Friday, November 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 361

விடுதிக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய் | அண்ணாமலை பல்கலை மாணவர் போராட்டம் !

0

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணத்தை, ஏப்ரல் முதல் வாரத்தில் உயர்த்தி உத்தரவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம். இதனை எதிர்த்து கடந்த ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்தை கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தது நிர்வாகம். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக துணை வேந்தர் கட்டணத்தைக் குறைப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அவர் குறிப்பிட்டவாறு கட்டணத்தைக் குறைக்கவில்லை. கடந்த 3 நாட்களாக நிர்வாகத்தால் அலைக்கழிக்கப்பட்ட மாணவர்கள், நிர்வாகத்தைக் கண்டித்து நேற்று பல்கலைக்கழகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (08-04-2019) தொடங்கிய இப்போராட்டம், நேற்று இரவும் தொடர்ந்தது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

உயர்த்தப்பட்ட கட்டணத்தை எதிர்த்து இரவிலும் தங்களது போரட்டத்தைத் தொடர்ந்து  வருகின்றனர். விடுதி கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமல்லாது, மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட விடுதி வைப்பு தொகை ரூ.5000-ஐ திரும்ப வழங்க வேண்டும், SC-ST மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளையும் சேர்த்து வைத்து போராடி வருகின்றனர்.


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.

மனோன்மணியம் பல்கலை மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் !

“தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !”என வாசகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று, ஜெயகர் என்ற வாசகர் ஒருவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் வழங்கக் கோரி பணம் செலுத்தி இருந்தார்.

அதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு போர்னோ : இருளில் சிக்கும் இளமை மற்றும் அம்பானியின் அடகுப் பொருளா மாணவர்கள் ? ஆகிய இரு தலைப்பிலான புதிய கலாச்சாரம் வெளியீடுகளில் ஒவ்வொரு தலைப்பிலும் 50 படிகள் வீதம் 100 புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போதைய சூழலில் தமிழகம் முழுக்கவே கல்லூரி மற்றும் பல்கலைக் கழக வளாகங்கள் அனைத்து, புறக்காவல் நிலையங்களாக மாறியுள்ள சூழலில் ஒரு நூலை மாணவர்களுக்கு வழங்குவது கூட போராட்டமாக உள்ளது. இந்த சூழலுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் கூட விதிவிலக்கில்லை. அப்படியான சூழலில்.

மாணவர்கள் வகுப்பு முடிந்து வரும் நேரம் வரை காத்திருந்து தோழர்கள் இந்த புத்தகங்களை வினியோகித்தனர். ஒரு சில மாணவர்கள் ஆரம்பத்தில் ஏதோ புத்தம் கொடுக்கிறார்கள் என கருதி, “உள்ள வகுப்பு பாடங்களையே படிக்க நேரம் இல்லை.. இதில் இது என்ன புத்தகம்…?” என கேட்டனர்.

அதன் பின்னர் அவர்களிடம் இந்த நூலின் உள்ளடக்கம் பற்றி சொன்னதும் அவர்களாகவே எங்களுக்கு கொடுங்கள் என கேட்டு வாங்கிச் சென்றனர். அதிலும் தங்கள் பல்கலைக் கழகத்தை தேர்ந்தெடுத்து “இது போன்ற நூல்களை வழங்கச் சொல்லி ஒருவர் கூறியுள்ளார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது…” என்பதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதில் மாணவர்களைப் போலவே மாணவிகளும் கேட்டு வாங்கி தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இன்னும் சிலர் புத்தகத்தை வாங்கிவிட்டு அதில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசிக்கு தொடர்பு கொள்கிறோம் என ஆர்வத்துடன் தெரிவித்து சென்றனர்.

இம்மாதம் மீண்டும் அந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலும் 100 புத்தகங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம்…

மாணவர்களை பாடத்திட்டத்தைத் தாண்டி எதையும் படிக்கவிடாது தடுப்பது, பாடங்களைக் கூட பணம் சம்பாதிக்கும் வேலைக்காக மட்டும் படிக்க வேண்டும் என்ற நச்சு சூழலை ஏற்படுத்திவிட்டு, அவர்களை குறை கூறுவது மட்டும் நியாமா ? என்ற கேள்வி பொது வெளியில் எழுப்பப்ப வேண்டியது நம் அனைவரின் கடமை.

நீங்களும் உங்கள் பங்களிப்பாக புதிய கலாச்சாரம் வெளியீடுகளை மாணவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரிகளை தெரிவு செய்தும் பணம் அனுப்பலாம். கீழே உள்ள இணைப்பில் முழு விவரங்கள் உள்ளன. ஆதரவு தாருங்கள் !

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

மெல்லக் கொல்லும் சர்க்கரை | மருத்துவர் அர்சத் அகமத்

“எப்படி சார், என்ன நல்லா மெலிஞ்சி போயிட்டீங்க?”.

“ஒன்னுமில்லை கொஞ்சம் சுகர்  இருக்கு அதுதான்… தம்பி கொஞ்சம் சீனி கொறச்சி டீ ஒன்று….”

“என்ன ஒங்களுக்கும் இந்த வயசில சீனி வருத்தமா?” இது நமது வாழ்வில் தினமும் கேட்கின்ற, சாதாரணமாக கேட்கின்ற உரையாடல்கள். ஒவ்வொரு நாளும் இப்படியான நிறைய உரையாடல்களை நாம் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். சர்க்கரை அல்லது  டயபடிக்( diabetic) என்பது  சமூகத்தில் ஒரு கௌரவ சொல்லாக மாறியிருக்கிறது, இது சமூகத்தை விட்டும் பிரிக்க முடியாத, வாழ்வின் அங்கமாக மாறிவிட்டிருக்கிறது.

மிக அண்மைய தரவுகளின் அடிப்படையில் நம்மில் மூவரில் ஒருவர் இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது மிக  கவலை தரும் செய்தியாக இருக்கிறது. சிலவேளைகளில் இதை வாசிக்கின்ற நாமோ, அல்லது  நமது உறவினர்கள், நண்பர்களில் குறைந்தது ஒருவரோ இந்த நோயாளியாக  இருப்பதை யாரும்  மறுப்பதிற்கில்லை.

டயபடிக், பொதுவாக சர்க்கரை வியாதி என்பதாக அறியப்பட்டாலும் அது இந்த நோயின் சரியான விளக்கத்தை வழங்குவதாக இல்லை. நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருப்பது இந்த வியாதி ஏற்படுவது சீனியினால் என்று. அதனால் அவர்கள் சீனியைத் தவிர்த்து, அனைத்து வகையான ஏனைய மாவுப்பொருட்களை உண்ணுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் தவறான ஒரு உணவு பழக்கத்துக்கும், கட்டுப்படுத்த முடியாத நோய் நிலைமைக்கும் இட்டுச் செல்லக்கூடியதாகவும் இருக்கின்றது.

டயபடிக் , நமது உடலில் ஏற்படுகின்ற ஒரு குணப்படுத்த முடியாத நீண்ட கால பிரச்சினைகளை  ஏற்படுத்தும் நோய் நிலைமை. இது உடலில் சாதரணமாக பேண வேண்டிய சீனியின் அளவை விட மேலதிக அளவில் சீனி பேணப்படுவதால் ஏற்படுகின்றது. அதாவது மாவுப்பொருள் (carbohydrates) உணவுச் சமன்பாட்டில் உடலில் ஏற்படுகின்ற ஒரு மாற்ற நிலை. இதனால் குருதியில் பேணப்பட வேண்டிய சீனியின் அளவு தாறுமாறாக அதிகரித்து செல்லுவதுதான் இந்த நோயின் ஆபத்தாக  இருக்கிறது.

இந்த டயபடிக் பற்றி  அறிந்து கொள்வதற்கு முன்னால்  சில  அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் தினமும் உட்கொள்கின்ற உணவு வகைகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.

படிக்க:
கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுப்பது எப்படி | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ நவீன மருத்துவம் எப்படி சரியானது ? | மருத்துவர் அர்சத் அகமத்

1. Carbohydrates எனப்படும் மாவுப்பொருட்கள் :   நமது உணவின் பெரும்பகுதி இதுவாகவே இருக்கின்றது. சோறு, மாவு, கடலை, சீனி, இனிப்பு வகைகள், பழச்சாறு, தானியங்கள், பருப்பு, கிழங்கு வகை என்பன இதில் அடங்கும்.

2. Protein எனப்படும் புரத உணவுகள் – பெரும்பாலும் மாமிச உணவுகள் இதில் அடங்குகின்றன. இறைச்சி, மீன், முட்டை, பால் போன்ற உணவுகள்.

3. Lipid எனப்படும் கொழுப்பு வகைகள் – இதில் எண்ணை வகைகள், பட்டர், மீன், இறைச்சி,முட்டை  கொழுப்புக்கள் என்பவை அடங்குகின்றன.

4. ஏனயவை Vitamin & Minerals   – விட்டமின்களும் கனியுப்புக்களும் – இவைகள் மரக்கறி, பழங்கள் மற்றும் கீரைகள், தானியங்கள், நீர், அதுபோல் இறைச்சி, மீன் முட்டை போன்றவற்றில் மிகச் சிறிய அளவுகளில் காணப்படுகின்றது.

நாம் உட்கொள்கின்ற இந்த உணவுகள் எல்லாமே நமக்கு அன்றாட தொழிற்பாட்டுக்கு தேவையான சக்தியைப் பிறப்பிப்பதோடு போக எஞ்சிய மீதி சேமிப்பாக சேர்த்து வைக்கப்படுகின்றது.

ஆனால் நாம் அதிகம் பேசுகின்ற இந்த டயபடிக் என்பது முற்றிலும் 1-ம் வகை சார்ந்த  மாவுப்பொருள்களின் தொழிற்பாட்டிலயே  தங்கியுள்ளது. நாம் நமது உணவில் எடுத்துக்கொள்கின்ற எந்த மாவுப்பொருளும் உடலுக்குள் சென்றதும் அவை சீனியாக மாற்றப்படுகின்றன. இது பல்வேறுபட்ட சிக்கலான படிமுறைகள்  ஊடாக நடைபெறுகின்றது.

சீனியாக மாற்றும் செயற்பாடு வாயில் தொடங்கி இரைப்பை, குடல், ஈரல், மண்ணீரல் என நீண்டு கொண்டு செல்கின்றது. இவ்வாறு பல படிமுறை மாற்றம் பெற்ற மாவுப்பொருட்கள் இறுதியில் சீனியாக மாற்றப்பட்டவுடன் இரத்தத்தில் கலக்கப்பட்டு உடல் முழுவதும்  எடுத்துச் செல்லப்படுகிறது.

இப்போது இரத்தத்தில் உள்ள சீனி (Glucose) ஆனது  Pancreas எனப்படும் மண்ணீரலினால் சுரக்கப்படும் இன்சுலின் ஹோர்மோன்  இந்த சீனியை, இந்த குளுக்கோசை, நமது உடல் கலங்களுக்கும் (Cells), ஈரலுக்குள்ளும் (Liver)  உட்புகுத்துகின்ற வேலையை செய்கின்றது.  உட்புகுந்த இந்த  சீனி  மாத்திரமே நமக்கு தேவையான சக்தியை பிறப்பிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

இந்த தொழிற்பாடுதான் நமது இரத்தத்தில் சீனியின் அளவை ஒரு சீராக வைத்திருக்க உதவுகின்றது. இதற்கு எதிர்மாற்றமான நிலையே டயபடிக் எனப்படுகின்றது. இதன் போது நமக்கு தேவையான இன்சுலின் சுரக்கப்படாமல் போகின்றது அல்லது சுரக்கப்படுகின்ற இன்சுலின் தரமற்றதாக, பயன்பாட்டில் குறைவுடையதாக அல்லது சொற்ப அளவானதாக சுரக்கப்படுகின்றது. இதனால் குளுகோசின் அளவு இரத்தத்தில் கட்டுப்பாட்டிலில்லாமல் அதிகரிக்கின்றது.

இந்த டயபடிக் என்பது மிக மோசமானதொரு நோய் நிலைமையாகும். சில மருத்துவ பேரறிஞர்களின் கருத்துக்களின்படி இது ( கன்சர் ) புற்றுநோயை விட கொடியதொரு நோயாக கருதப்படுகிறது. மெல்ல மெல்ல கொல்லும் கொடிய நோய் என்றால் கூட அது மிகையாகாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சமூகம் மிகவும் பராக்கற்ற அல்லது அதிகம் கவனம் செலுத்தாத, பயப்படாத நோயாகவும்  இதுவே காணப்படுகிறது.  யாராவது ஒருவர்  டயபடிக்  நோயாளியாக அடையாளப்படுத்தப்பட்டால்  இனி வாழ் நாள் முழுவதும் அந்நோயுடனே அவர் possible மரணிக்க வேண்டிய ஒரு துர்பாக்கியமிக்க நிலைமைக்கு ஆளகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

டயபடிக் ஏன் எற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஒற்றைக் காரணம் இல்லாவிட்டாலும் இது பல்வேறு காரணிகளினால் ஏற்படுகிறது. பரம்பரையில் தாய் தகப்பனுக்கு அல்லது உறவுகளுக்கு உள்ள போது ஒருவருக்கு இந்த நோய் ஏற்படும் சாத்தியம் அதிகமாகவுள்ளது. அதுபோலவே கட்டுப்பாடற்ற, ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்கள், போதியளவு உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாமை என  இந்த பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.

டயபடிக் ஏற்படாமல் தடுப்பது எப்படி?, ஏற்பட்டால் நோய் நிலைமைகளிலிருந்து விடுபடுவது எப்படி? என்பதுதான் இப்பொழுது நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்ற மிகப் பெரிய சவால். டயபடிக் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறையை குழந்தை கர்ப்பத்தில் தரித்த காலத்திருந்து தாயின் உணவுப் பழக்கத்திலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும்.

கர்ப்ப காலங்களில் தாய்மார்கள் தங்களது உணவில் போதிய கவனம் செலுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான சாப்பாடுகள், சீனி, சுவையுப்புக்கள், நிறமூட்டிகள் கொண்ட உணவுகளை முற்றாகத் தவிர்ந்து போசாக்கான மரக்கறிகள், பழம், பால், மீன், முட்டை என தேகாரோக்கியம் உள்ள உணவுகளில் அதிகம் கவனம் செலுத்துதல் வேண்டும். அது போல் மன இறுக்கம், மன உளைச்சல் போன்ற உள நிலைமைகளிலிருந்து விடுபட்டு போதுமான தூக்கம், மன அமைதி போன்றவற்றில் கவனம் செலுத்துதல் மிக முக்கியமானதாகும்.

இதன் மூலம் தங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் டயபடிக் இருந்து பாதுகாப்பதோடு, தங்களது குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் ஏற்படும் இந்த நிலைமையையும் பாதுகாக்க முடியும். தாய்ப்பால் ஊட்டுதல், இரண்டு வருடங்களுக்காவது தாய்ப்பால் ஊட்டுதல், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு டயபடிக்  ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக நவீன ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.

உணவுப் பழக்கம், அடுத்த முக்கியமான காரணியாகும். குழந்தைகளும், பெரியவர்களும், அதிகளவான இனிப்புப் பண்டங்கள், மாவுப்பொருட்கள், சுவையூட்டிகள், போத்தலில் அடைக்கப்பட்ட , பதப்படுத்தப்பட்ட உணவுகளை இயலுமானவரை தவிர்த்தல் மிக முக்கியமாகும். நாம் எதைச் சாப்பிடுகிறோமோ எதைக் குடிக்கிறோமோ அதுவே நமக்கு தேகாரோக்கியம் மிக்கதாகவோ அல்லது நோய்க்காரணியாகவோ மாறிவிடுகின்றது என்பது தான் இதில் உள்ள  இரகசியம்.

சீனியின் பாவனையை எப்படி நாம் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோமோ அதுபோலவே மாவுப்பொருட்களை(சோறு, கிழங்கு, மாவுப் பண்டங்களை) இயலுமானவரை குறைத்துக் கொள்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். மாவுப் பொருட்கள் என்கின்ற போது அது பிஸ்கட், சோற் ஈட்ஸ், பேக்கரி உணவுப் பண்டங்கள், என விரிந்து செல்கின்ற பட்டியலை கொண்டிருக்கிறது. இந்த மாப்பொருட்களை குறைத்துக் கொள்வதனால் நமது இன்சுலின் தேவைகளை குறைத்துக் கொள்ளலாம். அதுபோலவே சீனியின் அளவையும் இறுதியில் குறைத்துக் கொள்ளலாம்.

அளவான, தொடர்ச்சியான உடற்பயிற்சி நமது உடலின் குருதி அளவை குறைத்துக் கொள்ள உதவும் மிக முக்கிய காரணியாக இருக்கின்றது. உடற்பயிற்சி என்பது   ஜிம் அல்லது விளையாட்டு மைதானத்திற்கு சென்றுதான் மேற்கொள்ள வேண்டும் என்பது ஒரு தப்பான கணிப்பீடாக உள்ளது. சாதாரணமாக உடல் வியர்த்துக் கொள்கின்ற அளவுக்கு நடைப்பயிற்சியோ, உடல் உழைப்போ, வீட்டு வேலையோ, தொடர்ச்சியாக தினமும் செய்யக்கூடியதாக இருத்தல் கூட நல்ல  உடற்பயிற்சிதான்.

படிக்க:
அறந்தாங்கி உதவி ஆய்வாளர் பிரபுவின் சாதிவெறி ரவுடித்தனம் !
♦ நம் உணவு முறையில் எது நல்லது ? எது கெட்டது ? – கேள்வி பதில் !

உதாரணமாக கடைகளுக்கு, வணகஸ்தலங்களுக்கு நடந்து செல்லுதல், வீட்டைச் சுத்தப்படுத்தல், சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தல், இயலுமானவரை மோட்டார் வாகனங்களை தவிர்த்து சைக்கிள்களை பயன்படுத்தல், நீண்ட நேரம்  உட்கார்ந்து இருப்பதை தவிர்த்தல், இப்படி பற்பல வகைகளில் உடற்பயிற்சி செய்து கொள்ள முடியும்.

அடுத்ததாக இன்சுலின் தொழிற்பாட்டை, உற்பத்தியைக் கூட்டுதல், இதற்கு நோன்பிருத்தல் (intermittent fasting), பசி வந்தால் மட்டுமே சாப்பிடுதல், இடை உணவுகளை  இயன்ற வரை தவிர்த்தல்,  மன அழுத்தத்தை இல்லாமல் செய்தல் என்பன மிகவும் அதிகம் பயனுடையவையாக இருக்கின்றன. நமது மூதாதையர்களின் நல்ல பண்புகளான அதிகாலையில் விழித்தெழுவதும், நேரகாலத்தோடு தூங்கச் செல்வதும்  உடலின் எதிர்ப்புச் சக்தியை, நோய் எதிர்ப்பு வீரியத்தை  அதிகரிக்க உதவும்  என நவீன விஞ்ஞானமும் உறுதி செய்கிறது.

டயபடிக்   ஏற்கனவே வந்துவிட்டாலும் வராவிட்டாலும், இந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெற ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை முற்றாக மாற்றிக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்கத்தை மாவுப்பொருட்கள்  அதிகம் கொண்ட உணவிலிருந்து மாற்றி அதிக புரதம், மரக்கறி போன்ற உணவுகளை உட்கொள்ள பழகிக் கொள்ளல் நலம்.  வயிறு முட்ட உண்பதை தவிர்த்துக் கொள்ளல், வயிற்றை எப்பொழுதும் ஓரளவு காலியாக வைத்திருத்தல்,  அளவான உடற்பயிற்சி செய்தல், என்பன  எல்லோருக்கும் நன்மை தரும் விஷயங்களாக இருக்கின்றன.

டயபடிக் உள்ளவர்கள்  தொடர்ச்சியாக வைத்திய ஆலோசனைகளை பெற்று அதனடிப்படையில் குருதியில் உள்ள சீனியை கட்டுப்படுத்திக் கொள்ளல், உரிய காலங்களில் கண்களை, இதயத்தை, நரம்புத் தொகுதிகளை, சிறுநீரகங்களை சீராக பரிசோதனை செய்தல், குருதியில் கொழுப்பின்  (Cholesterol) அளவை உரிய முறையில் கட்டுப்பாட்டில் வைத்தல் என்பன மிக அவசியமாகும்.

டயபடிக் என்பது வெறும் சீனியின் அளவு மாத்திரமல்ல அது கண்களை குருடாக்கும், கால்களை முடமாக்கும், சிறுநீரகங்களை (Kidney) பழுதாக்கும், அதுபோல் உடலை இழைத்து நோயாளியாக்கி முடக்கி விடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் விளங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குருதியில் தொடர்ச்சியாக அதிகரித்த சீனியினால்  உடல் அவயங்கள் எல்லாவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும்  என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக கண்பார்வை வீச்சு குறைவடைதல், இரவுப் பார்வை குறைபாடு, கண் மங்கமாகுதல், என விரிந்து இறுதியில் கண் குருடாகுதல் என்பதில் இதன் பாதிப்பு  முடிவடைகின்றது. அதுபோல இரத்த குழாய்களில் அதிகளவான கொழுப்பு படிவதால் அவைகள் அடைபட்டு குருதியோட்டம் தடைபடுவதலால் மாரடைப்பு, நெஞ்சுவலி, பாரிசவாதம், காயங்கள் ஆறாத்தன்மை அதனால் அவயங்களை இழத்தல் என நீண்டு செல்லும் இந்தப் பட்டியல் இறுதியில் கிட்னி பெய்லியர் எனும் நிலையில் முடிவடைகிறது.

குருதியில் அதிகரிக்கின்ற சீனியின் அளவு ஆரம்பத்தில் எந்தவிதமாக நோய் அறிகுறிகளையும் தென்படுத்தாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் நிறையப்பேர் தங்களுக்கு டயபடிக் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்கு பல வருடங்கள் கடந்து சென்று விடுகின்றது. சில சமயங்களில் இந்த நோயின் தாக்கம் முற்றி இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த பிறகுதான்  தெரிய வந்த சம்பவங்கள் நிறையவே  இருக்கின்றன.

இந்த நோயின் ஆரம்பக்குறிகளாக அதிக தாகம், பசி, அதிகளவு சிறுநீர் வெளியேறல், தூக்கத்தில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழித்தல், உடல் இளைத்துப் போகுதல், தகுதியான காரணமில்லாமல் உடல் நிறை குறைதல் என இந்தப் பட்டியல் நீட்சியடைகின்றது. ஆகையால் 40 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும், விஷேடமாக குடும்பத்தில் டயபடிக்  உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தங்களது குருதியில் சீனியின் அளவை பரிசோதித்து கொள்வது மிக நன்று.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் இது குறித்து கவனம் எடுப்பதோடு நமது பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுக்கு இது பற்றி விழிப்புணர்வூட்டுவதும் நம் கடமைகளில் உள்ளதுமாகும். அதுபோல் வருமுன் காப்பதே சிறந்தது என்பதை புரிந்து நமது உணவுப் பழக்கத்தில் உடனடி மாற்றம் கொண்டுவருவதும் அவசியத் தேவையாக உள்ளது.

மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL)
Senior Registrar in Peadiatrics, 
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka

அறந்தாங்கி உதவி ஆய்வாளர் பிரபுவின் சாதிவெறி ரவுடித்தனம் !

மக்கள் அதிகாரம் தோழர் வைத்திலிங்கம் மீது கொலைவெறித் தாக்குதல்!
அறந்தாங்கி உதவி ஆய்வாளர் பிரபுவின் சாதிவெறி ரவுடித்தனம்!

டந்த 3.4.2019 அன்று மாலை தனது இரு சக்கர வாகனம் களவு போனது தொடர்பான புகார் மனு குறித்து விசாரிக்க அறந்தாங்கி காவல் நிலையம் சென்றுள்ளார் தோழர் வைத்திலிங்கம்.

அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் பிரபு மிக அலட்சியமாக பதிலளித்ததோடு மரியாதைக் குறைவாகவும் பேசியுள்ளார். ஏன் மரியாதைக் குறைவாகப் பேசுகிறீர்கள் என கேட்டவுடனேயே ஓங்கி அறைந்து, கொட்டடிக்கு இழுத்துச் சென்று மிகக் கடுமையாகத் தாக்கி இருக்கிறார் உதவி ஆய்வாளர் பிரபு. இதில் ஒரு பல் உடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கி இருக்கிறது.

விடாமல் தாக்கியதுடன் சாதியைக் கேட்டுள்ளார், சொல்ல மறுத்தவுடன் மேலும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். வலி தாங்க முடியாமல்தான் ஒரு எஸ்.சி என கூறியவுடன் பள்ளனா? பறையனா? எனக் கேட்டுத் தாக்கியுள்ளார். இத்தாக்குதல் நடக்கும் போது அங்கிருந்த திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர், வழக்கறிஞர் தோழர் அலாவுதீனுக்குத் தகவல் தர, அலாவுதீன் காவல் நிலையம் வந்து உதவி ஆய்வாளர் பிரபுவை எச்சரித்து அழைத்து வந்துள்ளார்.

கடுமையான தாக்குதலுக்குள்ளான தோழர் வைத்திலிங்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். ஆயினும் போலீசு மருத்துவர்களிடம் பேசி மருத்துவத்தைத் தடுத்து புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். அங்கும் அவரை மருத்துவமனையில் சேர்க்க விடாமல் தடுத்துவிட்டனர்.

இவ்வளவு அக்கிரமத்தையும் செய்துவிட்டு நடந்ததை பொதுவெளிக்குக் கொண்டு சென்றாலோ புகார் செய்தாலோ பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவோம், என மிரட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கச் செய்வதற்கு பதிலாக குற்றவாளி எஸ்.ஐ பிரபுவின் ரௌடித்தனத்தையும், தீண்டாமைக் குற்றத்தையும் டி.எஸ்.பி மூடி மறைக்கும் செயலிலேயே குறியாக இருக்கிறார்.

படிக்க:
கோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு !
♦ சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் !

காவல் நிலைய காமிரா பதிவுகள், மருத்துவமனை ஆவணங்கள் இவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், உழைப்பாளிகள் ஆகியோரின் இயல்பான வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலே காவல்துறைதான் என்பது பல்லாயிரக்கணக்கான சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குற்றக்கும்பலுக்கு அடியாளாக இருப்பதும் காவல்துறைதான்.

தோழர் வைத்திலிங்கத்தைத் தாக்கிய எஸ்.ஐ பிரபு, அவருக்கு உடந்தையாக இருப்போர், மருத்துவ உதவி மறுத்த மருத்துவர்கள் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய அநீதி கொடுமைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் போராடுவதன் மூலமே காவல்துறை அராஜகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


தகவல் :
மக்கள் அதிகாரம்
பட்டுக்கோட்டை,
தொடர்புக்கு : 75026 07819

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் ! – நெல்லையில் விளக்கப் பொதுக்கூட்டம் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்!
திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி!
நாள் : 11.04.2019 வியாழக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : அரசு சித்த மருத்துவ கல்லூரி எதிரில், பாளையங்கோட்டை.
 
தலைமை:
 
தோழர் செ. முருகன்
மக்கள் அதிகாரம், நெல்லை
 
உரைவீச்சு:
 
ப. செந்தில்குமார் B.A.B.L
வழக்குரைஞர், திருநெல்வேலி
 
திரு J.B. வெனிஸ்
செயலாளர், கோவளம் – குமரி சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம்
 
சிறப்புரை:
 
தோழர் சி. ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
 

ம.க.இ.க. கலைநிகழ்ச்சி நடைபெறும்.

அனைவரும் வாரீர் ! அனைவரும் வாரீர்!!


மக்கள் அதிகாரம்,
நெல்லை
தொடர்புக்கு: 75989 87316

சூப்பர் டீலக்ஸ் : அரதப் பழசான அத்வைதம் | திரை விமர்சனம்

4

ளம் தம்பதியினர், ஐந்து விடலைப் பருவ மாணவர்கள், வீடு திரும்பும் திருநங்கை, சுனாமியால் பிழைத்து பெந்தகோஸ்தே பிரச்சாரம் செய்யும் நபர் என நான்கு கிளைக் கதைகள். நான்கையும் பிணைத்து செல்கிறது மையக் கதை. இரண்டு கதைகளில் காமமும், ஒன்றில் மூன்றாம் பாலினமும், நான்காவதில் மதமும் கதையின் கருத்தாக உணர்த்தப்படுகின்றன. எனினும் முதன்மையாக காமமே பேசப்படுகிறது.

விடலை மாணவர்கள் பலான படம் பார்க்கத் துவங்குகிறார்கள். அதில் ஒருவனது அம்மாவே நாயகியாக படத்தில் வருகிறாள். ஆத்திரத்தில் டிவியை உடைத்து விட்டு அம்மாவைக் கொல்ல விரைகிறான் அவன். படியில் ஏறும் போது தவறுதலாக அவன் வயிற்றிலேயே குத்திக் கொள்கிறான். அலறும் அம்மா ஆட்டோவில் மகனைக் காப்பாற்ற விரைகிறாள். அவனுக்கு ஒன்றுமில்லை என்று தேறுதல் சொல்கிறாள். மகனோ “போடி தே…முண்டை” என்று திட்டுகிறான். கடைசிக் காட்சியில் காமப் படங்கள் குறித்த தத்துவத்தை தாய் உபதேசிக்கிறாள்.

”இலட்சம் பேர் அந்தப் படங்களை பார்க்கும் போது நான்கு பேர் நடிக்கத்தான் செய்வார்கள், அது எனக்குத் தொழில், நான் மாரியம்மனாகவும் நடித்திருக்கிறேன். பலான படத்தில் விரும்பித்தான் நடித்தேன்” என்கிறாள். இவையெல்லாம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் அல்லது இத்திரைக்கதையை உருவாக்கிய நான்கு மேதைகளின் கருத்துக்கள் (மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் சேகர், தியாகராஜன் குமாரராஜா).

உடைந்த டி.வியைப் பார்த்தால் அப்பா உதைப்பார் என அந்த மாணவனும் மற்ற நண்பர்களும் ஒரு சேட்டு வீட்டில் பணம் திருடுகிறார்கள். அங்கே ஒரு ஏலியன்ஸ் ஜீவராசியை நம்மூர் சேட்டுப் பெண் தோற்றத்தில் சந்திக்கிறார்கள். சேட்டுப் பெண்ணும் இந்த உலகில் அனைத்தும் ஒன்று. நம்மில் வேறுபாடு இல்லை என்பது போல உபதேசிக்கிறாள்.

போர்னோ உலகின் கொடூர அனுபவங்களை அறியாத அம்மாஞ்சியாக இயக்குநர் இருக்கிறாரா? இல்லை செக்ஸ் பிரச்சினைகளை துணிந்து பேசும் கலகக்காரராக காட்டிக் கொள்ள வெட்டிக் கெத்து காட்டுகிறாரா தெரியவில்லை. பலான படங்களிலோ இல்லை ஃபோர்னோ படங்களிலோ நடிப்பவர்களின் அவலக் கதைகள் ஏராளமிருக்கின்றன. அவர்கள் எவரும் அதை விரும்பி ஏற்று நடிப்பது இல்லை.

இலட்சம் பேர், நான்கு பேர் தியரியைப் பொருத்தினால் பொள்ளாச்சி வீடியோக்களை இலட்சம் பேர் பார்க்கும்போது நான்கு பொறுக்கிகள் அப்படி வீடியோ எடுக்க வேண்டியது கடமையாகிறது. குடிக்கிறவன் திருந்தி விட்டால் டாஸ்மாக் தானே மூடப்படும் என்பது போன்ற ஆபத்தான கிழட்டு உபதேசம் இது.

பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து கொண்ட முகில் – வேம்பு கதையை எடுத்துக் கொள்வோம். திடீரென்று தனது கல்லூரியில் படித்த முன்னாள் காதலனை வரச்சொல்லி உறவு கொள்கிறாள் வேம்பு. அப்போது அந்த முன்னாள் காதலன் இறந்து போகிறான். இது தெரியவர முகில் மனைவியை கடிந்து கொள்வதோடு விசயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என பிணத்தை எங்காவது தெரியாமல் போட்டுவிட முனைகிறான். வேம்புவும் அவனோடு ஜீப்பில் பிணத்தோடு சுற்றுகிறாள்.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

வேம்புவின் அந்த திடீர் உறவு எப்படி நடந்தது? பின்னர், அவளை உறவு கொள்ளச் சொல்லி மிரட்டும் இன்ஸ்பெக்டரிடம் முடியாது என்று கதறி அழுகிறாள் வேம்பு. இடையில் கணவனோடு விவாதம் வரும்போது காதலனோடு உறவு எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்கிறாள். அது ஒரு விபத்து போலவும் சித்தரிக்கிறாள். அந்த உறவு திடீரென்று நடந்திருந்தாலும் தனது கணவனோடு சிந்தையில் பிரிவதை அவள் என்றோ ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த மெல்ல மெல்லவான மாற்றத்தின் தர்க்க விளைவே இந்த உறவு மீறல். காமம் என்பது திடீரென்று மீறலையோ, முரண்களையோ ஏற்படுத்திவிடும் ஒன்றல்ல. பாலுறவு நிகழ்ச்சிப் போக்கின் பரிணாமத்திற்கேற்பவே அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

வாழ்வில் இத்தகைய பாலியல் மீறல் திடீரென்று நடந்து விடும்போது அதை பெரிதுபடுத்துவதில் பொருள் இல்லை என்பதாக இந்த கிளைக்கதை உணர்த்துகிறது. கடைசிக் காட்சியில் வேம்புவும் முகிலும் சிரித்தவாறு நடக்கிறார்கள். வேம்புவின் பாத்திரம் அவ்வளவாக ‘வில்லத்த்தனமானதல்ல’ என்பதற்காகவே கடைசிக் காட்சிகளில் அவள் அழுது தீர்க்கிறாள். தன்னுடம்பை காப்பாற்ற கதறுகிறாள். கணவனோ அவளை பிளாக்மெயில் செய்யும் போலீசுக்கு அளிக்க தயார் செய்கிறான். ஒரேடியாக கள்ள உறவு சரிதான் என்று போயிருந்தால் நடுத்தர வர்க்கத்தின் சென்டிமெண்டை கிளற முடியாது என்று இயக்குநர் இங்கே தடுமாறியிருக்கிறார்.

அதே நேரம் காம மீறலை பெரிதுபடுத்தக் கூடாது என்பது புண்ணுக்கு புணுகு போடும் வேலை. காமமோ காதலோ, இருபால் உறவில் ஜனநாயகம் இருப்பதற்கேற்ப நாகரிகமாகவோ அநாகரிகமாகவோ நடக்கிறது. கணவனை விவாகரத்து செய்து காதலனை மணப்பது அநாகரிகமான ஒன்றல்ல. இத்தகைய வெளிப்படைத் தன்மை குறித்து பேசாமல் படுக்கையறையின் திரைமறைவில் பேசுவதால் இந்த கிளைக்கதையும் கிளுகிளுப்பை ஊட்டி விட்டு இறுதியில் ஷகிலா ‘காவியங்கள்’ கூறும் உபதேசமாய் முடிந்து போகிறது.

படிக்க:
தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

இந்த கிளைக்கதையில் முகில் ஆங்காங்கே இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப கருத்து கந்தசாமியாக அரசியல் பேசுகிறான் – அதுவும் அபத்தமாய்!

சாதி, மதம், தேசிய இனம் மூன்றின் பற்றும் ஒன்றுதான், ஒன்று சிறியது மற்றது பெரியது என்பதால் வேறுபாடு இல்லை. இது சரி என்றால் அது சரி, இது தவறு என்றால் அது தவறு என்று வாதிடுகிறான் முகில். இயக்குநரின் தத்துவ ஆராய்ச்சிப்படி மூன்றும் ஒருவகையில் குழு நலனோடு தொடர்புடையது. தன்னுடைய குழு உயர்ந்தது, மற்ற குழு தாழ்ந்தது என்ற அடிப்படையில் இவை மூன்றும் ஒன்றே என வாதிடுகிறார்.

இந்த கருத்தில் பாதி உண்மை இருப்பினும் அடிப்படையிலேயே மிகத்தவறான வாதமிது. பாதி உண்மைகள் முழுப் பொய்யை விட ஆபத்தானவை. சாதியோ மதமோ அகமணமுறையை கண்டிப்பான விதியாய் வைத்திருக்கிறது. அதன் வழி பெண்ணை சாதி மத குழுக்களின் கௌரவமாய் பணயம் வைத்து வேற்று குழுக்களோடு சண்டை போடுகிறது. தேவையெனில் மாற்று இன ஆணை மட்டுமல்ல, தன் இனப் பெண்ணையே பலி கொடுக்கவும் தயாராக இருக்கிறது.

(இடமிருந்து) : தியாகராஜன் குமாரராஜா, நீலன் சேகர், நலன் குமாரசாமி மற்றும் மிஷ்கின்.

தேசிய இனத்தின் பற்று இப்படிப்பட்டதல்ல. ஜனநாயக வழிப்பட்ட பரிமாண வளர்ச்சியிலேதான் தேசிய இனத்தின் உருவாக்கம் வரலாற்றில் நிகழ்ந்தது. இன்று ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தால் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுவதால், அது வர்க்க ரீதியாக வல்லரசு எதிர்ப்பையும் கொண்டிருக்கிறது.

தமிழ்வழிக் கல்வியோ, நீதிமன்றத்தில் தமிழோ, அதிகார வர்க்க அலுவல்களில் தமிழைக் கோருவதோ இங்குள்ள தமிழக உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமை. அதனால் அது ஜனநாயக உரிமையும் கூட. தன் சாதிப் பெண் தன் சாதி ஆணைத்தான் மணக்க வேண்டும் என்பது எப்படிப் பார்த்தாலும் ஒரு ஜனநாயக கோரிக்கை அல்ல. லவ் ஜிகாத்தும் அப்படியே. தேசப்பற்றில் இனவாதம் கலக்கும் போது அது உரிமைகளை பேசும் ஜனநாயகத்தை விடுத்து ஒடுக்குவதை பேசும் இனவெறியாக சீரழிந்து போகிறது. எனவே, அனைத்தும் குழு நலனே, ஒன்று சிறியது, மற்றொன்று பெரியது என்று சமப்படுத்தி பார்ப்பது அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

எல்லாம் ஒன்று என்ற தத்துவம் ஏலியன்ஸ் பாத்திரத்தின் மூலமும் பேசப்படுகிறது. இந்த இடத்தில் இப்படத்தின் படைப்பாளிகள் அத்வைதத்தை கொண்டு வருகின்றனர். அனைத்து உயிர்களும் ஜீவாத்மாவாக இருப்பினும் இறைவன் எனும் பரமாத்மாவோடு வேறுபட்ட ஒன்றல்ல, இரண்டும் ஒன்றுதான். சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா இருக்கிறது என்று ஆதிசங்கரர் படைத்த அத்வைதம் கூறுகிறது. இரண்டற்ற நிலை எனும் அத்வைதத்தின் படி கயிறாக பார்த்தால் கயிறு, பாம்பாக பார்த்தால் பாம்பு. கள்ள உறவாக பார்த்தால் கள்ள உறவு. மனிதனின் விலங்குணர்ச்சிப்படி பார்த்தால் இயற்கையான காமம்.

இயற்கையின் இயக்கவியலின்படி பார்த்தால் ஒட்டு மொத்த இயற்கையும் அதில் இருக்கின்ற கல், மனிதன், தாய், காதலி, குழந்தை அனைத்தும் ஒன்றுதான். எனினும் இந்த ஒன்று என்பது பல வேறுபாடுகளின் இருத்தல்களாலும் இயக்கங்களாலும், அந்த வேறுபட்ட இயக்கங்களின் உறவுகளாலும் பிணைக்கப்பட்ட ஒன்று. பல்வேறு பொருட்களின் தனித்தனி இயக்கத்தால் முழுமை பெற்ற இயக்கமே இயற்கை. அல்லது தனது இயக்கத்தின் போக்கில் ஒன்றிலிருந்து மற்றொன்றாய் மாறி முன்னதில் இருந்து மாறுபட்டு புதிய தனது தனித்தன்மையை பேணும் முழுமையாக இயற்கை இயங்குகிறது.

எல்லாம் ஒன்று என்பதால் நாம் மலத்தை புசித்து பசியாற்ற முடியாது. அல்லது கல்லையோ, கட்டையையோ தின்று உயிர் வாழ முடியாது. மலையும் நாமும் ஒன்று என மலை உச்சியில் இருந்து குதித்தால் தத்துவப்படி நீங்கள் இறந்து மண்ணோடு மண்ணாக கலந்து போய் இயற்கை ஒன்றே என நிரூபிக்கலாம். அந்த நிரூபித்தலை பார்ப்பதற்கு நீங்கள் உயிரோடு இருக்க மாட்டீர்கள். உங்கள் உயிரின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. பிறகு, அது வேறொரு தனிப் பொருளாக மாறுகிறது.

குரங்கு மூதாதையர் காலத்தில் இருந்து மனிதனாக மாறும்போது பாலியல் உறவுகளில் விதிகளோ, தண்டனைகளோ இல்லை. அம்மா மகன், சகோதர உறவு அனைத்தும் இருந்திருக்கின்றது. பிறகு இன்ன தாயின் குழந்தைகள் என அறியப்படும் வளர்ச்சி தோன்றி தாய்வழிச் சமூகம் தோன்றுகிறது. அதன் பின்னர் சொத்துக்களின் தோற்றத்தில் இந்த தந்தைக்கு பிறந்த வாரிசுகள் என வர்க்க சமூகம் தோன்றுகிறது. ஒட்டு மொத்த வரலாற்றில் தனக்கு பிடித்த இணையை காதலிக்கும் காதல் எனும் நாகரீக வளர்ச்சி, வரலாற்றுப் போக்கில் தோன்றுகிறது. பிறகு வர்க்க சமூகம் எனும் தளைகளோடு அந்த காதல் இன்றுவரை தடுமாறுகிறது. ஆணாதிக்க சமூகத்தில் தனது பொருளாதார பாதுகாப்பை முதன்மையாக கருதும் ஒரு பெண்ணுக்கு தெரிவு எனும் சுதந்திரம் முழுமையாக இல்லை. அந்த தளைகள் வெட்டப்படாமல் காதல் முழுமை பெறாது.

இப்படியான புரிதலின்றி ஏலியன்ஸ் பாத்திரத்தின் மூலம் இயக்குநர் அத்வைதம் பேசுகிறார். இந்த உலகமே இருமைகளின் வழி இயங்குகிறது. சமூகவியல் படிபார்த்தால், முதலாளி – தொழிலாளி, ஆதிக்க சாதி – அடக்கப்படும் சாதி, வல்லரசு நாடுகள் – மூன்றாம் உலக நாடுகள் என்றே மக்கள் போராடுகிறார்கள், வாழ்கிறார்கள். இதை எல்லாம் ஒன்று என்று  சமப்படுத்துவதற்கு ஒரு முரட்டு முட்டாள்தனம் வேண்டும்.

ஷில்பா பாத்திரத்தின் மூலம் விஜய் சேதுபதி ஒரு திருநங்கையாக நடித்ததற்கு கொண்டாடப்படுகிறார். இந்தக்கதையில் திருநங்கை மற்றும் அவள் அவனாய் இருந்த போது பிறந்த குழந்தை ராசுக்குட்டியுடனான உறவு படம் நெடுக உணர்ச்சிகரமாக காட்டப்படுகிறது. திருநங்கையாக மாறுவதற்கு நியாயம் பேசும் ஷில்பாவின் காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கின்றன. ஆனால், இந்த நியாயத்திற்காக ஏழெட்டு ஆண்டுகளாக ஓடிப்போன கணவனுக்காக காத்திருக்கும் ஜோதியின் நியாயம் உரிய அளவுக்கு பேசப்படவில்லை. காத்திருக்கும் ஜோதி குறித்து உறவுப் பெண்கள் புறம் பேசும் அளவுக்கு, ஷில்பா எனும் மாணிக்கம் குற்ற உணர்வு அடையவில்லை. ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண்தான் உணர முடியும் என்று ஒரு வரியில் ஷில்பா பேசுவதாக முடித்து விடுகிறார் இயக்குநர். இக்கதையில் ஷில்பாவின் பிரச்சினைகளை விட ஜோதியின் அவலம் அதிகம் என்று நமக்குத் தோன்றுகிறது. விஜய் சேதுபதி எனும் ஆண் நடிகரின் திருநங்கை பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதனாலும் ஜோதிக்கு இங்கு வெளிச்சம் இல்லை.

சமீபகாலமாக திருநங்கைகள் குறித்து  நிறைய படங்கள் பேசினாலும் அனைத்தும் அவர்கள் மீது மனிதாபிமானம் கொள்ளுமாறு ஒரே மாதிரி வருகின்றன. மற்றவர்கள் போல திருநங்கைகள் வாழமுடியவில்லை என்பதன் ஆழமான சித்தரிப்போ, காட்சிகளோ மற்ற படங்களைப் போல இங்கும் இல்லை. இப்படத்திலும் ஏழு ஆண்டுகள் கழித்து வரும் ஒரு திருநங்கையை அந்தக் குடும்பம் ஏற்கிறது என்பது பெரிய பிரச்சினைகள் இன்றி எளிதாகக் காட்டப்படுகிறது.  திருநங்கைகள் விபச்சாரத்திற்கு தள்ளப்படுவதோ, காவல் துறையால் வல்லுறவு கொள்ளப்படுவதோ இவற்றைக் காட்டிலும் அவர்களால் இயல்பாக திருமணம் செய்து வாழ முடியுமா வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை சமூகத்திற்கு உணர்த்துவது இப்படம் கூறும் கோணத்தை விட முக்கியமானது. கைதட்டி காசு பார்த்து வாழும் திருநங்கைகளில் ஓரிருவர் காவல் துறையிலோ, சிவில் சர்வீஸ் துறையிலோ பதவியேற்று நுழையும் காலத்தில் நமது படங்கள் இன்னும் பழைய கிளிஷேவிலேயே சுற்றுகின்றன.

சுனாமியில் ‘ஆண்டவரால்’ காப்பாற்றப்பட்ட அற்புதத்தின் கதை கொஞ்சம் மிகையாக இருந்தாலும் ஒரு கவிதை போல வடிக்கப்பட்டிருக்கின்றது. அற்புதங்களால் நம்பிக்கை அடையும் அற்புதம் பிறகு அந்த நம்பிக்கையில் தடுமாறுவதை கச்சிதமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். எனினும் இங்கும் முடிவில் சராசரி சினிமாத்தனத்தை கொண்டு வருகிறார். சுரங்கப்பாதையில் சந்திக்கும் திருநங்கையின் கதை அற்புதத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டுகிறது. அவளையும் ஒரு கல்தான் சுனாமியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது என்பதை அறியும் போது தன்னை காப்பாற்றியதும் ஆண்டவரல்ல, கல்தானே என்று அவன் தடுமாறுகிறான்.

படிக்க:
நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016

மகனைக் காப்பாற்றாத ஆண்டவரின் கல்லை ஆத்திரத்தில் உடைக்கும் போது ஆண்டவரின் மண்டை உடைபட்டு வைரக்கற்கள் கொட்டுகின்றன. இப்போது மருத்துவமனையில் இருக்கும் காயம்பட்ட மகனை வைரம் தந்து ஆண்டவன் காப்பாறுகிறாரா என்று அற்புதம் மீண்டும் தடுமாறுகிறான். இறுதியில் நம்பிக்கையின் அப்பாவித்தனம் மட்டும் வெள்ளந்தியாக படத்தில் காட்டப்படுகிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு அழுது அரற்றுவதையே தீர்வாக வைத்திருக்கும் ஆபத்தான பெந்தகோஸ்தே இயக்கம் இங்கே அனுதாபத்துடன் பார்க்கப்படுகிறது. இது தவறு என்றால் மாட்டுக்கறி உண்டால், மாடு வாங்கினால் வெட்டுவோம் எனும் இந்துமதவெறி படமெடுத்து ஆடும் காலத்தில் இத்தகைய கிறித்தவ சான்று காலப் பொருத்தமற்றுப் போகிறது.

குளிர்சாதனப்பெட்டிக்குள் பிணம், டிவி விழுந்து இன்ஸ்பெக்டர் மரணம், நீலப்படம் பார்க்கும் போது அம்மா நடிப்பது, ஆண்டவரின் மண்டையில் வைரம் சிதறுவது என்று பல காட்சிகள் மலிவான சுவராஸ்யத்திற்காக காட்டப்படுகின்றன. இவற்றை தற்செயலான நிகழ்வுகள் ஒரு கதையினை எடுத்துச் செல்வதாக சிலர் வியாக்கியானம் செய்கிறார்கள். ஆனால் தற்செயலான விபத்துகளுக்கும் தற்செயலான மனித முடிவுகளுக்கும் பாரிய வேறுபாடு இருக்கின்றது. திடீரென எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின்னே ஒரு நீண்ட முனைப்பும், ஆழ்மனதில் அசைபோட்டவாறு சஞ்சலப்படுவதும் இருந்தே தீரும்.

சாரமாக யோசித்தால் இத்திரைப்படம் எவ்வகையிலும் ஒரு ஆழ்ந்த திரை அனுபவத்தை தரவில்லை. காட்சிகளில் மனம் ஒட்டாமல் சிந்தனை எரிச்சலடைகிறது. விடலைப் பருவ சிறுவர்களுக்கு அசைண்ட்மெண்ட் கொடுக்கும் ரவுடியின் காட்சி அப்படியே ஆரண்யகாண்டத்தை நினைவுபடுத்துகிறது. அந்தப்படத்திற்கு பிறகு நெடுங்காலம் அசைபோட்டு எடுக்கப்பட்ட இயக்குநரின் இந்தப்படம் தனது காலநீட்டிப்பிற்கு எந்த நியாயத்தையும் சேர்க்கவில்லை.

படம் நெடுகிலும் மூலம், பௌத்திரம் சுவரொட்டிகளாகட்டும், பாழடைந்த தெருக்கள், வண்ணம் மங்கிய  கட்டிடங்கள், சந்து பொந்துகள் அனைத்தும் பளிச்சிடும் பெயிண்டிங் போல சுத்தபத்தமாக இருக்கின்றன. மலிவான விறுவிறுப்புக்கு பொருத்தமாக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை வினாடித்துடிப்பாக இசைக்கிறது. அவ்வகையில் அத்வைதத்திற்கு ஏற்ற வடிவம்தான் .

நமது புதிய இயக்குநர்கள் பலரும் வடிவத்தின் போக்கில் உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள் போலும். சமூக உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளாத இத்தகைய கதைகளால் யாருக்கு என்ன பயன்?

இளநம்பி

உங்கள் குழந்தைகளின் புன்முறுவல்கள் எவ்வளவு அழகாக உள்ளன !

1

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 4

அமனஷ்வீலி

முதல் ஆசிரியர்

டந்த சில நாட்களாக ஒவ்வொரு குடும்பத்திலும் என்னைப் பற்றித்தான் பேசுகின்றனர் என்பதில் சந்தேகமேயில்லை. தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி இல்லாவிட்டாலும், மேற்கூறிய கடிதத்தை அனுப்பிய, செப்டெம்பர் 1-ம் தேதி தன் மாணவனைச் சந்திக்கப் போகும் ஆசிரியரைப் பற்றிப் பேசுகின்றனர். அம்மாவோ அப்பாவோ, தாத்தாவோ பாட்டியோ ஒவ்வொருவரும் ஒரு மாதிரியாக, குழந்தையைத் தமக்கு எவ்வளவு தெரியுமோ அதைப் பொருத்து, குழந்தை வளர்ப்பைப் பற்றிய தம் கண்ணோட்டத்தின்படிப் பேசுகின்றனர். தான் இதுவரை கண்டிராத தன் முதல் ஆசிரியரைப் பற்றி ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் எவ்வாறெல்லாம் கற்பனை செய்வார்கள் என்று கூறத் தேவையே இல்லை. இவர்கள் ஆசிரியரையும் அவரது குணநலன்களையும் பல்வேறு விதமாக சிந்தித்துப் பார்க்கின்றனர். என் கடிதத்தின் இறுதியில் நான் குழந்தைகளுக்கு ”வண்ணப் பென்சில்களையும் காகிதத்தையும் எடுத்து உன் முதல் ஆசிரியர் எப்படியிருப்பார் என்று வரை” என ஏன்தான் எவ்வித வேண்டுகோளையும் விடுக்கவில்லையோ!

ஒரு சில குடும்பங்களில் ஆசிரியரை, எல்லாவற்றையும் அறிந்த, அன்பான, மென்மையான, குழந்தைகளைப் பெரிதும் விரும்புபவராக பெற்றோர்களும் பெரியவர்களும் சித்தரிக்கின்றனர். இந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் என்னை சர்வ வல்லமை படைத்த அன்பானவனாக வரைந்திருப்பார்கள். இவர்கள் பள்ளிக்கு வந்ததும் என் பின்னால் சுற்றி வருவர், என், முன் முழங்காலிட்டு நின்றிருப்பார்கள், ஆயிரக்கணக்கான கேள்விகளைக் கேட்டிருப்பார்கள், தம்மைப் பற்றி மூச்சு விடாமல் சொல்லி, என் மீது உடனேயே அன்பு மழை பொழிந்திருப்பார்கள், ஏனெனில் இப்படிப்பட்ட ஆசிரியரை நேசித்தாக வேண்டுமே. நிச்சயமாக, இதற்கு நான் அத்தகைய அன்பு ஆசிரியருக்குரிய எல்லாத் தன்மைகளையும் பெற்றிருக்க வேண்டும்.

பெரியவர்கள் சொல்வதை எல்லாம் யார் கேட்கவில்லையோ, அம்மாவோ பாட்டியோ தருவதையெல்லாம் யார் சாப்பிடவில்லையோ, யார் முரண்டு பிடிக்கின்றார்களோ, சத்தம் போடுகின்றார்களோ, குறும்பு செய்கின்றார்களோ அவர்களையெல்லாம் ஆசிரியர் கடுமையாக தண்டித்து, பள்ளியிலிருந்தே துரத்தி விடுவார், அவர்… இதனிடையே இக்குழந்தைகள் என்னை ஒரு சூனியக்கார கிழவியைப் போல் படம் வரைந்திருப்பார்கள்.

மற்ற சில குடும்பங்களில் பெற்றோர்களும் பெரியவர்களும் ஆசிரியரைப் பற்றிப் பின்வருமாறு கூறுவார்கள்: ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு சிறு நடவடிக்கையையும் உன்னிப்பாக அவர் கவனிப்பார், பெரியவர்கள் சொல்வதை எல்லாம் யார் கேட்கவில்லையோ, அம்மாவோ பாட்டியோ தருவதையெல்லாம் யார் சாப்பிடவில்லையோ, யார் முரண்டு பிடிக்கின்றார்களோ, சத்தம் போடுகின்றார்களோ, குறும்பு செய்கின்றார்களோ அவர்களையெல்லாம் ஆசிரியர் கடுமையாக தண்டித்து, பள்ளியிலிருந்தே துரத்தி விடுவார், அவர்… இதனிடையே இக்குழந்தைகள் என்னை ஒரு சூனியக்கார கிழவியைப் போல் படம் வரைந்திருப்பார்கள்.

மறு நாள் பள்ளிக்கு வந்து தன் ஆசிரியரைக் கண்டதும் சூனியக் கிழவியைக் கண்டது போல் பார்த்து, அம்மாவைக் கட்டிப் பிடித்து, ”பள்ளிக்கூடம் வேண்டாம், வீட்டிற்குப் போகலாம்” என்று இதயத்தைக் கரைக்கும் அளவிற்கு கூக்குரலிடுவார்கள். இந்த முதல் ஆசிரியரிடம் உண்மையிலேயே சூனியக் கிழவியின் குணங்கள் இருந்தால் என்ன ஆகும்? குழந்தைக்கு என்ன நேரிடும் என்று சிந்திக்கவே அச்சமாக உள்ளது. அன்பான ஆசிரியரின் மூளையும் பொறுமையும் மட்டுமே குழந்தையின் கனவுகளைக் காப்பாற்றும்.

மற்றும் சில வகையான குடும்பங்களிலோ குழந்தைகளால் ஒன்றுமே வரைய இயலவில்லை. ஆம், சிடுசிடுப்பான ஆசிரியரை எப்படி வரைவது? அவர் கண்ணுக்குத் தெரியாமல் வந்து குழந்தைகளைத் தூக்கிச் செல்வார், ஏன் ஒருவேளை குழந்தைகளைச் சாப்பிடக்கூடும். அவர் சர்வவல்லமை படைத்தவர், எல்லாம் அவருக்குத் தெரியும், உன் மனதில் என்ன உள்ளது என்று கூட அவர் கண்டுபிடித்து விடுவார், எனவே அவருக்குப் பிடிக்காத ஒன்றைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்காதீர்கள். இப்படிப்பட்ட ஆசிரியரை குழந்தை எப்படி கற்பனை செய்ய முடியும்?

மறுநாள் சிறுவன் உண்மையான ஆசிரியரை வகுப்பறையில் பார்ப்பான், உதடுகளைக் கூட அசைக்காமல் அமைதியாக உட்கார்ந்திருப்பான், எதைப் பற்றியும் மோசமாகக் கூட யோசிக்க மாட்டான். சிடுசிடுப்பான ஆசிரியர், அதுவும் முதல் ஆசிரியர். இப்படிப்பட்டவர் எங்காவது இருக்கின்றாரா? அச்சத்திலிருந்து குழந்தைகளை விடுவிக்க, இவர்களின் சிந்தனைகளை விலங்கிலிருந்து விடுவிக்க, அவர்கள் சுதந்திரமாகப் பேசும்படி செய்ய அன்பான ஒரு ஆசிரியர் தேவை.

ஏன் ஒரு சில குடும்பங்களில் ஆசிரியர் அன்பு மிக்கவராயும் வேறு குடும்பங்களில் சூனியக் கிழவியைப் போன்றும், இன்னும் சில குடும்பங்களில் சிடுசிடுப்பானவராகவும் சித்தரிக்கப்படுகிறார்? இந்த ஆறு வயதுக் குழந்தைகளின் பெற்றோர்கள் அனேகமாக இளைஞர்களாக இருக்க வேண்டும், இவர்களுக்கு எவ்வித சூனியக்காரியையும் சிடுசிடுப்பானவரையும் கண்டு அச்சமில்லையே, ஏன் இவர்கள் தம் குழந்தைகளுக்குப் பயம் காட்டுகின்றனர்? தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் இவர்கள் ஏன் இந்தப் பயங்கர கதாபாத்திரங்களின் உதவியை நாடுகின்றனர்?

குழந்தையை பயமுறுத்துவதன் மூலம் எளிதாக வளர்க்கலாம் என்று ஏன் பெற்றோர்கள் எண்ணுகின்றனர்? மனிதனை வளர்த்து ஆளாக்குவதைப் பற்றிய அரிச்சுவடி கூட இளம் பெற்றோர்களுக்குத் தெரியாது என்று என் அனுபவம் காட்டுகிறது.

ஆம், உண்மையில் அவர்களுக்கு இந்த விஞ்ஞானம் எப்படித் தெரியும்? பள்ளியில் யாரும் அவர்களுக்கு இதை சொல்லித் தரவில்லை, அவர்கள்தான் எதிர்காலப் பெற்றோர்கள் என்பதை யாரும் உணரவில்லை. பள்ளியை முடித்ததுமே அந்த இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், 16 வயது வாலிபர்களும் யுவதிகளும் பெற்றோர்கள் ஆகலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் குழந்தை முரண்டு செய்யாமல் இருப்பதற்காக, குழந்தையை சாந்தப்படுத்துவதற்காக, அங்குமிங்கும் ஓடி, சத்தம் போட்டு விளையாட்டு சாமான்களை உடைக்காமலிருப்பதற்காக சகலவித பயங்கர கதாபாத்திரங்களும் வீட்டிற்குள் வருகின்றன. குழந்தை இத்தகைய பயங்கர கதாபாத்திரங்களைப் பார்த்ததில்லையாதலால் முதல் ஆசிரியரை இவ்வாறு சித்தரிக்கும் வாய்ப்பு தோன்றுகிறது.

லட்சோப லட்சம் வாலிபர்களுக்கும் இளம் பெண்களுக்கும் உயர்கல்விக் கூடங்களில் சகலவித விஞ்ஞானங்களையும் சொல்லித் தந்து இவர்களை முதல்தர நிபுணர்களாகப் பயிற்றுவிக்கின்றனர். ஆனால் இவர்கள் எதிர்காலப் பெற்றோர்கள் என்பதையும் குழந்தை வளர்ப்பு விஞ்ஞானம் இவர்களுக்குத் தேவை என்பதையும் இங்கும் மறந்து விடுகின்றனர். இதில் கற்றுக் கொள்ள ஒன்றுமேயில்லையா, இது அவ்வளவு எளிமையானதா? என்ன ஒரு தவறான கருத்து!

சிடுசிடுப்பான ஆசிரியரை எப்படி வரைவது? அவர் கண்ணுக்குத் தெரியாமல் வந்து குழந்தைகளைத் தூக்கிச் செல்வார், ஏன் ஒருவேளை குழந்தைகளைச் சாப்பிடக்கூடும். அவர் சர்வவல்லமை படைத்தவர், எல்லாம் அவருக்குத் தெரியும், உன் மனதில் என்ன உள்ளது என்று கூட அவர் கண்டுபிடித்து விடுவார், எனவே அவருக்குப் பிடிக்காத ஒன்றைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்காதீர்கள். இப்படிப்பட்ட ஆசிரியரை குழந்தை எப்படி கற்பனை செய்ய முடியும்?

செப்டெம்பர் 1-ம் தேதிக்கு முதல் நாள் நள்ளிரவு வரை என் மேசை முன் அமர்ந்து நான் எதைப் பற்றி எண்ணுகிறேன்? எல்லா பெரிய வகுப்புகளிலும் பள்ளி மாணவர்கள் தம் கரங்களில் மிக அழகிய புத்தகத்துடன் மிக சுவாரசியமான வகுப்பிற்கு விரைந்து செல்ல வேண்டும்… எல்லா தொழிற் கல்விக்கூடங்கள், உயர்கல்விக் கூடங்களின் மாணவர்களும் இதே போன்ற அழகிய நூலுடன் மிக சுவாரசியமான விரிவுரையைக் கேட்க விரைந்து செல்ல வேண்டும். இந்த நூல்களிலும், சுவாரசியமான பாடங்களிலும் விரிவுரைகளிலும் உள்ள பாடத்திற்கு ”மனிதனை உருவாக்குபவன் மனிதனே” என்று நான் தலைப்பு தருவேன். ஆசிரியர் பயிற்சி எல்லோருக்கும் கட்டாயமான ஒரு பாடமாகிறது, ஏனெனில் குழந்தை வளர்ப்பாளராக இருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும். இக்கனவு நிறைவேற நீண்ட நாட்களாகுமா? இந்த இடைவெளியைக் குறைக்க எவ்வளவு விருப்பமாயுள்ளது.

பள்ளியில் நான் என்னாலியன்றதைச் செய்வேன்….

குழந்தைகளே, உங்களது புன்முறுவல்கள் எவ்வளவு அழகாக உள்ளன! வகுப்பில் இப்புன்முறுவல்களை மழுங்கடிக்கும் உரிமை எனக்கு உண்டா என்ன? அப்பாவோ, அம்மாவோ, பாட்டியோ, தாத்தாவோ என்னைப் பற்றி ஏதாவது சொல்லி உங்களில் யாரையாவது அச்சுறுத்தியிருக்கக் கூடும். இந்தப் பெரியவர்கள் ஏன் இப்படியிருக்கின்றனர்?

படிக்க:
நாடு நாசமாகக் கூடாதே என்பதால்தான் சிவாஜி முடிசூட்டுவதை தடுக்கிறேன் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

உங்களுக்கெதிராக என்னையும் கூட்டு சேர்த்துக் கொள்ள முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கும் அவர்கள் அனைவரையும் நான் ஏமாற்றுவேன். என் அன்புக் குழந்தைகளே, பயப்படாதீர்கள், நான் அச்சுறுத்த மாட்டேன், நான் கொடியவன் அல்ல! நாளை தாமதமின்றி வாருங்கள். உங்களனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

என்னுடைய வகுப்புடனான கற்பனைப் பேச்சை நான் முடிக்கிறேன். ஒவ்வொரு புகைப்படத்தையும் கோப்பில் வைக்கிறேன். இவற்றை நாளை பள்ளிக்கு திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

மோடி வர்றார் … சொம்பை எடுத்து உள்ளே வை !

… வர்றார் சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள் !

2014-ம் ஆண்டு தேர்தலின்போது திருவாளர் மோடியின் இடி முழக்கங்கள் !!!

  • இரண்டு கோடி புது வேலை வாய்ப்புகள் !
  • வெளிநாட்டு கறுப்பு பணத்தை கைப்பற்றி
    இந்தியர் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்சம் !
  • சீனாவை மிஞ்சும் பொருளாதார முன்னேற்றம்!
  • ஜப்பானின் கியோட்டாவை மிஞ்சும் வாரணாசி !
  • சுத்தமான கங்கை !
  • 100 ஸ்மார்ட் நகரங்கள் !
  • கஷ்மீருக்கு வெளியே வசிக்கும் பண்டிதர்களுக்கு கஷ்மீரில் மீள் குடியேற்றம் !

ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ….

  • பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார சிதைப்பு !
  • ஒரே வருடத்தில் ஒரு கோடி வேலைவாய்ப்பு பறிப்பு !
  • கங்கையை சுத்தப்படுத்த செலவிட்ட 7000 கோடி என்னவானது என தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் கோயலிடம் குட்டு !
  • 2014 -ம் ஆண்டு டாலருக்கு ரூபாய் 58 இருந்த மதிப்பை ரூபாய் 70 ஆக மாற்றிய பொருளாதார மேதமை !
  • ஸ்மார்ட் சிட்டி என்ற நவீன நகரங்கள் என எவ்வித திட்டமிடுதலும் இன்றி ஏற்கனவே இயங்கும் பேருந்து நிலையங்களை அழித்தல் ! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கதையாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் அழிக்கப்பட்டு ஒரே நாளில் 450 கடைக்காரர்களை தெருவோர வியாபாரிகளாக மாற்றிய அவலம் !
  • 7000 கோடி கொள்ளையடித்து எப்போவாவது தலைகாட்டும் விஜய் மல்லையாவை இலண்டனில் தினம் தினம் தொலைக்காட்சிப் பேட்டி கொடுக்க வைத்தமை !
  • வெளிநாட்டு கறுப்புப் பணத்தை கைப்பற்ற முயலாத கையாலாகாத்தனம் !

மஞ்சள் தண்ணீரை பருப்பு இல்லாமல், ஊறுகாய் இல்லாமல் வெறும் சப்பாத்தியை சாப்பிட வைக்கிறார்கள் என்று கூறிய 2017-ம் ஆண்டு கஷ்மீரில் பணிபுரிந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் (BSF) தேஜ் பகதூர் யாதவ் சொன்ன குறையை சரி செய்யாமல் பணி நீக்கம் செய்து விட்டு தற்போது சௌக்கிதார் நடிப்பு !

  • பசு பாதுகாப்பு படுகொலைகள் !
  • கஷ்மீர மக்களை முற்றிலும் அன்னியப்படுத்தியமை!
  • வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை மறந்து எரிப்பவர்களையும் புதைப்பவர்களையும் வேறுபடுத்தி பேசிய ஒரே பிரதமர்!

உங்கள் முன் …

அந்த இரகசிய பட்டதாரி, பணமதிப்பிழப்பு பொருளாதார மேதை, ரஃபேல் ஊழல் காவலர், மல்லையாவை கைது செய்யா மாவீரர், அபிநந்தன் பாகிஸ்தானில் பிடிபட்டதை மறைத்த மெய்யர், எல்லா விமானங்களும் பத்திரமாக திரும்பிய பிறகுதான் தூங்கச் சென்றதாக பத்திரிகை செய்தி கொடுத்த விளம்பரம் விரும்பா தேசபக்தர், மறுபடியும் காவலர் வேடம் பூண்டு உங்களிடம் வருகிறார்…

தயை கூர்ந்து ஐந்து வருடம் அடிவாங்கி நெளிந்து போன இந்திய செம்பை ஒளித்து வையுங்கள் ….. வருகின்றார்.

  • 21 March at 19:02

தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் !!

யவு செய்து ஓட்டுக்களை எண்ணும் முன்பாக மோடிதான் வெற்றி பெற்றார் என அறிவித்து விடுங்கள் !! செலவாவது மிஞ்சும் !!!

டிராகுலாவால் கடிபட்டவர்களெல்லாம் டிராகுலாவாவது போல பாசிச பாஜக-வால் கடிபட்ட தேர்தல் ஆணையம் பாசிஸ்டுகளாக மாறியதில் ஆச்சரியமில்லை .

தேர்தல் விதிமுறைகளில் முதலாவது நெறிமுறை வாக்காளர்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தக்கூடாது என்பது. ஆனால், ஐம்பத்தியாறு இஞ்ச் போலி பட்டதாரி ஊர் ஊராகச் சென்று மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி எவ்வித தடங்கலுமில்லாமல் பிரச்சாரம் செய்கிறார் தேர்தல் ஆணையம் விரல் சப்பிக்கொண்டு அமர்ந்திருக்கிறது.

படிக்க:
ரஃபேல் ஊழல் நூல் பறிமுதல் : மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிசனின் நடவடிக்கை !
நாடார் வரலாறு கறுப்பா? காவியா?

மோடியின் ரபேல் ஊழலை தேர்தல் நேரத்தில் கூட சொல்ல முடியவில்லை என்றால் சனநாயகம் எதற்கு? தேர்தல் ஆணையம் எதற்கு ??

பின் குறிப்பு: இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளில் ( basic feature ) ஒன்று நேர்மையான பொதுத்தேர்தல் என கல்லூரியில் படித்த ஞாபகம்.

  • 2 April at 18:16

முகநூலில் : Lajapathi Roy


வாங்கிவிட்டீர்களா?…
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

இலால்குடி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்க அரங்கு கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்!
திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்க அரங்கு கூட்டம் – கலைநிகழ்ச்சி!

08.04.2019 திங்கள், மாலை 6 மணி         பெரியார் திருமண மாளிகை, லால்குடி.

ன்பார்ந்த நண்பர்களே !

கார்ப்பரேட் – காவி பாசிசம்  எதிர்த்து நில் ! என்ற அரசியல் முழக்கத்தின் கீழ், கடந்த பிப்ரவரி 23-ம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்திய மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தேர்தலைக் குறிவைத்து எல்லாக் கட்சிகளும் மாநாடு நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்த மாநாடு நாடே எதிர் கொண்டிருக்கும் கார்ப்பரேட் – காவி பாசிச அபாயத்தை சுட்டிக் காட்டி அதனை முறியடிக்க அறைகூவல் விடுத்தது.

மாநாட்டை நடக்கவிடாமல் தடுப்பதற்கு காவல்துறையும் பாரதிய ஜனதா கட்சி யினரும் என்னென்னவோ செய்து பார்த்தனர். பல பொய்க்காரணங்களை சொல்லி அனுமதி மறுத்தது காவல்துறை. நீதிமன்றம் அனுமதித்த பின்னரும் மாநாட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தொண்டர்களை கைது செய்து பொய் வழக்கில் சிறை வைத்தது. பல இடங்களில் பாஜகவினர் பிரச்சாரம் செய்தவர்களிடம் தகராறு செய்தனர். மாநாட்டுக்கு வரும் மக்களை பேருந்துகளில் ஏறி புகைப்படம் எடுத்து மிரட்டியது காவல்துறை. இத்தனை மிரட்டல்களுக்குப் பின்னரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநாட்டுக்கு திரண்டு வருவதை அவர்களால் தடுக்க முடியவில்லை .

ஏனென்றால் அந்த அளவுக்கு எல்லா தரப்பு மக்களும் மோடி அரசை வெறுக்கின்றனர். இந்துக்களின் காவலன் என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் மோடி அரசுதான், ஆகப்பெரும்பான்மையான மக்கள் அனைவரின் எதிரி என்பது ஐந்தே ஆண்டுகளில் புரியாத மக்களுக்கெல்லாம் புரிந்து விட்டது.

உணவுப்பொருள் கொள்முதலைக் குறைப்பது, விவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சி உள்ளிட்ட விவசாயிகள் மீதான தாக்குதல்கள். தொழிற்சங்க உரிமைகள் பறிப்பு, ஆட்குறைப்பு, ஒப்பந்தக் கூலிமுறை போன்ற தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள். கல்வி கார்ப்பரேட்மயமாதல், ஆதிக்க சாதியினருக்கு இட ஒதுக்கீடு, தொடக்கக் கல்விக்கே பொதுத்தேர்வு என்பன போன்ற வழிமுறைகள் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை கல்வியிலிருந்து விரட்டும் குலக்கல்வித் திட்டம். பணமதிப்பழிப்பு, பெட்ரோல் வரி மற்றும் டோல் பிளாசா கொள்ளை, ஜி.எஸ்.டி முதலான சிறுதொழில்கள், சிறுவணிகர்கள் முதல் எல்லா தரப்பு மக்கள் மீதுமான தாக்குதல்கள். லவ் ஜிகாத், பசுக்கொலை எனப் பலவாறாக குற்றம் சாட்டி சிறுபான்மை மக்கள் மற்றும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்.

கவுரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் போன்ற அறிவுத் துறையினரின் படுகொலைகள், பீமா கோரேகான் போன்ற பொய் வழக்குகள், சபரிமலை பிரச்சினை உள்ளிட்ட கலவரங்கள். கல்வி நிறுவனங்களையும், கல்வித்திட்டத்தையும் காவி மயமாக்கும் நடவடிக்கைகள். இவைதான் மோடி அரசின் சாதனைகள்,

இந்த ஆட்சியை மக்கள் எந்த அளவுக்கு வெறுக்கிறார்களோ அந்த அளவுக்கு பன்னாட்டு முதலாளிகளும், தரகு முதலாளிகளும் இதனை நேசிக்கிறார்கள். ஏனென்றால், அரசாங்க கஜானாவின் சாவியை அம்பானி, அதானி போன்ற பனியா, மார்வாரி முதலாளிகளிடம் மோடி ஒப்படைத்திருக்கிறார். மோடி பதவிக்கு வந்தபோது இந்த கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளுக்குத் தரவேண்டியிருந்த வாராக்கடன் 2,19,000 கோடி. நான்கே ஆண்டுகளில் இது 8,97,000 கோடியாக உயர்ந்து விட்டது. கடந்த மூன்றே ஆண்டுகளில் மோடி இவர்களுக்கு வழங்கியிருக்கும் கடன் தள்ளுபடி மட்டும் 2.4 லட்சம் கோடி.

மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் மட்டும், விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரைப் போல மொத்தம் 23,000 வங்கிக் கொள்ளையர்களை வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார் உத்தமர் மோடி. இவர்களில் கணிசமானவர்கள் குஜராத் முதலாளிகள். இந்திய மக்கள் தொகையின் பாதிப்பேருடைய சொத்து ஒன்பது முதலாளிகளின் சொத்துக்குச் சமம் என்கிறது 2019 -ல் வெளிவந்திருக்கும் ஆக்ஸ்ஃபாம் ஆய்வு.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !

மோடியின் குஜராத் மாடல் இந்து ராஷ்டிரம் என்பதுதான் கார்ப்பரேட் காவி பாசிசம். இது பார்ப்பனியமும், முதலாளித்துவக் கொடுங்கோன்மையும் இணைந்த வீரிய ஒட்டுரகம்.

மோடியைப் போன்ற பாசிஸ்டுகள் இன்று உலகம் முழுதும் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், 2007-க்குப் பின்னர் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் சிக்கியுள்ளது. அந்த நெருக்கடியின் சுமையை மக்களின் மீது வைப்பதற்கும், எதிர்க்கின்ற மக்களை ஒடுக்குவதற்கும் பல நாடுகளில் பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். இவ்வாறு நமது நாட்டில் தோற்றுப் போன அரசுக்கட்டமைப்பின் இடத்தில் திணிக்கப்படுவதுதான் கார்ப்பரேட் காவி பாசிசம்.

ஆகவே, பாசிசம் என்பதை வெறும் ஆட்சி மாற்றமெனக் கருதக்கூடாது. இது அரசுக் கட்டமைப்பிலேயே கொண்டு வரப்படும் மாற்றம்.

புதிய தாராளவாதக் கொள்கைகளின் கீழ் ஒழுங்குமுறை ஆணையங்கள், நிதி ஆயோக், ஜி.எஸ்.டி. கவுன்சில் போன்ற நாடாளுமன்றத்துக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களிடம் அதிகாரம் கைமாறிவிட்டது.

(படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

இந்நிலையில் பா.ஜ.க.வின் இடத்தில் வேறொரு கூட்டணி தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்களால் புதிய தாராளவாதக் கொள்கைகளை மாற்ற முடியாது. அப்படி யாரேனும் மாற்ற முனைந்தால், மாற்ற முனைபவர்கள்தான் மாற்றப்படுவார்கள். கிரீஸிலும் வெனிசூலாவிலும் நாம் காண்பது இதைத்தான்.

வலுவான அமைப்பு கட்டமைப்பையும் சமூக அடித்தளத்தையும் கொண்டுள்ள கார்ப்பரேட்- காவி பாசிசம் ஒரு தேர்தல் தோல்வியால் வீழ்ந்துவிடாது. இந்த அரசுக் கட்டமைவுக்கு வெளியேதான் பாசிசத்தை முறியடிப்பதற்கான வழியை நாம் தேடவேண்டும். தேர்தல் அரசியலுக்கு வெளியே நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம். மக்களின் போராட்ட உறுப்புகளை அதிகார உறுப்புகளாக உருவாக்குவோம்.

நிகழ்ச்சி நிரல் :

தலைமை:

தோழர் செழியன்,
மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி.

அறிமுக உரை:

தோழர் ராஜா,
ஒருங்கிணைப்பாளர், திருச்சி.

உரை:

தோழர் இந்திரஜித்,
மாநிலக்குழு உறுப்பினர், CPI திருச்சி.

தோழர் பூவை புலிகேசி,
வழக்கறிஞர், திராவிடர் கழகம்,
தலைமை நிலைய சொற்பொழிவாளர், பூவாளூர்.

தோழர் மரிய கமல்,
லால்குடி சட்டமன்ற ஒன்றிய செயலாளர், வி.சி.க.

தோழர் மணியரசன்,
மக்கள் அதிகரம் செம்பரை.

சிறப்புரை:

தோழர் ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

ம.க.இ.க. பாடகர் தோழர் கோவன் கலைநிகழ்ச்சி நடைபெறும்.

அனைவரும் வாரீர் !


மக்கள் அதிகாரம்,
திருச்சி,
தொடர்புக்கு: 94454 75157.


இதையும் பாருங்க …

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் – கோவன் பாடல்

அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுப்பது எப்படி | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ரு பெண் தனது கர்ப்ப காலத்தில் சந்திக்கும் இயற்கையான நோய் இது. இயற்கையான கர்ப்பம் சார்ந்த உடல் இயங்குவியல் மாற்றங்களால் நீரிழிவு போன்ற தன்மை கர்ப்பிணித் தாய்களுக்கு ஏற்படுகிறது.

பெண்ணின் உடலில் உள்ள கணையம் சுரக்கும் இன்சுலின் எனும் ஹார்மோன், வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்காக நஞ்சுப்பை (Placenta) சுரக்கும் சில ஹார்மோன்களின் எதிர்வேலையால் சரியாக வேலை செய்யாமல் போவதால் தற்காலிகமாக நீரிழிவு போன்ற நிலை கர்ப்பிணிகளுக்கு வருகிறது.

இதை கர்ப்பிணிகளுக்கு வரும் நீரிழிவு நோய் என்கிறோம் (GDM என்று செல்லமாக அழைக்கப்படுகிறது) Gestational Diabetes Mellitus நூறு தாய்மார்களில் ஏழு முதல் பத்து பேருக்கு இந்த நோய் வருகிறது.

உடல் பருமன் உள்ள பெண்கள், ஏற்கனவே PCOD இருந்து கருவுற்ற பெண்கள், 30 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைபவர்கள் என பல காரணங்களால் இந்த நோய் அதிகமாகி வருகிறது.

இந்த நோயால் என்ன பிரச்சனை ? 

தாயின் உடலில் உள்ள இன்சுலின் சரியாக வேலை செய்யாததால், இன்சுலின் கட்டுக்குள் வைக்க வேண்டிய ரத்த க்ளூகோஸ் அளவுகள், தாயின் ரத்தத்தில் அதிகமாகும் (Hyperglycemia in mother ). இந்த அதிகப்படியான க்ளூகோஸ் நஞ்சுக்கொடி (placenta) வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்லும் இந்த க்ளூகோசை கட்டுக்குள் கொண்டு வர குழந்தையின் கணையம் (Baby’s pancreas) அதிக அளவில் இன்சுலினை சுரக்கும்.

குழந்தையின் ரத்தத்தில் அதிக க்ளூகோஸ் இருப்பதால், சுரக்கப்பட்ட இன்சுலின், அந்த க்ளூகோசை கொழுப்பாக மாற்றி குழந்தையின் உடலில் சேமித்துவிடும். இப்படி குழந்தையின் உடலில் கொழுப்பு சேர்ந்து சேர்ந்து குழந்தை நன்றாக கொழுத்துவிடும். இதை Fetal Macrosomia என்கிறோம்.

குழந்தையின் வளர்ச்சி தேவைக்கு மீறி அதிகமாக இருக்கும். ஐந்து கிலோ வரை கூட பிறப்பு எடை செல்லும். இதனால் குழந்தை இயற்கையான முறையில் பிறக்க வாய்ப்பு குறைந்து விடுகிறது. சிசேரியன் செய்து குழந்தையை எடுக்க வேண்டிய சூழல் அதிகமாகிறது.

இது போக, குழந்தைக்கு மஞ்சள் காமாலை, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு பிறந்த குழந்தை இறக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தாய்க்கு நீரிழிவு இருந்தால், குழந்தை பிறக்கும் சூழலில் அது பிறந்தவுடன் அதன் ரத்த சர்க்கரை அளவுகள் மிகவும் குறைந்து (Fetal hypoglycemia) அதனால் மரணம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

படிக்க:
♦ மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !
♦ பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

இந்த நீரிழிவு பொதுவாக ஆறு மாதத்திலிருந்து இறுதி மாதம் வரையே அதிகமாக வருகிறது. இதை அறிவது மிக எளிது. மருத்துவரிடம் சரியான பராமரிப்பில் இருக்கும் கர்ப்பிணித் தாய்க்கு அந்தத் தாய் கர்ப்பிணியாக பதிவு செய்யும் முதல் முறையே நீரிழிவு இருக்கிறதா என்று ரத்தப்பரிசோதனை செய்யப்படுகிறது.

பிறகு ஒவ்வொரு மூன்று மாதம் முடிவடைகையில் ரத்த சர்க்கரை அளவுகள் Oral glucose tolerance test எனும் பரிசோதனை செய்து கண்டறியப்படுகிறது. நீரிழிவு இருப்பது கண்டறியப்பட்டால் உடனே அதற்குரிய பிரத்யேக மாவுச்சத்து குறைக்கப்பட்ட உணவு முறையை மருத்துவர் பரிந்துரைப்பார்.

உணவு முறையில் கட்டுக்குள் வராத நீரிழிவுக்கு இன்சுலின் ஊசி பரிந்துரைக்கப்படும். அதன் மூலம் ரத்த சர்க்கரை அளவுகளை சரிவர கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பொதுவாக இந்த நீரிழிவு நோய் வராமல் இருக்க கர்ப்பிணி பெண்கள் பின்வரும்
வழிமுறைகளை பின்பற்றலாம்

1. சீனி /சர்க்கரை / கருப்பட்டி போன்ற இனிப்புகளை தவிர்க்கலாம்.
2. பழங்களை பழச்சாறுகளாக பருகாமல் அப்படியே உண்ணலாம்.
3. குளிர்பானங்களை தவிர்க்கலாம்.
4. ஃபாஸ்ட் புட் உணவுகள், பிஸ்கட், வடை, பஜ்ஜி , சமோசா, கேக் போன்றவற்றை தவிர்க்கலாம்.
5. தினமும் அரை மணி நேரமாவது நடைபயிற்சி நல்லது.
6. தினமும் 10 மணிநேரம் உறக்கம் தேவை.
7. முடிந்தவரை மன அழுத்தம் இன்றி இருக்க வேண்டும்.
8. மனம் அமைதி தரும் விசயங்களை செய்யலாம்.

முறையாக மகப்பேறு மருத்துவரிடம் சரியான கால அளவில் பரிசோதனைகள் செய்ய வேண்டும். அவரது அறிவுரைகளை செவ்வனே கடைபிடிக்க வேண்டும்.

கர்ப்ப கால நீரிழிவை காலத்தே அறிந்தால் சிகிச்சை செய்ய இயலும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

நூல் அறிமுகம் : தமிழர் பண்பாடும் தத்துவமும்

பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் ‘தமிழர் பண்பாடும், தத்துவமும்’ என்னும் பெயருள்ள இந்நூல் அவர், ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. ‘பண்பாடு’ என்னும் முதற் பிரிவிலே முருக – ஸ்கந்த இணைப்பு, பரிபாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன. (நூலின் அணிந்துரையிலிருந்து…)

நா. வானமாமலை சங்க இலக்கியம், மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தி ஆகிய தமிழ்ப் பனுவல்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்ச் சமூகத்தில் சமூகத்தின் தத்துவ வரலாற்றை மூன்று கட்டுரைகளில் உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார்.

நா. வா. அவர்களின், மிக விரிவான வாசிப்புத் தளத்தை இக்கட்டுரைகளின் ஊடாகக் கண்டு கொள்ள முடிகிறது. மணிமேகலையை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்ச் சூழலில் பௌத்தம் செயல்பட்ட வரலாற்றை விரிவாகக் கட்டமைத்துள்ளார். சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு பொருள் முதல்வாதம் – உலகாயதம் என்ற தத்துவ அணுகுமுறை எவ்விதம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டியுள்ளார்…

… கலைகளின் தோற்றத்தை, உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியம். உற்பத்தி உறவுகள் குறித்து பண்பாட்டு மானிடவியல் பின்புலத்தில் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையுண்டு. நா. வா. கலை வரலாற்றை இப்பின்புலத்தில் விளக்கிக் கொள்ள உதவும் கட்டுரையை உருவாக்கியுள்ளார். இன்றைய கால வளர்ச்சியில், இக்கட்டுரை மிகவும் அடிப்படையான எளிய செய்திகளைக் கூறுவதாகப் புரிந்து கொள்ளப்படலாம். ஆனால் 1970-களில், கல்லூரி மாணவனாக இருந்து, இடதுசாரி கண்ணோட்டத்தோடு வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு, அக்காலங்களில் இக்கட்டுரையின் முக்கியத்துவம் அலாதியானது. எனது பட்டப்படிப்புக் காலத்தில் மீண்டும் மீண்டும் வாசிக்கும் கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரை இருந்தது. 1970 களில் மார்க்சியத் தத்துவம் சார்ந்து வாசிக்கும் வாசகனுக்கு வழிகாட்டியாக இக்கட்டுரை அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அண்மைக் காலங்களில் தொன்மங்களை எவ்வகையில் வரலாறாகக் கட்டமைப்பது என்பது குறித்த உரையாடல்கள் விரிவாக நிகழ்த்தப் பெறுகின்றன. இத்தன்மை சார்ந்த முன்னோடிப் பதிவாக நா.வா. அவர்களின் உலகப் படைப்புக் கதை மூலங்கள் பற்றிய கட்டுரை அமைந்துள்ளது. பிரபஞ்ச இயக்கம், மனிதர்களின் படிப்படியான வளர்ச்சி, உலகப் படைப்பு குறித்த தொன்மங்களை உருவாக்குதல், இவற்றை மானிடவியல் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளல் என்ற பல் தள அணுகுமுறை சார்ந்து இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள முடியும். தொன்மங்கள் பற்றி அறிய விரும்பும் மாணவனுக்கு, அதன் வரலாற்றைக் கூறும் பாங்கை இக்கட்டுரை வழி நாம் புரிந்து கொள்ள இயலும்.

மாலினாஸ்கி, ஸ்பென்சர், மார்கன், எங்கெல்ஸ் ஆகிய அறிஞர்களின் கருத்துக்களை உள்வாங்கி, ராகுல்ஜி, சட்டோ பாத்தியாயா, கோசாம்பி ஆகியோரின் ஆய்வுகள் சார்ந்து, தமிழ்ச் சூழலில் செயல்பட்டவர் நா.வா. 1970 களில் ‘ஆராய்ச்சி’ வழி செயல்பட்ட நா. வா.வை அடிப்படையாகக் கொண்டுதான் என்னைப் போன்ற மாணவர்கள் பலர் உருவாகினர். எங்களை உருவாக்கிய நா. வா. அவர்களுக்கு என்றும் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். (நூலைப் பற்றி பேரா. வீ. அரசு எழுதியுள்ள பகுதியிலிருந்து)

… பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் உலகாயதத் தத்துவத்தின் தாக்கங்களையும், அத்தத்துவத்தின் வருணனையையும் சேகரித்துத் தொகுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். உலகாயதர்களுடைய நூலெதுவும் பழங்காலத்திலிருந்து வாழையடி வாழையாகப் பாதுகாக்கப்பட்டு நமக்குக் கிடைக்கவில்லை . கி.மு. 2 முதல் தொடங்கி கி.பி. 3 வரையுள்ள காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்களில் காணப்படும் தத்துவக் கருத்துக்களையும் உலகக் கண்ணோட்டச் சிந்தனைகளையும் சேகரித்து ஆராய்ந்தால், பழந்தமிழ்ச் சிந்தனையாளர்கள் உலகாயதத்தையோ அதனைப் போன்ற கருத்துக்களையோ அறிந்திருந்தார்களா என்பதை அறியமுடியும். இவற்றுள், புறநாநூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் பழந்தமிழர்களின் உலகியல் கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்ந்தால் உலகாயதத்தின் செல்வாக்கு இருக்கிறதா என்பதைக் காணலாம்.

தமிழில் உள்ள பௌத்த சமண சமய நூல்களில் பூர்வபட்சமாக உலகாயதம் விவரிக்கப்பட்டுள்ளது. மணிமேகலை பௌத்த நூல். நீலகேசி, சமணநூல். இவையிரண்டிலும் உலகாயதம் விவாதப் பொருளாக அமைந்துள்ளது. மணிமேகலையிலும் நீலகேசியிலும் அவ்வக்காலத்துத் தத்துவங்களின் வருணனைகளும், விவாதங்களும் இடம் பெறுகின்றன. இவை இரண்டிலும் பெளத்தனும், சமணனும் தங்கள் தங்கள் சமய நோக்கிலிருந்து உலகாயதம் அல்லது பூதவாதத்தை எதிர்க்கிறார்கள்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

நீலகேசியின் காலம் 5-ம் நூற்றாண்டு என்றும் அதன் உரையின் காலம் 9 -ம் நூற்றாண்டு என்றும் தமிழ் இலக்கிய வரலாற்றாசியர் கூறுவர். இவ்விரண்டு நூல்களில் பூர்வபட்சமாகக் கூறப்படும் உலகாயதம் பற்றிய செய்திகளை இந்நூல்களின் காலத்தில் வழங்கிய தத்துவக் கருத்துக்களாகவும், உரைகளில் வழங்கும் கருத்துக்களை உரையாசிரியர்களது காலத்துத் தமிழ்நாட்டுத் தத்துவ ஆசிரியர்கள் அறிந்திருந்த கருத்துக்கள் என்றும் ஏற்றுக் கொள்வதில் முரண்பாடு எதுவுமில்லை. எனவே புறநானூறு, பத்துப் பாட்டு, மணிமேகலை, நீலகேசி, மணிமேகலை பழைய உரை, நீலகேசி பழைய உரை ஆகிய சான்றுகளிலிருந்து கி.மு. 2-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுக்காலத்தில் உலகாயதம் வரலாற்று ரீதியாக மாறி வந்திருப்பதைக் குறித்து ஆராயமுடியும். அத்தகைய ஆராய்ச்சியை இக்கட்டுரையில் மேற்கொள்ளுவோம். (நூலிலிருந்து பக். 134 – 135)

நூல்:தமிழர் பண்பாடும் தத்துவமும்
ஆசிரியர்: நா. வானமாமலை

வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,நடேசன் நகர்,
இராமாபுரம், சென்னை – 600 089.
கைபேசி: 98417 75112.

பக்கங்கள்: 192
விலை: ரூ 145.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: commonfolks | marinabooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

நாடு நாசமாகக் கூடாதே என்பதால்தான் சிவாஜி முடிசூட்டுவதை தடுக்கிறேன் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 7


காட்சி : 10

இடம் : பாலாஜி வீடு
உறுப்பினர்கள் : பாலாஜி, பகதூர்.

(பாலாஜி ஒலைச்சுவடி புரட்ட பகதூர் தலையைச் சொறிந்து நிற்கிறான்)

பாலாஜி : பகதூர் பாடத்தைப் படிடா

பாலாஜி : ஏண்டா! நீ என்ன, சின்ன பாப்பாவா? கடாப் போல வளர்ந்திருக்க… ஏன்டா, பயத்துக்கு இடம் குடுக்கிறே?

பகதூர் : நானா இடம் கொடுத்தேன்? பயம் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டதே.

பாலாஜி : பிடிச்சுக் கொள்ளவுமில்லே; அடைச்சுக் கொள்ளவுமில்லே. வீண் பொழுது போக்காதே. ஆரம்பி, பாடத்தை.

பகதூர் : நேற்றைய பாடத்தைத்தானே?

பாலாஜி : ஆமாம்! அதுக்கு ஏண்டா அழுது தொலைக்கிறே? ஐயா! உனக்கு எத்தனை தடவை சொல்றது. முகத்தை இப்படிச் சுளிக்கக் கூடாதுண்ணு . டேய்! கொஞ்சம் புன்சிரிப்பா இருண்டா, எங்கப்பா!

(பகதூர் சிரிக்க) அப்படியில்லேடா இப்படி – (புன்சிரிப்பு)

பகதூர் : வரலியே பாலாஜி!… புன்சிரிப்பு வாண்ணா வரும்; போண்ணா போகுமோ? நான் புன்சிரிப்பா இருக்கத்தான் பார்க்கறேன்.. முடியலியே.

பாலாஜி : முடியலியா? அரை வீசை அல்வாண்ணா ஒரேயடியா விழுங்க மட்டும் தெரியுமா? (பகதூர் சிரிக்க) ம்… அதேதான். அதோன் புன்சிரிப்பு…

பகதூர் : இதா புன்சிரிப்பு…?

பாலாஜி : பாடத்தைச் சொல்லு.

பகதூர் : முக்கனியே! சக்கரையோ தேனே! பாலே!

பாலாஜி : ஏண்டா நிறுத்திட்டே?

பகதூர் : திரை இருக்கே.

பாலாஜி : திரை இன்னும் எடுக்கல்லையா?

(திரையை எடுத்ததும்)

பகதூர் : உன்னை நான் பெறாவிட்டால் என் உயிர் போகும்.

பாலாஜி : ஏண்டா உயிர் போகும்ணு சொல்லிக்கிட்டு ‘மரம் போல நிண்ணா மங்கையோட மனசு இளகுமா? உயிர் போகும்னு சொல்லும் போதே உயிர் போயிட்டா மாதிரி ஆயிட வேணாமா?

பகதூர் : எங்கே ?

பாலாஜி : தோ பார்ரா! முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இப்படியே சொல்லிக்கிட்டே அருகே போகணும். நீ போகும் போது அவ விலகுவா. வெலகுற மாதிரி பதுமையைக் கொஞ்சம் கொஞ்சம் நகத்து.

பகதூர் : சரி!

பாலாஜி : முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இது போலத்தான். இதிலே என்னடா கஷ்டம்?

பகதூர் : இது ஒண்ணும் கஷ்டமில்லே. ஆனா அதுதான்…

பாலாஜி : எதுடா?

பகதூர் : உயிர் போறது.

பாலாஜி : அது ரொம்ப சுளுவுடா.

பகதூர் : எங்கே போக்கிக் காட்டு!

பாலாஜி : உன்னைப் பெறாவிட்டால் என் உயிர் போகும்.

பகதூர் : சுத்தணுமா!

எனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா? அல்லது நான் எப்போதாவது சிவாஜியினுடைய குணம் கெட்டதுன்னு சொன்னேனா? இப்பவும் நான் சொல்வது நாடு நாசமாகப் படாதே என்ற நல்ல எண்ணத்தோடேதான்.

பாலாஜி : சரி! பதுமை பாடம் போதும். காதல் பேச்சு எப்படி இருக்கணும்னு சொல்லித் தர்றேன்.

பகதூர் : சரி! பாலாஜி என்னை ஏன் இப்படி உற்றுப் பார்க்கிறீர்? இப்படி ஒரு பொண்ணு கேட்டா நீ என்ன பதில் சொல்லுவே?

பகதூர் : அப்படி ஒரு பெண் கேட்டால் பயத்தாலே ஊமையாகிவிடுவேன், பாலாஜி.

பாலாஜி : பெண்கள் அப்படித்தான் கோபிக்கிற மாதிரிப் பேசுவாங்க. அதுக்கெல்லாம் பயந்தா பயப்படக்கூடாது. ஒரு பெண் உன்கிட்ட பேச ஆரம்பிச்சா அவளிடம் ஏதாவது காதல் கதையைப் படிச்சுக் காட்டணும்; இடையிடையே புன்சிரிப்பா இருக்கணும்.

பகதூர் : காதல் கதையென்று சொன்னாலே காதைப் பிடித்து திருகிப்புடுவாங்களே !

பாலாஜி : நீ ஏண்டா காதல் கதைன்னு சொல்றே? எந்த சாமிக் கதையாவது படிக்கிறேன்னு சொல்லேன்.

பகதூர் : சாமி கதைப் படிச்சா ?

பாலாஜி : நம்ம சாமி கதையே காதல் களஞ்சியண்டா ஒரு கதை படிக்கிறேன், கவனமாய்க் கேளு. கேக்கறியா? படிக்கட்டுமா?

பகதூர் : படி பாலாஜி

பாலாஜி : ஒ.. மாதர் திலகமே.

பகதூர் : யாரைக் கூப்பிட்டே?

பாலாஜி : டே படிக்கிறேன். ஒ, மாதர் திலகமே! இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு அழகியைக் கண்டதில்லை. டேய், கேக்கறியா?

பகதூர் : ஒ கேக்கறேனே.

பாலாஜி : என்ன சொன்னான்

பகதூர் : அவன் சொல்றான்

பாலாஜி : என்னடா சொல்றான்?

பகதூர் : என்ன சொல்றான்?

பாலாஜி : இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு பெண்ணை, அழகியைக் கண்டதில்லைன்னு சொல்றான். இவன் போய்ப் பார்த்தானா ஈரேழு லோகத்தையும்…

பகதூர் : நான் என்ன, அவன் கூடவா போனேன் என்ன வந்து கேக்கறியே!

பாலாஜி : சும்மா புளுகுடா காதல் கதை படிக்கும் போது நெஜத்தைவிட புளுகுதாண்டா அதிகமா கலக்கணும்!

பகதூர் : படி பாலாஜி !

பாலாஜி : ஓ மாதர் திலகமே! காந்த சக்தியால் இழுக்கப்படும் துரும்பு போல் ஆகிவிட்டேன். காந்தாமணி உன்னை நான் பெறாவிட்டால் பாம்புப் புற்றில் கைவிட்டோ, பாஷாணம் சாப்பிட்டோ, பட்டினி கிடந்தோ உயிரைப்போக்கிக் கொள்வேன். ஆகையால் நீ என்னை ஏற்றுக்கொள் ஏந்திழையே!

(படித்துவிட்டுப் பகதூரைப் பார்க்க, அவன் தூங்குகிறான். அவன் காதைத் திருகி இழுத்துச் செல்லுதல்)

♦ ♦ ♦

காட்சி : 11
இடம் : வீதி
உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், சிட்னீஸ்.

(கேசவப்பட்டர் போய்க் கொண்டிருக்கிறார். பின்னால் சிட்னீஸ் கூப்பிடுதல்)

சிட்னீஸ் : கேசவப் பட்டரே! கேசவப்பட்டரே!

(காதில் விழாதுபோல் நழுவ சிட்னீஸ் கோபத்துடன்) ஒய், கேசவப்பட்டரே..

(கேசவப்பட்டர் திரும்புகிறார்)

கேசவப்பட்டர் : கூப்பிட்டேளா? காது கேக்கல்லே! கொஞ்சம் மந்தம்.

சிட்னீஸ் : பரவாயில்லை. பாட்டாச்சாரிஸ்வாமி, உம்ம தரிசனம் கிடைக்கிறது சாமான்யமா?

கேசவப்பட்டர் : கேலி செய்றேளா?

சிட்னீஸ் : சேச்சே! நான் என்ன பிரமாணத் துவேஷியா?

கேசவப்பட்டர் : யார் சொன்னது உம்மை அப்படி ….

சிட்னீஸ் : உண்மையாகவே உம்ம தயவுக்காகத் தான் நான் வந்திருக்கிறேன்.

கேசவப்பட்டர் : என் தயவா? என்ன சிட்னீஸ்! நான் ஒரு பஞ்சப் பிராமணன். உம்ம கீர்த்தியும் செல்வாக்கும் அமோகம்.

சிட்னீஸ் : உண்மையாகவேதான் சுவாமிகளே! உம்ம சகாயம் வேண்டும். விஷயம் உமக்குத் தெரிந்ததுதான். வீணாக நாம் விவாதிக்கணுமா? சிவாஜி பட்டாபிஷேகம் சம்மந்தமாக தாங்கள் எதிர்க்கிறீர்களாம். நல்ல காரியத்தை, நாடு முழுதும் விரும்புகிற காரியத்தைக் கெடுக்கலாமா? சிவாஜி தர்மிஷ்டர்; உமக்கே தெரியும். வீரர் அதனால்தான் நாம் வாழுகிறோம். இப்போது நம் நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. அப்படிப்பட்டவருடைய பட்டாபிஷேகத்தைத் தடுப்பது சரியா, தர்மமா, நியாயமா?

கேசவப்பட்டர் : ஏம்பா சிட்னீஸ். எனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா? அல்லது நான் எப்போதாவது சிவாஜியினுடைய குணம் கெட்டதுன்னு சொன்னேனா? இப்பவும் நான் சொல்வது நாடு நாசமாகப் படாதே என்ற நல்ல எண்ணத்தோடேதான்.

சிட்னீஸ் : சாஸ்திர விரோதம். இந்தப் பட்டாபிஷேகம் சிவாஜி சூத்திரர் என்று ஆட்சேபனை செய்கிறீராம்.

கேசவப்பட்டர் : நானா செய்கிறேன். அதென்னப்பா, அப்படிச் சொல்றே? நான் சாஸ்திரத்தைத்தான் சொல்கிறேன். வேறொன்றுமில்லை.

சிட்னீஸ் : சாஸ்திரம் இருக்கட்டும். கேசவப்பட்டரே ! இந்தக் காரியத்தில் உம்ம ஒத்தாசை கிடைத்தால், நீர் என்ன கேட்டாலும் சரி. இலட்ச வராகன் சன்மானம் வேண்டுமா? சரி! ஜாகீர் வேண்டுமா? சரி! அரண்மனைப் புரோகிதம் வேண்டுமா? சரி எது வேணுமானாலும் தருகிறேன்.

கேசவப்பட்டர் : ஆசை காட்டி என்னை அதர்மத்திலே தள்ள முடியாது சீட்னீஸ். எங்களுக்குத் தெரிந்த ஞானப்படி, சாஸ்திரப்படி இந்தப் பட்டாபிஷேகம் நிச்சயமாய்ப் பாவ காரியம்ணு தெரியுது. ஆனா , எங்களைவிட சிரேஷ்டமானவர், சாஸ்திரத்தை மேலும் ஆராய்ந்து பார்த்தவர் சம்மதம் கொடுத்தா எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

சிட்னீஸ் : கேசவப்பட்டரே! உம்மைவிட….

கேசவப்பட்டர் : நான் சாமான்யனப்பா சிட்னீஸ். என்னை விட ஞானஸ்தா பிரபஞ்சத்திலே அநேகம் பேர் இருக்கா. உதாரணமா காசி க்ஷேத்திரத்திலே (காகப்பட்டர்) ஒரு மகான் இருக்கார். அவர் வந்து சம்மதம் கொடுத்தால் நான் மட்டுமல்ல, பாரதவர்ஷத்திலே உள்ள பிராமணோத்தமர்கள் யாரும் ஒரு சொல் ஆட்சேபனை சொல்ல மாட்டா.

படிக்க:
தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

சிட்னீஸ் : பட்டரே! சிவாஜி முடிசூட்டிக் கொள்ளக் கூடாதுன்னு உமக்கொன்றும் வஞ்சகமான எண்ணம் கிடையாதே?

கேசவப்பட்டர் : சத்தியமாச் சொல்றேன். நேக்குக் கிடையாது, கெட்ட எண்ணம்.

சிட்னீஸ் : எப்படியாவது காகப்பட்டரின் சம்மதம் கிடைத்து பட்டாபிஷேகம் நடைபெறுவதனால் உமக்கு ஆட்சேபனை இராதே? உம்முடைய ஒத்துழைப்பு இருக்குமல்லவா?

கேசவப்பட்டர் : நிச்சயமா சந்தேகமா அதற்கு.

சிட்னீஸ் : அப்படியானால் பட்டரே! காகப்பட்டரிடம் நீரே தூதுபோய்வர வேண்டும்.

கேசவப்பட்டர் : நானா?

சிட்னீஸ் : தாங்கள்தான் போகவேண்டும். சிவாஜியிடம் உங்களுக்குக் கெட்ட எண்ணம் கிடையாது என்கிறீர்.

கேசவப்பட்டர் : ஆமாம் சிட்னீஸ்

கேசவப்பட்டர் :  ஆகவே தாங்களே சென்று எப்படியாவது காகப்பட்டருடைய சம்மதம் பெற்றுக் கொண்டுவர வேண்டும். கேசவப்பட்டரே! ஒரு பெரிய ஜாகீர் உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. துணைக்குப் பாலச்சந்திரப்பட்டர், சோமனாதப்பட்டர், யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும், தடை கூறவே கூடாது. தடை கூறினால் சிவாஜியிடம் உமக்குத் துவேஷம் இருக்கிறது கெட்ட எண்ணம் இருக்கிறது என்றுதான் பொருள். குழந்தைகூடச் சொல்லுமே, இதை.

கேசவப்பட்டர் : சரி போய் வருகிறேன்; ஆட்சேபனை என்ன?

சிட்னீஸ் : மற்ற இருவரையும் கலந்து கொண்டு தயாராய் இருங்கள் புறப்பட. நான் பல்லக்குப் பரிவாரங்கள் தயார் செய்துவிட்டு, பிறகு வந்து பார்க்கிறேன்.

(போகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !

1

“நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாமிய – கிறிஸ்தவ சமூகத்தினருடனும், பட்டியல் இன விளிம்பு நிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் எண்ணவோட்டத்தில், இந்து வலதுசாரி சிந்தனை மிகுதியாக இருப்பதை சமீப காலமாக உணர முடிகிறது. இந்நிலையில் இருநூறு ஆண்டு கால வரலாற்றை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது” என்கிறார் லஜபதிராய். இந்த மேற்கோள் அவர் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா? காவியா? எனும் நூலின் முதல் அத்தியாயத்தில் இருக்கிறது.

மேலும் “ஈயென இரத்தல் இழிந்தன்று என்பதைத் தவிர உழைத்து வாழும் எந்தத் தொழிலும் உயர்வானதே என்ற நிலையில் நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும் தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்துவிட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன எண்ணவோட்டமே!” என்கிறார் லஜபதிராய்.

நாடார் சமூகம், பார்ப்பனிய அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய தமது வரலாற்றை பெருமையுடன் நினைவுகூர்வதற்குப் பதிலாக அதை சிறுமையாக நினைப்பதை மேற்கண்ட வரிகள் உணர்த்துகின்றன. கருப்பின வரலாறோ, யூதர்களின் வரலாறோ, இல்லை ஹிட்லரால் வேட்டையாடப்பட்ட கம்யூனிஸ்டுகளின் வரலாறோ அனைத்தும் இத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்த்து போரிட்டதை, போராடியதை பெருமையுடன் நினைவு கூர்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கருப்பின இளைஞர் தான் வெள்ளை நிறவெறியால் துன்புறுத்தப்பட்ட வரலாற்றைச் சொந்தமாக கொண்டவன்/ள் – அதை எதிர்த்துப் போராடிய வரலாற்றில் உருவானவன்/ள் என்பதைப் பெருமையாக கருதுவார். ஆனால், இங்கே பார்ப்பனியமயமாக்கப்பட்ட ஆதிக்கச் சாதிகள் பலவும் தம்மை ஆண்ட பரம்பரை, ஆத்திக சடங்குகளை தவறாமல் பின்பற்றும் புனித பரம்பரை என்று அடிமைத்தனத்தையே கொண்டாடுகின்றன.

யூடியூபில் இந்த நூலின் அறிமுக விழாவிற்கான எமது வீடியோக்களில் சங்கிகள் சிலர் லஜபதிராயை கிறித்தவ – இஸ்லாமிய கைக்கூலி என்று திட்டுகின்றனர். எங்கே நாடார்கள் தமது வரலாற்றை அறிந்து தெளிந்து இந்துத்துவ எதிர்ப்பை கையில் எடுத்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு. இன்னொருபுறம் ஆய்வு என்ற பெயரில், சில அரைவேக்காடுகள்  இந்த நூல் நாடார் சாதி பெருமிதத்தை பேசுவதாக உளறுகின்றனர். அதன் ஊடாக சாதிப் பெருமிதத்தின் மூலம் இந்துத்துவத்தை கட்டியமைக்க விரும்பும் சங்கிகளை மறைமுகமாக ஆதரிக்கின்றனர். உண்மையில் இந்த நூல், சாதி பெருமிதத்திற்கு எதிராகவும் அந்த சாதிப் பெருமிதம் ஒரு பார்ப்பனிய அடிமைத்தனம் என்றும் இடித்துரைக்கிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள நாடார் மக்களின் கமுதி ஆலய நுழைவு முயற்சியை எடுத்துக் கொள்வோம். இந்தப் பகுதியில் இந்துமதவெறியர்கள் மட்டுமல்ல, பொதுவில் இந்துக்கள் கொண்டாடும் விவேகானந்தரைப் பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. விவேகானந்தர் அவரது ‘அதிரடியான’ மேற்கோள்களுக்கு பெயர் பெற்றவர். மேலும், சிகாகோ நகரின் சர்வ மத மாநாட்டில் அவர் பேசிய பேச்சை கூடியிருந்தோர் அனைவரும் மெய்மறந்து வரவேற்றதாகவும் சங்கிகள் அவ்வப்போது பேசுவதுண்டு. அதுவும் கூடியிருந்த சர்வ மத மக்களை “சகோதரர்களே, சகோதரிகளே” என்று அவர் விளித்ததைப் பார்த்து நாங்கள் எல்லாம் லேடிஸ் அண்ட் ஜென்டில்மென் என்று விளிக்கும் போது நீங்கள் உடன்பிறந்த சகோதரத்துவத்தை முன்னிறுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது என்று மேற்கத்திய அறிஞர்கள் கூறினர்களாம். இந்த சகோதரத்துவத்தின் இலட்சணத்தைத்தான் கமுதி ஆலய நுழைவுப் போராட்ட வரலாறு போட்டு உடைக்கிறது.

நூலிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம் :

“இராமநாதபுரம் மாவட்டத்தின் கிட்டத்தட்ட 6483 மக்கள் தொகை கொண்ட சிறு நகரமான கமுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நாடார் சமூகத்தினர் வாழ்ந்து வந்தனர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் அவர்கள் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் நுழையவோ வழிபாடு செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. 1855-ம் ஆண்டு நவம்பர் மாதம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் பரம்பரை அறங்காவலரான திரு. பாஸ்கர சேதுபதியிடம் ஆலய வழிபாட்டு உரிமையைக் கேட்ட நாடார்களின் முறையீடு நிராகரிக்கப்பட்டது.”

“1897-ம் ஆண்டு மே மாதம் பதினான்காம் நாள் மாலை ஆறு மணிக்கு மேல் இரவு ஒன்பது மணிவரை காவடி பால்குடம் எடுத்து தீவட்டி ஏந்தி மேளதாள ஆரவாரத்துடன் கமுதி கோயிலுக்குள் கோயில் ஊழியர்கள் எதிர்ப்பையும் மீறி மேற்கு வாசல் வழியாக வல்லடியாக நுழைந்த நாடார்கள் தேங்காய் உடைத்து முதலில் முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்து பின்னர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்குள் நுழைந்து சிலையை வழிபட்டனர். சட்டம் ஒழுங்கு மீறல்கள் மிகக் கடுமையான தண்டனைக்குள்ளான ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ஜமீன்கள் அதிகாரம் மிக்க நிறுவனங்களாக இருந்த காலகட்டத்தில் நடந்த அந்நிகழ்வை ஒரு சுயமரியாதை புரட்சியாகக் கருதலாம். இவ்வாறு நுழைந்ததற்காக குற்றவியல் வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அது குற்றம் என்பது நிரூபணமாக வில்லை. எனவே, கமுதி ஆலயத்திற்குள் நாடார்கள் நுழைவதை நிரந்தரமாக தடை செய்யக்கோரி மதுரை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த திரு. பாஸ்கர சேதுபதி, நாடார்களின் ஆலய நுழைவால் தீட்டுப்பட்ட கோயிலை பார்ப்பன புரோகிதர்களை வைத்து செய்யும் மகா சம்ப்ரோக்ஷணம் என்ற தீட்டுக் கழிக்கும் சடங்கின் செலவுக்காக இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்கவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.”

“20-07-1899 அன்று நாடார்கள் கோயிலுக்குள் நுழைவதை உரிமையியல் நீதிமன்றமான மதுரை கிழக்கு சார்பு நீதிமன்றம் தடை செய்ததுடன் கோயிலை தூய்மைப்படுத்தும் செலவுக்காக நாடார்களுக்கு விதித்த ஐந்நூறு ரூபாய் அபராதத் தொகை திரு. பாஸ்கர சேதுபதிக்கு வழங்கப்பட்டது. மதுரை சார்பு நீதி மன்றத்தில் இருதரப்பினரும் ஒத்திசைவுடன் செல்ல முடிவெடுத்து நாடார்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முப்பதாயிரம் ரூபாய் பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்ட திரு. பாஸ்கர சேதுபதி, ஐயாயிரம் ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொண்டு, ஒத்திசைவு பத்திரத்திலும் கையெழுத்திட்டார்.”

“மேல்முறையீட்டில் தீர்ப்பு நாடார்களுக்கு சாதகமாக வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய மதுரை மாவட்ட ஆட்சியாளர், பாஸ்கர் சேதுபதிக்குக் கடிதமெழுதி ஒத்திசைவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டினார். நாடார்கள் தங்களுக்கென்று தனிக்கோயில்களைக் கட்டிக்கொள்ளவோ அல்லது கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றவோ செய்யட்டும் என்று தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் விளைவாக திரு. பாஸ்கர சேதுபதி ஒப்பந்தத்தை இரத்து செய்தார்.”

“உயர்நீதிமன்ற மேல்முறையீடு நாடார்களுக்கு எதிராக முடிந்தது. நாடார்களின் கோயில் நுழைவுக்கு எதிராகவே தீர்ப்பளித்தது, நாடார்களின் கோயில் நுழைவு முயற்சி கனவாகவே நீடித்தது. நாடார்கள் நுழைந்த மேற்கு வாசல் அழிக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட்டது. அந்த சுவடுகளை இன்றும் காண முடியும்.”

“நாடார்களுக்கு தீண்டாமை காரணமாக ஆலய நுழைவு மறுக்கப்பட்ட அதே காலகட்டத்தில் திரு. பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் அருமைப் பெருமைகளை அயல்நாடுகளில் வியந்துரைக்க விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்குப் பொருளுதவி செய்தார். 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக சமய மாநாட்டில் விவேகானந்தர், சகோதரர்களே, சகோதரிகளே, எனத் தனது உரையைத் தொடங்கி இந்து மதத்தின் மேன்மைகள் குறித்து பேசிய அதே காலகட்டத்தில் இந்து சனாதன தர்மங்களின் அடிப்படைத் தேவையான தீண்டாமையின் பொருட்டு, இந்துக் கோயில்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தங்களை இந்துக்களாக கருதிய உள்ளூர் நாடார் சகோதர சகோதரிகள் இந்துக் கோயிலுக்குள் தங்களை அனுமதிக்கும்படி திரு. பாஸ்கர் சேதுபதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.”

“பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கோவில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நாடார்களுக்கு எதிராக பாஸ்கர சேதுபதி 1898-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு ஒரு வருடத்திற்கு மேலாக மதுரை கிழக்கு சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. 20.07.1899-ம் ஆண்டு நீதிபதி டி. வரதராவ் தீர்ப்பளித்த அவ்வழக்கில் பாஸ்கர சேதுபதி தரப்பில் 38 பார்ப்பன சாட்சிகளும், நாடார்கள் தரப்பில் 23 பார்ப்பன சாட்சிகளும் சான்றளித்துள்ளனர். அச்சான்றுகளின் அடிப்படையில் நீதிபதி அளித்த தீர்ப்பு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்து மதத்தின் சாரம்சம் பற்றி பத்தி 114-ல் நீதிபதி இவ்வாறு குறிப்பிடுகிறார். “இந்துக்கள் மத்தியில் சாதி வெறுமனே ஒரு சமூக நிறுவனமன்று; அது ஒரு மதக்கோட்பாடு; கடவுள் மனிதர்களை சமமற்றவர்களாக கருதுகிறார்; பறவைகள் அல்லது விலங்குகளின் வகைகளைப் படைத்துள்ளதைப் போல தனித்தனி வகை மனிதர்களை அவர் படைத்துள்ளார்; பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் எனப் பிறந்துள்ள அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து பிரிந்தே இருக்க வேண்டுமென இந்துக்கள் நம்புகின்றனர்”.

“மேற்சொன்ன கருத்துக்கள் மட்டுமன்றி அனைத்து இந்துமத அடிப்படை நூல்களின் ஆதாரத்தோடு நாடார்கள் மது தயாரித்தல் தொடர்புடைய சாதியாதலால் தீண்டத்தகாத சாதியெனவும், அவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததால் ஏற்படும் தீட்டைக் கழிக்க சாந்தி ஹோமம், திசை ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து சாந்தி, சப்த சாந்தி, சகஸ்கர கலச ஸ்தாபனம் என்ற சடங்குகளை உள்ளடக்கிய மகாசம்ப்ரோக்ஷணம் என்ற தீட்டுக்கழிப்பு செய்யாவிட்டால் விசயமறிந்தவர்களும், பிராமணர்களும் அக்கோயிலுக்குள் நுழைய மாட்டார்கள் எனவும் அத்தகைய கோயிலுக்குச் செல்வதால் ஆன்மீக பலன் ஒன்றும் இல்லை எனச் சான்றுரைத்த இந்து சாஸ்திர வல்லுநர்களின் கருத்தை ஏற்று தீட்டுக்கழிக்கும் சடங்குகளுக்காக ரூ. 500/- ஐ பாஸ்கர சேதுபதிக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி வரதராவ் தனது தீர்ப்பின் 125-வது பத்தியில் நாடார்களை கமுதி கோயிலுக்குள் அல்லது அதன் எந்தவொரு பகுதியிலும் நுழைய தடை செய்து உத்தரவிட்டார்.”

“பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பாட்டனாரான வெள்ளச்சாமித் தேவரால் நாடார்களுக்கு எதிராக சான்றளிக்க கட்டாயப்படுத்தப்பட்ட சாட்சிகள், விலைக்கு வாங்கப்பட்ட சாட்சிகள், திருத்தப்பட்ட இந்து சாஸ்திரங்கள் இவற்றைப் புறந்தள்ளி நீதிபதி வரதராவ் பெருமளவுக்கு நம்புவது வாதி தரப்பின் 50-வது சாட்சியாவார். அவர் தமிழகம் தமிழ் தாத்தா எனக் கொண்டாடும் உ.வே. சாமிநாத அய்யர், இந்து மத சாஸ்திரங்களை அன்னார் தவறாக புரிந்து கொண்டிருப்பார் என யாரும் கூற இயலாது.”

“கமுதி கோயில் வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகு நாடார் சமூகத்தினர் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கங்களில் பங்கெடுத்தமை தற்செயலான நிகழ்வல்ல; மாறாக, விடுதலைத் தாகமே அதற்குக் காரணம் எனக் கூறலாம்.”

o0o0o0o

மேற்கண்ட பகுதிகளில் பல வரலாற்று மாந்தர்கள் வருகிறார்கள். அவர்களில் விவேகானந்தருக்கு புரவலராக திகழ்ந்த பாஸ்கர சேதுபதி முக்கியமானவர். மறவர் சாதி சங்கத்தைச் சேர்ந்த அபிமானிகள் பலரும் சேதுபதி பரம்பரையை சக்கரவர்த்தி, மன்னர் பரம்பரை என்ற ரேஞ்சுக்கு வருணிக்கிறார்கள். ஆண்ட பரம்பரை மேனியாவில் இத்தகைய பில்டப்புகளெல்லாம் சாதாரணம். உண்மையில் வெள்ளையர்கள் ஆட்சியில் திருவாளர் பாஸ்கர சேதுபதி ஒரு ஜமீன்தாராகத்தான் அதுவும் ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்ட அடிமை நிலச்சுவான்தாராகத்தான் வாழ்ந்தார்.

நாடார்கள் கோவில் நுழைவுக்கு எதிராக அவர் ஆற்றிய வரலாற்றுப் பாத்திரத்தை மேலே இடம்பெற்றுள்ள நூலின் பகுதிகளில் படித்தறியலாம். நாடார்களுக்கு அபராதம் போடுவதோ, இல்லை சுத்திகரிப்பு சடங்கு செய்வதோ, நிரந்தரமாக அவர்கள் கோவிலில் நுழையத் தடை கோருவதோ அத்தனை முயற்சிகளையும் பாஸ்கர சேதுபதி செய்திருக்கிறார். இன்றைக்கும் சேதுபதி பரம்பரையினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புரவலர்களாகவே இருந்து வருகின்றனர்.

இவரைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளை அடித்துவிடும் மறவர் சாதி சங்க அறிஞர்கள் அன்னாரை ஒரு மெத்தப்படித்த ஆன்மீகவாதி என்றும் சொற்பொழிவில் வல்லுநர் என்றும் கூறுகிறார்கள். இவையெல்லாம் உண்மை என்றே வைப்போம். அத்தகைய சேதுபதிக்கு அமெரிக்காவில் நடக்கும் சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்ததாம். அதற்குப் போவதாக இருந்தவர் பின்னர் தன் சார்பில் விவேகானந்தரை பொருளுதவி செய்து அனுப்புகிறாராம். அமெரிக்கா சென்று வந்த விவேகானந்தர் இலங்கை வழியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கால் பதிக்கும் போது “லோகத்தில் இந்துதர்மத்தை நிலைநாட்டிய தலைவனது பாதம் என் தலையில் பட்டே மண்ணில் பதிய வேண்டும்” எனத் தலையை நீட்டினாராம் சேதுபதி.

படிக்க:
அருந்ததி ராய் உரை : காவி அடிப்படைவாதமும் சந்தை அடிப்படைவாதமும் ஒன்றுதான் !
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

ஆக, சேதுபதி மெச்சும் இந்து தர்மத்தின் இலட்சணம் என்ன என்பது கமுதி ஆலய நுழைவு போராட்டமே காட்டிக் கொடுத்து விடுகிறது. இதில் சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் விளித்த சகோதரத்துவத்தின் உண்மையான இலட்சணமும் இந்த வரலாற்றில் இருக்கிறது. இந்த வரலாறு தெரிந்திருந்தால் அந்த மாநாட்டிற்கு வந்திருக்கும் மேற்கத்திய மனிதர்கள் “மிஸ்டர் விவேகானந்தர், எங்களை சகோதர சகோதரிகளாக விளிப்பது இருக்கட்டும். உங்கள் ஊரில் நாடார்களை விலங்குகள் போல நடத்துகிறீர்களே, அவர்களை அப்படி நடத்தும் ஜமீன்தாரின் காசில் இங்கே வந்து பேசுகிறீர்களே ! வெட்கமே இல்லையா? ” என்று கேட்டிருப்பார்கள்.

இத்தகைய வரலாற்று செய்திகளைக் கொண்ட இந்த நூலை ஒவ்வொருவரும் வாங்கிப் படிப்பது அவசியம். அச்சு நூலை வினவு தளத்தின் அங்காடியில் வாங்கலாம். வாங்கிப் படியுங்கள், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்! காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்த வரலாற்று நூல் பயன்படும்.

மதன்

வினவு தளத்தின் அங்காடியில் இந்நூலை வாங்க :

Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)

100.00Read more

Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)


Paypal மூலம்-வெளிநாடு: 5$ (தபால் கட்டணம் சேர்த்து)


தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

வெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.


இதையும் பாருங்க …

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

1

2019, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தோல்வியடைந்துவிட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது அந்த அளவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது பாஜக. காஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தக் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இந்த அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவியிருக்கும் இந்த நச்சுப் பாம்பை வீதிப் போராட்டங்களின் மூலம்தான் வீழ்த்தமுடியும். அதற்கான ஆயுதம்தான் இந்நூல்.

அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய இந்த நூலை தரமாக தயாரித்து மலிவு விலையில் தருகிறது புதிய ஜனநாயகம் பத்திரிகை. இந்த அச்சு நூலை வினவு அங்காடி மூலம் ஆன்லைனில் விற்பனை செய்கிறோம்.

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! நூலின் முன்னுரையிலிருந்து ….

2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், “ஸப் கா ஸாத், ஸப் கா விகாஸ்” (அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி) என முழங்கினார், மோடி. ஆனால், அவரது இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி, ஷிவ் நாடார், குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட 84 பெரும் தரகு முதலாளித்துவக் குடும்பங்களின் சொத்து மதிப்புதான் கூடியிருக்கிறதேயொழிய, பெருவாரியாக உள்ள அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியைத்தான் கண்டிருக்கிறது.

… முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் மீது வரி பயங்கரவாதத்தை ஏவிவிடுவதாக கண்ணீர் வடித்தது, பா.ஜ.க. தனது ஆட்சியில் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, இன்னொருபுறத்தில் பெட்ரோல் – டீசல் மீது கலால் வரி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, வங்கி சேவைக் கட்டணம், ரயில் கட்டண உயர்வு, டோல்கேட் கட்டணக் கொள்ளை என்றபடியான பொருளாதாரத் தாக்குதல்களை நடுத்தர வர்க்கத்தினர் மீதும், உழைக்கும் மக்களின் மீதும் ஏவிவிட்டது.

”நானும் தின்ன மாட்டேன், மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என சவுண்டுவிட்ட மோடியின் ஆட்சியில்தான் ஊழலும் கமிசனும் புதிய அவதாரமெடுத்திருக்கின்றன. இராணுவத்திற்கான ஆயுதத் தளவாடக் கொள்முதலில் இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது எனச் சட்டம் உள்ள நிலையில், ரஃபேல் விமானக் கொள்முதலில் அனில் அம்பானிக்காக பிரதமர் மோடியே, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைத்தரகராகச் செயல்பட்டார்.

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம், கொள்ளைக்காக மோடி அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவின் மீதும் ஏவிவிட்ட பொருளாதார பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் குண்டர் படைகள் முசுலீம்கள், தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமின்றி, முற்போக்கு அறிவுத்துறையினர் மீதும் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

மோடியின் ஆட்சியில் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்படும் பசுவதைத் தடைச் சட்டமும், மாட்டுச் சந்தையை முறைப்படுத்த கொண்டுவரப்பட்ட சட்டமும் இந்து விவசாயிகளையும் சேர்த்தே பதம் பார்த்தது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி உயர்வும் இதுவொரு கொள்ளைக்கார அரசு என்பதை பா.ஜ.க.-வின் சமூக அடித்தளமாக விளங்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கும் புரிய வைத்தது.

தூத்துக்குடியில் 14 பேரைச் சுட்டுப் பொசுக்கிக் கொன்றதை ஆதரித்துப் பேசி வரும் பா.ஜ.க.தான், தொழிற்சங்க உரிமைகள் கேட்டுப் போராடிய 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கில் போடச் சொல்லுகிறது. தூத்துக்குடி படுகொலையைத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஆதரித்துப் பேசிவரும் பா.ஜ.க. தான், உரிமை கேட்டுப் போராடிய தொழிலாளர்களைத் தூக்கு மேடைக்கு அனுப்பினால்தான், மூலதனத்தை ஈர்க்க முடியும் என வாதிடுகிறது.

… இந்தியா ஓர் இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை – பார்ப்பன பாசிசம் என்ற காவி பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் இரண்டறக் கலந்த இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை இக்குறுக்குவெட்டுத் தோற்றம் எடுத்துக்காட்டுகிறது.

… கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது என்ன என்பதை நினைவுபடுத்துவதற்கு மட்டுமல்ல; கார்ப்பரேட் – காவி பாசிசம் என்ற இரட்டை அபாயத்தை வீழ்த்துவதற்குத் தேர்தலுக்கு அப்பாலும் போராட வேண்டிய அவசியமிருக்கிறது என்பதை உணர்த்தவும் இந்த மீள்பார்வை அவசியப்படுகிறது.

பொதுமக்களை அச்சுறுத்துவதன் மூலம், அவர்களைப் பார்ப்பனிய, கார்ப்பரேட் மேலாதிக்கத்திற்கு அடிபணிய வைத்துவிடலாம் எனக் கனவு காண்கிறது, ஆர்.எஸ்.எஸ்.

எதிர்த்து நிற்பதன் வழியாகவும் திருப்பி அடிப்பதன் வழியாகவும்தான் அவர்களை வீழ்த்த முடியும், பணிய வைக்க முடியும் என்பதை மெரினா எழுச்சியும் தூத்துக்குடி – ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் கற்பிக்கின்றன.

இத்தகைய மக்கள்திரள் போராட்டங்கள் மட்டும்தான் பார்ப்பனிய மேலாதிக்கம் என்ற காவி பாசிசத்தையும், தனியார்மயம் – தாராளமயம் என்ற கார்ப்பரேட் பாசிசத்தையும் வீழ்த்தவல்ல, மக்கள் கைகளில் உள்ள உண்மையான, நம்பத்தக்க ஆயுதங்களாகும்.

ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.

வெளியீடு :
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600024.

பக்கம்: 208
விலை :
100
முதல் பதிப்பு : மார்ச் 2019

Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)

100.00Add to cart

Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)



Paypal மூலம்-வெளிநாடு: 6$ (தபால் கட்டணம் சேர்த்து)




தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

வெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

நம் உணவு முறையில் எது நல்லது ? எது கெட்டது ? – கேள்வி பதில் !

முதல் கேள்வி புரோட்டா சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள், இதனால் வரக்கூடிய தீங்குகள் என்னவென்று விளக்கவும்?.

விடை : புரோட்டா எதில் தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால் கோதுமையில் இருந்து தயாரிக்கிறார்கள். கோதுமை மேல்தோலை நீக்கி ப்ளீச் செய்து மைதா தயாரிக்கிறார்கள். இவ்வாறு தயாரிக்கும் போது அதில் பல கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதாகவும், இந்த கெமிக்கல்கள் கணையத்தை தாக்கி டயாபட்டிக் நோயை உண்டு பண்ணும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையா என்று எனக்கு தெரியவில்லை. இதைப் பற்றி அறிவியல் தேடுதல்களிலும் சரியான விடை கிட்டவில்லை. ஆனால், மைதா முழுக்க முழுக்க சர்க்கரை நிரம்பிய ஒரு பொருள் அதில் சர்க்கரையை தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதனால், புரோட்டா மட்டும் மைதாவில் தயாரிக்கப்படுவதில்லை, அதைத் தவிர ரொட்டி, கேக் முதலிய பேக்கரி ஐட்டங்கள் அனைத்தும் மைதாவால் தான் தயாரிக்கப்படுகின்றன. புரோட்டா மேல் உள்ள பயத்தினால், அதை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், ரொட்டி முதலிய பண்டங்களை காலை உணவாக உட்கொள்ளும் பழக்கம் அதிக பேரிடம் உள்ளது. ரொட்டியும் மைதாவில் தயாரிக்கப்படும் உணவுதான்.  இந்தக் கேள்விக்கு ஏற்றவாறு பரோட்டா உண்டால் சர்க்கரை வருமா, இல்லையா? என்பதற்கான விடை எனக்கு தெரியாது. அதை பற்றி நான் ஒன்றும் கூறவிரும்பவில்லை.

ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், பரோட்டா உண்டால் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும். அதேபோல் சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் மைதா உண்டால் சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதேபோல் புரோட்டா தயாரிக்கும்போது அதில் அதிகம் எண்ணெய் ஊற்றுகிறார்கள். நான் பல பேரிடம் கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணெய் கூறினார்கள். இதனால் அதில் அதிகம் “Transfats” கலந்திருக்க வாய்ப்புள்ளது. புரோட்டாவை பொறுத்தவரை இரண்டு விடைகள் ஒன்று மைதா முழுக்க முழுக்க சர்க்கரையால் ஆனது. இரண்டாவது சுகாதாரமற்ற எண்ணெய். இந்த இரண்டு காரணங்களால் புரோட்டாவை நாம்  எப்போதாவது உணவாக எடுத்துக் கொள்ளலாமே அன்றி அடிக்கடி உண்பது நல்லதல்ல.

பொதுவாக மூன்று பாய்சன் என்று கூறுவார்கள் முதலாவது சீனி அல்லது சர்க்கரை இரண்டாவது உப்பு மூன்றாவது white rice இதை எந்த அளவு உட்கொள்ளலாம், பாஸ்சன் என்று கூறுவது சரியா?

விடை:  எந்த ஒரு உணவையும் அளவாக உட்கொண்டால் கெடுதல் இல்லை. உதாரணத்திற்கு முன்னர் மைதாவை பற்றி பேசினோம். அதேபோல் வெள்ளை சர்க்கரை என்று கூறுகிறார்கள். இது கெடுதல் எனவே, நாட்டு சக்கரை விரும்புகிறார்கள். நம் உடலுக்கு சக்கரை என்றுதான் தெரியுமே, தவிர அது நாட்டுச்சக்கரை என்பது தெரியாது. இன்னும் சில பேர் வெள்ளை சர்க்கரையை தயாரிக்கும் போது, அதில் அதிக கெமிக்கல்கள் கலப்பதாக கூறுகிறார்கள். இவை உடலுக்கு தீங்கு என்றும் சொல்கிறார்கள். இதுவும் இன்னும் ஆய்வுப்பூர்வமாக  நிரூபிக்கப்படாத ஒன்று.

எந்த ஒரு அரசாங்க ஆய்வகமும் அல்லது சுகாதார நிறுவனமும் வெள்ளை சர்க்கரை தீங்கு என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கவில்லை. மேலும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடவும் இல்லை. இவ்வாறு இருக்கையில் வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கானது என்று நான் கூற முடியாது. ஆனால், அதேவேளையில் வெள்ளை சர்க்கரை கெடுதல், நாட்டு சக்கரை உடலுக்கு தீங்கானது இல்லை என்ற கூற்றையும் ஏற்க முடியாது.

எந்த சர்க்கரையானாலும், அது உடலில் சர்க்கரை அளவை கூட்டத்தான் செய்யும். உதாரணம் 100 கிராம் வெள்ளை சர்க்கரையும், 100 கிராம் நாட்டு சர்க்கரையும் உடலில் ஒரே அளவு சர்க்கரையைதான் சேர்க்கும். எதுவுமே அளவுக்கு அதிகமானால் தீங்குதான். அடுத்து அரிசி, சில பேர் இட்லி பற்றி கூறுகையில் என்னிடம் கேட்பார்கள் “ஏன் சார் இட்லி சாப்பிட வேண்டாமெனக் கூறுகிறீர்கள் ?” என்று.

நான் அவ்வாறு கூறவில்லை.  இட்லியை ஒருவேளை உண்ணலாம். இரண்டுவேளையும் உணவாக இட்லியை உட்கொள்ள முடியுமா?. 1960-களில் இட்லி என்பது ஒரு பலகாரம். பசுமைப் புரட்சிக்கு பின்புதான் அரிசியின் விலை குறைந்து, அரிசி  எல்லோருக்கும் சென்று சேரும் ஒரு பொருளாக மாறியது. இதற்கு பிறகுதான் இட்லி பெருவாரியாக உண்ணப்படுகிறது.

காலை உணவாகவும் இரவு உணவாகவும் இட்லி அல்லது தோசை உணவில் சேர்ப்பது சர்க்கரை அளவை அதிகப்படுத்தத்தான் செய்யும். அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான் அதிகம் உண்ண வேண்டாம் என்று கூறுகிறோம். மற்றவர்கள் இதை உண்ணலாம். ஆனால், அதிகம் உண்டால் விளைவுகளை நாம் ஏற்கத்தான் வேண்டும். இதன் மூலம் இட்லி நம் பாரம்பரிய உணவு என்று கூறுபவர்களின் கூற்றை நான் நிராகரிக்கிறேன்.

கடந்த 40,50 ஆண்டு காலமாகத்தான் நாம் இட்லியை உண்கிறோம். அதற்கு முன்பு அது ஒரு பலகார வகைதான் இவைகளில் ஒயிட் ரைஸ்க்கு பதிலாக ரெட் ரைஸ்  சாப்பிடலாமா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாக சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின்கள் உள்ளது. ஆனால், சர்க்கரையானது  ஒரே அளவுதான்.  சிலர் கூறுவதுபோல், இந்த வகை அரிசியைக் கொண்டு வந்ததால், பழைய வகை அரிசி இல்லாமல் போய்விட்டது. இதுதான் சர்க்கரை நோய்க்கான காரணம் என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தானியங்களில் இவ்வாறு உள்ளதென்றால், சிறுதானியங்கள் உண்ணலாமா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாக உண்ணலாம் ஆனால், சர்க்கரை அளவு சிறுதானியங்களிலும் அதே அளவுதான் உள்ளது.

அடுத்து வெள்ளையாக இருப்பது உப்பு, உப்பை பொருத்தவரை உப்பில்லாமல் சாப்பிட்டால் நல்லது என்று சிலர் கூறுவார்கள். அது தவறு, தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக மிஞ்சினால் உடலுக்கு தீங்கு. .

அடுத்த கேள்வி, அடுத்து வெள்ளையாக பால் உள்ளது, பாலானது அதிக கொழுப்புச் சத்து நிறைந்தது, செரிமானக் கோளாறை உண்டாக்கும், மனிதனுக்கு ஏற்ற உணவல்ல என்று சமூக வலைதளங்களில் சிலர் கூறுகிறார்கள் இதைப்பற்றி தங்களது கருத்து.

விடை:  பால்  மிகச் சிறந்த உணவு அதில் சந்தேகமே வேண்டாம். கொழுப்பு பற்றிய பயம் உண்டான பின்பு இந்தக் கேள்வி அதிக அளவு கேட்கப்படுகிறது. எப்போது  அமெரிக்க  நார்த்  அசோசியேஷன், கொழுப்பு இல்லாத பாலை பருகச் சொன்னார்களோ, அன்று முதல் சிலர் கொழுப்பில்லாத பாலை பருகிறார்கள். ஆனால், கொழுப்பு நிறைந்த பாலை உண்பவர்களுக்கும் கொழுப்பில்லாத பாலை உண்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியது, இதில் கொழுப்பு இல்லாத பாலை உண்பவர்களிடம் டயாபடீஸ்  மற்றும் இறப்பு விகிதம் கூடியுள்ளது எனவே பாலை அப்படியே உட்கொள்வது சிறந்தது.

பழங்களை அப்படியே சாப்பிட வேண்டும், ஜூஸாகவோ அல்லது பழச்சாற்றை மட்டும் குடிப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு முழுமையான சத்தை கொண்டு சேர்க்காது என்று கூறினீர்களே அதைப்பற்றி விளக்குங்கள்.

விடை: பழங்களை உணவாக உட்கொள்ளும்போது  முழுவதுமாக உண்கிறீர்கள். அப்போது பழங்களில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் அத்தனையும் நம் உடலுக்கு சென்று சேர்கிறது. அதுவே ஜூஸாக பருகும்போது ஆவியாகி விடும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல், பழங்களை ஜூஸ் ஆக்கிய பின் வடிகட்டி விடுகிறோம் இதன்மூலம் பழங்களில் உள்ள சர்க்கரை மற்றும் சிறிது வைட்டமின் மட்டுமே நம் உடலில் சென்று சேருகிறது மீதி சத்துக்களை நாம் இழக்கின்றோம். ஜூஸாக பருகும்போது  நாம் இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் பருகி விடுகிறோம்.

மெதுவாக உண்பதுபோல் உண்ண முடியாது, மேலும் பழங்கள் ஜூஸாக பருகும்போது இனிப்புச் சுவையை இழந்துவிடுகிறது. எனவே நாம் கூடுதலாக அதில் சர்க்கரையைச் சேர்க்கிறோம், இவை நம் உடலில் கலோரிகளையும் சர்க்கரையையும் அதிகம் சேர்க்கின்றன. இதுவே பழங்கள் அளவில் சிறியதாக  இருந்தாலும் மென்று சாப்பிடும்போது, அந்த சத்துக்களை முழுமையாக நாம் பெறுகிறோம் எனவே பழங்களை அப்படியே உண்பது நல்லது.

இப்போது நிலவுகின்ற பொருளாதார கட்டமைப்பு காலை உணவையோ அல்லது வேறு உணவையோ வேகமாக உண்ணும் பழக்கம் பரவலாக உள்ளது.  மேலும் விரல்விட்டு மற்றும் எத்தனை ஸ்பூன்கள் என எண்ணிக்கையிலும் குறிப்பிடுகிறார்கள் இதைப் பற்றி விளக்குங்கள். அதேபோல் ஒயிட் ரைஸ் சாப்பிடுவது கெடுதல் எனில் சப்பாத்தி உண்கிறார்கள் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் அதையே உண்கிறார்கள் இது சரியா?

விடை: வேகமாக உண்பது என்பது தவறான அணுகுமுறை, காரணங்கள் நாம் வாயில் உணவை மென்று உண்ணும்போது நம் உமிழ்நீரானது உணவில் கலக்கிறது அப்போதே செரிமானம் ஆரம்பமாகிறது. மேலும், நாம் வாயில் உணவை முதலில் அசை போடும்போது இரைப்பை அதற்குத் தயாராகிறது. நாம் உணவை உண்கிறோம் என்ற உணர்வை தூண்டிவிடும் செயலும் நடக்கிறது. எனவே, உணவை சிறிய அளவில் உண்டாலும் அதை நன்கு மென்று உண்ணும்போது அதற்கான நியூட்ரிஷன்கள் முழுவதையும் நாம் அடைகிறோம், அதேபோல் செரிமானமும் நன்றாக இருக்கும் போதுமென்ற மனப்பாங்கும் நமக்கு உண்டாகும்.

படிக்க :
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?

அடுத்ததாக வெள்ளை அரிசிக்கு பதிலாக கோதுமை சப்பாத்தியை உண்டால் நல்லது என எண்ணுகிறார்கள். இதுவும் தவறு இந்த எண்ணம் எவ்வாறு உண்டானது என்று தெரியவில்லை. வடமாநிலங்களில் முழுவதுமாக சப்பாத்தி, ரொட்டிதான் உண்கிறார்கள். வட மாநிலங்களில்தான் சர்க்கரையும் உடல் பருமனும் அதிகம். இந்த சின்ன விஷயம் கூட தென்படாமல் போனது வேடிக்கையாக உள்ளது. சப்பாத்தி உண்டால் அதிகம் பலன் இல்லை என்பதை நாம் உணர்ந்து வைத்திருக்கிறோம். அரிசியோடு ஒப்பிடுகையில் சப்பாத்தியில் கொஞ்சம் புரதம் அதிகம் அதேபோல் சர்க்கரையும் கொஞ்சம் குறைவு. ஆனால், கோதுமையும் முழுக்க முழுக்க சர்க்கரையால் ஆன ஒன்றுதான்.

எடுத்துக்காட்டிற்கு சர்க்கரை நோயாளியாக சர்க்கரையின் அளவை சப்பாத்தி உண்பதற்கு முன்பும் பின்பும் பரிசோதித்து பார்த்தால் தெரியும். எனவே, அரிசி உண்ண வேண்டாம் என்றால் சப்பாத்தியை உண்ணலாம் என்ற கூற்று தவறானது. இரண்டையுமே குறைத்துக்கொள்ளவேண்டும்.  நான் முன்னமே கூறியதுபோல் அரிசி, கோதுமை, கேழ்வரகு, கேப்பை, குதிரைவாலி, வரகு, தினை முதலிய அனைத்தும் நிறங்களும் சுவையும் மட்டுமே வேறு வேறு அன்றி சர்க்கரையானது அனைத்திற்கும் பொதுவானதுதான். எனவே இதற்கு பதில் அது ! அதற்கு பதில் இது ! என்று நாம் எடுக்க முடியாது. இவற்றிற்குப் பதிலாக மாற்று உணவை நாம் தேட வேண்டும். இதுதான் உண்மை.

பயிர் வகைகள் அதிகம் உட்கொண்டால் வாயு பிரச்சினை வரும் என்கிறார்கள் அதை பற்றி விளக்கவும்?

விடை: வாயு என்ற சொல்லே மிகவும் தவறாக உபயோகிக்கப்படுகிறது. வாயு என்றால் என்னவென்று கேட்டால், ‘கேஸ்’ என்பார்கள். அதேபோல் ‘கேஸ்’ என்றால் என்னவென்று கேட்டால் வாயு என்பார்கள். அதைப்பற்றி இதற்கு மேல் எதுவும் கூற மாட்டார்கள். நம் உடலில் மூன்று இடங்களில் மட்டுமே வாயு இருக்கும். ஒன்று நுரையீரல், நாம் சுவாசிக்கின்றோம். அதேபோல் வாய்வழியாக காற்றை எடுக்கும்போது குடல் காற்றை வாய் வெளியே தள்ளுகிறது அல்லது ஆசனவாய் வழிகாயக வெளியே தள்ளுகிறது. அடுத்ததாக சைனஸ்.. நமது கண்களைச் சுற்றி காற்று உள்ளது. இவைகளைத் தவிர வேறு எங்கும் நம் உடலில் வாயு என்பது கிடையாது.

சில பேர் கூறுவதுபோல், “உருளைக்கிழங்கு சாப்பிட்டேன், அதனால் தசைகளில் வாயு பிடித்துக் கொண்டது” என்பதெல்லாம் நடைமுறையில் இல்லாத ஒன்று. அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும், தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும், முட்டைக்கோஸ் சாப்பிட்டால் ‘கேஸ்’ பிடிக்கும், உருளைக்கிழங்கு சாப்பிட்டால் ‘கேஸ்’ பிடிக்கும். இவற்றை எல்லாம் வழக்கமாக சொல்லி.. சொல்லி.. அவற்றை உண்மை என்றே மக்கள் நம்புகிறார்கள்.

இது பெரும்பாலும் மனம் சம்பந்தப்பட்ட ஒன்று. உதாரணம் நாம் மூன்று வேளையும் அரிசிச் சோறு சாப்பிட்டுக் கொண்டு ஒரு வேளை மட்டும் திடீரென்று வேறு உணவை உட்கொள்கிறோம் என்றால் உடலில் ஏற்படும் மாற்றத்துக்கு அந்த உணவுதான் காரணம் என்று நாம் நம்புகிறோம். இது அந்த உணவால் ஏற்பட்டதாயினும் இதை மறுபடியும் உட்கொள்ளும்போது நம் உடலானது அதற்கு பழகிக்கொள்ளும். நம் மனம்தான் அதை ஏற்க மறுக்கும்.

உதாரணத்திற்கு நான் உங்களை ஜப்பான் நாட்டில் கொண்டு சென்று விடுகிறேன். ஒருவாரத்திற்குள் திரும்பிவர பயணச்சீட்டு உங்கள் கையில் ஒப்படைக்கிறேன் என்றால், நீங்கள் பெரும்பாலும் ரொட்டி மட்டும் உண்டுவிட்டு திரும்பி வந்து நமது ஊர் உணவை உண்பீர்கள். அப்போது நமது  ஊர் உணவு அமிர்தம் போல் உங்களுக்குத் தென்படும்.

இதுவே உங்களை ஜப்பானிலேயே விட்டுவிடுகிறேன் என்றால், நீங்கள் என்னைப் பல முறை திட்டுவீர்கள், உணவுமுறை சரியில்லை என்று. ஒரு கட்டத்தில் அந்த உணவை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு உங்கள் உடல் வந்ததும் மனதும் பழகிவிடும். சிலபேருக்கு சில உணவினால் ஒவ்வாமை ஏற்படலாம் அன்றி பெருவாரியான மக்களுக்கு அது பொதுவானது கிடையாது.

உதாரணத்திற்கு கத்திரிக்காய் உண்டால் சில பேருக்கு அரிப்பு ஏற்படலாம். இதெல்லாம் பெருவாரியான மக்களுக்கு பொருந்தும் என்று நாம் கூற இயலாது.

ஜப்பானை பற்றி இடையில் கூறினீர்கள் இப்போது கொலஸ்ட்ராலானது  சிறு குழந்தையில் இருந்தே தத்துக் குழாயில் படிய ஆரம்பிக்கிறது சில குழந்தைகள் நூடுல்ஸை விரும்பி உண்கிறார்கள் அதன் பக்கவிளைவுகளை  சிறிது விளக்குங்கள்.

விடை : முழுக்க முழுக்க மைதா-தான் நூடுல்சில் கலக்கப்படும் மசாலாவை நாக்கில் வைத்துப் பார்த்தால் சுருக்கென்று இருக்கும். அது முழுக்க முழுக்க ருசிக்காக மட்டுமே தயாரிக்கப்படும் ஒன்று. அதை தொடர்ந்து சாப்பிட்டால் கண்டிப்பாக ஆபத்துதான். அவ்வாறு உண்டால் குழந்தையின் உடல் பருமனுக்கு நாம் வழி அமைத்துக் கொடுக்கிறோம். மேலும் அந்த மசாலாக்களில் நிறைய கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதாக கூறுகிறார்கள். அவை பற்றி எனக்கு தெரியாது எனினும் அது உடலுக்கு நல்லது இல்லை என்பதை நாம் உணர்ந்துதான் ஆக வேண்டும்.

ஜப்பானைப் பொறுத்தவரை அவர்கள் உண்பது மைதா நூடுல்ஸ் கிடையாது. அரிசியால் ஆன நூடுல்ஸ்தான் அவர்கள் உண்கிறார்கள். ஜப்பானியர்களும் நம்மைப் போல் அரிசியைத்தான் உண்கிறார் ஆனால் அவர்கள் ஒல்லியாகவே உள்ளார்கள் எப்படி ஏனென்றால் அவர்கள் இரண்டு ஸ்பூன்கள் வைத்திருப்பார்கள். ஒரு சிறிய கோப்பையில் அரிசியையும், மற்றொன்றில் மட்டனையும் மற்றொன்றில் நீர் போன்ற ஒன்றையும் வைத்திருப்பார்கள். நாம் உண்பது போல் அதிக அளவு அரிசியை அவர்கள் உண்பதில்லை நாம் குறைவாக உண்கிறோம் என்று நினைத்துக்கொண்டு, அதிகமாக உண்டு வருகிறோம். முதலில் நாம் அரிசியை அதிகமாக உண்கிறோம்  என்று  உணர வேண்டும். அப்போதுதான் குறைப்பதற்கான வழி தேடுவோம்.

நம் தேவையானது மிகவும் குறைந்து விட்டது சில பேர் கூறுவதுபோல் நம் தாத்தா பாட்டி எல்லோரும் கேப்பை களி என உண்டார்கள் அவர்கள் ஒல்லியாகத் தானே இருந்தார்கள்.? உண்மைதான் ஆனால் அவர்கள் அந்த அளவுக்கு உழைத்தார்கள்.

low sodium salt என்பதை அறிமுகம் செய்கிறார்கள். அதை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இது சரியானதுதானா இதைப் பற்றிய தங்களது கருத்து?

விடை: இதற்கான விடை எளிமையானது. Low Sodium Salt ஆயினும் அல்லது நார்மலான உப்பு ஆயினும் நமக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவுதான் போடப் போகிறோம். நீங்கள் கூறும் சோடியம் குறைவான உப்பில் உப்புச்சுவை குறைவு எனில் நாம் அதற்கேற்ற அளவு அந்த உப்பை நம் உணவில் அதிகமாக சேர்ப்போம். எனவே, அளவு மாறுபடுமேயன்றி உள்ளே சென்று சேரும் உப்பானது, ஒரே அளவுதான். இதேபோல் வேறு சில உப்பு வகைகளை சிலர் கொண்டு வருகிறார்கள்.

படிக்க :
♦ சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?
♦ சர்க்கரையின் அறிவியல்

இதில் சோடியம் குறைவு எனினும் பொட்டாசியம் அதிகம். சோடியம் கூட சிறுநீர் வழியாக வெளியேறி விடும். ஆனால், பொட்டாசியம் வெளியேறாவிட்டால் சுகர் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு இது பெரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். நாம் முன்னமே கூறுவதுபோல் எதையும் அளவாக உட்கொண்டால் பிரச்சினை கிடையாது. நாம் சரியானவற்றைதான் உண்டு வருகிறோம். அளவுக்கு மீறி உண்ணும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. அது மைதாவாகினும் முட்டை, கீரை என எதுவாகினும் அளவாக உட்கொண்டால் எந்த தீமையும் கிடையாது. அளவுக்கு மீறும்போதுதான் பிரச்சினை உண்டாகிறது. நாம் வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் உணவு பற்றிய பல வீடியோக்கள் நம்மை அச்சுறுத்துவதாக உள்ளன.

“இந்தப் பழம் சாப்பிட்டால் இந்த நோய் வரும். இதைச் சாப்பிட்டால் இந்த நோய் வரும்.” என பெரும்பாலானவை நம்மை அச்சப்படுத்துகின்றன. இவை தவறான செயல். எதற்காக இந்த வீடியோக்கள் என்று தெரியவில்லை.

ஒரு வீடியோவில் ஒருவர் ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகள் உண்டு என்று கூறுகிறார். அந்தப் பழத்தில் அவ்வளவு நன்மை உள்ளதால் நாம் அதை தினந்தோறும் உண்ண முடியுமா? அப்படி உண்டால், நம் உடலுக்கு தீங்குதான். எனவே “இந்தப் பழம் நல்லது. அந்தப் பழம் நல்லது” எனக் கூறுவது தவறு. காரணம், கெட்ட பழம் என்று ஒன்று கிடையாது. கெட்ட காய்கறி என்று ஒன்று கிடையாது. இவ்வாறு பரப்புவதால், இந்த கெமிக்கல்களுக்கு பயந்து  ஆர்கானிக் உணவு  என ஒருபுறம்  சந்தைப்படுத்துகிறார்கள். இதுவும் தவறு எதையும் நாம் அதிகமாக உட்கொள்ள போவதில்லை. சுழற்சி முறையில் தான் சாப்பிடப் போகிறோம்.

ஒருநாள் வெண்டைக்காய், ஒருநாள் கீரை, ஒருநாள் கொத்தவரங்காய், என இப்படி சுழற்சி முறையில்தான் சாப்பிட வேண்டும். ஒரு பழம் நல்லது என்பதற்காக தினமும் அதை அதிகமாக உட்கொண்டால் அது கெடுதல்தான். ஒருநாள் கொய்யாப்பழம் இன்னொரு நாள் கொடிமுந்திரி. இன்னொரு நாள் மாதுளை இப்படி மாற்றி மாற்றி தொடர்ந்து உண்டு வந்தால் நம் உடம்புக்கு தேவையான மினரல்கள் அனைத்தும், நம் உடலில் சேரத்தான் போகின்றன. எனவே நான் முதலில் இருந்து கூறிவருவது போல் நாம் அதிகமாக உட்கொள்வது, அரிசி மற்றும் கோதுமைதான். எனவே அவற்றை குறைத்து அதற்கு பதிலாக மற்ற உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும்.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.


வாங்கிவிட்டீர்களா ?
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்