முடியாது” என திட்டவட்டமாக மறுத்தார். உதவி ஆட்சியர் சங்க நிர்வாகிகளிடம், “நீங்களும் கொஞ்சம் அனுசரித்து போங்கள், அரசு கட்டணம் வாங்கி கொள்கிறேன் என கூறுகிறார் போய் கட்டுங்கள்” என்று மிக சுமுகமாக முடித்தார்.

சமச்சீர் பாடம் வந்த பிறகு புத்தகத்திற்கு ரூ 2000 கேட்கிறார்கள் என்ற சங்க நிர்வாகிகள் முறையீட்டை உடனே முதல்வர் மறுத்து, “நாங்கள் எக்ஸ்ட்ரா ஆங்கில புத்தகம் கொடுக்கிறோம் அப்போதுதான் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவு வளரும்” என ஆங்கிலத்தில் சொன்னார். அதை உதவி ஆட்சியர் ஆமாம் என வழி மொழிந்தார். இன்றைய முடிவுகளை எழுத்து பூர்வமாக கொடுங்கள் என பெற்றோர்களும் சங்க நிர்வாகிகளும் கேட்டதற்கு “என் மீது நம்பிக்கை இல்லையா? போங்க” என அனுப்பினார். “கட்டண நகலை எங்களுக்கு வாங்கிக் கொடுங்கள்” என்று கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.  ஆட்சியர், “நான் சொல்லுகிறேன் குறித்துக் கொள்ளுங்கள்” என சொன்னார்.

  • எல்.கே.ஜி.- யு.கே.ஜி ரூ 6,100
  • ஒன்று முதல் ஐந்து வரை ரூ 7,300
  • ஆறு முதல் எட்டு வரை ரூ 9,200
  • ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு ரூ 9,700
  • 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூ 12,250

மறுநாள் நடந்த சங்க பொதுக்குழுவில் 100-க்கு மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அந்த கட்டணத்தை போஸ்டராக அச்சடித்து விரிவாக நகரம் முழுவதும் ஒட்டவேண்டும் என முடிவு செய்யப்பட்டு அவ்வாறே நிறைவேறியது.

பள்ளி முதலாளி கேட்கும் கட்டணம்

  • எல்.கே.ஜி. – யு.கே.ஜி  ரூ 12,000
  • ஒன்று முதல் ஐந்து வரை ரூ 14,000 முதல் 18,000
  • ஆறு முதல் எட்டு வரை ரூ 20,000 முதல் ரூ 24,000
  • ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு ரூ 23,000 முதல் ரூ 35,000
  • 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூ 45,000 முதல் ரூ 55,000

10-6-13 அன்று அரசு கட்டணத்தை செலுத்துவதற்கு சங்கப் பெற்றோர்கள் மட்டும் அல்லாது ஏனைய பெற்றோர்களும் போஸ்டரை பார்த்து பெருமளவில் வீனஸ் பள்ளி முன்பு திரண்டனர். ஆத்திரமுற்ற பள்ளி முதலாளி வீனஸ் குமார் அனைத்து கட்சி பிரமுகர்களையும் அவர்கள் அடியாட்களுடன் குவித்தார்.

வீனஸ் பள்ளி முதலாளிக்கு அடியாட்களாக கட்சி பாகுபாடில்லாமல் வந்தவர்கள்

  • தி.மு.க கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், வெங்கடேசன் அவர்களின் அடியாட்கள் 20 பேர், எம்.டி.கிருஷ்ண மூர்த்தி
  • தி.மு.க, எம்.எம். ராஜா
  • பா.ம.க மாவட்ட செயலாளர் வேணுபுவனேஸ்வர், அவருடன் 20 அடியாட்கள்,
  • காங்கிரசைச் சேர்ந்த வைத்தியநாதன், குமார்
  • கீரப்பாளையம் பா.ம.க ஒன்றிய கவுன்சிலர் நாகவேல் மற்றும் அவரது அடியாட்கள், (இந்த குரூப்தான் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சிவசாமி கொலை வழக்கில் விடுதலையானவர்கள்)

கட்டணம் செலுத்தத் திரண்டிருந்த பெற்றோர்களை அச்சுறுத்தி “கவர்மெண்ட் பீஸ் கட்டவர்ரீங்களா? ஏண்டா கட்ட வக்கில்லன்னா கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போங்கடா, உங்களால எங்க பிள்ளைங்க படிப்பு கெடுது, நாதியத்த நாலு பேர் சங்கம் வச்சிக்கிட்டு பிரச்சினை பன்றீங்களா” என்று வந்தவர்கள் கூடியிருந்த பெற்றோர்களை பார்த்து வாய்க்கு வந்த மாதிரி பேசினர். பள்ளி வாசலில் குறுக்கே நின்று கொண்டு, “என்ன வேனும் கவர்மெண்ட் பீசா போ வெளியே” என விரட்டினர். “போஸ்டரா ஒட்டுரீங்க நாதியத்த பசங்களா, நாங்க தான் இனி பெற்றோர் சங்கம், நான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்” என்று அறிவித்தார் பா.ம.க. மாவட்டச் செயலாளர் வேணு புவனேஸ்வர். அனைவரும் கைதட்டினர். நமது சங்க நிர்வாகிகளை பார்த்து கேவலமாக பேசி வம்புக்கு இழுத்தனர்.

dinamalar-photoபெரிய அளவில் கலவரம் நடக்க இருந்த சூழலில் சிதம்பரம் டி.எஸ்.பி. காவல் ஆய்வாளர் வந்தார். சவுண்டு விட்டு கொண்டிருந்த அடியாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கினர். வந்த ரவுடிகள் “பெயிண்ட் அடிக்கலாமா?” எனக் கேட்டனர் மற்றொருவர் “கொஞ்ச நேரம் கழித்து அடிக்கலாம்” என பதில் அளிக்கின்றார். பெயிண்ட் அடிக்கலாம் என்றால் இறங்கி அடிக்க வேண்டும் என்று சிக்னல் என்பதை நாம் விசாரித்து தெரிந்து கொண்டோம். பெற்றோர்களை தவிர இங்கு யாரும் நிற்க கூடாது என கூறி நமது சங்க நிர்வாகிகளையும் அப்புறப்படுத்தினர். திங்கள் கிழமை முதல் அரசு கட்டணத்தை மட்டும் வாங்குகிறோம் என பள்ளி தாளாளர் உதவி ஆட்சியரிடம் உத்திரவாதம் அளித்து விட்டு இன்று அடியாட்களை வைத்து மிரட்டுகிறார் என விளக்கமாக ஆதாரங்களுடன் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தினர் விவரித்தனர். டி.எஸ்பி. பள்ளி தாளாளரிடம் சென்று விசாரித்தார். அப்படி ஒன்றும் இல்லை இவர்கள் தான் பிரச்சினை செய்கிறார்கள் என பதிலளித்தார். இங்கு யாரும் கூட்டம் கூடாது. வரிசையாக நின்று பணம் கட்டுங்கள் என மூன்று போலீசாரை காவலுக்கு போட்டு விட்டு சென்று விட்டார். போன அடியாட்கள் திரும்பி வந்தனர் பணம் கட்ட நின்ற பெற்றோர்களிடம் வம்பிழுத்தனர். நமது நிர்வாகிகள் போலீசிடம் சார் பாருங்கள் என புகார் தெரிவித்தனர். அதற்கு எங்களை கண்காணிக்க மட்டுமே சொல்லியுள்ளனர் என ஒற்றை பதிலோடு நிறுத்தி கொண்டனர்.

இதற்கு மேல் இருந்தால் அடிதடி பிரச்சினை ஆகிவிடும் என்பதால் பெற்றோர்கள் ஆட்சியரிடம் சென்றனர். அவர் பெற்றோர்களிடம் “தாளாளர் போன் நம்பர் கொடுங்க, ஒத்துகிட்டு போய் ஏன் இது மாதிரி செய்கிறார்” என நம்பர் வாங்கி பள்ளிக்கு போட்டார் லைன் போகவில்லை. “சரி நான் பேசுறேன் நீங்கள் போங்க” என்றதுடன் காவல்துறையில் பேசி “பெற்றோர்களைத் தவிர கட்சிகாரர்கள் யாரும் பள்ளியில் இருக்கக் கூடாது அப்புறப்படுத்துங்கள்” என வாய் மொழி உத்திரவிட்டார். சிறிது நேரத்தில் மூன்று பெற்றோர்களை நமது சங்க நிர்வாகிகள் அழைத்து வந்தனர். “எங்கள் பிள்ளைகள் 5 லிருந்து 6 ஆம் வகுப்பிற்கு செல்கிறார்கள். அரசு நிர்ணியித்த கட்டணம் மட்டும் செலுத்துகிறேன் என கூறினேன். டி.சி கொடுத்து விட்டார்கள்” என மாணவர்களுடைய டி.சியை காட்டினர். அதற்கு ஆட்சியர் “இது சீரியசான விசயம். டி.சி கொடுக்கக் கூடாது. நான் விசாரிக்கிறேன்” என அனுப்பி விட்டார்.

தினமலர் செய்தி
தினமலரில் வெளியான செய்தி

10-6-13 அன்று மாலையே 6-00 மணிக்கு பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சங்க நிர்வாகிகளுடன் கொடுக்கப் பட்ட டி.சியுடன் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடமும் புகார் அளித்தனர். இரண்டு நாள்களுக்குள் சரி செய்து விடுகிறேன் என கல்வித் துறை அதிகாரி உத்திரவாதம் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தால் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி மனுவை வாங்கி பார்த்து விட்டு “அதே பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேர்த்தால் மீண்டும் பிரச்சினை பண்ணுவார்களே அரசு பள்ளியில் சேர்த்து விட்டு நிம்மதியாக இருங்கள்” என ஆலோசணை கூறினார். நமது நிர்வாகிகள், “டி.சி.கொடுத்தது சட்டபடி தப்பு, அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். பெற்றோர்களை அடியாட்களை வைத்து அச்சுறுத்திய வீனஸ் பள்ளி தாளாளரின் இத்தகைய சட்ட விரோத செயல்களுக்காக சிதம்பரம் டி.எஸ்.பியிடம் நேரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தின் சார்பில் கட்டணம் தொடர்பாக ஒட்டபட்ட அனைத்து போஸ்டர்களிலும் வீனஸ் பள்ளி நிர்வாகத்தினர் போஸ்டர் ஒட்டி மறைத்து விட்டனர். சில பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. சிதம்பரம் கிளைத்தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் கலையரசன், துணைத் தலைவர்முஜுப்பூர் ரகமான் மற்றும் இதர நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். பள்ளி தரப்பில் அடியாட்கள் மூலம் வேண்டும் என்று பெற்றோர்களிடம் வம்பிழுத்து கலவரத்தை ஏற்படுத்தி இனிமேல் யாரும் கூடுதல் கட்டணத்தை எதிர்த்து போராடக் கூடாது என்ற சதிதிட்டத்துடன் செயல்படுகின்றனர் என்ற பள்ளி முதலாளியின் நோக்கத்தை விளக்கமாக காவல்துறையின் அதிகாரியின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தக்க ஆதாரங்களுடன்,கல்வி துறை அதிகாரிகளிடம் நேரிலும் பதிவு தபாலிலும் அனுப்பப்பட்டுள்ளன. அரசின் செவிட்டு காதுகளுக்கு புரியும்படி சொல்ல 14-6-13 அன்று சிதம்பரத்தில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடத்த ஆயத்தமாகியுள்ளனர்.

இந்த வீனஸ் குமார் என்பவர் காமராஜ் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் லட்சுமி காந்தனின் சகோதர உறவினர். இவர்கள் இருவரும் எம்.ஏ.எம்.செட்டியாரின் நேர்முகச் செயலாளர் எஸ்.ஆர். என்பவரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிட தக்கது. நமது சங்கத்தின் தொடர்ந்த போராட்டத்தின் காரணமாக இந்த ஆண்டு காமராஜ் பள்ளி முதலாளி லட்சுமிகாந்தன் அரசு கட்டணத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டியதுடன் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்க்கான கட்டணம் விரும்பும் பெற்றோர்கள் கட்டலாம் என அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்

பீஷ்ம பிதாமகர் அத்வானியின் வயிற்று வலி !

9

ள்ளியில் விடுமுறை வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? “அயம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்” எனும் விடுமுறைக்கான கடிதத்தை உருப்போட்டு எழுதியது நினைவுக்கு வருகிறதா? அதேதான் நம்ம பிதாமகர் அத்வானிஜியும் செய்திருக்கிறார். கோவாவில் பாஜகவின் செயற்குழு கூட்டத்திற்கு அத்வானி வரவில்லை என்று ஊடகங்கள் ரவுண்டு கட்டி அடித்ததும் விழி பிதுங்கிய ராஜ்நாத் சிங், “டாக்டர்கள் சகிதம் தனி விமானம் ஏற்பாடு செய்கிறேன், வாருங்கள்” என்றெல்லாம் கொக்கி போட்டாலும் அத்வானிஜி அசைந்து கொடுக்கவில்லை. காரணம் அவரது வயிற்று வலி அத்தகையது!

கோவா
கோவா செயற்குழு கூட்டத்தில் பாஜக தலைவர்கள்

மற்ற கட்சிகளின் வரலாற்றில் கூட இத்தகைய வயிற்று வலி காரணமாக பெருந்தலைகள் வரவில்லை என்று ஒரு நிகழ்வைக் கூட கூற முடியாது. அதன்படி ஓட்டுப் பொறுக்கி கட்சிகளது வரலாற்றில் அத்வானியின் வயிற்று வலி பொன்னெழுத்துகளில் இடம் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் பாஜக வித்தியாசமான கட்சியில்லையா!

உமா பாரதி, வருண் காந்தி, சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங் போன்றோரும் அத்வானிக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் இந்த செயற்குழுவைப் புறக்கணித்தார்கள். சுஷ்மா ஸ்வராஜும் வருவாரா மாட்டாரா என்று திகிலூட்டி, பிறகு 2 மணிநேரம் தாமதமாக கலந்து கொண்டார். ஒருவேளை அத்வானி அணி ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டால் கோவா செயற்குழுவில் என்ன நடக்குமென்பதை எடுத்துக்கூற ஆள் வேண்டுமென்பதாலும் சுஷ்மா கலந்து கொண்டிருக்கலாம்.

அத்வானியின் வயிற்று வலிக்கு என்ன காரணம்?

வாஜ்பாயி அமைச்சரவையில் துணைப்பிரதமராக இருந்து 2004, 2009 தேர்தல்களில் வென்றிருந்தால் பிரதமர் என முன்னிறுத்தப்பட்டு வந்த அத்வானிக்கு தற்போது 85 வயது ஆகிவிட்டது. ஆனாலும் இலட்சியம் மனதிலிருந்து அகன்றுவிடவில்லை. 2014 தேர்தலில் ஒரு வேளை பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் 86 வயதில் பிரதமர் ஆகி இந்த நாட்டுக்கு சேவை செய்யக் கூடாது என்று யார் சொல்ல முடியும்? வாஜ்பாயியின் நெருங்கிய நண்பரான கருணாநிதி கூட 90 வயதிலும் வீல் சேரில் சென்றவாறு காரியங்களைப் பார்க்கவில்லையா? 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பாஜக பலவிதத்தில் தயாரானாலும் அத்வானியைப் பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் கற்றுக் கொண்ட சூர்யநமஸ்காரத்தை தினசரி செய்து உடலை தேற்றி வருகிறார்.

இந்த நினைப்பில் மோடி மண்ணை அள்ளிப் போடுகிறார் என்பதாலேயே அத்வானியின் வயிற்றில் வலி தோன்றியது. தேசத்திற்காக கட்சி, கட்சிக்காக தனிநபர்கள், தனிநபரின் நலனை விட கட்சி, தேசத்தின் நலன் முக்கியமானது என்றெல்லாம் மேடையில் பேசுவதற்கு தலைவர்கள் வேண்டாமா? அதைத்தான் அத்வானிஜி பணிவாக முன்வைக்கிறார்.

ஜெயலலிதா, மோடி
நரேந்திர மோடி – பாஜகவின் ஜெயலலிதா

ஒருவேளை மோடி பிரதமரானால் அத்வானி மட்டுமல்ல பாஜகவில் உள்ள பல தலைகளது அரசியல் வாழ்வும் அதோகதியாக முடிந்துவிடும். எப்படி? வேண்டுமானால் ஜெயலலிதாவைப் பாருங்கள். இன்று அதிமுகவில் இருந்து இரண்டு அமைச்சர்கள் பெயரை உங்களால் சொல்ல முடியுமா? இல்லை அதிமுகவில் ஜெயலலிதாவை தவிர்த்து யாரெல்லாம் கட்சியின் மாநில பொறுப்புக்களில் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

இதற்கு பதில் தெரியாது என்றால் அது பொதுஅறிவின் குறைபாடு அல்ல. அதிமுகதான் அம்மா, அம்மாதான் அதிமுக எனும் எளிய உண்மையில் மற்ற அனாமதேயங்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. போலவே மோடிதான் பாஜகவின் தலை என்று தீர்மானமானால் மற்ற தலைவர்களது இடம் உருக்கி ஓட்டி விடப்படும். இதுதான் மையமான பிரச்சினை.

ஆகவேதான் வாழ்விழக்கப் போகும் தலைவர்களது சார்பில் அத்வானிஜி அவர்கள் வயிற்றுவலியை ஆயுதமாகக் கொண்டு தர்ம யுத்தம் ஆரம்பித்திருக்கிறார். பதவிக்கான சண்டை என்று வந்துவிட்டால் மகாபாரதமா, பாரதீய ஜனதாவா என்று பிரித்து பார்க்க கூடாதல்லவா?

சென்ற நூற்றாண்டில் ரத யாத்திரை சென்று ஒற்றை இலக்க பாராளுமன்ற உறுப்பினர்களை மூன்றிலக்கமாக மாற்றியது அத்வானிதான் என்று உலகமே ஒத்துக் கொள்கிறது. அப்போது எத்தகைய மனநிலையில் இருந்திருப்பார் அத்வானி? எனினும் அடுத்த நூற்றாண்டில் ஒரு குஜராத்தி, பிரம்மச்சாரி பனியாவால் தான் தோற்கடிக்கப்படப்போகிறோம் என்று அவரால் கற்பனை கூட செய்திருக்க முடியாதில்லையா?

இதனால்தான் இதே அத்வானி 2001-ல் குஜராத் முதலமைச்சர் பதவிக்காக மோடியை சிபாரிசு செய்தார். அப்போது முதலமைச்சர் பந்தயத்தில் முன்னணியில் இருந்த விசுவ இந்து பரிஷத்தின் பிரவீன் தொகாடியா தனக்கு கட்டுப்படமாட்டார் என்று மதியூகத்துடன் மோடியை ஆதரித்தவர் அத்வானி. கோஷ்டி பார்த்து பதவி கொடுப்பது எனும் இந்த சில்லறை செயல்கள் அனைத்து ஓட்டுக்கட்சிகளிலும் உள்ளவைதான். தமிழக காங்கிரசில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோஷ்டிகள் உண்டென்றால் பாஜகவில் அது கொஞ்சம் குறைவாக இருக்கலாம். அந்த குறைவுதான் அது வித்தியாசமான கட்சி என்ற பாராட்டிற்கு காரணமாகிறது.

இதே கோவாவில் 2002 குஜராத் கலவரம் காரணமாக “ராஜதர்மத்திலிருந்து விலகினார்” என்று மோடியை பதவியிலிருந்து நீக்க வாஜ்பாயி கோஷ்டி முயன்ற போது மோடிக்கு ஆதரவாக களத்தில் நின்று கம்பு சுழற்றியவர் சாட்சாத் அத்வானிதான். அப்படி அத்வானியால் வளர்த்துவிடப்பட்ட மோடி இன்று வளர்த்த கடாவாக மோதுகிறார். அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனிலிருந்து, அத்வானியால் வளர்க்கப்பட்ட மோடி வரை வரலாறு இத்தகைய தாய் – சேய் மோதல்களை பதிவு செய்திருக்கிறது.

மோடி, அத்வானி
அத்வானி வளர்த்த கடா…

அடகுக்கடையில் பவுன் என்ன விலை என்று கூறும் சேட்டு கெட்டப்பினை கொண்டிருக்கும் ராஜ்நாத் சிங்கோ, இல்லை பாலிவுட் படங்களில் கிளப் டான்சை ரசித்து பார்க்கும் கோட்டு சூட்டு போட்ட சேட்டுக்களின் கெட்டப்பில் இருக்கும் நிதின் கட்காரியோ பாஜக தலைவர்கள் ஆனதற்கு அத்வானியின் இந்த எச்சரிக்கை உணர்வுதான் காரணம். ராஜ்நாத் சிங்கிற்கும், நிதின் கட்காரிக்கும் அவர்களது வீட்டிலேயே ஓட்டு விழாது என்ற உண்மையில்தான் அவர்கள் தலைவர்களாக அத்வானியால் அங்கீகரிப்பட்டிருந்தார்கள்.

பாஜகவில் அத்வானியின் எதிர் கோஷ்டிகள் தங்களது எதிர்காலத்தை மனதில் கொண்டு மோடியினை ஆதரித்தார்கள். தற்செயலாக மோடி மூன்று முறையும் குஜராத்தில் வெற்றி பெற்றதும், இந்திய தரகு முதலாளிகள் மற்றும் தேசிய ஊடகங்களின் ஆதரவும் பல்வேறு காரணங்களால் அவருக்கு கிடைத்திருப்பதும் இந்த அணியின் கையை மேலோங்கச் செய்திருக்கின்றன. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக பதவியில் இல்லாமல் இருப்பது துவங்கி கர்நாடகா உள்ளிட்ட தோல்விகள் வரை சரிந்து கிடக்கும் பாஜகவின் உணர்ச்சியை மோடியை வைத்து தூக்கிவிடலாம் என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.

இப்படி ஆளும் வர்க்கமும் அத்வானியின் எதிர் கோஷ்டிகளும் ஒரு சேர ஆதரிக்கும் நிலையில்தான் மோடி வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவின் தலைமைப் பிரச்சாரக் குழு தலைவராக கோவா செயற்குழுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது பிரதமருக்கு முந்தைய பதவி என்றும் கூறலாம். பாஜகவின் பிரச்சாரக் குழு தலைமைதான், கூட்டணி, தேர்தல் உத்திகள், பிரச்சாரம் மற்றும் வேட்பாளர் தேர்வையும் முடிவு செய்யும். அதன்படி பாஜகவின் தேர்தல் வெற்றி ஆதாயங்கள் அனைத்தும் மோடியின் காலுக்கு கீழே சமர்ப்பிக்கப்படும். இதுதான் அத்வானி கோஷ்டியை அச்சுறுத்துகிறது.

மேலும் தன்னுடைய கட்சிக்காரனே ஆனாலும் பிடிக்கவில்லை என்றால் பாண்டேவுக்கு நடந்தது போல போட்டுத் தள்ள மோடி தயங்க மாட்டார். தன்னுடைய இமேஜைக் காப்பாற்றுவதற்காக கோட்னானிக்கு தூக்குத் தண்டனை கொடு என்று முதலில் கேட்டவர் இந்த மோடிதான் என்பதையெல்லாம் சேர்த்துப் பார்ப்பவர்கள் என்ன முடிவுக்கு வர முடியும்? ஆக நரேந்திர மோடி என்பவர் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல சொந்த கட்சிக்காரனுக்கும் ஆபத்தானவர்தான்.

மோடி கலவரம்
நரவேட்டை புகழ் மோடி

எனவே மோடியின் எதிர் கோஷ்டிகளின் கவலைக்கு அவர்களுடைய ஈகோ, சொந்த அரசியல் வாழ்வு, மோடி குறித்த பயம் என பல விசயங்கள் காரணமாக இருக்கின்றன. இவற்றை வெறுமனே பதவி ஆசை என்று சுருக்கிப் பார்ப்பது அந்த மகான்கள் நடத்தும் பாரதப் போரினை மட்டம் தட்டுவதாகும்.

அதே நேரம் இந்தப் பாரதப் போரில் தெருவோர நாய்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளும் இருக்கின்றன என்பது துரதிர்ஷடமானது. பிரச்சாரக் குழு தலைவர் பதவி ஏற்ற உடன் அத்வானியிடம் பேசியதாகவும், அவர் ஆசீர்வதித்ததாகவும், நான் கௌரவம் பெற்றேன் என்றும் மோடி டிவிட் போடுகிறார். பிறகு அத்வானி மூன்று கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தார் என்றதும் உடன் தொலைபேசியில் அப்படி செய்து தொண்டர்களை ஏமாற்றாதீர்கள் என்று பேசியதாகவும் மோடி கூறினார். இவையெல்லாம் அத்வானி கோஷ்டிகளை வெறுப்பேற்றுவதற்கு மோடி நடிக்கும் நாடகம்.

அதனால்தான் ராஜினாமா முடிவை வாபஸ் பெற வைப்பதற்கு ராஜ்நாத் சிங்கும், மோடியும் அத்வானி வீட்டுக்கு செல்ல முயன்ற போது மோடிக்கு வீட்டில் நுழைய அனுமதியில்லை என்று அத்வானி முறைக்க சிங் மட்டும் சென்றிருக்கிறார். கோவா செயற்குழுவுக்கு முன்பே மோடியை கடுப்பேற்றும் விதமாக வாஜ்பாயிக்கு நிகரானவர் சுஷ்மா ஸ்வராஜ் என்றும், மோடியை விட மத்தியப்பிரதேசத்தின் சௌகான் நல்லாட்சி புரிகிறார் என்றும் உசுப்பேற்றியவர் இந்த அத்வானி.

பதிலுக்கு மோடியும் உடனே டெல்லியில் உள்ள தனது அல்லக்கைகளுக்கு போன் போட்டு அத்வானி வீட்டு முன் ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கெல்லாம் இவர்கள் எங்கே பயிற்சி எடுத்தார்கள்? ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் அந்தக் காலத்து நடிகர் அசோகன் போடும் கஞ்சி போட்ட காக்கி நிக்கர் சகிதம் கலந்து கொண்டவர்கள்தான் அத்வானி, மோடி எனும் இரண்டு ஸ்வயம் சேவகர்கள். அதனாலேயே என்னவோ இந்த குடுமிபிடிச் சண்டையிலும் ஆர்.எஸ்.எஸ்-ம் பஞ்சாயத்து செய்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் தலைமை கூட ஆரம்பத்தில் மோடி எதிர்ப்பு கோஷ்டியில்தான் இருந்தது. பின்னர் அவரைப் பகைத்துக் கொண்டால் ஸ்வயம் சேவகர்களையே நமக்கு பகையாக்கி விடுவார் என்று வேறு வழியில்லாமல் மோடி முன் அடிபணிந்து நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு வருகை தரும் ஸ்வயம்சேவர்களின் எண்ணிக்கை நாடெங்கும் குறைந்து வரும் நிலையில், பல நகர்ப்புறத்து ஷாகாக்கள் மூடப்படும் நிலையில் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால்தான் தனது நிலையை ஏதோ கொஞ்சம் ஓட்ட முடியும் என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. அதனாலேயே சந்தர்ப்பவாதமாக மோடியுடன் கூட்டு வைத்துக் கொள்கிறது.

பீஷ்மர் அத்வானி
படம் : நன்றி – டெலிகிராப் இந்தியா

அத்வானி ராஜினாமா நாடகத்தில் உள்ள காமடி காட்சிகளை வைத்து ஊடகங்களும், காங்கிரஸ் கட்சியும் புழுதி பறக்க உரித்ததை படித்திருக்கலாம். பாஜக தலைவர்களும் அத்வானி வீட்டில் தவம் கிடந்து கெஞ்சினர். இறுதியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தொலைபேசியில் அத்வானியிடம் பேசி தேசமே பெரிது என்று நினைவுபடுத்தி ராஜினாமாவை வாபஸ் பெற வைத்தாராம்.

நிஜத்தில் மோடிக்கு இப்போது கொடுக்கப்பட்ட பதவியை பிரதமர் பதவி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம், தேர்தலின் போதும், தேர்தலுக்கு பிறகும் பீஷ்ம பிதாமகரிடம் ஆலோசிக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் அத்வானியிடம் அளிக்கப்பட்டனவாம். ஆனால் அத்வானிக்கு வயதாகிவிட்டது, இருக்கப் போவது எத்தனை வருடங்கள் என்ற நிலையில் அவரை ஒரு பொருட்டாக மோடி கோஷ்டி கருதாது. ஆனால் ஊடகங்களுக்கு வாய் மெல்ல அவல் கொடுத்த கதையாக அவரது ராஜினாமா மாறிவிடக்கூடாது என்பதற்காக இந்த மன்றாடல், வெற்று வாக்குறுதிகள் மூலம் வயிற்றுவலி வாபஸ் நாடகம் இனிதே நடந்தேறியிருக்கிறது.

அதே நேரம் மோடி கோஷ்டியும், ஆளும் வர்க்கத்தின் பெரும்பான்மைப் பிரிவும் நரேந்திர மோடியை முன்னிறுத்தினாலும் குஜராத்திற்கு வெளியே அவரது முகத்திற்க்காக ஓட்டு விழும் வாய்ப்புகள் மிகக் குறைவு. பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறுவது சாத்தியமில்லை என்ற கூட்டணி ஆட்சியின் காலத்தில் மோடி வித்தையின் அற்புதம் வெளிப்படும் ஏரியா மிகவும் குறைவு.

இதன்றி சிவசேனா, நிதீஷ் குமார், நவீன் பட்நாயக், முலாயம், என்று பல கட்சியினரும் மோடியை விரும்பவில்லை. தமிழ்நாட்டில் சில பார்ப்பன அம்பிகளும், ஜெயலலிதாவைப் போன்றவர்களும் கூட மோடியை மட்டும் ஆதரிக்கிறார்களே அன்றி பாஜகவை ஆதரிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இத்தகைய சூழ்நிலையில்தான் அத்வானி போன்ற மோடியின் எதிர்தரப்பு கோஷ்டிகளுக்கு கொஞ்சம் வாழ்க்கையை காலம் கனிவுடன் வழங்கியிருக்கிறது.

ஆனாலும் நரவேட்டை மோடிக்கு நிகரான ரத்த யாத்திரை புகழ் அத்வானிக்கு இந்த நாடகத்தில் கிடைத்த காந்தியவாதி போன்ற ஒரு நற்பெயர் இருக்கிறதே அதுதான் இந்த அவல நாடகத்தில் நமது மனதை நெருட வைத்த ஒரு காட்சி!

யார் இந்த ஸ்னோடன் ?

15

மெரிக்க அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அம்பலப்படுத்தல்களுக்கு காரணமானவரான எட்வர்ட் ஸ்னோடன் பெரும்பாலானோர் பொறாமைப்படும் வேலையில் இருந்தார். அமெரிக்க மத்திய அரசு வேலை, கணினி துறையில் வித்தகர், $2,00,000 (சுமார் ரூ 1.2 கோடி) சம்பளம், ஹவாயில் அவரது துணைவியுடன் பகிர்ந்து கொள்ள சொந்தமாக வீடு என்று அமெரிக்க கனவை நனவாக்கிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார் ஸ்னோடன்.

ஆனால், தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையில் ஒரு கெட்ட கனவு என்பதை பல ஆண்டுகளாகவே அவர் உணர ஆரம்பித்திருந்தார். உலகெங்கிலும் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் இணைய சுதந்திரத்தையும் மறுக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தனது வசதியான வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்து அமெரிக்க அரசமைப்பை அம்பலப்படுத்த முடிவு செய்தார்.

அமெரிக்க சிறப்பு ராணுவப் படைகள்
அமெரிக்க சிறப்பு ராணுவப் படைகள்

29 வயதான ஸ்னோடன் வட கேரலினாவின் எலிசபத் நகரத்தில், 1983-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி பிறந்தவர். அவரது குடும்பம் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைமையகம் இருக்கும் மேரிலாண்டுக்கு இடம் பெயர்ந்தது. உயர் நிலைப்பள்ளி பட்டயம் பெறுவதற்காக மேரிலாண்ட் சமூகக் கல்லூரியில் கணினித் துறை வகுப்புகளில் கலந்து கொண்டார். ஆனால், அவர் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை.

2003-ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து சிறப்புப் படைகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு அனுப்பப்பட்டார். ஈராக்கில் ஒடுக்கப்படும் மக்களை விடுதலை செய்வதில் தானும் பங்கு பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், போர் பற்றிய அவரது நம்பிக்கைகள் விரைவிலேயே சிதறடிக்கப்பட்டன. அவருக்கு பயிற்சி அளித்த ராணுவ அதிகாரிகளில் பெரும்பாலானோர் யாருக்கும் உதவுவதை விட ஈராக் மக்களை கொல்வதைப் பற்றியே ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

ஒரு விபத்தில் இரண்டு கால்களும் முறியவே, இராணுவத்திலிருந்து விலகினார். மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் ரகசிய பிரிவு ஒன்றில் பாதுகாவலராக வேலை கிடைத்தது. அங்கிருந்து சிஐஏவின் தகவல் தொடர்பு பாதுகாப்புத் துறையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்.

இணையம் பற்றிய அறிவும், மென்பொருள் உருவாக்கலில் இருந்த திறமையும் பள்ளி இறுதி வகுப்பைக் கூட முடித்திராத அவர் வெகு வேகமாக முன்னேற உதவின. 2007-ம் ஆண்டு சிஐஏ அவரை தூதரக ஊழியர் வேடத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவுக்கு அனுப்பியது. கணினி இணைய பாதுகாப்பிற்கான பொறுப்பில் இருந்த அவர் பல வகைப்பட்ட ரகசிய ஆவணங்களை பார்க்க முடிந்தது. அதன் மூலம் கிடைத்த விபரங்களும் கிட்டத்த 3 ஆண்டுகள் சிஐஏ அதிகாரிகளுடன் வேலை செய்த அனுபவமும், நடப்பவற்றின் நியாயத்தைப் பற்றிய கேள்விகளை அவர் மனதில் எழுப்பின.

அமெரிக்க உளவுத் துறையின் வேவு பார்க்கும் அறை
அமெரிக்க உளவுத் துறையின் வேவு பார்க்கும் அறை

ஒரு ஸ்விஸ் வங்கி அதிகாரியை குடிக்க வைத்து, குடிபோதையில் வண்டி ஓட்ட வைத்து, அவர் போலீசில் சிக்கியதும் அவருக்கு உதவுவதாக முன் வந்த ரகசிய உளவாளி மூலம் அவரை தமது நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொண்டது சிஐஏ. இது போன்ற பல நிகழ்வுகள் ஸ்னோடனை சோர்ந்து போக வைத்தன. அமெரிக்க அரசு அமைப்பு பற்றிய அவரது அடிப்படை நம்பிக்கைகள் சிதைந்து போயின. நல்லதை விட பல மடங்கு கெட்டது செய்யும் அமைப்பில் தான் பங்கேற்பதை அவர் புரிந்து கொண்டார். இந்த உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்ந்தார்.

2008-ம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது அவருக்கு ஓரளவு நம்பிக்கையூட்டியது. ஒபாமா நிர்வாகத்தில் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு சீர்திருத்தப்படும் என்று நம்பினார்.

2009-ம் ஆண்டு சிஐஏவை விட்டு விலகி ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள இராணுவ தளத்தில் செயல்படும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பிரிவில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். பூஸ் அலன், டெல் போன்ற நிறுவனங்களின் ஊழியராக தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் பணி செய்தார். மாற்றப்படும் என்று அவர் நம்பிய கொள்கைகள் ஒபாமாவின் ஆட்சியிலும் தொடர்வதை பார்த்து அவர் பெரிதும் ஏமாற்றமடைந்தார். மனித குல வரலாற்றிலேயே மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று அவர் கருதிய இணையத்தின் மதிப்பையும், அடிப்படை உரிமைகளையும் அமெரிக்க அரசின் வேவு பார்த்தல் அழித்து வருவதை உணர ஆரம்பித்தார்.

மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவரது உறுதி வளர்ந்தது. தவறுகள் நடப்பதைப் பார்க்கும் போது, “வேறு யாராவது வந்து நிலைமையை சரி செய்வார்கள் என்று காத்திருக்க முடியாது. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தலைவர்கள் வருவார்கள் என்று காத்திருக்க முடியாது. நாமே செயல்படுவதுதான் தலைமைப் பண்பு” என்று புரிந்து கொண்டதாக கூறுகிறார் ஸ்னோடன். அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் வேவு பார்க்கும் நடவடிக்கைகள் எவ்வளவு விரிவானவை, அனைத்தும் தழுவியவை என்பதை புரிந்து கொண்டார். உலகில் நடக்கும் ஒவ்வொரு உரையாடலையும், ஒவ்வொரு செயல்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள்.

உடா கணினி மையம்
உடாவில் உள்ள அமெரிக்க உளவுத் துறை கணினி மையம்

அமெரிக்க உளவுத் துறை உலகெங்கிலும் உள்ள பொது மக்களை வேவு பார்ப்பது தொடர்பான ஆவணங்களை பத்திரிகைகளுக்கு வெளியிட அவர் முடிவு செய்தார். தனது நடவடிக்கைகளுக்காக தான் துன்புறுத்தப்படலாம் என்று அவருக்கு தெரிந்திருந்தது. ஆனால், தான் பெரிதும் நேசிக்கும் இந்த உலகை ஆண்டு கொண்டிருக்கும் ரகசிய சட்டங்கள், தடுத்து நிறுத்த முடியாத நிர்வாக அதிகாரம் போன்றவை சிறிதளவாவது அம்பலப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

“பணத்தை விட முக்கியமான பல விஷயங்கள் உள்ளன. எனக்கு பணத்தாசை இருந்தால் இந்த ஆவணங்களை பல நாடுகளுக்கு விற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணத்தை சம்பாதித்திருக்கலாம். ஆனால், அரசு அளவுக்கு மீறிய அதிகாரங்களை தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. அவற்றின் மீது பொதுமக்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த அமைப்பில் பணி புரியும் என்னைப் போன்றவர்கள் பல வரம்பு மீறல்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதான் தன் நோக்கம்” என்கிறார் அவர்.

“நான் எந்தத் தவறும் செய்ய வில்லை என்று எனக்குத் தெரியும். அதனால், மறைந்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், விவாதம் என்னை மையமாக கொண்டு நடக்கக் கூடாது. அமெரிக்க அரசின் செயல்களை மையமாக கொண்டிருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

ஸ்னோடன்
அமெரிக்காவால் வேட்டையாடப்படும் ஸ்னோடன்

இப்போது ஹாங்காங் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் ஸ்னோடன், யாராவது ஒட்டுக் கேட்டு விடக் கூடாது என்று தன் அறைக் கதவுகளை தலையணைகளால் பொதிந்து வைக்கிறார். அவரது மடிக்கணினியில் பாஸ்வேர்ட் உள்ளிடும் போது தலையை ஒரு சிவப்புப் போர்வையால் போர்த்திக் கொள்கிறார். அவரது பயங்களுக்கு காரணம் இருக்கிறது. அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்க உளவுத் துறையில் வேலை செய்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய, மிக ரகசியமான உளவு அமைப்பான அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் அவரை தேடிக் கொண்டிருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.

தன்னை கைது செய்து அனுப்புமாறு அமெரிக்க அரசு சீன அரசிடம் கேட்கலாம்; அல்லது சீன அரசு அவரை பிடித்து ரகசிய இடத்துக்கு கொண்டு போய் தகவல்களை கறக்க முயற்சிக்கலாம்; அல்லது திடீரென பிடித்துக் கட்டப்பட்டு, விமானத்தில் அமெரிக்காவுக்கு கடத்தப்படலாம். சிஐஏ மூலம் அவர் அழிக்கப்பட்டு விடலாம்; சிஐஏ உளவாளிகளோ, அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பிற நாட்டு உளவாளிகளோ அவரை வேட்டையாட வரலாம். அல்லது ஹாங்காங்கின் புகழ்பெற்ற டிரையாட் எனப்படும் மாபியா கும்பல்களுக்கு பணம் கொடுத்து அவரை கொல்ல வைக்கலாம்.

அவரது ஹோட்டல் இருக்கும் அதே சாலையில்தான் ஹாங்காங் சிஐஏ அலுவலகம் (ஹாங்காங் அமெரிக்க தூதரகம்) உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அரசு அமைப்பின் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை ஒபாமா அரசு அடக்கி ஒழித்ததை ஏற்கனவே பார்த்திருக்கும் ஸ்னோடன், தான் தெரிந்தே இந்த முடிவை எடுத்ததாக சொல்கிறார். அவரது குடும்பத்துக்கு இதனால் ஏற்படப் போகும் தொல்லைகளைக் குறித்து எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அவர் வருந்துகிறார். அதுதான் அவரை தூக்கம் இழக்கச் செய்கிறது.

வரலாறு முழுவதும் சர்வாதிகார, சுரண்டல் அமைப்புகளை கட்டி எழுப்பும் ஆளும் வர்க்கங்களுக்கான சவப்பெட்டி ஸ்னோடன் போன்ற சராசரி மனிதர்களால்தான் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடக்குமுறை சாம்ராஜ்யமும் தம் வீழ்ச்சி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

(இங்கிலாந்தின் கார்டியன் நாளிதழில் கிளென் கிரீன்வால்த், ஏவன் மெக்ஆஸ்கில், லாரா போய்ட்ராஸ் எழுதிய கட்டுரையை தழுவி எழுதியது)

நெற்களஞ்சியத்தைக் கவ்வவரும் பேரபாயம் ! பேரழிவு !!

8

15-delta-1ஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கும்பகோணம், பாபநாசம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட எட்டு வட்டங்களில் 667 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளது, மைய அரசு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே அதன் ஒப்புதலோடு இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் முடிவாகி, மீத்தேனை எடுக்கும் உரிமம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கும் மக்களுக்கும் தெரிவிக்காமல், அவர்களின் கருத்தையும் கேட்காமல், மிகவும் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்த இந்தத் திட்டம், தற்பொழுது மீத்தேனை எடுப்பதற்காக 50 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதையடுத்து அம்பலத்திற்கு வந்துவிட்டது.

வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரப்படும் இத்திட்டத்தைத் தமிழக நெற்களஞ்சியத்தின் மீது வீசப்படும் அணுகுண்டு என்றே கூறலாம். ஏனென்றால், இத்திட்டத்தைச் செயல்படுத்த தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 1,66,210 ஏக்கர் பூமி விவசாயிகளிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் அபகரிக்கப்படும். மீத்தேனை எடுத்துச் செல்லும் குழாய்களும் விளைநிலங்களில்தான் பதிக்கப்படும். கண்ணுக்குத் துலக்கமாகத் தெரியும் இந்த நேரடிப் பாதிப்பை விட, இத்திட்டத்தால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் காவிரிப் படுகை விவசாய பூமியை அழித்துவிடும் அபாயம் நிறைந்தவையாகும்.

15-delta-2பூமியில் புதையுண்டு கிடக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க வேண்டுமெனில், முதலில் அப்பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீரை, ஒரு சொட்டுக்கூட விடாமல் ஆழ்குழாய்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். 500 முதல் 1,500 அடி வரை ஆழ்குழாய்களை இறக்கி நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்பொழுது, தஞ்சை, திருவாரூர் மாவட்டத்திலுள்ள நிலத்தடி நீர் தொகுப்புகள் அனைத்தும் வறண்டு போகும். காவிரி நீர்ச் சிக்கலால் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு டெல்டா பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுவரும் நிலையில், நிலத்தடி நீரும் வறண்டு போகும் சூழ்நிலையும் உருவானால், அவர்கள் விவசாயத்தை அறவே கைவிட்டு வெளியேற வேண்டியதுதான்.

இதுவொருபுறமிருக்க, 1,500 அடி ஆழத்திலுள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்பொழுது, அங்கு ஏற்படும் வெற்றிடத்தில் கடல் நீர் உள்ளே புகும். இதனால் முப்போகம் விளையக்கூடிய வளம் நிறைந்த டெல்டா பகுதி விளைநிலங்கள், விவசாயத்திற்கு லாயக்கற்ற உவர் நிலமாக மாறும். மேலும், 1,500 அடி வரை தோண்டி உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் பலவிதமான இரசாயன உப்புகள் கலந்த மாசடைந்த நீராக இருக்கும். இந்த மாசடைந்த நீரை, காவிரி நீரைக் கொண்டு வரும் வாய்க்கால்கள் வழியாக வெளியேற்றும்பொழுது, அது வயல்வெளிகள், கிணறுகள் உள்ளிட்டு அனைத்தையும் மாசுபடுத்திவிடும்.

“இத்திட்டத்தால் டெல்டா பகுதி விவசாயம் மட்டுமல்ல, சென்னை, இராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்படும்; பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் காவிரி சமவெளிப் படுகை நாசமாகி உயிர்ச்சங்கிலி அறுந்துபோகும்” என எச்சரிக்கிறார், காவிரி சமவெளி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிவராமன்.

இந்த மீத்தேன் வாயு மிஞ்சிப்போனால் ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகள் வரை கிடைக்கலாம். அதற்காக, ஈராயிரம் ஆண்டுகளாக நடந்துவரும், பல இலட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக இருந்துவரும் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு கொடுப்பதை அனுமதிக்க முடியுமா? என்பதுதான் நம் முன் எழுந்துள்ள கேள்வி. “புற்றுநோயைத் தொடக்கத்திலேயே அழித்துவிடுவதுதான் எளிதானது, புத்திசாலித்தனமானது” என்பது தமிழக மக்கள் அறியாத விசயமல்லவே!
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

அரசு பயங்கரவாதத்துக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி !

4

த்தீஸ்கர் மாநிலத்தின் பாசிச பயங்கரவாத குண்டர் படைத் தலைவனாகிய மகேந்திரசிங் கர்மா மாவோயிஸ்டுகளின் கோடையிடித் தாக்குதலில் அழித்தொழிக்கப்பட்டுள்ளான். அவன் மட்டுமின்றி, துணை ராணுவப் படைகளைக் குவித்து பழங்குடியின மக்கள் மீது அரசு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட முன்னாள் உள்துறை அமைச்சரும் மாநில காங்கிரசுத் தலைவருமான நந்தகுமார் பட்டீல் உள்ளிட்டுப் பிரச்சார ஊர்தியில் சென்ற காங்கிரசுக் கட்சியினர் 27 பேர், கடந்த மே 25 அன்று தண்டேவாடா மாவட்டத்தின் வனப்பகுதியில் வழிமறிக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

“மனிதத் தன்மையற்ற கொடூரங்கள், படுகொலைகள், முடிவில்லாத பயங்கரவாதத்தை பஸ்தார் பழங்குடியின மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட சல்வாஜூடும் எனும் பாசிச குண்டர் படையின் தலைவன் எங்களால் அழித்தொழிக்கப்பட்டுள்ளான். ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் சல்வாஜூடும் குண்டர் படையாலும், அரசின் ஆயுதப் படைகளாலும் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே நாங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளோம்” என்று மாவோயிஸ்டு கட்சியின் சத்தீஸ்கர் மாநில தண்டகாரண்யா சிறப்புப் பிராந்தியக் கமிட்டி கடந்த மே26 அன்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.

சல்வாஜூடும் அட்டூழியம்.
தங்களது மண்ணை விட்டு வெளியேற மறுக்கும் பழங்குடியினரின் வீடுகளையும் தானியங்களையும் கொளுத்திய சல்வாஜூடும் குண்டர் படையின் பயங்கரவாத அட்டூழியம்.

2000-வது ஆண்டில் மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட, கனிம வளங்கள் நிறைந்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தைச் சூறையாடுவதற்காகவே,‘வளர்ச்சி’ என்ற பெயரில் பழங்குடியின மக்கள் அவர்களின் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் சூறையாடலுக்காக, பழங்குடியினரின் நிலங்களைப் பறித்து அவர்களை நாடோடிகளாக வெளியேற்றினால்தான் இந்த ‘வளர்ச்சி’ சாத்தியப்படும். மாவோயிஸ்டுகளும் பழங்குடியினரும் இந்த ‘வளர்ச்சி’யைத் தடுக்கிறார்கள். எனவேதான் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைகளைக் குவித்து, அவர்கள் மீது “காட்டுவேட்டை” என்ற பெயரில் பயங்கரவாதப் போரை அரசு தொடுத்து வருகிறது.

பழங்குடியின நிலப்பிரபு குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர கர்மா, 1978-இல் வலது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வாகவும், பின்னர் காங்கிரசில் சேர்ந்து 1996-இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதன் பிறகு அன்றைய பிரிக்கப்படாத ம.பி.யில் அஜித் ஜோகி அரசாங்கத்தில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராகவும், சத்தீஸ்கர் மாநிலம் உருவான பிறகு எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவனாகவும் இருந்தவன். 90-களின் இறுதியில் சத்தீஸ்கரில் கனிம வளங்களைச் சூறையாட கார்ப்பரேட் நிறுவனங்கள் களமிறங்கியபோது, அவற்றுக்கு விசுவாச புரோக்கராகச் செயல்பட்டுவந்த இவன், பழங்குடியினரைக் கனிம வளமிக்க அவர்களின் மண்ணிலிருந்து விரட்டியடிப்பதற்காகவே அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவோடும், காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வின் ஆசியோடும், 2005-இல் சல்வாஜூடும் குண்டர் படையைக் கட்டியமைத்தான். இப்பாசிச பயங்கரவாதக் குண்டர் படையினர் “சிறப்பு காவல் அதிகாரிகள்” என்று சத்தீஸ்கர் அரசால் அங்கீகரிக்கப்பட்டனர்.

சல்வாஜூடும் பயங்கரவாத கொலைகாரப் படையினரால் ஏறத்தாழ பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கோரமாகக் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீயிடப்பட்டுச் சாம்பலாக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டுள்ளனர். 50,000-க்கும் மேலான மக்கள் அவர்களது வாழ்விடங்களிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு கட்டாய நிவாரண முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இவற்றில், மகேந்திர கர்மா தானே தலைமையேற்று வழிநடத்திய சூறையாடல்களும் அட்டூழியங்களும் ஏராளம். இதனாலேயே இவன் “பஸ்தார் புலி” என்று ஆளும் கும்பலால் அழைக்கப்பட்டான்.

மகேந்திர கர்மா
கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவோடும், காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வின் ஆசியோடும் கட்டியமைக்கப்பட்ட பாசிச பயங்கரவாத சல்வாஜூடும் குண்டர் படைத் தலைவர் மகேந்திர கர்மா.

நந்தினி சுந்தர் முதலான ஜனநாயக சக்திகள் உச்ச நீதிமன்றத்தில் சல்வாஜூடுமின் அட்டூழியங்களுக்கு எதிராக வழக்குகள் தொடுத்த பிறகு, சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில் பழங்குடி இளைஞர்களை நக்சல்பாரிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்துவது சட்டவிரோதமானது என்று கூறி, சல்வாஜூடும் போன்ற அமைப்புகளைக் கலைக்குமாறு 2011-இல் உத்தவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால் சத்தீஸ்கர் மாநில அரசோ, சத்தீஸ்கர் துணைப்படை, சிறப்புத் துணைப்படை, கோயா கமாண்டோ படை என்று பெயர் மாற்றி அக்குண்டர் படையை இன்றும்கூட நடத்திக் கொண்டு வருகிறது. சல்வாஜூடும் செய் தநூற்றுக்கணக்கான கொலைகள், வழக்குகளாக நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

சத்தீஸ்கரில் கார்ப்பரேட் நலன்களுக்காக ஒரு உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டம் பழங்குடியினருக்கு வழங்கியிருக்கும் உரிமைகளை வலியுறுத்தி வழக்குகள் பதிவு செய்ததற்காக சத்தீஸ்கரின் காந்தியவாதியான ஹிமான்சு குமார் தண்டிக்கப்பட்டார். அவரது காந்திய ஆசிரமம் போலீசாரால் பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்டது. கரும் பச்சை நிறத்தில் ஆடைகளை விற்ற வியாபாரிகள் கூட நக்சல்பாரிகளுக்குச் சீருடை கொடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செயப்பட்டார்கள். சத்தீஸ்கரில் நிலவும் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய குற்றத்திற்காக பிரபல மருத்துவர் பினாயக் சென் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டார். இந்த ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பும் பக்தியும் கொண்டுள்ள வலது கம்யூனிஸ்டு கட்சியினரே மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு சத்தீஸ்கரில் சிறையிடப்பட்டுள்ளார்கள். வலது கம்யூனிஸ்டு தலைவர்களான பரதன், ராஜா போன்றோர் ஜனநாயக முறைப்படி பலமுறை கண்டனம் தெரிவித்தும், நீதி மன்றங்களில் மனு செய்தும் கூட அவர்களை சத்தீஸ்கர் அரசு விடுவிக்கவில்லை.

கடந்த 2011-ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் தொடரும் போலீசு அட்டூழியங்களைப் பற்றிய உண்மையைக் கண்டறியச் சென்ற மனித உரிமை ஆர்வலரான சுவாமி அக்னிவேஷ் சல்வாஜூடும் குண்டர்களால் தாக்கப்பட்டார். அது பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சத்தீஸ்கர் சென்ற மையப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது சத்தீஸ்கர் துணைப்படை என்று பெயர் மாற்றப்பட்டுள்ள சல்வாஜூடும் குண்டர் படையானது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இனி போதிய பாதுகாப்பு இல்லாமல் தாங்கள் விசாரணைக்குச் செல்ல இயலாது என்று மையப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இல்லாமல், மையப் புலனாய்வுத் துறை அதிகாரிகளே நடமாட முடியாத சத்தீஸ்கர் மாநிலத்தில் சாமானிய பழங்குடியின மக்களுக்கு எத்தகைய உரிமையும் நீதியும் கிடைக்கும் என்பதைச் சோல்ல வேண்டியதில்லை.

இந்நிலையில், அரசுத் தலைவரும், பிரதமரும், சோனியாவும், சத்தீஸ்கர் முதல்வரும் இதர அமைச்சர்களும் அரசு பயங்கரவாதத்துக்கு எதிரான மாவோயிஸ்டுகளின் பதிலடியை “ஜனநாயகத்தின் மீதான கொடிய தாக்குதல்” என்கின்றனர். கடந்த மே 17 அன்று பிஜாப்பூர் மாவட்டத்திலுள்ள எட்சமேட்டா கிராமத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்டு எட்டு அப்பாவி பழங்குடியினர் போலீசாராலும் துணை ராணுவப் படையினராலும் கோரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்களே, அப்போது ஜனநாயகத்தைப் பற்றி இவர்கள் வாய் திறக்கவில்லையே, அது ஏன்? கடந்த ஜனவரி 20 முதல் 23 வரை அதே பிஜாப்பூர் மாவட்டத்தின் டோட்டி தும்னார், பிடியா ஆகிய கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளையும் பள்ளிக்கூடத்தையும் போலீசும் துணை ராணுவப் படைகளும் தீயிட்டுக் கொளுத்திய போது, அங்கே இவர்கள் கூறும் ஜனநாயகம் பூத்துக் குலுங்கியதா? சத்தீஸ்கரில் தொடரும் போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன்வந்த மாவோயிஸ்டு தலைவரான தோழர் ஆசாத்தை காட்டிலேயே வைத்து இந்திய அரசு சுட்டுக் கொன்றதே, இதுதான் ஜனநாயக மரபா?

அரசு பயங்கரவாதத்தையே ஜனநாயகமாகச் சித்தரிக்கும் ஆளும் கும்பலும் ஊடகங்களும் சத்தீஸ்கரில் முன்னைவிட மூர்க்கமாகத் தாக்குதலை ஏவிப் போராடும் மக்களையும் மாவோயிஸ்டுகளையும் ஒடுக்கத் துடிக்கின்றன. ஆனால், அரசு பயங்கரவாதம் சத்தீஸ்கரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக இத்தகைய சிவப்பு பயங்கரவாதம் மேலும் மூர்க்கமாகத் தொடரவே செய்யும்.

– மனோகரன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்த ஸ்னோடனின் நேர்காணல் !

16

மெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அதன் மக்களை உளவு பார்க்கும் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன் இப்போது ஹாங்காங்கில் புகலிடம் தேடியிருக்கிறார். உலகின் மிகப்பெரிய, ஈவு இரக்கமற்ற உளவு அமைப்பிற்கு எதிராக தனது குரலை எழுப்பத் துணிந்த அவரிடம்  கிளென் கிரீன்வால்டும் ஏவன் மெக்ஆஸ்கில்லும் எடுத்த பேட்டி இங்கிலாந்தின் கார்டியன் நாளிதழில் வெளியாகியிருக்கிறது.

பேட்டியின் சில பகுதிகளின் தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.

எட்வர்ட் ஸ்னோடன்
எட்வர்ட் ஸ்னோடன் (படம் : நன்றி கார்டியன்)

கேள்வி :  நீங்கள் விசில்புளோவர் (அம்பலப்படுத்துபவர்) ஆக ஏன் முடிவு செய்தீர்கள்?

பதில் :  “எதை வேண்டுமானாலும் ஒட்டுக் கேட்கும்படியான ஒரு கட்டமைப்பை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் உருவாக்கியிருக்கிறது. அதன் மூலம் குறிப்பான தேவையின் அடிப்படையில் இல்லாமல், தகவல் பரிமாற்றங்கள் பெரும்பகுதி தானாகவே ஒட்டுக் கேட்கப்படுகிறது. உங்கள் மின்னஞ்சல்களை அல்லது உங்கள் மனைவியின் தொலைபேசியை நான் பார்க்க விரும்பினால் அந்த ஒட்டுக் கேட்பை செயல்படுத்த வேண்டியதுதான் தேவை. உங்கள் மின்னஞ்சல்கள், கடவுச் சொற்கள், தொலைபேசி பதிவுகள், கடன் அட்டைகள் எதை வேண்டுமானாலும் நான் அணுக முடியும்.

“இது போன்ற விஷயங்களை செய்யும் சமூகத்தில் நான வாழ விரும்பவில்லை. நான் செய்யும் ஒவ்வொரு செயலும், நான் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் பதிவு செய்யப்படும் ஒரு உலகில் நான் வாழ விரும்பவில்லை. அத்தகைய ஒன்றை ஆதரிக்கவோ, அல்லது அத்தகைய அமைப்பின் கீழ் வாழவோ நான் விரும்பவில்லை.”

கேள்வி :  ஆனால், போஸ்டன் நகரில் நடந்தது போன்ற பயங்கரவாத செயல்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பதற்கு வேவு பார்ப்பது அவசியமில்லையா?

பதில் :  “பயங்கரவாதம் ஏன் புதிய அச்சுறுத்தலாக இப்போது உருவாகியிருக்கிறது என்று நாம் பரிசீலிக்க வேண்டும். பயங்கரவாதம் எப்போதுமே இருந்திருக்கிறது. போஸ்டனில் நடந்தது ஒரு குற்றச் செயல். அத்தகையவற்றை தடுப்பதற்கு வேவு பார்ப்பதை விட, வழக்கமான, பாரம்பரியமான போலீஸ் கண்காணிப்புதான் தேவை.

கேள்வி :  உங்களை நீங்கள் இன்னொரு பிராட்லி மேனிங் ஆக பார்க்கிறீர்களா?

பதில் :  “மேனிங் ஒரு சிறப்பான அம்பலப்படுத்துபவர். அவர் பொது நலத்தினால் தூண்டப்பட்டார்.”

கேள்வி :  நீங்கள் செய்தது ஒரு குற்றம் என்று நினைக்கிறீர்களா?

பதில் :  “அரசாங்கத்தின் தரப்பில் போதுமான குற்றங்களை நாம் பார்த்து விட்டோம். இந்த நிலையில் எனக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை வைப்பது போலித்தனமானது. அரசு அமைப்புகள் பொதுமக்களின் உரிமை வட்டத்தை பெருமளவு குறுக்கியிருக்கின்றன.”

கேள்வி :  உங்களுக்கு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில் :  “எதுவும் நல்லது நடக்காது.”

ஹாங்காங் அமெரிக்க தூதரகம்
ஸ்னோடன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் அமெரிக்க தூதரகம் (மற்றும் உளவு அலுவலகம்) – படம் : நன்றி தி ஹிந்து

கேள்வி :  ஏன் ஹாங்காங்?

பதில் :  “குறைவான சுதந்திரம் உள்ளதாக கருதப்படும்  இடத்துக்கு ஒரு அமெரிக்கன் இடம் பெயர வேண்டியிருப்பது எவ்வளவு சோகமானது!  சீன மக்கள் குடியரசுடன் இணைந்திருந்தாலும் ஹாங்காங் சுதந்திரத்துக்கு பேர் பெற்றது. வலுவான பேச்சுரிமை பாரம்பரியம் உடையது”

கேள்வி :  வெளியிடப்பட்ட ஆவணங்கள் எதை வெளிப்படுத்துகின்றன?

பதில் :  “அமெரிக்க நாடாளுமன்றத்தில் வேவு பார்த்தல் பற்றிய கேள்விகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆணையம் தொடர்ந்து பொய்யான தகவல்களை தந்திருக்கிறது என்பதை அவை தெரிவிக்கின்றன. செனட்டர் ரான் வைடனும் செனட்டர் மார்க் உடல்லும் வேவு பார்த்தலின் அளவைப் பற்றி கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் சொல்வதற்கு தேவையான வசதிகள் இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். வசதிகள் நிச்சயம் எங்களிடம் இருக்கின்றன. எந்தெந்த இடங்களில் மக்கள் அதிக அளவு கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டும் வரைபடங்கள் என்னிடம் இருக்கின்றன. ரஷ்யாவிலிருந்து சேகரிப்பதை விட அதிகமாக அமெரிக்காவிலிருந்து தகவல் பரிமாற்றங்களை  ஒட்டுக் கேட்கிறோம்.”

கேள்வி :  சீனாவினால் நடத்தப்படும் கணினி தாக்குதல்கள் குறித்து ஒபாமா நிர்வாகம் தெரிவிக்கும் கண்டனங்கள் பற்றி?

பதில் :  “நாம் எல்லோரையும் எல்லா இடத்திலும் தாக்குகிறோம். கூடவே, நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே வேறுபாடு காட்ட முயற்சிக்கிறோம். ஆனால், நாம் போரிட்டுக் கொண்டிருக்காத நாடுகளில் கூட, கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் மூக்கை நுழைக்கிறோம்.”

கேள்வி :  அரசின் வேவு பார்த்தலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடைமுறைகளை ஒருவர் அமல்படுத்திக் கொள்வது சாத்தியமா?

பதில் :  “எதெல்லாம் சாத்தியம் என்பதைப் பற்றி உங்களுக்கு தெரியாது. அவர்கள் செய்ய முடிபவற்றின் வீச்சு திகிலூட்டக் கூடியது. உங்கள் கணினிகளில் வேவு மென்பொருளை புகுத்த முடியும். நீங்கள் இணையத்தில் இணைந்ததும் உங்கள் கணினியை அடையாளம் கண்டு கொள்ள முடியும். எத்தகைய நடவடிக்கைகளை நீங்கள் செயல்படுத்தினாலும், நீங்கள் பாதுகாப்பாக இருக்கவே முடியாது.

கேள்வி :  நீங்கள் இதை திட்டமிட்டது உங்கள் குடும்பத்துக்கு தெரியுமா?

பதில் :  “இல்லை. என்ன நடக்கிறது என்று என் குடும்பத்துக்கு தெரியாது. என்னுடைய அடிப்படை பயமே அவர்கள் என் குடும்பத்தையும், நண்பர்களையும், என் துணைவியையும் குறி வைப்பார்கள் என்பதுதான். நான் தொடர்பு வைத்திருக்கும் யாரையும்…”

“எஞ்சியிருக்கும் என் வாழ்க்கை முழுவதும் நான் இதனுடன்தான் வாழ்ந்தாக வேண்டும். அவர்களுடன் நான் தொடர்பு கொள்ள முடியாது. என்னைத் தெரிந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு எதிராக அதிகார வர்க்கத்தினர் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள். அது என் தூக்கத்தை கெடுக்கிறது.”

ஸ்னோடனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
ஸ்னோடனுக்கு ஆதரவு தெரிவித்து நியுயார்க்கில் நடந்த ஆர்ப்பாட்டம் (படம் : நன்றி தி ஹிந்து)

கேள்வி :  ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?

பதில் :  “உங்களை தொந்தரவு செய்யும் விஷயங்களை நீங்கள் தினமும் பார்க்கிறீர்கள். எல்லாவற்றையும் பார்க்கும் போது அவற்றுள் சில முறைகேடானவை என்று உணர்கிறீர்கள். நடப்பது தவறானது என்ற உணர்வு படிப்படியாக வளர்கிறது.. திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்து நான் இதை முடிவு செய்யவில்லை. அது இயல்பாகவே நடந்தது.”

“2008-ல் பலர் ஒபாமாவுக்கு வாக்களித்தார்கள். நான் அவருக்கு வாக்களிக்கவில்லை. மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களித்தேன். ஆனால், நான் ஒபாமாவின் வாக்குறுதிகளை நம்பினேன். அப்போது நான் உண்மைகளை வெளியிட நினைத்திருந்தேன், ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் காத்திருந்தேன். அவர் தொடர்ந்து அதே கொள்கைகளை பின்பற்றினார்.”

கேள்வி :  ஒபாமா, இந்த அம்பலப்படுத்தலை கண்டித்து விட்டு, பாதுகாப்புக்கும் வெளிப்படைத் தன்மைக்கும் இடையேயான சமநிலை பற்றிய விவாதத்தை வரவேற்பதாக சொன்னதற்கு உங்கள் எதிர்வினை என்ன?

பதில் :  “என் உடனடி எதிர்வினை, அவரால் தனது செயல்களை நியாயப்படுத்த முடியவில்லை என்பதுதான். நியாயப்படுத்த முடியாததை அவர் நியாயப்படுத்த முயல்கிறார், அவருக்கும் அது தெரிகிறது.”

கேள்வி :  இந்த அம்பலப்படுத்தல்கள் பற்றிய மக்களின் எதிர்வினை பற்றி?

பதில் :  “பாதுகாப்பு என்ற பெயரில் பறிக்கப்படும் தமது உரிமைகளுக்காக பொதுமக்கள் இவ்வளவு தீவிரமாக எதிர்வினை புரிந்தது எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போல இல்லா விட்டாலும், ஜூலை 4-ம் தேதி நான்காவது திருத்தத்துக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கி போராடும் “நான்காவது திருத்ததை மீட்போம்” என்ற இயக்கம் ரெட்டிட் மூலமாக வளர்ந்திருக்கிறது. இணையத்தின் வழியான எதிர்வினை மிகப்பெரிதாகவும், ஆதரவு தெரிவிப்பதாகவும் இருக்கிறது.

கேள்வி :  வாஷிங்டனைச் சேர்ந்த வெளியுறவுத் துறை நிபுணர் ஸ்டீவ் கிளெமன்ஸ், தலைநகரில் டல்லஸ் விமான நிலையத்தில் நான்கு பேர் அவர்கள் அப்போது கலந்து கொண்ட உளவுத் துறை கருத்தரங்கு குறித்து பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டிருக்கிறார். இந்த அம்பலப்படுத்தல்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவர்களில் ஒருவர், இதில் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர், அம்பலப்படுத்துபவர் இரண்டு பேரையுமே மறைந்து போகச் செய்ய வேண்டும் என்று சொன்னதாக கிளெமன்ஸ் சொல்கிறார். நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :  “அந்தச் செய்தியைப் பற்றி கருத்து சொன்ன ஒருவர் ‘உண்மையான உளவாளிகள் அப்படி எல்லாம் பேச மாட்டார்கள்’ என்றார். நான் ஒரு உளவாளி, நான் சொல்கிறேன், இப்படித்தான் அவர்கள் பேசுவார்கள். குற்றங்களை எப்படி கையாள்வது என்று அலுவலகத்தில் விவாதிக்கும் போதெல்லாம் அவர்கள் சட்டப்படியான நடைமுறைகளை ஆதரிப்பது இல்லை – அவர்கள் முடிவான ஒரு நடவடிக்கையை ஆதரிப்பார்கள். ஒருவரை விமானத்திலிருந்து தள்ளி விடுவது, அத்தகைய நபர்களுக்கு நீதிமன்றத்தில் வாய்ப்பு கொடுப்பதை விட சிறந்தது என்பார்கள். அது ஒரு சர்வாதிகார மனநிலை.”

கேள்வி :  நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

பதில் :  “நான் செய்ய முடிவது இங்கே உட்கார்ந்து கொண்டு ஹாங்காங் அரசு என்னை நாடு கடத்தாது என்று எதிர்பார்ப்பதுதான். மனித உரிமைகளை மதிக்கும் ஒரு நாட்டில் புகலிடம் கோருவதுதான் எனது விருப்பம். இதை பெருமளவு கடைப்பிடிக்கும் நாடு ஐஸ்லாந்து. இணைய சுதந்திரம் பற்றிய விவகாரத்தில் அவர்கள் மக்களுக்காக நின்றார்கள். என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எனக்கு எந்த திட்டமும் இல்லை.”

“அவர்கள் ஒரு இன்டர்போல் அறிவிப்பை வெளியிடலாம். ஆனால், அமெரிக்க சட்டங்களுக்கு வெளியில் நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். இது முழுக்க முழுக்க அரசியல் தொடர்பானது என்பது தெளிவாகும் என்று நினைக்கிறேன்.”

கேள்வி :  நீங்கள் ஒருவேளை சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில் :  “சிறைக்குப் போகும் சாத்தியத்தை கருத்தில் கொள்ளாமல் நான் இதை செய்திருக்க முடியாது. உலகின் மிக சக்தி வாய்ந்த உளவுத் துறைக்கு எதிராக நிற்க முடிவு செய்த பிறகு இந்த அபாயத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்னை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் என்றாவது ஒரு நாள் அதை செய்து விடுவார்கள்.”

கேள்வி :  முதல் வெளியீட்டுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

பதில் :  “இது தொடர்பான ஆவேசமான கோப உணர்வுகள் நியாயமானவை என்று நினைக்கிறேன். எனக்கு என்ன நடந்தாலும் சரி, அமெரிக்காவுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை அவை எனக்கு தந்திருக்கின்றன. என் வீட்டை நான் மறுபடியும் பார்க்க முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதைத்தான் நான் விரும்புகிறேன்.”

ஸ்னோடனின் நேர்காணல் வீடியோ:


__________________________
– தமிழாக்கம்: அப்துல்
__________________________

அரசுப் பள்ளியில் வசதிகள் கோரி விவசாயிகள் போராட்டம் !

3

னியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற அடிப்படையில் பொதுத்துறைகள் அனைத்தும் தனியார் வசம் ஒப்படைத்து வருகின்ற சூழ்நிலையில், அதன் நெருக்கடியின் காரணமாக பல்வேறு தரப்பட்ட மக்களும் போராடிவரும் நிலையில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக தொடர்ந்து மக்களிடம் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் உழைக்கும் மக்களுக்கு சேவை செய்பவர்கள் அல்ல என பிரச்சாரம் செய்துவரும் வேளையில், “ஒவ்வொரு கிராமத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளை கட்டுவோம்” “அடிப்படை வசதிகளை பெறுவது முதல் விலை நிர்ணயிக்கும் உரிமை வரை தீர்மானிக்கும் அதிகாரத்தை எட்டுவோம்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருவெண்ணெய் நல்லூர் வட்டாரம் முழுக்க பிரச்சாரம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக

1. திருவெண்ணெய் நல்லூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் செயல்படுகின்ற ஆரம்ப பள்ளிகளை அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட பள்ளிகளாக மாற்றுவோம்.

2. இருவேல்பட்டு கிராமத்தில் செயல்படுகின்ற மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் சேவை செய்கின்ற அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக மாற்றுவோம்.

3. விவசாயத்திற்கும், வீட்டு உபயோகத்திற்கும் தடையற்ற மின்சாரத்தை தர நிர்ப்பந்திப்போம்.

4. ஊரக வேலை வாய்ப்பை நமது வட்டாரத்தின் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் மாற்றுவோம்.

5. பெண்ணையாற்றில் நடக்கும் தண்ணீர் மற்றும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம்.

என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் முதல் கட்டமாக அரசுப்பள்ளியை ஊக்குவிக்கும் வகையில் வட்டாரத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமத் தொடக்கப்பள்ளிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பொய்கை அரசூர் கிராமத்தில் செயல்படுகின்ற தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை, குடிநீர் இல்லை, கழிப்பறை இல்லை, ஐந்து வகுப்புக்கும் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் இருந்ததை கண்டறிந்து 10.06.2013 திங்களன்று விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக பள்ளி தொடங்கும் நாள் அன்றே முற்றுகை இடுவது என முடிவு செய்து அக்கிராமம் முழுவதும் ஒரு வீடு விடாமல் பள்ளி நிலையை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நமது தோழர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து ‘அடிப்படை வசதிகள் ஏதுமற்ற பள்ளிக்கூடத்தை முற்றுகை இடுவோம்’ என்ற தலைப்பில் செங்கொடி மற்றும் முழக்க அட்டைகளோடு, கோரிக்கை அடங்கிய பானரை பிடித்துகொண்டு பள்ளியை நோக்கி ஊர்வலமாக முழக்கமிட்டுக் கொண்டு, பறை ஓசையுடன் சென்று முற்றுகை இட்டோம். பள்ளிக்குள் நுழைய முயன்ற ஆசிரியர்களை பெற்றோர்கள், குழந்தைகள், ஊர்மக்கள் நமது தோழர்களோடு இணைந்து, தடுத்து நிறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அப்பொழுது ஆசிரியர்கள் ‘எங்களை பள்ளியை நடத்த விடுங்கள்’ என கெஞ்சினர். நமது தோழர்களோ சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வரட்டும் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என விவாதித்து கொண்டு இருக்கும்போதே எப்படியோ மோப்பம் பிடித்துகொண்ட காவல்துறையினர் வந்தனர். அவர்கள் நம் தோழர்களிடம் ‘ஏன் போராட்டம் நடத்தப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை, அப்படி தெரிவித்திருந்தால் கோரிக்கைகள் நிறைவேற நாங்களே அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்போம்’ என நைச்சியமாக பேசத்தொடங்கினர்.

அதை புரிந்து கொண்ட, பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நமது தோழர், ‘கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பள்ளி இப்படி சீரழிந்து கிடப்பதை ஊர் சார்பாகவும், கிராமசபை தீர்மானத்தின் மூலமாகவும் பலமுறை கொடுக்கப்பட்ட மனுக்கள் அதிகாரிகளின் குப்பைதொட்டியில் தான் நிரம்பின அதனால் எங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை’ என்று பதில் சொன்னதும் உடனே கோபம் கொண்ட காவல் ஆய்வாளர், ‘விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் கலவரம் காரணமாக போடப்பட்ட 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது நீங்கள் இப்படி போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது’ என மிரட்ட முயற்சித்தார். ‘இந்த தடை உத்தரவு மாணவர்களின் அத்தியாவசியமான கல்வி உரிமைகளுக்கு பொருந்தாது’ என நமது தோழர்கள் வாதிட்டதும் சூடுபட்ட பூனைபோல் வாலை சுருட்டிகொண்ட போலீசு அதிகாரி மீண்டும் நமது தோழர்களிடம், ‘நீங்கள் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்’ என சட்டம் பேச ஆரம்பித்தார்.

நமது தோழர்களோ அதிகாரிகளின் மிரட்டல் பேச்சுக்கு பணிந்து போகாமல் ‘உங்கள் சட்டத்தை நீங்கள் நடைமுறை படுத்துங்கள் அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்’ என வாக்கு வாதத்தில் ஈடு பட்டுகொண்டிருக்கும்போதே, மாவட்ட கல்வி உதவி அதிகாரி வந்தார். அவரும் நமது தோழர்களிடம் ‘உங்கள் கோரிக்கையை மனுவாக கொடுங்கள் நாங்கள் எங்கள் மேல் அதிகாரிகளுக்கு கொண்டு செல்கிறோம்’ என்றார். நமது தோழர்களோ அதை மறுத்து ‘எங்களுடைய கோரிக்கையை உடனடியாக செய்து தரக்கூடிய அதிகாரம் கொண்ட குறைந்த பட்சம் ஊராட்சி ஆணையராவது வர வேண்டும் அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது’ என்று கூறி போராட்டம் தொடர்ந்தனர். சற்று நேரத்தில் ஆணையரும், விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரியும் அடித்து, பிடித்து கொண்டு வந்து சேர்ந்தனர். அதிகாரிகள் நமது தோழர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததின் பேரில் குறைந்த பட்ச திட்டம் நிறைவேறும் என்ற நிலைமையில், பள்ளியை திறக்க மக்கள் ஒப்புதலுடன் தோழர்கள் அனுமதித்தனர்.

பேச்சு வார்த்தையின் முடிவில் தண்ணீர் மற்றும் கழிப்பறையை இன்றைக்கே சரிசெய்வதென்றும், சுற்றுச்சுவரை இந்த மாத இறுதிக்குள் கட்டித் தருவதென்றும் தோழர்கள் மற்றும் ஊர்ப்பொது மக்கள் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக அறிவித்ததன் பேரில் போராட்டம் வெற்றிகரமாக ஒரு முடிவுக்கு வந்தது.

இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டதின் மூலம் மக்கள் ஆரம்பத்தில் நம்மோடு இணைய தயங்கினாலும், காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் வந்ததும் அவர்கள் நம்மோடு நடத்திய வாதங்களும் நமது தோழர்கள் அதை துணிச்சலாக எதிர்கொண்ட விதத்தையும் பார்த்த ஊர்மக்கள் முற்றுகையில் நம்மோடு கலந்து கொண்டனர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் ‘எத்தனையோ மனுக்கள், எத்தனையோ அதிகாரிகளை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து கொடுக்கப்பட்டது. அப்போததெல்லாம் நடவடிக்கை எடுக்க முன்வராத அதிகாரிகள் இந்த செவப்பு சட்ட கட்சிகாரங்க பின்னாடி மக்கள் ஒன்னு சேர்ந்ததும் அதிகாரிகள் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடிவருகிறார்கள். இனிமேலும் நம்மோட அடிப்படை தேவைகளுக்கு இதுபோன்ற போரட்டங்களை நடத்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும்’ என்று சக மக்களிடம் பேசி கொண்டிருந்தார். சில மக்கள் பேசும்போது ‘நம்ம ஊரில் அஞ்சு வருசம் சேர்மன் பதவியில் இருந்தும் அவர் செய்யமுடியாத விசயத்தை வி.வி.மு காரங்க அஞ்சு மணிநேரத்துல போராடி செய்ஞ்சு குடுத்துட்டாங்க’ என்று பரவலாக பேசினார்கள். மேலும் நமது தோழர்களும் இது போன்ற போர்க்குணமான போராட்டத்தை எடுத்து செல்வதின் மூலம்தான் மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தரமுடியும் என்ற நம்பிக்கையோடும், ஊக்கத்தோடும் கலைந்து சென்றனர்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவெண்ணெய் நல்லூர் வட்டாரம், விழுப்புரம் மாவட்டம்.
தொடர்புக்கு : 96555 87276

தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதல் !

11

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் : தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதலை முறியடிப்போம்!

ஜெயலலிதா கையில் கல்விழிப்பறைகளும் “டாஸ்மாக்” கடைகளும் திறந்து வைப்பது தவிர தமிழக முதல்வர் “புரட்சித் தலைவி அம்மா” உத்திரவில்லாத அரசு நடவடிக்கை என்பதாக ஊடகங்களில் அறிவிக்கை எதுவுமே வருவதில்லை. பேச்சிப்பாறை – மணிமுத்தாறு கால்வாயின் மதகு திறப்புக் கூட தமிழக முதல்வர் “புரட்சித் தலைவி அம்மா” உத்திரவின் பேரில் நடப்பதாகத்தான் அறிவிக்கைகள் வருவதுண்டு. ஆனால், “கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் இனித் தமது உள்தேர்வுகளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்ற உத்திரவை எனது கவனத்திற்குக் கொண்டு வராமலேயே தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் வெளியிட்டுவிட்டது. இந்த உத்திரவைத் திரும்பப்பெற நான் ஆணையிட்டுள்ளேன். ஆங்கிலம் அல்லது தமிழ் என எந்த மொழி வழியில் பயின்றாலும், மாணவர்கள் தமிழில் உள்தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அவ்வாறு உள் தேர்வுகளைத் தமிழில் எழுத அனுமதிக்குமாறு நான் அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளேன். எனவே, அனைத்து மாணவர்களும் உள்தேர்வுகளை அவரவர் விருப்பப்படி தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார், ஜெயலலிதா.

அனைத்து மாணவர்களும் உள்தேர்வுகளை மட்டுமல்ல, பொதுத்தேர்வுகளையே அவரவர் விருப்பப்படி தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம் என்பதுதான் ஏற்கெனவே இருந்த நிலை. இதை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவராமலேயே அதிகாரிகள் மாற்றிவிட்டார்களாம்; கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் நம்புவதற்கு தமிழக மக்கள் ஒன்றும் அ.தி.மு.க.காரர்களைப் போன்றவர்கள் அல்ல! எலிப்பொந்தில் வாலை விட்டுப் பார்க்கும் நரியைப் போல சில வாரங்களுக்கு முன்புதான், அனைத்து அரசுப் பள்ளிகளிலும், எல்லா மட்டங்களிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தது, ஜெயலலிதா அரசு. தமிழினவாதக் குழுக்கள் ஜெயலலிதாவின் நம்பகமான விசுவாசிகளாகிவிட்ட நிலையில், கருணாநிதியின் ஈனக் குரலிலான எதிர்ப்பு மட்டுமே கிளம்பியது. இதனால், துணிச்சலுற்ற ஜெயலலிதா அரசு தமிழர்க்கும், தமிழுக்கும் எதிரான தாக்குதலுக்கு மீண்டும் துணிந்து, ஆங்கிலவழிக் கல்வித் திணிப்புக்கான வேலைகளில் குதித்தது. ஆனால், ஜெயலலிதாவின் எத்தனிப்புகளுக்கு எதிராக கருணாநிதியின் தொடர் கண்டன அறிக்கைகளும் உளவுத்துறைத் தகவல்களும் வந்ததால், இப்போதைக்குப் பின்வாங்கியுள்ளது.

சமச்சீர்க் கல்வி ஒழிப்பு, மதமாற்றத் தடைச் சட்டம், கிடா வெட்டத் தடைச் சட்டம், சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்ட முடக்கம், ஈழ எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்பு, நரேந்திர மோடியுடன் கூட்டு என்று தனது கோரமுகத்தை அவ்வப்போது காட்டும் ஜெயலலிதா பார்ப்பன பாசிசக் கொள்கை, கோட்பாடுகளை ஒரு போதும் கைவிடமாட்டார்; ஒருபுறம், தமிழாய்வு நிறுவன முடக்கம், ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பு; மறுபுறம் நூறு கோடி ரூபாயில் தமிழ்த் தாய்க்குச் சிலை, தமிழ்ப் பூங்கா என்று தமிழ் மக்களை ஏய்க்கிறார். வெளிநாட்டு, வெளிமாநில வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும் ஆங்கிலக் கல்வியால் அவற்றை அப்படியே கவ்விக் கொள்ளலாம் என்ற நடுத்தர வர்க்க மோகத்துக்குத் தொடர்ந்து பார்ப்பன ஊடகங்கள் தீனிபோடுகின்றன. ஓரளவு மக்கள் நலன் சார்ந்த சமச்சீர்க் கல்வி முறையை ஒழிப்பதில் தோற்றுப் போன ஜெயலலிதா அரசு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியைத் திணித்துப் படிப்படியாக அதை விரிவுபடுத்தும் சதியில் இறங்கியுள்ளது. ஆரம்ப நிலையிலேயே, இச்சதியை உறுதியாக எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும்.

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________