Friday, December 6, 2024
முகப்புகட்சிகள்காங்கிரஸ்சந்தி சிரிக்கும் சி.பி.எம்.இன் கொலை புராணம்!

சந்தி சிரிக்கும் சி.பி.எம்.இன் கொலை புராணம்!

-

கொலைகார-கேளரா-சிபிஎம்உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் கட்சி என்று வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கொலைகாரக் கட்சி. கேரளத்தில் சி.பி.எம். கட்சியிலிருந்து பிரிந்து சென்று “புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை நடத்திவந்த டி.பி. சந்திரசேகரனை கடந்த மே மாதத்தில் கொடூரமாக வெட்டிக் கொன்ற சி.பி.எம். கட்சியின் கொலைவெறியாட்டம், இந்த உண்மையை மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது.

இப்படுகொலையும், “அரசியல் கொலைகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வந்துள்ளோம்” என்று பொதுக்கூட்டத்திலேயே  இடுக்கி மாவட்ட சி.பி.எம். செயலாளரான எம்.எம். மணி திமிராகப் பேசியிருப்பதும், சந்திரசேகரன் படுகொலையையொட்டி சி.பி.எம். கட்சியின் அச்சுதானந்தன் கோஷ்டியும் பினாரயி விஜயன் கோஷ்டியும் வெளிப்படையாகவே மோதிக்கொண்டிருப்பதும், அரசியல் எதிரிகளைத் திட்டமிட்டு கொலை செய்வதை சி.பி.எம். கட்சி வாடிக்கையாகக் கொண்டிருப்பதை கேரளம் மட்டும் மட்டுமின்றி, நாடு முழுவதும் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.

கேரளத்தில் கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்கள் சி.பி.எம். கட்சியின் முக்கிய ஓட்டு வங்கியாகும். நான்காண்டுகளுக்கு முன்பு கண்ணூர் மாவட்டம், வடகரா அருகிலுள்ள ஒஞ்சியத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி “புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி” என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். ஒஞ்சியம் வட்டாரத்தில் அவரும் அவரது கட்சியும் மக்களிடம் கணிசமான ஆதரவையும் பெற்று வந்தது. சந்திரசேகரனுக்கு சி.பி.எம். கட்சியின் கொலைகார முகம் தெரியும். அவரது கட்சி காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பதால், சி.பி.எம். கட்சி நடத்தி வந்துள்ள கொலைகளைப் பற்றி அவர் வெளிப்படுத்தி விடுவார் என்று கருதி, பலமுறை அவரைக் கொல்ல முயற்சித்து வந்த சி.பி.எம். கட்சியின் கொலைக்கும்பல், கடந்த  மே 4-ஆம் தேதியன்று அவரைச் சுற்றிவளைத்து வெட்டிக் கொன்றுள்ளது.

படுகொலை நடந்த அடுத்த நாளில்,  சி.பி.எம். கட்சியின் கொன்னூத்துப் பரம்பு கிளைச் செயலாளர் மனோஜன் மற்றும் அவரது கூட்டாளி ஷனோஜும், அதைத் தொடர்ந்து கையிலே சி.பி.எம். கட்சிச் சின்னத்தைப் பச்சை குத்திக் கொண்டுள்ள சஜித் என்பவனும் இப்படுகொலைக்கான ஏற்பாடுகளைச் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜூன் 7 அன்று மகாராஷ்டிரா  கோவா எல்லைப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் தலைமறைவாக இருந்த டி.கே. ரஜீஷ் என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் மூலமாக, பிற கொலைகாரர்களைப் பற்றி அறிந்து,  ஜூன் 14 அன்று கண்ணூர் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதியில் பதுங்கியிருந்த இதர கொலைகாரர்களைச் சுற்றிவளைத்து போலீசு கைது செய்துள்ளது.

சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த டி.கே. ரஜீஷ் என்பவன் மும்பையிலுள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்வதாகக் காட்டிக் கொண்டு,  கட்சி அழைக்கும் போதெல்லாம் கேரளாவுக்கு வந்து அரசியல் எதிரிகளைக் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வதைத் தொழிலாகக் கொண்டவன். ரஜீஷைப் பற்றியும் இவனது கொலைகார கும்பலைப் பற்றியும் அவ்வப்போது “கொட்டேஷன் கேங்க்” என்று ஊடகங்களில் செய்திகள் வந்த போதிலும், இவனைப் பற்றிய வேறு எந்தத் தகவலோ, புகைப்படமோ வராத அளவுக்கு அவனும் சி.பி.எம். கட்சியும் இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.

ரஜீஷும் அவனது கூட்டாளிகளான கொடி சுனி, கிர்மானி மனோஜ், ஷஃபி, சஜித் ஆகியோரும்தான் சந்திரசேகரனை வெட்டிக் கொன்றவர்கள் என்று இப்போது நிரூபணமாகியுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் சி.பி.எம். கட்சியின் பானூர் ஏரியா கமிட்டி உறுப்பினரான குஞ்சானந்தன் என்பவர்தான் சந்திரசேகரனைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர்  என்றும், அவரது வீட்டில்தான் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்றும் கொலைகாரர்கள் சாட்சியமளித்துள்ளனர்.  தலைமறைவாக இருந்த குஞ்சானந்தன் இப்போது கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

கொலைகார-கேளரா-சிபிஎம்

தமது செல்வாக்கிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த கட்சி ஊழியர்களை அரசு எந்திரத்தில் அமர்த்துவதன் மூலம் அந்தப் பகுதியை ‘கட்சிக் கிராமமாக’ மாற்றுவது என்ற உத்தியுடன் கேரள சி.பி.எம். கட்சி நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகிறது. கண்ணூர் மாவட்டத்தில் சி.பி.எம். கட்சியின் கட்டுப்பாட்டில்  கட்டப்பஞ்சாயத்தில் பல ‘கட்சிக் கிராமங்கள்’ உள்ளன.  இக்கிராமங்களில் கொலைகாரர்களைப் பாதுகாப்பாகத் தங்கவைத்து, கெடுபிடிகள் குறைந்த பின்னர் சி.பி.எம். கட்சி அவர்களைத் தப்ப வைக்கிறது. ஒருவேளை போலீசு புலன்விசாரணையில் சி.பி.எம். கட்சியினர்தான் இக்கொலையைச் செய்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் கசியத் தொடங்கி விட்டால், “கொட்டேஷன் கேங்க்” என்றழைக்கப்படும் இத்தொழில்முறை கொலைகாரர்களுக்குப் பதிலாக, தமது கட்சி ஊழியர் ஒருவரை முன்னிறுத்தி,  இவர்தான் கொலை செய்தார் என்று போலீசுக்குத் தெரிவித்துச் சரணடைய வைப்பது, அவர் சிறையிலிருக்கும் காலத்தில் அவரது குடும்பத்தைப் பராமரிப்பது, பின்னர் நீதிமன்றத்தில் போதிய ஆதாரம் இல்லை என்று வாதிட்டு, அந்த ஊழியரை விடுவிக்க ஏற்பாடு செய்வது  என நீதித்துறை, அதிகார வர்க்கம், போலீசு ஆகியவற்றின் துணையோடு சி.பி.எம். கட்சி இச்சதிகளையும் கொலைகளையும் திட்டமிட்டு நடத்தி வந்துள்ளது.

சந்திரசேகரனைக் கொன்றொழித்த பின்னர், கண்ணூர் மாவட்டத்திலுள்ள ‘கட்சிக் கிராமங்’களில் தங்க வைக்கப்பட்டிருந்த இக்கொலைகாரர்களைத் தேடி அடுத்தடுத்து போலீசு சோதனை நடத்தியதால், வெவ்வேறு கட்சிக் கிராமங்களில் மாறிமாறி அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ரஜீஷ் கோவாவுக்குத் தப்பிச் சென்ற பின்னர், கண்ணூர் மாவட்டம்  குழுக்குண்ணு பஞ்சாயத்திலுள்ள முடக்கோழி பெரிங்கான மலையிலுள்ள இரிட்டி எனும் ஊருக்கு அருகே, மக்கள் நடமாட்டம் இல்லாத  எளிதில் சென்றடைய முடியாத காடும் மலையும் சூழ்ந்த ஒரு தோட்டத்தில் மற்ற கொலைகாரர்கள் 15 நாட்களாகத் தங்கியிருந்துள்ளனர். போலீசார் மரம் வெட்டும் கூலிகளாகவும், லாரிகளில் செங்கல் அடுக்கும் கூலிகளாகவும் வேடமிட்டுக் கொண்டு மலைக்குச் சென்று, கொலைகாரர்களையும் சி.பி.எம். ஊழியர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.

“கண்ணூர் மாவட்டத்தில் கட்சி கிராமங்கள் உள்ளதாகக் கூறுவது கடைந்தெடுத்த பொய். காங்கிரசும் ஊடகங்களும் திட்டமிட்டு அவதூறு செய்கின்றன” என்று சீறினார், சி.பி.எம். கட்சியின் முன்னாள் தொழிற்துறை அமைச்சரான எலாமரம் கரீம். ஆனால்,  எம்.ஜி.எஸ். நாராயணன் எனும் பிரபல வரலாற்றியலாளர், “நான் கண்ணூர் மாவட்டத்தில் பல ‘கட்சிக் கிராமங்’களுக்குச் சென்றுள்ளேன். அங்கே கட்சி அனுமதி இல்லாமல் எந்த நல்லது கெட்டதும் நடக்க முடியாது.  இப்போது தொலைத்தொடர்பு வளர்ச்சியின் காரணமாக இத்தகைய கிராமங்களில் கட்சி தனது கட்டுப்பாட்டை ஓரளவுக்குக் குறைத்துள்ளது” என்று வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளார்.

கொலைகார-கேளரா-சிபிஎம்1997 முதல் 2008 வரையிலான காலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 56 பேர் சி.பி.எம். கொலைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கண்ணூர் மாவட்டத்திலுள்ள பன்னூரில் பள்ளி ஆசிரியராகவும் காங்கிரசு யுவமோர்ச்சா தலைவராகவும் இருந்த கே.டி.ஜெயகிருஷ்ணன், பள்ளி மாணவர்கள் முன்னிலையில் விரட்டிவிரட்டி 1999-இல் சி.பி.எம். கொலைக்கும்பலால் கொல்லப்பட்டார்.  சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி என்.டி.எப். கட்சியில் சேர்ந்த  மொகம்மது பாசல் என்ற முக்கிய பிரமுகர்,  கடந்த 2006 அக்டோபர் 22 அன்று கொல்லப்பட்டார். இக்கொலையின் முக்கிய சதிகாரர்களான கண்ணூர் சி.பி.எம். மாவட்டக் கமிட்டி உறுப்பினரான கராயி ராஜன் மற்றும் திருவாங்காடு கமிட்டி உறுப்பினரான சந்திரசேகரன் எனுமிருவர் உள்ளிட்டு எட்டு பேரை மையப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரியில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் ஊழியரான 22 வயதான அப்துல் சுக்கூர் சி.பி.எம். கொலைகாரர்களால் நட்டநடு வீதியில் வெட்டிக் கொல்லப்பட்டார். கேரளத்தில் சி.பி.எம். கட்சியின் செல்வாக்குள்ள பகுதிகளில் குத்தகைதாரர், தேயிலைமிளகு ஏலதாரர், வாடகை  சந்தா வசூலிப்பவர் முதலான தொழில்களை நடத்தும் எதிர்த்தரப்பினர், சி.பி.எம். கட்சிக்கு முறைப்படி கப்பம் கட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதை மீறுவோரும் தகராறு செய்வோரும் அரசியல் எதிரிகளாகப் பட்டியலிடப்பட்டு சி.பி.எம். கொலைக்கும்பலால் படுகொலை செய்யப்படுகின்றனர்.

சந்திரசேகரன் படுகொலைக்குப் பின்னர், தொடுபுழாவில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய இடுக்கி மாவட்ட சி.பி.எம். செயலாளரான எம்.எம். மணி, “ஆம்! நாங்கள் எங்கள் எதிரிகளைக் கொன்றொழித்தோம். ஒவ்வொரு முறையும் கட்சியின் எதிரிகளைப் பற்றி நாங்கள் பட்டியல் தயாரித்து அதன்படி கொன்றொழிப்போம். இன்னும் பலரைக் கொலை செய்வோம். அரசியல் எதிரிகளைக் கொல்வது சி.பி.எம். கட்சியின் வரலாறு. ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டர்; ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார்; ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது” என்று 1983லிருந்து 13 காங்கிரசு ஊழியர்களைக் கொன்றதைப் பற்றி ஆணவத்தோடு சுயதம்பட்டம் அடித்துப் பேசியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக சி.பி.எம். கட்சியில் முக்கிய தலைவராக உள்ள இவர், பினாரயி விஜயன் கோஷ்டியின் முக்கியப் புள்ளியாவார்.

மணியின் திமிர்த்தனமான வாக்குமூலம் ஊடகங்களில் அம்பலமானதும், அவர் உணர்ச்சி வேகத்தில் இப்படித் தவறாகப் பேசிவிட்டார் என்று சி.பி.எம். கட்சி பூசிமெழுகியது. ஆனால், அவர் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை வீடியோவாக இணையத்தில் வெளிவந்து அவர் ஆணவத்தோடு பேசியிருப்பதை நிரூபித்ததும்,  வேறுவழியின்றி கட்சித் தலைமை அவரைப் பொறுப்பிலிருந்து இப்போது நீக்கியுள்ளது.

கூரப்பாச்சல் ஏரியா கமிட்டி உறுப்பினராக இருந்த கொடிச்சாலி குஞ்சு என்பவர், பத்தாண்டுகளுக்கு முன்பு சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி, இப்போது காங்கிரசு ஆதரவாளராக உள்ளார். இடுக்கி மாவட்டத்தில் சி.பி.எம். கொலைக் கும்பலால் 1983 ஜனவரி 16 அன்று காங்கிரசு தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி.யின் மண்டலத் தலைவரான முல்லஞ்செரா மத்தாயி வெட்டிக் கொல்லப்பட்ட பின்னர், கொலைக்கும்பலைத் தப்பிக்கச் செய்துவிட்டு, அன்று  தன்னைக் கொலைகாரனாக அறிவித்து சி.பி.எம்.கட்சி சரணடையவைத்த கதையை, இப்போது அவர்  பகிரங்க வாக்குமூலமாக அளித்துள்ளார். இவரைப் போலவே மேலும் 3 முன்னாள் சி.பி.எம் ஊழியர்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் ஊடகங்களில் வெளிவந்து, சி.பி.எம். கட்சியின் கொலைகளும் சதிகளும் கேரளம் முழுவதும் நாறுகிறது.

கொலைகார-கேளரா-சிபிஎம்பினாரயி விஜயன்தான் தனது கணவரின் கொலைக்குக் காரணம் என்று கொல்லப்பட்ட சந்திரசேகரனின் மனைவி குற்றம் சாட்டியதால், கட்சிக்குத் துரோகமிழைத்த சந்திரசேகரனின் மரணத்துக்கு யாரும் அஞ்சலி செலுத்தச் செல்லக் கூடாது என்று சி.பி.எம். கட்சி விதித்த கட்டுப்பாட்டை மீறி, முன்னாள் சி.பி.எம். முதல்வரும் தற்போதைய கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன், சந்திரசேகரனுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இத்தனை காலமும் சி.பி.எம். கட்சியின் படுகொலை அரசியலை எதிர்த்து வாய்திறக்காத அவர், இப்போது மாநிலச் செயலாளரான பினாரயி விஜயனின் தூண்டுதலாலேயே இப்படுகொலை நடந்துள்ளது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, விஜயன் கோஷ்டியைத் தனிமைப்படுத்த முயற்சித்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த விஜயன் கோஷ்டி,  அச்சுதானந்தனைக்  கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநிலக்  கமிட்டியை அவசரமாகக் கூட்டி விவாதித்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டத்திலும் முறையிட்டது. அச்சுதானந்தனோ,  “தற்போதைய சூழலில் பினாரயி விஜயன் தலைமையிலுள்ள மாநிலக் கமிட்டியை  முற்றாகக் கலைத்து மறுஒழுங்கமைப்பு செய்யாவிடில், நான் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்க இயலாது” என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழுவுக்குக் கடிதம் எழுதி, அதைப் பகிரங்கப்படுத்தி விஜயன் கோஷ்டிக்கும் கட்சித் தலைமைக்கும் ஆப்பு வைத்துள்ளார்.

அச்சுதானந்தன் இப்படி உட்கட்சி விவகாரங்களைப் பகிரங்கப்படுத்துவதை விமர்சித்த சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இப்போதைய சூழலில் அச்சுதானந்தன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அது கேரளத்தில் கட்சியை மக்களிடமிருந்து மேலும் தனிமைப்படுத்திவிடும் என்பதாலும், கட்சி நடத்திவந்துள்ள படுகொலைகளைப் பற்றி அச்சுதானந்தன் அம்பலப்படுத்தி விடுவார் என்பதாலும் எந்த முடிவும் எடுக்காமல், அச்சுதானந்தனும் பினாரயி விஜயனும் வெளிப்படையாக சாடிக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்றும் உபதேசித்துள்ளது. படுகொலை அரசியல் அம்பலமாகி, கோஷ்டிச் சண்டை மூர்க்கமாகி சி.பி.எம். கட்சியே கேரளத்தில் ஏறத்தாழ பிளவுபட்டு, முடங்கி, செல்வாக்கிழந்து நிற்கிறது.

கேரளம் மற்றும் மே.வங்கத்தில் மூத்த சி.பி.எம். தலைவர்களைத் தவிர, பிழைப்புவாதத்தில் வளர்ந்து வந்துள்ள புதிய தலைமுறையினரான உள்ளூர் தாதாக்கள்தான் தலைமைக்கு வரமுடியும் என்ற நிலைக்கு சி.பி.எம். கட்சி சீரழிந்து போயுள்ளது. அதிகாரத்தில் இல்லாத பிற மாநிலங்களில் ஓட்டுக்கும் சீட்டுக்கும் மாறிமாறி ஆளும் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதாக அதன் பிழைப்புவாதம் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது அரசாங்க சலுகைகளையும் சன்மானங்களையும் பொறுக்கித்தின்று வளர்ந்த பிழைப்புவாதமும், ஆட்சி மாறும்போது அதை இழப்பதால் ஏற்படும் ஆத்திரமும் புதிய தலைமுறை சி.பி.எம். உள்ளூர் தலைவர்களை வன்முறைக் கும்பலாக வளர்த்துவிட்டுள்ளது. தமது செல்வாக்குள்ள பகுதிகளில் வழக்கமான வசூல், கப்பம் முதலானவற்றை எதிர்த்தரப்பினருக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என்கிற அவர்களது பிழைப்புவாத வெறி, வன்முறைத் தாக்குதலாகவும் படுகொலைகளாகவும் வளர்ந்துள்ளது.

இத்தகைய வன்முறைகள்  படுகொலைகள் மூலமும் ஆட்சியதிகாரத்தின் மூலமும்தான் சி.பி.எம். கட்சி இம்மாநிலங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து தேர்தல் வெற்றியைச் சாதித்துள்ள உண்மையும், 1967இல் நக்சல்பாரி எழுச்சியை ஒடுக்கியது முதல் சிங்கூர் நந்திகிராம் போராட்டங்களை ஒடுக்கியது வரையிலான அதன் கொலைவெறியாட்டமும் நாடெங்கும் நாறிப்போயுள்ளது.

புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி தனது வர்க்க அடித்தளத்தை மாற்றிக் கொண்டு முதலாளித்துவப் பிழைப்புவாதக்  கட்சியாக, பயங்கரவாதக் கொலைகார கட்சியாக வேகமாகப் பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் உழைக்கும் மக்களின் நலனுக்கானது என்று இன்னமும் யாராவது நம்பிக் கொண்டிருந்தால், கேரளத்தில் நடந்துள்ள கொலைவெறியாட்டங்களே அவர்களது மூட நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

  1. மொரெஒவெர் ட்கெ சச்டெஇச்ம் இச் ரோடெட் இன் ட்கெ CPM அன்ட் அனர்ஷ்ய் பொலிசிஎச்.ட்கெய் அரெ சுர்செ டொ சொம்முனிச்ம்.என்க த்

  2. poli communist vinavu avargalae…cpm thozhargal makkalukaga poratta kalathil uyirai vidapodhum ellaam ungal katturai varavillaiyae ean…? w.b.il 450 cpm thozhargal mamta-moist kaaligal padukolai seiyapattuirulirargalae en veliyidavillai????kerlavil ethanai cpm thozharagalai izhandirkirom adhiyellam serthu veliyidum nermai ungalukku ulladhaa???

  3. பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் அரசியல் கம்யூனிஸ்ட்டுகளால் படுகொலை செய்யப்பட்டு வந்தது நாடறிந்ததே. மேற்கு வங்கத்தில் அதற்கு மமதாவால் வந்தது ஆப்பு. அவர் முள்ளை முள்ளால் எடுத்துக்கொண்டிருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகளும் முஸ்லீம்களைப் போல வெறி பிடித்தவர்களே. தங்களைத் தவிர வேறு யாரும் வாழக்கூடாது என்று நினைப்பவர்கள். அவர்களது வெறித்தனத்தை எதிர்ப்பவர்களுக்கு தீவிரவாதி பட்டம் சூட்டுவார்கள். ஆர்.எஸ்.எஸ்., இந்துமுன்னணி, மோடி போன்றவர்கள் சில உதாரணங்கள். நக்ஸலைட்டுகளைப் பற்றி கூறவே வேண்டாம். ஊரறிந்த ரகசியம். முதலாளித்துவத்தை ஒழிக்கிறேன் பேர்வழி என்று ஊரை ஏமாற்றுபவர்கள். வாள்எடுத்தவன் வாளாலேயே அழிவான் என்பது கம்யூனிஸ்ட்டுகளும், முஸ்லீம்களும், கிறித்தவர்களும் புரிந்துகொள்ளவேண்டிய உண்மை. வினவு அவர்கள் முஸ்லீம்களின் வெறிச்செயல்களையும், அன்பு வேஷம் போடும் கிறித்தவர்களின் வெறிச்செயல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க