வாராக்கடன் மற்றும் திவால் விதிமுறையின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் முதல் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 12 நிறுவனங்களை வங்கிகள் மட்டும் பின் தொடர்ந்து கண்காணிக்கவில்லை. ”ஏ.பி.ஜி. ஷிப்யார்ட்” (ABG Shipyard) என்ற கப்பல் கட்டுமான நிறுவனத்தின் கடன் தீர்வை நடவடிக்கைகளை இந்திய கப்பற்படையும் கண்காணித்து வருகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ. 1,455 கோடி மதிப்பிலான கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இந்திய கடற்படை முறித்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட பின்னரே அவ்வாறு கண்காணித்து வருகிறது.

ஏ.பி.ஜி. கப்பல் கட்டுமான நிறுவனத்தின் இணையதளப் பக்கம்.

ஏ.பி.ஜி. கப்பற் கட்டுமான நிறுவனம், சுமார் 19,000 கோடி ரூபாய் வரை கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியக் கப்பற்படைக்கு கட்டித்தர வேண்டிய 3 பயிற்சிக் கப்பல்களை கட்டித் தரத் தவறியிருக்கிறது. இதன் காரணமாக இனி போர்க்கப்பல்கள் கட்டுவதை பொதுத்துறை – தனியார் கூட்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்வதைக் கேள்விக்குள்ளாகியிருக்கிறது இந்திய கடற்படை. தற்போது இந்த ஒப்பந்த முறிவின் காரணமாக கடற்படையின் பயிற்சிக் கப்பல் கட்டும் திட்டம் குறைந்தது 10 ஆண்டுகள் தாமதமாகலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

அடிப்படைப் பயிற்சிகள் தருவது மற்றும் பேரிடர் நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 110 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு பயிற்சிக் கப்பல்கள் கட்ட திட்டமிட்டது இந்திய கடற்படை. அதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஏ.பி.ஜி. கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு, ரூ.970 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை கடற்படை வழங்கியது. அதன் பின்னர் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சூரத் மற்றும் தஹெஜ்ஜில் உள்ள கப்பல் கட்டும்துறையில் புதியதொரு பயிற்சிக் கப்பல் கட்டுவதற்காக ரூ.485 கோடி மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தை கடற்படையிடம் இருந்து பெற்றதாக, ஏ.பி.ஜி. கப்பல் கட்டுமான நிறுவனம் தமது பங்குசந்தை ஒழுங்குமுறை ஆவண சமர்ப்பித்தலில் தகவல் தெரிவித்தது.

ஏ.பி.ஜி. கப்பல் கட்டுமான நிறுவனம்.

அந்த இரண்டு கப்பல் கட்டும் ஒப்பந்தங்களும் கடந்த 2014-ஆம் ஆண்டு வரை சரியான வகையில் சென்று கொண்டிருந்ததாகவும், தமது ரூ.11,000 கோடி கடனை திருப்பி செலுத்த கடந்த 2014 செப்டெம்பரில் பெருநிறுவன கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இறங்கிய பின்னரே அந்த இரு திட்டங்களும் முடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017-ம் ஆண்டு அகஸ்டு முதல் தேதி அன்று ஏ.பி.ஜி. கப்பல் கட்டுமான நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்தின் அகமதாபாத் கிளையினால், பெருநிறுவன திவால் தீர்வை நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டது. அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் கடற்படை அந்நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களை முறித்துக்கொண்டது. ஏ.பி.ஜி. கப்பல் கட்டுமான நிறுவனம் கடற்படைக்கு கட்டித்தர வேண்டிய கப்பல்களை கட்டித்தரத் தவறியது, இராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் பொதுத்துறை-தனியார் கூட்டுத் திட்டங்களின் வெற்றி குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இப்போது அது வாராக்கடன் தீர்வை செயல்முறையில் உள்ளது. அவர்கள் இந்த வாராக்கடன் தீர்வை நடவடிக்கைகள் செயல்முறையில் உள்ள இந்நேரத்தில் எங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய கப்பல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. செயல்பாடுகள் அனைத்தையும் நாங்கள் இப்போது புதிதாக தொடங்க வேண்டும். இது குறைந்தது பத்தாண்டுகள் எங்களை பின்தள்ளிவிடும். இது மேலும் பல பாடங்களை எங்களுக்கு கொடுத்துள்ளது” என்று ஒரு கடற்படை அதிகாரி கூறினார்.

இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி கப்பல் கட்டும் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பு  குறித்த இந்திய ஆயுதப்படையின் அனுபவம் என்பது கலவையானது. “நாங்கள் இதுவரை நம்பிக்கையுடன் இருந்தோம். இதுவரை இப்படி நடந்ததில்லை. சில சமயங்களின் நிதி பற்றாக்குறையால் கப்பல் கட்டுமானம் இடையில் நிறுத்தப்படும். அதன் காரணமாக கப்பல்கட்டும் தளத்திற்கு பண வரவு பிரச்சினை ஏற்படும்” என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏ.பி.ஜி. நிறுவனத்தை விலை பேச முன்வந்துள்ள லிபர்ட்டி ஹவுஸ் குழுமத்தின் கோரிக்கையை ஜூலை 25-ஆம் தேதி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் விசாரிக்க உள்ளதாகக் கடந்த ஜூலை12-ஆம் தேதி அன்று பங்குச் சந்தை ஆவண தாக்கலின் போது  ஏ.பி.ஜி. கப்பல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் தொழிலதிபர் சஞ்சீவ் குப்தாவின் 12 பில்லியன் மதிப்பிலான ஜி.எப்.ஜி. குழுமத்தை (GFG Alliance Group) சேர்ந்த ’லிபர்ட்டி ஹவுஸ்’ நிறுவனம் ஏ.பி.ஜி. கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட திவாலான பல்வேறு நிறுவனங்களை வாங்குவதற்கு விருப்பம் காட்டியிருக்கிறது.

மோடி ஆட்சியில் வேலையின்மை பெருகி, பொருளாதாரம் ஒருபுறமிருக்கட்டும். எப்படி இருப்பினும் தனியார்மயத்தை தீவிரப்படுத்தும் வண்ணம் பாதுகாப்பு தளவாடத் துறைகளிலும் தனியார் மயத்தை வேகப்படுத்தியது மோடி அரசு. இப்போது கப்பற்படைக்கு கட்ட வேண்டிய கப்பல்களை கட்டாமல் பட்டை நாமம் போட்டிருக்கிறது ஒரு தனியார் நிறுவனம்! பா.ஜ.க கட்சியினர் தேசபக்தி குறித்து அதிகம் கூச்சல் போடுவதன் காரணம் அவர்கள்தான் உண்மையிலேயே தேத விரோதிகள் என்பதே!

-வினவு

 

– வினவு செய்திப் பிரிவு

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

1 மறுமொழி

  1. பா.ஜ.க மற்றும் RSSன் தேஷபக்த்தியே பார்ப்பனீயமும், தனியார்மயமும்தான்.இதன் சித்தாந்தமே ஒரு குறிப்பிட்ட சாதியே உயர்வானது அதற்கு முன் நிபந்தனை பிற சாதிகள் மட்டம் மிகமிக மட்டும் என்பதும் எந்த வகையான சமத்துவமும் பார்ப்பனீயத்திற்க்கு மிக்க அலர்ஜி.தனியாரே திறமையானவர்கள் அன்னாரது உழைப்பும் தியகமுமே வளர்ச்சி இந்த தாரகாமந்திம் முதலாளித்துவ அரிச்சுவடி.
    பார்ப்பனீயம்(பிறவி முதலாளித்துவ) +முதலாளித்துவம்= நாடே திவால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க