உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 11

மே மாதம் முதல் தேதி கமிஸார் உயிர் நீத்தார். அவரது மரணம் ஒருவரும் கவனிக்காத வகையில் நிகழ்ந்தது. அதிகாலையில் முகங்கை கழுவித் தலைவாரிக் கொண்ட பின், முகம் மழித்த நாவிதச்சியிடம் பருவ நிலை நன்றாயிருக்கிறதா, விழா நாள் மாஸ்கோ நகரம் எப்படி காட்சி அளிக்கிறது என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி போட்டுக் குடைந்து எடுத்தார் அவர். வீதிகளில் தடையரண்கள் அகற்றப்படுகின்றன என்பதை அறிந்து மகிழ்ந்தார். பளிச்சென்று வெயில் கொஞ்சும் இத்தகைய அற்புதமான வசந்த நாளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடக்காது என்பதைக் குறித்து வருந்தி அங்கலாய்த்தார். அவர் உடல் நிலை முன்னைவிடச் சீர்பட்டுவிடுவது போலத் தோன்றியது. ஒரு வேளை அவர் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டாயிற்று.

வெகு நாட்களாகவே, அவரால் செய்தித்தாள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது முதலே, வானொலி வாங்கிச் செவிக் குழாய்கள் அவருடைய கட்டிலருகே வைக்கப்பட்டிருந்தன.

வானொலித் தொழில் நுட்பம் ஓரளவு அறிந்திருந்த க்யோஸ்தியேவ் அவற்றில் ஏதோ புத்தமைப்புகள் செய்தான். அப்புறம் அவை வார்டு முழுவதற்கும் கேட்கும் படி முழங்கின, உரக்கப் பாடின. அந்த நாட்களில் உலகினர் எல்லோரும் கேட்டு அறிந்திருந்த குரலை உடைய செய்தி அறிவிப்பாளர், காலை ஒன்பது மணிக்கு மக்கள் தற்காப்புக் கமிஸாரின் உத்தரவைப் படிக்கத் தொடங்கினார். அதில் ஒரு வார்த்தையைக் கூடக் கேட்காமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காக எல்லோரும் கப்சிப்பெற்று அடங்கிவிட்டார்கள். சுவற்றில் தொங்கிய இரு கறுப்பு வட்டக் குழாய்கள் மீதே எல்லோரது கவனமும் லயித்திருந்தது. “மாபெரும் லெனினது வெல்லரும் கொடியின் கீழ் வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!” என்ற சொற்கள் ஆர்த்தன. அப்புறமும் வார்டில் இறுக்கம் நிறைந்த நிசப்தம் குடி கொண்டிருந்தது.

“ஒரு விஷயத்தை எனக்குத் தெளிவுபடுத்துங்கள், தோழர் கமிஸார்” என்று ஆரம்பித்த குக்கூஷ்கின் திடீரென்று “தோழர் கமிஸார்” எனக் கலவரத்துடன் வீரிட்டான்.

எல்லோரும் அங்கே பார்வையை திருப்பினார்கள். கமிஸார் கட்டில் மீது நேராக நீட்டி விரைத்துக் கிடந்தார். அவரது விழிகள் முகட்டின் மேல் ஏதோ ஒரு புள்ளியில் அசையாது குத்திட்டிருந்தன. வாடி வெளிறிய அவருடைய முகத்தில் வெற்றிப் பெருமிதமும் அமைதியும் மாண்பும் துலங்கும் பாவம் உறைந்து போயிருந்தது.

குக்கூஷ்கின் அவரது கட்டிலருகே முழந்தாள் படியிட்டு, “காலமாகிவிட்டார்! இறந்து போனார்!” என்று கதறினான்.

குழப்பம் அடைந்த அறைத் தாதிகள் வார்டுக்குள் ஓடி வருவதும் வெளியே ஓடுவதுமாக அலை பாய்ந்தார்கள். நர்ஸ் பரபரத்தாள். மருத்துவர் ஓடுகிற ஓட்டத்திலேயே அங்கிப் பொத்தான்களை மாட்டியவாறு பாய்ந்து வந்தார். சச்சரவு இடுபவன், சுமுகமாகப் பழகத் தெரியாதவன் என மதிக்கப்பட்ட லெப்டினன்ட் கன்ஸ்தாந்தீன் குக்கூஷ்கின், ஒருவரையும் கவனியாமல், குழந்தையைப் போலப் போர்வையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, ஓசையுடன் மூக்கை உறிஞ்சியவாறு, தோள்களும் உடல் முழுவதுமே பதற, காலமான கமிஸாரின் மார்பு மீது சாய்ந்து குலுகுலுங்கி அழுதான்……

அன்று மாலை, இடம் காலியான நாற்பத்து இரண்டாம் வார்டுக்குப் புதிய ஆள் கொண்டுவரப் பட்டார். தலைநகரின் விமானப் பாதுகாப்பு டிவிஷனைச் சேர்ந்த சண்டை விமானி மேஜர் பாவேல் இவானவிச் ஸ்த்ருச்கோவ் அவர். மேதின விழா நாளில் மாஸ்கோ மீது பெருத்த விமானத் தாக்கு நடந்த பாசிஸ்டுகள் தீர்மானித்தார்கள். அனேக அணிகளாக முன்னேறிய அவர்களது விமானத் தொகுதி சோவியத் சண்டை விமானங்களால் தடுக்கப்பட்டு, உக்கிரமான போருக்குப்பின் பத்ஸோல் கெச்னயா என்னும் இடத்தருகே தகர்த்து வீழ்த்தப்பட்டது. ஒரே ஒரு “யூன்கெர்ஸ்” விமானம் மட்டும், சோவியத் விமான வளையத்தின் ஊடாகப் பாய்ந்து வெளியேறி மாஸ்கோவை நோக்கித் தொடர்ந்து பறந்தது. விழாக் கொண்டாட்டத்தைப் பாழ்படுத்தும் பொருட்டு என்ன நேர்ந்தாலும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இடப்பட்டிருந்த பணியை நிறைவேற்றுவது என்று அந்த விமானத்தின் ஊழியர்கள் முடிவு செய்துவிட்டனர் போல் இருந்தது. விமானச் சண்டைக் கெடுபிடியிலேயே அந்த விமானத்தைக் கவனித்துவிட்ட ஸ்தோருகோவ் அதைத் துரத்திச் சென்றார். சண்டை விமானப் படைக்கு அப்போது வழங்கப்படத் தொடங்கியிருந்த சிறந்த சோவியத் விமானங்களில் ஒன்றை அவர் ஓட்டிக் கொண்டிருந்தார். மாஸ்கோ நகர்புறத்துக்கு மேலே, தரைக்குமேல் ஆறு கிலோ மீட்டர் உயரத்தில் எதிரி விமானத்தை எட்டிப் பிடித்து, அதன் வாலருகே லாவகமாக நெருங்கி, பகை விமானத்தை இலக்கு வைத்துச் சுடுவிசையை அழுத்தினார். பிறகும் மெஷின்கன் குண்டுகளின் வழக்கமான சடசடப்பு கேட்காதிருக்கவே அவர் வியப்படைந்தார். சுடுவிசை பழுதடைந்திருந்தது.

பகை விமானம் சற்று முன்னே சென்றது. வெடி விமானத்தைப் பின்புறத்திலிருந்து காத்த இரு மெஷின்கன்களிலிருந்து அதன் வால் பகுதியால் மறைக்கப்பட்டவாறு சுடமுடியாத நடு மையத்தில் அதைத் தொடர்ந்தார் ஸ்த்ருச்கோவ். தெளிந்த மே மாதக் காலையில் மாஸ்கோ நகரம் புகைபோர்த்த சாம்பல் நிறக் குவியல்களின் தொகுதி போன்று தொடுவானில் மங்கலாகத் தென்பட்டது. ஸ்த்ருச்கோவ் அப்போதே முடிவு செய்துவிட்டார். இருக்கை வார்களைக் கழற்றி, விமான வளை முகட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜெர்மன் விமானத்தின் மேல் தானே பாயப்போவது போலத் தசைநார்களை எல்லாம் இறுக்கியவாறு பதுங்கிக் கொண்டார். தமது விமானத்தின் வேகத்தை ஜெர்மன் விமானத்தின் வேகத்துக்கு ஏற்பச் சரியாக இசைவித்துக் கொண்டு அவர் இலக்குப் பார்த்தார். கண்ணுக்குப் புலப்படாத கயிற்றினால் ஒன்றுக்கொன்று நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவை போல ஒன்றன் பின் ஒன்றாக அவை கணப்போது காற்றில் சமீபமாக மிதந்தன. பகை விமானத்தின் ஒளிபுகும் முகட்டின் ஊடாக ஜெர்மன் மெஷின்கன் வீரனின் கண்கள் ஸ்த்ருச்கோவுக்குத் துலக்கமாகத் தெரிந்தன.

ஸ்த்ருச்கோவின் ஒவ்வொரு பாய்ச்சலையும் உன்னிப்பாகக் கவனித்தவாறு, அவரது விமான இறக்கையின் ஒரு பகுதியேனும் மறைவிலிருந்து வெளிப்படாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அந்த பாசிஸ்ட். பதற்றம் காரணமாக, அவன் தன் தலைக் காப்பைக் கழற்றிவிட்டதை ஸ்த்ருச்கோவ் கண்டார். அவனுடைய நீண்ட வெளிர் நிறத் தலைமயிர் சிறு சிறு கற்றைகளாக அவனது நெற்றி மேல் விழுந்திருந்தது கூட அவருக்குத் தெரிந்தது. மெஷின்கன்னின் பெரிய இணைக் குழாய்களை ஸ்த்ருச்கோவின் பக்கமே நோக்கியவாறு, உயிருள்ளவை போன்று எதிர்பார்ப்புடன் அசைந்தன. திருடன் தன் மீது ரிவால்வரைக் குறிவைத்திருக்கும் போது தான் நிராயுதபாணியாய் இருப்பதாக ஸ்த்ருச்கோவ் கணநேரம் உணர்ந்தார். ஆயுதமற்ற தைரியசாலிகள் இத்தகைய சந்தர்ப்பங்களில் என்ன செய்வார்களோ அதையே அவர் செய்தார். தாமே பகைவன் மீது பாய்ந்து தாக்கினார் அவர். தரையில் போன்று முட்டிகளால் அல்ல, விமானத்தின் பளிச்சிடும் உந்து சக்கரத்தைப் பகை விமானத்தின் வாலுக்குக் குறி வைத்து விமானத்தை முன்னே பாய்ச்சினார்.

படிக்க:
ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?
கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்

மடாரொலி அவர் செவிகளில் படக் கூட இல்லை. பயங்கரமான உந்துதலால் வீசி எறியப்பட்டு, தான் காற்றில் தலைகுப்புற விழுவதை அவர் உணர்ந்தார். தரை அவரது தலைக்கு உயரே விரைந்தது, பின்பு ஓரிடத்தில் நிலைத்து, பச்சைப் பசேலென்று ஒளிர்ந்தவாறு அவரை எதிர்கொண்டு சீழ்கையுடன் பாய்ந்து வந்தது. அப்போது அவர் பாராஷூட்டின் வளையத்தைச் சுண்டி அதை விரித்தார். பாராஷூட் கயிறுகளில் உணர்வின்றித் தொங்குவதற்கு முன், சுருட்டு வடிவான “யூன்கெர்ஸ்” விமானத்தின் வால் உடைந்து உடல் இலையுதிர் காலக் காற்றில் மேப்பிள் இலை போலச் சுழன்றவாறு தம் அருகாகக் கடந்து கீழே சரிவதைக் கடைக் கண்ணால் கண்டுகொண்டார் அவர். பாராஷூட் கயிறுகளில் தன் வசமின்றி ஊசலாடியவாறு வந்த ஸ்த்ருச்கோவின் உடல் ஒரு வீட்டுக் கூரைமேல் தடாலென்று மோதியது. மாஸ்கோ நகர்ப்புறத்தில் விழாக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த வீதியில் அவர் நினைவற்று விழுந்தார்…….!

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க