கேள்வி: //முஸ்லிம்களை ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன?//

– வடிவேல்

ன்புள்ள வடிவேல்,

இந்து – முசுலீம் பிரிவினை என்பது நமது நாட்டில் சென்ற நூற்றாண்டில்தான் உருவானது. அதற்கு முன் வரலாற்றில் இந்தப் பிரிவினை எங்கும் இல்லை. முகலாயர் ஆட்சியின் போது பல இந்து தளபதிகள் அவர்களிடம் வேலை பார்த்தனர். அதே போன்று மராட்டிய சிவாஜியின் படையில் முசுலீம் தளபதிகளும் உண்டு. ராஜபுத்திர இந்து மன்னர்கள், தக்காண முசுலீம் சுல்தான்கள் இன்னபிற வட்டார அரசர்களும் கூட இரு மதத்து மன்னர்களை தமது நலன் சார்ந்து அவ்வப்போது ஆதரித்தும் எதிர்த்தும் வந்திருக்கின்றனர்.

முதல் இந்திய சுதந்திரப் போர் 1857-ல் நடைபெற்ற போது கிளர்ச்சியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அன்றைய மொகலாய வம்சத்து கடைசி பேரரசரான பகதூர் ஷா-வை இந்தியாவின் அரசராக பிரகடனம் செய்தனர். முகலாயர்களின் பச்சை பிறைக் கொடி தேசியக் கொடியாக காலனியாதிக்க எதிர்ப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் தீவிர இந்துத்துவவாதியாக வீழ்ந்து போன சாவர்க்கரே இதற்கு ஆதாரம். அவர் எழுதிய “எரிமலை அல்லது முதல் இந்திய சுதந்திரப் போர்” எனும் நூலில் அவர் பகதூர்ஷாவை இந்தியப் பேரரசர் என்றும் பச்சைக் கொடியை தேசியக் கொடி என்றும் வருணிக்கிறார். இதை சங்கிகளாலேயே மறுக்க முடியாது.

முதல் இந்திய சுதந்திரப் போருக்கு பிறகு இந்தியா நேரடியாக இங்கிலாந்து ஆட்சியின் கீழ் வந்தது. அதற்கு முன் கிழக்கிந்திய கம்பெனியே இந்தியாவை ஆண்டது. முதல் இந்திய சுதந்திரப் போரின் படிப்பினைகளில் ஒன்றாக ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றத் துவங்கினார்கள். அது சாதி ரீதியாகவும் இருந்தது, மத ரீதியாகவும் இருந்தது. முதன்மையாக இந்து முஸ்லீம் பிரிவினை ஆங்கிலேயர்களின் திட்டத்தில் இருந்தது.

இதே காலகட்டத்தில் இந்திய அரசியலில் படித்த இந்து ஆதிக்க சாதி நடுத்தர வர்க்கத்தினர் செயல்பட ஆரம்பித்தனர். அவர்கள் இயற்கையாகவே இந்துமத வழக்கங்களை அரசியலில் பின்பற்ற ஆரம்பித்தனர். காங்கிரஸ் கட்சியின் திலகர் அதற்கோர் சான்று. ஆங்கிலேயர்களின் ஆரம்ப கால ஆட்சியால் மராத்திய சித்பவன பார்ப்பனர்கள் அதிகாரத்தை இழந்தனர். மராத்திய பேஷ்வாக்கள் இந்த சாதியைச் சார்ந்தவர்கள். அவ்வகையில் திலகர், 1925-ல் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆரம்பித்த ஹெட்கேவார் அனைவரும் சித்பவன பார்ப்பனர்களே. காங்கிரசுக் கட்சியில் காந்தி தலைமையேற்ற பிறகும் அரசியலில் இந்துமயமாகும் போக்கு அதிகம் இருந்தது. வந்தே மாதரம் தேசிய கீதமாக்கப்பட்டதும் கூட அப்படித்தான். காங்கிரசு மிதவாத முறையில் இந்துத்துவ மயத்தை முன்வைத்தது என்றால் அதையே தீவிரமாக இந்து மகா சபாவும், ஆர்.எஸ்.எஸ்-ம் முன்வைத்தன.

இவர்கள் தோன்றுவதற்கு முன்பு 1905-ல் வங்காளம் முசுலீம்கள் அதிகம் கொண்ட கிழக்கு வங்காளம், இந்துக்கள் அதிகம் வாழும் மேற்கு வங்காளம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆங்கில ஆளுநராக கர்சன் இருந்தார். இத்தகைய மதரீதியான பிளவை மக்கள் ஒன்றிணைந்து எதிர்த்து போரிட்டு மாற்றினார்கள். கர்சனும் தனது உத்திரவை திரும்ப பெற்றுக் கொண்டார். இதையடுத்து ஆங்கிலேயர்களின் பிளவு படுத்தும் அரசியல் முன்னிலும் அதிகமாய் நடக்கத் துவங்கியது.

savarkar-Gandhi-Jinnah
சாவர்க்கர் – ஜின்னா – காந்தி

காங்கிரசின் இந்துமதச் சார்பு  முஸ்லீம் லீகை தோற்றுவித்தது. லிபரல் கொள்கைகளைக் கொண்ட நாத்திகவாதியான ஜின்னா அதன் தலைவராக இருந்தார். மற்றொரு புறம் ஆங்கிலேயர்களை எதிர்க்காமல் முசுலீம்களை மட்டும் எதிர்ப்பதை கொள்கையாகக் கொண்டு இந்து மகாசபாவும், ஆர்.எஸ்.எஸ்-ம் ஆங்கிலேயர்கள் ஆதரவுடன் வளர ஆரம்பித்தன. இவ்விரண்டு அமைப்புகளும் அதனாலேயே தடை செய்யப்படாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டன. கம்யூனிஸ்டுகள் தடை  செய்யப்பட்டது போல இவர்கள் நடத்தப்படவில்லை. இந்து மதவெறி அமைப்புகளும் பதிலுக்கு இந்திய சுதந்திரத்திற்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஆங்கிலேயரை ஆதரித்தன.

இந்தப் போக்கினால் இந்தியா, இந்து – முஸ்லீம் என பிளவுபட ஆரம்பித்தது. அதன் உச்சமாய் 1947-ல் பிரிவினை காலத்தில் இலட்சக்கணக்கான இந்து முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். இரு மதங்களிலும் வன்முறை கோரத் தாண்டவமாடியது. பிரிவினையின் போது காந்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தார்; அவரை ஒழித்தால்தான் இந்துக்களுக்கு நிம்மதி என்று இந்து தீவிரவாதியான கோட்சே காந்தியைக் கொன்றார். அப்போது ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டாலும் பின்னாளில் அதன் கம்யூனிச எதிர்ப்பு காரணமாக தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

அன்று முதல் இன்று வரை ஆர்.எஸ்.எஸ் தனது இருப்பிற்கு முசுலீம் விரோதத்தை அடிப்படையாக வைத்திருக்கிறது. 47 முதல் இன்று வரை நடந்த இந்து முஸ்லீம் கலவரங்களுக்கு இந்துமதவெறியர்களே முதன்மைக் காரணம். அதன் போக்கில் முஸ்லீம்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் இந்து – இந்தியப் பண்பாட்டிற்கு விரோதமானவர்கள், இந்துக்கள் புனிதமாக கருதும் கோமாதவை வேண்டுமென்றே வெட்டித் தின்பவர்கள், மாட்டுக்கறி தின்பதால் அவர்கள் உடலில் துர்நாற்றம் வீசுகிறது, பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள், கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வென்றால் கை தட்டுபவர்கள், தாடி வைத்து குல்லா அணிந்து லுங்கி கட்டுபவர்கள் என்று ஏகப்பட்ட அவதூறுகளை உருவாக்கி அவற்றை பொது சமூகத்திற்கும் கடத்தி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றும் ஆதிக்க சாதி இந்துக்கள் தமது வீடுகளை முஸ்லீம்களுக்கு பொதுவில் வாடகைக்கு விடுவதில்லை.

Modi_Hitlerஎந்த ஒரு பாசிசக் கட்சிக்கும் கற்பனையான ஒரு எதிரி தேவை. ஜெர்மனியின் ஹிட்லர் யூதர்களை எதிர்த்தது போல இங்கே இந்துமதவெறியர்கள் முஸ்லீம்களை முதன்மையாக வைத்திருக்கிறார்கள். பட்டியலில் முஸ்லீம்களுக்கு அடுத்தபடியாக கிறித்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள்.

பசுப்படுகை எனப்படும் இந்தி மாநிலங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மை என்றாலும் சில இடங்களில் கணிசமாக வாழ்கிறார்கள். வர்த்தக ரீதியில் அவர்களோடு போட்டி போடும் இந்துமதத்தைச் சேர்ந்த நகர்ப்புறத்து வணிகர்கள், சிறு முதலாளிகள், நடுத்தர வர்க்கம் ஆகியோரை தனது முஸ்லீம் எதிர்ப்பு அரசியலுக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக வென்றெடுத்து வைத்திருக்கிறது. இதனால் முஸ்லீம்கள் அப்பகுதிகளில் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ்கிறார்கள் என்பது மிகையில்லாத உண்மை.

எனவே பொதுக்கருத்தியலில் முஸ்லீம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கும் மாயை, பொய்களை நாம் அகற்றும் வண்ணம் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஏனெனில் இந்துமதவெறி என்பது முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, உழைக்கும் இந்துக்களுக்கும் எதிரிதான்.

ஆர்.எஸ்.எஸ்-ன் அவதூறுகளை இணைப்பில் உள்ள தொடரில் விரிவாக பார்க்கலாம்.

நன்றி !

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்