உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 1-அ

“புறப்படுவோம்! இப்போது போகலாம். துரிதப்படுத்து, நண்பா, இந்த இடத்திலிருந்து தொலைவில் போய்விடுவோம்” என்று காரோட்டிக்கு உத்தரவிட்டான்.

“இப்போது அவை வர மாட்டா, நாம் போகலாம் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று இளையவன் சீனியர் லெப்டினன்டிடம் கேட்டான். நொடிகளில் குதித்துத் துள்ளிய லாரியின் லயத்துக்கு ஏற்ப உடலை அசைத்தவாறு பின்னவன் சற்று நேரம் பேசாதிருந்தான். பின்பு சொன்னான்:

“இது மிகவும் சாதாரணமான விஷயம். இவை “மெ-109” ரக “மெஸ்ஸர்” விமானங்கள். இவற்றின் எரிபொருள் சேமிப்பு நாற்பத்து ஐந்து நிமிடப் பறப்புக்குத் தான் காணும். இவ்வளவு நேரம் அவை பறந்து தீர்த்துவிட்டன. இப்போது பெட்ரோல் நிறைத்துக் கொள்ளப் போயிருக்கின்றன.”

இதை அவன் விளக்கிய அசட்டையான தோரணை, இத்தகைய சாதாரண விஷயங்களை ஒருவன் எப்படி அறியாமலிருக்க முடியும் என்று அவனுக்கு விளங்கவில்லை என்பது போல இருந்தது. இளையவனோ கூர்ந்து பார்வையிடத் தொடங்கினான். பறக்கும் “மெஸ்ஸெர்” விமானங்களைத் தானே முதலில் காண வேண்டும் என்று அவனுக்கு ஆசை உண்டாயிற்று. ஆனால் விமானங்களைக் காணோம். பூத்துக் குலுங்கிய புல், புழுதி, சூடேறிய தரை ஆகியவற்றின் இன்மணம் காற்றில் நிறைந்திருந்தது. புல்லில் தத்துக் கிளிகள் உற்சாகமும், குதூகலமும் பொங்கக் கிரீச்சிட்டன, களைகள் அடர்ந்து மண்டிச் சோகக் காட்சி அளித்த நிலத்துக்கு உயரே எங்கோ பறந்தவாறு கணீரென இசை பரப்பியது வானம்பாடி, இவற்றில் சொக்கிப் போன வாலிபன் ஜெர்மானிய விமானங்களையும் அபாயத்தையும் மறந்து விட்டு, காதுக்குக் குளிர்ச்சியான கணீர்க் குரலில் ஒரு பாட்டு பாடலானானன். அது அந்தக் காலத்தில் முனைமுகப் படை வீரர்களுக்கு மிகவும் உவப்பான பாட்டு. காப்பரணில் இருந்துகொண்டு எங்கோ தொலைவிலிருந்த காதலியை நினைத்து ஏங்கிய படைவீரனைப் பற்றியது …..

மாலைத் தருவாயில் அவர்களது லாரி சிறு கிராமம் ஒன்றின் வீதி வழியே சென்றது. சிறிய விமானப் படைப் பிரிவின் தலைமையிடம் அது என அனுபவமுள்ள விழிகள் சட்டெனக் கண்டுகொண்டன. சில கம்பிகள் புழுதிபடிந்த செர்யோமுறா மரங்கள் மீதும் முன்வாயில் தோட்டங்களில் குச்சி குச்சியாகத் துருத்திக் கொண்டிருந்த ஆப்பிள் மரங்கள் மீதும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. கிணற்று ஏற்றக் கால்களையும் வேலிகளின் மரக் கம்பங்களையும் சுற்றிக் கொண்டு சென்றிருந்தன இந்தக் கம்பிகள். வீடுகளின் அருகே வழக்கமாகக் குடியானவர்களின் வண்டிகள் நிறுத்தப்பட்டு, கலப்பைகளும் பரம்புகளும் வைக்கப்பட்டிருக்கும் வைக்கோல் வேய்ந்த சவுக்கைகளில் நின்றன நசுங்கிய பலவகை மோட்டார்கள். நீல ரிப்பன் சுற்றிய தொப்பிகள் அணிந்த ராணுவத்தினர் சிறு ஜன்னல்களின் மங்கிய கண்ணாடிகளுக்கு மறுபுறம் சற்றே தென்பட்டார்கள், தட்டெழுத்துப் பொறிகள் சடசடத்தன. ஒரு வீட்டுக்குள்ளிருந்து தான் கம்பிகளின் சிலந்திவலை வெளியே சென்றிருந்தது. அந்த வீட்டிலிருந்து தந்திக் கருவியின் ‘கட்டுக் கடகட்டு’ ஒலி ஒரு சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது.

படிக்க:
கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !

லாரி கிராமத்தின் வழியே விரைந்து கிராமப் பள்ளிக் கூடத்தின் துப்புரவான கட்டிடத்திற்கு எதிரே நின்றது. உடைந்த ஜன்னலுக்குள் கொத்தாகச் சென்றிருந்த கம்பிகளையும், தானியங்கித் துப்பாக்கியைத் தயாராக மார்பின் மேல் உயர்த்திப் பிடித்தவாறு வாயிலில் நின்று கொண்டிருந்த படை வீரனையும் கொண்டு அது தலைமை அலுவலகம் என்பதைத் தெரிவித்துக் கொள்ள முடிந்தது.

“ரெஜிமென்ட் தலைவரிடம் வந்திருக்கிறோம்” என்று முறை அதிகாரியிடம் சொன்னான் சீனியர் லெப்டினன்ட்.

ரெஜிமென்ட் கமாண்டரின் அலுவலறை விசாலமான வகுப்பறையில் அமைக்கப்பட்டிருந்தது. வெற்று மரக்கட்டைச் சுவர்கள் கொண்ட அறையில் ஒரே ஒரு மேஜைதான் போடப் பட்டிருந்தது. டெலிபோன்களின் தோல் உறைகளும், வரைபடம் வைத்த விமானப்படைக் கைப்பெட்டியும், சிவப்புப் பென்சிலும் மேஜைமேல் கிடந்தன. சிறுகூடான, முறுக்கேறிய மேனியுள்ள துடியான கர்னல் கைகளை முதுகுப்புறம் வைத்தவாறு சுவரோரமாக அறை நெடுக விரைந்து நடந்தார். தமது எண்ணங்களில் ஆழ்ந்தவராக அவர் இராணுவ முறைப்படிக் கால்களைச் சேர்த்து விரைப்பாக நின்ற விமானிகளின் அருகாக இரண்டொரு முறை கடந்து சென்றார். பின்பு சட்டென அவர்களுக்கு முன்னே நின்று, உறண்ட, உறுதியான முகத்தைக் கேள்விக் குறியுடன் நிமிர்த்தினார்.

கருமுடி ஆபிசர் விரைப்பாக நின்று பூட்சுக் கதிகளை-தக்கென அடித்து, “சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவ். உங்கள் கீழ் பணியாற்ற வந்திருக்கிறேன்” என்று அறிவித்தான்.

அவனைக் காட்டிலும் நேராக நிமிர்ந்து நிற்க முயன்றவாறு, படைவீரனுக்குரிய நீள்ஜோடுகளை இன்னும் ஒலிப்புடன் தரையில் அடித்து, “சீனியர் சார்ஜென்ட் அலெக்ஸாந்தர் பெத்ரோவ்” என்று அறிக்கை செய்து கொண்டான் இளையவன்.

“ரெஜிமெண்ட் கமாண்டர் கர்னல் இவனேவ். பாக்கெட்?” என்று வெடுக்கெனக் கூறினார் கமாண்டர்.

மெரேஸ்யெவ் கைப்பெட்டியிலிருந்து பாக்கெட்டை துடியாக எடுத்துக் கர்னலிடம் நீட்டினான். அவர் பாத்திரங்கள் மீது விரைவாக கண்ணோட்டிவிட்டு வந்தவர்களைச் சட்டென ஏற இறங்கப் பார்த்தார்.

“நல்லது, சரியான சமயத்தில் வந்திருந்திருக்கிறீர்கள். ஆனால் ஏன் இவ்வளவு குறைவாக அனுப்பியிருக்கிறார்கள்?” என்றவர் எதையோ திடீரென நினைவுக் கூர்ந்து. “இருங்கள், மெரேஸ்யெவ் என்பவர் நீங்கள் தாமா? விமானப்படைத் தலைவர் உங்களைப் பற்றி எனக்குப் போன் செய்தார். அவர் சொன்னார், நீங்கள்…..” என்றுப் பேச்சைத் தொடர்ந்தார்.

“அது எவ்வித முக்கியத்துவமும் அற்றது, தோழர் கர்னல்” என்று ஓரளவு மரியாதைக் குறைவாக அவர் பேச்சை இடைமுறித்தான் மெரேஸ்யெவ். “படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா?”

கர்னல், சீனியர் லெப்டினன்டை அக்கறையுடன் பார்த்து ஆமோதிக்கும் பாவனையில் தலையசைத்துப் புன்னகை செய்தார்.

“சரிதான்!… முறையதிகாரி, இவர்களை அலுவலகத் தலைவரிடம் கூட்டிப் போங்கள். இவர்களின் சாப்பாட்டுக்கும் இராத்தங்கலுக்கும் வசதி செய்யும்படி என் பேரால் உத்தரவு கொடுங்கள். காப்டன் செஸ்லொவின் ஸ்குவாட்ரனில் இவர்களைச் சேர்ப்பதற்கு நியமன உத்தரவுப் பத்திரம் தயாரிக்கச் சொல்லுங்கள்” என்றார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க