புதுச்சேரியைப் புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல்

ஃபெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடந்தது. இப்புயல் காரணமாக புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. அங்கு 47 செ.மீ மழை பதிவாகி உள்ளதால், புதுச்சேரி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. புதுச்சேரி முழுக்க பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கூறியுள்ளார்.

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியில் 47 செ.மீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ; கடலூரில் 18 செ.மீ, மரக்காணத்தில் 23.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையைக் கடந்தாலும் மரக்காணத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. புதுச்சேரியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, புதுச்சேரி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளம் வீடுகளைச் சூழ்ந்துள்ளதால் மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றித் தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த‌தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ரெயின்போ காலனி பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஃபெஞ்சல் புயல். கரையைக் கடந்த போது மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க