Friday, August 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 245

பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

1

ழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அவர் சமீபத்தில் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட விமர்சனக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கை தாமாக எடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

சமூகச் செயல்பாட்டாளரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அரசின் வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகவும், மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்றத்திலும், பொதுவெளியிலும் குரல் கொடுத்து வருபவர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றம் குறித்து சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துக் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.

ஹார்லி டேவிசன் பைக் ஓட்டும் உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே.

கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதியன்று தனது டிவிட்டர் பதிவில், நாக்பூரில் உள்ள ஒரு பாஜக தலைவருக்கு சொந்தமான 50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை முகத்தில் மாஸ்க் மற்றும் தலையில் ஹெல்மெட் ஏதும் இல்லாமல் ஓட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேயை விமர்சித்தார். அதில் ஊரடங்கைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தை மூடி குடிமக்கள் தங்களுக்கான அடிப்படை உரிமையான நீதியைப் பெற மறுத்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

அதே போல ஜூன் 27 அன்று மற்றொரு டிவிட்டர் பதிவில், “எதிர்காலத்தில் வரலாற்றாளர்கள் கடந்த ஆறு ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் முறையான அவசரநிலை அமல்படுத்தப்படாமலேயே எப்படி ஜனநாயகம் அழிக்கப்பட்டது என்பதைத் திரும்பிப் பார்க்கும் போது இந்த அழிப்பில் குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் பங்கையும் இன்னும் குறிப்பாக நான்கு தலைமை நீதிபதிகளின் (எஸ்.ஏ.பாப்டே, ரஞ்சன் கொகோய், தீபக் மிஸ்ரா, ஜே.எஸ். கெஹர்) பங்கையும் அவர்கள் தனிச்சிறப்பாக குறித்துக் கொள்வார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 9-ம் தேதி அன்று, மஹேக் மகேஸ்வரி என்பவர் பிரஷாந்த் பூஷன் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பிரசாந்த் பூஷனின் மேற்கூறிய இரண்டு டிவிட்டுகள் குறித்து குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 21-07-2020 அன்று உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. குறிப்பாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் பதிவு எழுதியதாகக் கூறி இந்த வழக்கை எடுத்துள்ளது. ஆனால் குறிப்பாக எந்த டிவிட்டர் பதிவுக்காக இவ்வழக்கு பதியப்பட்டது என்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு மட்டுமல்லாமல் டிவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியது.

படிக்க:
திருச்சி : வேலை வழங்க முடியாது ! கடனையும் கட்ட வேண்டும் ! அதிகார வர்க்கத்தின் கோர முகம் !
குற்றவாளிகளே நீதிபதிகளாக! உளுத்துப் போன நீதித்துறை !

இந்த வழக்கு கடந்த புதன் கிழமை (22-07-2020) அன்று அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த அமர்வு இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் இந்த சுவோ மோட்டோ வழக்கில் டிவிட்டர் இந்தியாவை விலக்கிவிட்டு அமெரிக்காவில் இயங்கும் டிவிட்டர் தலைமையகத்தை இந்த சேர்த்துள்ளது.

உச்சநீதிமன்றம் அந்த டிவிட்டுகளை நீக்கும்படி உத்தரவிட்டால், நீக்குவதற்குத் தயாராக இருப்பதாக டிவிட்டர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அருண் மிஸ்ரா அமர்வு, “ஏன் நீங்களாக சொந்தமாக நீக்க மாட்டீர்களா ? நாங்கள் அவமதிப்பு வழக்கை எடுத்த பின்னரும் முறையான ஆணைக்காக நீங்கள் காத்திருப்பீர்களா ? நாங்கள் எந்த ஒரு ஆணையையும் பிறப்பிக்கப் போவதில்லை என்றே நாங்கள் எண்ணுகிறோம். அதை உங்கள் அறிவுக்கே விட்டுவிடப் போகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

குறிப்பறிந்து செயல்படத் தவறிய டிவிட்டர் நிறுவனத்தை கடிந்து கொண்டுள்ளது உச்சநீதிமன்றம். அதாவது எஜமானர்கள் கையில் சவுக்கெடுத்தாலே நாய் வாலை ஆட்டிக் கொண்டு முன் வந்து நிற்க வேண்டுமாம். மாறாக சவுக்கைச் சுழற்றினால்தான் வாலை ஆட்டுவேன் என்று சொல்வது எஜமானனுக்கு இழைக்கப்படும் அவமானம் என்று கருதுகிறது உச்சநீதிமன்றம். மேலும், இந்த வழக்கு விவகாரத்தில் தமக்கு உதவுமாறு அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலை கேட்டுக் கொண்டதோடு இந்த வழக்கை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது அருண்மிஸ்ரா அமர்வு.

பெரும்பாலான முன்னணி வழக்கறிஞர்களும், சட்ட வல்லுனர்களும் இது நீதிமன்ற அவமதிப்பு எனும் வகைக்குள் வராது என்று தெரிவித்துள்ளனர். இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நேர்மையான, தைரியமான சமூகச் செயற்பாட்டாளர்களுக்குப் புதிதல்ல.

இதற்கு முன்னர் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நடத்தைகளை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறார் பிரசாந்த் பூஷன். அதே போல வரவர ராவ் உள்ளிட்ட பீமா கொரேகான் வழக்கு விசாரணைக் கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விமர்சித்து வந்துள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தெகல்கா பத்திரிகைக்கு பிரசாந்த் பூஷன் அளித்த நேர்காணலில் முன்னாள் மற்றும் அப்போது நடப்பிலிருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு மே மாதம் வரை விசாரிக்கப்படாத இந்த வழக்கை தற்போது மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். எதிர்வரும் ஜூலை 24-ம் தேதியன்று அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இருந்து இன்றுவரையில் மோடி 2.0 ஆட்சியில், பல மக்கள் விரோத தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இப்போது உச்சநீதிமன்றத்தை விமரிசிப்பதே தவறு என்ற அச்சத்தை பொது வெளியில் ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்காக போராடிய வரவர ராவ் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களை முடக்குவதற்கு ஆளும் வர்க்கத்திற்கும், இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கும் இந்தியாவின் நீதித் துறை துணை நின்றுள்ளது. இன்று கொரோனா பெருந்தொற்று சூழலிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாக்காமல் பரிதவிக்க விட்டதும் இதே உச்சநீதிமன்றம் தான்.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கவுதம் பாட்டியா உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தை மீறும் தருணங்களிலும், அதன் நீதிபதிகளின் சார்புத் தன்மையையும் அவ்வப்போது அம்பலப்படுத்தியும் விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில், அவர்களை மிரட்டி முடக்குவதற்கும், அவர்களைப் போன்ற செயல்பாட்டாளர்களும், அறிவுஜீவிகளும் உச்சநீதிமன்றத்தை விமர்சிப்பதை டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தன்னியல்பாகவே முடக்குவதற்கும் ஏற்ற வகையில்தான் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது உச்சநீதிமன்றம்.

தன் மீதான விமர்சனத்தை ஒடுக்க நினைக்கும் இந்த உச்சநீதிமன்றம்தான் நமக்கு நீதியை வழங்கி ஜனநாயகத்தை காக்கப் போகிறதா ?


– நந்தன்
செய்தி ஆதாரம் : த வயர்.

திருச்சி : வேலை வழங்க முடியாது ! கடனையும் கட்ட வேண்டும் ! அதிகார வர்க்கத்தின் கோர முகம் !

  • கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்த மக்களுக்கு அரசு கட்டுமானப் பணிகளில் கிராமம் – நகர்ப்புறங்களில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்து!
  • உள்ளூர் திட்ட பணிகளுக்கு உள்ளூர் மக்களுக்கே வேலை வழங்கு!

ரசு கட்டுமானப் பணிகளில் கிராமப்புற குடிமராமத்து பணிகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் 22.07.2020 காலை 11 மணி அளவில் மனு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன், தலைமையில் தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) மாவட்ட தலைவர் அய்யா.மாபா. சின்னதுரை, மக்கள் உரிமை மீட்பு இயக்கம் நிறுவனத் தலைவர் தோழர்.பஷீர், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு தலைவர் தோழர்.சம்சுதீன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர்.ரமணா, ஜான் பாஷா மாவட்ட தலைவர் தமிழ் புலிகள் கட்சி மக்கள் உரிமை கூட்டணி ஜோசப் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் தோழர்.கமலக்கண்ணன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் புதியவன், மற்றும் மக்கள் கலை இலகியக் கழகத் தோழர்கள் ஆகிய பொதுநல அமைப்புகள் சார்பாக பொறுப்பாளர்கள் 20 பேர் கோரிக்கை மனுவை மாநகராட்சி ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மாநகராட்சி ஆணையர் மனுவை பெற்றுக்கொண்டு, “வேலைவாய்ப்பு பிரச்சினையில் மத்திய அரசு கில்டு லேபர் திட்டங்கள் நிறைய உள்ளது. ஆகையால் உங்கள் அமைப்புகள்  சார்பாக ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு பேருக்கு வேலை இல்லை என்பதை பட்டியல் எடுத்து எங்களுக்கு தந்தால் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.” என்றும் பேசினார்.

மேலும் மாநகராட்சி காண்ட்ராக்டர்கள் சார்பாக; “காண்ட்ராக்டர்கள் விருப்பப்படி ஆட்களை தேர்வு செய்து குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆள் வைப்பார்கள். நீங்கள் ஆட்களை கொடுத்தால் அவர்களுக்கு காண்ட்ராக்ட் தொகை கட்டுப்படி ஆகாது என கொள்ளையடிக்கும் காண்ட்ராக்ட் காரர்களுக்கு ஆதரவாக பேசினார். மேலும் இது சம்பந்தமாக என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அரசுக்கு உங்களுடைய கோரிக்கை அனுப்பி வைக்கிறோம்” என அக்கறை இல்லாமல் பேசினார்.

நாம் மீண்டும் பேசும்போது கொரோனா ஊரடங்கு வேலைவாய்ப்பு பாதிப்பு என்பது ஒரு புதிய பிரச்சனை ஆகையால் இதற்கு அரசு அதிகாரிகள் பொதுநல அமைப்புகள் இணைந்து பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும். என கோரிக்கை விடுத்தும். நான் காண்ட்ராக்ட் காரர்களிடம் பேசுவதாக கூறி நழுவிக் கொண்டார்.

இது சம்பந்தமான அரசு முயற்சி எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு உத்தரவிட வேண்டும். என கோரிக்கை வைத்தும் அவர் அது என்னால் முடியாது. தெரியப்படுத்துகிறேன் என நழுவிக் கொண்டு பேசினார். பிரச்சினைகளை தீர்க்க இந்த அதிகாரிகள்தான் பொறுப்பில் உட்கார்ந்துகொண்டு அரசு திட்ட பணிகளை செயல்படுத்தாமல் காண்ட்ராக்ட் காரர்கள் நலன் சார்ந்து பேசுவதும் அயோக்கியத்தனமாக உள்ளது.

அடுத்ததாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசினோம். மனுவை படித்துவிட்டு அரசுக்கு உங்களுடைய கோரிக்கையை நான் கொண்டு செல்கிறேன் என முடித்துக் கொண்டார். மாவட்ட நிர்வாகத்தில் நீங்கள் இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்க முடியும் என்று பேசிய போது என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அக்கறை இல்லாமலும் பொறுப்பில்லாமல் பேசினார்.

படிக்க:
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
அடாவடி நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உதயம் !

இதே திருச்சி மாநகர பெரிய பணக்காரர்களுக்கும்; வியாபாரிகளுக்கும் ஒரு பிரச்சினை என்றால் உடனே சொந்தமாக முடிவெடுத்து அமல் படுத்துகின்ற மாவட்ட ஆட்சியர் இப்படி வேலையிலிருந்து வாழ்விழந்து தவிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் அவர் பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் ஒரே வார்த்தையில் பேசி முடித்துக் கொண்டார். அதிகாரிகள்  நடவடிக்கை என்பது மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத வகையில் உள்ளது.

இதற்கு எதிராக களத்தில் இறங்கி நாம் போராடி, நம்முடைய உரிமைகளைப் பெறவேண்டும் என்பதே இந்த கோரிக்கை மனு கொடுத்தது உணர்த்தியது. இந்த அரசு கட்டமைப்பு மக்களுடைய பிரச்சினையை தீர்க்காது. இதற்கு அதிகாரிகளின் பேச்சே  நிரூபணமாக உள்ளது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மற்றும் பொது நலஅமைப்புகள்,
திருச்சி மாவட்டம்.

***

அடாவடி செய்யும் நுண் கடன் நிறுவனங்கள், சுய உதவி குழுக்களை எதிர்த்து திருச்சி லால்குடி பெண்கள் தொடர் போராட்டம் !

டந்த ஜுலை 16ஆம் தேதி நுண்கடன் நிறுவனம் கூபா சங்கமம், சுய உதவிக் குழுவான ஐடிஎஃப்சி குழுவின் மேலாளர்கள், வசூல் செய்பவர்கள் தொடர்ந்து போன் மூலமும், நேரடியாக வந்து பெண்களை அவமானப்படுத்தும் வகையிலும் இழிவுபடுத்தும் வகையிலும் பேசி கடன் வசூல் செய்கின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, லால்குடி காவல் நிலையத்தில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு, மக்கள் இமை கூட்டணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் பாதிக்கப்பட்ட பெண்களுடன் சென்று புகார் மனு அளித்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அவர்களின் மேல்  உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறிய காவல்துறையினர், வசூல் செய்பவர்கள் “போன் எடுக்கவில்லை…” என அலட்சியமாக பேசினார். ஏற்கனவே லால்குடி பகுதியில் அடாவடி நுண் கடன் நிறுவனங்கள் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி நெருக்கடி கொடுக்க கூடாது என ஒப்புதல் தெரிவிக்கும் வகையில் நுண் கடன் நிறுவனங்கள் கையெழுத்திட்டு கொடுத்தன. அதனடிப்படையில் அப்போது போராடிய சிபிஎம் தோழர்கள் மற்றும் பெண்களை சமாதானமடைந்தனர்.

அதன்பிறகு மறுநாளே “நாங்கள் அரசுக்கு பணம் கொடுத்து விட்டோம். அவர்கள் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது எனவும், பணம் கட்டவில்லை என்றால் நீ செத்து போயிரு, நான் உன் கணக்கை முடித்து விடுவேன்…” என கொலை மிரட்டல் விடுத்தும் பணம் கேட்டு கொண்டு வராத பெண்களை “அவ வீட்டுல என்ன பண்றாள் குளிக்கிறதுக்கு இதுதான் நேரமா…” என கேவலமாக பேசினார்கள். இச்செயலை கண்டித்து பெண்கள் மறுநாள் தாசில்தாரிடம் சென்று முறையிட்டனர் அங்கு தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் இருவரும் பிரச்சனை செய்த அவர்களை கைது செய்து சிறையில் அடையுங்கள் என ஆவேசமாக பேசினர்.

உடனே அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் “வாங்குன பணத்தை கட்ட மாட்டியா…” என்று அடாவடி நுண்கடன் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கி பேசினார்கள். அங்கு சென்ற ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு தோழர் சம்சுதீன் அவர்களிடம், “மரியாதை குறைவாக பேசி ஒன்னும் பண்ண முடியாது போ…” என்று அடாவடியாக அதிகாரிகள் பேசினர்.

படிக்க:
இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !
சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !

தாசில்தார் “நீ எங்க வேண்டுமானாலும் போய் புகார் கொடுத்துக்க.. நான் ஒன்னும் (நிறுவனங்கள் மீது) பண்ண முடியாது போ…” என்று ஒருமையில் பேசினார். நுண் கடன் நிறுவனம் வசூல் செய்யும் நபர்கள் கூறுவதைப்போல “அரசாங்கத்திடம் நிறுவனங்கள் பணம் கொடுத்துவிட்டார்கள்…” எங்களால் ஒன்னும் செய்ய முடியாது என்பதை அதிகாரிகள் சொல்லவில்லையே தவிர, நுண் கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசி கேவலமாக நடந்து கொண்டனர்.

இப்படிப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நுண்கடன் அடாவடி வசூல் செய்யும் நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் பெண்களை திரட்டி 22.07.2020 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தோம்.

மாவட்ட ஆட்சியர் “நான் என்ன செய்வது…” என கைவிரித்தார். பின்பு பெயரளவிற்கு ‘டிஎஸ்பி இடம் கூறி நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்’ என ஒப்புக்கு பேசினார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒரு மாவட்ட ஆட்சியர் மக்களுடைய குறைகளைக் கேட்க நேரமில்லை என்றும்; பெயரளவுக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறுவதை நினைத்து மிகவும் நொந்து போனார்கள்.

இந்த அதிகாரிகள் மக்களுக்காக இல்லை இந்த அரசு நிர்வாகம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும்; செல்வந்தர்களுக்கு மட்டுமே வேலை செய்யக் கூடியது என்பதை உணர்ந்தனர். களத்தில் இறங்கிப் போராடி அடாவடி செய்யும் கந்துவட்டி கும்பலான நுண் கடன் நிறுவன நபர்களை ஊரில் கட்டி வைப்பதும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி போராடுவதுமே ஒரே தீர்வு எனப் பேசினர்.

அடுத்த கட்டத்திற்கு லால்குடி பெண்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் இணைந்து போராட்டத்தை செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !

ரோனா உள்ளிட்ட பெருந்தொற்று நோய்க் கிருமிகள் உருவாகிப் பரவுவதற்கும், முதலாளித்துவப் பெருவீத உற்பத்தியால் இயற்கை சூழல் மாசுபட்டிருப்பதற்கும் இடையே நெருங்கிய தொடர்பிருப்பதைச் சுட்டிக்காட்டி, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்துப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களும் வல்லுநர்களும் எச்சரித்து வருகிறார்கள்.

இயற்கையையும் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க வேண்டுமென்றால், சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய திட்டங்களை, தொழில்களைத் தடை செய்ய வேண்டும். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்கள், விதிமுறைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும். இது பாமரனுக்கும் புரியக்கூடிய எளிய வழி. ஆனால், மோடி அரசோ இதற்கு நேரெதிர் திசையில் பயணிக்கிறது.

ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டங்களை மிகக் கேடாகத் தளர்த்த முயற்சிப்பதோடு, சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய 191 திட்டங்களுக்குச் சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாக அனுமதியும் கொடுத்திருக்கிறது, மோடி அரசு.

ஒரு மரத்தைச் சாய்ப்பதற்கு அதனைச் சிறுகச் சிறுக வெட்டுவதற்குப் பதிலாக, அதன் வேரில் வெந்நீரையோ, வேறு ஏதாவது இரசாயனத்தையோ ஊற்றிவிட்டால், அது எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் சிறுகச்சிறுகப் பட்டுப்போய் அழிந்துவிடும். அப்படிச் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் வேரில், திருத்தம் என்ற பெயரில் வெந்நீர் ஊற்றியிருக்கிறது, மோடி அரசு.

விசாகப்பட்டிணத்தில் இயங்கிவரும் எல்.ஜி. பாலிமெர் ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மூச்சுத் திணறலுக்குள்ளாகி உயிருக்கு போராடும் குழந்தை. (கோப்புப் படம்)

எந்தவொரு பெரிய திட்டங்களையும் தொடங்குவதற்கு முன்பாக, அத்திட்டம் அமையவுள்ள பகுதியின் சுற்றுப்புறச் சூழலில் அத்திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிய சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயாரிக்க வேண்டும் என்பதும், அத்திட்டம் குறித்து அப்பகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய விரிவான கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பதும் தற்போது நடைமுறையிலுள்ள சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையான விதிமுறைகள்.

இவை இரண்டையும் பெயரளவிலாவது பூர்த்தி செய்வதன் அடிப்படையில்தான் எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு முறையாகச் சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெறப்படவில்லை என்ற அடிப்படையில்தான் அத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்திருக்கிறது.

இந்த விதிமுறைகள் இரண்டையும் நடைமுறைப்படுத்துவதில் சில விதி விலக்குகள் உள்ளன என்றபோதும், இந்த விதிமுறைகளிலிருந்து தமக்கு முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் கோரிக்கை. 2006 -ஆம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடு விதிமுறைகளைத் திருத்தியிருப்பதன் மூலம் அம்முதலாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது, மோடி அரசு.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் ஊரடங்கு அறிவிப்பதற்குச் சற்று முன்னதாக வெளியிட்ட சுற்றுப்புறச் சூழல் தாக்கம் குறித்த அறிவிக்கை 2020, ஏற்கெனவே இருந்துவரும் விதிமுறைகளில் மூன்று முக்கியமான தளர்வுகளை முன்மொழிந்திருக்கிறது.

படிக்க:
சந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் !
‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !

முதலாவதாக, சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றியே, ஒரு திட்டத்தைத் தொடங்கவோ அல்லது ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் திட்டத்தை விரிவாக்கவோ அனுமதி அளிக்கிறது, இந்த அறிவிக்கை.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே, அது போல, சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கப்படும் திட்டங்கள் குறித்துப் பிற்பாடு ஒரு கமிட்டியைப் போட்டு ஆய்வு செய்வார்களாம். அந்த கமிட்டி தரும் அறிக்கை எதிர்மறையாக இருந்தால், ஒன்று திட்டத்தை ரத்து செய்வார்களாம்; இல்லையென்றால், அபராதம் விதித்துத் திட்டத்திற்கு அரசு இசைவு தெரிவிக்குமாம்.

முறைகேடுகள், விதிமீறல்களுக்கு ஏற்ப அபராதம் எப்பேர்பட்ட நியாயம்! பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளியைத் தண்டிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அக்காமுகனைத் திருமணம் செய்து வைக்கும் நிலப்பிரபுத்துவ கட்டப் பஞ்சாயத்துக்கும் இதற்கும் வேறுபாடு உண்டா?

ஒரு வனப்பகுதியையோ அல்லது விளை நிலத்தையோ அழித்து உருவாக்கப்படும் திட்டங்கள் பிற்பாடு ரத்து செய்யப்பட்டாலும், அழிக்கப்பட்ட இயற்கையை அல்லது எளிய மக்களின் வாழ்க்கையை பழையபடி மீட்டுருவாக்கம் செய்துவிட முடியுமா? திட்டம் தொடங்கிய பிறகு ஆய்வு, அனுமதி, ரத்து என்பதெல்லாம் இயற்கை மீது, மக்களின் வாழ்க்கை மீது ஏவிவிடப்படும் சதித்தனமான நாசவேலைகள்தான்.

மேலும், இந்தியாவின் அதிகார வர்க்க கமிட்டிகளின் யோக்கியதை என்னவென்பது நாம் அறியாததா? போபால் விஷவாயு விபத்து விசாரணையை நினைவுபடுத்திப் பாருங்கள். யார் சுற்றுப்புறச் சூழலை நாசப்படுத்துகிறார்களோ, அவர்கள்தான் அதற்குரிய தண்டத் தொகையைச் செலுத்த வேண்டும் (Polluters must pay) என்பதுதான் இயற்கை நீதி. ஆனால், உச்சநீதி மன்றமோ போபால் விஷவாயு வழக்கில் உரிய நட்ட ஈடு செலுத்துவதிலிருந்து யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் காப்பாற்றியது. இந்த உத்தரவால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடும், தொடர் மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சையும் கிடைக்கவில்லை. மாசுபடுத்தப்பட்ட அந்தப் பகுதி மீட்டுருவாக்கமும் செய்யப்படவில்லை.

இதுவொருபுறமிருக்க, கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சநீதி மன்ற நீதிபதி சந்திரசூட் சுற்றுப்புறச் சூழல் குறித்த வழக்கொன்றில் அளித்த தீர்ப்பில், திட்டம் தொடங்கிய பிறகு அனுமதி (post facto approval) வழங்க மைய அரசிற்கு அதிகாரம் கிடையாதென்றும், அப்படி அனுமதி வழங்குவது சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அடிப்படை நியதிகளுக்கு எதிரானதென்றும்” தீர்ப்பளித்திருக்கிறார். இத்தீர்ப்பை ஓரங்கட்டிவிட்டுத்தான் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது, மோடி அரசு.

இரண்டாவதாக, குறிப்பான சில திட்டங்களுக்கு அது செயல்படுத்தப்படும் பகுதிகளில் வாழும் மக்களிடம் கருத்துக்கேட்கத் தேவையில்லை எனக் கூறுகிறது, 2020 அறிவிக்கை. மற்ற திட்டங்களுக்குப் பொருத்தவரையில், பொதுமக்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த கால அவகாசத்தை 30 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைத்துள்ளது. மேலும், இத்திருத்தத்தில் குறிப்பான திட்டங்கள் என்பதற்கு எவ்வித வரையறையும் இல்லாததால், எல்லா திட்டங்களையும் இதன் கீழ் கொண்டுவந்து விடும் மோசடியும் இதனுள் மறைந்தே இருக்கிறது.

அதிகார வர்க்கத்தால் நடத்தப்படும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்துமே நாடகங்கள்தான். போலிசைக் குவித்து அச்சமூட்டும் விதத்திலும், அதனையும் மீறி மக்கள் எழுப்பும் மாற்றுக் கருத்துக்களை ஒதுக்கித் தள்ளிவிட்டும்தான் “கருத்துத் திணிக்கும் கூட்டங்கள்” நடத்தப்படுகின்றன. இந்தத் திருத்தமோ ஒப்புக்காகக்கூட அத்தகைய கூட்டங்களை நடத்தத் தேவையில்லை எனக் கூறி, அந்நாடகங்களுக்கு மங்களம் பாடிவிட்டது.

மூன்றாவதாக, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட கேந்திரமான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கும் சலுகையை வழங்குகிறது, 2020 அறிவிக்கை. ஆனால் இந்த வரைவறிக்கையில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட திட்டங்கள் என்றால் என்னவென்பதற்கு எவ்விதமான தெளிவான வரையறையும் இல்லை. கேந்திரமான திட்டங்கள் எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்வதன் வழியாக, எந்தவொரு திட்டத்தையும் அதனுள் கொண்டுவந்து சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பதையே காலில் போட்டு மிதித்துவிட முடியும். இதன் மூலம் இயற்கை வளங்கள் சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்ல, பொதுமக்களின் வாழ்வாதாரங்களையும் கேள்வி கேட்பாரின்றிக் கபளீகரம் செய்துவிட முடியும்.

இந்த மூன்று திருத்தங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால், இனி புதிய திட்டங்களுக்கோ அல்லது பழைய திட்டங்களின் விரிவாக்கத்திற்கோ சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடும் தேவையில்லை; பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை எனப் பொருள்படுகிறது. இவ்வாறான திருத்தங்கள் ஸ்டெர்லைட் போன்ற நாசகார ஆலைகளுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுவது போன்றதாகும்.

படிக்க:
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
கருப்பர் கூட்டம் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய் !

இவை ஒருபுறமிருக்க, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, அறிவிக்கை 2020 மிகவும் வெளிப்படையாக ரியல் எஸ்டேட் முதலைகளின் நலனை முன்னிறுத்திக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடும், மக்களின் கருத்தும் கேட்கப்பட வேண்டும் என இருந்த விதியை, 1,50,000 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலும் கட்டப்படும் கட்டுமானங்களுக்குக்கூட இவையிரண்டும் தேவையில்லை என்ற திருத்தத்தை முன்வைத்திருக்கிறது.

மேலும், மிக முக்கியமாக, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்போடு தொடர்புடைய தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்டுத் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டு வந்த பல்வேறு ஆணையங்களையும் ஒரே மண்டல அலுவலரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் கட்டமைப்பு சீர்திருத்தத்தையும் கொண்டுவந்திருக்கிறது, மைய அரசு. இம்மாற்றம் கார்ப்பரேட் முதலாளிகளுக்காகக் கொண்டுவரப்பட்டிருக்கும் ஒற்றைச் சாளர அனுமதி முறை தவிர வேறில்லை.

அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டப்படவுள்ள உலகின் மிக உயரமானதும், இந்தியாவிலேயே மிகப்பெரியதுமான திபாங்க் அணைக்கட்டுத் திட்டத்தை எதிர்த்து மிஷ்மி பழங்குடியின மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

இவற்றுக்கெல்லாம் அப்பால், தற்போது ஊரடங்கியிருக்கும் சூழலைப் பயன்படுத்தி டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம், அருணாச்சலப்பிரதேசத்தில் ஈடலின் அணை கட்டும் திட்டம், வேடந்தாங்கல் பகுதியிலுள்ள மருந்து தயாரிக்கும் ஆலை விரிவாக்கத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைப்பது, அசாமிலுள்ள பட்காய் யானைகள் வழித்தடப் பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பது, கோவாவிலுள்ள பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக நெடுஞ்சாலை அமைப்பது, கிர் தேசியப் பூங்கா பகுதியில் சுண்ணாம்பு சுரங்கம் அமைப்பது எனச் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்கக்கூடிய 191 திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியிருக்கிறது, மோடி அரசு.

நாடாளுமன்றம் கூடாதநிலையில், இந்த அனுமதியை எதிர்க்கட்சிகள் பிரச்சினையாக்கிவிடக் கூடாது என்பதற்காகவே 30 திட்டங்களைப் பற்றி விவாதிப்பதற்கென காணொலி கூட்டத்தைக் கண்துடைப்பு நடவடிக்கையாக நடத்தியிருக்கிறது. இவ்விவாதங்களில் திட்ட அனுமதிக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக, துறைசார்ந்த வல்லுநர்கள் எவரும் தமது கருத்தை முழுமையாகத் தெரிவிக்க வாய்ப்பளிக்காத வண்ணம் ஒவ்வொரு திட்டத்தின் மீதான கருத்தையும் வெறும் 10 நிமிடங்களுக்குள் தெரிவிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டதை எதிர்த்து 60 பிரமுகர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களது செயல்கள், “நீரோ மன்னனை நினைவுபடுத்துவதாக”ச் சாடியுள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்ட அறிவியல் அறிஞர்கள், தொழில்முறை வல்லுநர்கள் அடங்கிய 291 பேர் கொண்ட குழு, “நாடு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கையில், எவ்வித ஆய்வுகளுமின்றி பல்வேறு திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதை நிறுத்துமாறு” மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவர்களின் கடிதங்களெல்லாம் எங்கே போயிருக்கக்கூடுமென்று சொல்லத் தேவையில்லை. நல்வாய்ப்பாக, இவர்களுள் ஒருவரையும் நகர்ப்புற நக்சல்கள் என சங்கப் பரிவாரக் கும்பல் முத்திரை குத்தவுமில்லை.

மாற்றுக் கருத்து, ஜனநாயகம் ஆகியவற்றின் மீது மோடிக்கு எந்தளவிற்கு வன்மமும் வெறுப்பும் உண்டோ, அதே அளவிற்கு சுற்றுப்புறச் சூழல் விதிகளின் மீதும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் அமைப்புகள், செயல்வீரர்கள் மீதும் மோடிக்கு வன்மமும் வெறுப்பும் உண்டு. அவர் 2014 பிரதமர் பதவியில் உட்கார்ந்தவுடனேயே, அவரது அரசு பெருந்திட்டங்களுக்கான சுற்றுப்புறச் சூழல் அனுமதிக்கு இணையதள வழியில் விண்ணப்பித்தால் போதும் என ஒற்றைச்சாளர முறையைக் கொண்டு வந்ததும்; சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்துக் கருத்துத் தெரிவிப்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என அவரது அரசு அவதூறு செய்து வருவதும் இந்த வன்மத்தைப் புட்டு வைக்கின்றன.

சென்னை – எண்ணூர் கடல் பகுதியில் ஏற்பட்ட கச்சா எண்ணெய்க் கசிவால் படிந்த மாசை வாளிகளில் வழித்து அப்புறப்படுத்தும் தன்னார்வலர்கள் : எப்பேர்பட்ட தொழில்நுட்பம்!

ஓரளவிற்குக் கட்டுக்கோப்பான சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போதே, நமது நாட்டின் சுற்றுப்புறச் சூழல் எந்தளவிற்கு நாசப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு மாசடைந்த நொய்யல் ஆறு தொடங்கி பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். சென்னை எண்ணூர் கடல் பகுதியில் கப்பலில் இருந்து கொட்டிய கச்சா எண்ணெயை வாரி எடுக்க வாளிகளைப் பயன்படுத்திய அவலத்தை நாடே கண்டது. மாசடைந்து போன சுற்றுப்புறச் சூழலை மீட்டுருவாக்க இந்திய அரசிடம் உயர் தொழில்நுட்ப அறிவு எதுவுமில்லை என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்தியது.

இந்த நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பதற்கே வேட்டு வைக்கக்கூடிய திருத்தங்களை ஊரடங்கு நேரத்தில் கொண்டுவந்து, அவற்றைச் சட்டமாக்கிவிடத் துடித்து வருகிறது, மோடி அரசு.

இத்திருத்தங்கள் சட்டமாக்கப்பட்டால், சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் நீதிமன்றத் தடையை முடக்கிப்போட்டுவிட்டு நடைமுறைக்கு வரும். கர்நாடகா அரசு காவிரியில் கட்டத் திட்டமிட்டிருக்கும் மேகதாது அணையும், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்டத் திட்டமிட்டிருப்பதும் செயல் வடிவம் பெறும். மிகவும் முக்கியமாக, காவிரி டெல்டாவில் கேள்வி கேட்பாரின்றி ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு வழி திறந்துவிடப்படும். சுருக்கமாகச் சொன்னால், இத்திருத்தங்கள் தமிழகத்தைச் சுடுகாடாகவும், வறண்ட பாலையாகவும் மாற்றக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளன.

தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முதலீடுகளை ஈர்ப்பது என்ற தேன் தடவிய வார்த்தைகளுக்குள் ஒளிந்துகொண்டுதான், வடமாநில பா.ஜ.க. அரசுகள் தொழிலாளர் நலச் சட்டங்களை, முதலாளிகள் நலச் சட்டங்களாகத் திருத்தியுள்ளன. நாட்டின் கேந்திரமான அனைத்துத் துறைகளிலும் இந்தியத் தரகு முதலாளிகளையும் பன்னாட்டு நிறுவனங்களையும் அனுமதிப்பதற்கு ஏற்ப சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது என்ற போர்வையில் பெரும் வியாபாரிகளின் நலனை முன்னிறுத்தி அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இலவசமாகவும் மானியக் கட்டணத்திலும் வழங்கப்படும் மின் விநியோகக் கட்டமைப்பை ரத்து செய்யும் மின்சார திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாகத்தான் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்களிலும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கு ஏற்றபடி திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது, மோடி அரசு.

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தீர்வுகளை முன்வைத்து தனித்தனியாகப் போராடுவது எதிர்ப்புகளைப் பலவீனப்படுத்தக் கூடும். மாறாக, ஒரே தீர்வாக, கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளிலுள்ள அதிகாரத்தை மக்களின் கரங்களுக்கு மாற்றும் சமூக, பொருளாதார தீர்வை முன்வைத்துப் போராடுவதுதான் ஒரே மாற்று!

– பூங்குழலி
புதிய ஜனநாயகம், ஜூலை 2020.

இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !

நாளொன்றுக்கு 5000 என்று கொரோனா தொற்று நோய் தமிழகம் முழுவதும் பரவுகிறது. ஒவ்வொரு தெருவிலும் கொரோனாவைக் காணாத அண்டை வீட்டாரைக் பார்ப்பது அரிதாகவே உள்ளது. அதிலிருந்து தப்பிப் பிழைப்பவர்கள் அடுத்த வேளை உணவுக்காக சாலைகளில் வேலை தேடி இலக்கில்லாமல் அலைகிறார்கள். ஏற்கெனவே பார்த்த வேலைகள் கண்ணெதிரே காணாமல் போய்விட்டன. கட்டிட வேலையிலிருந்து காகிதம் பொறுக்கும் வேலை வரை, தலை சுமையிலிருந்து தள்ளுவண்டி வியாபாரம் வரை எதுவுமே நிரந்திரமில்லை. சிறு கடை வியாபாரிகளும் கொரோனாவுக்கு மத்தியில் – ஊரடங்கு தளர்வுக்கு மத்தியில் சென்னை நகரத்தில் மக்களோடு மக்களாக பயணித்தபோது கண்ட தெருவோரத் தொழிலாளார்களின் நிலைமைகள் இது.

***

சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் அருகில் இருக்கும் மாண்டியத் சாலை. உயர்தர வகுப்பினர் புழங்கும் பகுதி. நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு நுகர்பொருட்கள் விற்கும் வணிக வளாகங்கள். மதிப்பு மிகுந்த கார்களின் அணிவரிசை என்று இயல்பு நிலையில் இருந்தது அந்தப் பகுதி. அந்தச் சாலையின் ஓரத்தில் குணிந்த தலை நிமிராமல் பழைய செருப்புகளுக்கு மத்தியில் துவண்டு போய் சாலையை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார் செருப்புத் தைக்கும் தொழிலாளி.

எங்கள் பாதத்திலிருந்த செருப்பைப் பார்த்துக் கொண்டே ஏதாவது ரிப்பேரா சார்? என்றார்.

அவர் அருகில் அமர்ந்து ஏன் முகத்தில் மாஸ்க் போடாமல் இருக்கிறீர்கள். ஊரெல்லாம் நோயாக இருக்கிறதே என்றோம்.

செருப்புத் தைக்கும் தொழிலாளி கோவிந்தராஜ்.

அவர் சிரித்துக் கொண்டே, அதைப் போட்டுகிட்டா ஃப்ரியா வேலை செய்ய முடியல சார். மூச்சு முட்டுது, கசகசன்னு எரியுது என்று சொல்லிக் கொண்டே தனது டூல் பாக்ஸ் மூலையிருந்த அழுக்கடைந்த முகக்கவசத்தை எடுத்துப் போட்டுக்கொண்டே, சார் நான் பக்கத்துல இருக்குற சிந்தாதிரிப்பேட்டை ஆத்தங்கரை கூவத்துலதான் பொறந்தேன்.

எங்க அப்பா இதே இடத்துலதான் 30 வருசமா செருப்பு தச்சாரு. அவரு கொடுத்துட்டுப் போன சொத்துதான் இது. அதே பொருள வச்சுதான் பொழப்ப ஓட்டுறேன். இப்போ கொரோனா வந்து என் வயித்துல மண்ணள்ளி போட்டுருச்சு சார்.

இங்கே கார்ல வர்றவங்கல்லாம் பை நிறைய ஷூ எடுத்து வந்து ரிப்பேர் பண்ணுவாங்க. ஸ்போர்ட்ஸ் ஷூ, வாக்கிங் ஷூ, ஜாக்கிங் ஷூ, ஆபீஸ் ஷூ, சில்றன்ஸ் ஷூ… இன்னும் என்னென்னமோ சொல்வாங்க. வீட்டுல இருக்குற தாத்தா ஷூ, இது. அவர் மூட்டு வலிக்கு போடுறது, கால் வலிக்குப் போடுறது பத்துறமா பாத்து தை என்பாங்க.

அதுல சின்ன சின்ன ரிப்பேர்தான் செய்வேன். ஐம்பது நூறுன்னு கொடுப்பாங்க, நல்ல வேலை கெடச்சா ஒரு நாளைக்கு 1000 ரூபா கூட சம்பாதிப்பேன். இந்த கொரோனாவுல எல்லாம் அழிஞ்சு போச்சு. நாலு மாசமா வருமானம் இல்ல. யாரும் ரோட்டுல நடக்குறதே இல்ல. கடைசியில பசியில நாங்கதான் இப்ப தேஞ்சி போறோம். ஒரு நாள் போறது ஒரு யுகமா இருக்குது. இப்ப இருநூறு முன்னூறுகூட சம்பாதிக்க முடியல.

வீட்டு பக்கத்துல இருக்குற உப்பு மிளகா சாமான் கடையில சிறுகச் சிறுக பொருள் வாங்குனதுல 7000 ரூபா வரை கடனாயிடுச்சு. இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக்கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான். என் பொண்டாட்டி அந்தக் கடைக்குப் போறதுக்குக்கூட பயப்புடுது. அதனால விடியகால எழுந்து சொம்பு தூக்கி போயி டீ வாங்கி வர்ற வேலைய செய்யிறேன். அதுக்கே குறைஞ்சது 50 ரூபா வேணும். பேரப்பசங்களுக்கு பிஸ்கெட், பண்ணு, பொறைன்னு ஏதாவது வாங்கணும். கண்ணு முழுச்சாங்கன்னா எங்கே தாத்தான்னு கேப்பாங்க. இல்லையேன்னு போனா மனசுக்கு கஷ்டமாயிடும். பேரன் அழுவுறத பாத்தா எம் பொண்டாட்டி திட்டி தீத்திடுவா. நான் யாரைப் பாக்குறது, எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல, மனசு வெறுத்துப் போகுது.

இங்கே வந்து உக்காந்தா, சாயாந்திரம் வரைக்கும் ஒரு 200 ரூபா கூட தேற மாட்டேங்குது. இதுலவேற வேலை முடிஞ்சு 40 கி.மீ தாண்டி கண்ணகி நகர் பக்கத்துல இருக்குற பெரும்பாக்கத்துக்குப் போகணும். அங்கதான் எங்கள கெவர்ன்மெண்ட் தூக்கிட்டுப் போயி போட்டுருச்சு. இங்கே கூவம் ஆத்தங் கரையில 40 வருசமா இருந்தோம். கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு நிம்மதியா இருந்தோம். இப்போ மூனு பஸ் ஏறி இறங்கி தொழில் செய்யுறோம். இப்போ பஸ்ஸும் இல்ல, வேலையும் இல்ல. எப்படி சாப்பிடுறது? நீங்களே சொல்லுங்க சார் என்றார்.

***

க்கத்துல செருப்பு தைக்கிறவருதான் என் அப்பா. இங்கேயே பஞ்சர் கடை வச்சி பொழைக்கிறேன். எட்டாவது வரை படிச்சேன், அதுக்குமேல பள்ளிக்கூடம் போறத விட்டுட்டேன். படிப்பு வந்தாதானே சார் பள்ளிக்கூடம் போக முடியும். பள்ளிக்கு போகலன்னு டெய்லி எங்கம்மா என்ன அடிச்சிட்டு அதுவும் அழுவ ஆரம்பிக்கும்.

நான் ஸ்கூல் போகாம இருக்குறத பார்த்து, பக்கத்துல இருக்குற மெக்கானிக் ஷாப்புல வேலைக்கு விட்டுருச்சு. அங்கே அஞ்சு வருசம் வேலை கத்துகிட்டேன். இங்கே வந்து நாலு வருசம் ஆகுது. அதுல சம்பாதிச்சுதான் இந்த டூவிலர வாங்கினேன். இந்த வண்டியிலதான் டெய்லி எங்கப்பாவை வேலைக்கு கூட்டிட்டு வர்றேன். பிரேக் ஷூ மாத்துறது, செயின் டைட் பண்றது, ஸ்பார்க் பிளக் கிளீன் பண்றதுன்னு சின்னச் சின்ன வேலை வரும். இப்ப, அதுவும் குறைஞ்சு போச்சு.

வந்து போற பெட்ரோல் செலவே 150 ரூபா ஆகுது. டீ, டிபன், பான்பராக்குன்னு பாத்து பாத்து செலவு பண்ணுனாக் கூட ரெண்டு பேருக்கும் சேர்த்து 200 ரூபா ஆகும். இந்த செலவுக்குக்கூட சம்பாதிக்க வழியில்லாம இருக்கோம். வெறுமனே உக்கார்ந்திருந்தா வீட்டுல சண்டைதான் வருது. அதுக்கு பயந்துதான் இங்கே ஓடிவந்துடுறோம்.

சாயாந்திரம் வெறுங்கையோட வீட்டுக்குப் போனோமுன்னா கஷ்டமாயிடும். மறுநாளு எப்படிப் போகப்போகுதோன்னு கவலையாயிடும். அதுலேயே தூக்கம் வராது… என்று கொரோனாவினால் சிதைந்த வாழ்க்கையை ரணத்தோடு விவரித்தார். 22 வயதுக்கு உண்டான துடிப்பு துளியும் அவரிடம் இல்லை. அவர் பேச்சும் உடல் மொழியும் விபத்தில் நொறுங்கிய வாகனம் போல் உருக்குலந்து காணப்பட்டது.

தந்தையின் செருப்பு தைக்கும் கடைக்கு அருகிலேயே பஞ்சர் கடை வைத்துள்ள மகன் கணேஷா.

அவரைப் பார்த்து இங்கே உங்க வயசு பசங்க கேர்ள்ஸ் பிரண்டுகிட்டே பேசுறத பார்த்திருப்பீங்க. அப்ப உங்களுக்கு என்ன தோணும்… .

நிமிர்ந்து கூர்ந்து பார்த்தார். நானும் லவ் ‘பண்றேன் சார். அந்தப் பொண்ணு வீட்டுல, நான் செருப்பு தைக்கிறவரு பையன்னு அசிங்கமா பேசுறாங்க. அந்தப் பொண்ணுக்காக நான் பொறுத்துகிறேன் சார். ஒரு பங்க் கடை இந்த கெவர்ண்மென்ட் வச்சிகொடுத்தா அத வச்சி பெரிய ஆளா ஆயிடுவேன். கடை ஓனருன்னு அவங்க கிட்டே போயி நிப்பேன் சார், என்று தளர்ந்த குரலை மேலும் தாழ்த்திக் கொண்டே, பங்க் கடை போடுவதற்காக பலமுறை கவுன்சிலரிடம் கொடுத்த மனுக்களின் பிரதிகளை நம்மிடம் எடுத்துக் காண்பித்தார்.

சந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் !

சந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம்!

Thelede.in என்ற இணைய இதழில் நியூஸ் 18 விவகாரம் குறித்து சந்தியா ரவிசங்கர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைப் படித்த பிறகுதான் Professional Journalism என்பது பற்றி ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.

தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள சூழலில், அரசியல் மயமான தமிழ் ஊடகத்துறையில் நுழைகிறது பாஜக…பிரபல ஊடகவியலாளர்களை மதிப்பிழக்கச் செய்வது அதன் முதல் நகர்வு. உண்மை என்ன?” – இதுதான் கட்டுரையின் தலைப்பு. இதைப் பார்த்தவுடன் “கிழிந்தது பாஜக வின் மாஸ்க்” என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படித்தான் தோன்றும். ஆனால் அவசரப்படாதீர்கள்.

சந்தியா ரவிசங்கர்.

“புதிய தலைமுறை, நியூஸ் 18, காவேரி நியூஸ் போன்ற நிறுவனங்களில் சிறிது காலம் வேலை செய்திருக்கிறேன்” என்ற உண்மையை வாசகர்களுக்கு முதலில் தெரிவித்து விடுகிறார். Proffessionalism!

நியூஸ் 18 விவகாரம் பற்றி அவர் பல தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் விசாரித்தாராம். எல்லோரும் ஆத்திரமாய் அவதூறாய்ப் பேசினார்களேயொழிய யாரும் உண்மையைப் பேசவில்லையாம். “தமிழ் ஊடகத்துறையின் பலி கடாவே உண்மைதான்” என்று சொல்கிறார் சந்தியா.

“தமிழ் ஊடகங்கள் மத்திய அரசைத்தான் எதிர்க்கிறார்களே தவிர யாரும் மாநில அரசுகளை எப்போதுமே கேள்வி கேட்பதில்லை” என்று தொடங்குகிறார். எடுத்தவுடனே “துக்ளக் ஸ்மெல்” அடிக்கிறதே என்று எண்ண வேண்டாம். நடுநிலையாக ஒருவர் சிந்திக்கும்போது ஸ்மெல் வரத்தான் செய்யும்.

“தமிழ்நாட்டில் ஊடகங்கள் அரசியல் கட்சிகளோடு பின்னிப் பிணைந்திருப்பதால்தான் ஊடக உலகில் உண்மை செத்துவிட்டது. தமிழகத்தின் முக்கியமான செய்தி சானல்கள், பெரிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் தத்தம் கட்சிகளின் சித்தாந்தத்தைப் பிரச்சாரம் செய்வதற்குக் கூச்சப்படுவதில்லை” என்கிறார் சந்தியா. உடனே இது மாரிதாஸின் கருத்து என்று முத்திரை குத்தாதீர்கள். அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. Great minds think alike.

இருப்பினும், தமிழகத்தின் நச்சுச் சூழலில் இப்படி யாரேனும் முத்திரை குத்தக்கூடும் என்று அம்மையாருக்குத் தெரிந்திருக்கிறது. வெவரமாக முன்னாள் நீதிபதி சந்துருவிடம் ஒரு பேட்டி வாங்கி வைத்திருக்கிறார். “வரலாற்று ரீதியாகவே தமிழ் ஊடக உலகம் அரசியல் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. இதில் ரகசியம் ஒன்றும் இல்லை” என்று கூறுகிறார் சந்துரு. இது லெஃப்ட் இலிருந்து ஒரு கருத்து.

அப்புறம் வலதுசாரி. பாஜக வின் நாராயணன் திருப்பதியிடம் பேட்டி. “தமிழ்நாட்டின் 90% தொலைக்காட்சி ஊடகத்துறையினர் தி.க, திமுக சார்புடையவர்கள்” என்கிறார் அவர்.

நாராயணன் சொல்லப் போகிற உண்மைக்கு, நீதிபதி சந்துருவிடம் முன்கூட்டியே ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி, கட்டுரையில் தன்னுடைய கருத்துக்கும் நாராயணன் கருத்துக்கும் நடுவில் அதை வெட்டி ஒட்டி விட்டார். இதுக்குப் பேர்தான் நடுநிலை அல்லது Professionalism – கத்துக்கணும்!

படிக்க:
யார் இந்த மாரிதாஸ் ? | காணொளி
தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !

அடுத்தது டிவிட்டர் யுத்தத்தின் பின்புலம் என்ன என்கிற புலனாய்வைத் தொடங்குகிறார். “நியூஸ் 18 தொலைக்காட்சியில் 70% பேர் திக, திமுக ஆதரவாளர்கள்தான் என்று மாரிதாஸ் சொல்கிறார். 70% என்ற கணக்கை வந்தடைந்ததற்கான தரவுகளை மாரிதாஸ் தரவில்லை” என்கிறார் சந்தியா. 67% அல்லது 67.3% என்று துல்லியமாகச் சொல்லாமல் இப்படி குத்துமதிப்பாகப் பேசும்போது ஒரு Proffessional எப்படி அதைப் பொறுத்துக் கொள்ள முடியும்?

“நியூஸ் 18 தொலைக்காட்சியில், அலுவலகத்திலேயே ஒருவரை ஒருவர் தோழர் என்றுதான் அழைத்துக் கொள்வார்கள்” என்று மாரிதாஸ் தவறவிட்ட இன்னொரு ரகசியத்தையும் வெளியிடுகிறார். பிறகு, எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த சம்பவம் பற்றி மாரிதாஸ் சொல்வதை எழுதிவிட்டு, அந்தப் பிரச்சனை குறித்த தனது கருத்தை மிகவும் நயமாகப் பதிவு செய்கிறார்.

“சேகர் என்ற செல்லாக்காசுப் பேர்வழி, பெண் நிருபர்கள் பத்திரிகை ஆசிரியருடன் படுக்கிறார்கள் என்ற பதிவை முகநூலில் பகிர்ந்திருந்தார்” என்று எழுதுகிறார் சந்தியா. “இதெல்லாம் ஒரு மேட்டரா” என்பது அவர் கருத்து. அதை அப்படிச் சொல்லாமல் எப்படிச் சொல்கிறார் என்பதே அவர் ஒரு Professional journalist என்பதற்கான சான்று.

இவ்வாறாக… மாரிதாஸுக்கு சுமார் 600 வார்த்தைகளில் விரிவான கவரேஜ். அப்புறம் முடிக்கிற இடத்தில் “மாரிதாஸ் மாதிரி ஆட்களெல்லாம் பாஜக வின் சேறடிக்கும் பிரிவினர். ஆனால் பாஜக தலைவர்கள் (அதாவது நாராயணன் திருப்பதி) ரொம்ப கண்ணியமானவர்கள்” என்று தன்னுடைய கருத்தைப் பதிவு செய்கிறார்.

நியூஸ் 18 இன் தலைமை ஆசிரியர் வினய் சாராவாகியை தொடர்பு கொண்டு “ஆயிரக்கணக்கில் உங்களுக்கு இ மெயிலில் புகார்கள் அனுப்பப்பட்டிருப்பதாக மாரிதாஸ் சொல்கிறாரே” என்று கேட்டாராம் சந்தியா. “அப்படி சொல்வது பொய். மாரிதாஸின் ஃபிராடு நடவடிக்கை பற்றி நாங்கள் போலீசில் புகார் செய்திருக்கிறோம்” என்று அவர் பதில் சொன்னாராம். ஃபிராடு என்று தெரிந்த பிறகு மாரிதாசுக்கு அம்மையார் எதற்காக 600 வார்த்தைகளில் கவரேஜ் கொடுத்தார் என்று உங்களுக்கு கேள்வி எழலாம். இதற்கான பதிலை அவருடைய மொழியிலேயே முதலில் கேளுங்கள்.

“The News18 group, after the deluge of emails from Maridhas and his supporters, are said to have conducted an internal enquiry into the allegations.”

“மாரிதாஸின் ஆதரவாளர்களிடமிருந்து வெள்ளம் போல இ மெயில்கள் வந்ததைத் தொடர்ந்து, அந்த குற்றச்சாட்டுகளின் மீது நிர்வாகம் ஒரு உள்ளக விசாரணை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.”

எந்த குற்றச்சாட்டுகளின் மீது?

முந்தின பாராவில் வினய் சாராவாகி “ஃபிராடு” என்று எந்த மாரிதாசை சொன்னாரோ அந்த மாரிதாசின் குற்றச்சாட்டுகளின் மீது !

இந்த இடத்தில்தான் அம்மையார் லேசாக ஸ்லிப் ஆகிவிட்டார். “non-partisan, unbiased, apolitical” ஆக இருக்கவேண்டும் என்று எவ்வளவு முயற்சித்தாலும், சில இடங்களில் வழுக்கி விழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. என்ன செய்வது?

எவ்வளவு நேரம்தான் நடுநிலையா நடிக்க முடியும்?அப்புறம் இறங்கி பொளந்து கட்டுகிறார்.

“குணசேகரனை காப்பாற்ற திமுக ஐடி பிரிவும், திருமாவளவனும் எதற்காகக் களத்தில் குதிக்கிறார்கள். இதிலிருந்தே இது அரசியல்தான் என்று தெரியவில்லையா?”

“மாரிதாஸ் சொல்வது இருக்கட்டும், இப்போ கத்துகிற தமிழ் பத்திரிகையாளர்களெல்லாம் ரொம்ப யோக்கியமா? திராவிட இயக்கத்தின் காரணமாகத்தான் தமிழ்நாட்டின் ஊடகத்துறை நாசமாய்ப் போய்விட்டது”

“முதல்வரின் பிரஸ் மீட் நடந்து கொண்டிருந்தாலும், ‘மாட்டுக்கறி விருந்து, சூரிய கிரகணத்தில் விருந்து’ என்று தி.க காரர்கள் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால், உடனே லைவ் யூனிட்டை குணசேகரன் அங்கே போகச் சொல்வார். யாருமே கண்டுகொள்ளாத வீரமணியிடம் பல பிரச்சனைகளைப் பற்றிக் கருத்து கேட்கச் சொல்வார்.”

“விவாதங்களில் பா.ஜ.க-வினரை மற்றவர்கள் சத்தம் போட்டு அடக்குவார்கள், கேலி செய்வார்கள். குணசேகரன் வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்.”

“அம்பானியின் மற்ற ஆங்கில இந்தி சானல்களெல்லாம் பாஜக வை விமர்சிக்காமல் எச்சரிக்கையாக இருக்கும்போது, தமிழ் சானல் மட்டும் பாஜகவின் எதிரிகளான திமுக, திகவை ஆதரிக்கிறார்களே என்று பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். டெல்லிகாரன்களுக்குத் தமிழ் தெரியாதில்லையா, அந்த தைரியம்தான் இவர்களுக்கு”

பிறகு சந்தியா வரலாற்றில் குதித்து நீந்துகிறார். தமிழ்நாட்டில் பத்திரிகைத்துறை அரசியல் மயமானதற்கு திராவிட இயக்கம்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். அரசியல், நிர்வாகம், நீதித்துறை, ஊடகம் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து துறைகளிலும் கோலோச்சிய பார்ப்பன ஆதிக்கத்தின் எதிர்வினைதான் திராவிட இயக்கம் என்பது பற்றி ஒப்புக்குக் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை.

படிக்க:
‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !
உயர்சாதியினரால் நிரம்பிய ஊடக செய்தி அறைகள் !

1881-ல் சுப்பிரமணிய அய்யர் தொடங்கிய இந்து-விலிருந்து, நமது Professional journalist வரையிலான வரலாற்றைச் சொல்லிவிட்டு, முத்தாய்ப்பாக அவர் கூறியிருக்கும் கருத்துதான் மிகவும் கவர்ச்சியானது.

It is clear that in all of the most popular dailies, the DMK and the Congress have had major roles to play. Managements and editors are invariably tied to the ideologies of the DMK, many of them moving between politics and media roles without bothering about conflict of interest.

அதாவது, தமிழ்நாட்டின் எல்லா பிரபல நாளேடுகளும் திமுக – காங்கிரசின் செல்வாக்கில்தான் இருக்கின்றனவாம். தமிழ் இந்து, ஆங்கில இந்து, தினமலர், தினமணி, தினத்தந்தி, எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் கிரானிக்கிள் உள்ளிட்ட எல்லா பிரபல பத்திரிகைகளும்!

சுதந்திரமான தொலைக்காட்சியைத் தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று ஜீ டிவியும் ஸ்டார் குரூப்பும் முயற்சி செய்தார்களாம். அதை திமுக முறியடித்து விட்டதாம். ஜீ டிவியை “சுதந்திரமான சானல்” என்று அம்மையார் சொல்வதை நாம் வேண்டுமானால் ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் ஓனர் சுபாஷ் சந்திரா இதைக் கேள்விப்பட்டால் கொந்தளித்துவிடுவார்.

சரி. தமிழ் ஊடக உலகை உய்விப்பதற்கு அம்மையார் காட்டும் வழிதான் என்ன? “பத்திரிகைத் துறையை சித்தாந்தங்களிலிருந்து விடுவிப்பதுதான் இதற்குத் தீர்வு” என்கிறார் சந்தியா. இதற்கு ஆதரவாக சந்த்ருவிடம் இருந்து ஒரு மேற்கோள்.

“தமிழ் ஊடக உலகின் தற்போதைய தரத்தை வைத்துப் பார்க்கும்போது, பத்திரிகையாளர்கள் தொழில்முறையில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு வலுவான அறம் சார்ந்த விழுமியங்கள் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறேன்” என்ற சந்துருவின் மேற்கோளுடன் கட்டுரை முடிகிறது.

கட்டுரையோடு நாராயணன் திருப்பதியின் வீடியோ பேட்டியும் இருக்கிறது. நாராயணன் பேசுகிறார், பேசுகிறார், பேசிக்கொண்டே இருக்கிறார். “ஏம்மா.. நானே பேசிக்கிட்டிருந்தா பாக்கிறவங்க நம்ப மாட்டாங்கம்மா. என்னை மடக்கி சூடா ரெண்டு கேள்வியாவது கேளுங்கம்மா” என்று நாராயணனே கெஞ்சுகிறார்.

மொத்தத்தில் ஆங்கிலத்தில் 4200 வார்த்தைகளில் ஒரு வேலை வாய்ப்பு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார். அப்பவும் புரிய வேண்டியவர்களுக்குப் புரியவில்லை என்றால், ஒரு professional journalist இதற்கு மேல் வெளிப்படையாக எப்படிப் பேச முடியும்?

குறிப்பு :

சங்கிகள் தொடுத்து வரும் தாக்குதலுக்கு எதிரான குரல்கள் வலிமையாக ஒலித்துக் கொண்டிருக்கும் போதே, நியூஸ் 18 இலிருந்து இருவர் விலகியிருக்கின்றனர். நீக்க வேண்டியவர்களிடம் விலகல் கடிதம் எழுதி வாங்குவதுதான் ஊடக நிறுவனங்களின் மரபு என்பதால் இது நீக்கம்தான் என்பதில் ஐயமில்லை.

முகநூலில் பெரியார் படம், நீலச்சட்டை பேரணியில் பங்கேற்பு என்ற காரணங்களுக்காக 5,6 நாட்களுக்கு முன்னரே இளைய பாரதி என்பவர் நீக்கப் பட்டிருப்பதாக ஒரு செய்தி. ஆசிஃப் நீக்கப் பட்டிருக்கிறார் என்று நேற்றிரவு ஒரு செய்தி. பொறுப்பில் குணசேகரன் இருக்கும்போதுதான் இவை நடந்திருப்பதாகத் தெரிகிறது. அவரே பொறுப்பேற்று இவர்களைப் பணியில் இருந்து நீக்கியிருப்பதாகவும் தெரிகிறது. என்ன நடந்தது என்பது குறித்து அவர் பேச வேண்டும்.

தனிப்பட்ட நபர்களின் வேலையைக் காப்பாற்றிக் கொடுப்பதற்காகத் தமிழகம் குரல் கொடுக்கவில்லை. தமிழகத்தைப் பார்ப்பன பாசிசத்திலிருந்து காப்பாற்றும் நோக்கத்துக்காகத்தான், பல்வேறு அரசியல் வேறுபாடு கொண்டவர்களும் குரலெழுப்புகிறார்கள். இருப்பினும், பேச வேண்டியவர்கள் பேசாமல் தொடர்ந்து மவுனம் சாதிப்பது நியாயமல்ல.

நன்றி : ஃபேஸ்புக்கில்ஊடக கண்காணிப்பு

சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !

மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என மோடியால் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட இந்தியாக்களெல்லாம் பல்லிளித்துவிட்ட நிலையில், சுயசார்பு இந்தியா என்றொரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், மோடி.

அவரது அரசால் திணிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை உள்ளூர் தொழில்களை ஒழித்துக்கட்டிவரும் நிலையில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு, இந்தியாவை உலக பிராண்டாக மாற்றப் போவதாகக் கூறிக் கொள்கிறது.

சுயசார்பு இந்தியா அறிவிப்புக்கு இணையாக, எல்லைப்புறத்தில் இந்தியா சீனா இடையேயான மோதலைக் காட்டி, சீனப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரும் போராட்டங்களை சங்கப் பரிவார அமைப்புகள் நடத்தி வருகின்றன. மேலும், மைய அரசின் சில அமைச்சகங்கள் சீனாவுடன் செய்துகொண்ட முதலீட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் முன்னரே, புதிய சீன முதலீடுகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது, மைய அரசு.

ஆர்.எஸ்.எஸ். கம்யூனிச வெறுப்பும், சீன எதிர்ப்பும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், சுயசார்பு பொருளாதாரக் கொள்கைக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும் ஒட்டும் இருந்தது கிடையாது, உறவும் இருந்தது கிடையாது.

சுதேசி, சுயசார்பு என்பவையெல்லாம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துடன் தொடர்புடைய தேசியப் பொருளாதாரக் கொள்கைகள். இந்திய மக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை உள்ளிட்ட பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் ஆங்கிலயே ஏகாதிபத்தியவாதிகளின் காலை நக்கிக் கொண்டிருந்தது உலகமே அறிந்த வரலாற்று உண்மை.

மன்னர் மானிய ஒழிப்பையும், வங்கி தேசியமயமாக்கப்பட்டதையும் எதிர்த்த கட்சிதான் பா.ஜ.க.வின் மூதாதையரான ஜனசங்கம். அக்கட்சி பா.ஜ.க.வாக மறுஅவதாரம் எடுத்த பிறகு, காந்திய சோசலிசம் எனப் பிதற்றிக் கொண்டு திரிந்தது. காங்கிரசு கட்சி நேருபாணி சோசலிசத்தைக் கைவிட்டுத் தனியார்மயம் ஏற்றுக்கொண்டவுடன், தனது பொருளாதாரக் கொள்கையை காங்கிரசு திருடிக்கொண்டுவிட்டதாகப் புலம்பியது, பா.ஜ.க. இன்னொருபுறத்திலோ சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கித் தனியார்மய எதிர்ப்பு கபட நாடகத்தையும் நடத்தி வந்தது.

வாஜ்பாயி தலைமையில் அமைந்த பா.ஜ.க. கூட்டணி அரசோ, உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைகளை ஏற்று அந்நியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்குவதில் புதிய சாதனை படைத்தது. ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் சேவை செய்வதில் வாஜ்பாயி எட்டடி பாய்ந்தாரென்றால், மோடியோ பதினாறு அடி பாயக் கூடியவர் என்பதை குஜராத்தில் நிரூபித்துக் காட்டி, அதன் மூலமாகத்தான் பிரதமர் நாற்காலியையே பிடித்தார். இதுதான் பா.ஜ.க.வின் பொருளாதாரக் கொள்கை வரலாறு.

படிக்க:
அடாவடி நுண்கடன் நிறுவனங்கள் ! பெண்களை துணிவோடு எதிர்கொள்ள வைக்கும் மக்கள் அதிகாரம் !
தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !

இப்படிப்பட்ட பின்னணி கொண்ட பா.ஜ.க.வின் சுயசார்பு அறிவிப்பு குறித்து நாம் சந்தேகங்கொள்வது இருக்கட்டும். தமது இந்த அறிவிப்பின் மீது மேற்குலக ஏகாதிபத்தியங்கள் சந்தேகம் கொண்டுவிடக் கூடாது என்ற கவலையில், சுயசார்பு இந்தியாவை அறிவித்த கையோடே, “சுயசார்பு இந்தியா உலகப் பொருளாதாரத்துடன் முழுமையாக ஒருங்கிணைந்தே செயல்படும்” என விளக்கமளித்தார் மோடி.

இந்த விளக்கத்திற்குப் பொழிப்புரை எழுதியிருக்கும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, சுதந்திரப் போராட்ட காலப் பின்னணி காரணமாக, சுதேசி என்றால் வெளிநாட்டுப் பொருட்களை பகிஷ்காரம் செய்வது என்கிற எதிர்மறை அர்த்தம் இருப்பதால், சுயசார்பு (ஆத்ம நிர்பர்) என்கிற காலத்துக்கேற்ற ஆக்கப்பூர்வமான பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் மோடி. உள்நாட்டுப் பொருட்களை உலக பிராண்டுகளாக மாற்றும் முயற்சிதான் “இச்சுயசார்பு இந்தியா” எனக் குறிப்பிடுகிறார்.

இப்பொழிப்புரையின்படி ஆங்கிலேய காலனி எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட சுதேசிக்கும் மோடி அறிவித்திருக்கும் சுயசார்பு இந்தியாவிற்கும் இடையே எந்தவொரு தொடர்பும் கிடையாது என்றாகிறது. அவ்வாறென்றால், இப்புதிய அறிவிப்பின் உண்மையான பொருள்தான் என்ன?

***

1947 பிறகு இந்தியா தன்னை சுயசார்பு கொள்கை கொண்ட நாடாகக் காட்டிக் கொள்வதற்கும், உணவு உற்பத்தி உள்ளிட்டுப் பல்வேறு துறைகளில் ஓரளவு தன்னிறைவு கொண்ட நாடாகப் பரிணமிப்பதற்கும் அடிப்படையாக இருந்தவை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்தான். மோடி அரசு அறிவித்திருக்கும் சுயசார்பு இந்தியா திட்டமோ பொதுத்துறையை, அதன் சுவடே தெரியாமல் அழித்துவிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது, அனைத்தும் கார்ப்பரேட்மயம் என்பதுதான் மோடி அறிவித்திருக்கும் சுயசார்பின் பொருள்.

கேந்திரமற்ற துறைகளில் செயல்பட்டு வரும் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும் என்றும், கேந்திரமான துறைகளில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை நான்காகக் குறைக்கப்படுவதோடு, அவற்றிலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிக்கப்படும் என அறிவித்து, சுயசார்பு இந்தியா என்ற போர்வையில் பொதுத்துறையே இல்லாத இந்தியாவை உருவாக்கிட முயலுகிறார், மோடி.

பாரத் பெட்ரோலியம், எல்.ஐ.சி., தொடங்கி ரயில் வழித்தடங்கள் வரையிலுமான பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதன் மூலம் இந்த நிதியாண்டில் மட்டும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டவுள்ளதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. பொதுச் சொத்துக்களை விற்றுக் கிடைக்கும் இந்தப் பணத்தை பட்ஜெட் பற்றாக்குறையை ஈடு செய்து கொள்ளவே மோடி அரசு பயன்படுத்தும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மென்மேலும் வரிச் சலுகைகளை அளிப்பதாலும், கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் வரி ஏய்ப்புகளில் ஈடுபடுவதாலும், அக்கும்பல் தாம் வாங்கிய வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த மறுப்பதாலும்தான் நாடு பெரும் பற்றாக்குறையில் சிக்கியிருக்கிறது. அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தும் கார்ப்பரேட் வரி விகிதங்களை அதிகரித்தும் இப்பற்றாக்குறையை ஈடுகட்ட மறுக்கும் மோடி அரசு, சுயசார்பு என்ற போர்வையில் நாட்டின் வளங்களை அடிமாட்டு விலைக்கு அக்குற்றவாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுக்கவிருக்கிறது.

இத்தனியார்மயத்திற்கு அப்பால், தொலைத் தொடர்பு, மோட்டார் வாகன உற்பத்தி, உரம் தயாரிப்பு உள்ளிட்ட இரசாயனத் துறை, ஜவுளித் துறை, விமான போக்குவரத்து, காபி, தேநீர் எஸ்டேட்டுகள், சுரங்கத் துறை, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ஆயுதத் தளவாட உற்பத்தி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, தொடர்வண்டித் துறையின் அடிக்கட்டுமானங்கள், தொழிற் பூங்காக்கள், மொத்த வியாபாரம், மருந்து உற்பத்தி, மின்னணு வர்த்தகம் ஆகியவற்றில் 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கும்; தனியார் வங்கித் துறையில் 74 சதவீத அந்நிய முதலீட்டிற்கும்; காப்பீடு துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டிற்கும் அனுமதி அளிக்கும் தாராளமய சீர்திருத்தங்களை அறிவித்திருக்கிறது, மோடி அரசு.

கேந்திரமான துறைகளை அந்நிய முதலீட்டிற்குத் திறந்துவிட்டுவிட்டு, சுயசார்பு இந்தியா என முழங்குகிறார், மோடி. படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் போலும்!

***

ந்தத் தனியார்மய, தாராளமய சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் இந்தியா இறக்குமதியைச் சார்ந்திராமல் தன்னிறைவு அடையும் என நியாயப்படுத்தும் சங்கிகள், அதற்கு உதாரணமாக நிலக்கரித் துறையைக் காட்டுகிறார்கள். இந்தியாவில் நிலக்கரி வளம் அபரிதமாக இருந்தும், இன்னமும் நமது தேவைக்கு அந்நிய இறக்குமதியைச் சார்ந்திருக்கிறோம் என்றும், இந்த நிலைமையை மாற்றத்தான் நிலக்கரி சுரங்கத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்நடவடிக்கைளின் மூலம் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கக் கூடும். அதனால் இந்திய மக்களுக்கு ஏதேனும் நன்மை கிட்டுமா என்பதுதான் கேள்வி. உதாரணத்திற்கு, உணவு உற்பத்தியை எடுத்துக் கொள்வோம். அத்துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், சத்தான உணவு கிடைக்காமல் அரைகுறைப் பட்டினியால் நோஞ்சான்களாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில், போதிய ஊட்டச்சத்து இன்றி இரத்த சோகையால் பீடிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருந்துவருகிறது.

வெறும் 105 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடந்த ஆண்டு மட்டும் 21 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசின் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறது (பிரண்ட்லைன், ஜூலை 17, 2020). வருடாவருடம் பல்லாயிரம் கோடி இலாபம் ஈட்டும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இப்படிப்பட்ட பங்களிப்பை எதிர்பார்க்க முடியுமா? ஆபத்தான, நெருக்கடியான காலக்கட்டங்களில்கூடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது இலாபத்தை விட்டுக் கொடுக்க முன்வருவதேயில்லை என்பதே உண்மை.

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவமனை படுக்கைகளில் (13,70,000) 8,33,000 படுக்கைகள் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன. ஏறத்தாழ 60 சதவீதத்திற்கும் மேலான படுக்கை வசதிகளைத் தம்வசம் வைத்திருக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் கரோனா தொற்றைக் கொள்ளை இலாபம் அடிக்கக்கூடிய வாய்ப்பாகத்தான் கருதுகின்றனவேயொழிய, அவை ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில்கூட சிகிச்சை அளிக்க முன்வரவில்லை.

எனவே, உற்பத்தித் துறையை, சேவைத் துறைகளை இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தாரை வார்ப்பதன் வழியாக கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தமக்குக் கிடைக்கும் இலாபத்தில் தன்னிறைவு அடைவார்களேயொழிய, இந்தியா தன்னிறைவு அடையப் போவதில்லை. மேலும், கேந்திரமான துறைகளில் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் 100 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி அளித்திருப்பதன் மூலம் இந்தியாவின், இந்திய மக்களின் எதிர்காலத்தை மேற்குலக ஏகாதிபத்தியங்களிடம் முழு அடமானம் வைக்கும் துரோகத்தை நிகழ்த்தியிருக்கிறது, பார்ப்பன பாசிசக் கும்பல்.

படிக்க:
அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு
பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! திருச்சியில் பு.மா.இ.மு போராட்டம் !

***

மோடியின் சுயசார்பு ஒருபுறம் மேற்குலக ஏகாதிபத்தியங்களிடம் முழுச் சரணாகதி அடைகிறது; இன்னொருபுறத்திலோ சீன முதலீடுகளையும், சீனப் பொருட்களையும் புறக்கணிக்கும் குறுகிய தேசிய வெறியைத் தூண்டிவிடுகிறது.

இன்றைய இந்தியாவின் தொழிற்துறை உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள், இடைநிலைப் பொருட்களில் பெரும்பகுதியும்; செல்போன் உள்ளிட்ட பல்வேறு விதமான நுகர்பொருட்களும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் சீனப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு அறைகூவல் விடுத்திருப்பது கேலிக்கூத்தாகவே முடிவடையும்.

இந்த உண்மை ஆளும் பா.ஜ.க. கும்பல் அறியாததல்ல. ஆனாலும், சீனாவை இந்தியாவின் உடனடியான, அபாயகரமான எதிரியாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் கட்டமைக்க முயலுவதற்குக் காரணம், பா.ஜ.க.வின் அமெரிக்க அடிமைத்தனம். ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நம்பகமான அடியாளாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுவதற்கு சீன எதிர்ப்பை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொள்ளத் திட்டமிடுகிறது, ஆளும் பா.ஜ.க. அதனால்தான் அமெரிக்காவில் மழை அடித்தால் இந்தியாவில் குடை பிடிக்கிறது, ஆர்.எஸ்.எஸ். இந்திய எல்லைப்புறத்தில் இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் பதற்றத்தையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் காண வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், மோடியின் சுயசார்பு நாட்டைத் தன்னிறைவு அடையும் பாதையில் அழைத்துச் செல்லப் போவதில்லை. மாறாக, இந்திய நாட்டையும், மக்களையும் மறுகாலனியாக்கம் என்ற மரணக்குழிக்குள் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்லக்கூடிய தீமையாகவே அமையும்.

– இளமுருகு
புதிய ஜனநாயகம், ஜூலை – 2020

யார் இந்த மாரிதாஸ் ? | காணொளி

மிழ் ஊடகங்களில் காவிகளைப் புகுத்தும் வேலைக்காக அடியாளாக செயல்பட்டவர் மாரிதாஸ். அதுமட்டுமல்லாது தொடர்ந்து தனது பேச்சில் பெரியாரையும், மார்க்சியத்தையும் வசைமாறி பொழிவதும், பொய்களை சத்தமாக பேசுவதும், புள்ளிவிவரம் என்று எக்சல் ஷீட்டை வைத்து பிதற்றுவதும் அவரது வழக்கம். தமிழகத்தின் ‘சிறந்த ஊடகவியலாளர்’ என பொறுக்கி நித்தியானந்தா வாயால் ஆசி பெற்றதிலிருந்தே இவரது மாகத்மியத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இவர் தமிழக ஊடகங்களில் பெரியாரிய கொள்கைகள் மற்றும் இடதுசாரி கொள்கை கொண்டவர்கள் ஊடுருவி தங்கள் கருத்துக்களைப் புகுத்துகின்றனர் என பிதற்றினார். அத்துடன் நிற்காமல் ஊடகவியலாளர்களது குடும்ப விவரங்களை வெளியிட்டு அவதூறு பரப்பினார். இந்நிலையில் இந்த மாரிதாஸ் யார் என பலரும் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றியும்; அவரது பேச்சில் உள்ள பொய்களையும், அவதூறுகளையும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் Surya Xavier என்ற யூடியூப் சேனலில் மாரிதாஸ் யார்? அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்… என ஒரு காணொளி வெளியாகியுள்ளது. இதில் தோழர் சேவியர் மாரிதாஸின் மொத்த விவரங்களையும் புட்டு வைக்கிறார். பாருங்கள்… பகிருங்கள்…

https://youtu.be/eVbx0fjqzlc

நன்றி : Surya Xavier.

disclaimer

அடாவடி நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உதயம் !

பத்திரிக்கைச் செய்தி

பெண்களை மிரட்டும் நுண்கடன் நிறுவனங்கள்! பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச சட்ட உதவி !

கொரானா பேரிடரின் காரணமாக தொடர் ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமலும், வேலை இழப்பு ஏற்பட்டும் கடுமையான நெருக்கடிகளுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

இதை கருத்தில் கொண்டே மத்திய, மாநில அரசுகள் இலவச அரிசி, மாதம் ஆயிரம் ரூபாய் என சில மாதங்கள் கொடுத்தன. இதை வைத்து உயிர் வாழ முடியாது எனினும் அருகமையில் கிடைக்கும் விவசாய வேலைகள், 100 நாள் வேலைகள், கட்டிட வேலைகளின் மூலம் அற்பான அளவு சம்பாதித்து மூன்று வேலை உணவு உட்கொள்வதே முடியாத நிலையில் பல குடும்பங்கள் உள்ளன.

இந்த நிலையில் தான் மத்திய ரிசர்வ் வங்கி 6 மாதங்கள் வரை அதாவது ஆகஸ்டு 31 வரை அனைத்து வங்கிகள், நுண்கடன் நிறுவனங்கள் என அனைத்தும் மக்களை கட்டாயப்படுத்தி தவணைகளை வசூலிக்கக் கூடாது என உத்திரவிட்டுள்ளது. ஆகஸ்டு 31 வரை அவகாசம் போதாது, ஆகவே இன்னும் பல மாதங்கள் வரை அவகாசம் வேண்டும் என பல பொருளாதார நிபுணர்கள் தொடர்ச்சியாக அரசுக்கு ஆலோசனை கொடுத்துவருகின்றனர்.

எதையும் காதில் வாங்காத நுண்கடன் நிறுவனங்கள் மிரட்டியதால் பல இடங்களில் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டப்பிறகு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆகஸ்டு 31 வரை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவும் பிறப்பித்தனர். இது அனைத்து பத்திரிக்கையிலும் செய்தியாக வெளிவந்தன. இந்த நிலையில் நுண்கடன் நிறுவனங்கள் தவணைகளை பெண்களை கட்டாய்படுத்தி வசூல் செய்து வருகின்றன.

போதாதக்குறைக்கு வட்டி, வட்டிக்கு வட்டி என்று கொடூரமாக சுரண்டுகின்றன. சில மாதங்கள் வீட்டில் உள்ள நகையை விற்றோ, கடன் வாங்கியோ கட்டி வந்தனர். தற்போது எந்த வாய்ப்பும் அவர்களிடம் இல்லை. ஆனால் இந்த நிறுவனங்களின் மேலாளர்கள், ஏஜென்டுகள் பெண்களை அவமானப்படுத்துவது, பல இடங்களில் கெட்ட வார்த்தைகளைக் சொல்லி திட்டும் நிலையும் பார்க்கிறோம். பலர் பெண்களின் வீட்டின் முன்னனால் இரவு வரை அடாவடியாக உட்கார்ந்து விடுகின்றனர்.

படிக்க:
நிவாரணம் இல்லை ! 100 நாள் வேலையும் இல்லை ! நுண்கடன் தொல்லை ! குமுறும் டெல்டா மக்கள்
தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !

இதை மனுவாக எழுதி பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், காவல் துறை கண்டு கொள்ளாமல் விடுவதோடு, “பணம் வாங்குனா கட்டிதானே ஆகனும்” என்று நிறுவனத்திற்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர். அரசும் இது வரை கண்டு கொள்ளவில்லை. ஆகவே வேறு வழியின்றி பெண்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகி செய்வதறியாது உள்ளனர்.

திருபனந்தாள், பேரளம் ஆகிய இடங்களில் தூக்குமாட்டி, தீக்குளித்து இரு பெண்கள் இறந்துள்ளனர். போலீசு இதை தெரிந்தும் மறைப்பதிலே குறியாக உள்ளது. ஆகவே இந்த நிலையில் தான் சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்கள் நாங்கள் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவியும், அவர்கள் பிரச்சனைகளுக்கு ஆலோசனையும் கொடுப்பதற்கு முன்வந்துள்ளோம்.

இதற்காக “பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம்” என்கிற அமைப்பின் கீழ் பெண்களின் பிரச்சனையை முன்னெடுப்பதோடு, இலவச சட்ட உதவியையும் கொடுக்க தயாராக உள்ளோம்.

பெண்கள் தொடர்பு கொள்ள வேண்டிய சட்ட உதவி எண்கள்:

தஞ்சை மாவட்டம்:
1. வழக்கறிஞர் E. சதீஷ்குமார் M.A.B.L., – 9865873426
2. வழக்க றிஞர் M. நாகேந்திரன் B.A.B.L., – 9894598561

குடந்தை வட்டம்:
வழக்கறிஞர் சிவ.குருமூர்த்தி
B.A.B.L., – 9345571278

திருவாரூர் மாவட்டம்:
வழக்கறிஞர் K. பிரகாஷ் B.A.B.L., – 9865320348

நாகை மாவட்டம்:
வழக்கறிஞர் சரவணத்தமிழன் BSc., BL., – 8903659941

இப்படிக்கு,
வழக்கறிஞர் E. சதீஷ்குமார் M.A.B.L.,
சட்ட ஆலோசகர், பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம்.
தஞ்சாவூர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

அடாவடி நுண்கடன் நிறுவனங்கள் ! பெண்களை துணிவோடு எதிர்கொள்ள வைக்கும் மக்கள் அதிகாரம் !

  • அடாவடியாக பெண்களை மிரட்டும் நுண்கடன் நிறுவனங்கள்! இரத்தக்கண்ணீர் வடிக்கும் பெண்கள்!
  • பெண்களை துணிவோடு எதிர்கொள்ள வைக்கும் மக்கள் அதிகாரம்!

கொரோன ஊரடங்கால் முடங்கி கிடக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை “வாழ்வா சாவா” என்கிற நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் நுண் கடன் நிறுவனங்கள் பெண்களை மிரட்டி, அவமானப்படுத்தி, வெளியே சொல்ல முடியாத அளவிற்கு கூனிகுறுக வைத்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி கடன் தவணைகளை கட்டாயப்படுத்தி வாங்கக்கூடாது என்று உத்தரவிட்டதையும் மீறி கொடூரமான வசூல் வேட்டையை நுண்கடன் நிறுவனங்கள் விடுவதாயில்லை.

இதை கண்டித்து பெண்கள், மக்கள் அதிகாரம் உட்பட பல ஜனநாயக இயக்கங்கள் அரசின் கவனதிற்கு கொண்டு சென்ற பிறகு பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் ஆகஸ்டு 31 வரை எந்த நுண்கடன் நிறுவனமும் பெண்களை கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டனர்.

ஆனால் ‘அதெல்லாம் எங்களை கட்டுபடுத்தாது’ என்கிற திமிரில் நுண்கடன் நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்கள் அடாவடி தனத்தை அதிகப்படுத்திக்கொண்டே சென்றனர். இந்த நிலையில் மக்கள் அதிகாரம் சார்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ளுங்கள் என்று தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அதற்கு பிறகு தினந்தோறும் சராசரியாக ஒரு நாளைக்கு 50 நபர்களுக்கு மேல் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும், ஆலோசனைகள் பெற்றும் வருகின்றனர். இதுவரை பல 100 பேர் தொடர்பு கொண்டும் பேசியுள்ளனர். பலர் தொடர்பு கொண்டு கதறி அழுகின்றனர், சில ஆண்களும் கதறி அழுது புலம்புகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியில் உள்ள பெண்கள் மக்கள் அதிகார தோழர்களுடன் இணைந்து கலெக்டரிடம் மனுக்கொடுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பெண்கள் இணைந்து மனுக்கொடுத்தனர், தஞ்சை கீழவாசலில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து, நிறுவனங்கள் யாரும் பெண்களை ஆகஸ்டு 31 வரை பணம் கட்ட வற்புறுத்தக்கூடாது என எழுதி வாங்கப்பட்டது.

தஞ்சை, கீழவாசல் காவல்நிலையத்தில் பெண்கள் முன்னால் “ஆகஸ்டு 31 வரை” வசூல் செய்யக்கூடாது என எழுதி வாங்கப்பட்டது.

ஆனால் மற்ற இடங்களில் உள்ள காவலர்கள் “கடன் வாங்குனா கட்டி தானே ஆகனும்” என்று திமிராக நிறுவனங்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டனர். நிறுவன மேலாளர்கள், ஏஜென்டுகள் நடந்து கொள்வது ‘சட்டவிரோமானது’ என பேசியும், வலியுறுத்தியும் வழக்கு பதிய மறுக்கின்றனர்.

பல பெண்கள் அழுது புலம்பி, கண்ணீர் வடிக்கும் போது தொலைபேசியிலேயே “நீங்கள் ஒன்றும் அடிமையில்லை, நியாயம் உங்கள் பக்கம் உள்ளது, எதிர்த்து சண்டைபோடுங்கள்” என்கிற வகையில் ஆலோசனைகள் கொடுக்கும் போது அதன் அடிப்படையில் நம்பிக்கையோடு பெண்கள் எதிர்கொண்டதை பார்க்க முடிந்தது.

ஆகவே அனைத்து பெண்களையும் கடன் நிறுவனங்களை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த கட்டமாக பல நூறு சுவரொட்டிகள் 3 மாவட்டங்கள் முழுக்க பரவலாக ஒட்டப்பட்டன.

இந்த சுவரொட்டி ஒட்டிய இடங்களில் எல்லாம் பெண்கள் தைரியமாக எதிர்கொண்டு போராடினர்.

நிதி நிறுவன ஏஜென்டுகளும், மேலாளர்களும், “கொரோனா வந்து செத்தா போயிட்ட?”, “சோற திங்குறீயா வேற எதுனா திங்குறீயா?”, “தவண கட்டுலனா OD போட்டுருவேன்”, “நீ இனிமே எங்கயும் கடன் வாங்க முடியாது, ஓ பேங்க் அக்கவன்ட தடை செஞ்சிருவேன்”, “கலெக்டர், ரிசர்வ் பேங்க கேட்டா கடன் வாங்குன?” என்றும் சில இடங்களில் “குச்சிகாரி, தே….” என்று இன்னும் வெளியோ சொல்ல முடியாத வார்த்தைகளால் கூனிகுறுக செய்வதும், பல இடங்களில் இரவு வரை வீட்டின் முன்னால் உட்கார்ந்து விடுவது என்றும் நிகழ்வதை போராடும் பெண்கள் எங்களிடம் தொடர்ச்சியாக தெரிவித்தனர்.

மக்கள் அதிகாரம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.

நுண் கடன் நிறுவனங்களை எதிர்கொள்ள இன்னும் பல இடங்களுக்கு விரிவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக பல்லாயிரம் துண்டு பிரசுரங்களை 3 மாவட்டங்களிலும் பல நூறு கிராமங்களுக்கு நேரிடையாக சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அந்த துண்டு பிரசுரத்தை பார்த்து பலர் கண்கலங்கி விட்டனர்.  “நாளைக்கு குழுக்கடன் சார் வருவாரு எனக்கொன்னு குடுங்க” என கேட்டு பெற்று சென்றனர். சிலர் தோழர்களின் வீடுகளை தேடி வந்து, “குழுகடன் நோட்டீஸ் ஒன்னு குடுங்க” என கேட்டு சென்றதை பார்க்க முடிந்தது. பல ஆண்கள் தொடர்பு கொண்டு “என்னையும் உங்க அமைப்பல சேத்துக்கோங்க, போராட்டம் எதுனா கூப்பிடுங்க” என்றனர். தற்போது பல கிராமங்களை சேர்ந்த பெண்கள் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு வருகின்றனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

எனினும் எங்கள் பிரச்சாரம் சென்றது ஆயிரக்கணக்கான கிராமங்களில் சில நூறுகளில் மட்டும் தான். கும்பகோணம் திருபனந்தாள் எனும் இடத்தில் ஒரு பெண் தற்கொலை செய்து இறந்துவிட்டார், திருவாரூர் அருகில் பேரளம் என்ற ஊரில் பெண் ஒருவர் தனக்கு தீவைத்துக்கொண்டார்.

முடங்கியுள்ள மக்கள் வாழ்வாதாரம் மறு சீரமைய பல மாதங்கள் ஆகும், ஆகஸ்டு 31 முடிந்த பிறகும் இந்த பிரச்சனை தீராது. காவல்துறை, அரசு நிர்வாகிகள் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதையே பார்க்க முடிகிறது. பெண்களும் இதை உணர்ந்து வருகின்றனர். “வெறும் 2000 ரூபாய் காசுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும்” நிலையில் தான் கிராமப்புற பெண்கள் உள்ளனர். ஆகவே நாம் அமைதியாக இருந்தால் பல பெண்கள் தற்கொலை செய்துக்கொள்வதை தடுக்க முடியாமல் போய்விடும், ஆகவே அனைத்து பெண்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் விரிவாக பிரச்சாரம் முன்னெடுத்து செல்ல வேண்டியதும், பெண்களை துணிச்சலாக எதிர்கொள்ள வைக்க வேண்டியதும் அவசர தேவையாக உள்ளது.

படிக்க:
தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !
நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்

***

டெல்டா மாவட்டங்களில் உள்ள அடித்தட்டு வர்க்க பெண்களின் நிலை :

டித்தட்டு வர்க்க பெண்கள் 100 நாள் வேலை, சித்தாள் வேலை, விவசாயி கூலி வேலை, வீட்டு வேலைக்கு செல்வது, சிறு, குறு நிறுவனங்களில் வேலை செய்வது என்று பெரும்பாலும் அனைவரும் வேலைக்கு சென்று குறைந்த வருமானத்தையாவது ஈட்டி வருகின்றனர்.

கணவன்மார்கள் பெரும்பாலும் தொடர்ச்சியாக உள்ளுரில் இருப்பதில்லை, வேலைக்காக திருப்பூர், கோவை, சென்னை, கேரளா, வெளிநாடு என்று சென்றுவிடுகின்றனர். பல கணவன்மார்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கோடைகாலம் வந்தால் குடிநீருக்காக சாலையில் குடத்துடன் உட்கார்ந்து விடுவது, டாஸ்மாக்கை எதிர்த்து போராடுவது, 100 நாள் வேலைக்காக, ஊதியத்திற்காக போராடுவது, நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து போராடுவது என்று தங்கள் வாழக்கையை போராட்டுத்துடன் ஊடாகவே நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப் பூண்டி பகுதியில் நமது பிரச்சாரத்தின் விளைவாக பெண்கள் நடத்திய போராட்டம் :

திருமணம், காதுகுத்து, குழந்தைகள் கல்வி இன்னும் அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் வாங்குவது என ஒட்டுமொத்தமாக குடும்ப தலைவராக இருந்து குடும்பங்களை பராமரித்து வருகின்றனர். எல்லா பிரச்சனைகளையும் நேரிடையாக எதிர்கொள்பவர்கள் இவர்கள் தான். அதனால் தான் போராட்டங்களில் முன்னிலை வகிப்பதற்கும், ரோட்டிற்கு வந்து போராடுவதற்கும் நிலப்பிரபுத்துவ குடும்ப உறவு தடையாக இருப்பதில்லை.

இந்த நுண்கடன் பிரச்சனையில் பல பெண்கள் தொடர்பு கொண்டு ‘முன்ன பின் முகம் தெரியாத நபரிடம்’ கதறி அழுகிறார்கள் என்றால், தங்களின் வலியை, தங்களின் பிரச்சனையை சொல்வதற்குக் கூட இந்த சமூகத்தில் யாரும் இல்லை, எந்த ஒரு தளமும் இல்லை என்பதையே உணர்த்துகிறது. அப்படி பட்ட தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டியது தார்மீக கடைமையாக உணர்கிறோம்.

பெண்களின் கண்ணீரை துடைப்பதற்கு தமது கரங்களை நீட்டுவதோடு பெண்களிடம் கொட்டி கிடக்கும் ஆற்றலையும், முன்முயற்சியையும் கட்டவிழ்த்துவிடும் வேலையையும் மக்கள் அதிகார தோழர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! திருச்சியில் பு.மா.இ.மு போராட்டம் !

0
  • கொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தாதே!
  • பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் தேர்வை ரத்து செய்!
  • நீட் தேர்வை ரத்து செய்! +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை செய்!
  • சி.பி.எஸ்.இ பாடப்பிரிவுகள் நீக்கத்தை திரும்பப் பெறு!
  • கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர களமிறங்குவோம்!

என்ற கோரிக்கைகளை முன்வைத்து (15/07/2020) அன்று காலை 11 மணிக்கு திருச்சிராப்பள்ளி, மரக்கடை, இராமகிருஷ்ணா பாலம் அருகில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், வழக்குறைஞர்கள், பிற அமைப்பு பிரதிநிதிகள் என 50-க்கும் மேற்ப்ட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர் சுரேஷ் (புமாஇமு) தலைமை தாங்கினார். தோழர் பேசுகையில், பாஜக  மோடி அரசு  பொதுத்துறைகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் விதமாக, மக்கள் விரோத நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கல்வியையும் தனியாரிடம் முழுவதுமாக ஒப்படைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொரோனா காலத்தில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. அதை எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது  என பேசினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அமைப்புசாரா தொழிலாளர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேந்திரன் பேசுகையில் கொரோனா வந்தால் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார் எடப்பாடி. மருந்தே கண்டுபிடிக்காவிட்டாலும் தனியாரில் சேர்ந்தால் 4 இலட்சம் செலவு ஆகும் என்ற நிலை தான் உள்ளது என்று கூறினார். மேலும், நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு மாநில அரசு அடகுபோவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களைக் கொண்டு தடுத்து நிறுத்துவோம் என கூறினார்.

அகில இந்திய மஜ்ஜிலிஸ் கட்சி மாவட்ட செயலர் சம்சுதீன்  பேசியபோது, சமஸ்கிருதம் படித்தால்தான் டாக்டராக முடியும் என்று சொன்ன காலத்திலேயே தமிழ்நாடுதான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.  அத்தகைய தமிழ்நாட்டில் அப்பன் தொழிலையே செய்யுமாறு, நீ பாடத்திட்டத்தையே மாற்றினால், நான் ஏன் ஏற்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) மாவட்டத் தலைவர் ஐயா சின்னத்துரை அவர்கள்  பேசுகையில், வாழ்க்கைக்கு இரண்டு விசயங்கள் தேவை. ஒன்று கல்வி, இன்னொன்று விவசாயம்.  இவை இரண்டையும் இந்த சொரணைகெட்ட எடப்பாடி அரசு அழிக்கிறது.  மேலும், இளைய தலைமுறையை தற்குறியாக்கும் வேலையைத் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.  இதனை எதிர்த்து நாங்கள் (விவசாயிகள்) புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர்களோடு ஒன்றிணைந்து களத்தில் இறங்கி போராடுவோம் என்று கூறினார்.

பள்ளி மாணவி பவித்ரா பேசுகையில், ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரிவதில்லை, கண்கள் வலிக்கிறது, வீட்டில் அப்பா குடித்துவிட்டு வந்து படிப்பதை தொந்தரவு செய்கிறார் என்று தனது அனுபவத்தை கூறினார்.

படிக்க:
தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !
பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! பு.மா.இ.மு கோரிக்கை

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் திருச்சி மாவட்டச் செயலர் தோழர் ஜீவா பேசுகையில், இன்று காமராசரின் பிறந்த நாள். காமராசர் மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்து, குழந்தைகளை படிக்க வைத்தார்.  ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் ஏழை வீட்டுப் பிள்ளைகள் படிக்க கூடாது என எண்ணுகின்றனர்.  இது மாணவர்களின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும். பெற்றோர்கள் விழித்துக்கொண்டு மாணவர்களோடு இணைந்து போராட வேண்டும் என்று கூறினார்.

கல்லூரி மாணவர் மணிவேல் பேசுகையில், மத்திய அரசு “சிபிஎஸ்இ மாணவர்களுக்கு, சமூகநீதி என்ற கருத்து சென்று சேர்ந்துவிடக்கூடாது” என்ற தீயநோக்கத்தோடுதான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சமூகநீதி தொடர்பான பகுதிகளை நீக்கியிருக்கிறது.  நீட் தேர்வு எங்களுக்கு எப்போதும் தேவை இல்லை. அரசு பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்கிறது இந்த அரசு. அவர்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் தருணத்தில் மொபைல் மடிக்கணினி வாங்க முடியுமா?  இதற்கு அரசு தனி சிறப்பான கவனம் கொடுத்து யோசிக்கவேண்டும்  என்று கூறினார்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தோழர் மணலி தாசன் பேசும்பொழுது, ஏழைக்குழந்தைகள் படித்தால் அவர்களின் அறிவு வளரும். அறிவு வளர்ந்தால் அவர்கள் கேள்வி எழுப்புவார்கள், புரட்சி செய்வார்கள். அதனாலேயே கொல்லைப்புற வழியாக கொள்ளை திட்டங்களை மத்திய அரசு நுழைத்துவருகிறது. எனவே இத்திட்டங்களை முறியடிக்க மாணவர்களுடன் சேர்ந்து எமது அமைப்பு துணை நிற்கும் எனக் கூறினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் பிருத்திவ் பேசுகையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை  ரத்து செய்தது போல பல்கலைக்கழக தேர்வை ரத்து செய்ய வேண்டும்.  தேர்வு என்பது அறிவை சோதிப்பதற்கானதாகவோ, சமூக மாற்றத்திற்கானதாகவோ அல்லாமல் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அளவுக்கு மனப்பான்மை உள்ளதா? அடிமைத்தனம் உள்ளதா? என்று சோதிப்பதற்காகத்தான் இங்கு தேர்வு நடத்துகின்றனர். இன்னொரு புறம் தேர்வு நடத்தாவிட்டால் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என்கின்றார் பிஜேபி அரசின் மத்திய அமைச்சர். அரசு உருவாக்கிய எம்பிளாய்மெண்ட் ஆபீஸ்லேயே பதிவு செய்த இளைஞர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.  அவர்களுக்கு வேலை தர வக்கில்லாத இந்த அரசு, தேர்வு நடத்தாவிட்டால் வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் என கவலைப்படுகிறதாம்.

மக்களுக்காக அரசு சிந்தித்தால், கொரோனா காலத்தில் தேர்வு வேண்டாம் என்று சொல்லும்.  ஆனால் இந்த அரசு கார்ப்பரேட்டுக்காக யோசிக்கிறது. அதனாலேயே தேர்வு வேண்டும் என்கிறது.  இதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் பிஜேபி தங்கள் கனவை நிறைவேற்ற, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மதச்சார்பின்மை, பணமதிப்பிழப்பு, பன்முகத்தன்மை, குடியுரிமை பற்றிய பாடங்களை நீக்கியுள்ளது. ஒரே நாடு ஒரே மொழி என்பதைப் போல, கல்வியையும் இந்துத்துவத்திற்கானதாக கொண்டுவர முயற்சிக்கிறது. அதற்கான வெளிப்பாடுதான் இந்த சிபிஎஸ்இ பாடத்திட்ட மாற்றம். ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கல்வி தொடர்பாக மாநிலங்களின் எல்லா அதிகாரங்களையும் அழிக்க நினைக்கிறது மோடி அரசு.  இது மக்களுக்கான அரசு அல்ல கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. இனி இங்கு வாழ்வது கடினம்.  போராடுவதுதான் எளிது. எனவே நாம் அமைப்பாய்த் திரள்வோம். போராடுவோம். நமது உரிமையை மீட்டெடுப்போம் என கூறினார்.

திருச்சிராப்பள்ளி அரசு சட்டக்கல்லூரி மாணவர் ஹரிச்சந்திரன் இறுதியாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியுரை தெரிவித்தார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சிராப்பள்ளி.

தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !

மிழக ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்பந்தித்து, பின்வாசல் வழியாக சங்கிகளை புகுத்த முயல்கிறது காவி கும்பல். அதற்கு மாரிதாஸ் போன்ற கழிசடைகளை களமிறக்கி வேலைபார்க்கிறது. இதனைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் பலரும் தங்களது கண்டனங்களை முன்வைத்துள்ளனர். அதன் தொகுப்பு இங்கே…

***

ஆழி செந்தில்நாதன்

கட்சிகளும் இயக்கங்களும் மனித உரிமையாளர்களும் மிகவும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டிய சம்பவம்தான் நியூஸ்18 தமிழ் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

சனாதன இழிபிறவிகள் கொக்கரித்துக்கொண்டிருக்கின்றன.

வீரபாண்டியனை சன் டிவி வெளியே அனுப்பியபோதே திருப்பி அடித்திருந்தால் இன்று இந்த அளவுக்கு நிலைமை முற்றி இருக்காது. இதழியல் அறம் என பீற்றிக்கொள்ளும் இந்து பத்திரிகை சித்தார்த் வரதராஜனை வெளியேற்றியபோது, இந்திய ஊடகத் துறையின் பலம்தான் என்னவென்று தெரிந்து போனதே! இதைப் போல எத்தனையோ வெளியேற்றங்களை இந்தியா முழுக்கப் பார்த்துவிட்டோம்.

மீதி இருந்தது தமிழ்நாடு. இப்போது இங்கேயும் பாசிஸ்ட் கும்பல் தன் வேலையைக் காட்டுகிறது.

வரப் போகும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது எந்த சானலிலும் அதிமுக அரசுக்கும் பாஜக அரசுக்கும் எதிராக எந்தக் குரலும் ஒலிக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உடனடி தேவை.

அவர்கள் எரிச்சலாவது இரவு நேர விவாதங்களைக் கண்டுதான். இத்தனைக்கும், ஒரு விவாதம் என்று வந்தால், இந்த ஊடகவியலாளர்கள் நான்கில் இரண்டு அல்லது மூன்று இடங்களை சங்கிகளுக்கே தருவார்கள். எங்களைப் போன்றவர்கள் அவர்கள் போடுகிற பந்துகளைத் தடுத்தாடும் வேலையைத்தான் பெரும்பாலும் செய்து வந்திருக்கிறோம். ஆனால் , பாஜகவின் எல்லா பொய்களையும் நாங்கள் அங்கே அம்பலப்படுத்துகிறோம் என்பதுதான் அவர்களுக்குக் கடுப்பு. தாங்க முடியாத எரிச்சல்.

எனவே உண்மைச் செய்திகளும் வரக்கூடாது, விரிவான விவாதங்களும் நடக்கக்கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள். திட்டம் போட்டுக் காரியத்தை முடித்திருக்கிறார்கள்.

அவர்களால் இதைச் செய்ய முடிகிறது என்பது ஆச்சரியமி்ல்லை. ஆயிரம் இருந்தாலும் அது அம்பானி டி.வி தானே!. மற்ற சானல்களில் இது நடந்தாலும் ஆச்சரியமில்லை. பாதிக்கப்படும் ஊடகவியலர்களுக்காகப் பெரிய கட்சிகளும் செயல் தீவிரமுள்ள இயக்கங்களும் செய்யப் போவது என்ன? – இது தான் முக்கியமான கேள்வி.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது ஊடகவியலாளர்களை இப்படி எல்லாம் வெளியேற்ற முடியும் என்றால் உண்மையில் அவர்களுக்கு அது பெரிய நஷ்டமில்லை. அவர்கள் திறமையான புரபஷனல்கள். கொஞ்ச நாளில் வேறு வேலையைத் தேடிக்கொள்வார்கள். இவ்வளவு நாட்களாகத் தங்கள் சொந்த வேலைக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அவர்கள் முடிந்தவரை உண்மையின் பக்கம் நின்றார்கள், அதற்காக அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இப்போது நடப்பது அவர்களுக்குத் தோல்வியில்லை.
தோல்வியும் அவமானமும் நமக்கு மட்டுமே.

இன்றைய நிலையில் எதிர்க் கட்சிகளும் இயக்கங்களுக்கும்தான் இந்த விஷயத்தைக் கணக்கில் எடுத்து எதிர்வினை ஆற்ற வேண்டும். அதற்கான வழிமுறைகள் வேறானவை.

மாற்றுக் கருத்துகளை மறுக்கும் ஊடகங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அசட்டையாக
இருககக்கூடாது.

ஊடக வெளி யுத்தம் சூட்சுமமானது.

மனுஷ்யபுத்திரன்

பாசிசத்தின் முதன்மையான குணம் சுதந்திரமான உரையாடல்களைக்கொல்வதுதான். இப்போது தமிழக ஊடகங்களில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
ஊடக விவாதங்களில் இனி பங்கேற்கவேண்டுமா என ஜனநாயக சக்திகள் அனைவரும் கூட்டாக முடிவு செய்ய வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாரிதாஸ்கள் வெறும் கையாள்கள். தேர்தலுக்கு முன் தங்களுக்கு சாதகமாக ஊடகங்களை ‘ சுத்திகரிக்கும்’ பணி பா.ஜ.கவால் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது என்று நம்புகிறேன். ஊடக நிறுவனங்கள் அழுத்தங்களுக்குப் பயந்து முதன்மையான ஊடகவியலாளர்களை தொடர்ந்து பலியிட்டால் பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் முற்றாக செய்திச்சேனல்களை புறக்கணிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

எமெர்ஜென்சியையே எதிர்த்து நின்ற ராம்நாத் கோயங்காக்களும் இந்த மண்ணில்தான் இருந்தார்கள் என்பதை நினைக்க அதெல்லாம் ஒரு கனவுபோல இருக்கிறது.

செய்திச் சேனல் இருந்தால்தான் அரசியல் பண்ண முடியுமா? தெருமுனையில் இருந்து நோட்டீஸ் கொடுப்பேன். கூட்டம் போட்டு கத்துவேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இந்தப்பிரச்ச்சினை ஏற்படுத்தும் மன உளைச்சல் மிகக்கடுமையாக இருக்கிறது.

உருப்படியாக, வலிமையாக நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

Ilyas Muhammed Raffiudeen

விகடன் குழுமத்தில் செய்தியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காகப் பணியில் இருந்து விலக வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் ஹசீப். அதே வேளையில், உச்சபட்சப் பொறுப்பில் இருந்த குணசேகரன் இனி விவாத நிகழ்ச்சிக்கு மட்டும் நெறியாளராகப் பணியாற்றுவார் எனக் கூறப்பட்டிருக்கிறது. விவாதங்களின் தலைப்பைக் கூட இனி அவரால் முடிவு செய்ய முடியாது என்பதே இந்தப் பணிக் குறைப்பின் சாரம்.

மேலும், மாரிதாஸ் வெளியிட்ட லிஸ்ட்டில் இருந்த பத்திரிகையாளர்களில் மேலும் சிலர் கடந்த வாரத்தில் பணி நீக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு, பணியில் இருந்தும் விலகியிருக்கின்றனர். குணசேகரனைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கின்றன தமிழ் ஊடகத் துறையில் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் சக்திகள்.

தோழர் ஹசீப் தமிழக ஊடகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட பல்வேறு செய்தியாளர்களுக்காக முன் வந்து போராடியிருக்கிறார். தமிழ் ஊடகத்துறையில் பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், குரல் கொடுக்கவும் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் கடந்த ஆண்டுகளில் ஈடுபட்டிருக்கிறார். அவர் முன்னின்று பணியாற்றிய ‘மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம்’ கடந்த ஆண்டுகளில் புதிய தலைமுறை, வேந்தர் டிவி, காவேரி டிவி, கேப்டன் டிவி முதலான நிறுவனங்களில் பணியாற்றி, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்காகப் போராடி, நஷ்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் முதலான மதவாத சக்திகள், தோழர் ஹசீப்பின் பெயரால் மத அடிப்படையிலான மோதல்களுக்குத் திட்டமிடுகிறது. தோழர் ஹசீப்பின் பணி நீக்கம் என்பது கருத்துச் சுதந்திரம் மீதான அடக்குமுறை மட்டுமல்ல; தொழிலாளர் உரிமைகளுக்காகப் பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்வதைத் தடுக்கும் நடவடிக்கையும் கூட.

பார்ப்பனியத்தால் குறி வைக்கப்படும் தோழர்களுக்குத் துணை நிற்போம்.

Villavan Ramadoss

நியூஸ் 18 விவகாரம், நமது பொறுப்பு என்ன?

நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் பார்ப்பன விசுவாசம் இதற்கு முன்பே வெளிப்பட்டதுண்டு. எஸ்.வி சேகர் வீட்டில் கல்லெறிந்த விவகாரத்தில் அந்த சேனல் ஆட்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். சேனல் விசாரணை நடத்தியது. அப்போது மக்கள் எதிர்ப்பை எண்ணி அமைதி காத்தார்கள்.

இம்முறை அதன் தலைமை செய்தி ஆசிரியர் உள்ளிட்ட பலரை குறி வைத்திருக்கிறார்கள். சிலரிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டிருக்கிறது. மாரிதாஸ், கிஷோர் வகையறாக்கள் ஆலோசனை எடுபடும் எனில் இனி இந்த டிவி இன்னொரு பாண்டே கையில்தான் சிக்கப்போகிறது (மகாலிங்கம் பொன்னுசாமி இப்போது பொறுப்பு ஏற்றிருப்பதாக தகவல்). அல்லது பொறுப்பு ஏற்றவரே பாண்டேயாகலாம்.

அடுத்து இவர்கள் ஏனைய சேனல்களை குறி வைப்பார்கள். ஏற்கனவே கிஷோர் கார்த்திகை செல்வனை குறி வைத்திருக்கிறான்.

இது ஒரு அப்பட்டமான ஊடக சுத்திகரிப்பு நடவடிக்கை. அது நிறைவேறும்போது நாம் அர்னாப், பாண்டேக்களால் சூழப்பட்டிருப்போம். அனிதா போல பலர் உயிரை இழக்கலாம், ஒக்கி, டீமானிடைசேஷன் போன்ற பேரழிவுகள் நேரலாம். அப்போதெல்லாம் உங்கள் கண்ணீர் ஊடகத்தின் பார்வையில் படாது. ஜெய் ஸ்ரீராமும், பாரத் மாதாக்கீ ஜே கோஷமும் உங்கள் செவிகளை கிழிக்கும்.

இது குணா, அசீப், கார்த்திகை செல்வன் போன்ற தனிநபர்களுக்கான சிக்கலும் அல்ல. நம் எல்லோர் மீதான தாக்குதலுக்கான முன்னோட்டம்.

அவர்கள் துவங்கிய இடத்தில்தான் நாமும் ஆரம்பிக்க வேண்டும்.

S P Udayakumaran

நேற்று சன் டிவியில் இருந்து திரு. வீரபாண்டியன் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இன்று நியூஸ்18 தொலைக்காட்சியிலிருந்து திரு. ஹசீப் முகமது வெளியேற்றப்பட்டிருக்கிறார்; திரு. குணா (குணசேகரன்) பதவியிறக்கம். செய்யப்பட்டிருக்கிறார்.

நிலைமை இன்னும் மோசமாகும்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், பல காட்சி ஊடகங்களும் விவாத நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள். அப்போது ஒரு முக்கியமான ஊடகத்தின் ஆசிரியரிடம், “என்னை அழைக்கக்கூடாது என்று உத்தரவு வந்திருக்கிறதாமே, தோழர்? உண்மையா?” என்று கேட்டேன். “உங்களுக்குத் தெரியாததா, தோழர்?’ என்று அவர் பதில் கேள்வி கேட்டவாறே சிரித்தார்.

பாஜக-காரர்கள் பட்டியல் தயாரித்துக் கொடுக்கிறார்கள். யார் யாரை அழைக்க வேண்டும், யார் யாரை அழைக்கக்கூடாது என்பதையெல்லாம் ஊடகங்களின் ஆசிரியர்கள் தீர்மானிக்கவில்லை. அது மேலிடத்தில் நிச்சயிக்கப்படுகிறது.

நிலைமை இன்னும் மோசமாகும்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால், பிரதமர் மோடி தமிழக ஊடக ஆசிரியர்களை தில்லிக்கு அழைத்து, சாப்பாடு போட்டு, சிரித்துப் பேசி, எல்லோருமாக சேர்ந்து ‘குரூப் போட்டோ’ எடுத்துக்கொண்டார்களே, அன்றைக்கே இந்த அழிவு துவங்கிவிட்டது.

நிலைமை இன்னும் மோசமாகும்.

முசோலினி இதே வேலையைச் செய்தார். அவரே ஊடகங்களின் ஆசிரியர்களை நியமித்தார். ஹிட்லர் இதே வேலையைச் செய்தார். ஊடகங்கள் ஒத்து ஊதினார்கள். ஊடகத்தை நடத்த முடியாத நிலையை உருவாக்கிவிடுவார்கள் இந்தக் கொடுங்கோலர்கள் என்றஞ்சி உடன்பட்டார்கள். விளைவுகளை உலகறியும். இந்தியாவிலும்

நிலைமை இன்னும் மோசமாகும்.

என்ன செய்யப் போகிறோம்? அரசியல் கட்சிகளை நம்புவதில் பயனில்லை. எடப்பாடி போய் ஸ்டாலின் வந்தாலும், இங்கே புரட்சி எதுவும் நடக்காது. மடியில் அதிக கனம்கொண்ட திமுகவினர் மோடியிடம் அடக்கியே வாசிப்பார்கள். வேறு பல கட்சிகள் ஒரு சீட், இரண்டு சீட்டுக்கு சமரசம் ஆகிவிடுவார்கள். அறிக்கைகளில் மட்டும் அனல் (லேசாகப்) பறக்கும். பாம்பும் சாகாமல், கோலும் முறியாமல் அற்புத அரசியல் செய்வார்கள்.

நிலைமை இன்னும் மோசமாகும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், இசுலாமியக் கட்சிகள், தலித் கட்சிகள், சனநாயக முற்போக்கு இயக்கங்கள் யாரும் ஒன்றுசேர மாட்டார்கள். சகதிக்குள் புதைந்துகொண்டிருப்பவர்கள் தப்பிக்கும் உபாயத்தை அடுத்தவருக்கு போதித்துக்கொண்டே ஆழத்தில் புதைந்து சாவது போல, நாம் புதைந்து கொண்டிருக்கிறோம், செத்துக் கொண்டிருக்கிறோம்.

நிலைமை இன்னும் மோசமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஊடகர்கள் மீது (அவர்கள் வேலைபார்க்கும் கார்ப்பரேட் ஊடகங்கள் மீதல்ல) ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை மிகுந்த சிரமத்துக்கிடையே தக்கவைத்துக்கொள்ள முயன்றவர்களின் தலைகள்தான் இப்போது உருள்கின்றன.

நிலைமை இன்னும் மோசமாகும்.

இன்றைய (July 19, 2020) The New Sunday Express நாளிதழில் TJS George எழுதியிருக்கும் கட்டுரையைப் படியுங்கள். “Take it [authority in Delhi] lying down because you have no choice” என்று முடிக்கிறார்.

நிலைமை இன்னும் மோசமாகும்.
வணக்கம்.

சுப. உதயகுமாரன்
தலைவர்
பச்சைத் தமிழகம் கட்சி
யூலை 19, 2020

Kanagaraj Karuppaiah

முதலாளிகளின் விருப்பம்தான் சட்டமா? மூளையை கழட்டி முழுமையாக ஒப்படைக்க முடியுமா?

நியூஸ்18 தமிழ்நாடு News18 Tamil Nadu தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு இளைஞர் ஐந்து நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்.

அதற்காக சொல்லப்பட்ட காரணம் அவர் தனது டுவிட்டர் அக்கவுண்ட் முகப்பில் பெரியார் படத்தை வைத்திருந்தாராம். அதைவிட பெரிய தவறாக அவர் செய்தது, ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு முன்பு நீலச்சட்டை பேரணி நடந்தது பற்றிய ஒரு தகவலை பகிர்வு செய்தது ஆகும்.

இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு செயலா? அப்படியென்றால் திடீர் நீக்கம் செய்வது எதற்காக?

எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரியக்கூடிய ஒரு நபர் அங்குள்ள அந்த நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துவிட்ட காரணத்தினாலேயே மூளையை கழட்டி முழுமையாக ஒப்படைக்க முடியுமா?

அந்த நிறுவன முதலாளியின் விருப்பங்களை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு, அவர் கொடுக்கும் குப்பைகளைச் சுமந்து திரிய வேண்டுமா? வாழ்க்கைத் தேவைக்காகவே ஒருவர் பணிக்குச் சேருகிறார். செய்கிற பணிக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். சமூகவலைத்தளத்தில் இயங்குவதும், நிறுவனத்துக்கு வெளியே ஒரு இடத்தில் பேசுவதும், ஒரு பிரச்சினை குறித்து சொந்த கருத்து கொண்டிருப்பதும், விவாதிப்பதும் எப்படி தவறாகிட முடியும்?

பெருமுதலாளிகளின் விருப்பம் மட்டுமே சட்டமாக இங்கு கோலோச்சுகிறது என்பதைத்தான் நிகழ்வுகள் காட்டுகின்றன. எந்த சட்ட நியதிகளுக்கும் உட்படாத அராஜகம் தலை தூக்குகிறது.

சட்டம் என்பதே வெறும் பம்மாத்து ஆகிப்போனதென்றால், மக்களுக்காகக் கூட நடிக்கும் தேவை இல்லையென்று ஆகிவிட்டதென்றால் வல்லான் வகுத்ததே வாய்க்காலாகும்.

தமிழகத்தில் பல ஊடகவியலாளர்கள் பல்வேறு நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டார்கள். சம்பள குறைப்பு நடந்தது. ஆனால் சக ஊடகங்களில் அமைதியே நிலவியது. சமூக ஊடகத்தில் பெரியார் படம் வைக்க கூடாது என இப்போது அராஜகம் தலையெடுக்கிறது. அடுத்து என்ன நிறுவனத்தின் முதலாளி போட்டோவை வைக்க வேண்டும் என்பீர்களா?

இப்போது அதே நியூஸ்18 தமிழ்நாடு நிறுவனத்தில் ஹசீப் என்ற ஊடகவியலாளரை ராஜினாமா செய்ய நிர்ப்பந்திப்பதாக செய்திகள் உலவுகின்றன.

இப்போதைக்கு இந்த நடவடிக்கைகள் சில ஊடகவியலாளர்களை மட்டும் பாதிப்பதாக இருக்கலாம், ஆனால் வரும் நாட்களில் இது ஊடகத்தின் தன்மையை பாதிக்கும். மக்களின் அறிந்துகொள்ளும் உரிமையை பறித்து, ஊடகங்கள் வழியே மக்களின் சிந்தனையைத் தீர்மானிக்கும் எல்லைக்கு போகும்.

எனவே இந்தப் பிரச்சனை ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களும், கருத்து சுதந்திரத்தில் அக்கறை கொண்டவர்களும் இணைந்து குரல் எழுப்ப வேண்டிய பிரச்சனை.

இந்த சூழலில் அமைதி நிலவினால் அது வரும் நாட்களில் இன்னும் பல உரிமைகள் பறிக்கப்பட கொடுக்கும் அனுமதியாகவே முடியும்.

எனவே பொதுவான உரிமைகளுக்கு குரல் கொடுப்பதன் மூலம் தனிநபரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்த போகிறீர்களா அல்லது பொதுவான உரிமைகளை விட்டுக் கொடுப்பதன் மூலம், தங்களின் உரிமைக்கும், வரும் தலைமுறையினரின் உரிமைக்கும் சேர்த்தே வேட்டு வைத்துக் கொள்ளப் போகிறீர்களா?

பா. ஜீவ சுந்தரி

#Shame_on_you_News18_administration!
#uprootbrahmanisminmedia
#Stand_With_Guna_and_Haseef

ந்து சமூகத்தின் தலைமைப் பீடமாகத் தங்களை அறிவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன சமூகம்தான், தற்போது நியூஸ்18 மூத்த பத்திரிகையாளர், ஆசிரியர் குணசேகரனை பதவி இறக்கம் செய்திருக்கிறது. செய்தியாளர் ஆசிஃப் கானை பணியை விட்டு விலக நிர்பந்திக்கிறது.

எஸ்.வி.சேகர் போன்ற காமெடியன்கள் மிக பயங்கரமானவர்கள். அவர்களைப் போலவே இன்னும் பலரும். கிஷோர் கே.ஸ்வாமி, மாரிதாஸ், மதன் போன்ற குப்பைகள் வெளியிடும் குப்பைகளால் என்னவெல்லாம் சாதிக்க முடிகிறது பாருங்கள். ஊடகத் தலைமையைத் தங்கள் கரங்களுக்கு மாற்றுவதில் குறியாக இருக்கிறார்கள் இவர்கள்.

விவாத நிகழ்ச்சிகளில் கருத்தாளர்களாக மட்டும் நாராயணன், ராமசுப்பிரமணியன், கரு.நாகராஜன் போன்ற புல்லுருவிகள் நுழையவில்லை. அதிகார பீடத்தை வலு மிக்கதாக்கவே நுழைகிறார்கள். இனி, வரவிருக்கும் தமிழகத் தேர்தல் களத்துக்கு முன் காட்சிகள் பலவும் மாறலாம். நேர்மையான ஊடகவியலளர்கள், பத்திரிகையாளர்களுக்குப் புள்ளி வைத்து விட்டார்கள். எச்சரிக்கையும் கவனமும் தேவைப்படும் நேரமாக இருக்கிறது இப்போது.

நியூஸ்18 செய்தி சானல் நிறுவனத்துக்குக் கடும் கண்டனங்கள்

Barathi Thambi

Media becomes ‘Modi’a.

திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜக, அதிமுக ஆதரவு நிலையில் இல்லாத எல்லா அமைப்புக்களிடமும் வேண்டிக்கொள்வது,

பாஜகவின் உத்தரவை ஏற்று பணியாளர்களை நீக்கும் அல்லது அவமானப்படுத்தும் நியூஸ் 18 அல்லது வேறு சேனல்கள் எதுவானாலும் அதன் விவாதங்களில் பங்கேற்காதீர்கள்.

இதனை வெறுமனே நியாய உணர்வு சார்ந்து மட்டுமே செய்ய சொல்லவில்லை. இன்று துரத்தப்படும் ஆட்கள் இடத்தில் மாரிதாஸ், மதன் போன்றவர்கள் உட்காருவார்கள்.

இவர்கள் உங்கள் அமைப்புக்களை எத்தனை தூரம் இழிவுபடுத்தியவர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

பாண்டே எப்படி நடத்தினார் என்பதையும் இந்த வெறித்தனமான அதிகாரம் சிக்கினால் அவர்கள் என்னவெல்லாம் செய்வர்கள் என்று சிந்தியுங்கள்.

#ShameOnYouNews18
#BoycottNews18TN
#StandWithGunaAndHaseef

Chinthan Ep

#BoycottNEWS18 #BrahmanicFascism #ShameOnYouNews18
மாரிதாஸ் எல்லாம் ஒரு ஆளா, அவன் ஒரு சில்றப்பய என்று பலரும் சர்வசாதாரணமாக இருந்துவிட்டதன் விளைவைப் பார்த்தீர்களா…
மாரிதாஸ் ஒரு சில்றப்பயலா இருக்கலாம். ஆனால் அவனுக்குப் பின்னால் இருந்து அவனை இயக்கும் கூட்டம் சாதாரணக் கூட்டமல்ல. அது மிகப்பெரிய சதிவலைகளை விரித்து ஒட்டுமொத்த தேசத்தையும் நாசம் செய்யும் கூட்டம்.

எல்லையற்ற அதிகாரத்தை தன்னகத்தே வைத்திருக்கிற கூட்டம்.
காலங்காலமாக சாதி என்கிற பெயரால் மனித குலத்தை பல துண்டுகளாகப் பிரித்துவைத்து, ஓரிரு சதவிகித அயோக்கியர்கள் மட்டுமே அனைத்தையும் ஆட்டையைப் போட்டு சொகுசாக வாழும் கூட்டம்….

இப்போது பாருங்கள்… நம் மாநிலத்து முற்போக்கு முன்னோர்களுடைய இத்தனை ஆண்டுகால உழைப்பின் பலனாக நாம் மெல்லமெல்ல கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிற முற்போக்குக் கோட்டைக்குள் நுழைந்து, இங்கே யார் பத்திரிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்பதுவரையிலும் தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள்…

இனியேனும் விழித்துக்கொள்ளவில்லை என்றால், ஹெச்.ராஜாவெல்லாம் நமக்கு முதல்வராகவே வந்துவிடும் வாய்ப்பு வெகுதூரத்தில் இல்லை….

பார்ப்பனிய பாசிசம் என்பது ஹிட்லர் பாசிசத்தை விடவும், முசோலினி பாசிசத்தை விடவும் பலமடங்கு கொடூரமானது என்பதை உணர்வோம் தோழர்களே.

Elamathi Sai Ram

ண்ணன் எப்படா சாவான்,
திண்ணை எப்ப காலியாகும்ன்ற மாதிரி..
அடுத்ததாக தமிழ் ஊடகங்களின் உச்சிக்குடுமியை ஆட்டத் தொடங்கியுள்ளன சங்கிப்படைகள்…

நடுநிலை வேண்டுமென நீண்ட கடிதம் எழுதிய மாரிதாஸ்..

நியூஸ் 18 மற்றும் புதிய தலைமுறை தலைமைகளின் மீது அவதூறுகளை அள்ளித்தெளிக்கும் கிஷோர் கே ஸ்வாமி..

மதன் ரவிச்சந்திரன்..

மக்களுக்கு யாரென்றே தெரியாத இவர்கள்தான் அவர்களின் ஆயுதங்கள்.

கறுப்பர்க்கூட்டம் சர்ச்சையில் சம்பந்தமேயில்லாத நியூஸ்18 ஹசீஃப் முகமதை இழுத்துவிட்டு, பின்னர் தலைமைகளின் மேல் குறிவைக்கிறார்கள்.

தலைமைகளை நீக்கிவிட்டு யார் வருவார்கள்… ?

இந்த நேரத்தில்..

“பிராமணர்களை விமர்சித்தால் உங்களின் ஜட்டி, பிரா” முதற்கொண்டு கிழிக்கப்படும் என்று ஒரு இன்சென்சிட்டிவான ட்வீட்டை போட்டு அதை நீக்கிய சார் எஸ்.வி.சேகரின் ட்வீட்ற்கும், இதற்கும் சம்பந்தமே கிடையாதா….?

மக்களுக்கு யாரென்றே தெரியாத இவர்கள், ஒரு மாநிலத்தின் செய்திச்சேனல்களை குறி வைத்துத் தாக்குகிறார்கள்.. நோக்கமென்ன ?

மக்களிடம் இவர்களை, இவர்களின் நோக்கங்களை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறேதுவும் செய்ய முடியாதா.. ?

வயிறெரிகிறது… !
#UprootBrahminisminMedia

Thiru Yo :

சங்கிகள் திட்டம்:

1. முதலில் இப்போதுள்ள ஊடகவியலாளர்கள் பலர் மீது கல்லெறிந்து வெளியேற்றுவது.

2. சங்கிகளை ஊடகவியலாளர்களாக நியமித்து ஊடகங்களைக் கைப்பற்றி நாக்பூர் கும்பலின் சனாதன ஆதிக்க அரசியலை பரப்புவது.

3. வாய்ப்பிருந்தால் தமிழ் மக்கள் விரோத நிலைபாடுகள் எடுத்துள்ள ரஜினியை தேர்தலில் ஏதாவது ஒரு வகையில் நுழைப்பது.

4. இல்லாமல் போனால் பாஜக கிளை அதிமுக கும்பலுக்கு ஆதரவாக பரப்புரை, பொய்களை உற்பத்தி செய்வது.

5. பார்ப்பனீய கும்பலுக்கு ராஜாஜி காலத்தில் பிடிக்க முடியாமல் விட்ட ஆட்சியை எப்படியாவது இந்த முறையாவது பிடிக்க வேண்டுமென்கிற ஆதிக்க வெறி. இது பார்ப்பனீயம் நடத்துகிற வேட்டை.

உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி, வேலை, வருமானம், சுயமரியாதை, கண்ணியம் வேண்டுமா? அல்லது பார்ப்பனீயத்தின் கட்டுக்கதை திசைதிருப்பல்கள் வேண்டுமா? இந்த ஐந்தாண்டுகளின் துயரத்தை நிறுத்துவதும் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு நீடித்து பாஜக (அதிமுக+பாஜக) கும்பல்களிடம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்க ஒப்படைப்பதும் உங்கள் கையில்.

ரவி காளிடாஸ்ஸ் :

னது கைபேசியில் இருந்து News 18 ன் செயலியை Uninstall செய்து விட்டேன். சமுக ஊடகங்களில் News 18 -னை பின் தொடர்வதை நிறுத்தி விட்டேன்.

#ShameOnYouNews18

வட இந்தியா வில் இருந்து வந்த இந்த சேனலுக்கு
தமிழ் நாட்டில் ஏன் இத்தனை வரவேற்பு?

ஓகி புயல்,
கஜா புயல்,
சென்னை பெரு வெள்ளம்,
நீட், அதனால் நிகழ்ந்த அணிதாவின் மரணம்,
மீத்தேன் நெடுவாசல்
ஜல்லிக்கட்டு போராட்டம்
என்று
மக்கள் பாதிப்புக்குள்ளான விடையங்களை

அவர்களின் அழு குரலை விவாதமாக மாற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு போனதுதான், இத்தனை வரவேற்புக்கும் காரணமாக அமைந்தது.

அது குணசேகரன் அவர்களால் தான் சாத்தியாமானது. ஊடகம் பார்ப்பனியத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது . வன்மையான கண்டனங்கள்.

#ShameOnYouNews18
#StandWithGunaAndHaseef
#UprootBrahmanismInMedia

Villavan Ramadoss :

உடனடியாக நாம் என்ன செய்யலாம்?

டுமையான கண்டனங்களை வாய்ப்புள்ள எல்லா தளங்களிலும் பதிவு செய்யுங்கள்.

சேனல் 18 குழுமத்தை புறக்கணியுங்கள். சமூக ஊடகங்களில் அதனை பின்தொடர்வதை நிறுத்துங்கள். அதனையும் பதிவு செய்யுங்கள்.

நீங்கள் சார்ந்துள்ள இயக்கங்கள் இப்படியான சேனல்களில் விவாதங்களில் பங்கேற்பதை நிறுத்த அழுத்தம் கொடுங்கள்.

மாற்று ஊடகங்களை மற்றும் இதில் ஆட்படாத சேனல்களை ஆதரியுங்கள். அவற்றை பிறருக்கு அறிமுகம் செய்யுங்கள்.

பார்ப்பன பயங்கரவாதத்தின் ஊடக தாக்குதலை முடிந்த அளவுக்கு உங்கள் வட்டாரத்தில் அம்பலப்படுத்துங்கள்.

நினைவில் வையுங்கள், நாம் தோற்பதுகூட பிரச்சினை இல்லை. எதிர்புறம் நிற்பது மதன், மாரிதாஸ், கிஷோர், எஸ்.வி.சேகர் போன்ற அல்பங்கள். அவர்களிடம் சுலபமாக விட்டுக்கொடுத்துப் போவது வேறெதையும்விட அசிங்கமானது..

#மழைக்குருவி :

#News18 ஐ புறக்கணிப்பதால் அம்பானிக்கு பெரிய அளவில் ஒன்றும் ஆகிவிடாதுதான். ஆனால், அம்பானிக்கு நம் குரல் கேட்க வேண்டுமென்றால் #Boycott_Jio தான் ஒரே வழி.

JIO சிம் வைத்திருப்பவர்கள் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (MNP) மெசேஜ் பண்ணுங்கள். உடனடியாக JIO கஸ்டமர் கேரிலிருந்து உடனே காரணம் கேட்டு கால் வரும். அவர்களிடம் #News18 குணாவை நீக்கியதற்காக விலகுகிறேன் என்று சொல்லுங்கள்.

சில நூறு கால்கள் போதும் நம் குரல் அம்பானிக்கு கேட்கும்.. கார்ப்ரேட்காரனுக்கு காசுதான் முக்கியம். நம் எதிர்ப்பை பதிவு செய்வோம். ஊடகத்தினால் வரும் வருவாய் பெரிதா, ஜியோ-வினால் வரும் வருமானம் பெரிதா என்று பார்ப்பவன் தான் கார்ப்பரேட்.

disclaimer

மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !

மக்கள் கலை இலக்கியக் கழகம் – சென்னை.


நாள்: 20.07.2020

மக்கள் கவிஞர் தோழர்-வரவரராவை விடுதலை செய்!

பத்திரிக்கை செய்தி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
மக்கள் உரிமை போராளிகளே!
ஊடக நண்பர்களே!

வணக்கம்.

  • ‘மக்கள் கவிஞர் தோழர்-வரவரராவ் உள்ளிட்ட 11 போராளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்’.
  • இவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

இந்த கோரிக்கை வெற்றி பெற அனைவரும் குரலெழுப்ப வேண்டுமென கேட்டுக்கெள்கிறோம். தோழர்கள் வரவரராவ் , சாய்பாபா, சுதா பரத்வாஜ், ஆனந்த்தெல்தும்டே, சோமா சென், கவுதம் நவ்லகா உட்பட 11 போராளிகள் 22 மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடுகின்றனர்.

மக்களின் உரிமைகள் கார்ப்பரேட்-காவி கும்பலால் நசுக்கப்படும் போது, மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு ஆளாகின்ற போது, RSS,BJP காவிகளின் வன்முறையால் பாதிக்கப்படும் போதும் குரலெழுப்பி போராடி மக்களுக்கு அரணாய் நின்றவர்கள் இந்த போராளிகள்.

நாட்டின் இயற்கை மற்றும் கனிம வளங்களையும், பொதுத்துறைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுக்கும் அரசின் அராஜகத்தை எதிர்த்து போராடியவர்கள் இந்த போராளிகள். இன்று வரை சிறையில்;வயது மூப்பு, நோய் தொற்று, உடல் செயல்பாடின்மை, முறையான சிகிச்சையின்மை என பல்வேறு துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.

கருத்துரிமைக்கு போராடுபவர்களையும், நியாயத்தின் பக்கம் நிற்பவர்களையும், உண்மையை உலகறியச் செய்பவர்களையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒடுக்கி வருகிறது.

கொரோனா காலத்தை சாதகமாக்கி போராளிகளை சிறையிலேயே கொல்லத்துடிக்கிறது, இவை கொட்டடிக் கொலை முயற்சிக்கு ஈடானது.
இவற்றை நாம் அனுமதிக்க கூடாது. கார்ப்பரேட்-காவி பயங்கரவாத பிடியிலிருந்து போராளிகளை விடுவிக்கும் பொறுப்பு நம்முன் உள்ளது.

படிக்க:
தோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு !
கருப்பர் கூட்டம் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய் !

மத்திய அரசே!

  • தோழர் வரவரராவ் உள்ளிட்ட மக்கள் போராளிகள் 11பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும்!
  • பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும்!
  • கருத்துரிமைக்கு போராடுபவர்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்!

இவண்
தோழமையுடன்,
வே.வெங்கடேசன்
(செயளாலர்)ம.க.இ.க – சென்னை.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை. தொடர்புக்கு : 95518 69588.

***

யிருக்கு போராடும் மக்கள் கவிஞர் தோழர். வரவரராவை உடனே விடுதலை செய்யக்கோரியும், உழைக்கும் மக்களின் குரலாக விளங்கும் அறிஞர்கள் ஆனந்த் தெல்தும்டே, சுதா பரத்வாஜ், பேராசிரியர் சோமாசென் உள்ளிட்ட பதினோரு பேரை சிறையிலேயே கொல்லத்துடிக்கும் மோடி அரசை கண்டித்தும் தஞ்சாவூர் இரயிலடியில் 17-07-2020 வெள்ளி காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபேற்றது.

இவ்வார்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர். காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழகம் தஞ்சை கிளைச்செயலர் தோழர் இராவணன், சி.பி.எம்.எல் (மக்கள் விடுதலை) மாவட்ட செயலர் தோழர் அருணாச்சலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாவட்ட செயலாளர் தோழர். நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரநகர செயலாளர் தோழர். கிருஷ்ண முர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலர் தோழர். தில்லைவனம், தமிழ் தேச பேரியக்கம் தலைவர் தோழர். பே. மணியரசன், தமிழர் தேசிய இயக்கம் செயலர் தோழர். அயனாபுரம் முருகேசன், தமிழ் தேச மக்கள் முன்னணி தோழர். ஆலம்கான், அரசுபோக்குவரத்துசங்க பொதுச்செயலர் தொழர். துரை. மதிவாணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன், இந்திய ஜனநாயக கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், ஆகியோர் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போக்குவரத்து வாய்ப்பு இன்றி கொரோணா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பங்கேற்ற தோழர்களின் வர்க்க உணர்வு போற்றுதலுக்குரியது. படர்ந்து வரும் பாசிச சூழலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை தஞ்சையில் ஒரு நம்பிக்கை யூட்டும் தொடக்கம்.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.

படிக்க:
கவிஞர் வரவர ராவின் விடுதலையைக் கோரி இளம் கவிஞர்கள் கடிதம் !
பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! பு.மா.இ.மு கோரிக்கை

***

க்கள் கவிஞரும் புரட்சிகர எழுத்தாளருமான தோழர் வரவர ராவ், புனையப்பட்ட பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் ஜனநாயக சக்திகள் என 20 க்கும் மேற்பட்ட தோழர்கள் இனைந்து பெரியார் நிலையம், கட்டபொம்மன் சிலை அருகில் 18/07/2020 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தோழர் வரவர ராவ் உட்பட 11 நபர்களை பீமா கொரேகான் கலவரம் தொடர்பாக புனையப்பட்ட பொய் வழக்கில் கைது செய்பட்டதை கண்டித்தும், உடல்நலம் பாதிக்கப்பட்ட 82 வயதான தோழர் வரவர ராவை சிகிச்சை அளிக்காமல் அலட்சியப் படுத்திய சிறை அதிகாரிகளையும், நீதித்துறையையும், இந்திய அரசை கண்டித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் ராமலிங்கம் தலைமை உரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் இந்த கொரோனா ஊரடங்கில் பொதுத்துறை அனைத்தும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதே மத்திய அரசின் கொள்கையாக இருக்கும் இந்த சூழலில், தோழர் வரவர ராவ் போன்றவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது என்பதையும், தோழர் வரவர ராவை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உடனே அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக கோரிக்கையை வைத்தார்.

அவரைத் தொடர்ந்து, மக்கள் அதிகாரம் தோழர் ஆசை தன் கண்டன உரையாற்றினார். அதில் மதுரையில் இன்று கொரோனா தொற்றால் 129 பேர் இறப்பு என அரசு அறிவிக்கிறது. ஆனால் மதுரை MP தோழர் வெங்கடசேன் கூறுகையில் 205 உயிரிழப்பு என ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறார். கொரோனா குறித்து இந்த அரசு நடத்தும் பொய் பிரச்சாரத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.

கொரோனா நோய் தொற்றை தடுக்க முடியாத இந்த வக்கற்ற அரசு எப்படி இறப்பு விகிதத்தை குறைத்து கூறி தன் மாண்பை காப்பாற்றுகிறதோ, அதைப் போல் தான் மாலேகான் குண்டு வெடிப்பில் ஆதாரத்துடன் கைதான பிரக்யா சிங் போன்ற பயங்கரவாதிகளை நீதிமன்ற விடுவித்துவிட்டு. மற்றொரு பக்கம் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்காக போராடிய பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோர்களை கைது செய்து தங்களின் மாண்பை காப்பாற்ற முயற்சி செய்து, தன் பாசிச முகத்தை மறைக்க முயல்கிறது.

இனியும் இந்த பாசிச அரசமைப்பை நாம் சுமக்க முடியாது. ஆகையால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட 11 நபர்களுக்கும், நிபந்தனையின்றி ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி தனது கண்டன உரையை முடித்தார்.

மேலும் இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் பங்குபெற்று, மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும் இணைந்தனர்.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

கருப்பர் கூட்டம் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய் !

மக்கள் கலை இலக்கியக்கழகம்தமிழ்நாடு


நாள் : 16. 07. 2020

பத்திரிக்கைச் செய்தி

ந்தியாவில் தமிழகத்தின் தனித்துவத்திற்கான  முக்கிய கூறுகளில் ஒன்று பகுத்தறிவுச் சிந்தனை. திருவள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், பெரியார் என நீண்ட பகுத்தறிவு வரலாறு தமிழகத்திற்கு உள்ளது. அதேபோல் இந்து மதவெறிக்கு பலியாகாத மாநிலமும் தமிழகமே. இந்தத் தனிச் சிறப்பை ஒழித்து வட மாநிலங்களைப் போல  தமிழகத்தையும்  பார்ப்பன அடிமைக் கூட்டமாக மாற்ற ஆர்.எஸ்.எஸ்  – பிஜேபி கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தமிழக போலீசு  கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் வலைக்காட்சியைச் சேர்ந்த செந்தில் வாசன் சுரேந்திரன் ஆகிய இருவரைக் கைது செய்திருக்கிறது. கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகப் பேசியதாகவும் முருகக் கடவுளையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி விட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ்  – பிஜேபி கும்பலும், அவர்களின் அடியாட்களும் போட்ட கூச்சலுக்கு பயந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது எடப்பாடி அரசு.

இந்த கைது நடவடிக்கை பகுத்தறிவு சிந்தனைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானதாகும். இதனை மக்கள் கலை இலக்கியக் கழகம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

படிக்க:
பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம் ! நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள் !
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு

இந்திய அரசியல் சட்டத்தின் 51 ஏ உறுப்பானது அறிவியல் உணர்ச்சி, மனிதாபிமானம், எதனையும் கேள்விக்குள்ளாக்கும் ஊக்கம், சீர் திருத்தம் போன்றவற்றை வளர்ப்பது  ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அடிப்படைக்   கடமையாகும் என்று வலியுறுத்துகிறது. அதேபோல் இந்தியாவின் வளமான பன்முகப் பண்பாட்டை மதித்துப்  பாதுகாப்பதையும் கடமை என வலியுறுத்துகிறது. எனவே சாதி மத கலாச்சாரத்தின் பெயரால் நிலவும் எல்லா பிற்போக்குத் தனங்களையும் சிந்தனைகளையும் எதிர்ப்பதும் தகர்ப்பதும் ஒரு பண்பட்ட குடிமகனின் கடமையாகும்.

எனவே, இந்த கைது நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு, குறிப்பாக மதசார்பின்மைக்கு எதிரானது. தமிழக அரசு வெளிப்படையாகவே இந்துமதத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. எடப்பாடியின் கட்சிக் கொடியிலிருக்கும் முன்னாள் முதல்வர் திரு. அண்ணாதுரை அவர்கள் முழுநாத்திகர். அவர் எழுதிய கம்பரசம் என்ற நூல் கம்பராமாயணத்தில் உள்ள ஆபாசங்களை தோலுரித்துப் புகழ் பெற்றது. தந்தை பெரியார் அச்சமின்றி நடத்திய கடவுள் மறுப்பு, பகுத்தறிவு பிரச்சாரம்தான்  தமிழ் மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டியது.

திராவிடக் கட்சிகளை எதிர்ப்பது என்ற பெயரில் திராவிட சிந்தனைகளான பகுத்தறிவு, மனுதர்ம – வேத மறுப்பு, மனிதநேயம், மதசார்பின்மை  போன்ற அடிப்படைகளை ஒழித்து பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநாட்ட வெறி பிடித்து அலைகிறது ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி கும்பல். இதற்கு மாரிதாஸ் போன்ற கூலிக்கு மாரடிக்கும் கும்பல்களை களத்தில் இறக்கியிருக்கிறது.

இக்கும்பல் தொலைக்காட்சி நெறியாளர்கள் பலரையும் கூட தனிப்பட்ட விதத்தில் தாக்குகிறது. கொரோனாவை காரணம் காட்டி திருவள்ளுவர், பெரியார், மதச்சார்பின்மை போன்ற  கருத்துக்களை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து நீக்குகிறது. ஆகவே, சங்கப் பரிவாரக் கும்பலின் தமிழர் விரோத, மக்கள் விரோத செயல்களை மக்கள் களத்தில் இறங்கித்தான் முறியடிக்க வேண்டும். எடப்பாடி அரசு செந்தில் வாசன், சுரேந்திரன் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

தோழமையுடன்,
தோழர் காளியப்பன்,
மாநில இணைச்செயலாளர்,

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

 

பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! பு.மா.இ.மு கோரிக்கை

1

ல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்திற்கு அனுமதியளித்துள்ளது இதைக்கேட்டு மாணவர்களும் பெற்றோர்களும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரானா தொற்று பரவலும் இறப்பு விகிதமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இது உச்சத்தை எட்டும் என வல்லுனர்களும் மருத்துவரகளும் எச்சரிக்கிறார்கள். எல்லா மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், விடுதிகள் அனைத்தும் கோவிட் 19 தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. கிராமங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களில், இருந்தும் படித்து வந்த மாணவர்கள் கொரானா தொற்றால் தங்கள் சொந்த ஊருக்கு சென்று உள்ளனர்.

இந்த நிலையில் ரயில் போக்குவரத்து வசதியில்லாமல் அவர்கள் தேர்வு எழுது சாத்தியமற்றது, மேலும் மாணவர்கள் இளைஞர்கள் கொரானா தொற்றுக்கு பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது இதே நிலையில் ஆன்லைன் வழியாகவும் தேர்வை நடத்துவது அனைவரிடமும் ஆண்ட்ராய்டு செல்போன் இன்டர்நெட் வசதி இல்லாத ஒரு ஏற்றத் தாழ்வான சூழல் நிலவுகிறது இதே சூழலில் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்.

படிக்க:
சி.பி.எஸ்.ஈ பாடத்திட்ட மாற்றம் : ஜனநாயகத்தை கல்வியிலிருந்தே ஒழித்துக்கட்டும் சதி !
ஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !

சமீபத்தில் மத்திய பாடத்திட்ட வாரியமான சிபிஎஸ்சி கொரானா சூழலால் 30 சதவீத பாடத் திட்டங்களை குறைப்பதாக கூறி 11வது, 12வது பாடங்களில் குடியுரிமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றை நீக்கியுள்ளது. அதேபோல் ஒன்பதாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் தமிழகத்தின் கலாச்சாரம் சார்ந்த பகுதிகளை நீக்கியுள்ளது.

இது அனைத்தும் பாஜக அரசு தனது இந்துத்துவா கொள்கைக்கு எதிரான கருத்துக்களை அனைத்தையும் நீக்குவது என்ற உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இந்த பாடத்திட்ட நீக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ச்சியாக எமது அமைப்பு களத்தில் இறங்கி போராடும்.. !

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர்.

***

புரட்சிகர மாணவர்-இளைஞர்கள் முன்னணி இன்று (15.07.2020) மாநிலம் முழுவதும் ஆன்லைன் கல்வி வேண்டாம் என்றும் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டாம் என்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கல்விதுறை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்; காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பு குழு தோழர் துணைவேந்தன் மற்றும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஊரடங்கு சூழலை மத்திய அரசு பயன்படுத்தி கொண்டு புதிய கல்வி கொள்கை அமல்படுத்தும் முயற்ச்சியில் ஆன்லைன் கல்வியை அமல்படுத்த துடிக்கிறது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

துவக்க பள்ளிகள் முதல் உயர் கல்வி வரை ஆன் லைனில் பாடம் நடத்த முயற்சிக்கிறார்கள். கிராமபுறங்களில் உள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அலைபேசியோ அல்லது கணினியோ இல்லாதவர்கள். அப்படியே அலைபேசி வைத்திருப்பவர்களில் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையும் குறைவு. அதனை பயன்படுத்தும் அறிவும் இன்னும் மக்கள் அனைவரிடமுஅம் இல்லை. இன்னும் 4ஆம் தலைமுறைக்கான அலைகற்றை கொண்ட அலைபேசி கோபுரங்களும் இல்லாத நிலையே உள்ளது.

ஊரடங்கால் மக்கள் உழைக்க தயாராய் இருந்தும் வேலைக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. தற்பொழுது பிழைப்பதற்கே தங்களுக்கு வருமானம் இல்லாத சூழலில் ஆன்லைன் கல்வியை கற்க தயாராக வேண்டும். திறக்காத பள்ளிகளுக்கு கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று கூறுவது குடிக்க கஞ்சி இல்லாத மக்களுக்கு மாளிகையில் வாழும் மன்னன் தங்க பஷ்பம் உண்டால் உடலுக்கு நல்லது என்று சொல்வது போல் உள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா நோய் தொற்று பாதித்துள்ளதால் மேலும் பரவும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது என்பது மேலும் நோய் தொற்றை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. எனவே செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யவதே சரியானது. உண்மையில் மக்களுக்கு நோய் பரவ கூடாது என்பதற்காக தான் ஊரடங்கு எனில் அரசு செமஸ்டர் தேர்வை மட்டும் நடத்த துடிப்பது ஏன்? உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள மக்களின் வாழ்நிலையை உணர்ந்துள்ள அரசு எனில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.ஆன்லைன் கல்வியை நிறுத்த வேண்டும். மாற்றை கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர் சங்கங்கள் என அனைவரையும் அழைத்து ஆலோசனை செய்து திட்டமிட வேண்டும்.

இத்தகைய சூழலில் மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு  மதிப்பெண்ணின் அடிப்படையில் மருத்துவ கல்விக்கான நுழைவை அனுமதிக்க வேண்டும். என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டு. இறுதியாக மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்திலும் பத்திரிக்கை செய்தி கொடுக்கப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர்கள் முன்னணி,
காஞ்சிபுரம்.

கவிஞர் வரவர ராவின் விடுதலையைக் கோரி இளம் கவிஞர்கள் கடிதம் !

“எந்த வித ஆதாரமும் இன்றி சட்ட விரோதச் செயல்பாடுகள் தடுப்பு (உபா) என்னும் கொடூரமான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் கவிஞர் வரவர ராவை அதிகாரிகள் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி எழுதப்பட்ட கடிதம் இது:

உலகப் புகழ் பெற்ற கவிஞரும் இதழியலாளரும் இலக்கியவாதியுமான வரவர ராவ் தெலங்கானாவைச் சேர்ந்தவர். ‘விரசம்’ என்ற புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தை நிறுவியவர். வரலாறு நெடுகிலும் பல ஆட்சியாளர்களால் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டு கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டவர். பிறகு விடுவிக்கப்பட்டவர். ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்களை நெளியச் செய்தவை அவருடைய புரட்சிகரமான எழுத்துகள் என்பதைத்தான் இது சுட்டுகிறது.

அவருடைய கவிதைகளின் வீரியம் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. பெயரைச் சுட்டிக் காட்டாமலே பெயரற்றவர்களுக்குப் பெயர் சூட்டுபவரே கவிஞர். அப்படியான கவிஞர்களைக் கைது செய்தல் அல்லது குற்றவாளியாக முன்னிறுத்த முனைதல் என்பது தங்களைக் குறித்த கவிதைகள்தாம் அவை என்பதை அதிகாரம் படைத்தவர்கள் ஏற்றுக் கொள்வதன்றி வேறில்லை.

மகாராஷ்டிராவில் உள்ள பீமா-கோரேகானில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் தொடர்பிருப்பதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார் வரவர ராவ். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்கு நியாயமான நீதி விசாரணை நடத்தப்படவில்லை. துடிப்பு மிக்க சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் இவரும் அநியாயமாக இத்தனை காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

80 வயது மனிதர் அவர். செய்திக் குறிப்பாக அவருடைய குடும்பத்தினர் வெளியிட்டதுபோல, “சிறையில் வரவர ராவைக் கொன்று விடாதீர்கள்”. நினைவிழந்த நிலையில் கடந்த மே மாதம் ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை அவருடன் இருக்கும் சிறைவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகார மையத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியவர் என்ற ஒரே காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டவர் வரவர ராவ் என்பது தெள்ளத் தெளிவாகிறது. மக்களுக்காகப் பேச வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் இளம் கவிஞர்களான நாங்கள் உணர்ந்திருப்பது மட்டுமல்லாமல் அதிகாரத்தைத் தட்டிக் கேட்க வேண்டிய கடமையும் எங்களுக்கு உள்ளது என்பதையும் உணர்கிறோம்.

வரவர ராவை போன்ற மக்கள் கவிஞர்கள் வாழ்வதனால்தான் சமூகத்துக்காகப் பேசவும் எழுதவும் இளம் கவிஞர்களால் முடிகிறது. இந்நாட்டின் இளம் கவிஞர்கள் என்ற முறையில் ராவ் மீதான தாக்குதலை எங்கள் மீது, எங்கள் மனங்கள் மீது, எங்களுடைய பேனாக்கள் மீது, எங்களுடைய கருத்துக்கள் மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலாகவே கருதுகிறோம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

படிக்க:
தோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு !
சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !

எங்களுடைய குரல்கள் இப்படியாகத் தொடர்ந்து நெரிக்கப்பட்டால், எங்களுக்கென்று குரல்கள் இல்லாமலேயே போய்விடும். இறுதியில் இரண்டு குரல்கள் மட்டுமே எஞ்சும். ஒன்று அரசனுடையது மற்றொன்று புரவலரின் அரசவையில் நியமிக்கப்பட்ட புலவருடையது. கட்டுக்கடங்காத சிந்தனை மலர நம்முடைய போராட்ட குணத்தை உயிர்ப்புடன் வைத்திருத்தல் வேண்டும். ஜனநாயகத்துக்குக் கடைசியாக நம்மால் இயன்றது அது மட்டுமே.

பெருந்திரளாகக் குடிமக்கள் கிளர்ந்தெழுந்த பிறகே வரவர ராவ் சிகிச்சைக்காக ஜேஜே மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. அவருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கும்படி அரசுக்கும் நீதித் துறையினருக்கும் முன்பாகக் கோரிக்கை வைக்கிறோம். அவர்தம் குடும்பத்தினர் உடனிருக்க அனுமதியுங்கள். ஜாமீனில் அவரை உடனடியாக வெளியே விடுங்கள். இவற்றைச் செய்தால் மட்டுமே அச்சமின்றிக் குரலெழுப்பும் தருணங்களில் இளம் கவிஞர்களின் குரல்களை ஆளும் அரசு நெரிக்காது என்ற உத்தரவாதம் எங்களுக்குக் கிட்டும்.

நம்முடைய கற்பனைச் சிறகுகளை விரித்துக் கவிதை எழுத வெளி அமைத்துத் தந்த கவிஞர் வரவர ராவுக்காக நாடு முழுவதும் உள்ள சக இளம் கவிஞர்கள் ஒன்றிணையும்படி அழைப்பு விடுக்கிறோம்”

தமிழில் : சுசித்ரா மஹேஸ்வரன்.

நன்றி : ஃபேஸ்புக்கில்Susithra Maheswaran