மீண்டும் “நோ கிங்ஸ்” போராட்டம்: வீதிகளில் இறங்கிய அமெரிக்க மக்கள்!

தற்போது நடைபெற்ற போராட்டத்தில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருப்பது பாசிச டிரம்பிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகள் தீவிரமடைந்து வருவதைத் துலக்கமாக வெளிக்காட்டுகிறது.

0
மார்ச் 28 அன்று டிரம்புக்கு எதிராக மினசோட்டா மாகாணத்தில் அணிதிரண்ட மக்கள்.

மார்ச் 28 ஆம் தேதி அன்று பாசிச டிரம்பின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஈரான் மீதான போரை நிறுத்த வலியுறுத்தியும் “நோ கிங்ஸ்” (மன்னர்கள் வேண்டாம்) என்ற இயக்கத்தின்கீழ் லட்சக்கணக்கான மக்கள் மூன்றாவது முறையாக வீதிகளில் இறங்கி மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இப்போராட்டமானது அமெரிக்கா இனவெறி இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், கியூபாவைக் கைப்பற்றுவேன் என்று டிரம்ப் கொக்கரித்த அடுத்த நாளே நடைபெற்றிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பாசிச டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு அதிக வரி விதிப்பு, சட்டவிரோத குடியேறிகள் என்று வெளிநாட்டினரை நாடு கடத்துவது, குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் (ICE) மூலம் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களைப் படுகொலை செய்வது, மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளைப் பறித்தது, கருக்கலைப்பு தடை போன்ற டிரம்பின் சட்டவிரோத நடவடிக்கைகளால் அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்தி வருகின்ற போரினால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் நோ கிங்ஸ் இயக்கத்தின்கீழ் டிரம்பிற்கு எதிராக வாசிங்டன், நியூயார்க், கலிபோர்னியா, இலினாய்ஸ், டெக்ஸாஸ் உள்ளிட்ட நகரங்களில் பிரமாண்டமான பேரணிகளை நடத்தினர். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பலர் சுதந்திர தேவி ஆபத்தில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்ற ஆடைகளை அணிந்திருந்தனர்.


படிக்க: ஈரான் மீதான போர்: மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!


மினசோட்டா மாகாணம் போராட்டத்தின் மையமாக மாறியது. கேபிடல் புல்வெளிகளிலும் செயிண்ட் பால் நகரைச் சுற்றியுள்ள தெருக்களிலும் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் டிரம்ப் ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக தங்கள் கைகளில் அமெரிக்கக் கொடிகளை தலைகீழாகப் பிடித்திருந்தனர். மேலும் “மக்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது”, “டிரம்பை உலகம் வெறுக்கிறது” போன்ற வாக்கியங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் வாசிங்டன் டி.சி-யில் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டவர்களின் படங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்ப் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் கொடும்பாவிகளை ஏந்திய மக்கள் அவர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.

தலைநகர் வாசிங்டன் டி.சி-யில் நடைபெற்ற போராட்டம்.

மேலும் நூற்றுக்கணக்கானோர் “கிரீடத்தைக் கீழே போடு கோமாளியே” (Put down the crown, clown), மற்றும் “ஆட்சி மாற்றம் அமெரிக்காவிலிருந்து தொடங்குகிறது” (Regime change begins at home) போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி “மன்னர்கள் வேண்டாம்” என்று முழக்கம் எழுப்பியபடி லிங்கன் நினைவிடத்தைக் கடந்து நேஷனல் மால் பகுதிக்குப் பேரணியாகச் சென்றனர்.

நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் டிரம்பின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைப் போன்று கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜோக்கர் வேடமணிந்த மக்கள் “டிரம்ப் அதிபரல்ல ஜோக்கர்” என்ற பதாகைகளை ஏந்திப் பேரணி நடத்தினர். லாஸ் ஏஞ்சல்ஸில் போராடிய மக்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்; சிலரைக் கைதும் செய்தனர்.

நியூயார்க்கில் நடைபெற்ற போராட்டம்.

மக்களின் மாபெரும் போராட்டமானது அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 3,100-க்கு மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 85 லட்சம் மக்கள் வசிக்கும் நியூயார்க் நகரத்திலிருந்து, 2024 தேர்தலில் டிரம்ப் 66% வாக்குகளுடன் வெற்றி பெற்ற மாகாணமான கிழக்கு இடாஹோவில் உள்ள 2000-க்கும் குறைவான மக்கள் வசிக்கும் டிரிக்ஸ் என்ற ஊர் வரை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு டிரம்பிற்கு எதிரான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிரம்பிற்கு எதிரான நோ கிங்ஸ் போராட்டத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும், அக்டோபர் மாதம் நடைபெற்ற நோ கிங்ஸ் போராட்டத்தில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் பங்கேற்றனர். ஆனால் தற்போது நடைபெற்ற போராட்டத்தில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருப்பது பாசிச டிரம்பிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகள் தீவிரமடைந்து வருவதைத் துலக்கமாக வெளிக்காட்டுகிறது.

அமெரிக்காவின் எல்லையைக் கடந்து இதனைப் போன்று ஐரோப்பிய நாடுகளிலும் அந்தந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் ஈரான் மீதான அமெரிக்காவின் போரைக் கண்டித்தும் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இத்தாலியின் ரோம் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை விமர்சித்து, ஈரானைச் சார்ந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “போர்களற்ற உலகம்” என்ற உலக அமைதிக்கு அழைப்பு விடுக்கும் பதாகையை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக லண்டனில், “தீவிர வலதுசாரிகளைத் தடுத்து நிறுத்துங்கள்” (Stop the far right), “இனவெறிக்கு எதிராக எழுங்கள்” (Stand up to Racism) போன்ற பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தினர்.

பாசிச டிரம்பிற்கு எதிரான அமெரிக்க மக்களின் போராட்டமும், உலக மக்களின் போராட்டங்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மக்கள் போராட்டங்கள் மூலம் மட்டுமே பாசிஸ்டுகளை பணியவைக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க