Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 242

சீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்

5

சீமானின் “தற்சார்பு” பொருளாதாரம் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அர்ஜுன் பேசும் வீடியோ பார்க்கக் கிடைத்தது. அதில் அவர் விவசாய உற்பத்திப் பொருட்களை வணிக மயமாக்கி ஏற்றுமதி செய்வதைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார். வெளிப்படையாகவே தமிழ் முதலாளிகளை உருவாக்கி வளர்க்க வேண்டும் என்கிறார். அவரது பேச்சு, கிட்டத்தட்ட பூமி திரைப்படம் பார்ப்பது போலிருந்தது.

Make in India என்ற பெயரில் மோடி பிரச்சாரம் செய்து வந்த “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும், சீமானின் “தற்சார்பு” பொருளாதாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே விடயத்தை தான் பேசுகிறார்கள். ஆனால், இவர்கள் சொல்லாமல் மறைக்கும் உண்மை ஒன்றுள்ளது.

படிக்க :
♦ இந்தியா தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறிவிட்டது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம்
சீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்

இந்தியா சுதந்திரமடைந்த நாளில் இருந்து இன்று வரை IMF, உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கி வருகின்றது. மத்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாடு மாநில அரசு தனக்கென தனியாக கடன் வாங்கி வருகின்றது. அந்தக் கடன்கள் நிபந்தனையின் பேரில் கொடுக்கப்படுகின்றன. பொருளாதாரத்தை தாராளமயப்படுத்த வேண்டும், சந்தையை நூறு சதவீத அந்நிய முதலீடுக்கு திறந்து விட வேண்டும்.

அதனால்தான் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களின் விவசாய வணிகப் பொருட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இந்திய நிறுவனங்களால் உலக சந்தையைப் பிடிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு சாக்லேட் தயாரிக்க தேவையானக் ககாவோ (cocoa) சுவிட்சர்லாந்தில் கிடைக்காது. அந்த மரம் ஆப்பிரிக்காவில் உள்ளது. குறிப்பாக, கானா, ஐவரி கோஸ்ட் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ககாவோ (cocoa) இறக்குமதி செய்யப்படுகின்றது.

சுருக்கமாக, உண்மையில் ஆப்பிரிக்க சாக்லேட்தான் சுவிஸ் சாக்லேட் என்ற பெயரில் உலகம் முழுவதும் விற்பனையாகின்றது. ஏன் அந்த ஆப்பிரிக்க நாடுகள் தாமே சாக்லேட் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்க முடியவில்லை? உண்மையில் உள்நாட்டு முதலாளிகள் தயாரித்து விற்கும் சாக்லேட்டுகள்  நிறைய கிடைக்கின்றன. ஆனால் அவை அந்த நாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. சில நேரம் அயல்நாட்டு சந்தைகளில் விற்பனையாகலாம்.

அதைவிட அமெரிக்காவுக்கு சாக்லேட் ஏற்றுமதி செய்வதெல்லாம் கனவிலும் நினைக்க முடியாது. அமெரிக்காவில் உள்ள ஒரு விநியோகஸ்தர் இறக்குமதி செய்தால், அதற்கு நிறைய வரி விதிப்பார்கள். அதற்கும் மேலே பல தடைகள் வரும். ஆனால் சுவிஸ் சாக்லேட்டுக்கு அப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இது அமெரிக்காவுக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நடக்கிறது.

நாம் தமிழரின் “தற்சார்பு” பொருளாதாரமும், இப்படித் தான் தடுக்கி விழும் என்று எதிர்பார்க்கலாம். அவர்களால் குறைந்த பட்சம் பால்மாவை உற்பத்தி செய்து உள்நாட்டில் கூட அதைச் சந்தைப்படுத்த முடியாது. அதற்குக் காரணம் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதியான பால்மா தமிழ்நாட்டு சந்தையில் மிகக் குறைந்த விலையில் விற்பனையாகின்றது. முறைப்படி பார்த்தால், சுவிஸ் பால்மாதான் அதிக விலையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். உண்மை தான். ஆனால், உலக சந்தையை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதற்காக சுவிஸ் அரசு மானியம் அள்ளிக் கொடுக்கிறது.

அதே மாதிரி இந்திய, தமிழ்நாடு அரசும் மானியம் கொடுக்கலாம் தானே என்று கேட்கலாம். இங்கு தான் IMF, உலக வங்கி மூக்கை நுழைக்கிறது. அப்படி செய்து விட்டால் கடன் கொடுப்பது நிறுத்தப்படும். அரசு மானியங்களைக் குறைக்க வேண்டும், அல்லது நிறுத்த வேண்டும் என்பது அவை முன்வைக்கும் முக்கியமான நிபந்தனையாக உள்ளது. இன்னொருவிதமாக சொன்னால், மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களுக்கு சமமாக இந்திய நிறுவனங்கள் வளர விடாது ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்து விடுகிறார்கள். இதைப் பற்றி சீமான் பேசவே மறுக்கிறார்.

கலையரசன்
முகநூலில் : kalai marx

குமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் !

0

ரக்கு பெட்டகத் துறைமுகம் அமைப்பதற்கு எதிராக கீழமணக்குடி என்ற குமரி மாவட்டத்தின் கடலோர கிராமத்தில் கடந்த மார்ச் 27 அன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

ஏன் இந்த போராட்டம் ?:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகம், இயற்கையாக அமைந்த ஓர் பழமையான துறைமுகமாகும். அதை மிகப் பெரிய சரக்கு பெட்டகத் துறைமுகமாக விரிவாக்கம் செய்ய கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தின் மூலம் கொண்டுவர நினைத்தது மோடி அரசு. மக்களின் கடும் எதிர்ப்பினாலும் போராட்டத்தினாலும் துறைமுக விரிவாக்கத்தில் இருந்து பின்வாங்கியது. அதே சமயம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை மீனவர்களுக்கு மேம்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.

படிக்க :
♦ குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !
♦ துயரத்தின் விளிம்பில் குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் !

அதே ஆண்டே இனயம் கிராமத்தில் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டது மோடி அரசு. அங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மிகப்பெரிய சாலை மறியல் போராட்டங்கள், கடலில் படகுகளுடன் போராட்டங்கள் என பல்வேறு போராட்டங்கள் நடந்தது. அதன் விளைவாக, இனயம் கிராமத்தில் துறைமுகம் அமைக்கும் முயற்சியை ஒத்தி வைத்தது பாஜக அரசு.

அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, 2019-ம் ஆண்டு கோவளம் – தென்தாமரைக்குளம் ஆகிய கிராமங்களுக்கு இடையே துறைமுகம் அமைக்க இடம் தேர்வு செய்தது மோடி அரசு. இதற்கும் மாபெரும் எதிர்ப்புக் கிளம்பியது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் படுதோல்வி அடைந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அதன்பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு வெளிப்படையான அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது மோடி அரசு. தற்போது, 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி தூத்துக்குடி வ.உ.சி துறைமுகப் பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி அருகே பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பு (பிபிபி) திட்டத்தில் 65 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் பசுமை துறைமுகம் அல்லது டிரான்ஷிப்மெண்ட் ஹப் அமைத்தல் பணிகளுக்கு துறைமுக கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இது சாகர்மாலா திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளனர்.

இந்த அறிவிப்பு கன்னியாக்குமரி மக்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 14-ம் தேதி இதனைக் கண்டித்து ஆரோக்கியபுரம் முதல் நீரோடி கிராமம் வரை போராட்டங்கள் நடந்தன. அதானி குழுமத்துக்காக தங்களது வாழ்வாதாரத்தை அழிக்க மோடி அரசு திட்டமிடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள போராடும் குமரி மக்கள்.

This slideshow requires JavaScript.

இந்த அறிவிப்பால் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்(2021) அ.தி.மு.க கூட்டணிக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பொன்.ராதாகிருஷ்னணும், அதிமுக கட்சியின் தளவாய் சுந்தரமும் ‘துறைமுகம் வராது’ என தேர்தல் ஆதாயத்திற்காக கூறிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா-வும் துறைமுகம் குறிந்து பேசுவதை தவிர்த்துவிட்டார்.

சரக்கு பெட்டகத் துறைமுகம் வருவதை எதிர்த்து குமரி மக்கள் மார்ச் 27-ம் தேதி மாலை மாபெரும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தனர். இந்நிலையில் மார்ச் 27 அன்று காலையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி, “சரக்கு பெட்டகத் துறைமுகத் திட்டம் கண்டிப்பாக வராது” என்று கூறிச் சென்றிருக்கிறார். இதுவெல்லாம் தேர்தலுக்கான கண்துடைப்பு  என்று கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

திட்டமிட்டபடி கடந்த மார்ச் 27 அன்று மாலை 4 மணியளவில் துறைமுகம் அமைக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டிருந்த கீழமணற்குடி கிராமத்தில் ஓர் மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மீனவர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.

ஏன் இந்த துறைமுகம் அமைத்தே ஆகவேண்டும் என நிற்கிறது அரசு :

கன்னியாகுமரி என்பது சர்வதேச வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு வழித்தடம். அதானி குழுமத்துடன் கூட்டு சேர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த சரக்குப் பெட்டகத் துறைமுகத்தை அமைக்க துடிக்கிறது மோடி அரசு.

இந்த சரக்கு பெட்டகத் துறைமுகம் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மிகவும் தீவிரமாக கட்டியே தீரவேண்டும் என்று அரசு செயல்படுவற்கு காரணம் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் மட்டுமே. மக்கள் நலம் என்பது இதில் துளியும் கிடையாது.

துறைமுகம் அமைந்தால் என்ன ஆகும் கன்னியாகுமரி :

இந்த பிரம்மாணடமான துறைமுகம் அமைந்தால், குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது உறுதி. மேலும், ராட்சச கப்பல்கள் வருவதற்கு கடற்கரைக்கு அடியில் இருக்கும் மணல், பவளப்பாறைகள், கரும் பாறைகளைத் தோண்டி எடுத்து ஆழப்படுத்துவார்கள். இதனால், நிலத்தடி நீரில் உப்புநீர் கலந்து விடும் அபாயம் உள்ளது. இது விவசாயத்தையும் மக்களின் வாழ்வையுமே கடுமையாகப் பாதிக்கும். கழிமுகம் இல்லாமல் ஆறுகளின் முகத்துவாரங்கள் மண்ணால் அடைக்கப்பட்டு விவசாய நிலங்களும், மக்களின் வீடுகளும் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது.

சுருங்கச் சொன்னால், இந்த துறைமுகம் அமைந்தால், மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத ஒரு மாவட்டமாக குமரி மாவட்டம் மாறும். சுற்றுலா தலம், இயற்கை வளம், மீன் வளம், பறவை இனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு குமரி மாவட்டம் பாலைவனமாக மாறும் சூழல் உருவாகும்.

படிக்க :
♦ கொன்றது ஒக்கி புயலா ? அரசுக் கட்டமைப்பா ? குழித்துறையில் ரயில் மறியல்
♦ ஒக்கி புயல் : குமரி மீனவர்களின் உள்ளக் குமுறல் – வீடியோ

இதற்கு ஓர் உதாரணமாக, சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அருகில் மீனவர்கள் மீன் பிடிப்பது இடையூறாக உள்ளது. எனவே மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது அதானி குழுமம்.

குமரி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த சரக்கு பெட்டகத் துறைமுகத்தை எதிர்ப்போம் :

சாகர்மாலா திட்டம் தமிழ்நாட்டின் மீன் வளம் கடல் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் சூறையாடுவதற்கே வழிவகை செய்யும். இலட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களை வீதியில் வீசிவிடும். மக்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிராக அமையவிருக்கும் இந்த சரக்கு பெட்டகத் துறைமுகத்தை எதிர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி விவசாயிகள், மீனவர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டுவது என்பது இன்று நெருங்கிவரும் பாசிசத்திற்கு எதிரான அவசியமான தவிர்க்கவியலாத பணிகளில் ஒன்றாகும்.


சந்துரு

செய்தி ஆதாரம் : சரக்கு பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் – முகநூல் பதிவு

உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??

0

ரு காணொலிக் காட்சியில் ஒரு பெண்ணிடமும் போலீசு அதிகாரி ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். வாதத்தின் இடையே சட்டென தனது கால் செருப்பைக் கழட்டி அந்த போலீசின் கன்னத்தில் அறைகிறார் அந்தப் பெண். கூட்டத்தை ஒழுங்கு செய்யும் மற்றொரு போலீசோ எவ்வித அதிர்ச்சியையும் காட்டாமல், தனது கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்.

மற்றொரு காணொலிக் காட்சியில் ஒரு போலீசு அதிகாரியை பத்து பதினைந்து பேர் கொண்ட ஒரு கூட்டம் சுற்றி வளைத்துத் தாக்குகிறது. ஒருவன் போலீசு அதிகாரியின் கையைப் பிடித்து தன்னை அடிக்குமாறு இழுக்கிறான். அவனோடு அந்த அதிகாரி பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கையில், மற்றொருவனோ ஹெல்மெட்டைக் கொண்டு அந்த போலீசு அதிகாரியின் பின்புறத்தில் தாக்குகிறான். திரும்பிப் பார்க்கும் அந்த அதிகாரியை மீண்டும் முன்னால் வந்து ஹெல்மெட்டால் தாக்குகிறான். தப்பி ஓடும் அதிகாரியின் மீது ஹெல்மெட்டை வீசி எறிகிறான்.

காணொலிக் காட்சியைக் காண இங்கே அழுத்தவும்

இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த சனிக்கிழமை (27-03-2021) அன்று உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் நடந்தவை. போலீசு அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில், போலீசை தாக்கிய ‘கயவர்களை’ யோகி ஆதித்யநாத் அரசு உடனடியாக என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருக்கும் என்று எண்ண வேண்டாம். ஏனெனில் தாக்கியவர்களே பாஜக-வைச் சேர்ந்த சங்க பரிவாரக் கும்பல்தான்.

கடந்த சனிக்கிழமை அன்று மதுராவில் உள்ள யமுனை ஆற்றின் கரையில் உள்ள தேவ்ரஹா பாபா காட் எனும் இடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்டத் தலைவரான மனோஜ்குமார் மற்றும் அவரது அடிபொடுகளுக்கும் அங்கு வந்த போலீசு துணை ஆய்வாளருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில், அந்த போலீசு அதிகாரி ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவரை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே போலீசின் நடைமுறைக்கு எழுதப்படாத விதி என்பது என்ன ? போலீசுக்கு தவறு செய்தவர்களை அடிக்கும் உரிமை இருக்கிறது என்பதுதானே? உலகம் முழுவதும் நடத்தப்படும் என்கவுண்டர்கள், லாக் அப் சித்திரவதைகள், படுகொலைகள் எல்லாமே இந்தப் பெயரால் தான் நியாயப்படுத்தப்பட்டன. போதாத குறைக்கு தமிழ் சினிமாக்களில் புல்லரிக்கச் செய்யும் டயலாக்குகள் மூலமும் இந்த ‘நியாய உரிமை’ போலீசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

படிக்க :
♦ பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி
♦ உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !

அப்படிப்பட்ட ‘நியாய உரிமையை’ ஒரு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவரிடம் அந்த உதவி ஆய்வாளர் காட்டியிருக்கிறார். அவ்வளவுதான். சாதாரண மனிதர்களிடம் அப்படி நடந்திருந்தால் அந்த போலீசு அதிகாரிக்கு உயர்பதவி கிடைத்திருக்கும். ஆனால் அவர் தனது நியாய உரிமையை காட்டியது ஒரு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவரிடம்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆர்.எஸ்.எஸ் மாவட்டத் தலைவர் மனோஜ்குமார் போலீசு நிலையத்தில் தன்னை அடித்த உதவி ஆய்வாளர் உபாத்யாயா மீதும் அவருடன் இருந்த இரு போலீசார் மீதும் புகார் அளித்துள்ளார்.

இந்த மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி வழக்கு மற்றும் முறைமீறி நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதோடு, உடனடியாக இரண்டு கீழ் நிலை போலீசாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

சாத்தான்குளத்தில் லாக்கப் கொலையே செய்த அந்த போலீசு அதிகாரிகள் மீது பல நாட்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது நினைவிருக்கலாம். இங்கு ‘சும்மா’ அடித்ததற்கே தற்காலிக பணிநீக்கம். ஏனெனில் உத்தரப் பிரதேசம், இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலை அல்லவா ?

புகார் கொடுத்த கையோடு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் மதுரா நகர் முழுவதும் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பலின் காலிகளுக்கு தகவல் சொல்லி, நகரில் பல இடங்களில் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பாஜக, சங்க பரிவாரக் கும்பலைச் சேர்ந்த பொறுக்கிகள் போலிசை தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.

அப்படிப்பட்ட சம்பவங்கள் தான் இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு காணொலிக் காட்சிகள். அந்த முதல் சம்பவத்தில் போலீசை செருப்பால் அடித்த அந்தப் பெண்மணி வேறு யாருமல்ல, பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர் ரஷ்மி சர்மா என்பவ்ர்தான்.

ஒரு போலீசு அதிகாரியை பொது இடத்தில் செருப்பால் வைத்து அடிப்பது என்பது உத்தரப் பிரதேசத்தில் தற்போது நடைபெற்ற புதிய சம்பவம் அல்ல.

போலீசை செருப்பால் அடிக்கும் பாஜக கவுன்சிலர் ரஷ்மி சர்மா

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீரட் நகரில் ஒரு போலீசு அதிகாரியை லோக்கல் பாஜக தலைவர் ஒருவர் போய் விடாமல் அடித்த வீடியோ காட்சி வைரல் ஆனது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு அரசு ஊழியரை நடுத்தெருவில் வைத்து கிரிக்கெட் மட்டையால் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் இந்தூரில் அடித்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. – கிசான் லால் ராஜ்பூட் என்பவர் போலீசு ஒருவரை செருப்பால் அடித்து, சிறுநீரைக் குடிக்கச் செய்துள்ளார்.

இவையெல்லாம் மீடியா வெளிச்சத்திற்கு வந்த செய்திகள் மட்டும்தான். இன்னும் வராத செய்திகள் எத்தனையோ? பாஜக – சங்க பரிவாரக் கும்பலால் போலீசு அதிகாரிகள் அசிங்கப்படுத்தப்படுவது மற்றும் தாக்கப்படுவது அனைத்தும் சங்க பரிவாரக் கும்பலின் கனவான இந்துராஷ்டிரத்தின் ஒரு முன்னோட்டமே ஆகும்.

போலீசு உள்ளிட்டஅதிகாரவர்க்கத்தை மக்களை ஒடுக்க பயன்படுத்திக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக தலைமையிலான சங்க பரிவாரக் கும்பல், நடைமுறைப்படுத்தப் போகும் சனாதன தர்ம ஆட்சியில், சத்திரிய – வைசிய – சூத்திர – பஞ்சம சமூகத்தைச் சேர்ந்த போலீசாருக்கு கிடைக்கப் போகும் மரியாதையும் சிறப்பும் இப்போதே நம் கண்முன்னே தெரிகின்றன !!


சரண்
செய்தி ஆதாரம் :
The Wire

 

மக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? || தோழர் மருது

க்கள் அதிகாரம் அமைப்பு தேர்தல் புறக்கணிப்பு பற்றி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர், தோழர் மருது.
1) தேர்தல் மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியும், நீங்கள் ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
2) வாக்களிப்பது ஜனநாயக கடமையா?
3) நீங்கள் ஏன் சாத்தியமானவற்றை பேசுவது இல்லை?
4) தி.மு.க தான் பாசிசத்தை எதிர்ப்பதற்கான மாற்றா?
5) மூச்சு விடுவதற்கு நேரம் வேண்டும்; அதற்கு, தேர்தல் தேவை இல்லையா?
6) வாக்குறுதிகளை பார்த்த பிறகும்; தேர்தல் மீது நம்பிக்கை வரவில்லையா?
7) தேர்தல் புறக்கணிப்பு மூலமாக நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
8) தேர்தலை புறக்கணிப்பது பாசிசத்திற்கு ஆதரவாக போய்விடுமா?
9) தேர்தலை புறக்கணித்து விட்டால் வேறு என்ன தான் மாற்று?
தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

சீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்

2

♠ ஹிட்ல‌ர்: முத‌லாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌ன் இராணுவ‌ம் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் பெர்லினில் ஆட்சியில் இருந்த‌ ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க் க‌ட்சி(SPD) ஜெர்ம‌னிய‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான். ஜெர்ம‌னியை ஆள்ப‌வ‌ர்க‌ள் யூத‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ SPD தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் யூத‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் பிரெஞ்சு இராணுவ‌த்தால் ஜெர்ம‌னிய‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கின‌ர். (முத‌லாம்) உல‌க‌ப் போரில் ந‌ட‌ந்த‌ ஜெர்ம‌ன் இன‌ப்ப‌டுகொலையின் சூத்திர‌தாரிக‌ள் SPD, மார்க்சிய‌வாதிக‌ள் ம‌ற்றும் யூத‌ர்க‌ள் தான்.

♣ சீமான்: ஈழ‌ப் போரில் புலிக‌ள் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் டெல்லியில் ஆட்சியில் இருந்த‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌மிழ‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான். த‌மிழ்நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் தெலுங்க‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ திராவிட‌க் க‌ட்சிக‌ளின் தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தெலுங்க‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் சிறில‌ங்கா அர‌ச‌ ப‌டைக‌ளால் த‌மிழ‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கினார்க‌ள். ஈழ‌ப்போரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலைக்கு கார‌ண‌ம் காங்கிர‌ஸ், திராவிட‌வாதிக‌ள், ம‌ற்றும் தெலுங்க‌ர்க‌ள் தான்.

*****

♠ ஹிட்லர் ஜெர்மன் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் ஆஸ்திரிய நாட்டு பிரஜை. அன்றைய ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் பல மொழிகளை பேசும் இனங்கள் இருந்தன. ஹிட்லர் ஒரு ஆஸ்திரிய பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் அன்று பிரஷிய ராஜ்ஜியமாக கருதப்பட்ட ஜெர்மனி பற்றியதாக இருந்தது.

சீமான் தமிழ் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் இந்தியப் பிரஜை. இன்றைய இந்தியாவில் பல மொழிகளைப் பேசும் இனங்கள் இருக்கின்றன. சீமான் ஓர் இந்தியப் பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர் பற்றியதாக இருக்கின்றது.

படிக்க :
♦ சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் !

ஹிட்லர் ஆஸ்திரியாவில் இருந்து ஜெர்மனி சென்று, சக்கரவர்த்தியின் இராணுவத்தில் தானாகப் போய்ச் சேர்ந்தார். அவர் யுத்தகளத்தில் நின்றாலும் எந்தவிதமான சண்டையிலும் ஈடுபடவில்லை. போர் நடந்த இடத்திற்கு வெகுதூரம் தள்ளி பங்கருக்குள் இருந்து விட்டு, பிற்காலத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். அன்று இராணுவ வீரர்களாக இருந்த பலருக்கு ஹிட்லரின் புளுகுகள் எல்லாம் தெரிந்திருந்தன.

சீமான் இந்தியாவில் இருந்து, இலங்கையில் புலிகளின் பிரதேசத்திற்கு சென்று போர்க்களத்தில் நின்று விட்டு வந்தார். ஆனால் வன்னியில் சீமான் நின்ற இடம் போர் நடந்த இடத்தில் இருந்து வெகு தூரம். எந்தச் சண்டையும் நேரில் காணவில்லை. பிற்காலத்தில் சீமானும் ஈழத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். முன்னாள் புலிப் போராளிகள் பலருக்கு சீமானின் புளுகுகள் எல்லாம் தெரியும்.

ஹிட்லர், சீமான் இருவரும் சிறந்த பேச்சாளர்கள். கைகளை உயர்த்தி, நரம்பு புடைக்க, சத்தமிட்டுப் பேசும் குணவியல்பைக் கொண்டவர்கள். இன உணர்வைத் தூண்டும் வகையில் உணர்ச்சிவசமாகப் பேசி மக்களைக் கவரும் வல்லமை பெற்றிருந்தனர்.

அன்றைய காலகட்டத்தில் ஹிட்லரின் பேச்சுக்களை கேட்டவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைத்தார்கள். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரித்தார்கள். அதே மாதிரி, இன்று சீமானின் பேச்சுக்களை கேட்பவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைக்கின்றனர். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரிக்கின்றனர்.

ஜெர்மன் குடியரசில் இரகசியமாக கூட்டம் கூடி வந்த சட்டவிரோத தீவிர ஜெர்மன் தேசியவாத அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப் பட்ட ஆள் தான் ஹிட்லர். மியூனிச் நகரில் கூட்டம் ஒன்றுக்கு காவல்துறைக்காக குறிப்பெடுக்க சென்று கொண்டிருந்த ஹிட்லர், பின்னர் அவர்களின் கொள்கைகளால் கவரப் பட்டு அங்கத்தவராக சேர்ந்து கொண்டார். ஆளுமை மிக்க பேச்சுகள் மூலம் பலரை தன்பக்கம் ஈர்த்தார். பெரும்பாலும் மாணவர்கள், இளைஞர்கள் ஹிட்லரால் கவரப் பட்டனர்.

தடா, பொடா போன்ற அடக்குமுறை சட்டங்களின் விளைவாக, தமிழ்நாட்டில் இரகசியமாக இயங்கிய தீவிர தமிழ்த்தேசிய அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப்பட்டவர் தான் சீமான். 2009 ஆண்டளவில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் கலந்து கொண்டு, தனது ஆளுமை மிக்க பேச்சுக்கள் மூலம் பலரை ஈர்த்தார். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் சீமானால் கவரப் பட்டனர்.

அன்று ஜெர்மனியில் இருந்த தீவிர வலதுசாரிக் கட்சிகள் குறிப்பிட்ட அளவு மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே பெற்றிருந்தனர். அதனால் வளர முடியவில்லை. ஏனெனில் அவர்களது ஆதரவுத்தளமாக இருந்த மத்தியதரவர்க்க, பணக்கார வர்க்கத்தினர் மிகச் சிறுபான்மையினர். ஹிட்லர் ஒரு வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தார். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்து, சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசினார். அது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் ஹிட்லரின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே உலகப்போரில் வென்ற நாடுகள் ஜெர்மனி மீது விதித்த பொருளாதாரத் தடை காரணமாக, அன்று ஏராளமான ஜெர்மன் விவசாயிகள் தற்கொலை செய்திருந்தனர்.

படிக்க :
♦ ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !
♦ ஜெயா என்றால் சீமான், நெடுமாறனுக்கு பயம் பயம் !

இன்று தமிழ்நாட்டில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற தீவிர வலதுசாரிக் கட்சிகள், பிராமணர்கள், உயர்சாதியினர், செல்வந்தர்கள் போன்ற மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளனர். அதனால் வளர முடியவில்லை. சீமான் சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசுகிறார். இது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் சீமானின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே, பொருளாதாரப் பிரச்சினை காரணமாக ஏராளமான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

அன்று ஜெர்மனிக்கு வெளியே பல ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஜெர்மன் இனத்தவர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர். ஆஸ்திரியா தவிர செக்கோஸ்லாவாக்கியா, போலந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா என்று பல நாடுகளில் ஜெர்மனியர்கள் வாழ்ந்தனர். அவர்களில் பலர் ஹிட்லரை தமது இனத்தின் மீட்பராக பார்த்தனர். அதனால் நிறையப் பணம் அனுப்பினார்கள்.

இன்று பல மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் சீமானுக்கு ஆதரவளிக்கின்றனர். இந்தியா, இலங்கைக்கு வெளியே பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளில் வாழும் தமிழர்களில் பலர் சீமானை தமது இனத்தின் மீட்பராக பார்க்கின்றனர். அதனால் நிறையப் பணம் அனுப்புகிறார்கள்.

கலையரசன்

நன்றி : கலையகம்

disclaimer

கம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு !

சிரியாவில் நடைபெறும் துன்பியல் நிகழ்வுகள்

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமான பத்தாவது ஆண்டை நினைவு கூருமுகமாக இவ்வாண்டு மார்ச் நடுப்பகுதியில் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்ட அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள், சிரியாவில் நடைபெற்று வரும் மோதல்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி பஸீர் அல் – ஆஸாத்தும் அவரை பின்னால் இருந்து ஆதரிப்பவர்களும்தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்கள்.

ஆனால், உண்மை வேறு விதமானது. ஆஸாத் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்பே அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., 1947-ம் ஆண்டே சிரியாவில் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. ஆட்சி மாற்றம், சதி முயற்சிகள், கொலை முயற்சிகள், கூலிப்படைத் தாக்குதல்கள் என சி.ஐ.ஏ-வால் சிரியாவில் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகளுக்கு ஒரு தொடர்ச்சியான வரலாறு உண்டு.

படிக்க :
♦ சிரியா : அடுத்த இராக் ?
♦ சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்

1949-ல் அப்போதைய சிரிய ஜனாதிபதி சுக்ரி அல் – ஹ-வாட்லிக்கு எதிராக இரத்தம் சிந்தாத இராணுவச் சதியொன்றை சி.ஐ.ஏ. அரங்கேற்றியது. இதுபற்றி பின்னர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்ட அந்தக் காலகட்டத்தில் சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸில் இருந்த சி.ஐ.ஏ. நிலையத்தின் தலைமையதிகாரியான மைல்ஸ் கோப்லான்ட் (ஜூனியர்), இந்தச் சதியின் நோக்கம் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்தும், மற்றைய தீவிரவாதிகளிடம் இருந்தும் சிரியாவைப் பாதுகாப்பதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவச் சதியின் பின்னர் சி.ஐ.ஏ-வால் பதவியில் அமர்த்தப்பட்ட கேர்ணல் அடிப் ஸேய்ஸாக்லி பதவியில் இருந்த 4 வருட காலத்தில் அமெரிக்க ஆதரவைப் பெறுவதற்காக கொலை, விபச்சாரம், கொள்ளை போன்ற பல வகையான பாவச்செயல்களில் ஈடுபட்டார். பின்னர் அவரை பாத் கட்சியும், இராணுவ அதிகாரிகளும் இணைந்து பதவியில் இருந்து தூக்கியெறிந்தனர்.

1955-ல் சிரியாவில் இன்னொரு இராணுவச் சதிக்கான நிலைமைகள் உருவாகியிருப்பதாக சி.ஐ.ஏ. மதிப்பிட்டது. 1956 ஏப்ரலில் சி.ஐ.ஏ-வும், எஸ்.ஐ.எஸ்-ம் (பிரித்தானிய இரகசிய உளவுச் சேவை) இணைந்து வலதுசாரி சிரிய இராணுவ அதிகாரிகள் மூலம் ஒரு சதியை நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் சுயெஸ் கால்வாய் பிரச்சினை உருவானதால் அந்தத் திட்டம் தடைப்பட்டுவிட்டது.

சிரிய அதிபர் பஷார் அல் அஸாத்

சிரியாவை ‘கம்யூனிஸத்திலிருந்து காப்பாற்றுவது’ என்ற நோக்கத்துடன் இன்னொரு சதியை 1957-ல் சி.ஐ.ஏ. அரங்கேற்றியது. இதற்காக சிரிய இராணுவ அதிகாரிகளுக்கு 3 மில்லியன் டொலர்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டது. இதுபற்றி 2008-ல் ‘பரம்பரைச் சொத்தின் சாம்பல்: சி.ஐ.ஏ-ன் சரித்திரம்’ என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்ட ரிம் வெய்னர் பின்வருமாறு கூறுகிறார்:

கடவுளுக்கு எதிரான கம்யூனிஸத்துக்கு எதிராக இஸ்லாமிய ஜிகாத் கருத்தை நாம் உருவாக்க வேண்டும் என (ஜனாதிபதி) ஐஸனோவர் கூறினார். 1957இல் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ‘புனித யுத்தம்’ என்ற கருத்தை முடியுமான எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்”.

ஆனால் சில “வலதுசாரி – இராணுவ” அதிகாரிகள் இந்தத் திட்டம் பற்றி சிரியாவின் உளவுச் சேவைக்கு தகவல் கொடுத்துவிட்டனர். அதன் காரணமாக சிரியா டமஸ்கஸ்ஸில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த 3 சி.ஐ.ஏ. அதிகாரிகளை வெளியேற்றியதுடன், அங்கிருந்த அமெரிக்கத் தூதுவரையும் திருப்பியழைக்கும்படி அமெரிக்காவை நிர்ப்பந்தித்தது. அதைத் தொடர்ந்து சிரியாவை அமெரிக்கா “சோவியத் துணைக்கோள்” என வர்ணித்ததுடன், மத்தியதரைக் கடலில் தனது கடற்படையையும் நிறுத்தியது.

அத்துடன் சிரியாவின் “அத்துமீறல்களுக்கு எதிராக” என்ற போர்வையில் அமெரிக்கா சிரியா மீது இராணுவத் தாக்குதல் ஒன்றையும் நடத்தியது. இந்தத் தோல்வியடைந்த சதி நடவடிக்கையில் பிரித்தானியாவின் எம்16-ம் பங்குபற்றியது. இந்த விபரம், பின்னர் அந்தக் காலகட்டத்தில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சராகவிருந்த காலம் சென்ற டன்கான் சான்டேஸ் அவர்களின் ஆவணங்கள் சில 2003-ல் தற்செயலாக வெளியானபோது அம்பலத்துக்கு வந்தது.

2006-ல் ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ஒரு தகவலின்படி, லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சிரியர்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பதுடன், சி.ஐ.ஏ. குழு கிளர்ச்சிக் குழுக்களை உருவாக்கி சிரியாவுக்குள் இறக்கியுள்ளதுடன், குறிப்பிட்ட விநியோக வழிகளையும் உருவாக்கியுள்ளது. 2012-ற்குப் பிறகு வருடாந்தம் 1 பில்லியன் செலவிட்டு சிரிய அரசுக்கு எதிராகப் போரிடும் 10,000 கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

நன்கறிந்த அமெரிக்க புலனாய்வு ஊடகவியலாளரும், அரசியல் எழுத்தாளருமான சேமௌர் ஹேர்ஸ் எழுதியதின்படி, அந்த நேரத்தில் லிபியாவின் பெங்காசியிலிருந்து தனது புலனாய்வு அதிகாரிகளை அமெரிக்கா சிரியாவுக்கு நகர்த்தியுள்ளது. உலகத்திலேயே ஆஸாத்தை சிரியாவிலிருந்து அகற்ற வேண்டும் என 2011-ல் பகிரங்கமாக அறிவித்த ஒரே உலகத் தலைவர் பராக் ஒபாமாதான்.

பாரசீக வளைகுடாவிலுள்ள அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபுக் குடியரசு என்பன சிரியாவில் அரச படைகளை எதிர்த்துப் போராடும் ஆயிரக்கணக்கான ஜிகாதிகளுக்கு தமது செலவில் நிதியுதவியும் தளபாட வசதிகளும் அளித்து வருகின்றன. இந்த நிலைமையில் 2015-ல் ரஸ்யா சிரிய அரசாங்கத்துக்குச் சார்பாகக் களமிறங்கியதை அடுத்து, 2017-ல் சவூதி அரேபியா அங்கிருந்து வெளியேறியது.

சிரியாவின் உள்நாட்டுப் போர்தான் எமது காலத்தில் நடைபெறும் மிகவும் அழிவுகரமான யுத்தமாகும். இந்த யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான சிரிய மக்கள் இறந்து போயுள்ளனர், சனத்தொகையில் அரைவாசிப்பேர் இடம் பெயர்ந்துள்ளனர், மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாடுகின்றனர். ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கணிப்பீட்டின்படி, சிரியாவின் சனத்தொகையில் 70 சதவீதமானோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர், 6.7 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர், 13 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் மனிதாபிமான உதவிகளையும் பாதுகாப்பையும் வேண்டி நிற்கின்றனர், சனத்தொகையில் 60 வீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.

மத்திய கிழக்கில் சிரியா உயர்ந்த சமூகக் கட்டமைப்பையும், மத்தியதரமான வாழ்க்கைத் தரத்தையும் கொண்ட ஒரு நாடாக விளங்கியது. அந்த நாட்டை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சேர்ந்து சீர்குலைத்து நிலைகுலைய வைத்துள்ளன. ‘அரபிஸம்’ என்ற கருத்துருவத்தை அமெரிக்கா திட்டமிட்டு அழித்து வருவதையே சிரியாவில் நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கி போரை முடிவுக்குக் கொண்டுவர இரு தடவைகள் முயன்றாராயினும், அமெரிக்க பெண்டகன் இராணுவ அதிகாரிகள் அதற்கு விடவில்லை. புதிய ஜனாதிபதி பைடன் சிரிய விடயத்தில் என்ன செய்யப் போகின்றார் என்பது இன்னமும் தெரிய வரவில்லையாயினும், அங்கிருந்து அமெரிக்கத் துரப்புகளை விலக்கிக் கொள்ளும் நோக்கம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

முகநூலில் : Maniam Shanmugam

disclaimer

கையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் ? || தேர்தல் பாடல் || மக்கள் அதிகாரம்

தேர்தல் நெருங்கிவிட்டது. ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் தேர்தலில் வாக்குக் கேட்டு பவனி வரத் துவங்கிவிட்டன. அழுகை முதல் நடனம் வரை அனைத்து கூத்துக்களையும் அரங்கேற்றி ஓட்டுக் கேட்டு வருகின்றனர் தேர்தல் கட்சிகள்.

ஜனநாயகத்தின் ஆட்சி எனும் பெயரில் மக்களின் வாழ்வில் தாக்கம் செலுத்தும் மின்சாரம், கல்வி, மருத்துவம், தண்ணீர், கடல் என அனைத்தையும் நீதிமன்றங்களையே செல்லாததாக்கும் ஆணையங்களின் கைகளுக்குக் கொடுத்த பின்னர் நடைபெறும் இந்த தேர்தல் என்பது வெறும் கண் துடைப்பு நாடகம் தான் என்பதை இந்தப் பாடலில் விளக்குகின்றனர் தருமபுரி மக்கள் அதிகாரம் கலைக்குழு தோழர்கள் !!

பாருங்கள் !! பகிருங்கள் !!

பாடல் – இசை :
புரட்சிகர கலைக்குழு, தருமபுரி
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
செல்: 97901 38614

சமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள் !

பெயர் : Gopinath P
கணக்கு எண் : 6720415617
வங்கி விவரம் : Indian Bank, Pennagaram Branch
IFSC NO : IDIB000P076

பாடல் வரிகள் :

கையில மையவச்சா
வந்திருமா மாற்றம்
தேர்தல் எப்போதுமே
மக்களைதான் ஏமாத்தும்

இன்னுமா புரியல
தேர்தல் ஒரு சூதாட்டம்
ஒட்டு போட்டு ஒன்னுமில்ல
தொடங்கிடு நீ போராட்டம்

எட்டுவழிசாலைய
இங்கே தடுக்காது தேர்தலு
மீதேன், சாகர்மாலா
நிறுத்தாது தேர்தலு

மின்சார திருத்த சட்டம்
முடக்காது தேர்தலு
வேளாண் திருத்த சட்டம்
துரத்தாது தேர்தலு
விவசாயி கோவணத்த
உருவதான்டா தேர்தலு

விலைவாசி குறைய
இங்கே உதவாது தேர்தலு
சாதிய படுகொலைய
தடுக்கலடா தேர்தலு
பெண்களுக்கு பாதுகாப்பு
கொடுக்கலடா தேர்தலு

லஞ்சம் ஊழல் கொறையலடா
திருடத்தான்டா தேர்தலு
சாதிமத மோதலுக்கு
தூபமிடும் தேர்தலு

பெட்ரோல் விலைய குறைக்காது
கார்ப்பரேட்டு தேர்தலு
பொதுத்துறை கொள்ளையடிக்க
தொறந்துவிட்ட தேர்தலு
கேஸ் விலைய ஏத்திவிட்டு
நடத்துறாங்க தேர்தலு

ஏழை உழைப்பை சுரண்டி சுரண்டி
வளருது இந்த தேர்தலு
இத ஜனநாயக பாதையின்னு
கவுறுவுடுது கமிசனு

கார்ப்பரேட் கொள்ளையடிக்க
நடத்துறாங்க தேர்தலு
மதவெறி தாக்குதல்
காத்து நிக்குது தேர்தலு
கொள்ளையடிக்கும் கூட்டத்துக்கு
பாதுகாப்பு தேர்தலு

நாட்டுபற்று பேசினாலே
ஊபா போடுது தேர்தலு
அமைச்சரோட திருட்டு சொத்த
பாதுகாக்க தேர்தலு

காவி பாசிசத்த
வளக்குது தேர்தலு
கார்ப்பரேட்ட வீழ்த்தாம
தீராது மோதலு

நாட்ட பாதுகாக்க
உதவாத தேர்தலு
பாசிசத்த வீழ்த்திடவே
தொடங்கிடு மோதலு

 

வீடியோ ஆக்கம்
வினவு

 

 

தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தீர்வு தருமா ?

த்தியில் ஆளும் சனாதன பாஜக அரசு, “பள்ளர் பண்ணாடி குடும்பர் கல்லாடி கடையர் தேவேந்திர குலத்தார்-வதிரியார் ” உள்ளிட்ட 7 சாதிகளை இனி தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கான திருத்தத்தை பாராளுமன்றத்தில் சட்டம் ஆக்கியுள்ளனர் (constitution (SC) order (amendment) bill 2021). இனி இந்த சாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவரின் சாதிச் சான்றிதழ்களிலும் தேவேந்திரகுல வேளாளர் என்று குறிப்பிடப்பட்டு அடைப்புக் குறியில் அவர்களது பழைய ஜாதிப் பெயரும் இடம்பெறும்.

மேற்குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இல்லாமல் இந்த சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் சமூகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட 7 சாதிகளைச் சேர்த்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் ஒட்டுமொத்த பட்டியலினத்தவர்களின் மக்கள் தொகையில் 17.07 விழுக்காடு உள்ளதாக 2011-ல் எடுத்த மக்கள் தொகை கணக்கீடு கூறுகிறது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட இச்சமூகத்தின் சில தலைவர்கள் வெறும் பெயர்மாற்றத்தை மட்டும் கோரிக்கையாக முன் வைக்கவில்லை. பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக தங்கள் சமூகத்தை அறிவிக்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாகும். பெயர் மாற்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வர்ணாசிரம கும்பல் பட்டியலின வெளியேற்றத்தைப் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

படிக்க :
♦ தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?
♦ குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி !

பாசிச மோடி கும்பல் கொண்டு வந்துள்ள நீட் தேர்வால் மருத்துவப் படிப்பிற்கு தனிப் பயிற்சி எடுக்க வாய்ப்பற்ற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு கானல்நீராகிப் போயிருக்கிறது. தற்போது அட்டவணைப் பட்டியலில் இருக்கும்போதே தேவேந்திர குல வேளாள சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை, நீட் வந்த பின்னர் மிகவும் பின்னடைந்து உள்ள நிலையில், மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், தேவேந்திரகுல வேளாள சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கனவு வெறும் கனவாகவே முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது என ஆங்கில் இந்து நாளேடு (20-03-2021) குறிப்பிட்டு சுட்டிக் காட்டுகிறது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றவர்கள், இந்த கோரிக்கையையே தேவேந்திர குல வேளாளர் மக்களின் துயரத்தைப் போக்கும் கோரிக்கையாக முன் வைப்பதோடு, இதனை சங்க பரிவாரக் கும்பல் நிறைவேற்றும் என்று கூறி அச்சமூக மக்களை சங்க பரிவாரத்தின் கீழ் அணி சேர்க்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகம் வந்த அமித்ஷாவும் தேவேந்திர குல வேளாள சமூகத்தினரை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றுவதாக உறுதியளித்துவிட்டுச் சென்றது நினைவிருக்கலாம். காலங்காலமாக பள்ளன் என்றும் பறையன் என்றும் தலித் மக்களை இழிவாக நடத்தி சாதிய ஒடுக்குமுறையைச் செய்து வந்த சங்க பரிவார சனாதன கும்பலுக்கு திடீரென தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் மீது ஏன் இவ்வளவு கரிசனம் ?

காவிக் கும்பலின் சமூக பொருளாதார அடித்தளமே, பார்ப்பன பனியா மார்வாரி சமூகத்தை மையப்படுத்தி தான் இருக்கிறது. தங்களது சனாதன இந்துமதவெறி அரசியல் அடித்தளத்தை தமிழகத்தில் உருவாக்கவேண்டிய தொலைநோக்குத் திட்டத்தை அரங்கேற்றுவதில் தீவிரமாக ஆர் எஸ் எஸ் முனைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தான் இட ஒதுக்கீடுகளை படிப்படியாக ஒழிப்பது என்பது. அதற்கு இந்த வகையான சாதியரீதியான முன்னெடுப்புகளும், அணிதிரட்டல்களும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு அவசியம்.

Dr Krishnasamy
சனாதனத்தின் மகா சன்னிதானத்திடம் ஆசிபெறும் ’சின்ன சன்னிதானம்’ கிருஷ்ணசாமி

குறிப்பாக, இந்தியாவில் இருப்பது போன்ற சாதிய படிநிலைதான் இந்த சனாதனக் கும்பல் இன்றுவரையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கியக் காரணம். மேலே இருப்பவன் கீழே இருப்பவனை மிதிப்பான் எனில், கீழே இருப்பவன் மேலே இருப்பவனை எதிர்க்கக் கூடாது என்பதற்காகவே, அவனுக்குக் கீழாக ஒரு சாதியப் படிநிலையை உருவாக்கி, சாதியரீதியிலான தனது மேலாதிக்கத்தைப் பாதுகாத்து வந்திருக்கிறது பார்ப்பனக் கும்பல்.

எங்களை தலித்துகளாக குறிப்பிடாதே, நாங்கள் ஆண்ட பரம்பரை” என்பதுதான்   தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களில் ஓரளவு வசதி வாய்ப்போடு வாழும் நடுத்தர, உயர் நடுத்தர மக்கட் பிரிவினர் மற்றும் கிருஷ்ணசாமி போன்ற காரியவாத தலைவர்களின் முழக்கம். இது ஓரளவு வர்க்கரீதியாக முன்னேறிய பிரிவினரை ஈர்க்கிறது. ஆனால் இன்னும் வர்க்கரீதியில் ஏழ்மையில் உழலும் இலட்சக் கணக்கான மக்களுக்குக் கிடைக்கவிருக்கும் அரைகுறையான இட ஒதுக்கீட்டு நலனைப் பற்றி எதுவும் பேசாமல் கடந்து செல்கிறது இந்த முழக்கம். ஒருவேளை பட்டியலின வெளியேற்றக் கோரிக்கையும் பெயர் மாற்றக் கோரிக்கையும் இச்சமூகத்தைச் சேர்ந்த அனைத்து வர்க்கப் பிரிவு மக்களின் கோரிக்கையாக இருக்கும்பட்சத்தில் அதில் பிரச்சினை ஏதுமில்லை. பிரச்சினையே இங்கு சனாதனத்தை தனது கொள்கையாக வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-வுடனான இச்சமூகத் தலைவர்கள் சிலரின் கூட்டுதான்.

அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு பாகங்களில் மனுநீதி வர்ணாசிரம கொடுங்கோன்மை இன்றளவும் ஆட்சி செய்கிறது. தமிழகத்தில் நீண்ட நெடிய வர்ணாசிரம எதிர்ப்புப் போராட்ட மரபின் காரணமாகவும், கம்யூனிஸ்ட்டுகளின் நீண்ட நெடிய சாதிய, வர்க்கச் சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்கள், தந்தை பெரியார் அவர்களின் மகத்தான கருத்தியல் மற்றும் நடைமுறைப் போராட்டங்களின் விளைவாகவும் சனாதன கும்பல் அவ்வளவு எளிதாக தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. தற்போது கிருஷ்ணசாமி போன்றவர்களின் மூலம் தமிழகத்தில் சனாதன தர்மத்தை நிலைநாட்ட களமிறங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் !!

நிலைமை இப்படி இருக்கையில், “வேளாளர் பெயரை எங்களைத் தவிர யாரும் பயன்படுத்தக்கூடாதுஎன்று பல்வேறு சூத்திர ‘ஆண்ட பரம்பரைகள்’ போர்க்கொடி தூக்கி விட்டன. கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சாதிக் கட்சி /அமைப்புத் தலைவர்களும், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சாதிக் கட்சி /அமைப்புத் தலைவர்களும் தாங்கள் தான் வேளாளப் பட்டத்திற்கு முற்று முழுதான ஜவாப்தாரி என்று களத்தில் இறங்கியிருக்கின்றன.

படிக்க :
♦ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் !
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE

ஏன் எங்கள் சாதியின் பெயரை அவர்களுக்கு வைக்க வேண்டும் பிராமணர்என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கேட்கிறார் வெள்ளாளர் சங்க தலைவர். ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிமடியிலேயே கைவைத்துக் கேட்டிருக்கிறார்தான். ஆனால், சாதிய வன்மத்தில் இருந்துதான் அந்த கேள்வி அவர் மூளையிலிருந்து வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் பலனை கமுக்கமாக ‘சூத்திர’ பட்டத்தில் அனுபவித்துக் கொண்டே, மறுபக்கத்தில் சத்திரிய வம்சம் என்ற ஆண்டபரம்பரை பெருமையைப் பேசுவது என இரட்டை வேடம் போட்டுக் கொண்டு திரிகின்றனர் இத்தகைய ‘ஆண்ட சாதி’ சங்கத் தலைவர்கள்.

இந்துத்துவ சனாதன கோட்பாட்டின்படி பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட சாதி படிநிலையை எவராலும் மாற்ற இயலாது. சனாதனத்தையே தனது கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் தங்களை இவ்வளவு ஆண்டுகாலமாக பீடித்திருந்த தீண்டாமைக் கொடுமையை விட்டு சமூக ரீதியாக வெளியேறுவதை ஏற்றுக் கொள்ளுமா என்ன ? அப்படி தங்களுக்காகவே பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.-உம் செயல்படும் என நினைப்பது அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நினைப்பார்களெனில் அது கசாப்புக்கடை ஆடு கசாப்புக்கடைக்காரனை நம்புவதற்குச் சமம்.

தமிழகத்தில் தங்களது சமூக அடித்தளத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். கும்பல், தேவேந்திர குல உழைக்கும் மக்களை பகடைக்காயாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. தேவேந்திரகுல உழைக்கும் மக்களின் உரிமை வாழ்வுக்கான போராட்டங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் தான் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல். மாறாக தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை ஒடுக்கிய ஆதிக்க சாதியினருக்கு வெண்சாமரம் வீசியவர்களே இந்த சங்பரிவார் கும்பல்.

1957-முதுகுளத்தூர் பயங்கரம், 1979-ஊஞ்சனை படுகொலை, 1981-மீனாட்சிபுரம் கலவரம், 1982-புளியங்குடி வன்முறை, 1995-கொடியன்குளம் வன்கொடுமை, 1997-மாஞ்சோலை தாமிரபரணி படுகொலைகள், பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு என தேவேந்திர குல வேளாள சமூகத்தினர் மீது ஆதிக்க சாதியினர் மற்றும் போலீசின் திட்டமிட்ட வன்முறைகள் நடத்தப்பட்ட போது, எங்கே போனது இந்த சங்பரிவார் கும்பல்? இந்தத் தாக்குதல்களை எல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து நின்றன இந்த சனாதனக் கும்பல்.

தமிழகத்தில், குறிப்பாக தஞ்சை மண்ணில் சாதிய, நிலவுடைமை கொடுங்கோன்மைக்கு இலக்காகி அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த உழைக்கும் மக்களை அணிதிரட்டி போராட்டக் களம் அமைத்தது பொதுவுடமை இயக்கம்தானே ஒழிய சங்க பரிவாரக் கும்பல் அல்ல.

உழைப்புச் சுரண்டல், சாணிப்பால் சவுக்கடி, சுரண்டல் அடக்குமுறை கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் ஆதிக்கசாதி பண்ணையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்களான சீனிவாசராவ், ஜாம்பவான் ஓடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன், களப்பால் குப்பு உள்ளிட்ட எண்ணற்ற மாவீரர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களே. இந்தக் காலங்களில் ஒடுக்கும் மிட்டா மிராசுகளுக்கு ஆதரவாக இருந்ததுதான் சங்க பரிவாரக் கும்பல்.

பசுந்தோல் போர்த்திய புலியாக இன்று தேவேந்திர குல மக்களின் நண்பனாக நாடகமாடும் சனாதன சக்திகளை அந்த மக்கள் புறந்தள்ளி ஒதுக்க வேண்டும்.

மாஞ்சோலை போலீசு வன்முறை வெறியாட்டம்

மோடி அமித்ஷாகுரு மூர்த்தி உள்ளிட்ட கார்ப்பரேட் காவி பாசிச கும்பலின் அரசியல் முகவர்களுக்கு தொண்டூழியம் புரிவதால் கிருஷ்ணசாமி போன்ற ஒரு சிலருக்கு ஆதாயங்கள் கிடைக்கலாம். ஆனால் ஒரு சமூகம் என்ற வகையில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரும் பின்னடைவையே சங்க பரிவாரத்தின் சகவாசம் ஏற்படுத்தும்.

மராட்டிய மன்னன் சிவாஜி சூத்திரன் என்பதால் மன்னனாக மகுடம் சூட்டுவதை தடுத்ததுதான் பார்ப்பன கும்பல். சூத்திரன் நாடாள தகுதியற்றவன் என்பதுதான் பார்ப்பன கோட்பாடு. காமராஜரைக் கொல்ல ஆர்.எஸ்.எஸ். முயற்சித்தது என்பது ஊரறிந்த வரலாறு.

தற்போது பெயர் மாற்றத்தை அங்கீகரித்திருப்பது என்பது தூண்டிலில் மாட்டப்பட்ட புழு. அதை தனக்கான உணவு என மீன் எண்ணினால், அது சங்க பரிவாரத்தின் சதிக்கு பலியாகும் செயலே ஆகும். யாரை அருகில் வைத்திருக்க வேண்டும், யாரை பலியாடாக பயன்படுத்த வேண்டும் என்பதில் சனாதனக் கும்பல் மிகத் தெளிவாக இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை என்பது யாரும் போட்ட பிச்சை அல்ல; அது சாதி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் விளைவாகக் கிடைத்த உரிமையே. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் போன்ற மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி அதன் விளைவாக அரசு வேலை வாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை கானல் நீராக்கி வருகிறது மத்திய அரசு. இக்கொள்கைகளின் விளைவாக பணியிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு என்பது கானல் நீராக்கப்பட்டுவிட்டது.

வெறுமனே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயர் மாற்றமோ, பட்டியலின வெளியேற்றமோ இச்சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் சமூக பொருளியல் வாழ்வில் பெரும் மாற்றம் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை. இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் மற்றும் காவிப் பாசிச சட்டங்களை எதிர்த்துப் போராடினால் மட்டுமே சமூக இழிவுகளில் இருந்து வெளியேற முடியுமே அன்றி, வெறுமனே பட்டியலின வெளியேற்றத்தால் அல்ல என்பதை உணர்ந்து போராட வேண்டிய தருணம் இது !!


இரணியன்

 

 

தேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் !

அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யும் நாட்றாம்பாளையம்அத்திரத்தூர்ஆரோக்கியபுரம் ஊர் பொதுமக்களின் போர்கோலம்

ஞ்செட்டி வட்டம், நாட்றாம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள கிராமம் அத்திரமரத்தூர், ஆரோக்கியபுரம் கிராமங்கள். இங்கு சுமார் 300 குடும்பங்கள் தாழ்த்தபட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் முதியவர்கள் வீட்டிலிருக்க இளைஞர்கள் பெங்களூருக்கு வேலைதேடி சென்று பிழைத்து வருகின்றனர்.

இக்கிராமங்களுக்கு இன்று வரை சுடுகாடு இல்லை. ஓடையிலும் ஏரியிலும்தான் பிணங்களை புதைத்து வருகின்றனர். மேலும் இக்கிராம மக்களுக்கு இன்றுவரை பட்டா வழங்கவில்லை. காலனி வீடு கட்டிக்கொடுக்கவும் இல்லை. மலை கிராமங்கள் என்பதால் உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவ வசதியும் இல்லை.

இது சம்மந்தமாக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பல முறை முறையிட்டும் மனு கொடுத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக, இரண்டாண்டுகளுக்கு முன்னர் மயான வசதி செய்து தரக்கோரி இது போல் போராடியபோது நான் மயான வசதி செய்து தருகிறேன் என்று வட்டாட்சியர் கைப்பட மக்களுக்கு கடிதம் எழுதி வாக்குறுதி அளித்துச்சென்றார்.

படிக்க :
♦ தேர்தல் ஆணையமா அம்மா ஆணையமா ?
♦ தேர்தல் : எத்தனை முறை ஏமாறுவீர்கள் ?

அக்கடிதம் மக்களிடம் உள்ளது. ஆனால், இன்றுவரை இதை நிறைவேற்றவில்லை. இது போன்ற அடிப்படை வசதியில்லாமல் தவித்துவரும் நிலையில் மேலும் அம்மக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையில் நாட்றாம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட அத்திமரத்தூர் ஆரோக்கியபும் ஆகிய இரு கிராமங்களையும் கேரெட்டி பஞ்சாயத்தில் வருவாய் அதிகாரிகள் இணைத்துள்ளனர். இதன் மூலம் ரேஷன் கடைக்கும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் சென்று வர 7 கிலோமீட்டர் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே சாலை வசதி செய்து தரக்கோரியும், குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரியும் போராட்டங்களை செய்துவரும் மக்கள், பஞ்சாயத்தை பிரிக்கும் செய்தி கிடைத்ததும் கடந்த 18-03-2021 அன்று இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்கள் ஊரிலேயே போராட்டத்தை தொடர்ந்தனர். இதை அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் ஊர்கூடி முடிவு செய்து அஞ்செட்டி ஒகேனக்கல் சாலையில் ஊர் நுழைவாயிலில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்தனர். அதில் எந்த ஓட்டுக்கட்சியும் ஊருக்குள் ஓட்டுக்கேட்டு வரக்கூடாது என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

வீடுகளில் ஆங்காங்கே கருப்பு கொடியும் கட்டியிருந்தனர். இது மறுநாள் தினத்தந்தி மற்றும் தெலுங்கு செய்தித் தாளில் செய்தி வெளிவந்ததும், அதிகாரிகள் போலீசுடன் வந்தனர். சாலைக்கு வாருங்கள் என்று மக்களை அதிகாரிகள் அழைத்தனர். ஊருக்கு வாருங்கள் என்று மக்கள் அதிகாரிகளை அழைத்தனர். உங்கள் கோரிக்கையை தேர்தலுக்கு பிறகு நிறைவேற்றுகிறோம். இப்போது பேனரை அகற்றுங்கள் என்று கேட்டனர், அதிகாரிகள்.

ஏன் இதற்கு முன்னர் பல முறை மனு கொடுத்தும், வட்டாட்சியர் கைப்பட எழுதி வாக்குறுதி கொடுத்தும் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று அதிகாரிகளை கேட்ட மக்கள், பேனரை அகற்ற முடியாது என்றனர். இதன்பின்னர் அதிகாரிகளும் போலீசும் பேனரை கிழித்து எடுத்துச்சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பேனரை திரும்ப ஒப்படைக்க கோரியும் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் 24-03-2021 அன்று ஒகேனக்கல் அஞ்செட்டி சாலையை மறித்து போராட்டத்தில் இறங்கினர்.

இப்போராட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் பேனரை ஒப்படைத்துச் சென்றனர். தேர்தலுக்கு பிறகு கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறினர். எனினும் அதிகாரிகள் பொய் வாக்குறுதிளை கண்டு பல முறை ஏமாந்த மக்கள் இம்முறை தொடர்ந்து தேர்தலை புறக்கணிக்க ஊர் கூடி முடிவு செய்து மீண்டும் ஊர் நுழைவாயிலில் பேனர் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் புறக்கணிப்பு போராட்டமும் தொடர்கிறது.

தமிழகம் வெற்றிநடைபோடுகிறது என்று எடப்பாடி விளம்பரம் செய்துவரும் நிலையில் இன்று வரை சுடுகாடு கேட்டு போராடும் நிலையில்தான் தமிழகம் உள்ளது என்பதை முகத்தில் அறையும் விதமாக உணர்த்துகிறது இப்போராட்டம்.

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி
மண்டலம்
.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் !

0

லங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இங்கிலாந்து அரசு கொண்டு வந்த தீர்மானத்தை  நிறைவேற்றுவதற்கான ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்திருக்கிறது மோடி அரசு.

.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. அதே சமயத்தில் சீனா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது. பெரும்பான்மை அடிப்படையில் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து குவித்தது இலங்கை அரசு.

இந்தப் போரை இலங்கையின் மோடியான ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு முன்னின்று நடத்தினாலும், இந்தப் போருக்கு சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஏகாதிபத்தியங்களும் அவற்றின் அடியாட்களான இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் முக்கிய பங்களிப்பு செய்தன.

படிக்க :
♦ இலங்கையை ஊழல் – போதை தேசமாக மாற்றிய ஆட்சியாளர்கள் !
♦ இலங்கை புத்தளம் : சிங்கப்பூரின் குப்பை மேடா ?

இந்தப் போருக்கு இந்திய அரசு உதவி புரிந்ததை முழுக்க முழுக்க சோனியா காந்திக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் உள்ள தனிப்பட்ட பகைமையின் காரணமாக நடந்ததாக சித்தரித்து, அதன் மூலம் தமிழகத்தில் “நாம் தமிழர்” உள்ளிட்ட பாசிச, பிழைப்புவாத தமிழ்தேசிய கட்சிகள் இன்றளவும் பிழைப்பு நடத்தி வருகின்றன.

சோனியா காந்திக்குப் பழிவாங்கும் உணர்வு இருந்ததா இல்லையா என்பதை இங்கு நாம்  விவாதிக்கப் போவதில்லை. ஆனால் அப்பாவி இலங்கைத் தமிழர்களை போர் என்ற பெயரில் இலங்கை அரசு கொன்று குவிக்க, இந்தியா துணை போனதற்கு சோனியாவின் பழிவாங்கும் உணர்வு மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியுமா? அப்படியெனில், சீனாவும் பாகிஸ்தானும் அந்தப் போர்க் குற்றத்தில் இலங்கைக்கு உதவி செய்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு சீமான் உள்ளிட்ட தமிழ் தேசிய சித்தாந்தவாதிகள் வாய் திறப்பதில்லை.

அதிகபட்சமாக, இலங்கை பூலோக ரீதியாக முக்கியமான இடத்தில் இருப்பதாகவும், அதாவது அமெரிக்காவைப் பொருத்தவரையில் சீனாவிற்கு ‘செக்’ வைக்கவும், சீனாவைப் பொருத்தவரையில் தனது நாட்டை அமெரிக்காவின் இராணுவ முற்றுகையில் இருந்து காத்துக் கொள்வதற்கும் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அவசியம் இருப்பதாகவும் அதற்காகவே இந்தப் படுகொலைகளுக்கு இந்த நாடுகள் துணை போயிருப்பதாகவும் கூறுகின்றனர். பெரும் ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா, சீனா போன்றவற்றிற்கு இப்படி ஒரு அவசியம் இருந்தாலும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஏகாதிபத்திய அடியாள் நாடுகளுக்கு இந்தப் போரை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன ?

இந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களாக அமைந்துள்ள ஏகபோக முதலாளிகள், தரகு முதலாளிகள் மற்றும் நிதியாதிக்கக் கும்பலின் நலன்கள் தான் இந்தப் போருக்கு பிற நாடுகள் துணைபோனதன் பிண்ணனியில் அடங்கியுள்ளன. இந்த உண்மை பல்வேறு சமயங்களில் அம்பலப்பட்டிருந்தாலும் ஊடகங்களும், தமிழகத்தைப் பீடித்திருக்கும் தமிழ் தேசியவாதிகளும் அது குறித்து வாய் திறப்பதில்லை.

இன அழிப்புப் போர் குற்றவாளி இலங்கையின் மோடி, ராஜபக்சே

இலங்கை அரசு தமிழ் ஈழ மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலைத் தொடுத்து ஒரு இன அழிப்புப் போரை முடித்த பின்னர், இலங்கையை நோக்கிப் பாய்ந்த இந்திய முதலாளிகளின் மூலதனத்தைப் பார்க்கும் போதுதான் அப்போருக்கு இந்தியா ஏன் ஆதரித்தது என்பது புரியவரும் ! அதே போல சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் எவ்வளவு மூலதனத்தை இலங்கையில் இட்டு அந்த நாட்டு மக்களைச் சுரண்டினர் என்பதிலிருந்துதான் இந்தப் போரின் உண்மையான நோக்கம் தெரியவரும்.

இந்தப் போர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடத்தப்படும் உள்நாட்டுப் போர்கள், அண்டை நாடுகளின் மீதான தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இத்தகைய மூலதனப் போர்தான்.

அந்த அடிப்படையிலேயே தற்போது இந்திய அரசு இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததாகக் கணக்குக் காட்டி விட்டு, மறைமுகமாக இலங்கையை காப்பாற்ற முயற்சித்ததன் பின்னணியைப் பார்க்கலாம்.

இந்த தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே, இதில் இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவாகத் தான் நடக்கும் என்று தான் நம்புவதாக இலங்கை வெளியுறவுத்துறை செயலர் உறுதிபட வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் இலங்கை அதிபர் நேரடியாக இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக கட்சிகள் அனைத்தும் இது குறித்து ஒரே குரலில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய அரசு அந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட வேண்டும் என்றும், எதிராக வாக்களிக்கவோ புறக்கணித்து வெளிநடப்பு செய்யவோ கூடாது என்று குறிப்பாக சுட்டிக் காட்டி கூறினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைவரின் பார்வையும் இந்த தீர்மானத்தின் மீது இருக்கையில், தமிழக பாஜக – அதிமுக கூட்டணிக்கே ஐ.நா.-வின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் இருந்தது.

இலங்கைக்கும் மனம் நோகக் கூடாது, இங்கு ஓட்டுக்கும் எவ்வித சேதாரமும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நைச்சியமாக வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகச் சொல்லி வெளியேறிவிட்டார். ஒருவேளை தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் இருந்திருந்தால் இலங்கை மீதான இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவே தான் பாஜக அரசு வாக்களித்திருக்கும். ஏனெனில் இலங்கைக்கு ஆதரவு தருவதன் பின்னணியில் இந்திய முதலாளிகளின் முதலீட்டு நலன்கள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒன்று பார்க்கலாம். இலங்கையின் துறைமுக மேம்பாட்டு பணிக்கான டெண்டர் இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், டெண்டர் வேண்டுமெனில் இலங்கை அரசுடன் அனுசரித்துப் போக வேண்டியக் கட்டாயம் இந்திய அரசுக்கு முதன்மையாக இருக்கிறது. இந்தக் கார்ப்பரேட் நலனில் இருந்துதான் இலங்கை அரசுடன் முதன்மையாக நெருங்கிச் செல்கிறது மத்திய மோடி அரசு.

தமிழர்கள் மீதான மோடியின் வெறுப்பும், ராஜபக்சே மோடியின் இயற்கையான கூட்டாளி என்பதும் இரண்டாவதாகத் தான் பங்காற்றுகின்றன.

படிக்க :
♦ குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !
♦ ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்

சரி, இந்தத் தீர்மானத்தை மறைமுகமாக எதிர்க்கும் இந்திய அரசுக்கு மட்டும்தான் இத்தகைய நலன் இருக்கிறதா? இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கும் இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் உண்மையிலேயே ஈழத் தமிழ் மக்கள் மீதான கரிசனம் மற்றும் மனித உரிமைகள் மீதான தீராக்காதல் காரணமாகத்தான் தற்போது ஐ.நா. சபை-யில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்களா ?

கண்டிப்பாகக் கிடையாது. அமெரிக்க ஒற்றைத் துருவ ஆதிக்கத்தைத் தகர்த்து மற்றொரு சக்தியாக உருவாகி வரும் சீனா தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளைக் கொண்டு வருவதற்குப் பொருளாதார ரீதியான பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளை தனது அணியில் சேர்த்துக் கொண்டு அந்த நாட்டு வளங்களைச் சுரண்டுகிறது.

இலங்கை அரசும் சீனாவின் பக்கம் சாய்ந்து வருகிறது. பல ஒப்பந்தங்கள் சீன நிறுவனங்களுக்கு வழங்கப் படுகின்றன. இந்நிலையில் சீனாவை நோக்கிய இலங்கையின் சரிவை தடுத்து தங்களது பக்கத்திற்கு மிரட்டிக் கொண்டு வருவதற்காகவே, ஐ.நா. சபை-யில் தற்போது கொண்டுவரப்படும் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றன, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் .

ஏற்கெனவே இலங்கையின் மீது பொது விசாரணை நடத்தப்பட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குப்பையில் வீசப்பட்ட நிலையில், மீண்டும் புதியதாக தீர்மானம் எனத் துவங்கியிருப்பது முழுக்க முழுக்க இலங்கையை மீண்டும் மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிதான்.

இன அழிப்புப் போர்களின் பிணங்கள் முதல் போர்க்கால அகதிகளாய் கடலில் மூழ்கிச் சாவும் பச்சிளங் குழந்தைகளின் பிணங்கள் வரை அவற்றின் மீதுதான் ஏகபோக மூலதனம் நடனமாடிக் கொண்டிருக்கிறது. மூலதனத்தின் வெறியாட்டத்தின் மீது வரவேண்டிய மக்களின் கோபத்தைக் குறுகிய இனவாதமாக மடைமாற்றி, ஏகபோகங்களின் மூலதனத்தை வாழச் செய்யும் வேலையைத்தான் ஊடகங்களும், பாசிச கும்பல்களும் செய்து கொண்டிருக்கின்றன.

அடிக்கொள்ளியைப் பிடுங்கி எரியாமல் தீயை அணைக்க முடியாது. மூலதனத்தின் வெறியாட்டத்தை அடக்கி ஒடுக்காமல் இத்தகைய துயர்களை ஒழிக்க முடியாது !

சரண்

போலீசின் அடியால் உடைக்க முடியாது பகத் சிங்கிடம் பெற்ற உறுதியை ! || குமார், நோதீப் கவுர்

0

அடித்து நொறுக்கப்பட்டாலும் உடைந்துவிடவில்லை: பகத் சிங்கால் ஈர்க்கப்பட்ட இளம் தொழிலாளர் நலச் செயல்பாட்டாளர்களான சிவ குமார், நோதீப் கவுரை சந்தியுங்கள்!

டந்த 2016-ம் ஆண்டில், அரியானாவில் நுண்ணிய உபகரணங்கள் உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துதல் குறித்துத் தான் கற்றுக் கொண்ட தொழில் பயிற்சி நிறுவனத்தில் (ஐ.டி.ஐ) நடத்தப்பட்ட பணிக்கான கலந்தாய்வில் பங்கேற்றபோது, சிவகுமாரிடம், “நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.

“நான் அவர்களிடம் ஒரு புரட்சியாளனாக மாற விரும்புவதாகக் கூறினேன்” என்கிறார் சிவகுமார் என்ற கலகக்காரர்.

இப்படி அவர் சொன்ன பதிலைக் கேட்டு நேர்காணலுக்காக சூழ்ந்திருந்த பல்கலைக்கழக மாணவர்களிடையே நகைப்பை உண்டாக்கியது. ஆனால், குமார் உறுதியாக இருந்தார்.

படிக்க :
♦ டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஷாகின் பாக் – மூதாட்டி பில்கிஸ் தடுத்து நிறுத்தம் !
♦ இந்திய உழவர் போராட்டம் குறித்து ஒரு டச்சு ஊடகம் || கலையரசன்

“தொடக்கம் முதலே என்னுடைய வாழ்வு போராட்டமாகவே இருந்தது” என்கிறார் இந்த 25 வயதான தொழிலாளர் செயல்பாட்டாளர்.

“நாங்கள் தலித் என்பதால் அனைத்துத் துறைகளிலும் நிறுவனங்களிலும் கிராமங்களிலும் சுரண்டப்படுகிறோம்.  அனைத்து இடங்களிலும் சுரண்டல் உள்ளது. எனவே போராட வேண்டிய எதிர்பார்ப்பு உள்ளது”

சோனிபட்டின் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து கந்திலியின் தொழில் நகரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு பணியாற்றச் சென்றார் குமார். அங்குதான் மஸ்தூர் அதிகார் சங்கதன் அல்லது தொழிலாளர் உரிமைகள் சங்கத்தை 2018-ல் தொடங்கினார்.

இந்த சங்கம் இப்பகுதியைச் சேர்ந்த தொழிற்சாலைப் பணியாளர்களை  நியாயமான ஊதியத்தையும், முறையான வேலை நேரத்தையும், நல்லதொரு பணியாற்றும் சூழ்நிலையையும் உத்தரவாதப் படித்தும்படி கோரி திரட்டினார்.  இந்தியாவில் மூன்று பத்தாண்டுகளுக்கு இல்லாத மிகப்பெரிய அளவிலான விவசாயிகளின் போராட்டம் குறுக்கிடும்வரை குமாரின் செயல்பாடுகள் கவனிக்கப்படாமல்தான் இருந்தன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் அரசு மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டத்தை எதிர்த்து, கடந்த நவம்பர் முதல் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் நாட்டின் தலைநகரின் எல்லையில் திரண்டார்கள்.  இந்த மூன்று வேளாண் சட்டங்களும் தங்களை தனியார் நிறுவனங்களிடம் கையேந்த வைக்கும் எனவும், தங்களுடைய வாழ்வாதாரத்தை மேலும் கீழ்நிலைக்கு இட்டுச் செல்லும் எனவும் விவசாயிகள் பயம் கொள்கின்றனர்.

ஜனவரி மாதம், டெல்லியின் சிங்கூ எல்லையில் விவசாயிகள் போராட்ட முகாம் அமைத்துள்ள இடத்திலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில், குமாரும் அவருடைய சக பணியாளருமான நோதீப் கவுர் ஊதியம் வழங்காத தொழிற்சாலைக்கு வெளியே போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.  மிரட்டி பணம் பறித்தல், திருட்டு, கொலை முயற்சி ஆகிய மூன்று வழக்குகளில் போலீசார் அவர்கள் மீது வழக்கு தொடுத்தது.

போலீசின் கொட்டடியில் கடுமையாக உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளானதாகவும் சாதி ரீதியானத் தூற்றுதலுக்கு உள்ளானதாகவும் இளம் செயல்பாட்டாளர்களின் குடும்பங்கள் குற்றம்சாட்டின. வலது கண் பார்வை குறைபாடு உள்ளவரான குமார், பிப்ரவரி 23-ம் தேதி அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளில், (போலீசாரின் கொட்டடியில் தாக்கப்பட்டதில்) பல எலும்பு முறிவுகள், கால் நகங்கள் உடைந்தது, அவரது கைகளிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26-ம் தேதி நோதீப் கவுருக்கு பிணை வழங்கப்பட்டது. அன்று இரவு சிறையிலிருந்து வெளியான நோதீப், அடுத்த நாள் சிங்கூ எல்லையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, குமாரை விடுவிக்கும்படிக் கேட்டார்.

சிவ குமார், நோதீப் கவுர்

மார்ச் 4-ம் தேதி நீதிபதி குமாருக்கு பிணை வழங்கினார். சோனிபட் மாவட்ட சிறையிலிருந்து விடுதலையாகக் காத்திருந்த அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், அவருடைய காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை அழைத்துச் செல்ல நினைத்தனர். ஆனால், தாக்குதலுக்கு உள்ளான கால்களுடன் நொண்டியபடி வெளியே வந்த குமார், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, கிசான் மஸ்தூர் ஏக்தா ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டபடி வெளியே வந்தார் என நினைவு கூர்கிறார் சத்ரா ஏக்தா மஞ்ச்-அமைப்பின் அங்கித் குமார்.

“அவருக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் கிடைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை” என வியக்கிறார் அங்கித் குமார்.

வதையிலிருந்து உயிர்த்திருத்தல்

25 வயதான சிவகுமாரும் நோதீப் கவுரும், நிலமில்லா தலித் விவசாய தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள். தொழிற்சாலை தொழிலாளர்களாக வளர்ந்தவர்கள்.  தற்போது இயக்கத்தில் உள்ள விவசாயிகள் – தொழிலாளர் ஒற்றுமையின் அடையாளங்களாக இந்த இளம் செயல்பாட்டாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள். குறிப்பாக, பெரு விவசாயிகள் மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களைக் கொண்ட பஞ்சாப், எதிர்ப்பு வரலாற்றைக் கொண்டிருந்தாலும் மூன்று கருப்பு சட்டங்களை அரசாங்கம் நீக்க வேண்டும் என ஒன்றிணைந்துக் கேட்கின்றனர்.

தாங்கள் எதிர்கொண்ட உடல் மற்றும் மன அளவிலான இன்னல்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகையோடு சிங்கூ எல்லையில் டெண்டில் அமர்ந்திருந்தனர். போலீசு கொட்டடியில் உடைக்கப்பட்ட தனது வலது காலை, அவ்வப்போது சரிபடுத்திக்கொண்டு அமர்கிறார் குமார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு அவர்கள் தன்னிச்சையாக ஈர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினர். ஏனென்றால் வேளாண் சட்டங்கள் முழுத் தொழிலாளர் வர்க்கத்தையும் பாதிக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றனர்.

ஜனவரி 12-ம் தேதி, மஸ்தூர் அதிகார் சங்கதன் தனது தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத ஒரு தொழிற்சாலைக்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தியது. போராட்டத்தில் ஒரு சச்சரவு ஏற்பட்டது. அதன் பின்னர் அதே நாளில் நோதீப் கைது செய்யப்பட்டு கர்னல் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறுகிறார். கைது செய்யப்பட்ட பின்னர், போலீசார் அவரை சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

“யாரோ ஒருவர் என்னை உதைத்தார், இன்னொருவர் என் முடியை பிடித்து இழுத்தார்” என்கிறார். “யாரும் இல்லாத இடத்தில் வைத்து என்னை அடித்தார்கள். அதன்பின் சோனிபட் சிறையில் என்னை தூக்கிப் போட்டனர். என்னால் நடக்க முடியவில்லை, குளிர்காலத்தில் மெல்லிய போர்வையை தந்தார்கள்”.

அரியானா போலீசு இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கூறவில்லை. நோதீப் கைது செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு தன்னை போலீசு அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக குமார் கூறினார். ஆனால் ஜனவரி 23-ம் தேதி அன்றுதான் அவரை கைது செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

ஜனவரி 16-ஆம் தேதி சிங்கூ எல்லைப் போராட்டக் களத்தில் கழிப்பறையில் இருந்தபோது, சிலர் தன் முகத்தில் துணியை மூடியதாகக் கூறுகிறார். அவர் கூச்சலிட முயன்றபோது, ஒரு நபர் அவரது இடுப்பில் துப்பாக்கியை வைத்து, அமைதியாக இருக்கும்படி மிரட்டியுள்ளார். அதன்பின், போராட்டக் களத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் தொழிற்சாலைப் பகுதிக்கு அவரை நடந்தே அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவரை ஒரு காரில் அமரச் சொல்லியுள்ளனர். சோனிபட் போலீசு நிலையம் அழைத்துச் செல்லும் வரை அவர்கள் யார் என தனக்குத் தெரியவில்லை என்கிறார் குமார். போலீசு நிலையத்தில் வைத்து அவரை நிர்வாணமாக்கி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

“என்னை ஒரு விலங்கு என நினைத்து அடித்தார்கள்” என்கிற குமார், அரியானா போலீசு ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது மிகக் கொடூரமான சித்திரவதை செய்ததாகக் கூறுகிறார்.

“என்னுடைய கால்களை விரித்து வைத்துவிட்டு, நடுப்பகுதியில் உதைத்துக் கொண்டே இருப்பார்கள். தொடை எலும்புப் பகுதியில் தங்களுடைய எடை முழுவதையும் செலுத்துவதைப் பார்த்து ஏன் இப்படிச் செய்கிறார்கள் என சிரித்தேன். ஆனால், ஒரு பெரிய உலோக உருளையை எடுத்து என்னை அழுத்திய போது எனக்கு கோபம் வந்தது. அது சுமார் 10 கிலோ எடை இருக்கும். அதைக் கொண்டு 100 கிலோ எடை கொண்ட இரு நபர்கள் என்னை அழுத்தினார்கள்.

போலீசு அதிகாரிகள் தங்களுடைய ஷூக்களைக் கொண்டு தலையில் தாக்கியதாகவும், அவருடைய நகங்களை தடிகளால் தாக்கியதாகவும் கால்களில் வெந்நீர் ஊற்றியதாகவும் கூறுகிறார் குமார்.

(போலீசு கொட்டடியில் சித்திரவதைக்குள்ளான சிவகுமாரின் ரத்தம் உறைந்த மற்றும் உடைந்த கால் நகங்களைப் படத்தில் காணலாம்)

சோனிபட் மாவட்ட சிறையில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை குமாரின் காயங்களை உறுதிப்படுத்தியுள்ளது. போலீசின் சித்திரவதைகளால் குமாரிடம் மன உளைச்சல் கோளாறு அறிகுறிகளை காண முடிந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“அவர்கள் என்னை மூன்று நாட்களாகத் தூங்க விடவில்லை; மனதளவில் சித்திரவதை செய்தார்கள்”. பல வாரங்களுக்கு குமாரின் வழக்கறிஞரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ சந்திக்க விடவில்லை போலீசு.

போலீசார் முன்பின் தெரியாத மூன்று பேரின் படங்களைக் காட்டி, அவர்களை அடையாளம் காணும்படி சொன்னதாக கூறுகிறார். ஆனால் அவர்களை தனக்குத் தெரியாது என்கிறார் குமார். அவருடைய அமைப்புக்கு யார் பணம் தருகிறார்கள் எனவும் போலீசு கேட்டுள்ளது. “துண்டுப் பிரசுரங்களை அச்சிடத் தொழிலாளர்களிடம் ரூ.10 வாங்குவோம். எங்களுக்கு இரண்டு அறைகள் உள்ளன. அங்குதான் தொழிலாளர்களை சந்திப்போம். அதன் வாடகை ரூ.5,500” என்கிறார் குமார்.

விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடமும் ஒற்றுமை உணர்வு ஏற்படுவதை போலீசுக்கு அச்சுறுத்தலாகத் தெரிந்துள்ளது என்கிறார் குமார். தனக்கு எதிரான வன்முறைகளில் சாதிய தொனி அதிகமாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“நீ ஒரு சாமர் தானே. நீ தலைவனாக நினைக்காதே. நீ எதற்காக இருக்கிறாயோ அதைச் செய்” என ஒரு போலீசு அதிகாரிக் கூறியதை நினைவு கூர்ந்தார்.

“அவர்கள் என் முகத்தில் துப்புவார்கள்”. “அனைவரும் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் சிறையில் அது இல்லவே இல்லை”.

தனக்கும் நோதீப்புக்கும் நிகழ்த்தப்பட்டவை குறித்து குமார் சினம் கொள்கிறார். ஆனால், அவருடைய சினம் போலீசு மீது அல்ல. “என்னுடைய சினம் இந்த சீரழிந்த அமைப்பின் மீதும் ஏழைக்கும் பணக்காரனுக்குமான இடைவெளியின் மீதும். போலீசு என்பது இந்த அமைப்பின் ஓர் அங்கம்தான்” என்கிறார் குமார்.

நோதீப், குமார் ஆகிய இருவரும் போராட்டம் மிக்க குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்திருக்கின்றனர். நோதீப், பஞ்சாபின் முக்த்சர் சாஹிப் எனும் மாவட்டத்தில் வளர்ந்தவர். அவருடைய பெற்றோர் “பஞ்சாப் கேத் மஸ்தூர் யூனியன்” என்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அமைப்பில் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் தலித் பெண்களுக்கு எதிராக நடைபெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் தன் தாயுடன் இவரும் பங்கேற்பார்.

2019-ம் ஆண்டு, வடக்கு டெல்லியில் உள்ள அசாத்பூரில் கால் சென்டர் பணியை விட்டுவிட்டு டெல்லிக்கு வந்து, கடந்த அக்டோபரில் குமாரை தொடர்பு கொண்டார் நோதிப்.

அதன்பின் மஸ்தூர் அதிகார் சங்கதனில் இணைந்து ஒரு கண்ணாடி தொழிற்சாலையில் பணிக்குச் சேர்ந்தார். அதன்பின் விவசாயிகள் போராட்டத்துக்காக சிங்கூ எல்லைக்கு வரும் தொழிலாளர்களை திரட்டுவதற்காக அந்த பணியை விட்டுவிட்டார் நோதிப்.

“தொழிலாளர் உரிமைக்காகப் பணிபுரிவது கத்தியின் மீது நடப்பது போல என நாங்கள் எச்சரிக்கப் பட்டோம்” என்கிறார் நோதீப். “நாங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். எங்களுடைய வாழ்க்கை மிக நீண்டது அல்ல” என்கிறார்.

இந்த அமைப்பு, விவசாயிகள் போராட்டத்தில், மோடி அரசாங்கம் குறித்து (தொழிலாளர் சட்டம் 2020-ல் கொண்டுவந்த மாற்றங்கள் குறித்து) விழிப்புணர்வை ஏற்படுத்த நல்வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டது. மத்திய அரசு 44 தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக வெறும் நான்கு சட்டங்களைக் கொண்டு வந்தது. இது தொழிலாளர்களின் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் துறைசாராத் துறையினரின் பிறப் பாதுகாப்புகளுக்கு அச்சுறுத்தல் தரக்கூடியது.

ஜனவரியில் கர்னால் மாவட்ட சிறையில் இருந்தபோது, சிறைக் கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர் தொலைபேசியில் தொடர்புக் கொள்வதைச் சிறை அதிகாரிகள் நிறுத்தியதால், உண்ணாநிலைப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறார் நோதீப்.

“நாம் போராடவில்லை என்றால் மரணித்து விடுவோம்” என்கிறார் நோதீப். “நாங்கள் குழந்தை பருவத்திலிருந்தே போராடினால்தான் எதுவும் கிடைக்கும் என்பதைப் பார்த்தவர்கள். நான் இதை என்னுடைய தாயிடமிருந்தும் எனது சகோதரி ராஜ்வீர் கவுரிடமிருந்தும் கற்றுக் கொண்டேன்”

சிவகுமார், அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் தேவ்ரூ கிராமத்தில் வளர்ந்தவர். அவருடைய தந்தை விவசாயத் தொழிலாளராகப் பணியாற்றியவர். அவருடைய அம்மாவிற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு மனநலக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. குமாருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் இரண்டு இளையவர்களும் உள்ளனர். நடுவில் பிறந்தவராக, பள்ளி காலத்திலேயே குடும்பத்துக்கு உதவ பணிபுரியத் தொடங்கினார்.

2014-ம் ஆண்டு, இளம் புரட்சியாளரான பகத்சிங் 1931-ம் ஆண்டு எழுதிய ‘நான் ஏன் நாத்திகன்’ என சிறு பிரசுரத்தைப் படித்தார். அது குமாரிடம் எதிரொலித்தது.

“அந்த நேரத்தில் கடவுள் மீது பெரிய நம்பிக்கை இல்லை. அங்கே நம்பிக்கை கொள்ளப் பெரிதாக ஒன்றும் இல்லை” என்கிறார் குமார். “என்னுடைய அம்மா 23 ஆண்டுகளாக உடல் நலம் குன்றியுள்ளார். கடவுள் என்பவர் இருந்தால், அவரை ஏன் குணமாக்கவில்லை? கடவுள் என்பவர் இருந்தால் இங்கே ஏன் இவ்வளவு பாகுபாடு உள்ளது? ஏன் இங்கே ஒருவர் பணக்காரராகவும் மற்றொருவர் ஏழையாகவும் உள்ளனர்? ஏன் சிலர் வயிறு முட்ட உண்கின்றனர், சிலர் பட்டினியில் வாடுக்கின்றனர்?”

கல்வி கற்கும் உரிமையின் அடிப்படையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையை சேர்க்க மறுத்த தனியார் பள்ளிக்கு எதிராக 2015-ம் ஆண்டு போராடிய போது சோனிபட் போலீசு, குமாரை மற்றவர்களுடன் சேர்த்து கைது செய்தது. இதுவே oரு செயல்பாட்டாளராக குமாரின் முதல் போராட்டக் களம். அப்போது குமார் பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தார். அவருடைய குடும்பம் அவருடைய சமூக செயல்பாட்டை விரும்பவில்லை.

“என்னுடைய குடும்பம் என்னைப் படிக்கச் சொல்லி, நான் ஒரு நல்ல பணிக்குச் செல்ல வேண்டும் என நினைத்தது. ஆனால், அவர்களுடைய நினைப்புக்கு மாறாக நான் நடந்து கொண்டேன்”. இப்போது தன்னுடைய குடும்பம் தனக்கு முழு ஆதரவாக உள்ளதாகவும் கூறுகிறார்.

2016-2017-ம் ஆண்டுகளில் தொழிற் பயிற்சி நிலையத்தில் சாயம் ஏற்றுதல் மற்றும் அச்சுகளின் பயன்பாடு குறித்துப் படித்த பின், குந்திலிக்கு பணி தேடி வந்ததாகக் கூறுகிறார். அவருடைய முதல் பணியில் மாதம் ரூ.8000 ஊதியம் பெற்றார். பிற தொழிற்சாலை பணிகளுக்குத் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருந்த போது, ஒரு தொழிலாளராக தான் சுரண்டப்பட்டதாகக் கூறுகிறார்.

தன்னைப் போன்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைவிடக் குறைவாக தரப்பட்டது. பணியிடத்தில் நிகழும் விபத்துகளுக்குத் தொழிற்சாலை உரிமையாளர்கள் நியாயமான இழப்பீட்டை தரவில்லை. பணிக்கு தாமதமாக வந்தால் அரை ஊதியம் மட்டுமே கிடைக்கும். “நான் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்கு ஒரு சங்கம் தேவை என்பதை உணர்ந்தேன்” என்கிறார். மூன்று ஆண்டுகளில் மஸ்தூர் அதிகார் சங்கதன் 300 தொழிலாளர்களைக் கொண்ட பலமான அமைப்பாக மாறியது.

எதிர்ப்புணர்வின் வாழ்க்கை

இளம் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் தீஷா ரவி

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக மற்றொரு 22 வயதான, பெங்களூருவைச் சேர்ந்த தீஷா ரவி என்ற இளம் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். செயல்பாட்டாளர் கிரேட்டா தென்பர்க் ட்விட்டரில் வெளியிட்ட போராட்டம் குறித்த ஆவணம் ஒன்றை திருத்தியதற்காக டெல்லி போலீசு, தீஷாவின் பெங்களூரு இல்லத்தில் அவரைக் கைது செய்தது. இந்த டூல் கிட், சீக்கியப் பிரிவினைவாதக் குழுக்களுடன் சேர்ந்து தயாரிக்கப்பட்டதாக போலீசு குற்றம் சாட்டியது.

தீஷா ரவி-யின் வழக்கு பரவலான கவனம் பெற்றது. அவருடைய கைது தலைப்பு செய்தியானது. பிப்ரவரி 23-ம் தேதி பிணையில் வந்தவர். ஒரு அறிக்கை வெளியிடும்வரை வெளிச்சத்தில் இருந்தார்.

“வர்க்கத்தில் வேறுபாடு உள்ளது” என்கிறார் நோதீப். “மேல்தட்டு வர்க்கம் மீண்டும் பேசினால் தங்களைக் குறிவைப்பார்கள் என நினைக்கிறது. ஆனால், அமைதியாக இருந்தாலும் நாம் தாக்கப்படுவோம்”

நோதீப்பும் குமாரும் பிப்ரவரியில் தங்களுடைய பிறந்தநாளை சிறையில் கொண்டாடினார்கள். அவர்கள் விடுதலையான பிறகு, நேர்காணலுக்காக அணுகப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் உறவினர் மீனா ஹாரீஸ் தன்னைப் பற்றிய ட்விட் செய்தவுடன் ஊடக வெளிச்சம் கிடைத்ததை நோதீப் அறிவார். விவசாயிகளின் போராட்டத்துடன் தொடர்புடையதாலேயே தங்களுடைய கைதுகள் செய்தியாயின என்கிறார் குமார்.

“ஊரடங்கின் போது, தொழிலாளர்கள் தங்களுக்காக உணவைப் பெறவில்லை; அவர்கள் பட்டினியாக இருந்தார்கள். ஊடகம் அதைக் கூறவில்லை” என்கிறார் குமார். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கக் கோரி சாலை மறியல் செய்ததாகக் கூறுகிறார். “அவர்கள் தங்கள் அறையிலிருந்து தூக்கியெறியப்பட்டபோதோ, ஒருவரின் விரல் அல்லது கை துண்டிக்கப்பட்டபோதோ இந்த ஊடகம் செய்தி வெளியிடுவதில்லை”

“போலீசின் வதைக்கு ஆளான பின், சரியாக உறங்க முடியவில்லை” என்கிறார் குமார். நோதீப் தனக்கு சிறிதளவு ஓய்வு தேவை என்கிறார். ஆனால், அவர்களால் அது முடியாது. தற்போது அவர்கள் பணி இல்லாமல் இருக்கிறார்கள். தங்களுடைய செயல்பாடுகளுக்காகவும் தினசரி தேவைகளுக்காகவும் அவர்கள் பணம் ஈட்ட வேண்டும். “ஒரு விழுக்காடு பணி கூட முடிக்கப்படவில்லை” என்கிறார் நோதீப்

எதிர்காலத்தில் எந்தெந்தப் பிரச்சினைகளையெல்லாம் எடுத்துக் கொள்ளப் போகிறார் எனக் கூறும் அவர், “குழந்தைகள் பணிபுரிய தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் ஆண்களைப் போல பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதையும் பார்க்கிறேன்”

படிக்க :
♦ மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்
பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?

நோதீப் மற்றும் குமார் இருவரும் தங்களுடைய செயல்பாடுகளால் தங்கள் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய பின்விளைவுகளுக்கு தயாராகவே உள்ளனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களுடைய ஆதரவை, புதிய வேளாண் விரோத சட்டங்கள் நீக்கப்படும் வரைத் தொடருவோம் எனவும் தெரிவிக்கின்றனர்.

“இந்தப் போராட்டத்தில் நான் போராடியே ஆக வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் சமரசத்துக்கு இடமில்லை. நான் பின்வாங்கமாட்டேன். நான் முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்கிறார் குமார்.


கட்டுரையாளர் : விஜய்தா லால்வானி
தமிழாக்கம் : அனிதா
நன்றி : ஸ்க்ரால்

தேர்தல் ஜனநாயகத்தில் பாதுகாப்பாக தரையிறங்க இடம் ஏதுமில்லை || கருத்துப்படம்

தேர்தல் ஜனநாயகம் : மாயப் பெட்டியும் – மந்திர மையும்

கும்பல் கொலைகளும், தொழிலாளர் சட்டத் திருத்தம், வேளாண் சட்டத் திருந்தங்களும் குத்தீட்டிகளாய் நிற்கும் தேசத்தில் தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டு பாதுகாப்பாக தரையிறங்க முடியுமா ?

கருத்துப்படம் : மு. துரை

பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா

ம்மில் பலர் எங்கேனும் ஓரிடத்திலாவது இந்த வாக்கியங்களையெல்லாம் ஆண்களை நோக்கிப் பயன்படுத்தப்பட்டிருப்பதை கேட்டியிருப்போம். “பொம்பளப்பிள்ள மாதிரி அழக்கூடாது”, “உனக்கு எதுக்கு பேண்ட் சட்ட.. நீயெல்லாம் பாவாடை கட்டிட்டுப் போ”.  ஆண்களின் ‘வீரத்தை’ சீண்டிப் பார்க்கும் வசனங்களாகவே இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அழுதல், பாவாடை அணிதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கானவை என்று எழுதப்படாத விதியாக ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனை நம் தலைகளில் ஊறிப் போயிருப்பதன் வெளிப்பாடுதான் இந்த வசனங்கள் எல்லாம். இவற்றை பெண்களுக்கானது என்று வரையறைத்த சமூகம் ஏன் அவற்றின் வரலாற்றை பேச மறுக்கிறது? ஏன் ஆண்கள் அழக்கூடாதா என்ன?  அது போன்று தான் ஆண்கள் ஏன் பாவாடை அணியக் கூடாதா? அது ஏன் கேலிக்குரியதாகப் பார்க்கப் படுகிறது.  இந்தப் பாவாடை எனும் உடை பெண்களுக்கான உடுப்பாக மட்டுமே இருந்து வந்ததா? வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போம் வாருங்கள் !

படிக்க :
♦ எது ஆபாசம் ? மோடியின் கோட்டா – பிரியங்காவின் குட்டைப் பாவாடையா ?
♦ ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

நாம் தெருவில் நடக்கையில் யாரேனும் ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து சென்றால் அதை பார்த்துவிட்டு கடந்து விடுவது போல,  ஓரு ஆண் பாவாடை அணிந்து சென்றால் அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிடுவதில்லை. அதை ஆண்கள் அணிவதைக் கண்டு கடந்து செல்வதில் ஏன் அவ்வளவு தயக்கம்?

வரலாற்று ரீதியாகப் பாவாடை பெண்களுக்கான அடையாளமாகவே நீடித்ததா எனில் அதற்கான பதில் ‘இல்லை’ என்பதுதான்.  உண்மை என்வெனில், பண்டைய நாட்களில் இந்த பாவாடையானது ஆண் பெண் இருபாலரும் உடுத்தும் உடையாக இருந்து வந்துள்ளது. பண்டைய கால எகிப்து மற்றும் ஆசியா-வில் பாவாடை அவர்களின் தினசரி ஆடையாக இருந்து வந்துள்ளது.

பண்டைய எகிப்து-ல் முதன் முதலில் பாவாடை உடுத்தியதும் ஆண்களே. இடுப்பிற்கு கீழ் துணிகளை சுற்றி உடம்பை மறைக்கும் ஓரு அங்கி. அதன் பெயர் ஷெண்டிட்(Shendyt). இது மிகவும் மெல்லியதாக இருந்ததோடு உடம்பிலிருந்து வெப்பத்தை வெளியேற்றும் என்று கருதி அவர்களின் சூழல்களுக்கு ஏற்றவாறு ஆடையை வடிவமைத்திருந்தனர். அப்போது அங்கு ஆட்சி செய்த அரசர் முதல் விவசாயி வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை இதைத்தான் உடுத்தி வந்தனர். விலைக்கேற்ப ஆடையின் தரம் கூடுதமே தவிர ஆடையில் எந்த மாற்றமும் இல்லை. ஆண்களைவிட தரம் மற்றும் விலையில் குறைவான ஆடைகளை பெண்கள் அணிந்திருந்தனர். ஏனெனில் அப்போது அங்கு வேலைப் பிரிவினைகளும் அதன் காரணமாக பாலினப் பாகுபாடுகளும் வளர்ந்திருந்தன.

இதைப் போன்றே சீனாவிலும் பேரரசர்கள் ஜரிகையால் நெய்யப்பட்ட நீண்ட மஞ்சள் நிறப் பாவாடைகளையே ஆடைகளாக அணிந்திருந்தனர்.  அதைப் போன்றே தென் அமெரிக்காவிலுள்ள இன்கா நாகரிக மக்கள் (ஆண், பெண் என இரு பாலரும்) பாவாடையையே உடுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து பண்டைய ரோமாபுரி மற்றும் கிரீஸ்-யில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் டுனிக்ஸ் (Tunics) என்ற ஆடையை பயன்படுத்தினார். அது உடல் முழுவதும் துணிகளை சுற்றி தோள்பட்டையில் கிடத்தி கையில் ஏந்தியவாறு நடப்பது வழக்கம்.

பண்டைய ரோமானிய, கிரீஸ் அரசுகளைப் பற்றிய இன்றைய சினிமாக்களில் அதனைக் கண்டிருப்பீர்கள். அவற்றை இன்றைய அருங்காட்சியங்களிலும் பார்க்க முடியும். பெண்களுக்கும் அதே ஆடையே ஆனால் நீளமான நிலத்தை தவழும் வடிவமைப்பு கொண்ட உடையை அணிந்தனர்.  இதேப் போன்று ஐரோப்பியர்களும் ஆண், பெண் இருபாலரும் பாவாடையை உடையாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இப்படி வரலாறு முழுவதும் பாவாடை எனும் இந்த உடை ஆண்களுடன் பயணித்து வந்திருக்கிறது.

பின் எங்கிருந்து இந்தப் பாகுபாடு தொடங்கியது?  வர்க்க சமூகத்தில் சொத்துடைமை தீவிரமடையத் தீவிரமடைய ஆண் பெண் பாகுபாடும், பெண்கள் மீதானக் கட்டுப்பாடுகளும் அதிகரித்தன. குறிப்பாக நாகரிகச் சமூகமாக மனித இனம் வளர்ந்தாலும் அதன் வளர்ச்சிப் போக்கில் போரும், மதமும் ஒரு அங்கமாகின.

பெண்களை போரில் இருந்து தவிர்த்தன இந்த சொத்துடைமைச் சமூகங்கள். போர்களில் குதிரையேற்றத்திற்கு வசதியான வகையில் ஆண்களின் உடைகள் சுருக்கப்பட்டன.  மதங்கள் வேறுன்ற தொடங்கியதும் மத நூல்கள் ஆண்-பெண் பாலினங்களின் ‘அம்சங்களாக’ உடைகளையும் வகுத்தன.  அப்படி பைபிளில் இடம்பெற்ற வார்த்தைகள் ஆண்-பெண் பாகுப்பாட்டை வெளிக் கொணர்ந்தது.

“The women shall not put on the weapons(armour) of the warrior, neither shall a warrior put on a women’s garment for all that do are abomination and the LORD thy God. ”

அதாவது, “பெண்கள் ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது அதே போல,  பெண்களின் ஆடைகளை அணிந்து ஆண்கள் போருக்குச் செல்லக்கூடாது” என்பதே இதன் பொருள். கி.பி.1604-க்குப் பின் இங்கிலாந்தை ஆண்ட அரசர் ஜேம்ஸ் 1-ஆல், பைபிள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த மொழிபெயர்ப்பு சில இடங்களில் தவறானப் புரிதலை உருவாக்கியது. அதன் பின் “Modern International English”-ல் மொழி பெயர்க்கப்பட்டது.

“A women must not wear Mens clothing nor a man wear women’s clothing for the Lord your God detests anyone who does this”

இத்தகைய மத ரீதியானக் கட்டுப்பாடுகள் மற்றும் பணி நிலைமைகள் ஆகியவற்றின் காரணமாக பெண்கள் ஆடையும் ஆண்களின் ஆடையும் தனித்தனியாக வளர்ந்து வந்தன. முன்பே கூறியது போல, இதற்கு மத நூல்கள் மட்டும் காரணமல்ல. அதைக் கடந்த நடைமுறைப் பணி நிலைமைகளும் முக்கியக் காரணமாக இருந்தது. ஆண்கள் பயன்படுத்தத் துவங்கிய டிரவுசர்கள் (Trousers) வேலைகளை எளிமையாக செய்யவும், குதிரை சவாரி செய்யவும், போர் புரியவும் உதவின.

சொத்துடைமை அடிப்படையிலான வர்க்கச் சமூகம் பெண்களை அழகுப் பதுமைகளாகவே (ஒரு சில விதிவிலக்குகள் தவிர) நடத்தி வந்தது. அதற்கேற்ற வகையில் அவர்களது உடைகளின் பரிணாம வளர்ச்சி இருந்தது.

காலத்திற்கேற்ப நாகரிகம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளிலும் இன்றும் கூட ஓரு ஆண் பாவாடை அணிந்து தெருவில் நடந்தால் கேலியாகவும் கிண்டலாகவும் பார்க்கின்றனர். காரணம், நாம் நம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பாலினப் பாகுபாட்டின் விளைவே.

இன்றும் கூட பல நாடுகளிலும் பாவாடை போன்ற ஆடைகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஒரு சுற்றலாவாசியாக நான் பூட்டானில் அவற்றைப் பார்த்திருக்கிறேன். பூட்டானில் ஆண்கள் அணியும் அடர்த்தியான, கோ(Gho) என்ற ஆடையும் பாவாடையைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது. அங்கு பெண்கள் அணியும் கீரா(Kira) கணுக்கால் வரை நீண்டிருக்கும்.

ஆசிய புத்தத் துறவிகள் அணியும் ஆடை கூட ஓரு வித சீலை போன்ற தோற்றத்தையே தருகின்றது. ஆனால் அதைப் பார்த்து நாம் சிரிப்பதில்லை. அதேபோல, பாலி நாட்டில் சாராங்(Sarang)  எனப்படும் நீண்ட துணிகளை இடுப்பிற்கு கீழ் உடுத்தும் பழக்கம் இருக்கிறது.

ஸ்காட்லாந்தில் ஆண்கள் கில்டு(Kilt) என்ற ஆடையை அணிந்து வேலைகளைச் செய்கின்றனர். “As they say in Scotland, It takes a real Man to wear a skirt”  என்று ஓரு பழமொழிக் கூட உண்டு. ஸ்காட்லாந்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த ஆடையும் கீல்டு (Kilt). ஏன் தென் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருக்கிறது.

இப்போது சொல்லுங்கள் ஆண் பாவாடை அணிந்தால் என்ன தவறு ?

இன்று பெண்களும் தங்களது வேலை சூழலுக்கு ஏற்ற வசதியான ஆடையாக சுடிதார், ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகளையே பயன்படுத்துகின்றனர். பெண்கள் பயன்படுத்துகின்றனர் என்பதற்காக இந்தச் சமூகம் இந்த ஆடைகளையும் இளப்பமான ஆடைகளாக அடையாளப்படுத்தப் போகிறதா?

படிக்க :
♦ காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை!
பிராண்டட் ஆடைகள் – பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?

ஆண்களின் கோழைத்தனத்திற்கு அடையாளப்படுத்தும் விதமாக ஆண்களைப் பார்த்து “பாவாடை கட்டிக் கொள்” என்று யாரேனும் சொன்னால் அதை ‘உரிய’ முறையில் எதிர்கொள்ளுங்கள். தைரியம் என்பது எந்த ஒரு பாலினத்திற்குமான தனிப்பட்ட உரிமை கிடையாது. கோழைத்தனத்தைப் பெண்மைக்கு நிகரானதாகவும், பாவாடையை அதற்கான அடையாளமாகப் பேசுவதும் கேலிக்கூத்தாகும். வரலாற்று அறிவோ சமூக அறிவோ இல்லாதவர்களாக நம்மை நாமே  தூற்றிக் கொள்வது போன்றதாகும்.  ஆடை வெறும் அடையாளம் அல்ல. அது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம்.

ஆகவே, இனி நாம் கேட்போம், “Why dont Men wear skirt? ”

சிந்துஜா
சமூக ஆர்வலர்

மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்

இன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமரசமின்றி போராடிய போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டு 90-ம் ஆண்டு நினைவு நாள்.

காந்தியின் கருத்துக்கள் சென்றடைந்ததைப் போல, விதைக்கப்பட்ட இந்தப் போராளிகளின் கருத்துக்கள் பரந்துபட்ட மக்களிடம் சென்றடையவில்லை என்பதுதான் இக்கருத்துக்கள், ஏகாதிபத்திய ஆதரவு ஆளும்வர்க்கத்திற்கு எந்த அளவிற்கும் பெரும் சவாலாக அமைந்திருக்கின்றன என்பதற்குச் சான்று.

இன்று, ஒருபுறத்தில் இந்துத்துவ பாசிசம் உச்சத்தை அடைந்திருக்கும் வேளையில் மற்றொரு புறத்தில் தமிழ் இனவெறி பாசிசம் வளர்ந்து வருகிறது. முன்னதை பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் வளர்த்து வரும் சூழலில் பின்னதை தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி வளர்த்து வருகிறது.

இன்று தமிழகத்தைக் கவ்வியிருக்கும் இந்த இரு பெரும் பாசிச அபாயங்களில் இருந்து தமிழகம்  மீள வேண்டுமெனில் மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் அறிவு பெற்று இருக்க வேண்டும். சீமானின் கட்சியில் கூடத்தான் இளைஞர்களும் மாணவர்களும் இருக்கிறார்கள். இதை யாராலும் மறுக்க முடியாதுதான். இங்கு நாம் மாணவர்களும் இளைஞர்களும் பெறவேண்டிய அரசியல் அறிவு எனக் குறிப்பிடுவது சமூகப் பிரச்சினைகளுக்கு விரிவான பரந்துபட்ட கண்ணோட்டத்துடனான தீர்வை முன் வைக்கும் அறிவியல்பூர்வமான அரசியல் அறிவைப் பற்றியே !

அத்தகையதோர் அரசியல் அறிவு என்பது மதரீதியான, இனரீதியான பிரிவினையற்ற, முழுக்க முழுக்க வர்க்கரீதியான அரசியல் பார்வையே என்று அடித்துக் கூறியிருக்கிறார் தோழர் பகத்சிங். அப்படிப்பட்ட அரசியல் அறிவை இளைஞர்களும் மாணவர்களும் ஏன் பெற வேண்டும் என்பதை 1928-ம் ஆண்டு எழுதிய இந்தக் கட்டுரையில் விளக்கியிருக்கிறார் பகத் சிங். ”கேளாத செவிகள் கேட்கட்டும்” என்ற நூலில் பகத் சிங்கின் சிறைக்குறிப்புகள், கடிதங்கள் ஆவணங்கள் ஆகியவற்றை தமிழாக்கம் செய்து தோழர் த. சிவக்குமார் வெளியிட்டிருக்கிறார். அந்த நூல் நெம்புகோல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பகத் சிங்கின் அரசியலைப் புரிந்து கொள்ள விளைபவர்கள் பகத் சிங்கின் வார்த்தைகளிலேயே அதனை படிக்க இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.

தோழர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாளில் மாணவர்கள் அரசியலில் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பகத் சிங் எழுதிய இந்தக் கட்டுரையை வாசகர்களுக்கு முன் வைக்கிறோம்.

000

ன்று பல அதிமேதாவிகள் கூவிக் கொண்டிருப்பது போலவே அன்றும் சிலர் “மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது. அவர்கள் கவனம் படிப்பில் மட்டும் தான் இருக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டிருந்தனர். அதன் மூலம் தாய் நாட்டின் விடுதலைக்காக பாடுபட வேண்டிய பொறுப்பில் இருந்து அன்றைய மாணவர்களை – இளைஞர்களை திசை திருப்பிக் கொண்டிருந்தனர். ஆளும் வர்க்கத்தின் மனதை மகிழச் செய்வதற்காக தாய்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருந்தனர்.

வெளிப்பார்வைக்கு அதிபுத்திசாலித்தமானதாக தோற்றமளிக்கும் இவர்களது வாதங்களை இக்கட்டுரையின் மூலம் பகத்சிங் தகர்த்தெறிகிறார். அவர்களையும் அவர்களது வாதத்தின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறார். இக்கட்டுரை 1928 ஜுன் கீர்த்தி இதழில் வெளிவந்தது.

000

படிக்க :
♦ நூல் அறிமுகம் : பகத்சிங் சிறைக் குறிப்புகள்
♦ நூல் அறிமுகம் : கேளாத செவிகள் கேட்கட்டும்

மாணவர்களும் அரசியலும்

படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் (மாணவர்கள்) அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சிலர் வீட்டுக் கூரைகளின் மேல் நின்று கொண்டு உரக்கக் கத்துகின்றனர். பஞ்சாப் அரசாங்கமும் அத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளது. மாணவர்கள் கல்வி நிலையங்களில் சேரும் போதே, அவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதிமொழியில் கையெழுத்திடுமாறு செய்யப்படுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது கல்வி அமைச்சர் மனோகர் லால், மாணவர்களோ ஆசிரியர்களோ அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது நமது துரதிர்ஷ்டமே. லாகூரில் மாணவர் சங்கங்களாலும் மாணவர் அமைப்புகளாலும் “மாணவர்கள் வாரம்” கொண்டாடப்பட்ட போது சர்.அப்துல் காதரும் பேராசிரியர் ஈஸ்வர் சந்த்தும் மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தினர்.

நாட்டில் அரசியல் ரீதியில் பின்தங்கிய மாகாணமாக பஞ்சாப் வரிசைப்படுத்தப்படுகிறது. ஏன் அவ்வாறு கருதப்படுகிறது? பஞ்சாப் குறைவாகவா தியாகம் செய்துள்ளது. காரணம் என்னவென்றால் நமது கல்வித் துறையின் அதிகாரிகள் கத்துக்குட்டிகள். இன்றைய பஞ்சாப் சட்ட மன்ற அவை நடவடிக்கைகள், நமது கல்வியின் தரம் மிக மோசமான நிலையிலும் பயனற்றதாகவும் இருப்பதையும் நமது நாட்டில் என்ன நடந்தாலும் அதில் இளம் மாணவர்கள் பங்கெடுப்பதில்லை என்பதையுமே நமக்கு காட்டுகின்றன. இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சிப் போக்குகள் பற்றி அவர்கள் (மாணவர்கள்) அறியாதவர்களாகவே இருக்கின்றனர். பள்ளிக் கல்வி முடித்து வெகுசிலர் உயர்கல்விக்குச் சென்றாலும் அவர்கள் பேசும் அறிவுக்குப் பொருந்தா குப்பைப் பேச்சுக்களைக் கேட்டு எவரும் சிரிக்காமல் இருக்க முடியாது.

இந்த நாட்டின் ஆட்சியதிகாரம் யாருடைய கைகளுக்குச் செல்லப் போகின்றதோ அந்த இளைஞர்களுக்கு திருப்தியற்ற விதத்தில் கல்வியளிக்கப்படுகிறது. இத்தகைய பெருமுயற்சிகளின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை யூகிப்பதில் எந்த கஷ்டமும் இல்லை.

மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டும். அவர்களது நேரமும் சக்தியும் முழுவதும் அதற்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் நமது நாட்டின் நிலைமையையும் அந்நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் புரிந்துகொள்ளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்வது அவர்களது படிப்பில் ஒரு பகுதி இல்லையா ? அப்படி இல்லையென்றால் அவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி பயனற்றது என்றே நான் கருதுகிறேன். அக்கல்வி நம்மை வெறும் எழுத்தர்களாக மட்டுமே ஆக்கக் கூடியது என்றால், அதனை நாம் பெற்றிருப்பதில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை. அத்தகைய கல்வி நமக்குத் தேவையா?

தந்திரக்காரர்கள் சிலர் கூறுகின்றனர்: “மாணவர்களே, நீங்கள் அரசியலைப் பற்றிப் படிக்கலாம் ; அதைப் பற்றி சிந்திக்கலாம். ஆனால் நடைமுறை அரசியலில் மட்டும் ஈடுபடக்கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி உங்கள் திறனை வளர்த்துக் கொண்டால் நீங்கள் நாட்டிற்கு அதிகம் பயனுள்ளவர்களாக இருப்பீர்கள்”. வெளிப்படையாகப் பார்க்கும் போது இது ஒரு நல்ல ஆலோசனை. ஆனால் இது மேலோட்டமான கருத்து என்பதற்காகவும் நான் இதை நிராகரிக்கிறேன். நான் அதை விரிவாக விளக்குகிறேன். ஒரு மாணவர், பிரின்ஸ் க்ரொபோத்கின் எழுதிய “இளைஞர்களுக்கு அறைகூவல்” (Appeal to the young) எனும் நூலை படித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பேராசிரியர், இது ஏதோவொரு வங்காளியின் படைப்பு போல் இருக்கிறதே, அந்த புத்தகம் என்ன புத்தகம் ? என்று விசாரிக்கிறார். அம்மாணவர் பதில் சொல்கிறார்: பிரின்ஸ் க்ரொபோத்கின் பிரபலமான பெயர். பொருளாதாரத்தில் அதிகாரம் பெற்ற மேதை. ஒவ்வொரு பேராசிரியரும் இப்பெயரைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்பேராசிரியரின் “திறனைப்” பார்த்து நகைத்துக் கொண்டே அம்மாணவர் மேலும் கூறுகிறார்: அவர் ஒரு ருஷ்ய நாட்டவர். ருஷ்யா என்ற வார்த்தை அப்பேராசிரியருக்கு இடி விழுந்தது போல் கேட்டது. உடனே அவர் சொன்னார்: “நீ ஒரு போல்ஷ்விக் ஏனென்றால் நீ அரசியல் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறாய்”

என்ன ஒரு திறமையான பேராசிரியர் ! பாவம் அந்த மாணவன். அப்பேராசிரியரிடமிருந்து என்ன கற்றுக் கொள்ள முடியும் ? இத்தகைய சூழ்நிலையில் நமது இளைஞர்களால் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

இரண்டாவதாக, “நடைமுறை அரசியல்” என்றால் என்ன என்று நாம் பார்ப்போம். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை வரவேற்பதும் அவர்களது சொற்பொழிவுகளைக் கேட்பதும் நடைமுறை அரசியல். ஒரு ராயல் கமிஷனை அல்லது வைஸ்ராயை வரவேற்பதற்கு பெயர் என்ன ? அதுவும் கூட அரசியல் இல்லையா? அரசாங்கம் அல்லது நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடையது எதுவானாலும் அரசியல் என்றால், இதுவும் அரசியல் இல்லையா ? ஆனால் என்ன இருந்தாலும் இது அரசாங்கத்தை மனங்குளிரச் செய்கிறது, மற்றதோ அரசாங்கத்தை கோபம் கொள்ளச் செய்கிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

நீங்கள் அரசாங்கத்தின் மனமகிழ்ச்சியையும் கோபத்தையும் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள் என்பதே இதற்கு அர்த்தம். பிறந்தது முதற்கொண்டு அரசாங்கத்திற்கு துதிபாடும் கல்வியா மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும் ? அந்நிய கொள்ளைக் கூட்டத்தினரால் இந்தியா ஆளப்படும் வரை, அரசாங்க விசுவாசத்தைக் காட்டும் அரசாங்க ஆதரவாளர் (Loyalist) களை நான் துரோகிகள் என்றே கருதுவேன். அவர்கள் மனிதர்களே அல்ல. மிருகங்கள். அவர்கள் தங்களது வயிற்றுக்கு அடிமையானவர்கள் ! இந்த அரசாங்க விசுவாசத்திற்கான பாடத்தைக் கற்குமாறு நமது மாணவர்களை நாம் எவ்வாறு கூற முடியும்?

இந்தியாவிற்கு இப்பொழுது, தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து, பித்துப் பிடித்தவர்களைப் போல் தங்களது வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்து இந்நாட்டின் விடுதலைக்காக போராடக்கூடிய தேச பக்தர்களே தேவைப்படுகின்றனர். இதை ஏறத்தாழ அனைவருமே ஒப்புக் கொள்வார்கள். அத்தகைய தேசபக்தர்களை வயதானவர்களிடம் நம்மால் கண்டறிய முடியுமா? தங்களது குடும்பம், உலக வாழ்க்கை விவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் புத்திசாலியான மனிதர்களின் மத்தியில் இருந்து அத்தகைய தேசபக்தர்கள் வெளிவருவார்களா ? இல்லை! இத்தகைய விஷயங்களின் பிடியில் இல்லாத இளைஞர்களின் அணிவரிசை களில் மட்டுமே அத்தகைய தேசபக்தர்களைக் காண முடியும். ஆனால் நமது இளைஞர்களுக்கு விஷயங்களைப் பற்றிய நடைமுறை அறிவு கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் மத்தியில் அத்தகைய தேசபக்தர்கள் கிடைப்பார்கள். கணிதம் மற்றும் புவியியல் கேள்விகளுக்கான விடைகளை குருட்டு மனப்பாடம் செய்து கற்றுக் கொள்வது மட்டும் இதற்குப் போதாது.

இங்கிலாந்து நாட்டு மாணவர்கள் கல்லூரிகளைத் துறந்து விட்டு ஜெர்மனிக்கு எதிராக போருக்குச் சென்றார்களே ஜெர்மனிக்கு எதிராக போருக்குச் சென்றார்களே, அது அரசியல் இல்லையா? நம்முடைய போதகர்கள் அங்குபோய் அவர்களது படிப்பைத் தொடருமாறு அந்த மாணவர்களிடம் ஏன் சொல்லவில்லை!

படிக்க :
♦ ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

தங்களது கல்லூரியைத் துறந்து பரதோலியின் சத்யாகிரகப் போராட்ட வீரர்களுக்கு துணை நின்றார்களே அந்த அகமதாபாத் தேசியக் கல்லூரியின் மாணவர்கள் என்ன முட்டாள்களா ? கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் இளைஞர்களும் மாணவர்களுமே தங்களது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எப்பொழுதும் முன்வரிசையில் இருக்கின்றனர். இந்தியாவின் இளைஞர்களும் மாணவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கியிருப்பதன் மூலம் தங்களது நாட்டைக் காப்பாற்ற முடியுமா ? 1919-ல் இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை அவர்கள் மறக்கலாமா? புரட்சி, இன்றைய காலகட்டத்தின் தேவை என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

மாணவர்கள் படிக்க வேண்டும். கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால் அதனுடன் கூடவே அவர்கள் அரசியல் அறிவையும் பெறவேண்டும். நேரடி நடவடிக்கை எப்போது தேவைப்படுகிறதோ அப்போது களத்தில் குதிக்கத் தயங்கக் கூடாது. அப்பணிக்காக தங்களது வாழ்க்கையை அவர்கள் அர்ப்பணிக்க வேண்டும். இக் குறிக்கோளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்கக் கூடாது. இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்கு அது ஒன்றே வழி.

பகத்சிங்

நூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்…
(தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)
தொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்

வெளியீடு: நெம்புகோல் பதிப்பகம்,
3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,
நாராயணபுரம், மதுரை – 625014.
பேச: 93441 23114.
பக்கங்கள்: 384
விலை: ரூ150.00

சென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது || போலீசு அராஜகம்

டந்த ஜனவரி மாதம் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களை சென்னைப் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜன் பழிவாங்கும் நோக்கில் தேர்வில் தோல்வியடையச் செய்துள்ளார்.  அதைக் கண்டித்து, மறு திருத்தம் செய்யக் கோரி கடந்த பிப்ரவரி மாதம் தொடர் போராட்டம் நடத்தினார்கள் மாணவர்கள்.

அதன்பின், அவர்கள் அனைவரும் தேர்வில் தேறிவிட்டதாக வாய்வழித் தகவல் கூறியிருக்கிறது பல்கலை நிர்வாகம். பெற்ற மதிப்பெண் பற்றி கேட்டதற்கு கல்லூரி நிர்வாகம் எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் கடந்த மார்ச் 16-ம் தேதி அன்று நீண்ட நேரம் காத்திருந்து, தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜனை துறை அலுவலகத்தில் சந்தித்துக் கேட்டுள்ளனர். அதற்கு சௌந்திரராஜன் தகாத வார்த்தைகளில் பேசி, பெண் மாணவியின் மீது பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்த்துக் கேட்ட சகமாணவர்களையும் அடித்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார்.

படிக்க :
♦ நஜீப் அகமது எங்கே ? ஏ.பி.வி.பி.யை தடைசெய் | சென்னை பல்கலையில் ஆர்ப்பாட்டம்
♦ பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !

சென்னை பல்கலைக்கழக பதிவாளர், பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கமிட்டி, துணைவேந்தர் ஆகிய மூன்று பேருக்கும், இந்த பாலியல் வன்கொடுமை சம்மந்தமாக, புகார் கடிதம் கொடுத்துள்ளார்கள் மாணவர்கள். அந்த கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவந்தனர் மாணவர்கள்.

பல்கலை நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகள், பிரச்சினையை பற்றி ஒன்றுமே பேசாமல், என்ன காரணத்திற்கு என்று முறையாக தெரிவிக்காமலேயே, கடிதங்கள் தந்துள்ளது. “கடிதங்களில் எழுதியிருப்பது முன்னுக்குபின் முரணாக உள்ளது. பேரா.சௌந்திரராஜனுக்கு ஆதரவாக உள்ளது” என்ற அடிப்படையில் அனைத்துக் கமிட்டிகளையும் நிராகரித்துள்ளார்கள் மாணவர்கள்.

பாலியல் குற்றத்தை விசாரிக்க வந்த கமிட்டிக்கு மட்டும் மாணவர்கள் சென்றார்கள். ஆனால், அந்த கமிட்டியோ, மாணவியைக் கொச்சையான கேள்விகளைக் கேட்டு மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் உசைன் என்பவர் “உனக்கு குடும்பம் இருக்கு, பாலியல் துன்புறுத்தல் வழக்குக் கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே, அதை விட்டுட்டு நடவடிக்கை எடு என்று பசங்களுடன் உட்கார்ந்து இருக்கியே” என்று கேவலமாகப் பேசியுள்ளார். அதே கமிட்டியில் இருந்த ஒரு பெண் வழக்கறிஞர் சாந்தக்குமாரி என்பவர் “அவர் போகிற போக்கில் தெரியாமல் உன்னைத் தொட்டுட்டுப் போயிருப்பார்” என்று அலட்சியமாகப் பேசியிருக்கிறார். அதற்கு பாதிக்கப்பட்ட மாணவி “ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை நடத்திருப்பது என்பதால், இது பாலியல் வன்கொடுமைதான்” என்று உறுதியாகக் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் வழக்கறிஞர் சாந்தக்குமாரி “அவருக்குத் தெரியாமல் நடந்திருக்கும்” என்று மீண்டும் அலட்சியமான பதிலையே கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 20-ம் தேதி அன்று இரவு, D1 போலீசு நிலைய இன்ஸ்பெக்டர் சீதாராமன் பல்கலைக் கழகத்திற்குள் வந்து, “ஒருவேளை உங்களை இடைநீக்கம் செய்யும் உத்தரவு வந்து, உங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று போராடும் மாணவர்களைக் கேட்கிறார். அவர் கேட்டுச் சென்ற பத்து நிமிடத்திற்குள், பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு ஒரு கடிதம் தருகிறது. அதில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடன் இருந்த நான்கு மாணவர்களையும் இடைநீக்கம் செய்வதாகக் கூறியுள்ளார்கள். அந்தக் கடிதத்தை மாணவர்கள் முழுவதுமாகப் படித்து முடிப்பதற்கு முன்பே மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அப்புறப்படுத்த வந்துவிட்டது போலீசு. ஆனால், மாணவர்கள் பலரின் எதிர்ப்பினால் திரும்பிச் சென்றது போலீசு.

தவறு செய்த ஒரு பேராசிரியரை பதிவாளரும், துனைவேந்தரும், போலீசும் ஏன் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று புரியவில்லை என்கிறார் மாணவர் சிவப்பிரகாசம்

குற்றவாளியான சௌந்திரராஜனைக் காப்பாற்ற கல்லூரி நிர்வாகமும், போலீசும் தீவிரமாக இறங்கி, போராடும் மாணவர்களையே குற்றவாளிபோல் பொது வெளியில் சித்தரித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால், கடந்த மார்ச் 21-ஆம் தேதி அன்று விடியற்காலையில் கைகளை கண்ணாடியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவி. சகமாணவர்கள் மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அதிகரித்தவண்ணம் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவி, அன்று மதியம் மீண்டும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். அவர் தற்கொலைக்கு முயலக் காரணம் இந்த பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர், பதிவாளர், துணைவேந்தரும்தான் என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள் போராடும் மாணவர்கள்.

பல்கலைக்கழகத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கக் கூடாது என்று அவர்களை மிரட்டி வெளியேற்ற முயற்சித்துள்ளது போலீசு. அதையும் மீறி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது.

கடந்த 5 நாட்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக மாணவர்களை, போராட்டத்தின் ஆறாம் நாளான மார்ச் 22-ஆம் தேதி அன்று காலையில் கைது செய்து பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்கு எதிரில் இருக்கும் போலீசு நிலையத்தின் அருகில் ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளது போலீசு.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம்

மாணவி கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்தை பெயரளவுக்குக் கூட போலீசு கண்டித்ததாகத் தெரியவில்லை. பாலியல் புகார் அளித்த பேராசிரியர் சௌந்தர ராஜன் சுகவாசியாக உலா வருகையில், நியாயம் கேட்டுப் போராடிய பாதிக்கப்பட்ட மாணவர்களை குற்றவாளிகள் போல் கைது செய்திருக்கிறது போலீசு. இந்த மாணவர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள்தான் அநியாயக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடினார்கள். அதற்காகவே அவர்கள் மதிப்பெண் குறைக்கப்பட்டு, பெயிலாக்கப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு எதிராகவும் அவர்கள் போராடியிருக்கிறார்கள். இறுதியில் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டிருப்பதோடு இடைநீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மாணவர்களின் போராட்டம், மாணவர்களைக் கொள்ளையிடும் சென்னைப் பல்கலை நிர்வாகம், அதற்குத் துணை போன பேரா. சௌந்தரராஜன் ஆகியோரின் அதிகாரத் திமிரையும், இக்கும்பலுடனான போலீசின் கூட்டுக் களவானித்தனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

அவர்களைப் பொறுத்தவரையில் நமக்கு சொல்ல வரும் செய்தி, கல்விக் கட்டணக் கொள்ளை அடிக்க முயன்ற சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்துப் போராடியதே மாணவர்கள் செய்த முதல் தவறு. போராடிய ‘குற்றத்திற்காக’ தேர்வில் ஃபெயில் போட்ட பேரா.சௌந்திரராஜனுக்கு எதிராகப் போராடியது இரண்டாவது தவறு. தேர்வின் மதிப்பெண்ணைப் பொதுவெளியில் வெளியிடுங்கள் என்று மாணவர்கள் கேட்டது மூன்றாவது தவறு. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த, பேரா.சௌந்திரராஜனுக்கு எதிராக புகார் கொடுத்ததும், நீதி கேட்டு போராடியதும் நான்காவது தவறு.

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய வர்க்கத்தில் இருந்து தங்கள் வாழ்க்கைக்காகப் படிக்க வந்த மாணவர்களின் மேற்கூறிய ‘தவறு’களுக்காகத்தான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகமும், போலீசும் சேர்ந்து வெறியாட்டம் போடுகிறது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டதை அறிவித்து நடத்திய இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த தோழர்களை அடித்து, பெண் தோழர்களை பாலியல் துன்புறுத்தல் செய்து கைது செய்துள்ளது D1 நிலைய போலீசு.

படிக்க :
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE
♦ பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE

பாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை இடைநீக்கம் செய்ய வேண்டும், அவருக்கு துணைப்போகும் பதிவாளர், துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்கை நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகளைக் கொண்டு கமிட்டி அமைத்து விசாரித்தால் மட்டுமே நாங்கள் உட்படுவோம். எங்கள் தேர்வு மதிப்பெண்களை பொது வெளியில் வெளியிட வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. நீதி கிடைக்கும் வரை தொடர்ந்துப் போராடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சென்னை பல்கலைக்கழக கிரிமினல் நிர்வாகத்தை எதிர்த்துத் தொடர்ந்து அஞ்சாமல் போராடும் மாணவர்களுக்கு பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக சக்திகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் துணை நிற்பது மிகவும் அவசியம். இன்றைய நமது ஆதரவுதான் சமூகத்தின் மீதான  போராடும் மாணவர்களின் நம்பிக்கைக்கான அடிப்படையாகும்.


வினவு செய்தியாளர்