ஈரான் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது என்ற பொய்யான காரணத்தை முன்வைத்து கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அடாவடியாகப் போர் தொடுத்த அமெரிக்கா – இஸ்ரேல், அந்நாட்டில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களை கொன்றொழித்துள்ளன. போர் வெறிபிடித்த இக்கும்பல் அதே நாளில் லெபனான் மீதும் தாக்குதலைத் தொடங்கி அங்கும் ஏறக்குறைய இரண்டாயிரம் மக்களைப் படுகொலை செய்துள்ளது. குறிப்பாக, காசாவில் பெண்கள், குழந்தைகளைக் குறிவைத்தும் மனிதத்தன்மையற்ற வகையிலும் ஓர் இன அழிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா-இஸ்ரேலானது, அதே பாணியில் ஈரான், லெபனான் மீது தாக்குதல் தொடுத்து, இன அழிப்புப் போர்களை புதிய இயல்புநிலையாக்கியுள்ளது.
இந்நிலையில், ஈரானின் பதிலடி தாக்குதலாலும் உலகெங்கிலும் கிளம்பிய எதிர்ப்பாலும் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, இரண்டு வாரங்களுக்கு போரை நிறுத்தி வைப்பதாக கடந்த ஏப்ரல் 8 அன்று அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த போர் நிறுத்தமானது ஈரானின் 10 அம்ச நிபந்தனைகளின் அடிப்படையில் முடிவானது. அவற்றில், “லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிரான போர் உட்பட, அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருதல்” என்ற அம்சமும் உள்ளடங்கும். ஆகவே, இந்த போர்நிறுத்த அறிவிப்பால் லெபனான் மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஆனால், இனவெறி இஸ்ரேலானது லெபனான் மீதான தாக்குதலைத் தொடரப்போவதாக அடாவடியாக அறிவித்தது. இதனையடுத்து டிரம்பின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் லெபனான் முழுவதிலும் பத்து நிமிடங்களுக்குத் தொடர் தாக்குதலை நடத்தி 300-க்கும் மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தாக்குதலில் 1,150 பேர் படுகாயமடைந்துள்ளனர். போர்நிறுத்தம் அமலில் உள்ளது என உளவியல் ரீதியாக எச்சரிக்கையற்று இருந்த லெபனான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்த இத்தாக்குதலானது அவற்றின் இரத்தவெறியைக் காட்டுகின்றது. இது கடுமையான கண்டனத்திற்குரியதாகும்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், லெபனான் போர் என்பது தனி; அது இந்த போர் நிறுத்தத்திற்குள் வராது என்று அமெரிக்கா – இஸ்ரேல் திமிர்த்தனமாகக் கூறியிருக்கின்றன. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் தற்போது மீண்டும் ஹார்மூஸ் நீரிணையை மூடியுள்ளது.
படிக்க: ஈரான் மீதான போர்: மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!
ஏற்கெனவே, தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் படையெடுப்பால் லெபனானில் ஒரு மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால், லெபனானில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 3.5 லட்சம் குழந்தைகள் உட்பட 12 லட்சம் மக்கள் (மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர்) தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இது உலகின் மிகக் கடுமையான இடம்பெயர்வு நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில், லெபனான் மீதான தாக்குதலை அமெரிக்கா – இஸ்ரேல் தொடர்வதானது, காசாவை போலவே லெபனானிலும் இன அழிப்பு அபாயத்தை உருவாக்கும்.
மேலும், லெபனான் மீதான இந்த பயங்கரவாதத் தாக்குதலானது அமெரிக்கா- இஸ்ரேலின் போர்நிறுத்த நாடகத்தை அம்பலப்படுத்துகின்றது. இந்த போர் வெறி ஓநாய்கள் தங்களது நெருக்கடிகளைத் தற்காலிகமாகச் சமாளித்துக் கொள்வதற்காகவே போர்நிறுத்தத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
எனவே, போர் தொடர்பான எந்தவொரு சர்வதேச சட்டங்களையும் மரபுகளையும் மதிக்காமல் உலகைப் போர் அபாயத்திற்குள் தள்ளிவரும் அமெரிக்கா – இஸ்ரேலை, மேசைகளில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மட்டும் தடுத்து நிறுத்தாது. மாறாக, போரை நிறுத்தக் கோரியும் அமைதியை நிலைநாட்டக் கோரியும் உலகெங்கிலும் கட்டியமைக்கப்படும் மக்கள் போராட்டங்களே அமெரிக்கா – இஸ்ரேலை உண்மையான போர்நிறுத்தத்தை நோக்கி நெட்டித் தள்ளும்.
![]()
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











