உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 7-அ

“லெப்டினன்ட் க்யோஸ்தியேவ், குதி போடுங்கள்! அட, நீங்கள் என்ன இப்படி?”

க்யோஸ்தியேவின் உடம்பு சிலிர்த்ததை மெரேஸ்யெவ் கண்டான். அக்கணமே க்யோஸ்தியேவ் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நடுங்கும் குரலில் அலட்சியபாவத்தைக் காட்ட முயன்றவாறு, “தவறு. பக்கத்து வார்டிலே வேறு யாரோ ஒரு க்யோஸ்தியேவ் இருந்தான்” என்றான்.

எனினும், தாதி கொடிபோன்று உயர்த்திப் பிடித்திருந்த மூன்று உறைகளை அவனுடைய விழிகள் ஆர்வத்துடன், நம்பிக்கை தோன்ற நோக்கின.

“இல்லை, உங்களுக்குத்தான். பாருங்கள்: லெப்டினன்ட் கி. மி. க்யோஸ்தியேவுக்கு என்று எழுதியிருக்கிறதே. நாற்பத்து இரண்டாம் வார்டு என்றும் குறித்திருக்கிறது. ஊம்?”

கட்டுகள் போட்ட கரம் போர்வைக்கு உள்ளிருந்து ஆசையுடன் வெளியே துள்ளி வந்தது. கடிதத்தைப் பற்களால் பற்றி பொறுமையின்றிக் கிள்ளிக் கிள்ளி அவன் உறையைப் பிரித்த போது கை நடுங்கிக் கொண்டிருந்தது. க்யோஸ்தியேவின் கண்கள் கட்டுக்களின் இடையிலிருந்து சுடர் வீசின. விஷயம் விந்தையாக இருந்தது. ஒரே பல்கலைக்கழகத்தில் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மூன்று தோழிப் பெண்கள் வெவ்வேறு கையெழுத்துக்களில், அனேகமாக ஒரே விஷயத்தை வெவ்வேறு சொற்களில் எழுதியிருந்தார்கள். டாங்கிப்படை வீரர் லெப்டினன்ட் க்யோஸ்தியேவ் காயமடைந்து மாஸ்கோவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிந்து அவருடன் கடிதத் தொடர்பு கொள்ள அவர்கள் தீர்மானித்தார்களாம். அவர்களுடைய நச்சரிப்பால் லெப்டினன்ட் க்யோஸ்தியேவ் கோபம் அடையாவிடில், தாம் எப்படியிருக்கிறார், அவர் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று எழுதும்படி கேட்டுக் கொள்கிறார்களாம். “அன்யூத்தா” என்று கையொப்பம் இட்டிருந்த ஒரு பெண் எழுதியிருந்தாள்: “ஏதாவது ஒரு விதத்தில் தங்களுக்கு உதவ என்னால் முடியாதா? தங்களுக்கு நல்ல நூல்கள் ஒருவேளை வேண்டியிருக்குமே? ஏதேனும் தேவைப்பட்டால் கூச்சப்படாமல் எனக்கு எழுதுங்கள்.”

க்யோஸ்தியேவ் பகல் முழுவதும் இந்தக் கடிதங்களைத் திருப்பித்திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான், முகவரிகளைப் படித்தான், கையெழுத்துக்களை ஊன்றிக் கவனித்தான். இவ்வகையான கடிதப் போக்குவரத்துக்களை அவன் கட்டாயமாக அறிந்திருந்தான். ஆனால் இந்தக் கடிதங்கள் எதிர்பாராத விதமாக ஒரே சமயத்தில் வந்திருந்தன என்பதுதான் அவனுக்கு வியப்பளித்தது. மருத்துவப்பிரிவு மாணவிகள் அவனுடைய போர்ச் செயல்கள் பற்றி எப்படித் திடீரென்று தெரிந்து கொண்டார்கள் என்பதும் விளங்கவில்லை. வார்டுக்காரர்கள் எல்லாருமே இந்த விஷயம் புரியாமல் திகைத்தார்கள் – யாவரிலும் அதிகமாகத் திகைத்தார் கமிஸார். ஆனால் அவர் ஸ்தெபான் இவானவிச்சுடனும் மருத்துவத் தாதியுடனும் பரிமாறிக் கொண்ட பொருள் பொதிந்த பார்வையை மெரேஸ்யெவ் கண்டு கொண்டான். இது கமிஸாரின் கைவேலைதான் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது.

அது எப்படி ஆயினும் மறுநாள் காலையில் க்யோஸ்தியேவ் கமிஸாரிடம் காகிதங்களை கேட்டு வாங்கி, வலது கையை மருத்துவர் அனுமதி இன்றியே கட்டவிழ்த்து, சாயங்காலம் வரை எழுதுவதும் அடிப்பதும் கசக்கி எறிவதும் மறுபடி எழுதுவதுமாக, தனது அறிமுகமற்ற கடிதத் தோழிகளுக்குப் பதில் வரைந்து கொண்டிருந்தான்.

இரண்டு பெண்கள் தாமாகவே ஒதுங்கிக் கொண்டார்கள். ஆனால் அக்கறையுள்ள அன்யூத்தா மூவருக்கும் சேர்த்து எழுதலானாள். க்வோஸ்தயேவ் ஒளிவு மறைவற்ற சுபாவம் உள்ளவன். எனவே மருத்துவப் பிரிவின் மூன்றாவது ஆண்டு வகுப்பில் நடப்பதை வார்டு முழுவதும் அறிந்து கொண்டது.

க்வோஸ்திக் பேச மட்டும் தொடங்கவில்லை. அவன் ஒரு வகையில் முற்றிலும் மலர்ந்து விட்டான். அவன் உடல் நிலை விரைவாகச் சீர்படலாயிற்று. குக்கிஷ்கினுக்கு வைத்துக் கட்டப்பட்டிருந்த சிம்பு எடுத்து விடப்பட்டது. ஸ்தெபான் இனாவிச் கவைக்கோல்கள் இல்லாமல் நடக்கப் பயின்றார், போதிய அளவு நேராக முன் செல்லலானார். கமிஸாருக்கும் மெரேஸ்யெவுக்கும்தான் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிகொண்டு போயிற்று. அதிலும் கமிஸார் வெகு விரைவாகப் படுத்த படுக்கை ஆகிவிட்டார்.

அறைத்தாதி தினந்தோறும் காலையில் அவருடைய முகத்தைக் கழுவித் துடைப்பாள், சிறு கரண்டியால் அவருக்கு உணவு ஊட்டுவாள். கொடிய வேதனை அல்ல, இந்த ஏலாமைதான் அவரை வாட்டி வதைக்கிறது, அவருக்குக் கட்டுக்கு அடங்காத கோபம் உண்டாகிறது என்பது எல்லோருக்கும் புலப்பட்டது. ஆனால் அப்போதும் அவர் உள்ளம் சோர்ந்து விடவில்லை. முன் போலவே அவருடைய கட்டைக் குரல் பகலில் அதிர்ந்து ஒலித்தது, செய்தித் தாள்களில் செய்திகளை முன் போலவே ஆர்வத்துடன் அவர் படித்தார், ஜெர்மானிய மொழியைக் கூட தொடர்ந்து கற்றுக் கொண்டார். ஸ்தெபான் இவனாவிச் தனிப்பட அமைத்த கம்பிப் புத்தகந்தாங்கி மீது அவருக்காகப் புத்தகங்களை வைக்க வேண்டியதாயிருந்தது, ஸ்தெபான் இனாவிச் அவர் அருகே உட்கார்ந்து அவருக்காகப் பக்கங்களை திருப்பினார் என்பதுதான் வித்தியாசம்.

அவருடைய உடல் எவ்வளவு பலவீனம் அடைந்து திறனிழந்ததோ அவருடைய உள்ளம் அவ்வளவே அதிகப் பிடிவாதமும் வலிமையும் பெற்றதாகத் தோன்றியது. முன் போன்ற அதே அக்கறையுடன் அவர் ஏராளமான கடிதங்களைப் படித்து அவற்றிற்கு பதில்கள் அளித்து வந்தார். பதில்களை அவர் சொல்ல, குக்கூஷ்கினோ அல்லது க்வோஸ்தியேவோ எழுதுவார்கள். ஒரு நாள் சிகிச்சைக்குப் பிறகு உறங்கத் தொடங்கியிருந்த அலெக்ஸேய் அவருடைய இடிக் குரலைக் கேட்டு விழித்துக் கொண்டான்.

“சிவப்பு நாடாக்காரர்கள்!” என்று கோபம் பொங்க முழங்கினார் கமிஸார். கம்பிப் புத்தகந்தாங்கியில் வைத்திருந்த டிவிஷன் தினத்தாள். “படைப் பிரிவிலிருந்து வெளியே எடுத்துச் செல்லலாகாது” என்ற உத்தரவை மதியாமல் ஒரு நண்பன் அதை கமிஸாருக்கு ஒழுங்காக அனுப்பிக் கொண்டிருந்தான். “அங்கே தற்காப்பில் உட்கார்ந்து அவர்களுக்கு மூளை மழுங்கிவிட்டது. க்ரோவ்த்ஸோவாவது, அதிகாரச் சடங்கு பாராட்டுபவனாவது! சேனையிலேயே தலைசிறந்த மிருகவைத்தியன் சடங்கு பாராட்டுபவனோ ? கிரிகோரிய், எழுது, எழுது, இந்தக் கணமே!”

சேனையின் இராணுவ சபை உறுப்பினர் ஒருவருக்குச் சினம் பொங்கும் அறிக்கையை அவர் சொல்ல க்வோஸ்தயேவ் எழுதலானான். உழைப்பாளியான ஒரு நல்ல மனிதனுக்குக் காரணமின்றி அவப்பெயர் சூட்டிய பொறுப்பற்ற ‘எழுத்தர்களை’ அடக்கிவைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

மருத்துவத்தாதி வசம் கடிதத்தை அனுப்பிய பிறகும் அவர் இம்மாதிரிச் “சளப்பர்களை” வெகுநேரம் வரை காரசாரமாகத் திட்டி நொறுக்கிக் கொண்டிருந்தார். தலையணை மேல் தலையை திருப்பக் கூட ஏலாத வாயிலிருந்து செயலார்வம் ததும்பும் இந்தச் சொற்களைக் கேட்க விந்தையாக இருந்தது. …

படிக்க:
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

மாலையில் கமிஸார் உடல் நிலை இன்னும் மோசமாயிற்று. கற்பூரத் தைலம் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. நெடு நேரம் அவருக்கு நினைவு திரும்பவில்லை. உணர்வுக்கு வந்ததுமே கமிஸார் ஆக்ஸிஜன் பையும் கையுமாகத் தம் அருகே நின்ற க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவை நோக்கிப் புன்முறுவல் செய்ய முயன்றார்.

நோயுடன் கடும் போராட்டத்தில் ஆவேசம் பொங்க எதிர்த்து நின்றவாறு இந்த, விறல் மிக்க மனிதர் நாளுக்கு நாள் வலிமை குன்றுவதைக் காணத் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க