லெபனான் மீதான மிக அண்மையத் தாக்குதல்களில் மட்டும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 17 அன்று நடைமுறைக்கு வந்த இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையேயான ‘போர் நிறுத்தத்’திற்கு பிறகு போர் விதிமுறைகளை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பு விதிமுறைகளை மீறுவதாகக் காரணம் கற்பித்து, இஸ்ரேல் தனது போர் வெறியை நியாயப்படுத்திக் கொள்கிறது.
குறிப்பாக, லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் தினந்தோறும் தொடர்கின்றன. தெற்கு லெபனானில் “மத்திய காலக் கோட்டைகளின் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக” ஐ.நா.வின் பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, ஏறக்குறைய 900 ஆண்டுகள் பழமையான பியூஃபோர்ட் கோட்டைக்கு அருகில் தாக்குதல்கள் நடந்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை (மே 25) மாலை, தெற்கு லெபனானின் அரப் சலீம் நகரில் ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் கணவன், மனைவி இருவரும் கொல்லப்பட்டனர். இன்னொரு கிராமத்தில் மேலும் இருவர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.
இஸ்ரேலியத் தாக்குதலில், மஷ்காராவில் உள்ள பல வீடுகள் அழிக்கப்பட்டன. அங்கு வீடுகளின் இடிபாடுகளிலிருந்து ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அத்தாக்குதலில் 15 பேர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது. மஷ்கராவில் பேரழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பி.பி.சி. கூறுகிறது.
இவர்களில் முகமது என்ற சிறுவனும் அடங்குவான். நள்ளிரவில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளைத் தோண்டிக் கொண்டிருக்கும்போது, ஒரு துளை வழியாக சின்னஞ்சிறு கைகள் வெளியே நீட்டும் காணொளிகள் உலகம் முழுவதும் பரவின. மண்ணும் தூணியும் படிந்த நிலையில், அவர்கள் இறுதியாக அந்த ஏழு வயது சிறுவனைப் பாதுகாப்பாக மீட்டனர். முகமது தன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஏவுகணை அவனது வீட்டைத் தாக்கியதில் அவனது தந்தையும், இரண்டு சகோதரிகளும் கொல்லப்பட்டனர்.
நகராட்சி உறுப்பினர் அஹ்மத், “நான் ஹிஸ்புல்லாவின் உறுப்பினர் அல்ல; ஆனால் மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக உறுதியாக நிற்கிறார்கள். இஸ்ரேல் மக்கள் அனைவரையும் தாக்குகிறது” என்று கூறுகிறார்.
படிக்க: லெபனான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் இன அழிப்புப் போர்
மார்ச் 2 ஆம் தேதி இஸ்ரேல் தாக்கத் தொடங்கியதிலிருந்து இதுவரை லெபனானில் 3,213-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது லெபனானின் டயர் நகரை மிக மோசமாகத் தாக்கி வருகிறது இஸ்ரேலிய ராணுவம். மக்கள் வசிப்பிடங்கள், வணிக நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. உள்நாட்டுக்குள்ளேயே மிகப்பெரிய இடப்பெயர்வுக்கும், தாங்க முடியாத துயரத்துக்கும் லெபனான் மக்களை இனவெறி இஸ்ரேல் அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது.
போர் நிறுத்தம் தொடர்பான எந்தவொரு ஒப்பந்தமும் லெபனானையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், இனவெறி பயங்கரவாத இஸ்ரேல் அரசோ, எந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மதிக்காமல், உலக மேலாதிக்க பயங்கரவாதி அமெரிக்க அரசின் துணையோடு லெபனானில் தொடர்ந்து போரை நடத்தி, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது. விதிமீறல்களையும், போர்களையும், அப்பாவி மக்களின் மரணங்களையும், துயரங்களையும் இயல்பு நிலையாக்கி வருகின்றன அமெரிக்க, இஸ்ரேல் பயங்கரவாத அரசுகள்.
லெபனானின் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்துவது என்பது அமெரிக்க – இஸ்ரேல் போர் வெறிக்கு எதிரான சர்வதேச உழைக்கும் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாகத்தான் சாத்தியமாகும்.
![]()
தமிழன்பன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











