டந்த 2015 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினார்கள். இதன் எழுச்சியாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் சாலாமேடு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பகுதியில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கடை தற்காலிகமாக 3 நாட்கள் மூடப்பட்டதுடன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் உள்ளிட்டு அப்பகுதியைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு வழக்கம்போல் கடை திறக்கப்பட்டது.

(கோப்புப் படம்)

மீண்டும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் வலுத்தது. பலவேறு இடங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அப்போது மீண்டும் போராட்டத்தை தொடர்ந்த சாலாமேடு கிராம மக்கள், கடையை மூட கெடு விதித்திருந்தனர். குறிப்பிட்ட கெடுவுக்குள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், டாஸ்மாக் கடையை நாங்களே மூடுவோம் என எச்சரித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். டாஸ்மாக் கடையை மூடுவதற்குப் பதிலாக கடைக்குப் பாதுகாப்பாக நூற்றுக்கணக்கான போலீசை குவித்தது. போலீசின் அச்சுறுத்தலையும் மீறி, பள்ளி செல்லும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு குடும்பமாகத் திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராடினர் அப்பகுதி மக்கள். இப்பகுதி மக்களின் தொடர்ச்சியான மற்றும் உறுதியான போராட்டத்தைக் கண்டு பின்வாங்கிய தாசில்தார், அருகருகே இருந்த இரண்டு கடைகளை மூட உத்தரவிட்டார்.

(கோப்புப் படம்)

இந்நிலையில், ஓராண்டாக மூடப்பட்டிருந்த அந்தக் கடையை மீண்டும் திறக்க முயன்றது, அரசு. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்க ஆயத்தமாயினர். உளவுத்துறை போலீசு மூலம் இதனையறிந்த விழுப்புரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர், கடையை திறக்கப் போவதில்லை என சத்தியம் செய்யாத குறையாக உறுதியளித்திருந்ததோடு, போராட்டம் எதுவும் செய்துவிடாதீர்கள் என்று மக்கள் அதிகாரம் தோழர்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டார்.

இன்னொருபுறம், போலீசின் தூண்டுதலின் பேரில் டாஸ்மாக் அருகில் மினி பார் நடத்திவந்தவரின் உறவினரான செங்குட்டுவன் என்ற ரவுடி கும்பலை ஏவிவிட்டு அவர் குடும்பத்தில் உள்ளர்வர்கள் டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். குட்கா, கஞ்சா,  டாஸ்மாக் என மக்களை போதைக்கு அடிமையாக்கியும், இளைஞர்களை சீரழித்தும், அவர்கள் பணத்தில் கொழுக்கும் அரசும், போலீசும், எப்படிப்பட்ட இழி செயலையும் செய்யும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இந்தக் கும்பல் நடத்திய போராட்டத்தை எதிர்த்து சாலமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் அக்கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கடை திறந்தால் இங்கேயே தீ குளிப்போம் என எச்சரித்தும் சென்றனர். அன்று இரவே செங்குட்டுவனின் அண்ணனான குமரன் என்ற மற்றொரு ரவுடி, தீ குளிப்போம் என கூறிய பெண்களின் கணவர்களை மிரட்டி உள்ளார்.

இதற்கிடையில் மறுநாளே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசின் பாதுகாப்போடு கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற கிராம பெண்கள் 40-க்கும் மேற்பட்டோர் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். மக்கள் அதிகாரம் சார்பில் அச்சடிக்கப்பட்ட கண்டன சுவரொட்டிகளை அப்பகுதி மக்களே ஒட்டி அம்பலப்படுத்தினர். குடிகெடுக்கும் சாராயக் கடையை மூடக்கோரி சுவரொட்டி ஓட்டியதற்காக 3 இளைஞர்களை கைது செய்தது போலீசு. அவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுத்தல் போன்ற பொய்யானக் குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தது. பகுதி இளைஞர்களின் ஒத்துழைப்போடு, மக்கள் அதிகாரம் தோழர்கள் அவ்விளைஞர்களை பிணையில் வெளிக்கொண்டு வந்தனர். சாலாமேடு பகுதி மக்கள் கைது சிறைக்கு அஞ்சாமல் டாஸ்மாக் கடையை மூடும்வரை எங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

தகவல்:

மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம்.