தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை மழையாகப் பொழிந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் பெண்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருப்பதால், அனைத்துக் கட்சிகளும் பெண்களின் வாக்குவங்கியை மையப்படுத்தி கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. பெண்களுக்கு ‘உரிமைத்’ தொகை வழங்குகிறோம் என்ற பெயரில் ரூ.1,000, ரூ.2,000, ரூ.2,500 என ஏலம் விடுவதைப் போல தொகையை ஏற்றி அறிவித்து வருகின்றன.
கவர்ச்சிவாதப் பொறுக்கி அரசியலுக்குப் பெயர்போன அ.தி.மு.க., “இல்லத்தரசிகளுக்கு” ‘இலவசமாக’ குளிர்சாதனப் பெட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு போட்டியாக தி.மு.க. “இல்லத்தரசித் திட்டம்” பெயரில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இலவசங்கள் மூலம் வாக்குகளைக் கவர வேண்டும் என்ற பிழைப்புவாதத்திலிருந்தே இத்தகைய கவர்ச்சிவாத வாக்குறுதிகள் முன்வைக்கப்படுகின்றன. அதேசமயம், “இல்லத்தரசிகள்” என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படுவதற்கு பின்னணியில் பிற்போக்கு ஆணாதிக்க மனநிலையும் அடங்கியிருக்கிறது. ஏன் ஆண்கள் யாரும் இந்த வீட்டுப் பொருட்களை உபயோகிக்க மாட்டார்களா என்ன?
“விஜய் கட்சி” இவற்றிற்கு ஒருபடி மேலே சென்றுவிட்டது. “அண்ணன் சீர்”, “தாய் மாமன் சீர்” என்ற பெயரில் திருமணத்திற்கு எட்டு கிராம் தங்கம், பட்டுப்புடவை, பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் முதலியவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் “சீர்” போன்ற நிலப்பிரத்துவப் பிற்போக்குக் கலாச்சாரத்தை மக்களிடம் திணிப்பதுடன், திரைப்படங்களில் வரும் “பாசக்கார அண்ணன்” என்ற பிம்பத்தை அரசியலில் வாக்குகளாக மாற்ற முயற்சிக்கிறார் நடிகர் விஜய். எளிய மக்களின் உணர்வுகளை தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காகத் தூண்டிவிடும் மிகவும் இழிவான அரசியலை மேற்கொண்டு வருகிறார்.
ஒட்டுமொத்தத்தில் பெண்களின் வாக்குவங்கியை கவர வேண்டும் என்பதைத் தாண்டி, பெண்கள் எதிர்கொண்டுவரும் பாலியல் வன்முறை, உழைப்புச் சுரண்டல், குடும்ப வன்முறை, வரதட்சனைக் கொடுமை உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தெல்லாம் இந்தத் தேர்தல் கட்சிகளுக்கு அக்கறையில்லை.
மக்களின் தேவையும்
கார்ப்பரேட் உத்திகளும்
தமிழ்நாட்டில் இன்று தேர்தல் அறிக்கைகள் என்பன கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில்முறை உத்தி வகுப்பாளர்கள் (Professional Strategy Teams) மற்றும் தரவு ஆய்வாளர்களைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட வாக்குவங்கியைக் கவர்வதற்காக உருவாக்கப்படும் தூண்டிலாகிவிட்டன. வாக்காளர்கள் என்பதைத் தாண்டி மக்களை நுகர்வோர்களாக தேர்தல் கட்சிகள் மாற்றுகின்றன. மக்களின் அடிப்படை பிரச்சினைகள், கோரிக்கைகளை மையப்படுத்தாமல், கவர்ச்சிகரமான வெற்று வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுவதிலேயே இக்கட்சிகள் முனைப்புக் காட்டுகின்றன.
ஆனால், மக்களின் தேவையோ இதுவல்ல. 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி என்னென்ன தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட வேண்டும் என “விகடன்” ஊடகம் மக்களிடம் நடத்திய கருத்துகணிப்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளனர்: ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை அல்லது நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்; மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் மற்றும் படிப்படியான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்துவதுடன், அரசு மருத்துவமனைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்; சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்; இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய பிரத்யேக செயலியை உருவாக்க வேண்டும் போன்றவையே மக்களின் கோரிக்கைகள்.
இக்கோரிக்கைகள் தேர்தல் கட்சிகளின் ‘இலவசத் திட்டங்களுக்கும்’ மக்களின் உண்மையான தேவைகளுக்கும் இடையே உள்ள பெரும் இடைவெளியைத் தெளிவாகக் காட்டுகின்றன. பணம், இலவசப் பொருட்களைத் தாண்டி நிலையான வாழ்வாதாரம் வேண்டும் என்பதையே மக்கள் முதன்மையாகக் கருதுகின்றனர்.
போராடும் தமிழ்நாடு
வேண்டும் ஜனநாயகம்!
தி.மு.க-வின் இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எண்ணிலடங்கா மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன, நடந்து கொண்டிருக்கின்றன.
மேல்மா, கல்லாங்காடு உள்ளிட்டு பல பகுதிகளில் சிப்காட் திட்டம் – விரிவாக்கம், பரந்தூர் விமான நிலையத் திட்டம், கடலூரில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்கம் போன்ற பல கார்ப்பரேட் நலத் திட்டங்களுக்கு விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், மக்கள் போராடி வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்காக கொண்டுவரப்பட்ட “தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்திற்கு” எதிராக விவசாயிகள், செயற்பாட்டாளர்கள் பல்வேறு கட்டப் போரட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் கனிமவளக் கொள்ளைத் தீவிரமாக அரங்கேறி வருகிறது. மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளையை தட்டிக் கேட்டதற்காக லூர்து பிரான்சிஸ், ஜெகபர் அலி, ஜாகிர் உசேன், சதீஷ்குமார் என எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கிரானைட், கல்குவாரிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை கடற்கரையிலிருந்து விரட்டியடிக்கும் நீலக்கொடி கடற்கரை திட்டம், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் போன்றவற்றிற்கு எதிராக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சாம்சங் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காக நடத்திய போராட்டம் உலகளவில் கவனம் ஈர்த்தது. தி.மு.க. அரசின் பல்வேறு ஒடுக்குமுறைகள், சூழ்ச்சிகளை முறியடித்துப் போராட்டம் வெற்றி பெற்றது. ஆனால், தற்போதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒடுக்குமுறையை சந்தித்து வருகின்றனர். அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் காண்ட்ராக்ட் மயமாக்கத்திற்கு எதிராகவும் இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். உதவித்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு முழுவதும் போராடி வருகின்றனர்.
சிங்கார சென்னை, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் உழைக்கும் மக்களை நகரங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு எதிராக பூர்வகுடி மக்கள் போராடி வருகின்றனர்.
கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிராகவும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தியும் பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டங்களை பட்டியலிட முடியும்.
ஆனால், இவற்றில் எத்தனை கோரிக்கைகளை தங்களது தேர்தல் அறிக்கையில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்திருக்கின்றன. அதிலும், விஜய் கட்சி இன்னும் முழுமையான தேர்தல் அறிக்கையையே வெளியிடவில்லை.
நீட் தேர்வை இரத்து செய்வோம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. சட்டப் போராட்டங்கள் என்ற போர்வையில் களப்போராட்டங்களை மட்டுப்படுத்தும் வேலையைத்தான் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் “நீட் தேர்வு” என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. மாறாக, “மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்துவோம்” என்று பொதுவாகக் கூறியுள்ளது. அதாவது வாக்குறுதி என்பதிலிருந்து இதனை ஒரு கொள்கை – விருப்பம் என்ற வரம்புக்குள் கொண்டு சென்றுவிட்டது. இனி தி.மு.க-வைப் பார்த்து யாரும் நீட் தேர்வை ஏன் இரத்து செய்யவில்லை என்று கேட்க முடியாது அல்லவா? இது தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்.
அதேபோல், கவின் ஆணவப் படுகொலைக்குப் பிறகு ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் முக்கியமான கோரிக்கையாக உருவெடுத்துள்ளது. முக்கியமாக பெண்களின் கோரிக்கையாக உள்ளது. களத்தில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அப்படியிருந்தும் தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம் குறித்து எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. நாங்கள்தான் சட்டம் இயற்றுவதற்கான குழு அமைத்திருக்கிறோமே என்று தி.மு.க-வினர் கேட்கலாம். பிறகு ஏன் அதை வாக்குறுதியாக வழங்கவில்லை? சட்டத்தை நிறைவேற்றுவோம் என்பதில் தி.மு.க-விற்கே நம்பிக்கையில்லையா?
ஆனால், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்துள்ளது. குடிப்பெருமை என்ற பெயரில் அப்பட்டமான சாதிவெறியைக் கக்குகின்ற சீமானின் கட்சி இவ்வாறு தெரிவித்திருப்பது எவ்வளவு பெரிய முரண்? அதிலும் தேர்தல் அறிக்கையில் “சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும்” என்று வாக்குறுதியளித்திருப்பதன் மூலம் பா.ஜ.க-வின் நிகழ்ச்சிநிரலுக்கு மறைமுகமாக துணைபோவதும் குறிப்பிடத்தக்கது. தி.மு.க-வின் மக்கள் விரோதத் திட்டங்கள், நடவடிக்கைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இத்தகைய பார்ப்பனிய பாதந்தாங்கிகள், பாசிச குட்டிகள் வளர எத்தனிக்கின்றன. மேலும், “தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சிமுறை” அமைக்கப்படும் என்று வாக்குறுதியளித்திருப்பதன் மூலம் சீமான் தனது பாசிச சர்வாதிகார நோக்கத்தை வெளிக்காட்டியுள்ளார்.
அதேபோல், நாங்குநேரி, வேங்கைவயல், சமீபத்தில் நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை என தலித் மக்கள் மீதான வன்முறைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இதன் பின்னணியில் உள்ள ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களையும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சிகர சக்திகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், “டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும்தான் போட்டி”, “பா.ஜ.க-வை எதிர்க்கிறோம், பாசிசத்தை எதிர்க்கிறோம்” என்றெல்லாம் பேசும் தி.மு.க. இந்த சாதியத் தாக்குதல்கள் குறித்தோ அவற்றை தடுப்பது குறித்தோ தேர்தல் அறிக்கையில் வாய்திறக்கவில்லை.
***
இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் தனது இந்துராஷ்டிரக் கனவிற்காக அனைத்து அரங்கிலும் பாசிசத்தை நிலைநிறுத்தி இந்தியாவின் போலி ஜனநாயக கட்டமைப்பை பாசிசமயமாக்கி வருகிறது. பல்வேறு பாசிச சட்டத்திட்டங்களை நிறைவேற்றி இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களை நிறுவி வருகிறது. தலித், பழங்குடியின மக்களையும் கிறித்தவ – இஸ்லாமிய சிறுபான்மையினரையும் பாலின சிறுபான்மையினரையும் இரண்டாம்தரக் குடிமக்களாக்கி வருகிறது.
மேலும், இந்தியாவின் மாநிலங்களை இந்துராஷ்டிரத்தின் கப்பம் கட்டும் சமஸ்தானங்களாக மாற்றும் நோக்கில் சொல்லிக்கொள்ளப்படுகின்ற மாநில உரிமைகளை அப்பட்டமாகப் பறித்து வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசுக் கட்டமைப்பின் துணையுடன் பல்வேறு மோசடி முறைகேடுகளை அரங்கேற்றி, எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டி மாநிலங்களை கபளீகரம் செய்து வருகிறது.
அந்தவகையில், பார்ப்பனிய எதிர்ப்பு மரபுடன் பா.ஜ.க. கும்பலை எதிர்த்து நிற்கின்ற தமிழ்நாட்டை பாசிச கும்பல் தனது சித்தாந்த எதிரியாகக் கருதி தமிழ்நாட்டில் காலூன்ற மூர்க்கமாக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை பாசிச எதிர்ப்புணர்வாகவும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எதிராகக் களத்தில் நடக்கின்ற மக்கள் போராட்டங்களை பாசிச எதிர்ப்புப் போராட்டங்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும்; பாசிச எதிர்ப்பு மாற்றுத் திட்டம், சித்தாந்தத்தை முன்வைத்து மக்கள் போராட்டத்தைக் கட்டியமைத்து பாசிச கும்பலை விரட்டியடிக்க வேண்டும். பா.ஜ.க. எதிர்ப்புணர்வு கொண்ட தமிழ்நாட்டில் இத்தகைய போராட்டங்களை உறுதிமிக்க வகையில் கட்டியமைக்க முடியும்.
ஆனால், பாசிசத்தை எதிர்ப்பாக சொல்கின்ற தி.மு.க. இவை குறித்தெல்லாம் எந்தவித அக்கறையுமின்றி கவர்ச்சிவாத வாக்குறுதிகளின் மூலம் மக்களின் உணர்வை மழுங்கடிக்கவே பார்க்கிறது. பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை வேட்டையாடி ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறது. இது மக்களை பாசிசத்திற்கு பலி கொடுக்கும் நடவடிக்கையே ஆகும்.
எனவே, மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் பாசிசத்தை மோதி வீழ்த்தவும் மக்கள் தங்களது சொந்த பலத்தில் போராடியாக வேண்டும் என்பதே எதார்த்த நிலையாக உள்ளது. எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி “வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்துடன் மக்களின் கோரிக்கைகளை பாசிச எதிர்ப்பு மாற்றுத் திட்டத்துடன் இணைத்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது தமிழ்நாட்டின் பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையாக உள்ளது.
![]()
தலையங்கம்
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads










