கடந்த மார்ச் மாதம் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு உலக உணவு விலை குறியீட்டை வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்தின் இக்குறியீடு பிப்ரவரி மாதத்தை விட 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதையும் இந்த உயர்வு ஒரு அபாயகரமான ஒன்று என்றும் எச்சரித்துள்ளது.
இந்த உலக உணவு விலை குறியீடு என்பது என்ன? இது எதனைக் குறிக்கிறது? இதன் உயர்வு ஏன் அபாயமானதாகக் கூறப்படுகிறது?
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) என்பது ஐ.நா-வின் ஓர் கிளை அமைப்பாகும். இது உலக நாடுகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள், உணவுப் பொருட்களின் தரம் போன்றவற்றைப் பற்றியும் விவசாயத்தின் நிலையைப் பற்றியும் ஆய்வு செய்து தகவல்கள் வெளியிடும் ஒரு அமைப்பாகும். இது மாதம் தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களான தானியம், தாவர எண்ணெய், பால் பொருட்கள், சர்க்கரை, இறைச்சி போன்றவற்றின் சராசரி விலையைக் கணக்கிட்டு அதனை உலக உணவு விலை குறியீடு என்று வெளியிடுகிறது.
தற்போது இந்த உணவு விலை குறியீட்டின் அதிகரிப்பானது உலக நாடுகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படும் உயவையைக் குறிக்கிறது. இதுவரை ஒரே மாதத்தில் 2.4 சதவீத அதிகரிப்பு என்பது நிகழ்ந்ததில்லை என்றுதான் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த திடீர் உயர்வுக்குக் காரணம் என்ன?
கடந்த பிப்ரவரி மாதம் ஈரானின் மீது தாக்குதலை நடத்தி ஒரு புதிய போர்முனையைத் திறந்து வைத்தது அமெரிக்கா – இஸ்ரேல். அத்தாக்குதலுக்கு ஈரான் தரப்பும் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தனது கட்டுப்பாட்டிலிருந்த ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) பொதுப் பயன்பாட்டிற்கு முடக்கியது ஈரான். ஹோர்முஸ் நீரிணை என்பது வளைகுடா நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் ஒரு முக்கியமான நீர்வழித் தடமாகும். பல உலக நாடுகள் எரிசக்தியையும், உரத் தயாரிப்பில் தேவைப்படும் வேதிப்பொருட்களையும் வளைகுடா நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில் இந்த முக்கிய நீர்வழித் தடம் முடக்கப்படுவது இப்பொருட்களின் போக்குவரத்தைத் தடுக்கிறது.
இத்தடையானது மூலப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களின் உற்பத்தி விலை அதிகரித்து, சந்தை விலையும் அதிகரிக்கிறது. ஹோர்முஸ் நீரிணையில் இருந்து 30 முதல் 35 சதவீதம் நைட்ரஜன் வேதிப்பொருட்களும், 40 முதல் 45 சதவீதம் சல்பர் வேதிப்பொருட்களும் பல நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த போக்குவரத்து தடைப்படுவதால் உரத்தின் விலை பன்மடங்கு அதிகரிக்கிறது. செப்டம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை ஒரு டன் அமோனியா 823 டாலர் வரை இருந்தது. ஆனால் இப்போரின் விளைவாக ஒரு டன் அமோனியா 1,123 டாலராக விலை உயர்ந்துள்ளது. நைட்ரஜன் வேதிப்பொருட்களின் விலையும் 28 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதாலும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும் உரத்தின் விலை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த போர் மேலும் நீடித்து வந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு: ஈரான் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்
இந்த சூழலினால் இந்தியா போன்ற நாடுகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும். உலகம் முழுவதிலும் உரம் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகிலேயே அதிக யூரியா இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில் இந்த விலை உயர்வு இந்தியாவில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மின்ட் செய்தித்தளம் இந்த போரினால் இந்தியாவில் உரத்தின் விலை 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. இது இந்திய விவசாயிகளின் தலையில் சுமத்தப்படும் மிகப்பெரிய சுமையாகும்.
மேலும் இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை உயர்வானது உலகில் பல கோடி மக்களை பட்டினியை நோக்கித் தள்ளும். பல காலனி நாடுகளில் மக்கள் பசி பட்டினியால் கொத்துக்கொத்தாக இறக்கும் நிலை ஏற்படும்.
தொடர்ந்து வரும் இப்போர் சாமானிய மக்களையே பெரிதும் பாதிக்கிறது. இன்னும் இந்த போர் தொடர்ந்து வந்தால் நீர்வழித்தடங்கள் முழுவதுமாக முடக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரம் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.
ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள போர்களைத் தொடுக்கின்றன. ஆனால் இந்த மேலாதிக்க வெறியால் சாமானிய மக்கள்தான் பலியாகி வருகின்றன. இந்த போரை ஆதிக்க வெறியோடு நடத்தி வரும் அமெரிக்கா – இஸ்ரேல் தனது சொந்த நாட்டு மக்களின் நலன்களை பொருட்படுத்துவதில்லை. தங்கள் நாட்டில் ஏற்படும் விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை உதாசீனப்படுத்தி இந்த போரை இன்னும் தொடர்ந்து வருகிறது.
இந்தியாவில் அந்த நிலையை நம் கண் முன்னே கண்டோம். கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்வால் சிலிண்டர்கள் வாங்க மக்கள் முண்டி அடித்துப் போனதில் உயிரிழப்புகள் நடந்ததையும் நாம் கண்டோம். ஆனால் இந்த அமெரிக்க அடிமை மோடி அரசோ எரிவாயு தட்டுப்பாட்டை அங்கீகரிக்கவே இல்லை. இங்கு எல்லாம் சுமுகமாக இருப்பது போல் ஒரு பிம்பத்தைக் கட்டி வருகிறது. தொடர்ந்து டிரம்பின் அடிவருடியாகவே இருந்து வருகிறார் மோடி.
இன்று அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்கிறது. இனியும் எங்கோ ஈரானில் நடக்கும் போருக்கு இங்கே நாம் ஏன் குரல் எழுப்ப வேண்டும் என்று மௌனம் காக்க முடியாத நிலை தான் உள்ளது. எல்லா நாடுகளும் இப்போரால் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றன. இந்த போர்வெறியை எதிர்த்தும், இந்த வெறி பிடித்தவர்களுக்கு ஆதரவாகப் போகும் மோடிக்கும் எதிராகக் குரல் கொடுப்பதும் தான் இப்போது நமது தலையாய கடமை. இந்த ஏகாதிபத்திய போருக்கு எதிராக பல உலக நாடுகளில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும்.
![]()
மாயவள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











