நிதிப் பற்றாக்குறையைக் காரணம்காட்டி, மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகளுக்கான நிதியை நிறுத்துவதாக அறிவித்த மகாராஷ்டிர பா.ஜ.க. அரசின் முடிவிற்குக் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சமாளிக்கும் வகையில், மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை முட்டை அல்லது வாழைப்பழம் வழங்குவதற்கு ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 50 கோடி நிதி ஒதுக்கியது மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசு. அதன்பிறகு, 40 சதவிகித பெற்றோர்கள் அசைவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட பள்ளிகளில் மதிய உணவில் முட்டை வழங்கப்படாது என்று உத்தரவிட்டது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறி மதிய உணவில் முட்டை, அரிசி பால் பாயசம் மற்றும் ராகி சத்து மாவு வழங்க விரும்பும் அரசுப் பள்ளிகள், இந்த செலவிற்காக பொது நிதி வசூலித்துக் கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடைமுறையிலிருந்த மதிய உணவுத்திட்டத்தை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு முட்டை கொடுப்பதற்கு எதிராக சங்கப் பரிவார கும்பல் போராடிய பிறகுதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் ஐந்தாம் தரவுகள் (National Family Health Survey), இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் அதிகரித்துவரும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வளர்ச்சி குறைபாட்டைப் புள்ளிவிவரத்துடன் சுட்டிக் காட்டுகிறது. அதன்படி 2019-21-ஆம் ஆண்டிற்கான ஆய்வின்படி இந்தியாவில் ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில், 35 சதவிகித குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு (stunted) உடையவர்களாகவும் 19.3 சதவிகிதம் பேர் எடை குறைபாடு (wasted) உடையவர்களாகவும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குக் கீழ் 57.2 சதவிகித குழந்தைகள் எடை குறைபாடு உடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். முக்கியமாக, கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் கடுமையான ஊட்டச்சத்து பாதிப்புகளை இந்த தரவு குறிப்பிட்டுள்ளது.
படிக்க: ம.பி: சிறார் காப்பங்களின் உணவில் முட்டை, இறைச்சியை நிறுத்தும் பாஜக அரசு!
சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலிலிருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் ஏற்கெனவே ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொண்டுவரும் நிலையில், மகாராஷ்டிர பா.ஜ.க. அரசின் அறிவிப்பானது, இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். முட்டைகளுக்குப் பதிலாகக் கொண்டைக்கடலை மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை வழங்க முடிவெடுத்துள்ளதாக மகாராஷ்டிர அரசு கூறினாலும் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கலைவது தற்போது மேலும் சவாலானதாக மாறியுள்ளது.
மகாராஷ்டிராவிற்கு முன்பு, பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசம் மதிய உணவுப் பட்டியலிலிருந்து முட்டைகளைக் கைவிட்டது. 2022-ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மற்றொரு மாநிலமான கோவாவும் மதிய உணவுத் திட்டத்திலிருந்து முட்டைகளை நீக்கியது. தற்போதைய சூழலில், அசாம், ஒடிசா மற்றும் உத்தராகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களைத் தவிர பா.ஜ.க. ஆளும் அனைத்து மாநிலங்களிலும் மதிய உணவுத் திட்டத்திலிருந்து முட்டை நீக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளுக்கு அடிப்படை ஊட்டச்சத்தை வழங்குவதில்கூட போராடும் ஒரு நாட்டில், உணவின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மாட்டிறைச்சி, ‘பசுவதை’ என்ற பெயரில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பசுவளைய மாநிலங்களில் மதக்கலவரத்தை ஏற்படுத்திவந்த பாசிச கும்பல், தற்போது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் உண்ணும் உணவுகளிலும் கைவைக்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி வரிசையில் ஒரே உணவு என்கிற பாசிச சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தத் துடிக்கிறது. இந்துராஷ்டிரத்தை கட்டியமைப்பதற்கான முயற்சியின் அங்கமாக, தனது பார்ப்பன கொள்கையைக் கல்வி நிலையங்களில் புகுத்தும் அனைத்து நடவடிக்கைகளிலும் பாசிச பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் மதிய உணவுத் திட்டத்திலிருந்து முட்டை நீக்கப்பட்டுள்ளதையும் அதன் ஒரு அங்கமாகத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
உழைக்கும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக உள்ள பார்ப்பனக் கும்பலின் இந்த அறிவிப்பை எதிர்த்து கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை அணிதிரட்டி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இந்து மதவெறி அமைப்புகளுக்கு எதிராகப் போராட்டங்களைக் கட்டியமைத்து நமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதே இதற்குத் தீர்வாகும்.
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram