கடந்த ஒருமாதக் காலமாக காசாமீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இன அழிப்பு போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று, மும்பை ஜுஹூ கடற்கரையில் காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அமைதி வழியில் அஞ்சலி செலுத்திய 13 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளது மகாராஷ்டிர பாஜக கூட்டணி ஏக்நாத் ஷிண்டே அரசு. கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் முஸ்லிம் மாணவர்கள்.
இப்பாசிச நடவடிக்கைக்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது மகாராஷ்டிர மாநில மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL). இது குறித்து தனது அறிக்கையில், “அஞ்சலி செலுத்தியவர்கள் மீது, தடை உத்தரவை மீறியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சமூக வலைத்தளத்தில் “ஒற்றுமை இயக்கம்” (solidarity movement) என்ற பெயரில் அஞ்சலி செலுத்தும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்திற்காக, ஜுஹூ கடற்கரையில் கூடிய மாணவர்களிடமிருந்து நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே, அவர்கள் வைத்திருந்த கைத்தட்டிகளையும், போஸ்டர்களையும் மும்பை போலீசு பிடுங்கி கொண்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகு போஸ்டர்களை திரும்பப் பெற வந்த மாணவர்களை கைத்தட்டிகள், போஸ்டர்களை வைத்திருக்கும்படி நிற்கச் செய்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டது மும்பை போலீசு.
படிக்க : காசாவை இன அழிப்பு செய்யும் இஸ்ரேல்!
அதன் பிறகு அஞ்சலி செலுத்தியவர்களை பேருந்து நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறிய போலீசு, அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசு வாகனத்தில் ஏற்றி ஜுஹூ போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்களை எட்டு மணிநேரத்திற்கு மேலாக போலீசு நிலையத்தில் வைத்திருந்து அவரிகளிடமிருந்து ஆதார் உள்ளிட்ட தரவுகளையும் புகைப்படங்களையும் எடுத்து விடுவித்தது. கைது செய்து வழக்கு பதியும் அளவிற்கு 11 மாணவர்கள் போர் குற்றத்தில் எதுவும் ஈடுபடவில்லை.
இஸ்ரேலின் போர்-இன வெறியால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அமைதி வழியில் அஞ்சலி செலுத்தினால் வழக்கு, கைது என பயபீதியை ஏற்படுத்தி ஜனநாயக விரோதமான அடக்குமுறையை செய்துள்ளது பாசிச பாஜகவின் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே அரசு.
ஆதினி