மார்க்ஸ் பிறந்தார் – 22
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

9. ஒரு மேதையும் அவருடைய சூழலும் – 2

மார்க்ஸ் மிகவும் அடக்கமான முறையில் வாழ்க்கை நடத்தி வந்தார் என்றாலும் அரசியல் அகதிகளுக்கு அவர் குடும்பத்தில் இடமும் உணவும் ஆறுதலும் தவறாமல் கிடைக்கும்.

வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட் பிற்காலத்தில் பின்வருமாறு நினைவுகூர்ந்தார்:

“எங்கள் (ஜெர்மனியிலிருந்து ஓடி வந்த இளம் அகதிகள் – ஆசிரியர்) மீது மார்க்சைக் காட்டிலும் திருமதி மார்க்ஸ் தான் அதிக வன்மையான முறையில் கூட ஆதிக்கம் செலுத்தினார். அந்த அம்மையாரிடம் பெருமிதம், தன் சொந்த கெளரவத்தைப் பற்றிய உணர்வு இருந்தது…. அந்த அம்மையார் சில சமயங்களில் எனது காட்டுமிராண்டிகளை அடக்கி மென்மையாக்கிய இஃபிஜீனியாவாக, வேறு சமயங்களில் மனப்போராட்டம் மற்றும் சந்தேகங்களில் அறுக்கப்பட்ட மனிதனிடம் அமைதியை ஏற்படுத்துகின்ற எலியனோராக இருந்தார்கள்;எனக்குத் தாயாக, நண்பராக, துணைவராக, ஆலோசகராக இருந்தார்கள் பெண்ணைப் பற்றிய இலட்சிய வடிவமாக இருந்தார்கள்; இன்றும் அப்படியே நினைக்கிறேன், நான் லண்டனில் தார்மிக முறையிலும் உடல்நலத்திலும் சீர்குலைந்து விடாதிருந்தேன் என்றால் அதற்காக அந்த அம்மையாருக்கே நான் நன்றி செலுத்துவேன், இதை நான் பன்முறை சொல்வேன்.”(1)

வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட்

ஜென்னியின் அசாதாரணமான அழகும் அறிவும் மார்க்சைச் சந்திக்க வருபவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத்தன. ஹேய்னெயும் ஹேர்வெக்கும் ஃபிரெய்லிக்ராத்தும் ஜென்னியைப் போற்றினார்கள். மிக அடக்கமான அரசியல்வாதிகள் கூட ஜென்னியைப் பற்றிப் பேசுகின்ற பொழுது கவிஞர்களாக மாறினார்கள்.

முதலாவது அகிலத்தின் அமைப்பாளரும் தையற்காரருமான பிரெடெரிக் லெஸ்னர் பின்வருமாறு எழுதுகிறார்:

“நம்பகமான ஒவ்வொரு தோழருக்கும் மார்க்சின் வீடு எப்போதும் திறந்தே இருந்தது. மற்ற பலரையும் போலவே மார்க்ஸ் குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாகக் கழித்த பல மணி நேரங்களை நான் என்றுமே மறக்கமாட்டேன். குறிப்பாகத் திருமதி மார்க்ஸ் பிரகாசமான பிரதிபலிப்பை ஏற்படுத்தினார், அவர் உயர்ந்த அழகான பெண்மணி, மிகவும் பிரசித்தி பெற்றிருந்தாலும், மிக நல்ல பண்புடையவர்; அன்புடன், சிரிக்கப் பேசி அளவளாவும் தன்மையுடையவர், வீண் பெருமையும் திமிரும் இல்லாதவராகத் திகழ்ந்தார்.

அவர் முன் எவரும் சொந்தத் தாய் அல்லது சகோதரி முன் இருப்பது போன்று உணர்வார்கள். அவர் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் மிகுந்த உற்சாகம் காட்டி வந்தார்.

பூர்ஷ்வா வர்க்கத்திற்கு எதிராகக். கிடைக்கும் வெற்றிகள், எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, அவருக்கு மிகப் பெரிய திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தன.”(2)

தன் கணவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றுமே மற்றவர்களைக் காட்டிலும் ஜென்னியைத்தான் அதிகமாகப் பாதித்தது. ஜெர்மனியின் பிற் போக்குவாதப் பத்திரிகைகள் 1848-ம் வருடப் புரட்சிக்காரர்களைப் பற்றி அவதூறு செய்த பொழுது, விஷத்தில் தோய்க்கப்பட்ட அம்புகள் மார்க்சைக் குறிபார்த்துத் தொடுக்கப்பட்ட பொழுது ஜென்னியே மிகவும் பாதிக்கப்பட்டாள், நோயில் விழுந்தாள்.

படிக்க :
அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று!
டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்

மூலதனத்தின் முதல் தொகுதி வெளியிடப்பட்ட பிறகு, சகாப்த முக்கியத்துவம் நிறைந்த இப்புத்தகத்தை ஜெர்மனியில் முற்றிலும் புறக்கணித்து விட்டார்களே என்று ஜென்னி மிகவும் வருந்தினாள். மார்க்சின் மேதைக்குத் தகுந்த அங்கீகாரம் இல்லையே என்பதைப் பற்றி அவள் வேதனைப்பட்டாள்.

தன் மரணத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர்  ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் மார்க்சைப் பற்றிச் சிறிய குறிப்பு வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்து ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சி அடைந்தாள். ஜென்னியின் மரணத்துக்குப் பிறகு மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இச்சம்பவத்தை வேதனையுடன் நினைவுகூர்ந்தார்.

1881-ம் வருடத்தின் கடைசியில் ஜென்னி மரணமடைந்த பொழுது எங்கெல்ஸ் இனி மூரும் (மார்க்சுக்கு அவர் குடும்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த செல்லப் பெயர். -ப-ர்) இறந்து விட்டார்” என்று கூறினார்.

இதைக் கேட்ட மற்றவர்கள் திகைப்படைந்தனர். மார்க்சும் ஜென்னியும் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் மெய்யாகவே வாழ முடியாது, மார்க்ஸ் இனி மேல் உயிர்தரிக்க மாட்டார் என்பதை எங்கெல்ஸ் நன்றாக அறிந்திருந்தார். அவர் கூறியபடி நடந்தது.

மனிதகுலம் காதலைப் பற்றி பல கதைகளையும் காவியங்களையும் தொல்கதைகளையும் படைத்திருக்கிறது. அவற்றில் மார்க்ஸ்-ஜென்னி காதல் கதை மிக மேன்மையானது. மார்க்ஸ் நண்பர்களிடம் காலப் போக்கில் மாற்றமடையாத பாசத்துடன் பழகினார்.

மார்க்சும் எங்கெல்சும் தங்களுக்கு ஏற்பட்ட எல்லாச் சோதனைகளையும் ஒன்றாகவே சகித்துக் கொண்டார்கள், அவர்கள் ஒருவரையொருவர் அதிககாலத்துக்குப் பிரிந்திருக்கமாட்டார்கள், தங்களுடைய பொது இலட்சியத்துக்காக இணைந்து பாடுபட்டார்கள்.

மார்க்சின் வாழ்க்கை வெளித்தோற்றத்தில் பளபளப்பான வர்ணங்களோ, அசாதாரணமான சம்பவங்களோ இல்லாமற் தோன்றலாம். ஆனால் புரட்சிக்காரர், அரசியல் போராட்டக்காரர், கட்டுரையாளர், விஞ்ஞானி என்ற முறையில் அவருடைய வாழ்க்கையில் ஆன்மிகப் பரபரப்பு நிறைந்திருக்கிறது. அதில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள், போராட்டம், துணிவுடைமை, உண்மைக்கும் பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்கும் தன்னலமற்ற சேவை ஆகியன இருக்கின்றன.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்

அவருடைய வாழ்க்கை என்பது ஐரோப்பியத் தொழிலாளர்களின் வர்க்க உணர்வின் உருவாக்கத்தின் மொத்த வரலாற்றுச் சகாப்தமே. அவர்தான் கம்யூனிஸ்டுச் சங்கம் என்ற பெயரில் கம்யூனிஸ்டுக் கட்சியின் சிறு கிளையை முதன்முறையாக அமைத்தவர், சமூகத்தைத் திருத்தியமைப்பதற்குரிய போராட்டத்துக்கு உத்வேகமூட்டுகின்ற, தெளிவான வேலைத்திட்டமாகிய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை – எங்கெல்சின் துணையுடன் – தயாரித்தளித்தவர்.

Neue Rheinische Zeitungஇல் அவர் எழுதிய கட்டுரைகள் 1848-ம் வருடப் புரட்சியின் போது துணிகரமாகப் போராடுவதற்கு எழுச்சியூட்டின. 1864-ம் வருடத்தின் இலையுதிர்காலத்துக்குப் பிறகு முதலாவது அகிலத்தின் பணிகளுக்கு முழுமையான கவனம் செலுத்துவதற்காக அவர் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளை நிறுத்தி வைத்தார். முதலாவது அகிலத்தின் இதயமாக அவர் விளங்கினார்.

பல்வேறு நாடுகளிலிருந்த தொழிலாளர் இயக்கத்தை ஒன்றுபடுத்தி, பாட்டாளி வர்க்கத் தன்மையில்லாத, மார்க்சுக்கு முந்திய சோஷலிசத்தின் பல்வேறு வடிவங்களையும் (மாஜினி, புரூதோன், பக்கூனின், இங்கிலாந்தின் மிதவாதத் தொழிற்சங்க இயக்கம், ஜெர்மனியில் லஸ்ஸால் வாதிகளின் வலதுசாரித் திருப்பம், இதரவை) கூட்டு நடவடிக்கையினுள் கொணர்வதற்கு முயற்சி செய்து, இக்குறுங்குழுக்கள் மற்றும் மரபுகள் அனைத்தின் தத்துவங்களையும் எதிர்த்துப் போராடி மார்க்ஸ் பல்வேறு நாடுகளிலும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் ஒன்றுபட்ட செயல்தந்திரத்தை உருவாக்கினார். பாரிசில் கம்யூன்வாதிகள் நடத்திய புரட்சிகரமான சண்டைகளை அவர் இளமை வேகத்தோடு கவனித்தார். கம்யூன் நடவடிக்கைகளை ஆராய்ந்தார்.

மார்க்ஸ் மக்களிடமிருந்து ஒதுங்கித் தந்தக் கோபுரத்தில் வசித்த விஞ்ஞானி என்று கூறுகின்ற முதலாளி வர்க்கக் கற்பனையை இவை அனைத்தும் மறுக்கின்றன. விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்தை விரித்துரைக்கின்ற மாபெரும் இலட்சியத்துக்காகத் தன்னுடைய வாழ்க்கையில் கணிசமான பகுதியை அர்ப்பணித்த மார்க்ஸ் நேரடியான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான வேலைகளுக்குக் காலம் செலவிடுவதற்குச் சிறிதும் தயங்கவில்லை.

மார்க்சின் நண்பர்களில் ஒருவரான லுட்விக் கூகல்மன் மார்க்ஸ் அரசியல் பிரச்சாரம் செய்வதில் ஈடுபடக் கூடாது, மூலதனத்தின் மூன்றாவது தொகுதியை எழுதி முடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும், ஏனென்றால் புரட்சி இலட்சியத்துக்கு இது மிகவும் முக்கியமானது என்று அவரிடம் வாதாடிய பொழுது மார்க்ஸ் ஆத்திரமடைந்தார், அவருடன் தன்னுடைய உறவுகளை முறித்துக் கொண்டார்.

அவருடைய அரசியல் வாழ்க்கையை விஞ்ஞான வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாது; ஒரு துறையில் அவருடைய நடவடிக்கை மறு துறையில் அவருடைய நடவடிக்கைக்கு உரமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தது. இரண்டு துறைகளிலும் இலட்சியங்கள் மற்றும் வழிமுறைகளின் தூய்மைக்காக மார்க்ஸ் ஈவிரக்கமின்றிப் போராடினார். அத்தூய்மையிலிருந்து பிறழ்வது அவமானகரமானது என்று கருதினார்.

தனிப்பட்ட புகழ் மற்றும் அந்தஸ்தை அடைவதற்காகப் புரட்சிகரமான கோஷங்களை உபயோகிப்பது பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்குச் செய்யப்படுகின்ற மிகக் கேவலமான துரோகம் என்று மார்க்ஸ் கருதினார். வாயாடித்தனமான அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களுக்குப் பின்னால் தங்களுடைய திறன்மையின்மையையும் சூன்யத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள்.

இவர்களுடைய போலிப் புகழை மார்க்ஸ் வெறுத்தார். இவை அனைத்துக்கும் பின்னால் அருவருப்புத் தருகின்ற போலித்தனமான அற்பவாதம் இருப்பதை மார்க்ஸ் தவறாமல் கண்டுபிடித்தார். மார்க்ஸ் வீண் வார்த்தைகளையும் ஆர்ப்பாட்டமான நடிப்பையும் மன்னிக்கமாட்டார்.

ஃபெர்னாண்டு  லஸ்ஸால்

ஜெர்மானிய சமூக-ஜனநாயகவாதிகளின் தலைவரான ஃபெர்னாண்டு  லஸ்ஸால் மலிவான முறையில் புகழ் பெறுவதற்காகப் பாடுபடுவதையும்  அவருடைய அகம்பாவத்தையும், விளையாட்டுதனத்தையும் உணர்ச்சிப் பசப்பையும் கூலிப் புத்தியையும் வீரப்பெருந்தகையின் நடையுடை பாவனைகளையும் கலந்து கிராமந்தர நடிகர் மேதை மற்றும் பிரபுவின் பாத்திரத்தை நடிப்பதைப் போல அவர் நடந்து கொள்வதையும் மார்க்சும் ஏங்கெல்சும் இரக்கமின்றி கேலி செய்தார்கள். அந்த “மார்கிஸ் போஸாவைக்” குறிப்பதற்காக அவர்கள் உபயோகித்த கிண்டலான பட்டப் பெயர்கள் எண்ணிலடர்கா!

பிரெஞ்சு முதலாளித்துவ அரசியல்வாதியும் வரலாற்றாசிரியரான லுயீ பிளாங்கைப் பற்றியும் மார்க்ஸ் இதே மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடைத்தார்.

“…. எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவு கூட மதித்ததில்லை. இதற்குச் சான்று; உதாரணமாக, அகிலம் இருந்த காலத்தில் பல நாடுகளிலுமிருந்து எண்ணற்ற பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு; நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத்தால் இப்பாராட்டுக்களில் ஒன்றுகூட விளம்பரமாகப் பயன்படுவதற்கு நான் அனுமதித்ததில்லை; நான் அவற்றுக்குப் பதிலும் எழுதவில்லை, அப்படிப் பதிலளித்திருந்தாலும் அது அவர்களைக் குட்டுவதற்காகவே இருக்கும்.

எங்கெல்சும் நானும் முதன்முறையாக கம்யூனிஸ்டுகளின் இரகசியச் சங்கத்தில் (கம்யூனிஸ்டு சங்கம். –ப-ர்.) சேர்ந்த பொழுது அதிகாரத்தை வகிப்பவர்களிடம் குருட்டுத்தனமான மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்க முற்படுகின்ற அனைத்தும் விதிமுறைகளிலிருந்து நீக்கப்படுவதை நிபந்தனையாக முன்வைத்தோம்.”(3)

ஒரு நபர் எதை விரும்புகிறார் என்பதைக் கொண்டு மட்டுமல்லாமல் அவர் எதை வெறுக்கிறார் என்பதைக் கொண்டும், எதற்கு அனுதாபம் காட்டுகிறார் என்பதை மட்டுமல்லாமல் எதை அருவருப்பாகக் கருதுகிறார் என்பதைக் கொண்டும் அவர் எப்படிப்பட்டவர் என்று கூற முடியும். உங்கள் எதிரி யார் என்பதைச் சொல்லுங்கள், நீங்கள்யார் என்று நான் சொல்கிறேன்.

குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளில் ஒருவரான கார்ல் ஹுர்த்ஸ் 1848-இல் கொலோனில் ஜனநாயகச் சங்கங்களின் காங்கிரசில் கார்ல் மார்க்ஸ் சொற்பொழிவாற்றியதைக் கேட்டார்.

மார்க்ஸ் “Burger (முதலாளி, அற்பவாதி) என்ற சொல்லை எவ்வளவு தீவிரமான அருவருப்புடன் உச்சரித்தார் என்பதை அவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் மறக்கவில்லை. மார்க்ஸ் தன் கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் கடிதங்களிலும் ஏராளமான அற்பவாதிகளுக்கு அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு பரிசு வழங்கியிருக்கிறார். அந்த நபர் தன்னுடைய விமர்சனத்துக்குத் தகுதியுடையவரா என்பதைப் பற்றி மார்க்சுக்கு அக்கறையில்லை. அதன் பலனாகப் பல அனுமதேயங்கள் மார்க்சினால் விமர்சிக்கப்படுகின்ற புகழைப் பெற்றார்கள்.

லேஸ் ஸிங்கைப் பற்றி ஹேய்னெ பின்வருமாறு கூறியது மார்க்சுக்கு முற்றிலும் பொருந்தும்: “அவர் தன் எதிரிகளை அழிக்கின்ற பொழுது அவர்களை அமரர்களாக்கினார்.” இந்த அற்பமான எழுத்தாளர்களை மார்க்ஸ் தன்னுடைய அறிவார்ந்த இகழ்ச்சிக்கு, மேன்மையான நகைச்சுவைக்கு இலக்காக்கினார்; அம்பரில் புதைந்திருக்கும் கொசுக்களைப் போல அவர்கள் இப்பொழுது அவருடைய நூல்களில் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிருர்கள்.”(4)

மார்க்சின் வாழ்க்கை முழுவதிலும் அற்பவாதிகள் (மூன்றாம் நெப்போலியன் முதல் பத்திரிகை நிருபர்கள் வரை) அவதூறுகள், ஒடுக்கு முறைகள், பொய்களின் மூலமாக அவரைப் பழிவாங்குவதற்கு முயற்சி செய்தார்கள்; அவை பலனளிக்கவில்லை என்றால் அவருடைய புத்தகங்களை முற்றிலும் புறக்கணித்துவிடுவதன் மூலம் பழிவாங்கினார்கள்.

எனினும் எல்லாக் கடுமையான சோதனைகளுக்குப் பிறகும் எந்த விஷயத்திலும் மார்க்ஸ் அற்பவாதிக்கு விட்டுக் கொடுக்கவில்லை, “அற்பவாதிக்குக் கீழ்நிலையில்” இருக்கவில்லை, எப்பொழுதுமே அவனுடன் போராடுவதற்குத் தயாராக இருந்தார். “ஆம், எப்படியிருந்தபோதிலும் அற்பவாதிக்குக் கீழே இருப்பதைக் காட்டிலும் அற்பவாதிக்கு எதிர்ப்பு என்பது நமக்கு நல்ல மூதுரையாகும்.”(5) என்று மார்க்ஸ் ஒரு கடிதத்தில் எழுதினார்.

படிக்க :
அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !

அரசியல் துறையில் அற்பவாதி, விஞ்ஞானத் துறையில் அற்பவாதி ஆகிய இருவரிடமும் மார்க்ஸ் ஒரே அளவுக்கு இரக்கமின்றி நடந்து கொண்டார்.

விஞ்ஞானத் துறையில் அற்பவாதம் கவனிக்கப்பட்ட விவரங்களிலிருந்து தப்ப முடியாத முடிவுகளைப் பெறுவதற்கு அஞ்சுகின்ற, விஞ்ஞானத்துக்கு அப்பாலுள்ள எல்லாக் கருத்துக்களையும் புறக்கணித்து விஷயங்களின் தர்க்கவியலைத் தயக்கமில்லாமல் பின்பற்றிச் செல்ல அஞ்சுகின்ற கோழைத்தனமாக, சிந்தனைக் கயமையாக வெளிப்பட்டது.

அற்பவாதி விஞ்ஞானத் துறையில் உண்மையைத் தேடுவதற்கு மாறாக, உண்மையை மறைப்பதிலும் திரித்துக் கூறுவதிலும் அக்கறை காட்டுகிறார். தன்னுடைய நேர்மையற்ற மழுப்பலின் மூலம் ஆளும் வர்க்கத்தினருடைய நிலையையும் அதன் மூலம் தன்னுடைய நிலையையும் வலுப்படுத்துவதற்குப் பாடுபடுகிறார். உண்மைப்-போலியான பேச்சுக்குப் போலி விஞ்ஞான உடையை மாட்டுவதன் மூலம் அவர் உண்மையைக் குழிதோண்டிப் புதைக்கிறார்.

அற்பவாதி விஞ்ஞானத்தைக் கருவியாக உபயோகித்து விஞ்ஞானத்துக்குச் சம்பந்தமில்லாத தன்னுடைய சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கிறார். அவர் “கீழான நோக்கங்களுக்கு” அதை உபயோகிக்கிறார். “ஆனால் ஒரு மனிதர் விஞ்ஞானத்தை விஞ்ஞானத்திலிருந்து வருவிக்கப்படாத ஒரு கருத்துக்கு, (அது எவ்வளவு தவறானதாக இருந்தாலும்) வெளியே, அந்நிய, வெளிப்புற நலன்களிலிருந்து வருவிக்கப்பட்ட கருத்துக்குத் தகவமைக்க முயற்சிக்கும் பொழுது நான் அந்த நபர் இழிவானவர் என்கிறேன்.”(6)

இவை சவுக்கால் அடிப்பதைப் போன்ற, கன்னத்தில் அறைவதைப் போன்ற சொற்கள். மால்தஸ், ரொஷேர் மற்றும் பாஸ்தியாவைப் போன்ற விஞ்ஞானப் புரட்டர்களை நோக்கி மார்க்ஸ் இந்தக் கணைகளை வீசுகிறார். பாதிரியாரான மால்தசைப் பற்றி மார்க்ஸ் அளவிட முடியாத அருவருப்பை அடைகிறார்; ஏனென்றால் “இந்தக் கழிசடை” கொடுக்கப்பட்ட விஞ்ஞானக் கருதுகோள்களிலிருந்து (அவற்றை அவர் தவறாமல் திருடுகிறார்) ஆளும் வர்க்கங்கள் “விரும்பக் கூடிய” முடிவுகளையே வருவிக்கிறார்(7)

இந்த வர்க்கங்களை “மனதில் நினைத்துக் கொண்டு” விஞ்ஞான முடிவுகளைத் தயாரிக்கிறார், ஆனால் அவருடைய முடிவுகள் “ஒடுக்கப்பட்டிருக்கின்ற வர்க்கங்களைப் பொறுத்தமட்டில் இரக்கமற்றவையாகும்”. “இங்கே அவர் இரக்கமில்லாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் இரக்கமில்லாதவரைப் போல பாவனை செய்கிறார்: அதில் அவருக்கு இருள்கவிந்த மகிழ்ச்சி இருக்கிறது…”(8)

விஞ்ஞானத் துறையில் இத்தகைய விஞ்ஞானி அடுத்தவருடைய உழைப்பை அபகரிப்பது வழக்கம்; ஆனால் இங்கும் அவர் தனக்கு உண்மையானவராக நடந்து கொள்கிறார். “ஒரு கருத்தைக் கண்டுபிடிப்பவர் முழுமையான நேர்மையுடன் அதை மிகைப்படுத்திக் கூறலாம்: காப்பியடிப்பவர் அதை மிகைப்படுத்துகின்ற பொழுது அத்தகைய மிகைப்படுத்துதலே அவர் ஒரு தொழிலாக மாற்றிவிடுகிறார்.”(9)

விஞ்ஞானத் துறையில் சிந்தனைக் கயமையை இப்படி ஆவேசமாகக் கண்டிக்கும் பொழுது மார்க்ஸ் தன்னுடைய வெறுப்புக்களை மட்டுமல்லாமல் அனுதாபங்களையும் – உண்மையான விஞ்ஞானியைப் பற்றி, தன்னலமற்ற முறையில் உண்மைக்குச் சேவை புரிவதைப் பற்றித் தன்னுடைய கருத்தை – வெளிக்காட்டுகிறார்.

குறிப்புகள்;

(1)F. Lassalle, Nachgelassene Briefe und Schriften, stuttgart-Berlin, 1922, Bd, III, S. 355.
(2)W. Lienknecht, Karl Marx zum Gedachtnis. Ein Lebensabriss und Erinnerungen, Nurnberg, 1896, S. 65-66.
(3)மார்க்சையும் எங்கெல்சையும் பற்றிய நினைவுக் குறிப்புகள்,முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1973,பக்கம் 246.
(4)Marx, Engels, Selected Correspondence, Moscow, 1957, p. 291.
(5)Heines Werke imfunf Banden, Bd, 5, Weimer, 1956, S. 90.
(6) Marx, Engles, Werke, Bd, 30, S. 495.
(7)Karl Marx, Theories Of Surplus-value, Part II, Moscow, 1975, p. 119.
(8) Ibid., p. 118.
(9) Ibid., p. 120.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள் :

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
  18. கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்
  19. விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !
  20. அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது !
  21. மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க