ணிரத்னம் படங்கள் மிகுந்த தொழில்நுட்ப நேர்த்தியோடு எடுக்கப்படுபவை. சினிமா கற்றுக்கொள்ள விரும்புகிற பாலகர்களுக்கு நிறைய அடிப்படை பாடங்களை கற்றுத்தரக்கூடியவை. ஆனால் கருத்துரீயிதில் அவை விஷவாயு பரப்புகிற டாக்ஸிக் குப்பைகள்.

ராஜீவ் மேனன்

மக்கள் விரோத அரசியல் கருத்துகளை பாலிஷாக பளபளப்பான காகிதங்களில் சுற்றிக்கொடுப்பதில் ­கைதேர்ந்தவர் மணிரத்னம். ரோஜா, இருவர், உயி­ரே படங்கள் நல்ல உதாரணம். கடைசியாக வெளியான செக்க சிவந்த வானம் வரை அவருடைய சில்மிஷங்களுக்கு குறைவேயில்லை. போகிறது… அவருடைய சிந்தனைப் பள்ளியில் இருந்து உருவாகி வந்தவர் ராஜீவ் மேனன். அவர் முற்போக்கான தலித் வாழ்வியல் படத்தை இயக்கியிருக்கிறார். அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

சமகாலத்தில் தலித் அரசியல் நன்கு விற்கிற பண்டமாக மாறியிருக்கிறது. நிறைய தலித் படங்கள் வருவதும் நல்லதுதானே… உறுதிபட நல்லதுதான். அது என்ன மாதிரியான அரசியலை, விவாதங்களை, பார்வைகளை கருத்தியலை முன்வைக்கிறது, கடத்துகிறது என்பதில்தான் இருக்கிறது ஆபத்து. ஒரு கதை யாருடைய பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது என்பதிலிருந்தே ஒரு படம் பேச விரும்புகிற செய்தியும் அது கடத்த விரும்புகிற அரசியலும் நிர்ணயிக்கப்படுகிறது.

சேரிப்பையன் சபாவில் கச்சேரி பண்ண ஆசைப்படுகிற கதையை… நீங்கள் சபாவில் நின்று கொண்டு சொல்வதற்கும் சேரியில் நின்று கொண்டு சொல்வதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. அதுதான் சர்வம் தாள மயத்தின் சிக்கலே. அது மைலாப்பூர் லஸ்கார்னரில் நின்று கொண்டு காசிமேட்டுக்காரனின் கஷ்டங்களைப் பேசுகிறது.

படிக்க:
♦ இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !
♦ வாசகனின் காசு மட்டும் வேண்டும் … அவனது கஷ்டங்களை கவனிக்க வேண்டாமா ?

நந்தனார் கதையை நவீன வடிவில் மீளுருவாக்கம் செய்கிற முயற்சியாகவே சர்வம் தாள மயம் படத்தை புரிந்து கொள்ள முடிகிறது. நந்தனார் என்கிற நாயன்மாரின் கதை ஒரளவு எல்லோருக்குமே பரிச்சயமாகத்தானிருக்கும். தெரிந்தவர்கள் அடுத்த பாராவிற்கு… கொஞ்சம் பெரிய கதை. தாழ்த்தப்பட்ட புலயர் குலத்தில் பிறந்து சிவபெருமானை அறிந்து பக்தியில் விழுந்து, அதற்காக சேவை செய்து புகழ்பெற்றவர் நந்தனார்… திருப்பூன்கூரின் கோயில் வாசலில் நின்று சிவலோகநாதரை தரிசனம் செய்ய முயல… நந்தி மறைத்து நிற்க… அதை விலக்கி சிவன் காட்சி அளிக்கிறார்.

அடுத்து தில்லையில் சிவபெருமானை தரிசிக்க விரும்புகிறார். ஆனால் அதை நாளை நாளை என தள்ளிப்போட்டு… திருநாளை போவார் என்கிற பெயரே வந்து விடுகிறது. ஒருவழியாக தில்லைக்கு கிளம்புகிற நந்தனாரால் பிறப்பு காரணமாக ஊருக்குள் நுழைய முடியாமல் போகவே ஊரையே சுற்றி சுற்றி வலம் வந்து வழிபட்டு குத்துயிரும் குலையுயிருமாக ஆகிறார். கடைசியில் சிவபெருமானே கனவில் தோன்றி வேள்வித்தீயில் குளித்தால் நீயும் பிரமாணன் ஆகிவிடலாம் என்று ஐடியா கொடுக்கிறார். சிதம்பரத்தில் இருக்கிற பிரமாணர்கள் எல்லாம் சேர்ந்து வேள்வித்தீ அமைத்து அதில் மூழ்கி குளித்து சுத்தமான பிரமாணனாக ஆக முடிவெடுக்கிறார். அந்த ஊர் ஐயர்களே சேர்ந்து வேள்வித்தீ மூட்டி நீதிபதிகளாக நிற்க நந்தனார் தீயில் இறங்கி தன்னை பிராமணனாக மாற்றிக் கொண்டு இறுதியில் கோயிலுக்குள் நுழைகிறார். எவ்வளவு விஷமத்தனமான கதை இது.

அதே கதைதான் சர்வம் தாள மயத்திலும். இங்கே எதிர்பாராமல் பிரபலமான மிருதங்க வித்துவான் குறித்து தெரிந்து கொள்ளும் தலித் நாயகன் அவர் மேல் பக்தியாகி வழிபடத் தொடங்குகிறான். தானும் அவர் போல ஆக விரும்புகிறான். நந்தனாருக்கு நந்தி போல அவருடைய சிஷ்யன் குறுக்கே நிற்கிறான். அவனை விலக்கி கோயிலில் காட்சி தருகிறார் வித்துவான் (இடுப்பில் துண்டோடு கைகட்டி குனிந்து கோயில் வாசலில் பீட்டர் நிற்கிற காட்சியும்.. அதைத் தொடர்ந்து வித்துவானே வெளியே வந்து அவனுக்கு திருநீரு கொடுத்து சிஷ்யனாக சேர்த்துக் கொள்ளும் காட்சி!). இது திருப்பூன்கூர் எபிசோட்.

நாயகனுக்கு சபாவில் கச்சேரி பண்ணுகிற ஆசை வருகிறது (தில்லை தரிசன ஆசை). கடவுள் சோதனைகள் வைக்கிறார். வித்துவானே நாயகனை விரட்டுகிறார். அதனால் அவன் ஊரையெல்லாம் சுற்றிச்சுற்றி வருகிறான். அடுத்து வித்துவானே மனம் நெகிழ்ந்து அவனிடம் மீண்டும் வந்து கடினமான பயிற்சி கொடுத்து தயார் படுத்துகிறார் (கனவில் காட்சி தருதல்). அதாவது கர்நாடக சங்கீத போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற. அந்த வேள்வித்தீயில் குளித்து தன்னை சுத்தமானவன் என நிரூபித்து இறுதியில் பிரமாண வித்துவானுகளுக்கு இணையாக மிருதங்கம் வாசித்து… பிராமண ஜட்ஜ்களால் போற்றப்பட்டு… பிராமணர்கள் நிறைந்த சபாவில் வாசித்து சாதனை படைக்க படம் முடிகிறது.

படத்தின் முதல் பாதி வரை நாயகன் பச்சிளம் பாலகன். உலகம் அறியாதவன். உலகில் சிறந்த இசை கர்நாடக இசைதான் என நம்புகிறான். ஆனால் இரண்டாம் பாதியில் இந்தியாவை சுற்றுகிறான். ஏராளமான இசைகளை கற்றுத் தேர்கிறான். ஆனாலும் அவனுக்கு கர்நாடக இசைதான் அல்டிமேட் என்பதாக இருப்பதுதான் படத்தின் அடிப்படை.

தலித்கள் போராடி முன்னேறி நெருப்பில் வெந்து மேலே வந்துவிட்டால் அவர்களும் பிரமாணர்களைப் போல மேன்மையான இடத்தை அடையலாம் என்பதாக இதைப் புரிந்து கொள்ளலாம். கரெக்ட்டுதானே என்று தோன்றக்கூடும். பாரதியார், இராமானுஜர் கூட சேரிப்பையன்களுக்கு பூணூலை மாட்டிவிட்டு அவர்களையும் உயர்வானவர்களாக மாற்றிவிட்டதாக கதைகள் உண்டு. அதன் நவீன வடிவம்தான் இந்த ச.தா.ம. ‘அதாவது பாருங்க நாங்க எவ்ளோ முற்போக்கானவர்களாக மாறிவிட்டோம், எவ்ளோ கீழ இறங்கி வந்துட்டோம்’ என்பதுதான் படம் சொல்லும் செய்தியாக இருக்கிறதே தவிர இசையில் உயர்வு தாழ்வில்லை என்பதல்ல!

அதாவது தலித்தாக இருப்பதும், பறைவாசிப்பதும் கீழானது. மிருதங்கம் வாசியுங்கள்… பிரமாணர்களிடம் மார்க் எடுங்கள் உங்கள் தரம் உயரும் என்பதாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். டி.எம்.கிருஷ்ணா கூட அடிக்கடி இப்படி சில சேட்டைகள் செய்வதுண்டு. சேரியில் போய் கர்நாடக சங்கீதம் பாடிக்கொண்டிருப்பார். இந்தப் படமும் அதே பாணியில் ஒரு அரசியலையே முன்னெடுக்கிறது.

பார்ப்பனீயத்துக்கோ அவர்களுடைய ஆதிகாலத்து சடங்குகளுக்கோ எந்த பங்கமும் வந்துவிடாமல் பேலன்ஸ்டான பார்வையில் எலைட்டான ஒரு முற்போக்கு அரசியலை முன்னெடுக்கிறார் ராஜீவ் மேனன். படத்தில் போட்டியில் அமர்ந்திருக்கும் நீதிபதிகள்… ”சேரிலருந்து வந்த பையன் எப்படி வாசிக்கிறான் பாரு” என்று ஒரு இடத்தில் வசனம் பேசுகிறார்கள். அதுதான் ஒட்டுமொத்த படத்தின் குரல். சரி தன் பேரிலிருந்தே மேனனை அகற்றிக்கொள்ள விரும்பாதவரல்லவா ராஜீவ்…

நன்றி : அதிஷா
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க