டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நடைபெற்ற மக்கள் போராட்டங்கள்!

தற்போது வெளியாகியுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பானது வரவேற்கத்தக்கதேயானாலும் இளைஞர்களைச் சீரழிக்கின்ற, குடும்பங்களின் தாலி அறுக்கின்ற டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

1

மிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகில் 500 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு விஜய் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் 717 டாஸ்மாக் கடைகளைக் கண்டறிந்து அவற்றின் பட்டியலை வெளியிட்டதுடன் இரண்டு வாரத்திற்குள் அவை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பை ஜனநாயக சக்திகள், அரசியல் தலைவர்கள், புரட்சிகர இயக்கங்கள் எனப் பலரும் வரவேற்றுள்ளனர். அதோடு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர். பல இடங்களில் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அரசு அறிவித்துள்ள பட்டியலில் பல ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் இடம்பெறவில்லை. இவை கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள் அருகில் செயல்பட்டு வருகின்றன. சான்றாக, சென்னை தியாகராயநகர் தண்டாயுதபாணி தெருவில் செயல்பட்டு வருகின்ற டாஸ்மாக் கடை அரசு அறிவித்துள்ள பட்டியலில் இடம்பெறவில்லை என்று அக்கடையின் பொறுப்பாளரே தெரிவித்துள்ளார். இக்கடை அமைந்துள்ள 500 மீட்டரைச் சுற்றி ஐந்து பள்ளிகள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு வெளியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மே 13 அன்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கடையினால் பள்ளிக்குச் செல்கின்ற குழந்தைகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். உடனடியாக தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதானம் பேசியுள்ளனர். ஆனால் மக்களின் உறுதிமிக்கப் போராட்டத்தினால் டாஸ்மாக் கடை இனி திறக்கப்படாது என வட்டாட்சியர், போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அதன் பின்னரே மக்கள் களைந்து சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகின்ற 4831 எண் கொண்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்துல் கலாம் சமூக அறக்கட்டளை மற்றும் வர்த்தக சங்கத்தினர் மே 13 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெரிசல் மிகுந்த பகுதியில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தளங்கள், மருத்துவமனைகள் அருகே டாஸ்மாக் கடை உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடையைத் திறக்க வந்த போது பெண்கள் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் எதிர்ப்பினால் கடையின் மேலாளர் “கடை நிரந்தரமாக மூடப்படும்” எழுத்துப் பூர்வமாக உறுதியளித்த பின்னரே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரத்தில் குடியிருப்பு அருகில் 6468 எண் கொண்ட டாஸ்மாக் கடை சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்கள் பெண்களைக் கிண்டல் செய்வதால் அவ்வழியாகப் பெண்கள் செல்வதற்கே அச்சப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது. பள்ளிக்கும் செல்லும் பெண் குழந்தைகளைப் பெற்றோர்களே பள்ளிக்குக் கூட்டிச் சென்று வருகின்றனர். அருகில் கோவில் இருப்பதால் அங்கு வழிபடச் செல்லும் மக்களும் பெரும் சங்கடத்திற்கு ஆளாகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து அப்பகுதி மக்கள் மே 14 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பிரம்மதேசம் புதூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைக்கு மது அருந்த வருவோரால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறி பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மே 15 அன்று போராட்டம் நடத்தினர். மதுக்கடையை மூடினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பது ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு கட்சியும் மேற்கொள்கின்ற பொதுவான நடவடிக்கையாகும். கடந்த தி.மு.க ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆனால் அதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான மனமகிழ் மன்றங்களுக்கு எப்.எல் 2 என்ற மதுபான உரிமம் வழங்கப்பட்டது. இவை போதைக் கலாச்சாரத்தை உருவாக்குவதிலும், இளைஞர்களைச் சீரழிப்பதிலும் முக்கியமானவையாக உள்ளன. தற்போது 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ள அரசு மனமகிழ் மன்றங்களுக்கான மதுபான உரிமை ரத்து செய்யுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பானது வரவேற்கத்தக்கதேயானாலும் இளைஞர்களைச் சீரழிக்கின்ற, குடும்பங்களின் தாலி அறுக்கின்ற டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் தமிழ்நாடு நாடு அரசு மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதற்கான போராட்டங்களை ஜனநாயக சக்திகள், இயக்கங்கள் ஆதரிக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads