டிரம்ப்பும், நோபல் பரிசும், அதன் அரசியலும்

உலகளவில் ஆளும் வர்க்கங்களின் சார்பாக வழங்கப்படும் பரிசுகளோ, பதக்கங்களோ அவர்களின் நலன்களை மையப்படுத்தியதாகவும், அவர்களின் குற்றங்களை மறைப்பதற்காகவுமே இருக்கின்றன, இருக்கும்.

பாசிஸ்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை அறிவிக்க வேண்டும் என்று இனப்படுகொலை குற்றவாளியான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி வந்தார். டிரம்ப்பும் தனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று மிரட்டியும் வந்தார். தனக்குக் கொடுத்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அவருக்கு இருந்ததாகவே தெரிகிறது. காசா துயரங்களை மறைத்துவிட்டு, முதலாளித்துவ ஊடகங்களும் திட்டமிட்டு டிரம்ப்புக்கு நோபல் பரிசு கொடுப்பது தொடர்பான விவாதங்களை முன்னெடுத்தன. ஆனால்,

ஆனால், 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சார்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போயிருப்பதால் அது ஒன்றும் புனிதமானதல்ல. அமைதிக்கான நோபல் பரிசு கடந்த காலங்களில் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதற்கான சில உதாரணங்களைப் பார்த்தால், நோபல் பரிசின் அரசியல் சார்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவுக்கு 2009 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு வழங்கப்பட்ட காலகட்டத்திலும், 2009 -2017 வரையிலான அவரது ஆட்சிக் காலம் முழுவதும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி ஒபாமா தலைமையிலான பயங்கரவாத அமெரிக்க அரசு ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தது. அதன்பிறகு அவர், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை வெளிப்படையாக ஆதரித்தார் என்பது வரலாறு.

இதில் கேலிக்கூத்து என்னவென்றால், 2009ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 1, 2009. அப்போது ஒபாமா பதவியேற்று வெறும் 12 நாட்களே ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க கைக்கூலியான மியான்மரின் ஆங் சூன் சூச்சி க்கு அமைதிக்கான நோபல் பரிசு 1991 ல் வழங்கப்பட்டது. ஆனால், மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம்கள் பௌத்தப் பேரினவாத இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இராணுவத்தின்  நடவடிக்கைகளை ஆங் சான் சூச்சி ஆதரித்தது வரலாறு.

வியட்நாம் மக்கள் மீது கொடூரப் போரை நடத்திப் படுகொலை செய்த குற்றவாளியான அமெரிக்காவின் அப்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கருக்கு, வியட்நாம் போர் நிறுத்தத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை விட அவலம் வேறு உண்டா? அவனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட பின்னர், மீண்டும் வியட்நாம் மீது குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடுக்க உத்தரவிட்டான் என்பது வரலாறு.

உலகளவில் ஆளும் வர்க்கங்களின் சார்பாக வழங்கப்படும் பரிசுகளோ, பதக்கங்களோ அவர்களின் நலன்களை மையப்படுத்தியதாகவும், அவர்களின் குற்றங்களை மறைப்பதற்காகவுமே இருக்கின்றன, இருக்கும்.


படிக்க: பல் இளிக்கும் நோபல் பரிசுகள் !


பொறுக்கி அரசியலை முன்னெடுத்த எம்.ஜி.ஆருக்கு இந்திய அரசு பாரத ரத்னா வழங்கியது கூட இந்த வகையில்தான் சேரும். நோபல் பரிசு உலகளவில் என்றால், இந்திய அளவில் பாரத ரத்னா. அவ்வளவுதான்.

ஏழை நாடுகளில் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதற்காக, அந்நாடுகளில் அழகிப் போட்டிகள் நடத்தி வியாபாரத்தைக் கடைவிரிப்பது ஏகாதிபத்தியங்களின் யுக்தி. அதுபோலத்தான் நோபல் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை வரலாற்றை எடுத்துப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

தற்போது நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் மரியா கொரினா மச்சாடோவும் வெனிசுலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாளாகச் செயல்படுபவராகவே அவரது நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது.

டிரம்பின் அரசியலும், நோபல் பரிசின் அரசியலும் வேறு வேறல்ல. இரண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனை முதன்மைப்படுத்துபவைதான்.


தமிழன்பன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



2 மறுமொழிகள்

  1. குழந்தைகள் தங்களுக்குப் பிரியமான ஒன்றை எனக்கு வேணும் என்று அழுது புரண்டு அடம் பிடித்து வாங்குவார்கள்! அது குழந்தையின் பண்பு! ஆனால் எந்த ஒரு தரகு முதலாளியும் பிரதமர் பதவி தனக்கு வேண்டும் என அடம் பிடிப்பதில்லை! ஏவினால் செய்து முடிக்க ஏவல் நாய்களாக ஆளும் வர்க்க ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் இருக்க அம்பானி, அதானி போன்றவர்கள் பிரதமர் பதவி என்ன தேர்தலில் கூட நிற்க மாட்டார்கள்! அது போலத்தான் நோபல் பரிசு என்பது கம்யூனிச விரோதக் கருத்துக்கள், கம்யூனிசத்திற்கு எதிரான செயல்பாடுகளைக் கொண்டவர்களுக்கு வழங்கப் படும் சன்மானம்! நோபல் பரிசு வரலாறு முழுவதிலும் இதைப் பார்க்க முடியும்! உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, மக்களின் இலக்கியம் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட தாய் நாவலைப் படைத்த மார்க்சீம் கார்க்கிக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை! ஆனால் ஊர் பேர் தெரியாத பலருக்கும் அவர்களது கம்யூனிச விரோத எழுத்துக்களுக்காக நோபல் பரிசு வாரி வழங்கப்பட்டுள்ளது! இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல! அமைதிக்கான நோபல் பரிசு யோக்கியதையும் இப்படிப் பட்டது தான்! போர் வேண்டாம் என்று முதல் உலகப் போருக்கு எதிராகப் பேசி செயல்பட்ட தோழர் லெனின் தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு முழுத் தகுதியும் கொண்டவர்! ஹிட்லர் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றிருந்தால் 5 கோடிப் பேரைக் கொன்றொழித்த ஹிட்லருக்கு நிச்சயமாக அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கும்! அதில் மண்ணள்ளிப் போட்டது செம்படையும் தோழர் ஸ்டாலினும்! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்! இந்த ஆண்டு கூத்து என்னவென்றால் பொம்பளப் பொறுக்கி டிரம்ப் நடத்திய கேலிக் கூத்து நோபலின் உண்மைத் தன்மைகளை சந்தி சிரிக்க வைத்து விட்டது என்று சொல்லலாம்!

  2. கூர்மையான பதிவு. வர்க்கக் கண்ணோட்டத்தை தெளிவுபட பதிவு செய்துள்ளீர்கள். செவ்வணக்கம் தோழரே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க