New Democracy || Puthiya Jananayagam in English || Magazine
Puthiya Jananayagam articles that featured in the late 80’s and 90’s, analyse the Eezham Tamil liberation struggle of SriLanka through a Marxist-Leninist view; It clearly exposes the weakness of this movement and the conspiracies of India, the regional super power of South Asia. Also it has given a perspective on the Nepal people’s heroic democratic struggle
‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021 : இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்
நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ‘அமளியில்’ ஈடுபட்டதன் மூலம் ‘இல்லாத ஜனநாயகத்தை’ அவமதித்துவிட்டனர் என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற ‘விவாத சுதந்திரம்’ பறிக்கப்படுவதற்கு எதிராக எதிர்க்கட்சியினரால் செய்ய முடிந்த ‘உச்சபட்ச நடவடிக்கை’ கூக்குரலிடுவது மட்டும்தான். மாநிலங்களவையில் சொற்பப் பெரும்பான்மை கொண்ட மோடி அரசு (பா.ஜ.க. கூட்டணி – 119 இடங்கள், எதிர்க்கட்சிகள் – 118 இடங்கள்) இம்முறை தனது இடைநீக்க நடவடிக்கையின் மூலம் அக்கூக்குரலின் சத்தங்களையும் குறைத்துவிட்டது. இடைநீக்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த நிலையில்தான் இரு அவைகளிலும் – டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் – தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா 2021 நிறைவேற்றப்பட்டுள்ளது.
“ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்களிக்கும் ‘தில்லுமுல்லுகளை’ ஒழித்துக்கட்டவே இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் கள்ள ஓட்டினை தடுத்து ‘நியாயமான ஒரு தேர்தல் முறையை’ உருவாக்க முடியும். இதற்கு எதிர்க்கட்சிகள் ‘தடையாக’ இருக்கின்றனர்” என்ற ஒரு தோற்றத்தை பாசிச மோடி அரசு உருவாக்கியுள்ளது.
இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ. உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களையும் போல தேர்தல் ஆணையமும் காவி பாசிஸ்டுகளின் கைப்பாவைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் டிசம்பர் 18-ம் தேதியன்று, இந்திய தேர்தல் ஆணையர்களுடன் பிரதமரின் முதன்மைச் செயலர் சந்திப்பு நடத்தினார். தேர்தல் ஆணையர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை மற்ற அதிகாரிகளை அழைத்துப் பெறுகின்ற வழக்கத்துக்கு மாறாக இச்சந்திப்பு நடைபெற்று, அது பலத்த எதிர்ப்புக்குள்ளான போதும் சட்டை செய்யாமல் இருந்துவருகிறது மோடி அரசு.
ஆதார் இணைப்பு : கண்காணிப்பு சட்டப்பூர்வமான வரலாறு
ஆதார் என்பது என்ன? எதற்கு உருவாக்கப்பட்டது? ஆதார் சட்டம் 2016 என்பது (Targeted delivery of financial and other subsidies, Benefits and services) Act 2016 – “மானியங்களும் சலுகைகளும் நாட்டின் ஏழை மக்களுக்கு ஒழுங்காகப் போய் சேர்வதில்லை. ஆகவே அதில் நடைபெறும் ஊழல்களையும் முறைகேடுகளையும் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது” என்று சொல்லப்படுகிறது. ஆதார், அனைத்து மக்களுக்குமான ஒன்றல்ல என்பதனை இவ்விளக்கமே தெளிவுபடுத்தும்.
படிக்க :
♦ ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு : மோடியின் பாசிச நடவடிக்கை | தோழர் சுரேசு சக்தி
♦ ஆதார் அபாயம் : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும் || மு. இக்பால் அகமது
இன்போசிஸ் (Infosys) என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் துணைத்தலைவரான நந்தன் நீலகேனியை தலைவராகக் கொண்டு 2009-ல் அப்போதைய காங்கிரசு அரசால் ஆதார் ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ – UIDAI) உருவாக்கப்பட்டது. “ஆதார் சட்டப்பூர்வமானதா” என்ற கேள்வி எழுந்தபோது தனியாக சட்டம் இயற்றப்படாமல், 2016-ல் நிதி மசோதாவாகவே கொண்டு வரப்பட்டது.
ஆதார் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்ற பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையோர் ஏற்றுக்கொண்டதாலேயே ஆதார் சட்டப்படி செல்லும் தன்மையுடையதாகி இருக்கிறது. மேலும் ஆதாரை மானியங்கள், சலுகைகள் தவிர மற்றவற்றுக்கு கட்டாயமாக்கக் கூடாது என்றும் ஆதார் இல்லாததால் யாரும் எதற்காகவும் பாதிக்கப்படக் கூடாது என்றும் வங்கிக் கணக்கை தொடங்கவும், பள்ளியில் சேர்க்கவும், மொபைல் எண்ணைப் பெறவும் ஆதார் கட்டாயமில்லை என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதே நீதிமன்றம், பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யும் போது “ஆதார் கட்டாயம்” என்ற தீர்ப்பையும் பின் நாட்களில் வழங்கியது. தீர்ப்பு வருவதற்குள் 99% மக்களை ஆதார் தனது வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டது. 2010 முதல் 2019 வரை சட்டப்பூர்வமற்ற வகையில் கட்டாயப்படுத்திப் பெறப்பட்ட ஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
காவி – கார்ப்பரேட் கும்பலிடம் நமது அந்தரங்கத்தின் சாவி!
“ஆதார் பாதுகாப்பானதா” என்ற கேள்விக்கு பதில் இதுவரை கிடைக்கவே இல்லை. புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஒருவருக்கு பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்வதற்கான லிங்க் அனுப்பப்படுகிறது. அதை அவர் கிளிக் செய்த உடன், அந்த லிங்க் லாஸ்பேட்டையில் உள்ள வாக்காளர்கள் அனைவரையும் இணைக்கும் வாட்ஸப் குழுவிற்கு செல்வதை அறிகிறார். செல்போன் எண்ணிற்கு வந்த இனைப்பை (லிங்க்) அழுத்தியவுடன், அவர் எந்தத் தொகுதி, எந்த பூத்தில் இருப்பவர் என்பதை எப்படி பாஜக-வால் அறிய முடிந்தது? செல்போன் எண் வாங்குவதற்குப் பயன்படுத்திய ஆதாரில் உள்ள தமது முகவரி எப்படி இவர்களுக்குத் தெரிந்தது என்ற கேள்வி எழுந்தது. மார்க்சிஸ்டு கட்சியின் இளைஞர் (டி.ஒய்.எப்.ஐ – DYFI) அமைப்பைச் சேர்ந்த அவர் இது குறித்து மார்ச் 2021-ல் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்தார். இது குறித்து ‘அதிர்ச்சியடைந்த’ நீதிமன்றம் ஆதார் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
உருவானதில் இருந்தே ஆயிரத்தெட்டு ஓட்டைகளையும் சட்டவிரோதங்களையும் தன்னகத்தே கொண்ட ஆதார் அட்டையைத்தான் இப்போது வாக்காளர் அட்டையோடு இணைக்க தேர்தல் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை என்பது பொது ஆவணம். அதில் உள்ள தகவல்களை அனைத்து கட்சிகளின் ஏஜெண்டுகள் போல யாரும் பயன்படுத்த முடியும். ஆனால் ஆதார் என்பது கைவிரல் ரேகை, கண் ரேகை என தனிப்பட்ட விவரங்களை உள்ளடக்கியுள்ளது. அது ஒரு மனிதனின் தனிப்பட்ட அடையாளங்களும் தகவல்களும் பதியப்பட்ட அந்தரங்க ஆவணம். அதை பொது ஆவணமாக்குவது அரசியல் சாசன விரோதமானது.
தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா 2021, டிசம்பர் 20-ம் தேதி காலையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அன்று மாலையே நிறைவேற்றப்பட்டது. “ஒரு சட்டம் கொண்டுவரும் முன்னர் அது தொடர்பாக மக்களிடமும் கருத்து கேட்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களிடமும் கருத்துக் கேட்கவில்லை. ‘தேர்தல் சீர்திருத்தம்’ என்கிறார்கள், தேர்தலில் தொடர்புடைய அரசியல் கட்சிகள், மக்கள் என யாரிடமும் கருத்து கேட்காமல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.” என்கிறார் தி.மு.க.வின் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி.
“வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல” என்று மோடி அரசு தெரிவிக்கிறது. ஆனால் எச்சூழலில் அதிகாரிகள் ஆதாரை கேட்க முடியும், எச்சூழலில் மக்கள் ஆதார் கொடுக்க மறுக்க முடியும் என்ற விவரங்கள் இல்லாத இச்சட்ட திருத்தம் ஆதாரை கட்டாயமாக்கவே செய்யும். அடிப்படை தேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் நடப்பது என்ன? செல்போன் எண் வாங்க, பத்திரப்பதிவு செய்ய, கேஸ் சிலிண்டர் வாங்க, பள்ளியில் சேர்க்க, இப்படி எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கே ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. ஆக, ‘கட்டாயமில்லை’ என்று சொல்லியே எல்லாவற்றுக்கும் ஆதாரை கட்டாயமாக்கிவிட்டது மோடி அரசு.
மளிகைப் பொருள் முதல் மாட்டுச்சாணி வரை அனைத்தும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போனில் ஒரு பொருளைத் தேடினோம் என்றால் அப்பொருள் பற்றிய விளம்பரங்கள் இணையத்தில் நாம் எங்கே சென்றாலும் துரத்துகின்றன. ஒரு வீடியோவை பார்த்தால் அது தொடர்பான வீடியோக்கள் பல நாட்கள் நம் அனுமதியின்றி நம் முகத்தில் வந்து தெறிக்கின்றன. மருத்துவமனை, வங்கிக்கணக்கு, பள்ளி, கல்லூரி, லைசென்ஸ், தடுப்பூசி, கடன் அட்டை, ஜி-மெயில், யூடியூப், முகநூல் என எல்லாவற்றுக்கும் ஆதார் எனும் போது தனி மனிதனின் எல்லா தகவல்களும் ஆதார் என்ற ஒரு அச்சாணியைச் சுற்றி இணைக்கப்படுகிறது.
இதை வைத்து ஒரு மனிதனின் விருப்பங்கள் என்ன, தேவைகள் என்ன அவரிடம் எதைப் பேசினால் எந்த பொருளை வாங்க வைக்கலாம் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு இப்போது எளிதாகிவிட்டது. அந்த கார்ப்பரேட்டுகள் தனக்கான அடியாள் படையை ஆட்சியில் அமர்த்துவதற்காக செய்தி ஊடகங்கள், இணையம், சமூக ஊடகங்கள் என அனைத்தின் மூலமாகவும் வாக்களர்களிடம் துல்லியமாக கருத்துருவாக்கம் செய்ய உதவியாக இருக்கும்.
வாக்களர் அட்டையுடன் ஆதார் இணைப்பு:
பாசிச கொடுங்கோன்மைக்கு அடிகோலிடுவதே!
2024-ல் இந்துராஷ்டிரத்தை அமைப்பதில் முழுமூச்சோடு இருக்கும் மோடி – அமித்ஷா பாசிச கும்பல் எதிர்க்கட்சிகளின் வேர்களையே அறுத்தெறிந்து அனாதைகளாக்க இந்த தேர்தல் சீர்திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்துவார்கள். தனிப்பட்ட தகவல்கள் உள்ள ஆதாரை வாக்காளர் அட்டையோடு இணைத்தால் அத்தகவல்கள் பா.ஜ.க.வின் கைகளுக்கே செல்லும். அத்தகவல்களைப் பெற்றுக்கொண்டு அரசின் சலுகைகள், மானியங்களை பெற்றவர்களை மிரட்டி தங்களுக்கு ஓட்டுப் போட வைக்கவும்; ஒரு வாக்காளர் முகநூலில் என்ன தேடுகிறார், என்ன படிக்கிறார், எதை விரும்புகிறார் என்பதை அறிந்து அதற்கேற்றவற்றை அறிவிப்புகள் செய்து மொத்த வாக்காளர்களையும் கவரவும் முடியும்.
தங்களுக்கு தேவையற்ற அதாவது பா.ஜ.க.வை மறுக்கின்ற வாக்காளர்களை மிரட்டவும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கவும், தேவைப்பட்டால் ஒழித்தே கட்டவும் இச்சட்டத் திருத்தம் பயன்படும். குறிப்பாக சொல்வதானால், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் (NPR) மூலமாக தனக்கு வேண்டப்படாதவர்களின் குடியுரிமையைப் பறித்து பாசிஸ்டு முகாமில் தள்ளுவதற்கு திட்டமிட்டதைப் போல, தமக்கு வாக்களிக்காத தொகுதி மக்கள் மீது துல்லியமான தாக்குதல் தொடுக்க இது பயன்படும்.
2015-ல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. வாக்காளர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பினை துறந்த தேர்தல் ஆணையம், ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைத்து வாக்காளரே தன்னுடைய உறுதித் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்றது. ஆதார் விவரங்களோடு பொருந்தாத வாக்காளர் அட்டைகள் இலட்சக்கணக்கில் நீக்கம் செய்யப்பட்டன. வாக்காளர் அட்டையை நீக்குவதற்கு முன்னர் எவ்வித சோதிப்புகளும் நேரிலோ, கடிதங்கள் மூலமோ கூட நடைபெறவில்லை. அனைவரும் தேவையற்றவர்களாக நீக்கப்பட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே அந்த வாக்காளர் நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டது. இப்போது நீதித்துறையின் யோக்கியதைக்கு பாபர் மசூதி முதல் மாரிதாஸ் வரையிலான பல தீர்ப்புகள் சான்றுகளாக உள்ளன. தேர்தல் சட்ட திருத்தத்திற்கு பிறகு இப்படி யாராவது வழக்கு தொடர்ந்தால் நீதி கிடைக்குமா என்பது அந்த ‘பகவானுக்கே வெளிச்சம்’.
000
1935-ல் ஹிட்லரின் ஜெர்மனியில் ஆரியர் அல்லாதோருக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் இலட்சக்கணக்கான யூதர்கள் அகதிகளாக்கப்பட்டு முகாமிற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் பின்னாட்களில், பல சித்திரவதைகளின் ஊடாக படுகொலை செய்யப்பட்டதை கண்டு உலகமே பதறியது. 1938-ல் யூதர்களை கட்டாயமாக பதிவுசெய்ய நிர்பந்திக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் யூதர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவர்களின் வசிப்பிடங்கள், வியாபாரத் தலங்கள் உட்பட அனைத்துமே சூறையாடப்பட்டன. ஜெர்மனியில் யூதர்களை மட்டும்தான் பதிவு செய்தான் ஹிட்லர். மோடியோ மொத்த நாட்டு மக்களையும் பதிவு செய்கிறார்.
ஆயிரக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று குவித்த குஜராத் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். – சங்கப்பரிவாரங்கள் வாக்காளர் பட்டியலை வைத்திருந்தனர். அதைப் பயன்படுத்தியே முசுலீம்களை வீடு தேடிச் சென்று கொள்ளையிட்டார்கள்; கொன்றார்கள்; தாய்மார்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள்.
இனி ஆதார் தகவல்கள் கிடைத்துவிட்டால் முசுலீம்கள் மட்டுமல்ல, கிறித்தவர்கள், தலித்துகள், நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள், மாற்றுக்கட்சியினரின் அனைத்து தகவல்களும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக-வினரின் கைகளில் இருக்கும். நாம் எங்கே வேலைக்குப்போகிறோம்? நம்முடைய குழந்தை எந்த பள்ளியில் படிக்கிறது? நமக்கு என்ன நோய்? யார் மருத்துவர்? ஆகிய அனைத்து தகவல்களும் அவர்கள் கைகளில் இருக்கும். நாம் எங்கேயும் தப்பிக்க முடியாது. பாசிச குண்டர் படை நம்மை பின் தொடர்ந்து வரும்!
படிக்க :
♦ ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !
♦ கையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் ? || தேர்தல் பாடல் || மக்கள் அதிகாரம்
நாடாளுமன்றம் ஒரு பன்றித்தொழுவம் என்றார் ஆசான் லெனின். ‘இல்லை நாடாளுமன்றம் புனிதமானது’ என்றும் ‘அச்சாக்கடையை தூய்மை செய்ய வேண்டும்’ என்றும் பலர் அதிலேயே உழன்று கொண்டேதான் இருக்கின்றனர். அப்படி கூறியவர்கள்தான் குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் திருத்தச் சட்டம், தேர்தல் சட்டங்கள் திருத்தம் ஆகியவை பற்றி கருத்துக்கூற ‘எங்களுக்கு உரிமை கொடுக்கவில்லை’ என்று புலம்புகிறார்கள். “ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையோடு இணைத்தால் தனிப்பட்ட தகவல்களை யார் யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்ற உட்பிரிவை அச்சட்டத்தில் சேருங்கள்” என்று பாசிச மோடி அரசிடம் மன்றாடுகிறார்கள்.
மோடி – அமித்ஷா பாசிச கும்பலின் நோக்கம் 2024-ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதுதான். அதற்கேற்ற தயாரிப்புகளை சட்டங்களாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளாகவும் மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்கள் அனைவரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து எதிர்க்கட்சிகளின் வேர்களை அறுத்து நாடாளுமன்றத்தைக் குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார் மோடி. அதை புலம்பியபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.
ஒன்று பாசிஸ்டுகளின் முன் மண்டியிட வேண்டும் அல்லது பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட வேண்டும். நடுவில் வேறு வழியே இல்லை. நாடாளுமன்ற கூக்குரல் மூலமோ, நீதிமன்ற முறையீடுகள் மூலமோ பாசிஸ்டுகளை பணியவைக்க முடியாது என்ற எதார்த்த உண்மையில் நாம் ஊன்றி நிற்க வேண்டும். பாசிஸ்டுகள் நீடித்ததாக என்றுமே வரலாறு இல்லை. மக்கள் சக்தியின் முன் மண்டியிட்டே தீர வேண்டும் இது காலத்தின் கட்டாயம். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் நடைபெற்ற “டெல்லிச் சலோ” விவசாயிகளின் போராட்டம் அதற்கு சமீபத்திய ஒரு சான்றாகும். ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மற்றும் அம்பானி – அதானி உள்ளிட்ட காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை வீழ்த்த அனைத்து உழைக்கும் மக்களையும் உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டணியை கட்டிப் போராடுவது ஒன்றே தீர்வு!

புதிய ஜனநாயகம்
NEP 2020 : கார்ப்பரேட்மயமாகும் கல்வி | பேரா வீ. அரசு உரை | காணொலி
“நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை 2020 : எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?” என்ற தலைப்பின் கீழ், பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) கடந்த 05-01-2022 அன்று பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் கதிரவன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து “அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கம்” அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உமா மகேஸ்வரி சிறப்புரை ஆற்றினார். அவரை தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறை பேராசிரியர் வீ.அரசு சிறப்புரை ஆற்றினார்.
பேரா. வீ.அரசு தனது உரையில், தனியார்மய கொள்கையின் விளைவாக கல்வி கடைச்சரக்காக மாற்றப்பட்டது. அன்று சாராய ரவுடிகள் கல்வி தந்தைகளாக வலம் வந்தார்கள். ஏழை மாணவர்கள் கல்வி கற்க அரசுப் பள்ளி, கல்லூரிகள் மட்டுமே இருந்தன. காசு உள்ளவனுக்கே தரமான கல்வி என்ற அவலநிலை உருவானது. தனியார் பள்ளி மோகம் பெற்றோர் மனதில் விதைக்கப்பட்டது. அதன் விளைவாக அரசு பள்ளி, கல்லூரிகள் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு, தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்க துவங்கியது.
தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய கல்விக்கொள்கை 2020 கல்வியில் கார்ப்பரேட் மயம், டிஜிட்டல் மயம் ஆகியவற்றை புகுத்தி, நவீன குலக்கல்வியை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது. இந்த கல்விக் கொள்கையால் கல்வி என்பது முற்றிலும் சீரழிக்கப்படுமே தவிர நாட்டின் கல்வித் தரத்தை இது ஒருபோதும் உயர்த்தப்போவது இல்லை. இதுபோன்று, கல்வித் துறையில் நடந்துவரும் அபாயத்தை அம்பலப்படுத்தி உரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் வீ.அரசு உரை காணொலியாக இங்கு பதிவிடப்பட்டிருக்கிறது !
காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!
கொரோனா தொற்று : பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலேயே கொல்லாதே!
10.01.2022
கொரோனா நோய் தொற்றால் பாதிப்புக்குள்ளான பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலேயே கொல்லாதே ! விடுதலை செய் !
பத்திரிகை செய்தி
2017-ம் ஆண்டு, மாவோயிஸ்டுகளோடு தொடர்பில் இருந்தார் என்ற பொய்வழக்கில் ஊபா வழக்கில் கைது செய்யப்பட்டு நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் டெல்லி பல்கலை கழக பேராசிரியர் ஜி.என். சாய்பாபா கொரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்.
90% உடல் ஊனமுற்ற சாய்பாபா ஏற்கனவே ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமாகாத நிலையில் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிறை நிர்வாகம் இப்போதுவரை அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கவில்லை. மேலும், சாய்பாபாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்திற்கும் முறையாக சிறை நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை.
ஜனவரி 10-ம் தேதியன்று பேராசிரியர் சாய்பாபாபாவின் மனைவி வசந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், சாய்பாபாவை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு உடனே கொண்டு சேர்க்குமாறு தெரிவித்துள்ளார். ஏற்கனவே தொடர்ச்சியான முதுகுவலி, இடுப்புவலி காரணமாக இரவு நேரங்களில் தூங்க முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் சாய்பாபா, கொரோனாவில் இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
படிக்க :
♦ ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்
♦ பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
மென்மேலும் அவரது உடல்நிலை மோசமாகி வரும் நிலையில் இதயநோய் உள்ள சாய்பாபா, கொரோனா தொற்றும் சேர்ந்துள்ள நிலையை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று சாய்பாபாவின் மனைவி வசந்தா அச்சம் தெரிவித்துள்ளார். அவரை உடனடியாக சிறையிலிருந்து மருத்துவனையில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஏற்கனவே தனக்கு மருந்து மாத்திரைகள், படிக்க புத்தகங்கள் கொடுக்கப்படாததை கண்டித்து சிறையில் உண்ணாவிரதம் இருந்தார் பேராசிரியர் சாய்பாபா. 85 வயதான ஸ்டேன் சாமியை மோடி அரசு சிறையில் அடைத்து கொன்றதுபோல 90% உடல் ஊனமுற்ற, இதயநோயால் பாதிக்கப்பட்ட முதியவரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருக்கிறது மோடி அரசு.
மோடி அரசின் பாசிசத் திட்டங்களை எதிர்த்து எழுதியும் போராடியும் வந்தவர்களை ஈவிரக்கமற்ற முறையில் பழிவாங்கும் வெறியோடு செயல்பட்டு வருகிறது.
பஞ்சாபிற்கு சென்றபோது தனது பயணம் விவசாயிகள் போராட்டத்தால் தடைபட்டது குறித்து நாட்டுக்கே பேராபத்து வந்ததுபோல் கூச்சல்போடும் அரசு எந்திரம், சிறையில் அடைக்கப்பட்ட போராளிகளின் மனித உரிமை மீறலுக்கு உள்ளாவது குறித்து இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டு சமூக அநீதிகளுக்கு எதிராக போராடியவர்களை சிறையில் தள்ளியது மட்டுமின்றி இரக்கமற்ற முறையில் தனது பாசிச நடவடிக்கையை அமல்படுத்தி வருகிறது.
இதற்கெதிராக ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகளின் தொடர் போராட்டம் நடத்துவதன் மூலமே பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட சமூக சிந்தனையாளர்கள், போராளிகளின் மனித உரிமைகளையும் அவர்களின் உயிர்களையும் காப்பாற்ற முடியும்.
தோழமையுடன்,

தோழர் முத்துக்குமார்,
தலைமைகுழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.
‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !
ஆர்.என். ரவி, நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்தபோது அந்த மாநில அரசு நிர்வாகத்தை சீர்குலைத்து பா.ஜ.க. ஆதரவு கட்சிகளுக்கு ஆள்பிடித்தவர். அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அடியாட்களை நிரப்பியவர். உளவுத்துறை அதிகாரியான அவர் நாகா போராளிக் குழுக்களிடம் நெருங்கி, அவர்களை சீரழித்து போர் நிறுத்த அறிவிப்பை ஏற்படுத்தியவர். நாகாலாந்திலிருந்து ஆளுநர் ரவி வெளியேறிய நாளை மக்கள் வெடிவைத்துக் கொண்டாடினர். ரவியின் பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சியினை பத்திரிகைகள் புறக்கணித்தன. இப்படிப்பட்ட இழிபுகழ் வாய்ந்தவரும் பாசிஸ்டுகளின் கையாளுமான ஆர்.என். ரவி, தமிழகத்தில் தான் பதவியேற்றது தொடங்கி இன்றுவரை தனக்கு கொடுக்கப்பட்ட கையாள் வேலையை கனகச்சிதமாக அமல்படுத்தி வருகிறார்.
000
செப்டம்பர் 21-ம் தேதி ஆளுநர் ரவி, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் நேரில் வரவழைத்து தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்றப் போராட்டங்கள் பற்றியும் முந்தைய ஆளுநர் புரோகித்துக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் பற்றியும் விசாரித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆளுநர், அரசு சம்பந்தமாக ஏதேனும் தகவல்பெற வேண்டுமானால், தலைமைச் செயலாளரை வரவழைத்து பேசுவது வழக்கம். ஆனால், புதிய ஆளுநர் வழக்கத்துக்கு மாறாக போலீசு அதிகாரிகளை அழைத்து பேசினார். கடந்த எடப்பாடி ஆட்சியில், பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கம்பு சுழற்றிய தி.மு.க. இதைப்பற்றி வாயே திறக்கவில்லை.
படிக்க :
♦ புதிய ஜனநாயகம் ஜனவரி – 2022 அச்சு இதழ் !
♦ ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
தமிழக ஆளுநர் கேட்கும்போது துறைசார்ந்த விவரங்களை வழங்கத் தயாராக இருக்க வேண்டும் என அரசு செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இது ‘வழக்கமான நடைமுறைதான்’ என்று தலைமைச் செயலர் இறையன்பு பூசி மெழுகினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 167-இல், ஆளுநர் சில விவரங்களை மாநில அரசிடம் கேட்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் கேட்கும் விவரங்களை அளிக்க வேண்டிய பொறுப்பு அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்குத்தான் உள்ளது. நேரடியாக அரசு செயலாளர்களை ஆளுநர் அழைத்துப் பேசுவது மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவே பொருள்படும். இதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. ஆளுநரின் அடுத்தடுத்த செயல்பாடுகள் தி.மு.க. கூட்டணிக் கட்சியினரிடம் கூட புலம்பலையும் ஆத்திரத்தையும் உருவாக்கியுள்ளது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “நேரடியாக அதிகாரிகளை சந்திப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதாக அமையும்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் தி.மு.க. கமுக்கமாக இருக்கிறது.
000
கோவையில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவி, அப்பள்ளி ஆசிரியரின் பாலியல் ரீதியான சுரண்டலால் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான பள்ளி ஆசிரியர் மற்றும் முதல்வரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடினர். இறந்துபோன மாணவியின் உடலை வாங்கச் சொல்லி பெற்றோர்களை மிரட்டிய போலீசு, இன்னொரு பக்கம் பள்ளியின் முதல்வரை கைதுசெய்யாமல் தப்பிச் செல்ல கால அவகாசம் ஏற்படுத்திக் கொடுத்தது. பின்னர் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை வேறு வழியின்றி கைது செய்து சில நாட்களிலேயே விடுதலையும் செய்துள்ளது போலீசு. இதற்கு எதிராகப் போராடிய மக்கள்மீது வழக்கு தொடுத்தது. மேலும், இப்போராட்டத்தை சீர்குலைக்க வந்த இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்துக்கு கார் கதவை திறந்துவிட்டு குடை பிடித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் இலங்கை இராணுவத்தினரால் கடலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி மீது இரு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால் பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு எவ்வித இடையூறுமின்றி இருந்துள்ளனர். “இப்போது நிலைமைகளை பார்க்கும்போது தி.மு.க. அரசை பெருவாரியாக மவுனம் காத்துவருகிறது.
மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும்போது அது குறித்து கேள்வி எழுப்புவதுதான் மாநில சுயாட்சி. ஆனால், அதில் தி.மு.க. கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. தமிழ்நாடு போலீசுத்துறை தமிழ்நாட்டு அரசின் கையில் இல்லை. அது நேரடியாக ஒன்றிய அரசின் கையிலோ அல்லது அதற்கு சார்பானவர்களின் கையிலோதான் இயங்கிக் கொண்டிருக்கிறது” என்று வெளிப்படையாகவே போட்டுடைத்தார் திருமுருகன் காந்தி.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை கருப்பு தினமாகக் கடைபிடிக்கும் முசுலீம் அமைப்புகளுக்கு போலீசால் இம்முறை கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றுவதற்கு போலீசுத்துறை தடை விதித்ததுடன், அப்போது ஆதிக்க சாதியினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளது. பின்னர் அதை கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்கு, “ஆட்சிதான் மாறியது காட்சிகள் மாறவில்லை, தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும், அ.தி.மு.க. மனநிலையிலேயே போலீசார் நடந்து கொள்கின்றனர்” என திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடியதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விமர்சித்து பேசிய அவரும், “ஆட்சி மாறியது ஆனால் காட்சிகள் மாறவில்லை. ஆட்சிக்கு தி.மு.க. வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது போலவே நிலைமை தொடர்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீதே வழக்கு போடுகிற போலீசாக தமிழக போலீஸ் உள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஒன்றிய இணையமைச்சரின் மகனால் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மோடி அரசுக்கு எதிராக தமிழகம் முழுக்க விவசாயிகள் சங்கங்கள் உட்பட பல்வேறு இயக்கங்கள் போராடினார்கள். மயிலாடுதுறையில் மோடியின் உருவ பொம்மையை எரித்தபோது, “மோடி உருவ பொம்மையை எரித்தால் பதிலுக்கு நாங்கள் லெனின் உருவ பொம்மையை எரிப்போம்” என்று தகராறு செய்த பா.ஜ.க.வினர் கைது செய்யப்படவில்லை. அதேபோல், தஞ்சையிலும் விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்ச்சியிலும் பா.ஜ.க.வினர் தகராறு செய்துள்ளனர். அவர்களை மரியாதையாக வழியனுப்பிய போலீசு, போராடும் விவசாயிகளை ஒடுக்கியது.
கல்வித் துறையில் காவிகளின் பிடி மென்மேலும் இறுகிக் கொண்டிருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலகுருசாமியை ஆளுநரின் பரிந்துரையின்படி தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. பாலகுருசாமி நீட், புதிய கல்விக் கொள்கை, நவோதயா பள்ளிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஆவார்.
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக Azadi Ka Amrit Mahotsav என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” எனத் தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு, அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியபோதும் அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறி இந்தி முழக்கத்தை பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க. எம்.பி அன்புமணி, “இது இந்தித் திணிப்புதான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?” என்று வினா எழுப்பியுள்ளார்.
அக்டோபர் மாத இறுதியில் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தைக்கூட்டிய ரவி, “புதிய கல்விக்கொள்கையை உடனே அமுல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். மும்மொழிக் கல்விக் கொள்கையை விமர்சித்த அமைச்சர் பொன்முடிக்கு பதில் அளிக்கும் விதமாக பட்டமளிப்பு நிகழ்ச்சியின் மேடையிலேயே புதிய கல்விக் கொள்கையின் ‘சிறப்பு அம்சங்களை’ எடுத்துக் கூறியுள்ளார். மேலும், “புதிய கல்விக் கொள்கையானது இந்தியாவை சமத்துவமான மற்றும் துடிப்பான அறிவுச் சமூகமாக மாற்றும்” என்று மேடையில் சவாலாக பதிலளித்துள்ளார்.
அனைத்து அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழங்களிலும் குறிப்பாக பெருநகரங்களில் உள்ள கல்வி நிலையங்களில் இடதுசாரி அரசியல் பேசுகின்ற மாணவர்களின் பட்டியலை தயார்செய்து தருமாறு ‘மேலிடத்திலிருந்து’ இரகசிய உத்தரவு வருகிறது. தமிழகத்தில் செயல்படுகின்ற பெரும்பாலான கல்வி நிலையங்களில் பல ஆண்டுகளாக திட்டமிட்டு நெருக்கடிகள் கொடுத்து மாணவர் அமைப்புகள் துடைத்தொழிக்கப்பட்டிருக்கிற நிலைமையில், அமைப்பாய் இல்லாத ஒருசில முன்னணி மாணவர் செயல்பாட்டாளர்களையும் குறிவைத்து ஒடுக்குவதில் கவனத்தை குவித்துள்ளார்கள்.
000
“மத்திய அரசின் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உதவி மற்றும் ஆலோசனை (Aid & Advice) கொடுப்பதற்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறதே ஒழிய, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவுகளை மாற்றவோ அல்லது தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கவோ எந்த அதிகாரமும் கிடையாது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எல்லாவிதமான விதிகளையும் சட்டங்களையும் தகர்த்து, தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சிக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆர்.என். ரவி.
படிக்க :
♦ NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
“மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை பா.ஜ.க. நுழைய முடியாது, ஆர்.எஸ்.எஸ். கனவு நிறைவேறாது” என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாய் ஜம்பம் ஒன்றும் புதிதல்ல, 1999-ம் ஆண்டு பா.ஜ.க.வுடன் திமுக கூட்டு வைத்த நாடாளுமன்றத் தேர்தலில், மேடையிலேயே “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தாலும் சரி, கலைஞர் இருக்கும் வரை தமிழகத்தில் மதவாதம் வராது” என்று பேசினார்கள். அதே கருணாநிதிதான் ஆட்சியை தக்க வைக்கவும் மத்தியில் அமைச்சர் பதவிக்காகவும் குஜராத் இனப்படுகொலை குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ‘சமுதாய அமைப்பு’ என்றார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.விற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். பதவி என்று வந்துவிட்டால் கொள்கையாவது சுரைக்காயாவது!
000
உளவாளியின் வேலையே எதிரி நாட்டில் ஊடுருவி தனது எஜமானர் அரசுக்கான அடித்தளத்தை உருவாக்கி, பின் எதிரி அரசை வீழ்த்துவதே! அதைத்தான் ஆர்.என். ரவி திறம்பட செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இந்த பாசிச படையெடுப்பை ‘தேர்தல்’ அட்டைக் கத்தியில் வீழ்த்த முடியும் என்ற பகற்கனவில் நம்மில் பலர் உள்ளார்கள்.
காவி – கார்ப்பரேட் பாசிச ஆட்சியை நிறுவுவதற்காக ஒரு மறைமுகமான போரை தமிழகத்தின் மீது நடத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பார்ப்பன பாசிச கும்பல். அக்கும்பலின் உளவுப்படைத் தளபதியான ஆர்.என். ரவி, தமிழக அரசின் அனைத்து விழுமியங்களையும் காலில் போட்டு மிதித்துக்கொண்டும் தங்களுக்கான ஐந்தாம் படையை உருவாக்கிக்கொண்டும் வருகிறார்.
எனவே, ‘பா.ஜ.க.வை தி.மு.க. பார்த்துக்கொள்ளும்’, ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதன் மூலம் பாசிசத்தை தடுத்துவிடலாம்’ என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போக்கை தமிழக அறிவுத் துறையினரும் ஜனநாயக சக்திகளும் விட்டொழிக்க வேண்டும். பார்ப்பன பாசிஸ்டுகளை களத்தில் வீழ்த்தும் போரில்தான் ஆர்.என் ரவியைக் கூட வீட்டுக்கு அனுப்ப முடியும்.

மருது
ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்
07.01.2022
ஆன்லைன் சூதாட்டம் :
கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்
பத்திரிகை செய்தி
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த திருவான்மியூர் இரயில்வே நிலையத்தில் டிக்கெட் விற்பனையாளராக இருக்கும் டீக்காரம் என்ற ஊழியர் பணிபுரியும் இடத்தில் பணத்தை திருடி விட்டு கொள்ளை போனதாக நடித்து மனைவியுடன் சிறைக்கு சென்றுள்ளார்.
அவருடைய குழந்தைகள் மூவரும் தற்போது பரிதாப நிலையில் நிற்கின்றனர்.
தனியார் வங்கியில் வருடம் ரூ.38 இலட்சம் சம்பாதிக்கக் கூடிய ஒருவர் ரூ.75 இலட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மனைவிக்கு விஷயம் தெரிந்தவுடன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார்.
படிக்க :
♦ பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
♦ புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைபேசியிலும் தொலைக்காட்சிகளிலும் ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் சம்பாதிக்க வைப்பது. அவர்கள் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான பிறகு பணத்தை இழந்தாலும் பரவாயில்லை என்று விளையாடும் அளவிற்கு அடிமைகளாக தள்ளப்படுகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனதால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சட்டம் பிறப்பித்து அதன்மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டது. அதற்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. தனிமனித உரிமை என இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்படுகின்ற அடிப்படை உரிமையை, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் பறித்துள்ளதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து, அந்த தடைச் சட்டத்தை ரத்து செய்தது.
உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட மேற்கண்ட தனிமனித உரிமை, மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்களுக்கு ஒருபோதும் துணைக்கு வருவதில்லை. ஆக இந்த ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் ஏகாதிபத்திய நுகர்வு பண்பாடு, அரசு, நீதித்துறை ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதே.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு உடனே கொண்டு வரவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மனிதனை அடிமையாக்கி தன்னையே விற்பனைப் பொருளாக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டி உழைக்கும் மக்களின் பண்பாட்டை மக்களிடம் கொண்டு செல்வதில் முன்னெப்போதையும் விட தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.
தோழமையுடன்,

தோழர் அமிர்தா,
மாநில செயற்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
99623 66321.
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
புல்லிபாய் என்ற வலைத்தள செயலியின் மூலமாக முசுலீம் சமூகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக அந்தஸ்தில் உள்ள பெண்களையும் இணையத்தில் ஏலம் விட்டுள்ளனர் சங்க பரிவாரக் கும்பல்கள்.
கடந்த ஆண்டு ஏற்கெனவே சுல்லி கேர்ள்ஸ் என்ற பெயரில் இதே போன்ற செயலியை உருவாக்கி முசுலீம் சமூகப் பெண்களை இழிவுபடுத்தினர். அதனைத் தொடர்ந்து அதன் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், மற்றொரு பெயரில் அதே வகையிலான செயல்பாட்டைத் துவங்கியிருக்கிறது சங்கி கும்பல்.
கடந்த ஆண்டே இவ்விவகாரம் பெரிதாகப் பேசப்பட்ட போது, எவ்வித கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் உத்தரப் பிரதேச போலீசு இழுத்தடித்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது. இந்த ஆண்டில் புல்லி பாய் என்ற இந்த செயலி குறித்த புகார், பாஜக ஆளாத மகாராஷ்டிர மாநிலப் போலீசில் பதிவு செய்யப்பட்டதால், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, இச்செயலியை உருவாக்கிய நபர்கள் மற்றும் பகிர்ந்த நபர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புல்லிபாய் செயலியில் 16 வயது சிறுமி முதல் சங்க பரிவாரத்துக்கு எதிராகப் பேசிவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த 67 வயதான சமூகச் செயற்பாட்டாளர் வரை அனைத்து முசுலீம் பெண்களையும் ஆபாசமாகச் சித்தரித்து அவர்களை ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ். – பாஜக -வின் இந்துராஷ்டிரக் கனவை சாதிப்பதற்கான முசுலீம் வெறுப்பு அரசியலை கீழ்மட்டத்தில் மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கத்துடன் தான் சுல்லி கேர்ள்ஸ், புல்லிபாய் போன்ற செயலிகளை சங்க பரிவாரக் கும்பல்கள் இயக்கிவருகின்றன, என்பதை விரிவாகப் பேசுகிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்திமுருகன்.
அனைவரும் பாருங்கள் ! பகிருங்கள் !
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
07.01.2022
மீண்டும் ஊரடங்கு; மூடு டாஸ்மாக்கை! பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு நடக்கும் வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வாரத்தில் நான்கு நாட்கள் கோயில்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கெனவே ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் குறைந்து போயுள்ளதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள இந்தச் சூழலில் பள்ளிகள் மூடப்படுவது என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். மீண்டும் ஷிப்ட் முறையில் பள்ளிகளை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா சுனாமியாய் பரவி வருவதால் பொது இடங்களில் தேவையின்றி கூடக்கூடாது என்று விளம்பரம் செய்து வரும் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக்கை மூடுவது பற்றி வாயே திறக்காமல் இருப்பது மிகப்பெரிய அநியாயம் ஆகும். கொரோனா பரவல் என்பது உண்மை என்றால் முதலில் மூட வேண்டியது டாஸ்மாக்கைதான். ஆகவே தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இல்லையென்றால் கடந்த ஆட்சியின் போது டாஸ்மாக்கை மூடாத எடப்பாடி அரசின் மீது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வைத்த விமர்சனங்களே இந்த ஆட்சிக்கும் பொருந்தும்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் மூடப்படாது. மக்கள் போராட்டங்களே டாஸ்மாக்கை மூடும் என்பதே மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.
தோழமையுடன்
தோழர் சி வெற்றிவேல் செழியன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2022 || மின்னிதழ்
அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
ஜனவரி-2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜி−பே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜி−பே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்−ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்−அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ. 20
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
000
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
-
தலையங்கம்: ‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021: இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்
-
கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்துவரும் இந்துராஷ்டிர பேரபாயம்! – பாகம்:01
-
குழந்தைத் திருமண தடுப்பு (திருத்த) மசோதா 2021 : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின் ஒளிந்திருக்கும் பாசிச நோக்கம் !
-
பாசிச படையெடுப்பின் கைதேர்ந்த உளவாளி ஆர்.என்.ரவி !
-
உலக மனித உரிமைகள் தினம்: பாசிஸ்டு மோடியைக் கண்டித்து உலகெங்கிலும் எழுந்த போராட்டங்கள் !
-
ஹரித்துவார் மாநாட்டின் அறைகூவல்: எச்சரிக்கை ! இந்துராஷ்டிரம் நிறுவப்படும் காலம் நெருங்குகிறது.
-
அமெரிக்காவின் மேலாதிக்க வெறியால் பட்டினியில் மடியும் ஆப்கான் மக்கள்
-
நாகாலாந்தில் 15 தொழிலாளர்கள் படுகொலை: இராணுவ ஒடுக்குமுறையில் நிலைநாட்டப்படும் ‘இந்திய ஒற்றுமை’
-
ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடும் அமெரிக்காவின் நாட்டாண்மைப் பதவியும் !
வாங்கிப் படியுங்கள் !!

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !
“நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை – 2020 ! எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?” என்ற தலைப்பின் கீழ், பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) கடந்த 05-01-2022 அன்று பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் கதிரவன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து “அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கம்” அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உமா மகேஸ்வரி சிறப்புரை ஆற்றினார்.
ஆசிரியர் உமா மகேஷ்வரி, தனது உரையில் இந்தியா முழுவதும் மோடி அரசு ஆட்சியில் அமர்ந்த பின்னர் படிப்படியாக கல்வி காவிமயப்படுத்தப் பட்டதை அம்பலப்படுத்திப் பேசினார். மேலும், தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதையும், அரசுப் பள்ளிக் கூடங்கள் பராமரிப்பின்றி படிப்படியாக மூடப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டி உரையாற்றினார்.
ஆசிரியர் உமா மகேஷ்வரியின் உரை காணொலியாக இங்கு பதிவிடப்பட்டிருக்கிறது !
பாருங்கள் ! பகிருங்கள் !!
நாகாலாந்து : ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தூக்கியெறியப் போராடுவோம்!
தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற வெற்றுப் பூச்சாண்டியை அம்பலப்படுத்துவோம் !
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தூக்கியெறியப் போராடுவோம் !
நாகாலாந்தில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்ப பெற வேண்டும் என்று அம்மாநில மக்களும் அங்குள்ள அமைப்புகளும் பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், நாகாலாந்து மாநிலம் அச்சுறுத்தல் நிறைந்ததாக (disturbed area) உள்ளது என்று காரணம் காட்டி அச்சட்டத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது ஒன்றிய அரசு.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) அமலில் இருக்கும் காஷ்மீர், நாகாலாந்து உள்ளிட்ட 9 மாநிலங்களில் இராணுவத்துக்கு எல்லையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவம் நினைத்தால் மக்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் சோதனை என்ற பெயரில் அத்துமீறலாம். இராணுவம் செய்யும் கொலை, பாலியல் வெறியாட்டங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நீதிமன்ற விசாரணையோ நடவடிக்கையோ கூடக் கிடையாது. இராணுவ நீதிமன்றங்களே இவற்றை விசாரிக்கும்.
சுருங்கக் கூறின் இம்மாநிலங்கள் அறிவிக்கப்படாத ஒரு இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளன. இத்தகைய வானளாவிய அதிகாரங்களை கையில் வைத்துகொண்டு அப்பகுதி மக்களிடம் எல்லையற்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவதோடு, எந்தக் காரணமுமின்றி அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது இந்திய இராணுவம்.
சமீபத்தில் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் சுரங்க தொழிலுக்குச் சென்று வீடு திரும்பிய 6 தொழிலாளர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது இராணுவம். அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த இச்சம்பவம் குறித்து மக்களவையில் பேசிய அமித்ஷா, இராணுவத்தினர், தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என தவறுதலாக அடையாளம் கண்டுகொண்டு சுட்டுவிட்டதாகவும், அச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் தன் ஆழ்ந்த ‘இரங்கலை’ தெரிவித்தார். தினசரி அங்குள்ள மக்கள் வேலைக்குச் சென்று திரும்பும் மக்களின் நடைமுறைக்கும், பயங்கரவாதிகளின் நடைமுறைக்கும் ‘வித்தியாசம் தெரியாமல்’ இவர்கள் சுட்டுவிட்டார்களாம், அதற்காக வருந்துகிறார்களாம். மோடி-ஷா கும்பலால் கூறப்படும் இப்பச்சைப் பொய்யை எவ்விதக் கூச்சமுமின்றி இந்தியாவின் எல்லா ஊடகங்களும் ஒளிபரப்பின.
படிக்க :
♦ AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
♦ எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம்!
உண்மையில், 6 தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற பின் அவர்களை தூக்கி வண்டியில் போட்டு, அவர்களுக்கு கிளர்ச்சியாளர்களின் (பயங்கரவாதிகளின்) உடையை அணிவித்து அவர்களின் கைகளில் ஆயுதங்களைத் திணித்து அவர்களை பயங்கரவாதிகளாகவே சித்தரிக்க முயற்சித்திருக்கிறது, இராணுவம். ஆகவே, இராணுவத்தினர் தவறாகச் சுடவில்லை. ஒரு திட்டத்துடன் தான் வந்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.
மக்கள் வருவதற்குள் கொல்லப்பட்ட 6 பேரையும் தாம் வந்த வண்டியில் தூக்கிப் போட்டு, அந்தப் பிணங்களின் மீது தார்ப்பாயும் போர்த்தப்பட்டு, அதன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு வண்டி கிளம்பியது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த மக்கள் இராணுவ வாகனத்தை மறித்துப் பார்த்ததில் இவ்வுண்மை தெரியவந்துள்ளது. தங்கள் உறவினர்களைக் கொன்று அதன்மேல் அமர்ந்ததைப் பார்த்து ஆத்திரமுற்ற மக்கள் இராணுவத்தின் இப்பச்சைப் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதனைப் பொறுத்துகொள்ள முடியாத இராணுவமோ நியாயம் கேட்டுப் போரடிய மக்களின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மேலும் 8 பேர் கொல்லபட்டனர். கொடூரமான மோன் மாவட்ட படுகொலை சம்பவம் நிகழ்ந்த பின்னர், நாடே முப்படைத் தளபதி பிபின்ராவத் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் ‘தேசபக்தி’ வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.
2021 டிசம்பர் 21-ம் தேதியன்று தினமணி நாளிதழ், இச்சம்பவத்தை பற்றி விவரிக்கும்போது, தீவிரவாதிகள் என்று நினைத்தே உழைக்கும் மக்கள் மீது இராணுவத்தினர் ‘தவறுதலாக’ துப்பாக்கிச்சூடு நிகழ்த்திவிட்டதாகவும், அதில் உழைக்கும் மக்கள் 6 பேர் ‘உயிரிழந்தனர்’ என்றும் வன்முறையில் இராணுவ வீரர் ஒருவர் ‘கொல்லப்பட்டார்’ என்றும் எழுதியிருகின்றது. ஒரே சம்பவத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை ‘உயிரிழந்தனர்’ என்றும் மக்கள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கியபோது பலியான இராணுவ வீரரை ‘கொல்லப்பட்டார்’ என்றும் எழுதிய தினமணியின் ஊடக ‘அறத்தை’ நாம் என்னவென்று சொல்வது? ‘நடுநிலை நாயகர்களாக’ தங்களைக் காட்டிக்கொள்ளும் பத்திரிகைகளின் இலட்சணம் இதுதான்.
நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உழைக்கும் மக்கள் இராணுவத்தால் கொல்லபடுவது இது முதன்முறையல்ல. 1947-க்குப் பின்பு வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவோடு அடக்கி ஒடுக்கி இணைக்கபட்டதில் இருந்து அம்மாநிலங்களில் துப்பாக்கிச்சூடு சத்தமும் ஓலக்குரல்களும் கேட்ட வண்ணமே உள்ளது. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் அமலாக்கப்பட்டு, அப்பாவி உழைக்கும் மக்களைக் கொன்று குவிக்கும் இக்கொடிய சட்டத்தை (AFSPA) திரும்பப்பெற பல ஆண்டுகளாக அம்மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மோன் மாவட்ட படுகொலை சம்பவத்திற்கு பிறகு நாகாலாந்தில் இக்குரல் வலுத்து வந்தது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே அவசர அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை இரத்து செய்ய ஒன்றிய அரசிடம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இவ்வாறு முன்பைக் காட்டிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ள சூழலில் அதை இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருப்பது நாகாலாந்து மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவிற்கு கிழக்கு நாகாலாந்து மக்கள் கூட்டமைப்பு, சர்வதேச நாகா கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாகா பழங்குடியினர் குழுக்களில் ஒன்றான ஹோஹோ வெளியிட்ட அறிக்கையில், “நாகா மக்களின் விருப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அரசின் முடிவை நாகா மக்கள் ஏற்கமாட்டார்கள். மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவும்போது ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமென்ன? மாநிலத்தில் இராணுவத்தினரே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Security Forces gunned down 13 civilians in an "ambush" at #Oting,
in #Mon district #Nagaland 'mistaking them to be militants'.
Meanwhile,6 Naga tribes under ENPO has decided to withdraw from the ongoing #HornbillFestival2021 in protest against the killings of civilians by SF pic.twitter.com/q90dCaxJ7r— miZO zEITGEIST (@mizozeitgeist) December 5, 2021
பாசிச பா.ஜ.க. அரசு ஒவ்வொரு மாநிலங்களிலும் ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என்று காரணம் காட்டி அவற்றை இராணுவ சர்வாதிகாரத்தின் பிடியில் கொண்டுவரும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறது. பஞ்சாப்பிலும் அசாமிலும் தற்போது எல்லைப் பாதுகப்புப் படையின் (BSF) அதிகார வரம்பை 15 கி.மீட்டரில் இருந்து 50 கி.மீட்டராக நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது நாகாலாந்தில் சட்டத்தை நீட்டித்ததற்கும் ‘பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற அதே காரணத்தைத்தான் கூறியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத சம்பவங்கள் வளர்ந்து வருவதைப் போலவும் அதன் மூலம் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதைப் போலவும் ஊடகங்கள் மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காகவே அவற்றை அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளாக (disturbed area) அறிவிப்பதாகவும், அங்கெல்லாம் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டிப்பதாகவும் ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இவற்றில் கடுகளவும் உண்மையில்லை என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA) வெளியிட்டுள்ள தகவல்களில் இருந்தே நாம் அம்பலப்படுத்த முடியும்.
படிக்க :
♦ சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
♦ சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இச்சட்டத்தை நீட்டிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அவ்வாறு நீட்டிப்பதாயின் அதற்கான காரணங்களை வெளியிட வேண்டும் என்பது விதி. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ‘கிளர்ச்சி சார்ந்த சம்பவங்களின்’ (Insurgency related incidents) எண்ணிக்கைகளையும் காரணங்களையும் குறிப்பிட்டு அதற்காக இச்சட்டத்தை நீட்டிப்பதாக ‘நியாயவாதம்’ (Justification) கூறிவந்த ஒன்றிய அரசோ, 2018 முதல் இப்போது வரை எவ்வித நியாயவாதமும் இல்லாமல் இந்த நீட்டிப்பைச் செய்து வருகிறது.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படியே, வடகிழக்கு மாநிலங்களில் 1999-இல் 1,743-ஆக இருந்த கிளர்ச்சி சார்ந்த சம்பவங்கள் ஆகஸ்டு 2021-இல் வெறும் 135-ஆகக் குறைந்துள்ளது. அசாமில் இச்சட்டத்தை நீட்டிப்பதற்காக செப்டம்பர் 10-ம் தேதி அசாம் அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் “அந்நிய நாட்டின் புலனாய்வு நிறுவனங்களால் தீய திட்டம் தீட்டப்பட்டுள்ளது” என்றும் பங்களாதேசும் மியான்மரும் சீனாவும் பூடானும் அதைச் சூழ்ந்திருப்பதாலும் “HMB, JMB, HM போன்ற இசுலாமிய பயங்கரவாதக் குழுக்களால் அசாமுக்கு ஆபத்து உள்ளது” என்றும் இச்சட்டம் நீட்டிக்கப்படுவதற்கான காரனங்கள் கூறப்பட்டுள்ளன.
ஆனால், அசாமில் 2000-இல் 536-ஆக இருந்த இச்சம்பவங்கள் 2020-இல் வெறும் 15-ஆகவும் 2021-இல் வெறும் 17-ஆகவும் குறைந்துள்ளது என்பதுதான் ஒன்றிய உள்துறை அமைச்சகமே வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரமாகும். இதேபோலத்தான் மணிப்பூரும் ‘அச்சுறுத்தல் நிறந்த பகுதியாக’ உள்ளது என்று கூறி இச்சட்டத்தை நீட்டிப்பதற்கான அறிவிப்பை டிசம்பர் 8-ம் தேதி வெளியிட்டுள்ளது மணிப்பூர் அரசு. ஆனால் 2008-இல் 740-ஆக இருந்து வந்த வன்முறைகள் 2021-இல் வெறும் 72-ஆகக் குறைந்துள்ளன. (ஆங்கில ஹிந்து நாளிதழ் 02.01.2022, பக்கம் 19)
பாசிஸ்டுகளின் புகலிடம் தேசபக்தி என்பார்கள். ‘தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்பது பாசிஸ்டுகள் காட்டும் பூச்சாண்டி என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. எனவே ‘தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற இப்பூச்சாண்டி காட்டி, அமுலாக்கப்படும் பாசிச சட்டங்களையும் இராணுவ சர்வாதிகாரத்தையும் அம்பலப்படுத்தி தோலுரித்துக் காட்டுவோம். இத்தகைய கொடிய சட்டங்களைத் தூக்கியெறிய வடகிழக்கு மாநில, காஷ்மீர் மக்களோடு கரம் கோர்த்துப் போராடுவோம்.

துலிபா
சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா.
இந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாள் (ஜனவரி 3) இன்று. சமீபகாலங்களில் தான் அவரை நம்மில் பலருக்கும் தெரியவந்திருக்கிறது. மிகச் சமீபகாலங்களில் தான் அவரை பலரும் நினைவுகூருகிறார்கள்.
‘சாதி நல்லது’ என்றும் ‘சாதி அப்படியே தொடரவேண்டும்’ என்றும் சொன்ன இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் சாவித்ரிபாயை இத்தனை ஆண்டுகளாக நம்மில் பலருக்கும் தெரியாமலேயே நம் முன்னோர்கள் வைத்திருந்திருக்கிறார்களே, ‘அது ஏன்?’ என்று யோசித்துப் பார்த்தால் அவர் மறைக்கப்பட்டதற்கான காரணம் நமக்குப் புலப்படும்.
சாவித்ரிபாய் ஒரு பெண் என்பதால் தான் அவரது வரலாற்றை மறைத்தார்களா? என்று கேட்டால், “ஆம் அதுவும் ஒரு காரணம் தான். ஆனால் அது மட்டுமே ஒரேமுக்கியமான காரணமல்ல”.
படிக்க :
♦ பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !
♦ நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்கமுடியும் என்கிற பார்ப்பனிய ஒடுக்குமுறையினால், வேறு எந்த சாதியினரும் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பள்ளிகள் உருவாவதற்கு முன்னர் இருந்த குருக்குலங்களிலும் கூட பார்ப்பனர் அல்லாத எவருமே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதிலும், பார்ப்பன ஆண்கள் மட்டுமே கல்வி கற்கிற உரிமையினைப் பெற்றிருந்தார்கள்.
இப்படியான சூழலில் தான் சாவித்ரிபாய் புலேவைத் திருமணம் செய்திருந்த ஜோதிராவ் புலே, தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுத்தார். அதுகுறித்து கேள்விப்பட்டதும், பார்ப்பனர்கள் தங்களது படைசூழ ஜோதிராவ் புலேவின் வீட்டுவாசலில் வந்து நின்று, ஜோதிராவ் புலேவின் அப்பாவிடம் சண்டையிட்டு, ஜோதிராவ் புலேவையும் அவரது மனைவியான சாவித்ரிபாய் புலேவையும் வீட்டைவிட்டே விரட்டவைத்தனர். அதாவது, சொந்த மகனையும் மருமகளையுமே வீட்டைவிட்டு துரத்தும் அளவிற்கு ஜோதிராவ் புலேவின் அப்பாவிற்கு பார்ப்பனர்கள் நெருக்கடி கொடுத்தனர். எதற்காக? பார்ப்பனர்கள் அல்லாத ஒரு பெண் படிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக.
இந்த ஒரு புள்ளி தான் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையை மாற்றியது என்று சொல்லலாம். இதுதான் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அது கொடுத்த கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் தான் சாணியைக் கரைத்து ஊற்றியபோதிலும், சேரை வாரி இறைத்தபோதிலும், மேலும் பல கொடூரமான தாக்குகள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.
இந்த உண்மைகள் எவருக்குமே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் சாவித்ரிபாய் புலேவின் வரலாற்றை இத்தனை ஆண்டுகளாக சொல்லிவிடாமல் மறைத்தும், பள்ளிப்பாடத்திட்டத்தில் இடம்பெறாமல் தடுத்தும் வருகிறார்கள் சாதி மேலாதிக்கவாதிகள்…
இன்றைக்கு எல்லா சாதியைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் ஒன்றாக இணைந்து ஒரே பள்ளியில் படிக்கமுடிகிறதென்றால், அது தானாக வந்ததில்லை. பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராக சாவித்ரிபாய் புலே போன்ற எண்ணற்ற மறைக்கப்பட்டவர்களின் சாகசகங்களாலும் கடும் போராட்ட வாழ்க்கையினாலும் தான் சாத்தியமாகி இருக்கிறது.
இதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்… சாவித்ரிபாய் புலேவைப் பற்றி எங்கு பேசினாலும், இதையும் இணைத்தே தான் பேசவேண்டும்…
சாவித்ரிபாய் புலே குறித்து பேசுகையில், நான்கு முக்கியமான கோரிக்கைகளை நாம் தொடர்ந்து வைக்க வேண்டும்.
1. சாவித்ரிபாய் புலே குறித்து 107 எப்பிசோடுகளைக் கொண்ட தொடர் நாடகத்தை இந்தியில் தூர்தர்சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதனை அப்படியே யூட்யூபிலும் கூட தூர்தர்சன் முழுவதுமாக வெளியிட்டிருக்கிறது. அந்தத் தொலைக்காட்சித் தொடரை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து, இந்தியாவின் அனைத்து மாநில தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்ப வேண்டும், யூட்யூபிலும் பதிவேற்ற வேண்டும்.
2. சாவித்ரிபாய் துவங்கிய பெண்களுக்கான இந்தியாவின் முதல் பள்ளியின் நிலை இன்று படுமோசமாக இருக்கிறது. அதனை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து, முழுவதுமாக சரிசெய்து, சீரமைத்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும்.
3. இந்தியா முழுக்க உள்ள அனைத்து பாடத்திட்டங்களிலும் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும்.
4. சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாளை “சமத்துவ ஆசிரியர் தினம்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆண்டுதோறும் நாடுமுழுவதிலும் கொண்டாடப்பட வேண்டும்.
முகநூலில் : Chinthan E P
புதிய ஜனநாயகம் ஜனவரி – 2022 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகத்தின் 2022 ஜனவரி மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. தோழர்கள் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்மாதம் புதிதாக சந்தா கொடுத்து வாசகர்களான அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
சந்தா பற்றிய விவரம் :
-
ஓராண்டு சந்தா- ரூ.240
-
இரண்டாண்டு சந்தா- ரூ.480
-
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
அறிவிப்பு
அன்பார்ந்த வாசகத் தோழர்களே!
உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அரசியல் ஆயுதமாய் தொடர்ந்து சமர் செய்து கொண்டிருக்கும் நமது புதிய ஜனநாயகம், தனது பாதையில் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அதில் ஒரு பகுதியாக, நாம் முன்பே அறிவித்தவாறு புதிய ஜனநாயகம் இதழ்களில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இதழாக கொண்டு வந்துள்ளோம்.
கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி, புதிய ஜனநாயகம் சார்பாக இம்மாதம் இரண்டு வெளியீடுகளை கொண்டு வர இருக்கிறோம். அவற்றையும் வாங்கிப் படித்து ஆதரிக்குமாறும் அரசியல் முன்னணியாளர்களிடம் கொண்டு சேர்க்குமாறும் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்
000
வெளியீடுகளின் விலைப்பட்டியல் :
♦ NEW DEMOCRACY (புதிய ஜனநாயகத்தின் ஆங்கில இதழ்)
நன்கொடை : ரூ.25
♦ காவி-கார்ப்பரேட் பாசிசம்: எதிர்கொள்வது எப்படி?
(புதிய ஜனநாயகம் இதழின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு)
விலை: ரூ.80 (மாற்றத்தக்கது)
♦ ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவமே கொரோனா!
(வினவு தளத்தில் வெளியான தொடர் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு)
விலை: ரூ.50 (மாற்றத்தக்கது)
000
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2022 இதழின் அச்சுப் பிரதி, புதிய ஜனநாயகத்தின் ஆங்கில இதழ் (NEW DEMOCRACY), வெளியீடுகள் ஆகியவற்றைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
000
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
-
தலையங்கம்: ‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021: இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்
-
கர்நாடகா, திரிபுரா, அசாம்: பற்றிப் படர்ந்துவரும் இந்துராஷ்டிர பேரபாயம்! – பாகம்:01
-
குழந்தைத் திருமண தடுப்பு (திருத்த) மசோதா 2021: காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின் ஒளிந்திருக்கும் பாசிச நோக்கம்!
-
பாசிச படையெடுப்பின் கைதேர்ந்த உளவாளி ஆர்.என்.ரவி!
-
உலக மனித உரிமைகள் தினம்: பாசிஸ்டு மோடியைக் கண்டித்து உலகெங்கிலும் எழுந்த போராட்டங்கள்!
-
ஹரித்துவார் மாநாட்டின் அறைகூவல்: எச்சரிக்கை! இந்துராஷ்டிரம் நிறுவப்படும் காலம் நெருங்குகிறது.
-
அமெரிக்காவின் மேலாதிக்க வெறியால் பட்டினியில் மடியும் ஆப்கான் மக்கள்!
-
நாகாலாந்தில் 15 தொழிலாளர்கள் படுகொலை: இராணுவ ஒடுக்குமுறையில் நிலைநாட்டப்படும் ‘இந்திய ஒற்றுமை’
-
ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடும் அமெரிக்காவின் நாட்டாண்மைப் பதவியும்!