வ்வொரு வருடமும் ப்ளஸ் டூ வகுப்புகள் துவங்கும் பொழுது, ஒவ்வொரு குழந்தையும் பெரும் உற்சாகத்தில் இருப்பார்கள்.

எல்லாமே நன்றாக நடக்கும் என்பதை, இளம்மனதின் தீவிரத் தன்மையோடு நம்புவார்கள். செல்விக்கும் வண்ணக் கனவுகள் நிறைய இருந்தது.

நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலைக்குப் போகவேண்டும், நிறைய புடவைகள் எடுக்க வேண்டும் என பலவிதமான கனவுகள்‌.

பள்ளி மாணவிகளுடன் ஆசிரியர் முத்தரசி

ஜூன் மாதத் தேர்வில் முதல் மதிப்பெண்.. அந்த மாத இறுதியில் திடீரென்று காணாமல் போனாள்.

வீடு, அவள் அப்பா வேலை பார்க்கும் இடம் என எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.. எந்தத் தகவலும் இல்லை..

திடீரென்று ஒருநாள் லேண்ட் லைனில் இருந்து பேசினாள்.
“அப்பா குடிச்சு குடிச்சு வீணாய்ப் போய்ட்டார் மிஸ்… கைல காசு இல்லாததால் யாரோ சொந்தக்காரங்ககிட்ட 2 லட்சம் வாங்கிட்டு என்னை கல்யாணம் பண்ணித் தரேன்னு சொல்லிட்டார் ‌‌.

அவங்க எல்லோரும் வீட்டுக்கு வந்துட்டாங்க. எவ்வளவு போராடியும் இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை… ராத்திரியோட ராத்திரியா நானும் , அம்மாவும், தங்கச்சிகளும் அப்பாவுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்துட்டோம். பயந்து பயந்து ஒரு சின்ன வீட்டுல குடியிருக்கோம் மிஸ்… வேலைக்குப் போலான்னு இருக்கேன் மிஸ்” என்று அழுகையினூடே அவள் பேசிய பொழுதுகள் இன்னும் நினைவில் இருக்கிறது. நான் வார்த்தைகள் அற்று நின்ற தருணங்கள் அவை..

ஒவ்வொரு மாதமும் Attendance Register முடிக்கும்போது ஏதேனும் ஒரு நாள் வந்து விடமாட்டாளா, எப்படியாவது படிக்க வைத்து விட மாட்டோமா என்று இதயம் துடித்துக் கொண்டே இருக்கும்.

அரசுப் பள்ளி வருகைப் பதிவேடுகளில் இடைநிற்றல் என்று அழுத்தமாக சிவப்பு மையினால் எழுதப்பட்ட பெயர்களுக்குப் பின்னால்தான் எத்தனை எத்தனை சிதைவடைந்த வாழ்க்கைகள் நிரம்பியுள்ளன…

பசிக்காக, மானத்திற்காக, பிழைப்புக்காக, சிறுபுன்னகைக்காக அத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையை ஒரே நொடியில் மாற்றிக்கொண்டு, கண்காணாத பாதையில் ஓடிக் கொண்டே இருப்பவர்கள் எத்தனை எத்தனை பேர்….

படிக்க :
♦ மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !
♦ குழந்தைகள் வார்த்தைகளின் கடலில் குளிக்கின்றனர் !

கிட்டத்தட்ட எல்லோருமே மறந்து போய்விட்ட ஒரு ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் TC வேண்டும் என்று எதிரில் வந்து நின்றவளைக் கண்டு திகைத்துப்போனேன். படிப்பிலிருந்து வெகுதூரம் விலகிப் போய் விட்டிருந்தாள்.

“இப்போ நீ நினைச்சாக் கூட எக்ஸாம் எழுதலாம்.. எழுதறியாம்மா” எனக் கேட்ட போது பதறிப் போனாள்..

யாரால்தான் வெறும் பதினைந்து நாட்களுக்குள் ஆறு பாடங்களைப் படித்து விட‌ முடியும் ?? பெரும் சிரமம்..

அனைவரும் சிந்திக்கக் கூட மறுக்கும் புள்ளி இது..

பிரபஞ்சனின் “மயிலிறகு குட்டி போட்டது” என்றொரு கட்டுரையை வாசித்ததுண்டா??

பிரபஞ்சனின் அன்புத் தங்கை பானு.. தங்கக் கொலுசுகள் சப்தம் எழ நடந்து வரும் அந்தப் பெண் குழந்தை வீட்டின் செல்லம்..

பானு நிறைய மயிலிறகுகளை ஒவ்வொரு புத்தகத்திலும் வைத்திருந்தாள்.. எல்லா இறகுகளும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் குட்டி போடுமென்று திடமாய் நம்பினாள்..

குழந்தையின் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பாத அவளது அப்பா, ஒவ்வொரு பௌர்ணமி தின நள்ளிரவில், புதிதாக சில இறகுகளை அவள் புத்தகத்தில் வைப்பார். மறுநாள் காலை குழந்தை கண்விழித்து எழும்போது, இறகு குட்டி போட்டதென அகமகிழ்ந்து போகும்..

புத்தகத்தின் மத்தியில் வைக்கப்பட்ட மயிலிறகு குட்டி போடாது என்பதை எந்தப் புள்ளியில் அந்தக் குழந்தை புரிந்து கொள்கிறதோ, அந்தப் புள்ளியில் அக்குழந்தை தன் அறியாமையை, குழந்தைமையை இழக்கிறது..

அறியாமையை இழந்த பின் ஏற்படும் வலி, துயரம், ஏமாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் வெற்றிடத்தை யார் நிரப்புவது??

அரசுப் பள்ளி வருகைப் பதிவேடுகளில் இடைநிற்றல் என்று அழுத்தமாக சிவப்பு மையினால் எழுதப்பட்ட பெயர்களுக்குப் பின்னால்தான் எத்தனை எத்தனை சிதைவடைந்த வாழ்க்கைகள் நிரம்பியுள்ளது…

கருணைமயமான பாடங்கள், அர்த்தம் பொதிந்த கதைகள், சித்திரங்கள், வண்ணக் கனவுகள் என அந்த வெற்றிடத்தை ஒரு நல்லாசிரியர் போக்க முடியும் என்கிறார் பிரபஞ்சன் சார்..

எத்தனை அழகிய அர்த்தமுள்ள வரிகள்?? ஆசிரியர்கள் கொண்டாட வேண்டிய வாழ்வியல் அழகுகள் இவை..

நம்பிக்கையைப் பரிசளிக்கும் இதயங்கள் மட்டுமே எப்போதைக்குமான தேவை… எல்லோருக்கும்.

பின்னிரவுகளில் “மிஸ் நான் பாஸ் பண்ணிடுவேனா ??” என செல்வி பதறும் பொழுதுகளில், அவளைத் தேற்ற நான் அழுத்தமாகப் பற்றிக்கொண்டவை காலக்கரையான்கள் அழிக்க முடியாத பிரபஞ்சன் சாரின் வரிகள் மட்டுமே..

ப்ளஸ் டூ ரிசல்ட் வந்து அனைத்துப் பாடங்களிலும் பாஸ் பண்ணி விட்டாள்…. 50% மதிப்பெண்…

மாணவர்கள் ஜெயிக்கும் இடங்கள்தான், ஆசியர்கள் தங்கள் அடையாளங்களை அடையும் புள்ளி..

தன் அத்தனை துயரங்களையும் மீறி ஒரு 17 வயது பெண் குழந்தை சாதிக்க முடியும் என்பதற்கு முன்னால் நம் உழைப்பெல்லாம் வெகு சாதாரணம்…

படிக்க :
♦ நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !
♦ என் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் !

வெற்றி என்பது வேறு, சந்தோஷம் என்பது வேறு … இல்லையா??

ப்ளஸ் டூ தேர்வில் சென்ற வருடத்தை விட சற்று கூடுதலாக 98% பெற்று முன்னேறியுள்ளோம் என்பது , புள்ளி விவரங்கள்படி வெற்றியெனில், செல்வி தேர்ச்சி பெற்றது சந்தோஷம்…

“தோல்வி என்பது கண்ணீர்… அதைக்கூட எளிதாக விழுங்கி விடலாம்… ஆனால் வெற்றி என்பது மது.. அது தரும் போதையிலும் தள்ளாடாமல் இருப்பதுதான் பெரிது” என்கிற வைரவரிகள் எப்போதும் நினைவின் புழுதியில் நிலைத்திருக்கிறது… அதனால்தான் தேர்வு முடிவுகள் குறித்த தாமதமான பதிவு…

பிரியங்களுடன்
முத்தரசி…

நன்றி : முகநூலில் – Mutharasi Ramasamy

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

1 மறுமொழி

  1. அசிரியருக்கும், செல்விக்கும். மனமார்ந்த் வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க