பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 11

மெரேஸ்யெவ் விடாமுயற்சியுடன் நிறையப் பறந்தான். மறுபடி விமானத்துடன் ஒன்று கலந்துவிட, பொய்க்கால்களின் உலோகம், தோல் இவற்றின் ஊடாக அதைப் புரிந்து கொள்ள அரும்பாடுபட்டான். இதில் தான் வெற்றி அடைவதாகச் சில வேளைகளில் அவனுக்குத் தோன்றும். அவன் களிப்புற்று விமானத்தை ஏதேனும் சிக்கலான வடிவுப் பறப்பில் செலுத்துவான். ஆனால் அவன் இயக்கம் சரியானதாக இல்லை, விமானம் இடக்குப் பண்ணுகிறது, தன் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறது என்று உடனேயே உணர்வான். நம்பிக்கை ஒளி மங்கிவிட்டதால் துயருற்று, சலிப்பூட்டும் பயிற்சியில் மறுபடி ஈடுபடுவான்.

இத்தகைய நிலையில் வந்தது வெண்பனி உருகத் தொடங்கும் மார்ச்சு மாதம். ஒரு நாள் விமானத்திடலில் ஒரே காலையில் வெண்பனி சிறிது இளகிக் கருத்து விட்டது. புரையோடிய வெண்பனி தரையோடு தரையாகப் படிந்துவிட்டது. அதன் மேல் இயங்கிய விமானங்கள் உழுசால் போன்ற ஆழ்ந்த தடங்களை ஏற்படுத்தின. அன்று அலெக்ஸேய் தனது சண்டை விமானத்தில் வானில் கிளம்பினான். அப்போது காற்று எதிரிலிருந்து விலாப் புறமாக வீசியது. விமானம் ஒரு பக்கம் விலகிற்று, அலெக்ஸேய் அதை ஓயாமல் நேர்படுத்த வேண்டியிருந்தது. அப்போதுதான், விமானத்தை நேர்பாதைக்குத் திருப்புகையில் தான் அலெக்ஸேய் சட்டெனக் கண்டு கொண்டான் – விமானம் தனக்குக் கீழ்படுகிறது என்பதையும், தான் அதை உள்ளத்தாலும் உடலாலும் முழுமையாக உணர்வதையும். இந்த உணர்வு மின்வெட்டுப் போலப் பளிச்சிட்டது. முதலில் அலெக்ஸேய் அதை நம்பவில்லை. மட்டுமீறிய ஏமாற்றங்களை அனுபவித்தவன் ஆதலால் தனது நல்லதிர்ஷ்டத்தை உடனே நம்ப அவனால் முடியவில்லை.

விமானத்தைச் சட்டென வலப்புறம் திருப்பி ஒரு வளையமிட்டான். விமானம் படிந்து, கணக்காகத் திரும்பியது. மப்பு மந்தாரமான நாள் திடீரென வெயிலொளியில் சுடர்வது போலிருந்தது அலெக்ஸேய்க்கு.

எத்தனை எத்தனையோ நாட்கள் செய்த கடும் உழைப்பின் பலனை இப்போது அவன் எளிதாக அனுபவித்தான். இவ்வளவு நீண்ட காலமாகக் கை வராமல் நழுவிச் சென்ற முக்கிய விஷயம் இப்போது அவனுக்குக் கைவந்து விட்டது. தனது விமானத்துடன் அவன் இரண்டறக் கலந்துவிட்டான், தனது உடலின் நீட்சி போல அதை உணர்ந்தான். உணர்ச்சியோ பிகுவோ அற்ற பொய்க் கால்கள் கூட இந்த ஒன்று கலத்தலுக்கு இப்போது தடையாக இல்லை. தனக்குள் ஊற்றெடுத்துப் பெருகும் உவகையை உணர்ந்த அலெக்ஸேய் சில குறுகிய வளையங்கள் இட்டான், கரணமடித்தான், அடித்து முடித்ததுமே விமானத்தை பம்பரமாகச் சுழலச் செய்தான். தரை சீழ்கையுடன் வெறிகொண்டு சுழன்றது. விமான நிலையமும், பள்ளிக் கட்டிடமும், காற்று நிரப்பிய கோடிட்ட பலூன் பறந்து கொண்டிருந்த வானிலை ஆராய்ச்சிக் கோபுரமும் எல்லாமே மொத்தையான சுழற்சியில் ஒன்று கலந்தன. அலெக்ஸேய் விமானத்தைத் தயக்கமின்றி நேர் நிலைக்குக் கொண்டுவந்து சுருக்கு வளையமிட்டான். அந்தக் காலத்தில் பெயர் பெற்றிருந்த “லா-5” ரக விமானம் தனது வெளிப்படையானவையும் உள்ளார்ந்தவையுமான பண்புகளை இப்போதுதான் அவனுக்குத் தெரியக் காட்டியது. அனுபவசாலியின் கைகளில் இந்த விமானந்தான் எப்படி அற்புதங்கள் செய்தது! ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ப நுட்பமாகச் செயல்பட்டு, அது மிக மிகச் சிக்கலான கோலங்களை அனாயசமாக இட்டது, வர்ணம்போல் சர்ரென்று கோலங்களை மேலே பாய்ந்தது. கச்சிதமான, லாகவமான, விரைவுள்ள விமானம் அது.

மெரேஸ்யெவ் குடிகாரன் போலத் தள்ளாடிக் கொண்டு அர்த்தமற்ற புன்னகையால் முகம் மலர விமானத்திலிருந்து வெளியே வந்தான். தனக்கு முன்னே கோபக் கனல் வீசிய பயிற்சி ஆசிரியரை அவன் காணவில்லை, அவருடைய வசவுகளைக் கேட்கவில்லை. திட்டினால் திட்டிவிட்டுப் போகட்டும். காவல் தண்டனையா? அதற்கென்ன, குறித்த கெடுவைக் காவலறையில் கழிக்க அவன் தயார். இப்போது இவை எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டாகுமா? அவன் விமானி, நல்ல விமானி, விலைமதிப்பற்ற பெட்ரோல் அவனது பயிற்சிக்காகத் திட்ட அளவுக்கு மேல் செலவிடப்பட்டது வீண் போகவில்லை என்பது தெளிவாயிருந்தது. அவன் மட்டும் போர்முனைக்கு, சண்டை செய்வதற்கு, சீக்கிரமாக அனுப்பப்படட்டும், இந்தப் பெட்ரோல் மதிப்புக்கு நூறு மடங்கு அதிகமாக ஈடுசெய்து விடுவான்!

விடுதியில் அவனுக்கு இன்னொரு மகிழ்ச்சி காத்திருந்தது. தலையணை மேல் கிடந்தது க்வோஸ்தியேவின் கடிதம். முகவரியாளனைத் தேடுகையில் எங்கெங்கே, யார் யாருடைய பைகளில், எவ்வளவு தூரம் அது பயணம் செய்தது என்பதைத் திட்டமாக அனுமானிப்பது கடினமாக இருந்தது. ஏனெனில் உறை கசங்கி நைந்து கறைபட்டு எண்ணெயில் ஊறியிருந்தது. அன்யூத்தா கைப்பட முகவரி எழுதியிருந்த புதிய உறைக்குள் வைக்கப்பட்டு அது அலெக்ஸேயிடம் வந்திருந்தது.

க்வோஸ்தயேவ் தனக்குப் படுமோசமான அனுபவம் நேர்ந்ததாக எழுதியிருந்தான். அவன் தலையில் அடிபட்டிருந்தது. எதனால் தெரியுமோ? ஜெர்மன் விமானத்தின் இறக்கையால், இப்போது அவன் படைப்பிரிவின் மருத்துவமனையில் படுத்திருந்தான். சில நாட்களில் அங்கிருந்து வெளியேறலாம் என்று திட்டம் இட்டிருந்தான். நம்ப முடியாத இந்தச் சம்பவம் நிகழ்ந்த விதம் இதுதான்: ஆறாவது ஜெர்மன் சைனியம் மற்றப் படைகளிலிருந்து துணிக்கப்பட்டு ஸ்தாலின் கிராதின் அருகே வளைத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்களுடைய படைப்பிரிவு பின்வாங்கிய ஜெர்மானியரின் முனைமுகத்தைப் பிளந்து, அங்கு ஏற்பட்ட இடைவெளிக்குள் புகுந்து ஸ்தெப்பி வழியே ஜெர்மன் பின்புலத்தை நோக்கி எல்லா டாங்கிகளுடன் விரைந்து முன்னேறியது. இந்தத் தாக்குதலில் டாங்கிப் பட்டாளத்துக்குத் தலைமை தாங்கினான் க்லோஸ்தியேவ்.

டாங்கித் தொகுதிகள் ஜெர்மன் பின்புலப் படையின் வியூகங்களையும் கிராமக் காப்பரண்களையும் தகர்த்து நொறுக்கிக் கொண்டு முக்கிய ரெயில்வே நிலையங்களை அடைந்து, திடீரெனப் பாய்ந்து அவற்றை இடி போலத் தாக்கின. டாங்கிகள் தெருக்களில் சுற்றி வழியில் எதிர்பட்ட, பகைவரைச் சேர்ந்த எல்லாவற்றையும் குண்டு மாரியால் அழுத்தன. தாணையங்களில் எஞ்சிய படையினர் சிதறி ஓடி விட்ட பிறகு டாங்கிவீரர்களும் கவச மோட்டார்களில் கொண்டுவரப் பட்ட காலாட்படையினரும் போர்த்தளவாடக் கிட்டங்கிகளைத் தீக்கிரையாக்கினர். பாலங்களையும் இருப்புப் பாதை இணைப்பு விசைகளையும், ரெயில் நிலையங்களில் திருப்பு வளையங்களையும் பெயர்த்து அகற்றினார்கள், பின்வாங்கும் ஜெர்மானியர்களுக்கு ரெயில்கள் பயன்படாதவாறு அடைத்துவிட்டார்கள். பகைவர்களின் சேமிப்புக்களிலிருந்து டாங்கிகளுக்கும் மோட்டார்களுக்கும் பெட்ரோல் போட்டுக் கொண்டார்கள், உணவுப் பண்டங்களைத் திரட்டிக் கொண்டார்கள், பின்பு மேலே சென்றார்கள். ஜெர்மானியர்கள் சுதாரித்துக் கொண்டு எதிர்ப்புக்காகத் தங்கள் படைகளைக் கொண்டுவரவோ அல்லது டாங்கிகள் மேலே சென்ற வழியைத் திட்டமாகத் தெரிந்துகொள்ளவோ முற்படுவதற்குள் சோவியத் டாங்கிகள் நெடுந்தூரம் சென்று விட்டன.

“…. இப்படி நாங்கள் முன்னேறுகையில் தான் எனக்கு நேர்ந்தது இந்தத் தொல்லை. படைத் தலைவர் எங்களை அழைத்தார். வேவு விமானம் அவருக்குச் செய்தி தெரிவித்திருந்தது: இன்னின்ன இடத்தில் பிரமாண்டமான விமானத்தளம் இருக்கிறது. ஒரு முன்னூறு விமானங்கள், எரிபொருள், சரக்குகள் எல்லாம் அங்கு இருக்கின்றன. எங்கள் படைத்தலைவர் செம்பட்டை மீசையைக் கிள்ளியவாறு உத்தரவிட்டார்: ‘க்வோஸ்தயேவ், இரவில், சந்தடி இல்லாமல், குண்டு சுடாமல், தன்னவர்கள்போல மரியாதைப்பாங்குடன் விமான நிலையத்தை நெருங்கு. அப்புறம் ஒரு மொத்தமாகக் குண்டுகளைப் பொழிந்தவாறு பாய்ந்து தாக்கு. அவர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டி நீர்த்தூளி செய்துவிடும். ஒரு விமானங்கூடப் பறந்து தப்ப விட்டுவிடாதே.’ இந்தப் பொறுப்பு என் பட்டாளத்துக்கும் என் தலைமைக்குக் கீழ்ப்பட்ட இன்னொரு பட்டாளத்துக்கும் கொடுக்கப்பட்டது. பிரதானப் படைமுந்திய திட்டப்படியே ரஸ்தாவை நோக்கி முன்னேறியது.”

“ஆக, நாங்கள் இந்த விமானத் தளத்தை அடைந்தோம். கோழிக்குடிலுக்குள் நரி போல நுழைந்தோம். நண்பா, அலெக்ஸேய், நீ நம்பக்கூட மாட்டாய்- ஜெர்மன் ஸிக்னலர்கள் இருக்குமிடம் வரை நாங்கள் மளமளவென்று சென்றோம். ஜெர்மனியர்கள் எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, தங்களவர்கள் என்ற நினைப்பில். அதிகாலை, மூடுபனி, எதையும் தெளிவாகக் கண்டுகொள்ள முடியவில்லை. மோட்டார்களும் டாங்கிச் சக்கரங்களும் தடதடத்துக் கணகணத்துக் கொண்டிருப்பது மட்டுமே கேட்டது. அப்புறம் நாங்கள் திடீரென்று பாய்ந்து தாக்கினோம் பாரு. விமானங்கள் வரிசைகளாக நின்றன. நாங்கள் கவசந் துளைக்கும் குண்டுகளை அவற்றின் மேல் பொழிந்து ஒவ்வொரு குண்டுக்கும் ஐந்தைந்து, ஆறாறு விமானங்களாகத் தகர்த்துத் தூள் பரத்தினோம். அப்புறம் பார்த்தோம். இப்படித் தாக்கிச் சமாளிக்க முடியாது என்று பட்டது. துணிச்சல் மிக்க விமானிகள் எஞ்சின்களை முடுக்கத் தொடங்கினார்கள். அவ்வளவுதான், நாங்கள் டாங்கி மேல் கதவுகளை அறைந்து சாத்திக் கொண்டு, விமானங்களை மோதித் தகர்க்கப் புறப்பட்டோம். கவசப் பகுதியால் விமானங்களின் வால்களை இடித்து உடைத்தோம். அவை துருப்பு விமானங்கள், பிரமாண்டமானவை. எஞ்சின்களை எட்டுவது நடவாத காரியமாக இருந்தது. எனவே தான் வால்களைத் தாக்கினோம். வால் இல்லாத விமானம் எஞ்சின் இல்லாத விமானம் போன்றது தானே, அதனால் பறக்க முடியாதே.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் நான் உற்சாகப் பெருக்கில் அசட்டுத்தனம் செய்துவிட்டேன். மேல் கதவைத் திறந்து நீட்டிச் சுற்றுமுற்றும் பார்த்தேன் நிலைமையை அவதானிப்பதற்காக அதே சமயத்தில் என் டாங்கி ஒரு விமானத்தின் மேல் மடாரென்று போட்டது. நல்ல வேளை, தலைகாப்பு அடியதிர்ச்சியைக் குறைத்துவிட்டது, இல்லா விட்டால் என் ஆட்டம் தீர்ந்திருக்கும் ஒரேயடியாக… ஆனால் இதெல்லாம் வெட்டிப் பேச்சு. நான் குணமடைந்து விரைவில் வெளியேறிவிடுவேன். என் டாங்கி வீரர்களை மறுபடி சீக்கிரமே காண்பேன். என் தொல்லை வேறு ஒன்று. மருத்துவமனையில் என் தாடியைச் சிரைத்துவிட்டார்கள். இவ்வளவுகாலமாகக் கொஞ்சங் கொஞ்சமாக வளர்த்து உருவாக்கியிருந்தேன் அதை. அடர்த்தியாக அகன்று வளர்ந்திருந்தது. அவர்களோ சிறிதும் கருணையின்றி மழித்துத் தள்ளிவிட்டார்கள். அட எக்கேடுங்கெட்டுப் போகட்டும் அந்தத் தாடி! நாம் விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்றாலும் இந்தப் போர் முடிவதற்குள் மறுபடி தாடி செழித்து வளர்ந்து என் முக விகாரத்தை மறைத்து விடும் என்று நம்புகிறேன். ஆனால் ஒன்று தெரியுமா, அலெக்ஸேய்? அன்யூத்தாவுக்கு எதனாலோ என் தாடி பிடிக்கவில்லை. தனது ஒவ்வொரு கடிதத்திலும் அதன் மேல் பாய்ந்த வண்ணமாயிருக்கிறாள்.”

அது நீண்ட கடிதம். மருத்துவமனைச் சலிப்பினால் ஏங்கிப் போய் க்வோஸ்தயேவ் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தான் என்பது தெளிவாயியிருந்தது. ஸ்தாலின்கிராதின் அருகே தன்னுடைய டாங்கிவீரர்கள் டாங்கிகளை இழந்து புதிய டாங்கிகளை எதிர்பார்த்தவாறு காலாட்படையினராக அணிவகுத்துச் சண்டை நடத்திக் கொண்டிருக்கையில் புகழ் பெற்ற மமாயேவ் குன்று வட்டாரத்தில் ஸ்தெபான் இவானவிச்சைக் கண்டதாக அவன் முடிவில் போகிறபோக்கில் எழுதியிருந்தான். முதியவர் விஷேசப் பள்ளியில் பயிற்சி பெற்று இப்போது ஸார்ஜென்ட் மேஜர் ஆகிவிட்டாராம், டாங்கி எதிர்ப்புப் பீரங்கிப் பிளாட்டூனுக்குத் தலைவராம். எனினும் ஸ்னைப்பர் பழக்கத்தை அவர் இப்போதும் விடவில்லையாம். அவருடைய சொன்னபடி பார்த்தால், இப்போது அவருடைய தாக்குக்கு இரையாகும் விலங்கு முன்னைவிடப் பெரியது: காப்பகழிலியிருந்து வெளியே வந்து வெயில் காயும் பாசிஸ்டு ஏமாளி அல்ல, ஜெர்மன் டாங்கி நுட்பமான அமைப்புள்ள உறுதியான இயந்திரம். ஆனால் இந்த விலங்குகளை வேட்டையாடுவதிலும் கிழவனார் சைபீரிய வேட்டைக்காரருக்கு இயல்பான தந்திரத்திலும் அளவற்ற பொறுமையிலும், தாங்குதிறனிலும் தவறாது தாக்குவதிலும் முன்போலவே சிறந்து விளங்குவதாக க்வோஸ்தயேவ் குறிப்பிட்டிருந்தான். தன்னைக் கண்டதும் செட்டாகச் சேமிப்பவரான ஸ்தெபான் இனாவிச் பகைவரிடமிருந்து கைப்பற்றிய மதுப் புட்டியைத் தேடி எடுத்துத் திறந்தாராம். இருவரும் அந்தப் படுமோசமான மதுவைப் பருகினார்களாம்; பழைய நண்பர்கள் எல்லோரையும் நினைவுபடுத்திக் கொண்டார்களாம். ஸ்தெபான் இனாவிச்; மெரேஸ்யெவுக்குத் தாழ்மையான வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னாராம், இருவரும் உயிரோடிருந்தால் போர் முடிந்த பிறகு சைபீரியாவில் தமது கூட்டுப்பண்ணைக்கு வந்து அணில்களையோ பறவைகளையோ வேட்டையாடிக் களிக்கும் படி அழைத்தாராம்.

படிக்க:
நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

இந்தக் கடிதத்தைப் படித்ததும் மெரேஸ்யெவுக்கு இதமாகவும் இருந்தது, ஏக்கமும் பொங்கியது. நாற்பத்து இரண்டாம் வார்டைச் சேர்ந்த எல்லா நண்பர்களும் வெகு காலமாகவே போரிட்டுவருகிறார்கள். கிரிகோரிய் க்லோஸ்தியேவும் முதிய ஸ்தெபான் இனாவிச்சும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள் அவர்கள்? போர்க் காற்று அவர்களை எந்தெந்த இடங்களுக்கெல்லாம் அடித்துச் செல்லும்? அவர்கள் உயிரோடு தாம் இருக்கிறார்களா? ஓல்கா எங்கே இருக்கிறாள்? …

கமிஸார் வரபியோவின் சொற்களை அலெக்ஸேய் மீண்டும் நினைவு கூர்ந்தான். அவர் சொல்வார்: போர் வீரர்களின் கடிதங்கள் அணைந்துவிட்ட விண்மீன்களின் ஒளிக் கதிர்கள் போல நம்மை வந்து அடைய மிக மிக நீண்டகாலம் எடுத்துக் கொள்கின்றன. சில வேளைகளில் இப்படியும் நேர்வதுண்டு – விண்மீன் எப்போதோ அவிந்து போய்விட்டது, ஆனால் மகிழ்வும் பிரகாசமும் திகழும் அதன் கதிர் இன்னும் நெடுங்காலத்துக்கு இடவெளியை ஊடுருவிப் பாய்ந்து வந்து கொண்டே இருக்கும், அவிந்து மறைத்து விட்ட விண்விளக்கின் அன்பு சுடரும் ஒளிர்வை மக்களுக்குக் கொண்டுதரும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க