உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 11-அ

ஸ்த்ருச்கோவ் குதூகலமுள்ளவர், கலகலப்பாக பழகுபவர். வார்டு நிலைவாயிலில் புகுந்ததுமே இங்கே, மருத்துவமனையில் சாப்பாடு எப்படி, சிகிச்சை முறைகள் கண்டிப்பானவையோ, கண்ணுக்கு இலட்சணமான நர்ஸ்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் மற்ற நோயாளிகளிடம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார் அவர். காயங்களுக்குக் கட்டு மாற்றப்படுகையில் க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவுக்கு ஒரு வேடிக்கைக் கதை சொன்னதுடன், இடையே அவளுடைய தோற்றக் கவர்ச்சி பற்றி வெகு துணிவுடன் பாராட்டுரையும் பகர்ந்து விட்டார். நர்ஸ் அறைக்கு வெளியே போனதும் ஸ்த்ருச்கோவ் அவள் பின்னே கண் சிமிட்டினார்.

“அழகானவள். கண்டிப்பு உள்ளவளோ? ஒருவேளை உங்களை நடுநடுங்க வைக்கிறாளோ? பரவாயில்லை, பயப்படாதீர்கள். உங்களுக்குச் செயல் தந்திரம் போதிக்கப்படவில்லை போலிருக்கிறது, ஊம்? கைப்பற்ற முடியாத அரண் எப்படிக் கிடையாதோ அப்படியோ அடைய முடியாத பெண்ணும் கிடையாது!” என்று கூறி உரக்க அதிர் வேட்டுச் சிரிப்பு சிரித்தார்.

ஸ்த்ருச்கோவ் வார்டுக்குக் களிபொங்கும் ஆரவாரத்தைக் கொண்டுவந்தார். ஆனால் இதற்காக ஒருவரும் தம்மீது மனத்தாங்கல் கொள்ளாத விதத்தில் அவர் ஆரவாரம் செய்தார். அவர் தங்களுக்கு வெகு நீண்ட காலமாகப் பழக்கமானவர் என்று எல்லோருக்கும் தோன்றியது. இந்தப் புதிய தோழரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. மேஜர் ஸ்த்ருச்கோவ் பெண்கள் விஷயத்தில் வெளிப்படையாகக் காட்டிய ஆர்வந்தான் மெரேஸ்யெவுக்குப் பிடிக்கவில்லை. ஸ்த்ருச்கோவோ இந்த ஆர்வத்தை மறைக்காதது மட்டும் அல்ல, உவப்புடன் பறைசாற்றவும் செய்தார்.

மறு நாள் கமிஸார் அடக்கம் செய்யப்பட்டார். பீரங்கிப் படைக் குதிரைகள் பீரங்கி வண்டியை முகப்பு வெளிக்கு இழுத்து வந்ததையும் இராணுவ இசைக் குழுவினர் வாத்தியங்கள் வெயிலில் மின்னக் குழுமியதையும், படைவீரர்கள் பிரிவு அணிவகுத்து வந்ததையும் ஜன்னல் குறட்டின்மேல் உட்கார்ந்து பார்த்தார்கள் மெரேஸ்யெவும் குக்கூஷ்கினும், க்யோஸ்தியேவும். க்ளாவதியா மிஹாய்லவ்னா அறைக்குள் வந்து நோயாளிகளை ஜன்னலிலிருந்து அகற்றினாள். அவள் எப்போதும் போலவே அமைதியுடனும் சுறுசுறுப்புடனும் விளங்கினாள். எனினும் அவள் குரல் மாறிவிட்டதையும் அது நடுங்குவதையும் தழுதழுப்பதையும் மெலேஸ்யெவ் கவனித்தான். புது நோயாளிகள் உடற்சூட்டை அளவெடுக்க அவள் வந்திருந்தாள். அந்தச் சமயத்தில் முகப்பு வெளியில் இசைக் குழு இறுதிச் சடங்கு அணிநடை இசையை வாசித்தது. நர்ஸ் வெளிறிப் போனாள். தெர்மாமீட்டர் அவள் கைகயிலிருந்து நழுவி விழுந்தது. பளிச்சிடும் பாதரசத் துளிகள் பிளாச்சுத் தரையில் சிதறியோடின. முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு க்ளாவ்தியா மிஹாய்லவ்னா வார்டுக்கு வெளியே ஓடி விட்டாள்.

“இவளுக்கு என்ன வந்துவிட்டது? அந்த ஆள் இவளுடைய அன்பரோ?” என்று சோக இசை வந்த ஜன்னல் பக்கம் தலையசைப்பால் ஜாடை காட்டி வினவினார் ஸ்த்ருச்கோவ்.

ஒருவரும் அவருக்குப் பதில் சொல்லவில்லை.

எல்லோரும் ஜன்னல் குறட்டின் வழியாக வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தார்கள். அங்கே, பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டிருந்த சிவப்புச் சவப் பெட்டி வாயிலை கடந்து மெதுவாக வெளியே நகர்ந்தது. பசுந்தழைகளில், மலர்களில் கிடந்தது கமிஸாரின் உடல். அவருக்குப் பின்னே சிறு பஞ்சணையில் குத்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன் விருதுகள் – ஒன்று, இரண்டு, ஐந்து, எட்டு…. யாரோ ஜெனரல்கள் தலையைக் கவிழ்ந்தவாறு நடந்தார்கள். அவர்களுக்கு நடுவே, தாமும் ஜெனரலுக்கு உரிய மேல்கோட்டு அணிந்து, எதனாலோ தொப்பி இன்றி நடந்தார் வஸீலிய் வஸீலியெவிச். பின்னால், மற்றவர்களிலிருந்து தொலைவில் ஒதுங்கி, மெதுவாக அடி வைத்து நடந்த படைவீரர்களுக்கு முன், கால்கள் இடற, எதிரே எதையும் நோக்காமல் வெறுந்தலையும் வெள்ளை அங்கியும் தானுமாகச் சென்றாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா. வாயிலில் யாரோ ஒருவர் அவள் தோள்கள் மீது மேல்கோட்டைப் போர்த்தார். அவளோ தொடர்ந்து நடந்தாள், மேல்கோட்டு தோள்கள் மேலிருந்து நழுவி விழுந்தது. படைவீரர்கள் அணி இரு கூறுகளாகப் பிரித்து அதைச் சுற்றிக் கடந்து சென்றார்கள்.

“அன்பர்களே, அடக்கம் செய்யப்படுபவர் யார்?’ என்று கேட்டார் மேஜர். அவரும் ஜன்னல் புறம் எம்பிப் பார்க்க விரும்பினார். ஆனால் சிம்புகளால் இறுக்கப்பட்டுப் பிளாஸ்டரில் வைக்கப்பட்டிருந்த அவருடைய கால்கள் அவருக்கு தடையாக இருந்தன. அவரால் ஜன்னலை எட்ட முடியவில்லை.

ஊர்வலம் அப்பால் போய்விட்டது. சோக இசை ஒலிகள் வீடுகளின் சுவர்களில் எதிரொலித்து தொலைவிலிருந்து ஆற்றின் வழியே மந்தணமாகக் கேட்டன. நொண்டி முகப்புப் பணிமகள் வாயிலிலிருந்து வெளியே போய் இரும்புக் கதவுகளை ஒலிப்புடன் இழுத்து மூடிவிட்டாள். ஆனாலும் நாற்பத்து இரண்டாவது வார்டுக்காரர்கள் கமிஸாரைக் கடைசிப் பயணத்தில் வழியனுப்பியவாறு இன்னும் ஜன்னல் அருகே நின்றார்கள்.

“யார் அடக்கம் செய்யப்படுகிறார்? சொல்லுங்களேன்? நீங்கள் என்ன இப்படி, மரங்களாக நிற்கிறீர்கள்?” என்று பொறுமை இழந்து வினவினார் மேஜர். ஜன்னல் குறட்டை எட்டும் முயற்சியை அவர் இன்னும் நிறுத்தவில்லை.

“அடக்கம் செய்யப்படுபவர் உண்மை மனிதர்… போல்ஷ்விக்…” என்று துயரந்தோய்ந்த தணிந்த குரலில் அவருக்கு விடையளித்தான் கன்ஸ்தாந்தீன் குக்கூஷ்கின்.

“உண்மை மனிதர்” என்ற இந்தச் சொற்கள் மெரேஸ்யெவின் நினைவில் பதிந்து விட்டன. கமிஸாரை இன்னும் சிறந்த சொற்களில் குறிக்க முடியாது. இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த மனிதர் போன்றே தானும் உண்மை மனிதனாக விளங்க மெரேஸ்யெவுக்கு விருப்பம் உண்டாயிற்று.

சிகிச்சையும் காலமும் பயன் விளைத்தன. எல்லோரும் விரைவில் குணம் அடைந்தார்கள். மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாள் நெருங்க நெருங்க, நாற்பத்து இரண்டாவது வார்டுக்காரர்கள் தங்கள் உடல்நலக் கேடு பற்றிக் குறைவாகவே எண்ணலானார்கள். வார்டுக்கு வெளியே தங்களுக்கு என்ன காத்திருக்கிறது, சொந்தப் படைப்பிரிவில் தங்களுக்கு எத்தகைய வரவேற்பு அளிக்கப்படும், எத்தகைய காரியங்கள் தங்களை எதிர்நோக்கி இருக்கின்றன என்பவற்றைப் பற்றி அவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். பழக்கமான இராணுவ வாழ்க்கைக்கு எல்லோருமே ஏங்கிக் கொண்டிருந்தார்கள். புதிய தாக்குதல் தொடங்குமுன் தாங்கள் உடல் நலம் அடைந்து படைப்பிரிவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் உள்ளங்களில் கிளர்ந்து எழுந்தது. இந்தத் தாக்குதல் பற்றி எதுவும் இன்னும் எழுதப்படவில்லை, அது பற்றிய பேச்சு கூட இல்லை, எனினும் சூழ்நிலையில் அதை உணர முடிந்தது மழைப் புயலுக்கு முன் நிலவும் அமைதியை போலப் போர் முனைகளில் திடீரெனக் குடிகொண்ட சந்தடியின்மையைக் கொண்டு அதை அனுமானிக்க முடிந்தது.

மருத்துவமனையிலிருந்து இராணுவ வேலைக்குத் திரும்புவது படைவீரனுக்குச் சர்வ சாதாரணமான காரியம். அலெக்ஸேய் மெரேஸ்யேவுக்கு மட்டுமே அது பிரச்சினையை முன் வைத்தது; சாமார்த்தியத்தாலும் பயிற்சியாலும் கால்கள் இல்லாக் குறையை நிறைவுபடுத்த அவனுக்கு இயலுமா? சண்டை விமான ஓட்டியாக மீண்டும் பணியாற்ற அவனால் முடியுமா? குறித்த நோக்கத்தை அடைவதற்கு மேலும் மேலும் விடாப்பிடியாக முயன்றான் அவன். பயிற்சி நேரத்தைப் படிப்படியாக அதிகப்படுத்தி, காலையிலும் மாலையிலும் கால்களைப் பழக்கப்படுத்துவதையும் பொது உடற்பயிற்சியையும் இரண்டு மணி நேரம் வரை செய்யலானான். ஆனால் இது கூட அவனுக்குக் குறைவாகப்பட்டது. பகல் சாப்பாட்டுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யத் தொடங்கினான்.

கால்கள் இல்லாமல் விமானம் ஓட்ட முடியும் என்பதை வார்டில் ஒருவரும் நம்பவில்லை. ஆயினும் தோழனின் விடாப்பிடியான முயற்சியை எல்லோரும் மதித்தார்கள்.

மேஜர் ஸ்த்ருச்கோவ் முழங்கால் சில்லுகளில் ஏற்பட்டிருந்த பிளவுகள் ஆரம்பத்தில் நினைத்ததை விட அதிக மோசமானவை எனத் தெரியவந்தது. அவை மெதுவாகவே ஆறின. கால்கள் இன்னும் சிம்புக் கட்டிலேயே இருந்தன. மேஜர் குணமடைவது பற்றி எவ்விதச் சந்தேகமும் இல்லைதான். ஆயினும் தனக்கு இவ்வளவு தொல்லை விளைத்த “பாழாய்ப் போகிற முழங்கால் சில்லுகளை” வாய் ஓயாமல் திட்டி நொறுக்கினார் மேஜர். அவருடைய இந்தத் தொண தொணப்பு நிரந்தரமான சிடு சிடுப்பாக மாறத் தொடங்கிற்று. ஏதேனும் அற்ப விஷயத்துக்காக அவர் ஒரேயடியாக வெகுண்டு எல்லோரையும் எல்லாவற்றையும் வைது நொறுக்க ஆரம்பித்துவிடுவார்.

இரகசியமாகப் புகைபிடிப்பதற்குக் கூட தமக்கு வாய்ப்பு இல்லை என்றும், அறுவைக் கூடத்தைச் சேர்ந்த செம்பட்டை முடி நர்ஸை ஆளோடியில் கூடக் கண்டு பேசத் தமக்கு முடியவில்லை என்றும், வர வர அதிகரிக்கும் தமது பொறுமையின்மைக்கு இவையே காரணங்கள் என்றும் விளக்கினார் ஸ்த்ருச்கோவ். ஒருவேளை விஷயம் ஓரளவுக்கு இப்படி இருக்கலாம். ஆனால் மாஸ்கோவுக்கு மேலாகப் பறந்து செல்லும் விமானங்களை ஜன்னல் வழியே கண்டபோதும், அக்கறைக்குரிய புதிய விமானச் சண்டை பற்றியும் தமக்கு அறிமுகமான விமானியின் வெற்றி குறித்தும் வானொலி அல்லது செய்தித்தாள் வாயிலாக அறிந்த போதும் மேஜருக்கு எரிச்சல் பீறிடுவதையும் எள்ளும் கொள்ளும் வெடிப்பதையும் மெரேஸ்யெவ் கவனித்தான். ஸ்த்ருச்கோவ் போலவே மெரேஸ்யெவையும் இவை பொறுமை இழந்து சிடுசிடுக்க வைத்தன. ஆனால் அவன் அந்த சிடுசிடுப்பை வெளிக் காட்டுவதே இல்லை. இப்போது ஸ்த்ருச்கோவுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கையில் அவன் உள்ளுற மகிழ்ச்சி அடைந்தான். தான் தெரிந்தெடுத்துக் கொண்ட “உண்மை மனிதனின்” பண்பை, ஓரளவு தான் எனினும், நெருங்கத் தொடங்கியிருப்பதாக அவனுக்குப் பட்டது.

படிக்க:
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்
தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

கமிஸாரின் மரணத்துக்கு சில நாட்களுக்கொல்லாம் கன்ஸ்தாந்தீன் குக்கூஷ்கின் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினான். எவ்வத உணர்ச்சி வெளியீடும் இன்றி அவன் வெளியேறினான். மருத்துவம் தனக்கு ஒரேயடியாக அலுத்துப் போய்விட்டது என்று விடை பெறுகையில் பிரகடனம் செய்தான். அசட்டையாகவே பிரிவு சொல்லிக் கொண்டான். தாயாரிடமிருந்து தனக்குக் கடிதங்கள் வந்தால் அவற்றைத் தவற விட்டுவிடாமல் பத்திரமாக வைத்திருந்து தனது ரெஜிமெண்ட் முகவரிக்குக் கட்டாயம் அனுப்பும்படி மெரேஸ்யெவிடமும் நர்ஸினிடமும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டான்.

“உன்னை அங்கே எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள், எப்படி வேலையில் மறுபடி சேர்கிறாய் என்பதை எல்லாம் எழுது” வழியனுப்புகையில் அவனிடம் சொன்னான் மெரேஸ்யேவ்.

“நான் உனக்கு எதற்காக எழுத வேண்டும்? உனக்கும் எனக்கும் என்ன உறவு பாழ்போகிறது? நான் உனக்கு எழுதிக் காகிதத்தை வீணாக்கப் போவதில்லை….”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க