ண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தடாலடியாக ஒரே நாளில் விவாதம் – வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ள, 10 சதவிகித இட ஒதுக்கீடு (பொருளாதார அடிப்படையைக் கணக்கில் கொண்டு) முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற இந்திய அரசியல் சட்டத்தின் 103-வது திருத்தத்தை ஏன், எதற்காக எதிர்க்கிறோம் என்பதை – இட ஒதுக்கீடு ஏன், எதற்காக, எப்படி – எப்போது ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லாத இளைய தலைமுறையும், மேலெழுந்தவாரியாக ஏழைகளுக்கும் இட ஒதுக்கீட்டை இவர்கள் எதிர்ப்பது என்ன நியாயம் என்று குழம்பியுள்ளவர்களுக்கும் தெளிவுபடுத்துவது மிக அவசியமாகும்.

இந்த ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நமது நாட்டில் (இந்தியாவில்) ஏன் தேவைப்படுகிறது?

உலகில் எங்குமில்லாத ஜாதி – வர்ண தர்மமுறை, தீண்டாமை என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு.

மனுதர்மத்தில் முதலாம் அத்தியாயம் 87 ஆவது சுலோகத்தில் அந்தப் பிரம்மாவானவர் “தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்றுமுண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.”

இதன்படி, பிராமணர்களுக்கே கல்வி ஏகபோகம். அதுமட்டுமா? அதனை மீறி கல்வி அக்காலத்தில் வேதம் கற்க மற்றவர்கள் முயன்றால், நாக்கை அறுக்க வேண்டும்; காதால் ஓதுவதைக் கேட்டால். காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்கிறது மனுதர்மம் (டாக்டர் அம்பேத்கர்).

இதனால், கீழ்ஜாதிக்காரர்கள் காலங்காலமாய், கல்வியறிவு பெற முடியாதவர்களாகவும், அதன் விளைவாக அரசு வேலை வாய்ப்புகளை நினைத்துப் பார்க்க முடியாத ‘மன ஊனம்” உற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்! சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசன், டாக்டர் டி.எம்.நாயர் ஆகிய திராவிடர் இயக்க முன்னோடிகள் – பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையில் இதனைச் சுட்டிக்காட்டி, (வகுப்புவாரி உரிமை) சமூகநீதி வேண்டும் என்று கேட்கப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபோது 1920 முதல் 1925 வரை ஒவ்வொரு மாகாண மாநாட்டிலும் முயன்று வெற்றி பெறாத நிலையில், சமூகநீதிக்காகவே – இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்காகவே காங்கிரசை விட்டு 1925 இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டிலிருந்து வெளியேறினார்.

இவர்களுக்காகத்தான் 1920 இல் பதவியேற்ற நீதிக்கட்சி – திராவிடர் இயக்கம் – அதன் ஆட்சியின்போது வெள்ளைக்காரர்களிடம் ஆட்சியின் அதிகாரம் இருந்த “இரட்டை ஆட்சி முறையிலும் முயற்சித்து. 1921, 1922 என்று இரண்டு வகுப்புவாரி ஆணைகளைப் பிறப்பித்தனர். அது சரியாக செயல்படாததால், தந்தை பெரியார் போன்ற தலைவர்களின் ஊக்கத்தினால், நீதிக்கட்சித் துணையுடன் ஆட்சி அமைத்த டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இடம்பெற்ற எஸ்.முத்தய்யா (முதலியார்) ஒரு புது வகுப்புவாரி உரிமை ஆணை (ஜி.ஓ) அனைவருக்கும் இட ஒதுக்கீடு தரும் வகையில் பார்ப்பனர்கள் உள்பட ஜனத்தொகையில் 3 சதவிகிதம் உள்ள பார்ப்பனர்களுக்கு 17 சதவிகிதம் இட ஒதுக்கீடு 1928 முதல் அமலில் வந்தது; அதனால், வகுப்புவாரி உரிமையில், பார்ப்பனரல்லாதாரில் ஆதிதிராவிடர், இசுலாமியர், கிறித்துவர் என்று பலருக்கும் இட ஒதுக்கீடு தரப்பட்டு – இட ஒதுக்கீடு ஒரு சமுகநீதியைத் தந்தது!100சதவிகிதஏகபோகம் அனுபவித்தவர்களுக்கு 17 சதவிகிதத்தை ஏற்க மனமில்லை !!

“1950 இல் அமலான இந்திய கூறப்பட்டிருக்கும் இது சமத்துவத்திற்கு விரோதம்” என்று அடிப்படை அரசியல் சட்டத்தில் உரிமை கோரி, செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பன) அம்மையார்”‘ போட்ட வழக்கு. கம்யூனல் ஜி.ஓ. வகுப்புவாரி உரிமை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புக் கூறியதனால், 1928 முதல் 1950 வரை அமலில் இருந்த வகுப்புவாரி உரிமை ஆணை செல்லாததானது.

இதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த தந்தை பெரியார் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் திரட்டி, ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார். அப்போதைய பிரதமராக இருந்த நேரு அவர்கள், சட்ட அமைச்சர் அம்பேத்கருடன் கலந்து, முதல்முறையாக அரசியல் சட்டத்தைத் திருத்தினார்.

அப்போது கல்வி உத்தியோகங்களில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்” ‘Socially and educationally’ என்ற சொற்றொடரையே பயன்படுத்தினர். அந்த அடையாளம் ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் நலம் பற்றி இந்திய அரசியல் சட்டத்தின் 340 ஆவது பிரிவில் உள்ள சொற்றொடர்களே).

அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த சிலரும், ‘பொருளாதார ரீதியாக’ (Economically) என்பதையும் இணைக்கவேண்டுமென்று விவாதம் எழுந்தது. பிரதமர் நேரு சொன்னார்.

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

“ஜாதியால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டது பாரம்பரியமானது. தெளிவானது. பொருளாதார அளவுகோல் ஆண்டுக்காண்டு மாறக்கூடியது. இன்றைய பணக்காரன் நாளைய ஏழையாகவும், இன்றைய ஏழை மறுநாள் பணக்காரனாகவும் ஆகலாம். ஆனால், கீழ்ஜாதிக்காரன் ஒருபோதும் மேல்ஜாதிக்காரன் ஆக முடியாது: சுடுகாடுகூட தனித்தனிதான்! பிறவி அடிப்படை என்பது மாறாத, மாற்ற முடியாத சமூக அடிப்படை எனவே, நமது அரசியல் சட்ட கர்த்தாக்கள் அந்த இரு சொற்களைப் போட்டார்கள்” என்ற கருத்தை உள்ளடக்கிய விளக்கம் தந்ததை ஏற்றார்கள்!

எனவே, இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம்’ (Socially handicapped) ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே!

பசியேப்பக்காரனுக்குப் பந்தியில் முன்னுரிமை தரவேண்டிய அவசியம்போல – புளியேப்பக்காரனுக்குப் பந்தியில் இடம் தருதல் தேவையற்றது.

வறுமை ஒழிப்புத் திட்டங்களை அரசு வகுப்பதையும், அனைவருக்கும் அனைத்தும் தருவதையும் நாம் எதிர்ப்பதில்லை, ஆனால், “இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல” என்பதை உச்சநீதிமன்றமே பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.(நூலிலிருந்து பக்.11-14)

இந்திரா – சகானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய மண்டல் கமிசன் இடஒதுக்கீடு பற்றிய வழக்கு தீர்ப்பில் 13(1), 14, 15, 15(4) ஆகிய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி (16.11.1992 மிகவும் தெளிவாகவே பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆணை அறவே செல்லாது என்று திட்டவட்டமாகவே தீர்ப்பளித்துவிட்டது.

15(4) என்று முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணர்ந்தபோது பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் பி.ஆர்.அம்பேத்கர் எல்லாம் பல உறுப்பினர்களுடன் விவாதித்தபோதும், அதற்கு முன்பே அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விரிவான 340 அய் எழுதும்போதே – எந்தெந்த வரையறைச் சொற்கள் விவாதிக்கப்பட்டு பின் போடப்பட்டதோ அதே சொற்களைத்தான் “Socially and Educationally” என்று போடப்பட்டதை அப்படியே 15(4) என்ற புதுப்பிரிவை பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்திலும் கையாளப்பட்டது

அப்போது சில உறுப்பினர்கள் ‘Economically’ என்றும் இணைத்து. அந்த அளவுகோலையும் இணைக்கவேண்டும் என்று வாதாடியபோது, பிரதமர் நேரு பொருளாதார அளவுகோல் என்பது அவ்வப்போது ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது. அது திட்டவட்டமான அளவுகோல் அல்ல. அது குழப்பத்திற்கு ஆளாகும் என்று அரசியல் நிர்ணய சபை, முதலாவது அரசியல் திருத்தத்தின்போது நடைபெற்ற விவாதங்களில் தெளிவாக்கப்பட்ட பிறகுதான், பொருளாதார அளவுகோல் கைவிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் பொருளாதார அளவுகோலுக்கு ஆதரவாக 5 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் பதிவாயின), 340 பிரிவிலிருந்த “Socially and Educationally” ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்’ என்ற சொற்றொடர்களே போடப்பட்டது என்பது வரலாறு.

படிக்க:
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்

மேலும், நரசிம்மராவ் பிரதமரானபோது தனியே 10 விழுக்காடு பொருளாதார அடிப்படையில் ஒதுக்கியதும், அதனால்தான் 9 நீதிபதிகள் அமர்வால் செல்லாதது என்று தீர்ப்பளிக்கப்பட்டது!

ஜஸ்டிஸ் ஓ.சின்னப்ப ரெட்டி என்ற உச்சநீதிமன்ற நீதிபதி மிக அழகான விளக்கத்தை ஒரு வழக்கில் கூறினார். ‘Reservation is not a poverty alleviation scheme’ இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் இதுவரை காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தைக் கைதூக்கி விடுவது: கடந்த கால அநீதிக்குப் பரிகாரம் தேடுவதற்கான வழிவகையே தவிர, வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: அதற்குப் பல வழிகள் தனியே காணவேண்டுமே தவிர, இதனை அதற்குப் பயன்படுத்துவது அரசியல் சட்ட விரோதம் என்றும் தெளிவுபடுத்தினார்.

இந்திரா – சகானி வழக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் இதே போன்று உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தருவதில் அவசரச் சட்டம் (Ordinance) (1.5.2016) கொண்டு வரப்பட்டதை எதிர்த்து “தயாராம் வர்மா vs குஜராத் மாநில அரசு” என்ற வழக்கின் 104 ஆவது பக்கத் தீர்ப்பில் அதனை செல்லுபடியற்றது (Quashed) (4.8.2016) என்று அடிபட்டு விட்டது. (நூலிலிருந்து பக்.5-7)

நூல்: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான 10% இடஒதுக்கீடு கூடாது – ஏன்?
ஆசிரியர்: கி.வீரமணி

வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
சென்னை – 600 007.
தொலைபேசி: 044 – 2661 8161

பக்கங்கள்: 40
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277