உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 16 (தொடர்ச்சி…)

லெக்ஸேய் தன் கால்களை முதல் தடவையாகக் கவனித்துப் பார்த்தான். பாதங்கள் விகாரமாக வீங்கிக் கறுத்திருந்தன. அவற்றை தொட்ட போதெல்லாம் சுரீரென்ற வலி மின்னோட்டம் போல உடல் முழுதிலும் பாய்ந்தது. ஆனால் லேனச்காவுக்கு முக்கியமாக கவலை ஏற்படுத்திய விஷயம் விரல் நுனிகள் கறுத்துப்போய் அடியோடு உணர்விழந்து விட்டிருந்தது தான் என்பது புலப்பட்டது.

மிஹாய்லா தாத்தாவும் தெத்தியாரென்கோவும் மேஜை அருகே உட்கார்ந்திருந்தார்கள். விமானியின் பிளாஸ்க்கிலிருந்து மதுவை இரகசியமாக ஊற்றிப் பருகிவிட்டு இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மிஹாய்லா தாத்தாவின் கிழக் கீச்சுக்குரல், ஏற்கனவே எத்தனையோ தடவை சொல்லிவிட்ட கதையைத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது:

“ஆக, எங்கள் பையன்கள் காடு வெட்டிய திறப்பு வெளியிலிருந்து அவனைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். காப்பரண்கள் அமைப்பதற்காக ஜெர்மானியர் அங்கே மரங்களை வெட்டியிருந்தார்கள். இந்தப் பயல்களின் தாய், அதாவது என் மகள், சிறாய் பொறுக்கி வர இவன்களை அங்கே அனுப்பியிருக்கிறாள். அங்கே தான் பயல்கள் இவனைப் பார்த்தார்களாம். ஆகா, எப்பேர்பட்ட அற்புதம் தெரியுமா? முதலில் அது கரடி என்று நினைத்தார்களாம் குண்டடிப்பட்டு எப்படியோ புரள்கிறது என்று எண்ணினார்கள். ஓடிப்போய்விட நினைத்தார்களாம், ஆனால் ஆவலை அடக்க முடியவில்லையாம். இது என்ன கரடி, ஏன் இப்படிப் புரள்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகத் திரும்பி வந்தார்களாம். ஆகா, அப்படியா? பார்த்தார்களாம், விலாவுக்கு விலா புரண்டதாம், முனகிற்றாம்….”

“ ’புரண்டதாம்’ என்பது எப்படி?” என்று சந்தேகம் கிளப்பினான் தெத்தியாரென்கோ.

“இவன் எப்படிப் புரண்டான் என்று இவனிடமே கேள். நான் பார்க்கவில்லை. பையன்கள் சொல்லுகிறார்கள் – முதுகுப் புறமிருந்து வயிற்றுப் புறத்திற்கும் வயிற்றுப் புறமிருந்து முதுகுப் புறத்திற்குமாகப் புரண்டானாம். வெண்பனியில் ஊர்ந்து செல்வதற்கு இவனிடம் வலு இல்லையே, அதனால் அப்பேர்பட்டவனாக்கும் இவன்!” என்றார் கிழவர்.

தெத்தியாரென்கோ துள்ளி எழுந்து நண்பனைப் பார்க்கத் துடித்தான். அலெக்ஸேயின் அருகே மாதர்கள் வேலையில் முனைந்தார்கள். மருத்துவத்தாதி கொண்டுவந்திருந்த சாம்பல் நிற இராணுவக் கம்பளங்களால் அவனைச் சுற்றிப் போர்த்தார்கள்.

“நீ உட்கார் தம்பி, உட்கார். துணி உடுத்துவதும் போர்த்துவதும் நம் வேலை அல்ல, ஆண்களின் காரியம் அல்ல. நீ பதற்றப்படாமல் உட்கார்ந்து நான் சொல்வதைக் கேள். அப்புறம் உன் மேலதிகாரிகளுக்குச் சொல்லு இதை எல்லாம்… இந்த ஆள் பெரிய வீரச் செயல் செய்திருக்கிறான்! எப்பேர்பட்டவன் பார்! இந்த ஒரு வாரமாக நாங்கள் கூட்டுப்பண்ணைக்காரர்கள் எல்லோரும் இவனுக்கு பணிவிடை செய்கிறோம். இவனாலோ அசையக்கூட முடியவில்லை. ஆனால் தன் சக்தியை எல்லாம் திரட்டி எங்கள் காடு வழியாகவும் ஊர்ந்திருக்கிறான். எத்தனை பேரால் இப்படிச் செய்ய முடியும், தம்பி!”

தெத்தியாரென்கோவின் காதருகே குனிந்து கிழவர் தமது அடர்ந்த மென் தாடியால் அவனுக்குக் கிச்சுகிச்சு மூட்டினார்:

“ஒன்றுதான் எனக்குப் பிடிபடமாட்டேன் என்கிறது. இவன் சாகாமல் எப்படித் தப்பினான், ஊம்..? ஜெர்மன்காரன்களிடமிருந்து ஊர்ந்து தப்பிவிட்டான், சரிதான், ஆனால் காலனிடமிருந்து தப்பிவிட முடியுமா எங்கேயாவது? வேறும் எலும்புக் கூடு இவன், எப்படி ஊர்ந்து வந்தான் என்பது எனக்கு விளங்கவில்லை. தன்னவர்களுக்காக ரொம்ப ஏங்கி போயிருப்பான், விமான நிலையம், விமான நிலையம் என்று. இன்னும் விதம்விதமான சொற்கள். யாரோ ஒல்கா என்பவள் பெயர். அப்படி யாராவது உங்கள் ரெஜிமெண்டில் இருக்கிறார்களா? அல்லது வீட்டுக்காரியோ ஒருவேளை? நான் சொல்வதை நீ கேட்கிறாயா இல்லையா, விமானித் தம்பி, ஏய் விமானித் தம்பி, கேட்கிறாயா? அடே…

தெத்தியாரென்கோ, கிழவனாரின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்த ஆள், தன் நண்பன், ரெஜிமெண்டில் மிகவும் சாதாரண இளைஞனாகக் கருதப்பட்டவன், குளிரில் மறுத்தோ அல்லது அடிபட்டு நொறுங்கியோ போயிருந்த கால்களுடன், இளகிய வெண்பனி மீதாக இரவும் பகலும் ஊர்ந்து காட்டையும் சதுப்பு நிலத்தையும் கடந்தான்; வலிவை இழந்த பிறகும் விடாது ஊர்ந்தான், உருண்டான் – பகைவரிடமிருந்து அப்பால் சென்றுவிட வேண்டும், தன்னவர்களிடமிருந்து சேர்ந்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் – இது எப்படி முடிந்தது என்று அனுமானிக்க முயன்று கொண்டிருந்தான் தெத்தியாரென்கோ. சண்டை விமானியின் தொழில். தெக்தியாரென்கோவை ஆபத்துக்குப் பழக்கப்படுத்தியிருந்தது. விமான சண்டையில் ஈடுபடும்போது அவன் சாவைப்பற்றி எண்ணியதே கிடையாது, மாறாக ஏதோ தனி வகைப்பட்ட, களிபொங்கும் உள்ளக் கிளர்ச்சி கூட ஏற்படுவது உண்டு. ஆனால் இந்த மாதிரி, காடு வழியாக, தன்னந்தனியாக….

“எப்போது இவனைக் கண்டுபிடித்தீர்கள்?”

“எப்போதா?” கிழவர் உதடுகளை அசைத்தார். “எப்போது? ஆமாம், சனிக்கிழமை, போன ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தி ஆகவே ஒரு வாரத்துக்கு முன்பு.”

தெத்தியாரென்கோ மனதுக்குள் கணக்கிட்டுப் பார்த்தான். அலெக்ஸேய் மெரேஸ்யேவ் பதினெட்டு நாட்கள் ஊர்ந்திருக்கிறான் என்று தெரிய வந்தது. காயமுற்றவன், உணவு இல்லாமல் இவ்வளவு நீண்ட காலம் தவழ்ந்தான், ஊர்ந்தான் என்பது நம்பவே முடியாததாக இருந்தது….

இதற்குள் லேனச்கா, அலெக்ஸேயைப் போர்த்தி மூடிவிட்டாள்.

“ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள், சீனியர் லெப்டினன்ட். மாஸ்கோவில் சில நாட்களில் உங்கள் காயத்தைக் குணப்படுத்தி நடமாடச் செய்து விடுவார்கள். மாஸ்கோ பெரிய நகரமாயிற்றே! இன்னும் மோசமான காயங்களைக் கூட அங்கே குணப்படுத்தி விடுவார்கள்!” என்ற சொற்களைத் தெளிவாக, தனித் தனியாக, கடலைப்போல் உதிர்ந்தாள் லேனச்கா.

அவள் மட்டுமீறி உற்சாகக் கிளர்ச்சி கொண்டிருப்பதையும் மாஸ்கோ மருத்துவர்கள் அலெக்ஸேயை ஒரு நொடியில் குணப்படுத்தி விடுவார்கள் என்று அவள் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டு போனதையும் கண்டு, மருத்துவப் பரிசோதனையின் விளைவுகள் மகிழ்ச்சி தருபவை அல்ல, நண்பனின் நிலைமை மோசம் என்பதை தெத்தியாரென்கோ புரிந்து கொண்டான்…

தங்கள் எதிர்பாராத விருந்தாளியை வழியனுப்புவதற்குப் ப்ளாவ்னி கிராமத்தில் இருந்தவர்கள் எல்லோரும் திரண்டு வந்தார்கள். காட்டு ஏரி பனிக்கட்டியாக உறைந்து போயிருந்தது. அதன் விளிம்புகள் இளகத் தொடங்கிவிட்டன, எனினும் நடுவில் அது சமமான உறுதியுள்ள பனிப் பாளமாக இருந்தது. விமானம் இந்தப் பனிப் பாளத்தின் மேல் நின்றது. அங்கே போவதற்குப் பாதை இல்லை. ஒரு மணி நேரத்திற்கு முன் மிஹாய்லா தாத்தாவும் தெக்தியாரென்கோவும் லேனக்சாவும் பதித்திருந்த அடித்தடம், பொருபொருத்த மணல் போன்ற கன்னிவெண்பனி மீது கொடிவழியாகச் சென்றது. இப்போது இந்தச் சுவடு வழியாக உறைந்த ஏரியை நோக்கி விரைந்தது ஆட்கள் கூட்டம். கூட்டத்திற்கு முன்னே சென்றார்கள் சிறுவர்கள். ஆழ்ந்த போக்குடைய செர்யோன்காவும் கிளர்ச்சி பொங்கும் பேத்யாவும் முன்வரிசையில் நடந்தார்கள்.

படிக்க:
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?
குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி !

விமானியைக் காட்டில் தேடிக் கண்ட பழைய நண்பன் என்ற உரிமையுடன் செர்யோன்கா ஸ்டிரெச்சருக்கு முன்னால் கம்பீரமாக நடந்தான். கொல்லப்பட்ட தகப்பனாரின் பிரம்மாண்டமான நமுதா ஜோடுகளைப் போட்டுக் கொண்டிருந்தான் அவன், எனவே அவை வெண்பனியில் சிக்கிக் கொள்ளாதபடி ஜாக்கிரதையாக நடக்க முயன்றான். அழுக்கு மயமான முகங்களும் பளிச்சிடும் வெண்பற்களுமாக, நம்ப முடியாத அளவு விந்தையான கந்தல்கள் அணிந்திருந்த சிறுவர் கூட்டத்தை அதிகார தோரணையுடன் அதட்டியவாறு சென்றான் சொயோன்கா. தெத்தியாரென்கோவும் மிஹாய்லா தாத்தாவும் டிரெச்சரை முன்னும் பின்னும் தாங்கிக் கொண்டு நடந்தார்கள். அலெக்ஸேயின் போர்வையைச் சரிசெய்வதும் தன் மப்ளரை அவன் தலைக்குக் காப்பாகக் கட்டுவதுமாக லேனச்கா பக்கவாட்டில் கன்னி வெண்பனி மீது ஓடினாள். பெண்களும், சிறுமிகளும், கிழவிகளும் பின்னே சென்றார்கள்.

“ஆஸ்பத்திரியிலிருந்து எங்களுக்குக் கட்டாயம் எழுது! முகவரியை நினைவு வைத்துக் கொள்: கலீனின் பிராந்தியம், பொலொகோவ்ஸ்கிய் மாவட்டம், வருங்கால கிராமம் ப்ளாவ்னி, ஊம்? வருங்கால கிராமம், தெரிந்ததா? கவலைப் படாதே, கடிதம் வந்து சேர்ந்துவிடும், முகவரி சரியானது” என்றார் மிஹாய்லா தாத்தா.

ஸ்டிரெச்சர் விமானத்தில் ஏற்றப்பட்டது. விமானப் பெட்ரோலின் சுள்ளென்ற நெடியை முகர்ந்ததுமே மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை அலெக்ஸேய் உணர்ந்தான். அவனுக்கு உயரே ஸெல்லூலாய்டு முகடு இழுத்து மூடப்பட்டது. வழியனுப்ப வந்தவர்கள் கைகளை வீசி ஆட்டினார்கள். சாம்பல் நிறத் தலைகுட்டை அணிந்து காக்கை போன்று தோற்றம் அளித்த நீள்மூக்குக் கிழவி அச்சத்தை விட்டுவிட்டு, விமானச் சுழல் விசிறியால் கிளப்பப்பட்ட காற்றையும் பொருட்படுத்தாமல் விமானத்தின் அருகே பாய்ந்து சென்று விமானி அறையில் உட்கார்ந்திருந்த தெக்தியாரென்கோவை நெருங்கி, அலெக்ஸேய் சாப்பிடாமல் மிச்சம் வைத்திருந்த கோழிக் கறிப் பொட்டலத்தை அவன் கையில் திணித்தாள்.

மிஹாய்லா தாத்தா பெண்டிரை அதட்டுவதும் சிறுவர்களை விரட்டுவதுமாக விமானத்தைச் சுற்றி ஓடிச்சாடினார். காற்று அவருடைய தொப்பியைப் பிய்த்து அகற்றிப் பனிக்கட்டியில் உருட்டிச் சென்றது. அவர் வெறுந்தலையாக நின்றார். அவருடைய வழுக்கையும் காற்றால் பரத்தப்பட்ட அடர்த்தியற்ற நரை மயிரும் பளிச்சிட்டன. ஆனால் அலெக்ஸேய் இந்தக் காட்சிகளில் எதையும் பார்க்கவில்லை. விமானம் கிளம்பி ஓடத் தொடங்கியதும் மிஹாய்லா தாத்தா கையை வீசி ஆட்டினார். அந்தப் பல்வண்ண மாதர்கள் கூட்டத்தில் இருந்த ஒரே ஒரு ஆடவர் அவர் மட்டுமே.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க