பாபர் மசூதி வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என அளித்திருக்கும் தீர்ப்பு, மசூதி இடிப்புக்கு ஒரு பரிசை வழங்கியிருப்பதாக நீதிபதி ஏ.கே. கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றவர் ஏ.கே. கங்குலி.

பாஜக மற்றும் விசுவ இந்து பரிசத்தால் அணிதிரட்டப்பட்ட இந்துத்துவ காவிகள் 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி மசூதியை இடித்து தள்ளியது, ‘சட்டத்தின் ஆட்சியில் அதிர்ச்சிக்குரிய மீறல்’ என உச்சநீதிமன்றம் சொன்னது. ஆனால், நிலத்தை இந்து தரப்பினரிடம் ஒப்படைத்து. ‘நிகழ் தகவுகளின் சமநிலையை’ கருத்தில் கொண்டு, சன்னி வக்ஃப் வாரியத்தைவிட வி.எச்.பி தரப்பு அதிக உரிமை கோரலைக் கொண்டுள்ளதாகக் கருதியது.

முரண்பாடாக, 27 ஆண்டுகளுக்கு முன்பு மசூதி இடிக்கப்பட்டிருக்காவிட்டால் உச்சநீதிமன்றம் இந்து தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்க முடியாது என்று கங்குலி கூறினார்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி

“பாபர் மசூதி இடிக்கப்படாமல், இந்துக்கள் நீதிமன்றம் சென்று ராமர் அங்கு பிறந்தார் என்று சொல்லியிருந்தால், நீதிமன்றம் அதை இடிக்க உத்தரவிட்டிருக்குமா?” என கேட்கும் அவர், “நீதிமன்றம் அதைச் செய்திருக்காது” என்கிறார்.

உச்சநீதிமன்ற அமர்வு பாபர் மசூதி இடிப்பை குற்றம் என வர்ணித்தாலும், உச்சநீதிமன்றம் இடிப்புக்கு ஒரு பரிசை வழங்கியிருக்கிறது என்கிற நீதிபதி கங்குலி, “மிகவும் துரதிருஷ்டமான போக்கை இது ஊக்குவிக்கிறது…” என்கிறார்.

இந்த வழக்கில் தான் ஒரு நீதிபதியாக இருந்திருந்தால் மசூதியை மீள் அமைக்கும் உத்தரவை இட்டுப்பிருப்பேன் என்றும் அப்படியில்லை எனில், அந்த இடத்தில் மசூதியோ கோயிலோ கட்ட அனுமதித்திருக்க மாட்டேன். அதற்குப் பதிலாக, மருத்துவமனை, பள்ளி அல்லது கல்லூரி போன்ற பிற மதச்சார்பற்ற பணிகளுக்கு பயன்படுத்த ஒதுக்கியிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

பாபர் மசூதிக்கு அடியில் உள்ள அமைப்பு, இந்து அமைப்புதான் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பதை தீர்ப்பு கூறவில்லை. நீதிபதிகள் மசூதியை கட்டவோ அல்லது நடுநிலையான நோக்கத்திற்கு அந்த இடத்தைப் பயன்படுத்தவோ அரசாங்கத்துக்கு ஆணை இட்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

படிக்க:
துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !
♦ அயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு !

“அங்கே மசூதி இருந்தது என்பது பிரச்சினை இல்லை. அது இடிக்கப்பட்டதும் பிரச்சினை இல்லை. நாம் அனைவரும் அது இடிக்கப்படுவதைப் பார்த்தோம்” என விமர்சித்தார் நீதிபதி.

அவரைப்பொறுத்தவரை, பாபர் மசூதி இடிப்பை இந்துக்கள் கொண்டாடக்கூடாது. “மசூதியை இடிப்பது என்பது இந்து நம்பிக்கை அல்லது மதத்தின் பகுதி அல்ல. ஒரு மசூதியை இடிப்பது முழுமையாக இந்து மதத்துக்கு எதிரானது” என்பது அவருடைய விளக்கம்.

இந்திய தொல்லியம் கழகம் அளித்தது என கூறிய முழுமையற்ற அறிக்கையின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் உள்ள கட்டமைப்பு இந்து கட்டமைப்பு தான் என உச்சநீதிமன்றம் எப்படி முடிவுக்கு வந்தது? எனவும் கங்குலி கேள்வி எழுப்பினார்.

1900-களில் பாபர் மசூதி (படம் : நன்றி – பிரிட்டிஷ் அருங்காட்சியகம்)

“இப்போது உச்சநீதிமன்றம் மசூதிக்கு அடியில் ஏதோ ஒரு கட்டமைப்பு இருந்தது என்று கூறுகிறது. ஆனால், அங்கே கோயில் கட்டமைப்பு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு, கோயில் இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறுகிறது. அங்கே, புத்த ஸ்தூபியோ அல்லது சமண கட்டமைப்போ அல்லது தேவாலயமோ இருந்திருக்கலாம். ஆனால், அது கோயிலாக இருந்திருக்க வில்லை. எனவே நிலம் இந்துக்களுக்கு அல்லது ராம் லல்லாவுக்குச் சொந்தமானது என்று எந்த அடிப்படையில் உச்சநீதிமன்றம் கண்டறிந்தது?”.

இசுலாம் நம்பிக்கையின் மேல் இந்து நம்பிக்கையை நீதிமன்றம் தேர்வு செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆய்வு செய்த சட்ட கல்வியாளர் ஃபைசான் முஸ்தபா போன்றவர்களின் கருத்துடன் ஒத்துப்போவதாக கங்குலி தெரிவித்தார். ‘ஒரு சாராரின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு வழக்கை நீங்கள் தீர்க்க முடியுமா?’ எனக் கேட்கிறார் அவர்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
♦ சிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு ! வீதியில் திரண்ட தொழிலாளர்கள் !

கடந்த வாரம் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில், இந்தியா வந்த பல்வேறு பயணிகள் பாபர் மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ததாக எழுதியுள்ளனர். எனவே, நீதிமன்றம் ஒரு காலத்தில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக்கள் பிரார்த்தனைக்குரிய இடமாக பயன்படுத்தினர் என முடிவு செய்தது. முசுலீம் தரப்பு இது தங்களுடைய புனித இடம் என்பதற்கான பல்வேறு ஆவணங்களை சமர்பித்தனர். ஆனால், நீதிமன்றம் பயணிகள் எழுதியவை, முசுலீம் தரப்பினர் சமர்பித்த வருவாய் ஆவணங்களைவிட முந்தியவை எனக் கூறியது.

தீர்ப்பு ஒருமனதாக ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வால் கையெழுத்திடப்பட்டாலும், நீதிபதிகளில் ஒருவர் இந்தக் கேள்விக்கும் ஒரு தனிப்பட்ட பார்வையை பதிவு செய்துள்ளார். ‘இந்த சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்பது இந்து பக்தர்களின் நம்பிக்கையா?’ இந்தக் கேள்வியைக் கேட்ட நீதிபதியின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. தீர்ப்பின் 116-ஆம் பக்கத்தின் முடிவில் பின் இணைப்பாக,

“மசூதியை நிர்மாணிப்பதற்கு முன்பிருந்தே, அதன் பின்னரும் பாபர் மசூதி இருந்த இடமே ராமர் பிறந்த இடம் என இந்துக்கள் நம்பினர் என்பதன் அடிப்படையில் முடிவுக்கு வரப்பட்டுள்ளது” என எழுதப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பு கையொப்பமிடப்படவில்லை என்பது தீர்ப்புகள் எழுதப்படும் முறையிலிருந்து விலகியிருக்கிறது என்பதோடு, “இது மிகவும் விசித்திரமானது மற்றும் மிகவும் தீவிரமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பென்பது மிகவும் தீவிரமான விசயம்” என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி.


கலைமதி
நன்றி : தி வயர்

2 மறுமொழிகள்

  1. ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றால் அவர் இறந்த இடம் எது என்று யார் யாருக்காவது தெரியுமா? பாபரின் வரலாற்று உண்மையை இந்திய மக்கள் மனதிலிருந்து மறைக்கவும், அழிக்கவும் பீசப்பியினர் செய்த பெரிய சூழ்ச்சி.
    உலகிலேயே ஒரு புராணக் கதையை வரலாறாக மாற்றி, கற்பணை கதா நாயகன் ஒருவனுக்கு உடலும் தந்து, உயிரும் கொடுத்து நிலமும் ஒதுக்கி, நீதியும் வழங்கியது நம் பாரத தேசம்தான். அடுத்தடுத்த படியாக யாரேனும் சாத்தானுக்கும் அவன் பிறந்த இடத்தில் ஒரு கோயில் கட்டுவற்கு 2.77 ஏக்கர் நிலம் தேவை என்று உச்சி மன்றத்தில் வழக்குத் தொடுத்தால் அதற்கும் இந்த தீர்ப்பு ஒரு முன் மாதரியாகவும் எடுத்துக் காட்டாகவும் அமையலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க