கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் பாஜக மோடியின் சட்டங்களை முறியடிப்போம் ! விவசாயிகளை காக்க செப்.25 அன்று தமிழக வீதிகளை போராட்டக் களமாக்குவோம் !
பா.ஜ.க மோடி அரசு செப்டம்பர்.17 அன்று மக்களைவையில் விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா {Farmer’s Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020}, விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகளில் விவசாயிகளுக்களுக்கான (அதிகாரமளித்தல் & பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா {Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Bill, 2020}, அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா 2020 {Essential Commodities (Amendment) Bill, 2020} என மூன்று சட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. இவ்வாரத்தில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றி உடனே நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் தீவிரம் காட்டுகின்றது.
இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் என்ன பயிர் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன விலை என்பதை சட்டப்படியே தனியார் கொள்முதல் நிறுவனங்கள் முடிவு செய்யும். விவசாயிகளிடம் அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து விளைப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டியதில்லை. அரிசி, பருப்பு எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களின் மீதான அரசின் விலைக் கண்காணிப்பு மற்றும் கட்டுபாடு நடைமுறையில் விலக்கப்பட்டு, தனியார் நிறுவனங்கள் எந்த அளவிலும் பதுக்கி விலையேற்றி மக்களை கொள்ளையடிக்க வழி செய்யும். அரசு கொள்முதல் நிறுத்தப்படுவதால் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்படும்.
இந்தியாவின் விவசாயம், உணவு உற்பத்தி, விநியோகம் என அனைத்திலும் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களாகிய கார்கில், மாண்சான்டோ, வால்மார்ட், பெப்சி, அய்டிசி மற்றும் இந்திய கார்ப்பரேட்களான ரிலையன்ஸ், நெஸ்லே, பார்லி போன்றவற்றின் ஏகபோக ஆதிக்கத்தின் கீழ் கொண்டு போகும் நோக்கத்தில் இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தத்தில் விவசாயிகளை அவர்களின் நிலங்களோடு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் அக்கிரமமானச் சட்டங்கள் இவை.
விற்பனை சந்தையில் கூட்டு பேர வலிமையற்ற சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், பகாசூர நிறுவனங்களுடன் விலை பேரம் பேசச் சொல்லும் மாபெரும் உரிமைகளை வழங்குவதாக இச்சட்டங்களை போற்றுகிறார்கள் சங்கிகள். தமிழகத்தின் கடைக்கோடி விவசாயியும் காஸ்மீரம் வரை சென்று தான் விளைவித்த பொருட்களை விற்கும் அளப்பெறும் வாய்ப்பினை ‘ஒரே தேசம், ஒரே சந்தை’ என்பதன் மூலம் பெற முடியும் என்கிறார்கள்.
ஆனால் பாஜ.க அரசுக்கு எதிராக பஞ்சாப், அரியானா விவசாயிகள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்தியாவெங்கும் விவசாயிகள் போராட்டம் பரவுகிறது. மக்களின் எதிர்ப்பை கண்டு அஞ்சி பாஜகவின் கூட்டணி கட்சியான அகாலிதளத்தின் சார்பாக மத்திய அமைச்சரைவையில் பதவி வகித்த கவுர் பாதல், இந்த சட்டங்களை கண்டித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவின் அடிமை அதிமுக கட்சியினரோ சட்டங்களை ஆதரித்து வெற்றி பெற செய்ததோடு, அவை விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என கதைவிடுகின்றனர். விவசாயத் துறையில், உணவு பாதுகாப்பில் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு அப்பட்டமாக சேவகமும் செய்கின்றனர்.
மின்சார சட்டத் திருத்தத்தின் மூலமாக மின்சாரத்தை முழுமையான விற்பனைப் பொருளாக மாற்றி விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட போகின்றது. தொழிலாளர் உரிமைகளை பறிக்கின்ற சட்டங்கள் அடுத்து நிறைவேற்றப்பட உள்ளன. சுற்றுச்சூழல் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. தனித்தனி சட்டங்களை எதிர்ப்பதை தாண்டி இவற்றின் மூலமான தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், நாட்டை மறுகாலனியாக்கும் காட் ஒப்பந்தம், பன்னாட்டு விவசாய ஒப்பந்தங்கள், உலக வர்த்தக கழகம் ஆகியவற்றில் இருந்து இந்தியா வெளியேறவும் போராட வேண்டியுள்ளது. கார்ப்பரேட் சுரண்டலுக்கான நடவடிக்கைகளை மூர்க்கமாக செயல்படுத்தும் காவி பாசிச ஆட்சி அதிகாரத்தை வீழ்த்த வேண்டும். உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது என்பார்கள்; ஏழை குடியானவனின் வயிற்றில் அடிக்க சட்டங்கள் போடுகிறார்கள். இனியும் அனுமதிக்கக் கூடாது.
விவசாயிகளுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் வருகிற செப்.25 அன்று நாடு தழுவிய பந்த் நடத்த அனைவருக்கும் அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் பந்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மக்கள் அதிகாரம் இதனை ஆதரிப்பதுடன், செப்டம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்பது என முடிவு செய்துள்ளது. இச்சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வகையில் போராட்டங்கள் நடைபெற, விவசாயிகளும், தமிழக மக்களும் செப்.25 வெள்ளிக்கிழமை அன்று பெருமளவில் வீதிக்கு வந்து போராடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன், வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை
பெரியார் சாதித் தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து போராடினார். கோவில்கள் இருக்கும் தெருவுக்குள் கூட பார்ப்பனரல்லாதவர்கள் போக அனுமதி இல்லாத சூழலில் அனைத்து சாதியினரும் கருவறை வரை செல்ல உரிமை உண்டு எனப் போராடியவர் பெரியார்.
பெரியாரின் 70 ஆண்டுகால சமூக சீர்திருத்தப் பணியின் பலன் தான் இன்று தமிழகம் வட இந்தியா அளவிற்கு மதவெறியிலும், சாதிய ஒடுக்குமுறையிலும் இழிநிலையை அடையவில்லை. பெரியாரின் தொடர்ச்சியாக அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சட்டரீதியாக தீண்டாமையின் பல்வேறு வடிவங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
ஆனால் அப்படி இயற்றப்பட்ட சட்டங்களையும், நடைமுறையில் செயல்படுத்த விடாமல் தடுக்கும் பணியை பார்ப்பனியம் இன்றுவரை செய்து வருகிறது. அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான். பார்ப்பனர் அல்லாதவர்கள் கோவில் கருவறைக்குள் சென்றால் தீட்டுபட்டுவிடும் என அர்ச்சகர் பணியை பிற சாதியினருக்குக் கொடுக்க மறுக்கப்படுவது. பல ஆண்டுகளாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் போராடி வருகின்ற்னர். ஆனாலும் இன்று வரை அவர்களுக்கு எந்தப் பணி நியமனமும் செய்யப்படவில்லை.
பெரியாரின் பாரம்பரியத்தில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுத்தருமா ? வினவுகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார்பாக, பின்வரும் கோரிக்கைகளை இந்தக் காணொலியில் முன்வைக்கிறார்.
பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அதிமுக அரசு அகற்றுமா?
கருவறை தீண்டாமை ஒழிக்கப்படுமா?
தமிழகத்தில் பெரிய கோவில்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் எங்களுக்கு பணிநியமனம் வழங்கு!
தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் சைவ, வைணவ பயிற்சி நிலையங்களை உடனே திற !
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகாவுக்கு உட்பட்ட பாகலூருக்கு அருகிலுள்ளது பெளத்தூர் கிராமம். அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1500 மாணவர்களுக்கு மேல் படிக்க வேண்டிய பள்ளியில் தற்போது சுமார் 700-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
இதற்குக் காரணம், இந்தப் பள்ளியை முறையாக பராமரிக்கப்படாததால் பாழடைந்த கட்டிடம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் இங்கு புதர்கள் மண்டி கிடக்கின்றன. சுற்றுச்சுவர் மிகவும் உயரம் குறைவாக இருப்பதால் மாணவர்கள் சுவர் ஏறி குதித்துச் செல்கின்றனர். கழிப்பறை வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் பாகலூர் சர்க்கிளில் நடைபெற்றது.
1 of 6
17.9.2020 மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அந்த அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரின் தந்தை திரு அரிஸ்பாபு என்பவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தனது கண்டனங்களை பதிவு செய்தார். தோழர் சொன்னப்பா(IYF), திரு ராமசாமி (விவசாயிகள் சங்கம்), தோழர் ஜெயராம் (மக்கள் அதிகாரம்), தோழர் பரசுராமன் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் ராமசாமி (மக்கள் அதிகாரம்) நன்றியுரையாற்றினார்.
“தந்தை பெரியார் அவர்களின் 142-வது பிறந்த நாளை பார்ப்பன இந்து மதவெறி பாசிச எதிர்ப்பு நாளாக கடைபிடிப்போம்!
பன்முகத் தன்மையை அழித்து இந்தி-இந்து-இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் RSS பா.ஜ.க கும்பலை வேரறுப்போம்!
நீட், இந்தி-சமஸ்கிருத திணிப்பு, புதியக் கல்விக் கொள்கை, GST என மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடி, பாசிக கும்பலை வீழ்த்துவோம்!”
என்ற முழக்கத்தை முன் வைத்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக் தொழிலாளர் முன்னணி ஆகிய மூன்று புரட்சிகர அமைப்புகளும் ஒருங்கிணைந்து திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் பிறந்தநாளான 17.09.2020 அன்று காலை 10 மணி அளவில் சோனா மீனா தியேட்டர் அருகே குடும்பங்களுடன் ஒன்று கூடி குழந்தைகளுக்கு பெரியார் அவர்களின் முகமூடி அணிவித்தும், பெரியவர்கள் அனைவரும் செஞ்சட்டைகள் அணிந்து அதில் பெரியார் கூறிய வாசகங்களை ஒட்டி தாரை தப்பட்டையுடன் விண்ணதிர முழக்கமிட்டவாறு 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமை தாங்கினார். இதில் ம.க.இ.க கலைக்குழு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள், மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலைக் கழகம், ஜனநாயக சமூக நலக்கூட்டமைப்பு, மக்கள் உரிமை மீட்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அவற்றை சார்ந்த தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சிலை முன்பாகவே அமர வைத்து அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. இந்த மாட்டுக்கறியை வடநாட்டில் பொது வெளியில் சாப்பிட்டால் அவர்களது உயிர்கள் இந்து மத வெறியர்களால் பறிக்கப்படுகிறது. இங்கு நாம் பிரச்சனைகள் இல்லாமல் பொது வெளியில் சாப்பிடுகிறோம் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார்தான் என தோழர்.ஜீவா அறைகூவல் விடுத்து அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணியை வழங்கினார். ம.க.இ.க கலைக்குழு சார்பாக பெரியாரைப்பற்றி தோழர்.லதா பாடல்களை பாடினார்.
1 of 10
பிறகு கூட்டத்தை கலைக்க வந்த போலீசிடம் தோழர்கள் பெரியார் நமக்கு பெற்று தந்த உரிமைகளைப் பற்றி பேசினர். இன்று பிரதமர் மோடிக்கு பிறந்த நாளை விமர்சையாக பா.ஜ.கவினர் கொண்டாடும் போது மக்களுக்காக அரும்பாடுபட்ட தந்தை பெரியாருக்காக நாங்கள் ஏன் விமர்சையாக பிறந்த நாளை கொண்டாடக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு முதல் நாள் இரவு சுவரொட்டி ஒட்டச் சென்ற சில தோழர்களிடம் தந்தை பெரியாரின் பிறந்த நாள் சுவரொட்டியை ஒட்ட விடாமல் காவல்துறையினர் மொத்தமாக பறிமுதல் செய்ததை கண்டித்து அத்தனை சுவரொட்டியையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், கடுமையாக நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டவாறு பெரியார் சிலை முன்பு தோழர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசு உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். காவல் நிலையம் வந்து புகார் கொடுக்கக் கோரியும், சுவரொட்டியை தந்து விடுவதாகவும் கூறியதை அடுத்து தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டு கோர்ட் அருகே உள்ள செசன்ஸ் போலீசுநிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசு அதிகாரிகள் கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பேரணியாக வந்தது, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது, முழக்கங்கள் இட்டது, இனிப்புகள் வழங்கியது, பெரியாரைப்பற்றி பாடல்கள் பாடியது, மாட்டுக்கறி பிரியாணி வழங்கியது, ஊடகத்தினருக்கு பேட்டி கொடுத்தது, காவல்துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டது என தொடந்து நடந்த இந்நிகழ்வுகளில் தோழர்களின் போராட்டகுணத்தை கண்டு அப்பகுதியில் மக்களிடம் உற்சாகத்தையும் பெரியார் சிலைக்கு மாலை போட வந்த அரசியல் கட்சியினரிடம் வியப்பையும் ஏற்படுத்தியது.
தகவல்: ம.க.இ.க., திருச்சி.
0 | 0 | 0
மதுரை :
தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை யொட்டி, மதுரை மாவட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
“நீட் மற்றும் குலக் கல்வியை திணிக்கும் புதிய தேசிய கல்வி கொள்கை ஆகியவற்றை விரட்டியடிக்க கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த பெரியார் பாதையில் அணிதிரள்வோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மதுரை அவுட் போஸ்ட்டில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கம் எழுப்பினர்.
1 of 4
இந்நிகழ்வில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் சினேகா, பெண்களின் தற்போதைய நிலைமையைப் பற்றியும் கல்வி கார்ப்பரேட்மயமாகுதல் மற்றும் காவி மயமாகுதல் பற்றியும் தற்போதைய பாசிச சூழல் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாதி ஆதிக்க காவி பாசிசத்தை முறியடிக்க சூளுரைத்தனர். இந்த நிகழ்வில் சிறுவர்கள், பெண்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
அண்மையில் யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சுதர்சன் டிவி நியூஸ் என்ற காவி ஆதரவு ஊடகத்தில் ‘பிந்தாஸ் போல்’ என்ற நிகழ்ச்சியில், ‘யு.பி.எஸ். சி ஜிகாத்’ என்ற சதித்திட்டத்தை வெளிக்கொண்டு வரப்போவதாக அறைகூவல் விடுக்கப்பட்டது.
ஆட்சிப் பணி அதிகாரத்தில் ஊடுருவும் பொருட்டு முஸ்லீம்கள் உருவாக்கி செயல்படுத்திக்கொண்டிருக்கும் சதித்திட்டமே ‘யு.பி.எஸ்.சி ஜிகாத்’ என நிறுவுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஏற்கனவே மிக மோசமான முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்துக்கு இழிபுகழ் பெற்றது சுதர்சன் டிவி நியூஸ். ஆட்சி அதிகாரத்தில் உள்ள எஜமானர்களின் காலைப் பிடிப்பதில் யார் அதிக விசுவாசத்துடன் இருக்கிறார் என்ற போட்டியில் அர்னாப் கோஸ்வாமி, ரவிசங்கர் கோஷ்டிக்கு போட்டியாக, சுதர்சன் டிவியின் சுரேஷ் சவான்கே இறங்கியிருக்கிறார். அதன் விளைவாக உருவானதே யு.பி.எஸ்.சி ஜிகாத்.
சுதர்சன் டிவியின் விஷம பிரச்சாரத்தில் முஸ்லீம் போட்டியாளர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதாக கூறப்பட்டு, பொய்யான தரவுகள் பகிரப்பட்டன. 2009-ம் ஆண்டு ஷா ஃபைசல் என்ற காஷ்மீரி இளைஞர் ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்றதிலிருந்து, அதிலிருந்து உந்துதல் பெற்ற முஸ்லீம் இளைஞர்கள் பலர் ஆட்சிப் பணி தேர்வில் அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 35 வரையான எண்ணிக்கையில் ஆட்சிப்பணி தேர்வில் முஸ்லீம்கள் தேர்வு பெற்றனர்.
மக்கள் தொகையில் 30 விழுக்காடு உள்ள முஸ்லீம்கள் ஆட்சிப் பணி அதிகாரிகளாக வெறும் 3 விழுக்காட்டினர் மட்டுமே பணிபுரியும் சூழலில், மிகப் பெரும் சதித்திட்டத்தை கண்டுபிடித்ததாக சுதர்சன் டிவி, இந்த உண்மையான புள்ளி விவரங்களை மறைத்து விஷமப் பிரச்சாரத்தை நான்கு பகுதிகள் வரை ஒளிபரப்பியது. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் முஸ்லீம் யு.பி.எஸ்.பி ஜிகாதிகளை உருவாக்குவதாக, சுதர்சன் டிவி கூவியது. உண்மையில் 2019-ஆம் ஆண்டு ஆட்சிப் பணிக்கு ஜாமியாவில் பயிற்சி பெற்றவர்களில் 16 பேர் முஸ்லீம்கள், 14 பேர் இந்துக்கள். எனவே, இந்த நிகழ்ச்சியின் நோக்கம் முற்றும் முழுதாக முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருந்த காரணத்தால் இந்த அவதூறு நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு எதிரான மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா மற்றும் கே.எம். ஜோசப் நிகழ்ச்சியின் தொனி மற்றும் நோக்கம் குறித்து கடும் கருத்துக்களை வெளியிட்டனர். நிகழ்ச்சியின் டீஸர் ஆகஸ்ட் 27 அன்று வெளியாகி சமூக ஊடகங்களில் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீதிமன்றம் சென்ற விஷம பிரச்சாரம், வழக்கறிஞர்கள், அமர்வு மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோருக்கு இடையில் முன்னும் பின்னுமாக ஊடகங்கள் குறித்த அடிப்படையான கேள்விகள், பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடக நடத்தைகளை கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகியவற்றைத் தொட்டது.
“ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் அரசியலமைப்பு உரிமைகளின் பாதுகாவலரான இந்த நீதிமன்றத்தால் மிகுந்த வெறுப்புடன் பார்க்கப் பட வேண்டும்” என அமர்வு கூறியுள்ளது.
சுரேஷ் சவாங்கே
இந்த நிகழ்ச்சியின் டீசரில், ‘அரசு சேவையில் முஸ்லீம்கள் ஊடுருவுவதற்கான சதித்திட்டத்தை’ இந்த நிகழ்ச்சி வெளியிடும் என சேனலின் தலைவர் சுரேஷ் சாவன்கே தெரிவித்திருந்தார். செப்டம்பர் 11 அன்று, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதித்தது. அதே நாளில், , ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவிடாமல் நிறுத்திய நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் ஒளிபரப்பை நிறுத்த மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்றம் இந்த நிகழ்ச்சியை “வெறித்தனமானது” எனக் கூறியதுடன், ஊடகங்களில் சுய கட்டுப்பாட்டுக்கு சில வழிமுறைகள் இருக்க வேண்டும் என்றது.
“முஸ்லீம்கள் ஆட்சிப் பணியில் ஊடுருவியுள்ளதாகக் கூறும் இந்த நிகழ்ச்சியின் பொருள் எவ்வளவு தெளிவற்றதாக உள்ளது என்பதைப் பாருங்கள், இது யுபிஎஸ்சியின் தேர்வுகளை எந்தவொரு உண்மை அடிப்படையுமின்றி முன் வைக்கிறது?” என அமர்வு கூறியது.
“இத்தகைய நயவஞ்சக குற்றச்சாட்டுகள் யுபிஎஸ்சி தேர்வுகளை கேள்விக்குறிக்கு உள்ளாக்கி உள்ளன. யுபிஎஸ்சி மீது அவமதிப்பு உண்டாக்கப்பட்டுள்ளது. எந்தவொரு உண்மை அடிப்படையுமின்றி இத்தகைய குற்றச்சாட்டுகள், இதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? சுதந்திர சமூகத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளை அனுமதிக்க முடியுமா? ” என அமர்வு கேட்டது.
பாஜக அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா மேல் நீதிமன்றத்தில் பத்திரிகையாளரின் சுதந்திரம் மிக உயர்ந்தது என்றும் எந்தவொரு ஜனநாயகத்திற்கும் “பத்திரிகைகளை கட்டுப்படுத்துவது” பேரழிவு தரும் என்றும் விசம பிரச்சாரத்தை ‘பத்திரிகை சுதந்திரமாக’ நிறுவப் பார்த்தார்.
இதற்கு, நீதிபதி ஜோசப் எந்த சுதந்திரமும் முழுமையானது அல்ல என்று குறிப்பிட்டார்.
சுதர்சன் டிவியில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், இந்த நிகழ்ச்சி ‘தேசிய பாதுகாப்பு குறித்த ஒரு புலன் விசாரணை’ என அமர்வு முன் முழு பொய்யை அவிழ்த்து விட்டார்.
“உங்கள் கட்சிக்காரர் தேசத்திற்கு ஒரு அவதூறு செய்கிறார். மேலும் இந்தியாவை மாறுபட்ட கலாச்சாரத்தின் உருகும் புள்ளியாக அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். உங்கள் கட்சிக்காரர் தனது சுதந்திரத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்” என அமர்வு திவானிடம் கூறியது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அமர்வு “நாங்கள் ஊடகங்களில் ஒருவித தணிக்கை செய்ய பரிந்துரைக்கவில்லை, ஆனால் ஊடகங்களில் ஒருவித சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்” என கூறியது.
“பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் 19-வது பிரிவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அரசுகள் அத்தகைய வழிகாட்டுதல்களை விதிக்கும் என்று நாங்கள் கூறவில்லை” எனக் கூறிய அமர்வு, டிவி சேனல்களின் வருவாய் மாதிரியும் அவற்றின் உரிமையாளர் முறைகளும் இணையதளத்தில் பொது களத்தில் வைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அவதானித்தது.
“ஊடகத்தின் உரிமை குடிமக்கள் சார்பாக மட்டுமே உள்ளது, இது ஊடகங்களின் பிரத்யேக உரிமை அல்ல” எனக் கூறி. “அச்சு ஊடகங்களைவிட மின்னணு ஊடகங்கள் மிகவும் சக்திவாய்ந்ததாகிவிட்டன, மேலும் ஒளிபரப்புக்கு முந்தைய தடைக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை.” என்றது அமர்வு.
விசாரணையின் போது, சில ஊடக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் குற்றவியல் விசாரணையை அமர்வு குறிப்பிட்டது. “ஊடகவியலாளர்கள் செயல்படும்போது, அவர்கள் நியாயமான கருத்துக்கு உரிமை உண்டு. குற்றவியல் விசாரணையைப் பாருங்கள், ஊடகங்கள் பெரும்பாலும் விசாரணையின் ஒரு பகுதியை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன” என அது கூறியது.
சங்கல்ப் – காவி யூ.பி.எஸ்.சி. பயிற்சி மையம்
அமர்வு சுதர்சன் டிவி வழக்கறிஞர் திவானிடம், “உங்கள் கட்சிக்காரரிடமிருந்து ஒருவித கட்டுப்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனூப் ஜி. சவுத்ரி, தில்லி உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் அமைச்சகம் நியாயமான உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றும் கூறினார்.
அமைச்சகம் ஒளிபரப்பை அனுமதித்தது, மறுபக்கத்தை அது கேட்கவில்லை என்றும், ஒளிபரப்பு விதிகளை பின்பற்றுகிறோம் என்று சேனலின் அறிக்கையை எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். ஆகஸ்ட் 28-ம் தேதி, சுதர்சன் டிவியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நிகழ்ச்சி தொடர்பான குறைகளை எழுப்பிய வழக்கறிஞர் ஃபைரோஸ் இக்பால் கான் தாக்கல் செய்த மனு மீது அரசு, இந்திய பத்திரிகை கவுன்சில், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் சுதர்சன் செய்திகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை இந்த மனு எழுப்பியுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த நிகழ்ச்சியின் நான்கு பகுதிகள் ஒளிபரப்பப்பட்ட பின்னர், விழித்துக்கொண்ட நீதிமன்றம் நிகழ்ச்சியின் நோக்கம் “முஸ்லிம்களை இழிவுபடுத்துவதாகும்” என்று முதன்மைக் கருத்தை அவதானித்த பின்னர், “யுபிஎஸ்சி ஜிகாத்” சதித்திட்டத்தை வெளியிடுவதாக உறுதியளித்த “பிந்தாஸ் போல்” நிகழ்ச்சியின் மீதமுள்ள பகுதிகளை ஒளிபரப்புவதை உச்ச நீதிமன்றம் தடுத்துள்ளது.
சிறுபான்மையினர் தங்களுடைய குறைந்தபட்ச உரிமைகளை பெறுவதற்காக கல்விக்கூடங்களையோ, பயிற்சிக்கூடங்களையோ நடத்துவது ‘ஜிகாதி’யாக காவி ஊடகங்கள் விசம பிரச்சாரம் செய்கின்றன. உண்மையில், ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் தங்களுடைய சித்தாந்தவாதிகளை திணிக்கு பணியை திட்டமிட்டே செய்துவருவது இந்துத்துவ காவிகள் என்பது ஆதாரத்துடன் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
த பிரிண்ட் தளத்தில் வெளியான கட்டுரை, 1968 முதல் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய சங்கல்ப் அகாடமியில் இந்த ஆண்டு மட்டும் 759 ஆட்சிப் பணி தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி மையத்தின் ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகர்கள் வரை பங்கேற்று பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் உடனான இணக்கத்தை தன்னுடைய இணைய பக்கத்திலும் காட்டுகிறது இந்த அகாடமி.
உண்மையில், பாசிசத்தை நடைமுறைப்படுத்தும் பணியை ஏற்பதற்காக பயிற்சி அளிக்கப்படும் இந்த யு.பி.எஸ்.சி காவிகள் குறித்து எந்த வெகுஜென ஊடகமும் கேள்வி எழுப்ப முன்வராது. அப்படி வந்தாலும் ஊடக சுதந்திரம் குறித்து மிக விரிவாக பேசிய உச்சநீதிமன்றம் டீசரைக்கூட வெளியிட விட்டிருக்காது.
தந்தை பெரியார் இந்தியாவில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் சட்டப் பாதுகாப்புடனும், சாத்திரப் பாதுகாப்புடனும் நிலைநிறுத்தப்படுகிறது என்று திண்ணமாக எண்ணியதன் விளைவாகவே, சாதியொழிப்பிற்குச் சட்ட மாற்றங்களும், சாத்திர நம்பிக்கை உடைப்பும் தேவை என்று தீவிரக் களப்பணியாற்றினார். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு, சாதிப் படிநிலைகள் ஒழிப்பு கூறப்படவில்லை என்றும், சமூகமாற்றம், சமதர்மம் என்பது சாதிகளை ஒழித்தால் தான் நிகழும் என்றும் கருதிய பெரியார், அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26 ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார்.
அந்தச் சட்டப் பிரிவுகளுக்காக இந்திய அரசியல் சட்டத்தினை எரிக்கவும் செய்தார். தந்தை பெரியார் அவர்கள் 1957-ல் சட்ட எரிப்புப் போராட்டம் அறிவிக்கும்வரை , இந்தியாவில் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது குறித்துச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கடவுள் இல்லை என்று தன் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டங்களும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று நடத்திய போராட்டங்களும் சாதியொழிப்புத் தளத்திலிருந்து நடத்தப்பட்டவை. சாதியப் படிநிலைகள் காக்கப்படும் கருவறைகளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று ஒலித்தது பெரியாரின் குரல்.
இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறையில் நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.
கடந்த 28-2-2007 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் 1000-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள்.
திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில் 500-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.ஆனால்
கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை.
இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது. பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர்.
இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை.
அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு இன்றுவரை பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது.தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது. இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள சாதி – தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தந்தை பெரியார் சொன்னார்.தந்தை பெரியார் வழிவந்த திராவிட இயக்கமாய் தன்னை சொல்லிக் கொள்ளும் எடப்பாடி அரசு தீர்ப்பு வந்தும் நான்கு ஆண்டுகளாய் மவுனம் காக்கிறது.
1 of 2
சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம்” என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. தந்தை பெரியார் பிறந்த நாளிலாவது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோர் தங்கள் நிலைப்பாடுகளை தெரிவிக்க வேண்டும்.உடனே,இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த 203 மாணவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை பணிநியமனம் வழங்க வேண்டும்.
எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ – வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி,தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.
எனவே தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாளில் கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ச்சகர் பள்ளியில் ஆகமம் கற்று, தீட்சை பெற்ற 203 மாணவர்களுக்கும் ஆகமக் கோயில்களில் பணி நியமனம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு உங்களை மன்னிக்காது..
இவண்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
(PEOPLE’S RIGHT PROTECTION CENTRE – TAMILNADU)
வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)
தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை ஒட்டி, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு பெரியாரின் நினைவேந்தினர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், குலக் கல்வி முறை உள்ளிட்ட மனுதர்ம ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான அம்சங்களைக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை தடை செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மக்கள் எழுச்சிகள் நட்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில எழுச்சிகள் ஏகாதிபத்தியங்களால் தீனி போட்டு வளர்க்கப்படும் என்.ஜி.ஓ-க்களால் நடத்தப்பட்டாலும், பல இடங்களில் அரசின் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கு எதிரான மக்கள் எழுச்சிகளாகவே தன்னியல்பாக நடக்கின்றன. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் துவங்கி உலகம் முழுவதும் பற்றியெறிந்த போராட்டங்கள் தான்.
ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தன்னியல்பாக எழுச்சி கொள்ளும் மக்களை தற்கால அரசியல், சமூக அமைப்புமுறை முழுவதற்கும் தமது நலன்களுக்கும் இடையே சமரசப்படுத்த முடியாத பகைமை இருப்பதை உணரச் செய்வது என்பது ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே உணர்வுப் பூர்வமாக செய்ய முடியும். இந்த சமூக அமைப்புமுறை குறித்த சமூக விஞ்ஞானப் பார்வையையும் உணர்வையும் பெருந்திரளான மக்களிடம் ஏற்படுத்தும் போது மட்டுமே, இந்த எழுச்சிகள் ஒரு முழுமையான விஞ்ஞானப் பூர்வமான சமூக மாற்றத்தை நோக்கிச் செல்லும்.
ரசியாவில் தன்னியல்பான எழுச்சிகளின் பின்னால் வால்பிடித்துச் சென்ற பொருளாதாரவாதிகளுக்கு தோழர் லெனின் தனது “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலில் பதிலளித்துள்ளார். அன்றைய சமூக ஜனநாயகவாதிகளிடம் இருந்த, “தன்னியல்பான எழுச்சிகளை வழிபடும் போக்கை” கண்டித்து அவர் எழுதியுள்ள பகுதியை இங்கே தருகிறோம் !
– வினவு
மக்களின் தன்னியல்பும் – சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வும்
அ. தன்னியல்பான எழுச்சியின் தொடக்கம்
1890-களின் மத்தியிலே மார்க்ஸியத்தின் தத்துவங்களில் எவ்வளவு முழுமையாக ருஷ்யாவின் படித்த இளைஞர்கள் சிந்தனையைப் புதைத்திருந்தார்கள் என்று முந்தைய அத்தியாயத்தில் சுட்டிக்காட்டினோம். அதே காலத்தில் 1896-ல் நடந்த புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்புர்க் தொழிற்போரைத் தொடர்ந்து வந்த வேலை நிறுத்தங்கள் அதேபோன்ற பொதுவான தன்மையைப் பெற்றன. அவை ருஷ்யா முழுவதிலும் பரவி, புதிதாக விழிப்புற்றுவரும் மக்கள் இயக்கத்தின் ஆழத்தைத் தெளிவாகக் காட்டின. ஆகவே, நாம் ”தன்னியல்பான அம்சத்தைப்” பற்றிப் பேசுவதானால் இந்த வேலை நிறுத்த இயக்கத்தைத்தான் தன்னியல்பானதாக முதலில் கருதவேண்டும். ஆனால் தன்னியல்பில் எத்தனையோ வகை உண்டு.
ருஷ்யாவில் 1870-களிலும் 1860-களிலும் (19-ம் நூற்றாண்டின் முற்பாதியிலுங்கூட) வேலை நிறுத்தங்கள் நடந்தன; அவற்றைத் தொடர்ந்து ”தன்னியல்பாக” இயந்திரங்களை உடைப்பது போன்றவையும் நடந்தன. இந்தக் “கலவரங்களோடு” ஒப்பிட்டால் 1890-களின் வேலை நிறுத்தங்களைக்கூட ”உணர்வுப் பூர்வமானவையாக” வர்ணிக்கக் கூடும், அந்த அளவுக்கு அவை அக்காலத்தில் பாட்டாளி வர்க்க இயக்கம் சாதித்த முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. ”தன்னியல்பான அம்சம்” என்பது கருவடிவத்திலே இருக்கும் உணர்வைக் காட்டுவது தவிர வேறில்லை என்று இது புலப்படுத்துகிறது.
ஆதிநிலைக் கலவரங்களுங்கூட ஓரளவுக்கு உணர்வு விழிப்படைவதை வெளியிடுகிறது. தொழிலாளிகள் தம்மை ஒடுக்கிவருகிற அமைப்புமுறை நிலையானது என்கிற நீடூழிக்கால நம்பிக்கையை இழந்துவந்தார்கள், அதிகாரிகளுக்கு அடிமைபோல் பணிந்து போவதைத் திட்டவட்டமாகக் கைவிட்டுக் கூட்டான எதிர்ப்பின் அவசியத்தை – புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள் என்று சொல்ல மாட்டேன் – உணர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். ஆனபோதிலும், இவை – போராட்டத்தின் இயல்பிலே இருந்ததைவிட நிராசையையும் வஞ்சம் தீர்க்கும் உணர்ச்சியையும் வெளியிடும் வெடிப்புகளின் இயல்பிலே இருந்தன.
1890-களின் வேலை நிறுத்தங்கள் எவ்வளவோ பெரிதான உணர்வின் மின்வெட்டுகளை வெளிப்படுத்தின. திட்டவட்டமான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன, சரியான நேரம் பார்த்து வேலை நிறுத்தம் துவங்கப்பட்டது, வேறு இடங்களிலிருந்து அறியப்பெற்ற வழக்குகளும் எடுத்துக்காட்டுகளும் விவாதிக்கப்பட்டன என்றவாறு. கலவரங்கள் வெறுமே ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பாக இருந்தன. ஆனால் முறைமையுள்ள வேலை நிறுத்தங்கள் கரு வடிவத்திலுள்ள, கரு வடிவத்தில் மட்டுமே உள்ள, வர்க்கப் போராட்டத்தைக் காட்டின. தம்மளவில் இவ்வேலை நிறுத்தங்கள் வெறுமே தொழிற்சங்கப் போராட்டங்களே, இன்னமும் சமூக-ஜனநாயகப் போராட்டங்களாக இல்லை. அவை தொழிலாளிகள் முதலாளிகளிடையே மூண்டு வரும் பகைமைகளைக் குறித்தன; ஆனால் தற்கால அரசியல், சமூக அமைப்புமுறை முழுவதற்கும் தமது நலன்களுக்கும் இடையேயுள்ள சமரசப்படுத்தமுடியாத பகைமை இருப்பதைத் தொழிலாளிகள் உணர்ந்திருக்கவில்லை, உணரமுடியவுமில்லை – அதாவது, அவர்களின் உணர்வு இன்னமும் சமூக ஜனநாயகவாத உணர்வாக இல்லை. இந்த அர்த்தத்திலே, 1890-களின் – வேலை நிறுத்தங்களை ”கலவரங்களோடு” ஒப்பிடும்போது மாபெரும் முன்னேற்றத்தைக் குறித்த போதிலும் வெறுமே ஒரு தன்னியல்பான இயக்கமாகவே இருந்துவிட்டன.
பீட்டர்ஸ்புர்க் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்
தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயகவாத உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்குக் கொண்டுவரப்படவேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே–அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் அவசியத்தைப் பற்றிய துணிபு மட்டுமே வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறும் புலப்படுத்துகிறது.1*
ஆனால் சோஷலிஸத்தின் தத்துவம் மெய்யறிவுவகைப்பட்ட, வரலாறுவழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட தத்துவங்களிலிருந்து வளர்ந்ததாகும்; சொத்துள்ள வர்க்கங்களின் பிரதிநிதிகள், அறிவுஜீவிகள், அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோஷலிஸத்தின் மூலவர்களான மார்க்ஸும் எங்கெல்ஸும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப் பகுதியினரைச் சேர்ந்தவர்கள். அதேபோல், ருஷ்யாவில், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தன்னியல்பான வளர்ச்சியோடன்றி முற்றிலும் சுதந்தரமாகவே சமூக-ஜனநாயகவாதத்தின் தத்துவார்த்த சித்தாந்தம் உதித்தது; புரட்சிகரமான சோஷலிஸ்டுப் படிப்பாளிப்பகுதியினரிடையே ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியின் ஒரு இயல்பான, தவிர்க்க வியலாத விளைவாக அது உதித்தது. விவாதத்திலிருக்கும் காலப்பகுதியான 1890-களின் நடுவில் இந்தச் சித்தாந்தம் ”உழைப்பாளர் விடுதலைக்” குழுவின் முழுதும் வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடல்லாமல் ருஷ்யாவில் பெரும்பான்மையான புரட்சிகரமான இளைஞர்களைத் தன் பக்கம் ஏற்கெனவே கவர்ந்திருந்தது.
எனவே, உழைக்கும் மக்களின் தன்னியல்பான விழிப்பும், அவர்கள் உணர்வுப்பூர்வமான வாழ்க்கைக்கும் உணர்வு பூர்வமான போராட்டத்துக்கும் விழித்தெழுதலும், சமூக-ஜனநாயகத் தத்துவத்தை ஆயுதமாகப்பூண்டு தொழிலாளர் பக்கம் வரத் துடிக்கும் புரட்சிகரமான ஓர் இளைஞர் கூட்டமும் ஒருங்கே இருந்தன. இது சம்பந்தமாக, அடிக்கடி மறக்கப்படுகிற (ஒப்பு நோக்கில் அரிதாக அறியப்பட்டுள்ள) ஒரு விஷயத்தைக் கூறுவது குறிப்பாக முக்கியமாகும் : அதாவது அக்காலப்பகுதியின் முந்திய சமூக-ஜனநாயகவாதிகள் ஆர்வத்தோடு பொருளாதாரக் கிளர்ச்சி நடத்தி வந்தார்கள் என்றபோதிலும் (அன்று கையெழுத்துப்படியிலேயே இருந்து வந்த கிளர்ச்சி பற்றி எனும் சிறு நூலில் இருக்கும் உண்மையிலே பயனுள்ள குறிப்புகள் இந்த நடவடிக்கைக்கு வழிகாட்டி வந்தன) அது ஒன்றே தமது பணி என்று அவர்கள் கருத வில்லை.
மாறாக, துவக்கத்திலிருந்தே பொதுவாக மிகவும் தொலைவீச்சுள்ள வரலாற்றுப் பணிகளையும், குறிப்பாக எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் பணியையும் ருஷ்ய சமூக ஜனநாயகவாதத்துக்குக் கொடுத்திருந்தார்கள். இப்படித்தான், 1895 இறுதியில், செயின்ட் பீட்டர்ஸ்புர்க் சமூக-ஜனநாயகவாதிகளின் குழு (இது “பாட்டாளி வர்க்க விடுதலைக்கான போராட்டக் குழுவை”2* – நிறுவியது) ரபோச்சியே தேலோ என்கிற பெயர் கொண்ட பத்திரிகையின் முதல் இதழைத் தயாரித்தது. அவ்விதழ் அச்சேறத் தயாராயிருந்த சமயத்தில் 1895 டிசம்பர் 8-ம் நாள் இரவில் அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அனதோலி அலெக்ஸேயெவிச் வானேயிவ் 3* வீட்டை போலீஸார் சோதனையிட்டு அதைக் கைப்பற்றினர். எனவே ரபோச்சியே தேலோவின் முதல் இதழ் உலகத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றிருக்கவேயில்லை. இவ்விதழின் தலையங்கக் கட்டுரை (ஒரு வேளை முப்பதாண்டுகள் கழித்து யாராவது ஒரு ருஸ்காயா ஸ்டரினா4* இதை போலீஸ் பிரிவின் நூற்காப்பிடத்தில் தேடியெடுக்கலாம்)
ருஷ்யாவில் பாட்டாளிவர்க்கத்தின் வரலாற்றுப் பணிகளை உருவரை செய்து அரசியல் சுதந்தரம் சாதித்துக் கொள்வதைத் தலைமையில் வைத்தது. அவ்விதழில் ‘நமது அமைச்சர்கள் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்?” என்கிற தலைப்புள்ள கட்டுரையும் இருந்தது; அது துவக்க நிலைக் கல்விக் குழுக்களைப் போலீஸ் நசுக்குவதைப் பற்றியதாகும். மேலும், செயின்ட் பீட்டர்ஸ்புர்க்கிலிருந்தும் ருஷ்யாவின் வேறு சில பகுதிகளிலிருந்தும் வந்த கொஞ்சம் கடிதப் போக்குவரத்தும் (எடுத்துக்காட்டாக, யாரஸ்லாவல் மாநிலத்தில் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது5* பற்றி ஒரு கடிதம்) இருந்தது. இதுவே 1890-களின் ருஷ்ய சமூக – ஜனநாயகவாதிகளின் ‘முதல் முயற்சி”.
என் நினைப்பு தவறில்லை என்றால் அது வெறுமே ஒரு உள்ளூர்ப் பத்திரிகையாகவோ, ”பொருளாதாரவாத’ பத்திரிகையாகவோ இருக்கவில்லை; எதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் புரட்சி இயக்கத்தோடு வேலை நிறுத்த இயக்கத்தை ஒன்று படுத்துவதையும் சீர்திருத்த எதிர்ப்புள்ள பிற்போக்கான கொள்கையால் ஒடுக்கப்படும் அனைவரையும் சமூக-ஜன நாயகவாதத்தின் பக்கம் கொண்டுவந்து விடுவதையும் குறிக்கோளாக வைத்திருந்தது. அக்காலத்திய இயக்கத்தின் நிலையைப்பற்றிக் கடுகளவேனும் அறிந்திருந்த யாரும் சந்தேகிக்க முடியாது.
லெனின்
தலைநகரின் தொழிலாளர்களும் புரட்சிகரமான படிப்பாளிப்பகுதியினரும் ஆர்வத்தோடு இப்பத்திரிகையை வரவேற்றிருப்பார்கள், விரிவான விற்பனை கிடைத்திருக்கும் என்று. அந்த முயற்சியின் தோல்வி வெறுமே காட்டியது இதுதான்: அக்காலத்திய சமூக-ஜனநாயகவாதிகளுக்குப் புரட்சிகரமான அனுபவமும் நடைமுறைப் பயிற்சியும் இல்லாத காரணத்தால் அவர்கள் அன்றைய உடனடித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமற்போயினர். செயின்ட் பீட்டர்ஸ்புர்க் ரபோச்சி லிஸ்டோக்6* விஷயத்திலும், குறிப்பாக ரபோச்சயா கஸேத்தா, 1898 வசந்தகாலத்திலே நிறுவப்பெற்ற ருஷ்யச் சமூக-ஜன நாயகவாதத் தொழிலாளர் கட்சியின் அறிக்கை7* ஆகியவற்றின் விஷயத்திலும் இதையே சொல்லித் தீரவேண்டும்.
இந்த ஆயத்தமின்மைக்காக அக்காலத்திய சமூக-ஜனநாயகவாதிகளைப் பழிக்கக் கனவிலும் நினைக்க மாட்டோம், உண்மைதான். ஆனால் அந்த இயக்கத்தின் அனுபவத்திலிருந்து பயன்பெறும் பொருட்டும் அதிலிருந்து நடைமுறைக்கான படிப்பினைகளை எடுத்துக்கொள்ளும் பொருட்டும் அந்தந்தக் குறைபாட்டுக்குரிய காரணங்களையும் குறிபொருளையும் நாம் முழு நிறைவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, 1895-98 காலப்பகுதியிலே தீவிரமாகப் பணியாற்றிவந்த சமூக-ஜனநாயகவாதிகளில் ஒரு பகுதியினர் (ஒருக்கால் பெரும்பான்மையினராகவும் இருக்கலாம்) அக்காலத்திலேயே, “தன்னியல்பான” இயக்கத்தின் துவக்கத்திலேயே, ஒரு மிக விரிவான வேலைத்திட்டத்தையும் செயல் துடிப்புள்ள தாக்குமுறைக் கொள்கையையும் முன்வைப்பது சாத்தியம் என்று நியாயமாகவே கருதினார்கள் என்கிற விஷயத்தை நிலை நாட்டுவது மிக முக்கியம்.8*
புரட்சியாளர்களில் பெரும்பான்மையினருக்குப் பயிற்சியின்மை முற்றும் இயல்பான நிகழ்வுத்தோற்றமே, அது எந்தக் குறிப்பான அச்சங்களையும் எழுப்பியிருக்கமுடியாது. பணிகளைச் சரிவர வரையறுத்தவுடன், அவற்றை நிறைவேற்றத் திரும்பத்திரும்ப முயல்வதற்கான சக்தி மட்டும் இருந்திருந்தால், தற்காலிகமான தோல்விகள் அரைகுறையான துரதிர்ஷ்டங்களே. புரட்சி அனுபவமும் அமைப்புத் திறனும் பெறக்கூடிய விஷயங்களே, — அவற்றைப் பெறுவதற்கு விருப்பம் இருந்தால் போதும், குறைபாடுகளைக் கண்டு கொண்டால் போதும்; புரட்சிகரமான நடவடிக்கையில், குறைபாடுகளைக் கண்டு கொள்வதே அவற்றைப் போக்கிக்கொள்வதில் பாதிக்குமேல் வந்து விடுவதாகும்.
ஆனால், இந்த உணர்வு மங்கத் தொடங்கிய போது (மேலே குறிப்பிட்ட குழுக்களின் உறுப்பினர்களிடையே இவ்வுணர்வு கொழுந்துவிட்டபடியே இருந்தது), குறைகளை நிறைகளாகக் கருதத் தயாராயுள்ள, தன்னியல்பின் முன் தாம் அடிமைபோல் பணிந்து கெஞ்சுவதற்கு ஒரு தத்துவார்த்த அடிப்படையைப் புனைவதற்குக் கூடி முயல்கிற, பேர்வழிகளும்–சமூக-ஜனநாயகவாதப் பத்திரிகைகளும் கூட தோன்றியபோது, அரைகுறையான துரதிர்ஷ்டமாக இருந்தது முழு துரதிர்ஷ்டமாகிவிட்டது. இந்தப் போக்கிலிருந்து முடிவுகள் எடுக்கும் தருணம் வந்துவிட்டது; இதன் உள்ளடக்கம் ”பொருளாதாரவாதம்” என்று பிழையாகவும் மிகக் குறுகலாகவும் இனங்குறிக்கப்படுகிறது.
*_*_*_*
குறிப்புகள் :
1* சிலர் நினைக்கிற மாதிரி, தொழிற்சங்கவாதம் ”அரசியலை” முற்றாக விலக்குகிறதில்லை. தொழிற்சங்கங்கள் எப்போதுமே கொஞ்சம் அரசியல் (ஆனால் சமூக-ஜனநாயகவாத வகைப்பட்டதல்ல) கிளர்ச்சியும் போராட்டமும் நடத்திவந்துள்ளன. தொழிற்சங்க அரசியலுக்கும் சமூக-ஜனநாயகவாத அரசியலுக்கும் உள்ள வேற்றுமையை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம்.
2* ”பாட்டாளி வர்க்க விடுதலைக்கான போராட்டக் குழு” – 1895 இலையுதிர்காலத்தில் செயின்ட் பீட்டர்ஸ்புர்க் நகரத்தில் நிறுவப்பெற்ற ஒரு சட்டவிரோதமான அமைப்பு. வி. இ. லெனின், அ. அ. வானேயிவ், பி. க. ஸபரோழெட்ஸ், கி. ம. கிரிழிழனோவ் ஸ்கி, ந. க. குருப்ஸ்கயா, யூ. ஓ. மார்த்தவ் முதலியோர் இதை நிறுவினர். ”போராட்டக் குழு” சுமார் இருபது மார்க்ஸியத் தொழிலாளர் வட்டங்களை இணைத்திருந்தது. அதன் பணிகள் அனைத்தும் மத்தியத்துவம், கண்டிப்பான கட்டுப்பாடு கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு நடந்தன. பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக நடக்கும் தொழிலாளர் போராட்டத்தையும் ஜாராட்சியை எதிர்த்து நடக்கும் அரசியல் போராட்டத்தையும் இணைத்த வகையிலே அது தொழிலாளி வர்க்க இயக்கத்தை வழிநடத்தி வந்தது . லெனின் சொன்னதுபோல, இக்குழு தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான கட்சிக்குக் கருவாக இருந்தது.
1895 டிஸம்பரில், லெனினையும் பிற “போராட்டக் குழுத்” தலைவர்களையும் ஜார் அரசாங்கம் சிறைப்படுத்தி சைபிரியாவுக்கு நாடுகடத்தியது. “பொருளாதாரவாதக் ”கருத்துக்களை ஆதரித்துப் பேசிய ‘இளைஞர்கள்” என்று சொல்லப்பட்டவர்கள் வசம் குழுத் தலைமை சிக்கியது.
3* அ. அ. வானேயிவ் காசநோயால் 1899-ல் கிழக்கு சைபீரியாவில் காலமானார்; நாடு கடத்தப்படுமுன் சிறையில் தனிக்கொட்டடியில் வைக்கப்பட்டிருந்தபோது இந்நோய்க்கு ஆளானார். எனவே தான் மேற்சொன்ன செய்தியை வெளியிடலாம் என்று நினைத்தோம். அந்தச் செய்தி உண்மையே என்று உத்தரவாதமளிக்கிறோம், ஏனெனில் அ. அ. வானேயி வுடன் நெருங்கி நேரடியாகப் பழகிவந்த நபர்களிடமிருந்து கிடைக்கிற செய்தி அது.
4* “ருஸ்காயா ஸ்டரினா” (ருஷ்யப் பழங்காலம்) – வரலாற்று விஷயங்களைக் கவனிக்கும் மாதப் பத்திரிகை. 1870 முதல் 1918 வரை செயின்ட் பீட்டர்ஸ்புர்க்கில் வெளியிடப்பட்டது. ருஷ்ய அரசுக்கலை, பண்பாடு ஆகிய துறைகளில் முக்கியமானவர்களின் நினைவுகள், நாட்குறிப்பேடுகள், குறிப்புகள், கடிதங்கள் ஆகியவற்றையும் பல்வேறு வரலாற்று ஆவணங்களையும் பெரிதும் (கவனித்து) அதில் வெளியிடப்பட்டன.
5* 1895 ஏப்ரல் 27 (மே 9)-ல் யாரஸ்லாவல் நகரிலிருந்த ஒரு பெரிய நெசவாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்டதை இது குறிப்பிடுகிறது. ஆலை நிர்வாகம் புகுத்திய புதிய கூலி விகிதங்கள் கூலியைக் குறைத்ததால் 4000-க்கு மேலான தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தம் கொடியமுறையில் நசுக்கப்பட்டது. இவ்வேலை நிறுத்தத்தைப் பற்றி லெனின் ஒரு கட்டுரை எழுதினார், ஆனால் அது இன்னும் கிடைக்கவில்லை.
6* ”பீட்டர்ஸ்புர்க் ரபோச்சி லிஸ்டோக்” (செயின்ட் பீட்டர்ஸ்புர்க் தொழிலாளர் பத்திரிகை) -”செயின்ட் பீட்டர்ஸ்புர்க் தொழிலாளி வர்க்க விடுதலைப் போராட்டக் குழுவின்” பத்திரிகை. இரண்டு இதழ்கள் வெளிவந்தன; முதல் இதழ் ருஷ்யாவில் 1897 பிப்ரவரியிலும் (ஜனவரி என்று போடப்பட்டிருந்தது), இரண்டாம் இதழ் ஜினீவாவில் 1897 செப்டம்பரிலும் வெளியிடப்பட்டன.
7* முதலாம் ரு. ச. ஜ. தொ. கட்சிக் காங்கிரஸின் ஆணைக்கிணங்கவும் ரு. ச. ஜ. தொ. க. மத்தியக் குழுவின் சார்பாகவும் 1898-ல் வெளியிடப்பட்ட “ருஷ்ய சமூக-ஜனநாயக வாதத் தொழிலாளர் கட்சியின் அறிக்கையை” இது குறிக்கிறது. அரசியல் சுதந்தரத்துக்காகவும் யதேச்சாதிகாரமுறையைத் தூக்கியெறிவதற்காகவும் போராடுவதை ருஷ்ய சமூக-ஜனநாயகவாதத்தின் முதன்மையான பணியாக இவ்வறிக்கை வகுத்துத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பொதுப் பணிகளுடன் அரசியல் போராட்டத்தை இணைத்தது.
8* “1890-களின் இறுதியாண்டுகளிலே இருந்த சமூக-ஜனநாயகவாதிகளின் நடவடிக்கைகள் பால் பகைமைக் கண்ணோட்டத்தை இஸ்க்ரா எடுத்துக்கொள்கிறதிலே, சிறு கோரிக்கைகளுக்கான போராட்டத்தைத் தவிர வேறு வேலை செய்வதற்கான நிலைமைகள் அக்காலத்தில் இல்லாதிருந்ததை அது புறக்கணிக்கிறது” என்று பொருளாதாரவாதிகள்” தமது “ருஷ்ய சமூக-ஜன நாயகவாதப் பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதத்தில் (இஸ்க்ரா , இதழ் 12) கூறுகின்றனர். “நிலைமைகள் இல்லை” எனும் வன்கூற்று உண்மைக்கு நேர் மாறானது என்று மேலே சொன்ன விஷயங்கள் காட்டுகின்றன. 1890-களின் இறுதியில் மட்டுமின்றி மத்தியிலுங்கூட சிறு கோரிக்கைகளுக்கான போராட்டத்தைத் தவிர வேறு வேலை செய்வதற்கான எல்லா நிலைமைகளும் – தலைவர்களின் போதிய பயிற்சி நீங்கலாக மற்றெல்லா நிலைமைகளும் இருந்தன, சித்தாந்திகளும் தலைவர்களுமாகிய நமக்குப் போதிய பயிற்சி இருக்கவில்லை என்று மனந்திறந்து ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக – “நிலைமைகள் இல்லை” என்பதின் மீது, எந்தச் சித்தாந்தியாலும் இயக்கத்தைத் திசை திருப்பிவிட முடியாத பாதையை நிர்ணயிக்கிற பொருளாயத சூழ்நிலையின் பாதிப்பின் மீது, முற்றாகப் பழி சுமத்திவிட “பொருளாதாரவாதிகள் முயல்கிறார்கள். இது தன்னியல்பின் முன் அடிமைபோல் பணிந்து கெஞ்சுவது தவிர வேறென்ன”, சித்தாந்திகள் தமது சொந்த குறைபாடுகளின் மீது மோகம் கொண்டிருப்பது தவிர வேறென்ன?
(தொடரும்)
நூல் : என்ன செய்ய வேண்டும்? ஆசிரியர் :லெனின் பக்கம் : 312 விலை : 180.00 வெளியீடு :புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கிடைக்குமிடம் : கீழைக்காற்று (73959 37703)
பெரியாரின் 142 வது பிறந்தநாள் ! கடலூர் பு.மா.இ.மு. மாலை அணிவிப்பு நிகழ்வு !!
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 142 வது பிறந்தநாளை முன்னிறுத்தி விருத்தாசலம் திரு. கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள பெரியாரின் சிலைக்கு புமாஇமு தோழர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்வு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில் நடந்தது.
இந்த மாலை அணிவிப்பு நிகழ்வில் சமூக நீதிப் போராளியான தந்தை பெரியார் முன்னெடுத்த போராட்டங்கள் சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், பெண்களுக்கு சம உரிமை,கல்வி பயிலும் உரிமை, கடவுள் மறுப்புக் கொள்கை,கோயில் நுழைவு போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றின் வரலாறு குறித்து பேசப்பட்டது.
1 of 4
மேலும், இன்று மீண்டும் மனுதர்ம ஆட்சி நடந்து கொண்டிருக்கும் சூழலில், பார்ப்பனியத்தை எதிர்க்கும் வகையில் தனது இறுதி நாள் வரை போராடிய தந்தை பெரியாரின் வரலாற்றை இளைய சமூகம் படிக்க வேண்டும். மருத்துவம் படிக்கும் உரிமையை பறிக்க வந்த நீட் தேர்வால் தொடரும் மாணவர் படுகொலைகள், மூன்றாம் வகுப்பிலே பொது தேர்வு வைத்து குலத் தொழிலுக்கு அனுப்பும் புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை நாம் எதிர்க்க வேண்டும்.
இதனைச் செய்ய நாம் பெரியாரின் கருத்துக்களை இளையதலைமுறை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் ஒழிய இந்த பார்ப்பன பாசிச கும்பலை அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்க முடியாது என்ற வகையில் கண்டன உரையும், கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் தோழர் மணிவாசகம் பார்ப்பனப் பாசிசத்துக்கு எதிராக கண்டன உரை ஆற்றினார். புமாஇமு உறுப்பினர்கள் தோழர் மணிகண்டன்,சுகதேவ், இளங்கோ ஆகியோரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் கோ பூவனூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலாஜி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
தகவல்: புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி. கடலூர். தொடர்புக்கு: 97888 08110
நீட் தோல்வியால் தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளித்தால் அது தற்கொலைகளை ஊக்குவிக்குமாம். இந்த “அற்புதமான” சமூக விஞ்ஞானக் கண்டுபிடிப்பை தெரிவித்திருப்பது வேறு யாரும் அல்ல, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்தான்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13-09-2020) அன்று நீட் தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான 12-09-2020 அன்று மட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா, தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால் ஆகிய மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முந்தைய வாரத்தில் அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் எனும் மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு முயற்சித்திருக்கிறார். மாணவர்கள் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதவிருந்தனர். தேர்வு நெருங்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை தோல்வியைத் தழுவ நேரிட்டால், பணம் கட்டி நீட் பயிற்சி பெற்றது அனைத்தும் வீணாகிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த மூன்று மாணவர்களும் தற்கொலை செய்திருக்கக்கூடும்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை (14.09.2020) அன்று வழக்கறிஞர் சூர்யபிரகாஷ் என்பவர் நீட் தற்கொலைகள் தொடர்பாக முறையீட்டு மனு ஒன்றை நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தாக்கல் செய்தார். இந்த மனுவில், நீட் தற்கொலைகள் குறித்து உயர்நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று முறையிட்டிருக்கிறார்.
இந்த வழிகாட்டுதல்களை நீதிபதி என். கிருபாகரன் தலைமையிலான அமர்வு மாணவி கிருத்திகா கடந்த 2018-ம் ஆண்டு நீட் தொடர்பாக தொடுத்த வழக்கில் உத்தரவிட்டிருந்தது. அதில் நீட் தேர்வு காரணமாக நடைபெறும் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு, தேர்வுக்கு முன்னரே மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிப்பது, பயத்தைப் போக்கும் வகையில் அவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் அளிப்பது போன்றவற்றை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது உயர்நீதிமன்றம்.
தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் ஆதித்யா, ஜோதிஸ்ரீ துர்கா, மோதிலால்
அந்த உத்தரவை சுட்டிக் காட்டி, தமிழக அரசு அந்த வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றியிருந்தால், கடந்த வாரத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நால்வரையும் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அதன் காரணமாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது முறையீட்டு மனுவில் வழக்கறிஞர் சூரியபிரகாஷ் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர், இந்த மனுவை அங்கீகரித்து தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் இது குறித்துக் கருத்து கூறிய நீதிபதிகள், “நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் ஆகிவிடும்” என்று தெரிவித்துள்ளனர்.
எனில், கடந்த சனிக்கிழமை 3 மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்டது, குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பும், இழப்பீடும் தரும் அரசாங்கத்தின் ‘ஊக்க’ நடவடிக்கைக்கு ஆசைப்பட்டு தானா? அல்லது பொதுவான தேர்வு குறித்த அச்சத்தாலா? அல்லது நீட் தேர்வுப் பயிற்சிக்காக தமது தாய் தந்தையர் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தை பயிற்சி மையங்களுக்கு கொட்டி அழுததற்கு பலன் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தினாலா ?
பொதுவான தேர்வு குறித்த அச்சம் என்றால், இந்த மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்விலேயே அந்த முடிவை எடுத்திருக்க முடியும். பொதுவான தேர்வு குறித்த அச்சம் கொண்டவர்களும் கூட தேர்வில் தோல்வியுறும் சமயத்தில்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
கல்வித் துறையில் தமிழகத்தின் முன்னேறிய நிலைமை, சாதாரண நடுத்தரவர்க்கப் பின்னணி கொண்டவர்களும் மருத்துவர் ஆவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதன் காரணமாகத்தான் இங்கு மாணவர்கள் மருத்துவராகும் கனவு காணமுடிகிறது. ஏற்கெனவே இருந்த 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முறை சாதாரண அரசுப் பள்ளி மாணவர்களையும் கூட மருத்துவர்களாக்கி அழகு பார்த்தது.
இந்திய அளவில் தமிழகம்தான் மருத்துவத்திற்குப் பெயர் பெற்ற மாநிலமாக இருக்கிறது. சென்னை இந்தியாவின் மருத்துவத் தலைநகராக விளங்குகிறது. உலகின் தலைசிறந்த மருத்துவ வல்லுனர்களை உருவாக்கியிருக்கிறது தமிழகம். காரணம் தமிழகத்தில் இருக்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், சாதாரண மக்களின் பிள்ளைகளும் எவ்வித நுழைவுத் தேர்வும் இன்றி, பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கினாலேயே மருத்துவராக முடியும் என்ற நிலைதான்.
ஆனால் நீட் தேர்வுமுறை அடிமை எடப்பாடி அரசின் உதவியோடு தமிழகத்தில் புகுத்தப்பட்ட பின்னர், நீட் பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் ஆண்டுக்கு 1.5 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு நீட் தேர்வுக்கு மாணவர்களைத் ‘தயாரிக்கும்’ தனியார் பயிற்சிக்கூடங்களுக்கு படியளக்கும் ‘திறன்’ கொண்டோரின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவராவது குறித்து கனவு கூட காண முடியும்.
2019-ம் வருட நீட் பலி : மாணவி ரிதுஸ்ரீ (இடது) மற்றும் மாணவி வைஸ்யா.
தமிழகத்தில் தமது பிள்ளைகளின் மருத்துவராகும் கனவை நனவாக்க கடனை வாங்கியேனும் நீட் பயிற்சி மையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடுத்தரவர்க்கத்தினரின் பிள்ளைகளின் மனநிலை தேர்வுக்கு முன்னர் என்னவாக இருக்கும் ? அதுவும் முதல் முறை தோல்வியடைந்து இரண்டாவது முறையோ, மூன்றாவது முறையோ முயற்சிக்கும் மாணவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் ?
தமது தாய் தந்தையர் தம் கண் எதிரே அரும்பாடுபட்டு சிறுகச் சிறுக சேமித்தும், கடன் வாங்கியும் கட்டிய பயிற்சிக் கட்டணத்தின் பிரம்மாண்டமும், அதன் மீது தமக்கிருக்கும் தார்மீகக் கடமையும் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். கொரோனா சூழலில் குடும்பங்களில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி அவர்களது மனநிலையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இப்படிப்பட்ட தாக்கத்தின் விளைவாக நிகழ்ந்த (தற்)கொலைகளுக்கு அரசாங்கத்தின் இழப்பீடு வழங்கப்படுவது நீதிபதிகளுக்கு வெறும் ஊக்குவிப்பாகத் தெரிகிறது. எனில், இழப்பீடு எனும் பெயரில் அரசு கொடுக்கும் பிச்சைக்காசைப் பெறுவதற்குத்தான் மருத்துவராகும் துடிப்பு கொண்ட அந்த இளம் குருத்துக்கள் தங்களை மாய்த்துக் கொண்டனரா ?
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் படத்தில் ‘மெரிட்டில்’ வந்த தனது மகன் அர்ஜுனுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவக் கல்வி வாய்ப்பு ’கோட்டா’ சீட் காரணமாக குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குச் சென்றதும் தனது மகனுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க பணம் ஏற்பாடு செய்ய, பணியில் இருக்கும் போதே தற்கொலை செய்து கொள்வார் மனோரமா.
அந்தப் படத்தில் மனோரமாவின் மரணத்தின் மூலமாக ‘கோட்டா’ சீட்டுகளின் மீதான (அதனால் பயன்பெற்ற) பொது ஜனங்களின் வெறுப்பை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கச்சிதமாக விதைத்தார் சங்கர். ஒரு ஏழை சத்துணவுக்கூடப் பணியாளர் தனது பிள்ளையைப் படிக்க வைக்க பணம் வேண்டி தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் காட்சிதான் படம் பார்த்த அனைவரின் மனதிலும் சங்கரின் மனுதர்மக் கருத்துக்களை எடுத்துச் சென்ற வாகனம்.
அனிதா முதல் ஒவ்வொரு ஆண்டும் நீட் தொடர்பாக தமிழகத்தில் நிகழும் தற்கொலைகள் அனைத்துமே, ‘நீட்’ எனும் மனுநீதிக்கு எதிரான கருத்தியலை தமிழக மக்களின் மனங்களுக்குள் எடுத்துச் செல்லும் வாகனமாக இருக்கிறது. இது சங்கரின் ‘மாய உலகக்’ காட்சிகளில் உருவாக்கப்பட்டதல்ல. தமிழகத்தின் கையாலாகா அவல நிலையால் உண்டான எதார்த்தம்.
இந்த (தற்)கொலைகளின் தாக்கம் நீட் எனும் மனுநீதிக்கு எதிராக எந்தக் கருத்தியலையும் மக்கள் மனதில் கொண்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீட் மரணங்களை இழப்பீட்டிற்காக நடக்கும் தற்கொலைகளாக சித்தரிக்கிறார்கள் நீதியரசர்கள் ! அதனால்தான் இச்செய்தியை முதல்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது இந்து தமிழ் திசை !
நந்தன்
செய்தி ஆதாரம் : இந்து தமிழ் திசை நாளிதழ் (15-09-2020)
தேசியக் கல்விக் கொள்கை 2020 – என்னவாகும் உயர்கல்வி? என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த இணையவழி கூட்டத்தில் திரு சசிகாந்த் செந்தில் உரையாற்றினார்.
தனது உரையில், தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை மற்றும் சமஸ்கிருத திணிப்பு குறித்த விவாதங்கள் பரவலாக நடந்துவருகின்றன. அதேவேளையில் கல்விக் கொள்கையில் உள்ள முக்கியமான வேறு சிலவற்றையும் நாம் பேசவேண்டும். இக்கொள்கை பின்வரும் மூன்று விசயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
1. வணிகமயமாக்கல்
2. அதிகார மையப்படுத்துதல்
3. காவிமயமாக்கல்.
இவர்கள் கல்வியை புதிய தாராளவாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்க்கிறார்கள். எந்த ஒரு பாசிச அரசும் தன் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு முதலில் தாக்குதல் தொடுப்பது கல்வியில் தான். அதையே தான் தற்போது பாஜக-வும் இந்த கல்விக் கொள்கையின் வாயிலாக செய்கிறது என்று பேசினார்.
மேலும் உயர்கல்வியில் கல்விகொள்கை முன்வைக்கும் பரிந்துரைகளைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் திரு சசிகாந்த் செந்தில் விளக்கியுள்ளார். அவரது உரையை முழுமையாகக் காண :
தனித் தேர்ச்சியின் அவசியத்தை எவ்வளவோ நேர்த்தியுடன் வர்ணித்த அதே B-Vதான் நாம் மேற்கோள்காட்டிய வாதத்தின் இரண்டாம் பகுதியில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறார் என்று கருதுகிறோம். தொழிலாளி வர்க்கப் புரட்சியாளர்களின் எண்ணிக்கை போதாதென்கிறார். இது முற்றிலும் உண்மை. இன்று சமூக -ஜனநாயகவாதத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குரிய காரணங்கள் பற்றியும், எனவே அந்நெருக்கடியை அகற்றுவதற்கு வேண்டிய சாதனங்களைப் பற்றியும் நாம் கொண்டுள்ள கருத்தை “ஒரு நெருங்கிய நோக்கரின் மதிப்புமிக்க தகவல்” முற்றாக உறுதிப்படுத்துகிறதை மீண்டும் வலியுறுத்துகிறோம். பொதுவாகவே புரட்சியாளர்கள் தன்னியல்பாய் விழிப்புற்று வரும் மக்கள் திரளுக்குப் பின்னடைந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல; தொழிலாளர் – புரட்சியாளர்களுங்கூட தன்னியல்பாய் விழிப்புற்று வரும் தொழிலாளி வர்க்க மக்கள் திரளுக்குப் பின்னடைந்து வருகிறார்கள்.
தொழிலாளர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றிய விவாதத்தில் மிக அடிக்கடி நம்மிடம் கூறப்படும் “பள்ளியாசிரியத்தனங்களின்” முட்டாள்தனத்தை மட்டுமின்றி அவற்றின் அரசியல் பிற்போக்குத் தன்மையையும் “நடைமுறைப்” பார்வையிலே இந்த உண்மை தெளிவான சான்றுடன் உறுதிப்படுத்துகிறது. இந்த உண்மை நிரூபிக்கிறதாவது: நமது முதன்மையான முக்கியமான கடமை தொழிலாளி வர்க்கப் புரட்சியாளர்களைப் பயிற்றுவிக்க உதவுவதே. இவர்கள் கட்சி நடவடிக்கை விசயத்தில் அறிவுஜீவிகளிடையே இருந்து வரும் புரட்சியாளர்களுக்குச் சமமாக இருப்பார்கள் (‘‘கட்சி நடவடிக்கை விசயத்தில்” எனும் சொற்களை வலியுறுத்துகிறோம். ஏனெனில் மற்ற விசயங்களில் அறிவுஜீவிகளின் தரத்திற்குத் தொழிலாளிகளை உயர்த்துவது அவசியமாயினுங்கூட அது அவ்வளவு சுலபமோ அவசரத் தேவையோ அல்ல).
எனவே தொழிலாளிகளைப் புரட்சியாளர்களின் தரத்திற்கு உயர்த்துவதில் முதன்மையான கவனம் செலுத்தவே “பொருளாதாரவாதிகள்” செய்ய விரும்புவது போல் ” உழைக்கும் மக்களின்” தரத்திற்கோ, ஸ்வபோதா செய்ய விரும்புவது போல், “சராசரித் தொழிலாளியின்” தரத்திற்கோ இறங்குவது நம் பணி அல்லவே அல்ல. (ஸ்வபோதா அவ்வாறு செய்ய விரும்புவதிலே பொருளாதாரவாதப் ”பள்ளியாசிரியத்தனங்களின்” இரண்டாம் படிவத் தரத்திற்கு ஏறுகிறது). தொழிலாளர்களுக்கு எளிதாகப் புரியக் கூடிய இலக்கியம் வேண்டும்; குறிப்பாகப் பிற்பட்ட தொழிலாளர்களுக்கு மிக எளிதாகப் புரியக்கூடிய (ஆனால் கொச்சைப்படுக்கப் படாத) இலக்கியம் வேண்டும் என்பதை நான் மறுக்கவே இல்லை. ஆனால் அரசியல், அமைப்புத்துறை பற்றிய பிரச்சினைகளோடு பள்ளியாசிரியத்தனங்களை இடைவிடாது போட்டுக் குழப்புவது தான் எனக்கு எரிச்சலூட்டுகிறது.
”சராசரி தொழிலாளி”யைப் பற்றி இவ்வளவு கவலை தெரிவிக்கும் பெருமான்களே, தொழிலாளி வர்க்க அரசியலைப் பற்றியும், தொழிலாளி வர்க்க அமைப்பைப் பற்றியும் விவாதிக்கும் போது நீங்கள் தொழிலாளிகளை புத்தி சொல்லி அடக்க விரும்புவதால் உண்மையிலேயே அவர்களை அவமதிக்கிறீர்கள். முக்கியமான விசயங்களை வினைத்திட்ப முறையிலே பேசுங்கள்; பள்ளியாசிரியத்தனங்கள் ஆசிரியர்களோடு நிற்கட்டும், அரசியல்வாதிகளுக்கும் அமைப்பாளர்களுக்கும் அது வேண்டாம்! படிப்பாளிப் பகுதியினர் இடையே கூட முன்னிலை நபர்கள், “சராசரி நபர்கள்”, “மக்கள் திரள்” இல்லையா? படிப்பாளிப் பகுதியினருக்கும் எளிதாகப் புரியக் கூடிய இலக்கியத்தின் தேவையை ஒவ்வொருவரும் அங்கீகரிக்கவில்லையா? அவ்வகை இலக்கியம் எழுதப்படவில்லையா? கல்லூரி அல்லது உயர்நிலைப் பள்ளி மாணவர்களைத் திரட்டியமைப்பது பற்றிய கட்டுரையில் ஒருவர் ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பு செய்தவர் போல் முதன்முதலில் “சராசரி மாணவர்கள்” கொண்ட அமைப்பு அவசியம், என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அந்த ஆசிரியர் கேலி செய்யப்படுவார். அது சரியாகவும் இருக்கும். அமைப்பு பற்றி உங்களுக்குக் கருத்துக்கள் ஏதேனுமிருந்தால் கொடுங்கள், யார் “சராசரி”, யார் “சராசரி”க்கு மேலே அல்லது கீழே என்பதை நாங்களே முடிவு செய்து கொள்கிறோம் என்று அவரிடம் சொல்வார்கள்.
ஆனால் அமைப்பு பற்றி உங்களுக்கு சொந்தத்தில் கருத்துக்கள் எதுவும் இல்லையென்றால் மக்கள் திரள்” சார்பிலும் ”சராசரி நபர்கள்” சார்பிலும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரமங்கள் அனைத்தும் வெறுமே அலுப்பூட்டுவதாயிருக்கும். “அரசியல்”, “அமைப்பு” சம்பந்தமான இந்தப் பிரச்சினைகள் தம்மளவில் எவ்வளவோ முக்கியத்துவமுடையவை ஆதலால் அவற்றை செயல்திட்பமுடைய வழியிலே அல்லாது வேறெந்த வழியிலும் கவனிக்க முடியாது. நாம் தொழிலாளிகளைப் (பல்கலைக்கழக மாணவர்களையும், பள்ளி மாணவர்களையும்) பயிற்றுவிக்க முடியும்; பயிற்றுவிக்க வேண்டும். அவ்விதம் செய்வதால் அவர்களோடு இந்தப் பிரச்சினைகளை விவாதிக்க நமக்கு முடியக் கூடும். ஆனால் இந்தப் பிரச்சினைகளை நீங்கள் கிளப்பத் தொடங்குகிறீர்கள் என்றால் அவற்றிற்கு உண்மையான பதில்கள் நீங்கள் கொடுத்தாக வேண்டும்; ”சராசரி நபர்கள்” என்றோ , “மக்கள் திரள்” என்றோ சொல்லிக் கொண்டு பின்வாங்கக் கூடாது; குறும்புத்தனமான குறிப்புரைகளோடும் வெறும் சொற்றொடர்களோடும் விசயத்தை முடித்து விட முயற்சிக்கக் கூடாது.”1*
அதேபோல் தொழிலாளி – புரட்சியாளனும் தன் பணியைச் செய்வதற்கு முற்றாகத் தயார்படுத்திக் கொள்வதற்கு ஒரு முழுநேரப் புரட்சியாளனாக ஆகித் தீரவேண்டும். எனவே, தொழிற்சாலையிலே தொழிலாளி பதினொன்றரை மணிநேரம் செலவழிப்பதனால் (கிளர்ச்சி தவிர) மற்றெல்லா புரட்சி வேலைகளும் “அறிவுஜீவிகளைக் கொண்ட ஒரு சின்னஞ்சிறு குழுவின் மேலேதான் முக்கியமாக விழுவது அவசியமாகித் தீரவேண்டும்” என்று B-v சொல்வது தவறு. இந்த நிலைமை வெறும் “அவசியத்தினின்று” விளைவதல்ல. அது விளையக் காரணம் நாம் பின்தங்கியிருப்பதுதான். நாம் ஒவ்வொரு திறமையுள்ள தொழிலாளியும் ஒரு முழுநேரக் கிளர்ச்சினாகவும், அமைப்பாளனாகவும், பிரச்சாரகனாகவும், இலக்கிய விநியோகஸ்தனாகவும், மற்றபடியும் ஆவதற்கு உதவ வேண்டிய நமக்குள்ள கடமையை நாம் உணரவில்லை என்பதுதான். இவ்விசயத்தில் முற்றிலும் வெட்கக்கேடான முறையில் நம் சக்தியை வீணடிக்கிறோம். பேணிக்காக்க வேண்டியதை, தனிக் கவனிப்போடு வழங்கப்பட வேண்டியதைச் சிக்கனத்தோடு சேமித்து வைக்கும் திறமை நம்மிடம் இல்லை.
ஜெர்மானியர்களைப் பாருங்கள். அவர்களிடம் நம்மை விட நூறு மடங்குச் சக்திகள் உண்டு என்றபோதிலும் ”சராசரி” நிலையிலுள்ள அணிகளிடையே இருந்து உண்மையிலேயே திறமையுள்ள கிளர்ச்சியாளர் முதலானோர் அடிக்கடி மேலுக்குக் கொண்டு வரப்படுவதில்லை என்று மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு திறமையுள்ள தொழிலாளியும் தன் ஆற்றல்களை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும் செயல்படுத்தவும் இடமளிக்கக்கூடிய நிலைமைகளில் அவனை வைத்திட உடனுக்குடன் முயல்கின்றனர்; அவன் ஒரு முழுநேரக் கிளர்ச்சியாளன் ஆக்கப்படுகிறான்; தனது நடவடிக்கைக்கான நிலைக் களத்தை விரிவுபடுத்திக் கொள்ளும்படி, ஒரு தொழிற்சாலையிலிருந்து அது சம்பந்தப்பட்ட தொழில் முழுவதற்கும் பரப்பிக் கொள்ளும்படி, ஒரு தனி ஊரிலிருந்து நாடு முழுவதற்கும் பரப்பிக் கொள்ளும்படி ஊக்குவிக்கப்படுகிறான். அவன் தன் தொழிலில் அனுபவமும் நயத்திறமும் பெறுகிறான்; பார்வையை விரிவாக்கிக் கொள்கிறான்; அறிவைப் பெருக்கிக் கொள்கிறான்; வேற்று வட்டாரங்களையும், மாற்றுக் கட்சிகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்களை நெருங்கிய நிலையில் கவனிக்கிறான்; அவர்கள் தரத்திற்கு உயர முயற்சிக்கிறான்; தொழிலாளி வர்க்கச் சூழலைப் பற்றிய அறிவையும் சோசலிஸ்டுத் துணிபுகளின் புது மலர்ச்சியையும் தொழிற்திறனுடன் தன்னுள் இணைத்துக் கொள்ள முயல்கிறான். இது இல்லையேல் நேர்த்தியான பயிற்சிபெற்ற தனது பகைவர்களை எதிர்த்துத் தொழிலாளி வர்க்கம் விடாப்பிடியான போராட்டம் நடத்த முடியாது. இவ்வொரே வழியிலேதான் உழைப்பாளி மக்கள் பேபெல், ஆவுயெர் போன்ற தலைவர்களை உண்டாக்கித் தருகின்றனர்.ஆனால் அரசியல் வகையிலே சுதந்திரமாக உள்ள ஒரு நாட்டில் பெருமளவுக்குத் தன்னாலே நிகழக்கூடிய இது ரசியாவில் நம் அமைப்புகளால் முறைமையுடன் செய்யப்பட வேண்டும்.சிறிதளவேனும் ஆற்றலுள்ளவனாகவும் “முன்னுக்கு வரக் கூடியவனாகவுமுள்ள” தொழிலாளி – கிளர்ச்சியாளனைத் தொழிற்சாலையில் பதினொரு மணிநேரம் வேலை செய்யும்படி விட்டு வைக்கக்கூடாது. அவனைக் கட்சி காத்துப் பேணிவரும்படி நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
உரியகாலத்தில் அவன் தலைமறைவாகச் சென்றுவிடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவன் வேலை செய்யும் இடத்தை மாற்றிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யவேண்டும். அப்பொழுதுதான் அவன் தன் அனுபவத்தைப் பெருக்கிக் கொள்வான்; பார்வையை விரிவாக்கிக் கொள்வான்; போலீசு உளவாளிகளை எதிர்க்கும் போராட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு சில ஆண்டுகளுக்காயினும் சமாளித்து நிற்பான். தொழிலாளி வர்க்க மக்கள் திரளின் இயக்கத்தின் தன்னியல்பான எழுச்சி மேன்மேலும் அகன்றும் ஆழ்ந்தும் வர வர அம்மக்கள் திரள் தன்னிடையே இருந்து மேன்மேலும் அதிகரித்த எண்ணிக்கையில் ஆற்றலுள்ள கிளர்ச்சியாளர்களை மேலுக்குக் கொண்டு வருவதோடல்லாமல் ஆற்றல்மிக்க அமைப்பாளர்களையும், பிரச்சாரகர்களையும், (மிகச் சிறந்த அர்த்தத்தில்) ”நடைமுறை ஊழியர்களையும்” மேலுக்குக் கொண்டு வருகின்றது. (நம் அறிவுஜீவிகளிடையே நடைமுறை ஊழியர்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்கிறார்கள். ரசிய பாணியில், நம் அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் தம் பழக்கவழக்கங்களில் கொஞ்சம் கவனமற்றவர்களாகவும் மந்தமாகவும் இருக்கிறார்கள்).
விரிவான தயாரிப்புக்கு ஆளாகி உருப்பெற்ற, தனிச்சிறப்பான பயிற்சி பெற்ற தொழிலாளி – புரட்சியாளர்களின் (“சேவையின் எல்லாக் கிளைகளையும் சேர்ந்த” புரட்சியாளர்களும் இதில் அடங்குவர்) சக்திகள் நமக்கு கிடைக்கிறபொழுது உலகத்தில் எந்த அரசியல் போலீசாரும் அச்சக்திகளை எதிர்த்துச் சமாளிக்க முடியாமற் போகும். ஏனெனில் புரட்சிக்கு முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டுள்ள இச்சக்திகள் மிக விரைவான தொழிலாளர் மக்கள் திரளின் எல்லையில்லா நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருப்பார்கள். தொழிலாளர்களுக்கும் ”அறிவுஜீவிகளுக்கும்” பொதுவானதாக விளங்கும் முழுநேரப் புரட்சியாளனாக்கும் பயிற்சிக்குரிய இந்தப் பாதையில் தொழிலாளர்கள் செல்லும்படி ‘ஊக்கிவிடச் செயலாற்றுவது” மிகக் குறைவாக இருப்பதற்கான பழி நேரடியாக நம்மையே சேரும். தொழிலாளர் திரள், “சராசரித் தொழிலாளர்கள்” என்றெல்லாம் சொல்லப்படுபவர்களுக்கு “எட்டக் கூடியதாய் இருப்பது” எது என்பது பற்றி நாம் ஆற்றும் அசட்டுத்தனமான சொற்பொழிவுகளால் மிக அடிக்கடி அவர்களைப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் பழியும் நேராக நம்மையே சேரும்.
மற்றவை போல் இவ்விசயத்திலும் நம் அமைப்புத் துறைப் பணி குறுகிய செயல் எல்லை கொண்டிருப்பதற்குக் காரணம் நாம் நம் தத்துவங்களையும், நம் அரசியல் பணிகளையும் ஒரு குறுகிய செயற்களத்தில் கட்டுப்படுத்தி விடுவதே (”பொருளாதாரவாதிகளில் மிகப் பெரும்பான்மையோரும் நடைமுறை வேலைகளில் கற்றுக் குட்டிகளாக இருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோரும் இதைப் பார்க்கிறதில்லை), இதில் ஐயமே இல்லை. தன்னியல்பிற்கு அடிபணிவதானது மக்கள்திரளுக்கு எட்டக்கூடியதாய் உள்ளதற்கு அப்பால் ஓர் அடியேனும் எடுத்து வைக்காதபடி பீதியை உண்டாக்குகிறது போலும். மக்கள் திரளின் உடனடியான நேரடியான தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்கு அப்பால் வெகுதூரம் மேலே சென்று விடுவோமோ என்கிற பீதியை உண்டாக்குகிறது போலும். பெருமான்களே, பயப்படாதீர்கள், அமைப்பு மட்டத்தில் நாம் மிக மிகத் தாழ்ந்து உள்ளதால் அளவுக்கு மிஞ்சிய உயரத்திற்கு நாம் ஏறிவிட முடியும் என்கிற கருத்தே அபத்தமானது என்பதை நினைவில் வையுங்கள்!
குறிப்பு : 1*ஸ்வபோதா இதழ் 1, பக்கம் 66-இல் “அமைப்பு” என்ற கட்டுரையில் கூறுவதாவது : ”தொழிலாளர் படையின் கனமிக்க நடை ரசிய ‘உழைப்பாளர்கள்’ சார்பில் முன் வைக்கப்படும் எல்லாக் கோரிக்கைகளையும் பலப்படுத்தும்” – உழைப்பாளர்கள் என்கிற சொல்லைக் தடித்த எழுத்தில் போடுங்கள், உண்மையாக! மேலும், ஆசிரியர் கூவுகிறார்: “எனக்குப் படிப்பாளிப் பகுதியினர்பால் சிறிதேனும் பகை இல்லை, ஆனால்”… (ஆனால் இந்தச் சொல்லுக்குப் பொருள் “நெற்றிக்கு மேலே காதுகள் உயர வளர்வதேயில்லை’ என்று ஷெட்ரின் மொழிபெயர்த்தார்!) – “ஆனால் யாராவது ஒருவன் என்னிடம் வந்து அழகும் கவர்ச்சியும் மிக்க வார்த்தைகள் பேசி அவற்றின் (தன்னுடைய?) அழகுக்காகவும் மற்ற பண்பு நலன்களுக்காகவும் அவற்றை ஏற்கவேண்டும் என்று கோரினால் எனக்கு எப்போதும் பயங்கரமான எரிச்சல் வருகிறது’ என்று (பக்கம் 62), உண்மைதான், எனக்கும் கூட “எப்போதும் பயங்கரமான எரிச்சல் வருகிறது.”
(தொடரும்)
நூல் : என்ன செய்ய வேண்டும்? ஆசிரியர் :லெனின் பக்கம் : 312 விலை : 180.00 வெளியீடு :புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கிடைக்குமிடம் : கீழைக்காற்று (73959 37703)
ரசிய பொருளாதாரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சியை சாதிக்கவல்ல சமூக-ஜனநாயகக் கட்சியை (கம்யூனிஸ்ட் கட்சியை) கட்டுவது குறித்த சித்தாந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1902-ம் ஆண்டு “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலை எழுதுகிறார் லெனின்.
இந்நூலில் “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்” எனும் தலைப்பின் கீழ் வரும் “அமைப்பு வேலையின் செயல் பரப்பு” எனும் உட்தலைப்பில் தொழில்முறைப் புரட்சியாளர்களைக் கொண்ட ஒரு அமைப்பு, தேர்ச்சி நயமின்மை எனும் பிரச்சினையிலிருந்து எவ்வாறு மீண்டு வரமுடியுமென்பதையும், தேர்ச்சிநயமிக்கவரை ஒரு புரட்சிகர அமைப்பு எப்படி உருவாக்க முடியுமென்பதையும், அத்தகையவர்களை எப்படி தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியுமென்பதையும் விவரிக்கிறார் லெனின்.
வினவு
***
அமைப்பு வேலையின் செயல்பரப்பு
“செயலாற்றத் தகுதியுள்ள புரட்சிச் சக்திகள் போதாதிருப்பதை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மட்டுமின்றி ரசியாவெங்கும் உணர்ந்திருக்கிறார்கள்” என்பது பற்றி B-v சொல்லக் கேட்டிருக்கிறோம். இவ்விசயத்தை அநேகமாக யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால், இதை எப்படி விளக்குவது என்பதே கேள்வி. B-V எழுதுகிறார்:
“இந்நிகழ்ச்சித் தோற்றத்திற்குரிய வரலாற்றுக் காரணங்களை நாம் விளக்கப் புகவில்லை . நீடித்த அரசியல் பிற்போக்காலும், சென்றகால, நிகழ்காலப் பொருளாதார மாற்றங்களால் ஏற்பட்ட பிளவாலும் மனமுடைந்து போன ஒரு சமுதாயம், புரட்சி வேலைக்குத் தகுதியுள்ள மிகச் சில நபர்களையே தன் மத்தியிலிருந்து மேலுக்குக் கொண்டு வருகிறது. புரட்சிகரமான ஊழியர்களைத் தொழிலாளி வர்க்கம் உண்டாக்கித் தரத்தான் செய்கிறது. அவர்கள் சட்டவிரோதமான அமைப்புகளின் அணிகளை ஓரளவுக்குப் பெருக்குகிறார்கள், ஆனால் இப்படிப்பட்ட புரட்சியாளர்களின் தொகை காலத்தின் தேவைகளுக்குப் போதாமலிருக்கிறது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.
மேலும், அப்படி இருக்கக் காரணம்: தொழிலாளி நாள் தோறும் தொழிற்சாலையில் பதினொன்றரை மணிநேரம் செலவழிக்கிறான். எனவே, முக்கியமாய், அவன் ஒரு கிளர்ச்சியாளனாக மட்டுமே பணியாற்ற முடியும். ஆனால், பிரச்சாரம், அமைப்புத் துறை, சட்டவிரோதமான இலக்கியத்தைச் சேர்ப்பிப்பது, பிரதியெடுப்பது, துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவது முதலிய கடமைகள் அவசியமாகவே வெகு சில அறிவுஜீவிகள் மீதுதான் முக்கியமாக விழவேண்டியுள்ளது” (ரபோச்சியே தேலோ, இதழ் 6, பக்கங்கள் 38-39).
பல அம்சங்களில் நாம் B-v யுடன் உடன்படவில்லை . குறிப்பாக, நாம் வலியுறுத்தியுள்ளவையுடன் உடன்படவில்லை. இவை தெளிவாகக் காட்டுவதாவது: நமது தேர்ச்சி நயமின்மை குறித்து (சிந்திக்கும் ஒவ்வொருவரையும் போலவே) மலவே) B-V அலுத்துக் கொண்டாலும் இந்த சகிக்கவொண்ணாத நிலைமையிலிருந்து மீளும் வழியை அவரால் கண்டு கொள்ள முடியவில்லை. காரணம், ”பொருளாதாரவாதம்’ அவரை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், “இலட்சியத்துக்கு”த் தகுதியுள்ள மிகப் பல நபர்களைச் சமுதாயம் உண்டாக்கித் தருகிறது. நாம்தான் அவர்கள் அனைவரையும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறோம்.
இவ்விசயத்தில் நம் இயக்கத்தின் நெருக்கடியான, பரிணமிப்பு நிலைக்குரிய கட்டத்தைப் பின்வருமாறு வரையறுக்கலாம். அதாவது, ஊழியர்களே இல்லை – எனினும் ஊழியர்கள் திரள் திரளாக இருக்கவே செய்கிறார்கள். ஊழியர்கள் திரள் திரளாக இருக்கக் காரணம், ஆண்டு தோறும் தொழிலாளி வர்க்கமும் மேன்மேலும் வேறுபட்ட சமுதாயப் பிரிவுகளும் தம்மிடையேயிருந்து அதிகரித்துவரும் எண்ணிக்கையில் அதிருப்தியடைந்த நபர்களை உண்டாக்கியவாறு இருக்கிறது. இவர்கள் கண்டனம் தெரிவிக்க விரும்புகிறார்கள், எதேச்சதிகார ஆட்சி முறையை எதிர்த்து நடக்கிற போராட்டத்தில் தம்மாலான உதவியனைத்தும் அளித்திடத் தயாராயிருக்கிறார்கள். இந்த எதேச்சாதிகார ஆட்சிமுறையைச் சகிக்க முடியாது என்பதை எல்லோரும் அங்கீகரிக்கவில்லையாயினும் மேன்மேலும் அதிகமான மக்கள் திரள் தீவிரமாக உள்ளூர உணர்ந்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் நம்மிடம் ஊழியர்கள் இல்லாதிருக்கக் காரணம், மிகமிக அற்பமான சக்திகளையும் உள்ளிட்ட எல்லாச் சக்திகளையும் பயன்படுத்தும் வகையில் விரிவாயும், அதேநேரத்தில் சமச்சீராகவும், இசைவாகவும் வேலையை ஒழுங்குபடுத்திச் சித்தம் செய்ய திறமையுள்ள தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஆற்றல் மக்க அமைப்பாளர்கள் நம்மிடம் இல்லை. ”புரட்சிகரமான அமைப்புகளின் வளர்ச்சியும், பெருக்கமும்” தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பின்னடைந்திருப்பது மட்டுமல்ல (இதை B-v கூட ஒப்புக் கொள்கிறார்), எல்லா மக்கட் பிரிவுகளிடையேயுமுள்ள பொதுவான ஜனநாயக இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பின்னடைந்திருக்கிறது. (தமது முடிவுக்கு இணைப்பாக உள்ளதாக B-V இதைப் பெரும்பாலும் கருதக்கூடும் என்று போகிற போக்கில் சொல்லிவைப்போம்).
இயக்கத்தின் தன்னியல்பான அடிப்படையின் விரிவுடன் ஒப்பிடுகையில் புரட்சி வேலையின் செயல்பரப்பு மிகக் குறுகியதாக உள்ளது. “முதலாளிகளுக்கும், அரசாங்கத்துக்கும் எதிரான பொருளாதாரப் போராட்டம்” எனும் படுமோசான தத்துவம் இதை வேலிபோட்டு மிகவும் குறுக்கிவிட்டுள்ளது. ஆனால், தற்சமயம் அரசியல் கிளர்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல் சமூக – ஜனநாயகவாத அமைப்பாளர்களும் “மக்களைச் சேர்ந்த எல்லா வர்க்கங்களிடையேயும் சென்று” தீரவேண்டும்1*.
சமூக ஜனநாயகவாதிகள் தம் அமைப்புத்துறை வேலையைச் சேர்ந்த ஆயிரத்தொன்று சிறுசிறு செயற்கூறுகளை மிகவும் வேறுபட்ட வர்க்கங்களின் தனித்தனி பிரதிநிதிகளிடையே வினியோகிக்க முடிகிறதைப் பற்றி ஒரு நடைமுறை ஊழியனுக்கும் ஐயமிராது. நம் தொழில் நுணுக்கத்தின் மிக மோசமான குறைபாடுகளில் தனித் தேர்ச்சியின்மையும் ஒன்றாகும். இதைப் பற்றி B-V நியாயமாகவே கசப்புடன் குறைப்பட்டுக் கொள்கிறார். நம் பொது இலட்சியப்பணியில் ஒவ்வொரு தனித்தனி “செயற்கூறும்” எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அப்படிப்பட்ட செயற்கூறுகளைச் செய்து முடிக்கத் திறமையுள்ள நபர்கள் அதிகமாகக் கிடைப்பார்கள் (இவர்களில் பெரும்பாலோர் முழுநேரப் புரட்சியாளர்களாகும் திறமை சிறிதேனும் இராதவர்களே). அவ்வளவுக்கவ்வளவு போலீசுக்கும் இந்த ”நுணுக்கப் பிரிவு ஊழியர்கள்” அனைவரையும் “பிடிப்பது” அதிகக் கடினமாயிருக்கும். ”பாதுகாப்பிற்காக” அரசாங்கம் செலவழிப்பதை நியாயப்படுத்தும் அளவிற்கு ஒரு சில்லறை விவகாரத்திற்காகக் கைது செய்து “வழக்கு” ஜோடிப்பதும் அதிகக் கடினமாகி விடும்.
நமக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை, சென்ற ஐந்தாண்டு வாக்கில் நிகழ்ந்துள்ள மாபெரும் மாற்றத்தை முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். மறுபுறத்தில், இந்தச் சின்னஞ்சிறு கூறுகளை ஒரு முழுமையாக ஒன்றுபடுத்துவதற்கும், இயக்கத்தின் செயற்கூறுகளைப் பிரிக்கும் அதேநேரத்தில் இயக்கத்தையே உடைத்தெறியாமல் இருப்பதற்கும், இந்தச் சின்னஞ்சிறு செயற்கூறுகளை நிறைவேற்றி வரும் நபர்கள் தாங்கள் செய்யும் வேலை அவசியமானதென்றும், முக்கியமானதென்றும் உறுதியான நம்பிக்கை ஊட்டுவதற்கும் (இந்த நம்பிக்கை இல்லையேல் அவர்கள் என்றைக்கும் வேலை செய்யமாட்டார்கள்)2*புடம் போட்ட புரட்சியாளர்களைக் கொண்ட வலுவான அமைப்பு இருத்தல் அவசியம்.
இவ்வகை அமைப்பு எவ்வளவுக்கெவ்வளவு இரகசியமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலாகக் கட்சியின் மீதுள்ள நம்பிக்கை பலமாகவும். பரவலாகவும் இருக்கும். போர்க்காலத்தில், நம் சொந்த இராணுவம் தன் பலத்தில் நம்பிக்கைக் கொள்ளச் செய்வது மட்டுமின்றி அந்த பலத்தைப் பற்றி எதிரிக்கும், எல்லா நடுநிலைச் சக்திகளுக்கும் உறுதியாக உணர்த்துவதும் மிக மிக முக்கியம். நேசமுள்ள நடுநிலை சில சமயம் விவகாரத்தையே தீர்மானிக்கக் கூடியதாய் இருக்கும்; இதை நாம் அறிவோம்.
உறுதியான தத்துவார்த்த அடிப்படையில் கட்டப்பட்டும், சமூக-ஜனநாயகவாதப் பத்திரிக்கை ஒன்று வைத்துக் கொண்டும் இருக்கிற இவ்வகை அமைப்பு இருக்குமேயானால், இயக்கத்தின்பால் ஈர்க்கப்படும் எண்ணற்ற ”அந்நிய நபர்கள்” இயக்கத்தைத் தடம் புரளச் செய்வார்கள் எனும் பயம் நமக்கு ஏற்படக் காரணமிராது. (மாறாக, தேர்ச்சி நயமின்மை நிலவும் இந்தக் காலத்திலேதான் பல சமூக-ஜனநாயகவாதிகள் “Credo” பால் சாய்வதையும் வெறுமே தங்களைச் சமூக-ஜனநாயகவாதிகள் என்று கற்பனை செய்து கொள்வதையும் காண்கிறோம்.) சுருங்கச் சொன்னால், தனித் தேர்ச்சி மையப்படுத்தலின் அவசியத்தை முன்னுணர்கிறது. அதே நேரத்தில் அதை நிச்சயமாகக் கோருகிறது.
குறிப்புகள் :
1* இப்படித்தான், சந்தேகமின்றி அண்மையில் இராணுவ சேவை புரிகிற நபர்களிடையே ஜனநாயக உணர்ச்சி மீண்டும் தோன்றியுள்ளதைக் காண்கிறோம்; தொழிலாளிகள், மாணவர்கள் போன்ற “பகைவர்களுடன்” முன்னைவிட அடிக்கடி நடக்கிற தெருப்போராட்டங்களினால் ஓரளவுக்கு ஏற்பட்ட விளைவு இது. நம்மிடமுள்ள சக்திகள் இடங்கொடுக்கும் அளவுக்கு விரைவிலே நாம் படைவீரர்களிடையேயும், அதிகாரிகளிடையேயும் கிளர்ச்சியும், பிரச்சாரமும் செய்வதிலும், நம் கட்சியுடன் இணைப்புள்ள “இராணுவ அமைப்புகளைப்” படைப்பதிலும் தவறாமல் மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்தவேண்டும்.
2* ஒரு தொழிற்சாலைக் கண்காணிப்பாளரைப் பற்றி ஒரு தோழர் ஒரு சமயம் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கண்காணிப்பாளர் சமூக-ஜனநாயகவாதிகளுக்கு உதவ விரும்பினார். உதவவும் செய்தார். ஆனால் தான் கொடுக்கும் “தகவல்” பொருத்தமான புரட்சி மைய அமைப்பிடம் போய்ச் சேர்ந்ததா? எந்த அளவுக்கு உண்மையிலே தன் உதவி தேவைப்படுகிறது? தன் அற்பசொற்பமான சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்குச் சாத்தியப்பாடுகள் என்ன? என்பது பற்றித் தனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று கசப்புடன் குறை தெரிவித்தார்.
இதுபோன்ற பல உதாரணங்களை ஒவ்வொரு நடைமுறை ஊழியரும் கொடுக்க முடியும் என்பது உண்மை . நமது பக்குவமின்மையால் நாம் துணைச் சக்திகளை இழந்ததை இவை காட்டுகின்றன. இந்தச் சேவை ஒவ்வொன்றும் தன்னளவில் ”சிறியது’ ஆயினும் மொத்தத்தில் பார்க்கையில் விலைமதிக்கொணாதது. தொழிற்சாலைகளிலுள்ள அலுவலகப் பணியாளர்களும் அலுவலர்களும் மட்டுமல்லாமல், அஞ்சல், இரயில்வே, தீர்வைத் துறைகளிலும், பிரபு வம்சத்தினர், பாதிரிமார் இடையேயும், போலீசு, அரசவைத் துறைகளையும் உள்ளிட்ட எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் அலுவலகப் பணியாளர்களும், அலுவலர்களும் நமக்கு இந்தச் சிறிய சேவைகளை அளிக்க முடியும்; அளிப்பார்கள்!
நம்மிடம் உண்மையான கட்சி இருந்தால், புரட்சியாளர்களைக் கொண்ட உண்மையான செயல்துடிப்புள்ள அமைப்பு இருந்தால், இந்தத் துணையாட்கள்” ஒவ்வொருவரிடமும் தகுதிக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்யக் கொடுக்கமாட்டோம்; நம் “சட்டவிரோத நிலையின்” மையத்திற்கு எப்போதும் அவர்களைக் கொண்டுவர துடிக்க மாட்டோம். மாறாக, அவர்களைப் பத்திரமாகச் சேமித்து வைப்போம். குறிப்பாக இப்படிப்பட்ட வேலைகளுக்கென்று நபர்களைப் பயிற்றுவிக்கவும் செய்வோம். ”குறுகியகால” புரட்சியாளர்களாக இருப்பதைவிட ஏதாவது அதிகாரபூர்வமான பதவியை வகித்துவரும் நிலையில் பல மாணவர்கள் உதவியாளர்களாக எவ்வளவோ அதிகமாகச் சேவை செய்யக் கூடியவர்களாக இருக்க முடியும். எனினும், உறுதியாக நிலை நாட்டப்பட்டுத் தீவிரமாகப் பணியாற்றும் சக்திகளைக் கொண்டு இருக்கிற அமைப்புக்கு மட்டுமே இப்படிப்பட்ட செயல்தந்திரங்களைச் செயல்படுத்தும் உரிமையிருக்கும்.
(தொடரும்)
நூல் : என்ன செய்ய வேண்டும்? ஆசிரியர் :லெனின் பக்கம் : 312 விலை : 180.00 வெளியீடு :புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கிடைக்குமிடம் : கீழைக்காற்று (73959 37703)
ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய் ! மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய் ! தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்காதே !
நீட் தேர்வின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நீட் தேர்வு என்பது நவீன கால மனுநீதியே என்பதை அம்பலப்படுத்தும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தட்சணையாக ஏகலைவனின் கட்டை விரலை துரோணாச்சாரி வெட்டிக் கேட்டு அவன் திறனை முடக்கியது போல, இன்று கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை வெட்டி எறியவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அப்படி தமது மருத்துவக் கனவு வெட்டியெறியப்பட்டதன் காரணமாகவே பல மாணவர்கள் மனமொடிந்து தற்கொலையை நோக்கிச் செல்கின்றன. நவீன மனுநீதியான இந்த நீட் தேர்வை உடனடியாக தடுத்து நிறுத்தாவிடில் இன்னும் பல உயிர்களை நாம் இழக்க வேண்டிய சூழலே ஏற்படும்.
நீட் தற்கொலைகளுக்குக் காரணமான மத்திய மாநில அரசுகளின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து நீட் தேர்வை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 of 8
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா மற்றும் ம.க.இ.க புரட்சிகர கலைக் குழுவைச் சேர்ந்த தோழர் லதா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ப்ரீத்திவ், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் சுந்தர்ராஜ் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் கமலக்கண்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் புதியவன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் கனகராசு, மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் நிறுவனர் தோழர் பஷீர், மக்கள் உரிமைக் கூட்டணி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஐயா சின்னதுரை, தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ரமணா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் தோழர் சந்தான மொழி, ரெட் பிளாக் கட்சியின் தோழர் ஏசி ராமலிங்கம், மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் ராஜா, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு அமைப்பின் தோழர்கள், நண்பர்கள் பெருந்திரளாகக் கூடி திருச்சியில் இன்று 13.09.2020 காலை 11.30 மணியளவில் பாலக்கரை பிரபாத் தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.
பிறகு தோழர்கள் அனைவரும் நீட் தேர்வின் அபாயத்தை விளக்கிப் பேசினார்கள். நீட் தேர்வுக்கு முடிவு கட்டும் வரை தமிழகம் முழுவதும் எமது அமைப்புகள் மற்றும் முற்போக்கு,ஜனநாயக அமைப்புகளின் போராட்டம் தொடரும் என அறைகூவல் விடுத்தனர். இறுதியாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு வந்திருந்த அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
மார்ட்டோவின் கருத்துப்படி, நமது கட்சி என்பது நமது கட்சித்திட்டம் மற்றும் இன்ன பிறவற்றை ஏற்றுக் கொண்ட தனிப்பட்ட ”சமூக-ஜனநாயகவாதிகள்” மற்றும் உள்ளூர் அமைப்புகளின் கதம்பத் திரளே தவிர அது ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல என்பது தெளிவாகிறது. ஆனால் நமது கட்சி ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாக இல்லையென்றால் அது ஒரு கோட்டையாகத் திகழ முடியாது.
அதாவது கட்சியின் கதவுகள் சோதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் திறந்து அனுமதி வழங்காது. கட்சி என்பது ஒரு கோட்டையாக இல்லாமல் கட்சி மீது அனுதாபம் உள்ள ஒவ்வொரு அனுதாபியும் சுதந்திரமாகக் கலந்து கொள்ளும் விருந்துக் கூடமாக இருக்க வேண்டும் என்பதையே மார்ட்டோவ் சூத்திரம் தெளிவுபடுத்துகிறது. ஒரு சிறு அறிவு, அதற்கு இணையான அளவு அனுதாபம், கொஞ்சம் நிதி ஆதரவு ஆகிய இவை உங்களிடம் இருந்தால் – உங்களை ஒரு கட்சி உறுப்பினர் என்று கணக்கில் எடுத்துக்கொள்ள முழு உரிமையும் உள்ளது.
பீதியுற்று இருக்கும் “கட்சி உறுப்பினர்களுக்கு” மார்ட்டோவ் அவர்கள் உற்சாகம் தருவதற்கு – நமது கோட்பாடுகளைக் கவனிக்காதீர்கள் என்று கூச்சலிடுகிறார். கட்சி உறுப்பினர்கள் என்பவர்கள் கட்சி அமைப்புகள் ஏதாவது ஒன்றில் இருந்து கொண்டு கட்சியின் நோக்கங்களுக்குத் தனது நோக்கத்தை கீழ்ப்படுத்த வேண்டும் என்று சொல்லும் நபர்களை கவனிக்காதீர்கள் என்கிறார்.
முதல் முறையாக இந்நிபந்தனைகளை ஒரு மனிதன் ஏற்பது சிரமமானதாகும்; கட்சியின் நோக்கங்களுக்கு ஒருவரது நோக்கத்தை கீழ்ப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல! மேலும், இரண்டாவதாக, நான் எனது விளக்கத்தில் ஏற்கெனவே கூறியபடி, இப்படியெல்லாம் சொல்லுவோரின் கருத்து தவறானது என்ற காரணத்தால் கனவான்களே நீங்கள் விருந்து கூடத்துக்கு வாரீர் என்று மார்ட்டோவ் கூக்குரலிடுகிறார்.! சால பேராசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கட்சியின் நோக்கங்களுக்குத் தமது நோக்கத்தைக் கீழ்ப்படுத்த விரும்பாததற்கு வருந்துபவராக மார்ட்டோவ் தோன்றுகிறார்.
எனவேதான் அவர் நமது கட்சிக் கோட்டையில் ஓர் உடைப்பை உருவாக்கி அதன் வழியாக இந்த மேன்மைமிகு கனவான்களை கட்சிக்குள் கடத்திக் கொண்டுவர முயற்சிக்கிறார். பாட்டாளி வர்க்கத்தினரின் வர்க்க உணர்வின் மீது ஆயிரக்கணக்கான எதிரிகள் தாக்குதல் தொடுக்கும் இச்சமயத்தில்தான் அவர் கட்சியின் கதவுகளை சந்தர்ப்பவாதத்துக்குத் திறந்து வைக்கிறார்!
ஆனால் அதுவே முழுமை அல்ல. மார்ட்டோவின் நம்பகமற்ற சூத்திரமானது சந்தர்ப்பவாதம் நமது கட்சிக்குள் மற்றொரு பக்கத்தில் இருந்து எழுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதையே இங்கு நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.
நாம் அறிந்தவாறு, மார்ட்டோவின் சூத்திரமானது, கட்சித் திட்டத்தை ஏற்பது பற்றி மட்டுமே விவரிக்கிறது, செயலுத்திகள் மற்றும் அமைப்பு விதிகள் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. ஆயினும், திட்டத்தைப் பற்றிய ஒன்றுபட்ட நிலைப்பாடுகளை விட அமைப்பு விதிகள் மற்றும் செயலுத்தி நிலைப்பாடுகளின் ஒற்றுமை, என்பன தலையாயவை அல்ல என்று சொல்ல முடியாது. தோழர் லெனினின் சூத்திரத்தில் கூட இதைப்பற்றி ஒன்றும் சொல்லப்பட வில்லை என்று கூட நம்மிடம் சொல்வார்கள்.
உண்மைதான், ஆனால் தோழர் லெனினின் சூத்திரத்தில் அதைப்பற்றி சொல்வதற்குத் தேவை எதுவும் இல்லை. கட்சி அமைப்பு ஒன்றில் செயல்படும் ஒரு நபர் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, கட்சியுடன் ஒத்திசைந்து போராடும் போது கட்சியின் செயலுத்திகள் மற்றும் அமைப்பு விதிகளை அன்றி வேறு எந்த செயலுத்திகளையும், அமைப்பு விதிகளையும் கடைபிடிக்க முடியாது என்பது வெளிப்படையானது இல்லையா? ஆனால், கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்ட “ஒரு கட்சி உறுப்பினர்” மறுபுறம் ‘கட்சி அமைப்பு’ எதிலும் இணைந்து இல்லாதபோது நாம் என்ன சொல்லமுடியும்?
இவ்வாறான ஒரு ”உறுப்பினரின் செயலுத்திகளும், அமைப்பு விதிகளும் கட்சி வகுத்தபடிதான் இருக்குமேயன்றி வேறு வகையில் இருக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது? மார்ட்டோவின் சூத்திரம் இதைத்தான் விளக்கத் தவறுகிறது! மார்ட்டோவ் சூத்திரத்தின் விளைவால் நமக்கு விந்தையான ஒரு ”கட்சி” கிடைக்கிறது, அதன் ‘உறுப்பினர்கள் அதே திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் (அதுவும் கேள்விக்குரியதே!) ஆனால் தமது செயலுத்தி மற்றும் அமைப்பு விதிகள் தொடர்பான கொள்கைகளில் வேறுபட்டிருப்பார்கள் என்னே ஒரு முன்மாதிரியான வகை! எந்த வகையில் நமது கட்சி ஒரு விருந்து கூடத்திலிருந்து வேறுபட்டு உள்ளது?
நாம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி: இரண்டாவது கட்சிப் பேராயம் நம்மிடம் ஒப்படைத்த சித்தாந்த மத்தியத்துவத்தையும் நடைமுறை மத்தியத்துவத்தையும் நாம் என்ன செய்வது? மார்ட்டோவின் சூத்திரத்தில் இருந்து அது முற்றிலும் முரண்பட்ட நிலையில் உள்ளதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். ஒருவேளை எதைத் தாக்கியெறிவது என்ற வாய்ப்பு வழங்கப்படுமெனில் ஐயமின்றி மார்ட்டோவின் சூத்திரத்தை தூக்கியெறிய வேண்டும் என்பதே மிகச் சரியானதாக இருக்கும்.
அந்த அளவிற்கு தோழர் லெனினின் சூத்திரத்துக்கு எதிராக மார்ட்டோவின் சூத்திரம் முட்டாள்தனமானதாக உள்ளது என்கிறோம்!
மார்ட்டோவின் சூத்திரத்தை ஏற்று, முடிவு எடுத்து இரண்டாவது கட்சிப் பேராயம் மாபெரும் தவறிழைத்து விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். மூன்றாவது கட்சிப் பேராயமானது இத்தவறை சரிசெய்யும் வகையில் தோழர் லெனினின் சூத்திரத்தை ஏற்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மீண்டும் ஒருமுறை சுருக்கமாகச் சொல்கிறோம்: பாட்டாளி வர்க்கப் படை அரங்கில் நுழைந்துவிட்டது. ஒவ்வொரு இராணுவமும் தனக்கான முன்னணிப்படையைப் பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்பாட்டாளி வர்க்கப் படையும் ஒரு முன்னணிப் படையைப் பெற்றிருக்க வேண்டும். இதனால் ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி எனும் பாட்டாளிவர்க்கத் தலைவர்களின் குழு தோன்றுகிறது.
ஓர் உறுதிவாய்ந்த இராணுவத்தின் முன்னணிப் படையாக உள்ள இக்கட்சியானது முதலில் தனக்கானத் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்புவிதிகளைக் கொண்டு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக இக்கட்சி ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாகவும் திகழ வேண்டும். ரசிய சமூக-ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் என யாரை அழைக்க முடியும்? என்ற கேள்விக்கு: எவர் ஒருவர் இக்கட்சியின் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, கட்சிக்கு நிதி ஆதரவு வழங்கி, கட்சியின் அமைப்புகள் ஒன்றில் செயல்படுகிறாரோ அவரே கட்சி உறுப்பினர் என்று இக்கட்சி ஒரே விடையை அளிக்க முடியும்.
இந்த ஐயத்துக்கிடமற்ற உண்மையைத்தான் தோழர் லெனின் தனது மிகச்சிறந்த சூத்திரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
புரோலிடேரியடிஸ் இப்ர்ட்சோலா (பாட்டாளி வர்க்கப் போராட்டம்) எண் 8
ஜனவரி 1, 1905
கையெழுத்திடப்படவில்லை.
ஜார்ஜிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.