Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 815

ஜான் தெரோய்ன்: பெண்களையும் அரசியல் பேச விடுங்கள்!-தமிழச்சி

17

உழைக்கும் மகளிர் தின சிறப்புப் பதிவு – 3

ஜான் தெரோய்ன் - 1849
ஜான் தெரோய்ன் - 1849

பிரான்சில் மன்னராட்சி நடந்த காலமது. மார்க்சியம், சோசலிசம் போன்ற மக்கள் ஆட்சிக்கான போராட்டங்களும், தொழிலாளர்களுக்கான போராட்டங்களும், பெண்ணியவாதிகளின் பெண் விடுதலைக்கான குரல்களும் வெளிப்பட ஆரம்பித்த காலகட்டங்கள்.

ஜான் தெரோய்ன்’ [Jeanne Deroin] என்னும் பெண்மணியின் போராட்டம் அசாத்தியமாய் இருந்தது. இவரே பிரான்ஸ் நாட்டின் பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த முதல் பெண்ணியவாதியுமாவார்.

1805-இல் பாரிசில், 31-டிசம்பரில் பிறந்த ‘ஜான் தெரோய்ன்’ சுமாரான வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்தவர். அக்காலத்தில் பெண்கள் அதிகமாக படிக்க வைக்கப்படவில்லை. ஓரளவு மட்டுமே கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு மத்தியில் 1831-இல் ஆசிரியர் பயிற்சியில் தேர்வு பெற்றார். இருப்பினும் சொந்தமாக தொழில் நடத்த வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்த ஜான் தெரோய்ன் சிறு வயதில் இருந்தே தையற் கலையில் ஆர்வமாய் பயின்று வந்தார். அதுவே சொந்தமாக தையற் தொழில் நடத்தவும் காரணமானது.

ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு மத்தியில் ஜான் தெரோய்ன் ஆசிரியர் படிப்பும், சுயதொழிலும், தனித்து இயங்கும் பாங்கும் அவர் வாழ்ந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜான் தெரோய்ன் அரசியல் குறித்த விவாதங்கள், பெண் விடுதலைக்கான வாதங்கள் பல ஆண்களை மட்டுமல்ல. பெண்களையும் கூட எரிச்சல் அடைய வைத்தது.

‘பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்’,

‘பெண்களுக்கு கல்வி முக்கியம்’,

‘ஒவ்வொரு பெண்ணுக்கும் சுயவருமானம் இருந்ததால் தான் ஆண் அடக்கியாள முடியாது…’

‘திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு பெயருக்கு பின்னால் எதற்காக கணவன் பெயர் இருக்க வேண்டும்..’

‘ஆண்களுக்கு இணையான கூலி உயர்வு’,

‘பெண்களும் அரசியலில் ஈடுபட வேண்டும்…’

போன்ற மாற்று கருத்துக்களை துணிச்சலாய் ஒரு பெண் பேசும் போது, ‘படித்த திமிர்’, ‘நாலு காசு சம்பாதிக்கும் தெனாவெட்டு’ என்று வழமையாக பெண்கள் மீது ஏவப்படும் ஏச்சுக்களில் இருந்தும் ஜான் தெரோய்ன் தப்பவில்லை.

எல்லா வசவுகளையும் துணிச்சலாய் எதிர்கொண்டார்.

ஜான் தெரோய்ன் 1832-இல் திருமணம் செய்து கொண்டார். “என் பெயருக்கு பின்னே என் கணவரின் பெயர் இருக்கக்கூடாது” என்று அறிவித்தார். கடைசி வரையிலும் அவர் கணவரின் பெயரை இணைக்கவே இல்லை.

3-குழந்தைகளுக்கு தாயான பின்னும் ஜான் தெரோய்ன் குடும்ப வாழ்க்கைக்குள் முடங்கிவிடவில்லை. மாக்ஸியம், சோசலிசம் தத்துவங்களை  வாசிப்பதில் கவனம் செலுத்தினார். இடதுசாரிகளின் அரசியல் கோட்பாட்டு தத்துவங்களோடு மன்னர் ஆட்சி சிந்தனைகள் ஒத்துப்போக முடியவில்லை.

அப்போது லூயி நெப்போலியனின் [Louis – Napoleon] மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது.

மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். மக்களாட்சி நடைமுறைக்கு வரவேண்டும் என்பதை இலட்சியமாய் கொண்டிருந்த ஜான் தெரோய்ன் சோசலிஸ்ட்டு கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

அந்த காலகட்டத்தில் பெண்கள் மிகவும் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். பெண்கள் குடும்பத்தில் ஆண்களின் கட்டுக்குள் இயங்க வேண்டிய நெருக்கடியை மதமும், அரசும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என்றது.

பெண்கள் குரல்’ [La Voix des femmes] என்னும் பத்திரிக்கையை ஜான் தெரோய்ன் தொடங்கினார். பெண்களுக்கான ஊடகமாக அது இருந்தது. பெண்களின் உரிமைகள் குறித்து பெண்களின் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார் ஜான் தெரோய்ன்.

அரசியல் விமரிசகராகவும், பெண்களுக்காகவும் போராடிக் கொண்டிருந்த ஜான் தெரோய்ன் தன்னுடைய 3-குழந்தைகளும் பெரியவர்களான பிறகே பொதுவாழ்க்கை களத்தில் தீவிரமாய் இயங்க ஆரம்பித்தார்.

குறிப்பாக பாரிசில் 1848-இல், மன்னராட்சிக்கு எதிராக பிப்ரவரி மாதம் 22, 23,  24, 25- தேதிகளில், ‘லூயி நெப்போலியன்’ மன்னராட்சிக்கு எதிராக நடந்த புரட்சியில் கலந்து கொண்டார். எனினும் அப்போராட்டம் கடுமையான அடக்குமுறையால் தோல்வியடைந்தது.

இந்த போராட்டத்தின் மூலமே ஜான் தெரோய்ன் பலரால் அறியப்பட்டார். மன்னாராட்சியின் கண்காணிப்புக்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கப்பட்டார். மக்களிடம் மன்னராட்சியை எதிர்க்கும் தைரியம் ஒரளவுக்கு வந்திருப்பதை அறிந்து லூயி நெப்போலியன் 1849-இல் மே மாதம் 13-ஆம் தேதியில் பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் சார்பாக போட்டியிடுபவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தார்.

ஜான் தெரோய்ன் பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாக மனு கொடுத்தார். அம்மனு நிராகரிக்கப்பட்டது. காரணம், அன்றைய அரசியல் சூழலில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. அனுமதியும் கிடையாது. ஐரோப்பாவில் மன்னராட்சி காலத்தில் பெண்களுக்கு ஓட்டுரிமையும் மறுக்கப்பட்டிருந்தது.

முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வந்த நாடு சுவீடன். பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுப்பதற்கான பரிசீலனை செய்ய எடுத்துக் கொண்ட காலங்கள் 53-வருடங்களின் இழுபறிக்கு பிறகே! [1718 – 1771]

இருந்தும் சுவீடனில் பெண்களின் ஓட்டுக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது 1921-இல்தான்.

ஆனால், நியூசிலாந்து நாட்டில் 1893-இல் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை உண்டு என்று உருவாக்கிய சட்டத்தை 1919-லேயே செயல் திட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

இதில் ஜான் தேலோய்ன் வாழ்ந்த காலங்கள் 1805 – 1894

பெண்களுக்கு ஓட்டுரிமை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிறகும் குடும்பத்தினரின் அடக்குமுறைக்கு பயந்து பெரும்பான்மையான பெண்கள் ஓட்டுப் போட தயங்கிய காலத்தில்,

ஒரு பெண் பாராளுமன்றத் தேர்தலில் நிற்கிறார் என்றால், அதுவும் மன்னராட்சிக்கு எதிரானவர் என்றால் எவ்வளவு எதிர்ப்புகளை ஜான் தேலோய்ன் சந்தித்திருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்.

பெண்களே கடுமையாக எதிர்த்தும், விமரிசித்தும் பேசி இருக்கிறார்கள். அதுவும் சாதாரண பெண்களும் இல்லை. இலக்கியத்துறையில் ஜான் தேலோய்ன் சமகால பெண்ணிய எழுத்தாளர்களான George Sand, Marie d’agoult போன்றவர்கள் ஜான் தேலோய்ன் தேர்தலில் நிற்பதையும், அவருடைய முற்போக்கு சிந்தனைகளையும் கடுமையான விமரிசித்தார்கள்.

“பெண்கள் ஏன் அரசியலில் ஈடுபடக் கூடாது? ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது,  எனக்கு உரிமை இருக்கிறது” என்று கலகக் குரல் எழுப்பினார் ஜான் தேலோய்ன்.

பிரான்ஸ் அரசாங்கம் மக்களை சாமாதானப்படுத்தும் நோக்கத்தில் விட்டுக் கொடுத்தது.

ஜான் தேலோய்ன் பாராளுமன்ற தேர்தலில் நின்று போட்டியிட்டார். 15- ஓட்டுக்கள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இருப்பினும் பிரான்ஸ் நாட்டில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் தகுதியை பெற்றார்.

எப்போதும் சக பெண்ணயவாதிகளை கடும் கண்டனம் செய்வார் ஜான் தேலோய்ன். “எழுத்துத்துறையில் அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளாமல் மக்களின் பிரச்சனைகளை பேசாமல் காவியமும், கவிதையும் கிழித்துக் கொண்டிருப்பதில் என்ன விடுதலையை காணப் போகிறீர்கள்? வாருங்கள் களத்திற்கு, போராட்டங்களில் ஈடுபட வாருங்கள். நம் பெண்களுக்காக நாம் தான் போராட வேண்டும்” என்று சக இலக்கிய பெண்ணியவாதிகளுக்கு அடிக்கடி வேண்டுகோள் வைப்பார் ஜான் தேலோய்ன்.

இலக்கிய பெண்ணியவாதிகளோ, ‘ஜான் தேலோய்ன் முற்போக்கு பெண்ணியம் கேடானது என்பதால் நாங்கள் விலகியே இருக்கிறோம்’ என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

ஜான் தேலோய்ன் நடத்திய ‘பெண்களின் குரல்’ பத்திரிகையில் படைப்புகளை அனுப்ப இலக்கிய பெண்கள் தயங்குவார்கள். சில பெண்களின் எழுத்துக்களோடு நடத்திக் கொண்டிருந்த அந்த ஊடகமும் அரசு அழுத்தத்தின் காரணமாக முடக்கப்பட்டது.

1851-இல் மீண்டும் இடதுசாரிகள் உதவியோடு “பிரான்ஸ் மன்னராட்சியை கலைக்க வேண்டும், மக்களாட்சி வர வேண்டும்” என்று போராட்டத்தை தோழர்களுடன்  ஜான் தேலோய்ன் தொடந்தார். இந்த போராட்டத்தில் மன்னராட்சியை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்தது. லூயி நெப்போலியன், “ஜான் தேலோய்ன் தேசத்துரோகி” என்று அறிவித்து அவரை நாடு கடத்தினான்.

இலண்டனில் அடைக்கலமான ஜான் தேலோய்ன் வறுமையில் தவித்தார். அங்கும் அரசியல் கண்காணிப்பாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளானார். வேலை தேடிய இடங்களில் அரசியல் காரணங்கள் வேலை கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டார்.

மிக வறிய நிலையில் வாடிய ஜான் தேலோய்ன் 1894-இல் 2-ஏப்ரலில் மரணம் அடைந்தார்.

நாடு கடத்தப்பட்ட போதும் ஜான் தேலோய்ன் பெண்களுக்கு எப்போதும் அறிவுறுத்தும் வார்த்தைகள்….

“பெண்களே பொது வாழ்க்கைக்கு வாருங்கள்,

சமூகத்தில் நமக்கான பங்களிப்புகள் ஆண்களுக்கு நிகரானது,

பெண்களே! நீங்களும் அரசியல் குறித்து பேசுங்கள்.

அதற்கான அறிவு நமக்கும் உண்டு…”

இதோ 2011-இல் மார்ச் 08- உலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருட பெண்கள் தினத்திற்கு ஓர் சிறப்பும் உண்டு.

நூறாவது பெண்கள் தினமாம் இன்று!

இன்றைய பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?

உலகில் மற்ற பாகங்களில் இருக்கும் பெண்களின் நிலையை குறித்து வேண்டாம். பிரான்சில் இருக்கும் பெண்களை குறித்து பார்ப்போம்…

பிரான்சில் மொத்த மக்கள் தொகை: 6,50,26,885.

2005- இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி பெண்கள் தொகை: 31.385 மில்லியன்.

அரசியலில் உள்ள பெண்கள் 18.5%

வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 75.000

ஆண்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தின் சமபங்கு பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் இன்றளவும் செயல்பாட்டில் ஆண்களை விட குறைந்த விதமே ஊதியம் வழங்கப்படுகிறது.

பிரான்ஸ் பெண்களுக்கு தீர்வு கிடைத்து விட்டதா?

சற்று இந்தியாவில் பெண்களின் நிலையை நினைத்து பாருங்கள். ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக எத்தனை பெண்கள் போராடுகிறார்கள்? இலக்கியத்துறையில் எத்தனை பெண்கள் தொடர்ச்சியாய் பெண் விடுதலைக்காக களம் இறங்கி போராடுகிறார்கள்?

‘பெண்குறி’, ‘முலை’, ‘பாலியல் சுதந்திர உரிமை’யை தாண்டி பேசப்பட வேண்டிய பெண்கள் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றனவே? சமுகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக இவர்கள் என்ன செய்தார்கள்?

நூற்றாண்டு மகளிர் தினத்தின் பெருமையை மெச்சும் இந்திய ‘பெண்ணியவாதிகளே’, நீங்கள் என்ன செய்து கிழித்தீர்கள்?

__________________________________________________________

தமிழச்சி, பெரியார் விழிப்புணர்வு இயக்கம் – அய்ரோப்பா, பிரான்ஸ்

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

 

தாய்லாந்தின் புன்னகை அரசிகள்! – சாந்தி

99
தாய்லாந்தின் புன்னகை அரசிகள் ! - சாந்தி

உழைக்கும் மகளிர் தின சிறப்புப் பதிவு – 2

தாய்லாந்தின் புன்னகை அரசிகள் ! - சாந்தி

தாய்லாந்து நாட்டு பெண்களின் அழகும் அறிவும் உலகம் முழுதுமே அறிந்த விடயம்.. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சிகரமாகவும் , வீரமுள்ள அதே சமயத்தில் மிக்க மென்மையானவர்களாகவுமே காணப்படுவார்கள்… கவர்ச்சியான பெண்கள் மட்டுமல்ல , அதீத பெண்மைத்தனமும் நிறைந்தவர்கள்.. அதிகமான வெட்கம் எப்போதும் இருக்கும் முகத்தில்.. சின்ன  பேச்சோ , முக வாடுதலோ கூட அடுத்தவரை காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் மிக கவனமாயிருப்பார்கள்.. என் கஷ்டம் எனக்கு .. அதை நாந்தான் பார்த்துக்கொள்ளணும்.. உன்மேல் சுமத்தமாட்டேன்..  வெளிப்படுத்த கூட மாட்டேன்.. அதற்கு பதில் புன்னகைப்பேன்.. உன்னையும் புன்னகை செய்ய வைப்பேன்.. அப்படியே இந்த தொற்று ( வெட்கமும் , சிரிப்பும் )  நாடு முழுதுமே நாம் பார்க்கலாம்..

அதீத பெண்மைத்தனம்  என ஏன் சொல்லப்படுகிறார்கள் என்றால் மிக மென்மையான , மிருதுவான தோலும், மிக அழகிய , பட்டுப்போன்ற கருங்கூந்தலும் உடையவர்களாம்..ஆனால் பெண்மைக்கு இலக்கணமாய் இவற்றை சொன்னாலும் , வீரத்தில் எள்ளளவும் குறைந்தவர்களில்லை.. வீரம்  காட்டும் விதமே வித்யாசமாயும்.. கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்களாகவும் இருக்கிறார்கள்..

தான் எதிர்பார்க்கும் மரியாதையை அடுத்தவருக்கு முந்திக்கொண்டு தருவதாலேயேயும் , முகம் சுழிக்க வேண்டிய விசயத்தையும் , அன்போடு எடுத்தாழும் வித்தையையும்  உலகம் முழுதும்  திரும்பிப்பார்க்க செய்த விசேட குணங்கள்.. எச்சூழலிலும் அனுசரித்தும் போகக்கூடியவர்கள்.. அதீத பொறுமையுமுண்டு.. இவையெல்லாவற்றும் அடிப்படை அமைத்ததில்  புத்த மதக் கொள்கைக்கும் பெரும் பங்குண்டு..

அவர்களது நளினங்களை  அவர்களின் நடன அசைவுகளிலேயும் காணலாம்..அறுபது வயதிலும் 20 வயதினரைப்போல துடிப்போடு இருக்க ஆசைப்படுவார்கள்.. சோம்பி இருந்து பார்க்க முடியாது..

சரி இப்போது முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.. அவர்கள் குடும்ப அமைப்பு, பெண்ணுரிமை பற்றி..

____________________________________________

பெண்ணுரிமைக்கான அனுமதி 2004-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக வந்தாலும் , ஏற்கனவே பெண்கள் பங்கு சிறப்பாகவே இருந்து வந்துள்ளதால் அது குறித்து யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டால், இல்லறம்,  குழந்தை வளர்ப்பில் மிகுந்த ஆர்வத்தோடும், பெருமையோடும் ஈடுபடுவார்கள்..கணவருக்கு மிக உறுதுணையாகவும் இருப்பார்கள்..

இங்கே பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்தே ஆண் மணமுடிக்கணும்.. அனேகர் படித்து நல்ல பெரிய வேலைகளுக்கு செலவதால் 3 மாதத்தில் குழந்தையை பெற்றோரிடமோ, பாதுகாப்பு  இல்லங்களிலோ விட்டுவிட்டு  வேலைக்கு செல்கின்றனர்.. குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த ஒழுக்கத்தோடும் , நன்னெறிகளோடும், மரியாதையோடும் சிறார்கள் வளர்க்கப்படுகின்றனர்..

ஒரு பொருளை வாங்குமுன்பே இருகரம் கூப்பி , ஒரு கால் முட்டியை மடக்கி (தாழ்ச்சியாக) நன்றி என சொல்லிவிட்டே வாங்குவார்கள்..

ஒரு முக்கியமான நற்பண்பு கருணை.. தன்னைவிட தன் குடும்பத்தார்க்கும் , உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்..அதுவே ஒரு இன்பமயமான அன்புச்சூழலை உருவாக்கிவிடும்.. ஒருவருக்கொருவர் அன்போடு கிண்டலடித்துக் கொண்டும் , பகிர்ந்து கொண்டும்..

வாழ்க்கையை எளிதாக அதன் போக்கில் வாழ கற்றுக் கொண்டவர்கள்..இதனால் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாமல்  மனது எப்பவும் லேசாக இருக்கிறது அவர்களுக்கு ..

கீழ் தட்டு பெண்கள் உணவுக் கடை , சிகை அலங்காரம், மற்ற பொருட்கள்  விற்கும் கடைகளை  வைத்து பிழைப்பது எளிதாக உள்ளது..ஆண்கள் பலர் குடி மற்றும் பல பழக்கங்களுக்கு ஆளாவதால் குழந்தை வளர்க்கும் பொறுப்பு குறித்து நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.. விவாகரத்தானாலும் தனியே இருந்து துணிவா வாழக்கூடிய சமூக அமைப்பும் சிறப்பாகவே இருக்கிறது..

அனேக குடும்பங்களில் பெண்களே தலைமை தாங்குகின்றார்கள்.. அவர்கள் செய்ய முடியாத வேலை எதுவுமில்லை என்பதுபோல ஆணுக்கு இணையாக மிகப்பெரிய கண்டெய்னர் ஓட்டும் பெண்களும்,  குத்துச்சண்டை வீராங்கனைகளும், மார்க்கெட்டுகளில் மிகப்பெரிய மூடைகளை அலேக்காக துக்கி வேலை செய்யும் பெண்களையும் சாதாரணமாகக் காணலாம்.. கணவன் விட்டு சென்றானே என உட்கார்ந்து வருந்துவதெல்லாம் இல்லை.. பெண்கள் காவல்துறையிலும் ,  அரசியலிலும் , ராணுவத்திலும் கூட பங்கெடுக்கிறார்கள்..

நம்ம நாட்டு காந்தி சொன்னது இங்கேதான் நான் பார்க்கிறேன்.. எந்த நேரத்திலும் நள்ளிரவிலும் ஒரு பெண் தனியாக வேலைக்கு சென்று வர முடிகிறது.. பெண்களை மதிக்கிறார்கள்.. தாய்லாந்து என்றாலே பாலியல் தொழில் என அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது குறித்து மிக வேதனை அடைகிறார்கள் கடினமாய் உழைக்கும் மற்ற பெண்மணிகள்.. அத்தகைய தொழிலில் ஈடுபடுவது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள்.. இருப்பினும் இவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டும் இருக்கிறது.. சட்டப்படி அங்கீகரிக்கப்படாத தொழில் தான் இன்னமும்..

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் என்றாலும் கத்தி கோபப்பட்டு பொருட்களை உடைப்பதெல்லாம் மிக அநாகரீகமான செயல்.. கோபப்பட்டு பார்ப்பது அரிது.. கோபம் என்றால் அமைதியாக தவிர்த்திடுவார்கள் அச்சூழலையே.. ஏமாற்றங்களை ஏற்க பழகியதால்  மனவளர்ச்சியற்ற குழந்தைகளையும் பொறுமையாக மிகுந்த அன்போடு சமூகமே  ஊக்கத்தோடு வளர்க்கின்றது.. அதுமட்டுமல்ல திருநங்கைகளுக்கும் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்து தந்து அவர்களை தலை நிமிரச்செய்துள்ளது.. அவர்கள் மக்களோடு மக்களாக.. யாரும் வித்யாசமாய் பார்ப்பது கூட இல்லை..இது நாம் கற்கவேண்டிய முக்கியமானது..

ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போதும் அந்த சத்தம் கூட அடுத்தவருக்கு தொந்தரவாய் இருந்திடக்கூடாதென்பதற்காக ரகசியம் பேசுவது போன்ற ஒலியில் பேசுவதை கேட்பது ஆச்சரியமாக இருக்கும்.. பேருந்திலோ,போக்குவரத்து நெரிசலிலோ , வங்கியிலோ அதிக நேரம் காத்திருக்கணும் என்றாலும் , அமைதியாக முணுமுணுக்காமல் பொறுமையா காத்திருப்பார்கள்.. அதிலும் குழந்தைகள் , கர்ப்பிணி, வயோதிகருக்கு முன்னுரிமை கொடுக்கவும் உதவவும் முன்வருவார்கள்.. இதற்காக சிறு வயதிலேயே பழக்கப்படுத்தப்படுகிறார்கள்..

மேலும் சுத்தத்துக்கு முன்னுரிமை தருவார்கள்.. பொருட்களை சிறப்பாக அடுக்கவும் இடங்களை  அழகாக அலங்கரிக்கவும் தெரிந்தவர்கள்..எந்த வேலை செய்தாலும் அதிலொரு அழகு மிளிரும்.. முழுமை இருக்கும்.. மொத்தத்தில் அமைதி விரும்புவதால் தானும் அமைதியான சூழலை உருவாக்க பங்கெடுக்கணும் என்பதில் ஆரம்பிக்குது அந்த பொதுநலம் , ஒருவருக்கொருவர் உதவுவது..

ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் அருமையா இருக்கும்.. சாதம் மட்டும் தனித்தனியே வைத்துக்கொண்டு கூட்டு குழம்புகளை முதலில் அடுத்தவருக்கு ( அருகிலிருப்பவருக்கு )  பறிமாறிவிட்டே அவர்கள் உண்ணுவார்கள்..இவை தாண்டி இன்னும் சில கலாச்சார பழக்கவழக்கம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது..  அவை என்னவென்று பார்ப்போம்.

பெண் புகைபிடிப்பதோ குடிப்பதோ மிக அவமானமாக கருதும் அதே நேரத்தில் ஆணுக்கு அனுமதிக்கப்படுகிறது. விவாகரத்து கூட பெண்கள் முன்பெல்லாம் சமர்ப்பிக்க முடியாது.. கணவன் மீது உறுதியான குற்றச்சாட்டும், அவன் தன் சம்பாத்யத்தை வேறோருவருக்கு தருவதாக நிரூபணம் ஆனால் மட்டுமே.. ஆனால் ஒரு ஆணால் எளிதாக விவாகரத்து பெற முடியுதாம்.. இப்போது மாற்றம் கொண்டுவர முயல்கிறார்கள்..

” ஆண் யானையின் முன்னங்கால். பெண் பின்னங்கால் ” என ஒரு பழமொழி சொல்கிறார்கள் இப்படி அர்த்தம் வரும்படி.. அதாவது ஆணே முதன்மை என .. ஆனால் நிதர்சனத்தில் பெண்ணே நிர்வகிப்பதாய் பார்க்க முடிகிறது..கொஞ்சம் வசதியான வீட்டுப்பெண்கள் திருமணத்தை கூட ஒரு சிறை என்ற நோக்கில் பார்ப்பதால் அவர்கள் திருமணத்தை விரும்புவதில்லை.. பணம் இருக்கையில் கணவன் எதற்கு என்ற மனப்பான்மை பெண்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது .. அது பெண்ணுக்கு லாபமாக இருக்குதோ இல்லையோ, ஆணுக்கும் சமூகத்துக்கும் ஒரு ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது.. அதனால் திருமணம், குழந்தை பெறுவதையும் அரசு ஊக்குவிக்கின்றது..

கண்ணியமாக உடை உடுத்த பள்ளி கல்லூரிகளில் வலியுறுத்தப்படுகிறார்கள்..அனேக தாய் பெண்கள் வெளி நாடுகளுக்கு படிக்கவும் வேலைக்கு செல்லவும் தயங்குவதில்லை.. ஆக அங்கே இருந்து திரும்பினாலும் சொந்த நாட்டில் பாரம்பரிய கலாச்சாரத்தை விட்டுத் தருவதில்லை.. சீன வம்சா வழியினர் பலர் தாய்க்காரர் ஆனதாலோ என்னமோ , முதல் குழந்தை ஆணாக இருந்தால் நல்லது என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.. ஆனாலும் பெண் குழந்தை பிறந்தால் வருந்துவதெல்லாம் இல்லை.. கொண்டாடப்படுகிறார்கள்..

அனேக பெண்கள் படித்து நல்ல வேலையிலிருந்தாலும், தம் நாடு மேற்கத்திய கலாச்சாரத்தால் சீரழிக்கப்படுகிறது என்பதில் வருத்தப்படுகிறார்கள்..

_________________________________________________

தாய்லாந்து பெண்மணி பென்னி ( வயது 38 ) சொல்கிறார் ,

” எனக்கு 23 வயதாகும் போது  ஆண் தோழன் கிடைத்தார். பின் 3 வருடம் காதலித்தோம். அப்பதான் என் அம்மாவுக்கு கான்சர் நோய் தாக்கியது தெரிந்தது.. சிகிச்சை எடுத்து எல்லாவற்றையும் நான் கவனிக்கவேண்டிய சூழல்.. நான் மூத்த பெண்.. இரண்டு தங்கை , ஒரு தம்பி.. அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்..அப்பா கடை வைத்திருக்கார்.. வருமானத்துக்கு குறைவில்லை என்றாலும் மருத்துவ செலவு , படிப்பு செலவுக்கு சரியா இருந்தது.. நான் உதவ வேண்டிய கட்டாயம்.. அந்த நேரம் என் காதலர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினார்.. என் நிலைமையில் அம்மாவுக்கு சரியாகும் வரை திருமணம் பற்றி எண்ணி பார்க்கவே  முடியவில்லை.. பாவம் காத்திருந்து விட்டு வேறொரு பெண்ணை மணமுடித்தார்.. இப்பவும் எனக்கு நல்ல நண்பன் அவன்..”.

அதன் பின் அவர் அம்மா மரணமடைந்ததும் , அப்பா இரண்டாம்  தரமாக ஒரு ஏழைப்பெண்ணை ( அவள் குழந்தையோடு ) திருமணம் செய்து கொண்டாராம்.. அந்த சிற்றன்னை இவளிடம் மிக அன்பாக இருப்பாராம்.. இவர் இங்கே தலைநகரில் வேலை பார்த்துவிட்டு வார இறுதியில் அப்பா வீட்டுக்கு செல்லும்போது அனைத்து துணிகளையும் துவைத்து தேய்த்து , சுவையான உணவு சமைத்து தந்து மகிழ்ச்சியளிப்பாராம்..

” உன் அப்பா இரண்டாவது திருமணம் செய்தது குறித்து  வருத்தமில்லையா ?. ” என்றால் , சிரித்துக்கொண்டே, வெட்கப்பட்டுக் கொண்டும், என் காதருகே வந்து “உனக்கு தெரியுமா , ஆண்கள் பெண் துணை இல்லாமல் வாழவே முடியாது.. ஹஹ..:) “.

ஆக ஆண் என்றால் அவனுக்கு பெண்ணின் தேவை அதிகம் என்பதை புரிந்தே வைத்துள்ளார்கள் இவர்கள் கலாச்சாரத்தில்.. சின்ன துணைவி வைத்திருப்பது அந்த காலந்தொட்டே பழக்கமாய் இருந்து வருகிறது பணக்காரர்கள் மத்தியில்.. அனேகமாக இந்த இரண்டாம் மனைவி ஏழை வீட்டு பெண்ணாக இருக்கிறார்.. சமூக அந்தஸ்து கிடையாது இவருக்கு..ஆனல் அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.. இப்போது படித்து முன்னேறுவதால் , பெண் கிடைப்பதே மிக அரிதாக உள்ளதாம்.. மேலும் மேல்நாட்டுக்காரர்கள் விரும்பி தாய் பெண்களை மணமுடிக்கின்றனர்.. அதனால் உள்ளூரில் பெண் தட்டுப்பாடு…

தன்னையும் , குடும்பத்தையும் , குழந்தைகளையும் , மிக நேர்த்தியாக , மிகுந்த அன்போடு கவனித்துக்கொள்வதால் பல வெளிநாட்டினர் தாய்லாந்து வந்து குடியேறுகின்றனர்.. அதனால் உள்நாட்டு ஆண்களுக்கு மணமுடிக்கவே பெண்கள் கிடைப்பது அரிதாகி வருவது கவலைக்குரிய விஷயம்..

ஏற்கனவே மணமகன் வரதட்சணை கொடுக்கணும், இப்ப பெண் வேறு கிடைக்காததால் பெண்ணின் மதிப்பை யோசித்துப்பாருங்கள்..

ஆக பெண் என்றால் செல்வம்/வருமானம்  என்றளவில் பெண்ணின் மதிப்பு கூடியுள்ளது.. பாலியல் தொழில் செய்வதற்கென்றே தாய்லாந்தின் வடகிழகு மாகாணத்திலிருந்து ( ஈசான் ) மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து வருகின்றனர்..அங்கு விவசாயமே முக்கிய தொழில்.. வறட்சி ஏற்பட்டதால் இப்படியாம்.. ஆக அப்பகுதியில் இது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.  பாலியல்  தொழில் செய்வதாக கூறப்படும் பெண்களுக்கு அனேகமாக துணையாக ஒரு ஆண் இருப்பார்.. நிமிர்ந்த நடையோடு எவ்வித அச்சமோ, கூச்சமோ இல்லாமல் இதுவும் ஒரு வேலைதான் என்பதுபோல் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள். திருநங்கைகளும்.. அவர்கள் ஒரு மூன்றாவது பாலினமாக ஏற்கப்பட்டு  பல வருடங்களாகிவிட்டது.. இப்போதும் பல சேவை நிறுவனங்களும் , அரசும் , அவர்களுக்கு லட்சக்கணக்கில் செலவாகும்  பாலின மாற்று சிகிச்சைக்கு இலவசமாகவே  ஏற்பாடு செய்கிறார்கள்.

இன்னொரு முக்கிய செய்தி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த சீக்கியர்கள் (இந்திய வம்சாவழி) , இங்கே வந்து தாய்க்காரர்களாகவே மாறிவிட்டனர்.. சீக்கிய மதம் வளர்க்கவோ, பள்ளி நடத்தவோ , கலாச்சாரத்தை ஏற்பதிலோ , அவர்களுக்கு எல்லா துறையிலேயும் உரிமை கிடைத்திருப்பதிலேயே  தெரியும் இவர்களின் விசாலமான மனது.சீக்கிய கம்பெனிகள் பல இங்கே மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.. தாய்லாந்தின் முதல் பைலட் இந்திய வம்சாவழியில் வந்த தாய் பெண் நிதிஷா.. ( அவர் படம் இணைக்கப்ப்ட்டுள்ளது ) ..ஆக பெண் என்ன துறையில் முன்னேறணும் என்றாலும் இங்கே ஏதும் தடையில்லை..வானமே எல்லை அவளுக்கு..

ஈவ் டீஸிங் போன்ற எவ்வித பிரச்னைகளுமில்லை இங்கே.. ஆனாலும் சில கலாச்சார சீரழிவுகள் இருப்பதாக வருத்தப்படுகிறார் 45 வயது கூன். தங்.. (கூன் என்பது பெண்ணுக்கு முன் போடப்படும் அடைமொழி மரியாதைக்காக.. ஃபி என பெரியவர்களையும்  துணையையும் அழைப்பார்கள்.. ஃபி என்பது அண்ணா, அக்கா, எனவும் பொருள்படும்..அதே போல ஆண் பெண்ணிடம் பேசும்போழுது  “காப்” என முடிக்கணும் ஒவ்வொரு பேச்சையும்.. பெண் ஆணிடம் பேசும்போது “கா” என முடிக்கணும்.. இவை மரியாதை நிமித்தம் வலியுறுத்தப்படுகிறது.. “கா, காப்” என முடிக்கும்போதே புன்னகையோடு முடிக்கணும்.. )

நான் எண்ணிப்பார்க்கிறேன் நம் நாட்டிலும் இப்படி பாலியல் தொழிலாளிகளும் (பாலியல் தொழிலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்ற பட்சத்தில்), திருநங்கைகளும்,  தலை நிமிர்ந்து நடக்கும் நாள் விரைவில் வருமா?..  தாய்லாந்து பெண்கள் கணவர் தன்னைவிட முக்கியத்துவம் வாய்ந்தவர்தான் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.. ஆணுக்கு அதற்கான சக்தி இருக்கு என நம்புகின்றனர்.. பலர் அடங்கி போவதை தவறில்லை என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.. மேலும் ஆயுசுக்கும் தாங்கள் தங்கள் உடலழகை பேணி பாதுகாத்தால் தன் கணவர் தன்னை விட்டு போகமாட்டார் என நம்புகின்றனர்.. (இது கொஞ்சம் உவப்பில்லாத செய்தி எனினும்..பெண் போகப்பொருளல்லவே.

அதனால் எல்லோருமே மெலிவாக, கட்டுக்கோப்பாக இருக்க நல்ல ஆரோக்கியமான , அளவான உணவும் , உடற்பயிற்சியும்  தினமும் கடைபிடிக்கின்றனர்.. அரசும் இதுக்கு ஆங்காங்கே பூங்காக்களிலும் , பொது இடங்களிலும் உடற்பயிற்சியான ஏரோபிக்ஸ் இலவசமாக சொல்லித்தர ஏற்பாடு செய்துள்ளது அதிசயமாயிருக்கும்..

________________________________________________

நான் சந்தித்த கூன். ” பிரிம் “ என்ற பெண் வீட்டு வேலை செய்கிறார்.. காலையில் கிளம்பி அவர் செல்கையில் ஏதோ அலுவலுக்கு செல்வது  போலவே மிக சுத்தமாக அழகான உடுப்பு  போட்டுக்கொண்டு  , தலையை அழகாக சீவி , க்ளிப் போட்டுக்கொண்டு, அளவோடு  முகப்பூச்சும், லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டு ஆர்வமாக செல்கிறார்..போகும் வழியிலேயே வேலைக்கு செல்லும் அனைவரும் காலை உணவை வாங்கிக் கொள்கின்றனர்.. (உணவுகள் இங்கே மிக சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றன)…

அந்த உணவு விற்பவர்களும் அனேகர் பெண்களே.. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டே உணவும் தரப்படுகிறது..  பின் அந்த உணவை எடுத்துக்கொண்டு வேலை செய்யும் வீட்டில் வேலை முடிந்ததும் உண்கிறார். பல வீடுகளில் அவர்கள் மேசையிலேயே அமர்ந்து உண்ணவும் அனுமதிக்கப்படுகின்றார்கள்..”ப்ரிம்” கணவர் டாக்சி ஓட்டுனர்.. இவர்கள் இருவருமாய் சம்பாதித்து  கிராமத்தில் இருக்கும் அவர்கள் குழந்தைக்கும் , பெற்றோருக்கும் பணம் அனுப்புகின்றனர்..சில ஆண்கள் குடித்து பணத்தை செல்வழிப்பதில் மனைவியருக்கு வருத்தமுண்டு..  சில குடும்பங்கள் குடியால் , சூதாட்டத்தால் நிம்மதி இழப்பதாக சொல்கிறார்கள்.. குடித்துவிட்டு அடிக்கும் ஆண்கள் வெகு சிலரே.. சில பெண்கள் துணிவாக எதிர்த்து விடுகின்றனர்.. அப்படி எதிர்க்கும் பட்சத்தில் பொதுமக்களும் இணைந்து கொள்வார்களாம்..

ஆண்கள் அனேக வீடுகளில் சமைக்கின்றனர்  விரும்பியே.. வீட்டு வேலை செய்வதையும் இழிவாக நினைப்பதில்லை.. அலுவல் செல்லும் மனைவியருக்கு வீட்டிலிருந்து உதவும் கணவருண்டு.. குழந்தை வளர்ப்பையும் கூட அற்புதமாக , செய்யும் கணவருண்டு.. சில பெண்கள் வெளிநாடு சென்று வேலை செய்து பணம் அனுப்ப , கணவர் குழந்தைகளை , பெற்றோர்களை கவனித்துக் கொள்வதுண்டு.. சில உணவு கடைகள் நடத்தும் பெண்மணிக்கு கூட இருந்து உப வேலைகளை கணவரும் , பசங்களுமே செய்கின்றனர்.. இதை பல இடங்களில் வெகு சர்வ சாதாரணமாய் காணலாம்..

இதேபோல கூன்.” பிபூன்சாக் “ என்பவர் சொல்கிறார் .. தலைநகர் பாங்காக்கில் மட்டும் 60% பெண்கள் தனியே தங்கியிருந்த்தே வேலைக்கு செல்கின்றனர்.. தானும் அப்படி 5 வருடம் தங்கியிருந்ததாகவும் , தனக்கும் , மற்ற பெண்களுக்கும் எந்த ஆணாலும் பிரச்னை ஏற்பட்டதேயில்லை.. மாறாக நேரம் காலம் பார்க்காமல் உதவவே தயாராக இருப்பார்கள் எனவும் சொல்கின்றார்.. ஆம அதை கண்கூடாக பார்க்கலாம்..

இங்கே பல ஆண்கள் “பைக்மேன் , அல்லது மோட்டார்சைக்கிள் மேன்” (மோட்டார்பைக் டாக்சி) என அழைக்கப்படுகிறார்கள்.. அவர்களே  வேலைக்கு செல்பவர்களுக்கு சில நேரம் கடவுள் போல.. தலைநகரின் போக்குவரத்து நெரிசல் உலக பிரசித்தி.. அதில் இந்த பைக்மேன்கள் வாகனங்களுக்கிடையில் நெளிந்து , வளைந்து வெகு சாமர்த்தியமாகவும் மிக விரைவாகவும் வேலை செய்யுமிடத்துக்கு சென்று பத்திரமாக சேர்த்திடுவார்கள்..அனைவருக்கும் அடையாள அட்டையும் இருக்கிறது.. இவர்களை பல தெரு முனைகளில் பார்க்கலாம்,,பல வர்ண சட்டைகளோடு , புன்னகையோடும் காட்சியளிப்பார்கள்..ஆக பைக்கில் ஏறும்  பெண்மணிகளை தத்தம் குடும்ப உறுப்பினர்களாய் பார்க்கிறார்களே தவிர எவ்வித சபல மனப்பான்மையும் இல்லை..அனேகர் பள்ளி குழந்தைகளையும் இப்படி மிக பொறுப்போடு அழைத்து செல்வதுண்டு.. துணிந்து செல்லலாம் அவர்களை நம்பி எந்நேரமும்..

அதே போல இப்போது அவர்கள் தொழிலில் போட்டியாக பெண்களும் “பைக் வுமன்” களாக வலம் வருகிறார்கள்.. அவர்கள் நுழையாத இடமே இல்லை என்பது போல்.. அதற்கு முக்கிய காரணம் ஆண்களின் ஆதரவாகத்தானே இருக்க முடியும்..?.

பாகிஸ்தானில் தன் மாமியார் வீட்டுக்கு போகும்போது பெண்கள் அடிமை போல நடத்தப்படுவதை கண்டு மிக வேதனைப்படுகிறார் எனது ஒரு தோழி.. இந்திய தொலைக்காட்சிகளில் வரதட்சணை கொடுமைகளை பார்க்கும் போது இப்படியெல்லாம் நடக்குமா? என அதிசயப்படுகிறார்..

சட்டம் போட்டுத்தான் சம உரிமை ஏற்படுத்தவேண்டிய அவசியமில்லை. என நிரூபிக்கின்றார்கள் மெல்ல மெல்ல..பெண் முன்னேற்றத்தை தடுப்பதுமில்லை இங்கே.. புயிங்.நோக் ( புயிங் என்றால் பெண், .நோக் என்பது செல்லப்பெயர் , அவர்கள் விருப்பப்படி வைத்துக்கொள்வார்கள் . நோக் என்றால் பறவை என்ற அர்த்தம் . அவருக்கு பறவைகள் பிடிக்குமாம்.. )சொல்கிறார் , தான் சில வருடங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்துக்கொண்டே வேலையும் செய்து சம்பாதித்ததாக.. அவர்  சகோதரி அமெரிக்காவிலும் ,தோழி ஜெர்மனியிலும் இதே போல் வேலை பார்த்ததாக.. ஆனாலும் பலரும் எங்களை ஏதோ  பாலியல் தொழிலாளி போல பார்ப்பது எமக்கு மிக தர்மசங்கடத்தையும் மன வருத்தத்தையும் தந்துள்ளது .. அதனால் நான் என்னுடைய நாட்டுக்கே திரும்பி வந்துவிட்டேன்.. என் நாட்டில்தான் எனக்கு அதிக அன்பும் ,மரியாதையும் கிடைக்கிறது என  மிகப்பெருமையாக கூறுகிறார்.. அது நான் பார்த்தவரையிலும் மிக உண்மையும்..

நீங்கள் ஏங்கேயாவது ஒரு தாய் பெண்ணை சந்திக்க நேர்ந்தால் புன்னகை என்ற ஆயுதத்தோடு மட்டும் அவர் உள்ளத்தை தொட்டுப் பாருங்கள் , ஆயுசுக்கும் மறக்க மாட்டார்.. அத்தனை மென்மையான மனதுடையவர்கள்… தாய்லாந்து பெண்கள் கடின உழைப்பாளிகள் ,  மிகச் சிறந்த குடும்பத்தலைவிகள் , . அவர்களை மதித்து  போற்றுவோம்..

( நான் பேட்டி காண என் தாய்லாந்து தோழி வீட்டுக்கு சென்றபோது அங்கே அக்கம்பக்கமுள்ளவரெல்லாம் என்னை மிகுந்த வாஞ்சையோடு நெஞ்சார தழுவி வரவேற்றனர்.. என் குழந்தைகளை அன்போடு வரவேற்றனர் அங்கேயுள்ள குழந்தைகள்.. பின் நானும் அவர்களோடு சமையலறையில் நின்று சமைக்க அனுமதி தந்தனர்..  சொல்லிக்கொடுத்தனர்.. பின் எல்லோருமாக சமைத்த அனைத்தையும் தரையில் நடுவில் வைத்து  சுற்றி உட்கார்ந்தோம்.. அப்போது தட்டில் சாதம் போட்டுக்கொண்டு பலவகை கூட்டுக்களை அவ்வப்போது எடுத்து போட்டுக்கொண்டு உண்ணவேண்டும்..எமக்காக சப்பாத்தியும் செய்திருந்தார் தோழியின் கணவரான பாகீஸ்தானியர்…. நான் கரண்டி உபயோகித்த போது என்னை அன்போடு தடுத்து , நீ வேற்று ஆள் அல்ல , அதனால்  சப்பாத்தியை பிட்டு கூட்டுக்குள் தேய்த்து எடுத்தே உண்ணவேண்டும்  என்றார் பிடிவாதமாய்..பின்பு மொட்டை மாடிக்கு சென்று அந்தாக்ஷரி போல பாட்டு பாடினார்கள்.. அப்போது உண்ண சில நாட்டுப்  பலகாரமும் , பழங்களும்..வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆயிற்று.. அன்பு வைத்தார்களானால் அவர்களை மிஞ்சிடவே முடியாது.. என்பதை பலமுறை புரிந்துள்ளேன்.. )

தாய்லாந்து பெண்கள் பற்றி எழுத சந்தர்ப்பம் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

– சாந்தி

________________________________________________

வினவு பின்குறிப்பு:

ஓரிரு ஆண்டுகளாக ஜனநாயகத்திற்கான போராட்டமும், தெருச்சண்டைகளும் தாய்லாந்தில் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். உலகமயத்தின் ‘அருளால்’ அங்கும் சமூக ஏற்றத்தாழ்வு அதிவேகமாக விரிவடைந்து வருகிறது. தாய்லாந்தின் நாட்டுப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு விவசாயம் அழிந்து நகரங்களும் கேளிக்கை சுற்றுலாக்களுமே முக்கிய மையங்களாகி வருகின்றன. மேற்குலகின் மாந்தருக்கான ‘இனிய’ விபச்சார விடுதியாக தாய்லாந்து மாற்றப்பட்டிருப்பது ஒரு கசப்பான உண்மை. சாந்தி சொல்வது போல இது ஒரு மாநிலத்திலிருந்து வரும் ஏழைகள் காரணமாக இருந்தாலும் அத்தகைய நிலையை மேற்குலகும், அதற்கு இடம் கொடுக்கும் தாய்லாந்தின் ஆளும் வர்க்கங்களுமே தோற்றுவித்துள்ளன.

இதனால் தாய்லாந்து பெண்கள் என்றாலே விபச்சாரிகள் என்றொரு பார்வை உருவாகிவிட்டிருப்பது குறித்து இந்த கட்டுரையில் ஒரு தாய்லாந்து பெண் வருத்தப்படுகிறார். எனினும் அந்த வருத்தம் கோபமாக எழும்போதுதான் இந்த பெயருக்கு காரணமான கயவர்களை அப்புறப்படுத்த முடியும். புத்த மதமும், நிலவுடமைப் பண்பும் தோற்றுவித்திருக்கும் ஒருவித ‘மென்மையை’ தாய்லாந்து நாட்டின் பெண்களிடம் காண முடிகிறது. அதே நேரம் இதனாலேயே அவர்கள் அதிகம் சுரண்டப்படுவது கூட எளிதாகவே நடக்கலாம். இத்தகையை அதீதமான பெண்மை என்பது ஒருவித அடிமை நிலைதான். இதில் சாந்தி கூறும் நல்லவிசயங்கள் இருப்பது போலவே கெட்ட விசயங்களும் இருக்கின்றன.

ஒரு நாட்டின் சமூகத்தையும், குறிப்பாக பெண்களது நிலையையும் வரலாற்று ரீதியான பார்வையிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். அதற்கு இந்த கட்டுரை ஓரளவிற்காவது உதவி செய்யும். இதற்காக நேர்காணல்கள் எடுத்து முனைப்புடன் கட்டுரை அனுப்பிய பதிவர் சாந்திக்கு எமது நன்றிகள்.

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

 

கணவனுக்கு எழுத முடியாத கடிதம்…..

66

உழைக்கும் மகளிர் தின சிறப்புப் பதிவு – 1

வினவு முன் குறிப்பு:

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உழைக்கும் மகளிர் தினத்திற்காக பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் பங்களிப்புடன் வினவுக்கு வரும் கட்டுரைகளை வெளியிடுகிறோம். இந்த முதல் கட்டுரை எழுதிய வாசகி அவரது மன உணர்வுகளை, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை, ஆழவும், அகலமுமாய் அழுத்திக் கொண்டிருக்கும் மனக்குமுறல்களை இங்கே பதிவு செய்கிறார். இந்தக் கடிதம் அவரது கணவரை நோக்கி எழுதப்பட்டாலும், அப்படி அவரது கணவனிடம் பேச முடியாது என்பதுதான் யதார்த்தம். குடும்பப் பிரச்சினைகள் என்று பொதுப்புத்தியில் டி.வி சீரியல் வழியாக பதிந்திருக்கும் ஜோடனைகளை கலைத்துவிட்டு மனைவி என்ற சுமையாகிப் போன வேலையோடு வாழும் பெண்ணின் மனதை இந்தக் கடிதம் கொந்தளிப்போடு ஒரு சித்திரமாக உணரவைக்கிறது. ஆண் என்ற அதிகாரத்தில் வாழும் ஆண்டைகளும், பெண் என்ற அடிமை நிலையை ஏற்றுக் கொண்ட பெண்களும் என்ற சமூக யதார்த்தத்தில் இந்தக் கடிதம் துயரத்துடன் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. இனிக் கடிதத்தை படியுங்கள்…..

_______________________________________________

ந்தக் கடிதத்தை நான் யாருக்காக எழுதுகிறேன். எனக்காகவா? இல்லை என் மனதில் உள்ளதை இந்தக் கடிதம் மூலம் உனக்கு தெரியப்படுத்தவா? இதனால் எனக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் என்ற நப்பாசையா? இல்லை..எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை…என் மன உணர்வுகளை உன்னால் புரிந்து கொள்ள முடியாமல் போன மன அழுத்தத்திலிருந்து விடுபடவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

என் அம்மாவை கருவியாகக் கொண்டு இந்த உலகத்தில் எட்டிப் பார்த்த என்னை “அடடா! மூக்கும் முழியும் எப்படி இருக்கு பாரு? உன்னை எந்த மவராசன் வந்து கொத்திக்கொண்டு போகப்போறானோ?” என்று யாரோ சில பெண்கள் கேட்டு வைத்து எனக்கும், உனக்குமான (நிர்) பந்தத்தை அப்போதே ஏற்படுத்தி விட்டார்கள் என்று அம்மா சொன்னார். என்னைப் போல் நீ பிறந்த போதும், “நீ சிங்கக்குட்டிடா! எத்தனை பேரை ‘அடக்கி’, ‘ஆள’ப்பிறந்திருக்கிறாயோ?” என்று உனது ஆணாதிக்கத்தை எத்தனை பேர் தலை தூக்கி நிறுத்தி வைத்தார்களோ? தெரியவில்லை…ஆனால் நீ உன் கோபத்தை ‘அடக்கி’, ஒரு பெண்ணின் மனதை ‘ஆளப்’ பிறந்திருக்கிறாய் என்று யாராவது உனக்கு தெளிவாக சொல்லிக் கொடுத்திருக்கலாம்.

எத்தனையோ கனவுகளுடன் சுற்றித் திரிந்த என்னை, “அத்தனை கனவுகளையும் உன் கணவனின் காலடியில் போட்டுவிடு. அவன் தான் உன் கனவுகளுக்கு உரம் போடுபவன்” என்ற மந்திரங்களையெல்லாம் ஓதி என்னை உன் கையில் பிடித்துக் கொடுத்தார்களே….அவர்களுக்குத் தெரியுமா? நான் சுமக்கப்போவது உன் கனவுகளை மட்டும் தான் என்று.

பிறந்து வீட்டில் சொகுசாக வளர்ந்த என்னை, ‘நீதான் எனக்கு’ என்று முடிவான பிறகு அத்தனை ஆயக்கலைகளையும் கற்றுக்கொள்ள தயார்படுத்தினார்களே..இல்லாவிட்டால் நான் நல்ல மருமகளாக இருக்க முடியாது என்று சொல்லி அனுப்பினார்களே…பிறந்த வீட்டுப்பிரிவையும், உன் அருகாமையில் கிடைக்கும் வெட்கத்தையும், புது வீட்டு சொந்தங்களை பற்றித் தெரியாத தயக்கத்தையும் சுமந்து கொண்டு வந்த எனக்கு, உன் வார்த்தை அன்பு, அம்பாக மாறி என் மனதை குத்திக்கிழிக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

திருமணத்துக்கு முன்பு நீ பேசும்போதெல்லாம், “இந்த திருமணம் நின்று விட்டால் உன்னை எங்காவது கடத்திக்கொண்டு கூட போய்விடுவேன்..நீ இல்லாத வாழ்க்கை எனக்கொரு வாழ்க்கையா?” என்று அன்பை பொழிந்தாயே…அப்போது என் முட்டாள் மனதுக்குத் தெரியவில்லை, திருமணமான ஒரே வாரத்தில் நீ உன் சுயரூபத்தை காட்டப்போகிறாய் என்று.

திருமணமானவுடன் மேலே படிக்கலாம் என்ற கனவுடன் இருந்த என்னை, “முதலில் புருஷனுக்கு தேவையானதை செய், அவனுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று தெரிந்து வைத்துக்கொள். அப்புறம் உன் சமத்து..உன் அப்பாவை பணம் அனுப்ப சொல்லி மேலே படித்துக்கொள்” என்று மாமியாருக்கே உள்ள அக்கறையைக் காட்டிய போது அசந்துதான் போனேன். அதெப்படி இந்த எலும்பில்லாத நாக்குக்கு சக்கரையைத் தடவவும், விஷத்தைக் கக்கவும் முடிகிறது? ஆச்சரியம்தான்!

சமையல் வேலையை நான் தெரிந்து வைத்திருக்கிறேனா என்பதை, வந்த முதல் நாளே டெஸ்ட் செய்து பார்த்த போது பயந்து நடுங்கித்தான் போனேன், இன்னும் எதற்கெல்லாம் டெஸ்ட் வைப்பார்களோ என்று. ‘அப்பாடா! ஒரு வழியாக சமாளித்தோமே’ என்று நானாக ஆசுவாசப்படுத்திக் கொண்ட வேளையில், மாமியார் இன்னொரு மருமகளான உன் அண்ணியைப் பார்த்து,  “நீ இப்படி சமைப்பாயா?” என்று கேட்டு வைத்து தொலைக்க, அவள் அதற்கு மேல் என்னுடன் ஒட்டாமல் என்னை விட்டு தள்ளியே இருந்துவிட்டாள். அதற்கும் மேல் அவளுக்கு என் மேல் என்ன வன்மமோ? புகுந்த வீட்டுக்குள் இப்படி ஒரு அரசியல் இருக்கும் என்பதை புதிதாக வந்த நான் எப்படி அறிவேன்?

இரண்டு மருமகள்கள் சேர்ந்தால் நம்மை ஆட்டிப்படைத்து விடுவார்கள் என்ற பயமோ என்னமோ, இருவரையும் ஆரம்பத்திலேயே பிரித்து வைக்கும் சூட்சுமம் உன் அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. உன் அண்ணியை என் கூடப்பிறந்த அக்காவைப் போல் நினைத்தேனே..ஆனால் அவள், என் கணவனான உனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் எனக்கும் கொடுக்க மறந்தாள்?

உறவுகளுக்குள்ளேயே கணவனையும், மனைவியையும் வேறு வேறு இடத்தில் வைக்க, புகுந்த வீட்டு உறவுகளால் மட்டும் தான் முடிகிறது. நானும் உனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஏன் உன் உறவினர்களுக்கு புரிய வைக்க நீ முயற்சிக்கவில்லை? அவர்கள் அடித்துக்கொண்டால் என்ன? நாம் தப்பித்தோமே என்ற  எல்லா ஆண்களின் மனோபாவம் தான் உனக்கும். ‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்’ என்று சொல்வதைப் போல இரண்டு பெண்கள் அடித்துக் கொண்டால் ஆண்களுக்குத்தான் கொண்டாட்டம் என்பது ஏன் இந்தப் பெண்களுக்கு புரிவதில்லை? இப்படி புரியாமல் இருப்பதுதானே ஆண்களின் பலம்.

திருமணமான ஒரு வாரத்திலேயே சீர், செனத்திகளை வாங்குவதற்காக என் அப்பா, அம்மாவுடன் அடித்துக்கொட்டுகிற மழையில் ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கினோமே..அப்போது டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் எல்லாம் இந்த இந்த அளவுகளில் வேண்டும் என்று நீ என் காதில் கிசுகிசுத்துக்கொண்டு வந்த போதெல்லாம் அது விளையாட்டு என்றுதானே நினைத்தேன். சமையல் பாத்திரங்கள், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவிடி ப்ளேயர், கட்டில், பீரோ என்று அத்தனை பொருட்களும் அப்பா போட்டு வைத்திருந்த பட்ஜெட்டுக்குள் அடங்கிப்போனதில் உனக்கு என்ன வருத்தம் இருந்ததோ? அதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. கடைசியாக ஸ்பீக்க்கர் மட்டும் வாங்க முடியாமல் போனதால் உனக்கு என் வீட்டார் மேல் எந்தளவுக்கு கோபம் இருந்ததோ?

உன்னிடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்து வந்த எனக்கு, சீர் பொருட்களில் ஏதோ ஒன்று குறைந்ததை பெரிய கெளரவப் பிரச்சினையாக நீ ஆக்கிய போதும், அதையே திரும்ப திரும்ப சொல்லிக்காட்டிய போதும் அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தொண்டையிலும்  ஏதோ கசந்தது. முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் என்னவோ? என் வாழ்க்கையை வியாபாரமாக்கிய அப்பா, அம்மாவின் மேல் கோபம் வந்தது.

அத்தனை கசப்புகளையும் மென்று முழுங்கிவிட்டு, வாழ்க்கை இப்படியும் இருக்கும் என்ற யதார்த்தை உணர்ந்து, ஆசையாக உன்னிடம் “என்னங்க..நான் ஒண்ணு கேட்கட்டுமா?” என்று ஆரம்பித்தால், “என்ன வேணும்னாலும் கேளு..ஆனா நகை வேணும்னு மட்டும் கேட்டிராத..அதுக்கெல்லாம் உங்க அப்பா இருக்காரு..உங்க அப்பா அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாதும்மா” சட்டென்று முகத்திலடித்தாற்போல் பேசிய பேச்சுக்கள் ரொம்ப நேரம் காதை விட்டு நீங்க மறுத்தது. அப்போதும் அவன் அன்பாக இல்லாவிட்டால் என்ன? நான் அதைவிட அன்பை அள்ளித்தருவேன் என்று நானே எனக்கு செய்து கொண்ட சமாதானம் தான் இன்னும் என் வாழ்க்கையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறதோ…

பாஷை தெரியாத ஊரில் புது மனைவியாக வந்த என்னை தனியாக வீட்டிலேயே விட்டுவிட்டு ஏற்கனவே நீ இருந்த உன் அண்ணன் வீடே கதி என்று போய்விட்டாய். நீ அங்குதான் இருக்கிறாய் என்பது கூட தெரியாமல் உனக்காக ஆசை ஆசையாக சமைப்பதும், உனக்காக நான் காத்துக்கொண்டே இருந்ததும், உனக்காகவே பூ வைத்து, பொட்டு வைத்து சே! வீட்டைச் சுற்றிப்பார்க்கும் போது வீடும் மட்டுமல்ல…என் மனதும் வெறுமையாக இருந்தது. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத தனிமை! உனக்கு அதுதான் சந்தோஷம் என்று தெரிந்திருந்தால் நானும் உன்னுடய சந்தோஷங்களில் ஒரு தோழியாக பங்கெடுத்திருப்பேன். ஆனால் அதற்கும் நீ இடம் கொடுக்காமல் போனது எப்படி? நாம் இருவர் மட்டுமே பேசிக்கொள்ளும் வார்த்தைகள் எல்லாம் உனக்கு அண்ணியாக வாய்த்தவளுக்கு எப்படி தெரிந்தது?

ஏன் இதையெல்லாம் போய் அடுத்தவரிடம் சொல்கிறீர்கள் என்று கேட்டால் “நீ இப்போது வந்தவள், அவர்கள் என் கூடவே இருப்பவர்கள்” என்று நீ சொன்னபோது, பழைய உறவுகளை மறக்காமல் இருக்கும் ஆணாக பெருமைப்படுவேனா இல்லை என் மனதைப் புரிந்துகொள்ளாத கணவன் என்று வருத்தப்படுவேனா…. அண்ணியாக வாக்கப்பட்டவளோ, ஏதோ ஒரு நாள் என் முன்னால் அவளை மட்டம் தட்டிப் பேசிய மாமியாரை கேள்வி கேட்க தைரியமில்லாமல், என் மேல் கோபம்கொண்டு ஏன் தள்ளி வைத்தாள்? அதையும் நான் உனக்கு புரிய வைக்க முயற்சி செய்தால் அதைக் காதில் வாங்காத ஒரு அலட்சியம் எனக்கு கண்ணீராக முட்டிக்கொண்டு வந்ததை நீ அறிவாயா?

என்றோ வீசிய என் முற்போக்கு சிந்தனைகள், வார்த்தைகள் எல்லாம் இன்று இந்த தனிமையில் சுக்கு நூறாய் உடைந்து போனது யாருக்குத் தெரியப்போகிறது? தன் மனைவியின் கண்களில் காதலைத் தேடும் கணவன், அதே கண்களில் அவள் மனதையும் தேடாமல் இருப்பது எப்படி என்றுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை.

திருமணமான பிறகும் குடியும், கும்மாளமுமாக பொழுதைக் கழிப்பதில் உனக்கு என்ன சந்தோஷமோ? உன்னை சுற்றியிருக்கும் சுவாரஸ்யங்களைத் தொலைத்து விட்டு எதில் தேடுகிறாய் உன் சந்தோஷத்தை? குடியும், புகையும் மட்டுமே வாழ்க்கையின் முதல் சந்தோஷம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் உன்னைப்பற்றி ஏன் உன் பெற்றோர்கள் முழுதாக அறியவில்லை? திருமணத்திற்குப் பிறகு மகன் செய்யும் சின்ன சின்னத் தவறுகளை பெற்றோர்கள் கண்டும், காணாமல் இருக்கிறார்களா அல்லது இருப்பது போல் நடிக்கிறார்களா? இன்னும் எனக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.

உன் உடல்நிலையை மனதில் கொண்டு, உன் பெற்றோர் சொன்னாலாவது நீ திருந்தலாம் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் சொன்னால், அதற்கும் அவர்கள், “ஆண் பிள்ளை அப்படித்தான் இருப்பான். உனக்கு என் மகனை மயக்கத் தெரியவில்லை” என்று சம்மட்டியால் அடித்தது போல் சொன்னதில் நன்றாகவே அடையாளம் தெரிந்து கொண்டேன் சுயநலவாதிகளை.

சமயத்திற்கு தகுந்தாற்போல் பெண்களை சாடுவதில் இந்த சமூகத்திற்குத்தான் எத்தனை ஆசை!வேலைக்குப் போகும் பெண்ணா? “உனக்கு சம்பாதிக்கும் திமிர்” என்பதும், அதிகம் பேசினால் “வாயாடி”, அமைதியாக இருந்தால் “ஊமைக்கொட்டான் மாதிரி இருந்துக்கிட்டு…” என்று பட்டம் கொடுப்பதும், கணவனை சொல்பேச்சுக் கேட்க வைத்தால், “மயக்கி விட்டாள்” என்று சொல்வதும், அதே கணவன் மனைவி சொல்வதை கேட்காமல் இருந்தால், “மயக்கத் தெரியவில்லை” என்பதும் அப்பப்பா! போதுமடா சாமி! ஒரு பெண் படித்து பட்டம் பெறுகிறாளோ, இல்லையோ இந்த சமூகம் அவள் கேட்காமலேயே அத்தனை பட்டத்தையும் கொடுத்து விடுகிறது அதுவும் பெண்களாலேயே. வெளியுலகில் சாதிப்பதைத்தான் இத்தனை நாள் சாதனை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை…குடும்ப உறவுகளுடன் போராடுவதும் பெண்களுக்கு மிகப்பெரிய சாதனைதான்.

திருமணத்திற்கு பிறகு வரும் ஒவ்வொரு பண்டிகையும் தலை தீபாவளி, தலைப்பொங்கல் என்ற பெயரில் வசூல் வேட்டையை நடத்தும் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை. தலைப்பொங்கல் வந்தபோது, “உன் அப்பாவை ஒரு ஐயாயிரம் பணம் அனுப்பச்சொல்” என்று வாய் கூசாமல் உன் அம்மா கேட்டபோது, அவர்களுக்கு இல்லவே இல்லாத வெட்கத்தால் வெட்கித் தலைகுனிந்தேன். இதற்கு மேலும் நான் வாயைத் திறக்காமல் இருக்க வேண்டும் என்று எப்படி நீ எதிர்பார்த்தாய்? எந்த மருமகளும் இவர்களை எதிர்த்து பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டா வருகிறாள்? எவ்வளவு கொடுத்தாலும் தீரவே தீராத இந்த வரதட்சணை ஆசை எந்தப் பெண்ணுக்கும் அருவெறுப்பைத் தராதா?

எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மறுக்காத உன் கைகள் ஏன் என் பிறந்த வீட்டுக்கு செய்ய வேண்டுமென்றால் மட்டும் பின்வாங்குகிறது? உன் அப்பா, அம்மாவையும் மிஞ்சிய ஆண்பிள்ளையாக உன்னைப் பார்க்கும் போது எந்த பெண்தான் ஆவேசப்படாமல் இருப்பாள். இன்னும் எனக்குத் தேவையான விஷயங்களை என் அப்பாவிடம் உரிமையாக கேட்பதுபோல் உன்னிடம் கேட்க முடிவதில்லை. இந்த விரிசல் ஏன் என்பதை யோசிக்கக்கூட உனக்கு அவகாசம் இல்லை? நம்மைத் தொல்லைப்படுத்தாமல் இருக்கும்வரை நமக்கு லாபம் என்ற சுயநலமான மனம்.

குழந்தை பிறந்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நினைப்பில் உன் கருவை ஆசையாக நான் சுமந்தபோது எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியான மாற்றத்தை உன்னால் மட்டும் ஏன் உணர முடியாமல் போனது? கருவை சுமந்த நேரத்தில் கூட ஆறுதலான ஒரு பேச்சோ, அரவணைப்போ இல்லாத ஜடமாய் எப்படி நீ மாறிப்போனாய்? குழந்தை பெற்றுத் திரும்பிய உடனேயே, என் அன்பை கொஞ்சம் கொஞ்சமாக உணர வைத்துக்கொண்டிருந்த தருணத்தில் உன் அஜாக்கிரதையால் வேலையை இழந்து வந்தாய். அப்போதும் உன் மேல் முன்னைவிட அன்பாகத்தானே இருந்தேன்…

பிள்ளை வந்த நேரம் அப்பன் வேலை போச்சு என்று உன் வீட்டார் என் மனதைக் காயப்படுத்திய போதும் உனக்கு ஆதரவாக இருந்த அந்த தருணத்தை உன்னால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? உன் கல் நெஞ்சைக் கரைக்கும் கருவியாகவே மாறிப்போன நம் குழந்தையுடன் வேலையில்லாத உன்னையும் சேர்த்து தேற்றினேனே..அதில் உனக்கு தெரியவில்லையா என்னுடைய எதிர்பார்ப்பில்லாத அன்பு.

பிரச்சினை கொடுத்த இந்த இடத்தில் நாம் இருக்க வேண்டாம் என்று வேலையுடன் வேறு இடத்தில் வந்தவுடனாவது நீ மாறிவிடுவாய் என்று நினைத்தேனே…எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கும் உனக்கு தண்ணியடிப்பதிலும், தம்மடிப்பதிலும் மட்டும் எப்படி ஒரு ஆர்வத்தைக் கொண்டுவர முடிந்தது? வாழ்க்கையே அதைச் சுற்றித்தான் இருக்கிறது என்று நீயாக எழுப்பியிருக்கும் கோட்டையை உடைக்க முடியாமல், அதிலேயே மாட்டிக்கொண்ட என் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தாயா?

உன்னைத் திருத்த‌ நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அதிலிருந்து தப்பிக்கவும் நீயாகவே ஒரு வழியைத் தேடிக்கண்டுபிடித்தாயே….கையில் கைக்குழந்தையுடன் பின்னிரவு வரை வீட்டில் தனியாக அழுது கொண்டிருந்ததை பொறுக்காத என் அப்பா, “உங்கள் மகனிடம் எடுத்து சொல்லுங்கள்” என்று வேதனையுடன் சொன்னதை நீயும், உன் பெற்றோர்களும் இவர்கள் யார் நம்மை கேள்வி கேட்க என்ற ஈகோவுடன் என்னை வார்த்தைகளால் குத்திக் கிழித்தபோது இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று தான் நினைத்தேன்.

உன் தவறுகளிலிருந்து நீ தப்பித்துக் கொள்வதற்காகவும், உன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற ஆணாதிக்கத்தாலும், “உங்களைப் பற்றி தவறாக பேசுகிறாள். அதனால் தான் நான் இப்படி லேட்டாக வருகிறேன்” என்று உன் பெற்றோர்களிடம் என்னைப் பற்றி தவறாகக் கூறி என் தலையில் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாயே….இந்த சாதுர்யம் யாருக்கு வரும்? இதற்கு மேலும் உன்னைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வருமா? தப்பித்துக்கொள்ள இப்படி ஒரு வழி இருக்கும் என்று ஏன் என் முட்டாள் மனதுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் தொல்லையாக நினைத்து பிறந்த வீட்டிலேயே விட்டுவிட்டு வருவதும், அதிலிருந்து மீண்டு நானாகவே வெளியில் வருவதும் யாருக்காக என்று பல நேரம் புரியாமல் குழம்பித் தவிக்கிறேன்.

என் வாழ்க்கை எதை நோக்கிப் பயணிக்கிறது என்று நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரியே நினைவுக்கு வருகிறது. அந்த நினைப்பில் குழந்தை முகம் தெரியும்போது நானாகவே விழித்துக் கொள்கிறேன். அவள் முகத்தில் இருக்கும் மழலைச் சிரிப்பை கவனிக்கும்போது வாழ்க்கையை கொஞ்சம் பிடித்துக்கொள்கிறேன்.

டி.வியில் வரும் பெண்கள், வீதியில் வரும் பெண்கள் அனைவரையும் பாகுபாடில்லாமல் அலட்சியப் பார்வை வீசும் உனக்கு என் வீட்டுப்பிரச்சினையை எள்ளி நகையாடவும், அந்தப் பிரச்சினையில் குளிர்காய்வதற்கும் சொல்லியா தர வேண்டும்? பெரியவர்களின் குழப்பங்களுக்கெல்லாம் பலிகடா ஆக்கப்படுவது வீட்டிற்கு வரும் மருமகள் தானா? இன்னும் எத்தனை வருடங்கள் இப்படியே ஓடும் என்று நினைக்கும் போது மன அழுத்தம் அதிகமாகிறது. இந்தப் பெண்களுக்குத்தான் இன்னும் எத்தனை எத்தனைப் பிரச்சினைகள்?

வீட்டிற்குள் என்னை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பதும், வெளியில் கொஞ்சம் பெருமையாக பேசுவதும் என்ற உன் இரண்டுபட்ட மனநிலை என்னைப் பல நேரம் ஆச்சரியப்பட வைக்கிறது. காலையில் இருந்து இரவு வரை எதற்காகவாவது கத்திக் கொண்டே இருப்பதும், இரவானால் இரண்டு அன்பான வார்த்தைகளை உதிப்பதும் ஏன் எனக்கு இத்தனை நாள் உறைக்கவில்லை? என் பிறந்த வீட்டுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஆறுதல் சொல்வது போல் அதை மேலும் கிளறி விடுவது என்ன ஒரு தந்திரம்? அதிலும் நிறைய குளிர்காய்ந்து விட்டு ஒன்றும் தெரியாத குழந்தை இமேஜை கொண்டு வந்துவிடுகிறாயே..அந்த சைக்கோத்தனம் என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?

எனக்கு வரதட்சணையாகத் தந்த நகைகளை என் வீட்டு விசேஷங்களுக்கு கூட போடவிடாமல் வம்பிழுத்த போது, என் பெற்றோர்கள் உன் அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டு அத்தனையும் பிடுங்கிக்கொண்டு வந்தார்கள். இந்தப் பெரியவர்களின் பிரச்சினையில் நீ ஏன் என்னை மட்டும் இன்னும் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறாய்? நான் உன்னிடம் எதிர்பார்த்தது அன்பை மட்டும் தான், ஆனால் அந்த அன்பையும் பெறுவதற்கு, அத்தனை இடிகளை வாங்கியும்,  இன்னும் உன்னிடமிருந்து முழுதாக கிடைக்காமல் தவிக்கிறேனே….அத்தனையும் பொறுத்துக் கொண்டாலும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கூட உன் அன்பைக் காட்டத் தெரியாமல் இருப்பது எனக்கு ஆத்திரத்தைக் கொடுக்கிறது. அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் என் உடல் பலத்தையும் இழக்கிறேன்.

நீ உன் பிறந்த வீட்டுக்குப் போ என்று விளையாட்டாக சொன்னாலும் மனம் பதைபதைக்கிறது. பிரச்சினையால் என்னையே தாங்கிக் கொண்டே இருப்பதால் என் கூடப் பிறந்தவர்களுக்கும் பெற்றோர்கள் மீது கோபம். திருமணத்திற்கு முன்னால் பிறந்த வீடாவது இருந்தது. ஆனால் புகுந்த வீடு கைவிட்டால் பிறந்த வீடும் நிரந்தரமில்லை. இது பெண்களுக்கே விதிக்கப்பட்ட சாபக்கேடோ!

ரோட்டில் போகும்போது ஆயிரம் பெண்களை நீ ரசித்தாலும் நான் இந்த நடிகனைப் பிடிக்கும் என்று சொன்னால் போதும். உன் தலையில் என்னென்ன கற்பனைகள் ஓடுமோ? பெண் மனசு ஆழம் என்று யார் எழுதி வைத்தார்கள், கணவன் எதை மனதில் வைத்து எதை வெளிப்படுத்துகிறான் என்று புரியாமல் இன்னும் எத்தனைப் பெண்கள் என்னைப்போல் இருக்கிறார்களோ? உன் தாழ்வு மனப்பான்மையால் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை இழந்து விட்டு, அதை வெளிக்காட்டினால் இந்த உலகம் ஏசும் என்பதால் அந்தப் பழியையும் என்னையே தாங்கிக்கொள்ள சொல்வது நியாயமா?

எனக்கு பொறாமை வரவேண்டும் என்பதற்காக நீ காட்டும் சீண்டல்களால் எனக்கு பயமில்லை. உன் மனதையும் அப்படி ஒருத்தி கரைத்து விட்டால் அதைவிட சந்தோஷம் எனக்கு வேறெதுவுமில்லை. அப்படியாவது ஒரு பெண்ணின் மனதை நீ அறிந்து வந்தால் சரிதான்!

உனக்குத் தெரியுமா? உன்னை என் கணவனாக பார்க்காமல் என்னைப்போல் நீயும் ஒரு உயிர் என்று நினைப்பதால்தான் இன்னும் உனக்கு சேவை செய்யமுடிகிறது. உன்னைப் பெற்றவர்களை மாமனார், மாமியார் என்று நினைக்காமல் வயதான அப்பா, அம்மா என்று நினைப்பதால் தான் உறவுகளைத் தாண்டிய மனிதாபிமானத்துடன் அவர்களை தாங்கிக்கொள்ள முடிகிறது. இதையெல்லாம் என்று நீ உணரப்போகிறாயோ?

உன் வாழ்க்கையில் பிடிப்பு வர ஒரு வேலையைத் தேடிக்கொள் என்று அனைவரும் சொல்லும்போது, “எதை வேண்டுமானாலும் செய்” என்று அப்போதைய நல்லபிள்ளையாக சொல்லிவிட்டு, அதற்கு மேல் எதையும் யோசிக்க விடாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை விஷயங்களையும் விஷ ஊசி போல் ஏற்றிவிடுவது எனக்கு இப்போது புரியாமல் இல்லை. உன்னை விட்டு மொத்தமாக வெளியில் வந்தால் தான் எனக்கான பிடிப்பை நான் தேடிக்கொள்ள முடியும் என்பதை நான் எப்படி மற்றவர்களுக்கு சொல்வேன்? இன்னும் நான் வேலைக்குப் போனால் உன் ஈகோவால் இன்னும் என்னென்ன பிரச்சினைகளை எனக்குள் திணிப்பாய் என்று நினைக்கும்போது இந்த நிம்மதியே போதும் என்று என் மனம் ஆறுதல் அடைகிறது.

நான் இல்லாத வாழ்க்கையிலும் உன்னை சீண்ட யாருமிருக்க மாட்டார்கள் என்று நினைக்கும் போது திரும்பவும் உன்னையே நினைத்துக் கவலைப்படுகிறேன். “என்னையே எனக்குப் பிடிக்கவில்லை” என்று சிகரெட்டை ஊதித்தள்ளும் போது உன்னைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். ஆனால் அதை நான் எப்போது சொன்னேன் என்பது போல உன் ஈகோவால் என்னைத் தட்டிக்கழிக்கும்போது சே! என்ன மனிதன் இவன்? என்று எரிச்சலடைகிறேன்.

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை;

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை;

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்
நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்
என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உனக்காகவே வாழும் வரை!

மேலே படிக்கப்போகிறேன்..வாழ்க்கையை ரசித்து வாழப்போகிறேன்..என்ற கனவுகளுடன் வந்த நான் எனக்கான வாழ்க்கையை சரி செய்துகொள்ளவே நேரத்தை வீணடித்திருக்கிறேன். அடுத்த குழந்தையும் சீக்கிரம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று யாராவது சொல்லும்போதெல்லாம் வெறும் குழந்தையை சுமக்கும் பொருளாக மட்டுமே நான் இருப்பது அருவெறுப்பைத் தருகிறது. இந்த நிலையில் இன்னும் எத்தனைப் பெண்கள் இருக்கிறார்களோ?

இந்த உருப்படாத வாழ்க்கை எதற்கு உபயோகப்பட்டதோ இல்லையோ பலவித குணங்களுடன் உள்ள மனிதர்களைப் படிக்கவும், அதுவே என் எழுத்துக்களாக உருமாறவும் உதவியிருக்கிறது. ஓடும் வரை ஓடட்டும் இந்த பற்றற்ற வாழ்க்கை..மனதில் உள்ள போராட்டத்தை அன்பான மனிதர்களின் நகைச்சுவையான பேச்சுக்களால் மறக்கிறேன். குழந்தையின் எதிர்காலத்தில் என் அழுகையை அடக்கிக்கொள்கிறேன். அவளின் வளர்ச்சியில் என் சந்தோஷத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன்.

இப்படிக்கு
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

__________________________________________

வினவு பின்குறிப்பு:

துயரமான யதார்த்தம், மீள முடியாத குடும்பம் என்ற இந்த பிரச்சினையிலிருந்து இவருக்கு மீள என்ன வழி? படிப்போ, இல்லை வேலைக்கு போவதோ முதலான கிரமமான வழிமுறைகள் மட்டுமே இதை தீர்த்துவிடுமா, தெரியவில்லை. குடும்பம் என்ற கூட்டிற்குள் நின்று மட்டும் ஒரு பெண் சமூக ரீதியாக விதிக்கப்பட்டிருக்கும் தளையை அறுத்துவிடவோ, அதை புரிந்து கொள்வதோ சிரமம் என்று தோன்றுகிறது. சமூக ரீதியான அனுபவம், சமூக மாற்றத்திற்கான முனைப்பு என்று பெரிய கோடு போட்டுக் கொண்டால்தான் குடும்பம் போடும் சின்னதான ஆனால் துயரமான கோட்டை அழிக்க முடியும். சமூக மாற்றத்திற்கான வேலைகளில் புடம்போடப்படும் பெண்கள்தான் தங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையும் அது விதித்திருக்கும் கீழான இழிவுகளையும் புரிந்து கொள்வதோடு அவற்றை இரக்கமின்றி எதிர்த்து வெல்ல முடியும் என்பது எங்கள் அனுபவம். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

 

 

 

 

 

 

 

 

 

மன்மோகன் சிங்குக்கு ஒன்னுமே தெரியாதாம்…

28
மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்கள்ளனிடமே கஜானா சாவியைத் தூக்கிக் கொடுத்து காவலுக்கு நிறுத்திய கதையாக 91ஆம் ஆண்டு கேரளத்தில் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் நடந்த ஊழலில் தொடர்புடைய பி.ஜே தாமஸ், மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் கமிஷனராக கடந்த செப்டம்பரில் நியமிக்கப் பட்டார். பி.ஜே தாமஸ் நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் மவுனமோகன் சிங், தாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், ஏற்றுக் கொள்வதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்வதே முக்கியமானது என்று தெரிவித்து விட்டார்.

பிரதமரின் இந்த ‘விளக்கத்துக்காகவே’ காத்திருந்த எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், பிரதமரே தனது தவறை ‘உணர்ந்து’ பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதால், இந்த விவகாரத்தை இத்தோடு ஊத்தி மூடி விடுவது நல்லது என்று திருவாய் மலர்ந்துள்ளார். அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் அதற்கு மேலாக மன்மோகன்சிங் பொறுப்பேற்றுக் கொண்டதோடு நில்லாமல் மன்னிப்பு ஒன்றையும் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரகாஷ் காரத்தோ, பிரதமர் பாராளுமன்றத்தில் கொடுக்கப் போகும் விளக்கத்துக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தேசியளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் ஏதோ நெம்ப நல்லவரான மவுனமோகன் சிங்கிற்கு இந்தச் சம்பவம் தீராத களங்கத்தை இப்போது தான் புதிதாக ஏற்படுத்தி விட்டது போலவும், அதற்கு அவரே தனது நீண்ட மவுன விரதத்தைக் கலைத்து ஒரு பதிலைச் சொல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது போலவும் மக்களுக்குக் கதை சொல்லி வருகின்றன. என்னதான் புளுகினாலும், பித்தலாட்டம் செய்தாலும், கொள்ளையடித்தாலும் இவரு ரொம்ப நல்லவருன்னு எல்லாரும் சேர்ந்து பாடும் கோரஸ் சப்தம் நம் காதில் காய்ச்சிய ஈயம் போய் பாய்கிறது.

ஏதோ தவறு நடந்து போச்சு என்று முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு இப்போது சொல்லும் இதே பிரதமர் தான் இந்தாண்டு ஜனவரி மாதம் தாமஸின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாணைகளின் போது தாமஸின் மேல் இருக்கும் ஊழல் புகார்கள் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னார். தாமஸின் மேல் நடந்து வரும் ஊழல் வழக்கு பற்றிய விபரங்கள் அவரது சுயவிவரத்தில் (பயோடேட்டா) காணப்படவில்லையென்றும் அதனால் அது பற்றித் தமக்கு ஒன்றுமே தெரியாது என்றும் கூசாமல் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.

ஒரு சாதாரணக் குடிமகன் பாஸ்போர்ட் பெற வேண்டி விண்ணப்பித்தாலே அவர் மேல் ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா, இன்ன முகவரியில் தான் இருக்கிறாரா என்பது பற்றியெல்லாம் காவல் துறையைக் கொண்டு விசாரித்து உறுதி செய்து கொள்கிறார்கள். ஒரு சாதாரண குமாஸ்தா வேலைக்கு ஆள் எடுப்பதாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தையே தோண்டியெடுத்து விசாரிக்கிறார்கள். ஆனால், ஒரு நாட்டின் ஊழல் கண்காணிப்பு அமைப்பின் முக்கியமான பதவியொன்றிற்கு ஒருவரை நியமிக்கும் போது மட்டும் அவரே கொடுத்த சுயவிவரத்தை மட்டும் தான் கணக்கில் எடுத்தார்களாம் – அவரது பின்னணி குறித்து விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளவில்லையாம். இதையும் எந்தக் கூச்ச நாச்சமும் இன்றி நீதிமன்றத்தில் சொன்னது நாட்டின் மிக உயர்ந்த பதவில் இருக்கும் ஒருவர்!

இந்தக் புளுகுணிக் கதைகளையெல்லாம் எந்தக் எதிர்க் கேள்வியும் இன்றி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன முதலாளித்துவப் பத்திரிகைகள். இவர்களெல்லாம் படித்தவர்களாம்.

தேசியளவிலான ஊடகங்களில் தாமஸ் 91ஆம் ஆண்டு கேரள உணவுத் துறைச் செயலாளராக இருந்த போது பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்து அது பற்றி நடக்கும் விசாரணையில் அவரும் அக்கியூஸ்டு லிஸ்ட்டில் இருப்பது பற்றியும் குற்றப்பத்திரிகையில் அவரது பெயரும் இருப்பதைப் பற்றியும் அம்பலப்படுத்தி எழுதி நாறடித்துக் கொண்டிருந்த  போதும் கூட அவரது பதவியைப் பறிக்காமல் விட்டு வைத்திருந்தார் நெம்ப நல்லவரான மவுனமோகன்.

மன்மோகன் சொல்லும் இந்தத் “தெரியாது” என்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பே பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் அவரின் இந்தத் “தெரியாது” அஸ்திரத்தை மக்களை நோக்கி ஏவி விட்டுள்ளார். இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவ ஊடகங்கள் அந்தக் கதைகளை கர்ம சிரத்தையாக நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தற்போது தலைப்புச் செய்தியிலிருந்து இரண்டாம் பக்கத்துக்கும் மூன்றாம் பக்கத்துக்கும் நகர்ந்து விட்டது – கூடிய விரைவில் எட்டாம் பக்கத்தின் எட்டாம் பத்திக்கும் போய் விடும். ஸ்பெக்ட்ரம் நாடகத்தின் பலியாடான ஆ. ராசாவைக் கம்பிகளுக்குப் பின்னே தள்ளியாகி விட்டது. ஆனால், அந்தப் பதவிக்கு அவரை ரெக்கமன்டேசன் செய்த – ஊழலில் பலனடைந்த –  டாடாவும், மிட்டலும், அம்பானியும் எஸ்கேப்பாகி விட்டனர். தன் உள்ளங்கைகளுக்குள்ளேயே ஊழல் நடந்து கொண்டிருந்த போது மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் அப்பாவியாகி விட்டார்.

அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. நம் நாட்டின் அணு விஞ்ஞானிகள் எத்தனையோ வருடங்களாக ராப்பகலாக உழைத்து சொந்த முயற்சியில் உருவாக்கிய அணு உலைகள் அனைத்தையும் கொண்டு போய் தனது அமெரிக்க எஜமானர்களுக்கு பாத காணிக்கையாக்கி விட்டார் மன்மோகன். அதற்கு வழிவகை செய்த அமெரிக்க ஹைட் சட்டம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைக்குக் கேள்வி கேட்டபோதும் இன்று பி.ஜே தாமஸ் விவகாரத்திற்குச் சொன்ன அதே பதிலைத் தான் சொன்னார் – “ஹைட் சட்டமா…? அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே”

எஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை வழங்கும் செயற்கைக்கோள் ட்ரான்ஸ்பான்டர்களை தேவாஸ் எனும் தனியார் கம்பெனிக்கு தாரைவார்க்க 2005ம் ஆண்டே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இஸ்ரோ நிறுவனத்தின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸும் தேவாஸ் நிறுவனமும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்திற்கான அனுமதியை அளித்தது பிரதமர் உள்ளிட்ட காபினெட் அமைச்சர்களின் கூட்டம். வின்வெளித் துறையோ நேரடியாக பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடியது.

பின்னர் இந்த ஒப்பந்தத்தின் விபரங்கள் ஊடகங்களில் அம்பலமாகி ஊரே நாற்றமடித்துக் கொண்டிருந்த போது இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயரோ,  ட்ராஸ்பான்டர்களை தனியார் கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்வது தான் எங்கள் பணி. அதிலிருந்து கிடைக்கும் ஸ்பெக்ட்ரம் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்றார். அதாவது எல்லாரும் சேர்ந்து கொண்டு “நாங்கள் தாம்புக் கயிறைத் தான் விற்றோம் அதில் கட்டப்பட்டிருந்த மாட்டைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றனர்”

நமது மவுனச்சாமியார் வாய் திறந்து அளித்த ‘விளக்கமும்’ இது தான் – “எனக்குத் தெரியாது” . தனக்குக் கீழ் நேரடியாக இயங்கும் ஒரு துறையில் நடந்துள்ள இந்த முறைகேடுகள் பற்றியே ஒரு பிரதமருக்குத் தெரியாதென்று சொல்வாராம், அவரை நாமும் மெத்தப் படித்தவர், பொருளாதாரத்தில் புலி, நேர்மையில் எலி என்றெல்லாம் நம்ப வேண்டுமாம் – அப்படித்தான் முதலாளித்துவ ஊடகங்கள் நம்மிடம் சொல்லுகின்றன.

இன்ன துறைகளுக்கு இன்னின்ன அமைச்சர்கள் தான் இருக்க வேண்டும் என்று பெருமுதலாளிகள் கோருகிறார்கள்  என்றால், அதன் மூலம் அவர்கள் அடையக் கூடிய ஆதாயம் என்னவாய் இருக்கும் என்று புரிந்து கொள்ளத் தெரியாது. தனது அரசின் கீழ் இருக்கும் ஒரு துறையே கார்ப்பரேட்  தரகர்களுக்கும் தனது கட்சியின் முக்கிய தலைகளுக்குமான பேச்சுவார்த்தைகளை இரசியமாய் பதிவு செய்திருப்பது பற்றித் தெரியாது. அதில் ஊழல் நடத்தப்படும் விதம் குறித்தும் ஆதாயம் அடைந்தது குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்  என்றும் தெரியாது.

இதெல்லாம் ஒன்றும் தெரியாது என்றால் வேறு என்ன எழவு தான் தெரியும்? விசயம் அம்பலமான பின் தெரியாது என்று கூசாமல் புளுகத் தெரியும். அப்படிப் புளுகுவதையும் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டே செய்யத் தெரியும். அறிவாளியாயும் முட்டாளாயும் ஒரே நேரத்தில் நடிக்கத் தெரியும்.

மேற்படித் திறமைகளும் நடுத்தர வர்க்கத்தினரிடையே எடுபடும் ‘படித்தவர்’ எனும் இமேஜும் சேர்த்து தான் அவரை பிரதமர் நாற்காலியில் நீடிக்க விட்டுள்ளது. இன்று தேசத்தின் வளங்களனைத்தையும் கொள்ளையிட்டுப் போகும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டுத் தரகு முதளாளிகளுக்கும் இப்போதைக்கு இப்படி ஒரு அப்பிராணி மூஞ்சி தேவையாக இருக்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் பகல் கொள்ளைகளுக்குப் பயன்படுவார்களென்றால் மோடி போன்ற ஒரு ரத்தக் காட்டேரி ‘திறமையான’ நிர்வாகியாக அவதரிக்க முடியும். மன்மோகன் போன்ற ஒரு காரியவாதக் கல்லூளிமங்கன் ‘நல்லவராகவும், அப்பாவியாகவும்’ வேடம் போட்டுக் கொள்ள முடியும்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

பொதுத் தேர்தலை விஞ்சும் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல்

4.3.2011ல் தமிழகம் முழுவதும் சுமார் 53 ஆயிரம் வழக்கறிஞர்கள் வாக்களிக்கும் பார் கவுன்சில் தேர்தல் நடந்தது. 25 உறுப்பினர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்தலையொட்டி நடந்த பிரச்சாரங்களில்,

‘அன்பார்ந்த வழக்கறிஞர்களே… உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்… முதல் ஓட்டை அளியுங்கள்…’ என்ற குரல், தமிழக நீதிமன்றங்களில் கடந்த ஒரு மாதமாகக் கேட்டது.

கூடவே இன்னொரு ரகசியக் குரலும் ஒலித்தது. ‘சார், தம்பி, மாப்பிள்ள… நைட் பார்ட்டி இருக்கு, பாரின் சரக்கு, பிரியாணி ரெடி. அவசியம் வந்திருங்க. கூடுதலாக கொடைக்கானல், ஊட்டி, கோவா, கொடநாடு டூரும் உண்டு….’ பார் கவுன்சில் தேர்தலை இப்படியாக திருமங்கலம் இடைத்தேர்தல் தரத்துக்கு மாற்றி தமிழக வழக்கறிஞர்களை, நீதித்துறையை கவுரவப்படுத்தி அழகிரியை மிஞ்சியிருக்கிறார்கள், தற்போதைய பார் கவுன்சில் வேட்பாளர்கள் பலரும் அவர்களின் கைத்தடிகளும். பத்தாண்டுகளுக்கு முன்புவரை சீந்தபடாமல் இருந்த பார் கவுன்சில் தேர்தல் இன்று சாதி, சாராயம், காசு, பார்ட்டிகள் எனத் தூள் பறக்கிறது.

நாகர்கோயில் வழக்கறிஞர் சங்கம் 16 லட்சத்திற்கு மூடி முத்திரையிட்ட டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டு வசூலில் டாஸ்மாக் பாரை மிஞ்சியிருக்கிறது. மேலும் சில மாவட்டங்களின் வழக்கறிஞர் சங்கங்கள் ஓசியில் ஏ/சியாக மாற்றப்பட்டுள்ளன. சிவகங்கையில் கோவா டூர் சென்று வந்துள்ளார்கள். ஓட்டு கேட்கும் வேட்பாளர்களிடம் பல ஊர்களில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ‘IPL ஏலம்தான் சம்மதமா? ஏற்கனவே 4 பேர் கேட்டிருக்கிறார்கள்’ என வெளிப்படையாக ஒட்டு மொத்த வழக்கறிஞர்களின் வாக்குரிமைகளை விலை பேசியிருக்கிறார்கள். ஓட்டுக்காக வழக்கறிஞர்கள் சாதி ரீதியாக அணி திரட்டப்படுகிறார்கள். ரூ.3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஓட்டுக்கு விலை பேசப்படுகிறது. தேர்தலில் கள்ள ஓட்டு, பெட்டியை மாற்றுவது போன்ற அயோக்கியத்தனங்கள் எல்லாம் தனி! மொத்தத்தில் இடைத்தேர்தலில் ஓட்டுச் சீட்டு அரசியலில் கட்சிக்காரர்கள் பின்பற்றும் அத்தனை பிராடு, பித்தலாட்டங்களும் பார் கவுன்சில் தேர்தலில் பின்பற்றப்படுகிறது.

வேட்பாளர்கள் தகுதி

அகில இந்திய பார்கவுன்சில் துணைத் தலைவர் தனபால்ராஜ் சட்டக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிச் செய்த ஊழல் சேவைக்காக இன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டே களத்தில் நிற்கிறார்.

தமிழ்நாடு பார்கவுன்சில் சேர்மன் சந்திரமோகன் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்காக நீதிபதிகளிடம் கொடுக்கல் & வாங்கல் செய்ததற்காக உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார், அவரும் நிற்கிறார்.

தமிழ்நாடு – பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கக் கூட்டமைப்பின் சேர்மனாக வழக்கறிஞர் உரிமைகளை பாதுகாக்க முடியாத பரமசிவம், பார்கவுன்சில் பதவியை பிடித்து பாதுகாக்க இன்று களத்தில் பையும், கையுமாக, பார்ட்டி சகிதம் நிற்கிறார்.

நீதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லாபியிங் வேலை பார்ப்பதற்காகவே தனியாக சங்கம் தொடங்கிய வழக்கறிஞர் பிரபாகரன், தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருக்கிறார். ஊர், ஊருக்கு பார்ட்டி கொடுக்கிறார். இன்னும் சில அருமை பெருமைகள் கொண்ட வேட்பாளர்களும் நிற்கிறார்கள்.

ஓட்டுக்கு காசு கொடுப்பவன் வழக்கறிஞர் நலனுக்கு எதிரி

ஓட்டுக்கு காசு கொடுத்து, பல லட்சம் செலவு செய்து, உறுப்பினராக வருபவர்கள் எப்படியாவது போட்ட பணத்தை எடுக்கவே நிச்சயம் முயற்சிப்பார்கள். வழக்கறிஞர் நலனுக்குக் குழிபறிப்பார்கள். பார்கவுன்சில் சேர்மன் தேர்ந்தெடுப்பதில் ஊழலைத் தொடங்கும் இவர்கள், அடுத்த ஐந்தாண்டுகளில் வழக்கறிஞர்களைக் கூறுபோட்டு விற்க மாட்டார்களா? வெல்பேர் ஸ்டாம்பில் தொடங்கி, காசு வாங்கிக் கொண்டு ஆளும் கட்சி ஆதரவு கருங்காலி வக்கீல் சங்கங்களுக்கு அங்கீகாரம் தருவது வரை அனைத்தையும் செய்வார்கள். போலீசு அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் தரகு வேலை பார்ப்பார்கள். ஏற்கனவே சீரழிந்த நீதித்துறையை இன்னும் ஊழல் படுத்துவார்கள். இத்தகைய ஊழல் பெருச்சாளிகளுக்கு ஓட்டுப் போடுவதென்பது திருடனுக்கு வழக்கறிஞர்களே வீட்டுச் சாவியைக் கொடுத்து திருட அனுமதி கொடுப்பதைப் போன்றது.

நீதித்துறை ஊழலைப் பேச மறுப்பவர்கள்

தற்போது தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பலர் முதல் போட்டு செய்யும் தொழிலைப் போல காசைத் தண்ணீராய் இறைக்கிறார்கள். போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். அச்சுறுத்தும் நீதித்துறை ஊழல், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தாக்கப்பட்ட பிப்ரவரி – 19 சம்பவம், பன்னாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவிற்கு வருவது உள்ளிட்ட வழக்கறிஞர் சமூகத்தின் அடிநாதப் பிரச்சனைகளை மறந்தும் பேச மறுக்கிறார்கள்.

இன்று மட்டுமல்ல இதற்கு முன்பாக தமிழக வழக்கறிஞர்கள் உயிரைக் கொடுத்து நடத்திய பல்வேறு போராட்டங்களில் இன்று ஓட்டுக்காக அலையும் பலரையும் நாம் பார்த்திருக்க முடியாது. போராட்டத்துக்கு வராதது மட்டுமல்ல. போராடும் இளம் வழக்கறிஞர்களையும் வேலை இல்லாதவர்கள், பிழைக்கத் தெரியாதவர்கள் என்று ஏ.சி அறையில் அமர்ந்து பேசி போராட்டத்தை பின்னுக்கு இழுத்தவர்கள்தான் இன்றைய பல வேட்பாளர்கள்.

வழக்கறிஞர் சமூகத்தின் வீரம் செறிந்த போராட்டங்கள்

அரசு காக்கிச்சட்டை பயங்கரவாதம், நீதித்துறை ஊழல், சி.ஆர்.பி.சி & சி.பி.சி திருத்தச் சட்டங்கள், காவிரி, மீனவர் பிரச்சனைகள் என மக்களுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் வழக்கறிஞர்கள் தமிழகத்தில் முன்நின்றிருக்கிறார்கள்.

தலைமை நீதிபதி சுபாசன் ரெட்டியை ஊழலுக்காக தமிழகத்தை விட்டே விரட்டியடித்தது, ஈழத் தமிழ் மக்களுக்காக சமரசமின்றி போராடி ரத்தம் சிந்தியது எனத் தமிழக வழக்கறிஞர் சமூகம் சமூகநீதியில் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருந்திருக்கிறது.

கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதர்களாக வலம் வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஊழலை அவர்கள் முகத்திற்கு நேராக அம்பலப்படுத்தி சிறைக்கு அஞ்சாமல் போராடிவரும் சாந்திபூசன் பிரசாந்த்பூசன் ஆகியோர் வழக்கறிஞர் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான்.

பொதுநல வழக்குகள் மூலம் அரசின் அத்துமீறல்களை, நீதித்துறையின் மௌனத்தை அர்ப்பணிப்போடு எதிர்த்து போராடி மக்கள் உரிமைகளை ,நலன்களை பாதுகாக்கும் எண்ணற்ற வழக்கறிஞர்கள் சமூகத்தில் உள்ளார்கள்.

வாக்குரிமையை விற்க வழக்கறிஞர்களுக்கு உரிமை இல்லை

வழக்கறிஞர்களின் தீவிரமான போராட்டங்கள் சில தோற்றதற்கு முக்கியக் காரணம் வழக்கறிஞர்களை வழிநடத்துவதாகச் சொன்ன பிழைப்புவாத ஊழல் தலைமைதான். இன்றும் அதே கும்பல்தான் முன்னணியில் பார்கவுன்சிலைக் கைப்பற்ற வழக்கறிஞர்களை ஊழல்படுத்தி ஓட்டுக் கேட்டு வருகிறது. வழக்கறிஞர்கள் வாக்கை விற்கப் போகிறார்களா? அல்லது எதிர்த்துப் போராடி மோசமான வேட்பாளர்களை நீதித்துறையிலிருந்தே விரட்டியடிக்கப் போகிறார்களா? என்பதே கேள்வி!

மக்களுக்கான நீதியின் பங்களிப்பில் வழக்கறிஞர்கள் பாத்திரம் முக்கியமானது, தவிர்க்க முடியாதது. கல்வியறிவற்ற பாமர மக்களை விமர்சிக்கின்ற கற்றறிந்த வழக்கறிஞர்கள் ஓட்டுக்களை விலை பேச முடியுமா? அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறதா?

அரசின் அடக்கு முறையிலிருந்து மக்களைக் காக்க வழக்கறிஞர்களின் தொழிலுரிமை, வாழ்வுரிமை பறிக்கப்படுவதைத் தடுக்க நீதித்துறையின் தராசு சாயாமல் இருக்க வேண்டும். அதற்கு வழக்கறிஞர்கள் ஊழலுக்கு உடன்பட மறுப்பதோடு எதிர்த்தும் போராட வேண்டும்.

தவறான வழியில் தலைமைக்கு வருபவர்கள் வழக்கறிஞர் சமூகத்தை துரோகத்தின் எல்லைக்கே இட்டுச் செல்வார்கள். தற்போது கூட வழக்கறிஞர் சேம நலநிதி தொடர்பான அரசாணை வழக்கறிஞர்களுக்கே எதிராக இருக்கும் நிலையில் அதற்கு தேர்தல் ஆதாயம் கருதி பார்கவுன்சில் சேர்மனும், ஃபெடரேசன் சேர்மனும் ஒப்புதல் அளித்துள்ளனர். எனவே, லஞ்சப் பணத்தை முன்னிறுத்தாத நேர்மையுள்ள சாதாரண வேட்பாளர்களை வழக்கறிஞர்கள் தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து மக்களுக்காகப் போராட வேண்டும். அது வழக்கறிஞர்களின் கடமையும்கூட.

சே.வாஞ்சிநாதன்
வழக்கறிஞர் – மதுரை உயர்நீதி மன்றம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

சிறுமி தனம் படுகொலை! இந்தியாவின் வளர்ச்சி தந்த பரிசு !!

22
(மாதிரிப்படம்)

வறுமைக்குள் மூழ்கடிப்பட்ட ஏழைகளை குறிவைத்து நடத்தப்படும் கிட்னி திருட்டுக்குப் பின் இப்போது குறைவான முதலீட்டில் கொள்ளை லாபம் பெறும் வியாபாரமாய் உருவாகியிருப்பது ஏழை பெண் குழந்தைகளை கடத்தி விற்பதுதான். சில மாதங்களுக்கு முன்பு கிரிஜா என்னும் பெண் கடலூர், புதுவை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் 10,000 ரூபாய் மட்டுமே கொடுத்து பல குழந்தைகளை வாங்கி ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு இலட்சம் வரை வெளிநாடுகளுக்கும் உள்நாட்டு பணக்கார எஜமானர்களுக்கும் விற்றுள்ளார்.

விழுந்துவிட்ட விவசாயம், பஞ்சாலைத் தொழில், நலிவடைந்து போன சிறு வணிகம், வேலையிழப்பு என்று தமிழகத்தின் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கடும் பஞ்சம் நிலவுகிறது. கடனிலிருந்து மீள உணவுக்காக என கந்து வட்டிக்கு வாங்கும் கடன் கழுத்தை நெறித்து குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3,000 -க்கும் மேல்.

என்னை மிகவும் பாதித்த நிகழ்வு சேலம் காரியப்பட்டியைச் சார்ந்த ஜெயலட்சுமியின் கதைதான். அவர் வறுமை காரணமாக குள்ளம்பட்டியில் உள்ள குளத்தில் தனது மூன்று குழந்தைகளையும் வீசி விட்டு அவரும் குதிக்கிறார். மூன்று குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்து விட ஜெயலட்சுமி உயிர் தப்பி விடுகிறார்கள். இப்போது அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினீல் வெளி வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

பல லட்சம் கூலித் தொழிலாளர்களின் நிலை இன்று இப்படித்தான் உள்ளது. தனியார்மயமும் தாரளமயமும் இணைந்து ஏழைகளுக்கு வழங்கியிருக்கும் பரிசு இதுதான். மிகக் கொடூரமான வறுமை.

இந்த வறுமை நிலையும் , தற்கொலைகளும்  இரண்டு புதிய வியாபாரங்களை தமிழகத்திற்குக் கொண்டு வந்தன, 2004- இல் சுனாமி வந்து எல்லா வாழ்வாதரங்களையும் இழந்த மீனவ மக்களை குறிவைத்து கிட்னி திருடர்கள் கிளம்பினார்கள். தமிழகமெங்கிலும் லட்சக்கணக்கான மீனவ மக்களும் தலித்துக்களும் வறுமை காரணமாக வெறும் நாற்பதாயிரம் ரூபாய்க்கு கிட்னிகளை இழந்தனர். எண்ணூர் சுனாமி நகரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இப்படி கிட்னியை இழந்திருக்கிறார்கள்.

இதில் கைது செய்யப்பட்ட மருத்துவர் வெளியில் வந்து இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறார். சென்னை தி.நகரில் இருக்கும் பாரதிராஜா மருத்துவமனையும் இதில் ஒன்று. இப்போது அந்த மருத்துவமனை வாசலில் கருணாநிதியின் ஆளுயர விளம்பரப்பலகை வைத்து “கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் படி இலவச மருத்துவம்” பார்க்கப்படும்” என்ற போர்ட் வைக்கப்பட்டுள்ளது. சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு கோடீஸவர மருத்துவமனை, கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனை என கிட்னி திருடி ஆயிரக்கணக்கான மக்களின் வறுமையை பயன்படுத்தி வாழ்வை பறித்திருக்கிறார்கள். ரகசியமாக விசாரித்த போலீசும் அப்படியே இதை மௌனமாக்கி விட்டது.

தனலெட்சுமி – ஒரு குழந்தைப் படுகொலை!

சிறுமி தனலட்சுமி - சடலமாக
சிறுமி தனலட்சுமி – சடலமாக

அந்த வகையில் இப்போது கூட சேர்ந்திருப்பது பெண் குழந்தை விற்பனை. கடலூரைச் சார்ந்த செல்லப்பன், அஞ்சலையின் 11 வயது குழந்தை தனலெட்சுமி

கொலைகார தம்பதி - வக்கீல் ஜோஸ் சூரியன் - அவரது மனைவி சிந்து
கொலைகார தம்பதி – வக்கீல் ஜோஸ் சூரியன் – சிந்து

என்னும் தனம். வறுமை காரணமாக  தனலட்சுமி ரூபாய் இருபதாயிரத்திற்கு கேரளாவைச் சார்ந்த வக்கீல் குடும்பத்திற்கு வீட்டு வேலைக்காக விற்கப்பட்டிருக்கிறார். வக்கீல் ஜோஸ் குரியனும் , மனைவியான சிந்து என்பவரும் சேர்ந்து குழந்தை தனலெட்சுமியை நாய்க் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். சிறுமி தனத்தை பல நாட்கள் நிர்வாணமாகவே அடைத்து வைத்து உதைத்தும் துன்புறுத்தியிருக்கிறார்கள்.

கடந்த வியாழன் அன்று ஆலுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி தனம் அன்றே மருத்துவமனையில் இறந்தும் போயிருக்கிறாள். உடல் முழுக்க தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட தனத்தின் உடல் ஆலப்புழா மருத்துவமனையில் போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட போது உடல் முழுக்க எண்பது வகையான காயங்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள் மருத்துவர்கள். வயிற்றில் காயங்கள், தீக்காயங்கள், சிகரெட்டால் சுட்ட வடுக்கள், முதுகில் காயங்கள், என கொழுப்பெடுத்த சைக்கோ தம்பதிகளிடம் ஏழை தனம் சிக்கிக் கொண்டாளோ என்னவோ?

வெள்ளிக்கிழமை IPC 302 (கொலை வழக்கு)இன் படி பதிவு செய்து குரியனையும், சிந்துவையும் கைது செய்திருக்கிறது போலீஸ். தனத்தின் சித்திரவதையான இந்தப் படுகொலையைக் கண்டு மனம் பொறுக்காத ஆலுவா மக்கள் குரியனையும், சிந்துவையும் தாக்கப் பாய்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக ஆயுள் முழுக்க சிறையில் வைக்கப்பட வேண்டியவர்கள்தான் இவர்கள். என்றாலும் வறுமையை ஒழிக்காமல் தனங்களின் கொலைகளை எப்படி சரி செய்ய முடியும்?

வறுமையை ஒழிப்பது என்பது சில பணக்காரர்களின் கருணை மனப்பான்மையால் நடப்பதல்ல. செல்வந்தர்கள் உயர உயர வறுமையும் உயர்கிறது. இந்த வளர்ச்சியைத்தான் இந்தியாவின் வளர்ச்சி என்று தாராளமயதாசர்கள் கூப்பாடு போடுகிறார்கள். நாம் இந்த வளர்ச்சியை கருவறுக்கும்போது மட்டும்தான் தனம் போன்ற ஏழைச் சிறுமிகளை காப்பாற்ற முடியும்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மதுரையில் தடை செய்யப்பட்ட இராசயனங்கள் தயாரிப்பு ! அதிர்ச்சி ரிப்போர்ட் !!

“லேன்செஸ்” பன்னாட்டு நிறுவனத்தின் அபாயகரமான ரசாயனப் பொருட்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மறைமுக ஆதரவுடன் தயாரிப்பு!
தொழிலாளர்கள் போராட்டத்தால் அம்பலமானது !

மதுரை நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் விமான நிலையத்திற்கு அருகே உள்ள “லேன்செஸ்” இந்தியா பிரைவேட் லிமிடெட்” மற்றும் ‘பெனார் ஸ்பெசாலிட்டி புரொடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ ஆகிய இரண்டு தொழிற்சாலைகள் மிகவும் அபாயகரமான வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக சத்தமில்லாமல் ஈடுபட்டுள்ளன.  1977ஆம் ஆண்டு “சதர்ன் சின்டான்ஸ்” என்ற பெயரில் குடிசைத்தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை இன்று 130 தொழிலாளர்களுடன் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன், பன்னாட்டு கம்பெனிகளின் கூட்டுடன் நடத்தப்பட்டு வருகின்றது.  தற்போது அந்த கம்பெனியை மூடுவதற்கு அதன் முதலாளிகள் முடிவெடுத்துள்ள நிலையில் அங்கு பணியிலிருக்கும் தொழிலாளர்களது போராட்டத்தால் பல்வேறு ரகசியங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.  இவற்றை மூடிமறைக்க நிர்வாகம் – அரசு அதிகாரிகள் – அரசியல்வாதிகள் – போலீசு கூட்டணி அமைத்து தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பெனார் ஸ்பெஷாலிட்டி புரொடக்ட்ஸ் பி லிட், என்கிற கம்பெனி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான கானாடுகாத்தானுக்கு (காரைக்குடி) அருகிலுள்ள கோட்டையூரைச் சேர்ந்த பி.நாராயணன் செட்டியார் என்பவருக்குச் சொந்தமானது.  இவருடைய தம்பி பி.சுப்பையா செட்டியாருடன் இணைந்து 1977ல் இந்தத் தொழிலில் நுழைந்தார். ஆனால் இப்போது  தம்பியைப் பின் தொடர்ச்சி, பாத்தியங்கள் ஏதும் அற்ற நிலையில் வெட்டி விட்டுள்ளார்.  இவர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உறவினர் என்றும், அவருடைய ஆதரவுடன்தான் கம்பெனி நடைபெறுவதாகவும் சுற்றுப்புற‌ கிராமங்களில் செய்தி பரப்பப்பட்டுள்ளது.

பன்னாட்டு கம்பெனிக்கு பினாமி

பெனார் கம்பெனி நாராயணன் செட்டியாருக்கு சொந்தமான‌து.  ஆனால் “லேன்செஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்” என்கிற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்காக இங்கே உற்பத்தி நடைபெறுகின்றது.  லேன்செஸ் நிறுவனம் உற்பத்தியை நடத்தினாலும், தொழிலாளர்கள், நிலம், கட்டிடங்கள், இயந்திரங்கள் எல்லாமே பெனார் நிறுவனத்திற்குச் சொந்தமானது.  குத்தகை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி நடைபெறுகிறது. லேன்செஸ்-க்கும் தொழிலாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  உற்பத்திக்கு ஏற்றவாறு ஒப்பந்தப்படி எல்லா தொகையையும் பெனார் முதலாளி வாங்கிக் கொண்டு தொழிலாளர்களுக்கு அவர்தான் சம்பளம் உள்ளிட்ட சகலமும் கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் அவர் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும்.  மேலே எதுவும் கேட்க முடியாது.  தொழிலாளர்கள் அனைவரும் பெனார் கம்பெனியை பொறுத்தவரையில் கொத்தடிமைகள்தான்.

தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள்

இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் முதன்மையானது தோல் பதனிடும் வேதிப்பொருள்கள், பூச்சிக் கொல்லி, துணிகளுக்கு ஏற்றப்படும் சாயம், ரப்பர், பெயிண்ட் தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் ஆகியவை. தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை, பூச்சிக் கொல்லி மருந்துகளினால் ஏற்படும் விளைவுகளை அனைவரும் அறிவர்.  இவை மூன்றும் மண், குடிநீர், காற்று ஆகியவற்றை வெகுவாக மாசுபடுத்தும் தன்மை கொண்டவை.  1984ல் 25 ஆயிரம் பேரை கொன்று குவித்த போபாலில் பூச்சிக் கொல்லி மருந்துதான் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையிலிருக்கும் இந்தக் கம்பெனி வெளியிட்டுள்ள பட்டியலில் 29 வேதிப் பொருட்கள் அபாயகரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை வருமாறு:

LIST OF HAZARDOUS CHEMICALS
The following Raw Materials are declared as Hazardous as defined in the above Act under Rule 2000 and are used in our process.

ACETONE, ACRYLONITRILE, ANILINE OIL, CAUSTIC POTASH, D1 ETHYLENE GLYCOL, EPI CHLORO HYDRINE, ISO PROPYL ALCHOL, METHYL METHACRYLATE, MORPHOLIN, MONO ETHYLENE GLYCOL,
NITROCELLULOSE, ORTHO DINITRO CHLORO BENZENE, PREVENTOL TC, CAUSTIC SODA LYE 48%, FORMAIDEHYDE 37%, PHENOL, SULPHURIC ACID, ACETIC ACID, FORMIC ACID, LIQUOR AMMONIA,
PHOSPHORIC ACID, PREVENTOL IT 14, BENZOYL PEROXIDE, NAPHTHALENE CRUDE, MALEIC ANHYDRIDE, PHTALIC ANHYDRIDE, PREVENTOL CMK, PREVENTOL ON EXTRA, KATHON WT

இவையெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் தடைசெய்யப்பட்டவை. ஆனால் இங்கே மலிவு விலையில் உழைப்பை உறிஞ்சி, கொத்தடிமைகளை வைத்து இவை ரகசியமாகத் தயாரிக்கப்படுகின்றன.  இதிலே கேதோன் என்ற வேதிப்பொருள் மிகவும் அபாயகரமானது. இது தண்ணீர் மூலமாக வேகமாக பரவி ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று சொல்கிறார்கள்.  அதாவது வியட்நாமில் மரம், செடி கொடிகைள அழிக்க அமெரிக்கா பயன்படுத்திய ஏஜெண்ட் ஆரஞ்சு என்ற பயங்கர ரசாயன ஆயுதத்தை அடுத்து போராளிகளை அழிக்க பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன.  அதிலிருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளில் குதித்துத் தப்பித்தார்கள்.  இதை அறிந்த அமெரிக்கக் கொலைகாரர்கள் தண்ணீரில் குதித்த பின்னரும் உடலெல்லாம் பரவும் ஒருவகை ரசாயன குண்டுகளைக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தி மக்களைக் கொன்று குவித்தனர்.  அந்த வகையைச் சேர்ந்தது இந்த ரசாயனம் என்று தொழிலாளர்கள் சொல்கின்றனர்.

இந்த ரசாயனம் பட்ட இடத்தில் தண்ணீர் பட்டால் தோல் பலூன் போல ஊதிப்பெருத்து விடும் என்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அபாயகரமான உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொழிற்சாலையில் செய்து தரப்படவில்லை.  பல தொழிலாளர்கள் காசநோய், புற்று நோய், தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு அவர்களில்சிலர் இறந்தும் போயுள்ளனர்.  ஜே.ஐவன் என்ற தொழிலாளி தற்போது மரணப்படுக்கையில் உள்ளார்.  பல தொழிலாளர்கள் விரல் போன்ற உறுப்புக்களை இழந்துள்ளனர். தொழிற்சாலையின் உள்ளே மருத்துவமனை கிடையாது.  முதல் உதவி என்று பெயருக்கு உள்ளது.  வாரம் ஒரு மருத்துவர் 1 மணி நேரம் வந்துவிட்டுப் போவார்.

நிலத்தடி நீர், காற்று, சுற்றுச்சூழல் நாசம்

இந்தத் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள சின்ன உடைப்பு, பாப்பானோடை, ராமன்குளம், போக்குவரத்து நகர், பெருமாள் நகர், வலையங்குளம் போன்ற கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டு, கருப்பு நிறத்தில்தான் நிலத்தடி நீர் மாறி வருகிறது.  இம்மாசுபட்ட நீரை எந்த தேவைக்கும் பயன்படுத்த இயலவில்லை.  ரசாயனக் கழிவுகள் சட்டவிரோதமாக பூமிக்கு அடியில் புதைக்கப்படுவதுதான் இதற்கு காரணம்.  தவிர தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் அடர்த்தியான புகையினால் (பெரும்பாலும் நள்ளிரவில்தான் சிம்னி வழியாக திறந்து விடப்படும்) சுற்றியுள்ள கிராம மக்கள் தோல் நோய், கண் நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.  கண்மாய்களில் மீன்கள் செத்து மிதக்கின்றன.  அங்கே தண்ணீரைக் குடிக்கும் கால்நடைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன.

அவ்வப்போது எதிர்த்துப் போராடும் மக்களை நிர்வாகமும், அதிகாரிகளும் காவல்துறையை வைத்தும், நன்கொடை என்ற பெயரில் ஆட்களை விலைக்கு வாங்கியும் சமாளித்து விடுகின்றனர்.  மதுரை மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையர் பீமராஜ் என்பவருக்கு மாதம் ரூ. 5 லட்சம் தரப்படுவதாக நிர்வாகப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

34 ஆண்டுகளில் 9 கம்பெனிகள்- ஆனால் ஒரே முதலாளி- பலே!

1977ல் சதர்ன் சின்டான்ஸ் என்ற பெயரில் குடிசைத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கம்பெனி கடந்த 34 ஆண்டுகளில் (2) பி.என்.கெமிக்கல்ஸ், (3) பெனின்சுலார் கெமிக்கல்ஸ் (4) இந்தியன் சின்டான்ஸ் பி லிட், (5) பேயர் இண்டியன் சின்டான்ஸ் லிட்(இது பன்னாட்டு நிறுவனம்), (6)பெனார் ஸ்பெசாலிட்டி புரொடக்ட்ஸ் பி லிட்(1998)), (7) பேயர் ஸ்பெசாலிட்டி கெமிக்கல்ஸ், (8) பேயர் கெமிக்கல்ஸ் பி லிட், (9) லேன்செஸ் இந்தியா பி லிட் என பல அவதாரங்கள் எடுத்து தற்போது அதையும்  மூடுவதாக அறிவித்துள்ளது.

இதிலிருந்தே நாராயணன் செட்டியார் அவர்களின் தனித்திறன் வாய்ந்த திருவிளையாடல்களைப் புரிந்து கொள்ளலாம். தற்போது நிரந்தரப் பணியில் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் 76 பேர், மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 54 பேர் ஆக 130 பேர் இங்கே பணி புரிகின்றனர்.  இவர்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மொத்த சம்பளம் ரூ.8500/- மட்டும்.  இதர படி வகைகள் ஏதும் கிடையாது.  பணிக்காலம் குறைவாக உள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு ரூ.4500/- முதல் ரூ.5000/- வரை மட்டுமே சம்பளம்.  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.100/-  கடந்த மாதம் ஆலை மூடல் முடிவிற்கு பின் உற்பத்தியை விரைந்து முடிக்க அவர்களின் தினக்கூலி ரூ.200/- என உயர்ந்துள்ளது.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்தச் சலுகையும் கிடையாது.  நிரந்தர தொழிலாளர்களுக்கு சதவீத அடிப்படையிலான போனஸ் கிடையாது.  நிர்வாகம் நிர்ணயிக்கும் தொகைதான் போனஸ். வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி (ESIC) காப்பீடு போன்றவற்றுக்கு பிடித்தம் செய்யப்பட்டாலும், அது பற்றிய எந்த விபரமும் தொழிலாளிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை. கம்பெனி பெயர் மாற, மாற தொழிலாளர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி (ஒப்புதல்) பெறப்பட்டு கம்பெனி மாற்றப்படுவார்கள்.  தொழிலாளர் நல அதிகாரிகள், ஆய்வாளர்கள, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எல்லோரும் செட்டியாரின் செல்லப்பிள்ளைகள்.

கொத்தடிமை சாசனம்:

இதிலிருக்கிற தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக கூலி உயர்வு, சலுகைகள் போன்ற எதற்காகவும் போராட்டப்பாதையை தேர்ந்தெடுக்கவோ, சங்கம் கட்டவோ இல்லை என்பது வேதனையின் உச்சம்.  சமீபத்தில் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து உரிய சம்பளம், சலுகை கேட்ட 6 தொழிலாளர்களில் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். மீதி 5 பேருக்கு சம்பளம் தவிர வேறு சலுகை எதுவும் கிடையாது என்று பழிவாங்கப் பட்டுள்ளனர். இதில் ஒப்பந்தப் பணியாளர்கள் அவ்வப்போது 8 மணி நேர பணி முடித்த பின் 8 மணி நேரம் ஓவர் டயம் பார்க்க பணிக்கப்படுவார்கள்.

நல்ல குடிநீர் கிடையாது, பெயருக்கு கேன்டீன், மோசமான கழிப்பறை, தொழிலாளர் ஓய்வு அறை ஆயிரம் கண்ணுடைய கொட்டகை என்று செட்டியாரின் கருணை வெள்ளம் பாய்ந்தோடுகிறது.  அரசு அதிகாரிகள் அருகில் நின்று தியானம் செய்கின்றனர்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்ந்த தொழிலாளர்கள் விடுதலை முன்னணியுடன் இணைக்கப்பட்டுள்ள பெனார் ஸ்பெஷாலிட்டி ப்ராடக்ட்ஸ் பி லிமிடெட் தொழிலாளர் & நலச் சங்கம் 2010ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  எல்லா பணியாளர்களும் அதில் உறுப்பினர்களாக‌ உள்ளனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் பதிவு செய்யப்படாத ஒப்பந்தக்காரர்கள் மூலம் சப்ளை செய்யப்படுகின்றனர். நிர்வாகமும், ஒப்பந்தக்காரரும் ஏற்படுத்திக் கொண்டுள்ள பதிவு செய்யப்படாத ஒப்பந்தப் பத்திரம் அடிமை சாசனத்திற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு.  சுருங்கச் சொன்னால் முதலாளிகளின் நலனுக்காகக் கொடுக்கும் கூலிக்கு மேலாக எதையும் எதிர்பார்க்க மாட்டோம் இது சத்தியம், சத்தியம், சத்தியம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  படித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

ஆக்கிரமிப்பு:

கடந்த 34 ஆண்டுகளில் செட்டியார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை சுற்று வட்டாரத்தில் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவித்துள்ளார்.  தற்போது தொழிற்சாலை உள்ள சுமார் 150 ஏக்கர் நிலத்தில்
8 3/4 ஏக்கர் அளவில் ஊருணி உள்ளது.  அது அரசு புறம்போக்கு.  செட்டியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளது.  மேலும் ஆலையின் குறுக்காக வலையங்குளம் செல்லும் 30 அடி பாதையை (தார்ச்சாலை) இரும்புக்கதவு போட்டு அடைத்து தன்வசம் வைத்துள்ளனர் திருவாளர் நாராயணன் அன் கோ.  கேட்பார் யாருமில்லை.  இன்னும் உள்ளே போய் பார்த்தால் என்னென்ன தில்லுமுல்லுகள் இருக்குமோ “நாராயணனுக்கே” வெளிச்சம். கை தேர்ந்த கிரிமினல் முதலாளிதான் இவர்.

நாராயணன் செட்டியாரின் மிகத் தேர்ந்த நிர்வாகத் (கிரிமினல்) திறனுக்கு எடுத்துக் காட்டு – ஆலையில் சட்ட விரோதமாக உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்கள், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் போன்றவற்றையெல்லாம் வீடியோவில் பதிவு செய்து வைத்துக் கொண்டு லேன்செஸ் பன்னாட்டு நிறுவன முதலாளிகளிடம் காட்டி அவர்களையே மிரட்டி பணம் பறிக்கின்ற வேலையைச் செய்து வருகிறாறென்றால் இவருடைய திறமை ப.சிதம்பரத்தின் திறமைக்கு சற்று கூடுதலாகத் தெரிகிறது அல்லவா?

லேன்செஸ் நிறுவனம் தனது ஜாகையை மோடியின் குஜராத்திற்கு மாற்றிக்கொள்ள முடிவெடுத்து விட்டது.  எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன.  இந்த வைசியனோடு மாரடிக்க முடியாது என்று அந்த பன்னாட்டு பகாசுரன் ஓடிவிடத் தயாராக உள்ளான்.  இதில் செட்டியாருக்கும், பன்னாட்டு முதலாளிக்கும் ஏற்பட்டுள்ள உள்குத்து விவகாரங்கள் குறித்து நமக்கு தெரியவில்லை. ஆனால் மதுரையில் ஏற்பட்ட பாதிப்பு இனி குஜராத்திற்கும் வரும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆலை மூடல், வேலை நிறுத்தம்:

30/06/11 உடன் பெனார் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானவுடன், தொழிலாளர்கள் விழித்துக் கொண்டு களத்தில் இறங்கினர்.  தொழிலாளர் துணை ஆணையர், மதுரை அவர்களிடம் பெனார் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் (பதிவு எண் 421/TVR/2010) தங்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய இழப்பீடு கோரி கடந்த பிப்ரவரி 5 அன்று மனுக் கொடுத்துள்ளனர். தொழிலாளர் அலுவலர் (LO) இதுவரை 4 முறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் நிர்வாகத் தரப்பில் யாரும் வரவில்லை.  அதிகாரமற்ற தொழிலாளர் துறை அதிகாரிகள் தங்களுடைய சடங்குகளைப் பொறுமையாக நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இழுத்தடிப்பை ஏற்றுக் கொள்ளாத தொழிலாளர்கள் கடந்த 15 நாட்களாக உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போது உள்ளிருப்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.  தங்களுக்குள் ஒரு போராட்டக்குழுவை அமைத்துக் கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டம் மேலும் தொடர்கிறது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தொழிலாளர் விடுதலை முன்னணி, ம.க.இ.க., பு.மா.இ.மு., உள்ளூர் சங்கங்கள் சில மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போன்ற அமைப்புகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர.

மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், உயர் அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், உள்ளூரில் இருக்கும் ஏழைப் பங்காளன், அஞ்சா நெஞ்சன், தூங்கா நகரம் அண்ணன் அழகிரிக்கும் செய்தி சென்றடைந்து விட்டதாகத் தகவல்.  எதற்கும் மூச்!

இதோடு இந்த கெமிக்கல் நிறுவனம் மூடப்பட்டு முதலாளி வேறு நாடு சென்று விடுவார் என அப்பாவி தொழிலாளர்கள் நம்பியுள்ளனர்.  இந்த சச்சரவெல்லாம் முடிந்தவுடன் 150 ஏக்கர் நிலத்திலுள்ள சொத்தை விட்டுவிட்டு முதலாளி சென்றுவிட மாட்டார்.  இழுத்தடித்து,  தொழிலாளர் குடும்பங்களைத் துவளச் செய்து சொற்பத் தொகைகளை வீசியெறிந்து விட்டு, சில மாதங்கள் கழித்து வேறு ஒரு புதிய பெயரில் வேறொரு பன்னாட்டு நிறுவனத்தின் பெயருடன் நிறுவனம் தொடங்கி அதில் போராடுபவர்களில் சிலர் கூட அடிமாட்டு விலைக்கு புதிய தொழிலாளர்களாக சேர்க்கப்படலாம், அல்லது இதே குடும்பத்தைச் சேர்ந்த வேறொரு அடிமை சேர்க்கப்படலாம்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலின் பின்னணியில் உள்ளூர் முதலாளிகளின் கோர முகமும் இதுதான்.பன்னாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் நாராயணன் செட்டியார் தொழிலாளர்களின் இந்த சாத்வீகப் போராட்டத்திற்கா அஞ்சுவார்?  அவர் தயாரிக்கும் பயங்கரமான ரசாயனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தொழிலாளர்கள் ஒரு குண்டு தயார் செய்ய வேண்டும்.  அது வெடிக்கும் என்றால் நாராயணன் இறங்கி வரக்கூடும்.

_____________________________________________________________________
தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு,  மதுரை மாவட்ட கிளை
_____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!

விருத்தாசலம் - தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி !

மனித உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்ட கிளையின் சார்பில் விருத்தாசலம் பகுதியில் கடந்த ஆறுமாத காலமாக அனைத்து பள்ளி வாசல்களிலும் சென்று நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டணத்தை அச்சடித்து விநியோகித்தோம். பெற்றோர்களை திரட்டி விளக்கி ஆலோசனை கூட்டம், பிறகு மூன்று நாட்கள் நகரத்தின் பல பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம், அதன் மூலம் பெற்றோர்களிடம் கூடுதல் பணம் கட்டியதற்கான ரசீதுடன் புகார் மனு என தொடர்ந்து பிரச்சாரம் செய்தோம்.

இறுதியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை முற்றுகையிடுவோம் என நகரம் முழுவதும் சுவரொட்டி மூலம் அறிவித்தோம். பள்ளி நிர்வாகத்திடம் நேரில் கட்டணத்தை கட்டமாட்டோம் என சண்டை போட்டோம். கட்டணத்திற்காக பள்ளி நிர்வாகத்தால் துன்புறுத்தபட்ட மாணவர்களின்  பெற்றோர்களுக்காக நேரில் சென்று நியாயம் கேட்டபோது, கட்டுபடியாகாது பள்ளியை மூடவேண்டியதுதான் என்ற பதில் தந்தது நிர்வாகம்.

உயர்ந்த தரத்தில் கல்வியை விற்கின்ற பள்ளி ஒன்றில், பெற்றோர்களை அழைத்து கூட்டம் போட்ட நிர்வாகம், “அரசு கட்டணம் வேண்டும் என்பவர்கள் கை தூக்குங்கள்” என்றவுடன் பெற்றோர்களிடம் அமைதி நிலவியது. உடனேஅரசு கட்டணம் வேண்டுவோர் அரசு பள்ளிகளுக்கே சென்று விடுங்கள், இங்கே யாரும் வெத்தல பாக்கு வைத்து அழைக்க வில்லை, கட்டணத்திற்காக நான் பிச்சைகாரி போல அலைய வேண்டய அவசியம் இல்லைஎன்று ஆண்டை, அடிமைகளிடம் பேசுவது போல பேசினார் ஒரு நிர்வாகி.

கடலூர் மாவட்ட தனியார் பள்ளி முதலாளிகள் சங்கம் அவசரமாக கூடி “பணம் கட்ட முடியாதவர்கள் நகராட்சி பள்ளிக்கு செல்லலாம், ஏழை பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அஞ்சல் வழிக்கல்வி, நடமாடும் கல்வி, திறந்த வெளிகல்விககூடங்களை அமைக்கலாம்”,என ஆலோசனை சொன்னதுடன் “நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி கட்டணம் எங்களுக்கு கட்டுபடியாகாது, ஆண்டுக்கு 15 சதவீதம் ஏற்றிதரவேண்டும் என தீர்மானம் போட்டார்கள்.

பிறகு கடலூரில் காங்கிரசு எம்.பி அழகிரி, திமுக எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகியோரை அழைத்து இந்தக் கோரிக்கைகளுக்காக மாநாடு நடத்தி முடித்து விட்டனர்.

விருத்தாசலம் - தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி !

கூடுதல் கட்டணம் கட்டியதற்கான ரசீது, மேலும் கட்ட சொல்லி மாணவர்களை துன்புறுத்தல் புகாரை அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பிவிட்டு 1-3-2011 அன்று மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக, மீண்டும் நகரம் முழுவதும் பிரச்சாரம் செய்த்து மனித உரிமை பாதுகாப்பு மையம். பிறகு பள்ளிகள் தோறும் பிரசுரம், வீடு தோறும் தாய்மார்களிடம் அச்சம் தவிர்க்க விளக்கி அழைப்பு விடுத்தோம். காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்தது. தடையை மீறி விருத்தாசலம் பேருந்து நிலையத்திலுருந்து புறப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.

டி.இ.ஒ. “எனக்கு அதிகாரமில்லை” என எங்களுக்கு ஆறுதல் சொன்னார். போலீசார் சுற்றி வளைத்து மறித்தனர். அதிகாரம் பெற்ற நபர் பேசும் வரை முற்றுகை தொடரும்,என மக்களும், தோழர்களும் உறுதியாக அறிவிக்கவே “மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் இன்றே போராட்டக்காரர்களை அரசு மேல்நிலைபள்ளியில் சந்திக்கிறார்” என்பது உறுதியானவுடன் முற்றுகை தற்காலிகமாக விலக்கப்பட்டது.

மதியம் குறித்த நேரத்தில் காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பெற்றோர்களை ஆட்டோ பிரச்சாரம் மூலம் வீதி வீதியாக விசயத்தை சொல்லி அணிதிரட்டினோம். மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டண கொள்ளையை கொட்டி தீர்த்தோம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் “தமிழகம் முழுவதும் இப்படிதான் நடக்கிறது, பெற்றோர்கள் ஏன் கூடுதலாக பணம் கட்டுகிறீர்கள்,கட்டண பட்டியலை அறிவிப்பு பலகையில் ஒட்ட சொல்லி மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் உத்திரவிட்டுள்ளார், நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்று கூசாமல் பொய்யை சொன்னார்.

அதற்கு மக்கள் “விருத்தாசலத்தில் எத்தனை பள்ளி கூடத்திற்கு சென்று கண்காணித்தீர்கள், ஒரு பள்ளி கூடத்தில் கூட ஒட்டவில்லை, உங்கள் உத்திரவை எந்த பள்ளி முதலாளி மதிக்கிறார்” என எதிர்கேள்வி கேட்டு உண்மையை எடுத்துரைக்க ஆய்வாளர் அமைதி காத்தார்.

“மனித உ¡¢மை பாதுகாப்பு மையத்தின் சார்பில் திரட்டிய ஆதாரங்களை உங்களிடம் புகாராக கொடுத்துள்ளோம், நடவடிக்கை எடுப்பீர்களா? என்றதற்கு “எடுக்கிறேன், எங்கள் துறை சார்பில் விண்ணப்பம் கொடுத்துள்ளார்கள், அதை ரசீது ஆதாரங்களுடன் ஒரு வாரத்திற்குள் எனக்கு அனுப்புங்கள்” என்றார். இதை தமிழகம் முழுவதும் விநியோகித்து வருகிறோம்.

தனியார் பள்ளி முதலாளிகள் கட்டுபடியாகாது என கூடுதலாக கட்டணம் வசூலிப்பது ஊரறிந்த உண்மை. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களுக்கு அரசு உத்தரவை மீறும் தைரியத்தை வழங்கியது யார்? எனக் கேட்டோம். பெற்றோர்கள் யாரும் ஆதாரங்களுடன் எங்களுக்கு புகார் அனுப்பவில்லை என்று கூறினார் அந்த ஆய்வாளர்.

“கண் முன்பு தவறு செய்பவர்களை பிடிப்பதற்கு புகார் கேட்கிறீர்களே, புகார் பெறுவதற்கு என்ன முயற்சி செய்தீர்கள்? பெற்றோர்கள் அச்சத்தை போக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு எத்தனை முறை எச்சரிக்கை செய்தீர்கள்? நாங்கள் உங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை,தனியார் பள்ளிகள் மீது கட்டணத்திற்காக நீங்கள் போட்ட உத்திரவை ஏன் அமுல்படுத்த வில்லை” என்று கேட்கிறோம், ஆறுமாதம் நாங்கள் பிரச்சாரம் செய்து 60 க்கு மேற்பட்ட புகார் மனுக்களை பெற்றோர்களிடம் பெற முடியும் என்றால் ,அரசு அதிகாரியாகிய உங்களால் ஏன் முடியாது? என்றோம்.

பொதுமக்களின் கேள்விகணைகளால் திணறிய அதிகாரி இறுதியாக “உங்கள் கோரிக்கையை  நடைமுறைபடுத்துகிறேன், பத்திரிகையாளர்களே எழுதிகொள்ளுங்கள், அனைத்து தனியார் பள்ளிகளிலும் நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டண விபரத்தை பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பு பலகையில் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கிறேன், நாளை 12-00 மணிக்குள் நடக்கும்,மேலும் அரசு கட்டணத்திற்கு கூடுதலாக பெற்றோர்கள் கட்டவேண்டாம். தனியார் பள்ளிகளும் வசூலிக்க கூடாது. மாணவர்களை துன்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுதுவதற்கும் கட்டணம் கட்டுவதற்கும் தொடர்பில்லை பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம், என ஆவேசமாக அறிவித்தார்.

விருத்தாசலம் - தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி !

அவரை அனுப்பி விட்டு வந்திருந்த பெற்றோர்களிடம் தொடர்ந்து அரசையும், தனியார் பள்ளி முதலாளிகளையும், கண்காணிக்க வேண்டும், அப்போதுதான் நமது கல்வி உரிமையை பாதுகாக்க முடியும் என்றோம். தனியார் பள்ளி முதலாளிகள் கட்டணத்தில் மட்டுமல்ல, புத்தகம் விற்பதில், யூனிபார்மில், செருப்பில், அடிக்கிற கொள்ளை, மேலும் தாய்மொழி தமிழ் வழிக்கல்வியை, சமச்சீர்கல்வியை எதிர்த்து போராடுகிறார்கள், தடையுத்திரவு பெறுகிறார்கள், உச்சநீதிமன்றம் வரை கொள்ளையடித்த பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள், ஆங்கிலம் மட்டும் கற்பதற்கு நாம் என்ன அடிமைகளா?குழந்தைகளை பணையக்கைதியாக வைத்து பணம் பறிப்பதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும்” என்பதை விளக்கி தனியார் பள்ளிகளின் மாணவர்கள் நல பெற்றோர் சங்கம்என்று உருவாக்கி தனியார் பள்ளிகளை கண்காணிப்பதுடன்  பெற்றோர்களை சங்கமாக திரட்டவேண்டும். இந்த வெற்றி செய்தியை பிரசுரமாக அச்சடித்து நகரம் முழுவதும் விநியோகிக்க வேண்டும், என்ற முடிவுடன் புதிய சங்கத்திற்கு நிர்வாகிகள் தேர்வுடன் பெற்றோர்கள் அச்சம் கலைந்து நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.

மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்களுக்கு உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதை அடைவதற்கு தடையை மீறி பாதிக்கபட்டவர்களின் கையை பிடித்து அழைத்து சென்று அவர்களது போராட்டத்தின் மூலம் அதை அடைவதற்கு கை கொடுக்கிறது என்பதறத்கு இந்த அனுபவம் ஒரு நிரூபணம்.

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்க்காக பெற்றோர் இனியும் அஞ்ச வேண்டியதில்லை. மக்கள் சக்தியாக ஒன்று திரண்டால் விருத்தாசலத்தில் நடந்த இந்த நிகழ்வு தமிழகம் முழுமைக்கும் பரவும்.

_____________________________________________

– மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாசலம்
_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்


பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!!

96
பச்சையப்பன் கல்லூரி பஸ் டே

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!
கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!

” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு “

23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?

மேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.

இப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு (preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத் தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.

கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது, ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.

தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.

அவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் , என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.

இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.

இதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.

ஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.

பச்சையப்பன் கல்லூரி பஸ் டே

ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் “

எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.

பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.

பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.

இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.

அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.

காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன?

ஈராண்டுகளுக்கு முன்புவரை “ரூட்” பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.

உடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள். அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.

இது ஏதோ “பஸ் டே” பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.

NDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் ” மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது” என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் “மாணவர் சக்தி “. தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.

மாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.
நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.

மாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். ” கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்” மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல’ நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.

இதோ !!!!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம் நாம் ?

_________________________________________________________

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு) , சென்னை
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

  • இந்திய அரசே, தமிழக மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்கு !

  • கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை உறுதி செய் !

மதுரை உயர்நீதிமன்றத்தில்  மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கு!

சட்டம் யாருக்கு, எந்த வர்க்க நலனுக்கு சாதகமாக இருக்கிறது என்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.

உலகிலுள்ள எந்த நாடும் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதே வழக்கமாக இருந்திருக்கிறது. காரணம், சர்வதேசகடல் சட்டம் சரத்து 73, மீனவர்களை கடலில் சுடுவதை தடைசெய்திருக்கிறது. இச்சட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கையொப்பம் இட்டுள்ளன. இதில், இந்தியாவும், இலங்கையும் கூட அடக்கம்.

ஆனால், இச்சட்டத்தை இலங்கை அரசு இதுவரை மதித்து நடந்ததில்லை. இந்திய அரசும் இதை தட்டிக் கேட்டதில்லை. பதிலாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை குருவிகள் போல சுட்டுத் தள்ளுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. இதுவரை 500 க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மீது 600க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு விசாரணையின்றி கடலோர மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் கொலை, கொலை முயற்சி  மற்றும் ஆயுத சட்டப்படியான கடுமையான குற்றங்கள். இக்குற்றவாளிகளை இந்திய நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த இந்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 12.01.2011 மற்றும் 22.01.2011 ஆகிய தேதிகளில் வீரபாண்டியன், ஜெயக்குமார் ஆகிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமாக சுடப்பட்டு, கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளனர். இது சர்வதேச கடல்சட்டங்களை மீறிய செயலாகும்.  2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய – இலங்கை கூட்டறிக்கைப்படி இந்திய மீன் பிடி படகுகளை சுடக்கூடாதென ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு இதையும் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்திய அரசியல் சட்டம் சரத்து 19 (1) ( g) ன் படி மீன்பிடி உரிமை, தமிழக மீனவர்களின் அடிப்படை உரிமையாகும். அதே போல்  இந்திய அரசியல் சட்டம் சரத்து 21ன்படி மீனவர்களூக்கு வாழ்வுரிமையும் அடிப்படை உரிமையாகும். தனது குடிமக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசியல் சட்டப்படி அரசின் கடமையாகும். இப்படி தனது குடிமக்களின் அடிப்படை உரிமைகளான தொழில் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு அக்கடமையிலிருந்து தவறியிருக்கிறது.

அத்துடன் இலங்கையில் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்க்காக தனது சொந்த நாட்டு மக்களின் நலன்களைப் பலியிட்டு வெறுமனே ராஜதந்திர நாடகங்களை நடத்தி  வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் பணக்கார மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட போதும், மும்பையில் தாஜ் ஓட்டல் தாக்கப் பட்டபோதும், சிலிர்த்து எழுந்தது. தேசபக்தி நாடகமாடி மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது. குஜராத் தொழிலதிபர்களின் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஒரு உயிர் கூட சேதமடையாத நிலையில் இந்திய கடற்படையை விரைந்து அனுப்பி நடவடிக்கை எடுத்தது.

இப்படி ஆளும் வர்க்க நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்திய அரசு, தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. இதனால் தமிழக மீனவர்கள் இந்திய அரசு தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆகவே மீனவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்சும், இலவசமாகத் துப்பாக்கியும் இந்திய அரசு வழங்க வேண்டும். இத் தற்காப்புரிமை இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 96 – 100; வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 3 ஆகியவற்றின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படை செய்துள்ள குற்றங்கள், அது தொடர்பான வழக்குகள், வழக்குகள் மீதான இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒரு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு அமைப்பின் மதுரைக் கிளை துணைச் செயலரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சே.வாஞ்சி நாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அதேபோல் மற்றொரு வழக்கில் ராமேசுவரம் மன்னார் வளைகுடாப் பகுதியானது, பல்வேறு அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் நிரம்பிய பகுதி என்பதால் இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சீசன் நேரங்களில் மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடிப்பார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.

இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள் 1974, 1976 ன் படி கச்சத் தீவுப்பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்பந்தங்களின்படி  நேரடியாக கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு அளித்தால் அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படும் என்பதால் சூழ்ச்சியாக கடல் எல்லையை வரையறுப்பது என்ற அடிப்படையில், கச்சத்தீவிலிருந்து இந்திய கடல் எல்லையை வரையறுக்காமல் திட்டமிட்டே, கச்சத்தீவு இலங்கை கடற்பகுதியில் வருமாறு மாற்றி வரையறுக்கப்பட்டு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. எனவே கச்சத்தீவை மையப்படுத்தி தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் கடல் எல்லையை இந்திய அரசு புதிதாக வரையறுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேற்படி வழக்குகள் 15.02.2011 ல் நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து கச்சத் தீவு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..

இந்த வழக்கு தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிக முக்கியமான வழக்காகும். இதில் எழுப்பட்டுள்ள கேள்விகளுக்கு உயர்நீதிமன்றம் என்ன விடை தரும், வழக்கை தள்ளுபடி செய்யுமா என்றெல்லாம் வாசகருக்கு கேள்வி எழலாம்.

எனினும் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசின் கீழ் வாழும் இந்த மீனவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தும் உரிமையை கோருவது சட்டப்படியும், அரசியல்ரீதியாகவும் சரியானதே. நீதிமன்றம் இதற்கு முகங்கொடுக்காமல் போனால் நாம் மக்கள் மன்றத்தில் இந்த கோரிக்கையை வைத்து போராடுவதே சரியாக இருக்கும்.

_________________________________________________________

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உயிர்த்தெழு!

மெளனத்தை உடை.உயிர்த்தெழு
மர உதடு திற
பேசு !

பூமியின் புன்னகையை
மீட்டுத் தரும்
வேட்கையோடு
முன்முளைத்த மரபுகளை
முறித்தெறியும் வேகத்தோடு
பேசு !

கலைகளின்
ஒப்பனைகளைக் கழற்றி
நிகழ்வின் காயங்களை
வலியின் கனத்தோடு
விவரி !

பூவெறிந்து
பாவெறிந்து
கண்ணீர் எறிந்து
கற்களைக் கரைக்கும்
முயற்சியைத் துற.

அர்த்தங்களின்
அடர்த்தி குறையாத
ஆவேசத்தோடு
வீசு சொற்களை!
வேர்வரை விழட்டும்
மடமைகள்

இயல்களைத்
தெரிந்து கொள்.
இசங்களைப்
புரிந்து கொள்
பேசு!

சீழ்பிடித்த
சிகரங்களின் உள்ளழுக்கை
உண்மை விரல்களால்
தொடு
முகவரிகளின்
அக வரிகளை ஆய்வு செய்

உன்னை
இயல்பாய் வெளிப்படுத்து
பேசு!

ஞானவெறி கொள்!
ஞாலவெளி பற.

____________________________

– தீபன் , புதிய கலாச்சாரம், மே 2000
____________________________

வினவுடன் இணையுங்கள்

ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?

தனது இரு மகன்களுடன் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெயின்ஸ் பாதிரியார் - அவரை படுகொலை செய்த இந்து மதவெறியன் தாராசிங்
தனது இரு மகன்களுடன் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெயின்ஸ் பாதிரியார் – அவரை படுகொலை செய்த இந்து பயங்கரவாதி தாராசிங்

ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர்.  இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி 11 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

ஒரிசா உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இம்மி பிசகாமல் உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.  “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது.  இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன?  அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.

இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ்.  இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது.  இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது.  நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல ஸ்டெயின்ஸ் பாதிரியாருக்கு ஒரு பாடம் புகட்டுவது மட்டும்தான் தாரா சிங்கின் நோக்கம் என்றால், அவர் தனது இரு குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஜீப்பைக் கொளுத்தியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது.  அவரை எழுப்பி மிரட்டிவிட்டு, ரெண்டு தட்டுதட்டிவிட்டுப் போயிருக்கலாம்.  ஆனால், தாரா சிங் தலைமையில் வந்த கும்பலோ, மனோகர்பூர் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அக்கிராமத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்தனர்.  தீ வைக்கப்பட்ட ஜீப்பில் இருந்து அம்மூவரும் தப்பித்துவிடாதபடி ஜீப்பைச் சுற்றி நின்றுகொண்ட அக்குண்டர்கள், அம்மூவரும் கருகி இறந்தபின்தான் அக்கிராமத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.

ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதம் மாற்றும் பாதிரியார்கள், மதம் மாறிய பழங்குடியினரை மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை.  இந்தியத் தண்டனைச் சட்டங்களின்படி பயங்கரவாதக் குற்றமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டிய இக்கொலையை, நீதிபதிகள் சாதாரண கொலை வழக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.

ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்டு மூவரை உயிரோடு கொளுத்திக் கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் கருணை காட்டியிருக்கிறது.  எப்பேர்பட்ட நடுநிலை! எப்பேர்பட்ட மதச்சார்பின்மை!

இப்படுகொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வாத்வா கமிசன், “1991-க்கும் 1998-க்கும் இடைபட்ட காலத்தில் ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் – படுகொலை நடந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் மாவட்டம் – குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இக்காலகட்டத்தில் கிறித்தவ மக்கள் தொகை அதற்கு முந்தைய காலத்தைவிட 575 எண்ணம்தான் அதிகரித்திருக்கிறது.  இது இயற்கையான உயர்வுதான்” எனக் குறிப்பிட்டுள்ளது.  ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ இந்த உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மதம் மாற்றுவதைத்தான் அபாயகரமானதைப் போலத் தீர்ப்பு எழுதியுள்ளனர்.

‘‘பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகளின் சூக்குமமான  வார்த்தைகளுக்கு, “கிறித்தவர்கள் மருந்து கொடுத்து, கல்வி கொடுத்துப் பழங்குடியின மக்களை மதம் மாற்றுவது சட்டப்படி குற்றம்” என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கையைத்தான் பொழிப்புரையாக எழுத முடியும்.

இக்காவித் தீர்ப்பைக் கண்டித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவுடன், “பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” என்ற வரிகள் வரும் பத்தியைத் தீர்ப்பில் இருந்து நீதிபதிகள் நீக்கிவிட்டனர்.

இதை நீக்கியவுடன்,  ” தாரா சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வி வந்துவிடும் என்பதை உணர்ந்திருந்த நீதிபதிகள், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை அதிகரிக்கத் தேவையில்லை” எனத் தீர்ப்பைத் திருத்தியும் விட்டனர்.

தாரா சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் நீதிபதிகள் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

600-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட மும்பக் கலவரம் நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன.  2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம் நடந்து 8 ஆண்டுகள் மறைந்துவிட்டன.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தால், இக்குற்றச் செயல்களைப் புரிந்த இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவருக்குக்கூட அதிகபட்ச தண்டனை அளிக்கவே முடியாது.

“பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்பதற்குப் பதிலாக, “மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையீடு செய்வதையும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பு தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.  முழுக்க நனைந்த பின்னும் முக்காடு போட்டுத் திரிவது   என்பது இதுதானோ!
__________________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2011
__________________________________________________

பாண்டிச்சேரி கெம்பாப் கெமிக்கல் ஆலை: காத்திருக்கும் மற்றுமொரு போபால் விபத்து?

பாண்டிச்சேரி கெம்பாப் ஆலையில்
பாண்டிச்சேரி கெம்பாப் ஆலை விஷவாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சி

றக்க முடியுமா? போபால் விஷவாயு படுகொலைகளை!

போபால் விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட கொடூரங்களை நம்மில் எவரும் மறந்திருக்க மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் (இரண்டாம் தலைமுறையினர்) அதன் கொடூரத்தை தனது கருவிலிருந்தே சுமக்கின்றனர். இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இது தொடரும் என்று தெரியவில்லை.

ஆனாலும் மக்கள் விரோத அரசாங்கமோ இது போன்ற ஆலைகளைத் தடை செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறது. “இது போன்ற பேரழிவுகளை விபத்து என்றும், எதிர்பாராமல் நடைபெறும் இவைகளுக்கு பாதுகாப்பு வழிகளை சரி செய்து கொண்டால் விபத்தினைத் தவிர்த்து விடலாம்; நாட்டுக்குத் தேவையானதை உற்பத்தி செய்ய வேண்டுமல்லவா?” என்றெல்லாம் சில அறிவுஜீவிகள் கூறுகின்றனர்.

இது விபத்தா? ஒரு விபத்தின் மூலம் முதலாளித்துவம் பாடம் கற்றுக் கொள்ளுமா? நாட்டின் தேவை என்பது உண்மையில் யாருக்கானது?

அழிவின் விளிம்பில் பாண்டிச்சேரி மக்கள்

போபால் போன்று ஒரு பெரும் அழிவுக்கு உட்பட வேண்டிய நிலையிலிருந்து பாண்டிச்சேரியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் தப்பித்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல‌. இது வெறும் பீதியூட்டலோ, ஊதிப்பெருக்கி வெறுப்பைக் காட்டுவதற்காகவோ இதனைக் குறிப்பிடவில்லை.

கடந்த ஜனவரி 26 அன்று காலை சுமார் 7-30 க்கு குடியரசு தின‌ அணிவகுப்புகளும் கலைநிகழ்சிகளும் பாண்டிச்சேரியின் கடற்கரையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும்போது பாண்டிச்சேரியின் இன்னொருபுறம் காலாப்பட்டு என்ற இடத்திலுள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு அரசு பொது மருத்துவமனையை நோக்கிச் சென்றுள்ளனர்.

பாண்டிச்சேரி கெம்ஃபாப் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் வி.ஆர். ரகுராமன் கூறுவதைப் படியுங்கள்.

“குளோரின்  வாயுவைக் கொள்கலனுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத‌விதமாகக் கசிந்துள்ளது. இவ்வாறு கசிவு ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் “குளோரின் உணர்கருவி” அன்று வேலை செய்யவில்லை. ஆனாலும் அங்கு வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளி அதை உணர்ந்து எச்சரிக்கை செய்துவிட்டு உடனடியாக அதை நிறுத்தி விட்டார். இரண்டு நிமிடங்களில் தவறு கண்டுபிடிக்கப்பட்டு கசிவை தடுத்து நிறுத்தி விட்டோம். காற்று சற்று பலமாக இருந்ததால் தென்பகுதியில் கொஞ்சம் பரவி விட்டது.”

பாண்டிச்சேரி கெம்பாப் ஆலை விஷவாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சி
மருத்துவமனைக்கு தூக்சிச் செல்லப்படும் தொழிலாளி

கெம்ஃபாப் அல்காலிஸ் லிமிடெட் (Chemfab Alkalis Limited) ,  பாண்டிச்சேரியிலுள்ள காலாப்பட்டு என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் கெமிக்கல் ஆலை இது. நாளொன்றுக்கு 106 டன் காஸ்டிக் சோடாவும், சுமார் 90 டன் திரவ குளோரினும், ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஹைட்ரோ ஹைப்போ குளோரைட், ஹைட்ரஜன் வாயு போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு இதேபோல‌ பெரிய கெமிக்கல் ஆலை ஒன்று கடலூரில் உள்ளது. பாண்டிச்சேரி தவளக்குப்பம் என்னுமிடத்தில் இவர்களுக்குச் சொந்தமான ஒரு ஆலையும் பிரச்சினையால் மூடப்பட்டுவிட்டது.

போபால் விஷவாயுக் கசிவு எதனால் ஏற்பட்டது? கொள்கலனுள் வைக்கப்பட்ட மிதைல் சயனேட் என்ற வாயு குளிரூட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். அந்த குளிரூட்டும் எந்திரம் பழுதாகி வேலை செய்யவில்லை. தொழிலாளர்கள் இதனை முறையிட்டும் நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. சில டிகிரி வெப்பம் ஏற கொள்கலன் வால்வுகள் வெடித்து விஷவாயு வெளியேறி விட்டது. பல இலட்சம் மக்களின் வாழ்க்கையே அழித்தொழிக்கப்பட்டு விட்டது.

கெம்ஃபாப் நிறுவனத்திலுள்ள எச்சரிக்கை மணி குளோரின் கசிந்தால்தான் வேலை செய்யும். அதனால் அது வேலை செய்கிறதா இல்லையா என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. எதேச்சையாக அந்த தொழிலாளி கவனித்து விட்டதால் (அதுவும் இரண்டு நிமிடத்தில்) வால்வை அடைத்து நிறுத்தி விட்டார். காற்றின் போக்கு தொழிலாளியின் பக்கமாக திரும்பியிருந்தால், தொழிலாளி முதலில் மயக்கமடைந்து இங்கும் ஒரு போபால் நிகழ்ந்திருக்கும். இது வெறும் பீதியூட்டல் இல்லை. இரண்டே நிமிடம்தான் என்று சொல்ல ரகுராமன் கூட உயிருடன் இருந்திருக்க முடியாது.

பழுது பார்க்கச் சொன்னதையே பழுது பார்க்காத மூலதனம் பழுதா இல்லையா என்று தெரியாததை பழுது பார்க்குமா? முதலாளித்துவத்தின் இலாப விதிதான் அதனை அனுமதிக்குமா? அப்படி முறையாக பராமரித்திருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

இரண்டே நிமிடம்தான் என்றுச் சொல்லியுள்ளார் ரகுராமன். அந்த இரண்டு நிமிடக் கசிவு அருகிலுள்ள மரஞ்செடி கொடிகளின் இலைகளை பொசுக்கி விட்டது. அருகிலுள்ள‌ குடியிருப்புகளில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைசுற்றலும் குமட்டலும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை பதிவுப்படியே 395 பேருக்கு பாதிப்பு என்று தினமலர் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. அதில் குழந்தைகள் 13 பேர்.

இந்தத் தொழிற்சாலையில் இருந்து ஏழு கிலோமீட்டர் சுற்றளவிலேயே பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துமனை, புதுவை பல்கலைக்கழகம், புதுவை பொறியியல் கல்லூரி. புதுவை சட்டக் கல்லூரி போன்றவை அமைந்துள்ளன. அந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள‌ நான்கு ஊர்களின் மக்களையும் சேர்த்தால் 30,000- பேர் இப்பகுதியிலேயே வசிக்கிறார்கள்

இது மக்கள் அரசாங்கமா?

புதுநகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இதுகுறித்த தகவலை தெரிவிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். மக்களின் நண்பர்களான போலீசு “நீ ஒருவன்தான் ஊரில் இருக்கியா, போயா போய் உன் வேலையைப்பாரு” என்று விரட்டி விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் பயந்துபோய் அரசு பொது மருத்துவமனைக்கும், அருகிலுள்ள பாண்டிச்சேரி….(பிம்ஸ்)….. என்ற தனியார் மருத்துவமனைக்கும் பதறியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். கருணைமிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் “காசு வாங்குவதற்காக சும்மா நடிக்கிறீர்களா?” என்று மக்களைக் கேவலப்படுத்தியுள்ளனர். மேலும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், புறநோயாளியாக வைத்திருந்து முதலுதவி மாத்திரம் செய்து அவர்களை அவசர அவசரமாக வெளியே விரட்டியுள்ளனர்.

மக்கள் அரசாங்கமாகவும், மருத்துவர்கள் அதன் ஊழிய‌ர்களாகவும் உண்மையாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? மருத்துவமனைக்கு வந்த மக்களுக்கு முறையான உடனடி தீவிர சிகிச்சையும், பாதிக்கப்பட்ட இடத்திற்கு மருத்துவக்குழுவாக சென்று அங்குள்ள அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியும் இருக்க வேண்டும். முதலாளிகளைக் காப்பாற்றி அவர்கள் போடும் எலும்புத் துண்டுக்காக அலைபவர்களிடம் இதனை நாம் எதிர்பார்க்கலாமா?

விபத்து நடந்த பிறகும் வழக்கம் போல அரசு எந்திரங்கள் எதன் மீதோ பெய்த மழையாக இருக்க, பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதும் ஓடோடி வந்தது அரசு. 144 தடையுத்திரவை பிறப்பித்து ஆலைக்கு அரண் அமைத்து அங்கே மறியலில் ஈடுபட்ட மக்களை கலைத்துள்ளனர்.

1990 களிலும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பும் இதே போல விபத்து இந்த ஆலையில் நடந்துள்ளது. இந்த ஆலை வெளியேற்றும் கழிவு நீரால் கடலின் மீன் வளம் பாதிப்படைந்து பலமுறை இப்பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அன்றும் அரசு அதிகாரிகள் ஆலையை மூடி சீல் வைப்பதாக நாடகமாடியுள்ளனர். இன்றும் அதே நாடகம்.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களை ஏமாற்றுவதில் மக்கள் பிரதிநிதிகள், வாழ வழிவிடாத சகோதரன் எழவு வீட்டில் ஒப்பாரி வைப்பது போல ஓடோடி வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் தொழிற்சாலையை மூடி விட்டதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் புளுகி விட்டு கார்களில் பறந்து விட்டனர்.
அன்றாடம் பருகும் நகராட்சி குடிநீரில் கிருமிகள் உள்ளன என்று பன்னாட்டு “அக்வாபினாய’ பருகும் இந்த கன‌வான்கள், மக்கள் வசிக்கும் பகுதியில் ஆபத்தான விஷவாயுத் தொழிற்சாலையை அனுமதித்ததன் மூலம் மக்களின் உயிர்களை மயிரளவுக்கும் மதிக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை.

காலாப்பட்டு எம்.எல்.ஏ.வும், கல்வி அமைச்சருமான ஷாஜகான் (இந்த உத்தமரின் அப்பா பரூக்மரைக்காயர் முதல்வராக இருந்த போதுதான், இந்தக் கொலைகார இரசாயன ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது) இப்படி ஒரு ஆபத்தான இரசாயன தொழிற்சாலை தனது தொகுதியில் இருக்கிறதே; இதில் விபத்து ஏற்பட்டால் நமது தொகுதியில் வாழும் 30,000 மக்களின் உயிர்களும் போய்விடுமே என்ற அக்கறை கொஞ்சமும் இல்லாமல், விபத்து நடந்த நான்காவது நாளே (31-01-2011) தங்கத் தேரிழுத்து, பால்குடம் சுமக்க  விமரிசையாக தனது பிறந்தநாளை காலாப்பட்டில் கொஞ்சமும் அருவெறுப்பின்றி கொண்டாடினார்.

சீல் வைக்கப்பட்ட ஆலைக்குள் இரகசியமாக வேலைகள் நடைபெற்று, 14 டேங்கர் லாரிகளில் குளோரினை நிரப்பி இரவோடு இரவாக அனுப்பியுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு ஆலைக்கு மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். மாவட்ட உதவி ஆட்சியர் அங்கு வந்து, “ஆலையில் உள்ள கெமிக்கல்களைப் பாதுகாக்க சில எந்திரங்கள் தொடர்ந்து இயங்க‌ வேண்டும் என்பதற்காகத்தான் சில எந்திரங்களை இயக்கினர். அது போல கெமிக்கல்களை அப்புறப்படுத்தவே டேங்கர் லாரிகளை அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

சீல் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை அரசாங்கம் கையக‌ப்படுத்திக் கொள்வது சரியானதா? அல்லது அந்த நிர்வாகத்தையே பராமரிக்க அனுமதிப்பதா? குறைந்த பட்சம் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் வெளிப்படையான‌ பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நடப்பதோ முதலாளிகளுக்கான விசுவாசம். முதலாளிகளுக்கான சிறு இழப்பைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் விற்றுக் காசாக்கிக் கொள்ள துணை போகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பான சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஆபத்தான கெமிக்கல்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று எண்ணுவது போன்ற‌ முட்டாள்தனம் வேறில்லை.

கொடூர இரசாயன ஆயுதம் : குளோரின்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரில் குளோரின் மிகச் சிறிய அளவில் கலக்கப்படுகிறது, அதாவது, நமது நகராட்சி மற்றும் பேரூராட்சியால் வழங்கப்படும் குடிநீரில் 5000 லிட்டருக்கு ஒரு மாத்திரை வீதம் கலந்தே நமது வீடுகளுக்கான குடிநீர் குழாய்களில் வழங்கப்படுகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது குளோரின் கலந்த குடிநீர்தான்.

குளோரின் வாயுவின் அளவு காற்றில் 0.2 முதல் 0.5 PPM  வரை இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே, 2 PPM இருந்தால் இருமல், வாந்தி ஏற்படும். 30 PPM இருந்தால் நுரையீரல் பாதிக்கும். 60 PPM இருந்தால் உயிரையே குடித்து விடும். PPM என்பது PARTICLES PER MILLION – அதாவது 10,00,000 காற்று துகள்களில் வெறும் 60 குளோரின் துகள்கள் இருந்தாலே, அது நமது உயிரை குடித்துவிடும். நமது நாட்டின் சுகாதாரத் தேவை மற்றும் சாயப்பட்டறைகளில் துணிகளை பிளீச்சிங் செய்வதற்கு தேவையான அளவுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுதாக அறிய முடிகிறது.

அதிலும் திரவ குளோரின் முழுக்க முழுக்க ஏகாதிபத்தியத்தின் கொலைவெறிக்கு உதவும் இரசாயன‌ ஆயுதங்களை உற்பத்தி செய்யவே பயன்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது குளோரின் நச்சு வாயுவைப் பயன்படுத்தி ஜெர்மனி பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தது. ஈராக் (2007) போரின் போது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கிற்கான குளோரின் சப்ளையை நிறுத்தி 5 இலட்சம் குழந்தைகளைக் கொன்றது, அதாவது. ஈராக் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் கலக்கப் பயன்படும் மிகச்சிறிய அளவிலான குளோரினையும் தடை செய்ததன் மூலம் சுகாதாரமற்ற. குளோரின் கலக்காத குடிநீரை குடித்த ஒன்றுமறியாத 5 இலட்சம் ஈராக் இளம் பிஞ்சுகள் வயிற்றுப்போக்கு மற்றும் காலரா நோயினால் துடிதுடித்து செத்தார்கள்.

திடநிலையிலுள்ள குளோரினையும் தமது ஆயுதமாக ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்த முடியும் என்பதை அறியும்போது முதலாளித்துவம் தன்னை நம்பியுள்ள தன் சொந்த மக்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் காட்டாதா என்ற கேள்வி மனதைச் சுடுகிறது.

எங்களிடம் பேசிய புதுநகரைச் சேர்ந்த பெரும்பாலானோர், ‘சமையல் எரிவாயு உலையில் இருந்து வாயு கசிவதாகவே முதலில் நினைத்தோம்’ என்று கூறினார்கள். ஒருசிலர் பிளீச்சிங் பவுடர் வாச‌னை வந்ததாகவும், அதன்பின் மூச்சுத்திண‌றல் வந்ததாகவும் கூறினர். இதே புதுநகரைச் சேர்ந்த கிருத்திகா “எங்கள் வீட்டின் பின்பக்கத்தில் இருந்து பிளீச்சிங் பவுடர் வாசனை வந்தது. என்ன இது என்று பார்ப்பதற்குள், வீட்டின் பின்பக்கம் இருந்த மரம், செடி கொடிகள் எல்லாம் கருகியது. எனக்கும் தலைசுற்றல் வந்ததால் என் வீட்டுக்காரருடன் மருத்துவமனைக்குச் சென்று விட்டேன்’ என்றார்.

செல்வி என்ற மீன் விற்கும் பெண்  “இந்த கம்பெனி ஆரம்பிக்கும் போது சோடா கம்பெனி ஆரம்பிக்கிறோம் என்றுதான் சொன்னான்க. இப்ப என்னடான்னா எங்க எல்லாத்தையும் சாவடிச்சுடுவான்க போல’ என்று ஆத்திரப்படுகிறார். ஆண்டாள் என்ற வயதான பாட்டி ‘ஐயா, நாங்க எல்லாம் வாழ்ந்துட்டோம். எங்க புள்ளங்க எல்லாம் வாழ வேணுமில்ல. அதனால, தயவு செய்து இந்த கம்பெனிய எடுத்துடுங்க. வேற எந்த கம்பெனி வேணா வச்சுக்குங்க’ என்று பரிதாபமாக புலம்புகிறார்.

முதலாளித்துவ அரசு மக்கள் நலன் காக்காது என்பது தெள்ளத் தெளிவானது. நம் முன் உள்ள கேள்வி கெம்ஃபாப் போன்ற கொலைகார ஆலைகளை போராடி அகற்றப் போகிறோமா? அல்லது பல ஆயிரக்கணக்கான நம் மக்களை பலிகொடுத்து விட்டு, அய்யோ பாவம் என்று ஒப்பாரி வைக்கப் போகிறோமா? என்பதே.

_____________________________________________________________________________________________________
தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பாண்டிச்சேரி
______________________________________________________________________________________________________

கே.ஜி.கண்ணபிரான்: மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்!

கே.ஜி.கண்ணபிரான் (1929 -2010) மனித உரிமைகளுக்கான போரின்  கலங்கரை விளக்கம்!
கே.ஜி. கண்ணபிரான். 1929-2010

அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் கடந்த நான்கு தலைமுறைகளாகப் போராடிவந்த முதுபெரும் மனித உரிமைப் போராளி தோழர் கே.ஜி.கண்ணபிரான், நீரழிவு நோயினால் கடந்த டிசம்பர் 30 அன்று தனது 81-வது வயதில் காலமாகிவிட்டார்.

1960-களின் தொடக்கத்தில் ஆந்திர உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கிய கண்ணபிரான், ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகத்தில் (APCLC) 15 ஆண்டுகளாகத் தலைவராகவும், பத்தாண்டுகளாகக் குடியுரிமைக்கான மக்கள் கழகத்தின் (PUCL) அனைத்திந்தியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தள்ளாத வயதிலும் தற்போது அரசியல் கைதிகள் விடுதலைக்கான கமிட்டியின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

1973-இல் தொடங்கப்பட்ட ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர்தான் கண்ணபிரான். 1975-இல் இந்திராவின் அவசரநிலை பாசிச ஆட்சிப் பிரகடனப்படுத்தப்பட்டுப் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களும் எதிர்க்கட்சிகளும் ஒடுக்கப்பட்ட நிலையில், கொடிய “மிசா” சட்டத்தை எதிர்த்து கண்ணபிரான் நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் போராட்டம் நடத்தினார். அவசரநிலை பாசிசத்துக்கு எதிரான முதல் சட்டரீதியான போராட்டமும் இதுதான். அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் ஆந்திராவின் நக்சல்பாரிப் புரட்சியாளர்களான தோழர்கள் பூமையா, கிஸ்த கவுடா ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, அவர்கள் அரசியல் கைதிகள் என்பதால் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென சட்டரீதியாக மனு செய்து நீதித்துறையிடம் போராடினார். இப்பாசிச ஆட்சிக் காலத்தில்  சிறையிடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் மற்றும் சாமானிய மக்களுக்களின் விடுதலைக்காக அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் நடந்த போலீசின் மோதல் படுகொலைகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட தார்குண்டே கமிசனில் கண்ணபிரான் முன்னணிப் பாத்திரமாற்றினார். இப்படுகொலைகள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட பார்கவா கமிசனில் கண்ணபிரான் வாயிலாக ஆதாரபூர்வமான உண்மைகள் செய்தித்தாள்களில் வெளிவரத் தொடங்கியதும், பீதியடைந்த அப்போதைய ஆந்திர முதல்வரான வெங்கல்ராவ், இந்த விசாரணையை இரகசியமாக நடத்தும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கண்ணபிரானும் ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகமும் இந்த விசாரணையில் பங்கேற்காமல் புறக்கணித்து, இம்மோதல் படுகொலையின் பின்னேயுள்ள பாசிச அரசியலை அம்பலப்படுத்திக் காட்டினர்.

1980-களில் ஆந்திராவில் நக்சல்பாரி புரட்சிகர விவசாய இயக்கம் தெலுங்கானா பகுதியில் முன்னேறியபோது, அவற்றை ஒடுக்க மோதல் படுகொலைகளை போலீசு தீவிரப்படுத்தியது. போலீசின் இரகசிய கூலிப்படைகளால் புரட்சியாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வந்த இருண்ட காலம் அது. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழல் நிலவிய அக்காலத்தில், போலீசு பயங்கரத்துக்கு எதிராகத் துணிவோடு  கண்ணபிரான் தொடர்ந்து போராடினார். விசாரணைகள் மூலமும் வழக்குகள் தொடுத்தும் இப்படுகொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். 1997முதல் 2007 வரை ஆந்திராவில் 1800 மோதல் படுகொலைகள் நடந்துள்ளதை ஆதாரங்களுடன் அவர் அம்பலப்படுத்தியதால்,  இப்படுகொலைகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், சுயேச்சையான நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்றும் ஆந்திர உயர் நீதிமன்றம் கூறியது. இது, போலி மோதல் படுகொலைகளுக்கு எதிரான சட்ட ரீதியான போராட்டத்தின் முக்கியமானதொரு வெற்றியாகும்.

போலீசின் பயங்கரவாதத்தையும் அதற்கெதிரான நக்சல்பாரி புரட்சியாளர்களின் நியாயமான போராட்டங்களையும் சமப்படுத்தி, இரண்டையும் “வன்முறை” என்று கூறும் சில மனித உரிமை அமைப்புகளின் போலித்தனமான ‘நடுநிலைக்கு’ மாறாக, அரசு பயங்கரவாதத்தை முதன்மை எதிரியாக அவர் உணர்த்தினார். “மக்களின் நல்வாழ்வுக்காகவும் சமத்துவத்துக்காகவும் மாவோயிஸ்டுகள்  உள்ளிட்டு பலதரப்பட்ட இயக்கங்கள் போராடி வருகின்றன. இவற்றுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமேயன்றி, இதைச் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாகப் பார்த்து, போலீசுக்கும் உளவுத்துறைக்கும் எல்லையற்ற அதிகாரத்தை வழங்கி வன்முறைகளில் ஈடுபட அரசு  அனுமதிப்பதும், கிரிமினல் சட்டங்களை ஏவி அரசியல் இயக்கங்களை ஒடுக்குவதும் நியாயமென்றால், நமது ஜனநாயகத்தின் பொருள்தான் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

முற்போக்கு – ஜனநாயக இயக்கங்களின் மீது அரசால் சோடிக்கப்பட்ட சதிவழக்குகளையும், ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளையும் எவ்விதக் கட்டணமுமின்றித் தானே வழக்காடி, பாதிக்கப்பட்டோரை அடக்குமுறைகளிலிருந்து தோழர் கண்ணபிரான் மீட்டுள்ளார். சட்டிஸ்கர் முக்தி மோர்ச்சா எனும் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவரான தோழர் சங்கர் குகா நியோகி, 1993-இல் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது, கூலிப்படையினர் மட்டுமல்லாது முதலாளிகளையும் கைது செய்ய வைத்துக் குற்றவாளிக் கூண்டிலேற்றினார்.

ஈழ அகதிகள் நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்டு இந்தியாவில் சிறையில் வதைக்கப்பட்டபோதும், வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டிப் பழங்குடியின மக்கள் “தடா” சட்டத்தில் வதைக்கப்பட்ட போதும், கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவர் நீதிமன்றங்களில் போலீசின் பயங்கரத்துக்கு எதிராகப் பல வழக்குகளில் வாதிட்டார். அக்கறையுள்ள குடிமக்கள் கமிட்டியின் சார்பில் அவர் குஜராத்தில் நடந்த இந்துவெறி பாசிச பயங்கரவாதப் படுகொலைகள் பற்றி விசாரணை நடத்தும் குழுவிலும் இடம் பெற்றார். சர்வதேச கடல் பகுதியில் பயணித்த விடுதலைப் புலிகளின் படகை அடாவடியாகக் கைப்பற்றி இந்திய அரசு வழக்கு தாக்கல் செய்த போது, பழ.நெடுமாறன் சார்பில் வாதிட்டு அந்த வழக்கில் வெற்றி பெற்றார். முன்னாள் இராணுவ சுபேதார் நல்லகாமன் தொடுத்திருந்த போலீசு எஸ்.பி.பிரேம்குமார் மீதான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட தோழர் கண்ணபிரான், இப்போலீசு அதிகாரியின் சட்டவிரோத பயங்கரவாதத்தைத் திரைகிழித்துக் காட்டித் தண்டிக்க வலியுறுத்தினார்.

தனது வாழ்நாள் முழுவதும் அரசு பயங்கரவாதத்துக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்காகவும்  தொடர்ந்து பாடுபட்ட உன்னதப் போராளி அவர். மறுகாலனியாக்கமும் பாசிச அடக்குமுறையும் தீவிரமாகிவரும் இன்றைய சூழலில், மனித உரிமைக்கான போராட்டங்களை ஏகாதிபத்தியங்கள் நிறுவனமயமாக்கிவரும் இன்றைய சூழலில், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகத் தொடர்ந்து உறுதியாகப் போராடுவதுதான், நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

__________________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2011
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள் : அரசின் வதைமுகாம்கள் !

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள் : அரசின் வதைமுகாம்கள் !சென்னையிலுள்ள அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்துவரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கடந்த டிசம்பர் 21 அன்று சென்னை – அண்ணா சாலையில் நடத்திய சாலை மறியல் போராட்டம், அம்மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காகத் தமிழக அரசால் நடத்தப்படும் நல விடுதிகள் அனைத்தும் மாட்டுக் கொட்டகைகளைவிடக் கேவலமாக இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

‘‘கடந்த பல ஆண்டுகளாகவே முறையாகப் பராமரிக்கப்படாததால், சிதிலமடைந்துவிட்ட கட்டிடங்கள்; உடைந்து போன கழிவு நீர் செல்லும் குழாய்கள் மாற்றப்படாததால், மலமும், சிறுநீரும் விடுதிக்குள்ளேயே குட்டையைப் போலத் தேங்கி நின்று, அதனால் வீசும் துர்நாற்றம்; 52 அறைகளில் 595 மாணவர்கள் தங்க வேண்டும் என்ற அரசின் கணக்கே அளவுக்கு அதிகமானது எனும்பொழுது, இப்பொழுது அந்த 52 அறைகளில் 1,600 மாணவர்கள் (ஒரு அறைக்கு 30 மாணவர்கள்) அடைபட்டுக் கிடக்கும் அவலம்.” – இதுதான் சென்னை – சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி.ராஜா விடுதியின் குறுக்குவெட்டுத் தோற்றம்.

சென்னையிலுள்ள மற்ற 16 விடுதிகளும், தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள விடுதிகளும் எம்.சி.ராஜா விடுதியைப் போன்று அல்லது அதைவிடக் கேவலமான நிலைமையில்தான் இருக்கின்றன.

இவ்விடுதிகள் ஒவ்வொன்றிலும் மாவரைக்கும் இயந்திரங்கள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், குடிநீரைச் சுத்திகரிப்பதற்கான கருவிகள் இருக்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள் : அரசின் வதைமுகாம்கள் !வேண்டும் என ஆதிதிராவிடர் நலத் துறையின் கொள்கைக் குறிப்பு கூறுகிறது. ஆனால், இவ்விடுதிகளில் காலைக் கடன்களைக் கழிப்பதற்கும், குளிப்பதற்கும்கூட முறையான, போதுமான வசதிகள் கிடையாது என்பதுதான் உண்மை.

இவ்விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஒவ்வொரு கல்லூரி மாணவன் மற்றும் பள்ளி மாணவனின் உணவிற்காக மாதமொன்றுக்கு ரூ.550/- வரை நிதி ஒதுக்கப்படுவதாக அரசு கூறுகிறது. இந்த ஒதுக்கீடைத் தின்று தீர்ப்பது அதிகார வர்க்கம்தான் என்பதை இவ்விடுதிகளால் போடப்படும் உணவே காட்டிக் கொடுத்துவிடுகிறது. புழுத்துப் போன அரிசிச் சோறுதான் இவ்விடுதிகளால் போடப்படும் ஒரே ‘சத்தான’ உணவு. குழம்புக்கும் காய்கறிக்கும் மாணவர்கள் தங்கள் கைக்காசைத்தான் போட்டுக் கொள்ள வேண்டும். உணவிற்காகவும், கல்விச் செலவிற்காகவும் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்குப் போவதாகக் குறிப்பிடுகிறார்கள், இம்மாணவர்கள்.  .

இப்படிபட்ட இழிந்த சூழ்நிலையில் தங்க நிர்பந்திக்கப்பட்டுள்ள ஏழை தாழ்த்தப்பட்ட மாணவனால், தனது படிப்பில் முழுமையான கவனத்தை எப்படிச் செலுத்த முடியும்?

அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய கடமையை அரசு புறக்கணிக்கிறது என்பதாக மட்டும் இந்தப் பிரச்சினையைப் பார்க்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகப் பட்டம் சூட்டிக் கொண்டுள்ள திருமா., ரவிக்குமார் போன்றவர்களால் ஆதரிக்கப்படும் தி.மு.க. ஆட்சி, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மீது கொண்டுள்ள தீண்டாமை மனோபாவத்தையும் பிரதிபலிப்பதாகவே இதனைப் பார்க்க முடியும்.

__________________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2011
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்