privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!

டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!

-

டிபிஐ-முற்றுகை-மாணவர்கள்-தோழர்கள் மீது-போலீசு-கொலைவெறி தாக்குதல்காட் ஒப்பந்தம் என்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வி, மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து ’சேவை’த் துறைகளையும் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு.

இலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலான மொத்த கல்வித்துறையையும் தனியார் முதலாளிகளுக்கு திறந்துவிட்டு, கல்வி அளிக்கும் சேவையிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்று தான் ’கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009’. தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்கிற பெயரில் கல்வியில் தனியார்மயமாக்கலின் முதல் நடவடிக்கையாக இதை தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்.

கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசின் இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த 3-6-12 அன்று  சிதம்பரத்தில் இலவசக் கல்வி உரிமைக்காக ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’ ’மனித உரிமை பாதுகாப்பு மையமும்’  இலவச கல்வி உரிமை மாநாட்டை நடத்தின.

வரும் 17-ம் தேதி தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம் ! என்கிற முழக்கத்துடன் புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணி ’கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டை’ சென்னை, திருச்சி, கரூர், விழுப்புரம், கடலூர் ஆகிய நகரங்களில் நடத்துகிறது.

இந்த மாநாட்டிற்கு முன்னதாக இன்று காலை தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம் ! என்கிற முழக்கத்துடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர் பு.மா.இ.மு.வினர்.

அதன்படி சென்னையின் முக்கிய இடங்களில் எல்லாம் இதற்கான அறிவிப்பு சுவரொட்டிகள் முதல் நாள் இரவே, அதாவது நேற்று நள்ளிரவே ஒட்டப்பட்டிருந்தன. இன்று விடியற் காலையிலேயே இந்த சுவரொட்டிகளை பார்த்து அதிர்ந்து போன நுங்கம்பாக்கம் துணை ஆணையர் வெங்கடாஜலபதி காலை ஆறு மணிக்கே பு.மா.இ.மு அலுவலகத்திற்கு தொலைபேசி செய்துவிட்டார். “முற்றுகை எல்லாம் வேண்டாம், கல்வித்துறை இயக்குநரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன், எனவே முற்றுகையை விலக்கிக் கொள்ளுங்கள்” என்றார். அவருடைய வாக்குறுதிகளை எல்லாம் தோழர்கள் நம்பவில்லை. எனவே திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்பு கூடினர். ஆனால் அதற்கு முன்பாகவே போலீசை கூட்டம் கூட்டமாக அங்கே இறக்கியிருந்தனர். இன்னொரு பக்கம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

தோழர்களை உள்ளே விடாமல் வாயிலை மறித்து நின்று கொண்டிருந்தது போலீசு. சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்களும், நுங்கம்பாக்கம் துணை ஆணையரும் இவர்களோடு நூற்றுக்கணக்கான போலீசும், சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் அவர்களுக்கு துணையாக நின்ற பெண்கள் மீதும் எப்போதும் பாய்ந்து பிடுங்குவதற்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது.

துணை ஆணையர் வெங்கடாஜலபதி மீண்டும் தோழர்களிடம் வந்து “இயக்குனரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன், முற்றுகை போராட்டம் வேண்டாம், ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்றார். “இயக்குனரை சந்திக்க நாங்களும் தயாராக இருக்கிறோம், சார் வரச்சொல்லுங்கள் பேசுவோம்” என்றார்கள் தோழர்கள். உங்களில் ஐந்து பேர் மட்டும் வாருங்கள் உள்ளே போய் பேசுவோம் என்றார்.

அதற்கு உடனடியாக பதிலளித்த தோழர்கள், “ஐந்து பேர் மட்டும் உள்ளே போய் ரகசியமாக எல்லாம் பேச முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள் என்று மக்கள் அனைவர் முன்பும் பேச வேண்டும் எனவே அவரை கீழே வரச்சொல்லுங்கள் மக்கள் அவரோடு பேசுவார்கள்” என்றார்கள். தனியாக கூட்டிச்சென்று சமரசம் செய்துவிடலாம் என்பதற்கான போலீசின் முயற்சிகளை எல்லாம் தோழர்கள் முறியடித்தனர்.

அடுத்ததாக வாயிலுக்கு முன்பாக காவல் துறை வாகனங்கள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினர். உள்ளே நுழைய முடியாதபடி வாயிலை சுற்றி பாதுகாப்பு அரணை அமைத்தனர். உள்ளே நுழைய காத்திருந்த தோழர்கள் முழக்கமிட்டபடியே அந்த அரணை மீறி வாயிலை நோக்கிச் செல்ல முயன்ற போது, அதற்காகவென்றே காத்திருந்த போலீசு கும்பல் தோழர்கள் மீது பாய்ந்து குதறியது. எதிர்த்து நின்ற தோழர்களை கடுமையாக தாக்கி முன்னேற முடியாதபடி அங்கேயே தடுத்து நிறுத்தி தனது வெறியாட்டத்தை துவங்கியது.

டிபிஐ-முற்றுகை-மாணவர்கள்-தோழர்கள் மீது-போலீசு-கொலைவெறி தாக்குதல்

குழந்தைகள், சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்களின் பிஞ்சு கைகளையும் கால்களையும் பிடித்து போலீசு வெறியர்கள் முரட்டுத்தனத்துடன் சாலையில் இழுத்து வீசினார்கள். எதிர்த்து நின்ற மாணவர்களையும் பெற்றோர்களையும் கைகளை இறுக்கிக் கொண்டு வயிற்றிலும், நெஞ்சிலும் ஓங்கி ஓங்கி குத்தினார்கள். பெண் தோழர்களை லத்தி கம்புகளால் விளாசினார்கள். ஆறு மாத கைக்குழந்தைகளோடு வந்திருந்த பல பெண் தோழர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. வெறி நாய் கூட்டம் போல மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று அனைவர் மீதும் பாய்ந்த போலீசு நாய்கள் கடித்துக் குதறின.

துணை ஆணையர் வெங்கடாஜலபதி நடுவில் நின்று கொண்டு வெறித்தனத்துடன் நாலா பக்கமும் திரும்பி திரும்பி இதோ இவனை அடி, அதோ அவனை அடி, அவளை அடி, கையை உடை, காலை உடை என்று ஒரு ரவுடியை போல கத்திக் கொண்டிருந்தார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இரண்டு பெண் தோழர்களுக்கு பலத்த அடிபட்டதால் கடுமையான நெஞ்சு வலியால் அங்கேயே மயங்கி விழுந்தனர். ஆஸ்த்மா நோயாளியான ஒரு தோழரின் நெஞ்சிலேயே ஓங்கி ஓங்கி குத்தியதால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் மயக்க நிலைக்குச் சென்றார். இன்னொரு தோழரின் உயிர்நிலையில் பூட்ஸ் கால்களால் ஒரு போலீசு பொறுக்கிநாய் ஓங்கி உதைத்ததில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். இவர்களோடு மேலும் ஒரு தோழர் மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.

கடுமையான தாக்குதலுக்குள்ளான இந்த ஐந்து தோழர்களையும் போராட்டக்களத்திலிருந்து KMC மருத்துவமனைக்கு பிற தோழர்கள் எடுத்துச் சென்றனர். இன்னொரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

போராடுவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுத்து மனிதத்தன்மையற்ற முறையில் தடியடி நடத்தி வெறியாட்டம் போட்ட போலீசை கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மில்டனும், சக்தி சுரேஷும் உடனடியாக அங்கு வந்தனர். அவர்கள் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே அவர்களையும் தாக்கியது பாசிச ஜெயாவின் விசுவாச நாய்கள். சுற்றி நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் காமராக்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தன.

இந்த தாக்குதலை கண்டித்து தோழர்கள் அனைவரும் அடுத்தபடியாக கல்லூரி சாலையை மறித்துக் கொண்டு உட்கார்ந்தனர். முற்றுகைப் போராட்டம் மறியலாக மாறியது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்த போலீசு உட்கார்ந்துகொண்டிருந்த தோழர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீசு வண்டிகளில் ஏற்றியது. தோழர்கள் ஏற மறுத்து அடம்பிடித்த போது மீண்டும் கைகளை குவித்து பலங்கொண்ட மட்டும் குத்தி மூச்சு முட்டச் செய்து வண்டிக்குள் திணித்தனர். மொத்த தோழர்களையும் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தைவிட்டு அப்புறப்படுத்தி கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசுக்கு விசுவாசமாக வெறியாட்டம் போட்டது பாசிச ஜெயாவின் போலீசு.

தோழர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அடுத்து பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. துணை ஆணையரிடம் கேள்வி கேட்கச் சென்ற வின் டி.வி யின் நிருபரை முரட்டுத்தனத்துடன் தாக்கிக் கீழே தள்ளிவிட்டனர். இதை கண்டித்து அவர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தற்போது நூற்று இருபத்நு ஐந்து தோழர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள APVP திருமணமண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாவர். இவர்களுடன் மாணவர்களும் பெற்றோரும் உள்ளனர். காலையில் கைது செய்யப்பட்ட தோழர்கள் இந்த நிமிடம் வரை விடுவிக்கப்படவில்லை.

திருமணம் நடக்கின்ற மண்டபத்தில் தற்போது அரங்கக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறன ! ஆம் திருமண மண்டபத்தை நமது தோழர்கள் பிரச்சார மேடையாக்கி வருகின்றனர். மண்டபத்திற்குள் நுழைந்ததுமே அமைப்பு கொடிகளையும் பதாகைகளையும் கட்டி ஒரு பொதுக்கூட்டம் நடக்கின்ற இடத்தை போல மண்டபத்தை மாற்றியமைத்து விட்டனர்.

தோழர்கள் அனைவரும் சிறை வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தபடியே நடந்திருக்கிறது. சைதை நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.  ஆனால் மத்திய, மாநில ஆட்சிகளில் அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

____________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை

படங்கள் உதவி நக்கீரன்

___________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________