தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் போடூரில் ஆதிதிராவிடர், இருளர், போயர், வன்னியர் என 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பம்பாவாசன், கோவிந்தராஜ், சித்ரா, மாது, மற்றும் இரண்டு நபர்களுக்குச் சொந்தமான ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் இடத்தில் 2, போயர் மக்கள் வசிக்கும் இடத்தில் 2, வன்னியர் மக்கள் வசிக்கும் இடத்தில் 1 என ஒரே ஊரில் 5 சந்துகடைகளில் டாஸ்மாக் சாராயம் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக மறைமுகமாக விற்கப்பட்ட சாராய பாட்டில்கள் தற்போது சாலையோரம் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் கடையை வாடகைக்கு எடுத்து நேரடியாகவும், இருசக்கர வாகனத்திலும் வீடுவீடாக சென்றும் 24 மணிநேரமும் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பென்னாகரம் வட்டார போலீசு தினமாமூல் வாங்கிக்கொண்டு இந்த சட்டவிரோத செயலை அனுமதித்து வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, இந்த சந்துக்கடை மது விற்பனையினால் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் பெரும்பான்மையான ஆண்கள் குடிபோதைக்கு அடிமையாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி, ரேசன் கடைக்குச் செல்லும் வழியில்தான் மதுவிற்பனை நடைபெறுகின்றது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், பெண்கள் நிம்மதியாகச் சாலையில் கூட நடந்து செல்ல முடியாத அளவிற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இதனைத் தடுத்து நிறுத்தக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் அந்த ஊர் பள்ளி தலைமை ஆசிரியர், ஊராட்சிமன்ற தலைவர், போலீசு, கலெக்டர், வட்டாட்சியர் ஓட்டுக் கேட்டு வரும் கட்சிக்காரர்கள் ஆகியோரிடம் பலமுறை மனுகொடுத்தும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
மதுவிற்பவர்களிடம் “எங்கள் ஊரில் மது விற்காதே” எனக் கூறினால், “நீ யாரிடம் வேண்டுமானாலும் போய் மனு கொடு, போராட்டம் நடத்து, நான் போலீசுக்கு மாமூல் கொடுத்து விட்டுத்தான் கடையை நடத்துகிறேன். உன்னால முடிஞ்சா பாரு” என திமிராக பேசுகின்றனர். அதையும் மீறி போலீசிடம் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதுபோல் சந்துக்கடை நடத்துபவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். அன்று மாலையே லஞ்சத்தை வாங்கிக்கொண்டு விட்டுவிடுகின்றனர். அதனைத் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் மது விற்காமல் இருப்பர். அதன்பிறகு வழக்கம்போல் மது விற்பனையைத் தொடங்கி விடுகின்றனர் என்று அவலநிலையை விவரிக்கின்றனர் மக்கள்.
பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு பெண்களும் அன்றாடக் கூலி வேலை செய்துதான் குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவிற்காகவும் வீட்டு மளிகை செலவிற்காகவும் சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து வைக்கின்றனர். அந்தப்பணத்தைத் திருடியும், வீட்டில் உள்ள எண்ணெய், அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருட்களைத் திருடியும், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை அடகு வைத்தும் அப்பகுதி ஆண்கள் குடிக்கும் அளவுக்கு நிலைமை கைமீறிப் போயுள்ளது. பெண்கள் பணத்தைக் கொடுக்க மறுத்தால் அடித்து உதைத்து பணத்தைப் பிடுங்கிக்கொண்டுபோய் குடித்துவிட்டு வந்து இரவு நேரத்தில் வீட்டில் நிம்மதியாகத் தூங்கக்கூட விடாமல், நாக்கூசும் வார்த்தைகளால் திட்டுவது, அடித்து உதைத்து சித்திரவதை செய்கின்றனர்.
இந்தக் கொடுமையைத் தாங்கமுடியாமல் வெளியூரில் படிக்கச்செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள் மாதக்கணக்கில் வீட்டிற்கே வருவதில்லை. இதுபோன்ற சித்திரவதைகளைத் தினந்தோறும் அனுபவிக்கின்றனர் போடூர் மக்கள். இதற்கு அடிப்படைக் காரணமே அந்த சந்துக் கடைகள்தான்.
வீட்டிற்கு ஒருவர் குடிப்பதால் தங்களின் பெற்றோர்களைப் பார்த்து பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும் இளைஞர்களும் குடிக்கு அடிமையாகி பள்ளி கல்லூரிக்குச் செல்லாமல் சீரழிந்து வருகின்ற நிலைமையும் உள்ளது.
திருமணத்திற்காகப் பெண் கேட்கச் செல்லுமிடத்தில் கூட உங்க ஊரில் உள்ள அனைவருமே குடிகாரர்களாக இருக்கின்றனர். எப்படி உங்களை நம்பி பெண்கொடுப்பது, பெண் எடுப்பது என பல இடங்களில் அவமானத்தைச் சந்திக்கின்றனர். குடி, கஞ்சா பழக்கத்தினாலேயே பலபேருக்குத் திருமணமாவதில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தார் கண்ணீர் வடிக்கின்றனர்.
சந்துக்கடை சாராயம் மட்டுமல்லாமல் கஞ்சா, சட்டவிரோத லாட்டரி டிக்கெட்டுக்கு ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் அடிமையாகி வாழ்க்கையே இழந்துள்ளனர்.
குறிப்பாக, இதே போடூரில் 6 வருடங்களுக்கு முன்பு, 12ஆம் வகுப்பு மாணவன் சீனிவாசன் என்பவர் கஞ்சாவிற்கு அடிமையாகி நுரையீரல் முழுவதும் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் வீட்டிற்கு வரும்போது சாராயம், கஞ்சா குடித்துவிட்டு சுயநினைவின்றி பெற்றோர்களையும் அக்கா, தங்கை மற்றும் உறவினர்களையும் கெட்டவார்த்தைகளால் திட்டுவது, அடிப்பது, கொலைமிரட்டல் விடுவது என மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்போல் நடந்துகொள்கின்றனர் எனவும் காலையில் எழுந்து போதை தெளிந்தவுடன் நான் என்ன செய்தேன், நான் அப்படிப் பேசினேனா என தங்கள் பிள்ளைகள் புலம்புவதைப் பார்க்கும்போது “எங்கள் அங்கமெல்லாம் வேகுது… நாங்கள் என்ன குறைவைத்தோம் எங்கள் பிள்ளைகளுக்கு? பிள்ளைகளை எப்படித் திருத்துவது? யாரிடம் முறையிடுவது?” என அழுது புலம்புகின்றனர் பெற்றோர்கள்.
இதில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், பென்னாகரம் நகரப்பகுதியைச் சுற்றி மட்டும் 20க்கும் மேற்பட்ட சந்துக் கடைகள் செயல்படுகின்றன. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் அண்ணாநகர், கள்ளிப்புரம், போடூர், கிருஷ்ணாபுரம் ஆகிய தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அதிகளவிலான கஞ்சா விற்பனை, சந்துக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
தினந்தோறும் அதிகாலையில் போலீஸ் நிலையத்துக்கே சென்று மாமூல் கட்டிவிட்டு வந்து, சந்துக்கடை நடத்துவதால் பொதுவெளியில் வெளிப்படையாக, திமிராகக் கூறுமளவிற்கு நிலைமை ஆபத்தானதாக மாறியுள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடத்தில் இவ்வளவு வெளிப்படையாக கஞ்சா மற்றும் சந்துக்கடை சாராயம் பெருக்கெடுத்து ஓட காரணம் என்னவெனில், தாழ்த்தப்பட்ட மக்களால் என்ன செய்துவிடமுடியும் என்ற சாதித் திமிர்தான். அதிகாரத்தனத்துடனும், சாதிய உணர்வுடனும் போலீசு நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போடூரில் குடிக்க சுத்தமான குடிநீர் வசதி இல்லை. அசுத்தமான நீரைக் குடித்து 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முறையான சாக்கடை வசதி, கழிப்பிடம், சாலை என எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதுபற்றி பேசவோ பிரச்சினையைத் தீர்த்து வைக்கவோ அதிகார வர்க்கத்துக்குத் துப்பில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அடிப்படை வசதியைக்கூடச் செய்து கொடுப்பதில்லை என்பதே போடூர் மக்களின் வாழ்நிலையாக உள்ளது.
“ஒருவாய் சோறுகூட நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை. ஒரு நாளைக்கு பத்து, பன்னிரெண்டு மணி நேரம் கூலி வேலைசெய்து சம்பாதிக்கும் பணத்தை சாராயம் குடித்தே அழித்து விடுகின்றனர். எப்படி குடும்பத்தை நடத்துவது? பிள்ளைகளைப் படிக்கவைப்பது? ஆட்சியாளர்களிடம் அதிகார வர்க்கத்திடமும் பல வருடங்களாக மனுகொடுத்து மன்றாடினாலும் காது கொடுத்துக் கூட கேட்பதில்லை. இனியும் பிள்ளைகள், குடும்பங்களின் வாழ்க்கை சீரழிந்து நாசமாய் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது” என்று கூறுகின்றனர், அப்பகுதி மக்கள்.
நமது பிரச்சினையைச் சரிசெய்ய யாரும் வரப்போவதில்லை, நாம்தான் தீர்க்க வேண்டுமென முடிவெடுத்த போடூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு 27.04.2026 மதியம் 12.00 மணியளவில் போடூரில் இயங்கிவந்த சந்துக்கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்; சந்துக்கடை நடத்தும் நபரை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசு சந்துக்கடை நடத்தி வந்த கோவிந்தராஜ், மாதேஷ் ஆகிய இருவரையும் கைதுசெய்துள்ளது. “இனி இதுபோன்று நடைபெறாது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களிடம் கூறுங்கள். நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என கூறிவிட்டுச் சென்றுள்ளது போலீசு.
ஆனால், சந்துக்கடையை உடைத்த மறுநாளே 28.04.2026 அன்று அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவர் அவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்ததை அறிந்த ஊர்பொதுமக்கள், சித்ரா நடத்திவரும் சந்துக்கடை முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
சம்பவமறிந்து வந்த பென்னாகரம் போலீசு “வீதியில் யாரும் கூட்டம் சேர்க்கக்கூடாது, மீறி போராட்டம் செய்தாலோ, இங்கு நடைபெறும் போராட்ட செய்தியைப் பொதுவெளியில் பரப்பினாலோ ஊரில் உள்ள அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து விடுவோம்” என மிரட்டியுள்ளது.
போலீசின் மிரட்டலுக்கு அடிபணியாத பெண்கள், இனி எங்கள் ஊரில் சந்துக்கடை சாராயத்தை எங்கு திறந்தாலும் அடித்து நொறுக்குவோமென போலீசிடம் சண்டையிட்டுப் பின்வாங்காமல் உறுதியுடன் போராடியுள்ளனர்.
இதன் விளைவாக, 28.04.2026 அன்று சித்ரா கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 29.04.2026 புதன்கிழமை பென்னாகரத்தில் உள்ள சந்துக் கடைகளை மூடியுள்ளது பென்னாகரம் போலீசு.
மக்கள் போராட்டங்கள் மூலமே தீர்வை நோக்கி நகர முடியும் என்பதற்கு போடூர் மக்களின் போராட்டம் மற்றுமொரு முக்கிய சான்று. அத்தகைய மக்கள் போராட்டங்களை ஆதரித்து நிற்பது சமூகத்தை நேசிக்கும் அனைவரின் கடமை.
மூடு டாஸ்மாக்கை! என்று முழங்குவோம்!
மக்கள் கோரிக்கைகள்:
- டாஸ்மாக், சந்துக்கடைகள், கஞ்சா, லாட்டரிச் சீட்டு விற்பனை அனைத்தையும் உடனடியாக தடை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சட்டவிரோத சந்துக் கடைகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத போலீசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போடூர் மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், சாக்கடை வசதி, சாலை, கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
- டாஸ்மாக் சாராய போதை, கஞ்சா போதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு, சிகிச்சைகளை நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





