அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரத்தில் பிப்ரவரி 10 அன்று இரண்டு குழந்தைகள் குளிரில் உறைந்து இறந்து போன விவகாரம் அமெரிக்காவையே உலுக்கி எடுத்தது.
அமெரிக்கா தான் நவீன உலகம் என்றும், சொர்க்க புரி என்றும் வர்ணிக்கப்பட்டு வந்ததை நாம் கண்டிருப்போம். ஆனால் குளிரில் உறைந்து இரண்டு குழந்தைகள் பலியான விவகாரம் அந்த கற்பனையைச் சுக்கு நூறாக்கியுள்ளது. நரகத்திற்கே அழைத்துச் செல்லும் வாசல் தான் அமெரிக்கா என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இரண்டு குழந்தைகள் இறந்ததை அவர்களது தாயார் டெட்டியானா வில்லியம்ஸ் விவரிக்கிறார்.
மருத்துவ உதவியாளரான வில்லியம்ஸ் வேலையில்லாமல் தனது தாய் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இருப்பதற்கு ஒரு வீடு கூட கிடையாது தங்களிடம் இருக்கும் ஒரு காரில் தான் மொத்த குடும்பமும் வசித்து வருகிறது. இரவு நேரங்களில் சூதாட்ட விடுதிகளில் இருக்கும் கார்களை நிறுத்தும் கூடாரங்களில் காரை நிறுத்திவிட்டுத் தூங்குவது தான் வழக்கம். தெருக்களில் தங்குவதை விட இது வசதியானதாக இருப்பதாலும் குளியலறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் தினம்தோறும் சூதாட்ட விடுதியின் கார் நிறுத்தும் கூடாரங்களுக்குச் செல்கிறார்கள். இப்படிதான் இவர்களின் மூன்று மாத வாழ்க்கை நகர்ந்து வந்துள்ளது.
பிப்ரவரி 10 அதிகாலை 1:00 மணியளவில், டெட்ராய்ட் நகர மையத்தில் உள்ள ஹாலிவுட் கேசினோ ஹோட்டல் பார்க்கிங் கட்டமைப்பின் ஒன்பதாவது மாடியில் வில்லியம்ஸ் வேனை நிறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
அன்றைய தினம் இரவு தங்கள் காரில் இருந்த எரிபொருள் தீர்ந்தவுடன் காரின் உள்ளே இருந்த வெப்பம் குறைந்தது. வெளியே மைனஸ் 12 டிகிரி செல்சியஸ்-க்கும் கீழ் வெப்பநிலை இருந்தது. இதனால் வெப்பத்திற்காக ஒட்டுமொத்த குடும்பமும் தவித்தது. காலையில் வில்லியம்ஸ் தனது மூத்த குழந்தையைப் பள்ளிக்குச் செல்ல எழுப்பிய போது அவர் எந்த அசைவும் இல்லாமல் இருந்தார். காரை பழுது பார்க்க வெளியிலிருந்து உதவிக்கு வந்த வில்லியம்சின் நண்பர் அவரது குழந்தைகளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.
வில்லியம்சின் இரண்டு குழந்தைகள் டார்னெல், 9, மற்றும் அமிலா, 2. இந்த இரண்டு பேரும் வெளிப்படையான தாழ் வெப்பநிலை காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் சொர்க்கபுரிக்கு இதுதான் சான்று. வாழ வழி இல்லாமல் கொட்டடிகளில் வாழும் குடும்பம் தங்களின் உறக்கத்தை கூட நிம்மதியாகக் கழிக்க முடியவில்லை.
படிக்க: ஜாமியா – அலிகர் பல்கலைக்கழகங்களின் நிதியை குறைத்து வஞ்சிக்கும் மோடி அரசு!
அடுத்த நாள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய டெட்ராய்டு நகரத்தின் மேயர் மைக் டுக்கன் “அரசின் உதவிகளைப் பெற வில்லியம்ஸ் முயற்சி செய்யவில்லை” என விசயத்தைத் திசை திருப்பினார். இதற்குப் பதிலளித்த வில்லியம்ஸ் மூன்று முறை மனு கொடுத்தும் எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என அமெரிக்காவின் கோர முகத்தை அம்பலப்படுத்தினார்.
வீடற்றோர் நெருக்கடி டெட்ராய்டைத் தாண்டி நீண்டுள்ளது. அமெரிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 7,71,480 நபர்கள் வீடற்ற நிலையில் உள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 18 சதவீதம் அதிகம். இதில் கிட்டத்தட்ட 1,50,000 பேர் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள். இந்த வயதுப் பிரிவில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மிகப்பெரிய அதிகரிப்பு (33 சதவீதம்) காணப்பட்டது.
மேலும், 1,13,000 பேர் தங்கள் கார்கள், வேன்கள் மற்றும் ஆர்.வி (RV)-களில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மிச்சிகன் மற்றும் பிற மாநிலங்களின் கிராமப்புறங்களிலும் காடுகளிலும் வாடகை சேமிப்பு வசதிகளிலும் வசிப்பவர்கள் கணக்கிடப்படாததால், வீடற்றோர் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இவர்களைப் போன்றவர்கள் தான் நகரத்தின் அடிப்படை வேலைகள் அனைத்தையும் குறைந்த ஊதியத்தில் செய்கின்றனர்.
வறுமை அதிகமான அமெரிக்காவின் பெரிய நகரங்களில் டெட்ராய்டும் ஒன்று. இங்கு வறுமை 37.9 சதவீதம் என்கிறார்கள். மக்களின் வருமானமும் வேலைவாய்ப்பற்ற தன்மையும் மிக மோசமாக நிலவும் போது அவர்களால் எப்படி ஒரு வீட்டை உடைமை ஆக்கிக் கொள்ள முடியும்.
ஆனால், டெட்ராய்டில் ரியல் எஸ்டேட் அதிபர்களும் நிறுவனங்களும் வானளாவிய அளவில் வளர்ந்துள்ளனர். இதனால் வீடுகளின் விலையும் வாடகைகளும் சாமானிய மக்கள் நெருங்கவே முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.
இந்த டெட்ராய்ட் நகரத்தில் தான் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களும் வாழ்கிறார்கள். ஆனால், அந்த நகரத்தின் வளர்ச்சிக்காகக் கசக்கிப் பிழியப்படும் மக்கள் வீடற்றோராய் பனியில் உறைந்து மாண்டுபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ரவி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram