உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8-அ

“அவர், அதுதான் வில்லியம்ஸ், விமானி அல்லவே” என்று சொல்லிவிட்டுச் சுவர் பக்கம் திரும்பிக் கொண்டான் அலெக்ஸேய்.

எனினும் அவன் “மனப்பூட்டைத் திறக்கும் முயற்சிகளை கமிஸார் கைவிடவில்லை. ஒரு நாள் அலெக்ஸேய் வழக்கம் போன்று எது எப்படிப் போனால் என்ன என்ற உணர்வு மறத்த நிலையில் இருந்தபோது கமிஸாரின் இடிக்குரல் முழங்குவது அவன் காதில் பட்டது.

“அலெக்ஸேய், இதோ பார். இங்கே உன்னைப் பற்றி எழுதியிருக்கிறது.”

இதற்குள் ஸ்தெபான் இவனாவிச் சஞ்சிகையை மெரேஸ்யெவிடம் கொண்டு கொடுத்தார். சிறு கட்டுரை ஒன்று அதில் குறியிட்டுக் காட்டப்பட்டிருந்தது. அலெக்ஸேய் அந்தக் கட்டுரை மீது விரைவாகக் கண்ணோட்டினான். முதல் உலக யுத்த காலத்திய ருஷ்ய விமானிகள் பற்றியது அந்தக் கட்டுரை. சஞ்சிகையின் முதல் பக்கத்திலிருந்து அலெக்ஸேயை நோக்கியது அறிமுகமற்ற இளம் இராணுவ அதிகாரி ஒருவனது முகம். அவனது சிறுமீசை மேல் நோக்கி முறுக்கி விடப்பட்டிருந்தது. காதுவரை இழுத்துவிடப் பட்டிருந்த விமானி தொப்பி மீது வெள்ளைத் தொப்பிச் சூட்டு திகழ்ந்தது.

“படி, படி, உனக்காகவேதான்” என்று வற்புறுத்தினார் கமிஸார்.

மெரேஸ்யெவ் படித்தான். ருஷ்ய இராணுவ விமானி லெப்டினன்ட் வலெரியான் அர்க்காதியெவிச் கார்ப்போவிச் என்பவனைப் பற்றிக் கட்டுரையில் விவரிக்கப் பட்டிருந்தது. பகைவர் முனையிடங்களுக்கு உயரே பறக்கையில் லெப்டினன்ட் கார்ப்போவிச் ஜெர்மானியச் சிதறு குண்டினால் காலில் காயமடைந்தான். அடிபட்டுச் சிதைந்த காலுடன் தனது “பர்மான்” விமானத்தைத் திருப்பி ஒட்டிப் போர்முனை வரிசையின் மேலாகச் சொந்தப் படையினர் இருந்த இடத்தில் அவன் விமானத்தை இறக்கிவிட்டான். அவன் பாதம் வெட்டி அகற்றப்பட்டுவிட்டது. எனினும் அந்த இளம் அதிகாரி இராணுவத்திலிருந்து விலக விரும்பவில்லை. தானே உருவமைத்த போலிக்காலை அவன் புனைந்தான். நெடுநாட்கள் பிடிவாதமாக உடற்பயிற்சி செய்தான், போலிக்காலுடன் நடந்தும் வேலை செய்தும் பழகினான். விளைவாக யுத்த முடிவுக்குள் மீண்டும் இராணுவத்துக்குள் திரும்பி விட்டான். இராணுவ விமானிகள் கல்லூரியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினான். அதோடு, கட்டுரையில் குறித்தபடி, “சில வேளைகளில் தன் விமானத்தை ஓட்டிச் செல்லும் அபாயத்தையும் கூட மேற்கொண்டான்.” இராணுவ அதிகாரிக்கு உரிய “கியோர்கிய்” பதக்கம் அவனுக்கு வழங்கப்பட்டது, ருஷ்ய விமானப் படையில் தொடர்ந்து பணியாற்றினான். முடிவில் ஒரு விபத்தில் உயிர் துறந்தான்.

இந்தக் கட்டுரையை ஒரு தடவை, இரண்டு தடவைகள் , மூன்று தடவைகள் படித்தான். படத்தில் இருந்த ஒடிசலான இளம் அதிகாரி ஓரளவு இறுக்கத்துடன், ஆனால் துணிவு ததும்பப் புன்னகை செய்தான். அவனது களைத்த முகத்தில் சித்தவுறுதி தென்பட்டது. வார்டில் இருந்தவர்கள் எல்லோரும் பேசாமல் அலெக்ஸேயை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“படித்தாயா?” என்று தந்திரத்துடன் வினவினார் கமிஸார். (அலெக்ஸேய் ஒன்றும் பேசவில்லை. இன்னமும் வரிகள் மீது கண்ணோட்டிக் கொண்டிருந்தான் அவன்) “ஊம், என்ன சொல்கிறாய்?”

“ஆனால் அவனுக்கு ஒரு பாதம் மட்டுந்தானே இல்லை!”

“நீ சோவியத் குடிமகன் ஆயிற்றே.”

“அவன் பறந்தது ‘பர்மன்’ விமானத்தில். அதுவும் ஒரு விமானமா? வெறும் சக்கடா அல்லவா அது! அதில் பறப்பதற்கு என்ன? அதைச் செலுத்துவதற்கு இலாவகமோ விரைவோ தேவையே இல்லை.”

ஆனால் நீ சோவியத் குடிமகன் ஆயிற்றே” என்று வலியுறுத்தினார் கமிஸார்.

சோவியத் குடிமகன்” என்று இயந்திரம் போலத் திருப்பிச் சொன்னான் அலெக்ஸேய். கட்டுரையிலிருந்து அவன் இன்னமும் பார்வையை அகற்றவில்லை. அப்புறம் அவனுடைய வெளிறிய முகம் உள்ளிலிருந்து பரவிய ஏதோ செம்மையால் ஒளிர்ந்தது. வியப்பும் மகிழ்வும் பொங்கும் விழிகளுடன் எல்லோரையும் பார்த்தான்.

படிக்க:
திராவிட மலர்ச்சியைத் தடுக்க தாமதம் ஏற்படக் கூடுமே தவிர தடையேற்படாது !
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

அன்று இரவு அலெக்ஸேய் கண்களை மூடவே இல்லை. மறுபடி மறுபடி பத்திரிக்கையை எடுத்து விடிவிளக்கு வெளிச்சத்தில் லெப்டினன்டின் புன்னகைக்கும் முகத்தை நோக்கினான். “உனக்குக் கஷ்டமாக இருந்தது, ஆயினும் நீ சமாளித்து விட்டாய். எனக்கு பதின்மடங்கு அதிகக் கடினமாக இருக்கும். ஆனாலும் நானும் பின்தங்கிவிட மாட்டேன், நீயே பார்ப்பாய்.” – இவ்வாறு எண்ணமிட்டான் அலெக்ஸேய்.

இரவுக்கு நடுவில் கமிஸார் திடீரென ஓசை அடங்கிப் போனார்.. அலெக்ஸேய் சற்றே எழுந்து பார்த்தான். கமிஸார் வெளிறிப் போய், அமைதியாகப் படுத்திருந்தார். அவர் மூச்சு விடவில்லை என்பது தெரிந்தது. அலெக்ஸேய் மணியை எடுத்து வெறி கொண்டவன் போல அடித்தான். க்ளாவ்தியா மிஹாய்லவ்னா திறந்த தலையும் தொளதொளத்த முகமும் அவிழ்ந்த பின்னலுமாக ஓடி வந்தாள். சில நிமிடங்களுக்குள் உள்ளுறை மருத்துவர் அழைக்கப்பட்டார். அவர் நாடி பிடித்துப் பார்த்தார், கற்பூரத் தைலத்தை ஊசி போட்டு ஏற்றினார், ஆக்ஸிஜன் குழாயை வாயில் செருகினார். இந்தக் கெடுபிடி ஒரு மணி நேரம் போல நீடித்தது. சமயங்களில் எல்லாம் வீணாகக் கூடத் தோன்றியது. முடிவில் கமிஸார் விழிகளைத் திறந்தார், சோர்வுடன், க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவைப் பார்த்து முறுவலித்தார்.

“மன்னிக்க வேண்டும், உங்களைக் கலவரப்படுத்தி விட்டேன்.” என்று தணிந்த குரலில் மொழிந்தார்….

உள்ளுறை மருத்துவர் போய்விட்டார். அவருடைய ஜோடுகளின் ஒலி ஆளோடியின் கோடியில் சென்று ஓய்ந்து விட்டது. அறைத்தாதிகள் அவரவர் வார்டுக்குப் போய் விட்டார்கள். க்ளாவ்தியா மிஹாய்லவ்னா மட்டுமே கமிஸாரின் கட்டில் மீது ஓரத்தில் உட்கார்ந்திருந்தாள். நோயாளிகள் தூங்கி விட்டார்கள். ஆனால் மெரேஸ்யெவ் கண்களை மூடியவாறு உறங்காமல் படுத்திருந்தான். விமானத்தின் கால் விசைகளுடன் வார்களால் பொருத்தப்படக் கூடிய பொய்க் கால்களைப் பற்றிச் சிந்தித்து கொண்டிருந்தான் அவன். விமானப் பயிற்சி கழகத்தில் பயிற்சி ஆசிரியனாக இருந்த உள்நாட்டுப் போர் காலத்தைச் சேர்ந்த முதிர்ந்த விமானி கூறிய சேதி அவன் நினைவுக்கு வந்தது. குட்டைக் காலனான ஒரு விமானி பெடல்களுடன் மரக் கட்டைகளை கட்டி இணைத்துக் கொண்டதாக அவன் சொன்னான்.

“நான் உனக்கு சளைக்க மாட்டேன், அண்ணே” என்று படத்திலிருந்த கார்ப்போவிச்சுக்கு அலெக்ஸேய் உறுதி கூறினான். “பறப்பேன், கட்டாயம் பறப்பேன்!” என்ற சொற்கள் அவனது மூளையில் ஒலித்துத் தூக்கத்தை விரட்டிவிட்டன. கண்களை மூடியவாறு அவன் அமைதியாகப் படுத்திருந்தான். கனவில் புன்னகைத்தபடி அவன் ஆழ்ந்து உறங்குவது போலப் பார்ப்பவர்களுக்குத் தோன்றியிருக்கும்.

அப்போது ஓர் உரையாடல் அவன் காதுகளில் விழுந்தது. பின்னர் வாழ்க்கையின் கடினமான கணங்களில் இந்த உரையாடலை அவன் பலமுறை நினைவுபடுத்திக் கொண்டான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க