உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8

லெக்ஸேய் மெரேஸ்யெவும் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து கொண்டு போனான். எல்லோருடைய உள்ளங்களுக்கும் திறவு கோல் தேடிக்காண கமிஸாருக்கு இயன்றது. ஆனால் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அவருக்கு மசிவதாயில்லை. மெரேஸ்யெவுக்கு அறுவை நடந்த பிறகு முதல் நாளே “வீரம் விளைந்தது” என்ற நவீனம் வார்டிற்கு கொண்டு வரப்பட்டது. மற்றவர்கள் அதை உரக்கப் படிக்கத் தொடங்கினார்கள். இது யாருக்காகப் படிக்கப்படுகிறது என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். ஆனால் இது அவனுக்கு வெகுவாக தேறுதல் அளித்து விடவில்லை. இந்த நவீனத்தின் கதாநாயகன் பாவேல் கர்ச்சாகினை அவன் பிள்ளைப் பருவம் முதலே போற்றி வந்தான். அவனது விருப்பத்துக்கு உரிய கதாநாயகர்களில் அவன் ஒருவனாயிருந்தான். “ஆனால் கர்ச்சாகின் விமானி அல்லவே. விமானத்துக்காக ஏங்குவது என்பதன் அர்த்தம் அவனுக்குத் தெரியுமா என்ன?” என்று இப்போது எண்ணமிட்டான் அலெக்ஸேய்.

ஆக இந்தச் சந்தர்ப்பத்தில் நவீனம் வெற்றி பெறவில்லை. அப்போது கமிஸார் சுற்றி வளைத்துச் செல்லும் நடையை மேற்கொள்ளலானார். பேச்சுவாக்கில் போல ஒரு மனிதனைப் பற்றிப் பிரஸ்தாபித்தார் அவர். திமிர்வாதத்தால் பீடிக்கப்பட்டிருந்த கால்களுடன் பெரிய சமூக வேலையை நிறைவேற்ற அந்த மனிதனுக்கு முடிந்ததாம். உலகிலுள்ள எல்லா விஷயங்களிலும் அக்கறை கொண்டவரான ஸ்தெபான் இனாவிச் ஆகா அப்படியா என்று வியந்தார். தம்முடைய வட்டாரத்தில் ஒரு கை இல்லாத மருத்துவர் ஒருவர் இருப்பதாகவும், வட்டாரம் பூராவிலும் தலை சிறந்த வைத்தியர் அவர்தாம் என்றும், அவர் குதிரை சவாரி செய்வதாகவும் வேட்டைக்குப் போவதாகவும், ஒற்றைக் கையால் துப்பாக்கிச் சுடுவதாகவும் அணிலின் கண்ணில் குண்டு பாயும் படி குறி பிசகாமல் சுடுகிறார் என்றும் தாமே விவரிக்கத் தொடங்கிவிட்டார்.

அப்புறம் கமிஸார் காலஞ்சென்ற அகாதமீஷியன் வில்லியம்ஸை நினைவு கூர்ந்தார். இயந்திர டிராக்டர் நிலைய வேலைத் தொடர்பில் கமிஸாருக்கு நேர்முகமாகத் தெரியுமாம். பாதி உடம்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மனிதருக்கு ஒரு கை மட்டுமே வழங்கியதாம். அப்படியும் அவர் கல்லூரித் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றி வந்தாராம், மிகப் பெரிய அளவில் வேலை செய்து வந்தாராம்.

மெரேஸ்யெவ் இந்தக் கதைகளை எல்லாம் கேட்டு வாய்க்குள் நகைத்துக் கொண்டான். சிந்தனை செய்வது, பேசுவது, எழுதுவது, உரையாடுவது, சிகிச்சை செய்வது, வேட்டையாடுவது கூட கால்கள் இல்லாமலே முடியும். ஆனால் அவன் விமானி, இயல்பிலேயே விமானி. சிறுவனாயிருக்கையில் அவன் முழாம் பழ வயலைக் காவல் காத்துக் கொண்டிருந்தான். வறண்டு வெடிப்புக் கண்ட நிலத்தில் வாடிய இலைகளுக்கு நடுவே கிடந்தன பிரம்மாண்டமான உருண்டைகள், வோல்காப் பிரதேசம் முழுவதிலும் புகழ்பெற்ற தர்பூஸ் பழங்கள் அவை. அலெக்ஸேய் அந்த வயலைக் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் சிறு வெள்ளித் தட்டாம் பூச்சி ஒன்றின் ரீங்காரத்தை முதலில் கேட்டான், பின்பு வெயிலில் இரட்டை இறக்கைகளுடன் அது மினுமினுக்கக் கண்டான். புழுதி நிறைந்த ஸ்தெப்பிக்கு வெகு உயரே ஸ்டாலின் கிராத் நகரை நோக்கிக் காற்றில் மிதந்து சென்றது அது. அந்த நாள் முதலே விமானி ஆக தீர்மானித்து விட்டான் அலெக்ஸேய். இந்தக் கனவு அது முதல் அவனை விடாது பற்றிக் கொண்டது.

இளங்கம்யூனிஸ்ட் சங்கம் அவனை சோவியத் தூரக் கிழக்குக்கு அனுப்பியது. அங்கே தைகா காட்டில் ஆமூர் நதிக் கரையில் இளமை நகரான கம்ஸமோல்ஸ்க்கை நிறுவுவதில் அவன் பங்கு கொண்டான். ஆனால் பறப்புகள் பற்றிய தன் கனவை அவன் தைகாவிலும் விட்டுவிடவில்லை. நகரை நிறுவியவர்களில் தலைசிறந்த விமானத் தொழிலை மேற்கொள்ள விரும்பிய யுவ யுவதியர்களை அவன் கண்டான். அதுவரை வெறும் திட்டங்களில் மட்டுமே நிலவிய அந்த நகரில் அவர்கள் தங்கள் கரங்களால் தங்கள் விமானப் பயிற்சிக் கழகத்தை கட்டினார்கள் என்பதை நம்புவதே கடினம்.

மங்குல் வந்து, மூடுபனி அந்த பிரம்மாண்டமான நிர்மாண இடத்தைச் சூழ்ந்து கொண்டதும் கட்டுமானப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் பராக்குகளில் குழுமி, ஜன்னல் கதவுகளைச் சாத்தி விடுவார்கள். வன்மத்துடன் மெல்லிய ரீங்காரமிட்டவாறு காற்றில் படலம் படலாமாகப் பறந்த கொசுக்களையும் மற்றப் பூச்சிகளையும் அப்பால் விரட்டும் பொருட்டுக் கதவுகளுக்கு முன்னே ஈரக்கிளைகளால் புகை மண்டும் நெருப்பை மூட்டுவார்கள்.

அவர்கள் மரங்களை ரம்பங்களால் அறுத்து வீழ்த்தி, அடிக்கட்டைகளை வேரோடு பிடுங்கி அகற்றி, தரையை சமப்படுத்தி, தைகாக் காட்டில் விமான நிலையத்துக்கு இடம் செய்வார்கள்.

உழைப்புக்குப் பின் நிர்மாணத் தொண்டர்கள் இளைப்பாறுகையில் விமானப் பயிற்சிக் கழகத்தினர், கொசுக்களையும் கடி பூச்சிகளையும் நெருங்கவொட்டாது விரட்டும் மண்ணென்ணையை உடம்பில் பூசிக் கொண்டு, கோடாரிகளையும் பிக்காசிகளையும் ரம்பங்களையும் மண்வெட்டிகளையும் வெடி மருந்தையும் எடுத்துக் கொண்டு அலெக்ஸேயின் தலைமையில் தைகாவுக்குச் செல்வார்கள். அவர்கள் மரங்களை ரம்பங்களால் அறுத்து வீழ்த்தி, அடிக்கட்டைகளை வேரோடு பிடுங்கி அகற்றி, தரையை சமப்படுத்தி, தைகாக் காட்டில் விமான நிலையத்துக்கு இடம் செய்வார்கள். முடிவில் காட்டைத் திருத்தி விமானப்பறப்புத் திடலுக்குச் சில கிலோ மீட்டர் இடத்தைத் தங்கள் கைகளால் செப்பம் செய்துவிட்டார்கள்.

இந்த விமான நிலையத்திலிருந்துதான் அலெக்ஸேய் பயிற்சி விமானத்தில் முதன் முதலாக வானில் கிளம்பினான். அவனது பிள்ளைப் பிராயக் கனவு முடிவில் நனவாயிற்று.

படிக்க:
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் !
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !

பிறகு அவன் இராணுவ விமானப் பயிற்சிக் கல்லூரியில் பயின்றான், தானே இளைஞர்களுக்கு அதில் பயிற்சி அளித்தான். அப்போதுதான் போர் மூண்டது. கல்லூரி நிர்வாகிகள் அச்சுறுத்தியதைப் பொருட்படுத்தாமல் அலெக்ஸேய் பயிற்சி ஆசிரியன் வேலையை விட்டுவிட்டுப் போரிடும் இராணுவத்தில் சேர்ந்தான். வாழ்க்கையில் அவனுடைய முன்னேற்றம் எல்லாம், அவனது கிளர்ச்சிகளும் மகிழ்வும், அவனது வருங்காலத் திட்டங்களும் நிகழ்கால வாழ்க்கை வெற்றியும் – எல்லாமே விமானப் பறப்புடன் இணைந்திருந்தன….

இவர்கள் என்னடாவென்றால் வில்லியம்ஸைப் பற்றிக் கதைக்கிறார்கள்!

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க