Sunday, June 21, 2026
முகப்பு பதிவு பக்கம் 497

5,000 கோடி : சட்டையைப் பிடித்து சலுகை கேட்கும் நிஸான் !

3

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான், சுமார் 5,000 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகை நிலுவை மற்றும் நட்டஈடு கேட்டு இந்தியாவுக்கு எதிராக சர்வதேச சமரச தீர்வு மையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம், ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஒரகடத்தில் கார் தயாரிப்பு நிறுவனம் தொடங்க 2008 -ம் ஆண்டு தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. 6,100 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஆண்டுக்கு 4,80,000 வாகனங்கள் தயாரிக்கும் திறனுள்ள தொழிற்சாலையை ஒரகடத்தில் அமைப்பது என ஒப்பந்தம்.

இப்போது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதி அளித்துள்ளபடி வரிச்சலுகைகளை வழங்குவதில் தமிழக அரசு இழுத்தடித்து வருவதாகச் சொல்லி வழக்குத் தொடர்ந்திருக்கிறது. நிஸான் சொல்வதன் படி, அரசு வழங்க வேண்டிய வரிச் சலுகை மீதி 2,900 கோடி ரூபாய். இதை உரிய நேரத்தில் தராமல் இழுத்தடிப்பதற்காக நஷ்ட ஈடாக 2,100 கோடி ரூபாய் கேட்கிறது நிஸான். மொத்தம் 5000 கோடி. Comprehensive Economic Partnership Agreement with Japan – ஒப்பந்தபடி உரிய நேரத்தில் வரிச் சலுகைத் தொகையை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும், அப்படி தராமல் இழுத்தடிப்பது தங்களின் தொழில் செய்யும் உரிமைக்கு எதிரானது என்றும் சொல்கிறது நிஸான்.

ஆனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதே 2011 -ல்தான் என்றும், அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 2008 -லேயே ஒரகடம் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது என்று சொல்லும் தமிழக அரசு, நிஸான் வழக்குக்குத் தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது.

“2012 ஏப்ரல் 1 -ம் தேதி முதல் 2014 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் நிஸான் நிறுவனம் தனது பிசினஸ் மாடலை முன்னறிவிப்பின்றி மாற்றியுள்ளது. இதன்படி, நிஸானின் தயாரிப்புப் பிரிவான RNAIPL நிறுவனமும், அதன் விற்பனைப் பிரிவுகளான ரெனால்ட் இந்தியா மற்றும் நிஸான் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனங்களும் ஒரே பரிவர்த்தனைக்கு அரசின் இருவேறு துறைகளில் இருந்து வரிச்சலுகைப் பெறத் தொடங்கின. இதைத் தொடர்ந்து RNAIPL நிறுவனம் மட்டுமே வரிச் சலுகையை பெற முடியும் என  தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து நிஸான் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அது இப்போதும் நிலுவையில் உள்ளது.” என்கிறது தமிழக அரசு.

மேலும், 2017 ஆகஸ்ட் 31 -ம் தேதி வணிகவரித்துறை நிஸான் நிறுவனத்துக்கு வழங்கிய வரிசெலுத்தியதற்கான சான்றிதழில், 2,616 கோடி ரூபாய் வரிச் சலுகையாக திருப்பித் தரப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது. அதாவது நிஸான் கூறுவது போல எந்த வரிச் சலுகையும் அவர்களுக்கு வழங்கப்படாமல் இல்லை. வரிச் சலுகையின் ஒரு பகுதியை அவர்கள் ஏற்கெனவே பெற்றுள்ளனர். “சில அதிகாரிகள் குறிப்பிடுவதன்படி, இதுவரை நிஸான் நிறுவனம் 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதற்கு சுமார் 1,600 கோடி ரூபாய் வரிச் சலுகையாக பெற்றுள்ளது” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. ஆனால் நிஸான் நிறுவனமோ, இன்னும் 2,900 கோடி ரூபாய் உறுதி அளிக்கப்பட்ட வரிச் சலுகை வழங்கப்படவில்லை என்கிறது.

இதற்குப் பதில் சொல்லியிருக்கும் தமிழக அரசின் தரப்பு, “நிஸான் நிறுவனம் இங்கே 21 ஆண்டுகள் இயங்குவதாக ஒப்பந்தம். அந்த ஒட்டுமொத்த காலத்துக்குமான வரிச் சலுகையையும் இப்போதே எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியம் இல்லை. ஏனெனில், வரிச் சலுகையின் பெரும்பான்மையை அவர்கள் பெற்றுவிட்டால் பிறகு இங்கே தொழில் செய்யவே மாட்டார்கள். திட்டத்தை கைவிட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்” என்கிறது.

‘விட்டா ஓடிப் போய்விடுவான்’ என்று மாநில அரசு சொல்வதில் உண்மை இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிய நோக்கியா நிறுவனம் 6,000 கோடி ரூபாய் வரிபாக்கி வைத்துவிட்டு, ஆலையை இழுத்து மூடி, 20 ஆயிரம் தொழிலாளர்களை நடுரோட்டில் நிறுத்திய கதையை ஏற்கெனவே தமிழகம் கண்டுள்ளது. என்ரான் தொடங்கி ஏராளமான வழக்குகளில் வரிச் சலுகையை பெறுவதற்காகவே பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குவதும் அந்த “Tax holidays” “வரிச்சலுகை காலம்” முடிந்ததும் ஓடிவிடுவது தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய நிறுவனங்களிடம் இப்படி ஒரு மாபெரும் சலுகைகளும், மானியங்களும் போட்டு அரவணைப்பதே நமது அரசுகள்தான்.

பல்லாயிரம் கோடியை முதலீடு செய்து ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி, உற்பத்தி செய்து, மக்களிடம் விற்று, அதில் லாபத்தை எடுக்கும் வழக்கமான முறையில் இருந்து இந்த பெரு நிறுவனங்கள் வேறுபடுகின்றன. இது சுற்றுவழி என்று அவர்கள் நினைக்கிறார்கள். ‘எதுக்கு இந்த மக்கள் கிட்டப்போயி பொருளை வித்துகிட்டு… பேசாம அரசாங்கத்துக்கிட்டயே ஆட்டயப் போடலாம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதிதான் வரிச் சலுகைகள்.

பருத்த மூலதனத்தை பையில் வைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு நாடாக சென்று முதலீடு செய்கின்றன. இவர்களின் 100 ரூபாய் முதலீட்டுக்கு 150 ரூபாய் வரிச்சலுகை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த Bilateral Investment Treaty, Investor-State Dispute Settlement என வகைதொகையில்லாமல் ஒப்பந்தங்களைப் போட்டு வைத்திருக்கிறார்கள். மன்மோகன் சிங் உலகம் சுற்றியதும், இப்போது மோடி ஊர் சுற்றுவதும் சும்மா குளிர் பிரதேச காட்சிகளை கண்டுகளிப்பதற்காக அல்ல… ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. அவர்கள், வந்து தொழில் தொடங்கி வரிச் சலுகைகளை எல்லாம் ஒரு சில ஆண்டுகளில் பெற்றுக்கொண்டு அடுத்த இடம் நோக்கி நகர்கிறார்கள்.

ஆனால் நிஸான் செய்தியை வெளியிட்டுள்ள எக்கனாமிக்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள், ‘சர்வதேச நிறுவனங்கள் மத்தியில் இப்படி கெட்டபெயர் சம்பாதிப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல’ என புத்திமதி சொல்கின்றன. “தர நிர்ணய நிறுவனமான Moody சமீபத்தில்தான் இந்தியாவுக்கான ரேட்டிங்கை உயர்த்தியது. எளிதில் தொழில் தொடங்கக்கூடிய நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 130 -வது இடத்தில் இருந்த இந்தியாவை 100 -வது இடத்துக்கு உயர்த்தியுள்ளது உலக வங்கி. இந்த நிலைமையில் இப்படி செய்தால், முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல… அது இந்தியா மீதான நம்பகத்தன்மையையும் பாதிக்கும்” என்று சொல்லும் எக்கனாமிக்ஸ் டைம்ஸ், சர்வதேச சமரச தீர்வு மையத்தில் இந்தியாவுக்கு எதிராக 20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தனியொரு நாட்டுக்கு எதிராக நிலுவையில் உள்ள அதிகபட்ச வழக்குகள் இவை என்றும் சொல்கிறது.

Deutsche Telekom of Germany, Vodafone International Holdings BV, Sistema of Russia, Children’s Investment Fund and TCI Cyprus Holdings, White Industries of Australia உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளன. இவை அனைத்துமே ‘உத்தரவாதம் அளித்த வரிச்சலுகையை தர மறுக்கிறார்கள்’ என்ற அடிப்படையிலானவை.

தங்களுக்கு அரசு வழங்குவதாக சொன்ன ‘சலுகை’யை சட்டையைப் பிடித்து கேட்கும் இவர்கள், தொழிலாளர்களுக்கான எந்த உரிமையையாவது வழங்கியது உண்டா? குறைந்தபட்ச ஊதியம், ஊதிய உயர்வு, சங்கம் அமைக்கும் உரிமை எதுவும் இல்லை. Assembly line-ல் இன்னும் ஓர் உதிரிபாகமாக தொழிலாளியின் உடலை மாற்றி நாள் முழுவதும் கசக்கிப் பிழிகிறார்கள்.

50 ஆயிரம் வட்டிக்கு வாங்கினால் கூட முதல் மாத வட்டியை எடுத்துக்கொண்டுதான் முதல் தொகையையே தருகிறார்கள். ஆனால் இந்த நிறுவனங்களோ ஒட்டுமொத்த திட்டத்துக்குமான வரிச் சலுகைகளை முன்கூட்டியே கேட்கின்றன. அதை தரவில்லை என்று வழக்குப் போடுகிறார்கள். நாட்டின் இயற்கை வளத்தை ஒட்ட உறிஞ்சி, சூழலை நஞ்சாக்கி, தொழிலாளர்களின் உடல் உழைப்பை சொற்பக் கூலிக்கு சுரண்டி… கல்லா நிறைந்ததும் ஓட்டம் எடுக்கும் இந்த திருட்டுக் கும்பல் வரவில்லை என்றால் இங்கு தொழிலே நடக்காதாம்; எல்லாம் முடக்குவாதம் வந்து படுத்துவிடுமாம். பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்த எச்சரிக்கையின் விளைவு என்னவாக இருக்கப்போகிறது? என்னவாக இருக்க சாத்தியம் இருக்கிறது? நிஸானுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றம் சென்றுள்ளது. ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதையும், ‘சென்னையில் மட்டுமே வழக்கு நடத்த முடியும்’ என புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் வைத்து டெக்னிக்கல் கிரவுண்டில் வழக்கை அணுகுகிறது மாநில அரசு. ஆனால் மோடி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மேலிருந்து ஓர் உத்தரவு வந்தால் ஒரு நொடியில் இதில் இருந்து பின் வாங்கும். ‘மாநில நலன், தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலன்’ என நான்கு வார்த்தைகளை ஆங்காங்கே பிய்த்துப்போட்டு ஓர் அறிக்கை விட்டு அவர்கள் கேட்கும் வரிச் சலுகையை பைசா பாக்கியில்லாமல் செட்டில் செய்வார்கள். ‘கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்’ எம்.ஜி.ஆரின் வாரிசுகள் அல்லவா?

ஆனால் இவர்கள் கொடுப்பது யார் வீட்டுப் பணம்? அது நம் பணம். நாம் உழைத்து ஈட்டிய செல்வம். அதை வரியின் பெயரால் நம்மிடம் இருந்து பெற்று, வரிச் சலுகையின் பெயரால் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் படையல் வைப்பதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

– கீரன்


 

மீனவர்கள் போராட்டம் : மக்கள் அதிகாரம் தோழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு சிறை !

3

பத்திரிக்கைச் செய்தி

க்கிப்புயலுக்கு சொந்தங்களை இழந்து, படகு, வலை, மீன்பிடி சொத்துக்களை இழந்து கண்ணீரில் கொந்தளிக்கும் மீனவ மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டிய மக்கள் அதிகார தோழர்கள் ஏழு பேர் 10-12-2017 அன்று காலை நீரோடை கிராமத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்தவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை குமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் பல முறை பேசிய பின்புதான் தோழர்கள் இருக்கும் இடம் மாலை தெரிந்தது. மண்டைக்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, குழித்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள்

தோழர்கள் கிங்சன், மருது, கணேசன், முகமது அனஸ், ஆதி, மாரிமுத்து, அன்பு ஆகியோர் மீதான குற்றச்சாட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என்பது. பிரிவுகள் 151 இ.த.ச மற்றும் 7(1) A கிரிமினல் லா அமெண்ட்மென்ட் ஆக்ட்.

ஒக்கிப்புயல் ஏற்படுத்திய பேரழிவிற்கு சற்றும் குறைவானதில்லை. எடப்பாடி, மோடி அரசின் கண்துடைப்பு மீட்பு நாடகங்கள். மீனவ மக்களின் போராட்டங்கள் உறுதியாக சென்றுவிடக்கூடாது என்ற அச்சம்தான் தமிழக காவல் துறையின் இந்த கைது சிறை நடவடிக்கை. எடப்பாடி அரசுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவும் முக்கியம் மீனவர்கள் உயிர் இரண்டாம் பட்சம்.

“எங்களுக்கு நிவாரணம் வேண்டாம், கடலுக்கு சென்ற எங்கள் மீனவர்களை மீட்டுத்தா…!” என்றும்,  அதிகாரிகளும் அமைச்சர்களும் நாடகமாடுகிறார்கள் என்றும், புயலுக்கு பிறகு உடனே உரிய இடத்தில் ஆழ்கடலுக்கு சென்று தேடியிருந்தால் பல மீனவர்களை உயிருடன் காப்பாற்றி இருக்கலாம் என்றும் மீனவர்கள் கேள்விகளால் ஆட்சியாளர்களை துளைக்கிறார்கள்.

சுரணையற்ற அரசுக்கு கேட்கவில்லை. ஆனால் பிற மக்கள் நெஞ்சம் பதைக்கிறார்கள். மீனவ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறார்கள். மீனவ கிராமங்களில் பல அமைப்புகள், கட்சியினர், ஊடகத்துறையினர் தங்கி அவர்கள் போராட்டத்தின் நியாயத்தை, ஆதரித்து பேசி வருகிறார்கள். தமிழகம் தழுவிய அளவில் மீனவர் பிரச்சினைக்கு ஆர்ப்பாட்டம் நடத்திவரும் வேலையில் மக்கள் அதிகார தோழர்களை குறி வைத்து ஏதோ தீவிர வாத நடவடிக்கையில் ஈடுபட்டது போல் தமிழக காவல் துறை கைது செய்திருப்பது அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சியா அல்லது பாசிஸ்டுகளின் காட்டாட்சியா? காவல் துறையா? கூலிப்படையா?

கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் இன்னும் இருக்கிறது என்று எப்படி நம்புவது?

கடலோர மீனவ மக்களை பாதுகாக்க, மேம்படுத்த எந்த விருப்பமும் கொள்கையும் அரசிடம் இல்லை. பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடல்வளங்களை தாரைவார்க்க துடிக்கிறது என்பதை மீனவமக்கள் ஆதாரங்களுடன் அரசை தோலுரிக்கிறார்கள்.

மீனவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் உயிரை பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்கிறார்கள். ஆழ்கடலில் 40 நாட்கள் தங்கி மீன்பிடிப்பது என்பது கரையில் உள்ளவர்களால் புரிந்து கொள்வது சிரமம். தகவல் தொழில் நுட்பம் இல்லை. பேரிடர் முன்னறிவிப்பு, போதிய மீட்பு நடவடிக்கை இல்லை. இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் பற்றி அரசு தவறான தகவலை தருகிறது. ஒக்கிப்புயல் என்பது சுனாமி போன்று பேரிடர். அரசு முனைந்து பொறுப்போடு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது என்கிறார்கள். மீனவர்களின், இத்தகைய பேரழிவிற்கு அரசுதான் பொறுப்பு முதல் குற்றவாளி.

குழித்துறை ரயில் நிலையம், குளச்சல் பேருந்து நிலையம், தொடர் சாலை மறியல் என பெரும் மக்கள் திரள் போராட்டங்கள்தான் தமிழக அரசை, அதிகாரிகளை வீதிக்கு இழுத்து வந்திருக்கிறது. இரண்டாயிரம் மீனவர்களை காணவில்லை, நூற்றுக்கனக்கான படகுகள் கரை திரும்பாது என்ற உண்மைகள் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

எப்படி அமைதியாக இருப்பது? மீனவ தாய்மார்களின் கண்ணீருக்கு நீதி வேண்டும். அலை அலையாக தமிழகத்தின் கரங்கள் குமரி நோக்கி நீளட்டும். போராட்டத்தின் கோரிக்கையை உண்மையாக பரிசீலித்து நிரந்தர தீர்வு காணாமல், போராடுபவர்களை மிரட்டவே இந்த கைது நடவடிக்கை. தமிழக அரசு இத்தகைய ஜனநாயக விரோத போக்கை கைவிட வேண்டும்.

மீனவ மக்களுக்கு உதவ சென்ற மக்கள் அதிகார தோழர்களை கைது செய்தது அநீதி ! அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

அரச பயங்கரத்தாலும், இயற்கை சீற்றத்தாலும் பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள் உலகில் எந்த கடை கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதுதான் இயற்கை நீதி. இதனைத்தடுக்கும் மிருகதனத்தை ஒருநாளும் ஏற்க இயலாது. அனைவரும் மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்போம் ஆதரிப்போம்.

கடைசிச் செய்தி: கைது செய்யப்பட்ட தோழர்கள் குமரி மாவட்ட மண்டைக்காடு காவல் நிலையத்தில்  உடைகளை உருவப்பட்டு போலீசால் கடுமையாக அடிக்கப்பட்டிருக்கின்றனர்.

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.


 

மீனவர்களுக்காக குரல் கொடுக்கச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் குமரியில் கைது!

0

மீனவர்களுக்காக குரல் கொடுக்கச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் குமரியில் கைது!

மிழக மீனவர்களை காக்கத் தவறிய எடப்பாடி அரசையும், மத்திய மோடி அரசையும் கண்டித்துக் குமரியில் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் போராடி வருகின்றனர். மீனவர்களுடன் பல்வேறு ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகளும் இணைந்து போராடி வருகின்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் பல குழுக்களாக கன்னியாகுமரியில் தங்கி அங்கு மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 தோழர்கள் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கிராமத்தில் மக்களுடன் இணைந்து பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இன்று (10.12.2017) காலை சுமார் 6:00 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தங்கியிருந்த மீனவரின் வீட்டிற்கு வந்த போலீசு, தோழர்களையும், அவர்களுக்கு தங்க இடமளித்த மீனவரையும் காரணம் ஏதும் சொல்லாமல் கைது செய்து அழைத்துச் சென்றது.

மேலும் நீரோடி கிராமத்தினர் மத்தியில் ‘தீவிரவாதிகள்’ இங்கு தங்கியிருப்பதாகவும் அவர்களைக் கைது செய்து போவதாகவும் பொய்யான தகவல்களைப் பரப்பி பீதியை ஏற்படுத்தியது போலீசு.
கைது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், தோழர்கள் 7 பேரையும் அவர்களுக்கு தங்க வீடு கொடுத்த மீனவரையும் எந்த போலீசு நிலையத்தில் வைத்திருக்கிறோம் என்ற தகவலைக் கூறாமல் இழுத்தடித்தது போலீசு.

குமரி மாவட்ட பகுதியில் உள்ள மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் ஏனைய வழக்கறிஞர் நண்பர்களும் முழுவீச்சாகத் தேடியதில் தோழர்களையும் அவர்களுக்கு தங்க இடமளித்த மீனவரையும் மண்டைக்காடு போலீசு நிலையத்தில் வைத்திருப்பதாக தெரியவந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளூர் மீனவர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அந்த மீனவரை மட்டும் விடுவித்திருக்கிறது போலீசு.

இதனையடுத்து வழக்கறிஞர்கள் அங்கு சென்று அவர்களை எந்தக் காரணத்திற்காக கைது செய்துள்ளனர் எனக் கேட்டதற்கு முன் பின் முரணாகப் பதிலளித்தது போலீசு. பின்னர், சென்னையிலிருந்து தங்களுக்கு உத்தரவு வரும் வரை மக்கள் அதிகாரம் தோழர்களை விடுவிக்க முடியாது என கூறியிருக்கிறது போலீசு.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட தோழர்கள் கிங்சன், மருது, கணேசன், முகமது அனஸ், ஆதி, மாரிமுத்து, அன்பு ஆகியோர் மீது u/s. 151 CRPC. r/w7(1)A. cla Act. ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

  • எடப்பாடி மீனவர்களை வந்து பார்க்க மாட்டார்!
    பொன்னார் வந்து பார்க்க மாட்டார்!
  • மீனவர்களை வந்து பார்த்து ஆதரவு தெரிவிப்பவர்களையும் இந்த அரசு கைது செய்யுமாம் இவர்கள் மீனவர்களின் எதிரிகள், தமிழ்மக்களின் எதிரிகள் என்பதற்கு இன்னுமென்ன சான்று வேண்டும்?
  • தமிழ் மக்களே ஆயிரக்கணக்கில் குமரி நோக்கி வாருங்கள்
    எத்தனை பேரை கைது செய்வார்கள் பார்த்து விடுவோம்!

 

மீனவர் துயரம் : உறங்காதே தமிழகமே, போராடு !

0

பேரழிவைத் தோற்றுவித்த ஓக்கி புயல் கடந்து சென்று விட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திரும்பவில்லை என்று உரிய விவரங்களுடன் மக்கள் கூறுகிறார்கள். சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டவேண்டுமென்கின்ற கிரிமினல் புத்தியை தனது இயல்பாக கொண்டிருக்கும் அதிகாரவர்க்கமும், உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரான வெறுப்பைத் தனது பிறவிக் குணமாக கொண்டிருக்கும் பார்ப்பனப் பாசிஸ்டுகளின் மத்திய அரசும் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறுகின்றன.

எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், நிவாரணத் தொகையிலும் மறு கட்டுமானப் பணியிலும் தமக்கு கிடைக்கக்கூடிய லஞ்சப்பங்கை எண்ணி எச்சில் ஊறக் காத்திருக்கிறது அதிமுக என்றழைக்கப்படும் பிணந்தின்னிக் கூட்டம். இப்படி ஒரு கிரிமினல் முக்கோணத்தில் சிக்கியிருக்கிறது மீனவர்களின் உயிர்.

ஊடக விளம்பரத்துக்காக மக்களை சந்திக்கும் தருணத்தில் கூட முகத்தில் கருணையை வரவழைத்துக்கொள்ள இயலாத அளவுக்கு மேட்டிமைத்தனத்தால் முகம் இறுகிய நிர்மலா சீதாராமன்தான் மீனவர்களுக்கு “ஆறுதல்” கூறவந்த மோடியின் தூதர். நிவாரணப் பணிகளை கண்காணிப்பதாக கிளம்பி, சுசீந்திரம், கன்னியாகுமரி கோயில்கள் மற்றும் விவேகானந்தர் பாறைக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு, மிச்சமிருந்த நேரத்தில் தன்னை தரிசிக்குமாறு மீனவர்களை அழைக்கும் புரோகிதருக்குப் பெயர், தமிழகத்தின் ஆளுநர்.

ஓகி புயலால் குமரி மாவட்டம் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் தலையைக்கூடத் திருப்பாமல், எம்.ஜி.யாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி, கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் தஞ்சாவூரில் பிறந்தவர் என்று ஒரு வாக்கியத்தில் ஒன்பது உளறல்களை எழுதிவைத்துப் படிக்கும் எடப்பாடி, ஒரு முதலமைச்சர்.

நடுக்கடலில் தத்தளிக்கும் தம் சொந்தங்களை மீட்பதற்கு இவர்களிடம் மன்றாட வேண்டியிருந்த போதிலும், இந்தக் கும்பல் வெளியிடும் நிவாரணங்கள் மற்றும் வாக்குறுதிகளின் பொய்மையை மீனவ மக்கள் அம்பலப்படுத்துகிறார்கள். உண்மை விவரங்கள் அதனினும் கூடுதலாக இவர்களை அம்பலப்படுத்துகின்றன.

முதலாவதாக, இந்தப் புயல் குறித்து இந்திய வானவியல் ஆய்வு மையம் முன் எச்சரிக்கை செய்யவில்லை. ஆனால், “தமிழ்நாடு வெதர்மேன்” என்ற பிரபல தன்னார்வலர், தனது முகநூலில் “நவ 29 காலை 9.12 மணிக்கே கடலுக்குள் செல்லவேண்டாமென்று குமரி, கேரள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். நவ, 30 காலை 9.57 க்கு ஓக்கி புயல் குமரிக்கு வெகு அருகில் உள்ளது. இது குமரி, திருவனந்தபுரம் கரையைக் கடக்காது. அவற்றைத் தொட்டுச் செல்லும். (ஓக்கி புயல் குறித்து வானியல்துறை இதுவரை அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிக்கக் கூடும்)” என்று எழுதியிருந்தார்.

தன்னார்வலர் “தமிழ்நாடு வெதர்மேன்” தனது முகநூலில் ஓக்கி புயல் குறித்து வெளியிட்ட எச்சரிக்கை செய்தி ( படங்கள் )

வானிலை ஆய்வு மையத்தின் இந்த தோல்வி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு விளக்கமளித்த அதன் டில்லி தலைமையக அதிகாரி மிருத்யுஞ்சய் மொகபாத்ரா, “தொலைதூரக் கடலில் இந்தப் புயல் உருவாகியிருந்தால் கணிப்பதற்கு அவகாசம் இருந்திருக்குமென்றும், குமரிக்கு அருகில் இது உருப்பெற்ற காரணத்தினால் கணிக்க இயலாமல்” போனதாகவும் விளக்கமளித்துள்ளார்.

ஒரு ஆர்வலரால் செய்ய முடிந்த கணிப்பை தொழில்நுட்பத்தையும் வல்லுநர் படையையும் வைத்திருக்கும் அரசுத்துறையால் செய்ய இயலாமைக்கு காரணம் அதன் அதிகாரவர்க்கத் தடித்தனமா, மக்கள் நலனில் அக்கறையற்ற அலட்சியமா, அறிவீனமா என்பதை யோக்கியமாக ஆய்வுக்குட்படுத்தியிருக்க வேண்டும்.

தமது குற்றத்தின் காரணமாகத்தான் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின்றன என்ற குற்றவுணர்வோ, நேர்மையோ கடுகளவேனும் இருந்திருந்தால் அப்படியொரு பரிசீலனை நடந்திருக்கும். மாறாக,  அதிகாரவர்க்க வார்த்தை ஜாலங்கள் மூலம் தாங்கள் 28 ஆம் தேதியே எச்சரிக்கை கொடுத்துவிட்டதாகவும் கேரள அரசுதான் செயல்படவில்லை என்றும் ஒரு பச்சைப்பொய்யை தனது கைக்கூலி ஊடகங்கள் மூலம் பரப்புகிறது மோடி அரசு.

ஓகி புயல் மோடியின் குஜராத்தை தாக்குமா என்பதே வானியல்துறைன் ஒரே கவலையாக இருந்தது என்பதற்கு அதன் அறிக்கைகளே சான்று. நடுக்கடலில் புயலின் பாதையில் சிக்கக்கூடிய தமிழக, கேரள மீனவர்களைப் பற்றி வானிலை ஆய்வு மையம் கவலை கொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை. ஒருவேளை முறையாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும், அது ஆழ்கடற்பகுதிகளில் இருந்த மீனவர்களை சேர்ந்திருக்காது.

கரையிலிருந்து சுமார் 200 கிமீ இல் தொடங்கி 600 கிமீ தூரம் வரை சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு, 15 கிமீ தொலைவுக்கு எட்டக்கூடிய ஒயர்லெஸ் கருவிகளை மட்டுமே அனுமதித்திருக்கிறது இந்திய அரசு. சிங்கள மீனவர்கள் வளைகுடா கடல்பகுதியிலிருந்து குடும்பத்துடன் பேசிக்கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு சாட்டிலைட் போனை அனுமதித்திருக்கிறது இலங்கை அரசு. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய அரசு நமது மீனவர்களுக்கு அதைத் தடை செய்திருக்கிறது. இப்படி மீனவர்களை மரணத்துக்குத் தள்ளியிருக்கும் இந்திய அரசுதான், இப்போது மீட்புப்பணி என்ற நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

“மீட்புப்பணிக்கு செல்லும் ஹெலிகாப்டர்களின் எரிபொருள் ஒன்றரை மணி நேரம் மட்டுமே தாங்குமென்பதால், எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட விமானந்தாங்கி கப்பல்களைப் பயன்படுத்தினாலன்றி அவை ஆழ்கடலுக்கு போகவே முடியாது. தேடவேண்டிய இடத்தை காட்டுமாறு எங்களை அழைத்துப்போன கடலோர காவல்படை, 12 கடல் மைல் தொலைவுக்கு மேல் செல்வதற்கு தங்களுக்கு அனுமதியில்லை என்று திரும்புகிறது.  200 கடல் மைல்களுக்கு அப்பாலிருந்துதான் தேடுதலை தொடங்கவே வேண்டும் எனும்போது இந்த தேடுதல் நடவடிக்கையே ஒரு ஏமாற்று. செயற்கைக்கோள் (GPS) தொழில் நுட்பத்தின் மூலம் கடல்பரப்பில் ஒரு சதுர மீட்டரில் என்ன இருக்கிறது என்பதைக் கூட கண்டுபிடிக்கின்ற தொழில்நுட்ப வசதி இருந்தும் அதனை மீனவர்களுக்காக பயன்படுத்த மறுக்கிறது இந்திய அரசு” – என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார்கள் குமரி மீனவர்கள்.

ஒரு நூற்றாண்டில் அரபிக்கடல் கண்ட கொடிய புயல் இது என்பதால், இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார் பினராயி விஜயன். இந்து தேசியத்தை நிராகரிக்கின்ற தமிழக, கேரள மக்களின் துயரம் “தேசிய” பேரிடராக கருதத் தக்கதல்ல என்பது மோடி அரசின் நிலையாக இருக்கக் கூடும். இந்தியக் கடற்பரப்பை சூறையாடுவதற்கு பன்னாட்டு மீன்பிடி டிராலர்களை அனுமதித்த பின்னரும், அவர்களுடன் போட்டி போட்டு ஆழ்கடலில் மீன்பிடித்து வாழ்கிறார்கள் மீனவர்கள்.

“தூங்க முடியவில்லை அய்யா”

பின்னர், கூடங்குளம் அணு உலையை எதிர்த்தார்கள். இன்று இந்தியக் கடற்கரைகளை கார்ப்பரேட் துறைமுகங்களாக மாற்றும் சாகர்மாலா என்கிற பேரழிவுத் திட்டத்தையும், எண்ணூர், சீர்காழி, ஏணையம் துறைமுகங்களையும் எதிர்க்கிறார்கள். சென்னை மீனவ மக்களின் குடியிருப்புகளை அகற்றுவதற்கு கிடைத்த நல்வாய்ப்பாக சுனாமியைப் பயன்படுத்திக் கொண்டதைப்போல, குமரி மீனவர்களை அப்புறப்படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பாக ஓகி புயலை மோடி எடப்பாடி அரசுகள் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த மக்கள் விரோதிகளை அப்புறப்படுத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பாக தமிழக மக்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும். இது தமிழகத்தின் உரிமைக்காக மெரினாவில் ரத்தம் சிந்திய மீனவ சமூகத்துக்கு தமிழ் மக்கள் செலுத்த வேண்டிய நன்றி. டில்லியின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவது மட்டுமின்றி, தமது அதிகாரத்துக்கான பாதையை உருவாக்கிக் கொள்ளவும் மக்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு.

“தூங்க முடியவில்லை அய்யா” என்ற மீனவத் தாய்மார்களின் ஓலம்,… கையில் இறுகப்பற்றிய தின்பண்டத்துடன் தீயில் வெந்துதுடித்த இசக்கிமுத்துவின் குழந்தைகளுடைய அலறல்,… அனிதாவின் தொண்டைக்குழியில் தேங்கிநின்ற துயரம்…. இத்தனைக்கும் பின்னர் தமிழகம் உறங்கக்கூடாது. எதிரிகளை உறங்க விடவும் கூடாது.

-சூரியன்


 

மீனவர்களை ஏமாற்றும் அரசு – அம்பலப்படுத்தும் குமரி மாவட்ட இளைஞர்கள் !

1

கொந்தளிக்கும் குமரி பூத்துறை கிராம இளைஞர்கள் ! – வீடியோ

ரை திரும்பாத மீனவர்களை மீட்கக் கோரி, குழித்துறை ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பூத்துறை கிராம இளைஞர்கள் மத்திய மாநில அரசுகள் மீனவர்களுக்கு செய்யும் துரோகத்தையும். மீனவர்கள் செத்து மிதக்கும் போது ஆர்.கே. நகரில் விஷால் வேட்புமனு பற்றி விவாதம் நடத்தும் ஊடகங்களையும் தங்களது பேச்சில் தோலுரிக்கின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகட்டும், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகட்டும் மீனவர்களுக்கு கண்கட்டுவித்தை காட்டி வருகின்றனர். மறுபுறம் சமூக வலத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் மீனவர் போராட்டங்களை சீர்குலைக்கும் வகையிலான மதவெறிப் பிரச்சாரத்தை நடத்திவருகின்றனர்.

மாவட்ட நிர்வாகமோ போராட்டத்தை ஒருங்கிணைத்த பாதிரியார்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து, இங்கு கலவரம் ஏற்படும் சூழல் உள்ளது ஆகையால் போராட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் என மறைமுகமாக மிரட்டி போராட்டத்தைத் திரும்பப்பெற வைத்துள்ளனர்.

ஆனால் இந்த தடைகளைத் தாண்டி கூடங்குளம், நெடுவாசல், மெரினா போல ஒரு மக்கள் எழுச்சியை நாங்கள் உருவாக்குவோம் என இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

***

எடப்பாடி அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் ஒரு மோசடி ! – வீடியோ

கி புயலில் உயிர் இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அவை எதையும் அரசு முறையாக வழங்கியதில்லை என்பதை, தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தே விளக்குகின்றனர் இளைஞர்கள்.

இறந்தும் உடல் கிடைக்காத மீனவர்களை காணாமல் போனவர்களாகத்தான் இந்த அரசு அறிவிக்கும். அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்துத்தான் அவர்களுக்கான மரணச்சான்றிதழை வழங்கும்.

அதுமட்டுமல்லாது தமிழகத்தில் அரசு அலுவலகங்களின் ஒவ்வொரு துறையிலும் மீனவர்களை இழுத்தடித்து அலைகழிப்பார்கள். ஆனால் அருகில் உள்ள கேரளாவில் ஆறுமாத காலத்தில் நிவாரணத்தை வழங்கிவிடுகின்றனர். இதுகுறித்து இளைஞர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது அவர் அதற்கு பதிலேதும் அளிக்காது சென்றுவிட்டார்.

இவ்வாறு அரசு தங்களை எப்படி தொடர்ந்து வஞ்சித்து வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்தினர் கிராம இளைஞர்கள்.

வீடியோ – நேர்காணல் : வினவு செய்தியாளர் குழு


 

இன்று PRPC – 14வது ஆண்டுவிழா ! அனைவரும் வருக !

0

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – 14வது ஆண்டுவிழா கருத்தரங்கம் !


நிகழ்ச்சி நிரல்

கருத்தரங்கம்:

தலைமை: பேராசிரியர் அ.சீனிவாசன்,
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை

தொடக்க உரை: வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

கருத்துரை:

நொறுக்கப்படும் மனித உரிமைகள் பறிக்கப்படும் ஊடக சுதந்திரம்!

திரு பி.எஸ்.எம். இரகுமான்,
ஊடகவியலாளர்,
 சென்னை.

நசுக்கப்படும் கருத்துரிமை நிலை குலையும் நீதித்துறை – நமது கடமை என்ன?

திரு. அரிபரந்தாமன்,
நீதிபதி (ஓய்வு), சென்னை உயர்நீதிமன்றம்

காட்சி அரங்கம்: குறும்படங்கள் – மக்கள் உரிமைகளும், கார்ப்பரேட் ஜனநாயகமும்

நன்றியுரை: திரு. ம. லயனல் அந்தோனிராஜ்,
செயலாளர், ம.உ.பா. மையம் மதுரை

நூலரங்கம்: கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,

மதுரை மாவட்டம். அலைபேசி: 94434 71003


 

உடனே போயிருந்தா பல பேரைக் காப்பாத்தி இருக்கலாம் – தூத்தூர் மக்கள் – வீடியோ

1

தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கில்பெர்ட் தனது இளைய தம்பி மற்றும், மேலும் இருவருடன் 29 -ம் தேதி அதிகாலையில் மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார். அரசு முறையான முன்னறிவிப்பு செய்யாத காரணத்தினால், புயல் குறித்து அறிந்திராத சூழலில்தான் மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள்.

புயல் காற்றில் படகு நிலை குலைந்து கடலில் மூழ்கியது. கில்பெர்ட்டும் மற்ற மீனவர்களும் படகை நிமிர்த்துவதற்கு கடுமையாகப் போராடியுள்ளனர். இதில் படகு மோதி, அனைவருக்கும், கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. கடுமையான காயத்துடன் கிட்டத்தட்ட 24 மணி நேரம் வடக் கயிறு ஒன்றை பிடித்துக் கொண்டே மீட்புக் கப்பல் வருமா எனக் காத்திருந்தனர் நால்வரும்.

குடிக்க நீர் கூட இல்லாமல், சோர்ந்து துவண்டு போன கில்பெர்ட்டை அவரது இளைய சகோதரர் கையிலேந்தி காத்திருக்கிறார். இறுதியில் தனது இளைய சகோதரனது கையிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவருடன் வந்த மற்ற மூவரில் மேலும் ஒருவரும் உயிர் இழந்துள்ளார்.

அவ்வழியே வந்த ஜப்பானிய தனியார் கப்பல் உயிருடன் இருந்த இருவரை ஹெலிகாப்டர் வழியாக மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தது. “சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தால் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்திருக்குமே…” என்கிறார் கில்பெர்ட்டின் மனைவி சலோமி.

30 -ம் தேதி இவர்கள் மீட்கப்பட்ட சமயத்திலாவது அரசு மீட்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தால் தத்தளித்துக் கொண்டிருந்த பல மீனவர்களை மீட்டிருக்கலாம். ஆனால் அரசு அதற்கு மறுநாள் தான் தேடுதல் பணியை ஆரம்பித்தது. மக்களை காக்க எந்த ஒரு அக்கறையும் இல்லாத கேடுகெட்ட அரசாகவே மத்திய மாநில அரசுகள் இருக்கின்றன.

வீடியோ – நேர்காணல் : வினவு செய்தியாளர் குழு


 

குமரி : நிவாரணம் வேண்டாம் உயிர்களைக் கொடு ! – காணொளி

1

குமரி: நிவாரணம் வேண்டாம்! உயிர்களைக் கொடு ! – காணொளி

கி புயலில் கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்பது குறித்து மெத்தனம் காட்டி வருகிறது எடப்பாடி அரசு. மீனவர்களின் நியாயமான கோபத்திற்கு திமிராக பதிலளிக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது கடற்படை ரோந்து கப்பல் தண்ணீர் கூடக் கொடுக்காமல் சென்றதாக தப்பி வந்த மீனவர்கள் கூறியதாகக் கூறுகிறார்கள் மீனவ பிரதிநிதிகள்.

மீனவர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா ?

குமரி மாவட்டம் பூத்துறை கிராமம், உள்ளிட்ட 8 கிராமங்கள் மிகவும் மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளன. அங்கிருந்து பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்று திரும்பவில்லை. குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரின் கதியும் என்னவெனத் தெரியாத நிலையில் திக்கற்று நிற்கிறார்கள் மக்கள்.

எல்லாம் சரியாக நடக்கிறது என எடப்பாடியும், மத்திய அரசும் அப்பட்டமாக பொய் சொல்லிக் கொண்டு திரியும் நிலையில் அங்குள்ள நிலையை பூத்துறை மக்களே எடுத்துரைக்கிறார்கள்.

வீடியோ – நேர்காணல் : வினவு செய்தியாளர் குழு


 

அஃப்ரசுல் கானைக் கொன்றவர்களைத் தூக்கிலிடு ! – குடும்பத்தினர் கதறல்

49
கொலையாளி ஷம்புலால் ரீகர் - உள்படம் கொலை செய்யப்பட்ட தொழிலாளி

ராஜஸ்தானில் லவ் ஜிகாத் என்னும் பெயரில் எரித்துக் கொல்லப்பட்ட அஃப்ரசுல் கானின் குடும்பத்தினர் நம்பிக்கையற்றுக் காணப்படுகின்றனர். “அவரை ஒரு மிருகத்தைப் போல அடித்துக் கொன்று, அந்தப் படங்களையும் வெளியுலகிற்கு பகிர்ந்தவர்களைத் தூக்கிலிடவேண்டும்” என அவர்கள் கோரியுள்ளனர். இதன் பின்னணியில் சதி உள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள் அஃப்ரசுலின் குடும்பத்தினர்.

மேற்கு வங்கத்தின் மால்டா நகரைச் சேர்ந்த 47 வயதான முசுலீம் தொழிலாளி அஃப்ரசுல், இந்து பெண்ணை காதலித்ததாகக் கூறி எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்துத்துவ வெறியன் ஷாம்புலால் ரெகர் என்பவன் நேரடியாக இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பதோடு, தனது 14 வயது மருமகனையும் இக்கொலையை படமெடுப்பதற்கு ஈடுபடுத்தியுள்ளான்.

கொலையாளி ஷம்புலால் ரீகர் – உள்படம் கொலை செய்யப்பட்ட தொழிலாளி அஃப்ரசுல் கான்

ஷாம்புலாலையும் அவனது மருமகனையும் கைது செய்த ராஜஸ்தான் டிஜிபி, “இது ஒரு கொடூரமான கொலை. சாதாரண மனிதனால் இத்தகைய கொலையை செய்திருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

போலீசிடமிருந்து தகவல் கிடைத்ததும், கொல்கத்தாவிலிருந்து 325 கிமீ தொலைவில் உள்ள அஃப்ரசலின் வீட்டில் அவரது உறவினர்கள் துக்கத்தோடு குவிந்துள்ளனர். அஃப்ரசலின் மனைவி குல்பகர் பீபி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், “எனது கணவரை கொடூரமாக கொன்று அதனை அனைவருக்கும் படமெடுத்துக் காட்டியவர்களை தூக்கிலிட வேண்டும். எனக்கு நீதி வேண்டும். அவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காகவே கொல்லப்பட்டிருக்கிறார். நேற்று மதியம் 3 மணியளவில் இராஜஸ்தான் போலீசில் இருந்து அழைப்பு வந்தது. எனது கணவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.

அவரது மகள் ரெஜினா கான் “ கடந்த செவ்வாய்க் கிழமை தான் நாங்கள் அவரோடு பேசினோம். அவர் எங்களோடு தொலைபேசியில் தினமும் பேசுவார். ‘லவ் ஜிஹாத்’ என்றால் என்னவென்று கூட எங்களுக்குத் தெரியாது. அவருக்கு பேரன் – பேத்திகள் இருக்கிறார்கள். அவர்கள் எனது தந்தையை, தீயிட்டு எரிப்பதற்கு முன்பு, மிருகம் போல குதறியிருக்கிறார்கள். அதனைச் செய்தவர்களும் என் தந்தை பட்ட வேதனையைப் பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்த வீடியோவையும், கொல்லப்படும் போது ஆதரவற்ற நிலையில் எனது தந்தையின் கதறலையும் நான் பார்த்தேன்” என்று கூறியிருக்கிறார்.

மூன்று பெண்களின் தந்தையான அஃப்ரசுல், தனது இளைய மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய, இம்மாத இறுதியில் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தார். சொந்த ஊரில் இருக்கும் சிறு அளவு நிலம் அவரது குடும்பத்தைப் பராமரிக்கப் போதுமானதாக இல்லாத காரணத்தால்தான் கடந்த 12 ஆண்டுகளாக அஃப்ரசுல் இராஜஸ்தானில், முறைசாரா தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாகவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவர் வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

அஃப்ரசுலின் குடும்பத்தினர்

அஃப்ரசுலின் உறவினரான ஜீனத் கான், “ இதில் சதி இருக்கிறது. இதில் பெரிய நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு தொழிலாளியால் என்ன செய்ய முடியும்? சமூக வலைத்தளங்களில் இந்தக் குற்ற நடவடிக்கை பிரபலப்படுத்தப்பட்டதன் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது இதற்குப் பின்னர் மிகப்பெரிய சதியும், செல்வாக்குள்ள நபர்களும் சம்பந்தப்பட்டிருப்பதையே காட்டுகிறது. எங்களுக்கு இராஜஸ்தானில் உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் இப்போது போலீசு நிலையத்தில் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

இச்செய்தி வெளியானவுடன், அஃப்ரசுலின் கிராமத்தினர்கள் அவரது வீட்டில் குவியத் தொடங்கிவிட்டிருக்கின்றனர். அஃப்ரசுலின் உடல் வருவதற்காகவும், அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகவும் காத்திருக்கின்றனர். அங்கு பலரும் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். அஃப்ரசுல் கடவுளுக்குப் பயந்த மனிதர் என அவர்கள் கூறுகின்றனர்.

அஃப்ரசுலின் அண்டை வீட்டுக்காரரான ஜிவல் சௌவுத்ரி, ”எனக்கு அவரை பல ஆண்டுகளாகத் தெரியும். இதுவரை மோசமான பின்னணி எதுவும் அவருக்குக் கிடையாது. அவர் ஒரு நல்ல மனிதர். கடவுளுக்குப் பயந்தவர்.” என்று கூறியுள்ளார். “அவரது ஏழ்மையான குடும்பத்தை இனி யார் பார்த்துக் கொள்வார்கள்?, அவரது இளைய மகள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு இவர் மட்டும் தான் வருமானம் ஈட்டித் தருபவராக இருந்தார்.” என மற்றொரு அண்டை வீட்டுக்காரரான இப்ரஹீம் கூறினார்.

மூலக்கட்டுரை : நன்றி – The Indian Express


 

கொன்றது ஒக்கி புயலா ? அரசுக் கட்டமைப்பா ? குழித்துறையில் ரயில் மறியல்

1

குமரி மாவட்ட மீனவர்களின் உண்மை நிலை! விவரிக்க முடியாத கொடுந்துயரம்!

க்கி புயலால் குமரி மாவட்டம் முழுவதுமாக காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையாக வெறும் 62 பேரை மட்டும் கணக்கு காட்டியது தமிழக அரசு! உண்மையை அறிய மக்கள் அதிகாரம் சார்பாக கள ஆய்வுக்கு சென்றோம்.

தூத்தூரை சுற்றியுள்ள எட்டு கிராமங்கள்தான் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு பேர் போனவை. நாங்கள் மிடாலம் முதல் நீரோடித்துறை வரை உள்ள பல கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டோம். தமிழக எல்லை முடியும் இடத்திலுள்ள நீரோடித்துறையில் மட்டும் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். 55 பேரை காணவில்லை. அடுத்துள்ள மார்த்தாண்டன் துறையிலோ 3 பேர் இறந்துவிட 83 பேரை காணாமல் தவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு ஊரிலும் கணக்கெடுத்தால் இறப்பும், காணாமல் போனதும் நம்மை கலங்கடிக்கிறது. ஆனால் அரசோ 62 தான் என்கிறது.

அரசு என்ன செய்தது?

29.11.2017 இரவு 11:00 மணிஅளவில் இந்தியப் பெருங்கடலில் புயல் தொடங்கி விட்டது. மாலை 7:00 மணி அளவில் புயல் வருவதாக மீன்வளத் துறையிலிருந்து கோவிலுக்கு தகவல் தந்தது. பாதர் மூலம் ஊருக்கு அறிவிக்கப்பட்டது.

இப்படித்தான் சொல்வார்கள், ஆனால் வராது என்று பழைய அனுபத்திலிருந்து முடிவுக்கு வந்த சிலர் அதிகாலை 3.00 மணி அளவில் ஃபைபர் படகுடன் கடலில் இறங்கினர். உள்ளே காற்றின் வேகம் கடுமையாக இருப்பதை உணர்ந்து கரைக்கு திரும்பி விட்டனர். இது வள்ளவிளையில் நடந்தது. அதிகாலை 4.00 மணி அளவில் திரும்பி வந்த ஃபைபரைப் பார்த்து அடுத்து யாரும் கடலுக்கு செல்லவில்லை.

அரசின் அறிவிப்பால் 29.11.2017 இரவில் கடலுக்குள் செல்ல இருந்தவர்கள் தடுக்கப்பட்டனர். ஆனால் 20, 15,7 நாட்களுக்கு முன்னரே ஆழ்கடலுக்கு சென்றுவிட்ட விசைப்படகுகளுக்கு புயல் பற்றி எந்த தகவலும் சேரவில்லை. இப்படகுகள் 70 முதல் 1,000 நாட்டிகல் மைல் வரை ( 2,500 கி.மீ. வரை) கடலுக்குள் சென்று விட்டிருந்தன. இவைதான் புயலின் கோரத்தாண்டவத்தில் சிதறடிக்கப்பட்டு மூழ்கியவை.

ஒருவேளை முன்தினம் இரவு தரப்பட்ட தகவல் இவர்களை எட்டினாலும் பலன் இல்லை. ஒருமணி நேரத்திற்கு 8 நாட்டிகல் மைல் வரைதான் கடக்க முடியும். அதுவும் காற்றின் வேகம் கூடிவிட்டால் 2  நாட்டிகல் மைலை கடப்பதே சவாலாக இருக்கும். அதுவும் காற்று வீசும் திசையிலே சென்றால்தான் அலைகளை சமாளித்து மீள முடியும். வந்த புயலோ 160 முதல் 200 கி.மீ. வேகம் வரை சுழன்று அடித்துள்ளது. ஆனால் முன்தினம் இப்புயல் எத்திசை நோக்கி செல்கிறது, படகுகள்  எத்திசை நோக்கி நகர்ந்தால் பாதுகாப்பு என்று நவீன தொழில்நுட்பத்தால் தகவல் சென்றிருந்தால் இவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

மீட்புப்பணி நடந்ததா?

தொலைந்தது ஓர் இடம் தேடுவது ஓர் இடம். கடலோர காவல்படை, கடற்படை, வனத்துறை, சுங்கத்துறை எல்லாம் சேர்ந்து களம் இறங்கினார்களாம். 60 நாட்டிகல் மைல் தொலைவிற்குள்ளாகத்தான் தேடுதல் நடந்தது; நடக்கிறது.

GPS, ECCO SOUNDER மூலம் கடலில் எந்த இடத்தில் தேட வேண்டும் என்பதை துல்லியமாக குறித்துத்தந்து கடலோர காவல்படை, கடற்படை, மீன்வளத்துறையிடம் மன்றாடியுள்ளனர் குமரி மீனவ மக்கள். ஆனாலும் அந்த தொலைவுக்கு எப்படையும் செல்லவில்லை.
நடுக்கடலில் தத்தளித்தவர்கள் அவ்வழியே வந்த சரக்கு கப்பல்கள், மூழ்காமல் தப்பிய விசைப்படகுகள் மூலமும், 3 நாட்கள் நீந்தியும் கரைசேர்ந்தனர். இவர்கள் மூலம்தான் புயலின் தீவிரம் இப்பகுதி மக்களுக்கு புரிந்தது. கவிழ்ந்த படகினை பிடித்து மிதக்கும்போது அதில் ஒட்டியுள்ள சிப்பிகளால் உடல்முழுவதும் வெட்டுக்காயம் பட்டனர். இவர்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் எப்படி துரோகம் செய்கின்றனர்?

பெரோன் மையம் என்ற பாதிரியார் தங்குமிடத்தில் வைத்து பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. இங்கு மாவட்ட ஆட்சியர் ஒரு குழுவாக வந்தார். இவர் மக்களை பார்க்கவில்லை. ஞாயிறு காலை 11 மணி அளவில் கொல்லங்கோடு கன்னநாகம் ஜங்சனில் சாலைமறியல் நடந்தது. துணை ஆட்சியர் வந்து சமாளித்தார். மாலையே நிர்மலா சீதாராமன் வந்தார். ஸ்டாலின், வைகோவும் வந்தனர். இதனால் எந்த தீர்வும் வரவில்லை. நிவாரண உதவி கூட கிடைக்கவில்லை. அடுத்த நாள் IG வந்தார். ககன்தீப் சிங் பேடியும் வந்தார். உருப்படியாக யாரையும் மீட்கவில்லை.

இன்றுவரை கடலுக்கும் போகத்தடை; நிவாரண தொகையும் கிடைக்காது உள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்ட போராட்டமாக, குமரிமாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் இன்று (07.12.2017) போராட்டத் துவங்கியுள்ளனர். மத்திய மாநில அரசுகளின் கையாலாகத்தனத்தை கண்டித்து முழக்கமிட்டவாறு, பல்லாயிரம் மீனவர்கள் அணிதிரண்டு பேரணியாக போராட்டகளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

பேரணியில் மீனவமக்கள் எழுப்பும் முழக்கங்கள் :

  • மத்திய அரசே ! மாநில அரசே !
    அரசியல்வாதிகளே ! அதிகாரிகளே !
    உங்கள் வீட்டில் எழவு விழுந்தால்
    இப்படித்தான் இருப்பீர்களா…?
    சொரனை கெட்டு இருப்பீர்களா…?
  • எம்.ஜி.ஆர். விழாவுக்கு 200 கோடி…
    அம்பானிக்கு 1000 கோடி….
    மீனவன் என்றால் இளக்காரமா…?
  • ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவனை காத்து நின்றது
    யாரடா… யாரடா…
    மீனவர்கள் நாங்களடா…

மீனவர்களின் கோரிக்கைகள் :

  • தேசியப் பேரிடராக ஒக்கி புயலை அறிவிக்க வேண்டும் !
  • ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரள அரசு வழங்குவதைப் போன்ற நிவாரணங்களை வழங்க வேண்டும் !
  • இந்திய கடற்படை தளங்களில் இருந்து கப்பல்கள் மற்றும் ஹெலிக்காப்டர்கள் மூலம் தேடுதல் நடத்த உத்தரவிட வேண்டும்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.

***

கரை சேராத மீனவர்கள், கரை ஒதுங்கும் பிணங்கள் : கொன்றது ஒக்கி புயலா? கேடுகெட்ட இந்த அரசுக் கட்டமைப்பா?

புயலோ, மழைவெள்ளமோ கேடுகெட்ட அரசை நம்பாதே! மக்கள் அதிகாரத்தைக் கையில் எடு!

பெரியோர்களே! தாய்மார்களே!

2000 -க்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பவில்லை. கரை திரும்பிய மீனவர்கள் தங்களது சொந்த முயற்சியில் திரும்பியதாக கூறுகின்றனர்; கடற்பரப்பெங்கும் பிணங்கள் மிதப்பதாக கதறுகின்றனர். கடலோரக் காவல்படை, கடற்படை, பேரிடர் மீட்புப்படை என அரசின் எந்த அமைப்புகளும் மீனவர்களைக் காப்பாற்ற வரவில்லையே, ஏன் எனக் கேட்கின்றனர் மீனவர்கள்!

மழைக்காக விடுமுறை என்று அறிவித்தது மாவட்ட நிர்வாகம், புயல் என்று அறிவித்திருந்தால் கூட நாங்கள் பாதுகாப்பாக இருந்திருப்போம் என்கின்றனர் மீனவர்கள்!

மாதிரிப் படம்

அரசின் இந்த நடவடிக்கைகளை வெறும் அலட்சியம் என்று கருத முடியுமா?

ஒக்கி புயலால் தமிழகமே கதறிக்கொண்டிருக்கிறது, மீனவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்… இதைப்பற்றி சிறிதும் கவலை இன்றி எம்.ஜி.ஆர் விழா நடத்துவதன் பொருள் என்ன? புயல்வருவதைப் பற்றி அரசு நன்கு அறிந்திருந்தது. பேரிடர்மீட்புக் குழுக்கள் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களின் வரியில் கொழுத்த கடலோரக் காவல் படை கடற்கரை எங்கும் குவிந்துள்ளது இருப்பினும் இவை எவையும் மீனவர்களை மீட்க செல்லாதது தற்செயலானதா?

சில நாட்களுக்கு முன்னர் தமிழக மீனவரைச் சுட்டது இந்திய இராணுவம்…! இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அடித்து விரட்டிவருவதையும், கைது – சித்திரவதை செய்வதையும் படகுகளைச் சேதப்படுத்துவதையும், பல நூறு மீனவர்களைச் சுட்டுக் கொல்வதையும் மத்திய மாநில அரசுகள் இன்றுவரை தடுக்காததற்கு காரணம் கடல்பரப்பில் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கல்லவா?

விவசாயிகள் தற்கொலை, டெங்கு மரணங்கள், ஜி.எஸ்.டி. – நீட்- பணமதிப்பிழப்பு நடவடிக்கை – மழைவெள்ள மரணங்கள்… இது பிணங்களின் மீது நடக்கும் அரசு அதிகாரமல்லவா?

கார்டூனிஸ்ட் பாலா கைது – உரிமை கோரும் செவிலியர் மீது தடியடி, நீதிமன்ற மிரட்டல் – செயல்படாத கலெக்டரை எதிர்த்த காங்கிரசு எம்.எல்.ஏ.வுக்கு சிறை – நன்னிலம் ஒ.என்.ஜி.சி.க்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதற்கு நாம் தமிழர் கட்சினர் சிறை. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு அனுமதி மறுப்பு –இது இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க பினாமிகள் கருத்துரிமைக்கு எதிராக நடத்தும் சர்வாதிகாரமல்லவா?

மக்களுக்கு எதிராக திரண்டு நிற்பது ஓக்கி புயலல்ல, இந்த அரசுக் கட்டமைப்பு…. என்ன செய்யப் போகிறீர்கள்?

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பாகலூர் – நாட்றாம்பாளையம்- அஞ்செட்டிப்பகுதிகள்
தொடர்புக்கு – 80152 69381- 99948 84923.


 

ஓடும் ரயிலில் மோடி பக்தர்களை பணிய வைத்த மக்கள் !

1

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக, புதிய தொழிலாளி  பத்திரிக்கையை இரயிலில் (கடற்கரை – தாம்பரம் ) பிரச்சாரம் செய்து விற்பது வழக்கம்.

பத்திரிகை மட்டும் அல்ல, மக்கள் – தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்க கூடிய அடக்கு முறை சட்டங்களை எதிர்த்தும், தனியார் மயம் – தாராள மயம் – உலகமயம் என்ற பெயரில் நாட்டையே சூறையாடும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கெதிராகவும் இரயில்களில் பிரச்சாரம் செய்கிறோம்.

மக்களும் இக்கருத்துக்களை ஆதரிக்கின்றனர். எமது பத்திரிக்கைகளை வாங்கி விழிப்படைந்து வருகின்றனர். நடப்பு உண்மைகளை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் துணிச்சலுடன் அம்பலப்படுத்தினால், மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்பதற்கு சான்றுதான் 4.11.17 அன்று இரயில் பிரச்சாரத்தில் நடந்த நிகழ்வு.

அன்று துரதிர்ஷ்ட வசமாக தோழர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் போய் விட்டது. இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மக்களிடம் வாங்கிய திட்டுக்களை படமெடுத்திருக்கலாம்.

சம்பவம் – 1

பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சிவா மற்றும் மாவட்ட பொருளாளர் தோழர் ஆனந்தன் மா.வ.செயற்குழு உறுப்பினர் தோழர் எழில் ஆகியோர் மேற்படி புதிய தொழிலாளி (நவம்பர் -15 டிசம்பர் – 14 ) இதழை காட்டி மோடியின் புதிய இந்தியா யாருக்காக ? என பிரச்சாரம் செய்தனர். பேசியதின் விவரத்தை சுருக்கமாக பதிவு செய்கிறோம்.

  1. வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு தலைக்கு 15 லட்சம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் போடுவேன் !
  2. கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்கத்தான் பணமதிப்பழிப்பு !
  3.  ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் விலை வாசி குறைந்து விடும் என்றது !
  4. வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்பு !
  5. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா… மூலம் தொழில் பெருகும் என்றது !
  6. தமிழகத்தின் வாழ்வாதார உரிமையான காவிரியில் இழைத்த துரோகம் !

இவற்றில் எதை எடுத்துக் கொண்டாலும் நாட்டிற்கும் மக்களுக்கும் மோடி செய்தது துரோகம்தான். பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது மக்களுக்கு பணம் இல்லை. ஆனால் சேகர் ரெட்டி வீட்டில் எப்படி? ரூ 300 கோடிமதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டு  கட்டு கட்டாக இருந்தது…?

இந்த நாட்டின் கோடான கோடி உழைக்கும் மக்கள் வாழ முடியாது அம்பானி, அதானி, மல்லைய்யா, சேகர் ரெட்டி போன்ற திருட்டு கும்பலுக்குதான் மோடியின் புதிய இந்தியா; இதை நாம் அனுமதிக்க போகுறோமா….? என தோழர் சிவா பேசினார்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே 25 – 30 வயது மிக்க ஒருவர்  தனது கைப்பேசி மூலம் போட்டோ எடுத்தார். அவரை பார்த்து தோழர் ஆனந்தன் எதற்காக போட்டோ எடுக்கின்றீர்கள்…? என கேட்ட போது, மத்திய அரசுக்கு சொந்தமான இரயிலில் ஏறி, அரசை எதிர்த்து பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது என்றார்.

இதற்க்குள் பேசி முடித்த தோழர் சிவா அதை நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை… மக்கள் சொல்லட்டும் என சொல்லிவிட்டு மக்களிடம் பத்திரிக்கைக்கு ஆதரவு கேட்ட போது பலரும் வாங்கினார்கள்.

60 – 65 வயதுள்ள ஒரு பார்ப்பனர் ரூ 10 கொடுத்து முதலில் ஒரு பத்திரிக்கையை வாங்கினார். வாங்கிக் கொண்டு எப்படி மோடியை விமர்சிக்கலாம் என கத்தியபடியே இதழை நான்கு துண்டுகளாக கிழித்தெறிந்தார்…

இதனை பார்த்த அங்கிருந்த ஒரு பெரியவர் ஓடி வந்து எப்படி பத்திரிக்கையை கிழிக்கலாம்…? நீ எல்லாம் மனுஷனா… நாயே! என அந்த பார்ப்பனரைக் கண்டித்தார்.

உடனேஅந்த பார்ப்பனருடன் முன்னர் கண்ட இளம் வயது ஆர்.எஸ்.எஸ் அபிமானியும் கூட்டு சேர்ந்து கொண்டு இரயிலில் பேசக் கூடாது என்றனர்.

அப்போது 30 -35 வயதுமிக்க இளைஞர் ஒருவர் இரயிலில் பேசக் கூடாதுன்னு சொல்லறதுக்கு நீ யாரு…? அவங்க பேசுவாங்க என பதிலடி கொடுத்ததுடன், வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு தலைக்கு 15 லட்சம் போடுவேன் மோடி சொன்னாரே அதைப் பற்றி என்றைக்காவது பேசியிருக்கின்றார..? எனக் கேட்ட போது …

மோடி அப்படி சொல்லவேயில்லை என்றார் இளம் வயது சங்கி.

அப்போது ரயிலில் கூடியிருந்த மக்கள் அவர்கள் இருவரையும் எச்சரிக்கும் வகையில் ஒழுங்கா இறங்கி போய்டு என்றனர்.

இதற்கு இடையில் பத்திரிக்கையை கிழித்துப் போட்ட முதிய பார்ப்பனர் கத்திக் கொண்டிருந்தார்.அவரிடம் நீங்க பேசறத்துக்கு யாராவது உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்களா… என அவரை எதிர்த்து பேசிய பெரியவர் கேட்ட போது அதற்கு பதில் சொல்லாமல் அரசிடம் புகார் கொடுப்பேன் நடவடிக்கை எடுக்க வைக்றேன் பார் ! என்றார்.

இதற்கு அருகில் இருந்த மற்றொருவர் தேவையில்லாமல் பிரச்சனை பன்னிகிட்டு இருக்காதிங்க… அவங்க உங்க வீட்டிற்குள் வந்து பேசலை இரயிலில் பேசக் கூடாதுன்னு சொல்லறதுக்கு நீங்க யாரு? என பதிலடி கொடுத்தார்.

அப்போது தோழர் சிவா இவர்கள் RSS கும்பல் இப்படித்தான் பேசுவார்கள், என்ற போது அந்த சங்கி ஆமாம் நாங்க இந்து – இந்தியன்! என்றவரிடம் சுற்றியிருந்தவர்கள் நாங்க என்ன பாகிஸ்தானா… எனக் கேள்வியெழுப்பி பதிலடி கொடுத்தனர் மக்கள்.

ஒரு கட்டத்தில் பெட்டியில் இருந்த பெரும்பாலோனர் எதிர்ப்பு தெரிவித்து பேசுவது உரிமை அதை யாரும் தடுக்க முடியாது என எச்சரித்த பிறகே அமைதியானர்கள் அந்த இரு பாஜக அபிமானிகள். உள்ளுக்குள்ளே கலியுகம் முத்திடுத்து என்று அவர் புலம்பியிருக்கலாம். அவர்கள் அமைதியானாலும் மக்கள் மோடி ஆட்சி குறித்து கடும் வெறுப்போடு பேசிக் கொண்டிருந்தனர்.

சம்பவம் – 2

இதற்கு பிறகு மற்றொரு பெட்டியில் மேற் குறிப்பிட்டபடி பேசி முடித்த பின் பத்திரிக்கையை காட்டி வாங்கி ஆதரவு தருமாறு கோரிய போது, இங்கேயும் ஒரு பாஜக அபிமானி 5 ரூபாய் பத்திரிக்கையிலே என்ன வேண்டுமானாலும் எழுதி மக்களிடம் பரப்புறிங்க… என்றும் மோடி இந்தளவிற்கு வர எவ்வளுவு கஷ்ட்டப் பட்டிருப்பார் என்றெல்லாம் பேசியவரிடம்… நாங்க சொன்ன கருத்துப் பற்றி சொல்லுங்க…. என்ற போது 5  ரூபா பத்திரிக்கையை பிரச்சாரம் பன்றீங்க நாளைக்கு கத்தியை காட்டி வாங்கனும் மிரட்டுவிங்க… என்றார்.

இதற்கு தோழர் சிவா பெட்டியில் இருந்த மக்களை பார்த்து “எமது அமைப்பு 25 ஆண்டுகளுக்கு மேலாக சமூக மற்றத்தை லட்சியமாக கொண்டு, அதாவது உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும், அதற்கான கருத்தை பத்திரிக்கையின் மூலமும், அரசியல் இயக்கங்கள் மூலமாகவும். மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றோம். இதுதான் எங்களின் நோக்கம்” ஆனால் இந்த நபர்  கத்தியை காட்டி மிரட்டுவதாக எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார், என்கிறார்.

அதற்கு அந்த பாஜக அபிமானி… “திமிராக இரயிலிலே வந்து இப்படியெல்லாம் பேசவே கூடாது .. எங்க அனுமதி வாங்கியிருக்கிறீங்க…” என சொல்லிக் கொண்டு இரயிலை விட்டு இறங்க முற்பட்ட போது அமர்ந்திருந்த பயணியொருவர் அவங்க என்ன சொல்றாங்க… நீ என்ன பேசிட்டு இருக்க… என சொல்லிக்கொண்டு அடிக்கவே சென்று விட்டார். தோழர்களும் பயணிகளும் தடுத்து அமைதிப்படுத்தினார்கள். அதற்குள் அந்த மோடி பக்தர் இரயிலை விட்டு இறங்கி விட்டார்.

மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளிலும் பாஜக ஆதரவு கும்பல் வெறி கொண்டு பாய்வதை பார்க்க முடிகிறது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கேள்வியை திசை திருப்புவதும், சம்பந்தம் இல்லாமல் பேசி மடை மாற்றுவது என்ற பார்ப்பன சதித்தனம் மக்களிடம் எடுபடவில்லை. அறியாமையிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் மக்கள் விழிப்படைவதை முதலாளித்துவம் மட்டும் அல்ல பார்ப்பன இந்துமதவெறி அமைப்புகளும் விரும்புவதில்லை. அதனால்தான் மோடியின் ‘வளர்ச்சி’ புராணத்தையும் அதனின் நாயகனான மோடியை கேள்விக்குள்ளாக்கினால் ஆத்திரமடைகிறார்கள்.

பு.ஜ.தொ.மு -வோ மக்களின் துன்பத்திற்கான காரணத்தையும் எதிரிகளையும் மக்களுக்கு அடையாளம் காட்டுகின்றோம்.

அதனால்தான் முகம் தெரியாத தோழர்களையும் பு.ஜ.தொ.மு – வின் கருத்தையும் மக்கள் ஆதரிக்கிறார்கள். மத்தியில் நமது ஆட்சி, அதுவும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்கிறோம், நமது கட்டுப்பாட்டில் உள்ள இரயில்வே துறைக்கு சொந்தமான இரயிலில் ஏறி நம்மையே எதிர்ப்பதா..? என ஆர்.எஸ்.எஸ் கும்பல் சிந்திக்கின்றது.

ஆனால் அதிகாரம்  உங்களிடம் இருந்தாலும் மக்கள் ஆதரவு எங்களுக்கு இருப்பதால், உழைக்கும் மக்களின் குரலை உங்களால் ஒடுக்க முடியாது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்  மாவட்டம் – 88075 32859.


 

சோசலிசத்தில் மோசார்ட் இசைப்பார் – முதலாளித்துவத்தில் இசைக்க மாட்டார் !

0

சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள் – 2

“கருத்துச் சுதந்திரம் கிடைக்கவில்லையே என்று எப்போதாவது கவலைப் பட்டதுண்டா?” என்று கேட்டான் பிராங்.

உண்மையில் இல்லை. சுருக்கமாக சொன்னால், அதைப் பற்றி எதுவும் தெரியாது. அங்கு சில விடயங்கள் தடை செய்யப் பட்டிருந்தாலும், ஒடுக்கப் படுகிறோம் என்று யாரும் கருதிக் கொள்ளவில்லை. மேற்குலகில் பல தசாப்தகாலமாக கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால், தவறுகளுக்கும் குறைவில்லை.

எதையுமே மாற்ற முடியாத கருத்துச் சுதந்திரம் எதற்கு? அது இருந்து என்ன பிரயோசனம்? கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் எங்களுக்கும் அந்த அனுபவம் கிடைத்தது. திடீரென எல்லா இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை காண முடிந்தது. ஆனால், யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை.

திடீரென எல்லா இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை காண முடிந்தது.

கருத்துச் சுதந்திரம் கிடைத்து விட்டதால் எந்த நன்மையையும் உண்டாகவில்லை. நிலைமை முன்னரை விட மோசமடைந்தது. மக்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள். அவர்களது வீடு, சேமிப்புப் பணம், இலட்சியங்கள். அதிக பணம் கொடுக்கத் தயாராக இருந்தவரால் நீதிமன்ற தீர்ப்பை கூட விலைக்கு வாங்க முடிந்தது.

நாட்டில் நடக்கும் குற்றச் செயல்கள் எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். ஏனென்றால் அது ஊடக சுதந்திரத்திற்கு நல்லது என்றார்கள். ஒவ்வொரு இறந்த உடலையும், வன்முறைச் சம்பவத்தையும் பார்க்கும் பொழுது, எமது அழகான நாட்டில் இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டோம்.

கம்யூனிசக் காலத்தில் எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், கிரிமினல் குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமல்ல, உணவை வாங்குவதற்கு கையில் போதுமான பணம் இருக்கிறதா என்ற கவலை கூட இருக்கவில்லை.

ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளுக்கு தம் மக்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கும். இந்த மக்கள் எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எதற்காக? கடைசியில், மக்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் சொல்ல முடிந்தது. அப்போதும் அவர்களுக்கு திருப்தி வரவில்லை.

“அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை என்றால், குரலை உயர்த்தி சொல்ல வேண்டியது தானே?” என்றான் பிராங்.

அதைத் தானே நாமும் செய்தோம்? அரசாங்கம் மாறியது. ஆனால், எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் வெறும் வயிற்றை நிரப்பவில்லை. இடது, வலது வித்தியாசம் இல்லாமல், அனைத்து அரசியல்வாதிகளதும் பிரதானமான நோக்கம், தமது பணப் பைகளை நிரப்புவது மட்டுமே.

“எது முக்கியம்? கருத்துச் சுதந்திரமா, பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதா? என்று தெரிவு செய்ய வேண்டிய நிலைமை வந்தால் என்ன செய்வாய்?” நாங்கள் எதையும் விருப்பத்துடன் தெரிவு செய்யவில்லை. அதை வரலாறு எமக்காக செய்தது. ஒரு நாள் வயிறு நிறைய உணவு கிடைத்தது. ஆனால், முழுச் சுதந்திரம் இருக்கவில்லை. அடுத்த நாள் முழுச் சுதந்திரம் இருந்தது, கையில் காசு இருக்கவில்லை.

நிச்சயமாக, இது எல்லோருக்கும் பொருந்தாது. வழமையாக முதலாளித்துவத்தில் இருப்பது போன்று, புதிய சமுதாயத்தில் எல்லாம் நேர்மையற்ற வகையில் பங்கிடப் பட்டது. வலிமை மிக்க பணக்காரர்கள் சரியான தருணத்தில் ஒரு மூழ்கும் கப்பலை விட்டு வெளியேற முடிந்தது. பலவீனமான ஏழைகள் அதற்குள் கிடந்தது அமிழ்ந்து போனார்கள். யாருமே அவர்களை காப்பாற்ற வரவில்லை.

ஏழு பேரில் ஒருவர் தனது உணவுக்காக கஞ்சித் தொட்டியை நம்பியிருக்கும் மக்களைக் கொண்ட அமெரிக்காவை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றினோம். ஆனால் ஒரு வித்தியாசம். எமது நாட்டில் ஏழைகளுக்கான கஞ்சித் தொட்டிகள் இருக்கவில்லை, எந்தவொரு செல்வந்தரும் தான தர்மம் செய்யவில்லை. எத்தனையோ பேர் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆனார்கள். ஆனால், அவர்களுக்கு ஏழைகளுடன் பணத்தைப் பங்கிடும் மனம் இருக்கவில்லை.

சோவியத் யூனியனில் கோர்பசேவ் அதிபர் பதவிக்கு வந்தார். பெறேஸ்ட்ரோய்கா கொண்டு வந்தார். பெர்லின் மதில் வீழ்ந்தது. ஆரம்பத்தில், பல்கேரியாவில் கோர்பசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ரஷ்ய பத்திரிகைகள், சஞ்சிகைகள் தடை செய்யப் பட்டன. “சோஷலிசத்தை காப்பாற்றுவதற்காக, பல்கேரியா சோவியத் யூனியன் மீது படையெடுக்குமா?” என்று நாங்கள் எமக்குள் வேடிக்கையாக பேசிக் கொண்டோம்.

ஒரு நாள் பல்கேரியாவிலும் ஆட்சி மாற்றம் நடந்தது. எந்நேரமும் சிரித்துக் கொண்டிருந்த எமது “மகிழ்ச்சியான சர்வாதிகாரி” பதவி விலக நிர்ப்பந்திக்கப் பட்டதை தொலைக்காட்சியில் காண முடிந்தது. திடீரென கட்டவிழ்த்து விடப் பட்ட மாதிரி எல்லாம் நடந்தேறின. ஏனென்றால், எமது நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த கட்சித் தலைவரை அகற்றலாம் என்றால், எதுவும் சாத்தியமே. திடீரென பலர் தெருவுக்கு வந்து கம்யூனிசத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். நாற்பது வருட கால பரிசோதனை போதும். கம்யூனிசத்தை குப்பைத் தொட்டிக்குள் வீசுவோம். எல்லோரும் இறக்கை முளைத்ததை போன்று நடந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் நடக்க முடியாதவை என்று நினைத்துக் கொண்டிருந்தவை எல்லாம் நடந்தன. இந்த ஆட்சி மாற்றம் மூலம், கம்யூனிஸ்டுகள் தமது அதிகாரத்தை பலப் படுத்தி விட்டதாக நினைத்தார்கள். ஆனால், திடீரென சிறிய சிறிய எதிர்க்கட்சிகள் முளைத்தன. கடைசியில் சுதந்திரம் பெற்றோம். அதாவது, பல கட்சிகள் கலந்து கொண்ட பொதுத் தேர்தலை சொல்கிறேன். கம்யூனிச எதிர்ப்புப் கட்சிகள் ஒன்று சேர்ந்து நீல வர்ணத்தில் போட்டியிட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்புக்கும், நீலத்திற்கும் இடையில் தேர்தல் போட்டி ஆரம்பமானது.

அப்போது எனக்கு பதினெட்டு வயது ஆகியிருந்தது. வாழ்க்கையில் முதல் தடவையாக தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமை கிடைத்தது. எனது தெரிவு நீலக் கட்சிக்குத் தான் என்பது எப்போதோ தீர்மானிக்கப் பட்டு விட்டது. குறிப்பாக நகரங்களில் வாழ்ந்த இளைஞர்களின் தெரிவும் அதுவாக இருந்தது. எனது நாய்க்குட்டியின் கழுத்துப் பட்டியில், எதிர்க்கட்சியின் நீல நிற பலூன் கட்டி விட்டேன். அதையும் இழுத்துக் கொண்டு எனது தாத்தா, பாட்டி இருக்கும் வீட்டிற்கு சென்றேன்.

தாத்தா, பாட்டிக்கு அது பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதுமே கம்யூனிச ஆதரவாளர்களாக இருந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல, அப்படி நிறையப் பேர் இருந்தனர். இந்தக் கருத்து முரண்பாடு பல குடும்பங்களுக்குள் பிரச்சினையை உண்டாக்கியது. இரவும், பகலும், குடும்ப உறுப்பினர்களுக்குள் இடையறாத வாக்குவாதங்கள் நடந்தன.

நான் தாத்தா, பாட்டியின் வீட்டிற்கு சென்று அவர்களது அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்து வந்து, எனது நாயின் கழுத்துப் பட்டியில் இருந்த நீல பலூனை கண்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், இது சகிக்க முடியாத, கம்யூனிச விரோத சீண்டுதல். அதனால், கோபத்துடன் கதைவை அடித்து சாத்தி விட்டார்கள்.

அப்போது தான் எனது முட்டாள்தனம் உறைத்தது. தாத்தாவும், பாட்டியும், இந்த உலகில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர்களாக இருந்தனர். சிறு வயது முதல் கொஞ்சி மகிழ்ந்து, இனிப்புப் பண்டங்களை கொடுப்பதை தவிர வேறெதையும் செய்திராதவர்கள். பாட்டி பல்கனியில் நின்று கொண்டு என்னைப் பார்த்து கண்ணீர் விடுவதைக் கண்டேன்.

அந்த நேரத்தில், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டங்களில் மும்முரமாக இருந்த எனக்கு, தாத்தா, பாட்டியின் பிரிவின் துயரம் பெரிதாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் எல்லோரும் புன்முறுவலுடன் வீடுகளுக்கு திரும்பினோம். வழியில் எதிர்ப்பட்ட கம்யூனிச ஆதரவாளர்கள் மட்டும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், எதுவும் பேசவில்லை. (எதிர்க்கட்சி ஆதரவாளரின்) மகிழ்ச்சி ஆரவாரம் ஒரு சில நாட்கள் நீடித்தது.

கம்யூனிச எதிர்ப்பு எதிர்க்கட்சிக்கு நகரங்களில் மட்டுமே செல்வாக்கு இருந்தது என்று சொல்லலாம். ஆனால், கிராமப் புறங்கள் அப்போதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்தன. கிராமங்களில் நீலக்கொடி காட்டிய சிலருக்கு விவசாயிகள் அடி போட்டு அனுப்பினார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியானது தனது கடந்த கால சாதனைகளை சொல்லிக் காட்டி பிரச்சாரம் செய்தது. குறிப்பாக விவசாயிகள் மத்தியில் எதிர்க்கட்சி அரசாங்கம் பற்றிய அச்சவுணர்வை தோற்றுவித்து இருந்தனர். எதிர்க்கட்சி அவர்களது நிலங்கள் பறித்து, முந்திய நிலவுடைமையாளர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுவார்கள். இதனால் வேலையிழப்புகள் ஏற்படும். அத்துடன், மருத்துவத்திற்கு காசு கொடுக்க வேண்டி இருக்கும். சந்தைப் பொருளாதாரம் வந்தால், அவர்கள் எடுக்கும் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் பெறுமதி இருக்காது.

ஆரம்பத்தில், நான் இந்த அச்சுறுத்தல்களை கம்யூனிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரம் என்று நினைத்தேன். இருப்பினும் கிராமப் புற விவசாயிகள் அதை நம்பினார்கள். மேற்கத்திய அமைப்பில் நம்பிக்கை கொண்டிருந்த நகர்ப்புற அறிவுஜீவிகளை விட, கிராமப்புற விவசாயிகள் உண்மைக்கு அண்மையில் நின்றுள்ளனர் என்பது கடைசியில் தெரிய வந்தது. எதிர்க்கட்சி அவமானப் பட்டு நாட்டை நாசமாக்கிக் கொண்டிருந்த நேரம், மிக மோசமான நிலைமை நிதர்சனமானது. ஆனால், அந்த நேரம் நல்லது நடக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் மனதில் எந்த வித எதிர்மறையான எண்ணமும் இருக்கவில்லை.

ஒரு தலைமுறை கடந்ததும் வந்த பிள்ளைகள் எவருக்கும் கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியவில்லை. அவர்கள் படிக்கும் சரித்திரப் பாடநூலில் ஒரு சுருக்கமான குறிப்பு இருக்கும். அந்தளவு தான் அறிவு. நாங்கள் மார்க்ஸ், லெனின் சிலைகளுடன் வளர்ந்தோம். ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவர்கள் யார் என்பதே தெரியாது. லெனினை பார்த்து “யார் இவர்? மாஸ்கோ நகர மெட்ரோ ரயில் கட்டியவரா?” என்று கேட்கிறார்கள்.

லெனின் ஒரு இலட்சியவாதியாக இருந்தார். அவரது பிரதானமான சாதனையாக, சோவியத் காலகட்டத்தில் இனங்களுக்கு இடையில் நல்லுறவு நிலவியதைக் குறிப்பிடலாம். அதாவது, இனவாதத்திற்கு இடமிருக்கவில்லை. சோவியத் அமைப்பு விழுந்த பின்னர், எண்ணில் அடங்காத தேசியவாதக் கட்சிகள் தோன்றின. அவை மக்களின் அடிமனது உணர்வுகளைப் பிரதிபலித்தன. “மோசமான பொருளாதார நிலைமைக்கு காரணம் சிறுபான்மை இனத்தவர் தான்.” – எப்போதும் பழி போடுவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவர்கள், மேற்கத்திய “ஜனநாயக” நாடுகளைப் பார்த்து கற்றுக் கொண்டார்கள்.

ஒரு பெர்லின் மதில் மட்டுமே வீழ்ந்தது. ஆனால், கணக்கிட முடியாத புதிய மதில்கள் எழுந்தன. உக்ரைன் ரஷ்ய எல்லையில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் மதில் கட்டுவதற்கு யோசித்தது. அதனோடு ஒப்பிடும் பொழுது பெர்லின் மதில் ஒன்றுமேயில்லை. மிகவும் தடிமனான மதில் மக்களின் மனதில் தான் உள்ளது. அதை ஊடுருவுவதும் கடினமானது. பனிப்போர் முடியவில்லை. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தொடர்கிறது. நீண்ட நெடுங்கால ஜனநாயக மரபைக் கொண்ட நாடுகளில் கூட, நாகரிகம், சகிப்புத்தன்மை என்பன இலகுவில் உடையும் அளவிற்கு மெல்லிய தடுப்புச் சுவர்களாக உள்ளன.

***

ம்யூனிச ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கலாச்சார மண்டபம் இருந்தது. அங்கு நடக்கும் கலாச்சார நிகழ்வுகளை பார்வையிடுவதற்கான கட்டணம் மிகவும் குறைவு, சிலநேரம் இலவசம். சாதாரண மக்கள் கண்டுகளிப்பதற்காக, அங்கு மேடையேறிய நாடகக் குழுக்கள், இசைக் குழுக்கள் போன்றவற்றிற்கு அரசு மானியம் கொடுத்து ஊக்குவித்தது. மொஸார்ட் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற கலைஞர்கள் உருவாக்கிய படைப்புகளும் சாமானியர்களுக்காக இசைக்கப்பட்டன.

ஜனநாயகம் வந்ததும் மொஸார்ட் இசையும் நின்று விட்டது. ஏனென்றால் அரசு அதற்காக பணம் செலவிட விரும்பவில்லை. இசை, கலாச்சாரம், கல்வி? இதற்கெல்லாம் அரசிடம் பணம் கிடையாது. கிராமங்களில் இருந்த கலாச்சார மண்டபங்கள் எல்லாம் மூடப் பட்டு விட்டன. நகரங்களில் அவை குறைக்கப் பட்டன. எல்லா இடங்களிலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இசைக் கலைஞர்கள் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. உயிர் பிழைப்பதற்காக இரவு விடுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

பெர்லின் மதில் வீழ்ந்த பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் பல நம்ப முடியாத விடயங்கள் நடந்தன. மிகக் குறுகிய காலத்தில் நாம் மேற்குலகை எட்டிப் பிடித்தோம். குறைந்த பட்சம் பொருட்களின் விலைகளிலாவது. ஏனெனில் எமது நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் பிரான்ஸ், நெதர்லாந்தை விட அதிக விலைக்கு விற்கப் பட்டன.

முன்பெல்லாம் பெருந்தெருக்களின் அருகில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் கடின உழைப்பாளிகளின் ஓவியங்கள் காணப்படும். அந்த இடங்களில் தற்போது விஸ்கி, கார் விளம்பரங்கள் காணப் படுகின்றன.

முன்பெல்லாம் பெருந்தெருக்களின் அருகில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் கடின உழைப்பாளிகளின் ஓவியங்கள் காணப்படும். அந்த இடங்களில் தற்போது விஸ்கி, கார் விளம்பரங்கள் காணப் படுகின்றன. சில விளம்பரங்களில் தோன்றும் பெண்கள் ஏறக்குறைய நிர்வாணக் கோலத்தில் இருந்தனர்.

மேற்குலகம் கொடுத்த பொருளாதார உதவிக்கு பிரதியுபகாரமாக IMF மூலம் நிபந்தனைகளை விதித்தது. அந்த நிதியத்தின் “புத்திசாலி” பொருளாதார ஆலோசகர்கள், கூடிய விரைவில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என அறிவித்தனர். பெறுமதியான இயந்திரங்கள் எல்லாம் விற்கப் பட்டன. ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

தொழிற்சாலைகள் மறைந்து விட்டன. பொருளாதாரமும் போய் விட்டது. மக்களுக்கு சாப்பிட எதுவும் இருக்கவில்லை. திடீரென உணவுப் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு மட்டும் தடை இருக்கவில்லை.

மேற்குலகம் நினைத்திருக்கலாம், கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை அறிமுகப் படுத்தினால், ஒரே நாளில் எல்லாம் நல்ல படியாக மாறி விடும் என்று. “இதுவா சந்தைப் பொருளாதாரத்தின் வலிமை” என்று ஏழைகள் ஆக்கப்பட்ட மக்களால் நம்ப முடியவில்லை. எங்கு பார்த்தாலும் வறுமையும், பிணியும் தலைவிரித்தாடின.

கம்யூனிச காலத்தை விட மிக மோசமான நிலைமை வந்தது. இருப்பதை எல்லாம் இழந்த பலர் மீதியை குடித்து அழித்தார்கள். தமது வாழ்க்கை இதை விட துயரம் மிக்கதாக அமைய முடியாது என்று உணர்ந்தார்கள். வாங்கிய கடனை அடைக்க முடியாத பலர் தற்கொலை செய்து கொண்டனர். அனேகமாக, அவர்கள் தம் இளம் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட வேண்டியிருந்த குடும்பத் தலைவராக இருந்தனர்.

பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நொறுங்கி விழுந்தது. அவர்களது கனவுகள் குப்பைத் தொட்டிக்குள் கிடந்தன. புதிய சமுதாயம் அவர்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் கொடுக்கவில்லை. புதியதொரு வர்க்கம் உருவானது. அது “வேண்டப்படாதவர்கள்” என்ற சமூகத்தால் ஒதுக்கப் பட்ட வர்க்கம். “வேண்டப்படாதவர்கள்” வேலை செய்ய விரும்பினார்கள். ஆனால், எங்கேயும் வேலை இல்லை. அவர்களுக்கு கிடைத்த அரச உதவிப்பணம் அத்தியாவசிய செலவுகளுக்கே போதாது.

சந்தைப் பொறிமுறை ஒரு மந்திரச் சொல் போன்று ஒலித்தது. ஆனால், பின்னர் அந்த மாயை மறைந்தது. பணவீக்கம் ஏறிக்கொண்டே சென்றது. கையில் கிடைத்த சம்பளம் பெறுமதி இழந்திருந்தது. பல நிறுவனங்களிடம் சம்பளம் கொடுக்க பணமும் இருக்கவில்லை. சிலருக்கு மாதக் கணக்காக சம்பளம் கிடைக்கவில்லை. சிலருக்கு பணத்திற்கு பதிலாக பொருட்களை கொடுத்தார்கள். நீங்கள் ஒரு கண்ணாடித் தொழிற்சாலையில் வேலை செய்தால். சம்பளமும் கண்ணாடியாகத் தான் கிடைக்கும். அதை உணவுக்காக வேறொருவருடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும்.

முன்பிருந்த கம்யூனிச அரசு அடிக்கடி ஒரு பிரச்சாரம் செய்து வந்தது: “பல்கேரியாவில் எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதே நேரம், மேற்குலகில் வருடக் கணக்காக விசுவாசமாக வேலை செய்பவர்களையும் பணி நீக்கம் செய்கிறார்கள்.” என்று சம்மட்டியால் அடித்த மாதிரி பிரச்சாரம் செய்தனர். புதிய (முதலாளித்துவ) அரசு அதை நடைமுறைப் படுத்தி மெய்ப்பித்தது. கம்யூனிச அதிகாரம் இருந்த இடத்தில் பணத்தின் அதிகாரம் வந்தது. என்ன முன்னேற்றம்?

ஏழ்மையில் கூட சமத்துவம் இருந்த இடத்தில், ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருந்தது. புதிய பணக்காரர்கள் சேர்த்த பணத்தில் கோட்டைகள் கட்டினார்கள். புதிய மாடல் கார்களை இறக்குமதி செய்தார்கள். அதே நேரத்தில், தெருக்களில் பிச்சைக்காரர்களும் பெருகினார்கள்.

இதற்கு முன்னர், இப்படியான காட்சிகளை சினிமாப் படங்களில் மட்டுமே கண்டிருந்த எமக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஓய்வூதியப் பணத்தில் வாழ்க்கையை ஓட்ட முடியாத மூதாட்டி ஒருவர், குப்பைத் தொட்டிக்குள் கிளறிக் கொண்டிருந்ததை அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். இதனுடன் ஒப்பிட்டால், கம்யூனிசத்தின் திட்டமிடல் பொருளாதாரக் காலத்தில் நிலவிய தட்டுப்பாடு ஒரு கொடை எனலாம்.

நிச்சயமாக, எங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கும் கருத்துச் சுதந்திரம் இருந்தது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லையென்றால் என்ன செய்ய முடியும்? என்னைப் பொறுத்தவரையில், வயதானவர்களுக்கு உணவு கொடுக்க வழி கிடைக்குமென்றால் அந்தக் கருத்துச் சுதந்திரம் கூட வேண்டாம் என்பேன். எமது ஊடகங்கள் இந்தக் கருத்துச் சுதந்திரத்தை பிழையாக புரிந்து வைத்திருக்கின்றன. ஒரு குற்றம் நடந்தால், சந்தேகநபரின் பெயர் விபரங்களை உடனே வெளியிட்டு விடுகின்றன. அவரது குற்றம் நிரூபிக்கப் பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. வதந்திகளை உண்மை என்று சொல்கின்றன.

முதலாளித்துவமானது பற்றாக்குறை பொருளாதாரத்தை நிவர்த்தி செய்தது. அது சந்தைப் பொருளாதாரம் வேலை செய்வது போலிருந்தது. கம்யூனிச காலத்தில் இருந்த மாதிரி வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. அதே நேரம், பலரிடம் வாங்குவதற்கு கையில் பணம் இருக்கவில்லை. முந்திய கம்யூனிச அரசு உணவுப் பொருட்களுக்கு கொடுத்து வந்த மானியம் இரத்து செய்யப் பட்டது. அதனால், பொருட்களின் விலைகள் நூறு சதவீதம் அதிகரித்தன. ஒரு சோடிக் காலணிகள் வாங்குவதற்கு ஒரு மாத சம்பளம் தேவைப்பட்டது.

பெரும்பாலான மக்களுக்கு சாதாரணமான பொருட்களையும் வாங்கும் வசதி இருக்கவில்லை. எனது மாமியின் வீட்டை பார்த்தாலே போதும். மாமி வாழும் அடுக்குமாடிக் கட்டிடம் சோபை இழந்து காணப்பட்டது. அவரிடம் ஒரு பழைய காலத்து கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அது தான் விரும்பிய நேரத்திற்கு தான் வேலை செய்யும். குப்பையில் போட வேண்டிய தளவாடங்கள் அங்கு கிடந்தன. மாமி இதையெல்லாம் வீசாமல் வைத்திருக்கக் காரணம் பழைய நினைவுகள் அல்ல. புதிதாக வாங்குவதற்கு அவரிடம் பணம் இருக்கவில்லை. அவருக்கு கிடைக்கும் விதவை ஓய்வூதியத் தொகை பற்றிக் கேள்விப் பட்டவுடன் திடுக்கிட்டுப் போனேன்.

“இந்தளவு குறைந்த பணத்துடன் எப்படி வாழ முடிகிறது?”

மாமி தனது தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னார் : “தேவையில்லாத பொருள் எதையும் வாங்குவதில்லை. அதே நேரம், எனக்குத் தேவையான பொருட்களையும் வாங்குவதில்லை. ஒவ்வொரு சதமும் பார்த்து செலவளிக்க வேண்டும். காசைப் பற்றிய கவலை தான் மனிதர்களை மிருகங்களில் இருந்து வேறு படுத்துகின்றது.”

எதற்காக கம்யூனிசக் காலத்தில் எல்லாம் சிறப்பாக இருந்தது என்று வயதானவர்கள் சொல்கிறார்கள் என்பது எனக்கு இப்போது புரிந்தது. உண்மையில் மிகச் சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், பொருட்களின் விலைகள் வருடக் கணக்காக மாறாமல் இருந்தன. வாழ்க்கையில் பெரியளவு பிரச்சினைகளும் வரவில்லை.

புதியதொரு எதிர்காலத்திற்கு கட்டியம் கூறினார்கள். ஆனால் அதன் மேல் கட்டப்பட்ட நம்பிக்கை எல்லாம் நீர்த்துப் போயின. இவை கிழக்கு ஐரோப்பிய வரலாற்றின் அதிர்ச்சியூட்டிய வருடங்கள். பெர்லின் மதில் வீழ்ந்தவுடன் எல்லாம் நல்ல படி நடக்கும் என்ற நம்பிக்கை பொய்யாகிப் போனது. அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. சுதந்திரமாக வெளிநாட்டுப் பயணம் செய்ய முடிந்தது. ஆனால், பயணம் போவதற்கு மக்களிடம் பணம் இருக்கவில்லை. நீங்கள் விரும்பிய எந்த இடத்திலும் சென்று தங்கி வேலை செய்யலாம். ஆனால், எங்கேயும் வேலை இருக்கவில்லை.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், எவருமே மக்கள் சொல்வதைக் கேட்கவில்லை. பாராளுமன்றத்தில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்களை தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. எந்த வர்ணம் பூசி இருந்தாலும், நாங்கள் எந்த அரசியல்வாதியையும் நம்பத் தயாராக இருக்கவில்லை. முதலாளித்துவ பரிசோதனைச் சாலையில் நாங்கள் வெறும் எலிகள் மட்டுமே.

இந்த மாற்றங்களுக்குப் பிறகு பலருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களது எல்லா நம்பிக்கைகளும் பறந்து போயின. ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூகத்தில் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எல்லா கிழக்கைரோப்பிய நாடுகளிலும் சுய முன்னேற்ற நூல்கள் பெருமளவு விற்பனையாகின. சிலநேரம், மதமும் உதவ முடியும். மேற்குலகில் இருந்த அல்லேலூயா கிறிஸ்தவ சபைகள் பெருகின. அந்த சபைகள் ஏற்கனவே மேற்கில் வெளிச்சத்தை கண்டுவிட்டார்கள் என்பதால் நாமும் காண்போம் என்று நம்பினார்கள்.

கொஞ்சக் காலத்திற்கு முன்னர் நாம் வாழ்ந்த சமுதாயம் மறைந்து, பல ஒளிவருடங்கள் தள்ளிப் போன உணர்வை உண்டாக்கியது. கம்யூனிச காலத்தில் “எவ்வாறு இலட்சக் கணக்கான கிழக்கு ஐரோப்பிய மக்கள் மூளைச்சலவை செய்யப் பட்டனர்” என்ற ஆராய்ச்சிகள் கட்டுக் கட்டாக வெளிவந்தன.

வரலாற்றை நீங்கள் திருப்பிச் சொல்லலாம். ஆனால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவங்களில் தான் உண்மை ஒளிந்துள்ளது. எல்லா சரித்திர நூல்களையும் வாசிக்கையில் பெரியதொரு புதிர் தென்பட்டது. சம்பவங்கள் சரியாகத் தான் இருந்தன. ஆனால், வாழ்பனுபவங்கள் ஒத்துப் போகவில்லை. கம்யூனிசத்தின் மடத்தனங்கள் வெளியில் இருந்து பார்க்கும் போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். ஆனால், அதற்குள் வாழ்ந்தீர்கள் என்றால் பல விடயங்கள் சரியாகத் தான் நடந்துள்ளன என்று தோன்றும்.

பல வருட காலமாக, மேற்கத்திய நாட்டவர் எம்மைப் பற்றிய கற்பனைகளை வளர்த்துக் கொண்டனர். எங்களை சுயவிருப்பில்லாமல் நடக்கும் பொம்மைகளாக பார்த்தார்கள். நாங்கள் உத்தரவுகளுக்கு கீழ்ப் படிந்து நடந்ததாகவும், அனைத்து விடயங்களும் அரசியலை சுற்றி சுழன்றதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே அரசியலில் ஆர்வம் காட்டினார்கள். கிழக்கு ஐரோப்பிய இளைஞர்களுக்கும், மேற்கு ஐரோப்பிய இளைஞர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. எமது நாட்டின் பொருளாதார நிலைமையை விட இளம் பருவத்தில் தோன்றும் முகப்பரு எமக்கு முக்கியமாகப் பட்டது.

மேற்கத்திய நாட்டவர் பற்றிய எங்களது கற்பனைகளும் விசித்திரமானவை தான். அவர்கள் எல்லோரும் பணக்கார, சுயநலம் பிடித்த, சுருட்டு புகைக்கும் முதலாளிகள். மேற்குலகவாசிகள் பலர் விலை உயர்ந்த சுருட்டு வாங்கவும், சிலநேரம் மாத முடிவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் பணமில்லாதவர்கள் என்பதை பல வருடங்கள் கழித்து தான் புரிந்து கொண்டேன்.

நன்றி : தோழர் கலையரசன், கலையகம்

இந்த கட்டுரையின் முந்தைய பாகத்திற்குச் செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :


 

மரியா ஜெனோவா : மகிழ்ச்சி அளிப்பது முதலாளித்துவமா கம்யூனிசமா ?

1

சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்

ப‌ல்கேரியா ஒரு சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌ கால‌த்தில் த‌ன‌து இள‌ம் பிராய‌த்தை க‌ழித்த‌ ம‌ரியா ஜெனோவா, த‌ற்போது நெத‌ர்லாந்தில் வாழ்கிறார். அவ‌ர் சோஷ‌லிச‌ ப‌ல்கேரியாவையும், முத‌லாளித்துவ‌ நெத‌ர்லாந்தையும் ஒப்பிட்டு, இர‌ண்டிலும் உள்ள‌ குறை நிறைக‌ள் ப‌ற்றி ஒரு நூல் (Dansen op de Muur) எழுதி இருக்கிறார்.

“உண்மையைச் சொல்வ‌தென்றால் நான் ஒரு க‌ம்யூனிச‌ ச‌முதாய‌த்தில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌தையிட்டு ம‌கிழ்ச்சி அடைகிறேன்.” என்று கூறுகின்றார். அந்த‌க் கால‌த்தில் த‌ன‌க்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் அர‌சிய‌ல் ஆர்வ‌ம் இருக்கவில்லை என்கிறார். த‌ன‌து அனுப‌வ‌ங்க‌ளை ந‌கைச்சுவையாக‌ எழுதி இருக்கிறார். அவரது நூலின் சில பகுதிகளை கீழே மொழிபெயர்த்து எழுதி இருக்கிறேன்.

நூலில் இருந்து….

அப்போதும் அர‌சிய‌ல்வாதிக‌ள் நிறைய‌ வாக்குறுதிக‌ள் அளிப்பார்க‌ள். யார் அதைப் ப‌ற்றி க‌வ‌லைப் ப‌ட்டார்க‌ள்? அவ‌ற்றில் ஒன்று: “உண்மையான‌ க‌ம்யூனிச‌ ச‌முதாய‌ம் உருவான‌ பின்ன‌ர், க‌டைக‌ளில் ப‌ண‌ம் கொடுக்காம‌லே பொருட்க‌ளை வாங்க‌லாம்.”

அத‌ன் அர்த்த‌ம், த‌ற்போது வ‌ங்கி அட்டையில் ப‌ண‌ம் செலுத்துவ‌து மாதிரியான‌ அமைப்பு. பிற்கால‌த்தில் முத‌லாளித்துவ‌ம் வ‌ந்த‌ பின்ன‌ர் அந்த‌ வ‌ச‌தியும் வ‌ந்த‌து. ஆனால், சில‌ர் “காசு கொடுக்காம‌ல் வாங்கும் முறையை” த‌வ‌றாக‌ப் புரிந்து கொண்ட‌ன‌ர் போலிருக்கிற‌து.

கிரிமின‌ல் குற்ற‌ங்க‌ள் பல்கிப் பெருகின‌. நாடு முழுவ‌தும் குழ‌ப்ப‌க‌ர‌மான‌ சூழ்நிலை நில‌விய‌ நேர‌ம், மாபியாக்க‌ள் ம‌ட்டும் ஒழுங்காக‌ இய‌ங்கினார்க‌ள். இது தானா நாங்க‌ள் க‌ன‌வு க‌ண்ட‌ முத‌லாளித்துவ‌ம்?

நான் சிறுமியாக இருந்த நேரம், ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் ஆசிரியை கூப்பிட்டுக் கேட்டார்: “என்ன மரியா இது? தலைமுடி காடு மாதிரி வளர்ந்திருக்கு? கவனிக்க மாட்டாயா?” என்று கேட்டு கத்தரிக்கோலால் வெட்டி விட்டார். அதைக் கண்டு வகுப்பில் பிற மாணவர்கள் சிரிக்கவுமில்லை, பொருட்படுத்தவுமில்லை. ஏனெனில் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இடைவேளை நேரத்தில் நக்கல் குரூப்பில் ஒன்று வந்து கேட்டது: “அடியே, உனது தலை கார்ச் சக்கரத்தில் அகப்பட்ட பூசணிக்காய் மாதிரி இருக்குடி!”

வீட்டுக்கு சென்ற பின்னர் அம்மாவுக்கு மாரடைப்பே வந்து விட்டது.
“என்னடி இது? என்ன நடந்தது?”
“தோழர் டிமித்ரோவா (ஆசிரியை) எனது தலை முடி நீளம் என்று சொல்லி வெட்டி விட்டார்.”
“தோள்பட்டை அளவு கூட வளரவில்லை… அது நீளமாமா?”

எனது அம்மா கடுங் கோபத்தில் இருந்தார். இருந்தாலும் அவர் பள்ளிக்கூடம் சென்று விசாரிக்கவில்லை. காரணம், ஆசிரியர்கள், அரச உத்தியோகஸ்தர்களை எதிர்த்துப் பேச முடியாது. அவர்கள் எப்போதும் ஏதாவது எழுதப் படாத சட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். கட்சித் தலைவர்கள் அதை விட மோசம். அந்த விதிகள் எங்காவது எழுதி இருந்தால், நாமும் தயார் படுத்திக் கொள்ளுவோமே?

நூலில் இருந்து….

அன்றிருந்த கிழக்கு ஐரோப்பிய (சோஷலிச) நாடுகள், ஒவ்வொன்றுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அதே நேரம் ஒற்றுமைகளும் இருந்தன. எல்லாம் வல்ல கட்சி, அணிவகுப்புகள், அரைகுறையாக நிரப்பப் பட்ட கடைகள், வரிசைகள், தகவல் கொடுப்பவர்களைப் பற்றிய அச்சம்… இவையெல்லாம் ஒரே மாதிரி இருந்தன.

அது மட்டுமல்ல, செக்கோஸ்லோவாகியாவின் அதே மின் விளக்குகள், போலந்து அலுமாரிகள், கிழக்கு ஜெர்மன் தொலைபேசிகள் தான் பல்கேரியாவிலும் இருந்தன. திருத்தப் படாத பெருந்தெருக்கள் குண்டும் குழியுமாக இருந்தன. வாகனம் ஓட்டுவோர் பள்ளத்திற்குள் இறங்கக் கூடாது என்று எச்சரிக்கையாக தெருவோரமாக திருப்பினால், அந்தப் பக்கம் சிலநேரம் எதிர்த் திசையில் இருந்து வாகனம் வரலாம். வந்தால் அதோ கதி தான். எனது மாமா ஒரு தடவை பள்ளத்திற்குள் வண்டியை விட்டு ஸ்டேயரிங் வீலை கையில் கழற்றி வைத்திருந்தார்.

மேற்குலக எதிர்ப்பு பிரச்சாரங்களும் ஒரே மாதிரித் தான் அமைந்திருந்தன. மேற்கத்திய நாடுகளில் போதைவஸ்துக்கு அடிமையான இளைஞர்கள் தறிகெட்டு செல்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்தனர். எங்களது நாட்டில் போதைவஸ்து எங்கேயும் கிடைக்காது, அதனால் அந்தப் பிரச்சினையும் இல்லை. மேற்கத்திய இளைஞர்களுடன் ஒப்பிடும் பொழுது, நாம் பொருளாசை குறைந்தவர்களாக இருந்தோம். சிலநேரம், “கிட்டாதாயின் வெட்டென மற” என்று மனதை தேற்றிக் கொண்டிருப்போம்.

அதற்காக எதுவுமே கிடைக்கவில்லை என்று சொல்லி விட முடியாது. அருகில் இருக்கும் கம்யூனிச யூகோஸ்லேவியா நாட்டவர் மீது எங்களுக்கு பொறாமை இருந்தது. காரணம், அவர்களது கம்யூனிஸ்ட் கட்சி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவும், டெனிம் ஜீன்ஸ் வாங்கவும் அனுமதித்திருந்தது. யூகோஸ்லேவியா நாட்டினர், மூன்று மடங்கு விலை வைத்து எங்களுக்கு டெனிம் ஜீன்ஸ் விற்று வந்தனர்.

பள்ளிக்கூடங்களில் நாம் எல்லோரும் சமர்த்துப் பிள்ளைகளாக நடந்து கொண்டோம். சல்யூட் அடிக்கவும், போராட்டக் கோஷம் எழுப்பவும் பழகி இருந்தோம். அதை யாரும் அதிசயமாக பார்ப்பதில்லை. “Budete gotovi! Vinagi gotov!” என்ற பல்கேரிய கோஷத்தை மொழிபெயர்த்தால் “நாங்கள் தயாராக இருக்கிறோம்!” என்று அர்த்தம் வரும். எதற்குத் தயாராக இருக்க வேண்டும்? அதைப் பற்றி யார் கவலைப் பட்டார்கள்?

பாடசாலை மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான சீருடை அணிந்து வர வேண்டும். முதலில் நீலம் பின்னர் சிவப்பு கழுத்துப் படி அணிந்திருந்தோம். நாம் விரும்பிய படி சீருடையில் சிறிது மாற்றம் செய்யவும் தடை இருந்தது. சக மனிதனை விட நான் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது தவறானது. எங்களுடைய இலட்சியமான, ஏழை பணக்காரர் இல்லாத நீதியான வருங்காலத்தை எண்ணிக் கொண்டோம்.

இருப்பினும், வர்க்கமில்லாத சமுதாயம் என்பது சிலநேரம் எழுத்தில் மட்டும் இருந்தது. நான் ஒரு தொழிலாளியை அல்லது விவசாயியை திருமணம் செய்வதற்கு எனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள். அதற்கான காரணம், அவர்கள் குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்பதற்காக அல்ல. வழமையாகவே, ஒரு பட்டதாரி மணமகனை தான் அவர்கள் தேடி இருப்பார்கள்.

பல்கேரியாவில் ஏற்கனவே பொருளாதார ரீதியான சமத்துவம் எட்டப் பட்டு விட்டது.ஏறக்குறைய எல்லோரும் சமமாக சம்பாதித்தனர். ஒரு கட்டிடத் தொழிலாளிக்கும், ஒரு பேராசிரியருக்கும் கிடைக்கும் சம்பளத்தில் வேறுபாடு இருக்காது. ஆனால், எல்லோருக்கும் தெரிந்த வித்தியாசம் ஒன்றிருந்தது. கட்சி முக்கியஸ்தர்கள் தனியாகக் கவனிக்கப் பட்டனர். புது வீட்டுக்கு காத்திருக்கும் பட்டியலில் அவர்களது பெயர் வராது. மருத்துவ சிகிச்சைகளும் விசேடமாக கிடைக்கும். ரஷ்யாவில் கட்சி முக்கியஸ்தர்கள் வாங்குவதற்கு தனியான விற்பனை அங்காடிகள் இருந்தன.

கட்சி முக்கியஸ்தர்கள் விசேட சலுகைகள் பெறுவது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், எங்களுக்கு எல்லாம் கிடைத்து வந்த படியால், சாதாரண மனிதர்களான நாமும் திருப்திப் பட்டோம். விளையாட்டுக் கழகங்கள், விடுமுறை விடுதிகள் என்று, சிறுவர்கள், இளைஞர்கள் பொழுதுபோக்குவதற்கான அனைத்தும் மிகக் குறைந்த விலையில் கிடைத்தன.

அநேகமான நிறுவனங்கள், மலையடிவாரங்கள், கடற்கரைகளில், தமக்கென சொந்தமாக சுற்றுலா விடுதிகள் வைத்திருந்தன. அந்த நிறுவனங்களில் வேலை செய்வோர், மிகக் குறைந்த செலவில் விடுமுறையை கழிக்க முடிந்தது. அது மட்டுமல்ல, வேலை நேரங்களில் கூட களைத்துப் போனால் சிறிது ஓய்வெடுக்கலாம். யாரும் அவர்களை தடி வைத்து விரட்டிக் கொண்டிருக்கவில்லை.

“சுத‌ந்திர‌ம் இன்மை, வ‌றுமை, எந் நேர‌மும் க‌வ‌னித்துக் கொண்டிருக்கும் புல‌னாய்வுத்துறை… அப்ப‌டியான‌ ஒரு நாட்டில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌தையிட்டு வேத‌னைப் ப‌டுகிறேன்.” இப்ப‌டிக் கூறினான் என‌து ட‌ச்சு காத‌ல‌ன் ஃப்ராங்.

“நிறுத்து!” நான் எரிச்ச‌லுட‌ன் க‌த்தினேன். இத்த‌கைய‌‌ க‌றுப்பு – வெள்ளைப் ப‌ட‌ங்க‌ளை போதுமான‌ அள‌வு பார்த்து விட்டேன். என‌து இள‌மைக் கால‌ம் இனிதாக‌ அமைந்திருந்த‌து. நான் ஒரு நாள் கூட‌ வ‌றுமையில் வாழ்வ‌தாக‌ உண‌ர‌வில்லை. அத்துட‌ன் எந்த‌வொரு பாதுகாப்பு அதிகாரியும் எங்க‌ளை எந்த‌ நேர‌மும் க‌வ‌னித்துக் கொண்டிருக்க‌வில்லை.

ஏதோ நீங்க‌ள் சுத‌ந்திர‌மாக‌ வாழ்கிறீர்க‌ள் போலும். எத்த‌னை ஆயிர‌ம் க‌மெராக்க‌ள் உள‌வு பார்க்கின்ற‌ன‌? NSA உங்க‌ள் மின்ன‌ஞ்ச‌ல், குறுஞ்செய்திக‌ளை வாசிக்கின்ற‌ன‌. உன்னை மாதிரி ந‌ல்லொழுக்க‌ம் மிக்க‌‌ குடிம‌க்க‌ளை உள‌வு பார்க்கும் புல‌னாய்வுத்துறை செய்வ‌தில் நூற்றில் ஒரு ப‌ங்கு கூட‌ எங்க‌ள் நாட்டில் ந‌ட‌க்க‌வில்லை.”

மேற்கத்திய நாட்டவர்கள் சர்வாதிகாரம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது என்னை ஆச்சரியப் படுத்தியது. எனது கம்யூனிச இளம்பருவக் காலங்கள் இனிமையானவை. இன்னும் சொன்னால், “எனது இளம்பருவத்தை சுதந்திர மேற்குலகில் கழிக்கவில்லையே” என்று நான் ஒருபோதும் கவலைப் பட்டதில்லை.

தங்கள் வாழ்க்கையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் பைத்தியம் பிடித்தலையும் நெதர்லாந்து இளைஞர்களை பார்த்தாலே போதும். அளவு கடந்த தெரிவுச் சுதந்திரம் அவர்களை எந்த முடிவுக்கும் வர விடாமல் தடுக்கிறது. அத்துடன் மன உளைச்சலும் உண்டாகிறது.

இலட்சக் கணக்கான டச்சுக் காரர்கள் மனஉளைச்சலால் பாதிக்கப் பட்டு அதற்காக மருந்து (Antidepressants) குடிக்கிறார்கள் என்பதை முதல் தடவையாக கேள்விப் பட்ட நேரம், முதலில் அது ஒரு ஜோக் என்று நினைத்தேன். ஒரு மில்லியன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மன உளைச்சல் தடுப்பு மருந்துக் குளிசையை உபயோகிக்கிறார்கள்!

மேற்குலக மன உளைச்சல் தடுப்புக் குளிசை விழுங்கிகள் எல்லாம், “நாங்கள் கம்யூனிச சர்வாதிகாரத்திற்குள் வாழ்ந்த படியால் மகிழ்ச்சியை காணாதவர்கள்” என்று நினைத்துக் கொள்கிறார்கள்! நல்லது, நாங்கள் எந்தக் காலத்திலும் உங்களைப் போல மகிழ்ச்சியை மருந்துக் குளிசையாக வாங்கிக் குடிக்கவில்லை.

நாங்கள் மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அதைவிட அதிகமாக மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள் என்பது புரிகின்றது. முதலாளித்துவம் சிறந்தது என்றும், எங்களது நாட்டில் எல்லாமே நாசமாகப் போனவை என்று நினைத்துக் கொண்டிருந்தீர்கள்.

“முன்னாள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த மிகப் பெரிய வறுமையை பார்த்தால் என்ன சொல்லத் தோன்றும்.” என்று சொன்னான் பிராங்.

ஒரு நாட்டில் எல்லோரும் வறுமையில் வாழ்ந்தால் யார் அதை உணரப் போகிறார்கள்? நம்பினால் நம்புங்கள். நான் எந்தக் காலத்திலும் வறுமையை உணரவில்லை. எங்களுக்கு போதுமான அளவு உணவு கிடைத்து வந்தது. பெரும்பாலானவர்கள் கோடைகால விடுமுறையை கழிப்பதற்காக இன்னொரு வீடு வைத்திருந்தார்கள். எல்லோரும் கருங்கடல் பகுதி கடற்கரைக்கு சுற்றுலா சென்று வந்தனர்.

எந்தவொரு தருணத்திலும் எங்கள் நாட்டில் காசில்லாதவர்களுக்கு உணவளிக்க கஞ்சித் தொட்டி இருக்கவில்லை. வேலையிழந்தாலும் அரசு அவர்களுக்கு இன்னொரு இடத்தில் வேலை எடுத்துக் கொடுத்தது.

“இது தான் பிரச்சினையே,” என்றான் பிராங். “அரசு மக்களை பார்த்துக் கொள்ளலாம். ஆனால், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு இருக்காது தானே?”

எங்கள் நாட்டில் இருந்தது. இது பற்றி மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான நகைச்சுவைத் துணுக்கு உலாவியது: “ஒவ்வொரு தொழிலகத்திலும் மூன்று பேரை வேலைக்கு போட வேண்டும். வேலை செய்ய ஒருவர். அதை மேற்பார்வை பார்க்க மற்றவர். மூன்றாவது நபர் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கி விடுவார்.”

பிராங் புருவத்தை உயர்த்திக் கேட்டான்: “அப்படி எல்லாம் செயல்பட வைக்க முடியுமா?”

“நிச்சயமாக செயற்படுத்த முடிந்தது. பெரும்பாலானவர்கள் தமது வேலையில் திருப்தி கண்டனர். அத்துடன் வேலை நேரத்தில் வெளியே சென்று, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் நேரம் ஒதுக்கினார்கள். அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் கடையில் உள்ள பொருட்கள் எந்த நேரத்திலும் விற்று முடிந்து விடலாம். நேரத்திற்கு சென்று வாங்கி வைத்து விட வேண்டும்.”

“அப்படிப் பார்த்தாலும் அது நல்லதில்லை தானே? நீ ஏதாவது வாங்கப் போனால், அது அங்கே இருக்காது?” – பிராங்

நிச்சயமாக, அது நல்லதில்லை தான். ஒரு பொருளை திரும்பவும் எப்போது விற்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரருடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும். பண்டமாற்று பொருளாதாரம் சிறப்பாக இயங்கியதால், யாரும் பற்றாக்குறையுடன் வாழவில்லை.

எனது வாழ்க்கையில் முதல் தடவையாக நெதர்லாந்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றைக் கண்டவுடன் வாயடைத்துப் போனேன். பத்து வகையான அரிசி, ஏழு வகையான சீனி, எட்டு வகையான கழிவறைக் கடதாசிகள். எந்த நேரமும் சிரித்துக் கொண்டிருக்கும் விற்பனையாளர்களை கண்டவுடன் மிகப்பெரிய கலாச்சார அதிர்ச்சி உண்டானது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாளர்கள் சிரிக்க மாட்டார்கள். எந்த நேரமும் முறைத்துப் பார்ப்பார்கள். நாங்கள் வாங்கத் தானே வந்திருக்கிறோம்? களவெடுக்கப் போகிறோமா? கொஞ்சம் சிரிக்கலாம் தானே? அதற்கு மாறாக மேற்கத்திய நாடுகளில் செயற்கையாக சிரிக்கிறார்கள்.

ஒரு தடவை அமெரிக்கா சென்ற நேரம் வாடிக்கையாளர்களை “How are you today?” என்று நலம் விசாரிப்பதை பார்த்தேன். என்னவோ எங்கள் சுகநலம் குறித்து அவர்களுக்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அதுவும் நடிப்பு தானே?

நெதர்லாந்து வந்த பின்னர் தான், நாம் ஒருவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசவும் முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். டச்சுக்காரர்கள் எல்லாவற்றையும் டயரியில் குறித்து வைக்கும் வழக்கத்தை கண்டேன். இதை எனது அம்மாவுக்கு சொல்லி புரிய வைக்க முடியவில்லை.

“அப்படியா? டச்சுக்காரர்கள் எல்லாவற்றையும் டயரியில் எழுதி வைப்பார்களா?”

“ஆமாம் அம்மா, சந்திப்பதற்கு முன்னர் அதை ஒரு டயரியில் குறித்துக் கொள்வார்கள். நினைத்த நேரத்தில் யார் வீட்டுக்கும் போக முடியாது. அவர்கள் ரோபோ மாதிரி இயங்குகிறார்கள். எல்லாற்றையும் முன்கூட்டியே திட்டமிடுவார்கள். மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமென்று மருந்து வாங்கிக் குடிப்பார்கள். இயற்கையை காசு கொடுத்து அனுபவிப்பார்கள்.”

இந்தக் கதை எல்லாம் கேட்டால் அம்மாவின் மண்டை விறைத்து விடும் என்பது தெரியும். வேறு வழியில்லை. நானும் சொல்லியே ஆக வேண்டும். முதல் தடவையாக எனது துணைவர் பிராங் மணல் திட்டுக்கு போவதற்கு டிக்கட் வாங்கியதைக் கண்டு ஆச்சரியப் பட்டேன்.

“நாங்கள் இயற்கையை தேடித் தானே போகிறோம்?”
“ஆம்”
“அதற்கு ஏன் காசு?”
“மணல் திட்டில் நடப்பதற்கு காசு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்டம் கட்ட வேண்டும்.”

ம்ஹ்ம்… இயற்கையை அனுபவிக்க காசு கொடுக்காமல் சென்றால் தண்டப் பணம் கட்ட வேண்டுமாம். எனது பல்கேரிய மண்டைக்கு இது புரியவே இல்லை.

எமக்கு இடையில் பெருமளவு கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், எமது இல் வாழ்வில் எந்த இடையூறும் இருக்கவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டி இருந்தது. என்னால் முடிந்தளவு விளக்க முயற்சித்தேன். நாங்கள் ஒரு நாளும் சர்வாதிகாரத்தின் கீழ் அல்லல் படவில்லை என்ற உண்மையை அவனுக்கு உணர வைக்க வேண்டி இருந்தது.

முதலாளித்துவத்திற்கு எதிரான போரில் கம்யூனிசத்தின் வெற்றியை கொண்டாடும் அணிவகுப்புகளில் கலந்து கொண்டு கையசைத்து வந்தோம். நிச்சயமாக, நாங்கள் இன்னும் வெல்லவில்லை. பனிப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருப்பினும், என்றோ ஒரு நாள் நாங்கள் வெல்வோம் என்று நம்பினோம்.

பாடசாலைகளில் எமக்கு துப்பாக்கியால் சுடுவதற்கு கற்றுக் கொடுத்தார்கள். அணுகுண்டு வெடித்தால் பதுங்குகுழிக்கு செல்வது எப்படி என்று பழக்கினார்கள். ஏனென்றால், எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. அமெரிக்கர்களை நம்ப முடியாது.

எதிரிகள் எங்களது கம்யூனிச சொர்க்கத்தை அழிக்கும் நோக்கில் எந்நேரமும் படையெடுக்கலாம். தாய்நாட்டை பாதுகாப்பதற்காக போரிட வேண்டி இருக்கும். எதிரிகள் எமது பொன்னான கம்யூனிச இலட்சியங்களை அழிக்க விரும்பினார்கள். அவர்கள் சமத்துவத்தில் நம்பிக்கை அற்றவர்கள்.

எமது சமுதாயம் பூரணத்துவம் அடைந்தது என்று சொல்லவில்லை. ஆனால், பூர்த்தி செய்ய முயற்சித்தார்கள். எப்போதாவது ஒரு தடவை விவசாய விளைச்சல் குறைவடைந்தால், பத்திரிகையில் அமோக விளைச்சல் என்று மிகைப் படுத்தி எழுதினார்கள். (இது ஒரு உளவியல் ஊக்குவிப்பு. பரீட்சையில் தோற்ற மாணவர்களின் மனம் தளர விடாமல் பாராட்டி படிக்க வைப்பது போன்றது.)

நாம் கையில் கிடைக்கும் குறைந்தளவு உபகரணங்களை கொண்டு திருத்தவும், உருவாக்கவும் கற்றுக் கொண்டோம். மேற்குலகை விட, கிழக்கு ஐரோப்பாவில் தான் அதிகளவு கண்டுபிடிப்பாளர்கள் இருந்தார்கள். இதற்காக நான் பந்தயம் கட்டுவேன். உதாரணத்திற்கு, மேற்கத்திய சமையலறையில் ஏதாவதொன்று குறைந்தாலும் சமைக்கத் தெரியாமல் தவிப்பார்கள். நாங்களோ இருப்பதை பாவித்து புதியதொரு உணவு வகையை உருவாக்கி இருப்போம்.

***

ம்யூனிச சமூக அமைப்பில் முதலாளித்துவ சிந்தனை இல்லாமல் இல்லை. சோஷலிச நாட்டில் சந்தைப் பொருளாதாரம் இருக்கவில்லை என்று யார் சொன்னார்கள்? புதிய கார் வாங்க வேண்டுமென்றால், பதிவு செய்து விட்டு வருடக் கணக்கில் (5-10 வருடங்கள்) காத்திருக்க வேண்டி இருந்தது.

உங்களால் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்றால், இருக்கவே இருக்கிறது பழைய கார். யாராவது பாவித்த ஒரு கார் வாங்கி ஓடலாம். சிலநேரம் பழைய காரின் விலை, புதிய காரை விட அதிகமாக இருக்கும். அதாவது “கேள்வி – வழங்கல்” முறையில் இயங்கும் சந்தைப் பொருளாதாரம்.

சோவியத் யூனியனில் சந்தை இன்னும் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்கும் சந்தை பெருந்தெருக்களின் ஓரத்திலேயே இருந்தது. கோர்பசேவ் பதவிக்கு வரும் முன்னரே அங்கு தனியார் துறை இருந்தது. கம்யூனிச சமூகத்தில் அந்தளவு நெளிவு சுளிவுகள் இருந்தன.

பொருட்கள் விரைவில் பழுதடைவதா அல்லது தட்டுப்பாடு நிலவுவதா? பொருளாதாரத்தில் எது மிக மோசமானது என்பது எமக்குத் தெரியாது. திட்டமிட்ட பொருளாதாரத்தில் அடிக்கடி பொருட்களுக்கு தட்டுப்பாடு வருவதை தவிர்க்க முடியாது. நுகர்வோரின் தேவையை முன்கூட்டியே அறிந்து செயற்படுவதற்கு பொருளியல் அறிஞர்கள் முயற்சித்தார்கள். ஆனால், அது எப்போதும் இலகுவானதல்ல.

கம்யூனிச காலத்தில் அது ஒரு தவறாக இருந்தது. எல்லா இடங்களிலும் தையல் மெஷின் விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், பிறகு ஊசி வாங்கக் கிடைக்காது என்பது மாதிரி. திருத்த வேலை செய்வதற்கு சில பகுதிகளை வாங்கிப் பொருத்த வேண்டி இருக்கும். ஆனால், அது கடையில் இருக்காது. நெதர்லாந்து வந்த பின்னர், “நீங்களே செய்து பாருங்கள்” (Do it yourself) கடைக்கு சென்று பார்த்தேன். அங்கே எல்லாம் தயார் நிலையில் பொருத்தக் கூடிய உபகரணங்களாக இருந்தன. அதெப்படி, நாங்களாகவே செய்து கொள்வதாகும்?

முதலாளித்துவமா, அல்லது கம்யூனிசமா, மனிதர்களின் படைப்புத் திறனை வளர்க்கிறது என்ற பட்டிமன்ற விவாதத்தில், ஏற்கனவே கம்யூனிசமே வென்று விட்டது. பற்றாக்குறை நிலவும் பொழுது, மனிதர்கள் தாமாகவே சிலவற்றை கண்டுபிடிக்கிறார்கள். ஒரு தடவை எமக்கு புல்வெட்டும் கருவி தேவைப் பட்டது.

நிச்சயமாக அதற்கும் தட்டுப்பாடு தான். எனது அப்பா ஒரு வேலை செய்தார். நான் குழந்தையாக இருந்த நேரம் பாவித்த தள்ளுவண்டியின் அடிப்பாகத்தையும், பழைய சலவை இயந்திரத்தின் மோட்டாரையும் இணைத்து ஒன்றை உருவாக்கி விட்டார். இருபது வருடங்களுக்குப் பிறகும் அந்தப் பொருள் நன்றாக வேலை செய்கிறது.

சில விடயங்களை சொல்லிப் புரிய வைக்க முடியாது. இரட்டைத் தொலைபேசி இணைப்பு (Duplex line) அதில் ஒன்று. (ஒரே இணைப்பு இரண்டு வீடுகளுக்கு செல்லும்) நாங்கள் தொலைபேசினால் பக்கத்து வீட்டுக்காரர் பேச முடியாது. எனது சகோதரி மணித்தியாலக் கணக்கில் தனது காதலனுடன் வம்பளந்து கொண்டிருப்பாள். எரிச்சலில் மேல் வீட்டுக்காரி தொம் தொம் என்று நிலத்தில் குத்துவாள். மணித்தியாலக் கணக்காக வம்பளந்து கொண்டிருக்க அவளுக்கும் ஒரு காதலன் இருந்திருக்கலாம்.

பக்கத்து வீட்டுக்காரர் அறுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எமக்கு தொலைபேசி பாவிக்க வேண்டி இருந்தால் ஒரு வேலை செய்வோம். இரகசியமாக சென்று Duplex பெட்டியில் குத்தி விட்டால் இணைப்பு துண்டிக்கப் பட்டு விடும். நிச்சயமாக, அன்று நாடு முழுவதும் இணைப்பு திடீரென துண்டிக்கப் படுவது அடிக்கடி நடக்கும்.

கம்யூனிச காலகட்டத்தில் வாழ்ந்த எல்லா தலைமுறைகளிலும், நாங்கள் வாழ்ந்த காலம் தான் சிறப்பானது. பொது இடத்தில் யாராவது கம்யூனிஸ்ட் கட்சியை குறை சொன்னால், அதிக பட்சம் அவரது உத்தியோகத்திற்கு ஏதாவது பிரச்சினை வரலாம். ஆனால், ஜெயிலுக்கு எல்லாம் போக வேண்டி வராது. அரசியல் கைதிகளுக்கான மீள் படிப்பு முகாம்கள் எல்லாம் கடந்த காலம். அதெல்லாம் முந்தி இருந்தன. சிலநேரம், ஒருவர் அமெரிக்க டாலர் சின்னம் வரைந்திருந்தால் கூட சந்தேகிக்கப் பட்ட காலம் ஒன்று இருந்தது.

கம்யூனிசத்தின் ஆரம்ப காலங்களில் சில அற்பமான விடயங்களையும் அவதானித்தார்கள். எனது அம்மா குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு வெளியே போனால், முழங்காலில் கரும் புள்ளி குத்தி விடுவார்கள். அதே மாதிரி,அப்பா இறுக்கமான காற்சட்டை அணிந்து சென்றால் இடுப்புக்கு கீழே கத்திரிக்கோலால் வெட்டி விடுவார்கள்.

அனேகமாக இப்படியான வேலைகளை செய்வது பொலிஸ்காரர்கள் அல்ல. சாதாரண பொது மக்கள். அதற்கென கையில் சிவப்புப் பட்டி அணிந்த தொண்டர்கள் இருந்தனர். இறுக்கமாக காற்சட்டை அணிவது முதலாளித்துவ நாகரிகம். ஆகையினால் அதைக் கண்டால் வெட்டி விட்டார்கள்.

ஒரு தலைமுறைக்கு பிறகு சமுதாயம் மாறி விட்டது. அப்போதும், நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசலாம், செய்யலாம் என்று அர்த்தம் அல்ல. இருப்பினும், நாம் எல்லோரும் சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் உணர்ந்தோம். எல்லோருக்கும் வேலை இருந்தது. பள்ளிக்கூடங்கள், மருத்துவ வசதி என்பன இலவசமாக கிடைத்தன.

பெரும்பாலான மக்கள் போதுமான அளவு சம்பாதித்தார்கள். அத்துடன் விடுமுறைக்காக கொஞ்சப் பணம் சேமித்து வந்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய விடுப்பும், இரண்டாம் வருடம் சம்பளம் இல்லாத விடுப்பும் கிடைத்தது.

பெரிய நகரங்களில் உள்ள தெருக்கள் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் கழுவித் துப்பரவாக்கப் பட்டன. பூங்காக்கள் அழகாகவும், பசுமையாகவும் இருந்தன. எங்கேயும் நாசவேலைகள் நடக்கவில்லை. போதைவஸ்து பாவனை இருக்கவில்லை. அத்துடன் சமூகத்தில் பதற்றமும் நிலவவில்லை.

Dansen op de Muur நூலின் ஆசிரியர் – மரியா

பள்ளிக்கூடங்களில் மனித இன வரலாற்றின் வித்தியாசமான காலகட்டங்கள் பற்றி சொல்லித் தந்தார்கள். அந்த அடிப்படையில், இப்போது நாங்கள் “அபிவிருத்தி அடைந்த சோஷலிச சமுதாயத்தில்” வாழ்வதாக சொன்னார்கள். இப்போதுள்ள குறைபாடுகள் எல்லாம், கம்யூனிச காலகட்டத்தை அடையும் பொழுது தான் பூர்த்தியாக்கப் படும் என்றார்கள். அப்போது மனிதர்களின் தேவைக்கு ஏற்றவாறு எல்லாம் கிடைப்பதுடன், கடைகளில் பணம் இல்லாமல் எதுவும் வாங்கலாம் என்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் சொல்வதைப் போன்று நடக்குமாக இருந்தால் அழகாகத் தானிருக்கும்.

நேர்மையாகத் தான் சொல்கிறேன். அமெரிக்காவில் நூறில் ஒருவர் சிறைக் கைதியாக இருந்த நேரம், எங்கள் நாட்டில் கிரிமினல் குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடந்தன. அதற்குக் காரணம், சர்வாதிகாரமானது அயோக்கியர்களையும் அடிபணிய வைத்திருக்கலாம். சிலநேரம், யாருமே பணக்காரர் இல்லாத ஒரு தேசத்தில் திருடுவதற்கு எதுவும் இல்லை என்று திருடர்கள் நினைத்திருக்கலாம்.

விடுமுறையை கழிப்பதற்கு கருங்கடல் ஓரம் நிறைய கம்யூனிச இளைஞர் விடுதிகள் இருந்தன. அங்கு தங்குவது மிகவும் மலிவானது. ஒரேயொரு குறை என்னவெனில், விடியற் காலையில் எழுந்து நாட்டுப் பற்றுப் பாடல்கள் பாட வேண்டும். அணிவகுக்க வேண்டும். சில பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

ஆனால், மாலை நேரம் நெருப்புத் தணலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் நேரம், எவராலும் காதல் உணர்வை கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான், எனது பெற்றோர் என்னை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. நான் அவர்களது கடும் கண்காணிப்பில் இருந்து தப்புவதுடன் கர்ப்பமாக வீடு வந்து சேருவேன் என்று அஞ்சினார்கள்.

ஆகையினால், நான் “பிரிகேட்” பணி செய்ய செல்லும் காலங்களில் அரும்பும்   காதல்களுடன் திருப்திப் பட வேண்டும். பிரிகேட் பணிக் காலத்தில் நாங்கள் வயல்களில் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். நிச்சயமாக, அது விடுமுறை அல்ல. ஆனால், எனக்கு அப்படித் தெரிந்தது. ஆளரவம் இல்லாத மூலையில் ஒரு இளைஞனும், யுவதியும் செய்யும் குறும்புகளை மேற்பார்வையாளர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்களும் இளம் வயதினர் தானே.

அப்படியான பிரிகேட் போவதற்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு வரும். அதற்கு சமூகமளிப்பது கட்டாயம் என்று, மீறினால் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எழுதப் பட்டிருக்கும். என்ன நடவடிக்கை என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், தொண்டர் படையணிக்கு ஒருவர் தவறாமல் எல்லோரும் நேரத்திற்கு வந்து விடுவார்கள்.

எல்லா கம்யூனிச நாடுகளிலும் இளைஞர்கள் விவசாயிகளுக்கு உதவி செய்வது வழக்கம். போலந்து உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த படியால், அங்கே ஒவ்வொரு வருடமும் உருளைக்கிழங்கு தோண்டுவது தான் வேலை. பல்கேரியாவில் வித்தியாசம். திராட்சைப் பழம், செரி பழம், அல்லது ஆப்பிள் பிடுங்க வேண்டி இருக்கும். கடலை பறிப்பது  என்றால் எனக்கு மிகுந்த வெறுப்பு. நிலத்தை தோண்டி விரல்கள் கறுத்து விடும். முதுகு வலி வரும். அத்துடன் மழை பெய்தால் அந்த மண் சேறாகி விடும்.

அதை விட மோசமான விடயம், குறிப்பிட்ட அளவு செய்து முடிக்கவில்லை என்றால், மேற்பார்வையாளர் எல்லோருக்கும் முன்னால் திட்டுவார். அதற்காக நான் ஒரு வேலை செய்வேன். வாளியின் அடிப்பகுதியில் கொஞ்சம் மண் போட்டு வைத்திருப்பேன். நிறுக்கும் பொழுது கடலையை விட மண்ணின் நிறை அதிகமாக இருக்கும்.

நமது காவியத்திற்குள் யாராவது வந்து குழப்பி விடுவார்களா? ஆம், சில நேரம் கட்சி முக்கியஸ்தர்கள் விஜயம் செய்வார்கள். அந்த நேரம் பாதையை கூட்டி, அருகில் வளர்ந்திருக்கும் புற்களை வெட்ட வேண்டும். ஊத்தையான குப்பை வாளியை அகற்ற சொன்னார்கள். எங்கே கொண்டு போய் வைப்பது என்று மேற்பார்வையாளருக்கு தெரியவில்லை. அந்த இடம் கூடாது, இங்கே வேண்டாம் என்று சொல்லி சொல்லி ஆறு தடவைகளுக்கு மேல் அலைக்கழிக்கப் பட்டோம். கடைசியில் அது முதலில் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தது.

அப்படியான தருணத்தில் அங்கு வருகை தரும் அரசியல்வாதி பற்றி நமக்குள் பேசிக் கொள்வோம். ஆனால், பொதுவாக சொன்னால், நாங்கள் ஒரு நாளும் அரசியல் பற்றிப் பேசுவதில்லை. இந்த கம்யூனிச தலைவர்கள் ஐந்தாண்டு திட்டத்தில் என்னவெல்லாம் புனைந்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து நாங்கள் கவலைப் படவில்லை.

எங்களுடைய ஆர்வம், கவலை எல்லாம் எதிர்ப் பாலினத்தவர் பற்றியதாகவே இருந்தது. அவர்களது நடையுடை, தோற்றம் பற்றியதாகவே இருந்தது. ஆண், பெண் இனக்கவர்ச்சி பற்றியே அதிக அக்கறை கொண்டோம்.

யாரையாவது கவரும் வகையில் என்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டி இருந்தது. பிரபல அமெரிக்க பாடகி Tina Turner மாதிரி முடி அலங்காரம் அந்தக் காலத்து நாகரிகம். இதெல்லாம் பள்ளிக்கூடத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், வெளியில் யாரும் என்னைக் கேட்க முடியாது.

அந்தக் முடி அலங்காரம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக, அப்பாவின் ஷேவிங் கிறீம் எடுத்து பூசிக் கொள்வேன். ஏன் தனது ஷேவிங் கிறீம் அடிக்கடி முடிகிறது என்று அப்பாவுக்கு அதிசயமாக இருக்கும். அந்தக் காலங்களில் தலைக்கு வைக்கும் ஜெல் கடைகளில் விற்பதில்லை. ஆகவே, எனக்கும் வேறு வழியில்லை. ஒரேயொரு குறை. மழை பெய்தால் எல்லாம் கரைந்து வழிந்து விடும்.

“உங்கள் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை இருக்கவில்லை. அது எப்படி சாத்தியமானது?” எனது துணைவர் பிராங் இடையிடையே இப்படி விசித்திரமான கேள்விகள் கேட்பார்.

இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன். நிறையப் பேரை பிடித்து அர்த்தமில்லாத வேலைகளையும் செய்ய வைத்தால் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தீர்ந்து விடும். கடுமையாக வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்து சாதனை படைக்கிறார்கள் என்று பத்திரிகைகளே எழுதுகின்றன.

நிறையப் பேர் தாம் வேலை செய்யும் தொழிலகங்களில் உள்ள பொருட்களை கொண்டு சென்று அயலவருடன் பண்டமாற்று செய்து கொள்வார்கள். அதனால் சிலநேரம் உற்பத்தி தடைப் படும். அதற்காக யாரையும் பணி நீக்கம் செய்ய முடியாது. செய்வதற்கு ஒரு வேலையும் இல்லையென்றாலும் சம்பளம் கொடுத்தாக வேண்டும். இது தான் கம்யூனிசத்தின் பொருளாதார சுழற்சி.

மேற்குலக பொருளாதாரம் முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை கொண்டுள்ளது :
உற்பத்தி குறைவு : தொலைந்து போ!
கேள்வி அதிகரிக்கிறது : உற்பத்தி முழுவதையும் சீனாவுக்கு கொண்டு போ!
சீனாவில் செலவு அதிகம் : உற்பத்தியை மலேசியாவுக்கு இடம் மாற்று!
எதிர்ப்புப் போராட்டம் : இன்னமும் உயிரோடு இருக்கிறாயா?
உச்ச கட்ட சம்பளம் : வங்கியில் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்று சொல்லு!
பொருளாதார நெருக்கடி : நெருக்கடிக்கு காரணமான வங்கிகளுக்கு ஆதரவளி. செலவை மக்கள் தலையில் கட்டி விடு!

உண்மையை சொன்னால், எந்த பொருளாதார சுழற்சி நல்லது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கம்யூனிசத்தில் மக்களுக்கு பெருமளவு திருப்தி கிடைத்தது. மேற்குலகில் மரணப் போட்டி நிலவுகிறது. இரும்புத் திரைக்குப் பின்னால் போட்டி என்ற சொல்லை யாரும் கேள்விப் பட்டிருக்கவில்லை.

விளம்பரம் ஒரு அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரம். அது மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து மேலதிக பணத்தை எடுக்கிறது. எங்கள் நாட்டில் விளம்பரங்களால் மூழ்கடிக்கப் படாத படியால் தொடர்ந்து புதிய பொருட்களை வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப் படவில்லை. அதனால் பல விடயங்கள் இலகுவாக நடந்தன.

உன்னுடைய வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வேலை செய்யவில்லையா? நல்லது. நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடலாம். ஒரு கார் வாங்குவதற்காக பதிவு செய்து விட்டு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டுமா? அது பற்றி கவலைப் படாமல் வாழ்க்கையில் நல்ல பக்கத்தை பாருங்கள். “வாகன வரி கட்டத் தேவையில்லை. காற்றுப் போன டயர் மாற்றத் தேவையில்லை. சர்விஸ் செலவு இல்லை…”

மொத்தத்தில் நிறைய நேரம் மிச்சம் பிடிக்கலாம். கம்யூனிச காலகட்டத்தில் “மாற்றி யோசிக்க” கற்றுக் கொண்டோம். மேற்குலக பொருளாசை தரும் போதைக்குள் மூழ்குவதற்கு முன்னர் இது ஒரு நல்ல பயிற்சி.

(தொடரும்)
நன்றி : தோழர் கலையரசன், கலையகம்


 

பயிர் இன்ஸ்யூரன்ஸ் பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை !

0

பயிர் இன்ஸ்யூரன்ஸ் : பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை !

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் : டிசம்பர் 08 2017,  வெள்ளிக் கிழமை,
நேரம் : காலை 10 மணி, 
இடம் : பனகல் கட்டிடம், தஞ்சை.

பங்கேற்போர் : மக்கள் அதிகாரம், விவசாய சங்கத் தலைவர்கள்.

அனைவரும் பங்கேற்பீர் !!

ன்பார்ந்த விவசாயிகளே!

விவசாயம் லாபமீட்டும் தொழிலல்ல, மனித சமூகம் உயிர் வாழ்வதற்கான ஆதாரம் என்பதை உலகம் அறியும் இந்த ஆதாரத்தை அளிக்கும் விவசாயிகள் வறட்சி, வெள்ளம், விளைச்சல் வீழ்ச்சி, விலை வீழ்ச்சி, தண்ணீர் பற்றாக்குறை, கடன் தொல்லை என சொல்ல முடியா தொல்லைகளால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் தற்கொலையை நாடுகின்றனர். வாயாலே வடை சுட்டு, ஆட்சியைப் பிடித்த மோடி “விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம், நட்டத்தை ஈடுகட்ட புதிய பயிர்காப்பீட்டுத் திட்டம்” என வாய்சவடாலடித்தார்.

ஆனால், கோடிக்கணக்கான விவசாயிகளிடமிருந்தும், மத்திய மாநில அரசுகளின் கஜானாவிலிருந்தும், பல்லாயிரம் கோடி பணத்தைப் பிரிமியத் தொகையாகச் சுருட்டிக்கொண்ட பயிர் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யாமல் இழுத்தடிப்பது, நிராகரிப்பது என மோசடி செய்கின்றன.

மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகளைக் கைகழுவி விடுகின்றன. நாடு முழுவதும் தமிழகம் முதல் குஜராத் வரை விவசாயிகள் போராடுகின்றனர். தமிழக டெல்டா விவசாயிகள் தலைமடை திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் தொடங்கி, கடைமடை வேதாரண்யம், நாகை வரை அன்றாடம் போராடுகின்றனர்.

இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு சில இடங்களில், ஒரு சிலருக்கு இழப்பீடு வழங்கிவிட்டு சாக்கு போக்கு காட்டி ஏமாற்றுகின்றன. நட்டமடைந்த எல்லா விவசாயிகளும் இன்ஸ்யூரன்ஸ் மூலம் பயன்பெறுவதில்லை என்பதே நடைமுறை உண்மை.

பயிர் இன்ஸ்யூரன்ஸ் யாருக்குலாபம்?

வட்டிக்கு விடுவது, சீட்டு பிடிப்பது, லாட்டரி சீட்டு நடத்துவது போல் இன்ஸ்யூரன்ஸ், லாபம் சம்பாதிக்க முதலாளிகள் நடத்தும் தொழில். பயிர் இன்ஸ்யூரன்ஸ் தொழிலில் இந்தியாவின் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் ஒன்பது நிறுவனங்கள் டாடா, அம்பானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள்.

மோட்டார் – வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு இவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரும் தொழிலாக பயிர் இன்ஸ்யூரன்ஸ் வளர்ந்துள்ளது. தனியார் முதலாளிகள் தங்கள் லாபத்தை அதிகரிக்க எல்லாவிதமான தில்லு முல்லு, பித்தலாட்டம் மோசடிகளில் ஈடுபடுவார்கள் என்பது உலகறிந்த உண்மை. அத்தகைய முதலாளிகளிடம் (அரசு உட்பட) விவசாயிகளின் பாதுகாப்பை ஒப்படைத்தால் என்ன நடக்கும்? அதுதான் இப்போது நடக்கிறது.

இந்தியாவில் தனியார்மயம் வேகமாகப் புகுத்தப்பட்ட பிறகு இன்ஸ்யூரன்ஸ் துறையில் தங்களை அனுமதிக்குமாறு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதன் விளைவாக அரசின் ஏகபோகமாக இருந்த இன்ஸ்யூரன்ஸ் துறை தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது.

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய மருத்துவ சேவையை தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது மட்டுமின்றி அரசு மருத்துவமனைகளிலும் இன்ஸ்யூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இன்று பல்லாயிரம் கோடி வரிப்பணத்தை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களும் தனியார் மருத்துவமனைகளும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். ஏழை எளிய மக்களே சரியான மருத்துவம் கிட்டாமல் சாகின்றனர்.

இதே போல்தான் பயிர் இன்ஸ்யூரன்ஸ் திட்டமும். ஒவ்வொருவரிடமும் பிரீமியம் தொகையை வசூலித்து கொண்டு “ஊர் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து விவசாயம் அழிந்தால்தான் நட்டஈடு தருவோம்” என்ற விதி எவ்வளவு பெரிய மோசடி என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

2016 – 17 ம் ஆண்டுக்கு இந்தியா முழுவதும் வசூலிக்கப்பட்ட பயிர் இன்ஸ்யூரன்ஸ் பிரிமியத்தொகை 22,437 கோடி ரூபாய். விவசாயிகளுக்கு வழங்க ஒத்துகொண்ட தொகை 8,087 கோடி வழங்கிய தொகையோ 714 கோடி. அதாவது 97 சதவீத மக்கள் பணத்தை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் ஏப்பம் விட்டு விட்டன. இதை விவசாயிகளுக்கு அரசே கொடுத்திருந்தால், 21,000 கோடி மிச்சம்.

எவ்வளவோ நலத்திட்டங்களுக்குச் செலவிடலாமே! குஜராத்தில் எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனங்கள் பயிர் காப்பீடு திட்டத்தில் மோசடி செய்துள்ளதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே, “பயிர் இன்ஸ்யூரன்ஸ்” முதலாளிகள் கொள்ளையடிக்கும் திட்டமேயன்றி விவசாயிகளை பாதுகாக்கும் திட்டம் அல்ல.

எதற்கு இந்த அரசாங்கம்?

கல்விக்குக்கடன், மருத்துவத்திற்கு விவசாயித்திற்கு இன்ஸ்யூரன்ஸ், காசு கொடுத்தால்தான் நல்ல குடிநீர்! குப்பை பொறுக்கி பிழைக்க முயன்றாலும் ஜி.எஸ்.டி வரி. அதாவது, அரசு மக்களுக்கு எதையும் செய்யாது. மக்கள் எதைச் செய்தாலும் அரசுக்குக் கப்பம் கட்ட வேண்டும் இதுதான் மோடி அரசின் கொள்கை. அரசுத்துறை வங்கிகளிலிருந்து பல இலட்சம் கோடி கடன் வாங்கி முதலாளிகள் ஏப்பம் விட்ட தொகையை வசூலிக்காமல் அந்த நட்டத்தை ஈடுகட்ட ஒன்றேகால் லட்சம் கோடி மக்கள் பணத்தை வங்கிகளுக்கு வழங்கி காப்பாற்றுகிறது மத்திய அரசு. இதுதான் மோடியின் திட்டம்.

இந்திய அரசியல் சட்டம் விவசாயத்தைக் காக்க வேண்டும் என ஆணையிடுகிறது. ஆனால், அரசு கைவிரிக்கிறது. எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் அகற்ற வேண்டும் என்கிறது சட்டம். அரசு, மக்களை மேலும் மேலும் போண்டியாக்கிறது. ஆக்சிஜன் இல்லாமல் உத்திரப் பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மடிந்தனர். கொலைகளும் தற்கொலைகளும் அன்றாடம் செய்தித்தாள்களை நிறைக்கின்றனர்.

மக்களிடம் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு இவற்றை அரசு செய்யாது, காப்பீடு செய்து கொள், காசு கொடுத்து வாங்கிக்கொள்! என்றால் இந்த அரசை ஏன் சுமக்க வேண்டும்? மக்களுக்கு எதிராகக் செயல்படும் இந்த அரசை நம்புவதால் என்ன பயன்?

விவசாயிகளே பயிர் இன்ஸ்யூரன்ஸ் என்பது ஒரு மாபெரும் மோசடி. எரியும் வீட்டில் இருப்பதையும் பிடுங்கும் அராஜகம், விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் முதல் கடமை. (அதாவது அரசின் கடமை) மலிவான விலையில் இடுபொருள், கட்டுப்படியான விலையில் கொள்முதல், இயற்கை இடரால் ஏற்படும் இழப்பு அனைத்தையும் அரசே முழுமையாக ஈடு செய்தல். இதுதான் விவசாயிகளைப் பாதுகாக்கும் உண்மையான காப்பீடு. இந்தக் கோரிக்கைக்காக ஒன்றிணைவோம்! போராடுவோம்! வென்றிடுவோம்!

மத்திய மாநில அரசுகளே!

  • பயிர் காப்பீடு மோசடியை உடனே கைவிடு !
  • மலிவான இடுபொருள், கட்டுபடியான விலையில் அரசே கொள்முதல் செய் !
  • விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் அனைத்திற்கும் பொறுப்பாகு !
  • அனைத்து விவசாயக்கடன்களையும் தள்ளுபடி செய் !
  • நட்டமடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரை கொடுக்க வேண்டிய பயிர் காப்பீட்டுத்தொகையை உடனே வழங்கு !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை – திருவாரூர் – நாகை மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 94431 88285 – 96263 52829 – 89037 36020.


 

ஹதியா – ஜி.எஸ்.டி. – தேசபக்தி : மாலன் பொங்குவது ஏன் ?

5

“பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா” – என்ற வசனம் இப்போது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, பத்திரிகையாளர் மாலனுக்குப் பொருந்தும். பொதுவாக ஊடக விவாதங்களில் மென்மையான குரலில் பா.ஜ.க.வுக்கு முட்டுக்கொடுக்கும் கலையை கடந்த சில ஆண்டுகளாக செய்து வந்ததில், ஒரு தொழில்முறை தேர்ச்சியை பெற்றுவிட்டார் மாலன்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது எந்த டி.வி.க்கு பேச போனாலும், தருமபுரி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த ஊர் முழுக்க, முழுக்க டிஜிட்டல் மயமாகிவிட்டது. பணமில்லா பரிவர்த்தனைக்குப் பழகிவிட்டது என்று மீண்டும், மீண்டும் உருப்போட்டுக் கொண்டிருந்தார்.

ஜல்லிக்கட்டு, டாஸ்மாக் போராட்டங்கள், இறைச்சிக்கு மாடு விற்கத் தடை, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., அனிதா தற்கொலை என சப்ஜெக்ட் எதுவானாலும் இண்டு, இடுக்குகளில் புகுந்து பா.ஜ.க.வையோ, அவர்களின் பினாமியான எடப்பாடி ஆட்சியையோ ஆதரிப்பதில் மாலன் ஒரு துறைசார்ந்த வல்லுனராக காட்சி தருவார்.

ஆனால், ரொம்ப நேரம் ஒத்த காலில் நின்றதால் கால் வலித்ததோ என்னவோ, இப்போதெல்லாம் நேரடியாக உடைத்துப் பேசத் தொடங்கிவிடுகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு மாலன் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

எதிர்வினை

நாத்திகம் பேசினீர்கள்
பக்தி செழித்தது
ஜாதியை ஒழிக்கப் புறப்பட்டீர்கள்
சங்கங்கள் வலுத்தன
தமிழ் முழங்கினீர்கள்
ஆங்கிலம் மழலையர் மொழியாச்சு
கணினிமயத்தை எதிர்த்தீர்கள்
கைகள் தோறும் ஒரு கணினி
மார்க்சீயம் பேசினீர்கள்
தரணி எங்கும் தாராளமயம்

தேசபக்தியை இகழ்கிறீர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறது

இதில், நாத்திகம், சாதி ஒழிப்பு, தமிழ்ப் பற்று, மார்க்சியம், தேசவிரோதம்… – இதையெல்லாம் ஒரு பக்கம் நிறுத்துகிறார் மாலன். இவை அவருக்குப் பிடிக்காத அயிட்டங்கள். அவர் எதிர் வரிசையில் நிறுத்துகிற ஆத்திகம், சாதிப்பற்று, தமிழ் வெறுப்பு, தாராளமயம், தேசபக்தி… இவை எல்லாம் அவருக்குப் பிடித்த அயிட்டங்கள். பிடித்தவை நாட்டில் வளர்கின்றன என்பது அவரது கண்டுபிடிப்பு.

அதற்கான ‘உரிமை’ அவருக்கு உள்ளது. ஆனால் பிடித்தவை வளர்வதற்குக் காரணமே பிடிக்காதவைதான் என்கிறார். எனினும், இந்த கண்டுபிடிப்புக்கு மாலன் காப்புரிமை கோர முடியாது. ஏனென்றால் நாட்டில் இந்துத்துவ சக்திகள் இத்தனை பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதில் கம்யூனிஸ்டுகளின் பங்கு என்ன என்ற தலைப்பில் தமிழ் இந்துவில் பத்திரிகையாளர் சமஸ் இதே டைப் ஆராய்ச்சியை ஏற்கெனவே செய்துவிட்டார். அந்த வகையில் மாலன் வண்டியில் ஏறியது கொஞ்சம் லேட்டுதான்.

எனினும் இவர்கள் சொல்ல வருவது என்ன? ‘முற்போக்கு சக்திகள் தீவிரமாக செயல்படாததன் விளைவுதான் மதவாதம் இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது. உங்கள் செயலற்ற தன்மைதான் அவர்கள் வளர்வதற்குக் காரணம். அதாவது அவர்கள் வளர்ந்திருப்பதற்கு நீங்கள்தான் காரணம்’

மதவாதம் வளரவும், தமிழ்ப்பற்று மங்கவும், சாதியவாதம் தலைதூக்கவும் யார் காரணம் என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்கள் யார் தரப்பில் இருந்து இந்த சிக்கலை அணுகுகிறார்கள் என்பதுதான் முக்கியம். ‘எல்லாம் உங்க நன்மைக்குதான் சார் சொல்றோம்’ என்று நைச்சியமாகப் பேசும் இவர்களுக்கு உண்மை என்னவென்று தெரியாதா?

தமிழ் அழிகிறது என்றால் அதற்குக் காரணம், ஆங்கில வழிக்கல்வி திணிக்கப்படுகிறது; அரசுப் பள்ளிகளில் தரமான தமிழ் வழிக்கல்வி வழங்கப்படவில்லை. முற்றுமுதலாக அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுகிறார்கள். ஆங்கில வழிக் கல்வியை வழங்கும் தனியார்ப் பள்ளிகள் எங்கும் நிறைந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை ஓர் இயல்புபோல மாற்றப்பட்டு மக்கள் மனங்கள் ஆங்கில வழிக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் மாலன் இதை எல்லாம் ஏற்கவில்லை. ‘இங்கிலீஸ் வளர்ந்ததுக்கு காரணம் நீங்க தமிழ் வாழ்கனு சொன்னதுதான்’ என்கிறார்.

இப்படியே, பக்தி வளர்ந்ததுக்கு நாத்திகம் பேசினதுதான் காரணம். சாதி சங்கம் வளர்ந்ததுக்கு சாதி ஒழிகன்னு சொன்னதுதான் காரணம்… என்று முதுகுப்பக்கத்தில் இருந்து முணகுகிறார். இது பின்நவீனத்துவ அறிஞர்களே செய்திடாத கட்டுடைப்பு. நாத்திகம் பேசினால் பக்தி எப்படி சார் செழிக்கும்? ‘ஆம்பளைக்கும், ஆம்பளைக்கும் புள்ளைப் பொறக்குமா? அய்யப்பன் பிறப்பு அறிவுக்கு எட்டுமா?’ன்னு திராவிடர் கழகம் கேட்டால், அதுக்குப் பதில் சொல்லுங்கள். ‘இன்னமும் எங்க ஊர்லயெல்லாம் ஆம்பளைக்கும், ஆம்பளைக்கும்தான் புள்ளைப் பொறக்குது’ என ஆதாரத்தைக் காட்டுங்கள். அதை விட்டுவிட்டு, இதெல்லாம் ஒரு பேச்சா?

டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் பக்தி என்னதான் டிஜிட்டல் வேடம் போட்டாலும், இராம. நாராயணன் வகை பக்திப் படங்களை இப்போது யாரும் எடுப்பதில்லை. பக்தி மணம் கமழும் பண்டிகை நாட்களில் கூட பட்டையைக் கிளப்பும் குத்துப் பாடல்களோ, படங்கள்தான் டிவி சானல்களின் டிஆர்பியை கூட்டுகிறது. இதுதான் திருவாளர் மாலன் வியந்தோதும் பக்தியின் உண்மை நிலை.

டீயை விட டீ கிளாஸ் சூடாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. உள்ளே இருக்கும் டீயின் சூட்டை டம்ளர் தனதாக்கிக்கொள்கிறது. மாலனும் அவ்வாறுதான். அவர் பா.ஜ.க.வுக்கோ, ஆளும் அ.தி.மு.க.வின் பா.ஜ.க. பிரிவுக்கோ ஓர் இன்னல் என்றால் உள்ளம் குமுறி மனதார பாதிக்கப்படுகிறார். அந்த வகையில் கேரளப் பெண் ஹதியா திருமண சிக்கலில் இப்போது மாலன் அதிரடி ஸ்டேட்மெண்ட் ஒன்றை எழுதியிருக்கிறார். அதையே ஊடக விவாதங்களிலும் பேசி வருகிறார்.

ஹதியா ஒரு 24 வயது பெண். அவருக்கு மதம் மாறும் உரிமையும், விரும்பிய துணையை தேர்வு செய்துகொள்ளும் உரிமையும் உண்டு. அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்தில் ஆஜராகி தான் விரும்பியே மதம் மாறினேன் என சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது இதில் கோர்ட் தலையிட்டு எப்படி திருமணத்தை ரத்து செய்ய முடியும்? எந்த சட்டப் புத்தகத்தின் உதவியுடன் இதை லவ் ஜிகாத் என நீதிமன்றம் அறிவிக்கிறது?

ஹதியாவின் கணவர் ஷபின் ஜஹான் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கு ஒரு சின்னஞ்சிறிய ஆதாரத்தைக் கூட இதுவரை காட்ட முடியவில்லை. அவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இருக்கிறார் என்பது எப்படி தீவிரவாத செயலாக இருக்க முடியும்? சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜரானவுடனேயே ஒரு ஆட்கொணர்வு மனு அதன் நோக்கத்தை பூர்த்தி செய்கிறது. ஆனால் இதில் நீதிமன்றம் வரம்பு மீறி தலையிட்டு ஷபின் ஜஹானின் ஃபேஸ்புக் பக்கத்தை எல்லாம் ஆராய்ச்சி செய்கிறது. இதை எல்லாம் கண்டுகொள்ளவே செய்யாத மாலன், ‘ஷபின் ஜஹான் சார்பாக கபில்சிபல் உள்ளிட்ட புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அவருக்கு கொடுக்கக்கூடிய அளவுக்கு பணம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?’ என்று கேட்கிறார்.

இந்த ஆபாசமான வாதத்தைதான் நீட் அனிதா விஷயத்திலும் கேட்டார்கள். மாலன் போன்றோர் தங்களைப் போன்றுதான் ஒட்டுமொத்த உலமும் குறுகலாக சிந்திக்கிறது என எண்ணிக் கொள்கின்றனர். ஜனநாயகம் மடிந்துவிடக்கூடாது என்று எண்ணுவோர் இன்னும் மிச்சமிருக்கின்றனர். ஹதியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் சக்திகள் வக்கீல் ஃபீஸ் கொடுத்தால் இவருக்கு என்ன பிரச்னை? ஷபின் ஜஹான் சார்ந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி செலவு செய்து வக்கீல் அமர்த்தினால் மாலனுக்கு என்ன சிக்கல்?

‘கேபியஸ் கார்பஸ் மனு விசாரணையில் இருக்கும்போது சம்பந்தப்பட்டவருக்கு நீதிமன்றம்தான் கார்டியனாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஹதியா எப்படி நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் திருமணம் செய்துகொள்ளலாம்?’ எனக் கேட்கிறார் மாலன். நீதிமன்றத்துக்கு தகவல்தான் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டியது இல்லை. அப்படியே தகவல் சொல்லவில்லை என்றாலும், ‘எனக்கு ஒரு வார்த்தை சொல்லாம இப்படி பண்ணிட்டீங்களே’ என ஒரு பெரிய மனித தோரணையில் நீதிமன்றம் வருந்தலாம். ஆனால், கண்டிப்பதற்குக் கூட அதிகாரம் இல்லை. ஆனால் நீதிமன்றமோ திருமணத்தையே ரத்து செய்து, அதற்கு பயங்கரவாத உள்நோக்கம் கற்பிக்கிறது.

பார்ப்பனியத்தை விட்டுக்கொடுக்காமல் முற்போக்கு உடையையும் தரித்துக்கொண்டிருக்கும் பார்ப்பன அறிவுஜீவிகளுக்கு வயதாக, வயதாக அதுவரை தங்களின் இயல்பு குணத்துக்குப் பொருந்தாத; ஆனால் இறுக்கப் பிடித்துக்கொண்டு இழுத்து வந்த சில முற்போக்கு அம்சங்களையும் வலி தாங்காமல் கீழே போட்டுவிடுகின்றனர். மாலனும் இதற்கு விதிவிலக்கல்ல.

மாலனின் முகநூல் பக்கத்துக்குச் சென்றால் பல அம்சங்களுக்கும் பொங்கியிருக்கிறார். ஜி.எஸ்.டி.யால் நாடு சுபிட்சம் அடைந்துவிட்டது என எங்காவது யாராவது எழுதியிருந்தால் அங்கு பிரசன்னமாகிவிடுகிறார். அந்த இணைப்புகளை பகிர்ந்து, ‘நாடு எப்படி வளர்ந்துள்ளது. முதலீடுகள் எப்படி குவிகின்றன என்று பாருங்கள்’ என்று பெருமிதம் அடைகிறார். அவர் அப்படியே கிளம்பி திருப்பூருக்கு சென்று வர வேண்டும்.

பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால், அந்த தொழில் நகரம் எப்படி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது என்பதை, திருப்பூரின் தொழிலாளர்கள் அல்ல… முதலாளிகளே சொல்வார்கள். திருப்பூர் என்ற ஒரு நகரம் உருவானதில் இருந்து இப்படி ஒரு வீழ்ச்சியை கண்டதில்லை என்று அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். திருப்பூர் மட்டுமல்ல… எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அடிமேல் அடி. சிறு வியாபாரிகள் முதுகொடிந்து கிடக்கின்றனர். ஆனால், மாலன் கண்களுக்கு மட்டும் வளர்ச்சி தெரிவது எப்படி?

அது காமாலை கண் அல்ல. அதிகாரத்தின் தாழ்வாரத்தை அண்டிப் பிழைக்கும் கண்கள். இவர்கள் பிரச்னைகளை மக்களின் கோணத்தில் இருந்து பார்க்க மாட்டார்கள். வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. அது இவர்களுக்கு இயல்பிலேயே வருவதில்லை. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இயற்கைக் கூட்டணியாக இருப்பதைப் போல, மாலன்கள் அதிகார வர்க்கத்துடனான இயற்கை கூட்டணியில் ஆயுட்கால உறுப்பினர்கள்.

கீரன்