பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 9

னிப்புயல் அடித்த இரவில் தொலைதூரச் சண்டைச் சத்தங்கள் எங்கிருந்து வந்தன என்பதைத் தனது பயணத்தின் ஏழாம் நாள் அலெக்ஸேய் தெரிந்து கொண்டான்.

ஒரேயடியாகக் களைத்துச் சோர்ந்து, ஒவ்வொரு நிமிடமும் நின்று இளைப்பாறியவாறு, வெண்பனி உருகத் தொடங்கியிருந்த காட்டுப் பாதையில் அவன் தளர் நடை நடந்தான்.

பாதை சட்டென்று இடப்புறம் திரும்பிய முனையில் அவன் திடீரென்று கல்லாய் சமைந்து நின்று விட்டான். இரு மருங்கிலும் அடர்ந்திருந்த இளமரங்களால் நெருக்குண்டு பாதை குறுகலாயிருந்த இடத்தில் ஜெர்மன் மோட்டார்களைக் கண்டான். இரண்டு பிரம்மாண்டமான பைன் மரங்கள் அவற்றின் வழியைத் தடுத்து நின்றன. இந்த பைன் மரங்களின் அருகில் தனது ரேடியேட்ரை அவற்றில் புதைந்தபடி நின்றது கோடாரி வடிவான கவச மோட்டார். அது செக்கச் செவேலென்று இருந்தது. அதன் டயர்கள் எரிந்து போய்விட்டதால் அது இரும்புச் சக்கர வளையங்கள் மேல் நின்றது. அதன் பீரங்கி மேடை விசித்திர நாய்க்குடை போல மரத்தின் அடியில் வெண்பனி மீது ஒரு புறமாக விழுந்து கிடந்தது. கவச மோட்டாரின் அருகில் மூன்று பிணங்கள் கிடந்தன. எண்ணெய்க் கறை படிந்த கறுப்புக் கோட்டுகளும் துணித் தலைக் காப்புகளும் அணிந்த மோட்டார் படையினரின் பிணங்கள் அவை.

எரிந்து சிவந்த மேற்பகுதிகளும் கரியாகிக் கறுத்திருந்த உட்பகுதிகளும் கொண்ட இரண்டு ஜீப் கார்கள் கவச மோட்டாரை ஒட்டினாற் போல நின்றன. அவை நின்ற இடத்தில் சுற்றிலும் இளகியிருந்த வெண்பனி எரிவு, சாம்பல், கரி, இவற்றால் கருண்டிருந்தது. நாற்புறமும் – காட்டுப் பாதையிலும், பாதையோரப் புதர்களிலும், நீர் வடிகிடங்குகளிலும் – ஹிட்லர் படை வீரர்களின் பிணங்கள் சிதறிக்கிடந்தன. அந்தப் படைவீரர்கள் கிலியடித்து ஆளுக்கு ஒரு புறமாக ஓடினார்கள் என்பதும், என்ன நடக்கிறது என்று அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளக்கூட இல்லை என்பதுவும், ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு புதருக்கும் பின்னே சாவுப் புயல் வெண்பனிப் போர்வைக்குள் மறைந்து அவர்களுக்காகப் பதிபோட்டுக் காத்திருந்தது என்பதும் அந்த பிணங்கள் கிடந்த கிடையிலிருந்தே தெரிந்தது.

ரத்தக் களரி நடந்த அந்த இடத்தை அலெக்ஸேய் நெடுநேரம் கவனமாய் பார்வையிட்டான். மிதிப்பட்டு வெண்பனியில் புதைந்திருந்த, சிறிது கடிக்கப்பட்டிருந்த ரஸ்குத் துண்டு ஒன்று ஓரிடத்தில் அவனுக்கு அகப்பட்டது. அது பழையது, பூஞ்சணம் பூத்தது. அலெக்ஸேய் அதை வாயருகே கொண்டு போனான். ரொட்டியின் புளித்த வாடையை ஆர்வத்துடன் முகர்ந்தான். அதை அப்படியே வாய்க்குள் திணித்துக்கொண்டு, மணமுள்ள ரொட்டியை ருசித்து ருசித்து சுவைக்க வேண்டும் போல் ஆசையாயிருந்தது. ஆனால் அலெக்ஸேய் அதை மூன்றுக் கூறுகளாகத் துண்டு போட்டான். இரண்டு துண்டுகளை காற் சட்டையின் பையில் ஆழத்தில் வைத்தான். ஒரு துண்டைக் கிள்ளிச் சிறு பொறுக்குகளை வாயிலிட்டு மிட்டாயைக் குதப்புவது போலச் சுவைக்காமல் குதப்பி அவற்றை உண்டான மகிழ்ச்சியை நீடிக்கச் செய்ய முயன்றான்.

படிக்க:
”இருப்பதைப் பிரித்துக் கொடு” என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாக வேண்டும் | அருந்ததிராய்
செல்வி பாஸ் ஆகிட்டா … | ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி !

போர்க்களத்தை இன்னொரு தடவைச் சுற்றிப் பார்த்தான். அப்போது அவனுக்கு ஓர் எண்ணம் உதயமாயிற்று. கொரில்லா வீரர்கள் அங்கே எங்காவது அருகாமையில் இருக்க வேண்டும்! புதர்களிலும் மரங்களைச் சுற்றியும் பொருபொருத்த வெண்பனியை மிதித்துக் கெட்டியாக்கியிருப்பவை அவர்களுடைய பாதங்கள் தாம். பிர் மரத்தின் உச்சியிலோ, புதர்களின் பின்னேயோ, வெண்பனிக் குவைகளின் பின்னேயோ இருந்து கொரில்லா வேவு வீரன் பிணங்களின் நடுவே அலைந்து திரியும் தன்னைக் கண்டுக் கொண்டு பார்வையிடுகிறான் போலும். இவ்வாறு நினைத்த அலெக்ஸேய் கைகளை வாயருகே குவித்து வைத்துக் கொண்டு, “ஓஹோ ஹோ! கொரில்லா வீரர்களே!” என்று தன் சக்தியை எல்லாம் திரட்டிக் கத்தினான்.

தனது குரல் எவ்வளவு சோர்வுடன் தணிவாக ஒலிக்கிறது என்பதைக் கேட்டு அவன் வியப்படைந்தான். காட்டின் உட்புறமிருந்து பதில் குரல் கொடுத்து அவனது கத்தலை அடி மரங்களால் துண்ட துண்டாக மீட்டொலித்த எதிரொலி கூட அதிக உரக்கக் கேட்பது போல அவனுக்குப்பட்டது. “கொரில்லா வீரர்களே! கொரில்லா வீ-ர-ர்-களே! ஏ-ஹே-ஹே!” என்று கூவி அழைத்தான் அலெக்ஸேய், எரிந்த மோட்டாரின் கரித்துணுக்குகளுக்கும் பேச்சற்ற பகைவர் உடல்களுக்கும் நடுவே வெண்பனியில் உட்கார்ந்தபடியே.

சிதறலான, கணீரென்ற எதிரொலியால் காடுதான் அவனுக்கு பதில் குரல் கொடுத்தது. திடீரென்று – அல்லது பெருத்த நரம்பு இறுக்கம் காரணமாகத்தான் ஒருவேளை அவனுக்கு இப்படித் தோன்றியதோ? – ஊசியிலைகளின் இசை நயமுள்ள ஆழ்ந்த ஓசையின் ஊடே, சில வேளைகளில் துலக்கமாகப் பிரித்தறிந்து கொள்ளும் வகையிலும் சில வேளைகளில் முற்றிலும் அடங்கி ஓய்ந்து விடுபவைகளாகவும் மந்தமாக அடிக்கடி கேட்டன எதிரொலிகள். தொலைவிலிருந்து காட்டின் வெறுமையிலிருந்த தனக்கு நண்பனின் அழைக்குரல் கேட்டு விட்டது போல அவன் திடுக்கிட்டு உடல் சிலிர்த்தான். எனினும் தன் காதுகளை நம்பாமல் கழுத்தை முன்னே துருத்தியவாறு வெகுநேரம் உட்கார்ந்திருந்தான்.

ஹிட்லர் படை வீரர்களின் பிணங்கள் சிதறிக்கிடந்தன. அந்தப் படைவீரர்கள் கிலியடித்து ஆளுக்கு ஒரு புறமாக ஓடினார்கள் என்பதும், என்ன நடக்கிறது என்று அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளக்கூட இல்லை என்பதுவும், ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு புதருக்கும் பின்னே சாவுப்புயல் வெண்பனிப் போர்வைக்குள் மறைந்து அவர்களுக்காகப் பதிபோட்டுக் காத்திருந்தது என்பதும் அந்த பிணங்கள் கிடந்த கிடையிலிருந்தே தெரிந்தது.

இல்லை. அவன் ஏமாறவில்லை. கிழக்கே இருந்து ஈரக் காற்று வீசியது. பீரங்கிக் குண்டுகளின் துலக்கமான வெடியோசைகள் மறுபடியும் காற்றில் மிதந்து வந்தன. தெளிவாகிவிட்டது!

மும்முரமான பீரங்கித் தாக்கும் எதிர்த்தாக்கும் ஓசையை வைத்துக் கொண்டு பார்த்த போது போர் முனை வரிசை ஒரு பத்துக் கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். அங்கே ஏதோ நடந்துவிட்டது. ஒரு தரப்பு தாக்கு நடந்திற்று, மறுதரப்பு தற்காத்துக் கொள்வதற்காக ஆவேசத்துடன் எதிர்த்து தாக்கிற்று. அலெக்ஸேயின் கண்கள் ஆனந்த நீர் சொரிந்தன.

அவன் கிழக்கே நோக்கினான். அந்த இடத்தில் பாதை நேர் எதிர் திசையில் ஒரேடியாகத் திரும்பியிருந்தது என்பது உண்மையே. அலெக்ஸேய்க்கு முன்னே விரித்துக் கிடந்த வெண்பனிப்போர்வை. ஆனால், அங்கிருந்துதான் இந்த அழைக்குரல் அவனுக்கு கேட்டது. கொரில்லா வீரர்களது அடித் தடங்கள் பதிந்து வெண்பனியில் கருமையாகத் தெரிந்த நீட்டுப் போக்கான பள்ளங்கள் அந்தத் திசைக்கே இட்டுச் சென்றன. வீரமிக்க வனவாசிகளான கொரில்லாக்கள் இந்தக் காட்டில்தான் எங்கோ வசித்தார்கள். “பரவாயில்லை, பரவாயில்லை, தோழர்களே, எல்லாம் நலமே முடியும்” என்று வாய்க்குள்ளாக முணுமுணுத்துவிட்டு அலெக்ஸேய் ஊன்று கோலைத் துணிவுடன் வெண்பனியில் நாட்டி, மோவாயை அதன் மேல் ஊன்றி உடல் சுமை முழுவதையும் அதன் மீது அழுத்தி, மிகுந்த சிரமத்துடன், ஆனால் உறுதியுடன் கால்களைப் பனிக் குவியலில் நகர்த்தி வைத்தான். பாதையிலிருந்து விலகிக் கன்னி வெண்பனித் திடலில் அவன் முன்னேறலானான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க