சாவித்ரிபாய் ஜனவரி 3, 1831 அன்று மகாராஷ்டிராவின் நைகானில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவரது ஒன்பது வயதில், அப்போது 12 வயதுடைய ஜோதிராவ் பூலேவுடன் மணம் முடித்து வைக்கப்பட்டது. சாவித்ரிபாயின் அறிவு ஆர்வத்தைக் கண்ட ஜோதிராவ் அவருக்கு வீட்டிலேயே கற்பிக்கத் தொடங்கினார்.
1848-ஆம் ஆண்டில், நாட்டின் முதல் பெண்களுக்கான பள்ளியை சாவித்ரிபாய் திறந்து வைத்தார். பெண்களுக்கு முறையான கல்வி கிடைக்காத அக்காலத்தில், சாவித்ரிபாய் பெண்கள் கல்விக்காகப் போராடினார். அவர் பல சமூகத் தடைகள், பிற்போக்கு பழக்கவழக்கங்கள் மற்றும் பார்ப்பனிய ஆணாதிக்கத்தால் உருவான மரபுகளை எதிர்த்தார்.
இதனால், சாவித்ரிபாய் கடுமையான எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சந்தித்தார். அவர் மீது மண் மற்றும் கற்கள் எறியப்பட்டன. ஒருமுறை பெண்கள் கல்விக்கு எதிரான ஒருவன் அவரை தாக்க முயன்றான். ஆனால், சாவித்ரிபாய் அவனை அறைந்து தள்ளிவிட்டார். இந்த நிகழ்வு சாவித்ரிபாயின் தைரியத்தையும், ஆணாதிக்கத்திற்கு எதிரான அவரது உறுதியையும் காட்டுகிறது.
சாவித்ரிபாய் மற்றும் ஜோதிராவ் இருவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட போதிலும் பின்வாங்காமல், ஒடுக்கப்பட்ட சாதியினருக்காக 18 பள்ளிகளை நிறுவினர். இதில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் இஸ்லாமியப் பெண் ஆசிரியரான ஃபாத்திமா ஷேக்கின் பங்களிப்பு முக்கியமானது.
இந்தியாவில் பெண்களைப் பள்ளிக்குக் கொண்டு வருவது எப்போதும் ஒரு முக்கிய கொள்கை பிரச்சினையாக இருந்து வருகிறது. பெண் ஆசிரியர்கள் குறைவாக இருப்பதும் அதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. சாவித்ரிபாய் கற்பித்த பல பெண்கள் பின்னர் ஆசிரியர்களாக மாறினர். இதன் மூலம் மேலும் பல பெண்களுக்கு கல்வி பெற வேண்டும் என்ற ஆசை உருவானது. இவ்வாறு, பெண்களின் கல்வியை மறுத்துவந்த பழக்கவழக்கங்களை உடைத்து, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பெண்களை குடும்பத்தின் கொடுமையிலிருந்து காப்பாற்ற, தங்கும் இல்லங்கள் போன்ற அமைப்புச் செயல்பாடுகள் தேவை என்பதை சாவித்ரிபாய் முன்கூட்டியே உணர்ந்தார். கர்ப்பிணி விதவைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து தப்பியவர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பெற்றெடுக்க, சாவித்ரிபாய் மற்றும் ஜோதிராவ் இருவரும் “பால்ஹத்ய பிரதிபந்தக் கிரிஹா” (சிசுக்கொலை தடுப்பு இல்லம்) என்ற மையத்தைத் திறந்தனர்.
சாவித்திரிபாய் பெண்களுக்கான கல்வியின் விடுதலை மதிப்பை எடுத்துக்காட்டும் ஒரு அறிவுஜீவியாகவும், விமர்சனப்பூர்வமான கல்வியாளராகவும் திகழ்ந்தார். சாதி மற்றும் ஆணாதிக்கத்தின் பிடியிலிருந்து பெண்களை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட பெண்களின் “அறிவுசார் சமூகத்தை” உருவாக்குவதையே அவரது கற்பித்தல் முறை மையமாகக் கொண்டிருந்தது. அவர் “கேள்வி கேட்கும்” கற்பித்தல் முறையைப் பயன்படுத்தினார். பெண்களை தாய்மை, குடும்பம் மற்றும் இல்லற வாழ்க்கைக்குள் முடக்குவதானது அவர்களின் முழு திறனையும் அடைவதற்கு எவ்வாறு தடையாக இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கும் அவரது கவிதைகளில் இது தெளிவாகத் தெரிகிறது.
“மரியாதையுடன் வாழ வேண்டும் என்றால் பள்ளிக்குச் செல்லுங்கள். கல்வியே மனிதர்களின் உண்மையான ஆபரணம். உங்கள் முதல் முன்னுரிமை படிப்பாக இருக்க வேண்டும். அதன் பிறகு விளையாட்டு. பின்னரே, வீட்டுப் பணிகள்.” என்ற அவரது கவிதை இதனை உறுதிப்படுத்துகிறது.
மேலும், சாவித்ரிபாய் பள்ளியில் கற்பிப்பதில் மட்டும் நின்றுவிடவில்லை. அவர் ஒரு கலாச்சார செயற்பாட்டாளராகவும் செயல்பட்டார். கல்வி மூலம் பெண்களை பொது வாழ்விற்குக் கொண்டு வர அவர் தொடர்ந்து முயன்றார். சத்யஷோதக் சமாஜ் உறுப்பினர்களுடன் சேர்ந்து,
புரோகிதர் மற்றும் வரதட்சணை இல்லாமல் சாதி கடந்த மணங்களை நடத்தினார்.
பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் சமூக மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்காக சாவித்ரிபாய் பூலே மகத்தான பங்களிப்பை வழங்கிய போதிலும், அவரது பணிகள் இன்றளவும் அங்கீகரிக்கப்படவில்லை. அறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரஜ் ரஞ்சன் மணியின் கூற்றுப்படி, அறிவு உற்பத்தி, பண்பாட்டு மறு உற்பத்தி மற்றும் வரலாற்று வரைவியல் ஆகியவற்றைப் பெருமளவில் ஆக்கிரமித்துள்ள ‘பிராமணிய மனநிலையே’ இதற்குக் காரணமாகும்.
படிக்க: ஜோதிபா பூலே 198-வது பிறந்தநாள்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை தடை செய்ய உறுதியேற்போம்!
சாவித்ரிபாய் பூலே இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கி ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மாணவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை அணுக முடியாத பிரச்சினை என்பது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் இந்த அவலநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், எந்தவித முன்னேற்பாடுமின்றி ஆன்லைன் கல்விக்கு திடீரென மாறிய போது, ஸ்மார்ட்போன், இணைய வசதி இல்லாததால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் ஓரங்கட்டப்பட்டனர். பல வீடுகளில், தொழில்நுட்பம் இருந்தபோதும், பெண் குழந்தைகளை விட ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதன் உச்சமாக, டெல்லியின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த ஐஸ்வர்யா ரெட்டி, 2020 நவம்பரில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள தனது குடும்பத்தினரால் மடிக்கணினி வாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகின.
பல்வேறு தடைகளை மீறி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க வந்தாலும் பார்ப்பனிய சாதிய கட்டமைப்பு அவர்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுத்து வருகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ராஜஸ்தானின் ஜலோரில் ஒன்பது வயது தலித் சிறுவன் இந்திரா மேக்வால், ஆதிக்கச் சாதி ஆசிரியரின் தண்ணீர் பானையைத் தொட்டதாகக் கூறி அடித்துக் கொல்லப்பட்டான். பள்ளிகளில் தலித் மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் விரட்டியடிக்கப்படுவதும் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த அவலநிலை உயர்கல்வியில் இன்னும் மோசமாக உள்ளது. 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பில் பழங்குடியினத்தை சேர்ந்த இஸ்லாமிய மருத்துவ மாணவி பயல் தத்வி சக மாணவர்களாலேயே சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுபுறம், பா.ஜ.க-வின் ஆட்சியில் கல்வி வளாக ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருவதன் விளைவாக, வளாகத்திற்குள்ளேயே மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் கொடூரம் அரங்கேறி வருகிறது.
இவையெல்லாம் நூற்றாண்டுகால போராட்டத்திற்குப் பிறகு கல்வி பயிலத் தொடங்கியுள்ள மாணவிகளை மீண்டும் கல்வியிலிருந்து விரட்டியடிக்கும் சதியாகும். பெண்களை அடிமையிலும் அடிமையாகப் பார்க்கும் பார்ப்பனியத்தைத் தனது சித்தாந்தமாகக் கொண்டுள்ள பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் பெண்களைக் கல்வியிலிருந்து விரட்டியடிப்பது திட்டமிட்டே நடந்து வருகிறது.
இது, அன்று பார்ப்பனிய பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக சாவித்ரிபாய் பூலே வீறுகொண்டு எழுந்ததை போல இன்று லட்சோப லட்சம் சாவித்ரிபாய்கள் தேவைப்படுகின்றனர் என்பதையும் பாசிசத்தை வீழ்த்தாமல் பெண் கல்வியைச் சாதிக்க முடியாது என்பதையும் நிரூபிக்கிறது.
![]()
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











