Tuesday, July 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 423

அகண்ட பாரத கனவும் 40 லட்சம் அஸ்ஸாமிய அகதிகளும் ! மு.வி. நந்தினி

bangladeshi

மு.வி.நந்தினிமுதல் உலகப்போருக்குப் பின் 1920-1939 வரை யூதர்கள் குறித்து நாசி ஹிட்லர் செய்த பரப்புரைகள் ஜெர்மானியர்களை இனப் படுகொலையாளர்களாக  தயார்படுத்தின. யூதர்கள் ஜெர்மனி நாட்டிற்க்கு அந்நியமானவர்கள் என்ற ஹிட்லர்,  முதல் உலகப் போரில் தோல்வியை சந்தித்ததற்கும் ஜெர்மானியர்கள் எதிர்கொண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் யூதர்களே காரணம் என்கிற ‘சதிக் கோட்பாட்டை’ முன்வைத்தார். ‘நம்மிடையே கலந்திருக்கும் யூதர்களை வெளியேற்றுதல்’ என துவங்கிய பிரச்சாரம், லட்சக்கணக்கான யூதர்களை படுகொலை செய்ததில் வந்து முடிந்தது.

Hitler
அடால்ஃப் ஹிட்லர்

வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் மட்டுமல்ல இப்போது இந்தியாவிலும் திரும்பியிருக்கிறது.  அனைத்து பிரச்சினைகளுக்கும் யூதர்களே காரணம் என சதிக்கோட்பாட்டை உருவாக்கிய ஹிட்லரைப் போல இன்று ட்ரம்பும் மோடியும் முஸ்லிம்களை கை காட்டுகிறார்கள். படுகொலை முகாம்களுக்குள் அனுப்பப்படும் முன் பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரித்து தனித்தனியாக அடைத்த நாசிக்களின் பாதையை, நாகரீக நாடு எனச் சொல்லப்படும் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் பின்பற்றுகிறார். அகதிகளாக வரும் அந்நியர்கள் (முஸ்லிம்கள்) நாட்டின் பாதுகாப்புக்கு  அச்சுறுத்தலாக இருப்பதாக  ஹிட்லரின் சதிக்கோட்பாட்டை மோடி அரசு வாசிக்கிறது. 40 லட்சம் மக்களை அந்நியர்கள் என சொல்லி அஸ்ஸாமிலிருந்து விரட்டியடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த அரசு.

அஸ்ஸாமிய அகதிகள்
ஹிமாந்த பிஸ்வ சர்மா

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியானது. அருகில் உள்ள வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக அஸ்ஸாமிற்க்குள் குடியேறுவதைத் தடுக்க ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’ இந்திய அரசால் 1951-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இதன்படி பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேஷ் என்ற தனிநாடு உருவானதற்கு முன் அதாவது, 1971 மார்ச் 24-ஆம் தேதி வரை அஸ்ஸாமில் பிறந்தவர்கள், பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே ‘குடிமக்கள்’. அதன் பின் வந்தவர்கள் அந்நியர்கள்.  அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கணக்கெடுக்கும் பணி  2014-2016 வரை நடைபெற்றது. இந்த பதிவேட்டின் வரைவில் அஸ்ஸாமில் வசிக்கும் 2.89 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர். 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர். இதில் 2 லட்சம் பேருக்கு மட்டுமே, தக்க சான்றிதழ் கொடுத்து குடிமக்கள் பதிவேட்டில் மீண்டும் இணைத்துக் கொள்ள வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. மீதியுள்ளவர்கள் அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டு தங்களுடைய ‘சொந்த’ நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்கிறது அரசு.

அனைத்து பிரச்சினைகளுக்கும் யூதர்களே காரணம் என சதிக்கோட்பாட்டை உருவாக்கிய ஹிட்லரைப் போல இன்று ட்ரம்பும் மோடியும் முஸ்லிம்களை கை காட்டுகிறார்கள்.

1971 மார்ச் 24-ஆம் தேதிக்குப் பின் அஸ்ஸாமில் குடியேறிய பக்கத்து மாநிலமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களும் அந்நியர்களாக கருதப்படுவார்கள். ஒரே நாடுதான் ஆனால், அந்நியர்! சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் குடிமக்கள்-அந்நியர் என்பது மட்டுமே பிரச்சினையில்லை. இந்துத்துவ மோடி அரசுக்கு முஸ்லீம்களின் மீதுள்ள வெறுப்பு மிக முக்கிய காரணம். இந்த வெறுப்பு நாசி ஹிட்லரின் யூத வெறுப்பை ஒத்துள்ளது.

அகண்ட பாரதம்
ஒரு முஸ்லீம் என்பதால் “ D-voter ” எனும் சந்தேக வாக்காளர் நிலைக்கு தள்ளப்பட்ட கிஸ்மத் அலி பல சட்ட போராட்டங்களுக்கு பின்னர் தான் நாட்டின் குடியுரிமை பெற்றார்

தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் லோத் இப்படி சொல்கிறார், “சட்ட விரோதமாக குடியேறியிருக்கும் பங்களாதேஷிலிருந்து வந்தவர்களும் ரொஹிங்கியாக்களுக்கும் வெளியேறாவிட்டால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும். பங்களாதேஷ் பிரிவினையின் போது  அஸ்ஸாமுக்குள் 40 லட்சம் பேர் ஊடுருவி சட்ட விரோதமாக தங்கி விட்டனர். இந்தியாவை அழிக்கும் ‘சதி’யின் ஒரு பகுதியாக  இவர்கள் ஊடுருவியிருக்கிறார்கள் ”. ஜெர்மன் தேசியத்தை முன்னெடுத்து ‘யூதர்களின் சதி’யை பிரச்சாரமாக்கி மக்களை கொன்றொழித்த நாசியின் தொனி தெரிகிறதல்லவா?

சட்ட விரோதமாக குடியேறியிருக்கும் பங்களாதேஷிலிருந்து வந்தவர்களும் ரொஹிங்கியாக்களுக்கும் வெளியேறாவிட்டால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்.

“நீங்கள் மனித உரிமை குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அஸ்ஸாம் மக்களுக்கு மனித உரிமை தேவையில்லையா? இந்த நாட்டு மக்களுக்கு எந்த உரிமையும் வேண்டாமா? சட்டவிரோதமாக எல்லையில் ஊடுருவிக் கொண்டிருந்தால் இந்த நாடு எப்படி இயங்கும்? சட்ட விரோதமாக குடியேறுகிறவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு தேச பாதுகாப்புக்கானது; ஊடுருவல்காரர்களை தடுக்கக் கூடியது” என்கிறார் மோடியின் கோயபல்ஸ் அமித் ஷா.

துணை ராணுவப் படையின் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கிராம மக்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ’பங்களாதேஷ் குடியேறிகள், அந்நியர்கள், ஆபத்தானர்கள்’ என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்து ஆட்சிக்கு வந்தது பாஜக. அஸ்ஸாம் ஜிகாதி முஸ்லிம்களின் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸிலிருந்து பிரிந்து 11 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் தஞ்சம் புகுந்த ஹிமாந்த பிஸ்வ சர்மா சட்டப்பேரவை தேர்தலின் போது பிரச்சாரம் செய்தார்.

மண்ணின் மைந்தர்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என தொடர்ந்த பிரச்சாரம் பாஜகவை ஆட்சியில் அமர்த்தியது.  முதலில் வைஷ்ணவ மடங்களுக்குச் சொந்தமான நிலத்தை  ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி இஸ்லாமிய அகதிகளை விரட்டியது அஸ்ஸாம் அரசு.  2017 செப்டம்பர் மாதம் கசிரங்கா சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்ததாகக் கூறி 200 கட்டடங்களை இடித்துத் தள்ளினார்கள்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய போது  துணை ராணுவப் படையின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். வனப்பகுதி ஆக்கிரமிப்புக்குள்ளானதல்ல என்றும், கசிரங்கா சரணாலயத்தின் விஸ்தரிப்புக்காக மாநில அரசு சமீபத்தில்தான் அப்பகுதியை கேட்டிருந்தது என்றும் ஆதரங்களோடு செய்தி வெளியானது. ஆனாலும் அம்மாநில அரசு ‘பங்களாதேஷ்’ குடியேறிகள் என்ற பதங்களைப் பயன்படுத்தி ஏழைகளை குறிப்பாக, இஸ்லாமியர்களை விரட்டத் தொடங்கியது. அஸ்ஸாமிலிருந்து பங்களாதேஷிகளை துடைத்தெடுக்கும்வரை இந்தப் பணி தொடரும் என அம்மாநில நிதியமைச்சர் அறைகூவல் விடுக்கிறார்.

இந்துத்துவ கும்பலுக்கும் ஆட்சியைப் பிடிப்பது மட்டும் இலக்கு அல்ல, மதவாதமும்,முஸ்லீம்கள் நீக்கப்பட்ட ‘இந்து தேசிய அகண்ட பாரதமே’ அவர்களுடைய இறுதி இலக்கு.

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?
முசுலீம் மக்களை ஐ.எஸ்.ஐ ஏஜெண்டு – அகதி என்று மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டுதான் இந்த அகதி பிரச்சாரம்.
– கண்ணை மறைக்கும் காவிப் புழுதி தொடர் கட்டுரை

2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தில் இஸ்லாமிய அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக வசித்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறித்துவர்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுகிறவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். இவர்கள் ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அதாவது, பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்த ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் கழித்து இந்திய அரசே அவர்களுக்கு குடியுரிமை கொடுத்துவிடும்.

bangladeshi refugees in india
2014 – ல் அஸ்ஸாமின் பாக்‌ஷா மாவட்டத்தில் கிழக்கு வங்காளத்தை சார்ந்த முஸ்லீம்களின் வீடுகளை போடோ இராணுவம் கொளுத்தியது. எங்கு போவதென்று தெரியாமல் குடும்பத்துடன் செல்லும் முஸ்லீம்கள்.

இது பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்களுக்கும் பொருந்தும். இந்த கரிசனம் மியான்மரில் சிறுபான்மையினராக உள்ள ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு இல்லை. முஸ்லிம்களின் மீதுள்ள இந்த வெறுப்புதான் ஹிட்லரின் யூத வெறுப்புடன் ஒத்துள்ளது.

2014 பாஜக தேர்தல் அறிக்கையில் ‘இடருக்குள்ளாகும் அனைத்து இந்துக்களின் தாய்வீடாக இந்தியா திகழும்’ என தெரிவிக்கப்பட்டிருந்ததை இங்கே நினைவு கூறலாம். இந்து தேசியத்தை முன்வைத்து தயாராகிக் கொண்டிருக்கும் அகண்ட பாரத செயல்திட்டத்தின் ஒருபகுதியாகத்தான் அஸ்ஸாம் தேசிய கணக்கெடுப்பு வரைவு அட்டவணையில் 40 லட்சம் மக்கள் விடுபட்டுள்ளதை பார்க்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அஸ்ஸாமிய மக்களோடும் மொழியோடும் கலந்துவிட்ட  பங்களாதேஷிலிருந்து குடியேறிய முஸ்லிம்களை விரட்டுவது மதவெறியின் உச்சம்.

சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014 கட்டுரை

‘1930களில் நாசிக்களின் யூதவெறுப்பு யூதர்களுக்கு இடர்பாடுகளைத் தருவதாகவே இருந்தது. அதன்பின்பே இனப்படுகொலைகளை செய்தனர்.  இனவாத யூதஎதிர்ப்பு என்பது ‘இறுதி தீர்வை நோக்கியே(அதாவது கொன்றொழித்தல்) அன்றி, நாசி ஆட்சி இறுதி தீர்வு அல்ல’  என வரலாற்று ஆய்வாளர்கள் நாசி ஆரிய இனவாதத்தின் நோக்கத்தை எடுத்துரைக்கிறார்கள். இந்துத்துவ கும்பலுக்கும் ஆட்சியைப் பிடிப்பது மட்டும் இலக்கு அல்ல, மதவாதமும்,முஸ்லீம்கள் நீக்கப்பட்ட ‘இந்து தேசிய அகண்ட பாரதமே’ அவர்களுடைய இறுதி இலக்கு.

  • மு.வி.நந்தினி

கட்டுரைக்கு உதவியவை:
The Roots of Hitler’s Hate
BJP is Using Citizenship Act Amendment to Reinforce and Spread Hindutva in Assam
THE CITIZENSHIP (AMENDMENT) BILL, 2015

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடம் மாற்றுவது யாருக்காக ? | என்.ஜி.ஆர். பிரசாத் | ரகுமான் | நளினி | காணொளி

சென்னை – அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பில், கடந்த ஜூலை 27 அன்று, சென்னை உயர்நீதிமன்ற பார்கவுன்சில் அரங்கத்தில் ”சட்டக்கல்வியின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ஊடகவியலாலர் ரகுமான், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி ஆகியோர் ஆற்றிய உரையின் சாரம் மற்றும் காணொளி.

என்.ஜி.ஆர். பிரசாத் , ரகுமான் , நளினி
மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ஊடகவியலாளர் ரகுமான், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் பேசுகையில், சட்டக் கல்லூரியை இடம் மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது அரசு. அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சாலை வசதியோ, தங்கும் விடுதி வசதியோ இல்லாமல் இருக்கும் புதிய கல்லூரி வளாகத்திற்கு பேருந்து வசதியும் கிடையாது. ஆனால் இவை அனைத்து வசதிகளும் இருக்கும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடக் காத்திருக்கிறது அரசு. இதற்கு சட்டப் போராட்டம் மட்டுமே தீர்வல்ல, வீதியில் மாணவர்களும் , வழக்கறிஞர்களும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்று கூறினார்.

அடுத்ததாகப் பேசிய ஊடகவியலாளர் ரகுமான், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் அவர்களின் வாழ்நாள் முழுக்க வாதாடத் தடை விதித்தது வெள்ளைக்கார அரசு. பின்னர் லார்ட் வாலீஸ் எனப்படும் வெள்ளைக்கார நீதிபதி அத்தடையை நீக்கினார். அவர் நினைவாக தமது மகனுக்கு வாலீஸ்வரன் எனப் பெயர்சூட்டினார் வ.உ.சி. அன்றைய வெள்ளைக்கார அரசு எவ்வாறு இந்தியர்கள் மீது வாழ்நாள் தடை விதித்ததோ அதே சூழல்தான் இங்கு நிலவுகிறது.

சமூகப் பிரச்சினைக்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடுகிறார்கள் என்பதைத் தடுக்கும் பொருட்டுதான் இப்போது கல்லூரியை ஆளரவமற்ற இடத்திற்கு மாற்றத் திட்டமிடுகிறது அரசு. சட்டக் கல்வியை வியாபாரமாக்குவதும் இதற்கு பின்னால் மறைந்திருக்கும் மற்றொரு சதி. இந்திய சட்ட சேவைக்கான சந்தை சுமார் 8 இலட்சம் கோடிக்கான மதிப்புடையது என அனுமானிக்கப்படுகிறது. இந்த பெரும் சந்தையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதிதான் தற்போதைய சட்டக் கல்லூரி இடமாற்றம். இதனை போராட்டக்களத்தில் தான் தடுத்து நிறுத்த முடியும். என்று பேசினார்.

அடுத்ததாகப் பேசிய வழக்கறிஞர் நளினி, சட்டக் கல்லூரி இடம் மாற்றத்திற்கு எதிரான மாணவர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு, நீதிபதி கிருபாகரன் பொங்கி எழுந்து நீங்களும் அவர்களுக்கு ஆதரவா என்று கேட்கிறார். அந்த சட்டக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டவர், “புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்திற்கு வந்து பாருங்கள். கொஞ்சம் சிரமம் இருக்கும் என்றாலும் மிகவும் நல்ல இடம் அது” என்றார். இது வருத்தத்திற்கு உரியது. மாணவர்கள் போராடுவதோடு இல்லாமல், வழக்கறிஞர்களும் இணைந்து இப்பிரச்சினைக்காக போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

யூ-டியூப் காணொளி:

முகநூல் காணொளி:

பாருங்கள் ! பகிருங்கள் !

  • வினவு களச் செய்தியாளர்

பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய இடம் நீதிமன்றமல்ல, போராட்டக் களம் | நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு) | காணொளி

சென்னை – அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பில், கடந்த ஜூலை 27 அன்று, சென்னை உயர்நீதிமன்ற பார்கவுன்சில் அரங்கத்தில் ”சட்டக்கல்வியின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு) கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையின் சாரம் இங்கு கட்டுரையாகவும் காணொளியாகவும் தரப்பட்டுள்ளது.

நீதிபதி அரி பரந்தாமன்
நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு)

இன்று சட்டக் கல்வியின் நிலை, பொதுக் கல்வியின் நிலை என்னவோ அதுவாகத் தான் இருக்கிறது. அதாவது வியாபாரமயமாக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் நிறைய தொடங்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, இங்கு இருக்கும் அரசு சட்டக் கல்லூரிகளை மூடுவதற்கான அனைத்து வேலைகளும் நடந்து வருகின்றன. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடிவிட்டு திருவள்ளூருக்கு வெளிப்புறம் மாற்றப் போவதாகச் சொல்கிறார்கள்.

இதனை மூட வேண்டும் என்பது அரசாணையில் கூட குறிப்பாக சொல்லப்படவில்லை. ஆனால் உயர்நீதிமன்றம்தான் சொல்லியிருக்கிறது. ஆகவே இந்த நீதிமன்றத்தை நம்பி பலனில்லை. உங்கள் போராட்டம், நீதிமன்றத்தில் இருந்தால் அதற்கு எவ்விதப் பலனும் கிடையாது. இந்த கோர்ட் என்பது இன்று இராணுவமயமாக்கப்பட்டதாக இருக்கிறது. யார் உள்ளே செல்ல வேண்டுமென்றாலும் அவர்கள் வரிசையில் நின்று செல்ல வேண்டியது இருக்கிறது. இது தமிழகத்திற்கு மட்டுமே உள்ள அவலம்.

அதே போல தமிழக வழக்கறிஞர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக 50-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.  இதுவும் தமிழகத்தில் மட்டும்தான் நடந்திருக்கிறது. மேலும் ஒரு சட்டக் கல்லூரி மாணவர் மீது ஒரு முதல் தகவலறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், அவர் வக்கீலாக பதிவு செய்ய முடியாது என்று புதிய விதிமுறையை கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவும் தமிழகத்திற்கு மட்டும்தான். ஏன் இதை எம்.எல்.ஏ.-களுக்கோ, எம்.பிகளுக்கோ வைக்க வேண்டியதுதானே ? அவ்வளவு ஏன், வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு விதிமுறை இல்லை.

சாராயக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் வழக்கு போட்டால், இவ்விவகாரத்தில் தலையிட முடியாது என நீதிமன்றம் விலகிக் கொள்கிறது. இப்படி மக்கள் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் நீதிமன்றங்கள் ஒதுங்கி நிற்கையில், இத்தகைய பிரச்சினைகளை, ஒடுக்குமுறைகளை, வெறுமனே நீதிமன்றத்தில் போய் தீர்க்க முடியாது.

பெரியாரும் அம்பேத்கரும் சமூகப் பிரச்சினைகளை தீர்க்க நீதிமன்றத்திற்கு போகவில்லை. சரி அவர்கள்தான் கலகக்காரர்கள் என்று வைத்துக் கொண்டால், காந்தியும் நேருவும் வழக்கறிஞர்கள் தானே. அவர்கள் யாருமே சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க  நீதிமன்றம் செல்லவில்லை. களத்தில் தான் சந்தித்தார்கள். ஆகவே போராட்டக் களம் என்பதுதான் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் இடமேயன்றி நீதிமன்றம் அல்ல.

யூ-டியூப் காணொளி:

  • வினவு களச் செய்தியாளர்

அர்ச்சகர் பயிற்சி மாணவர் பணி நியமனம் – வெற்றியா ? | காணொளி

னைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அரசாணை இயற்றப்பட்ட பின்னரும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் தொடர்ச்சியாக அர்ச்சகர் பணி நியமனம் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். தங்கள் மீது காட்டப்படும் சாதிய வன்மத்தை எதிர்த்துப் போராட அவர்கள் சங்கமாய் திரண்டு தங்கள் உரிமைகளுக்காக சட்டரீதியில் போராடி வந்துள்ளனர்.

அவர்களுக்கு இறுதி வரையில் சட்டரீதியான மற்றும் ஜனநாயகப் பூர்வமான போராட்டங்களுக்கு உறுதுணை செய்து வந்தது மக்கள் உரிமை பாதுகாப்பு மையம். (முன்னர் மனித உரிமை பாதுகாப்பு மையம்). சட்டப் போராட்டங்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் தோல்வியுற்ற நிலையில், தற்போது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் மாரிச்சாமி என்பவருக்கு மதுரை அருகே ஒரு கோவிலில் அர்ச்சகராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சகர் பயிற்சி
பணி நியமனம் பெற்ற மாணவர் மாரிச்சாமி

இது வரவேற்கத் தகுந்த விசயம் என்றாலும், அதுகுறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு, இன்றளவும் அரசு அதிகாரிகள் தயங்குகிறார்கள். தகுதியின் பெயரில் பார்ப்பனரல்லாத ஒருவருக்கு அர்ச்சகராக பணி நியமனம் செய்திருக்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிக்க அவர்கள் தயக்கப்படுவதன் பின்னணி என்ன ? யாருக்காக தயங்குகிறார்கள் ? மாரிச்சாமிக்கு கிடைத்த பணி நியமனம் வெற்றியா ? இதே போன்று மற்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும் அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் ?

விளக்குகிறார்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் மற்றும் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு

தோழர் ராஜு உரை :

ரங்கநாதன் உரை:

பாருங்கள் பகிருங்கள் !

– வினவு செய்திப் பிரிவு

தி.மு.க வரலாறு : பொது அறிவு வினாடி வினா 14

தி.மு.க வரலாறு

மாட்டுக்கறி தடை என மத்தியில் ஆளும் மோடி அரசு அறிவித்தபோது, தென் மாநிலங்கள் முழுவதும், குறிப்பாக கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இணையவாசிகள் டிவிட்டரில் அதிகம் பகிர்ந்த சொல், #திராவிடநாடு

டில்லியின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் சொல் திராவிடம். இந்தோ ஆர்யன் மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்ட திராவிட மொழிக் குடும்பம் பண்பாட்டு அளவிலும் பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டத்தை கொண்டிருக்கிறது. அதற்காக தனது இறுதிக் காலம் வரை உழைத்தவர் பெரியார்.

தி.மு.க வரலாறுஅவர் ஆரம்பித்த திராவிடர் கழகத்திலிருந்து சி.என். அண்ணாதுரை தலைமையில் ஒரு பிரிவினர் வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் என தனிக்கட்சியைத் துவக்கினர். அண்ணாதுரை, கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன், எம்.ஜி.ஆர் என பன்முகங்களோடு உருவான திமுக-வின் வரலாறு பல்வேறு ஏற்ற இறங்கங்களைக் கொண்டிருக்கிறது.

திராவிடக் கொள்கைகளை அரியணையில் ஏற்றுவதாகக் கூறி பெரியாரிடமிருந்து பிரிந்தது முதல், திராவிடத்தைக் கருவருக்கப் போவதாகக் கருவிக் கொண்டிருக்கும் பாஜகவோடு கூட்டணி வைத்தது வரை, திமுகவின் வரலாறு உடன்பிறப்புகள் அறிந்தவையே என்றாலும் மற்றவர்கள் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த வினாடி வினாவை முயன்று பாருங்கள் !

கேள்விகள்:

  1. தந்தை பெரியாரால் துவங்கப்பட்ட “திராவிடர் கழகத்தில்” இருந்து பிரிந்து அண்ணாதுரையின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய ஆண்டு எது?
  2. திருச்சி மாவட்ட டால்மியா சிமெண்ட் ஆலைப் பகுதியை டால்மியாபுரம் என்று பெயர் மாற்றிய போது, 1953-ம் ஆண்டு எதிர்த்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க. என்ன பெயரை வைக்கக் கோரியது? அதுதான் அந்த ஊரின் தமிழ்ப் பெயர்!
  3. தேர்தலில் பங்கேற்பதாக தி.மு.க-வின் இரண்டாவது மாநில மாநாடு 1956-ம் ஆண்டு முடிவெடுத்தது. மாநாடு நடந்த ஊர் எது?
  4. தி.மு.க-விலிருந்து ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் சிலர் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினர். ஆண்டு எது?
  5. 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை என்றாலும், தனது கோரிக்கையை ஏற்கும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அறிவித்தது. அது என்ன கொள்கை?
  6. சூலை 14, 15, 1953-ம் ஆண்டில் தி.மு.க அறிவித்த மும்முனைப் போராட்டத்தில் டால்மியாபுரம் பெயர் மாற்றம் போக இடம்பெற்ற ஏனைய இரு போராட்டங்களில் ஒன்று பதில்களில் இருக்கிறது. அது எது?
  7. 1959-ம் ஆண்டில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க முதன்முறையாக மேயர் பதவியில் பொறுப்பேற்றது. அந்த மாநகராட்சி எது?
  8. 1962-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.க போட்டியிட்டது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எது?
  9. 1963 சூன் 8,9,10 தியதிகளில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலைக் கோரிக்கை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களை பெற்று திராவிட கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது என்று மாற்றப்பட்டது, ஏன்?
  10. 1965 சனவரி 26 இந்திய குடியரசு நாளை தி.மு.க துக்க நாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது, காரணம் என்ன?
  11. 1967-ம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க மொத்தம் எத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளை வென்றது?
  12. 1967 மார்ச் 6 முதல் 1969 பிப்ரவரி 3-ம் தேதியில் மறையும் வரை முதல்வராக இருந்த அண்ணாதுரை, ஆட்சியில் செய்த முக்கிய அம்சங்கள் என்ன?
  13. அண்ணாவின் மறைவையடுத்து முதலமைச்சராக ஆவதற்கு கருணாநிதிக்கு தடை போட்டவர் யார்? எங்கிருந்தாலும் இவர்தான் நம்பர் 2 என்கிறார்கள்.
  14. 1972-ம் ஆண்டில் தி.மு.க.வில் இருந்து விலகி அண்ணா தி.மு.க ஆரம்பித்த நடிகர் எம்.ஜி.ஆர், தி.மு.க -வில் இருக்கும் போது வகித்த பதவி எது?
  15. கருணாநிதி இரண்டாம் முறையாக முதலமைச்சர் பதவி ஏற்றபின் மாநில சட்டப் பேரவையில் கொண்டு வந்த “மாநில சுயாட்சி” தீர்மானம் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?
  16. 1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளான தி.மு.க அதை மறந்துவிட்டு 1980-பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. வெற்றி பெற்றதா?
  17. தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது 1983 ஆகஸ்டில் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து என்ன செய்தது?
  18. எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு 1989 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடித்தாலும் 1991-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டது. என்ன காரணத்தை மத்திய அரசு கூறியது?
  19. 1991-ம் ஆண்டு தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க.விற்கு 2 இடங்களே கிடைத்ததற்கு காரணம் என்ன?
  20. தி.மு.க தனது அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவுடன் முதன் முதலில் கூட்டணி வைத்த ஆண்டு எது?

பதிலளிக்க:

– வினவு செய்திப் பிரிவு

பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

1

“பிரசவத்தின் போது ஒரு தாயின் மரணம் கொலைக்குச் சமமானது” சில மருத்துவக் கல்லூரிகளில் இவ்வாறே மருத்துவ மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. சில பல சந்தர்ப்பங்களில் என்ன பிழையாகும் எனக் கணிக்கமுடியாதெனிலும் பிரசவத்தின் போது மரணம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அநேகமாகத் தடுக்கப்படக் கூடியவையே என்ப‌தைச் சுட்டிக் காட்டவே அவ்வாறு போதிக்கப்படுகிறது.

1987-88 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இந்திய ஆமி (இந்திய இராணுவம்) இருந்த நாட்களில் அம்மா, என் கடைசித் தங்கையுடன் கர்ப்பமாக இருந்தார். பிரசவத் திகதி 1988 பங்குனி  மாதக் கடைசியில். போர், வீடு எரிப்பு, அலைக்கழிப்பு……. அதனாலோ என்னவோ பிரசவத் திகதிக்கு ஒரு மாதத்திற்கும் கூட இருக்கும் போது ஓரிரவு அம்மாவிற்குப் பிரசவ வலி வந்து விட்டது. வீட்டில் நாங்கள் சின்னப் பிள்ளைகள் நால்வரும், அம்மம்மாவும் அம்மாவும் மட்டுமே. பிரச்சனையால் அப்பாவுடன் பல காலம் தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை. அன்றிரவு வெளியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. வெளியில் போக வேண்டுமெனில் வெள்ளைக் கொடி பிடித்துக் கொண்டு ஆமிக் காம்பிற்குச் (இராணுவ முகாம்) சென்று அனுமதி பெற்று வந்த பின்பே போகலாம்.

வீட்டில்தான் பிரசவம், இயற்கை வழி பிரசவம் என்றெல்லாம் கதைப்பவர்கள் ஒரு விசயத்தை மறந்து போகிறார்கள்.மகவைச் சுமந்து பெற்று வளர்க்கும் ஒரு பெண்ணின் உயிரை இப்படி அநியாயமாக பணயம் வைத்து சூதாடுவது என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

அம்மாவிற்கு மருத்துவ அறிவு இருந்தது. பக்கத்து வீட்டிலிருந்து யாராவது ஒரு பெண்ணைத் துணைக்குக் கொண்டு வந்து விட்டு விட்டு, வெள்ளைக் கொடியுடன் ஆமிக்காம்பிற்குப் போகச் சொன்னார்கள். அங்கு அனுமதி எடுத்து வருவதற்குள் குழந்தை பிறந்து விட்டது. அம்மாவிற்கு 40 வயது, இது ஐந்தாவது பிரசவம். கிட்டத்தட்ட பிரசவ காலம் முழுதும் போர்ச்சூழல்/அலைச்சல்/பிரச்சனைகள், பிரசவத் திகதிக்கு ஒரு மாதம் முன்பே வலி எனப் பல காரணங்களால் அது ஒரு உயர் அபாயம் கொண்ட பிரசவமாக (high-risk pregnancy) இருந்தது. அதனால் துரதிர்ஸ்டவசமாக ஏதாவது விபரீதம் நடந்திருக்கலாம். எனினும் அதிர்ஸ்டவசமாக தாயும் சேயும் பிழைத்தாயிற்று.

து நடந்து சரியாக‌ 24 ஆண்டுகளின் பின் 2012 அதே மாசியில் நான் எனது இரண்டாவது மகனுடன் கர்ப்பமாக இருந்தேன். நான் இருக்கும் நாடு அயோத்தியரொஆ – நியூசிலாந்து. எனது பிரசவத் திகதி பங்குனி 7. கர்ப்பகாலம் முழுவதும் முறையான மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றேன்.  பிரசவத் திகதிக்கு இரண்டு கிழமைகளுக்கு முன் நடந்த பரிசோதனையில், அதற்கு முன் நடந்த பரிசோதனையில் பார்த்ததை விட இரண்டு கிலோ கூட எடை போட்டதால் நான் குளுக்கோஸ் அளவு வரம்புச் சோதனை மேற்கொள்ளப் போகிறேன் என மகப்பேற்றுத் தாதியிடம் (mid wife) அடம் பிடித்து (அவர் தேவையில்லை இப்ப வேண்டாம் என்றார்) சொன்னேன். பிறகு, அச்சோதனையில் குளுக்கோசின் அளவு அதிகம் காட்டியது.  எனக்கு பிரசவ காலத்தில் மட்டுமே வரும் நீரிழிவு (gestational diabetes – GDM) வந்துவிட்டதாக அவர்கள் நினைத்ததால் அன்று பின்னேரமே மருத்துவமனைக்கு வா உன் கருப்பையைத் தூண்டி பிரசவத்தை அன்றே செய்ய வேண்டும் என்றார்கள்.  (அது ஏன் என்றெல்லாம் எழுதப் போனால் ஒரு தனிப் பதிவிட வேண்டும், அதனால் இதோடு நிறுத்துகிறேன். 🙂 )

கவனிக்க, ”உனக்கு சிசேரியன் செய்ய வேண்டும் வா” என்று சொல்லவில்லை. கட்டுப்படுத்தப்படாத கர்ப்பகால நீரிழிவு பிரச்சினை இருக்கலாம் எனச் சந்தேகித்ததால், பிள்ளையின் பாதுகாப்பிற்காகப் பிள்ளையை வெளியே எடுத்தால் நன்று என்பதால் கருப்பையைச் செயற்கையாகத் தூண்டி கருப்பையைச் சுருங்கப் பண்ணுவதே அவர்களின் முடிவு. கருப்பையைச் சுருங்கத் தூண்டுவதற்காக முதலில் ப்ரோஸ்டாக்ளாண்டின் (prostaglandin) எனும் கொழுமியத்தை (lipid) ஜெல் வடிவில் வைத்தனர். பிரசவ நேரத்தில் பிரசவத்தைத் தூண்ட இயற்கையாகவே கருப்பை ப்ரோஸ்டாக்ளாண்டினை உருவாக்கும்.

கருப்பை சுருங்கத் தொடங்கியதும் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு உண்மையில் இருப்பின் குழந்தைக்கு என்னிலிருந்து அதிகளவு குளுக்கோஸ் போயிருக்கும். அதைக் கட்டுப்படுத்த குழந்தையின் உடல் கூடியளவு இன்சுலின் ஹோர்மோனை உற்பத்தி செய்யும். அதனால் குழந்தை பிறந்தவுடன் அதன் உடலில் குளுக்கோஸின் அளவு மிகக் குறைவடைய வாய்ப்புகள் அதிகம். அதனால் பிறந்தவுடன் குழந்தையின் குளுக்கோஸ் அளவை தொடர்ந்து சிறிது நேரம் ஒரு குறிப்பிட்ட நேர இடைவேளைகளில் அளக்க வேண்டும். தற்சமயம் குளுக்கோஸ் குறைந்தால் என்ன செய்வது என்றெல்லாம் விளக்கினர். பின் ப்ரோஸ்டாக்ளாண்டின் ஜெல்லால் மட்டும் கருப்பை தூண்டப்பட்டது காணாததால் ஆக்சிடோசின்னையும் (oxytocin) (இதுவும் இயற்கையாகவே பிரசவ நேரத்தில் உடலில் உருவாவதே) கொடுத்து பல மணி நேர பிரசவ வலியின் பின் ஒருவாறு குழந்தை வெளியில் வந்தது.

அம்மாவிற்கு 40 வயது, இது ஐந்தாவது பிரசவம்.
கிட்டத்தட்ட பிரசவ காலம். முழுதும் போர்ச்சூழல்/அலைச்சல்/பிரச்சனைகள், பிரசவத்திற்குக் குறித்த திகதிக்கு
ஒரு மாதத்திற்கு முன் வலி எனப் பல காரணங்களால் அது ஒரு
உயர் அபாயம் கொண்ட பிரசவமாக (high-risk pregnancy) இருந்தது.

பின் ஓரிரு நிமிடங்களில் திடீரென்று இருவர் இருந்த அறைக்குள் ஒரு பத்துப் பேர். எல்லோரும் என் கட்டிலைச் சுற்றியே நின்று கதைக்கின்றனர். குழந்தையைத் தருவார்கள், குழந்தையின் குளுக்கோஸ் அளவு பார்ப்பார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு மிகுந்த களைப்பு / வலி ஒரு பக்கம், மறுபக்கம் ஒரே குழப்பம். ”என்னாச்சு?” கேட்கிற சக்தியும் இல்லை. என் கருப்பை குழந்தை வெளியேறியதும், சுருங்க மறுத்து பைப்பில் தண்ணி ஓடுவது போன்று நிறுத்த முடியாமல் இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததே காரணம். குழந்தை பிறந்து 5-10 நிமிடங்களுக்குள்ளேயே அறுவை சிகிச்சை அறைக்கு அனுப்பி எனது கருப்பைக்குள் ஒரு பலூனை ஊதி வைத்தார்கள். அடுத்த இரண்டு நாளுக்கு படுத்தே இருந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பலூனைச் சுருக்கி வெளியில் எடுக்க கருப்பை அநேகமாகச் சுருங்கும் என்பதே சிகிச்சையின் அடிப்படை.

அதன் பின் இரத்தமும் இரண்டு முறை ஏற்ற வேண்டி வந்தது. ஒருவாறு எட்டு நாட்களுக்குப் பின் வீடு போனேன். எனது க‌ர்ப்பகாலமும்/ ஆரம்பத்தில் பிரசவமும் என் அம்மாவினதை விட மிகக் குறைந்த அபாயம் கொண்டவையே. ஆனால் குழந்தை வெளியில் வந்தவுடன் நடந்ததை யாரும் முதலில் அறிந்திருக்க முடியாது. அதே நிலை என் அம்மாவிற்கு நடந்திருப்பின் ஒரு மருத்துவமனையில் இருக்காமல் நிச்சயம் அம்மாவால் பிழைத்திருக்க முடியாது. அதுவரை எப்போவாவது நினைத்தால் இரத்த தானம் செய்யும் நான், பிரசவ அனுபவங்களுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்கொருமுறை இரத்த தானம் கொடுப்பதை கடமையாக நினைத்து தொடர்ந்து செய்து வருகிறேன்.

வ்வொரு நாளும் 830 பெண்கள் மகப்பேற்றின் போது தடுக்கப்படக்கூடிய காரணங்களுக்காக இறக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதில் 99 சதவீதமான இறப்பு, வளரும் நாடுகளிலேயே நடக்கிறது. இதில் அரைவாசிக்கு மேல் ஆப்பிரிக்காவிலும் மூன்றில் ஒன்று தெற்காசியாவிலும் நடக்கின்றன. அதிலும் கிராமப்புறங்களில் வாழும் பெண்களும் ஏழைப் பெண்களும் மிகக் கூடுதலாக இம்மரண எண்ணிக்கைகளில் இருக்கிறார்கள். இந்த தவிர்க்கக் கூடிய இறப்புகள் கிட்டத்தட்ட எல்லாமே பயிற்சியற்ற, மகப்பேற்று அறிவு பெரிதும் இல்லாதோரால் பார்க்கப்பட்ட பிரசவங்களும், வசதிகள் பெரிதும் இல்லாத இடங்களில் நடந்த பிரசவங்களும் ஆகும்.

மகப்பேற்றிற்குப் பின்னான உடனடி இரத்தப்போக்கே இந்த தவிர்க்கப்படக்கூடிய மரணங்களுக்கான காரணங்களில் முதலிடம் வகிக்கிறது.

மிகுந்த களைப்பு / வலி ஒரு பக்கம், மறுபக்கம் ஒரே குழப்பம். ”என்னாச்சு?” கேட்கிற சக்தியும் இல்லை. என் கருப்பை குழந்தை வெளியேறியதும் சுருங்க மறுத்து பைப்பில் தண்ணி ஓடுவது போன்று நிப்பாட்ட முடியாமல் இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததே காரணம்.

அண்மையில் தமிழகத்தில் இயற்கை முறையிலான பிரசவம் குறித்து யூ-டியூப் இணையதளத்தில் வீடியோ பார்த்து வீட்டில் மனைவிக்குப் பிரசவம் பார்த்து மனைவி இறந்த நிகழ்வை விமர்சிக்கும் கட்டுரைகளுக்கு வந்த பதில்களைப் பாருங்கள். பலர் ”இது அரிதாக நடக்கும் ஒரு செயல்; கிராமப்புறங்களில் பல பிரசவங்கள் இவ்வாறே ஒரு பிரச்சனைகளுமின்றி நடக்கிறது; நீங்கள் யாரும் மருத்துவமனைகளில் நடக்கும் மரணங்களைக் குறிப்பிடுவதில்லை” போன்ற கருத்துகளை எழுதியிருந்தனர்.

இவற்றிற்கு பதில் மேலேயே இருக்கிறது. அநேகமான தவிர்க்கக்கூடிய மகப்பேற்று மரணங்கள் இந்த மாதிரிச் சூழல்களிலேயே நடக்கின்றன. அதோடு எந்தளவு குறைந்த அபாயமுள்ள பிரசவமாக இருந்தாலும் எப்போ என்ன நடக்கும் என முற்றாகக் கணிக்க முடியாது. பல சமயங்களில் என்னவாவது விபரீதம் நடந்தால் 5-10 நிமிடங்களில் அப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வழி செய்யாவிடில் உயிரிழப்பிற்கான சந்தர்ப்பங்கள் மிக அதிகம்.

கார்த்திகேயன் – கிர்த்திகா தம்பதியினர்

மேலும் வீட்டில் நடக்கும் பிரசவங்களுக்கும் மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங்களுக்கும் இடையிலான வித்தியாசங்களை ஒப்பிடும் ஆய்வுகள் வளர்ந்த‌ நாடுகளில் சிலவற்றில் நடத்தப்பட்டுள்ளன. அதுவும் அவர்கள் ஆய்வுகளில் ஒப்பிடுவது அம்மா/பாட்டி துணையுடனோ கிருத்திகாவிற்கு நடந்த மாதிரி எந்தவித மகப்பேறறிவுமற்ற துணைவனினதும் குடும்ப நண்பர்களினதும் துணையுடனுமோ நடக்கிற மகப்பேறுகள் இல்லை. அவ்வாறு நடப்பவற்றில் விபரீதங்கள் நடக்க சந்தர்ப்பங்கள் நிச்சயம் அதிகம்.

குழந்தை பிறந்து 5-10 நிமிடங்களுக்குள்ளேயே
அறுவை சிகிச்சை அறைக்கு அனுப்பி எனது கருப்பைக்குள்
ஒரு பலூனை ஊதி வைத்தார்கள். அடுத்த இரண்டு நாளுக்கு படுத்தே இருந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக
அந்த பலூனைச் சுருக்கி வெளியில் எடுக்க கருப்பை அநேகமாகச் சுருங்கும் என்பதே சிகிச்சையின் அடிப்படை.

அந்த ஆய்வுகள் எவற்றை ஒப்பிடுகிறது? பயிற்சியெடுத்த திறமையான மகப்பேற்றுத் தாதியின் துணையுடன் நடக்கும் குறைந்த அபாயமுள்ள “திட்டமிடப்பட்ட வீட்டு மகப்பேற்றுக்கும் (planned home births) மருத்துவமனைகளில் நடக்கும் குறைந்த அபாயமுள்ள மகப்பேறுகளுக்கும் இடையிலான ஒப்பீடு. வளர்ந்த நாடுகளில் மிக அதிகமாக, மேற்சொன்ன திட்டமிட்டு வீட்டில் நடத்தப்படும் மகப்பேறுகள் நடப்பது நெதர்லாந்தில் தான். 19-25 சதவீதமானோர் இந்தமாதிரி மகப்பேற்றைச் செய்கின்றனர். இந்நாட்டில் நீண்ட காலமாகவே மகப்பேற்று சேவையில் மருத்துவர்களினதும் மருத்துவத் தாதிகளினதும் சேவைகள் மிகச் சிறப்பாக ஒன்றிணைக்கப்பட்டிருக்கும். அது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட, நிறுவனமயமாக்கப்பட்ட, முறையான நடைமுறையாகும். அதோடு ஏதாவது பிரச்சனையெனில் மிக இலகுவாகவும் விரைவாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வசதிகள் உண்டு.

அதனால் குறைந்த அபாய மகப்பேறுகள் அங்கு திட்டமிட்டு மருத்துவத் தாதிகளுடன் வீட்டில் நடப்பது மருத்துவமனைகளில் நடக்கும் மகப்பேறுகள் அளவுக்கு பாதுகாப்பானது. அதிக அபாயமுள்ள மகப்பேறுகள் வீட்டில் அநேகமாக நடக்காது. வீட்டில் நடப்பின் விபரீதங்கள் நடக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அமெரிக்காவில் இந்த மருத்துவத் தாதிகளும் மருத்துவர்களும் இணைந்து நடத்தும் சேவை நெதர்லாந்து அளவுக்கு சிறப்பானதல்ல. அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட வீட்டு பிரசவங்கள் பாதுகாப்பான‌து என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. இந்த திட்டமிடப்பட்டு, வீட்டில் பயிற்சியளிக்கப்பட்ட மகப்பேற்றுத் தாதிகளால் நடத்த ஒழுங்குசெய்யப்பட்ட குறைந்த அபாயமுள்ள மகப்பேறுகளில் கூட பல சமயம் கிட்டத்தட்ட 30-40 சதவீதமானவை இடையில் மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டி வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாளும் 830 பெண்கள் மகப்பேற்றின் போது தடுக்கப்படக்கூடிய காரணங்களுக்காக இறக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதில் 99 சதவீதமான இறப்பு வளரும் நாடுகளிலேயே நடக்கிறது.

இதில் ஒரு விடயத்தை வலுவாக வலியுறுத்த விரும்புகிறேன். இந்த ஆய்வுகளில், கருவுற்ற காலத்திலிருந்து மாதாமாதம் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு, வேறு எவ்விதத்திலும் மகப்பேற்றில் ஆபத்து வராது என கருதப்பட்டு, மிக மிகத் தெளிவாக விபரீதங்கள் நடக்கச் சந்தர்ப்பங்கள் குறைவென கருதப்பட்ட பெண்களே ஒப்பீடு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும், அதற்குரிய பயிற்சி அளிக்கப்பட்ட மகப்பேற்றுத் தாதிகளாலோ அல்லது மருத்துவர்களாலோ உறுதிசெய்யப்பட்டவர்களாவர்.

பித்தலாட்ட ஹீலரும், பாரிசாலனும்

ஏழைப் பெண்களுக்கு, வேறு விதத்தில் விளிம்புநிலையிலிருக்கும் பெண்களுக்கு, வளரும் நாடுகளில் இருக்கும் பெண்களுக்கு மருத்துவசாலையே பிரசவத்திற்கு மிகவும் பாதுகாப்பானது.

வீட்டில்தான் பிரசவம், இயற்கை வழி பிரசவம் என்றெல்லாம் கதைப்பவர்கள் ஒரு விசயத்தை மறந்து போகிறார்கள். மகவைச் சுமந்து பெற்று வளர்க்கும் ஒரு பெண்ணின் உயிரை இப்படி அநியாயமாக பணயம் வைத்து சூதாடுவது என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. தங்களது முட்டாள்தனங்களுக்காக தமது மனைவிமார்களை இப்படி கில்லட்டின் எந்திரத்தில் ஏற்றுபவர்களுக்காக அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு சொல்லித் தரப்படும் வழக்கை மீண்டும் பகிர்கிறேன்!

”பிரசவத்தின் போது ஒரு தாயின் மரணம் கொலைக்குச் சமமானது”

– அன்னா

(கட்டுரையாளர் குறிப்பு :  மாதவிடாய், கருப்பை, கருத்தரித்தல் தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் மற்றும் பெண்ணியவாதி. கருத்தாடல் பக்கத்தில் “அறிவியல்-பெண்ணியம்-சமூகம்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்)

செய்தி ஆதாரம்:

  • Birthplace in England Collaborative, G., et al., Perinatal and maternal outcomes by planned place of birth for healthy women with low risk pregnancies: the Birthplace in England national prospective cohort study. BMJ, 2011. 343: p. d7400.
  • de Jonge, A., et al., Perinatal mortality and morbidity up to 28 days after birth among 743 070 low-risk planned home and hospital births: a cohort study based on three merged national perinatal databases. BJOG, 2015. 122(5): p. 720-8.
  • de Jonge, A., et al., Severe adverse maternal outcomes among low risk women with planned home versus hospital births in the Netherlands: nationwide cohort study. BMJ, 2013. 346: p. f3263. 
  • Hutton, E.K., et al., Outcomes associated with planned place of birth among women with low-risk pregnancies. CMAJ, 2016. 188(5): p. E80-90. 
  • Hospitals Are Only Safer Than Home Births if You’re Poor

கல்வியும் சுகாதாரமும் | நூல் அறிமுகம்

16-ஆம் நூற்றாண்டில் பொன்னும், மணியும் செல்வ வளமும் தேடி, ஐரோப்பாவின் துறைமுகங்களிலிருந்து பயணம் புறப்பட்ட கொலம்பஸ் உள்ளிட்ட கடலோடிகளுக்கும் அவர்களது  பயணத்திற்கு படியளந்த பேரரசுகளுக்கும் ‘இந்தியா’தான் கனவு பூமியாக இருந்தது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கூட இந்தியாவின் ஏற்றுமதி அதன் இறக்குமதியைப் போல 700 மடங்கு என்று ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு ஆணையம் (UNCTAD) கணக்குச் சொல்கிறது. (பதிப்புரையிலிருந்து)

ன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும் அதிகமாகப் பேசப்படும் இந்தப் பெருமை நிலையற்றது. இன்றைய இந்தியாவின் சாதனைகளையும், தோல்விகளையும் ஆய்வு செய்வது அவசியமானது மட்டுமல்ல. அவசரமானதும் கூட.

உண்மையில் பசியும், வறுமையும் இந்தியாவின் அடையாளமாக என்றென்றும் இருந்ததில்லை. வளமிக்க இந்தியா எவ்வாறு வறுமை மிக்க  நாடாயிற்று?

‘சாதாரண மக்கள்’ என்றழைக்கப்படும் பிரிவிலுள்ள பெரும் செல்வந்தர்கள் அல்லாத ஓரளவு வசதி படைத்தவர்களின் கோரிக்கைகள் வலுவாக ஒலிக்கப்படுகிறது. எளிதாக அணிதிரளக்கூடிய இவர்களின் கண்ணோட்டம், அரசியல் கட்சிகளின் ஆதரவில் பெரும் பங்கை பெற்றுவிடுகிறது. இதற்கு முற்றிலும் முரணாக, இந்திய சமூகத்தில் பின் தங்கியவர்கள் நீண்டகாலமாகவும் பெருமளவிலும் அனுபவித்து வரும் இழப்புகள் மீது மிகக் குறைவாகவே கவனம் செலுத்தப்படுகிறது. (முன்னுரையிலிருந்து)

ழை அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கூட இந்தியாவின் சமூக நிலை எதிர்பார்க்க இயலாத வகையில் பின் தங்கியதாக உள்ளது. ‘நிச்சயமற்ற பெருமை’  நூலில் இந்தியாவின் இரு மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த நிலைமையையும் அதன் காரணத்தையும் விளக்குகின்றனர். (தி எகனாமிஸ்ட்)

டனடி அவசியம் கொண்ட உணர்வுப் பூர்வமான அரசியல் நூல்… ஏழைகள் நிரம்பிய நாட்டில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறி நெஞ்சார்ந்த நேசத்தோடு இறைஞ்சும் நூல். ( தி நியூயார்க் டைம்ஸ்)

ந்த நூல் வாசிக்கும் உங்களை உலுக்கி எடுத்துவிடும். மிக ஆழமான ஏற்றத்தாழ்வுகள் தான் இன்றைய இந்தியா குறித்து அக்கறை கொள்பவர்கள் கவலைப்பட வேண்டிய முதன்மையான பிரச்சினை. ( தி ஹிந்து)

மூக முன்னேற்றத்திலும் மற்றும் மேம்பாட்டு நடைமுறையிலும் அடிப்படைக்கல்வியின் பங்கு விரிவானதும் மிகவும் முக்கியமானதுமாகும். முதலாவதாக, படிக்கவும் எழுதவும் மற்றும் எண்களைக் கூட்டவும் கழிக்கவும் உள்ள ஆற்றல் நமது வாழ்க்கைத் தரத்தின் மீது சக்திமிக்க விளவுகளை உடையது: உலகப் புரிந்து கொள்ள, விவரமறிந்த வாழ்க்கையை வாழ்ந்திட, பிறரோடு எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள மற்றும் நம்மைச் சுற்றி நடப்பவையோடு நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான சுதந்தரத்தை இவ்வாற்றல் வழங்குகிறது. இன்றைய நவீன உலகில் இந்த சமூகம் எழுத்து ஊடகத்தை மிகவும் சார்ந்துள்ளது. எனவே இன்று எழுத்தறிவில்லாமல் இருப்பது சிறையிலிருப்பதற்கு ஒப்பாகும். பள்ளிக்கல்வி அத்தகைய சிறைக்கதவை திறந்துவிடுகிறது.

வர்த்தகமும் வணிகமும் உலகமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் கல்வியின் தேவை விரிவடைந்துள்ளது. உலகெங்கும் தேவைப்படும் சேவைகள் மற்றும் சரக்குகளின் உற்பத்திக்குத் தரக்கட்டுப்பாடும் திறன் உருவாக்கமும் தேவைப்படுகின்றன.

எழுத்தறிவின்மை மக்களின் அரசியல் குரலை நெறித்து விடுகிறது. அதன்மூலம் மக்களின் பாதுகாப்பின்மைக்கு நேரிடையாக வித்திடுகிறது.

ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவும் புத்தகங்கள், நாழிதழ்கள், பத்திரிகைகள் படிப்தற்குமான ஆற்றல் உள்ளிட்ட சமூக அதிகாரம் அளிப்பதும் மற்றும் அரசியல் வாய்ப்பும் ஒருங்கிணையும் பொழுது, மக்களின் ஜனநாயகக் குரல் வலுப்பெறும் என்பதை சொல்லத் தேவையில்லை.

பொதுவாக சுகாதாரப் பிரச்சினைகளிலும் குறிப்பாக மக்கள் உடல்நலன் குறித்தும் அடிப்படைக் கல்வி பெரும் பங்காற்ற இயலும். எவ்வாறு தொற்றுநோய் பரவுகிறது, அதைத் தடுப்பது எப்படி போன்றவற்றை சுகாதாரம் குறித்த சிறப்புக் கல்வி மூலம் அறியலாம்.

பொது கல்வி கூட, தொற்றுநோய் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முக்கியமான வழிகள் குறித்த சமூக புரிதலை உருவாக்கும்; பொது கல்வி தனி மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும்.

சட்டரீதியான உரிமைகளைப் புரிந்து கொள்வதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் பெரிய மாற்றத்தை கல்வியால் உருவாக்க இயலும்.

பங்களாதேஷில் பெண்ணுரிமைகளை நிலை நாட்டுவதில் மிகப் பெரிய தடைகளுள் ஒன்றாக எழுத்தறிவின்மை இருந்தது என்று பல வருடங்களுக்கு முன்னர் சல்மா ஷோபன் வெளிப்படுத்தினார். போதிய அளவு பள்ளிக் கல்வி இல்லாவிட்டால், அது ஒதுக்கப்பட்டவர்களை சட்ட விதிகள் மீறப்படும் பொழுது எதிர்ப்பதற்கான வழிமுறைகளிலிருந்தும் வசதிகளிலிருந்தும் விலக்கி வைப்பதன் மூலம் பாதுகாப்பின்மைக்கு இட்டுச் செல்கிறது.

பெண் பெறுகிற கல்வி குடும்ப முடிவுகளில் பெண்களின் குரலையும் சக்தியையும் பெரிதும் வளர்த்துள்ளது என்பதற்கான விரிவான ஆதாரங்கள் இன்று உள்ளன. குடும்பத்திற்குள் சமத்துவம் என்ற பொதுவான முக்கிய அம்சத்திற்கும் அப்பால், பெண்ணின் உரிமைக்குரல் பிற சமூக மாற்றங்களுக்கும் இட்டுச் செல்லும்.

கல்வி வர்க்கத் தடைகளை எதிர்த்துத் துளைக்கிற மாயக்குண்டு இல்லையென்றாலும், அது வர்க்க மற்றும் சாதீய பிளவுகளுக்கு இடையிலான அசமத்துவத்தை குறைப்பதில் பெரும்பங்காற்ற முடியும். (நூலிலிருந்து)

ல்வியும் மேம்பாடும், இந்தியா பின்தங்கிவிட்டது, உயர்கல்வி சவால்கள், சாதனைகளும் குறைபாடுகளும், கல்வித்தரம், சமூகப் பிரிவுகளும் மேட்டுக்குடி மேன்மையும், இரட்டைக் கல்வி, பள்ளி மேலாண்மையும் கற்பிக்கும் தொழிலும், தனியார் பள்ளிக்கல்வி ஒரு மாற்றாகுமா? என்பது உள்ளிட்ட உட்தலைப்புகளில் கல்விச்சூழலை விவரிக்கிறார், நூலாசிரியர்.

நெருக்கடியில் தவிக்கும் இந்திய சுகாதாரம் மற்றும் உடல்நலம் பராமரிப்பு குறித்து சுகாதாரம் என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

குழந்தை தடுப்பூசியைப் பொறுத்தவரை இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது என்பது மட்டுமல்ல பிரச்சினை; இம் மோசமான நிலை எதிர்கொள்ளப்படாமலும் தீர்வு காணப்படாமலும் இருந்ததும் ஒரு பிரச்சினையாகும்.

கடந்த 20 வருடங்களாக, இந்திய சுகாதாரத்திற்கான பொது செலவினம் ஜி.டி.பி.யில் ஒரு சதவீதத்தை ஒட்டியே இருந்துள்ளது.

ஒட்டுமொத்த மருத்துவ செலவினத்தில் இந்திய அரசின் பங்கு மூன்றில் ஒரு பங்காகவே உள்ளது என்ற உண்மை மக்கள் உடல்நலம் குறித்த அரசின் அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது.

குழந்தை பராமரிப்பை குடும்பத்திடம் விட்டுவிடுவதுதான் சிறந்தது என்ற பொதுக் கருத்து இந்தியாவில் நிலவுகிறது. இதன் காரணமாகவே குழந்தை பராமரிப்புக் குறித்த சமூக அக்கறை பெரிதாக இல்லை. (நூலிலிருந்து)

பொதுவில் கல்வி – சுகாதாரம் குறித்து இந்திய அளவிலும் உலக அளவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆதாரமாக வைத்தும் பல்வேறு புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், நூலாசிரியர்கள்.

இவ்வாறு பல்வேறு நாடுகளைப் பற்றி மதிப்பிடும்பொழுதும், இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக முன்மொழிவதிலும் நூலாசிரியர்கள் அவர்கள் தம் சொந்த அரசியல் புரிதலிலிருந்து அணுகியிருக்கின்றனர். எனினும், இந்தியாவின் யதார்த்த நிலைமையை வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு இந்நூலாசிரியர்கள் பெரும் சிரத்தையோடு தந்திருக்கும் உலகளாவிய பல தரவுகள் பேருதவி புரியும்.

நூல்: கல்வியும் சுகாதாரமும்
ஆசிரியர்: ஜீன் டிரீஸ், அமர்தியா சென்
(தமிழில்: பேரா.பொன்னுராஜ்)

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி
: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்: thamizhbooks@.com

பக்கங்கள்: 96
விலை: ரூ.80.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
  • வினவு செய்திப் பிரிவு

சட்டக்கல்வியில் சாமானியர்கள் வந்தது எப்படி | அருள்மொழி உரை

சென்னை – அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பில், கடந்த ஜூலை 27 அன்று, சென்னை உயர்நீதிமன்ற பார்கவுன்சில் அரங்கத்தில் ”சட்டக்கல்வியின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த, வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரை.

* உலகத்தில் எல்லா நாட்டிலும் கல்வி என்பது எல்லோரும் படிப்பதற்கு. ஆனா, நம்ம நாட்டுல கல்வி என்பது எல்லோரும் படிக்கக் கூடாது என்பதற்கு.

* எல்லோரும் படிச்சிட்டா யாருக்குதான் சார் வேலை பார்க்கிறது? யாரு சார் இன்னின்ன வேலைகளை செய்யிறது? அந்த வேலையை செய்றதுக்காக சில பேர் படிக்கவே கூடாது. அல்லது சிலபேர்தான் படிக்க வேண்டும். கல்வி கற்ற சிலபேர் மற்றவர்கள் அந்த கல்வி எல்லைக்குள்ளே வரவிடாத கருப்புசாமிகளாகவே நின்று கொண்டிருந்தார்கள்.

* யாருக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டுமென பழந்தமிழ் இலக்கியமான நன்னூலில் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. ஒரு ஆசிரியர் யாருக்கு கல்வி கற்று கொடுக்கனுமுன்னா தன்மகன், தன் ஆசான் மகன், மன்னனுடைய மகன், நிறைய பணம் கொடுப்பவன்… அப்படியே இன்றைய புதிய கல்விகொள்கைக்கு அடக்கம்.

* வழக்கறிஞர் கல்வி என்பது ஆங்கிலேயர்களால இந்தியர்களுக்கு ஒரு சமமான நீதி வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு குற்றத்திற்கு ஒரு தண்டனை என்ற அடிப்படையில் முக்கியமாக பிறப்பின் அடிப்படையில் இந்த தண்டனை மாறக்கூடாது என்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் நம்முடைய ஐ.பி.சி., கிரிமினல் நடைமுறைச் சட்டமெல்லாம்.

* சொத்தை எப்படி பிரிப்பது? பஞ்சாயத்துல சொம்பை வச்சிகிட்டு பிரிக்கக்கூடாது. அதுக்கு சிவில் உரிமைச் சட்டம்னு ஒன்னு கொண்டுவர்றோம். மக்களுக்கு உரிமையாக இருந்தாலும் சரி குற்றத்துக்கான தண்டனையாக இருந்தாலும் சரி ஒரே மாதிரி இருக்கனும்… என்பதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றங்கள்.

* இந்த நீதிமன்றங்கள் உருவாவதற்கு முன்னால் நாட்டில் மிகப்பெரிய நீதிமுறை இருந்ததாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த நீதிமுறையின் தடயத்தை நாம் பார்த்ததில்லை.

* இந்த நீதித்துறைக்கான அணுகுமுறை சட்டக்கல்வியை இந்தியாவிலேயே மிகச்சில கல்லூரிகளில்தான் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதில் வந்த சில இந்தியர்கள் இன்றைக்கு சிலைகளாக இருக்கிறார்கள்.

* ஆங்கிலேயர்களுக்கே புரியாத கிரேக்க மொழியில் சட்ட சொற்களைக் கொண்ட அந்தக் கல்வியை ஆங்கிலமும் இலத்தீனும் கிரேக்கமும் கலந்த அந்தக் கல்வியை தாய்மொழியில் படித்து வருவதற்கு ஒரு கரும்பலகை கூட இல்லாத ஒரு பள்ளியில் படித்த மாணவன் இவ்வளவு தூரம் சென்று நீ படிக்க வேண்டாமென்று அப்பா அம்மா மறுத்தபோதும் போராடி பள்ளி சென்று படித்த மாணவன் இந்தக் கல்வியை படிக்க வரும்பொழுது அவர்களை எப்படி மிரட்டியிருக்கும்?

* வாய்தா வாங்குவதற்காக மட்டும்தான் வாயைத் திறக்க வேண்டும். வழக்கில் வாதாடக்கூடாது என்றெல்லாம் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைக் கடந்துதான் அன்றைக்கு 5 பெண் வழக்கறிஞர்கள் பணியாற்றினர். இன்று, அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 பெண் நீதிபதிகள் அமர்ந்திருக்கிறார்கள்.

* இன்றைக்கு வைத்திருக்கும் வடிகட்டும் தேர்வு முறைகள், நெகட்டிவ் மார்க்குகளை கொண்ட தேர்வு முறைகளெல்லாம் அன்றைக்கு இருந்திருந்தால், நாமெல்லாம் வழக்கறிஞர்களாக வந்திருக்க முடியாது.

* தற்பொழுது, மீண்டும் அதே… சக்கரம் திரும்பச்சுற்றுகிறது. எல்லோரும் படிக்கக்கூடாது. சட்டக்கல்லூரிக்கு எதுக்கு நெகட்டிவ் மார்க் தேர்வெல்லாம்?

பாருங்கள்! பகிருங்கள்!!

பொண்ணும் உன்னப் போல மனுசப் பிறவின்னு பேரன்கிட்ட சொல்லி வளக்கணும்மா !

யனாவரம் பாலியல் வன்கொடுமை சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பிள்ளைகள் பெற்றவரை கவலையடையச் செய்திருக்கிறது. யாரை நம்புவது எப்படி பழகுவது என எல்லோரையும் சந்தேகிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி சென்னையில் பல தரப்பட்ட மக்களிடம் பேசினோம்.

வாசுதேவன் ரெங்கசாமி

செல்போனாலதான் கெட்டுடுத்து உலகம். முன்னெல்லாம் மனுசாள் கலந்து பேசிப்போம். இப்ப ஆளுக்கொரு செல்போன் வச்சுட்டு அத பாந்துண்டுருக்கோம். நீங்க எது வேண்ணாலும் அதுல பாக்கலாம்.

குழந்தன்னு பாக்காமெ கூட அப்படி நடந்துகிட்டது தப்புதான். அவங்களுக்கும் ஆயிரம் வேலை பிரஸ்சரு இருக்கு. ரிலாக்சுக்கு செல்போனு பாக்கும் போது கண்டதும் வருது. மனசு சஞ்சலப் பட்டுன்டுறது.

சோசியல் மீடியாவுல இந்து கல்ச்சர கேவலமா கிண்டலடிக்கிறா. மகாபாரதம் ராமயணத்துலதான் தர்மம் அதர்மம் பாவம் புண்ணியம் எல்லாம் சொல்லிருக்கு. அதப் படிச்சவா எந்த பாவமும் பண்ண மாட்டா. கல்ச்சர கடைபிடிங்கோ! பிரார்த்தனை பண்ணுங்கோ!

யசோதா, கோயிலில் வேலை செய்பவர்.

பருவம் வந்த ஆம்பள பொம்பள அத்தன பேருக்கும் காம உணர்வு வர்றது இயல்பு. இதுல எந்த சிக்கல் வந்தாலும் பொம்பள பொறுமையா இருந்து பொறந்த எடம் புகுந்த எடம் மானத்த காப்பாத்துவா. ஆனா ஆம்பள கட்டையில போற வரைக்கும் ஆசைய முடிச்சுக்க மாட்டான். அதனாலதான் அரிப்பெடுத்து கட்டையில போற வயசுல குழந்தைய நாசம் செஞ்சுருக்கானுங்க.

இந்த கோயில்லதான் சுத்தம் செய்ற வேலை செய்றோம். நாங்க பாட்டுக்கு வேலை செஞ்சுட்டு இருப்போம் அப்படியே ஒரசிக்கிட்டு போவானுங்க. அப்புடிதான் நோட்டம் விடுவானுங்க. அவ்வளவு ஏன் இங்க வேலை செய்ற அய்யரத் தவிர வெளியருந்து வர்ற அய்யரு குருக்களு கூட அப்படிதான் செய்வானுங்க.

சசிகலா

அவன நிக்கவச்சு சுடனும். அவன் வீட்டு பொண்ணாருந்தா அப்படி செஞ்சுருப்பானா. எங்கிட்ட கூட்டியாங்க, அவனுங்கள அத்தன பேத்தையும் ஒத்தால நின்னு வெட்டி சாச்சுப்புடுறேன். நெதமும் பேப்பருல இதேதாங்க சேதி. பொம்பளப் பிள்ளைய வச்சுகிட்டு நிம்மதியாவே இருக்க முடியல. பத்தடி தூரத்துல இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு நம்பி அனுப்ப முடியல. பயந்துகிட்டு வீட்டுக்கு கூட்டியார வேண்டிருக்கு. ……… பசங்க. அநியாயம் பன்றானுங்க!

அப்துல் ரசாக், துணிக்கடை ஊழியர்.

வெறி புடிச்ச நாய்ங்க. அவனுங்க குடும்பத்துல உள்ளவங்க கையில துப்பாக்கிய குடுத்து சுடச் சொல்லனும். என்ன கேட்டா சட்டம் சரியில்லன்னுதான் சொல்லுவேன். எதுக்கு கோர்ட்டு கேசு விசாரணையின்னு நாள் கடத்தனும். அதே எடத்துல பட்டுனு போட்டு தள்ளனும், அப்பதான் மத்தவனுக்கு பயம் வரும்.

சண்முக வடிவு

அந்த குழந்தைக்கி காது கேக்காது வாயி பேசாதுன்னு சொல்றாங்க. அப்புடி புள்ளையக் கூட விட்டு வைக்காமெ இப்படி செய்றாங்களே, உலகம் எங்க போயி முடியுமோ. கொஞ்சநஞ்சம் மனசுல ஈரமுள்ளவனக் கூட இந்த டாஸ்மாக்கு வந்து கெடுத்துட்டுது. மூக்கு முட்ட தண்ணியப் போட்றான். தாயிக்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாம தறிகெட்டு திரியிரான். மொதல்ல இந்த சாராயக் கடைய இழுத்து மூடனும்மா.!

சிவா – சிலம்பரசன்

இந்த காலத்துல இளைஞர்கள் இப்படியான அசிங்கத்த செய்ய மாட்டாங்க. மொபையில் நெட்டு வந்து கெடுத்துருச்சுன்னு சொல்றாங்க. ஆனா நல்ல விசயத்த கத்துக்கத்தான் இக்கால இளைஞர்கள் முயற்சி செய்றாங்க. பெண்கள மதிக்கிறாங்க. ஆனா வயசான பெரியவங்கதான் அந்த கால நெனப்புலேயே பெண்களை பாக்குறாங்க. இணையம் செல்போனல்லாம் அவங்க வக்கிறத்துக்கு தீனி போடுதுன்னு சொல்லலாம்.

கோபால், செக்யூரிட்டி ஊழியர்.

ரஜினி சொல்றாப்போல சிஸ்டம் சரியில்லேன்னுதான் சொல்லனும். அரசியல் வாதிலேருந்து போலீஸ்க்காரன் வரைக்கும் யாருமே சரியில்லம்மா. விருகம்பாக்கத்துல கொலைசெஞ்ச ரவுடி ஜாமின்ல வெளிய வரும்போது ஒரு எம்.எல்.ஏ மாலை போட்டு வரவேற்கிறான். சாமியாரு ரேப் பண்றான் பந்தோபஸ்துக்கு போலீசு போறான்!

வழிநடத்த வேண்டிய பொறுப்புல இருக்குற எவனுமே சரியில்லன்னு தெரியும். தப்பு செய்யிறவனுக்கு என்ன தோணும். இது சீர் கெட்ட சமூகம் நாம எது வேணுன்னாலும் செய்யலாங்கற நெனப்பு தரிகெட்டு ஓடும். பேரப்பிள்ளையா பாக்க வேண்டிய வயசுல பச்ச கொழந்தைய நாசம்பன்னிருக்க மாட்டானுங்க.

முகமது – யூசுப்

இவனுங்களப் போல ஆளுங்களுக்கு குடுக்குற தண்டனையப் பாத்து  மத்தவங்களுக்கு கனவுலையும் இப்படி தப்பு பன்ன தோணக்கூடாது. அந்த அளவு சட்டமும் தண்டனையும் வலுவா இருக்கனும். அதே நேரத்துல பெத்தவங்களும் விழிப்புணர்வோட இருக்கனும். குழந்தைகளுக்கு ஓரளவுக்கேனும் பாலியல் தொடர்பான விசயங்கள சொல்லிக் கொடுக்கனும்.

தேவகி

அவனையெல்லாம் அதே எடத்துல சுடனும். அவனும் ஒரு தாய் வயித்துல பொறந்தவந்தானே. நெனச்சாலே வயிரு எரியுது. ஒரு ஊனமுற்ற கொழந்தைய பாவம் பாக்காமெ செஞ்சுருக்கேனே அவன் வெளங்குவானா. எனக்கு இப்பதான் பேரன் பொறந்துருக்கான் அவனுக்கு பொண்ணும் ஒன்னப்போல மனுசப்பிறவிதான்னு சொல்லிக் கொடுத்து வளக்கனும்னு காலையிலதான் சொல்லிகிட்டிருந்தேன்.

மாதவி – சுபஸ்ரீ, சட்டக்கல்லூரி மாணவிகள், புகைப்படம் தவிர்த்தார்கள்.

இப்படியான மனிதர்கள சுத்திதான் நாமளும் இருக்கோன்னு நினச்சாலே அசிங்கமா இருக்கு. நல்லாத்தானே பழகுறாங்கன்னு யாரையும் நம்ப முடியல. யாருகிட்ட பேசினாலும் நம்மல எப்படி பாப்பாங்களோன்னு ஒடம்பு கூசுது. அடிக்கடி இதுபோல நிகழ்வு நடப்பதால இப்ப எதார்த்தம் போல கடந்து போயிட்றோம். எதார்த்தமா எப்படி தோனுதுன்னா இதுபோல விசயத்த கேள்விபடும் போது அவங்க மேல வர்ற கோபத்த விட நாம எப்படி உசாரா இருக்கனுங்கற எச்சரிக்க உணர்வுதான் முதல் வருது.

இந்த பொறுக்கிப் போல ஆளுங்களுக்கு யாருமே அப்பீல் ஆகக்கூடாதுன்னு நெனச்சேன். அதே போல வழக்கறிஞர் சங்கம் அறிவிச்சுருக்கு. பெற்றோர்கள் கவனமா குழந்தைங்க கிட்ட ஃபிரண்ட்லியா பேசி பழகனும். அவங்களோட வெளியுலகத்தோட நாமும் தொடர்புல இருக்கனும். சின்ன சின்ன விசயத்த கூட அவங்க கிட்ட பகிர்ந்துக்கனும். விளையாட்டுத் தனமான விசயமானாலும் குழந்தைங்க சொல்றத நாம காதுகொடுத்து கேக்கனும்.

லாவண்யா,  செவிலியர். புகைப்படம் தவிர்த்து விட்டார்.

திருமணம் குழந்தையின்னு ஆன பிறகு புருசன் பொண்டாட்டி அவ்வளவா நெருக்கமா இருக்கறது கிடையாது. விரும்பியும் விரும்பாமலும் அது நடக்குது. இதுல பெண்கள் குடும்பம் குழந்தையின்னு விதிக்கப்பட்டத ஏத்துகிட்டு வாழ்றாங்க. ஆனா ஆம்பளைங்க அப்படி கெடையாது. இதுக்கான சந்தர்ப்பம் வெளியில வாய்க்கும் போது அத பயன்படுத்திக்கிறான்.

அதுல வெறி கொண்ட மிருகமா இருந்துருக்கானுங்க இவனுங்க. 17 பேருக்கும் தெரியும் போது ஒருத்தங்கூட வெளிய சொல்லி குழந்தைய காப்பாத்த நெனைக்காமெ தானும் அனுபவிக்கனுன்னு நெனைக்கிறதுக்கு காரணம் என்ன? காலங்காலமா ஆணுங்கற திமிரு.

வினவு களச் செய்தியாளர்கள்

மதுரை மக்கள் அதிகாரம் தோழரை கைது செய்ய முயன்ற போலீசின் சதி முறியடிப்பு !

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் பரவலாக மக்கள் அதிகாரம் தோழர்கள் குறி வைத்து கைது செய்யப்பட்டனர். அதிலும் பலரை மிகப் பெரிய கிரிமினல்களைக் கைது செய்வது போல் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்வது என அட்டூழியங்களில் ஈடுபட்டுவந்தது போலீசு.

இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பில் செயல்பட்டு வரும் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பட்டறைத் தொழிலாளி சரவணன் வீட்டிற்கு சென்று அவரையும் கைது செய்ய முயற்சித்தது போலீசு. அவர் வீட்டில் இல்லாததால் அவரை கைது செய்ய இயலவில்லை.

தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் போலீசு ஈடுபட்டு வருவதைத் தடுக்கும் வகையில் மதுரை நீதிமன்றத்தில் தோழர் சரவணன் உள்ளிட்டு பல தோழர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அதனை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் குறிப்பிட்ட நபரைக் கைது செய்வது என்றால் அவர்களுக்கு முறையான சம்மன் அனுப்ப வேண்டும். அதன் பின்னர் அவர்கள் ஆஜராகாத பட்சத்தில்தான் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்த பின்னணியில் கடந்த 28.07.2018 அன்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் தோழர் சரவணன் தனது நண்பரான சக தொழிலாளி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் முகவரி கேட்டு விசாரிப்பது போல அவரிடம் பேசியுள்ளனர். பின்னர் அவரிடம் ”நீ தான சரவணன்” எனக் கேட்டுள்ளனர்.

”ஆமாம்.. உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டுள்ளார்.
”நாங்க போலீஸ் உன்னை விசாரணை செய்யனும், ஸ்டேசனுக்கு வா…” எனக் கூறியுள்ளனர்.
“சார் முதலில் நீங்கள் யார்? போலீஸ் யூனிஃபார்ம் இல்ல, நடு ரோட்டில் வந்து ஸ்டேசனுக்கு கூப்பிடுறீங்க. விசாரணைக்கு அழைப்பது என்றால் முறையான சம்மன் வரட்டும், நான் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

”நான் சொல்லிகிட்டு இருக்கேன், ஒழுங்கா வாடா.. ”என போலீசார் தோழரை அடித்து இழுத்துள்ளனர்.
அப்போது தோழருடன் உடன் இருந்த நண்பரும் ‘‘ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்’’ எனக் கேட்டுள்ளார். உடனே அவரையும் பிடித்து இழுத்து அவரது செல்போனை பிடுங்கிக் கொண்டு ”நீயும் வா.. விசாரணைக்கு” என அவரையும் வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர்.

தோழர் சரவணனை கைது செய்ய வந்த சீருடை அணியாத போலீசு

இச்சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டு அங்கு பொது மக்கள், தொழிலாளிகள் என அனைவரும் கூடிவிட்டனர். அவர்களை கலைந்து போகச் சொல்லி விரட்டியது போலீசு. ஆனால் மக்கள் அங்கிருந்து கலையாமல் அப்படியே நின்றனர்.

போலீசின் அராஜகத்தைக் கண்டு, தங்களுடைய சக தொழிலாளியை இழுத்துச் செல்வதைக் கண்டு என்ன செய்வது தெரியாமல் நின்று கொண்டு இருந்தனர்.

தோழர் சரவணனும், விடாப்பிடியாக தனது எதிர்ப்பை தெரிவித்தார். கைது செய்ய வந்தவர்களது இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை சாலையில் அமர்ந்து பிடித்துக் கொண்டு உட்கார்ந்து அங்கேயே தனது போராட்டத்தைத் தொடங்கினார்.

இவரின் இந்த போராட்டத்தால், அவரைத் தாக்கத் தொடங்கியது போலீசு. இச்சம்பவம் நடந்து கொண்டிருந்த நேரத்திலே அந்த சாலையில் ஒரு லாரி வந்துள்ளது. குறுகலான அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியது.

உடனே தோழர் விறு விறுவென எழுந்து சென்று ஒரு வீட்டின் வாயிலில் இருந்த கேட்டை பிடித்துக் கொண்டு நின்றுவிட்டார். போலீசு என்ன செய்தும் தோழரைக் கைது செய்ய முடியாத ஆத்திரத்தில் அவரை மிருகத்தனமாக இழுக்கத் தொடங்கியது. அப்போது அவர் “வருமான வரி சோதனையில் பல நூறு கோடிகளைக் கொள்ளையடித்து வைத்து இருப்பவர்களையும், கட்டி கட்டியாக தங்கத்தை வைத்து இருப்பவர்கள் எவரையும் இதுவரை போலீசு இது போல் கைது செய்ததுண்டா? போராடும் மக்களை, தொழிலாளிகளிடம் தான் போலீசின் தடிகள் நீளும்” என வாதம் புரிந்துள்ளார்.

இதைக் கேட்டு சுற்றி இருந்த மக்களும் எதிர்க்கத் தொடங்கினர். எரியக் காத்திருக்கும் சருகுகளில் தீப்பொறி பட்டது போல், பெண்மணி ஒருவர் வந்து போலீசின் அராஜக நடவடிக்கையைக் கண்டித்து பேசத் தொடங்கினார்.

மேலும் பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவரும் இச்சம்பவத்தை அறிந்து நிகழ்விடத்துக்கு வந்து போலீசை நோக்கி ‘‘நாங்க எல்லாம் மனுசனா.. இல்ல ஆடு, மாடுகளா…? இப்படி கைது பன்ற. அவரு யாருன்னு உனக்கு தெரியுமா? மக்கள் பிரச்சினைகள், தொழிலாளிகள் பிரச்சினைனா முன்ன வந்து நின்னு போராடுறவரு… அவர இப்புடி செய்யுற..?” என போலீசிடம் பேசியுள்ளார்.

இதனைக் கண்ட சுற்றி இருந்த மக்களும், கேள்விக்கணைகளால் வந்திருந்தவர்களைத் துளைக்க ஆரம்பித்தனர். இதனால் ஒன்றும் செய்ய முடியாது நின்ற போலீசு சரவணனிடம் பேச்சு வார்த்தை நடத்தத் தொடங்கியது.

பசப்பல் வார்த்தைகள் பேசி எப்படியாவது அவரை கைது செய்ய நினைத்தது. தோழரோ தனது வழக்கறிஞர்கள் வரட்டும் அவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள் என கறாராக கூறிவிட்டார். பின்னர் வழக்கறிஞர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட்து.

தோழர் சரவணன் (நடுவில் இருப்பவர்) – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

வழக்கறிஞர்கள் வந்து சேர்வதற்குள்ளாகவே மீண்டும் தோழரை கைது செய்யப் பார்த்தது போலீசு. ஆனால் கூடியிருந்த மக்கள் அனைவரும், போலீசின் செயலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் வரும்வரை தோழரை காத்து நின்றனர்.

உடன் அப்பகுதிக்கு வாஞ்சிநாதன் உள்ளிட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் வந்து சேர்ந்தனர். சீருடை அணியாது தோழரை பலவந்தப்படுத்திக் கொண்டிருப்பதை வழக்கறிஞர்கள் கண்டிக்க ஆரம்பித்ததும் ஜீப்பை எடுத்துக் கொண்டு வந்தது போலீசு.

அதுவரை உச்சஸ்தாயியில் பேசிக் கொண்டிருந்த போலீசு வழக்கறிஞர்கள் வந்ததும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது.

ஒருவரை கைது செய்ய வேண்டும் எனில் நீதிமன்றம் கொடுத்துள்ள வழிகாட்டல்களைக் கடைபிடிக்க வேண்டும். அதில் குறிப்பானது சம்மந்தப்பட்ட நபரை கைது செய்யப் போகும் போது அவரிடம் முறையாக விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். சீருடை அணிந்து வர வேண்டும், போன்ற எந்த வழிகாட்டலையும் பின்பற்றாது செயல்படுவது சட்டவிரோதமானது எனக் கூறினர்.

மேலும் மதுரை நீதிமன்றத் தீர்ப்பின்படி, முறையான சம்மன் அளித்துதான் அவர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என அறிவித்துள்ளனர். எனவே இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறியவுடன், சட்டரீதியில் மடக்கிப் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு அந்த தீர்ப்பின் நகல் உள்ளதா என கேட்டது போலீசு.

அதற்கு ஒரு கைது நடவடிக்கை அல்லது ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் முன் நீங்கள் உங்கள் அரசு தரப்பு வழக்கறிஞர், உயர் அதிகாரிகள் என அவர்களிடம் விவரம் கேட்டு வரவேண்டும்.

மேலும் இந்த தீர்ப்பு வந்த போது போலீசுத்துறையின் பல்வேறு பிரிவுகளின், உயரதிகாரிகள் அங்குதான் இருந்தனர் எனக் கூறியதும், “எங்களுடைய தவறுதான்” என பல்லிளித்து நின்றது போலீசு.

பின்னர் தங்களின் அதிகாரம் இங்கு செல்லுபடியாகாது என்பதை உணர்ந்த போலீசு பின்வாங்கிச் சென்றது. மேலும் தோழரின் நண்பரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போனை திரும்பி ஒப்படைத்துச் சென்றது போலீசு.

அதன் பின்னர் அப்பகுதி மக்களிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசினார். அதில் மக்களுக்காக போராடும் ஒருவரை போலீசு அராஜகமாக கைது செய்ய நினைத்ததை முறியடித்த மக்களுக்கு நன்றி கூறி, போலீசின் அச்சுறுத்தலுக்கும், அடக்குமுறைகளுக்கும் அடிபணியக் கூடாது என்பதை விளக்கிக் கூறினார்.

மக்கள் அதிகாரம் அமைப்பையும், அதன் தோழர்களையும் தனிமைப்படுத்த போலீசும் அரசும் எவ்வளவுதான் முயன்றாலும் மக்கள் அதிகாரத்தையும், மக்களையும் பிரிக்க முடியாது என்பதையே இந்த சம்பவம் காட்டியுள்ளது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை.

சேரி – ஊர் : கவிஞர் சுகிர்தராணியுடன் ஒரு விவாதம் !

9

திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அவிநாசி வட்டத்தைச் சேர்ந்த திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பலருக்கும் அறிந்த பள்ளியாகி விட்டது. இப்பள்ளியின் சமையலராக பணி ஏற்க வந்த பாப்பாள் அம்மாள் ஒரு தலித் பெண் என்பதால் உள்ளூர் சாதி இந்துக்களான கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருமலைக்கவுண்டன் பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி

இந்த ஊர்தான் பாப்பாள் அவர்களின் சொந்த ஊர். ஒச்சாம்பாளையம் கிராமத்தில் பணியாற்றியவர் பணிமாறுதல் பெற்று இங்கு வந்தார். அன்றைய நாளே அவர் சமைப்பதற்கு சாதி வெறியர்கள் அனுமதி மறுத்தனர். சாதி பெயரைத் திட்டியும், நாக்கூசும் வார்த்தைகளை அர்ச்சித்தும் அவர்கள் அவரை வெளியே போகச் சொன்னார்கள். இவர் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என ஆசிரியர்களிடமும் மிரட்டியிருக்கின்றனர்.

உடனே பள்ளி மற்றும் அரசு நிர்வாகம் அவரது பணிமாற்றத்தை ரத்து செய்து ஒச்சாம்பாளையத்திற்கே திரும்பப் போகுமாறு பணித்திருக்கிறது. கேட்டால் படிக்கும் குழந்தைகள் படிப்பு பாதிப்படையக் கூடாது, அரசு பள்ளியின் வருகை குறைந்து விடக்கூடாது என்று ’நியாயம்’ பேசியிருக்கிறது. எந்தக் குழந்தை தனக்கு இன்னார் சமைத்தால்தான் சாப்பிடுவேன் என்று கூறும்? குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் ’பெரிய’வர்களைக் கண்டிக்காமல் அவர்களுக்கு ஒத்துப் போனது அரசு நிர்வாகம்.

பிறகு ஊடகங்கள், கட்சிகள் மற்றும் சமூகவலைத்தளங்களில் கண்டனம் வந்த பிறகு பாப்பாள் அம்மாளை திரும்பவும் அதே  திருமலைக்கவுண்டன் பாளையத்தில் பணியமர்த்தியிருக்கிறது அரசு. உடனே பாதிக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்திருக்கின்றனர், சாதி வெறியர்கள்.

இந்நிலையில் திருப்பூர் பெரியார் திராவிடர் கழகம், பாப்பாள் அம்மாளின் வீட்டில் “விருந்தும் – கலந்துரையாடலும்” நடத்துவதாக அறிவித்தது. அதில் அக்கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இளைஞர் எழுச்சி இயக்கத் தலைவர் எழிலன், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த இடத்தில் கவிஞர் சுகிர்தராணி வருகிறார். தன்னை எழுத்தாளர் -கவிஞராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சுகிர்தராணி அரசுப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அவருடைய கவிதைகள் மற்றும் கருத்துக்கள் மூலமாக தலித் அரசியலோடு பயணிப்பவராகவும் தெரிவிக்கிறார்.

ஜூலை 22 அன்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கவிதையை – உண்மையில் ஒரு கருத்தை கவிதை பாணியில் உடைத்துப் போட்டு – வெளியிடுகிறார்.

கவிஞர் சுகிர்தராணி

நீங்கள்
ஊரிலிருந்து
சேரிக்குவந்து
சாப்பிட்டுவிட்டுப்
போகலாம்.
பாப்பம்மாள்
சமைத்துப்போடுவார்.

ஆனால்
நாங்கள்
சேரியிலிருந்து
ஊருக்குப்போய்
சாப்பிடவேண்டும்.
உங்கள்
வீட்டம்மா
சமைத்துப்போடுவாரா?

பாப்பம்மாள் – வீட்டம்மாள், நீங்கள் – நாங்கள், ஊர் – சேரி என்று எதுகை மோனை பார்த்துச் சமைக்கப்பட்டிருக்கும் இக்கவிதை கூறவரும் விசயம் என்ன? தலித்துக்களின் வீட்டில் ‘மற்றவர்கள்’ உண்ண முடியும். ‘மற்றவர்களது’ வீட்டில் தலித் மக்களை அழைத்து விருந்து அளிக்க முடியுமா? இதுதான் நமது கவிஞரின் அறச்சீற்றம்!

சுகிர்தராணியின் கேள்வி இந்த இடத்தில் பொருத்தமானதா?

ஏனெனில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியினர் பல இடங்களில் தலித் மக்கள் வீட்டுக்கு சென்று உணவருந்தியதாக வலிந்து விளம்பரப்படுத்தியிருக்கின்றனர். அப்படி தலித் மக்கள் வீடுகளுக்கு அவர்கள் செல்லும்போது கூடவே வெளியில் இருந்து அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளை உதவியாளரை வைத்து வாங்கிச் சென்றனர். சில இடங்களில் பந்திப் பாய் கூட கொண்டு சென்றிருக்கின்றனர். இவையெல்லாம் ஊடகங்களில் பெரிய ஸ்டிங் ஆபரேஷன்கள் இல்லாமல் இயல்பாகவே வெளிவந்து நாறிய விஷயங்கள். அம்பேத்கரையும், தலித் – இயக்கங்கள், மக்களை பார்ப்பனியத்திற்குள் (இந்துத்வத்திற்குள்) இழுக்கும் முயற்சியினை ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் குழுமங்கள் வடிவமைக்க மோடி ஆட்சியின் போது அவை செயலுக்கும் வருகிறது.

ஆனால் திருமலை கவுண்டம்பாளையத்தில் இருக்கும் பாப்பாள் அம்மா வீட்டுக்கு சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை, பாரதிய ஜனதா பம்மாத்துக்களுடன் சேர்த்துப் பார்க்க முடியுமா? சுகிர்தராணியிடம் கேட்டால் கூட அப்படி பார்க்க முடியாது என்றுதான் கூறுவார். ஆனால் உங்களிடம் இருக்கும் கருணை மனப்பான்மையின் தரம் கொஞ்சம் தானதர்மம் போடும் ஆண்டைகளுடையது, அந்த இரவல் மனப்பான்மையை அறிய வேண்டுமென்றால் தலித் மக்களை உங்கள் வீட்டில் அழைத்து சாப்பிடச் சொன்னால் உங்கள் வீட்டு அம்மாக்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்று ’ஆய்வு’ செய்து கேட்கிறார். இதை அவர் கோபம் என்று கருதினாலும் அப்படி ஒரு கோபத்தை இந்த இடத்தில் யாராலும் உணருவது கடினம்.

சுகிர்தராணி கூறுவது போல சேரியிலிருந்து தலித் மக்கள் ஊருக்குச் சென்று  உணவருந்துவது என்பது பொதுவில் குதிரைக் கொம்பான ஒன்றுதான்.  தமிழகத்தின் பல ’ஊர்’களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டின் வெளிப்புறத்தில்தான் உணவு அளிப்பார்கள். அதுவும் ஊர்க்காரர்களுக்கு இருக்கும் சிறப்பு விருந்து வகைகள் இன்றி, ஏதோ ஒரு கணக்கில் அவை நடக்கும். சாதாரண நாட்களில் கூட மிச்சம் மீதி என்று விவசாயத் தொழிலாளிகளாக இருக்கும் தலித் மக்கள் உணவருந்துவார்கள். சில ஊர்களிலோ இப்படி கொல்லைப் புறத்தில் அமர்ந்து கூட சாப்பிட முடியாது. சில ஊர்களில் பாத்திரங்களில் வாங்கித்தான் செல்ல முடியும். பல ஊர்களில் உள்ளே நுழையவே முடியாது. முக்கியமாக வீட்டிற்குள் வழக்கமான தட்டுக்களில் வீட்டு பெண்கள் அப்படி பரிமாறி ஒரு தலித் ஆணோ பெண்ணோ சாப்பிடுவது சாத்தியமில்லை என்பதும் உண்மைதான். இவையெல்லாம் பகிரங்கமாகவும், ஆதிக்கத்தோடும், நுட்பமாகவும் ஆதிக்க சாதி வெறி அமல்படுத்தி வரும் தீண்டாமையின் கள யதார்த்தம்தான்.

பாப்பம்மாள் – வீட்டம்மாள், நீங்கள் – நாங்கள், ஊர் – சேரி என்று எதுகை மோனை பார்த்துச் சமைக்கப்பட்டிருக்கும் இக்கவிதை கூறவரும் விசயம் என்ன? தலித்துக்களின் வீட்டில் ‘மற்றவர்கள்’ உண்ண முடியும். ‘மற்றவர்களது’ வீட்டில் தலித் மக்களை அழைத்து விருந்து அளிக்க முடியுமா? இதுதான் நமது கவிஞரின் அறச்சீற்றம்!

சரி, சுகிர்தராணியின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட பாப்பம்மாள் என்ன கூறுகிறார்? அந்த தகவலை பி.பி.சி. தமிழ் இணையதளம் பதிவு செய்திருக்கிறது.

“எல்லோரும் என்னோட வீடு தேடி வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, மனசு எல்லாம் நிறைஞ்சு இருக்கு, 12 வருஷம் இந்த பிரச்சனையால் அதிகமா கஷ்டப்பட்டேன். ஆனா இப்ப எனக்காக எத்தனை பேர் இருக்காங்கன்னு பார்க்கும்போது அந்த கஷ்டம் ஏதும் தெரியலை” என்கிறார் பாப்பம்மாள்.

ஒருவேளை சுகிர்தராணி போல பாப்பம்மாள் தலித் போராளி இல்லையா? இல்லை அப்பாவித்தனமாக ‘ஊர்’ ஆட்கள் மீது நம்பிக்கை கொள்கிறாரா?

சுகிர்தராணியும், பாப்பம்மாளும் அரசு பள்ளிகளில்தான் பணி புரிகிறார்கள். ஆகவே ஒரு கவுண்டர் படுகை பள்ளியில் பாப்பம்மாளின் நிலை என்ன என்பது சுகிர்தராணிக்கு மட்டுமல்ல, தமிழக சமூக நிலைவரம் அறிந்த அனைவருக்கும் தெரியும். எனினும் கொங்கு படுகையின் சாதிவெறி என்பது தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் ரகத்தைச் சேர்ந்தது. இன்றளவும் அங்கே ஒரு நகரத்தில் ஏதாவது ஒரு தலித் அமைப்பினர் ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து கூட்டம் ஒன்று கூட நடத்தி விட முடியாது.

கொங்கு படுகையின் சாதிவெறி என்பது தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் ரகத்தைச் சேர்ந்தது. இன்றளவும் அங்கே ஒரு நகரத்தில் ஏதாவது ஒரு தலித் அமைப்பினர் ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து கூட்டம் ஒன்று கூட நடத்தி விட முடியாது.

ஆகவே இத்தகைய சூழலில் தனது வீடு தேடி வந்த தோழர்கள், மக்களின் அருமை பாப்பம்மாளுக்கு தெரிகிறது. ஆனால் காலச்சுவடு பதிப்பகத்தில் கவிதை புத்தகம் போடும் சுகிர்தராணிக்குத் தெரியவில்லை. அந்த அருமையை, நுட்பமாக தன்னை மறைத்துக் கொள்ளும் ஆதிக்கம் என்பதாக மொழிபெயர்க்கிறார்.

எளிய மக்களுக்கு தெரியும் கள யதார்த்தம் நுண்ணுணர்வு கொண்டவர்கள் மட்டுமே கவிதை எழுதுவதாக கூறும் கவிஞர்கள் அல்லது புலவர் மரபைச் சேர்ந்த சுகிர்தராணி மேடத்திற்கு தெரியாதது ஏன்? சாதி வெறி, சாதி ஆதிக்கம், தீண்டாமை போன்றவற்றை எதிர்ப்பது – ஒழிப்பது ஆகியவை முதன்மையாக களத்தோடும் களப்பணியோடும் தொடர்புடையவை. அவற்றை கருத்துரீதியாக விவாதிக்கும் பொழுது அல்லது கவிதை எழுதும் போது களத்தில் அவை எப்படி பொருந்தும் அல்லது வினையாற்றும் என பொருத்தம் பார்த்தல் முக்கியம். அந்தப் பொருத்தப்படி ஊர்க்காரர்களின் வீட்டில் வீட்டம்மாள் தலித் மக்களுக்கு சமைத்து பரிமாற மாட்டார் என்பதையே சுகிர்தராணி இங்கே நினைவறையில் இருந்து எடுத்துப் போடுகிறார். அதுவும் அவரது கண்டுபிடிப்பல்ல. பல முறை பல நேரம் பலரும்கூறிய யதார்த்தமான ஒரு உண்மைதான்.

தலித் அரசியல்தான் சரி என்ற விவாதம் 90-களில் அதிகம் நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக மார்க்சியத்தை குறிவைத்து தன்னார்வக் குழுக்கள் மற்றும் பின்நவீனத்துவ முகவர்களின் தத்துவ மேற்பார்வையில் இறக்கப்பட்ட அதே அடையாள அரசியல் இன்றும் பலவீனமாக என்றாலும் கருத்தளவில் தொடர்கிறது. மார்க்சியத்தோடு பெரியாரும் அன்று தலித் அரசியலின் எதிர் இலக்கில் வைக்கப்பட்டார். இன்றைக்கு விடுதலைச் சிறுத்தை கட்சியில் இருக்கும் ரவிக்குமார் அன்றைக்கு பெரியாரை அவதூறு செய்து நிறைய ‘கண்டுபிடிப்புகளை’ வெளியிட்டுள்ளார்.

ஒருவர் தலித் அரசியலோ, மார்க்சியமோ, திராவிட அரசியலோ பேசட்டும். அதில் எந்த அரசியல் தத்துவம் சாதி ஒழிப்பிற்கான முரணற்ற விளக்கத்தையும், செயல்பாட்டுத் திட்டத்தையும், அதற்கேற்ற நடைமுறையையும் கொண்டிருக்கிறது என்பதே.

சரி இந்த விவாதத்தின் மையப் பொருள் என்ன? ஒருவர் தலித் அரசியலோ, மார்க்சியமோ, திராவிட அரசியலோ பேசட்டும். அதில் எந்த அரசியல் தத்துவம் சாதி ஒழிப்பிற்கான முரணற்ற விளக்கத்தையும், செயல்பாட்டுத் திட்டத்தையும், அதற்கேற்ற நடைமுறையையும் கொண்டிருக்கிறது என்பதே விவாதப் பொருள். சுகிர்தராணியின் கவலை இது குறித்து அல்ல. மாறாக ஒருவர் தலித் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்றால் கையிலிருக்கும் மதிப்பெண் பட்டியலில் இருந்து அந்தக் குரலுக்கு எத்தனை மதிப்பெண், பாஸா, ஃபெயிலா என்று டிக் அடிக்கிறார். ஒருவேளை ஆசிரியர் என்பதால்தான் இந்த மதிப்பெண் வியாதியா?

பாப்பம்மாள் தனது ஊரில் பள்ளியில் சாதி தீண்டாமையினை எதிர்த்துப் போரிட என்னென்ன செய்ய வேண்டும்? அது எப்படி நடக்கும்? அல்லது நடக்காது? இவைதான் முன்னர் சொன்ன அரசியல் தத்துவ விவாதங்களின் மையப் பொருள்!

இந்தியாவில் முசுலீம்கள் மதத்தால் சிறுபான்மையினர். மோடி ஆட்சியேற்ற பிறகு சாதாரண மாட்டுக்கறி உணவுக்காகவே பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்று சில முசுலீம் தலைவர்கள் கூட “முஸ்லீம்களே இனி மாடுகளை கைவிடுங்கள், உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் இந்த பாசிசத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதையே மிரட்டலாக இனிமேல் மாட்டுக்கறி உண்ணுவதை நிறுத்தினால் மட்டுமே முசுலீம்கள் தாக்கப்படாமல் இருப்பார்க்ள என்று பா.ஜ.க சங்கிகள் வெளிப்படையாகவே பேசுகின்றனர்.

இந்நிலையில் முசுலீம்களுக்காக குரல் கொடுப்போரை அவர்களது பிறப்பை வைத்து வேற்று மதம் எனும் பட்சத்தில் ஒரு முசுலீம் கவிஞர், சுகிர்தராணி போல கவிதை எழுதினால் என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது.

ஏனெனில் முசுலீம் மக்கள் மீதான மதவெறி என்பது சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மையின் ‘சம்மதத்தோடு’ நடத்தப்படும் இந்துமதவெறி! இதை முசுலீம் மக்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து எதிர்ப்பது என்பது சாத்தியமே இல்லை. மதச்சார்பற்ற இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும், இடதுசாரி இயக்கங்களுமே இன்று இந்துமதவெறியை பல மாநிலங்களில் எதிர்த்து களமாடி வருகின்றனர். இந்துமதவெறி என்பது முசுலீம்களுக்கு மட்டுமல்ல, இதர ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள், தொழிலாளிகள், பெண்கள் அனைவருக்கம் எதிரானது. ஆனால் இந்துமதவெறி தனது பிரதான எதிரி என்று முசுலீம்களை மட்டும் குறிவைக்கிறது.

பாப்பம்மாள் தனது ஊரில் பள்ளியில் சாதி தீண்டாமையினை எதிர்த்துப் போரிட என்னென்ன செய்ய வேண்டும்? அது எப்படி நடக்கும்? அல்லது நடக்காது? இவைதான் முன்னர் சொன்ன அரசியல் தத்துவ விவாதங்களின் மையப் பொருள்!

இந்நிலையில் எல்லா மதங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களை எந்த அளவு ஒன்று சேர்க்கிறோமோ அந்த அளவுதான் நாம் இந்துமதவெறியை எதிர்ப்பதும், முறியடிப்பதும் முடியும்.

இந்திய அளவில் அவை இன்னமும் சாத்தியமில்லை என்றாலும் சில மாநிலங்களில் சில தருணங்களில் சாத்தியமாகியிருக்கிறது. தமிழகத்தில் ரத யாத்திரையாக இருக்கட்டும், சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி உண்ட  மாணவர் மீதான தாக்குதலாக இருக்கட்டும் அனைத்து பிரிவு மக்களும் ஒன்று சேர்ந்து இந்துமதவெறியர்களை தனிமைப்படுத்தியிருக்கிறோம்.

இதே விதி தலித் மக்கள் மீதான அடக்குமுறைக்கும் பொருந்தும். ஊரிலிருக்கும் ஏழைகளும், சேரியில் இருக்கும் ஏழைகளும் ஒன்றாக சேர்வது என்ற நிலை இல்லாமல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை நம்மால் துவக்குவதே கடினம். அப்படித் துவக்கினாலும் வெற்றி பெறுவது சிரமம்.

அதே நேரம் இந்த இணைப்பு என்பது எப்போதும் கண்டிஷன் அப்ளை போன்ற ஒன்றதல்ல. சமயத்தில் நாம் ஊரை கடினமாக கூட விமர்சிக்க வேண்டியிருக்கும். வர்க்க ரீதியான போராட்டங்களை அதிகம் நடத்த நடத்த தன்னளவில் இந்த தீண்டாமை என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டு அகற்றப்படும். ஆகவேதான் இதில் எது முதல், எது இரண்டாவது என்பதன்றி இரண்டு பிரிவு மக்களையும் எப்படி இணைப்பது என்பதும் அதில் தீண்டாமையை தற்காலிகமாக சகித்துக் கொள்வது கூடாது என்பதும் மார்க்சியம் முன்வைக்கும் அரசியல் மற்றும் நடைமுறை.

பாப்பம்மாள் வீட்டிற்கு சென்று ஆதரவளித்த பெரியார் இயக்கத் தோழர்களை அங்கே உள்ளூரில் இருக்கும் கவுண்டர் சாதி வெறியர்கள் இனி எப்படி கருதுவார்கள்? நட்பாகாவா, பகையாகவா? அடுத்த முறை வேறு ஏதாவது ஒரு போராட்டத்திற்கு சென்று அந்த பிரிவு மக்களிடம் ஆதரவு கேட்டால் அவர்கள் எதை முன்வைப்பார்கள்? ஆகவே பாப்பம்மாள் வீட்டிற்கு சென்றதால் பெரியார் இயக்கத் தோழர்கள் அந்த வட்டார கவுண்டர் சாதி சங்கங்களது ஹிட் லிஸ்டில்தான் இருப்பார்களே அன்றி நட்பு பட்டியலில் அல்ல.

அதே போன்று அந்த வட்டாரத்தில் இருக்கும் ஆதிக்க சாதி மக்களில் சிலராவது பாப்பம்மாளுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து யோசிப்பார்கள். சாதி வெறியர்களுக்கு பயந்து கொண்டு வெளிப்படாமல் இருக்கும் அவர்களது கருத்து மெல்ல மெல்ல வெளியே வரும். வரவழைக்க வேண்டும். இந்த வலிநிறைந்த பாதை அறிந்தால் சுகிர்தராணியால் அந்த பாடலை பாடியிருக்க முடியாது. அந்தக் கவிதையின் கருப்பொருள் டெக்னிக்கலாக சரியென்றாலும் இந்த நேரத்தில் அது எதிர்மறையாகி விடுகிறது.

அதே போன்று ஆதிக்கசாதி வெறியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊர்களில் வாழும் தலித் மக்களையும் இத்தகைய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்திற்கு அணி சேர்ப்பது கடினம். எப்போது அவர்களும் தைரியமாக முன்வருவார்கள்? அதுவும் நாம் முன்னர் சொன்ன சேரி – ஊர் இணைப்பின் காரணமாகவே நடக்கும்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் ஊரான பண்ணைப்ப்புரத்தில் தலித் மக்கள் சிறுபான்மையினர். அங்கே இருக்கும் தனிக்குவளை தேநீர்க்கடை நடைமுறையை ஒழிக்க வேண்டும் என விவசாயிகள் விடுதலை முன்னணி அங்கே சில மாதம் வேலை பார்த்தது. பிறன்மலைக் கள்ளர்களால் நிறைந்திருக்கும் அந்த ஊரின் தர்பாரில் ஒரு தலித் கூட இந்தப் போராட்டத்திற்கு வரவில்லை. ஆனால் பிறப்பால் ஆதிக்கசாதியைச் சேர்ந்த தோழர்கள் பலர் அருகாமை ஊர்களில் இருந்து வந்து போராடினார்கள். போலீசிடம் அடிபட்டார்கள். அடிக்கும் போது போலீசு கூட அவர்களை தவறான உறவில் பிறந்தவரென திட்டியது.

இதன் பிறகு அரசு நிர்வாகம் அங்கே வந்து பண்ணைப்புரத்தின் தலித் மக்களை அங்கே தீண்டாமை இல்லை என கையெழுத்து போட்டு கடிதம் தரச் சொன்னது. ஆனாலும் அந்த மக்கள் போட்டுத் தரவில்லை. அப்படி தராததால் அவர்கள் அங்கே ஆதிக்க சாதிவெறியின் அடுத்த கட்ட மிரட்டலுக்கு ஆளாகலாம். அதே நேரம் அப்படி ஆனால் அதை தடுத்து நிறுத்த அவர்களுக்கு ‘வெளியில்’ இருந்து நட்பு வந்திருக்கிறது. அந்த தைரியத்தில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள். தன்னளவில் தலித் மக்கள் போராட்டப் பாதைக்கு வருவது என்பது இப்படித்தான் துவங்கும்.

பாப்பம்மாள் வீட்டிற்கு சென்றதால் பெரியார் இயக்கத் தோழர்கள் அந்த வட்டார கவுண்டர் சாதி சங்கங்களது ஹிட் லிஸ்டில்தான் இருப்பார்களே அன்றி நட்பு பட்டியலில் அல்ல.

இந்தப் பாதைதான் மார்க்சியம் முன்வைக்கும் விடுதலைப் பாதை! பீகார், தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்கம், கீழத்தஞ்சை என பல இடங்களில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட பாதை!

ஆகவே இங்கே பாப்பம்மாள் வீட்டிற்குச் சென்ற பெரியார் இயக்கத் தோழர்களின் பணி மேடத்திற்கு தெரியவில்லை. தமிழகத்தில் சமீப ஆண்டுகளாக சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும், இந்துமதவெறிக்கு எதிராகவும் பல நிலைகளில் போராட்டங்களும், கருத்துக்களும் அணிசேர்கின்றன. அதில் போதாமைகள் இருக்கலாம், நிறைய மாற்றங்கள் தேவைப்படலாம். அதை நாம் தோழமையோடு விவாதிக்கலாம். அதை விடுத்து இத்தகைய முற்போக்கு அரசியல் இணைப்பின் அடிப்படையையே தகர்க்கும் இந்த அடையாள அரசியலால் என்ன பயன்?

அல்லது கவிஞர் சுகிர்தராணி இதை நுட்பமாக அறிய வேண்டுமென்றால் அவருக்கும் ஒரு வீட்டுப் பாடம் கொடுக்கலாம்.

வேலூர் மாவட்டத்தில் தலித் மக்கள் சிறுபான்மையாகவும், ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையினராகவும் உள்ள ஒரு கிராமத்தை தேர்ந்தெடுங்கள். அந்த கிராமத்தில் கண்டிப்பாக பல்வேறு அளவுகளில் தீண்டாமை இருக்கும். அவற்றை ஆய்வு செய்து குறித்துக் கொள்ளுங்கள்! பிறகு தலித் மக்களை அணி சேர்த்து அதே ஊர் ஆதிக்க சாதியினரை எதிர்த்து போராடுவதற்கு முயலுங்கள்! ஆரம்பத்தில் தலித் மக்கள் பயப்படுவார்கள். ஊர் மக்களை பகைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து விட்டு எப்படி போராடுவது என்று தயக்கப்படுவார்கள். அந்த தயக்கத்தை எப்படி உடைப்பது என்று யோசியுங்கள்!

அந்தக் கணத்தில் உங்களால் கவிதை எழுத இயலாது! அந்த வலி நிறைந்த சூழலில் மக்கள் கற்றுக் கொடுக்கும் கவிதையின் மூலம் நீங்கள் தோழராக மாறும் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்!

  • இளநம்பி

கருத்துக் கணிப்பு : முதலாளிகளை ஆதரிப்பதற்கு அஞ்சமாட்டோம் என்று மோடி பேசியதன் காரணம் ?

டுத்த பாராளுமன்ற தேர்தலின் முக்கிய களம் உத்திரப் பிரதேசம். தேர்தல் களத்தில் களமாடுவதற்கு பா.ஜ.கவிற்கு தேவைப்படும் முதல் விசயம் மக்கள் ஆதரவு என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இதை நாங்கள் சொல்லவில்லை, மோடியே சொல்கிறார்!

ஜூலை 29, 2018 அன்று உ.பி தலைநகர் லக்னோவில் ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான 81 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வை ஒட்டி நடந்த கூட்டத்தில் சில பல விருந்தினர்கள் பங்கேற்றனர். யார் அவர்கள்?

பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அதானி குழுமத்தின் கவுதம் அதானி, எஸ்சல் குழுமத்தின் சுபாஸ் சந்திரா, ஐடிசி குழுமத்தின் சஞ்சீவ் பூரி உள்ளிட்ட முதலாளிகள் மோடியின் தொழிலதிபர் படையாக அங்கே அணி வகுத்தனர்.

அந்த கூட்டத்தில் பேசிய மோடி, மிகப்பெரும் முதலீட்டுத் திட்டங்களை ஈர்த்த உத்திரப் பிரதேச அரசை பாராட்டியதோடு, முதல்வர் ஆதித்யநாத்திற்கு ஒரு ஸ்பெஸல் பாராட்டையும் அளித்தார். பிறகு அவருக்கு அபயமளித்து கூடவே சில பல கோடிகளைக் கொடுத்து பிரச்சாரம் செய்து பிரதமராக்கிய அதானி உள்ளிட்டோரை பார்த்ததும் மோடியின் செஞ்சோற்றுக் கடன் உணர்ச்சி பொங்கி வழிந்திருக்கிறது.

“நாங்கள் எப்போதும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதில், துணை நிற்பதில் தயக்கம் காட்டுபவர்களோ, அஞ்சி நிற்பவர்களோ அல்ல. விவசாயிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளிகள் போல தொழிலதிபர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதனால்தான் காந்தி கூட பிர்லா குடும்பத்துடன் துணை நிற்பதில் தயக்கம் காட்டவில்லை. நாம் தொழிலதிபர்களையும், மிகப்பெரிய வர்த்தகர்களையும் திருடர்கள், கொள்ளையடிப்பவர்கள் என்று அவமானப்படுத்த வேண்டுமா?” என்று ஆவேசமாக பேசினார் மோடி.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த லலித் மோடி, நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற திருட்டு முதலாளிகள் வெளிநாடுகளில் இருந்தவாறு ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பது உறுதி! ஒரு வாக்கரசியல் ஆதாயத்திற்காக, மக்களிடம் முதலாளிகளுக்காக பரிந்து பேசும் மோடி குறித்து வியந்து போயிருப்பார்கள்! அதானியோ பரவாயில்லையே வாங்கிய காசுக்கு மேலே வெண்பா பாடுகிறாரே என்று கள்ளச்சிரிப்பு சிரித்திருப்பார். ரஃபேல் விமான நிறுவனத்திற்காக ஆதாயம் பெறும் அம்பானி, அங்கு இருந்திருந்தால் மோடியை கட்டித் தழுவி உருகியிருப்பார்.

இனி இன்றைய கேள்வி:

முதலாளிகளை ஆதரிப்பதற்கு நாங்கள் அஞ்சுவதில்லை என்று மோடி பேசியிருப்பதன் காரணம்?

  • அவர் ஒரு  கார்ப்பரேட் கைக்கூலி
  • மக்கள் நலனுக்காக முதலாளிகளை ஆதரிக்கிறார்
  • தெரியவில்லை

 

வினவு யூ-டியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

வினவு ட்விட்டரில் வாக்களிக்க:

வினவு முகநூலில் வாக்களிக்க:

மத்தியப் பிரதேசத்தின் மாடுகள் சரணாலயம் – A Horror Story !

மத்தியப் பிரதேசம் சலாரியா கிராமத்தில் 472 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கும் பசு சரணாலயம்.

மோடி அரசு பதவியேற்ற பிறகு சங்கிகள் கையில் எடுத்த முதல் பிரச்சினை பசு! மத்திய அரசு மட்டுமல்ல பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் பல்வேறு திட்டங்களின் பெயரில் பசுக்களுக்கான கோசாலை, மூத்திரத் தொழிற்சாலை, மூத்திர ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று ஆர்ப்பாட்டமாக அனுமதித்தார்கள். இன்னொரு புறம் பசுக்களைக் கொல்கிறார்கள் என்று வட இந்தியாவில் மாடுகளை விற்பனை செய்யும் முசுலீம்களை ஆங்காங்கே பிடித்து கொடூரமாக கொலை செய்தார்கள்.

இராஜஸ்தான் மாநில அரசாங்கம் பசுக்களின் சரணாலயத்தை முதலில் அறிவித்த பிறகு, மத்தியப் பிரதேச அரசும் ஒரு பிரம்மாண்டமான பசு சரணாலயத்தை திறப்பதாக பெரும் ஆரவாரத்துடன் அறிவித்தது. ஆனாலும் இன்று வரை அந்த சரணாலயத்திற்கு நிதி திரட்ட முடியவில்லையாம். பசுக்களுக்காக முசுலீம்களையும், தலித் மக்களையும் கொன்ற கயவர்கள் இரக்கப்பட்டு திறந்த மத்தியப் பிரதேச காமதேனு பசு அபய நிலையம் (Kamdhenu Gau Abhayaranya) ஐந்து மாதங்களுக்கு பிறகு தனது கதவுகளை இரக்கமற்று மூடி விட்டது. பசுக்களுக்கு அபயமளித்து சரணாலயம் நடத்துவதற்கு போதிய பணமோ, ஆட் பலமோ அந்த நிலையத்தில் இல்லை என்பதே பிரச்சினை.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆகர் மாவட்டத்தில் சலாரியா கிராமத்தில் 472 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த சரணாலயம் செப்டம்பர் 2017-ல் திறக்கப்பட்டது. நாட்டிலேயே இதுதான் முதல் சரணாலயம் என்று தங்கள் வாழ்நாளில் பசுஞ்சாணியையோ, இல்லை செத்துப் போன பசுக்களை புதைப்பதையோ தொட்டிராத, பார்த்திராத ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் சமூக வலைத்தளத்தில் சீறி எழுந்தார்கள்.

இந்த சரணாலயத்தில் கைவிடப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட பசுக்களைக் காப்பாற்றுவதோடு மாட்டுச் சாணி மற்றும் மூத்திரத்தில் இருந்து மருந்துகளும், பூச்சிகொல்லிகளும் தயாரிக்கப்படுமென ஆரம்பத்தில் கூறப்பட்டது. இந்த சரணாலயம் சுமார் 6,000 பசுக்களை பராமரிக்கும் திறன் கொண்டிருந்தாலும்  தற்போது 4120 பசுக்கள் மட்டுமே இருக்கிறதாம். தற்போது மாநில அரசின் விலங்குகள்நல வாரியத்தில் இருந்து பெறப்படும் பணம், இந்தப் பசுக்களுக்கு தீனி அளிப்பதற்கு கூட போதுமானதில்லையாம்.

“இந்த சரணாலயத்தின் அனைத்து செலவுகளுக்கும் தேவைப்படும் பணம் பத்து கோடி என்றாலும் அதில் பாதிதான் தரப்படுகிறது. அந்தப் பாதியிலும் நான்கு கோடி தீனிக்கு செலவழிக்கப்படுகிறது. இதற்கே இந்த கதி என்றால் புதிய கோசாலை திட்டங்களை பேசுவதற்கு வழியே இல்லை” என்கிறார் விலங்குகள்நல வாரியத்தைச் சேர்ந்த ஒருவர். அரசால் துட்டுக் கொடுக்க முடியாது என்பதால் மத்தியப் பிரதேச நிதித்துறை அதிகாரி, பசுப் பாதுகாப்பிற்காக நன்கொடை திரட்டுமாறு பசுநல வாரியத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கார்ப்பரேட்டுகளிடமிருந்து ஆயிரம் கோடி நன்கொடை பெறும் பாஜகவுக்கு 6000 பசுக்களைப் பராமரிக்க ஒதுக்கப்படவேண்டிய ரூ.14 கோடி என்பது தம்மாத்துண்டு பணம்தான்

இந்த சரணாலயத்தின் உதவி இயக்குநர் டாக்டர் வி.எஸ். கோசர்வால் மேற்கண்ட நிதி தட்டுப்பாட்டை ஒத்துக் கொள்வதோடு, “கடந்த பிப்ரவரியில் இருந்து நாங்கள் புதிய பசுக்களை ஏற்பதில்லை. இந்த வட்டார உதவி கலெக்டர்களும் பசுக்களை வண்டிகளில் கொண்டு செல்வதற்கு அனுமதிப்பதில்லை” என்கிறார். இந்துத்துவ இரக்கத்தின் இலட்சணம் இதுதான்.

இந்த பசு சரணாலயத்தின் எதிர்காலத் தேவைகளை ஒரு திட்டமாக முன்வைத்த பசு பாதுகாப்பு வாரியம் ஆரம்பத்தில் 22 கோடி ரூபாய்க்கு வரவு செலவு திட்டம் போட்டது. ஆனால் அதை நிதித்துறை மறுத்து விட்டபடியால் பிறகு 14 கோடி ரூபாய்க்கு திட்டம் போட்டது. அதையும் நிதித்துறை மறுத்து விட்டது. கார்ப்பரேட்டுகளிடம் இருந்து பா.ஜ கட்சி பெற்றது ஆயிரம் கோடி ரூபாய் எனும் போது ஆறாயிரம் பசுக்களை பராமரிப்பதற்கு தேவையான 14 கோடி என்பது ஒரு தம்மாத்துண்டு பணம் மட்டுமே.

இந்த நிலையில் வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பசுக்களைப் பெறும் சரணாலயத்திற்கு வேறு வருமானம் இல்லை. இந்த பசுக்களிடம் இருந்து பாலை கறந்தும் விற்க முடியாது. அவை மடிவற்றியதால்தான் இங்கே கொண்டு வரப்படுகின்றன. இந்த வளாகத்தில் சுயதேவைக்கான மின்சாரத்தை தயாரிக்க மூன்று உயிரி-வாயு நிலையங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. பசு மூத்திரத்தை சேகரிக்கும் சில எந்திரங்களும் வந்திருக்கின்றன. ஜபல்பூரில் இருக்கும் நானாஜி தேஷ்முக் கால்நடை ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தில் இருந்து எப்போதாவது நிபுணர்கள் வருகை புரிவார்கள். அவ்வளவுதான், மற்றபடி இந்த பிரம்மாண்டமான கோசாலை சரணாலயத்திற்கு வேறு கதியோ போக்கிடமோ இல்லை.

“முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம், விரைவில் நிதி வரும் என்று சொல்லும் விலங்கு நலத்துறை அமைச்சர் அன்டார் சிங் ஆர்யா, இந்த சரணாலயத்தை ஏதாவது தனியார் என்.ஜி.வோ நிறுவனத்திற்கு கொடுத்துவிடலாமா என்று யோசிப்பதாகவும் கூறுகிறார். வெளிநாட்டு என்.ஜி.வோ சதியை மூச்சுக்கு முன்னூறு முறை ஜபிக்கும் வாயில் இருந்து என்னே ஒரு ’பன்ச் டயலாக்’! ’தாய்’க்கு நிகரான பசுக்களை பராமரிப்பதற்கு சுதேசிப் பணமோ, சுதேசி தொண்டர்களோ இல்லையாம். அம்பிகளின் ’தேசபக்தி – பசுபக்தி’ என்பது முசுலீம்களை கொல்வதும் கொலைகாரர்களுக்கு பாராட்டு கூட்டம் நடத்துவதுதான் போலும்!

“இதுவரை வணிக நோக்கம் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களே எங்களை அணுகியிருக்கின்றனர். ஆனால் சுயநலமற்ற இலட்சியத்தால் வழி நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களே தேர்வு செய்யப்படுவர்”. என்கிறார் மத்தியப் பிரதேசத்தின் பசு சம்வர்தன் நிர்வாக கவுன்சிலின் துணை தலைவரான சந்தோஷ் ஜோஷி. ஆக இதுவரை எந்த தொண்டு நிறுவனமும் இங்கே அவர்கள் வரையறுத்திருக்கும் இலட்சியப்படி இல்லையாம். வெள்ளம் வந்தாலும், ரத யாத்திரை வந்தாலும் நிவாரணப் பணிகளுக்கு போகும் ஸ்வயம் சேவக உறுப்பினர்கள் யாரும் இங்கே பசுக்களை பராமரிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இரண்டாவது முறை முதலமைச்சராக சவுகான் பதவியேற்ற 2012-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தால் இந்த சரணாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சரணாலய நிர்மாணப் பணிகள் நிறைவுற்றாலும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் வந்து திறப்பார் என செப்டம்பர் 2017 வரை முதலமைச்சர் சவுகான் காத்திருந்தார். ஒருவேளை சரணாலாயத்தின் அழிவு விதுரனது திருஷ்டி போல மோகன் பகவத்திற்கு தெரிந்திருக்கும் போல!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மட்டுமல்ல, முதலமைச்சர் சவுகான் கூட திறப்பு விழாவிற்கு வராமல் தவிர்த்து விட்டார். அதிகாரிகளும் இந்த சரணாலயத்தில் அதிக உற்சாகம் காட்டவில்லை. இவ்வளவிற்கும் அருகாமை பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலிருந்தும் ஏராளமான பசு உரிமையாளர்கள் பால்வற்றிய பசுக்களை விடுவதற்கு இங்கே குவிந்தனர். இந்த மாநிலங்களில் மடிவற்றிய பசுக்களை விற்பதற்கு அனுமதி இல்லை. பராமரிப்பதற்கு விவசாயிகளிடம் நிதி இல்லை. இந்நிலையில் இங்கே பசுக்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வரப்படுவதில் ஆச்சரியமில்லை.

இந்த சரணாலயத்திற்கான உதவி இயக்குநரைத் தாண்டி, இரண்டு கால்நடை மருத்துவர்கள், ஆறு கால்நடை உதவியாளர்கள் இங்கே பணி புரிகின்றனர். தேவையை ஒட்டி தினக்கூலி அடிப்படையில் தொழிலாளிகள் எடுக்கப்படுகின்றனர். ஆனாலும் நிறைய ஆட்பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் ஒத்துக் கொள்கின்றனர். பசுக்களை பராமரிப்பதற்கு சம்பளம் கொடுத்து ஆட்கள் எடுக்க முடியவில்லை என்றாலும் சேவையாக செய்வதற்கு கூட எந்த இந்துவும் தயாரில்லை போலும்.

“இங்கே நிறைய பசுக்கள் இறந்து போனாலும், பத்து சதவீத பசுக்கள் ஒரு கோசாலையில் இறப்பது சகஜம்தான். நல்ல நிலைமையில் உள்ள ஒரு பால் பண்ணையில் கூட மூன்று சதவீத பசுக்கள் இறந்து போகும்” என்று இறப்பை நியாயப்படுத்துகிறார், அரசு கால்நடைத்துறை அதிகாரி. இதை வைத்துப் பார்த்தால் தினமும் பல பத்து பசுக்கள் இந்த சரணாலய நரகத்திற்கு பதில் செத்துப் போவது மேல் என சாகின்றன என்பது உறுதி.

மாட்டுக்கறி உண்ணும் வழக்கத்தை சட்டப்பூர்வமாக உறுதிப் படுத்தியிருந்தால் இந்த அவலம் அங்கே நிகழ்ந்திருக்காது. விவசாயிகளும் நிறைய பசுக்களை வாங்கி விற்பார்கள். விவசாயப் பொருளாதாரம் நல்லதொரு சுழற்சியில் வளரும். மக்களுக்கும் புரதச் சத்து நிறைந்த மாட்டுக்கறி மலிவாக கிடைத்திருக்கும்.

சங்கி மங்கி பாவிகள் மக்களைக் கொல்வதோடு மாடுகளையும் பரிதாபமான முறையில் கொன்று விட்டு, நீலிக் கண்ணீர் விடுகிறார்கள்

– வினவு செய்திப் பிரிவு

செய்தி ஆதாரம்:

கல்வி உரிமையைப் பறிக்காதே ! திருச்சி – விருதை புமாஇமு ஆர்ப்பாட்டம்

0

கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்ப்போம் !
பு.மா.இ.மு. கண்டன ஆர்ப்பாட்டம் – திருச்சி

தோழர் சுரேந்தர்

ல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்து விட்டு உயர்கல்வி ஆணையத்தை அமைக்கும் மசோதாவை எதிர்த்து புமாஇமு சார்பில் திருச்சி ஜங்க்சன் விக்னேஷ் ஹோட்டல் அருகில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் புமாஇமு மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்தர் தலைமை தாங்கினார். மாணவர்கள், பெற்றோர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புமாஇமுவைச் சேர்ந்த தோழர் கபில் கண்டன உரையாற்றும் போது ”யூஜிசி-யைக் கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை அமைக்கவிருப்பதன் நோக்கம், தனியார் கையில் ஒட்டுமொத்தக் கல்வியையும் ஒப்படைத்து, ஏழை மாணவர்களை கல்வியிலிருந்து ஒதுக்கி வைப்பதேயாகும்.

தோழர் கபில்

அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் கட்டுப்பாட்டின் கல்வியைக் கொண்டு வருவதே அதன் நோக்கம்.  மாணவர்களின் எழுச்சி மட்டுமே இதனை மாற்றுவதற்கான வழி” என்று பேசினார்.

தி.க மாணவர் அணியின் மாநில துணைத் தலைவர் தோழர் அஜிதன் பேசுகையில், ”மாணவர்களுக்கான  கல்வி உதவித்தொகையை ஒழிக்க எடுக்கப்பட்ட முயற்சி இது. இதன் மூலமாக குலத்தொழிலை மீண்டும் திணிக்கத் திட்டமிடுகிறது அரசு. இதனை முறியடிக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

தோழர் அஜிதன்

அகில இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த தோழர் பாட்ஷா பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர்கள் போராடினாலும் மத்திய அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து அதிக அழுத்தம் தரும் வகையில் மாணவர் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பேசுகையில், “யூஜிசியைக் கலைப்பது ஒரு சமூகத்தையே தற்குறியாக்குவதற்கு சமமானது. கல்வித்துறையில் கார்ப்பரேட்களின் கொள்ளையை உறுதி செய்ய மோடி அரசால் கொண்டு வரப்பட்ட முயற்சி இது.

1956-ல் இந்தியாவில் உயர்கல்வியை விரிவுபடுத்த மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டு கொண்டுவரப்பட்ட தன்னாட்சி அமைப்புதான் யூ.ஜி.சி. தற்போது அதனை ஒழித்துவிட்டு கொண்டுவரப்படும் உயர்கல்வி ஆணையம், முழுக்க முழுக்க கல்வியாளர்கள் யாரும் உறுப்பினராக இல்லாமல், 8 அதிகாரிகள் மற்றும் அவர்கள் தேர்வு செய்யும் தலைவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு அமைப்பாகவே இருக்கும். அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராகவும் இருக்கலாம். அவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன அதிபர் அனில் அகர்வாலாகக் கூட இருக்கலாம்.

தோழர் கணேசன்

கடந்த 2000-ம் ஆண்டு அம்பானி, பிர்லா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, யூஜிசியைக் கலைத்துவிட்டு கல்வியை தனியார் கையில் கொடுத்து விடலாம் என பரிந்துரைத்தது. இன்று அதனை மோடி அரசு செய்து முடித்திருக்கிறது. இதனை முறியடிக்க பெற்றோர் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து போராட வேண்டும்.”- என்றார்.

இறுதியாக பு.மா.இ.மு தோழர் சுரேஷ் நன்றியுரையாற்றினார். அதில் மோடி அரசின் மோசடியை கேள்வி கேட்பவர்கள் அனைவரும் நக்சல்கள் என்றால் நாங்கள் அனைவருமே நக்சல்கள்தான் எனக் கூறினார். சுற்றி நின்ற மாணவர்களும், நாங்களும்தான் என்றனர். ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

*****

கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்ப்போம்!
பு.மா.இ.மு. கண்டன ஆர்ப்பாட்டம் – விருத்தாசலம்

”கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்ப்போம்” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருதை கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விருத்தாசலம் பாலக்கரையில் புமாஇமு விருத்தாசலம் மாவட்ட அமைப்பாளர் தோழர் மணியரசன் தலைமையேற்று கண்டன ஆர்ப்பாட்ட்டத்தை நடத்தினார். மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

புமாஇமு-வின் செயற்குழு உறுப்பினர் தோழர் யுவராஜ், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் தோழர் மணிவாசகம், விருதாச்சலம் மக்கள் அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விருதை.

பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் ! பாகம் 2

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !  – கட்டுரை வெளியானதில் இருந்து மூடர் கூட தம்பிமார்கள் நம்மை வசைபாடி மகிழ்கின்றனர்.

அந்த வசைகளை வரிசைப் படுத்தினால் “இயற்கை வைத்தியம் சரியானது, அலோபதி மருத்துவத்திலும் மரணம் அதிகம், பாட்டி வைத்தியம் – வீட்டு பிரசவங்களில் மரணமில்லை, இன்றும் கிராமங்களில் எந்தப் பிரச்சினையுமின்றி சுகப்பிரசவம் நடைபெறுகிறது, ஹீலர் பாஸ்கர் – பாரி சாலனை படித்தீர்களா, பார்த்தீர்களா?” என்பவை அதிகம் இருக்கின்றன. மொத்தத்தில் இலுமினாட்டி மூடத்தனத்தில் பலரும் மூழ்கிக் கிடப்பதை பரிதாபத்துடன் ஏற்கத்தான் வேண்டும்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இலுமினாட்டிகள் குறித்த தன் ‘ஆராய்ச்சியை’ விளக்குகிறார் விஞ்ஞானி சீமான்

நாம் தமிழர் சீமான் முன்வைக்கும் சதிக்கோட்பாடுகளின் நீண்ட பட்டியலில் இலுமினாட்டி சதிக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அந்தக் காலத்தில் தமிழ் மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததாக சத்தியம் செய்கிறார். ஆதாரமாக சிறு தானியம் முதல், தென்னங் கள்ளு வரை கிருபானந்த வாரியார் போல அடுக்குகிறார்.

இவற்றின் வகை மாதிரியாக எழுத்தாளரும், பெரியாரை கடுமையாக திட்டுபவரும், தமிழ் தேசியம் – இயற்கை வைத்தியம் இன்ன பிறவற்றை ஆதரிப்பவருமான திருவாளர் பா. ஏகலைவன் என்பவர் கூறுவதைக் கொஞ்சம் கேட்போம்!

லூசுங்களா.
———————-
யு டியூப் பார்த்து சுகப்பிரசவம் பார்த்தால்தான் அந்த பெண்மணி இறந்தார். போலி தமிழ் தேசியம் பேசியவர்களால்தான் இப்படி நடந்தது. என்று விதம் விதமாக கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

சரி, நவீன மருத்துவமனைகளில், நவீன மருத்துவத்தில் தினம் தினம் எத்தனை மரணங்கள் நடந்துகொண்டிருக்கிறது? அதனால் அந்த மருத்துவத்தையே மூடிவிடலாமா? அந்த மரணங்களுக்கு எந்த கார்பரேட் கம்பெனிகள் பதில் சொல்ல முடியும்?

இங்கே சுகப்பிரசவம் என்பது வாடிக்கையான ஒன்றுதான். இன்றைக்கும் கிராமங்களில் பல பிரசவங்கள் அப்படி நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த தலைமுறைக்கு முன்பிருந்த ஒவ்வொருவரும் அரை டசனுக்கும் குறையாத பிள்ளைகளை சுகப்பிரசவத்தில் பெற்றுப் போட்டவர்கள்தான். இந்த தலைமுறையினரில் பெரும்பகுதியினர் சுகப்பிரசவத்தில் பிறந்தவர்கள்தான்.

அந்த சுகப்பிரசவங்களிலும் பாதிக்கு மேலானோர் மருத்துவமனைகளுக்கு வெளியே சுகமாய் பெரியவர்களின், அனுபவஸ்தர்களின் மேற்பார்வையில் பிரசவித்தவர்கள்தான். ரத்தப்போக்கு அதிகம் ஆனால் எந்த தேசியம் பேசுபவர்கள் சொன்னாலும் சரி இறப்புதான். அலோபதி மருத்துவத்திலும் அதுதான் நடக்கும். இறந்துபோன அந்த பெண்மணிக்காக வருத்தப்படுவோம்.

அதே நேரத்தில் ஏன் அந்த ரத்தப்போக்கு நிகழ்ந்தது என்பதையும், அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து இனி அப்படி நடக்காமல் விழிப்புணர்வை சொல்வதையிட்டு ஒட்டுமொத்தமாக அந்த மரபுவழி மருத்துவமே- சுகப்பிரசவமே சரியில்லை என்று பேசக்கூடாது.

ந்த வாதத்தை நாம் இப்படிப் புரிந்து கொள்வோம் – ”மருத்துவமனையிலும் மரணம் நடக்கிறது, குரங்குக் குப்பன் வைத்தியம் பார்த்தாலும் மரணம் நடக்கிறது. எனவே மருத்துவர்களும் குரங்குக் குப்பனும் ஒன்று தான்” என்கிறார் ஏகலைவன். மருத்துவ சிகிச்சை பலனின்றி ஏற்படும் மரணங்களுக்கு காரணம் முதன்மையாக மருத்துவமல்ல. கர்ப்பம் தரித்த ஆரம்ப காலம் தொட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் இருப்பது, ஊட்டச் சத்துக் குறைபாடு என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

ஆனால், திருப்பூரில் நடந்தது ஒரு கொலை. அந்த அப்பாவிப் பெண்ணின் கர்ப்பத்தை உரிய முறையில் நேரத்தில் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைகளைப் பின்பற்றி, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் இன்றைக்குத் தாயும் சேயும் நலமோடு இருந்திருப்பார்கள். நன்றாக வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு பெண்ணின் மரணத்திற்கு தாங்கள் பரப்பிய முட்டாள்தனங்கள் தான் காரணம் என்கிற குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் பேசும் சாமர்த்தியம் தம்பிமார்களுக்கே சாத்தியம். கிருத்திகாவின் கணவர் வறுமை காரணமாக இந்த தவறை செய்யவில்லை.

ஹீலர் பாஸ்கர், பாரி சாலன் உள்ளிட்ட இலுமினாட்டி வகையறாக்களின் பலமே அறைகுறை உண்மைகள் தான். மாயத்தோற்றங்களை (Hallucination) உளமாற நம்பும் மனநலம் குன்றியவர்களைப் போல் இவர்கள் பொய்களையும் சதிகளையும் நம்புகின்றனர். ஒரு வித்தியாசம், இவர்கள் தன்னுணர்வோடு நம்புவதோடு கேட்பவர்களை நம்பவைக்கும் சாமர்த்தியத்தையும் கொண்டிருக்கின்றனர். சுருக்கமாக காரியக் கிறுக்கர்கள்.

இத்தகைய முட்டாள்தனத்தில் மக்களை மூழ்கவைத்து அலைக்கழிக்கும் வழக்கம் அமெரிக்காவில் துவங்கி பல நாடுகளில் இருக்கிறது. உலகிலேயே அதிக மூடநம்பிக்கைகள், கடுங்கோட்பாட்டு மதப் பிரிவுகள் (பெந்தகோஸ்தே), இதர சதிக்கோட்பாட்டு கொள்கைப் பற்றாளர்கள் அதிகம் வாழும் நாடு அமெரிக்காதான். சூப்பர் ஸிங்கர் முதல் இலுமினாட்டி வரை அங்கிருந்துதான் இறக்குமதியாகின்றது.

தற்போது பிரசவகால மரணம் என்ற ஒரு அம்சத்தை மட்டும் பார்ப்போம். திரு ஏகலைவனும், மற்ற இயற்கை வழி வைத்தியத்தை ஆதரிப்போரும் அறுதியிட்டு சொல்வது, கிராமங்களிலும், பெரியவர்களால் வழிநடத்தப்படும் பிரசவங்களும் எந்த மரணமுமின்றி ஆரோக்கியமாக நடைபெறுகிறது என்பதே. எனினும் அதற்கு ஆதாரமாய் இவர்கள் ஒரு தரவையும் தருவதில்லை. எல்லாம் பொதுவில் ஒரு நம்பிக்கைதான்.

உண்மை என்ன? நவீன மருத்துவம் வளர்வதற்கு முன் அம்மை, பிளேக், மலேரியா போன்ற கொடிய கொள்ளை நோய்களாலும் இன்னபிற தொற்று வியாதிகளாலும் பிரசவத்தின் போதும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் பதினைந்து பிள்ளைகள் பெற்றனர் எனக் கூறுபவர்கள் அப்படி பிறந்த பத்துப் பதினைந்தில் எத்தனை பிழைத்தது என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும். ஆனால் இவர்கள் ஆதாரப்பூர்வமாகப் பேசுவதில்லை. “நாதஸ் திருந்தி விட்டான்” என நாதசே சொல்லிக் கொள்வதைப் போலத் தான் வாதிடுகிறார்கள், வசைபாடுகிறார்கள்.

நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்குப் பின் பிரசவ கால மரணங்கள் பல மடங்கு குறைந்திருப்பதற்கு ஏராளமான புள்ளி விவரங்கள் உள்ளன. அதே நேரம் இன்றைக்கும் இந்தியா போன்ற நாடுகளில் முன்னேறிய நாடுகளை விட அதிக மரணங்கள் ஏற்படுவதற்கு காரணம் மேற்கண்ட வளர்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை என்பது தான். அப்படி நமக்கு கிடைக்காத நவீன மருத்துவத்தை பெறுவதற்காக போராடுவதை விடுத்து இந்த அறிவிழந்த கோமாளிகள் நம்மை கற்காலத்திற்கே இழுத்துச் சென்று பெண்களை, மக்களை கொல்வதற்கு வழி சொல்கிறார்கள்.

பிரசவகால மரணங்களின் வரலாறும், புள்ளிவிவரமும் என்ன சொல்கின்றன பார்ப்போம்!

___________

யூனிசெஃப் நிறுவனம், பேறுகால மரண விகிதம் குறித்து ஒரு புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டது. 1990, 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் பகுதி வாரியாக 15 முதல் 49 வயதிற்குட்பட்ட பிரசவித்த பெண்களின் கணக்கைக் கொண்டு இந்தப் புள்ளிவிவரக் கணக்கு எடுக்கப்பட்டது.

கடந்த 1990-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2015-ம் ஆண்டிற்கான பேறுகால மரண விகிதம் உலக அளவில் குறைந்துள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த 25 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 44% அளவிற்கு பேறுகால மரணம் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உலக அளவில் சராசரியாக பேறு கால மரண விகிதம், கடந்த 1990-ம் ஆண்டு, 1,00,000 வெற்றிகரமான பிரசவத்திற்கு 385- மரணமாக இருந்தது. ஆனால் 2015-ல் அது 216-ஆக (44%) குறைந்திருக்கிறது. அதேபோல பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகிய வளரும் நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய மண்டலத்தில் 558-லிருந்து 182-ஆக குறைந்திருக்கிறது.

பேறுகால மரணம் – ஒப்பீட்டு அறிக்கை

இந்த மரணங்களில் பெருமளவு பங்களிப்பது, (சுமார் 27%) பிரசவத்தின் போது மற்றும் அதற்குப் பிறகு ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கே ஆகும். (கிருத்திகா மரணத்தில் ஏற்பட்டது, எவ்வித முன்னனுபவமற்ற மூடர்களின் முட்டாள்தனத்தால் ஏற்பட்ட இரத்தப் போக்கு) கருவுற்ற பெண்ணை மரணத்தை நோக்கித் தள்ளும் இத்தகைய இடர்பாடுகள், கர்ப்ப காலத்திலோ, பிரசவ காலத்திலோ எவ்வித எச்சரிக்கையுமின்றி எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறது இந்த அறிக்கை. மேலும், திறன்வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் நடைபெறும் பிரசவங்களே பெருமளவில் மரணத்திற்கு இட்டுச் செல்கின்றன என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறது அந்த அறிக்கை.

கடந்த 2018, பிப்ரவரி 16 அன்று உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில், வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பேறுகால மரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில:

  1. ஒவ்வொரு நாளும் சுமார் 830 பெண்கள் கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின் போதான தவிர்க்கக்கூடிய காரணங்களுக்குப் பலியாகின்றனர்.
  2. கர்ப்பகால / பிரசவ கால மரணங்களில் 99% மரணங்கள் வளரும் நாடுகளில் மட்டுமே நிகழ்கின்றன.
  3. கிராமம் மற்றும் பின் தங்கிய சமூகத்தினர் மத்தியில்தான் இந்த கர்ப்பகால/ பிரசவ கால மரணங்கள் ஏற்படுகின்றன.
  4. 2015-ம் ஆண்டில் மட்டும் சுமார் 3,03,000 மரணங்கள். இவற்றில் பெரும்பாலானவை போதுமான கர்ப்பகால / பிரசவ கால பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதாலேயே ஏற்படுகின்றன.

இவ்வகை மரணங்களில் கிட்டத்தட்ட 75% மரணங்கள் ஏற்படுவதற்கான காரணமாக அவ்வறிக்கையில் கூறப்படுபவையாவன:

  • கடுமையான இரத்தப் போக்கு
  • நோய்த்தொற்று
  • கர்ப்பகாலத்தில் அதிக இரத்த அழுத்தம்
  • பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்
  • பாதுகாப்பற்ற கருக்கலைப்பு

இவ்வகையான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்படுபவை:

  • வறுமை
  • அருகாமையில் மருத்துவ வசதி கிடைக்கப்பெறாமை
  • கர்ப்பகாலம், பிரசவம் குறித்த முழுமையான அறிவியல் அறிவு கிடைக்கப்பெறாமை
  • போதுமான சேவைகள் கிடைக்கப்பெறாமை
  • கலாச்சார நடவடிக்கைகள்

இவை அனைத்துமே முக்கியக் காரணங்களாக கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும், சுமார் 2,87,000 பேறு கால மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இம்மரணங்களில் சஹாரா – ஆப்பிரிக்க பகுதிகளில் 56% மரணங்களும், தெற்காசிய நாடுகளில் 29% மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இவ்விரண்டு பகுதிகளுமே மொத்த மரணத்தில் சுமார் 85% தன்னகத்தே கொண்டுள்ளன.  நாடுகளின் அளவில் பார்த்தால் கர்ப்பகால/ பிரசவ கால மரணங்களில் நம்பர் 1 இடத்தைப் பெற்றிருப்பது இந்தியாதான். ஒட்டுமொத்த பேறுகால மரணங்களில், 19% இந்தியாவில் நிகழுகின்றன. இதற்கு அடுத்தபடியாகத்தான் நைஜீரியா (14%) வருகிறது.

வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தற்போது வளரும் நாடுகளில் அதிக அளவில் பேறு கால மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால், 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டம் வரையில், வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும், சம அளவிலேயே பேருகால மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஏனெனில் மருத்துவ உலகில் விஞ்ஞான வளர்ச்சி பெரும்பாய்ச்சலில் நடைபெறாத காலகட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சியே நீடித்தாலும், மருத்துவ ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் வளர்ந்த பின்னர், அதன் பலன் கிடைக்கப்பெற்ற நாடுகளுக்கும், கிடைக்கப் பெறாத நாடுகளுக்குமிடையேயான வித்தியாசம் அதிகமாக வளர்ந்திருக்கிறது.

மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரையில், எங்கெல்லாம் மருத்துவ வசதிகள்  அதிகமாக நிறுவப்பட்டனவோ அங்கெல்லாம் பேறுகால மரணங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இது நாடுகளுக்கு இடையில் மட்டுமல்ல, மாநிலங்களுக்கு இடையிலுமான வித்தியாசத்திலும் வெளிப்படையாகவே தெரிகிறது.

குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் பேறுகால உயிரிழப்பு விகிதம், 22% வீழ்ச்சி அடைந்திருப்பதாக ’மாதிரி பதிவு அமைப்பு’, கடந்த ஜூன் 7 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

பேறுகால உயிரிழப்பு விகிதம் 2011-2013 காலகட்டத்தில், 1,00,000-க்கு 167-ஆக இருந்தது, கடந்த 2014- 2016 காலகட்டத்தில் 130-ஆக குறைந்திருப்பதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. குறிப்பாக தென்மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா,கேரளா, தமிழ்நாடு ஆகியவை மிகப்பெரிய முன்னேற்றமடைந்துள்ளன என்று கூறுகிறது.

ஐக்கியநாடுகள் சபை 17 சர்வதேச இலக்குகளை முன்வைத்து உருவாக்கிய நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் ஒன்றான பேறுகால மரண விகிதத்தை 1,00,000-க்கு 70 என்ற விகிதத்திற்குக் கீழ் கொண்டு செல்லவேண்டும் என்ற இலக்கை தமிழகம், கேரளா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்கள் அடைந்துவிட்டன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த இலக்கிற்கு நெருங்கி நிற்கின்றன. இந்தியாவில் பிற மாநிலங்கள் மிகவும் பின் தங்கியே உள்ளன.

’மாதிரி பதிவு அமைப்பு’ வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை, சுமார் 62,96,101 கர்ப்பிணிப் பெண்களின் தகவல்களைக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்பெண்களில் பேறுகால மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 556 ஆகும்.

மேற்கண்ட தரவுகளை வைத்துக் கொண்டு “முன்னோர்கள் முட்டாளில்லை” கூட்டமும், ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் பக்தர்கள் கூட்டமும், “எங்க முப்பாட்டன் காலத்திலிருந்தே நாங்கள் திடகாத்திரமாகத்தான் இருந்தோம்” என குதூகலமாக சுய இன்பம் அடைவது பச்சைப் பொய் என்பது உறுதி.

தமிழகமும் பிற தென் மாநிலங்களும் முன்னணியில் நிற்பதற்கு முக்கியக் காரணங்கள்  இங்கு பரவலாகத் திறக்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவையே ஆகும். மேலும் இன்று தமிழகத்தில் மிகச்சிறு எண்ணிக்கையை தவிர்த்து விட்டு அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. இத்தகைய வளர்ச்சிகள் வருவதற்கு முன்னர், இந்தியா முழுவதுமே மிகவும் பின் தங்கிய நிலையில்தான் இருந்தன என்பதற்கான ஆதாரங்களும் பல உள்ளன. இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே, இத்தகைய நிலையில் பின்தங்கியே இருந்தன என்பதே உண்மை.

மேம்படுத்தப்பட்ட மருத்துவ கண்டுபிடிப்புகளால்தான் இன்றைய நீண்ட ஆயுளே ஒழிய, முப்பாட்டனின் பாரம்பரிய வழியினால் அல்ல!

இந்திய பிறப்பு இறப்பு பதிவேடுகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பாலகர் மரண விகிதத்தில் (infant mortality rate) இந்தியா மிகவும் பின் தங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 1000 பாலகர்களுக்கு 116 பாலகர்கள் மரணம் என்ற விகிதத்தில் இருந்தது. அதே காலகட்டத்தில் ஸ்வீடன் நாட்டின் பாலகர் இறப்பு விகிதம் 1000-க்கு 21-ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் பாலகர் இறப்பு விகிதம் 1000-க்கு 34 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் 2016-ம் ஆண்டு பாலகர் இறப்பு விகிதம் 1000-க்கு 2.72 ஆகும்.

1900-ம் ஆண்டு 1000-க்கு 232-ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம் 1925-ம் ஆண்டு 174-ஆகவும், 1951-ம் ஆண்டு 116-ஆகவும் குறைந்துள்ளது. அதாவது பழங்காலத்தில் அதிகமாக இருந்த மரண விகிதம், விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, நவீன அலோபதி மருத்துவமுறையின் காரணமாக படிப்படியாக குறைந்து தற்போது மிகவும் குறைந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பதிவாளர் ஜெனரலின் அறிக்கைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்படும் புள்ளிவிவரக் கணக்கின் படி 1910-ம் ஆண்டு 1000-க்கு 35 ஆக இருந்த பேறுகால மரண விகிதம், 1950-ம் ஆண்டு 8-ஆகக் குறைந்திருக்கிறது.

மேலை நாடுகளில், அறிவியல் வளர்ந்து, நோய் தடுப்பு மற்றும் நோய்த்தொற்று கட்டுப்படுத்தும் மருத்துவ ஆராய்ச்சிகள் பெருகி, அவற்றின் பலனாகவே பாலகர்கள் இறப்பு விகிதமும், பேறுகால இறப்பு விகிதமும் குறைந்தனவேயன்றி தங்கள் மூதாதையர்களைப் போல அவர்கள் பின்னோக்கிச் சென்று அறிவியலற்ற முறையில் வைத்தியம் செய்து கொள்ளவில்லை.

”புள்ளி விவரங்களெல்லாம் இலுமினாட்டிகளின் மருந்து கம்பெனிகளுடைய சதி” என்று ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலனின் குரலாகக் கொதிப்போருக்கு புரிய வைக்க எங்களிடமிருக்கும் ஒரே வைத்தியம் பாட்டி வைத்தியம்தான்.  உங்கள் வீட்டின் / தெருவிலிருக்கும் வயதான பாட்டிமார்களிடம் கேட்டுப் பாருங்கள், ”அந்தக்காலத்தில் ’தமிழ் கலாச்சாரத்தின்படி’ பெற்றுக் கொள்ளப்பட்ட பிள்ளைகளில் எத்தனை உயிரோடு இருக்கும்? எத்தனை குழந்தைகள் மரணமடையும்?” என்று. பாட்டி சொல்லியாவது பேரன்மார்களுக்கு ஹீலர்பாஸ்கர், பாரிசாலன் பிணி ஒழிகிறதா என்று பார்க்கலாம்.

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !  –பாகம் 1

  • வினவு செய்திப் பிரிவு