2026 சட்டமன்றத் தேர்தல்:
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி
வேண்டும் ஜனநாயகம்!
பரப்புரை இயக்கம்
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி பொதுமக்களே!
தேர்தல் என்றால் ஓட்டுக் கட்சிகளுக்குத் தான் அது திருவிழா! மக்களாகிய நமக்கு அதுவும் ஒரு போராட்ட களம் தான். இத்தேர்தலில் நமது பிரச்சனைகளை, கோரிக்கைகளைப் பற்றி எந்த வேட்பாளரும், கட்சிகளும் கவலைப் படுவதில்லை. அவர்களுக்கு எப்படியாவது மக்களிடம் இருந்து ஓட்டுக்களை வாங்கி வெற்றிபெற்றால் மட்டும் போதும், மக்களைப் பற்றி அவர்களுக்கென்ன என்ற நிலைதான் உள்ளது.
எனவே நமது பிரச்சனைகள் கோரிக்கைகள் இந்த தேர்தலில் பேசுப் பொருளாக்குவதற்கும், தேர்தல் முடிந்து வெற்றி பெறும் உறுப்பினர் இவைகளை செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பரப்புரை இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக முன்னெடுத்துள்ளோம்.
பவானி ஆறு மாசடைதல்:
பவானி ஆறு மேட்டுப்பாளையம் தொகுதி மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ளது. இந்த ஆற்றுநீரை நம்பி பல ஒருங்கிணைந்த குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆற்றில் சாரதா டெர்ரி பிரைவேட் லிமிடெட் மற்றும் UBL (United Bleachers Limited) போன்ற பல தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. மேலும் சுத்திகரிக்கப்படாத நகரங்களின் கழிவுநீர் கலப்பது. பிளாஸ்டிக் மற்றும் குப்பகைள் கொட்டப்படுவது போன்ற செயல்களினால் பவானி ஆறு கடுமையாக மாசடைந்து, மக்கள் குடிப்பதற்கு பாதுகாப்பற்றதாக மாறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது மற்றும் விவசாயமும் மண்வளமும் பாதிப்புக்குள்ளாகிறது. பவானி ஆற்றுநீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ள இரும்பொறை ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாவனி ஆறு மாசடைந்துள்ளதால் தினமும் தங்களது குடிநீர் தேவைக்காக தண்ணீரை காசு கொடுத்து வாங்குகின்றனர்.
காந்தி மைதானம் கிழங்கு மற்றும் பூண்டு மண்டி:
உதகை சாலையில் உள்ள கிழங்கு மற்றும் பூண்டு மண்டியில் தினந்தோறும் டன் கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மண்டி பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவது, சாக்கடை கால்வாய்களை தூர்வாருவது, சாலைகளை பராமரிப்பது போன்றவற்றை அரசு நிர்வாகம் செய்யாததால் காந்தி மைதானம் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இங்கு பணி செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் நோய் தொற்றுகளும் ஏற்படுகிறது.

தூய்மைப் பணிகள்:
மேட்டுப்பாளையம் தொகுதிக்குட்பட்ட நகரங்களில் பொதுவெளியில் இருந்த குப்பைத் தொட்டிகளை எடுத்துவிட்டு வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்தல் என்கிற முறையில் தற்போது தூய்மைப்பணி நடைப்பெற்று வருகிறது. இதனால் குப்பை வண்டி வரும் நேரங்களில் மக்கள் வீடுகளில் இல்லை என்றாலோ அல்லது மக்கள் குப்பைகளை கொட்ட தவறினாலோ பொதுவெளியில் குப்பைகளை மக்கள் கொட்ட நேருகின்றது. இதனால் சுகாதாரமற்ற நிலை உருவாகிறது. இதனால் தற்போது பின்பற்றும் முறையுடன் கூடுதலாக பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளையும் வைக்க வேண்டும். மேலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களது எண்ணிக்கை பற்றாக்குறையாக இருப்பதால் தூய்மைப் பணிகளை முறையாக கொண்டுசெல்ல முடியவில்லை.
அரசு தூய்மைப் பணி துறையை தனியார் மயமாக்கப்பட்டு வரும் போக்கு தீவிரமாகி வருகிறது. இதனடிப்படையில் தான் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது; ஒப்பந்த அடிப்படையில் மட்டும் ஊழியர்களை எடுப்பது; உரிய உபகரணங்கள் வாங்காமல் இருப்பது போன்ற போக்குகளில் அரசு செயல்படுகின்றன.
பொது கழிவறைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்:
மேட்டுப்பாளையம் தொகுதியில் உழைக்கும் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் பொதுக் கழிவறைகள் இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வரும் அவலநிலைகள் தொடர்கின்றது.
இது மட்டுமின்றி ஏற்கனவே உள்ள பொது கழிவறைகளில் உள்ள பைப் லைன்கள், தண்ணீர் தொட்டிகள் சேதம் அடைந்திருப்பது. தண்ணீர் வசதி, இரவு நேரங்களில் மின்விளக்கு வசதிகள் இல்லாததாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
போதைப் பொருட்களால் வாழ்வை இழக்கும் மக்கள்:
மேட்டுப்பாளையம் தொகுதி வாழ் உழைக்கும் மக்களின் வாழ்வை அழிப்பதில் மது. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் முக்கியமான பங்காற்றுகிறது. மக்கள் நல அரசு என்று கூறிக்கொண்டு, அரசே “டாஸ்மாக்” கடைகளை நடத்துகிறது. இதுபோக மேட்டுப்பாளையத்தில் பல தனியார் பார்களும் இயங்குகிறது. இவை உழைக்கும் மக்கள் மண்டியில் மூட்டை தூக்குவது போன்ற பல்வேறு வேலைகளில் கடுமையான உழைப்பை செலுத்தி சம்பாதிக்கும் குறைந்தபட்ச வருமானத்தையும் பறிப்பது மட்டுமின்றி, குடும்பங்களின் வாழ்வை அழிக்கிறது; குடும்பத் தலைவிகள் மீது பெரும் சுமையை சுமத்துகிறது ; எதிர்கால தலைமுறையே சுய சிந்தனை அற்றவர்களாக மாறுவதற்கு வழி வகுக்கிறது. ஆகையால் மேட்டுப்பாளையத்தில் போதைக் கலாச்சாரமானது அனைத்து வகைகளிலும் தடை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறான மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்பது மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி மக்களின் கோரிக்கைகளாகும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்போம்.

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி மக்களின் கோரிக்கைகள்:
- பவானி ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் மற்றும் நகரக் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்து!
- பவானி ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றி, ஆற்றினை தூர்வாரி தூய்மையாக பராமரித்திடு!
- இரும்பொறை ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்!
- காந்தி மைதானம் கிழங்கு மற்றும் பூண்டு மண்டி பகுதிகளை தூய்மைப்படுத்தி சுகாதாரமான முறையில் பராமரித்திடு!
- பொது இடங்களில் மக்கள் குப்பைகளை போடுவதற்கு ஏற்ப குப்பைத் தொட்டிகளை வைத்திடு!
- தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்காதே!
- ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்கு!
- தூய்மைப் பணிகளுக்கு ஏற்ப பணியிடங்களை உயர்த்தி, காலி பணியிடங்களை நிரப்பிடு!
- தூய்மைப் பணியார்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கு!
- பொது கழிவறைகள் இல்லாத பகுதிகளில் பொது கழிவறைகளை அமைத்துக் கொடு!
- மேட்டுப்பாளையம் தொகுதியில் தற்போது இருக்கும் பொது கழிவறைகளை முறையாக பராமரி!
- டாஸ்மாக்கை மூடு! கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கங்களைத் தடை செய்!
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி வாழ் உழைக்கும் மக்களே! நமது கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து போராடுவோம்!
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











