Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 243

சென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது || போலீசு அராஜகம்

டந்த ஜனவரி மாதம் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களை சென்னைப் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜன் பழிவாங்கும் நோக்கில் தேர்வில் தோல்வியடையச் செய்துள்ளார்.  அதைக் கண்டித்து, மறு திருத்தம் செய்யக் கோரி கடந்த பிப்ரவரி மாதம் தொடர் போராட்டம் நடத்தினார்கள் மாணவர்கள்.

அதன்பின், அவர்கள் அனைவரும் தேர்வில் தேறிவிட்டதாக வாய்வழித் தகவல் கூறியிருக்கிறது பல்கலை நிர்வாகம். பெற்ற மதிப்பெண் பற்றி கேட்டதற்கு கல்லூரி நிர்வாகம் எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் கடந்த மார்ச் 16-ம் தேதி அன்று நீண்ட நேரம் காத்திருந்து, தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜனை துறை அலுவலகத்தில் சந்தித்துக் கேட்டுள்ளனர். அதற்கு சௌந்திரராஜன் தகாத வார்த்தைகளில் பேசி, பெண் மாணவியின் மீது பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்த்துக் கேட்ட சகமாணவர்களையும் அடித்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார்.

படிக்க :
♦ நஜீப் அகமது எங்கே ? ஏ.பி.வி.பி.யை தடைசெய் | சென்னை பல்கலையில் ஆர்ப்பாட்டம்
♦ பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !

சென்னை பல்கலைக்கழக பதிவாளர், பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கமிட்டி, துணைவேந்தர் ஆகிய மூன்று பேருக்கும், இந்த பாலியல் வன்கொடுமை சம்மந்தமாக, புகார் கடிதம் கொடுத்துள்ளார்கள் மாணவர்கள். அந்த கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவந்தனர் மாணவர்கள்.

பல்கலை நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகள், பிரச்சினையை பற்றி ஒன்றுமே பேசாமல், என்ன காரணத்திற்கு என்று முறையாக தெரிவிக்காமலேயே, கடிதங்கள் தந்துள்ளது. “கடிதங்களில் எழுதியிருப்பது முன்னுக்குபின் முரணாக உள்ளது. பேரா.சௌந்திரராஜனுக்கு ஆதரவாக உள்ளது” என்ற அடிப்படையில் அனைத்துக் கமிட்டிகளையும் நிராகரித்துள்ளார்கள் மாணவர்கள்.

பாலியல் குற்றத்தை விசாரிக்க வந்த கமிட்டிக்கு மட்டும் மாணவர்கள் சென்றார்கள். ஆனால், அந்த கமிட்டியோ, மாணவியைக் கொச்சையான கேள்விகளைக் கேட்டு மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் உசைன் என்பவர் “உனக்கு குடும்பம் இருக்கு, பாலியல் துன்புறுத்தல் வழக்குக் கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே, அதை விட்டுட்டு நடவடிக்கை எடு என்று பசங்களுடன் உட்கார்ந்து இருக்கியே” என்று கேவலமாகப் பேசியுள்ளார். அதே கமிட்டியில் இருந்த ஒரு பெண் வழக்கறிஞர் சாந்தக்குமாரி என்பவர் “அவர் போகிற போக்கில் தெரியாமல் உன்னைத் தொட்டுட்டுப் போயிருப்பார்” என்று அலட்சியமாகப் பேசியிருக்கிறார். அதற்கு பாதிக்கப்பட்ட மாணவி “ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை நடத்திருப்பது என்பதால், இது பாலியல் வன்கொடுமைதான்” என்று உறுதியாகக் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் வழக்கறிஞர் சாந்தக்குமாரி “அவருக்குத் தெரியாமல் நடந்திருக்கும்” என்று மீண்டும் அலட்சியமான பதிலையே கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 20-ம் தேதி அன்று இரவு, D1 போலீசு நிலைய இன்ஸ்பெக்டர் சீதாராமன் பல்கலைக் கழகத்திற்குள் வந்து, “ஒருவேளை உங்களை இடைநீக்கம் செய்யும் உத்தரவு வந்து, உங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று போராடும் மாணவர்களைக் கேட்கிறார். அவர் கேட்டுச் சென்ற பத்து நிமிடத்திற்குள், பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு ஒரு கடிதம் தருகிறது. அதில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடன் இருந்த நான்கு மாணவர்களையும் இடைநீக்கம் செய்வதாகக் கூறியுள்ளார்கள். அந்தக் கடிதத்தை மாணவர்கள் முழுவதுமாகப் படித்து முடிப்பதற்கு முன்பே மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அப்புறப்படுத்த வந்துவிட்டது போலீசு. ஆனால், மாணவர்கள் பலரின் எதிர்ப்பினால் திரும்பிச் சென்றது போலீசு.

தவறு செய்த ஒரு பேராசிரியரை பதிவாளரும், துனைவேந்தரும், போலீசும் ஏன் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று புரியவில்லை என்கிறார் மாணவர் சிவப்பிரகாசம்

குற்றவாளியான சௌந்திரராஜனைக் காப்பாற்ற கல்லூரி நிர்வாகமும், போலீசும் தீவிரமாக இறங்கி, போராடும் மாணவர்களையே குற்றவாளிபோல் பொது வெளியில் சித்தரித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால், கடந்த மார்ச் 21-ஆம் தேதி அன்று விடியற்காலையில் கைகளை கண்ணாடியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவி. சகமாணவர்கள் மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அதிகரித்தவண்ணம் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவி, அன்று மதியம் மீண்டும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். அவர் தற்கொலைக்கு முயலக் காரணம் இந்த பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர், பதிவாளர், துணைவேந்தரும்தான் என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள் போராடும் மாணவர்கள்.

பல்கலைக்கழகத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கக் கூடாது என்று அவர்களை மிரட்டி வெளியேற்ற முயற்சித்துள்ளது போலீசு. அதையும் மீறி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது.

கடந்த 5 நாட்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக மாணவர்களை, போராட்டத்தின் ஆறாம் நாளான மார்ச் 22-ஆம் தேதி அன்று காலையில் கைது செய்து பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்கு எதிரில் இருக்கும் போலீசு நிலையத்தின் அருகில் ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளது போலீசு.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம்

மாணவி கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்தை பெயரளவுக்குக் கூட போலீசு கண்டித்ததாகத் தெரியவில்லை. பாலியல் புகார் அளித்த பேராசிரியர் சௌந்தர ராஜன் சுகவாசியாக உலா வருகையில், நியாயம் கேட்டுப் போராடிய பாதிக்கப்பட்ட மாணவர்களை குற்றவாளிகள் போல் கைது செய்திருக்கிறது போலீசு. இந்த மாணவர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள்தான் அநியாயக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடினார்கள். அதற்காகவே அவர்கள் மதிப்பெண் குறைக்கப்பட்டு, பெயிலாக்கப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு எதிராகவும் அவர்கள் போராடியிருக்கிறார்கள். இறுதியில் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டிருப்பதோடு இடைநீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மாணவர்களின் போராட்டம், மாணவர்களைக் கொள்ளையிடும் சென்னைப் பல்கலை நிர்வாகம், அதற்குத் துணை போன பேரா. சௌந்தரராஜன் ஆகியோரின் அதிகாரத் திமிரையும், இக்கும்பலுடனான போலீசின் கூட்டுக் களவானித்தனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

அவர்களைப் பொறுத்தவரையில் நமக்கு சொல்ல வரும் செய்தி, கல்விக் கட்டணக் கொள்ளை அடிக்க முயன்ற சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்துப் போராடியதே மாணவர்கள் செய்த முதல் தவறு. போராடிய ‘குற்றத்திற்காக’ தேர்வில் ஃபெயில் போட்ட பேரா.சௌந்திரராஜனுக்கு எதிராகப் போராடியது இரண்டாவது தவறு. தேர்வின் மதிப்பெண்ணைப் பொதுவெளியில் வெளியிடுங்கள் என்று மாணவர்கள் கேட்டது மூன்றாவது தவறு. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த, பேரா.சௌந்திரராஜனுக்கு எதிராக புகார் கொடுத்ததும், நீதி கேட்டு போராடியதும் நான்காவது தவறு.

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய வர்க்கத்தில் இருந்து தங்கள் வாழ்க்கைக்காகப் படிக்க வந்த மாணவர்களின் மேற்கூறிய ‘தவறு’களுக்காகத்தான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகமும், போலீசும் சேர்ந்து வெறியாட்டம் போடுகிறது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டதை அறிவித்து நடத்திய இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த தோழர்களை அடித்து, பெண் தோழர்களை பாலியல் துன்புறுத்தல் செய்து கைது செய்துள்ளது D1 நிலைய போலீசு.

படிக்க :
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE
♦ பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE

பாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை இடைநீக்கம் செய்ய வேண்டும், அவருக்கு துணைப்போகும் பதிவாளர், துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்கை நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகளைக் கொண்டு கமிட்டி அமைத்து விசாரித்தால் மட்டுமே நாங்கள் உட்படுவோம். எங்கள் தேர்வு மதிப்பெண்களை பொது வெளியில் வெளியிட வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. நீதி கிடைக்கும் வரை தொடர்ந்துப் போராடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சென்னை பல்கலைக்கழக கிரிமினல் நிர்வாகத்தை எதிர்த்துத் தொடர்ந்து அஞ்சாமல் போராடும் மாணவர்களுக்கு பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக சக்திகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் துணை நிற்பது மிகவும் அவசியம். இன்றைய நமது ஆதரவுதான் சமூகத்தின் மீதான  போராடும் மாணவர்களின் நம்பிக்கைக்கான அடிப்படையாகும்.


வினவு செய்தியாளர்

ஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு !

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய அச்சமும் அதன் அதிர்வலைகளும் மொத்த நாட்டையும் ஏன் உலக நாடுகளையும் கூட உலுக்கின. தொழிற்சாலைகளும் அரசு – தனியார் அலுவலகங்களும் பெரிய சிறிய வணிக நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட துயரம், உயிர் பலி, உழைக்கும் மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளிய அவலம் என சுருக்கமாக சொல்வதென்றால் போர் ஏற்பட்டால் எத்தகைய சூழல் உருவாகுமோ அதற்கு இணையான நிலைமை உருவாகியது என்றால் அது மிகையில்லை.

இந்த பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பு அரசியல் சமூக நிலைமைகளிலும் மாற்றத்தைக் கோரின. பள்ளி கல்லூரி பாடங்கள் மட்டும் அல்ல அரசியல் கூட்டம் கூட ஆன்லைன் மூலம் நடந்தேறின. குறிப்பாக மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் பிழைப்புக்கான வழியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தின. கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கும் முன்பாக தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தேன். கொரோனா ஊரடங்கு துவங்கிய பின்னர், வேலையும் இல்லை. வருமானமும் இல்லை.

இந்த மாதிரியான நாட்களை கடப்பதென்பது கொடூரமானது. ஒவ்வொரு நொடியும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். உணவும் இதர தேவைகளும் உத்திரவாதமில்லாத நிலை ஏற்படுத்தும் சூழல், மன அழுத்தத்தை அதிகமாக்கி குடும்பத்தில் சண்டைகள் வெளிப்பட்டு நிம்மதியிழக்க செய்தது. அமைப்பும் – தோழர்களின் உதவியும் நெருக்கடியில் இருந்து மீண்டு வர உதவினாலும், பிழைப்புக்கான வழியில் சுய முயற்சி இல்லாத எனது போக்கைக் கண்டு என் துணைவி விமர்சனம் செய்ததோடு, மாற்றாக செயல்படவும் துணிந்தார்.

படிக்க :
♦ அதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் !!
♦ ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா UAPA சட்டத்தில் கைதா ?

கோயம்பேடு மார்க்கெட்டிற்குச் சென்று பழங்களை வாங்கிக் கொண்டு வந்து ட்ரை சைக்கிளில் வைத்து விற்கத் துவங்கினார். ஓரளவு நடந்த வியாபாரத்தின் காரணமாக குடும்பத்தின் அடிப்படை வருவாய் பிரச்சினை தீர்ந்தாலும் வேறொரு பிரச்சினை எழுந்தது.

தினந்தோறும் மார்க்கெட் செல்ல விடியற் காலை 4 மணிக்கு ஆட்டோ பிடிக்க வேண்டுமனால் 3 மணிக்கே எழுந்து தயாராகி, மெயின் ரோட்டிற்கு வர வேண்டும். அதைத் தொடர்ந்து வாங்கி வந்த பழங்களை வகை பிரித்து வியாபாரத்திற்கு கிளம்பி மீண்டு்ம் வீடு வர மதியமோ, சில நாட்கள் இரவு கூட ஆகி விடும். வியாபார வேலையை என் துணைவி பார்த்துக் கொண்ட பிறகு வீட்டு வேலையை நான் பார்க்கலானேன்.

வீட்டில் காலை – இரவுக்கு சமைப்பது துணிகளை துவைப்பது குழந்தையை பராமரிப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்தாலும் எனக்கும் என் துணைவியாருக்கும் இடையே பிரச்சினை வெடிக்கும். அதுவும் வியாபரம் ஆகாத நாட்கள் என்றால் அன்றைக்கு சண்டை உக்கிரமாக நடக்கும்.

நாம்தான் ஆணாதிக்கத்தோடு நடந்து கொள்வதில்லையே மரியாதையோடுதான் பேசுகின்றோமே வேலையும்தான் செய்கின்றோமே என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. என் துணைவியார் சிறுசிறு குறைகளை சுட்டிக் காட்டினால் கூட, நாம் ஆணாதிக்கம் இல்லாமல் வீட்டு வேலைகளை செய்து வந்தாலும் இப்படி சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் அக்கப்போர் நடக்கிறதே என எண்ணுவேன்.

என் துணைவியார் தள்ளுவண்டி பழ விற்பனைக்கு செல்லத் துவங்குவதற்கு முன்னரெல்லாம் என் இளைய மகள் தென்மொழி மலம் கழித்தால் கால்கழுவி விடுவதைக் கூட அருவெறுப்பாக பார்த்த நான் இந்த காலகட்டத்தில் குழந்தையை குளிக்க வைப்பது, களி (சத்து மாவு), பால் போன்ற உணவுகளை செய்து கொடுப்பது, குழந்தையை குளிக்க வைப்பது உள்ளிட்ட அனைத்து வகையான பராமரிப்பு வேலைகளையும் கற்றுக்கொண்டேன். அதை அன்றாடம் செய்து வந்தேன். மறுபுறம் குழந்தையும் என்னிடம் நெருக்கமானது. இவையெல்லாம் சேர்ந்து எனக்கு சுயதிருப்தி மேலோங்கி என்னை பரிசீலிக்காதபடி செய்தது.

சுயபரிசீலினை செய்து கொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என அமைப்பு கற்றுக் கொடுத்துருக்கின்றது. அதன்படி நிதனமாக யோசிக்க துவங்கினேன். வீட்டு வேலைகளை செய்தாலும், துணைவி அதில் ஏதேனும் தவறை சுட்டிக் காட்டினால் கூட அதில் நான் எரிச்சலைடய காரணம் என்ன? சண்டை வர காரணம் என்ன ? என்று யோசித்துப் பார்த்தேன்.

 “ஒரு ஆணாக இருந்து கொண்டு வீட்டு வேலைகளைச் செய்வதையே” நான் செய்யும் மிகப்பெரிய சாதனையாகக் கருதுவதால் தான், வேலைகளை ஏனோதானோவென்று செய்திருப்பதை என் துணைவியார் சுட்டிக் காட்டும் போது எரிச்சலுணர்வு ஏற்படுவதை உணர முடிந்தது.

எனது வேலைகள் ஏனோ தானோவென்றும் ஒழுங்கற்றும் இருக்கும். சான்றாக, சமையல் வேலையை சரியாக செய்தாலும், அடுப்பைச் சுற்றி சுத்தமாக துடைக்காமல் விட்டிருப்பேன். துணிகளை துவைத்திருந்தால் வீட்டை கூட்டி மாப்பு போட்டிருக்க மாட்டேன். இப்படி ஏதாவதொரு வேலையை விட்டுவிட்டாலும், அரைகுறையாகச் செய்தாலும் எனது தரப்பை நியாயப்படுத்த மட்டும் நான் ஒருபோதும் தயங்கியதே இல்லை. அதற்குக் காரணம் ஒரு ஆணாக இருந்து கொண்டு இதனைச் செய்ததே பெரிய விசயம் என்று நினைத்ததுதான்.

வீட்டு வேலை என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்னே சமையல், பாத்திரங்களை கழுவுவது, தண்ணீர் பிடித்து வைப்பது, துணி துவைப்பது, வீட்டை பெருக்கி சுத்தமாக வைத்திருப்பது, குழந்தையை பராமரிப்பது, கழிவறையை சுத்தப்படுத்தி வைப்பது இவை அனைத்தும் நோ்த்தியாகவும் விரைவாகவும் செய்வதே வீட்டு வேலையாகும். அதை செய்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அளவுகோல்தான் உண்டு. அதை அரைகுறையாகச் செய்வதே பெரிய சாதனையைப் போல சிந்தித்து வந்ததை உணர்ந்து, அதனை மாற்றிக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டேன்.

படிக்க :
♦ பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !
♦ ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !

என் தவறை உணர்ந்ததைத் தொடர்ந்து, அந்த சிந்தனையை மாற்றிக் கொண்டு, வீட்டு வேலைகளை முழுமையான ஈடுபாட்டோடு வரிசைப்படுத்தி செய்ய முயன்றபோது, உரிய நேரத்தில் வேலைகளை முடிக்க முடியாமல் திணறினேன். குறிப்பாக சமையல் வேலையானது கவனமாகவும் நிதனமாகவும் செய்வதோடு பாத்திரங்களை கழுவும் வேலையும் அக்கம் பக்கமாகவும் செய்ய வேண்டிய வேலையாக இருந்தது. அதைச்  செய்து கொண்டிருக்கும் போதே குழந்தை மலம் கழித்தால் உடனடியாக துக்கிச் சென்று கால்கழுவி விட வேண்டும்; அல்லது, விளையாட்டின் ஊடாக கீழே வீழ்ந்து விட்டால் தேற்ற வேண்டும். இதற்குள் இரவு 7 மணி ஆகி விடும். அப்போது ஏற்படும் எரிச்சலும் சலிப்பும் சொல்லி மாளாது.

ஏற்கெனவே சொன்னபடி மனைவியிடம் மரியாதையாக பேசுவது (கொரோனாவுக்கு முந்தைய காலத்தில்) மற்றும் வீட்டு வேலைகளில் சிலவற்றை செய்வதே ஆணாதிக்கத்தை விட்டொழித்து விட்டதாக கருதிக் கொண்டேன். இப்படிப்பட்ட சீர்த்திருத்தவாத கண்ணோட்டமும் அதற்குறிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்திக் கொண்டே குடும்பத்திலும் வெளியிலும் புரட்சியாளன் என தம்பட்டமடித்துக் கொண்டிருந்தேன் என்பதை இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஆழமாக பரிசீலிக்கையில் உணர முடிகின்றது.

சொத்துடைமை கண்ணோட்டத்தின் விளைவாக உருவான ஆணாதிக்கத்தை முதலாளித்துவம் உயர்த்திப் பிடித்திருக்கிறது. தனது இலாப நோக்கத்திற்கு இதனை பயன்படுத்திக் கொண்டது. பெண்களின் உழைப்பை மலிவான விலைக்குச் சுரண்டிக் கொழுத்தது முதலாளித்துவம். கருத்துரீதியாகவும் பலவந்தமாகவும் (உடல் ரீதியாகவும்)  ஆணாதிக்கம் பிரயோகிக்கப்பட்டதை எதிர்த்து அன்றைக்கு ஐரோப்பா உள்ளிட்ட மேலை நாடுகளில் தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு உழைக்கும் மக்கள் தங்களது அரசியல் – ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதன் வரலாற்றை பார்க்கின்றோம்.

ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அல்லது மாற்ற விரும்பும் ஆண்கள் யாராக இருப்பினும் ஆணாதிக்க எதிர்ப்பில் தங்களை முழு சுய சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி உட்படுத்திக் கொள்ளத் தவறினால், மாற்றத்திற்கு வழி வகுக்காத மத போதனையாகவே ஆணாதிக்க எதிர்ப்பு எனும் கோஷம் முடிந்துவிடும். அதே சமயத்தில் ஆணாதிக்கமானது இடைவிடாது இயக்கத்தில் இருக்கின்றது.  கிராமம் – நகரம், படித்தவர் – படிக்கதாவர் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து பார்ப்பனியம் – முதலாளித்துவம் ஆகிய நச்சுக்கள், ஆணாதிக்கத்தை நிலைநாட்டும் வகையிலான கருத்தையும் கண்ணோட்டத்தையும் அன்றாடம் வழங்கி வருகின்றன.

கொரோனா தொற்று ஊராடங்கின் போது அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள்தான் இந்த பெரும் நெருக்கடியிலிருந்து தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடிந்தது, என்றார் பு..தொ.மு.–வின் முன்னாள் பொருளாளர் தோழர் விஜயகுமார். உண்மைதான் எனினும்,  சங்கமாக திரட்டப்படுவது மட்டுமல்லாமல், மா.லெ. சித்தாந்த ரீதியான கண்ணோட்டம்தான், நெருக்கடி மிகுந்த காலத்தை கடந்து வருவதற்கான பார்வையை வழங்குகின்றது. முன்னது ஒடுக்குமுறைக்கெதிராக அனைவரையும் ஒன்றுபட வைக்கின்றது என்றால் பின்னது அனைத்துப் பிரிவு ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து சிந்திக்கவும் – செயல்படவும் வைக்கின்றது.

.கா.சிவா

disclaimer

 

தேர்தல் ஜனநாயகம் || அடுத்த சுற்று அடிக்கு இலவச புக்கிங் || கருத்துப்படம்

தேர்தல் ஜனநாயகத்தில் …

அடுத்த ரவுண்டு அடி வாங்கும் முன்னர் …

மகிழ்ந்து கொண்டாடும் இந்திய வாக்காளர்கள் !

 

 

 

 

 

கருத்துப்படம் : மு.துரை

குறிப்பு:

கார்ட்டூனிஸ்ட் அலி ஃபெர்சாட் : சிரியாவின் அதிபர் பஷர் அசாத்தின் ஒடுக்குமுறைகளை தமது தூரிகையால் அம்பலப்படுத்தியதன் காரணமாக பஷர் அசாத்தி குண்டர் படையின் தாக்குதலுக்கு ஆளானவர்.  இந்த விரல்கள்தானே வரைந்தன’ எனக் கேட்டு அவரது விரல்களை நொறுக்கினர்; கைகளை உடைத்தனர். குற்றுயிராய் வீதியில் வீசப்பட்டார் கார்டூனிஸ்ட் அலி ஃபெர்சாட்.

எனினும் தளர்வடையவோ, பயந்து ஒதுங்கவோ இல்லை. பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் உயிர்த்தெழுந்தார். இன்னும் உக்கிரமாக ஜனநாயகத்துக்காக போர்க்கொடி தூக்கினார். அவர் மீண்டதும் வரைந்த கார்ட்டூன்தான் இது.

தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE

ண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.டெக். பயோடெக்னாலஜி படிப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதைக் கண்டித்துள்ள சென்னை உயர்நீதி மன்றம், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என உத்திரவிட்டுள்ளது. இப்பிரச்சனையின் ஆரம்பத்திலிருந்தே பல கேள்விகளுக்கு உரிய சரியான பதிலை பல்கலைக்கழக நிர்வாகமோ மாநில அரசோ கூறாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றனர். குறிப்பாக,

1. எம்.டெக். பயோடெக்னாலஜி படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதா? அல்லது மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதா என்ற சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக, முறையான ஒப்புதல்களோ அல்லது அறிவிப்புகளோ இல்லாமலே முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தியது ஏன்? – மாணவர்கள் கேள்வி எழுப்பியதனால் “மத்திய அரசின் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மாநில அரசு ஏற்றுக்கொள்ளாதால்” மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழகம் விளக்கம் கூறியது. குறிப்பாக மாணவர்கள் நீதிமன்றம் சென்றதன் விளைவாகவே 2020-21 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் நடத்தப்படுகிறது. இதில் பல்கலைக்கழக நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

படிக்க :
♦ அண்ணா பல்கலை : M. Tech படிப்பிற்கான 69 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்து || CCCE
♦ அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !

2. அண்ணா பல்கலைக்கழகம் ஓரு மாநில பல்கலைக்கழகம். பல்கலைக் கழகத்திற்கான மொத்த நிதியும் மாநில அரசாலேயே வழங்கப்படுகிறது. மாநில அரசின் நிதி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிதி என இரண்டும் சேர்த்துதான் ஒவ்வொரு ஆண்டும் இப்பல்கலைக்கழகத்திற்கு பல கோடிகள் செலவு செய்யப்படுகிறது. மத்திய உயிரித் தொழில்நுடபத் துறையுடன் அண்ணா பல்கலைக்கழகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் இவ்விரண்டு எம்.டெக். படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இம்மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கும். இதற்காக ஒவ்வொரு ஆண்டுக்கும் சில லட்சங்களை மத்திய அரசு ஒதுக்குகிறது. மற்றபடி அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கூடவே UGC-ன் சமீபத்திய சுற்றறிக்கையானது மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் தங்களுடைய இடஒதுக்கீட்டு முறையையே பின்பற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துவிட்டது. இருப்பினும் 69 சதவிகித இடஒதுக்கீடு கைவிட்டு போனது ஏன்?

மாநில அரசும் பல்கலைக்கழகத் தரப்பும் போதிய ஆதாரங்களை முன்வைத்து உறுதியான வாதங்களை முன்வைக்காத காரணத்தினாலேயே 49.5 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. மாநில அரசும் பல்கலைக்கழகத் தரப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் ஏன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை?

இத்தீர்பின் மூலம் மிகவும் பிறபடுத்தப்பட்ட(MBC) பிரிவினர், பிற்படுத்தப்பட்டமுஸ்லீம் பிரிவினர், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான உள் ஒதுக்கீடுகள் அனைத்தையும் ஒன்றும் இல்லாமல் செய்து அவ்விடத்தில் வெளிமாநிலத்தவரையும் உயர்சாதியினரையும் கொண்டுவந்துள்ளனர்.

3. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் எம்.டெக் படிப்பிற்கான மாணவர் பட்டியலை 10 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக வெளியிட்டுள்ளது. இது குறித்து உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியும் பல்கலைக்கழக நிர்வாகம் மலுப்பலான பதிலையே தந்துள்ளது. 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து சிண்டிகேட்டிற்கு தெரியப்படுத்தவில்லை என சிண்டிகேட் உறுப்பினர்கள் கூறுகின்றனர். இவ்வளவு விதிமீறல்களோடு 10 சதவிகித இடஒதுக்கீட்டை துணைவேந்தரும் பதிவாளரும் ஏன் நடைமுறைப்படுத்த வேண்டும்?

மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும் உயர்சாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. யாருடைய ஒப்புதலோடு இந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினர்?

மேற்சொன்ன விவரங்களிலிருந்து சில முடிவுகளுக்கு நாம் வரமுடியும். அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் இச்சிக்கலின் தொடக்கத்திலிருந்தே மத்திய அரசு ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசோ மாநிலத்தின் உரிமைக்காக போராடாமல் தங்களுடைய ஆட்சியின் நலன்களிலிருந்து சமரசமாகவே கையாண்டுள்ளனர். இதன் விளைவு, மாநிலப் பல்கலைக்கழகங்களின் இடஒதுக்கீடுகளில் மத்திய அரசு தலையிடலாம் என்பதற்கு சட்ட அங்கீகாரத்தை இவர்கள் பெற்றுத்தந்தது.

***

சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்குவது தடைப்பட்டதிற்கு இடஒதுக்கீடே முதன்மைக் காரணியாக அமைந்தது எனலாம். தமிழ்நாட்டின் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பின்பற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு உத்திரவாதம் கொடுத்திருப்பதாகக் கூறிய எடப்பாடி அரசு பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான வேலையில் இறங்கியது. ‘சிறப்புத் தகுதி விதிகளின்படி மாநில இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராது’ என சூரப்பா உறுதி கூறினார்.

பல்கலைக்கழக பேராசிரியர்களோ சிறப்புத் தகுதி கிடைத்தால் ஆயிரம் கோடி நிதி கிடைக்கும் உலகத்தரத்திலான ஆய்வுகளைச் செய்யமுடியும் என்று சிறப்புத் தகுதிக்கு பிரச்சாரம் செய்தனர். ஆனால் மத்திய அரசோ 69 சதவிகித இடஒதுக்கீடு குறித்து எந்தவித எழுத்துப் பூர்வமான உறுதியையும் அளிக்க முன்வரவில்லை. மேலும் சிறப்புத் தகுதி பெற்ற கல்லூரிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளோ, ‘மத்திய அரசின் இடஒதுக்கீட்டையே அமல்படுத்த வேண்டும்’ எனக் வலியுறுத்துகிறது. இதனை CCCE வெளியீட்டில் விரிவாக விளக்கியுள்ளோம்.

சட்ட ரீதியான வாய்ப்புகள் இருந்தும் எம்.டெக். படிப்புகளில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை கோட்டை விட்ட சூரப்பா, இடஒதுக்கீட்டுக்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாக உள்ள மத்திய அரசின் சிறப்புத் தகுதி கிடைத்தால் எவ்வாறு 69 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும்? இக்கேள்வி பலத்தரப்புகளிலிருந்தும் எழுப்பப்பட்ட பிறகும் கூட எடப்பாடியோ அல்லது பல்கலைக்கழகத் தரப்போ அதற்கு பதில் சொல்லத் தயாராக இல்லை.

உலகத்தரம் என்ற போர்வையில் சிறப்புத் தகுதியை ஆதரித்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினர் எம்.டெக் பிரச்சனையில் வாய்திறக்கவில்லை. சூரப்பாவின் மீதான ஊழல் விசாரணையை கண்டித்தும் ரத்து செய்யக்கோரியும் அறிக்கை அம்புகளைத் தொடுத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் எம்.டெக் இடஒதுக்கீடு பிரச்சனையில், மாணவர்கள் உதவி கோரியும், வாய் திறக்க மறுத்துவிட்டனர்.

உலகத்தரம், சிறப்புத்தகுதி, ஊழல்எதிர்ப்பு இறுதியாக மத்திய அரசு ஆதரவு இவைதான் இவர்களை இணைக்கும் புள்ளி. எனவேதான் இவர்கள் மாநில உரிமையையோ, சமூகநீதி கொள்கைகயையோ, இந்துத்துவ எதிர்ப்பையோ பெரிதாக கண்டு கொள்வதில்லை. இப்போக்குகள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தெளிவாகவே வெளிப்பட்டுள்ளன.

எம்.டெக். விவகாரத்தை சூரப்பாவும் எடப்பாடியும் கையாண்ட விதத்தை பார்க்கும் போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி கிடைத்திருந்தால் பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடமே ஒப்படைத்திருந்திருப்பார்கள் என்ற முடிவுக்கே வரமுடியும்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரங்களை சமகால அரசியல் சூழலோடு இணைத்துப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்திய அரசினுடைய நிறுவனங்கள் அனைத்தும்(Government Institutions) பிஜேபி/ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன. அவர்களின் முதல் தாக்குதலே உயர்கல்வி நிறுவனங்களிலிருந்துதான் ஆரம்பித்தன.

படிக்க:
♦ பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
♦ ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !

பல்கலைக்கழகங்களை இந்துத்துவக் கொள்கைப்பிரச்சாரத் தளங்களாகப் பயன்படுத்தபடுவதோடு மட்டுமல்லாமல் தனியார்மயத் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை ஆதரவு, மாநில உரிமைகள் பறிப்பு, ஜனநாயக சக்திகள் மற்றும் மாணவர் இயக்கங்களை ஒடுக்குவது என தங்களுடைய பாசிச நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகங்களுக்குள் முன்தள்ளுகின்றனர்.

இதற்கு தகுந்த துணைவேந்தர்களும், பதிவாளர்களும், கவர்னர்களும் நியமிக்கப்படுகின்றனர். ஜே.என்.யுவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஜெகதீஸ் குமார் என்றால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சூரப்பா அவ்வளவுதான்.

சூரப்பா ஊழலற்றவர் என்ற வாதத்தின் மூலம் இடஒதுக்கீட்டு மற்றும் தமிழகத்திற்கு எதிரான அவரின் நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. கடந்த மூன்று வருடகாலமாகவே துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையாக நடப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் பிஜேபி/ஆர்.எஸ்.எஸ் கடைக்கண் பார்வையில்லாமல் யாரும் துணைவேந்தர் ஆக முடியாத என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. ஊழலைவிட சமூகநீதியும் மாநில உரிமையும் பறிபோவது மிகவும் ஆபத்தானது.

ராஜன்
CCCE-TN

disclaimer

ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து !

PP Letter head

ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது !

2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஒக்கி புயல் பேரழிவினால் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் மாண்டு போயினர். நீரோடி வரையிலான கிராமங்களில் எங்கு சென்றாலும் இறந்து போன, காணாமல் போன மீனவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இருந்தன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மீனவர்களை மீட்டுத் தா! என்ற கோரிக்கையை முன்வைத்து சின்னத்துறை, பூத்துறை முதலான பல கிராமங்களில் தன்னெழுச்சியாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

உலகிலேயே மிகப்பெரிய கடற்படையை வைத்திருப்பதாக பெருமை பேசிக் கொண்டிருந்த இந்த அரசு மீனவர்களை காப்பாற்ற எதுவும் செய்யவில்லை; எதுவும் செய்ய முடியாமல் கிடந்தது .

இராணுவப் பெருமை எல்லாம் மக்களை காப்பாற்றுவதற்கு இல்லை, இந்த அரசு மக்களுக்கானது இல்லை என்று மீனவ மக்கள் புரிந்துகொண்டு போராடினார்கள். சுமார் பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக குளச்சல் ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டார்கள். மண்டைக்காடு கலவரத்தால் சாதி சமயப் பிளவு ஏற்பட்ட பின்னர், சாதி சமய வேறுபாடின்றி மக்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய போராட்டம் இதுதான்.

படிக்க :
♦ அமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்
♦ உண்மையைப் பேசாதே ! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசு ஒடுக்குமுறை !

மீனவ மக்களுக்கு மீட்புப்பணியில் உதவுவதற்காகச் சென்ற மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அன்பு, மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது, தோழர் ஆதி, தோழர் மாரிமுத்து, தோழர் கின்சன், கோவில்பட்டி தோழர் கணேசன், தோழர் முகம்மது அனஸ் ஆகியோர் நீரோடியில் ஒரு மீனவர் வீட்டில் தங்கியிருந்த பொழுது அதிகாலை 5 மணிக்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீஸ் ஏதோ பயங்கரவாதிகளை பிடிப்பது போல அடித்து உதைத்து கைது செய்தது.

கைது செய்யப்பட்ட தோழர்களை வேனில் வைத்து கொடூரமாக தாக்கியது. அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகமுள்ள மண்டைக்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றது. அங்கே அனைத்து தோழர்களையும் ஆடைகளை கழட்டச் சொல்லி அடித்து உதைத்து சித்ரவதை செய்தது. மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது உடைகளை அகற்ற மறுத்ததால் மிகவும் கொடூரமாக கழுத்து, கை, கால் என உடலெங்கும் தாக்கப்பட்டு நிர்வாணமாக போலீஸ் லாக்கப்பில் வைக்கப்பட்டார்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் தோழர் சிவராஜ் பூபதி , வழக்கறிஞர்கள் ஹாமில்டன் அலெக்சாண்டர், தமிழ் நிதி ஆகிய வழக்கறிஞர்கள் மண்டைக்காடு காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அவர்களையும் சந்திக்க விடாமல் போலீசார் மறுத்தனர். ” டிஎஸ்பி அலுவலகத்திற்கு வாருங்கள் கைது செய்யப்பட்டவர்களை சொந்த ஜாமீனில் விட்டு விடுகிறோம்என்று சொல்லிவிட்டு நேரடியாக ரிமாண்ட் செய்வதற்கான அனைத்து வேலைகளும் செய்தனர். அரசு மருத்துவமனையில் சென்று அரசு மருத்துவரிடம் ரிமாண்ட் ஃபார் ஃபிட் (Remand for fit) என்ற சான்றிதழை பெறாமல், அரசு மருத்துவமனையில் சீட்டு வாங்கிக்கொண்டு, அந்த அரசு மருத்துவர் நடத்தக்கூடிய தனியார் மருத்துவமனையில் சென்று சான்றிதழை வாங்கினர்.

கைது செய்யப்பட்டது முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை தோழர்களை சித்திரவதை செய்த இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், ஏட்டு பீட்டர், முருகன் SSI ஆகியோர் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்தபோது, அந்த குற்றவியல் நடுவரோ அதையெல்லாம் காதில் வாங்காமல், “மெட்ராஸில் இருந்து இங்கே எதற்காக வந்தாய், கலவரம் செய்யவா? ஜெயிலுக்கு போனால் தான் நீங்கள் பிரபலம் அடைய முடியும், ஆகவே ஜெயிலுக்கு போங்கள்என்றார் . தோழர் மருது தனது கழுத்தில் அடித்ததால் கழுத்து எலும்பு உடைந்து இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதனால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று முறையிட்ட போதும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிறையிலடைத்தார்.

அடுத்தநாள் வானொலியில் “மீனவர்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்ட பயங்கரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது” என்று அப்போது இணை அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார் .

சிறையில் இருக்கும் பொழுது தோழர் மருது , கழுத்து வலி அதிகமாக இருப்பதாக கூறியதால், அங்கே பரிசோதித்த அரசு மருத்துவர் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் போலீசார் திட்டமிட்டு பாதுகாப்புக்கு போலீஸ் இல்லை என்று கூறி அதனை மறுத்தது .

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தோழர்கள் அனைவரும் பிணையில் வெளியே வந்தாலும் சுமார் பதினைந்து நாட்கள் காலையிலும் மாலையிலும் கொல்லங்கோடு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டிய நிபந்தனைக்கு உட்பட்டனர்.

படிக்க :
♦ பாரிஸ் கம்யூன் 150 : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி || கலையரசன்
♦ சென்னை பல்கலை : மாணவியை பாலியல்ரீதியில் துப்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடு !

குழித்துறை அரசு மருத்துவமனையில் எடுத்த எக்ஸ்ரேயில் கழுத்தெலும்பு உடைந்தது தெரிந்த போதும் அரசு மருத்துவரோ கழுத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி விட்டுச் சென்றார்.

வேறு வழியின்றி ரிலாக்சேஷன் பெற்ற பின்பு சென்னையில் மருத்துவம் பார்க்கும் பொழுது கழுத்து எலும்பு உடைந்தது உறுதியானது. சுமார் மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

இதை ஒட்டி மனித உரிமை ஆணையத்திற்கும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட புகார் மனுக்கள் என்னவாயின என்பது யாருக்கும் தெரியாது .

இந்த வழக்கு விசாரணை 2021 ஜனவரி மாதத்தில் தொடங்கியது. இந்த வழக்கை வழக்குரைஞர் ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் அவர்கள் எவ்விதக் கட்டணமும் இன்றி நடத்தினார். மேலும் இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பாண்டித்துரை அவர்கள் மூலமாக தாக்கல் செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொய் வழக்கை ரத்து செய்வதற்காக தொடக்கத்திலிருந்தே உதவி புரிந்த வழக்கறிஞர்கள் சிவராஜ் பூபதி, மரிய பால்ராஜ், ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் , பாண்டித்துரை ஆகியோருக்கு நன்றி!

எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. தோழர்களைத் தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதற்கு பதில் கண்டிப்பாக கிடைக்கப் போவதில்லை.


மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு

பாரிஸ் கம்யூன் 150 : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி || கலையரசன்

0

1871-ம் ஆண்டில் நிகழ்ந்த பாரிஸ் கம்யூன் எழுச்சிக்கு 1848-ம் ஆண்டே கட்டியம் கூறியது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. பாட்டாளி வர்க்கத்தால் ஒரு அரசை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்க முடியும் என்ற கருத்தாக்கம் 1848-ம் ஆண்டு அன்றைய முதலாளித்துவத்திற்கு ஒருபுறத்தில் அச்சமூட்டினாலும், பாட்டாளிவர்க்கம் ஆளும்வர்க்கமாய் நீடிக்க முடியாது என்று இருமாந்திருந்தது.

அந்தச் சிந்தனைக்கு சம்பட்டி அடி கொடுக்கும்விதமாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை பாரிஸ் நகரில் நிறுவினார்கள் பாரிஸ் நகர பாட்டாளிகள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்குப் பின்னர் 1872-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஜெர்மன் மறுபதிப்புக்கு முன்னுரை எழுதிய மார்க்சும் எங்கெல்சும், பாரிஸ் கம்யூன் எவ்வகையில் தமது அறிக்கைக்கு செறிவூட்டியிருக்கிறது என்பதை குறிப்பிட்டிருப்பதோடு, பாரிஸ் கம்யூன் வாரிக் கொடுத்திருக்கும் புதிய படிப்பினையையும், தமது அறிக்கையின் ஒரு பகுதியில் கொடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் சில விவரங்கள் காலங்கடந்ததாகிவிட்டது என்பதையும் குறிப்பிடுகின்றனர்.

அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக்கூடிய வலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில்முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கும்.

கடந்த 25 ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை பெருநடை போட்டுப் பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும், மேம்பாடுற்றும், விரிவடைந்தும் உள்ளது. இவற்றையும், மற்றும் முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு இன்னும் முக்கியமாய், முதன்முதலாய்ப் பாட்டாளி வர்க்கம் முழுதாய் இரு மாதங்களுக்கு அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் கிடைத்த நடைமுறை அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங்கடந்ததாகி விடுகிறது.

கம்யூனானது முக்கியமாய் ஒன்றை நிரூபித்துக் காட்டிற்று; அதாவது ஏற்கனவே பூர்த்தியான தயார்நிலையிலுள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த காரியங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிற்று. ” கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஜெர்மன் மறுபதிப்புக்கான (1872) முன்னுரை – மார்க்ஸ் – எங்கெல்ஸ்

வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளாத தலைமுறையோ, இயக்கமோ தனது அடுத்தகட்ட நகர்வை முன்னெடுப்பதில்லை என்பதே வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம்.

மார்க்சியம் எனும் தத்துவத்தைக் கொண்டு, பாரிஸ் கம்யூன் எழுச்சி, முதலாளித்துவத்தின் வளர்ச்சி உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றை பரிசீலித்து, உலகின் முதல் சோசலிச அரசை நிர்மாணித்தார் லெனின்.

வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளவே வரலாற்று நிகழ்வுகளை நாம் நினைவு கூர்கிறோம். நெருங்கி வரும் காவி கார்ப்பரேட் பாசிச சூழலில் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளும்படி நமக்கு நினைவுபடுத்துகிறது பாரிஸ் கம்யூன். பாரிஸ் கம்யூன் எழுச்சி குறித்து தோழர் கலையரசன் தமது வலைப்பூவில் கடந்த 2014-ம் ஆண்டு எழுதிய பதிவை இங்கு மீள் பதிவேற்றுகிறோம்.

தோழமையுடன்
வினவு

000

ம்யூனிசம், சோஷலிசம் என்றால் பலருக்கும் ரஷ்யா, சீனா தான் மனதில் தோன்றும். ஆனால், “உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சியின் தாயகம் பிரான்ஸ்” என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. 18 மார்ச் 1871, பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கிய கம்யூனிசப் புரட்சி வெடித்தது. பிரான்ஸ் நாடு பல புரட்சிகளைக் கண்டுள்ளது. 1789 ம் ஆண்டு ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி,பிரெஞ்சு மொழியில் “பூர்ஷுவா” என்று அழைக்கப் படும், மத்திய தர வர்க்கத்தினரின் புரட்சி ஆகும். பிற்காலத்தில், அந்தப் புரட்சியை ஐரோப்பா முழுவதும் பரப்பும் பொறுப்பை ஏற்ற நெப்போலியன் காலத்தில், பிரெஞ்சு பேரினவாதமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.

பூர்ஷுவா வர்க்கம் ஆளும் உலக நாடுகள் எங்கும், முதலாவது பிரெஞ்சுப் புரட்சிக்கு, இன்றைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. அது பற்றிய குறிப்புகள், மாணவர்களின் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பாரிஸ் கம்யூன் புரட்சி முற்று முழுதாக இருட்டடிப்புச் செய்யப் படுகின்றது. ஏனென்றால், 1871-ம் ஆண்டு ஏற்பட்ட புரட்சி, உழைக்கும் வர்க்க மக்களின் முதலாவது பொதுவுடைமைப் புரட்சி ஆகும். நமது நாடுகளிலும், முதலாளிகளின் கையில் உள்ள எந்த ஊடகமும், அதைப் பற்றி எதுவும் கூறுவதில்லை. தமிழ் பேசும் பூர்ஷுவாக்கள், அதைப் பற்றி அறிந்திருந்தாலும், தெரியாதது மாதிரி காட்டிக் கொள்வார்கள். அந்தளவுக்கு வர்க்க மனப்பான்மை, எமது சமூகத்தில் கோலோச்சுகின்றது.

1871-ம் ஆண்டு, மார்ச் மாதம் தோன்றிய பாரிஸ் கம்யூன், மே மாதம் பிரெஞ்சு இராணுவத்தினால் கொடூரமாக அழித்தொழிக்கப் பட்டது. மூன்று மாதங்களுக்கு குறைவான காலமே நின்று பிடித்தாலும், உலக வரலாற்றில் குறிப்பிடத் தக்க தாக்கத்தை உண்டாக்கியது. உலகில் உழைக்கும் வர்க்க மக்களின் பொதுவுடைமைப் புரட்சி சாத்தியமே என்பதை நிரூபித்தது. பாரிஸ் உழைக்கும் வர்க்கத்தினரின் புரட்சியை, பல்வேறு பட்ட புரட்சிகர சக்திகள் வழிநடத்தின. அனார்க்கிஸ்ட்கள், மார்க்சிஸ்டுகள், லிபரல்கள் போன்ற பல்வேறு வகையிலான சித்தாந்தங்களை பின்பற்றினாலும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தனர்.

26 மார்ச், உழைக்கும் வர்க்கப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டு, ஒரு கம்யூன் (பொதுவுடைமை) அரசாங்கம் உருவாக்கப் பட்டது. 28 மார்ச் 1871, “பாரிஸ் கம்யூன்” பிரகடனம் செய்யப் பட்டது. மக்கள் பிரதிநிதிகள் நேரடி ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப் பட்டனர். உலக வரலாற்றில் முதல் தடவையாக, அடி மட்டத் தொழிலாளர்களும், அரசாங்கத்தில் அங்கம் வகித்தனர். ஒரு புதிய சமத்துவ சமுதாயம் உருவானது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்கப் பட்டது. முந்திய சமூகத்தில், அமைச்சர், மருத்துவர், முகாமையாளர் என்று உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களும், ஆலைத் தொழிலாளிக்கு சமமான சம்பளம் பெற்றனர். உயர்ந்த பட்ச சம்பளம், ஆறாயிரம் பிராங்குகள் என்று தீர்மானிக்கப் பட்டது.

அந்தக் காலத்தில், பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் நடந்த யுத்தத்தின் விளைவாக தான் பாரிஸ் கம்யூன் புரட்சி வெடித்தது. அன்று பிருஷிய பேரரசு என்று அழைக்கப் பட்ட ஜெர்மனியப் படைகள், பாரிஸ் மாநகருக்கு வடக்கே இருந்த பிரதேசங்களை கைப்பற்றி விட்டிருந்தன. பிரெஞ்சு இராணுவம் பாரிசின் தெற்குப் பகுதியில் நிலை கொண்டிருந்தது. பிரெஞ்சு அரசாங்கம், வெர்சேய் நகரினை தற்காலிக தலைநகராக்கி, அங்கிருந்து இயங்கிக் கொண்டிருந்தது. பிரான்சு, ஜெர்மனிக்கு இடையிலான போர் நிறுத்தத்தின் பின்னர், பாரிஸ் நகரை சேர்ந்த, படையினரின் ஆயுதங்களை களைய முயற்சித்த காரணத்தினால் தான் புரட்சி வெடித்தது.

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போல, பாரிஸ் நகரிலும், பெரும்பாலும் பாட்டாளி வர்க்க இளைஞர்கள் தான், இராணுவத்தில் சேர்ந்து இருந்தனர். பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஆயுதங்களை விட்டு வைப்பது, தனக்கு ஆபத்தானது என்று பிரெஞ்சு பூர்ஷுவா அரசு நினைத்தது. அவர்கள் பயந்தது மாதிரியே நடந்தது. பிரெஞ்சு பூர்ஷுவா வர்க்கத்தினால் தேசியவாத வெறியூட்டப் பட்டிருந்த இராணுவமாக இருந்தாலும், பாரிஸ் நகரை சேர்ந்த வீரர்கள் வர்க்க விழிப்புணர்வு கொண்டவர்களாக இருந்தனர். அதனால் தான், பாரிஸ் புரட்சி வெற்றி பெற்றது. பாரிஸ் கம்யூன் உருவானதும், தொழில் முறை இராணுவம் கலைக்கப் பட்டது. அதற்குப் பதிலாக, ஒரு மக்கள் படை உருவானது. வயது வந்த அனைத்துக் குடி மக்களின் கைகளிலும் ஆயுதங்கள் வழங்கப் பட்டன.

பாரிஸ் கம்யூன், மதத்தையும், அரசையும் பிரித்தது. மதத்திற்கு வழங்கப் பட்ட உயர்ந்த அந்தஸ்து இரத்து செய்யப் பட்டது. மத நிறுவனங்களின் சொத்துக்கள் மக்கள் மயமாக்கப் பட்டன. கல்விக் கூடங்கள், அலுவலகங்களில் மாட்டப் பட்டிருந்த சாமிப் படங்கள் அகற்றப் பட்டன. பாடசாலைகள், பணியிடங்களில் பிரார்த்தனை செய்யும் வழமை அகற்றப் பட்டது. அவற்றை விட, முந்திய அரசாங்கம் வைத்திருந்த, பிரெஞ்சு பேரினவாதத்தை பறை சாற்றும் சின்னங்கள் அகற்றப் பட்டன. பேரினவாதம், தேசியவாதம், இனவாதம் எதற்குமே அங்கே இடம் இருக்கவில்லை. பாரிஸ் கம்யூன் என்பது தேசிய அரசு அல்ல. அது ஒரு உலக மக்களின் அரசாங்கம். அதிலே சில வெளிநாட்டவர்களும் அங்கம் வகித்தனர். உலகில் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், உழைக்கும் மக்கள் என்ற பொதுத் தன்மை அவர்களை ஒன்றிணைத்தது.

படிக்க :
♦ பாரிஸ் கம்யூன் 150 : உலகின் முதல் புரட்சிகர அரசு || கலையரசன்
♦“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

நமது காலத்தில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான பகைமை உணர்வு மாதிரித் தான், அன்றிருந்த ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது. இருபதாம் நூற்றாண்டு வரையில், ஜெர்மனியும், பிரான்சும் ஜென்மப் பகையாளிகள். சதா சர்வ காலமும், கீரியும், பாம்புமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அவ்விரண்டு நாடுகளும், ஒரு காலத்தில் சமாதானமாக வாழும் என்று சொன்னால், அன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். “சிங்களவனும், தமிழனும் இனிமேல் எந்தக் காலத்திலும் ஒன்று சேர்ந்து வாழ முடியாது” என்று, இன்றைக்கு சிலர் பேசுவதைப் போன்று தான், அன்றைக்குப் பலர் ஜெர்மானியர்கள், பிரான்சியர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய போரில் வெற்றி, தோல்வி காண முடியாமல், போர் நிறுத்தம் செய்து கொண்ட ஜெர்மனியும், பிரான்சும், பாரிஸ் கம்யூன் புரட்சியின் பின்னர் ஒன்று சேர்ந்தன. அப்போது ஜெர்மன்-பிரெஞ்சு ஆளும் வர்க்கங்களின் வர்க்க உணர்வு விழித்துக் கொண்டது. உலகில் தோன்றிய முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சியை நசுக்குவதற்காக கை கோர்த்துக் கொண்டனர். ஜெர்மன் உதவியுடன் படை நகர்வுகளை மேற்கொண்ட பிரெஞ்சு இராணுவம், மே மாதம் பாரிஸ் கம்யூனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை கைப் பற்றியது.

பிரெஞ்சு இராணுவ நடவடிக்கை காரணமாக தப்பிச் செல்ல முயற்சிக்கும் புரட்சியாளர்களை, ஜெர்மனி தடுத்து நிறுத்தியது. அவர்களை தப்ப விட வேண்டாம் என்று, வடக்கே நிலை கொண்டிருந்த ஜெர்மன் படைகளுக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. அதனால், பாரிஸ் கம்யூனில் இருந்த யாரும் தப்பியோட முடியாதவாறு, நாலாபக்கமும் சுற்றி வளைக்கப் பட்டனர். அடுத்து அங்கே ஒரு இனப் படுகொலை அரங்கேறியது. பெண்கள், குழந்தைகள் என்று பேதம் பாராது, அனைவரும் தெருத் தெருவாக, வீடு வீடாக சுட்டுக் கொல்லப் பட்டனர். அன்றைய இனப் படுகொலையில், சுமார் முப்பதாயிரம் நிராயுதபாணிகளான பொது மக்கள், பிரெஞ்சு இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

இன்று பாரிஸ் கம்யூனை நினைவுகூரும் இடங்கள் யாவும் அழிக்கப் பட்டு விட்டன. தற்போது எஞ்சியிருப்பது, பாரிஸ் நகரில் உள்ள கம்பட்டா சுடலையில் உள்ள, மதில் சுவர் ஒன்று மட்டுமே. அந்த மதில் சுவருக்கு முன்னாள் வைத்து, இறுதியாக பல நூறு புரட்சியாளர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அந்த இடத்தில், “பாரிஸ் கம்யூனில் இறந்தவர்களின் நினைவாக” என்று எழுதப் பட்டுள்ளது. அதனை இன்றைக்கும் யாரும் சென்று பார்வையிடலாம்.

பாரிஸ் கம்யூன் விட்ட நடைமுறைத் தவறுகளை விமர்சித்து, கார்ல் மார்க்ஸ் “பிரான்சின் உள்நாட்டுப் போர்” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அந்த நூலில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகளின் அடிப்படையில் தான், லெனின் ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சியை வழிநடத்தினார். சீனப் புரட்சிக்கும், பாரிஸ் கம்யூன் ஒரு உந்து சக்தியாக இருந்துள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ ஆகியோர் பாரிஸ் கம்யூன் பற்றி எழுதிய கட்டுரைகள், இன்றைக்கும் வாசிக்கக் கிடைக்கின்றன. உலகம் முழுவதும் வாழும் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது, அனார்க்கிஸ்ட்கள், சோஷலிஸ்டுகளும், பாரிஸ் கம்யூன் புரட்சியை இன்றைக்கும் நினைவுகூர்ந்து வருகின்றனர். பாரிஸ் கம்யூன் பற்றிய ஆய்வுகள் நடக்கின்றன. அது சம்பந்தமான நூல்கள், ஆவணங்கள் மறு வாசிப்புக்குட்படுத்தப் படுகின்றன.

உலகில் எந்த நாட்டில், உழைக்கும் வர்க்க மக்களின் புரட்சி ஏற்பட்டாலும், எதிரெதிர் துருவங்களாக, மொழியால் பிரிந்திருக்கும் பூர்ஷுவா வர்க்கம், ஒன்று சேர்ந்து எதிர்க்கும் என்பதற்கு, பாரிஸ் கம்யூன் ஒரு வரலாற்று சாட்சியம். பாரிஸ் கம்யூனின் படிப்பினைகள், இலங்கை, இந்தியாவில் உள்ள நிலைமைகளுக்கும் பொருந்தும். இலங்கையில் அல்லது ஈழத்தில் ஒரு கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டால், இன்று எதிரிகளாக அடித்துக் கொள்ளும், சிங்களத் தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், வர்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதே போன்று, இந்தியாவில் அல்லது பாகிஸ்தானில் ஒரு கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டால், இந்திய-பாகிஸ்தானிய ஆளும் வர்க்கங்கள், தமது பகைமையை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். இது நாங்கள் பாரிஸ் கம்யூனில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை ஆகும்.

கலையரசன்
நன்றி : கலையகம்

disclaimer

சென்னை பல்கலை : மாணவியை பாலியல்ரீதியில் துன்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடு !

டந்த ஜனவரி மாதம் ஊரடங்கு முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்டபோது, கொரோனா காலத்தின் ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரை ரூ.8500 பணம் கேட்டு பில் அனுப்பியது பல்கலைக்கழக நிர்வாகம். கல்லூரி திறக்காமலேயே மாணவர்கள் மீது கட்டணம் கொள்ளையடிப்பதை கண்டித்து அன்றேப் தொடர் போராட்டத்தில் இறங்கினார்கள் மாணவர்கள்.

அதன் பிறகு, பல்கலைக்கழகத்தின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களை மட்டும், தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜன் ஃபெயில் செய்துள்ளார். இதை கண்டித்தும் கடந்த பிப்ரவரி மாதம் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள் மாணவர்கள். அந்தப் போராட்டத்தில் மாணவர்களுக்கு வெளியில் இருந்து பெரும் ஆதாரவு அதிகரிக்கவே பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் விடைத்தாளைத் திருத்தி மதிப்பெண்னை வெளியிடுகிறோம் என்று இரண்டு வாரம் கால அவகாசம் கேட்டது பல்கலைக்கழக நிர்வாகம்.

படிக்க :
♦ சென்னை பல்கலையில் வன்னிய சாதிச் சங்க விழா ! தரம் தாழ்ந்த கல்வித்துறை !
♦ சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !

அதன்பின், மாணவர்கள் வேலூரில் அகழாய்வு பணிக்கு சென்றுவிட்டு பல்கலைக் கழகத்திற்கு வந்தனர். கடந்த இரண்டு வாரமாக மதிப்பெண் வெளியிடுவது பற்றி பல்கலைக் கழத்தில் கேட்டு வருகின்றனர். ஆனால், நிர்வாகம் மாணவர்களை அலைய விடுகிறதே தவிர எந்த பதிலையும் மாணவர்களுக்கு தெரிவிக்கவில்லை.

தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திர ராஜன்

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழைமை (16.3.21) அன்று நீண்ட நேரம் காத்திருந்த பிறகு தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜனை சந்தித்து பேசினர்.  “எங்களது மதிப்பெண்களை வழக்கமாக பல்கலைக்கழகத்தின் விதிப்படி INTERNAL, மற்றும் EXTERNAL என பிரித்து நோட்டிஸ் போர்டில் போடுங்கள்” என்று மாணவர்கள் கேட்டதற்கு, மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் சௌந்தரராஜன். “உன் இஷ்ட மயிருக்கெல்லாம் பண்ண முடியாது, எழவெடுத்தவனுங்களா, பொறுக்கி ரௌடிங்களா வெளியப் போங்கடா” எனவும் கூடுதலான தகாத வார்த்தைகளாலும் மாணவர்களை திட்டியுள்ளார். உடனிருந்த மாணவியிடம் பாலியல் துன்புறித்தலில் ஈடுபட்டுள்ளார். அதை எதிர்த்து கேட்ட மாணவர் ஒருவரை அடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

மாணவர்களை அடித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சௌந்திரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். பல்கலைக்கழகத்தின் பதிவாளரோ ஒருமுறை மாணவர்களை சந்தித்து, “மார்க் தானே.. போடச் சொல்கிறேன்”, என்று அலட்சியமான பதிலைச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். இது பாலியல்ரீதியிலான துன்புறுத்தல் என்பதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. மேலும் தொடர்ந்து மாணவர்களை பல்வேறு வகையில் மிரட்டிக் கொண்டிருக்கிறது கல்லூரி நிர்வாகம்.

போராடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட புகார் கடிதம்

இந்நிலையில், 17.3.21 புதன்கிழமை அன்று இரவு தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திர ராஜனை காப்பாற்ற, முன் தேதியிட்டுப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதே புகார் கடிதம் தயாரித்துள்ளது நிர்வாகம். காப் பஞ்சாயத்து நடத்துகிறது பல்கலைக்கழக நிர்வாகம் என போராடும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பல்கலைக்கழக நிர்வாகத்தின் தரப்பில் ஒரு கமிட்டி அமைத்திருக்கிறோம். அதில் வந்து உங்கள் பிரச்சனைகளைச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளது நிர்வாகம். “இந்த கமிட்டியே ஒரு மோசடியானது என கருதுகிறோம், எனவே கமிட்டிக்கு வரும்படி எங்களுக்கு முறையாகக் கடிதம் கொடுங்கள், நாங்கள் கமிட்டிக்கு வருவதை பற்றி பரிசீலித்து சொல்கிறோம்” என்று கூறியுள்ளனர் மாணவர்கள்.

ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் தராமல், போராடும் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தொடர்பு கொண்டு கமிட்டிக்கு வரும்படி அச்சுறுத்தல் செய்துள்ளது. அதில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், “எனது மகள் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் வயதையும் திறனையும் பெற்றிருப்பவள், எதுவாக இருப்பினும் அவளிடம் பேசுங்கள்” என்று நிர்வாகம் சார்பாக தொடர்பு கொண்டவரிடம் பதில் கூறியுள்ளனர்.

காணொலியை தரவிறக்கம் செய்ய

போராடும் மாணவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திர ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவருக்கு துணைப்போகும் பல்கலைக்கழக பதிவாளர் மதிவாணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தற்போதுப் போராடும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதேபோல், கடந்த செப்டம்பர், 2019-ம் வருடம், பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் நடத்தியதற்காகவும், பல்வேறு பிரச்சனைகளுக்குப் போராடியதற்காகவும், சென்னை ஆளுநரின் பரிந்துரையின் பெயரில் மாணவர் கிருபா மோகன் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்ததன.

போராட்ட களத்தில் இருக்கும் தொல்லியல் துறை மாணவர்கள்

தற்போது, கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களை ஒடுக்குகிறது பல்கலைக் கழக நிர்வாகம். மாணவர்களின் போராடும் உரிமையைப் பறிக்கும் விதமாக தொடர்ந்து செயல்படும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும், போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் மற்ற கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர் அமைப்புகள் தோள் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

வினவு செய்தியாளர்

ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !

“இந்தியாவில் நிலவும் சகிக்க முடியாத ஏற்றத்தாழ்வுள்ள சமூகம் நீடிக்குமானால் ஒரு முதலாளித்துவ அமைப்புக் கூட வெடித்து சிதறிவிடும்” என்கிறார் ஆக்ஸ்பாம் இந்தியா தலைமை செயல் அதிகாரி அமிதாப் பெகர்.  ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் ”அசமத்துவம் பற்றிய அறிக்கை 2020” குறித்த விவாதத்தில் பத்திரிகையாளர் சன்ஜீக்தா பாசுவிடம் தெரிவித்த கருத்துக்கள் நேசனல் ஹெரால்டு இணையத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அதை தமிழில் மொழியாக்கம் செய்து தருகிறோம்.

000

சஞ்சுக்தா பாசு : பிரதமர் மோடி தனது பாராளுமன்ற உரையில் “செல்வங்களை சேர்ப்பவர்களையும் மற்றும் பெரும் செல்வந்தர்களாக இருப்பவர்களையும் அவர்கள் சொத்துகளை குவித்துக் கொள்கிறார்கள் என்பதற்காகவே குறை சொல்லக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

அமிதாப் பெஹர் : எங்களது அறிக்கைகள் முகேஷ் அம்பானி போன்ற பில்லியனர்கள் பற்றி நிறைய பேசியிருக்கின்றன. நமக்கு தனிப்பட்ட முறையில் எந்த பில்லியனர்கள் மீதும் பிரச்சனைகள் இல்லை.

படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
♦ கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!

அம்பானியும், அதானியும் தன்னளவில் ஒரு நல்ல மனிதராக இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதம் நமக்கு தேலையில்லை. ஆனால் நமது குற்றச்சாட்டு  மோசமான ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பைப் பற்றியதுதான். இவ்வாறு உழைக்கும் மக்கள் குமுறும்போதும் மோடியின் மன்கிபாத் சமூக அக்கறையோடு செயல்படுபவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிப்பதை கவனிக்காமல் விடமுடியாது.

இந்த நாட்டில் மொத்த சமூகமே சேர்ந்து செல்வத்தை உற்பத்தி செய்யும்போது, உற்பத்தியாகும் செல்வங்கள் அதற்க்கேற்றவாறு எப்படிப் பகிர்ந்தளிக்கப்படுகிறது? நாம் இருக்கும் இந்த அமைப்பில் உற்பத்தியாகும் மொத்த செல்வங்கள் நாட்டு வளங்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அதிக சதவீதத்தில் குறைந்த அளவே இருக்கக் கூடிய மேல்மட்ட பணக்காரர்களுக்கு சென்று சேருகிறது.

உதாரணமாக, நமதுப் பொருளாதாரம் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வளர்கின்றது என்று வைத்துக் கொண்டால் ஒரு சதவீதம் மட்டுமே இருக்கக் கூடிய மேல்மட்டப் பணக்காரர்களுக்கு 800-900 மில்லியன் அளவுக்கு அதன் பங்கை எடுத்துக் கொள்கின்றனர். மீதி இருக்கும் இந்த நாட்டின் 99 சதவிகித மக்கள் மிச்சம் மீதியாக இருக்கும் வெறும் 100 மில்லியன் டாலர்களையே பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

000

சஞ்சுக்தா பாசு : பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சேகர்குப்தா பிரதமரின் பேச்சை ஆதரித்து எழுதியிருந்தார்.  இந்தியா இன்னமும் செல்வ நிலையில் வளர வேண்டியுள்ளது. ஏனெனில், செல்வம் இல்லையெனில் நம்மிடம் இருக்கும் வறுமையைதான் சம்மாகப் பங்கு போட வேண்டியிருக்கும் என்று எழுதியிருந்தார்.

அமிதாப் பெஹர் : இங்கு அடிப்படையான கேள்வியே செல்வம் எப்படிப் பங்கிடப்பட வேண்டும் என்பதுதான். வறுமையைச் சம்மாகப் பங்கிடவேண்டும் என்பதுதான் நோக்கம் என்ற அவரது பார்வையை நான் ஏற்கவில்லை. 24 சதவீத இந்திய மக்கள் ஒரு மாதத்திற்கு ரூ.3,000-ற்கும் குறைவாக வைத்துக் கொண்டு வாழ்க்கைக்காகப் போராடும் நாட்டில் ஒரு மணி நேரத்தில் ஒரு தனிநபரால் ரூ.90 கோடி சம்பாதிக்க முடியும் என்பதை எப்படி அனுமதிப்பது?

உண்மையான பிரச்சனை என்னவெனில் உழைப்புக்கு எவ்வளவு மதிப்பளிக்கப்படுகிறது? மூலதனத்திற்கு எவ்வளவு மதிப்பளிக்கப்படுகிறது? என்பதுதான். மூலதனம் போடுவதாக சொல்லும் சிலர் 90 சதவீதம் பலனைப் பெறுகின்ற போது, அங்கே தனது உழைப்பைச் செலுத்தும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த அளவு ஊதியமும் எப்போதாவது தரப்படும் போனஸ் போன்றவைதான் சரியான விகிதாச்சாரமா?

அதனால், நாம் பேசிக் கொண்டிருப்பது ஒரு நியாயமான விநியோக அமைப்புக்குதானே தவிர எல்லோரையும் ஏழைகளாக்குவது என்ற கற்பனையான கருத்துக்களுக்கல்ல.

000

சஞ்சுக்தா பாசு : அப்படியானால் சுதந்திர சந்தைப் பொருளாதாரம்தான் பிரச்சனை என்கிறீர்களா?

அமிதாப் பெஹர் : பல்வேறு வகைப்பட்ட “சுதந்திர சந்தைகள்” நிலவுகின்றன. ‘சுதந்திர சந்தைகளின்’ புனித்தலமாகக் கருதப்படும் உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum -WEF) பங்கேற்கும் மிகப் பெரிய பில்லியனர்கள் கூட இந்த ஏற்றத்தாழ்வான சமசீரற்ற அமைப்பை சரி செய்ய வேண்டியிருக்கிற தேவை இருப்பதைப் பற்றி பேசுகிறார்கள். ‘பங்குதாரர் மூலதனத்திலிருந்து’ ‘பங்கேற்பாளர் மூலதனத்திற்கு’ மாறவேண்டிய தேவையை வலியுறுத்துகிறார்கள்.

உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரே, நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காலம் முடிந்துவிட்டதாக சொல்கிறார். அமெரிக்காவில் ‘சுதந்திர சந்தை’ நிலவுகின்றனர். ஆனாலும், அங்கும் கூட வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு இயக்கங்களை நாம் பார்க்கத்தான் செய்கிறோம். அந்த சமயத்தில், நான் அமெரிக்காவில்தான் இருந்தேன். வால்ஸ்டிரீட் அருகே அமெரிக்க மக்கள் “1:99 பொருளாதாரம் கதைக்குதவாது” என்ற முழக்க அட்டைகளைப் பிடித்திருப்பதைப் பார்த்தேன். IMF நிறுவனமும் ‘பெருமளவிலான சமச்சீரற்ற தன்மை இருக்கக் கூடாது’ என்கிறது.

நீடிக்க முடியாத அளவிற்கு சமமின்மையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். அது சமூக ரீதியிலான அமைதியின்மையை வெளிப்படுத்துகிறது. உலகமே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த வேளையில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக குறைந்தபட்ச உணவுத் தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது தரவரிசையில் முதல் 10 இடத்திலிருக்கும் பில்லியனர்கள் கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருமானத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எந்த சந்தைப் பொருளாதார வகையாலும் நியாயப்படுத்த முடியாது.

இன்றைய பொருளாதார நடவடிக்கைகள் மூலம் செல்வம் படைத்தவர்கள் மேலும் மேலும் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும்போது மோசமான நிலையில் வாழும் மக்களின் நிலையோ மேலும் மேலும் அதலபாதாளத்தை நோக்கி செல்கிறது அல்லது மாற்றமே இல்லாமல் இருக்கிறது.

79 நாடுகளில் 295 தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டோம். அதில் சர்வதேச பொருளாதார வல்லுநர்களான ஜெயதி கோஷ், ஜெப்ரி சாக்ஸ் மற்றும் கேப்ரிஒயல் சக்மன் ஆகியோரும் அடங்குவர். அவர்கள் எல்லோரும், “நிலவுகின்ற இந்த தன்மையான பொருளாதாரம் அனுமதிக்கக் கூடியதல்ல. மேலும் இவை உலகிற்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியதாகும்” என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

000

சஞ்சுக்தா பாசு : ‘நீடிக்க முடியாத’ சமசீரற்ற தன்மை என்று கூறுகையில் அதன் பொருள் என்ன ? பெரும் பணக்காரர்களுக்கு எந்த பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் ஏன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்?

அமிதாப் பெஹர் : தனிப்பட்டரீதியில், என்னைப் பொறுத்தவரை இது அறவுணர்வு குறித்த கேள்வி. பத்து ஆண்டுகளுக்குள்ளாக இந்தியாவில் வறுமைப் பற்றிய கணக்கீடுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால், சமீபத்திய கணக்கீடுகளைப் பார்க்கும்போது 20-22 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வதாகத் தெரிகிறது. அதுவும்கூட கல்வி, சுகாதாரம், இருப்பிடம் மற்றும் பல வாழ்வாதாரங்களை வைத்துக் கணிக்கப்பட்ட பலகோணங்களிலான வறுமைக்கோடு குறித்த கணக்கீடு என்று சொல்லமுடியாது.

15 ஆண்டுகளுக்கு முன் அர்ஜீன் சென்குப்தா கமிட்டி அறிக்கை (முறைசாரா தொழிலாளர்களின் வாழ்விடங்களில் வேலை மற்றும் முன்னேற்றம் பற்றிய நிலைமைகள் பற்றி) கூறியதென்ன?  இந்தியாவில் 83 கோடியே 60 லட்சம் மக்களின் தனிநபர் நுகர்வு ஒரு நாளைக்கு ரூ.20-க்கும் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மேம்பட்ட உலகத்தை படைப்பதற்காக சமூகம் முன்னேறிக் கொண்டிருக்கிறதாம். ஆனால், அவர்கள் உருவாக்க விரும்பும் மேம்பட்ட உலகம் இப்படித்தான் காட்சியளிக்குமா? இது ஒரு சமூக அல்லது அரசியல் ரீதியான கேள்வியும் கூட. இப்படிப்பட்ட இந்த அமைப்பு இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தையும், நீடித்த சமூகப் பதட்டத்தையும் மற்றும் உள்நாட்டு குழப்பங்ளையும் உருவாக்கவிருக்கிறது. இந்த அரசியல் அமைப்பு மட்டுமல்ல,  நிலவுகின்றப் பொருளாதார அமைப்பு முறையும் கூட முற்றிலும் சிதைந்துவிடும்.

தீவிர இடதுசாரி சிந்தனையுள்ள சில நண்பர்கள் “இந்த சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய அறிக்கைகள் எல்லாம் உண்மையில் நிலவுகின்ற தங்களின் அமைப்பு முற்றிலும் சீர்குலைந்துப் போகக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டி இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை எச்சரிக்கை செய்யத்தான் உதவி செய்வதோடு, அதன் கொதிநிலையை தணியச் செய்வதற்குமே உதவும். சமச்சீரற்ற சமூக அமைப்பு இருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்றும் ஆனால் மிக அதிகமான சமனற்ற சமூக அமைப்பு கூடாது என்றும் நாங்கள் கூறுவதாக எங்களைக் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த அமைப்பை இந்த பூமியினாலேயே தாங்கிக் கொள்ள முடியாது. உத்ரகாண்ட் மாநிலம், சமோலியில் சமீபத்தில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கு, சுற்றுச் சூழல் சமநிலைக்கு எதிரான பாகாசுர வளர்ச்சித் திட்டங்களின் விளைவுதானே.

000

சஞ்சுக்தா பாசு :  ஏற்றத்தாழ்வான சமசீரற்ற வளர்ச்சி ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி சிந்தித்தீர்களா? பாலினம் சாதி மற்றும் மத சிறுபான்மையினர் இவர்களுக்குள்ளும்

அமிதாப் பெஹர் : இந்த அறிக்கையில், நீங்கள் சொல்லக் கூடிய அந்த வகை மக்கள் பிரிவினரை பற்றி தனித்தனியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், சமூகத்தின் மிக பலவீனமான நிலையிலுள்ள அந்த மக்கள் நிச்சயமாக மற்ற எல்லோரை காட்டிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்ற முடிவுக்கு எளிமையாக வந்தடைய முடியும்.

முசுலீம்கள் அனைத்து சமூக பொருளாதாரக் குறியீடுகளிலும் பின் தங்கியிருக்கிறார்கள் என்று சச்சார் கமிட்டி அறிக்கை தெரிவிக்கிறது. அதனால், இந்தப் பெருந்தொற்றில் அவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.  எங்களது அறிக்கைப்படி அமெரிக்காவில் வெள்ளை இன அமெரிக்கர்களின் மரண விகிதத்தின் அளவிற்கு கறுப்பின மக்களின் மரண விகிதம் இருந்திருக்குமானால் 22,000 கறுப்பின மக்களைக் கொடூரமான சாவிலிருந்து மீட்டிருக்க முடியும்.

பிரேசிலில் வசிக்கும் ஆப்பிரிக்க சந்ததியினர், வெள்ளைநிற சந்ததியினரை காட்டிலும் 40 மடங்கு அதிகமாக கொரோனாவிற்கு பலியாகியிருக்கிறார்கள். சமமின்மையைப் பொருத்தவரையில் பாலின மற்றும் இன ரீதியான பரிமாணம் தெளிவாக இருக்கிறது.

000

சஞ்சுக்தா பாசு : இந்த அமைப்புப் படுகுழியில் சிக்கி இருப்பதாக சொல்கிறீர்கள்? இதை யார் எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள்?

அமிதாப் பெஹர் : மிகப்பெரும் பணக்காரர்கள் மற்றும் இந்த அரசு ஆகியோருக்கு இன்றைக்கு நிலவுகின்ற அபாயமான நெருக்கடிளை இயன்றளவு அப்படியே பிரதிபலித்துக் காட்டுவதன் மூலம் விழித்தெழச் செய்வதற்கான முயற்சிதான் இந்த அறிக்கை.  மிகப் பெரும் பணக்காரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நியாயமான வரிகளை முழுமையாக கட்ட வேண்டும்.

வரி நியாய வலைப்பின்னல்’ என்ற அமைப்பின் ஒரு அறிக்கைபடி, உலக நாடுகளுக்கு வரியாக வர வேண்டிய வருமானம் கிட்டத்தட்ட 427 பில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பின் காரணமாக இழக்கப்படுவதாகக் கூறுகிறது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் என்ற பெயரில் நாட்டின் வருமானத்தை சூறையாடிக்கொண்டு வரி ஏய்ப்பு செய்வதற்காக புதிய புதிய வழிமுறைகளைக் கையாள்கின்றன.

வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களிடம் வசூல் செய்வதற்கான இன்னமும் திறன் வாய்ந்த வரி வசூல் அமைப்பை அரசு கொண்டிருக்க வேண்டும்.   பெரும் பணக்காரர்களிடம் “கோவிட் உப வரி” கட்டாயம் வசூலிக்க வேண்டும். அர்ஜென்டினா இதைச் செய்திருக்கிறது.

முன்னெப்போதும் கண்டிராத நெருக்கடி காலகட்டம் இது. மேலும் 40 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கியிருப்பதாக சர்வதேச தொழிலாளர் நிறுவனம் – ஐ.எல்.ஓ. (ILO) எச்சரித்துள்ளது. மிகப்பெரிய அளவில் செல்வம் சேர்த்திருக்கும் பெரும் பணக்காரர்களுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்த வேண்டும். வரி வசூலைக் கட்டாயமாக்க வேண்டும்.

தமது மூலாதாரங்களை எந்தந்த துறைகளில் அரசு அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமானது. சமச்சீரான வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டுமானால் கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, நிதி ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள், இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

கல்வி, சுகாதாரம் ஆகியற்றுவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக அளவில் நிதி முதலீடு செய்யப்படுகிறது. அதன் பலனாக மிக அதிக அளவில் அங்கு சமத்துவம் காணப்படுகிறது. இதற்கு மாறாக இந்தியா, சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்குவதில் உலக நாடுகளில் கடைக் கோடியிலிருக்கும் நாடுகளில் 4-வது நாடாக விளங்குகிறது. கல்வி, சுகாதாரம் இரண்டுக்கும் சேர்த்தே மொத்த ஜி.டி.பி.(GDP)யில் 5-6 சதவிதத்திற்கு மேல் ஒதுக்கீடு செய்ய முடியாமல் இருக்கிறது.

நமது நாட்டு மக்களுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கையை உத்திரவாதபடுத்த நாம்  “குறைந்தபட்ச ஊதியம்” என்பதிலிருந்து “வாழ்வதற்கான ஊதியம்” என்ற கட்டத்துக்குள் போகவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். இந்த நாட்டின் உண்மையான நிலையை கொரோனா வைரஸ் பெருந்தொற்று அம்பலப்படுத்தியது.

இந்த நாட்டின் தொழிலாளர்கள் பெருமளவு முறைசாராத் தொழில்களில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித சமூகப் பாதுகாப்பும் இல்லை. அவர்கள், தங்கள் சொந்த கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்கின்ற அவலத்தை நாம் பார்த்தோம். நம்மால் ஏன் இன்னும் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்போ வேலை உத்திரவாதமோ உறுதிபடுத்தி தரமுடியவில்லை ?

000

சஞ்சுக்தா பாசு : இம்மாதிரியான மாற்றங்களை உருவாக்கி முன்மாதிரியாக நடந்து கொண்ட நாடுகள் இருக்கின்றனவா?

அமிதாப் பெஹர் : குறிப்பாக, என்னால் சொல்ல முடியாது என்றாலும், நியுசிலாந்தைப் பாருங்கள். “வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை” என்றழைப்பதை  “நலவாழ்வுக்கான நிதிநிலை அறிக்கை”  என்று குறிப்பிடுகின்றனர். பில்லியனர்களை மட்டும் கணக்கில் கொண்டு போடப்படும் பட்ஜெட்டாக இல்லாமல், ஒவ்வொரு குடிமகனின் நலனையும் மையப்பொருளாக வைத்து பட்ஜெட் போடப்படுவது ஒரு அடிப்படையான மாறுதல் ஆகும். பூடானில் ஜிடிபி(GDP) இலக்கை அடைய அவர்கள் ஓடுவதில்லை. மொத்த மக்களின் மகிழ்ச்சிக் குறியீட்டு இலக்கை (Happiness Index) எட்டுவதை நோக்கமாகக் கொண்டு வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கின்றனர்.

அர்ஜென்டினாவில் பெரும்பணக்காரர்களுக்கு அதிகபட்ச வரிவிதிப்பு செய்யப்படுகிறது. தென்கொரியாவும், வியட்நாமும் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்குப் போராடுவதையே தங்களின் திட்டங்களின் மையமாக வைத்துள்ளார்கள். இந்த பிரச்சனை குறித்து விழிப்படைந்த நாடுகள் இருக்கின்றன. அவை சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

000

படிக்க :
♦ லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !
♦ நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு !

சஞ்சுக்தா பாசு : இந்தியா விழித்துக் கொண்டதா?

அமிதாப் பெஹர் : உண்மையை சொல்வதென்றால், இந்த அரசாங்கத்திலோ அல்லது இதற்கு முன்னால் இருந்த அரசங்கங்களிடமோ இதற்கான எந்த நிகழ்ச்சி நிரலையும் பார்க்க முடியவில்லை. இன்றைய இந்தியாவில் இருக்கும் சமமின்மையின் அளவு, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த அளவிற்கு உச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார் பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி.

“1990 வரை இந்தியா நிதானமாக வறுமையை குறைத்துக் கொண்டு வந்தது. ஆனால், தாராளமயம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே இடைவெளி விரிவடைந்துக் கொண்டே போகிறது” என்கிறார் தாமஸ் பிக்கெட்டி.

000


தமிழாக்கம் : மணிவேல்
மூலக்கட்டுரை : National Herald

தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !

1

ந்து ராஷ்டிரத்தின் சோதனைக்கூடமாக மாறியுள்ள உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு கொடுஞ்செயல் அரங்கேறியுள்ளது. காஸியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலில் தாகத்துக்கு தண்ணீர் குடிப்பதற்காக நுழைந்த ஒரு முசுலீம் சிறுவனை அடித்து துன்புறுத்தி அதை வீடியோவாக சமூக ஊடகங்களில் குதூகலத்துடன் பகிர்ந்துள்ளது இந்துத்துவ வெறி கும்பல்.

2021 மார்ச் 12-ம் தேதி நடந்துள்ள இந்த கொடூர நிகழ்வு குறித்த வீடியோவில், இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையில், தான் செய்த ‘குற்றம்’ என்ன என்பதைக்கூட அறியாமல் விழிக்கும் அந்த சிறுவனை, அடித்து கீழே தள்ளி மிதிக்கிறான் ஒருவன். இந்து ஏக்தா சங்கம் என பெயரிடப்பட்ட இந்துத்துவ வெறுப்புக் குற்றங்களை நடைமுறைப்படுத்தும் ஓர் அமைப்பைச் சேர்ந்த சிருங்கி யாதவ் என்பனின் டிவிட்டர் கணக்கில் பெருமிதத்தோடு, இந்த வீடியோ பகிரப்பட்டு வைரலானது.

படிக்க :
♦ காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !
♦ கோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் !

ஒரு சிறுவனை தாக்குவதை ‘வீரச்செயல்’ என குறிப்பிட்டு பகிர்ந்துள்ள சிருங்கி யாதவ், சிறுவனின் பிறப்புறுப்பில் தாக்குவதை, ‘ஒரு முசுலீம் ஆண், “ஆண்மை நீக்கம்” செய்யப்பட்டான்’ எனக் கூறியுள்ளதாக த வயர் இணையதளம் கூறுகிறது. இதே நபர், மற்றொரு வீடியோ ஒன்றில் , கத்தி முனையில் ஒரு முசுலீம் சிறுவனிடம் ‘இந்துக்களின் வாழ்வை அழிக்க வங்கதேசத்திலிருந்து வந்தவன்’ எனக் கூறுவதையும் இணையதளம் சுட்டிக்காட்டுகிறது.

வெறுப்பை பரப்பும் இந்த வீடியோவுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், இந்த கணக்கு நீக்கப்பட்டிருக்கிறது. உத்தரபிரதேச போலீசிடம் நடவடிக்கை கோரி பலரும் முறையிட்ட நிலையில், சிருங்கி யாதவ் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

மீண்டும் தலை தூக்கியிருக்கும் வெறுப்பு குற்றங்களில் சமீபத்திய ஒன்றாக இது கடந்துபோகக்கூடும். ஆனால், இதுபோன்ற வெறுப்பு குற்றங்களின் பின்னணியை, தொடர்புடைய வன்முறையாளர்களின் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வறிந்து கூறியுள்ளது த வயர் இணையதளம்.

நீக்கப்பட்ட சிருங்கி யாதவின் கணக்கில் முசுலீம் சமூகத்துக்கு எதிரான குற்றங்கள் புகழ்ந்து பகிரப்பட்டுள்ளன. ஒரு பதிவில் ‘எதிரிகளின் ரத்த ஆறு’ என குறிப்பிடப்பட்டு நரசிங் ஆனந்த் சரஸ்வதி, முசுலீம்கள் தீவிரவாதிகள், இந்து ராஷ்டிரம் வாழ்க என்ற ஹேஷ்டேக்-உடன் பகிரப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில், விருப்பமுள்ள இந்து சகோதரர்களுக்கு ஆயுதமளிக்க தயார் என அறைகூவல் விடுக்கிறார். ‘நாம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடக்கூட முடியவில்லை. முசுலீம்கள் உயிரோடு எரிக்கப்படும்வரை இது நடக்காது’ என அந்தப் பதிவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் த வயர் கூறுகிறது.

சிருங்கி யாதவ்

முசுலீம்களுக்கு எதிரான கொலை குற்றத்தை தூண்டும் இத்தகைய பதிவுகளோடு, நரசிங் ஆனந்த் சரஸ்வதி என்ற மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கொலைவெறி சாமியார் ஒருவரின் படங்கள், வீடியோ பதிவுகள் போன்றவற்றையும் சிருங்கி பகிர்ந்துள்ளான். சிருங்கி போன்ற இந்துத்துவ வெறியர்களை உருவாக்குவதில் நரசிங் ஆனந்த் சரஸ்வதி போன்றோரின் பங்கு முக்கியமானது. முசுலீம்களுக்கு எதிரான பல கலவரங்களுக்கு பின்னணியாக இருந்த கபில் மிஸ்ரா போன்ற பாஜக தலைவர்களுடன் நரசிங் ஆனந்த சரஸ்வதி நெருக்கமாக உள்ளவர்.

கோயிலுக்கு நுழைந்த காரணத்தால் சிறுவன் அடித்து துன்புறுத்தப்பட்ட அதே கோயில், நரசிங் ஆனந்த சரஸ்வதி தலைமை பூசாரியாக உள்ளார். முசுலீம்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில், பல மதக் கலவரங்களை உருவாக்கியதில் இழிபுகழ் பெற்றது. இந்த நபர்தான் சிருங்கி போன்ற இந்துத்துவ அடியாட்களால் குரு என விளிக்கப்படுகிறார்.

நரசிங் ஆனந்த்

டெல்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரங்கேறிய கலவரத்தில் முசுலீம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குத் தொடர்ச்சியாக நரசிங் ஆனந்த் அழைப்பு விடுத்தை த வயர் உள்ளிட்ட இணையதளங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளன. நரசிங் ஆனந்தின் அழைப்பை ஏற்று குறைந்தபட்சம் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அந்த இணையதளம் ஆதாரத்தோடு கூறுகிறது.

டிசம்பர் 25, 2019-ம் ஆண்டு ஜந்தர் மந்தரின் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் முசுலீம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுங்கள் என நரசிங் ஆனந்த அழைப்பு விடுக்கிறார். இந்த வீடியோவை டெல்லி கலவரத்தில் தொடர்புடைய அங்கித் திவாரி என்ற ஆர். எஸ். எஸ்-ஐச் சேர்ந்த நபர் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். அதுபோல, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளிலும் கல் வீசி எறிந்த வைரலான வீடியோ ஒன்றிலும் உள்ள ராகினி திவாரி, தனது குரு என நரசிங் ஆனந்தை குறிப்பிடுகிறார்.

வெறுப்பு கக்கும் இந்த நரசிங் ஆனந்தின் பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் பரவி உள்ளன. மேலும் நியூஸ் நேஷன், சுதர்ஷன் டிவி, ஆஜ் தக் போன்ற இந்துத்துவ ஆதரவு ஊடகங்களில் தொடர்ச்சியாக இவருடைய வெறுப்பு பேச்சுகள் ‘விவாதம்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகின்றன.  இவருடைய பேச்சுக்களை வெட்டி, ஒட்டி பல லட்சம் பேருக்கு பரப்பும் பணியை பல இந்துத்துவ வெறும் குழுக்கள் யூ ட்யூப்பில் செய்து வருகின்றன.

பாஜகவால் பதவியில் அமரவைக்கப்பட்ட அப்துல்கலாமைக் கூட இந்த நபர் ஜிகாதிகள் என்கிறார். அனைத்து முசுலீம்களும் இவருக்கு ஜிகாதிகள் தானாம். சமீபத்திய நியூஸ் ஸ்டேட் டிவி ஒன்றின் விவாத்தின் போது ‘இறைதூதர் முகமதுவை முதல் முசுலீம் தீவிரவாதி’ எனக் குறிப்பிட்டு இந்த நபர் பேசியதாக த வயர் இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

டெல்லி கலவரத்தின் பின்னணியை த வயர் இணையதளம் வெளிக்கொண்டுவந்தபோது, நரசிங் ஆனந்த், த வயர் பணியாளர்களை ஜிகாதிகள் எனவும் வளைகுடா நாடுகளால் இணையதளத்துக்கு நிதி கிடைப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதுபோன்ற முசுலீம்களுக்கு எதிரான இனப் படுகொலையை வெறுப்பை கக்கும் நபர்களை ஒளிபரப்பக்கூடாது என மத்திய தகவல் தொழிற்நுட்ப அமைச்சகத்துக்கும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகத்துக்கும் நீதி மற்றும் அமைதிக்காக குடிமக்கள் அமைப்பு எழுதியிருந்தது.

படிக்க :
♦ உபி கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்
♦ ஒரு இந்து பெண்ணுக்கு 100 முசுலீம் பெண்களை தூக்குவோம்

ஆனால், நரசிங் ஆனந்த், சிருங்கி யாதவ் போன்றோரின் வெறுப்பு குற்றங்களால் ஆட்சிக்கு வந்திருக்கும் மத்தியில் ஆளும் அரசு அவற்றுக்கு எதிரான ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்கப்போவதில்லை. இந்து ராஷ்டிரத்தின் சோதனைக் கூடமாக பாஜக ஏக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து மாறவில்லை. அதற்கான களம் பல பத்தாண்டுகளாக தயார் செய்யப்பட்டு வந்தது.

இப்போது, தங்களுடைய காலம் வந்தபின் இந்துத்துவ இனப் படுகொலையாளர்கள் அதை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நிச்சயம், இன்னொரு தேர்தல் வெற்றி, ஆழமாக வேரூன்றி இருக்கும் இவர்களை அகற்றிவிடாது.


அனிதா
நன்றி : The Wire

கல்லூரி படிப்புக்கு நீட் : புதிய மனுநீதி || கருத்துப்படம்

கல்லூரி படிப்புக்கு நீட் : புதிய மனுநீதி !

காவி கார்ப்பரேட் பாசிசத்தின் – இரண்டாம் அலை பேண்டமிக் !

 

கருத்துப்படம் : மு. துரை

தேர்தல் ஆணையத்தின் நேர்மை || தோழர் வெற்றிவேல் செழியன் உரை || காணொலி

தேர்தல் ஆணையத்தின் நேர்மை || தோழர் வெற்றிவேல் செழியன் உரை !

000

போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம் || தோழர் வெற்றிவேல் செழியன்

 

மக்கள் அதிகாரம்

 

கீதை என்னை ஈர்க்கவில்லை ! மோடியை நான் ஏற்கவில்லை ! || கருத்துப்படம்

பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கமுள்ளவராக இருப்பர் !

– மோடி புகழாரம்

சிலிண்டர், பெட்ரோல் விலையை உயர்த்தி குடிமக்களை சாகடிக்காதே என்கிறேன்!

 “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே”  என்கிறார்!

தங்கள் வாழ்வாதாரங்களை அழிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறு என்கிறார்கள் விவசாயிகள் !

 “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது” என்கிறார் !

கீதை என்னை ஈர்க்கவில்லை ! மோடியை நான் ஏற்கவில்லை!

கருத்துப்படம் :

 

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா ? || வெற்றிவேல் செழியன் || காணொலி

க்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள், தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா என்ற கேள்விக்கும், தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் புரட்சிகர அமைப்புகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது குறித்தும் பதிலளிக்கிறார்.

தேர்தல் மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

000

தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் புரட்சிகர அமைப்புகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள இயலுமா?


மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

பார்ப்பன – பனியா உயர்சாதிக் கும்பலின் அதிகாரக் கூடாரமே பாஜக !

காலங்காலமாக பாஜகவை புறக்கணித்து வந்த வாக்காளர்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஈர்ப்பதற்காக பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் செய்வதன் மூலம் பாஜக கட்சியை நாட்டின் கடைகோடி வரை கொண்டு போய் சேர்ப்பதற்கான வேலைகளை அமித்ஷா – மோடி இணை செய்துவருகிறது.

ஆனால் 40 ஆண்டுகள் ஆன இந்த கட்சியில் இன்னமும் கட்சி அமைப்பின் நிர்வாகத்தில் தொன்மையான வரணாஸ்ரம சனாதனத்தை அப்படியே பின்பற்றி வருகிறது என்பதை கடந்த 2018-ம் ஆண்டு தி பிரிண்ட் இணையதளம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

தி பிரிண்ட் பத்திரிகை வெளியிட்ட இந்த ஆய்வு ஆகஸ்ட், 2018-ம் ஆண்டு வரையிலுமான நிலைமைதான் என்றாலும், பாஜக-வின் நிலைமையை இன்றளவும் பிரதிபலிக்கக் கூடியதாகவே இருப்பதால், அவ்வாய்வுக் கட்டுரையை சுருக்கி இங்கே தருகிறோம்.

பாஜகவில் வர்ணாசிரம சாதிய படிநிலையின் படி, உயர்சாதியினரின் ஆதிக்கமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. மக்கள்தொகை அடிப்படையில் அல்லாமல், பிற்பட்ட சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் அவர்களது ‘சாதிய படிநிலைக்கு’ உரிய இடங்களையே வழங்கி வந்திருக்கிறது பாஜக.

படிக்க :
♦ இந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் !
♦ சகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் ?

இந்தியாவை சித்பவன் பார்ப்பனர்களின் சாம்ராஜ்யமாக மாற்றி ‘அவர்களின் பொற்காலத்தை’ மீட்டெடுக்க கனவுகளோடு களத்தில் சகல தகிடுதத்தங்களையும் செய்யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாராளுமன்றப் பிரிவான பாஜக-வின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது மிக அவசியமாகும்.

அதனடிப்படையில், மிக ஆழமாக அந்த கட்சியின் அமைப்பு நிர்வாகத்தில் சாதிய விவரங்களை ஆராய வேண்டியிருக்கிறது.

தலைமை தாங்குவது உயர்சாதி வெறியர்கள் :

தேசிய அளவில் கட்சி நிர்வாகிகளில் நான்கில் மூன்று பங்கு உயர்சாதியினரின் ஆதிக்கமே உள்ளது. அதன் தேசிய செயற்குழுவில் 60 சதம் பேர் பொதுப்பட்டியலில் உள்ள சாதியினரே. நாடு முழுவதும் மாநில தலைவர்களில் 65 சதம் இடத்தை பொதுப்பட்டியலில் உள்ள சாதியினர்தான் ஆக்கிரமித்திருக்கின்றனர்.

இதற்கு கீழ் உள்ள பதவிகளிலும் பெரும்பான்மையான தலைமைப் பதவிகளில் உயர்சாதியினர்தான் உள்ளனர். நாடு முழுவதும் மாவட்ட தலைவர்கள் பதவிகளிலும் 65 சதம் பேர் பொதுப்பட்டியலில் உள்ள உயர்சாதியினரே ஆவர்.

தலைமைப் பதவி எப்போதும் ‘தலையில் பிறந்த’ பார்ப்பன சாதியினருக்கே என்ற வர்ணாஸ்ரம தர்மத்தை தாங்கித் தான் இயங்குகிறது பாஜக.

சட்டையை உரித்தாலும் பாம்பு பாம்புதான்

பாஜகவை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்கும் விரோதமான கட்சி என்பதுதான் அதன் துவக்க கால அடையாளம். ஆனால் பாஜக ‘பார்ப்பன – பனியா’ உயர்சாதியினருக்கான கட்சி என்ற தனது உண்மையான தன்மையை மறைத்துக் கொள்ள சில நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் பல இடங்களில் பாஜகவை நாட ஆரம்பித்தனர். கீழே உள்ள பொறுப்புகளில் பெயரளவிற்காவது பல சாதியினரையும் அனுமதித்தாலும் அதன் உயர்மட்ட அமைப்புகளில் இன்னும் தீண்டாமைதான் கோலோச்சுகிறது.

தலித் மக்களோடு சேர்ந்து முஸ்லீம் மற்றும் பழங்குடியின மக்களை பாஜக அங்கொன்றும் இங்கொன்றுமாக நரித்தனமாக பயன்படுத்திக் கொள்ள அவர்களை நிர்வாகப் பதவிகளில் வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு தேசிய நிர்வாகிகளில் சிறுபான்மையினர் (முசுலீம், புத்தமதம், கிறிஸ்தவம்) இரண்டு பேர்தான் இருக்கின்றனர்.

பாஜகவின் நிர்வாகிகள் பட்டியலையே எடுப்போம்.

தேசிய நிர்வாகிகள்- 50 பேர். தேசிய செயற்குழு உறுப்பினர்கள் – 97பேர். மாநிலங்கள்-29 யூனியன் பிரதேசங்கள் 7 ஆக மொத்தம் – 36 மாநில தலைவர்கள். அதோடு 24 மாநிலங்களில் மாவட்டத்தலைவர்கள்-752 பேர்

வடகிழக்கிந்திய மாநிலங்கள் அஸ்ஸாம், திரிபுரா தவிர அடிப்படையில் பழங்குடியின மக்களே ஆதிக்கத்தில் இருப்பதால் மாநில நிர்வாகிகள் பட்டியலிலும் இந்த சமூக நிலைமைகள் எதிரொலிக்கவே செய்யும் என்பதால் ஆய்வுக்கு இவை எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சாதி வகைபடுத்துதல் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் குறிப்பிட்ட சாதியின் நிலையை அடிப்படையாக கொண்டு செய்யப்படுகிறது. முஸ்லீம்கள் புத்த மதத்தினர் மற்றும் கிறித்துவர்கள் சிறுபான்மையினர் என்ற வகையில் சேர்க்கப்படுகிறார்கள்.

பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி! பஞ்சாபியருக்கு அநீதி

சீக்கியர்களை சிறுபான்மையினராக வகை பிரிக்கவில்லை. பாஜகவில் அதிகமான அளவில் சீக்கியர்கள் பதவிகள் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது பஞ்சாப் மாநில பாஜக கட்சிஅமைப்பில் மட்டும்தான். அங்கே அவர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் இந்த நிலைமை. ஆனால் பஞ்சாபுக்கு வெளியே பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் பட்டியலில் ஒரே ஒரு சீக்கியரும்,  தேசிய செயற்குழுவில் ஒரே ஒருவரும், மத்தியபிரதேசம், சட்டிஸ்கரில் ம்ாநிலங்களில் தலா ஒரு மாவட்ட அளவிலான பதவிகளிலும் மட்டுமே சீக்கியர்கள் உள்ளனர்.

ஆனால் பார்ப்பனர்கள் பனியாக்கள் எடுத்துக் கொண்டோமெனில், மக்கள் தொகையில் அரிதாக இருக்கும் அவர்களுக்கு கட்சிதான் அதிகார மையம்.

இந்த ஆய்வு நடத்தப்பட்ட விதம் :

தேசிய பொறுப்பாளர் மற்றும் தேசிய செயற்குழு பட்டியலும் பாஜக கட்சியின் இணைய தளத்தில் எடுக்கப்பட்டவை.

தேசிய பொறுப்பாளர்கள் பட்டியலில் தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலர்கள், இணை பொதுச் செயலர்கள், தேசிய செயலர்கள், தேசிய செய்தி தொடர்பாளர் மற்றும் துணை இணை அமைப்புகளின் (மோர்ச்சா) தலைவர்கள் ஆகியோர் அடங்குவர். தேசிய செயற்குழுவில், மாநில தலைவர்களும் உறுப்பினர்களே. மாவட்டத் தலைவர்கள் பற்றிய விபரங்கள் கட்சியின் மாநில இணையத் தளங்களில் காணக் கிடைக்கும்.

படிக்க :
♦ சட்ட மன்றத் தேர்தலால் இழந்த உரிமைகளை மீட்டுத்தர முடியுமா ?
♦ உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

மாவட்ட தலைவர்கள் எண்ணிக்கை, சில மாநிலங்களில் இருக்கும் மாவட்டங்களை விட, அதிகமாக இருக்கும். மாவட்டங்கள் பெரிதாக இருந்தால் தலைவர் பதவிகள் ஒன்றுக்கு அதிகமாக இருக்கும். சாதிய அளவீடுகள் முடிந்த அளவு துல்லியமாக தரப்படுகிறது. சாதியை அடையாளப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களால், சில திருத்தங்கள் இருக்கலாம்.

இனி நிர்வாகிகள் பொறுப்பாளர்களில் பாஜக-வின் சமூக நீதியை பார்ப்போம்.

தேசிய நிர்வாகிகள் மொத்தம் 50 பேர்.
பார்ப்பனர்கள் – 17 பேர்
பிற உயர்சாதியினர் – 21 பேர்
மொத்தத்தில் 50க்கு 38 பேர் உயர்சாதியினர்.

மீதி உள்ள 12 பதவிகள்தான் பிற சாதியினருக்கு பிரிக்கப்பட்டுள்ளது. அதில்,
இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் – 4 பேர்
தாழ்த்தப்பட்ட சாதியினர் – 3 பேர்
மலைவாழ் பழங்குடியினர் – 2 பேர்
முஸ்லீம்கள் – 2 பேர்
சீக்கியர்கள் – 1 நபர்

பாஜகவின் அதிஉயர்மட்ட முடிவுகள் எடுக்கும் தேசிய நிர்வாகிகள் அமைப்பில் மிக மோசமான அளவிலே தான் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளது.

தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கான 3 பிரதிநிதிகளில் ஒருவர் தாழ்த்தப்பட்டோருக்காக பாஜக நடத்தும் அமைப்பின் தலைவர். அதே போல,  மலைவாழ் பழங்குடியின மக்களை எடுத்துக்கொண்டால் இது இன்னும் மோசம். இருக்கும் 2 பேரில் ஒருவர் கட்சியில் மலைவாழ் பழங்குடியினருக்கான பிரிவின் தலைவர். இன்னொருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதி துருவா. இவரின் சாதி நிலை பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. அவரது சாதிய நிலை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது.

ஆக மொத்தத்தில் இருக்கும் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் 76 சதம் பேர் உயர்சாதியினர்தான். 8 சதம் பேர் இதர பிற்பட்டுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். வெறும்  6 சதம் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள்.

தேசிய செயற்குழுவிலும் இதே நிலைதான். மொத்த உறுப்பினர்கள் – 97 பேர். அதில்,
பார்ப்பனர்கள் – 29 பேர்
உயர்சாதியினர் – 37 பேர்
இதர பிற்படுத்தப்பட்டோர் – 18 பேர்
தாழ்த்தப்பட்டோர் – 7 பேர்
சிறுபான்மையினர் – 3 பேர்
சீக்கியர்கள் – 1 நபர்
மலைவாழ் பழங்குடியினர் – 1 நபர்

அதாவது மொத்தம் 97 நிர்வாகிகளில் 66 பேர் உயர்சாதியினர். உயர்சாதியினர் 69 சத பதவிகளை ஆக்ரமித்துள்ளனர். 27 சதம் பேர் மட்டுமே மற்ற சாதிகளிலிருந்து வந்துள்ளனர்.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த எண்ணிக்கை 36. கடந்த 2018-ம் ஆண்டுவரையில் இதில் தலைவர் பொறுப்புகளில் ஒருவர் கூட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. சமீபத்தில் தமிழகத்தில் மட்டும்தான் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவர் பொறுப்பில் உட்கார வைத்திருக்கிறது பாஜக.

மொத்தமுள்ள 36 பேரில்,  (2018 நிலவரம்)
பார்ப்பனர் – 7 பேர்
பிற உயர்சாதியினர் – 17 பேர்
பழங்குடி மலைவாழ்பிரிவு – 6 பேர்
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 5 பேர்
முஸ்லீம் – 1 நபர்

மொத்த்த்தில் இருக்கும் 36 பதவிகளில் 24 பேர். அதாவது 69 சதம் பேர் உயர்சாதியினர் தான். மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களில் கூட இதேநிலை நீடிக்கிறது. மாவட்ட அளவிலான 752 பதவிகளில் 65 சத பதவிகளில் இருப்பது உயர்சாதியினர்தான்.

மொத்தமுள்ள 752 பதவிகளில் 746 மாவட்ட தலைவர்களின் விவரங்கள் உள்ளன. அதில் 487 பேர் உயர்சாதியினர். அதாவது 65 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளனர். 25 சதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) / பிற்படுத்தப்பட்டோர் (BC) / மிகபிற்படுத்தப்பட்டோர் (MBC). தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் 4 சத அளவுக்குதான் பிரதிநிதித்துவம். சிறுபானமை மதத்தினருக்கோ 2 சதவீதம்தான்.

மக்கள்தொகையில் ஒவ்வொரு சாதியும் இருக்கும் அளவுக்கு ஈடானதாக கட்சியில் அதன் பிரதிநிதித்துவம் இல்லைஎன்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அதற்கு பதில் பார்ப்பன பனியா மற்றும் உயர்சாதியினருக்கு, அவர்கள் மக்கள் தொகையில் எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி தலித் மக்கள் 16.6 சதம்; மலைவாழ் பழங்குடியினர் 8.6 சதம்; முஸ்லிம்கள் 14 சதம் என தரவுகள் கூறுகின்றன. மற்ற சாதியினருக்கான சரியான விவரங்கள் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு 2007-ல் எடுத்த கணக்கெடுப்பு படி இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர்(ஓபிசி) 41 சதம் பேர் உள்ளனர்.

மேலும் இந்த ஆய்வில் மாநில வாரியாக பாஜக கட்சித் தலைமையில் உள்ள சாதிய பிரிவினையை விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். மூலக் கட்டுரைக்கான இணைப்பு கீழே கட்டுரை இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பாரதிய ஜனதா கட்சி யாருக்காக செயல்படுகிறது என்பதையும், ஆர்.எஸ்.எஸ். எதற்காக செயல்படுகிறது என்பதையும் நாம் அவர்களது சித்தாந்தத்தில் இருந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த முடியும் எனினும், அவர்களது கட்சியில் கொடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.


நன்றி : தி பிரிண்ட்
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : மணிவேல்

இந்தியா தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறிவிட்டது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம்

0

லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக சொல்லப்படும் இந்தியாவை ஒரு தேர்தல் எதேச்சதிகார நாடாக அறிவித்துள்ளது ஸ்வீடனைச் சேர்ந்த வி-டெம் ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனம் பாரதிய ஜனதா கட்சியை எதேச்சதிகார ஆளும் கட்சியாக கடந்த ஆண்டு வரையறுத்தது.

ஜனநாயகத்தின் கருத்தியல் மற்றும் அளவிடும் அமைப்பான வி-டெம் அறிக்கையை ஸ்வீடனின் துணை வெளியுறவு அமைச்சர் ராபர்ட் ரைட்பெர்க் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் காணப்படும் எதேச்சதிகாரத்தை நோக்கிய சரிவு, தற்போது உலகம் முழுவதும் சர்வாதிகாரமயமாக்கப்படும் இந்த ‘மூன்றாம் அலையில்’ ஜனநாயகத்தில் இருந்து சரிவு ஏற்பட்ட நாடுகளின் நடைமுறையை ஒத்திருப்பதாகவும் ஊடகங்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் சுதந்திரம் முதலில் குறைக்கப்பட்டு பிறகு, மிகப் பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

கடந்த ஆண்டு, இந்தியா மிகவும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் பல தரவுகளுடன், 2019 முதல் இந்தியாவின் நிலை “தேர்தல் எதேச்சதிகார நாடாக”  உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, தணிக்கைகள் வழக்கமாகிவிட்டன எனவும் அரசாங்க விஷயங்களுடன் மட்டுமே அவை நின்றுவிடவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது. மோடிக்கு முன்னர் இந்திய அரசு தணிக்கை செய்வதை அரிதாகவே பயன்படுத்தியது எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

படிக்க :
♦ சகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் ?
♦ டிராக்டர் பேரணியை இழிவுபடுத்தும் ரதயாத்திரை கும்பல்

இந்த அம்சத்தில், இந்தியா இப்போது பாகிஸ்தானைப் போலவே எதேச்சதிகாரமாகவும், அதன் அண்டை நாடான பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தை விடவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும் வி- டெம் அறிக்கை கூறுகிறது.

“பொதுவாக, இந்தியாவில் மோடி தலைமையிலான அரசாங்கம் விமர்சகர்களை மவுனமாக்குவதற்கு தேசத்துரோகம், அவதூறு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சட்டங்களைப் பயன்படுத்தியுள்ளது. உதாரணமாக, பாஜக ஆட்சியைப் பிடித்தபின் 7,000-க்கும் மேற்பட்டோர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆளும் கட்சியை விமர்சிப்பவர்கள்.” என்கிறது ஆய்வறிக்கை.

அரசாங்கம் பொது சமூகத்தை கட்டுப்படுத்துவதாகவும் மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பின் உறுதிப்பாட்டுக்கு எதிராக செயல்படுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சிவில் சமூக அமைப்புகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டமான Foreign Contributions Regulation Act – FCRA -ஐ பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது. இந்துத்துவாவுடன் தொடர்புடைய சிவில் சமூக அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் கூறுகிறது இந்த அறிக்கை.

2019-ம் ஆண்டும் திருத்தப்பட்ட சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் அரசியல் எதிரிகளை துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் சிறையில் அடைப்பதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாகவும் அறிக்கை ஆய்ந்தறிந்து கூறுகிறது.

“கல்வி புலத்தில் எழும் மாற்றுக் கருத்துகளை மவுனமாக்குவதற்கும் உபா பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களை பல்கலைக் கழகங்களும் அதிகாரிகளும் தண்டித்துள்ளனர்” என்கிறது வி-டெம் ஆய்வு.

“எதேச்சதிகாரம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதற்கான ஒரு முக்கியமான வெளிப்பாட்டு தன்மையை ஆய்வு கண்டறிந்துள்ளது. கல்வி புலம் மற்றும் சிவில் சமூகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் முதலில் ஊடகங்களை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இவற்றின் மூலம் பிரிவினையைத் தூண்டி அரசியல் எதிரிகளை அவமதிக்கவும் அரசாங்க இயந்திரங்கள் உதவியுடன் தவறான தகவல்களை பரப்புவதும் நடைபெற்றது. இத்தனை தூரம் கடந்த பிறகே, ஜனநாயகத்தின் அடிப்படைகளான தேர்தல் மற்றும் பிற அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த முடியும். அதுதான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்கிறது அறிக்கை.

கடந்த 10 ஆண்டுகளில் தாராளமய ஜனநாயக நாடுகளின் உலகளாவிய வீழ்ச்சி வேகமடைந்துள்ளதாகவும் , குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியம், மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் 2020-ம் ஆண்டிலும் இது தொடர்ந்தது.

கடந்த பத்து ஆண்டுகளில், ஜனநாயகமயமாக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் (16) குறைந்து, உலக மக்கள் தொகையில் வெறும் 4 விழுக்காடாக மட்டுமே உள்ளது எனவும் ஆய்வு கூறுகிறது. இந்தியாவைத் தவிர, மற்ற ஜி 20 நாடுகளான பிரேசில், துருக்கி ஆகியவையும் ஜனநாயகத்தில் சரிவைக்கண்ட முதல் 10 நாடுகளில் அடங்கும்.

படிக்க :
♦ பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

கடந்த வாரம், அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கை இந்தியாவை பகுதி அளவு சுதந்திர நாடாக குறைத்துள்ளது.

நரேந்திர மோடி 2014-ல் பிரதமரானதிலிருந்து மனித உரிமை அமைப்புகள் மீது அதிகரித்த அழுத்தம், கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான மிரட்டல் மற்றும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட கும்பல் வன்முறைகள் உள்ளிட்ட பெருந்தொகையான தாக்குதல்களால், நாட்டின் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மோசமடைந்துள்ளன என்கிறது அறிக்கை. 2019-ல் தேர்தலுக்குப் பிறகு மோடி மீண்டும் தேர்வுபெற்றதும் ஜனநாயகச் சரிவு துரிதப்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.

ஒருபுறம் அரசாங்கத்தின் கொடூர ஆளுகையில் நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. இந்த கொடூர ஒடுக்குமுறை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல்களின் மூலமாகவே அமல்படுத்தப்படுகிறது. பாசிஸ்ட்டுகள் தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட பிறகும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் கவிழ்த்து, குதிரை பேரங்கள் மூலம் ஆட்சியமைப்பது ஆகியவை நம் கண் முன்னேயே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதனையே தரவுகளோடு சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.

அனிதா
நன்றி: ஸ்க்ரால்