மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 37

மாக்சிம் கார்க்கி
ரு நெசவுத் தொழிற்சாலையைச் சேர்ந்த பள்ளிக்கூடத்தில் நதாஷா ஆசிரியை வேலை பெற்றாள். தாய் அவளுக்கு அவ்வப்போது சட்டவிரோதமான பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் அறிக்கைகளையும் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வருவாள்.

இதுவே அவளது வேலையாகிவிட்டது. மாதத்தில் எத்தனையோ தடவைகளில், அவள் ஒரு கன்னியாஸ்திரி மாதிரியோ, அல்லது துணிமணி, ரிப்பன், லேஸ் முதலியனவற்றை விற்கும் அங்காடிக்காரி போலவோ, அல்லது செயலுள்ள பட்டணக்கரைக் குடும்பப் பெண் மாதிரியோ, பக்திமயமான புண்ணிய ஸ்தல யாத்திரிகை போலவோ மாறுவேஷம் தரித்துக் கொள்வாள். தோளிலே ஒரு பையையாவது; கையிலே ஒரு டிரங்குப் பெட்டியையாவது தூக்கிக்கொண்டே அவள் அந்த மாகாணம் முழுவதும் சுற்றித்திரிந்தாள். ரயிலாகட்டும், படகாகட்டும், ஹோட்டலாகட்டும், சத்திரம் சாவடிகளாகட்டும். எங்குப் போனாலும் அவள்தான் அங்குள்ள அன்னியர்களிடம் மிகுந்த அமைதியோடு முதன்முதல் பேச்சைத் தொடங்குவாள். கொஞ்சம் கூடப் பயனில்லாமல் தன்னுடைய அனுபவ அறிவினாலும், சுமூகமாகப் பழகும் தன்மையாலும் அவர்களது கவனத்தையெல்லாம் தன்பால் கவர்ந்துவிடுவாள்.

ஜனங்களோடு பேசுவதிலும் அவர்களது கதைகளையும் குறைபாடுகளையும், அவர்களைப் புரியாது மயங்கவைக்கும் விஷயங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வதிலும் அவள் விருப்பம் கொண்டாள். வாழ்க்கையில் மிகவும் சலித்துப்போய், காலத்தின் கோலத்தால் தமது வாழ்க்கையில் அடிமேல் அடி வாங்கியதை எதிர்த்து அவற்றைத் தவிர்ப்பதற்கு, தன் மனத்தில் எழும் தெள்ளத் தெளிவான கேள்விகளுக்கு விடையும் மார்க்கமும் தெரியாமல், அதைத் தெரிந்து கொள்வதற்கு இடைவிடாது துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் மக்களில் யாரையேனும் கண்டால், தாய்க்கு ஒரே ஆனந்தம் உண்டாகும். கும்பிக் கொதிப்பைத் தவிர்ப்பதற்காக மனிதர்களால் நடத்தப்படும் அமைதியின்மை நிறைந்த போராட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் அவளது கண் முன்னால் திரை விரித்துப் படர்ந்து தெரியும்.

எங்குப் பார்த்தாலும் மனிதர்களை ஏமாற்றி ஏதாவது ஆதாயம் பார்ப்பதற்காக வென்று செய்யும் கொச்சையான அப்பட்டமான முயற்சிகளையும் சொந்த சுயநலத்துக்காக மக்களைக் கசக்கிப் பிழிந்து அவர்களது கடைசிச் சொட்டு ரத்தம் வரையிலும் உறிஞ்சிக் குடிப்பதையும் அவள் தெள்ளத் தெளிவாகக் காண முடிந்தது. உலகத்திலே அமோகமான வளமும் செல்வமும் நிறைந்திருப்பதையும் அதே சமயத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தச் செல்வவளத்துக்கு மத்தியிலேயும் கூட அரைப்பட்டினி குறைப்பட்டினியாக உயிர் வாழ்வதையும் எப்போதும் தேவையின் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி வாழ்வதையும் அவள் கண்டாள்.

தேவாலயங்களிலோ பொன்னும், வெள்ளியும் நிறைந்து கிடந்தன. அவற்றால் ஆண்டவனுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. அதே சமயத்தில், அந்த கோயில்களின் வாசல்களிலே பிச்சைக்காரர்கள் நடுநடுங்கிக்கொண்டே, தங்களுடைய கைகளிலே வந்து விழும் பிச்சைக்காசுக்காகப் பயனின்றிக் காத்துக்கிடந்தார்கள். இதற்கு முன்பு கூட அவள் இது மாதிரிக் காட்சிகளைக் கண்டிருக்கிறாள்; பணம் படைத்த தேவாலயங்களையும் பொன்னாபரணம் கொண்ட உடைகளை அணிந்த பாதிரிகளையும் அவள் கண்டிருக்கிறாள். இந்த நிலைமை பிச்சைக்காரர்களின் குடிசைகளுக்கும், கிழிந்து பழங்கதையாய்ப் போய் மானத்தை மறைக்கக்கூட இயலாத அவர்களது துணிகளுக்கும் எதிர்மறைவான காட்சியாயிருப்பதையும் அவள் கண்டிருக்கிறாள். ஆனால் முன்பெல்லாம் அவள் இந்த மாதிரி எதிரும் புதிருமான வித்தியாசத்தை இயற்கை நியதி என்று கருதிச் சாமாதானம் அடைந்தாள். இப்போதோ இந்த நிலைமை அவளால் தாங்க முடியாததாயிருந்தது. பணக்காரர்களைவிட ஏழைகட்கு தேவாலயம் அருகிலேயும் தேவைமிக்கதாயும் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. எனவே பிச்சைக்காரர்களுக்கு இழைக்கும் எந்தக் கொடுமையையும் அவளால் பொறுக்க முடியவில்லை.

அவள் பார்த்த கிறிஸ்துநாதரின் சித்திரங்களிலிருந்தும், கிறிஸ்துவைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்த கதைகளிலிருந்தும், கிறிஸ்துநாதர் எளிய உடைகள் தரித்து ஏழைகளின் நண்பராகவே இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால், இந்தத் தேவாலயங்களிலோ கிறிஸ்துநாதரின் உருவத்தை அவர்கள் பளபளக்கும் பொன்னாலும், சரசரக்கும் பட்டைகளாலும் அலங்கரித்திருந்தார்கள்; பிச்சைக்காரர்கள் அவரது அருளை நாடி தேவாலயத்துக்கு வந்தால் அந்தப் பட்டுப் பட்டாடைகள் அவர்களைப் பார்த்துச் சீறிச் செருமுவதாகவே அவளுக்குத் தெரிந்தது. அப்போதெல்லாம் அவள் ரீபின் சொன்ன வாசகத்தைத் தன்னையும் அறியாமல் நினைத்துக் கொள்வாள்.

”கடவுளைக் கொண்டும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்!”

அவள் தன்னையும் அறியாமலே வரவரப் பிரார்த்தனை செய்வதைக் குறைத்துவிட்டாள். ஆனால் கிறிஸ்துவைப் பற்றி அதிகமாக நினைத்தாள். அதுமட்டுமல்லாமல், கிறிஸ்துநாதரின் பெயரையே சொல்லாமல், அவரைப் பற்றித் தெரிந்துகூடக் கொள்ளாமல், அதே சமயத்தில் அவள் தனக்குள்ளாகக் கருதியது போல், கிறிஸ்துநாதரின் கொள்கைகளின்படி வாழ்ந்து, அவரைப்போலவே இந்த உலகத்தை ஏழைகளின் சாம்ராஜ்யமாகக் கருதி இவ்வுலகின் சகல செல்வங்களையும் மக்கள் குலத்தோர் அனைவருக்கும் சரிநிகர் சமானமாகப் பங்கீடு செய்ய வேண்டும் என்று விரும்பி வாழ்கின்ற மக்களைப் பற்றியும் அவள் அதிகமாகச் சிந்தித்தாள். அவளது மனம் இந்த எண்ணத்தின் மீதே பதிந்து படிந்தது. அவளது சிந்தனைகள் அவளது மனத்துக்குள்ளாகவே விரிந்து வளர்ந்து அவள் பார்க்கின்ற பொருளனைத்தையும் கேட்கின்ற விஷயங்கள் அனைத்தையும், அணைத்து ஆரத்தழுவி, வரவரத் தீட்சண்ணியம் பெற்று வளர்ந்தோங்கின. அந்தச் சிந்தனைகள் வளர்ந்தோங்கி, ஒரு பிரார்த்தனையின் பிரகாசத்தோடு விளங்கின.

இந்த இருள் சூழ்ந்த உலகத்தின் சகல திசா கோணங்கள் மீதும் நமது சர்வஜன சமூகத்தின் மீதும், வாழ்க்கையின் மீதும், ஒளிய பிரவாகத்தை எங்கெங்கும் ஒரே சமனமாகப் பாய்ச்சி ஒளி செய்தன. நான் என்றென்றும் ஒரு மங்கிய பரிவுணர்ச்சியோடு நேசித்து வந்த கிறிஸ்துநாதர் – துக்கம் கலந்த இன்பமும் பயங்கலந்த நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த குழப்ப உணர்ச்சியோடு நேசித்து வந்த அதே கிறிஸ்துநாதர் – தன்னருகே நெருங்கி வந்துவிட்டது போன்று தாய்க்குத் தோன்றியது. இப்போதோ இயேசுகிறிஸ்து முன்னைவிட உயர்ந்த ஸ்தானத்தில் கண்ணெட்டும் தூரத்தில் ஒளிரும் முகத்தோடு மகிழ்வாய் வீற்றிருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. மனிதர்களின் நண்பராக கிறிஸ்துவின் பெயரைக் கூட மரியாதையின் காரணமாகச் சொல்லக்கூசிய மக்கள், அவருடைய திருநாமத்துக்காகத் தங்கள் இரத்தத்தைத் தாராளமாகச் சிந்தினார்கள். அந்தப் புனித இரத்தத்தால் கழுவப்பெற்று, புத்துணர்ச்சி பெற்று, உண்மையாகவே அவர் மீண்டும் உயிர்தெழுந்து வந்துவிட்டது போல் அவளுக்குத் தோன்றியது. தனது சுற்றுப் பிரயாணங்களை முடித்துவிட்டு, அவள் திரும்பி வந்து நிகலாயைச் சந்திக்கும்போது மிகுந்த உணர்ச்சியையும் உவகையும் கொண்டவளாக இருப்பாள். வழியெல்லாம் அவள் கண்ட விஷயங்களும் கேட்ட விஷயங்களுமே அந்த உவகைக்குக் காரணம். தனது கடமையை நிறைவேற்றிவிட்ட திருப்தியில் அவள் மனம் குதூகலித்து நிறைவுபெறும்.

“இந்த மாதிரிச் சுற்றித் திரிந்து எவ்வளவோ விஷயங்களைக் காண்பது மிகவும் நன்றாயிருக்கிறது” என்று ஒருநாள் மாலை அவள் அவனிடம் சொன்னாள். ”இவற்றால் நாம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஜனங்களே வாழ்க்கையின் கடைக்கோடிக்கே தள்ளிச் செல்லப்பட்டிருக்கிறார்கள். வாழ்வின் எல்லைக் கோடியிலே அவர்கள் என்ன நடந்திருக்கிறது என்பதொன்றும் தெரியாது தட்டுத் தடுமாறித் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்களைப் பிறர் ஏன் இப்படி நடத்த வேண்டும் என்பதை மட்டும் அவர்களால் நினைத்து நினைத்து அதிசயப்படாமலிருக்க முடியவில்லை. அவர்களை ஏன் இப்படி விரட்டியடிக்க வேண்டும். எல்லாமே நிறையப் பெருகிக் கிடக்கும்போது அவர்கள் மட்டும் ஏன் பசியால் வாட வேண்டும்? எங்குப் பார்த்தாலும் கல்வியறிவு நிறைந்திருக்கும்போது, அவர்கள் மட்டும் ஏன் அஞ்ஞான இருளில் ஒன்றுமறியாத பாமரர்களாயிருக்க வேண்டும்? மக்களைப் பணக்காரன் என்றோ ஏழை என்றோ கருதாமல் தனது அன்பு மிக்க குழந்தைகளாகக் கருதும் அந்தத் தயாபரன், அந்தக் கடவுள் எங்கு போனார்? தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி மக்கள் சிந்திக்கும்போது அவர்களுக்கு ஆத்திரம்தான் பொங்குகிறது. இந்த அநீதியைத் தவிர்க்க ஏதேனும் செய்யாவிட்டால், அந்த அநீதியே தங்களைத் துடைத்துத் தூர்த்து அழித்துவிடும் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

மக்களது வாழ்க்கைக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி அந்த மக்களிடமேதான் பேச வேண்டும் என்ற ஆசை அவளுக்கு எத்தனையோ சமயங்களில் எழுவதுண்டு. சமயங்களில் இந்த ஆசையை அடக்கியாள்வதே அவளுக்குப் பெரும்பாடாய்விடும்.

தாய் சித்திரப் புத்தகங்களைக் குனிந்து பார்த்துக்கொண்டிருப்பதை நிகலாய் கண்டுவிட்டால் உடனே லேசாகப் புன்னகை புரிவான்; அவளுக்கு உலகத்து அசிசயங்களில் ஏதாவது ஒன்றைப் பற்றிச் சொல்லுவான். மானுடத்தின் அசகாயத் துணிச்சலைக் கண்டு வியந்துபோய் அவள் திடுக்கெனக் கேட்பாள்.

“இப்படியும் நடக்க முடியுமா?”

தனது தீர்க்கதரிசனத்தின் உண்மையின்மீது தான் கொண்டுள்ள அசைக்க முடியாத, ஆணித்தரமான உறுதியோடு நிகலாய் அவளைத் தனது கண்ணாடியணிந்த கண்களால் அன்பு ததும்பப் பார்ப்பான், பார்த்தவாறு எதிர்காலச் சித்திரத்தை விளக்கிச் சொல்லத் தொடங்குவான்.

”மனிதனுடைய ஆசைகள் அளவு கடந்தவை. அவனது சக்தியோ வற்றி மடியாதது என்றாலும் கூட, இந்த உலகத்தில் ஆத்மபலம் சிறிது சிறிதாகத்தான் பெருகுகிறது. ஏனெனில், இன்று சுதந்திரமாக இருக்கப் பிரியப்படுபவர்கள் எல்லாம் அறிவைச் சேகரிப்பதைவிட பணத்தையே சேகரிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால், மாந்தர்கள் இந்தப் பேராசையைத் தொலைத்து, தங்களை அடிமைப்படுத்தும் பலவந்தமான உழைப்பிலிருந்து விடுதலை பெற்றால்……”

இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அவளால் கண்டுகொள்ள முடியவில்லை. என்றாலும் அவற்றைத் தூண்டிவிடும் அமைதி நிறைந்த நம்பிக்கை மட்டும் அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.

”உலகத்தில் சுதந்திரமாக இருப்பவர்கள் மிகச் சிலரே; அதுதான் துர்ப்பாக்கியம்!” என்றாள் அவள்.

படிக்க:
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு !

அவளுக்கு இதுமட்டும் புரிந்தது. பேராசையிலிருந்தும் குரோதத்திலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டவர்கள் அவளுக்குத் தெரியும். அந்த மாதிரியானவர்கள் மட்டும் அதிகமாக இருந்தால் வாழ்க்கையின் இருளும் பயங்கரமும் தொலைந்து போகும், வாழ்க்கை எளிமையாகவும் ஒளிபெற்றும் மகோந்நதமாகவும் விளங்கும்.

“கொடியவர்களாகும் நிர்ப்பந்தத்துக்கு மக்கள் ஆளாகிறார்கள்!” என்று துயரத்தோடு சொன்னான் நிகலாய்.

அதை ஆமோதித்து அந்திரேய் முன்னர் சொன்ன வார்த்தைகளை எண்ணி, தலையை அசைத்துக்கொண்டாள் தாய்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க