தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கடலையூர்; தென்காசி மாவட்டத்தில் திருவேங்கடம், குருவிகுளம்; விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, திருத்தங்கல், திருவில்லிப்புத்தூர்; வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் காவிரிப்பட்டிணம் ஆகிய இடங்களில் 400 இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இத்தொழிற்சாலைகளில் 90 சதவிகிதம் பெண்களே பணிபுரிந்து வருகின்றனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தொழிலில் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீப்பெட்டி தயாரிப்பிற்கு பயன்படும் முக்கிய மூலப்பொருளான பாராஃபின் மெழுகு (Paraffin Wax) அதிகளவில் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏகாதிபத்திய வெறிபிடித்த அமெரிக்கா மற்றும் இனவெறி இஸ்ரேலின் ஈரான் மீதான மேலாதிக்கப் போராலும், ஹோர்மூஸ் நீரிணை முடக்கத்தாலும் கப்பல் போக்குவரத்து முடங்கியதாலும் மெழுகு இறக்குமதி தடைப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இந்தியாவில் பாராஃபின் மெழுகுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போர் ஏற்படுவதற்கு முன்பாக ரூ.80-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ பாராஃபின் மெழுகு தற்போது ரூ.130-ஆக விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், உள்நாட்டு வியாபாரிகளிடம் உள்ள மெழுகு தீர்ந்துவிட்டால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
மேலும், தீப்பெட்டி பண்டல் தயாரிக்கப் பயன்படும் பிபி கவர் (PP cover), செலோ டேப் (Cellophane tape) தயாரிக்கப் பயன்படும் பெட்ரோலிய வெர்ஜின் பொருட்களும் பெருமளவில் ஈரானிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரான் மீதான போரால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பெட்ரொலிய வெர்ஜின் பொருட்களின் விலை ரூ.120-லிருந்து ரூ.180-ஆக உயர்ந்துள்ளது.
படிக்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தொடரும் அரசின் மெத்தனப் போக்கு
இதனால், போர் தொடர்ந்தால் தமிழ்நாட்டின் தீப்பெட்டித் தொழில் முடங்கும் அபாயம் உள்ளது.
மேலும், மெழுகு விலை உயர்வால், 600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு கார்டன் (carton) பெட்டியின் உற்பத்திச் செலவு சுமார் ரூ.10 வரை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, கடுமையான சந்தைப் போட்டியால் தீப்பெட்டியின் விற்பனை விலையை உயர்த்த முடியாத நிலையில், இந்த கூடுதல் உற்பத்திச் செலவால் பல தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களால் (lighter) தீப்பெட்டித் தொழில் அழிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தீப்பெட்டி தொழிலை முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, ஒன்றிய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் மீதான மேலாதிக்கப் போர் காரணமாகவும், இந்திய மோடி அரசின் அமெரிக்க அடிமைத்தன வெளியுறவுக் கொள்கை காரணமாகவும் ஏற்கெனவே இந்தியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்; வட மாநிலங்களில் சிலிண்டர் வாங்க வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். பட்டவர்த்தனமாக அம்பலப்பட்டு போயுள்ள இந்த சிலிண்டர் தட்டுப்பாட்டை கூட மோடி அரசு ஒப்புக்கொள்ளாமல் மூடிமறைத்து வருகிறது. இந்நிலையில், தீப்பெட்டி தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் சத்தமின்றி முடங்கத் தொடங்கியுள்ளன. அதேபோல், இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படுகின்ற பாஸ்மதி அரிசி, தேயிலை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், பாசிச மோடி அரசானது விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்து எந்த கவலையுமின்றி, ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் போரைக் கண்டிக்காமல் அமெரிக்க ’எஜமானுக்கு’ அடிமை சேவகம் செய்து கொண்டிருக்கிறது. அம்பானி-அதானிகளின் நலனை பாதுகாக்க தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது.
எனவே, இந்தியா நாட்டு உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகளின் நலனை காக்க அமெரிக்க அடிமை மோடி அரசிற்கு எதிராகவும் ஈரான் மீதான போரைக் கண்டித்தும் மிகப்பெரிய போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











